இன்று(22.10.2023) பெரியார் பேருரையாளர் அய்யா கு,வெ,கி,ஆசான் அவர்களின் 13-ஆம் ஆண்டு நினைவு நாள் என்னுடைய பகுத்தறிவாளர் கழக,திராவிடர் கழக இயக்கப்பணியில் மறக்க முடியாத மாமனிதர் அய்யா கு.வெ.கி.ஆசான் அவர்கள். பண்பாளர்,பழகுவதற்கு இனியவர், மிகச்சிறந்த ஆற்றலாளர். ஆங்கிலத்தில்,தமிழில் மிக நல்ல புலமையுடையவர்.பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்தலைவராக,திராவிடர் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளராகப் பணியாற்றியவர். தமிழ்,ஆங்கிலம்,அரசியல் அறிவியல் எனப் பல முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர்.அய்யா ஆசிரியர் அவர்களுக்கு பெரும் துணையாய் ,பெரியார் திடலில் இருந்து 'தி மாடர்ன் ரேசனலிஸ்டு 'இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். அவரின் சிரித்த முகமும்,சீரிய சிந்தனையும்,தலைமை சொல்லை அப்படியே பின்பற்றும் பாங்கும் ,கடினமான உழைப்பும் கண்முன்னே வருகின்றன.அவருக்கு வீரவணக்கம்.அவருடைய பல புத்தகங்களில் நான் மிக விரும்பி மீண்டும் மீண்டும் வாசிப்பது ,அவரது மொழி பெயர்ப்பு நூலான 'கடவுள் ஒரு பொய் நம்பிக்கை ' என்னும் புத்தகத்தை.ஏற்கனவே ஒரு கூட்டத்தில் அந்தப் புத்தகத்தை முழுமையாகப் பேசியிருக்கிறேன். ஆனால் எழுத்தாகப் பதியவில்லை.பதியவேண்டும். இப்போது அய்யா பேரா.சுப.வீரபாண்டியன் அவர்கள் எழுதிய அந்த நூல் மதிப்புரையை கீழே வெளியிட்டுள்ளேன்.ஒருவரின் எழுத்தை நினைவு கூர்ந்து அவரது நினைவைப் போற்றுவது என்பது மிகச்சரியானது. நன்றி.
கடவுள் ஒரு பொய் நம்பிக்கை...
நூல் மதிப்புரை அய்யா பேரா.சுப.வீரபாண்டியன் அவர்கள்
திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று பகுத்தறிவு. 1926இல் சுயமரியாதை இயக்கம் தோன்றியபோது, அது ஒரு சமூக நீதி-சமத்துவ இயக்கமாகத்தான் உருவெடுத்தது. நீதிக்கட்சியின் வரலாறும் அத்தகையதே. ஆனால் காலப்போக்கில் தன்மான இயக்கமாகவும், அறிவியக்கமாகவும் அது மலர்ந்தது. அறிஞர் அண்ணாவின் தலைமையில், தேசிய இன இயக்க மாகவும் அது வலுப்பெற்றது.
அறிவியக்கங்கள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன. சாக்ரடீஸ், எபிகூரஸ் தொடங்கி, அறிஞர்கள் பலர் பகுத்தறிவுக் கருத்துகளை முன்வைத்துள்ளனர். இன்று வரை, உலகின் பல பகுதிகளிலும், பகுத்தறிவுச் சிந்தனையாளர் களையும், அவர்களின் படைப்புகளையும் நம்மால் பார்க்க முடிகிறது.
அந்த வகையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், விலங்கியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற, ரிச்சர்டு டாகின்ஸ் எழுதியுள்ள The God - Delusion என்னும் ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பே, ‘கடவுள் - ஒரு பொய் நம்பிக்கை’.
ரிச்சர்டு டாகின்ஸ், இங்கிலாந்தின் காலனி நாடாக அன்று இருந்த கென்யாவின், நைரோபி நகரில் பிறந்தவர். எனினும் எட்டு வயதுச் சிறுவனாக இருந்த போதே இங்கிலாந்து வந்துவிட்டார். லண்டனுக்கு அருகில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் தன் படிப்பையும், ஆய்வையும் நிகழ்த்தியர். இப்போது அவருக்கு வயது 72. தன்னுடைய 65ஆம் அகவையில், 2006ஆம் ஆண்டு அவர் எழுதிய நூல்தான் கடவுள் - ஒரு பொய் நம்பிக்கை என்பது.
31 மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ள இந்நூலின் ஆங்கிலப் படிகள் மட்டுமே 15 இலட்சத்திற்கும் மேலாக விற்பனையாகி உள்ளன. ஏறத்தாழ 600 பக்கங்களைக் கொண்ட இந்நூலை, மறைந்த கு.வெ.கி.ஆசான் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். பெரியார் பேருரையாளர் கு.வெ.கி. ஆசானின் அழகிய மொழிநடை, மொழிபெயர்ப்பு நூலைப் போலன்றி, ஒரு தமிழ் நூலைப் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பதிப்புரை, படிப்போரின் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் உள்ளது.
நூலாசிரியர் டாகின்ஸ், ஓர் அறிவியல் ஆய்வாளர் என்பதால், அறிவியல் சான்றுகளுடன் இந்நூலுள் பகுத்தறிவுக் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வெறுமனே வாதம் செய்யும் நூலாக அல்லாமல், அரிய அறிவியல் ஆய்வு நூலாக இந்நூல் நமக்குக் கிடைத்துள்ளது. பத்து இயல்களைத் தன்னுள் கொண்டிருக்கும் இந்நூல், பகுத்தறிவுச் சிந்தனைகளையும், கடவுள் மறுப்பையும் பல்வேறு கோணங்களில் முன்வைக்கின்றது.
கடவுள் என்னும் கருதுகோள் எப்படி உருவாயிற்று என்னும் வரலாற்றுச் செய்திகள் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. கடவுள் நம்பிக்கை உடையவர்களின் வாதங்களும், மூன்றாவது இயலில் முழுமையாக இடம் பெற்றுள்ளன. உலக இருப்பு சார்ந்தும், தங்களின் சொந்த அனுபவங்கள் சார்ந்தும், மதங்களின் புனித நூல்கள் சார்ந்தும், மத அறிவியலாளர்களின் கூற்றுகளைச் சார்ந்தும் கடவுள் நம்பிக்கைக்கு ஆதரவாகக் கூறப்படும் பல்வேறு கருத்துகள் , மிக நேர்மையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடவுள் இல்லை என்பதற்கு நெருக்கமான நிலையாக, இன்று மேலைநாடுகள் பலவற்றில் கிட்டத்தட்டப் பெரும்பாலும் கடவுள் இல்லை என்னும் வாதம் எழுந்துள்ளது. அது குறித்தும் நூலுள், பல செய்திகள் தரப்பட்டுள்ளன.
உலக நாடுகளின் தலைவர்களுக்கு இருந்த, இருக்கின்ற கடவுள் நம்பிக்கை, மறுப்பு ஆகியன குறித்த அறிவியல் அடிப்படையிலான, சுவையான பல வாதங்களை டாகின்ஸ் முன்வைத்துள்ளார். பொதுவாக, ஸ்டாலினும், ஹிட்லரும் நாத்திகர்கள் என்று சொல்லப் படுவதுண்டு. இவ்விரு நாத்திகர்களும்தான், இரண்டாம் உலகப் போருக்கும், இலட்சக்கணக்கான மக்களின் அழிவிற்கும் காரணமாக இருந்தனர் என்று பொத்தாம் பொதுவாக ஒரு குற்றச்சாற்று வைக்கப் படுவதுண்டு. அது குறித்த மிகச் சிறந்த வாதங்களை இந்நூலுள் காண முடிகிறது.
முதலில் இருவரும் நாத்திகர்கள் என்பதே தவறு என்று கூறும் டாகின்ஸ், நாத்திகர்கள் போருக்கும், தீமைகளுக்கும், காரணியர் களாக இருப்பார்கள் என்பது அதைவிடத் தவறு என்கிறார். சோவியத் நாட்டின் அதிபராக இருந்த ஸ்டாலின் ஒரு கடவுள் மறுப்பாளர் என்பதில் ஐயமில்லை என்று கூறும் நூலாசிரியர், ஹிட்லரைப் பற்றிய செய்தி உண்மையில்லை என்பதைச் சான்றுகளுடன் மறுக்கிறார்.
ஹிட்லர் தனது வாழ்க்கை வரலாற்று நூலில் ஆண்டவருக்கு மண்டியிட்டு நன்றி செலுத்தினேன் என்று எழுதியுள்ள இடத்தைச் சுட்டிக் காட்டுகின்றார். 1933ஆம் ஆண்டு, அவர் பெர்லினில் நிகழ்த்திய உரையிலும், நாங்கள் நாத்திக இயக்கத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டோம். அதனை நாங்கள் முற்றிலுமாக அழித்துவிட்டோம் என்று பேசியிருப்பதையும் எடுத்துக் காட்டுகின்றார். நாத்திகத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டதாகக் கூறும் ஒருவர் எப்படி நாத்திகராக இருக்க முடியும் என்று கேட்கிறார் டாகின்ஸ்.
அதனைவிட முதன்மையானது - ஒரு வேளை அவர் நாத்திகராகவே இருந்திருந்தாலும், அவருடைய தீய செயல்களுக்கும், நாத்திகச் சிந்தனைக்கும் எப்படித் தொடர்பு இருக்க முடியும் என்னும் அவருடைய கேள்விதான். உலகில் இறைநம்பிக்கை உடையவர்கள் அனைவரும், ஒரு குற்றச் செயலில் கூட ஈடுபடவில்லை என்றோ, நாத்திகர்கள் அனைவரும் குற்றப்பரம்பரையினர் என்றோ கூற முடியுமா என்னும் அவர் வினாவிற்கு எங்கே விடை இருக்கிறது.
தந்தை பெரியார், குற்றம் புரிந்து, அதற்கான தண்டனையை ஏற்று, சிறைச்சாலைகளில் உள்ளவர்களில் எத்தனை பேர் நாத்திகர்கள்? என்று கேட்பார். சமூகத்தின் இன்றை நிலைதான் சிறைச்சாலைகளிலும் உள்ளது. அங்கும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் மிக மிகக் குறைவே. கடவுள் நம்பிக்கை கொண்ட குற்றவாளிகளே எண்ணிக்கையில் மிகுதி.
அடுத்ததாக, அறிவாளிகள் அனைவரையும் இறைநம்பிக்கை கொண்டவர்கள் என்று எளிதில் கூறிவிடும் ஒரு போக்கும் இங்கு உள்ளது. அப்படித்தான், இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியல் அறிஞரான அய்ன்ஸ்டைன், மிகுந்த கடவுள் நம்பிக்கை உடையவர் என்னும் செய்தி இங்கே பரப்பப்படுகின்றது. அதனைச் சான்றுகளுடன் தகர்த்துப் போடுகிறது, ஆசிரியர் வீரமணி அவர்களின் பதிப்புரை.
1954 சனவரி 3ஆம் நாள், அய்ன்ஸ்டைன் தன் நண்பர் எரிக் குட்கிண்ட்டிற்கு எழுதியுள்ள மடலொன்றில், மனித உள்ளத்தின் வலிமை இன்மையின் வெளிப்பாடாகவும், விளைவாகவும் இருக்கிறது என்பதற்கு மேலாக எதையும் கடவுள் என்ற சொல் சுட்டுவதாக எனக்குப் படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். எனவே மிகச் சிறந்த அறிவாளிகள் பலர், கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக இருந்துள்ளனர் என்பது தெளிவாகின்றது.
நூலாசிரியர், விலங்கியல் துறை ஆய்வாளர் என்பதால், தன் கருத்துகளுக்கு அறிவியல் ஆய்வுகளையே சான்றுகளாகத் தந்துள்ளார். அதுவே இந்நூலின் மிகப் பெரிய சிறப்பு என்று கூறலாம்.
மதம், கடவுள் என்பனவெல்லாம், மற்றொன்றின் உடன் விளையு என்று கூறும் அவர், அதற்குப் பொருத்தமான அறிவியல் செய்தி ஒன்றைத் தருகின்றார். இரவுநேரத்தின் செயற்கை ஒளி, அண்மைக் காலத்தில் ஏற்பட்டதாகும். முன்பு நிலவு மற்றும் விண்மீன்களின் ஒளி மட்டுமே இரவில் இருந்தது. அந்த ஒளியைப் பின்பற்றி விட்டில் பூச்சிகள் பறந்தன. இன்றைய கால மாற்றத்தில் நெருப்பு விளக்குகளும், மின் விளக்குகளும் வந்துவிட்டன. இம்மாற்றத்தைப் பகுத்தறிவுடைய மனிதர்கள் உணர்வது போல, விட்டில் பூச்சிகள் உணர முடிவதில்லை. அதனால்தான் அவை, நெருப்பின் ஒளியை, நிலவின் ஒளி என்று கருதி, அதனை நோக்கிப் பறந்து தம் வாழ்வை முடித்துக் கொள்கின்றன.
நடைமுறையில், பகுத்தறிவுடைய மனிதர்களும் கூட, தங்களின் ஆறாவது அறிவைப் பயன்படுத்திக் கால மாற்றங்களைப் புரிந்து, அதற்கேற்பத் தங்களின் வாழ்வைத் தகவமைத்துக் கொள்ளாமல், பழைய பாதையிலேயே பயணம் செய்கின்றனர். எனவே அறிவியல் பூர்வமாக உண்மைகளை உணர்ந்து வாழ்தலே பகுத்தறிவு என்கிறது இந்நூல்.
கடவுள் என்னும் கருதுகோளைப் பல்வேறு வகைகளில் அணுகி, அதனுடைய உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்கும், பகுத்தறிவு வழியில் நம் வாழ்வை அமைத்துக் கொள்வதற்கும் இந்நூல் பெரிதும் உதவும்!
கடவுள் - ஒரு பொய் நம்பிக்கை
வெளியீடு: திராவிடர் கழகம்
பெரியார் திடல்,
84/1, ஈ.வெ.கி.சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை - 7