Thursday, 31 March 2022

மார்ச்-31...

 மார்ச்-31...


அலுவலகத்தில் இருக்கும்போது

பிப்ரவரி முடிகிறது

என்றாலே மனதிற்குள்

ஒரு நடுக்கம் வரும்....


மார்ச் மாத இறுதிக்குள்

கொடுக்கப்பட்ட இலக்கை

எப்படி முடிப்பது என்பதையே

உறக்கத்தில் வரும் 

கனவு கூடச்சொல்லும்...


இலக்கை வைத்து ஓடுவதுதான்

வாழ்க்கையா என

உள்மனது சில நேரம் சொல்லும்...


ஜனவரி இறுதியிலேயே

பட்டியல் தயார் ஆகியிருக்கும்...

நேரில் பார்க்கவேண்டியவர்கள்...

தொலைபேசியில் 

பேச வேண்டியவர்கள்....

,மேல் அதிகாரியோடு சென்று 

பார்க்க வேண்டியவர்கள்....

வித விதமாய் பட்டியல்

எப்படி அதனை செயற்படுத்துவது

எனும் செய்முறையே

மாதம் முழுவதும்

மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும்...


இருக்கும் வாடிக்கையாளரைத் 

தக்க வைத்துக்கொள்வது மட்டுமல்ல

புதிய வாடிக்கையாளர்களைத்

தேடிப்போய் பேசி சேர்ப்பது...

நம்மிடமிருந்து பிரிந்து போய்

வேறு நிறுவனத்தில் இருக்கும்

வாடிக்கையாளரிடம் புதிதாக

வந்திருக்கும் வசதிகளைச்சொல்லி

வரச்சொல்வது ...என

வகை வகையாகப் 

பட்டியல் இருக்கும்....


மார்ச் 31-ல் இலக்கிற்கும்

மேலும் எட்டிவிட்டு

அன்று மாலை ஒரு 

வெற்றிச்சிரிப்போடு

உடன் பணியாற்றியவர்களோடு

உற்சாகமாய் தேநீர் குடித்து

பேசிச் சிரித்து 

வீடு திரும்பிய காலெமெல்லாம்

நினைவில் ஓடுகிறது....


ஓய்வுற்குப் பின் 

எல்லா நாட்களையும் போலவே

அமைதியாய்

எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி'

'கடந்து போகிறது மார்ச்-31

ஆனால் ஓடிய நாட்களே

பசுமையாய்த் தோன்றுகிறது இன்று...

                         வா.நேரு,31.03.2022 மாலை 2 மணி...


Thursday, 24 March 2022

நகைக்கத் தோன்றுகிறது!

     

                     நகைக்கத் தோன்றுகிறது!



காந்தி இன்று

வாழ்ந்திருந்தால்

இணையம் வழியே

எளிதாகத் தமிழைக்

கற்றிருப்பார்...


அவர் விரும்பிய

திருக்குறளை

அவர் விரும்பியவண்ணம்

தமிழிலேயே படித்து

மகிழ்ந்திருப்பார்...


ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள

எத்தனை யூ டியூப் சேனல்கள்…

நேரமும் இணையமும் இருக்கிறதா

இதோ கற்றுக்கொள் என

எத்தனை நல்ல உள்ளங்கள்…


விதம் விதமாய் சொல்லித்தர

மிக எளிதாய்ப் புரிந்துகொள்ள

அவர்கள் பயன்படுத்தும்

பல்வேறு முறைகள் ...

!..

30 ஆண்டுகளுக்கு முன்பு

ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள

ரெபிடெக்ஸ் போல

கட்டை கட்டையாய்ப் புத்தகங்கள்

பார்த்துப்  பழகிய

எனது தலைமுறைக்கு

வியப்பைத் தருகிறது….

இன்றைய இணைய வழியாய்க்

கற்கும் முறைகள்...


உள்ளத்தில் மட்டும் 

கற்கவேண்டும் என்னும் 

உணர்வு தோன்றிவிட்டால்போதும்

உடனே சில மாதங்களில் 

கற்றுக்கொள்ளலாம் எந்த மொழியையும்...


எனக்கும் கூட மலையாளம் கற்று

முகுந்தனின் 'மய்யழிக்கரையோரம்'

போன்றவற்றை மலையாள

மொழியில் படிக்க ஆசை...


எனக்கும் கூட ஜப்பானிய மொழிகற்று

'டோட்டாசானை' அது எழுதப் பட்ட

மொழியிலேயே படிக்க ஆசை..


ஆனால் என் முன்னோர் கட்டிய

கோயில்களுக்குள் அமர்ந்து கொண்டு

எங்கள் பாஷை தெய்வ பாஷை

எனச்சொல்லி

என் தமிழ் மொழியை 

விரட்டத்துடிக்கும்

வடமொழியைப் படிக்கச்சொன்னால்

மட்டும் உடம்பு முழுவதும் எரிகிறது...

ஆதிக்கத்தின் அடையாளமாய்

அதை ஒத்த இந்தி மொழியும்

இன்னலையே தருகிறது...


ஆதிக்க மொழியாம் 

அந்த 'செத்த மொழியை'

கற்றுக்கொடுக்க எம் மொழிக்கு

செலவழிக்கும் தொகையைவிட

ஐம்பது மடங்கு அதிகம் செலவழிக்கும்

ஒன்றிய அரசைக் கண்டு

நகைக்கத் தோன்றுகிறது!

...


                         வா.நேரு,24.03.2022.



Wednesday, 23 March 2022

எதிர்காலத்தை எண்ணி...முனைவர் வா.நேரு

 சிந்தனை : எதிர்காலத்தை எண்ணி...

                                         முனைவர் வா.நேரு






தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய 69ஆம் பிறந்த நாளான மார்ச் 1, 2022 அன்று அறிவித்து, தொடங்கி வைத்த திட்டமான 'நான் முதல்வன்' என்னும் திட்டம் நம்மைப் போன்றவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. தன்னுடைய 'கனவுத் திட்டம்' என்று இந்தத் திட்டத்தை, நமது முதலமைச்சர்  அறிவித்திருக்கிறார். அவர்தம் கனவுத் திட்டம், தமிழ்நாட்டினை வளமாக்கும் ஒளிமயமான திட்டம். நீண்ட காலப் பலனைக் கொடுக்கப் போகும் திட்டம். இத்திட்டம் நல்விளைச்-சலைக் கொடுக்கவிருக்கும் திட்டம். 'திராவிட மாடல்' அடிப்படையில் அமைந்த திட்டம். ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்னும் அடிப்படையில் அமையும் திட்டம் இது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.


கிராமங்களில் இருக்கும் ஒடுக்கப்பட்ட வீட்டுப் பிள்ளைகளுக்கு படிக்கும்போது என்ன பாடம் படிக்க வேண்டும், நம்மிடம் இருக்கும் திறமை என்ன? அதனைப் பயன்படுத்தி வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது என்பதற்கான பயிற்சி தேவைப்படுகிறது. அந்தப் பயிற்சியை சிறிய அளவில் தனி மனிதர்கள், தனி அமைப்புகள் செய்து கொண்டிருந்தார்கள். இப்போது அந்த வழிகாட்டலை அரசாங்கம் செய்யப் போகிறது. பொருளாதார நிலையில், சமூக அடிப்படையில் கடைக்கோடியில் இருக்கும் மாணவ, மாணவியருக்கும் இந்த வழிகாட்டல் கிடைக்கப்போகிறது.


‘நான் முதல்வன்’ என்னும் இந்தத் திட்டம் பற்றி "தமிழ்நாட்டின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றி-யாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாக ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டம் அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியரின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது ஆகும்" என்று குறிப்பிட்டிருக்-கிறார்கள். ஒவ்வொரு மனிதருக்கும் தனித்திறமை உள்ளது. அந்தத் திறமையை தங்களது இளமைப் பருவத்திலேயே அடையாளம் கண்டு கொள்பவர்கள் மேலும் மேலும் அதில் ஈடுபட்டுத் தங்களை மேம்-படுத்திக் கொள்வதோடு, அந்தத் திறமையில் முதல்வர்களாய் ஆகிறார்கள். நாட்டிற்கும் சமூகத்திற்கும் மிகப் பெரிய பலனைக் கொடுக்கிறார்கள்.


கணினி, இணைய வளர்ச்சிக்குப் பின்பு வாய்ப்பு என்பது உலக அளவில் கிடைக்கிறது. வெளிநாட்டில் இருக்கும் நிறுவனத்திற்கு தமிழ் நாட்டின் ஒரு கிராமத்தில் இருந்துகொண்டு இணையத்தின் மூலமாக மென்பொருள் செய்து கொடுக்க முடிகிறது; பாடம் எடுக்க முடிகிறது. ஆனால், இதில் பார்ப்பனர்கள் எப்போதும் போல பெரிய நிறுவனங்களில் அமர்ந்து கொண்டு, தங்கள் பார்ப்பன இனத்தாரை தங்கள் நிறுவனங்களுக்குள் கொண்டு வருவதிலும், அதிகப் பண பலன் அளிக்கும் வேலைகளை அவர்களுக்குக் கொடுப்பதுமாக இருக்கிறார்கள். சமூகநீதி ஆட்சியான இந்த ஆட்சி, பார்ப்பனர் அல்லாத, திராவிட இனத்து  மாணவ, மாணவிகள், இளைஞர்களின் எதிர்காலத்தை நினைவில் கொண்டு இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.


இந்தத் திட்டத்தின் நோக்கங்களாகவும், எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்-பதையும் இணைத்து 20 வழிமுறைகளைக் கொடுத்திருக்கிறார்கள். அதில் "மாணவர்கள் அடுத்தடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்றும் வழிகாட்டப்படும்" என்று குறிப்பிட்டிருக்-கிறார்கள். அதனைப் போல "தமிழில் தனித் திறன் பெற சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசுவதற்கும், நேர்முக தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும்" என்றும் குறிப்பிட்டிருக்-கிறார்கள். கிராமப் புறத்திலிருந்து வரும் மாணவர்கள் தடுமாறும் இடம் ஆங்கிலமே. அதனைப் போக்க பயிற்சி அளிக்கப்படுவது வரவேற்கத்தக்கது.


அண்மையில் ஒரு யூ டியூப் பேட்டியில் முந்நாளைய காவல்துறை உயர் அதிகாரி, எழுத்தாளர் திலகவதி அய்.பி.எஸ். அவர்கள் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அந்தப் பேட்டியில் “டாக்டர் கலைஞர் அவர்கள், முதன்முதலாக முதலமைச்சராகப் பதவியேற்ற பின், 1970களில் ஒன்றிய அரசு நடத்துகின்ற அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பரீட்சை எழுது-வதற்கான வழிகாட்டி மய்யம் அமைத்தார். நான் அப்படிப்பட்ட வழிகாட்டி மய்யத்தால் வழிகாட்டப்பட்டதால், யு.பி.எஸ்.ஸி. தேர்வு எழுதி அய்.பி.எஸ். ஆனேன். அதற்கு முன்னால் எனக்கு அந்தத் தேர்வு பற்றித் தெரியாது. பிற்பட்ட நிலைமையில் இருந்து வந்தவள் நான்’’ என்று குறிப்பிட்டார். டாக்டர் கலைஞர் அவர்களின் தொலைநோக்குப் பார்வை, இன்றைய முதல்வர் ஆட்சியில் இன்னும் விரிவடைகிறது.


"ஆற்றலோடு பிறக்கும் குழந்தையை, அந்த ஆற்றலைச் சிந்தாமல், சிதறாமல் நாம் எப்படி எடுத்துச் செல்வது என்பதைத் தீர்மானிப்-பதற்காகவும், அவர்கள் எதை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட திட்டம்தான் 'நான் முதல்வன்' என்னும் இந்தத் திட்டம். பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கிற மாணவர்கள், அதனை முடித்த பிறகு, வேலையைத் தேடும் இளைஞர்களுக்கு அவர்கள் எந்தத் திசையிலே தேட வேண்டும் என்பதைப் புரிய வைப்பதற்காகவும், அவர்கள் முயற்சியோடு தங்கள் வாழ்க்கையைத் தொடர்வதற்காகவும் பணிகளைப் பெறுவதற்-காகவும் திறன்களைச் செதுக்குவதற்காகவும் நல்ல பணியில் அமர்ந்து அவர்கள் தங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல எதிர்காலத் தமிழ்நாட்டைச் செப்பனிடுவதற் காகவுமேதான் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப் பட்டிருக்கிறது." 


"தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்-கேற்ப பள்ளி மாணவ, மாணவியருக்கு Coding, Robotics போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்-படும்" என்று இந்தத் திட்டத்தில் குறிப்பிட்டிருக்-கிறார்கள். டாக்டர் கலைஞர் அவர்கள் கணினியின் பயன்பாட்டை முன்னமே புரிந்துகொண்டு, மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்மாதிரி மாநிலமாக கணினிக் கல்வியைத் தமிழ்நாட்டில் அமல்படுத்தியவர்.


இந்தத் திட்டத்தில் முன்னுரிமை அரசுப் பள்ளிகளுக்கு, அரசுக் கல்லூரிகளுக்கு கொடுக்க வேண்டும். நன்றாகப் படிக்கக்கூடிய குழந்தை-களைக் கூட ‘ஜாதகப் பலன்’ பார்த்து, படிப்பை நிறுத்தும் கொடுமையெல்லாம் இருக்கிறது. அவற்றையெல்லாம் வெல்லும் மன உறுதியை, தர்க்கம் செய்து பெற்றோரின் அறியாமையைப் போக்கி, குழந்தைகள் மேல் படிப்பு படிப்பதை உறுதி செய்ய வேண்டும். பகுத்தறிவு என்பது தன்னம்பிக்கை. எனவே, பகுத்தறிவு அடிப்படை-யிலான தன்னம்பிக்கை ஏற்பட மாணவ, மாணவிகளுக்கு வழி செய்ய வேண்டும்.


ஆசிரியர்களின் பணிச்சுமை மிக அதிகம். அவர்களை மட்டுமே நம்பி இராமல், இதற்கென ஒரு தனி வலைத்தளத்தை உருவாக்கி உள்ளது போல், தனித் துறையாக இது ஆக்கப்பட வேண்டும். மாணவ, மாணவியரின் தனித்திறனை அறிந்து, அவர்களின் மதிப்பெண் பட்டியலிலேயே அவர்களின் தனித்திறனும் இணைத்து அச்சிடப்படும் முறையைக் கொண்டு வரலாம். பெற்றோர் ஆசிரியர் சங்கங்களை முறைப்படுத்தி, பெற்றோர், பழைய மாணவர்கள் என ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு குழுவின் மூலமாக இத்திட்டத்தை இன்னும் செம்மையுறச் செய்யலாம். அனைத்துத் தரப்பினரையும் இணைத்து மக்கள் இயக்கமாக இந்தத் திட்டம் மாறவேண்டும்.


நன்றி : உண்மை மார்ச்16-31 இதழ்


Monday, 21 March 2022

வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம்...

 அவர் இருக்கும் இடத்தில் 

வெடிச்சிரிப்பு இருக்கும்

அவரோடு இணைந்து

உடன் இருப்பவர்களும்

உற்சாகமாய் இருக்கும்

சூழல் இருக்கும்...


அவர் பறக்கும் விமானம்

பெரியார் பன்னாட்டு  விமானம்

எந்த நாட்டில் பறந்தாலும் 

எப்போதும் பெரியார் இயலையும்

இணைத்துப் பறக்கும்


உலகத்தில் இருக்கும் 

தலைவர்கள் பலரை  அறிவார்..

ஆனால் உள்ளத்தின் ஆழத்தில்

என்றும் பெரியார் கொள்கை

ஒன்றையே பதிவார்...


பெரியாரின் பணிமுடிக்க

நமக்கு வாய்த்த 

நல்தலைமையை 

பாதுகாக்கும் பெரும் காவலராய்

பல பத்தாண்டுகளாய் இவர்


அமெரிக்காவில் இருந்தாலும்

அவரின் கவனம் எல்லாம்

அய்யா ஆசிரியர் வீரமணியின்

உடல் நிலையில். குவிந்திருக்கும்...


அமெரிக்கா சென்றோமா?

தன் பெண்டு தன் பிள்ளை

தன் உறவு என வாழ்க்கையை

சுருக்கிக் கொண்டோமா?

நாம் மட்டும் செழிப்பில் மிதந்தோமா

என்று வாழும் மனிதர்கள் மத்தியில்

தமிழ் தமிழ்நாடு 

உலகத் தமிழர்கள் என 

வாழும் ஒரு சிலரில்

முதன்மையானவர்.....


75 வயதில் சிலம்பம் கற்று

சிறுபிள்ளை போலவே

கம்பைச்சுழற்றுகிறார் 

சுழன்று சுழன்று...

கம்பைச்சுழற்றிவிட்டு

முடிவில் ஒரு 

உற்சாகமான சிரிப்பு சிரிக்கிறார்

பாருங்கள்...

அவர்தான் அய்யா 

மருத்துவர் சோம.இளங்கோவன்.


அவருக்கு வயது எழுபத்து ஐந்து

வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம்..

அவரின் உற்சாகத்திற்கு எல்லாம்

உறுதுணையாய் இருக்கும் 

அவரின் இணையர் அம்மா

டாக்டர் சரோஜா அவர்களையும்

வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம்.

வாழ்க ! வாழ்க! வாழ்கவே!

நூறு ஆண்டையும் கடந்து

இணையர்கள் வாழ்க! வாழ்கவே!


                  வா.நேரு,21.03.2022






500 ரூபாய் நோட்டு ...சிறுகதை ..வா.நேரு

                                                                                                             

அந்தப் பகுதியில் இருக்கும் ஏ.டி.எம் திறந்து கிடந்தது. உள்ளே ஒரு நாய் சுகமாகப் படுத்துக்கிடந்தது. பணம் எடுக்க வந்த வீரன் அந்த நாயை விரட்டினார். ஆனால் அது எழுந்து போகாமல் முறைத்துப்பார்த்தது. அதனை ஒரு வழியாக விரட்டிவிட்டு பணம் எடுக்க ஏ.டி.எம் மெசினைப் பயன்படுத்தினார்.


பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த ஏ..டி.எம். மெசினிலிருந்து ரூபாய் நோட்டுகள் மொத்தமாய் கீழே விழுந்தன.எப்போதும் நாம் எடுக்காமல் விட்டுவிட்டால் மறுபடியும் உள்ளே போய்விடுமோ என்று அஞ்சுகின்ற அளவிற்கு அந்தப் பெட்டிக்குள்ளே இருந்து எட்டிப்பார்க்கும் ரூபாய் நோட்டுக்களுக்குப் பதிலாக, மொத்தமாய் கீழே விழுந்தவுடன்  வீரன் ஒரு நிமிடம் பதறிப் பொனார்.  கீழே குனிந்து ரூபாய் நோட்டுக்களைப் பொறுக்கினார். ஒரு 500 ரூபாய் நோட்டு இரண்டு மூன்றாய் கிழிந்து விழுந்திருந்தது. மீதம் 9 நோட்டுகள் நன்றாக இருந்தன. அந்தக் கிழிந்து விழுந்த நோட்டைக் கையில் எடுத்தார் வீரன். தொட்டவுடன் அப்படியே நோட்டு பொடிப்பொடியாக உதிர்வது போல உதிர்ந்தது. இது என்ன அதிசயமாக இருக்கிறது, ரூபாய் நோட்டு இப்படி உதிர்கிறதே என்று பார்த்த வீரன் என்ன செய்வது என்று முழித்தார்.


வீரன் சென்ற மாதம்தான் தனது 75-ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடி இருந்தார். வெளியூரில் இருக்கும் மகனும்,மருமகளும்.மகளும்,மருமகனும் தங்கள் பிள்ளைகளோடு வந்திருந்தார்கள். இரண்டு பேருமே சொற்ப வருமானத்துக்காரர்கள். தனியார் கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள்.மிக எளிமையாகத் தன் மனைவி மரகதத்தோடும் ,உறவுகளோடும் 75-ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடி இருந்தார் வீரன். இந்த ஏ.டி.எம்.இல் பணம் எடுப்பது முதலில் தெரியாமல்தான் இருந்தது.சென்ற ஆண்டு வீட்டிற்கு வந்திருந்த பேரனோடு ஏ.டி.எம். மெசினுக்குப் போய் கற்றுக்கொண்டுவிட்ட வீரன்,நன்றாகத்தான் பயன்படுத்திக்கொண்டிருந்தார். வீட்டில் இருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கும் ஏ.டி.எம். மெசினுக்குச் சென்று தனக்கு வரும் ஓய்வூதியப்பணத்தில் ஆயிரம்,இரண்டாயிரம் என்று எடுத்துக்கொண்டு வந்து பயன்படுத்திக்கொண்டிருந்தார்.


காலையில் மரகதம்தான் ஆரம்பித்தாள்.


"என்னங்க இந்த மாசம் டாக்டர் செக் அப்பிற்கு போகணும். தைப்பொங்கல் வருது கொண்டாடனும்.கொஞ்சம் பேங்க்ல போய் பணம் எடுத்துட்டு வாங்களேன்... " 


"பேங்குக்கு எதுக்குப் போகணும். நம்ம வீட்டுக்குப் பக்கத்திலேயே ஏ.டி.எம் மெசின் இருக்குது ,அங்கிருந்து எடுத்துக்கொள்ளலாம் " என்று சொல்லிவிட்டு வந்திருந்தார் அவர்.


மாதம் மாதம் சுகர்,பிரசர் என்று இருவருக்கும் பக்கத்து தெரு மருத்துவரிடம் பரிசோதனைக்கும்,மாத்திரை வாங்கவும் போகவேண்டியிருந்தது. மருத்துவரிடம் ,அளவாகவே எனக்கு மாத்திரை கொடுங்கள்,என் வருமானத்திற்கு என்னால் அதிகமாக எல்லாம் மாத்திரை வாங்க முடியாது என்று சொல்லியிருந்தார். அந்த மருத்துவரும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தார்.எல்லோருக்கும் ஒரே மாதிரியான கட்டணம் என்றெல்லாம் நிர்ணயிக்கவில்லை.ஒரு நோயாளியைப் பார்த்துவிட்டு,அவரின் மருந்துச்சீட்டிலேயே எழுதிவிடுவார்.அதனைப் பார்த்து முன்னால் இருக்கும் ஆட்கள் இவ்வளவு பணம் கொடுங்கள் என்று சொல்வார்கள்.


எந்தப் பண்டிகை கொண்டாடவில்லையென்றாலும் தைப்பொங்கலை வீரன் கொண்டாடி விடுவார். அது அவரின் 50 ஆண்டுகாலப் பழக்கம். தைப்பொங்கலுக்கு மட்டும் தனக்கும் தன் மனைவிக்கும் புதுத்துணிகள் எடுப்பார்.அதுவும் குறைந்த விலையில்தான்...


அப்படித்தான் மாத்திரைக்கும்,புதுத்துணிக்கும் என்று பணத்தை எடுத்தார். கொரனாவின் இரண்டாவது அலை என்று தொலைக்காட்சியில் சொல்லிக்கொண்டிருந்தார்கள். போனில் கூப்பிட்டு மகன் "அப்பா,அனாவசியமாக வெளியில் எல்லாம் அலையாதீர்கள்.வயதானவர்களைத்தான் மிக அதிகமாகக் கொரனா தாக்குகிறது.வீட்டிற்குள்ளேயே இருங்கள் " என்று சொல்லியிருந்தான். ஆனால் அத்தியாவசியமான வேலைகளுக்கு வெளியில் வரத்தானே வேண்டியிருக்கிறது என்று வெளியில் வந்திருந்தார் வீரன். 


அந்த நல்ல ஒன்பது 500 ரூபாய் நோட்டுகளைத் தனியாகப் பையில் வைத்தார். கிழிந்து கீழே விழுந்த 500 ரூபாய் நோட்டைத் தனியே வைத்தார். போய் வங்கியில் சொன்னால் புது 500 ரூபாய் கொடுத்துவிடுவார்கள்.இப்போது வெயில் கடுமையாக அடிக்கிறது.மணி 10தான் ஆகிறது. கொஞ்சம் நேரம் கழித்துப்போவோம் என்று நினைத்துக்கொண்டு ,ஏ.டி.எம் மிசினை விட்டு வெளியே வந்து குடையை விரித்துக்கொண்டு வீட்டை நோக்கி நடக்கலானார்.


வீட்டிற்கு வந்தவுடன் மனைவியிடம் பணத்தைக் கொடுத்த வீரன்,கிழிந்த ரூபாய் நோட்டையும் மரகதம் கையில் கொடுத்தார். மரகதம் பயந்து போனாள்."ஏங்க ,நமக்கு இருக்கிற பண நெருக்கடியில,இப்படி கிழிஞ்ச 500 ரூபாயோடு வந்து நிக்கிறீங்க.போங்க,போங்க போய் உடனே பேங்க்ல போய்க் கொடுத்து வாங்கிட்டு வாங்க" என்றாள்.


புத்தாண்டில் இரண்டாவது வாரத்திலேயே இப்படியா என்று எண்ணிக்கொண்டே, குடையை விரித்து ,தான் எடுத்த ஏ.டி.எம்.யைத் தாண்டி பேருந்து நிலையத்திற்கு நடக்க ஆரம்பித்தார். ஏ,டி.எம் எப்போதும் போல ,காவலாளி எல்லாம் இல்லாமல் திறந்து கிடந்தது. இப்போது வீரன் பார்க்கும்போதும் அந்த  நாய் மீண்டும் உள்ளே படுத்துக்கிடந்தது. அடுத்து வரும் ஆள், நாயை விரட்டி விட்டுத்தான் பணத்தை எடுக்கவேண்டும். நாய் போக மாட்டேன் என்று அடம்பிடித்தால் வம்புதான் என்று நினைத்தபோது வீரனுக்கு சிரிப்பு வந்தது. சிரித்துக்கொண்டே அந்த இடத்தைக் கடந்து, பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்.


பேருந்து நிலையத்திற்கு வந்தபோது, எதிரில் இருந்த சுடுகாட்டில் பிணம் எரிந்து கொண்டிருந்தது. வாடை தாங்க முடியவில்லை. புகை எழுந்து அந்தப் பகுதியையே சாம்பல் நிறமாக மாற்றிக்கொண்டிருந்தது. சீக்கிரம் பஸ் வந்தால் பரவாயில்லை என்று நினைத்தார். அரசுப்பேருந்து வந்தால் பரவாயில்லை. சிற்றுந்து வந்தால் இறங்கி கொஞ்ச தூரம் நடக்கவேண்டுமே என்று நினைத்தார். கொரனா காலத்தில் பேருந்துகள் இப்போதுதான் இயங்க ஆரம்பித்திருந்தன.ஆனால் அரசுப்பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்த பின்பு சேர் ஆட்டோ, சிற்றுந்துகள்தான். சேர் ஆட்டோவில் ஏறி இறங்குவது கடினமாக இருந்தது. மினி பஸ் வந்தவுடன் ஏறி,தந்தி ஆபிஸ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினார்.


தந்தி ஆபிஸ் பக்கம் இருந்து தமுக்கம் பக்கம் போகவேண்டும்.இடைவிடாது வண்டிகளும்,ஆட்டோகளும்,பேருந்துகளும் போய்க்கொண்டிருந்தன. சிலரோடு சேர்ந்து நின்று கொண்டிருந்தார் வீரன். இளவயது பையன் டக்கென்று ரோட்டைக் கடந்து அந்தப் பக்கம் போய்விட்டான்.வீரனுக்குத் தயக்கமாக இருந்தது.சில நேரம் காவலர்கள் நின்று நடைபாதையாக வருபவர்களை அந்தப் பக்கம் பயம் இல்லாமல் செல்ல வழி வகுத்தார்கள்.பல நேரம் காவலர்கள் இருப்பதில்லை.வீரனோடு வேலைபார்த்த ஈஸ்வரி இப்படித்தான் ரோட்டைக் கடக்கும்போது விழுந்து,விபத்தில் காயம்பட்டு மூன்று நான்கு மாதம் சிகிச்சை எடுத்தது இந்த நேரத்தில் வீரனுக்கு நினைவுக்கு வந்து தொலைத்தது.


கூட்டம் கொஞ்சம் அதிகமானவுடன், மெல்ல கூட்டமாக ரோட்டைக் கடக்க முற்பட்டார்கள்..வீரனும் அவர்களோடு இணைந்து நடந்து  வந்து சேர்ந்தார்.உசிரைக் கையில் பிடித்துக்கொண்டு நடப்பதைப் போலத்தான் ஒவ்வொருவரும் அந்த இடத்தைக் கடந்தார்கள். மெல்ல நடந்து கருப்பசாமி கோயிலுக்கு அருகில் இருக்கும் அந்த வங்கிக்குள் நுழைந்தார்.


உள்ளே செல்வதற்கே ஒரு கூட்டம் இருந்தது. வங்கியின் முன்னால் இருந்த காவலாளி இருவர் உள்ளே இருந்து வந்தபின்பு ,வெளியிலிருந்து இரண்டு பேரை கைகளில் கைகழுவும் திரவத்தைக் கொடுத்துத் ,தேய்த்துக்கொண்டு உள்ளே போக விட்டுக்கொண்டிருந்தார். ஒரு அரை மணி நேரம் நின்ற பிறகு உள்ளே போக முடிந்தது. உள்ளே சென்று ,முன்னால் இருந்தவரிடம் இந்த மாதிரி 500 ரூபாய் நோட்டுக் கிழிந்து விழுந்தது. அதை மாற்ற வேண்டும் என்று சொன்னவுடன் 'இங்கு மாற்ற மாட்டார்கள் சார். இருந்தாலும் அந்த 3வது கவுண்டரில் போய்க் கேளுங்கள் சார் " என்று மரியாதையாகச்சொன்னார்.


அந்த 3-வது கவுண்டருக்கு முன்னாலும் ஒரு கியூ இருந்தது. பெரும்பாலும் கையில் செக் வைத்துக்கொண்டு பணம் எடுக்க நிற்பவர்கள்.தான் ஒரு விவரம்தானே கேட்கவேண்டும்.முன்னால் போகலாமா என்று நினைத்தார். இவர் முன்னால் நகர்வதைப் பார்த்தவுடன் ஒரு பெண்மணி வந்து " சார் எதுவென்றாலும் வரிசைதான் ,வரிசையில் நின்று போய்க்கேளுங்கள் " என்றார். சரி என்று வரிசையில் நின்றார்.

 

கண்ணாடியால் தடுப்புப் போட்டிருந்தார்கள்.எல்லோரும் முகக் கவசம் போட்டிருந்தார்கள். வீரனும் போட்டிருந்தார். தன் முறை வந்தவுடன் கிழிந்த 500 ரூபாயை அந்தக் கிளார்க்கிடம் காட்டினார். வாங்கிப் பார்த்த அவர் " என்ன சார், இப்படிப் பொடிப்பொடியா உதிருது? ஏ.டி.எம்.ல பணம் போடுவதெல்லாம் தனியார் கம்பெனிகளிடம் கொடுத்து விட்டார்கள் சார். அவங்க என்ன நோட்டு வைக்கிறாங்கன்னு தெரியலைங்க சார். இந்த வாரத்திலேயே உங்களை மாதிரி நாலஞ்சு பேர்,இப்படி நோட்டுக் கிழிஞ்சு வருதுன்னு சொல்லிட்டாங்க...நாங்க என்ன பண்றது ? " கிட்டத்தட்ட புலம்பினார்.


" சார் நான் ஒரு தப்பும் பண்ணலையே சார்.எப்போதும் போல ஏ.டி.எம்-ல பணம் எடுக்கப்போனேன். இப்படி 500 ரூபாய் கிழிஞ்சு வருது...வர்ற வருமானமே ரொம்ப கொஞ்சம்.இதிலே " என்று வீரன் பேசும்போதே வழிமறித்தார்.


"இப்படிக் கிழிஞ்ச நோட்டை மாத்திறதுக்கு, நீங்க ரெயில்வே ஸ்டேசனுக்கு முன்னாடி இருக்கிற வங்கிக் கிளைக்குப் போகணும்.போய்ச்சொல்லுங்க சார்,உங்களுக்கு  வேற புது நோட்டு கொடுத்தாலும் கொடுப்பார்கள் " என்றார்.


மதியம் 2 மணியானது. வீரனுக்கு .பசித்தது.,வீட்டிற்குப் போய் சாப்பிட்டு விட்டு நாளைக்குப் போய் ,ரெயில்வே ஸ்டேசன் அருகில் இருக்கும் வங்கிக் கிளையில் போய்ப் பார்ப்போம் என்று நினைத்துக்கொண்டு மறுபடியும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கடந்து வந்தார். மினிபஸ்ஸில் ஏறி தன்னுடைய பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ,குடையை விரித்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார்.


"ஏங்க,மணி 2க்கு மேல  ஆச்சு.சாப்பிடாமா இவ்வளவு நேரமா " என்று சொல்லிக்கொண்டே மரகதம் சாப்பாட்டை வைக்க,முகக் கவசத்தை வெளியில் குப்பைக் கூடையில் கழற்றிப்போட்டு விட்டு ,கைகளை திரவத்தை வைத்துக்கழுவி விட்டு ,உள்ளே வந்து சாப்பிட உட்கார்ந்தார்.


"ஏனுங்க வங்கியில புது நோட்டு கொடுத்துட்டாங்களா " என்ற மரகதத்திடம் "இல்லைப்பா,ரெயில்வே ஸ்டேசனுக்கு முன்னாடி இருக்கிற வங்கிக் கிளைல போய்க் கேட்கணுமாம் " என்று சொன்ன வீரனிடம் 

"இது என்ன கொடுமையா இருக்கு...இந்த 75 வயசில எங்கெங்க அலையுறது..அவங்க கிழிஞ்ச நோட்டை உள்ளே வச்சுட்டு இப்படி நம்மல அலைய விடுறானுங்களே ' என்ற மரகதத்தை சமாதானப்படுத்தினார் வீரன்.

மறு நாள் காலை ,ரெயிலேவே ஸ்டேசனுக்கு முன்னால் உள்ள வங்கிக் கிளைக்குப் போய்ச்சேர்ந்தார் வீரன்.மேலே முதல் மாடிக்குப் போய்க் கேளுங்கள் என்றார்கள். படிக்கட்டுகளில் மெதுவாக... மெதுவாக ஏறிச்சென்ற வீரன்,அந்த செக்சனைக் கேட்டு உள்ளே போனார்.


அந்தப் பெண்மணி மிகுந்த பரபரப்பாக இருந்தார். ஆனால் உள்ளே போனவுடன் அவருக்கு முன்னால் இருந்த இருக்கையைக் காட்டி,சைகையிலேயே உட்காரச்சொன்னார். "நன்றிங்க அம்மா" என்று சொல்லிக்கொண்டே வீரன் அமர்ந்தார்.செல்பேசியில் அவர் பேசுகிற வழக்கை வைத்து, நெல்லைப் பகுதியைச்சார்ந்தவராக அவர் இருக்கக்கூடும் என்று வீரன் யூகித்தார். ஒரு பத்து நிமிடம் கழித்து' என்ன வேணும் உங்களுக்கு ?" என்று அவர் கேட்க ,இவர் கிழிந்த நோட்டைக் காட்டினார். " என்ன இப்படி நோட்டு உதிருது, கவர்மெண்ட் அடிக்கிற நோட்டு இப்படியெல்லாம் உதிராதே இப்ப பொங்கல் சமயம்.நிறைய வேலை இருக்கு. இப்ப  நோட்டை மாத்த முடியாது. ஒரு வெள்ளை பேப்பருல இந்த நோட்டை அப்படியே ஒட்டி,பொங்கல் முடிஞ்ச பிறவு ஒரு வாரம் கழிச்சு வாங்கய்யா" என்றார்.


"இங்க வந்தா உடனே மாத்திக் கொடுத்துருவாங்கன்னு சொன்னாங்களே..."


"இல்லைங்கய்யா, இப்ப  ஒண்ணும் மாத்தித்தர முடியாது" 


"அம்மா உங்கள் தொலைபேசி எண் கொடுக்க முடியுமா? கேட்டுட்டு வர்றனே..." 


'அப்படியெல்லாம் கொடுக்க முடியாதுங்கய்யா, ஒரு நாளைக்கு நூத்துக்கணக்குல பேங்குக்கு வருவாங்க. எல்லாருக்கும் கொடுக்க முடியுமா? அப்படியெல்லாம் கொடுக்க முடியாது ".  சொன்ன வேகத்தில் அவர் அடுத்த அவரது வேலையைப் பார்க்கத்தொடங்கி விட்டார்.


இனி இங்கிருப்பது ஒன்றுக்கும் ஆகாது என்று நினைத்த வீரன் அந்த அலுவலகத்தை விட்டு வெளியே வந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தார். மரகதம் இப்போதும் ,"விடக்கூடாதுங்க.உங்காமத் திங்காம 500 ரூபாயை எப்படி விடுறது.பொங்கல் முடிஞ்சவுடனே போய்க்கேளுங்க.கேட்டு 500 ரூபாயை வாங்கிகிட்டு வாங்க" என்றாள்.


பொங்கல் முடிந்து ஒரு வாரம் கழிந்ததும் ,மீண்டும் பத்திரமாக வைத்திருந்த அந்த 500 ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டு ரெயில்வே ஸ்டேசன் அருகில் இருக்கும் வங்கிக் கிளைக்குச்சென்றார்.அவர் சென்ற முறை பார்த்த அந்தப் பெண் அதிகாரி இல்லை. அவரிடம்தான் மாற்ற முடியும்,அடுத்த வாரம் வாருங்கள் என்று அங்கிருந்த ஒருவர் சொல்ல வீட்டிற்கு வந்து சேர்ந்தார் வீரன்.


மறுபடியும் அடுத்த வாரம் சென்ற போது அந்தப் பெண் அதிகாரி இருந்தார். 


"ஐயா, உங்களுக்கு உதவணும்தான் நினைக்கேன். ஆனா என்னால ஒண்ணும் செய்ய முடியாது. கீழ மேலதிகாரி இருப்பாங்க.. அவர்கிட்ட போய்க் கேட்டுட்டு வாங்க. அவர் சரின்னு சொன்னா மாத்தித்தரேன்." 


மீண்டும் கீழ்த்தளத்திற்கு வந்து அந்த மேலதிகாரி அறைக்குச்சென்றார். விஷயத்தைச் சொல்லி தான் ஏ.டி.எம்.மில் எடுத்ததற்கான ரசீதைக் காண்பித்தார்.இந்தத் தேதியில் ,இந்த ஏ.டி.எம் கிளையில் இவ்வளவு பணம் எடுத்தது என்ற விவரம் எல்லாம் இருந்தது. 


"நீங்க பணம் எடுத்தப்ப யாராவது இருந்தாங்ககளா?" 


"நாய் மட்டும்தான் இருந்தது " என்று சொல்ல வாய் நினைத்தது. அதை அடக்கி  'ஒருத்தரும் இல்லை சார் "  என்றார்.


"எந்த விதமான ஆதாரமும் இல்லாம எப்படி சார் நாங்க பணம் தர்றது? எங்க ஏ.டி.எம்.மில் எடுத்த பணம்தான்ங்கறதுக்கு  என்ன ஆதாரம் இருக்கு? என்னால ஒண்ணும் செய்ய முடியாது.மறுபடியும் அந்த அம்மாகிட்டயே போய்க் கேட்டுப்பாருங்க. அவங்க  கொடுக்கறதை வாங்கிக்கோங்க" என்றார்.

மீண்டும் மேல் தளத்திற்கு வந்து அந்த அம்மாவிடம் வந்தார். அவரின் மேல் அதிகாரி சொன்னதைச்சொன்னார். 'அந்தக் கிழிந்த நோட்டை வாங்கி  "ஒரு பக்கம்தான் நம்பர் இருக்கிறது.மற்ற பகுதியெல்லாம் காணவில்லை." என்று சொல்லிக்கொண்டே ஒரு ஸ்கேலைக் கொண்டு வந்து அளந்து பார்த்தார்.


"ஐயா, உங்க நோட்டுக்கு 100 ரூவாதான் கொடுக்கமுடியும். மற்ற பகுதியெல்லாம் இல்லை. இதுவுமே நான் ரிஸ்க் எடுத்துத்தான் கொடுக்கமுடியும்" நிதானமாக வார்த்தை வார்த்தையாக அழுத்திச் சொன்னார். 


"இல்லைங்கம்மா, எனக்கு 100 ரூபா வேணாம். எனது 500 ரூபாயும் கொடுக்க முடிஞ்சா கொடுங்க.. இல்லைன்னா  எதுவும் வேணாம்" 


மவுனமாக அந்த அம்மா கிழிந்த ரூபாய் நோட்டை வீரனிடம் கொடுத்தார். இவ்வளவு நாள் கசங்கக்கூடாது எனப் பாதுகாத்த அதை அள்ளிப் பைக்குள் திணித்தார். வெயிலோடு அலைச்சலும் மன உளைச்சலும் மனதை வாட்டியது. இதில் மூன்று நான்குமுறை ஒவ்வொரு வங்கிக் கிளைக்கும் அலைந்ததில் போக்குவரத்துச் செலவே 200 ரூபாய்க்கு மேல் ஆகியிருந்தது.  வெளியே வந்த வீரனுக்கு அந்தப் பெரிய விளம்பரப்பலகையில் வெயில் பட்டுக் கண் கூசியது. நிமிர்ந்து பார்த்தார்.


"இந்திய வங்கிகள் எல்லாம் நவீன மயமாக்கப்பட்டு விட்டன..வீட்டிற்கு அருகில் இருக்கும் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துப்பழகுங்கள்!" எழுத்துகள் மின்னிக் கொண்டிருந்தன.


                                                                                                                   வா.நேரு, 21.03.2022








Sunday, 20 March 2022

நன்றி குழந்தைகளே....

 29 ஆண்டுகள் முடிந்து 30-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்,இல்லற வாழ்வில் நானும் என் இணையர் நே.சொர்ணமும்.திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில்,இணையேற்பு ஒப்பந்த உறுதிமொழியை நேற்றுத்தான் வாசித்ததுபோல் இருக்கிறது.29 ஆண்டுகள் ஓடிவிட்டது. எனது இன்பத்திலும் துன்பத்திலும் உறுதியாய் உடன் இருக்கும் தோழமை,என் இணையர் சொர்ணத்திற்கு என் இதயம் நிறைந்த நன்றி.அன்புப் பிள்ளைகள் சொ.நே.அன்புமணியும்,சொ.நே.அறிவுமதியும் கேக் வெட்டவைத்து,பரிசுப்பொருள்கள் கொடுத்து கொண்டாடி மகிழ்ந்தார்கள்.நன்றி குழந்தைகளே....



பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தலைவர் முனைவர் வா.நேரு,நே.சொர்ணம் இணையர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் இணை ஏற்பு ஏற்ற 30-ஆம் ஆண்டு தொடக்க நாள்(20.03.2022) மகிழ்வாக,விடுதலை நாளிதழ் வளர்ச்சி நிதியாக ரூ 2000 நன்கொடையாக அளிக்கப்பட்டது. வாழ்த்துகள்.
நன்றி விடுதலை நாளிதழ் 20.03.2022(வெளியூர்)


Saturday, 19 March 2022

நிகழ்வும் நினைப்பும்...முனைவர் நா.நளினிதேவி அவர்களிடம் 'சங்கப் பலகை'

 வல்லினச்சிறகுகள் மின் இதழில் நூல் மதிப்புரைகளை 'சங்கப்பலகை ' என்னும் தலைப்பில் எழுத வாய்ப்புக் கிடைத்தது.18 நூல்களைப் பற்றி எழுதினேன்.அந்த மதிப்புரைகளைத் தொகுத்து தோழர் அகன் என்னும் அமிர்தகணேசன் அவர்களின் முயற்சியால் 'சங்கப் பலகை 'என்னும் தலைப்பில் புத்தகமாக வந்துள்ளது. பெரும்பாலும் அந்த நூல் மதிப்புரை எழுத அடித்தளமாக இருந்த நூல்களின் ஆசிரியர்களுக்கு இந்த சங்கப்பலகை என்னும் நூலை அஞ்சல் மூலமாகவோ நேரிலோ கொடுத்து வருகின்றேன்.

அந்த நூல் மதிப்புரை நூல்களில் ஒன்று 'புற நானூறு தமிழரின் பேரிலக்கியம் ' என்னும் நூல் பற்றியது.அந்த நூலின் ஆசிரியர் முனைவர் நா.நளினிதேவி அவர்கள் மதுரை தெற்குவாசல் பகுதியில் இருக்கிறார்.உறவினர் ஒருவர் வீட்டிற்கு அந்தப் பக்கம் சென்ற நிலையில்,நானும் என் மகளும் சென்று ,முனைவர் நா.நளினிதேவி அவர்களை நேரில் சந்தித்து 'சங்கப்பலகை ' நூலைக் கொடுத்தோம்.மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.அவரின் சகோதரர்,சகோதரரின் இணையர் எனக் கொஞ்ச நேரம் உரையாடல் உற்சாகமாக அமைந்தது. முனைவர் நா.நளினிதேவி அவர்கள் அளித்த 'ஆண் ஆத்தி சூடி 'நூலைப் பெற்றுக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.








Friday, 18 March 2022

தேடி அலைகிறது மனம்.....

 




   விருது ஒன்றினால்

மனம் மகிழும்போது

படர்வதற்கு பந்தல்

தேடும் கொடிபோல

பகிர்ந்து கொள்வதற்கு

உண்மையிலேயே

மனம் மகிழும்

நட்பையோ

உறவையோ தேடி 

அலைகிறது மனம்...

                 

                வா.நேரு

                 18.03.222

Monday, 14 March 2022

தருமி எழுதிய கடவுள் என்னும் மாயை....



இன்று மாலை 6.30 மணிக்கு.... முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சொல்லப்பட்ட புத்தகம் பற்றிப் பேசுகின்றேன். வாய்ப்பிருந்தால் வாருங்கள்.அதிலும் கடவுள் நம்பிக்கை மிக அதிகம் உள்ளவர்கள் வாருங்கள்...வரவேற்கின்றேன்.



 

Sunday, 13 March 2022

ஒரு பரிசு எனக்கு ஒருவரிடமிருந்து இன்று கிடைத்தது....

 ஒரு நூலை எழுதியவனுக்கு மிகச்சிறந்த பரிசு ,அந்த நூலைப் படித்துக் கருத்து கூறுவது. குறை நிறைகளைச்சுட்டிக்காட்டுவது.அதுதான் எழுதுபவனுக்கு கிடைக்கும் சத்து டானிக். அப்படி ஒரு பரிசு எனக்கு ஒருவரிடமிருந்து இன்று கிடைத்தது. அவர் வாருங்கள் படிப்போம் குழு உறுப்பினர்களில் ஒருவரான திரு.அர்ஷா மனோகரன் அவர்கள்.அவர் .சிறுகதைகளைத் திறனாய்வு செய்வதில் அப்படி ஓர் ஆற்றலும் விருப்பமும் உள்ளவர். எனது சிறுகதைத் தொகுப்பு நூலைப் படித்து,ஒரு விரிவான விமர்சனத்தை வாட்சப்பில் பகிர்ந்திருந்தார்.அன்பும் நன்றியும் தோழர் அர்ஷா மனோகரன் அவர்களுக்கு...


நெருப்பினுள் துஞ்சல்

முனைவர் வா.நேரு

எழிலினி பதிப்பகம்

120/-


"நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்

யாதொன்றும் கண்பாடு அரிது" 

அட்டைப் படமும் நூலின் தலைப்பும் மேற்கண்ட குறளை நினைவூட்ட நூலுக்குள் நுழைந்தேன். தெருக்கோடி மனிதர்களுக்கிடையே ஊடுருவி அவர் துன்பத்தின் வலி கண்ட  ஓர் உள்ளத்தின் குமுறல்களின் வெளிப்பாடே இச்சிறுகதைத் தொகுப்பு.

முதலாவது சிறுகதை

1.அடி உதவுற மாதிரி......

கிராமத்து வாழ்க்கை முறைகளையும் அங்குள்ள மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்,  கல்வியைத் தொடர தடை நிற்கும் அகப் புறக் காரணிகள்,  அவற்றைத் தகர்த்து  வெற்றி காணும் சிலர்,  சிக்கி சின்னாபின்னமாகும் சிலர்,  பள்ளி தலைமை ஆசிரியர்களின் மனப்போக்கு அவர்கள் ஏற்படுத்தும்  மிகப்பெரிய மாற்றங்கள்.  கல்வி கற்பதும் கல்விசார் பதவிகளும் அவர்களின் எட்டாக்கனி என்ற எண்ணம்

ஒரு  புறம். அப்போக்கை மாற்றுவதற்குக் கையாளப் படுகின்ற இரு வேறு வகையான யுத்திகள் எது வெற்றி பெறுகிறது என்று மிகச் சிறப்பாக இக்கதை நகர்கிறது. சீரான ஓட்டத்தில் சிறந்த தமிழ் பெயர்களோடு கிராமத்துப் பின்னணியில் உருவான இச்சிறுகதை  சமூக மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும்  கல்வியைத் தவிர வேறென்ன இருக்க முடியும் என்ற சீர்மிகு கருத்தையும் எல்லோரும் கல்வி கற்க வேண்டும் என்ற உளமார்ந்த ஆசையையும் வெளிப்படுத்துகின்றது.

கிணற்றில் விழுந்து சாகப் போனவனுக்குப் பிடிக்க ஒரு மரக்கிளை கிடைத்தது போல...

கைநிறைய வேப்பம் கொழுந்தை வாயில் விட்டுக்கொண்டு அமர்ந்திருப்பவரைப் போல என்ற உவமைகள் கதைமாந்தர்களின் உணர்வுகளை வாசகனுக்குள் மேலும் சிறந்த முறையில் தெளிவாகக் கடத்த உதவுகிறது.

அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்கின்ற பழமொழி பொய்த்துப்போனது முத்துவின்

அன்பான அறிவுரைகளால். 

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை.  


திருவள்ளுவரின் குறள் மெய்த்துப்  போனதை இக்கதை சொல்கிறது.


2.) சீர் சுமந்து அழிகிற சாதி சனமே....

மிகவும் அருமையான சமூக விழிப்புணர்வோடு கூடிய அற்புதமான படைப்பு. 

மனிதனின் மனநிலையை ஒரு கட்டத்துக்குள் கொண்டு வருவது அத்தனை சுலபமல்ல எத்தனை மனிதர்கள் இவ்வுலகில் அத்தனை மனங்களால் தான் பூமி சுழன்று கொண்டிருக்கிறது. 

எதனால் இத்தகைய மனோநிலை என்றெல்லாம் ஒவ்வொருவரையும் யாராலும் கணிக்கவும் அல்லது வரையறுக்கவும் முடியாது ஒவ்வொருவரின் திட்டமிடலும் அவரவர் வாழ்க்கைச் சூழலுக்கேற்ப அனுபவத்திற்கு ஏற்ப அமைகிறது. அந்த வகையில் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கு மொய் பணமும் பெரும்பங்கு கிராமங்களில் வகிக்கிறது என்பது நகர்ப்புற வாசிகளுக்கு புதிய செய்தியாகக் கூட இருக்கலாம்.  ஆனால் ஒரு பொது பழக்கத்தின் கீழ் நலன் பெறுவதும் அது சரியாகப் பயன்படுத்துவதும் அவரவர் சாமர்த்தியம் என்று தான் சொல்ல வேண்டும்.

பொதுவாக குடும்ப விழாக்கள் அதீத பொருள் விரயத்தோடு நடத்தப்படுவதை நான் விரும்புவதில்லை. ஆடம்பரத்தையும் தாண்டி பொறுப்புணர்ச்சி இல்லாத தனம் என்பதுதான் எனது பார்வை. 

மொய் பணம் உயிர் பறிக்கும் விஷம் நிறைந்தது என்பதைப் புரிந்துகொள்ள வைப்பதாக அமைந்திருக்கிறது.


நூலாசிரியரின் சமூகத்தின் மீதான அதீத அக்கறையும் இச்சமூகம் உழன்று கொண்டிருக்கும் சில தவறான பழக்கவழக்கங்களையும் மனக் குமுறலோடு பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.


3 தீவிர சிகிச்சைப் பிரிவு

"நீங்கள் சுட்டிக்காட்டும் குறைகள் நீங்கள்

 எங்களுக்குக் கொடுக்கும் பரிசு"

என்ற மருத்துவமனை வாசகத்தோடு ஆரம்பிக்கிறது தீவிர சிகிச்சைப் பிரிவு.

 எழுத்தாளர் வாசகனின் மதநம்பிக்கைகளையும் நடைமுறை சிக்கல்களையும் நாசுக்காய் சுட்டிக் காட்டி வாசிப்பின் முடிவில் நம்பிக்கை சார்ந்த உணர்ச்சிகள் அடிப்படையில் கட்டுண்டு கிடக்கின்ற மூளைக்குள் இருக்கின்ற கற்பனை கடவுளுக்கும்  நம்பிக்கைகளுக்கும்  அறுவை சிகிச்சை செய்து சமூகத்தின் குறைகளை வாசகனுக்கு சுட்டிக்காட்டுகிறார். தெளிவான சிந்தனையை தூண்டி  வாசகனின்  சிந்தனையை சீரமைத்து அதையே பரிசளித்து   அனுப்பி வைக்கிறார். 


கதையின் நாயகன் முத்து...கடவுள் நம்பிக்கை மீதான தன் ஆதங்கத்தை வாழ வேண்டியவர்கள் ஏன் சாக வேண்டும் மருத்துவமும் காப்பாற்றாது நம்பிக்கையும் காப்பாற்றாது என்றான பிறகு சிலைகளும் சித்திரங்களும் பூஜைகளும் வேண்டுதல்களும் ஆரத்தி ஆராதனைகளும் எதற்கு என்ற சாமானியனின் பிரதிநிதியாகிறான். 


தனியார் மருத்துவமனைகளின் தேவையற்ற வசதிகளும் தேவைக்கதிகமான கட்டணங்களையும்,  முடிவில் அவர்களது கையறு நிலையும் நிச்சயமற்ற உத்தரவாதமற்ற சிகிச்சையும் ஒரு சாமானியனின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அது என்ன தொழில் கூடமா பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய உயிர்களைக் காப்பாற்ற நம்பி வருகின்றவர்களின் வாழ்க்கை அதன்பின் அடங்கி இருப்பது  ஒரு குடும்பத்தின் கண்ணீர்

 குறிப்பிட்ட நபரின்  குடும்பத்திற்கான முக்கியத்துவமும் என எத்தனை எத்தனை நுணுக்கங்கள் உள்ளடக்கிய இந்த வாழ்க்கையில் சர்வசாதாரணமாகக் கட்டணங்கள் நியமிக்கப்பட்டு உயிர்களோடு விளையாடும்  தனியார் மருத்துவ மனைகள் எங்கே போய்க்கொண்டிருக்கிறன.

 எல்லோரும் தனியார் மருத்துவமனையை நோக்கி விரைகிறோம் அப்படியென்றால் அரசின் ஒதுக்கீடுகளும் அரசு மருத்துவமனைகளும் என்ன செய்து கொண்டிருக்கின்றன ஏன் நாம் அங்குச் செல்வதில்லை என்ற எண்ணங்களும் பல்வேறு கேள்விகளை மனம் கேட்கத் தொடங்க  சிந்தனைகள் வேறு திசை நோக்கி விரியத் தொடங்கி விட்டது. 

தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு என்று தனி மருந்தக பிரிவு இருக்கக் கூடாதா என்பதில் நாம் அன்றாடம் பார்க்கக் கூடிய மருத்துவமனைகளின் நெருக்கடிகளையும் நமது பதட்டத்தைப் புரிந்து கொள்ளாத எதிராளியின் குணத்தையும் சிறப்பாகச் சித்தரித்துள்ளார்.

எல்லா மனிதர்களும் தனக்கு ஏற்படுகின்ற பயம் சுயநலம் இவற்றால்தான் இறைவனைத் தேடுகிறான் அதில் மாற்றுக்கருத்தில்லை. அதையே எழுத்தாளரும் சுட்டிக்காட்டுகிறார்.

மருத்துவமனைகளும் மருத்துவ கட்டணங்களும் அவை வெறும் தொழிற்சாலை கூடங்களே.

ஒரு ரயில் பெட்டியைப் போல் மருத்துவமனையும் பல்வேறு மனநிலையில் உள்ள மனிதர்களைச்  சுமக்கிறது. புதிய வரவு மகிழ்ச்சியையும் ஒரு உறவின் மறைவு துன்பத்தையும் தருகிறது இந்த இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடையில் மனிதன் படுகின்ற அல்லோலங்கள் தான் எத்தனை எத்தனை? 

வாழ்ந்து விட வேண்டும் என்ற ஒன்றைத் தவிர மருத்துவமனைக்கு வர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? 

வயது வித்தியாசமின்றி போராடும் நோயாளர்கள் அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில்  குடும்பத்தார். முயற்சிக்குத் தடை நிற்கும் மருத்துவமனை கட்டணங்கள். எல்லாவற்றையும் கடந்து நிற்கும் கடவுள் நம்பிக்கை. கடைசியில் கைவிட்ட கடவுள்கள் என் ஆசிரியரின் ஆதங்கம் நம்மைத் தொற்றிக் கொள்கிறது. 

கல்வியும் மருத்துவமும் அனைத்து சாமானியர்களுக்கும் குறைவின்றி கிடைக்க வேண்டும் அதில் எந்த பாகுபாடும் ஏற்றதாழ்வும் இருக்கக்கூடாது.  பிறந்த எல்லா உயிர்க்கும் வாழும்  உரிமை உண்டு அவ்வுரிமை பணத்தால்  நிர்ணயம் செய்யப் படக்கூடாது. 

வீட்டைவிற்று காட்டைவிற்று இறுதியில் பயனற்றுப் போன மருத்துவமும்  செலவழித்த பணமும் நெஞ்சைப் பிழிகிறது.

மருந்துகளும் மருத்துவரும் இருக்கின்ற இடத்தில் கண்ணுக்குத் தெரியாத கடவுள் எதற்கு அவரால் மட்டும் எப்படிக் காப்பாற்ற முடியும் மருத்துவமனைக்குள் மத வழிபாட்டுக் கூடங்கள் எதற்கு? 

இப்படி  மனித உணர்வுகளோடு விளையாட உன்னதமாகக் கட்டமைக்கப்பட்டுத் திட்டமிட்டுத்  திருடும் கூட்டங்கள் கையில் அல்லவா மருத்துவமும் கல்வியும் இன்று சிக்கி  தவிக்கிறது. 

ஒரு இடத்தில் கூட கதையை வாசிக்கின்றோம் என்ற எண்ணம் வரவில்லை. 

 ஒரு மருத்துவமனையில் உட்கார்ந்து அனுபவித்த காட்சிகளாகவே உணரமுடிந்தது கதையின் இறுதிக் காட்சி நம்மை ஒரு சில நிமிடங்கள் உலுக்கிவிட்டது அந்த குழந்தைச் சாமி படத்தை விட்டு தந்தை பின் கதறிச் செல்லும் காட்சி மனம் கனத்தது.    கண்முன் விரித்த அத்தனை காட்சிகளும் உண்மைக்குச் சாட்சிகளே. அருமையான வாசிப்பு அனுபவமும் சமூக கல்வியையும் போதித்தது இச்சிறுகதை. 

4.முட்டுச்சுவர்.

பல நேரங்களில் செய்தி தலைப்புகள் நம்மை நாள் முழுவதும் வலி நிறைந்த மனநிலையிலிருந்து நகர விடுவதில்லை. பிரேக்கிங் செய்தி என்ற தலைப்பு செய்தியும் அதோடு சேர்ந்து ஒலிக்கின்ற பின்னணி இசையும் அப்பப்பா ஒரு கணம் இதயத்துடிப்பை நின்றுவிடச் செய்யவோ அதிகரிக்கவும் செய்யும் என்பதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்க முடியாது. 

அப்படித் திணறவைக்கும் செய்திகளில் முதன்மையானது பள்ளி மாணவர்களின் தற்கொலை செய்திகள். பல காரணங்கள் இருக்கலாம் அவற்றைத் தனித்தனியாக நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்பவில்லை.  ஆனால் மாணவர்களின் மன உளைச்சல் பிரதான காரணம் என்பது மறுக்க முடியாத ஒன்று மன உளைச்சலுக்கு யார் காரணம்?  என்ற கேள்விக்கு இருவரைச் சுட்டிக்காட்ட முடிகிறது ஒன்று பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள். 

உலகம் முழுவதும் தற்கொலைகள் நடைபெற்றுக் கொண்டே இருந்தாலும் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகம் தான் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது என்பது கசப்பான உண்மை. 

தன்னால் நிறைவு செய்ய முடியாத ஆசைகளை தன் குழந்தைகள் மூலம் நிறைவு செய்து கொள்ளத் துடிக்கும் பெற்றோர்கள் அவர்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கவனத்தில் கொள்ளாமல் இருப்பதும் பள்ளியின் நற்பெயரைக் குறிக்கோளாக வைத்துக்கொண்டு நூறு சதவிகித தேர்ச்சியும் புள்ளிகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளும் ஆசிரியர்களும் மாணவர்களின் தற்கொலைக்குக் காரணம் ஆகின்றார்கள். 

மாணவர்கள் தமது குடும்பச் சூழல் எதிர்காலம் குறித்த சரியான புரிதல் தனக்கான சரியான கல்வி எது என்ற விழிப்புணர்வோடு  தமது பயணத்தை மேற்கொள்ள வேண்டியது தலையாய கடமை. 

இவற்றையெல்லாம் உணர வைக்கின்ற இக்கதை தளம் கதைமாந்தர்கள் அவர்களுக்கிடையேயான உரையாடல்கள் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அரசு போன்றோரின் காத்திரமான பாத்திரப் படைப்பும் கதைக்கு மெருகூட்டுகிறது. 

பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான கதை. 

சாதாரணமாக உங்கள் கதை வாசிப்பு அரசு மட்டுமல்ல வாசிப்பவர்களை உறங்க விடாமல் கொள்ளும்.

5. இட்லி மாவு....

கதையின் தலைப்பு நம்மைக் கதைக்குள்  வேகமாக இழுத்துச் செல்ல ,  அன்றாடம் நமைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அப்படியே கோர்வையாகத் தொடுத்து அவற்றை சமூக நலனோடு சொல்வதைத் தவிர்த்து எழுத்தாளருக்கு வேறு நோக்கம் எதுவும் இல்லை என்பது புலனாகிறது. 

மிகச்சிறிய கதைக்குள் குறைந்தளவு கதாபாத்திரங்களைக் கொண்டு பாட்டாளிகளின் அன்றாடம் பிழைப்பு அதனுள் இருக்கக்கூடிய  வெற்றிக்கான ரகசிய வழிகளையும் அவர்களது  வலிகளையும்  உரக்கப் பேசுகிறது இட்லி மாவு.

இதுவரை சாதாரண இட்லி மாவு கடை என்று கடந்து சென்ற நாம் இக் கதையைப் படித்த பின் கண்டிப்பாக ஒரு நிமிடம் நின்று கடையைபார்த்துவிட்டுத்தான் செல்வோம்.  என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. 

போட்டியில்லாத வியாபாரத்தில் தரம் கிடைக்காது அதேபோல்

நல்ல வாடிக்கையாளரே சிறந்த  விளம்பரதாரர் என்ற அடிப்படை புரிந்துவிட்டால் அத்தனை தொழிலும் வெற்றித் தொழிலே. கதைக்கு மெருகூட்டும் கருத்துக்கள்.


6.உடையார் முன் இல்லார் போல்.....

"உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் கடையரே கல்லா தவர்."

என்ற குறள் சொல்லும் பொருளே இக்கதை. 

இந்த சமூகத்தில் குணசேகரன் போன்றவர்கள் இன்றும் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பது பெரும் மகிழ்ச்சியாகவும் கோயெல்  போன்ற குழந்தைகள் தான் பொறுப்புணர்ச்சியோடு மாணவப் பருவத்தை முறையாகக் கற்கையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி  கசடற கற்று இச்சமூகத்தின் சிறந்த பிரஜைகளாக உருவெடுக்க வேண்டும் என்ற அக்கறையும் பொறுப்புணர்ச்சியும் கதையாசிரியர் வாசகன் மனதில் கடத்தி விடுவதன் மூலம் இச்சிறுகதை பள்ளி மாணவர்களுக்குச் சொல்லவேண்டிய முக்கிய செய்தி நிறைந்த கதை என்று உணர முடிகிறது..


7. எங்களுக்குத் தேவை என்றால்.....

ஆரம்பம் முதல் இறுதிவரை சிரித்துக்கொண்டே படித்து முடித்த சிறுகதை. 

மாசறுபொன் அழகிய தமிழ்ப் பெயர். இப் பெயரை இரண்டாவது கதையில் பாரக்கிறேன்.  குழந்தைகளிடம் திணிக்கப்படும் பல்வேறு இனிப்புகளில் ஜாதியும் மதமும் பிரதானமானது. மதத்தையாவது மாற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது,  சாதிக்கு அதுவுமில்லை. அந்த அளவிற்கு மதத்தை விடச் சாதி பெரியது என்று நினைக்கையில் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. 

தனக்குச் சுமையாக இருந்த சுமையிலிருந்து விடுபட்டு, தனது குழந்தைக்கு அச்சுமையைத் தராமல் இருந்திருப்பாள் என்று பார்த்தால்,  அவளது மகள் மேடையில் பேசுவதை வைத்து மாசறு பொன் தன் குழந்தைக்குள்  எந்த மதத்தைத் திணித்தாளோ   தெரியவில்லை எதுவாக இருந்தாலும் தெரிவு அவள் மகள் உடையதாக இருக்கும் பட்சத்தில் புதிய தலைமுறை புதிய பாதையில் செல்கிறது என்று திருப்தி கொள்ளலாம்.

8.தீதும் நன்றும்.. 

மிக அழகான சித்தரிப்புகள் ஓரளவிற்கு மதுரையை செலவின்றி சுற்றி பார்க்க முடிந்தது.  தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற அர்த்தத்தில் முடிகிறது கதை. 

 அறிவுரைகளை அள்ளித் தெளிக்கிறது கதை. நாசுக்காய் பட்டும்படாமலும் சில இடங்களில் மட்டும் சில ஆழமான நுட்பமாக பேசப்பட வேண்டிய கருத்துக்களை எழுத்தாளர் கையாள்வதில் சற்று குறை இந்த கதையில். சமூக அக்கறையில் அறிவுரைகள் அவசியமானவைதான் ஆனால் மிதமிஞ்சி போகும்போது அவை சலிப்படைய கூடியவை என்பது எழுத்தாளர் கவனத்திற்கு..


9.யார் யார் வாய்க் கேட்பினும்

இந்த கதை எனக்கு மிகவும் மனதை நெருடிய வலிக்கச் செய்த கதை என்பேன். 

இந்தியச் சமுதாயத்தில் இவையெல்லாம் அத்தனை சீக்கிரம் மாறக்கூடியவை அல்ல புதிது புதிதாக சில இணை பழக்கவழக்கங்களும் தொலைக்காட்சி தொடரும் திரைப்படமும் பட்டிதொட்டி வரை பரப்பிக் கொண்டிருக்கின்றது.  அந்த வகையில் ஆரம்பித்த எத்தனையோ புதிய புதிய கொண்டாட்ட நாட்களை நாம் பார்க்க முடிகிறது.

அவற்றைக் களைய வேண்டிய பொறுப்பும் நம்பிக்கை என்ற பெயரில் எவ்விதமான ஆதாரமற்ற இதுபோன்ற நம்பிக்கைகளில் மனிதன் இன்னும் உழன்று கொண்டிருப்பது உதவாக்கரையான போக்கை மட்டுமே உணர்த்துகிறது.

செல்வியின் தற்கொலையை ஒத்த தோழி ஒருவரின் தற்கொலையை கண்முன்னே பார்த்தவள் நான். அந்த நிஜக் கதைக்கும் இந்த சிறுகதைக்கும் எந்த வேறுபாடும் இருக்க வில்லை, பெயரைத் தவிர.  எனக்குள் ஒரு பெரிய காயத்தை ஏற்படுத்தியது. 

 யார் யார் வாய்க் கேட்பினும்..

சமூகத்தின் அத்தனை இழி நிலைகளையும் எழுத்துக்குள் கொண்டுவந்த எழுத்தாளருக்கு எனது சல்யூட்.


நெருப்பினுள் துஞ்சல்

தலைப்பு ஓரளவிற்கு நமக்கு கதையின் வலியை உணர்த்தி விடுகிறது. முதலில் நான் ஒன்றை சொல்ல வேண்டும் இது ஒரு சிறுகதை தொகுப்பு என்பதனால் மட்டுமே நான் கதை என்ற வார்த்தையை பயன் படுத்தி இருக்கிறேன்.  நூலுக்குள் எந்த கதையும் இல்லை எல்லாமே நிகழ்வுகளின் சித்தரிப்புகளே.  நூலாசிரியர் தன்னைச்சுற்றி கண்ட பேருண்மைகளை தன்னால் இயன்றவரை பொருத்தமான உரையாடல்கள் காட்சி அமைப்புகளோடு கதைகளாக நம்மிடம் திருப்பி தந்திருக்கிறார்.

 இவை அனைத்தும் இங்கிருந்து தான் எடுக்கப்பட்டது இவை அனைத்தும் நம்மை பற்றியது  நம் சக நண்பர்களை நம் உறவுகளை பற்றியது ஏதோ ஒரு தவறை நாம் எல்லோரும் செய்து கொண்டே இருக்கிறோம் அது ஒருவேளை நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று கண்டும் காணாமல் இருக்கின்ற தவறாக கூட இருக்கலாம். 

இந்த வாழ்க்கையில் ஒருவரின் ஆடம்பரம் இன்னொருவனின் அத்தியாவசியம்.  ஒருவனின் பொழுதுபோக்கு இன்னொருவனின் தொழில். ஒருவனின் தேவை முடிவடையும் போது மற்றவனுக்கு தேவை ஆரம்பிக்கிறது எத்தனை ஏற்றத்தாழ்வுகள் இத்தனை வேறுபாடுகள் இவற்றையெல்லாம் கடந்து  சமநிலை பெற வேண்டும் என்பது அத்தனை சீக்கிரம் நடந்து விடக்கூடிய ஒன்றா என்ன இருப்பினும் அரசு தம்மால் இயன்ற அளவு தம் மக்களை காப்பாற்றுவதற்காக அமுல்படுத்தும் சில பயனளிக்கும் திட்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன என்பதை ஆசிரியர் சுட்டிக் காட்டி இருப்பது சிறப்பு. 

 இந்நூல் வாசித்துவிட்டு பின்னர் நம்மை சுற்றி நடக்கும் அவலங்கள் அதற்கு ஏதேனும் ஒரு சிறு துளி பங்களிப்பை செய்து சமுதாயத்தின்  வளர்ச்சியில் நூல் அளவு பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கிறது . இன்னும் பலநூறு கேள்விகளை உள்ளுக்குள் கேட்ககறது. 

பல்வேறு பொருத்தமான  திருக்குறள்களையே கதைக்குத் தலைப்பாகவும் சிறந்த நூல்களையும் கதைகளுக்கு இடையில் சுட்டிக்காட்டி அவையும் பலரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டு இருப்பதாகவே நான் புரிந்து கொள்கிறேன். 


மீண்டும் மீண்டும் கதைகள் முழுவதும் வலியுறுத்தப்படுவது விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கல்வி அறிவு என்பது இன்றியமையாதொன்று என்பதை இளைய சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்.  அவர்களுக்கான வாழ்க்கைப் படிகளில் அரசும் தன் பார்வையை செலுத்த வேண்டும்.  இந்தப் படைப்பு பலரையும் சென்றடைய வேண்டும், எழுத்தாளரின் எண்ணம் நிறைவடையும் வரை. 


அன்பும் பாராட்டுகளும்.

Thursday, 10 March 2022

எனது தோழர்கள் : மாகாளிபட்டி மா.பாலகிருஷ்ணன் அவர்கள்....

 எனது தோழர்கள் : மாகாளிபட்டி மா.பாலகிருஷ்ணன் அவர்கள்....

மதுரை பெரியார் பெருந்தொண்டர் மாகாளிபட்டி அண்ணன் மா.பாலகிருஷ்ணன் அவர்கள் நேற்றிரவு(9.3.2022 ) மறைந்தார்.அவருக்கு வயது 77. அந்தப்பகுதியில் இருக்கும் அண்ணன் கேசவன் அவர்களும் ,பாலகிருஷ்ணன் அவர்களும் இரட்டையர்கள் போல. திராவிடர் கழக,பகுத்தறிவாளர் கழக  நிகழ்ச்சி என்றால் இருவரும் இணைந்தே வருவார்கள்.இரட்டையர்கள் போல இருப்பார்கள்.அண்ணன் பாலகிருஷ்ணன் அவர்களின் தந்தை கே.மாணிக்கம் அவர்கள் திராவிடர் கழகத்தில் இருந்தவர்.தந்தை பெரியாரின் காலத்தில் இயக்கப்பணி ஆற்றியவர்.அதனால் அண்ணன் பாலகிருஷ்ணன்-விஜயலெட்சுமி திருமணத்தைத் தந்தை பெரியார் நடத்தி வைத்திருக்கிறார். எப்போதுமே தந்தை பெரியார் தலைமையில் வாழ்க்கைத்துணை நலத்தை ஏற்றுக்கொண்டவர்கள், என்னைப்போன்றவர்கள் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற திருமணத்தைச்சொல்வது போல பெருமைபடச் சொல்வார்கள்.அப்படி அடிக்கடி தன்னுடைய திருமண நிகழ்வு,அந்த நிகழ்வில் தந்தை பெரியார் பேசிய பேச்சுகள் போன்றவற்றை நினைவு கூர்ந்து தோழர்களோடு பகிர்ந்து கொள்வார்.மகிழ்ச்சி கொள்வார்.





மிக எளிமையாக இருப்பார்.பெரிய பொருளாதார வசதிகள் இல்லை. ஆனால் தன்னால் முடிந்த நன்கொடையை இயக்க நிகழ்ச்சிகளுக்கு மனமுவந்து கொடுப்பவர்.தனது தந்தை கே.மாணிக்கம் அய்யா வழிகாட்டுதலில் இளமையில் இருந்தே கருப்புச்சட்டைக்காரராக வளர்ந்தவர்.வாழ்ந்தவர்.அய்யா நீறுகாத்தலிங்கம் அவர்கள் மதுரை மாவட்டத்தலைவராக இருந்த காலத்திலிருந்து,கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திராவிடர் கழகத்தின் ஏதேனும் பொறுப்புகளில் இருந்து பணியாற்றியவர்.தல்லாகுளத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு வரலாற்று நிகழ்வு.அந்த நிகழ்விற்கு மதுரை மாநகர் முழுவதும் திராவிடர் கழகக் கொடிகளைக் கட்டும் பொறுப்பை ஏற்று சிறப்பாகக் களப்பணியாற்றியவர்.

அய்யா ஆசிரியர் அவர்களின் இரங்கல்

மதுரை மாநகரில் விடுதலை பத்திரிக்கை வழங்கும் பணியை மேற்கொண்டவர். மிதிவிண்டியில் ஏறி மிதித்து,மதுரை மாநகர் முழுவதும் வலம் வந்து விடுதலைப் பத்திரிக்கையை சந்தாதாரர் வீடுகளில் வழங்கியவர். மாநில அமைப்புச்செயலாளர் அண்ணன் வே.செல்வம் அவர்கள்  "விடுதலை சந்தா சேர்ப்பு பணி, மாநாடு, கழக நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள்,எது நடந்தாலும் அவரும் கொடுத்து நண்பர்களிடத்திலும் நன்கொடை பெற்றுக்கொடுக்கும் கொடையுள்ளம் கொண்டவர்.இயக்கப்பணி காரணமாக சந்திக்கும் போதெல்லாம் புன்முறுவலோடு வரவேற்று தன்னிடம் உள்ள சிறிய தொகையை வழங்கி மகிழ்ந்து மிகுந்த உற்சாகப்படுத்துவார்.அமைதியாகவும் கனிவாகவும் பேசக்கூடியவர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் மீது எல்லையற்ற அன்பு கொண்டவர்.ஆசிரியர் அவர்களை சந்திக்கின்றபோது என்ன பாலகிருஷ்ணன் நலமாக இருக்கின்றீர்களா ? என்று ஆசிரியர் அவர்கள் கேட்டவுடன் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் ததும்ப அய்யா நீங்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழவேண்டும் அய்யா என்று படபடத்தகுரலில் சொல்லியது இன்றும் நம் செவிகளில் ஒலிக்கிறது." என்று தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.


எனது கருப்புச்சட்டைத் தோழர்கள் எளிமையானவர்கள். ஆனால் இனிமையானவர்கள்.பொதுத்தொண்டில் மான அவமானம் பாராதவர்கள். தொண்டறத்தில் முன் நிற்பவர்கள்.எத்தனையோ எதிர்ப்புகள் வந்தாலும் ,தந்தை பெரியார் கொள்கையைப் புரிந்து கொண்ட காரணத்தால் கொள்கை ரீதியாக களத்தில் எதிர்த்து நிற்பவர்கள்.உண்மையை உரக்க சொல்ல அஞ்சாதவர்கள்.அதே நேரத்தில் மிகப்பெரிய மனித நேயமிக்கவர்கள்.அவருடைய இணையர் விஜயலெட்சுமி அவர்கள். ,அவரது மகன் எழிலரசன்,பொறியாளராக இருக்கிறார்.ஒரே மகனை நன்றாகப் படிக்கவைத்து நல்ல பொறுப்பில் இருக்க வைத்திருக்கிறார் அண்ணன் பாலகிருஷ்ணன் அவர்களின் உடல் இன்று(10.03.2022) மாலை 3.30 மணி அளவில் ..கழகத்தோழர்களின் இரங்கல் உரைக்குப் பின்பு "வீரவணக்கம்! வீரவணக்கம்! பெரியாரின் பெருந்தொண்டர் அண்ணன் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு வீரவணக்கம்" என்னும் முழக்கத்தோடு வேனில் ஏற்றப்பட்டு,கீரைத்துறை மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.எந்த வித மூடச்சடங்குகள் இல்லாமல் இறுதி நிகழ்வு நடந்தது. ஒத்துழைத்த அண்ணன் பாலகிருஷ்ணன் அவர்களின் உறவினர்களுக்கு நன்றி.


தந்தை பெரியாரின் தொண்டர்கள் மறைந்தாலும் தாங்கள் வாழ்ந்த காலத்தில் கடைப்பிடித்த மனித நேய அணுகுமுறையால் இறப்பிற்குப் பின்னும் முன் உதாரணமாக வாழ்கிறார்கள்.நெஞ்சுரமும்,தந்தை பெரியாரின் கொள்கையில் பிடிப்பும்,இன்றைய தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மீது வற்றாத பாசமும் அன்பும் கொண்ட அண்ணன் மாகாளிபட்டி மா.பாலகிருஷ்ணன் அவர்கள் இறந்தாலும்.நமது நெஞ்சங்களில் என்றும் வாழ்வார். வீரவணக்கம் அண்ணன் மாகாளிபட்டி மா.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு....

Monday, 7 March 2022

மார்ச் 8...பெண்ணே, பெண்ணே போராடு .....வா.நேரு

 


நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ்- மார்ச்-01-15


                           பெண்ணே! பெண்ணே! போராடு
                                                    முனைவர் வா.நேரு

" பெண்ணே,பெண்ணே போராடு,பெரியார் கொள்கையின் துணையோடு " என்ற பாடல் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.ஒரு நண்பர்  "பெண்ணே,பெண்ணே போராடு  என்பது சரி,அது ஏன் 'பெரியார் கொள்கையின் துணையோடு  என்று பாட வேண்டும்.? " என்று என்னிடம் கேட்டார்." கருவறை தொடங்கி,இறக்கும் வரை பெண்களின் வாழ்க்கை என்பதே போராட்டம் தான்.அந்தப் போராட்டத்தில் அவர்களின் கைகளில் இருக்கும் ஆயுதம் போன்றது பெரியார் கொள்கை. தங்களைக் காக்கவும்,தங்களுடைய உரிமையைப் பெறவும், போராடும் பெண்களுக்கு ,பெரியார் கொள்கையின் துணை  தேவைப்படுகிறது" என்று நான் அவருக்கு பதில் சொன்னேன் என்றாலும் அவர் கேட்ட கேள்வியின் அடிப்படையில் எனது  சிந்தனை ஓடியது.

அடுத்தடுத்து இரண்டுக்கு மேல் பெண் குழந்தைகள் பிறந்தால் ,அதைக் கொல்வது சில இடங்களில் நடக்கிறது.ஆண் பிள்ளைகளுக்கு அதிக கவனிப்பும் உரிமையும் அளிக்கும் நிலையில் ,பெண் குழந்தைகளுக்கு அது தரப்படுவதில்லை.பெண்களுக்கு கல்விகூட பெரியாரின் பிரச்சாரத்தால் பெற்ற விழிப்புணர்ச்சியின் காரணமாகவே அதிகரித்து வருகிறது.

பிறக்கும் ஒவ்வொரு பெண்ணும்,திருமணத்திற்காகவே வளர்க்கப்பட்ட நிலையில்,திருமணம் மட்டுமே ஒரு பெண்ணின் வாழ்க்கையல்ல என்று மண்டையில் அடித்துச்சொன்னவர் பெரியார் அல்லவா. எனவே பெண் ஒவ்வொரு பருவ நிலையிலும் போராட வேண்டியிருக்கிறது. அப்படிப் போராடுவதற்கான கருத்தினை,தன்னம்பிக்கையை,துணிவைக் கொடுப்பதாக பெரியாரின் கொள்கை இருக்கிறது.

இப்போது 2022,மார்ச் மாதம்.ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால்,1922-ல் தமிழ் நாட்டில் பெண்கள் நிலை எப்படி இருந்தது? இன்றைக்கு எப்படி மாறியிருக்கிறது என்ற ஒப்பீட்டின் மூலம் நாம் உண்மையை உணரலாம். கல்வி கற்ற பெண்கள் சதவீதம்,பணிகளுக்கு சென்ற பெண்களின் சதவீதம்,பெண்கள் திருமணம் நடைபெற்ற வயது என்று பல ஒப்பீடுகள் மூலம் இன்றைக்கு பெண்கள் நிலை எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்னும் உண்மையை உணர முடியும்.குழந்தைத் திருமணம் போன்ற நிகழ்வுகள்,விதவைகளுக்கு நடத்தப்பட்ட கொடுமைகள் என்று அந்தக் கால கட்டத்தில் பெண்கள் மேல் நடத்தப்பட்ட அடக்குமுறைகளை அறிந்து கொள்ள பல புத்தகங்கள் இன்றைக்கு உதவுகின்றன.

பெண்கள் பிறக்கிறார்கள்.வளர்கிறார்கள்.  கணவருக்கு மனைவியாகிறார்கள். குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள்.பின்பு மரணமடைகிறார்கள் என்பதுதான் இயல்பான வாழ்க்கை. சுழற்சி முறை. இந்தச் சுழற்சி முறையில் இருந்து மாற்றித் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் அன்னை மணியம்மையார்." அன்னை மணியம்மையாரின் ஆளுமை என்பது தனித்தன்மையானது.உறுதியானது.பெரியார் சொல்லும்  கருத்துக்களின் உண்மையை உணர்ந்து ,அதை உலகிற்கு பரப்பப் உறுதுணையாக இருக்க வேண்டும் என்னும் உறுதியில் விளைந்தது அன்னை மணியம்மையாரின் பொதுப்பணி."இல்லறம் என்ற குறுகிய வட்டத்துக்குள் குதூகலத்துக் குடும்பச் சுழலில் மாட்டி வாடிடும் மகளிர் கூட்டத்தில், இல்லறம் என்பதைவிட தொண்டறம் என்பதே எமது தூய வழி என்று காட்டி வாழ்ந்து தன்னைத்தானே எரித்துக்கொண்ட மேன்மை வரலாற்றுக்கு உரிய மெழுகுவர்த்தி அவர்! அடக்கம் அவரது அணிகலன்! வீரம் அவரது குருதியோட்டம்! விவேகம் அவரது தலைமைப் பண்பு.தான் கண்ட _ கொண்ட கொள்கைக்காக அதனைத் தந்த தலைவருக்குத் தன்னைத் தந்து செறிவான வாழ்வை அய்யாவுக்குத் தந்து அவர்தம் ஆயுளை நீட்டித்த ஒப்பற்ற செவிலியர்! அய்யாவுக்குப் பின்னும் ஆற்றொழுக்காக கழகம் வளர தலைமையேற்று இயக்கம் வளர்த்த இணையற்ற தலைவி! பற்றற்ற உள்ளம் பகைக்கஞ்சா படைத் தலைமை; ஈடு இணையற்ற கொடை உள்ளம்.தமக்குள்ள அத்தனை சொத்துக்களையும் பொதுவுக்கே ஆக்கிய அருட்கொடை " என்று அன்னை மணியம்மையாரை இன்றைய தலைமுறைக்கு அடையாளம் காட்டுவார் திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

.
  " ஒரு பெண் பொதுவாழ்க்கையில் அடியெடுத்து வைப்பது என்பது இயல்பாக நடப்பது இல்லை....பெண்களை பொதுவெளிக்கு அழைத்து வந்ததில் திராவிடர் கழகத்தின் பங்கு மிகவும் தனித்துவமானது.குடும்பத்தினருடன் கூட்டங்களுக்கு வரவேண்டும் என்பதை வாழ்க்கை முறையாக பெரியார் வலியுறுத்தினார் " பெரியாரைத் திருமணம் செய்துகொள்வதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே தன்னை திராவிடர் கழக இயக்கச்செயல்பாடுகளில் ஈடுபடுத்திக்கொண்டவர். திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்டு 2 முறை சிறைக்குச் சென்றவர்.அவரது இயற்பெயர் காந்திமதி.கே.காந்திமதி,கே.மணி உள்ளிட்ட சில பெயர்களில் எழுத்தாளராக இருந்திருக்கின்றார். திராவிடர் கழக பேச்சாளராக இருந்திருக்கின்றார். "நான் படிப்பது நல்ல அடிமையாகவா? அல்லது மேன்மையும் விடுதலையும் பெறவா? இதற்கு மாதர் சங்கங்கள் பாடுபடவேண்டும் " என்று திருமணத்திற்கு முன்பே எழுதியிருக்கின்றார்.திருமணத்திற்கு முன்பே பெண்கள் திராவிடர் கழகத்தில் வந்து பணியாற்ற வாருங்கள் என்னும் பெரியார் கொடுத்த அழைப்பைப் பற்றி மணியம்மையார் பேசியிருக்கின்றார்,அவருக்கு திருமணம் ஆகும்போது வயது 30, அன்றைய காலகட்டத்தில் 15 வயதில் அனைத்துப்பெண்களுக்கும் திருமணம் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் அவரது வயது திருமண வயதைப் போல இருமடங்கு வயது, அந்த வயதுவரை அவர் திருமணத்தை மறுத்து பொது வாழ்க்கையில் இருந்திருக்கின்றார்,மணியம்மையார் ,திராவிடர் கழகத்தை தேர்ந்தெடுத்தது அவரது சுய தேர்வாகும்" என்று எழுத்தாளர் ஓவியா குறிப்பிடுவார்.

. அன்னை மணியம்மையார் என்றால் நாகம்மையார் குழந்தைகள் இல்லம் நமக்கு நினைவுக்கு வரும். ஆதரவற்ற இல்லக்குழந்தைகளின் தாயாக தன்னை ஆக்கிக்கொண்டு,நாகம்மையார் இல்லத்துக் குழந்தைகள் வளரவும்,வாழ்க்கை பெறவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அன்னை மணியம்மையார். சாதி ஒழிப்புப்போரில் வீர மரணமடைந்த இரண்டு தியாகிகளின் உடலை திருச்சி நகரில் ஊர்வலமாகக் கொண்டு சென்று எரியூட்டி,தமிழர்களுக்கு உணர்ச்சி ஊட்டியவர் அன்னை மணியம்மையார்.நெருக்கடி நிலை காலத்தில் இயக்கத்தை,விடுதலை பத்திரிக்கையைத்  தொடர்ச்சியாக உயிர்ப்பாக நடத்தி,அரசின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் .நெஞ்சுரம் காட்டியவர் அன்னை மணியம்மையார். இராவண லீலாவை நடத்தி திராவிட இயக்கத்தின் கொள்கையை இந்தியா முழுமைக்கும் கொண்டு சென்றவர் அன்னை மணியம்மையார்.தனக்கு வந்த தன் குடும்பத்து சொத்தை எல்லாம் அறக்கட்டளையாக ஆக்கி,அதை மக்களுக்காக விட்டுச்சென்றவர் அன்னை மணியம்மையார்.

இப்படிப்பட்ட அன்னை மணியம்மையாரின் வரலாற்றை இன்றைய இளம்வயது ஆண்கள்,பெண்கள் படிக்கவேண்டும். மார்ச்8 என்பது சர்வதேச மகளிர் தினம். மார்ச்10 என்பது அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்த தினம். அன்னை மணியம்மையாரின் தொண்டு உள்ளத்தை,பொது நலனை,தனக்கென வாழாது கொள்கைக்கென வாழ்ந்த அவரை மனதில் கொண்டு சர்வதேசப்பெண்கள் தினத்தை நோக்கும்போது ,சர்வதேசப்பெண்களும் தமிழ்ப் பெண்களும் போகவேண்டிய தூரம் இன்னும் தெளிவாகத் தெரியும். சர்வதேசப்பெண்கள் தின வாழ்த்துகள்.அன்னை மணியம்மையார் பிறந்த நாள் வாழ்த்துகள்.