அண்மையில் படித்த புத்தகம் : ஊர் சுற்றிப் புராணம்
ஆசிரியர் : ராகுல் சாங்கிருத்யாயன்
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை-98
நான்காம் ப்திப்பு செப்டம்பர் 2003,விலை ரூ 70 மொத்த பக்கங்கள் : 236
புகழ் பெற்ற எழுத்தாளரான ராகுல் சாங்கிருத்யாயன் அவர்கள் எழுதிய இந்த 'ஊர் சுற்றிப் புராணம்' - புத்தக வாசிப்பு ஒரு வேறுபட்ட அனுபவத்தைக் கொடுத்தது. " உலகம் இன்பத்திலும் துன்பத்திலும் யாரிடமிருந்தாவது உதவி பெறுகிறது என்றால் அது ஊர் சுற்றிகளினால்தான் " எனச்சொல்கின்றார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர். " ஏ , கிணற்றுத்தவளை மன்ப்பான்மையே , நீ அடியோடு ஒழிக " என்பதுதான் இந்த நூலின் நோக்கம் எனக் கொள்ளலாம்.
மொத்தம் 16 அத்தியாயங்கள். 'ஊர் சுற்றும் அவா'வில் ஆரம்பித்து, 'நினைவுகள்' என்பதுவரை இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. ஊர் சுற்றும் அவாவில் ' எதிர்கால ஊர் சுற்றிகளே , புறப்படத் தயாராகுங்கள், உங்களை வரவேற்க உலகம் இரண்டு கைகளையும் விரித்து நிற்கிறது ' எனச்சொல்லும் ராகுல்ஜி புத்தர், மகாவீரர் போன்ற பலரைச்சொல்லி, அவர்கள் ஊர் சுற்றிகளாக இருந்ததால்தான் உலகம் பயன்பெற்றது என்பதனை மிக அழகாகச்சொல்லி, ஊர் சுற்ற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அம்மா அழுவதை, அப்பா சொல்வதை, மனைவி சொல்வதை, கண்வன் சொல்வதை எல்லாம் கேட்காதீர்கள், ஊர் சுற்றக்கிளம்பி விடுங்கள் என்று ' தடைகளைத் தகர்த்தெறியச்' சொல்கின்றார், மகன் இல்லாவிட்டால் மோட்சமில்லை என்று நினைத்து, தந்தை விடமாட்டார் அதனை எல்லாம் கண்டு கொள்ளாதே என்று சொல்லும் ராகுல்ஜி, " தற்போதைய மக்கள் தொகையே சமாளிக்க முடியாததாக இருக்கின்றதென்றால் ஒவ்வொரு ஆண்டும் ஐம்பது இலட்சம் புதிய ஜீவன்கள் கந்து வட்டி விகிதத்தில் பெருகி வருகின்றனர்.. புதிய உயிர்களை உலகிற்கு கொண்டு வர விரும்பாத ஆண் பெண்கள் இன்று புண்ணியவான்களாகக் கருதப்படவேண்டும். புண்ணியத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையெனில், அவர்களை மரியாதைக்குரியவர்கள் என்றுதான் சொல்வோமே, அவர்கள் நாட்டின் பளுவைக் குறைக்கின்றனர்...சுமேரு ,மலையின் மேல் இருப்பதாகக்கூறப்பட்ட சொர்க்கமும், பாதாளத்தில் இருப்பதாகச்சொல்லப்பட்ட நரகமும் பொய்யானவை என்று தற்காலப் பூகோள சாஸ்திரம் ஐயந்திரிபின்றி நிருபித்துவிட்டது. " (பக்கம் 27) என்று சொல்லும் ராகுல்ஜி அப்பாவும் மகனும் தள்ளி இருந்தால்தான் அன்பும் பாசமும் கூடும் என்று சொல்கின்றார்.
ஊர் சுற்ற ஆர்வம் இருக்கும் மனிதர்களை உசுப்பேற்றும் ராகுல்ஜி அதனைச்சொல்லும் விதம் மிகவும் சுவையாக உள்ளது. " நீங்கள் உங்கள் நகரைத் துறக்கத் தயாரானால் ஆயிரக்கணக்கான நகரங்கள் உங்களை வரவேற்க முன்வரும். நீங்கள் உங்கள் கிராமத்தை விட்டு வெளியேறுங்கள்; ஆயிரக்கணக்கான கிராமங்கள் உங்களை வரவேற்கத் தயாராயிருக்கும். ஒரு சில நண்பர் சுற்றத்தாருக்குப் பதிலாக ஆயிரக்கணக்கான நண்பர்களும் சுற்றத்தாரும் உங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் தனியாரவரல்ல. இங்கு நான் மீண்டும் ஆயிரம் பொய்களையும் , ஓரிரு உண்மைகளையும் எடுத்துக்கூறும் இந்துக்களின் புனித நூலாகக் கருதப்படும் 'பகவத் கீதை'யின் சுலோகத்தை மேற்கோள் காட்டுவேன். " (பக்கம் 34-35) . மேலே உள்ள வாசகங்களில் உள்ள கேலியைப் பாருங்கள். இதே மாதிரியான வசனங்கள் நூல் முழுவதும் அங்கங்கு விரவிக் கிடக்கின்றன.
ஊர் சுற்றும் எண்ணத்தை மிக ஆழமாக படிக்கும் வாசகர்களின் மனதில் ஏற்படுத்தும் ராகுல்ஜி , ஊர் சுற்றுவதற்கு முன் முடிவு செய்ய வேண்டிய விசயங்கள் என்று சிலவற்றைச்சொல்கின்றார்.
" சில விசயங்களை முன்னதாகவே முடிவு செய்து கொண்டுவிட்டால், மனிதனின் வாழ்க்கையில் பன்னிரண்டு ஆண்டுகளில் சாதிப்பதை இரண்டே ஆண்டுகளில் சாதிக்க முடியும் " (பக்கம் 39) எனச்சொல்லும் ராகுல்ஜி ஊர் சுற்றுவது என்று முடிவுசெய்துவிட்டால் என்னென்ன செய்ய வேண்டும், முன் தயாரிப்புகள் எப்படி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் கல்வியின் அவசியம் பற்றி மூன்றாம் அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றார். படித்து முடித்து 24 வய்துக்குள் வீட்டை விட்டு வெளியேறி விடவேண்டும் என்று சொல்கின்றார். " நீங்கள் ஊர் சுற்ற வேண்டுமென்ற முடிவெடுத்துக் கொண்டதும் சுற்றுப் புறத்திலுள்ள நூல் நிலையங்களிலும் பள்ளி நூல் நிலையத்திலுள்ள பயண நூல்களையும், வாழ்க்கை வரலாறுகளையும் நன்றாகப் படித்துக்கொள்ளவேண்டும் " பக்கம் (44) குறிப்பிடுகின்றார். ப்ல மொழிகளைக் கற்றுக் கொள்வது பயனுள்ளதாக இருக்கும் , உடல் வலிமையாக இருக்க உடல் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார். உடல் உழைப்பு பயிற்சி கட்டாயம் வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.
அண்ணல் அம்பேத்கர் " எனக்கு மேலானவர் என்று எவரும் இல்லை, அதனைப் போலவே எனக்கு கீழானவர் எவரும் இல்லை " என்று சொன்னதைப் போல சம நிலைப் பார்வை ஊர் சுற்றிக்கு வேண்டும் என்கின்றார் ராகுல்ஜி. " உலகத்தில் எவரையுமே த்ன்னைவிட உயர்ந்தவர்களாகவும், அதே சமய்த்தில் தன்னைவிட தாழ்ந்தவர்களாகவும் எண்ணா மனோநிலையை ஊர் சுற்றி பெற்றிருக்க வேண்டும். அவனுடைய நடவடிக்கைகளும் இதனைப் பொறுத்திருக்க வேண்டும். சம நிலைப் பார்வையும், நெருக்கமான நட்புறவும் அவன் கொண்டிருக்க வேண்டும் " பக்கம் (57) ." கல்வியும், பண்பாடும், தன் மானமும் ஊர் சுற்றிக்கு இருக்க வேண்டிய முக்கிய குணங்கள் " என்றும் குறிப்பிடுகின்றார்.
ஊர் சுற்றி உடலுழைப்பு செய்து பணம் சம்பாதிக்க தெரிய வேண்டும் என்று சொல்கின்றார். " முகச்சவரம் செய்வதையோ, சிகையலங்காரத்தையோ ' கற்றுக் கொண்டால் எளிது எனக்குறிப்பிடுகின்றார். (பக்கம் 60,61). யுவதிகள் அழகுபடுத்தும் கலையை கற்றுக்கொள்ளலாம் என்று சொல்கின்றார். இயந்திரத் தொழில், நகைத் தொழில், தையல் , ஆடை வெளுத்தல், தச்சுத் தொழிலை கற்றுக் கொள்ளலாம். கடிகார ரிப்பேர், இயந்திர ரிப்பேர், புகைப்படத் தொழில் போன்றவை ஊர் சுற்றிகள் பணம் சம்பாரித்து ஊர் சுற்ற தேவைப்படும் தொழில்கள் என்றும் சொல்கின்றார். ஜோதிடம், கைரேகை போன்றவை பணம் சம்பாதிக்கப் பயன்படும் ஆனால் அவை மூட் நம்பிக்கை வளர்ப்பவை எனவே அதனைக் கற்றுக்கொள்ளாதே, பயன்படுத்தாதே என்று சொல்கின்றார். முதலுதவிச்சிகிச்சை கற்றுக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடுகின்றார்.
சிற்பக் கலை, கலைகள் பற்றிய ஆர்வம் ஊர் சுற்றிக்கு இருந்தால் அதனை வளர்த்துக் கொள்ள வேண்டும் . நடனம் , சங்கீதம், வாத்திய இசை போன்றவை ஊர் சுற்றிக்கு எந்த நாட்டு மக்களிடத்திலும் எளிதாக அணுகவும் , பாராட்டு பெறவும் உதவியாக இருக்கும் என்று விளக்குகின்றார். பழங்குடி மக்கள் பற்றியும், ஊர் சுற்றிகள் கவனமாக இருக்க வேண்டிய செயல்கள் பற்றியும் 'பழங்குடிகளிடையே ' என்னும் அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றார். " காட்டுவாழ் மக்களிடம் செல்லும் ஊர் சுற்றி, அவர்களுக்குச்சில விசயங்களைக் கற்றுத் தருவதுடன் அவர்களிடமிருந்தும் சில விசயங்களைக் கற்றுக் கொள்கிறான் " (பக்கம் 89 )- கற்றுத் தருபவை, கற்றுக் கொள்ள வேண்டியவை என அவர் விவரிக்கும் தனமை அருமை.
ஊர் சுற்றி இனத்தவர் என்ற தலைப்பில் நாடோடி மக்களாக வாழும் மக்கள் பற்றிய தகவலகள் தகவல் களஞ்சியங்களாக உள்ளன. பெண் ஊர் சுற்றிகள் என்னும் தலைப்பில் , பெண்கள் ஏன் ஊர் சுற்ற வேண்டும் என்பதனை விவரிக்கின்றார். தந்தை பெரியார், "பூனைகளால் எலிகளுக்கு எப்போதும் விடுதலை கிடைக்காது, அத்னைப் போல ஆண்களால் பெண்களுக்கு எப்போதும் விடுதலை கிடைக்காது" என்று சொன்னதைப் போல ராகுல்ஜி ஆணாதிக்கத்தின் கொடுமைகளை பட்டியலிடுகின்றார், " ஆயிரக்கணக்கான விலங்குகளால் (ஆண்கள்) தம்மைக் கட்டி வைத்திருக்கிறார்களென்பதைத் துணிவு படைத்த யுவதிகள் உணர வேண்டும். ஆண் , பெண்ணின் ஒவ்வொரு ரோமக் கண்ணிலும் ஆணி வைத்து அடித்திருக்கிறான். பெண்களின் அவல நிலையைப் பார்க்கும்போது சிறு வயதில் கேட்ட ஒரு கதை நினைவுக்கு வருகிறது. " மனித நடமாட்டமில்லாத மாளிகையொன்றில் ஒரு பிணம் அழுகாமல் நல்ல நிலைமையில் விழுந்து கிடந்தது. பிணத்தின் ஒவ்வொரு ரோமத்திலும் ஆணிகள் அடிக்கப்பட்டிருந்தன. அவ்வாணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கப் பிடுங்க, பிணத்துள் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் வரத் தொடங்கியது. அதன் கண்களில் செலுத்தப்பட்டிருந்த ஆணிகளைப் பிடுங்கியதுமே பிணம் எழுந்து உட்கார்ந்து ரொம்ப நேரம் தூங்கிவிட்டேன் என்று முணு முணுத்துக் கொண்டதாம். இன்றைய சமுதாயத்தில் ஆண்கள், தம் கைகளால் பெண்களின் ஒவ்வொரு ரோமத்திலும் அடிமைத்தனத்தின் ஆணிகளை அடித்திருக்கின்றனர். ஆனால் ஆண்களே அந்த ஆணிகளை எடுத்து விடுவார்களென்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம் " (பக்கம் 117). அருமையான வரிகள். இன்றைக்கு நமது பெண்கள் ஐ.டி. படித்து தன்னந்தனியாக சென்னை, பெங்களூரிலும், வெளி நாடுகளிலும் வேலை பார்க்கின்றனர். கை நிறையச்சம்பளம் வாங்குகின்றனர்.பெரும்பாலும் தங்கள் வாழ்க்கை இணையர்களைத் தாங்களே அமைத்துக் கொள்கின்றனர். எவ்வளவு பெரிய மாற்றம். ராகுல்ஜி தன்னுடைய வாழ்க்கையில் கடந்த நூற்றாண்டு, இந்த நூற்றாண்டு, இன்றைய கால கட்டப்பெண்கள் என்று ஒப்பிடுகின்றார், பத்தாம் பசலிகளை தன்னுடைய வார்த்தைகளால் எள்ளி நகையாடுகின்றார். இன்றைய பெண்கள் அதையெல்லாம் கடந்து அடுத்த கட்டம் சென்று விட்டார்கள்.
மதமும் ஊர் சுற்றுதலும் என்னும் தலைப்பில் மத நம்பிக்கையாளன் ஊர் சுற்றுபவனாக இருந்தால் அவனுக்கு மத வெறி இருக்காது என்று சொல்கின்றார்." மதங்களின் குறுகிய எல்லைகளை ஊர் சுற்றி கடந்து போய்விடுகிறான். அவன் மதப் பாகுபாட்டைத் துச்சமெனக் கருதிகிறான். ...உண்மையில் ஊர் சுற்றி , மதம் என்பதை ஒரு தனி மனிதனின் சொந்த விசயமாகவே கருதுகிறான் " (பக்கம் 139). நாத்திக ஊர் சுற்றி, ஆத்திக ஊர் சுற்றி எனப்பிரிக்கின்றார் ராகுல்ஜி. " வாய்ப்பு கிடைக்கும்போது நாத்திக ஊர் சுற்றி , தன் கருத்துக்களைத் தெளிவாகக் கூறுவதற்குப் பின் வாங்குவதில்லை; என்றாலும் மத்ததில் உண்மையான நம்பிக்கை உள்ள சக ஊர் சுற்றியின் உள்ளத்தைச்சுடு சொல்லால் வேதனைக்குள்ளாக்க விரும்பவும் மாட்டான். எல்லாருடனும் அன்பாகப் பழகுவதுதான் அவனுடைய ல்ட்சியமாகும் " (பக்கம் 142).
காதல் பற்றி, ஊர் சுற்றிக்கு இருக்க வேண்டிய ஊர் சுற்றப்போகும் நாட்டறிவு பற்றி, மரண தத்துவம் பற்றி தொடர் அத்தியாயங்களில் எழுதுகின்றார். ஊர் சுற்றிகள் எப்படியெல்லாம் எழுதுகோலையும் , தூரிகையையும் பயன்படுத்தலாம், அதனால் எப்படி, எப்படி எல்லாம் நன்மைகள் விளைந்தன , ந்ன்மைகள் விளையும் என்பதனை அழகுற எழுதியிருக்கின்றார். இன்றைக்கும் கூட மேல் நாட்டு அறிஞர்கள் ஒரு புத்தகம் எழுதுவதற்கு முன்னால் அந்தப் புத்தகம் எழுதுவதற்காகப் பயணிக்கின்றார்கள், தகவல்கள் சேகரிக்கின்றார்கள், பின்னர்தான் எழுதுகிறார்கள் என்று படிக்கின்றோம். ஆனால் இயல்பாகவே ஊர் சுற்றியாக இருக்கும் ஒருவரின் எழுத்தாற்றல் எவ்வளவு வலிமையானது என்பதனை ராகுல்ஜி விளக்கும் விதமே அருமை. பொய்யாக எழுதாதே, இட்டுக் கட்டி எழுதாதே, அழகுற உண்மையோடு எழுது என்று சொல்கின்றார். ஊர் சுற்றுதல் பயன் கருதாப் பயணம் அல்ல, மனித இனத்திற்கு வலிமை சேர்க்கும் பயணம் என விவரிக்கின்றார். " இளம் பெண்கள் ஊர் சுற்றுவதெப்படி " என்னும் அத்தியாயத்திற்கு மட்டும் தனிக் கட்டுரை எழுதலாம். அவ்வளவு விசயங்கள் அந்த அத்தியாயத்தில் உள்ளன. இன்றைய புதுமைப் பெண்கள் எவை எவையெற்றையெல்லாம் தகர்த்தெறிந்து இன்றைய புதுமை நிலையை அடைந்திருக்கின்றார்கள் என்பதனை உணர இந்த அத்தியாயத்தை ஊன்றிப் படிக்கலாம். உணரலாம்.
நினைவுகள் என்னும் கடைசிப் பகுதியில் தான் ஊர் சுற்றிய அனுபங்களைப் பகிர்ந்து கொள்கின்றார். இதிலும் மேம்பட்ட நூல்கள் வரவேண்டும் என்னும் தன் விருப்பத்தை வெளியிடுகின்றார் ராகுல்ஜி.
2000-க்குப் பிறகு உலகம் முழுவதும் தமிழர்கள் புலம் பெயர்ந்தும், வெளி நாடுகளில் வேலை வாய்ப்புக் கிடைத்தும் வாழ்கின்றார்கள். அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என விமானங்களில் பறந்து கொண்டுள்ளார்கள். ராகுல்ஜி எழுதிய காலத்தில் கணினியும் , இணைய தளமும் இல்லை. இவை இரண்டும் இன்றைக்கு ஊர் சுற்றுதலை மிக எளிதாக ஆக்கி இருக்கின்றன. ஆனால் பறந்து பறந்து போய் , ஏதோ ஒரு குளிரூட்டப்பட்ட அறையில் அடைந்து கொள்ளுதல் என்பதுதான் இன்றைய வழக்கமாக இருக்கின்றது,ஆனால் ராகுல்ஜியின் இந்த 'ஊர் சுற்றிப் புராணம் ' என்னும் இந்தப் புத்தகம் மக்களோடு பழகுவதை, மக்களோடு வாழ்வதை, மக்களைப் புரிந்து கொள்வதை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், தங்கள் பயண அனுபவத்தை, வாழும் சூழலை பதிய வேண்டும், நூலாக வெளியிட வேண்டும் என்னும் உணர்வை இந்தப் புத்தகம் படிப்பவர்கள் மனதில் உறுதியாக ஏற்படுத்தும். படிக்கலாம். இந்த நூலை அடுத்தவர்களையும் படிக்கச்சொல்லலாம்.