Thursday, 26 January 2017

உலகின் அதிக மகிழ்வான குழந்தைகள் யார்?......

உலகின் அதிக மகிழ்வான குழந்தைகள் யார்?
  • 45 நிமிடங்களுக்கு முன்னர்
உலகின் அதிக மகிழ்வான குழந்தைகள் யார்? என்பது குறித்த ஐநாவின் குழந்தைகளுக்கான யுனிசெஃப் அமைப்பின் அறிக்கையில் அதற்கான காரணங்களும் பட்டியலிடப்பட்டிருக்கின்றன
http://www.bbc.com/tamil/global-38759521
உலகின் மிக அதிகமான மகிழ்ச்சியான குழந்தைகள் யார் ? என்னும் கேள்வியை எழுப்பி அதற்கு விடையைக் கொடுத்திருக்கின்றார்கள். அந்த ஒலியும்,ஒளியும் காட்சியைப் பி.பி.சி.யில் பார்த்தபொழுது என் குழந்தைகள் சொ.நே.அன்புமணியும், சொ.நே.அறிவுமதியும் மதுரையில் படித்த ' தாய்த் தமிழ்ப் பள்ளி' நினைவிற்கு வந்தது. எல்.கே.ஜி., யு.கே.ஜி என்பதற்குப் பதிலாக 'மொட்டு வகுப்பு ' என்றும் 'மலர் வகுப்பு ' என்றும் பெயர் வைத்து அந்தப் பள்ளியை நடத்தினார்கள்.அவ்வளவு மகிழ்ச்சியாக எனது குழந்தைகள் அப்போது  வகுப்பிற்குச்செல்வார்கள். தாய்மொழியான தமிழை முதன்மைப் படுத்தினார்கள், ஆங்கிலத்தையும் கற்றுக்கொடுத்தார்கள். அந்த அடித்தளம் இன்றைக்கு கல்லூரியில் படிக்கும் இருவருக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கிறது. வீட்டிலிருந்து நிறைய காய்கறிகளை உணவாகக் கொண்டுவரவேண்டும், அதனை குழுவாக உட்கார்ந்து பகிர்ந்து சாப்பிட வேண்டும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவு கொண்டுவரவேண்டும்(மரபு சார்ந்த உணவுகள்) என்பதனை நடைமுறைப்படுத்தினார்கள். வீட்டுப்பாடங்கள் என்பது மிக, மிகக் குறைவாகவே இருந்தது. நிறைய விளையாட்டுடன் கூடிய கல்வியைக் கற்றுக்கொடுத்தார்கள். . டை எல்லாம் கட்டாமல், பூட்ஸ் போன்றவைகள் போடாமல் பள்ளிகளுக்கு சென்றுவந்தார்கள். அப்பா, அம்மாவை டாடி ,மம்மி என்றெல்லாம் கூப்பிடக்கூடாது என்று அப்போதே கற்றுக்கொடுத்தார்கள் . எங்கள் பிள்ளைகள் பெற்றோர்களை எந்தக் காலத்திலும் மம்மி, டாடி என்று அழைத்ததில்லை, அதற்குக் காரணம் அந்த வயதில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கல்வி.தாய்த்தமிழ் பள்ளியில் பணியாற்றியவர்களுக்கு பெரிய அளவிற்கெல்லாம் ஒன்றும் சம்பளம் கொடுக்கவில்லை(மாணவ,மாணவிகளிடம் மிகக்குறைந்த கட்டணம்தான் வசூலித்தார்கள்),வேலை பார்த்த ஒவ்வொரு ஆசிரியரும் அப்படி ஒரு உணர்வுள்ளவர்களாக, பிள்ளைகள் மேல் அன்பு காட்டக்கூடியவர்களாக இருந்தார்கள். ஆனால் உறவுகளில் பலர் இப்படி தாய்த்தமிழ்ப் பள்ளிக்கு அனுப்பியதில் மிகப்பெரிய எதிர்ப்பைக் காட்டினார்கள். இன்றைக்கு கல்லூரி பாடப்புத்தகங்கள் தாண்டி தமிழில் நிறையப் புத்தகங்களை எனது பிள்ளைகள் வாசிக்கின்றார்கள், சில புத்தகங்கள் பற்றி விவாதிக்கின்றார்கள்.  வீட்டில் இருக்கும் , நூலகத்தில் இருந்து எடுத்துவரும் புத்தகங்களை எல்லாம் அவர்கள் விரும்பி படிப்பதற்கு வாய்ப்பாக அவர்களின் மொட்டு வகுப்பு, மலர் வகுப்பு பயிற்சி அடிப்படையாக இருக்கிறது. திராவிடர்களாகிய தமிழர்களின் பண்பாடு, தமிழர் வீரம், தமிழர் உணவு முறை, வெளி நாட்டு உணவு, குளிர்பானங்கள் விலக்கு போன்ற பல செய்திகள் பேசப்படும் நிலையில் எல்,கே,ஜி.,யூ.கே.ஜி வகுப்புகளில் தாய்மொழியாக தமிழ் முக்கியத்துவம் பெறுவதும், தொடர்பு மொழியாக மட்டும் சில வகுப்புகள் மட்டும் ஆங்கிலத்திற்கு ஒதுக்குவதும் ,வீட்டுப்பாடங்களே இல்லாமல் ஒரு குறிப்பிட்ட வகுப்பு வரை தமிழகத்தில் ஆக்குவதும் , மதம் சார்ந்து பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே திணிக்காமல் அவர்களுக்கு குறிப்பிட்ட வயதை அடைந்தபிறகு தேவைப்பட்டால் அவர்கள் கற்றுக்கொள்வதற்கு வாய்ப்பளிப்பதும் , எதிர்காலத்தில் உலகின் மிக அதிகமான மகிழ்ச்சியான குழந்தைகள் தமிழ்க்குழந்தைகள் எனச்சொல்வதற்கு வழி வகுக்கும் என்பது எனது எண்ணம்.   

பண் பாட்டு அறிஞர் பேராசிரியர் தொ. பரமசிவனுக்கு தமிழறிஞர் விருது


பண் பாட்டு அறிஞர் பேராசிரியர் தொ. பரமசிவனுக்கு  தமிழறிஞர் விருது




திருநெல்வேலி, ஜன. 26- பண் பாட்டு அறிஞர் பேராசிரியர் தொ. பரமசிவனுக்கு, கோவை உலகத் தமிழ்ப் பண்பாட்டு மய்யத்தின் சார்பில் தமிழறிஞர் விருதும், ரூ. ஒரு லட்சம் பொற்கிழியும் செவ்வாய்க் கிழமை வழங்கப்பட்டது.

கோவை உலகத் தமிழ்ப் பண்பாட்டு மய்யத்தின் சார் பில், ஆண்டுதோறும் படைப் பாளிகள், தமிழறிஞர்கள், பிற துறைகளில் இருந்து தமிழுக்கு சேவை ஆற்றும் நபர்கள் என்ற அடிப்படையில் தலா மூவரை தேர்வு செய்து விருதுகளும், ரூ. ஒரு லட்சம் பொற்கிழியும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த விருது தொடர்ந்து வழங்கப் படுகிறது.

2016ஆம் ஆண்டுக்கு இலக் கிய விருது எழுத்தாளர் சிவசங் கரி, சூழலியல் விருது தியோ டர் பாஸ்கரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மேலும், தமிழறிஞர் விருது பேராசிரியர் தொ. பரமசிவனுக்கு வழங்கு வதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கான விழா, கோவையில் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், பேராசி ரியர் பரமசிவனின் உடல்நலம் காரணமாக அவருக்கு மட்  டும் திருநெல்வேலியில் அவ ரது இல்லம் தேடிச் சென்று விருது வழங்கப்படும் என உல கத் தமிழ்ப் பண்பாட்டு மய்யம் அறிவித்திருந்தது.

இதன்படி, மய்யத்தின் நிறுவனர் மருத்துவர் நல்ல. பழனிச்சாமி, செயலர் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் ஆகி யோர் பாளையங்கோட்டையில் உள்ள பேராசிரியர் தொ.பரம சிவன் இல்லத்துக்கு நேரில் வந்து செவ்வாய்க்கிழமை விருதை வழங்கினர். விருதுக்கான சான் றிதழ், ரூ. ஒரு லட்சம் பண முடிப்பு ஆகியவற்றை வழங்க, பேராசிரியர் தொ. பரமசிவன், அவரது மனைவி பாப்பா ஆகி யோர் பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், கவி ஞர்கள் தேவேந்திர பூபதி, கிருஷி, தமிழ் வளர்ச்சிப் பண் பாட்டு மய்ய துணைத் தலை வர் ரமேஷ் ராஜா, மக்கள் மருத்துவர் ராமகுரு, முனைவர் இலக்குவன், தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றி யல் துறைத் தலைவர் என். ராமச்சந்திரன், உதவிப் பேராசி ரியர் கார்மேகம், ஆசிரியர்கள் சங்கர்ராம், சங்கரநாராயணன், சேதுராமலிங்கம், ராஜகோபால், சன். கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.

ஏற்புரையாற்றிய தொ. பரமசிவன் கூறியது: முகவரி இல்லாதவர்களுக்கு அவர்களது முகவரி தேடிச் சென்று விருது வழங்குவதே சிறப்பு. அந்த வகையில் கோவை உலகத் தமிழ்ப் பண்பாட்டு மய்யத்தின் சார்பில் தமிழறிஞர் விருதை எனது இல்லம் தேடி வந்து அளித்தமைக்கு நன்றி.

பண் பாட்டு அசைவுகள், அழகர் கோயில், பரண், விடுபூக்கள், உரைகல், இந்து தேசியம், செவ்வி, மானுட வாசிப்பு என 8 நூல்களை எழுதியுள்ளேன். புழங்கு பொருள்களைக் கொண்டு தமிழர்கள் அறிந்திராத விவரங் களை அறியப்படாத தமிழகம் எனும் நூல் மூலம் விளக்கிக் கூறினேன். அவை பிரசித்தி பெற்று 16 பதிப்புகள் வந்து விட்டன.

பண்பாட்டு விழுமியங் களை தேடிச் சென்று அறிந்து அவற்றை அறியாதவர்களுக்கு தெரியும் வகையில் அளித்தது மட்டுமே எனது பணி. மற்ற படி அனைத்துமே நமது பண் பாட்டுக்குச் சொந்தமானவை என்றார் அவர்



நன்றி : விடுதலை 26.01.2017

Sunday, 22 January 2017

குட்டக் குட்ட குனியலாமா அ.தி.மு.க. அரசு?............

சிறு அசம்பாவிதமும் இல்லாமல் இராணுவக் கட்டுப்பாடாக அறப்போர் நடத்தும் மாணவர்களுக்குப் பாராட்டு - தலைதாழ்ந்த வணக்கம்!ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரச் சட்டம்தேவை என்பது நியாயமான கோரிக்கையே!காவிரி உரிமை மறுப்பு- புதிய கல்வி- ‘நீட்' இவற்றை முறியடிக்கவும் தமிழக அரசின் முயற்சி தேவை! தேவை!!


தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ளமிக  முக்கிய அறிக்கை
ஜல்லிக்கட்டு உரிமைக்கான நிரந்தரச் சட்டம் தேவை எனும் மாணவர்கள் கோரிக்கை நியாயமானதே; அத்துடன் காவிரி உரிமை மறுப்பு, புதிய கல்வி என்னும் குலக்கல்வி, கிராமப்புற மாணவர்களை ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதிக்கச் செய்யும் ‘நீட்’ எனும் நுழைவுத் தேர்வையும் முறியடிக்க நாடாளுமன்றத்தில் நல்ல தீர்வு காண தமிழக அ.இ.அ.தி.மு.க. அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும்  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:
உலகமே கண்டு வியந்து மூக்கில் விரலை வைத்துச் சிந்திக்கும் வண்ணம், சென்னைக் கடற்கரையிலும், தமிழ்நாட்டின் பற்பல ஊர்களிலும் இருபால் மாணவச் செல்வங்களும், இளைஞர்களும் அவர்களையொட்டி தாய்மார்களும் இணைந்து, தமிழ் இன உணர்வினைக் கட்டுப்பாடாக ‘பெருஉரு’ (விஸ்வரூபம்) எடுக்க வைத்து, பெருந்திரள் போராட்டமாக - எடுத்துக்காட்டான அறப்போராட்டமாக  ‘ஜல்லிக்கட்டுத் தடை என்பதை உடை' என்ற முழக்கத்தோடு நடத்தி, வரலாறு படைத்துள்ளனர்!


மாணவர்களின் தன்னெழுச்சிப் போராட்டம்மாணவர்களின் தன்னெழுச்சியாக கட்டுப்பாட்டுடன் இரவு பகல் என்று பாராது தொடர்ந்து 5 நாள்கள் நடைபெற்ற இந்த அறப்போராட்டத்தினால், பொது மக்களுக்கு இடையூறோ, பொதுச் சொத்துகளுக்கு நாசமோ, பொது அமைதிக்குப் பங்கமோ ஏற்படவில்லை  என்பது வரலாறு.


சிறு அசம்பாவிதமும் இல்லை!அதுமட்டுமா?
பல லட்சக்கணக்கில் திரண்டு அருகருகே அமர்ந்து லட்சிய முழக்கத்துடன் நடத்திய இந்தப் போராட்டத்தில் ஒரு சிறு அசம்பாவிதமோ, பாலியல் வன்மம், வக்கிரம் எதுவும் நடக்கவில்லை.
தமிழ்நாட்டு மாணவ இளைஞர்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. இராணுவக் கட்டுப்பாட்டையும் தோற் கடிக்கும் ‘அனாசயமான’ ஒழுங்குமுறை அங்கே ஆட்சி புரிந்தது!
முதல் முறையாக காவல்துறையினருக்கும், போராட்டக்காரர் களுக்கும் இடையே அன்புப் பெருக்கெடுத்தோடியது!
இதனால் தமிழர்கள் - திராவிடர்களின் பண்பாட்டு அடை யாளத்தையே திட்டமிட்டு அழிக்க முயன்ற ஆரிய ஆதிக்க சக்திகளுக்கு எதிராக, கட்சி, ஜாதி, மதம் போன்ற எந்தப் பிரிவினையும் தலைதூக்காது அறப்போர் நடத்தி,
‘அச்சம் என்பது மடமையடாஅஞ்சாமை திராவிடர் உடைமையடா!’என்று முழங்கி, எச்சரிக்கை மணி அடித்து, ஆளும் தரப்பை இறங்கி வரச் செய்தனர்.
ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் என்றாலும் இதன் அடிநீரோட்டம் முக்கியமானது
இது ஜல்லிக்கட்டு என்று ஒரு முனை தலைப்பாக இருந்தாலும், இதன் அடிநீரோட்ட உணர்வு - பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து தமிழனை - திராவிடனைக் காப்பாற்றும் அமைதிப் போராகவே அமைந்தது!
டில்லி அதிகாரவர்க்கம் - இதற்குமுன் தமிழ்நாட்டை அலட்சியப் பார்வையோடு பார்த்த நிலை மாறி, கைபிசைந்து, தாங்களும் இதில் ஒத்துழைப்புத் தருகிறோம் என்று கூறி, வேஷத்தை மாற்றவேண்டிய தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது! மகத்தான வெற்றியை, தமது  சுயக்கட்டுப்பாட்டினால் பறித்த மாணவ, இளைஞர்களுக்கு நமது தலைதாழ்ந்த வணக்கம்!
மாநில அவசரச் சட்டம் என்பது போதாது; நிரந்தரத் தீர்வே எமக்குத் தேவை என்ற மாணவப் போராட்டக்காரர்களின் கோரிக் கையின் நியாயத்தை எவரும் மறுத்துவிடவே முடியாது.


நிரந்தர சட்டம் தேவை!இதில் மாநில அரசு உடனடியாக செயல்படவே இந்த அவசர சட்டம்  - அதனையொட்டி 23 ஆம் தேதி நாளை கூடும் தமிழக சட்டமன்றத் தொடரில் ஒரு நிரந்தரச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டு, நம் திராவிடக் காளைகளின் கட்டுண்ட போராட்டத்தால் கட்டுண்ட காளைகளின் தளைகள் விடுவிக்கப்படும் என்பது சரிதான்!


காவிரிப் பிரச்சினை - சமூகநீதிப் பிரச்சினைகளில் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடுஏற்கெனவே தமிழ்நாடு அரசு காவிரி நதிநீர் ஆணைய நியமனப் பிரச்சினையில் வஞ்சிக்கப்பட்டுள்ளது!
அண்டை மாநில அரசுகள் ஆறுகளில் மத்திய அரசு அனுமதி யில்லாமல் அணைகள் கட்டும் திட்டம்; அதுபற்றி மத்திய அரசு கண்டும், காணாத போக்கு!


புதிய கல்விக் கொள்கை என்று ஒரு நவீன குல தர்மக் கல்வித் திட்டத்தை திணிப்பதில் முழு முயற்சி.அதில், சமஸ்கிருதம் என்ற வடமொழித் திணிப்பு - நம் தமிழ் பண்பாட்டு அழிப்பு - இவைகளைத் திட்டமிட்டுச் செய்தல்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக சிகரம் வைத்ததுபோல், கல்வி மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதை வாய்ப்பாகப் பயன்படுத்தி,
மருத்துவக் கல்லூரிகளில் கிராமப்புற, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் எளிதில் இடம் பெற்று படிக்கும் வாய்ப்பில் மண்ணை அள்ளிப் போடும் - ‘நீட்’ என்ற நுழைவுத் தேர்வினை வரும் மே மாதம் முதல் நடத்திட ஆயத்தமாகி விட்டோம் என்று மாநில அரசின் ஒப்புதல் - இசைவு பெறாமலேயே நடத்தும் நிலை.
இப்படி தமிழ்நாடு ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்படும் வேதனையால் அவை நீறுபூத்த நெருப்பாக இருந்து, திடீர் போராட்டத் தீயாய் இன்று கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிவிட்டது!


குட்டக் குட்ட குனியலாமா அ.தி.மு.க. அரசு?இதன் அனலை இப்போதுதான் மோடி அரசும், குட்டக் குட்டக் குனியும் இன்றைய அ.தி.மு.க. அரசும் உணரத் தொடங்கியுள்ளன.
வெறும் ஜல்லிக்கட்டு என்ற ஒன்றுக்கானது அல்ல - எரிமலை யாய் வெடித்ததுதான் இந்த உணர்வு! இதனை மத்திய - மாநில அரசுகள் புரிந்துகொள்ளவேண்டும்; மற்றவைகளுக்கும் தீர்வுகாண முன்வரவேண்டும்.


கிராமத்துப் பிள்ளைகளை டாக்டராகாமல் தடுக்கும் ‘நீட்’ எனும் நுழைவுத் தேர்வுமருத்துவக் கல்லூரியில் ‘நீட்’ என்ற மத்திய நுழைவுத் தேர்வை நமது தமிழ்நாடு ஏற்றால், இனி நமது கிராமத்துப் பிள்ளைகள் டாக்டர் களாக வரவே முடியாத சூழ்நிலைதான் கண்டிப்பாக ஏற்படும்!
தமிழ்நாட்டிற்கு முன்பு தந்த விதிவிலக்கினை மாநில அரசு, ஜல்லிக்கட்டுப் போலவே வலியுறுத்தவேண்டும்.
ஆந்திரா, தெலங்கானா, காஷ்மீருக்கு  முன்பு விதிவிலக்கு இருந்ததுபோல, தமிழ்நாட்டுக்கும் தருவதற்கு இந்தச் சட்டமன்றத் தொடரில் தீர்மானம் இயற்றியும், மேற்கொண்டு நாடாளுமன்றத்திலும் இதனை உறுதி செய்யும் ஏற்பாடுகளையும் செய்ய தமிழக அரசு மத்தியில் உள்ள மோடி அரசினை வலியுறுத்தவேண்டும். அவசரம்! அவசரம்!! அவசரம்!!!
இந்தியா முழுவதிலும் ஒரே மாதிரியான கல்வியா இருக்கிறது? மாநில உரிமைகளை மத்திய அரசு இப்படி அதன் காலில் போட்டு மிதிப்பதை, தமிழ்நாடு அரசு ஏற்பதா?
தமிழ்நாட்டில் சட்ட ரீதியாக ஒழிக்கப்பட்ட நுழைவுத் தேர்வை காலில் போட்டு மிதிக்க மத்திய அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?
இதில் தமிழக அரசு தமிழ்நாட்டுக்குரிய இந்த சமூகநீதி உரிமை யைக் காப்பதில் போதிய கவனம் செலுத்தவேண்டும் - வேண்டும்! முக்கியம், மிக முக்கியம்!
கடந்தாண்டு கொடுக்கப்பட்ட விதிவிலக்குத் தொடரப்பட வேண்டும் என்பதே நமது நிலையாக இருக்கவேண்டும்.


நாடாளுமன்றத்தில் அழுத்தம் தருக!எனவே, இதற்கு ஒரு விடிவு - உடனடியாகக் கிடைத்தட மெத்தனம் இன்றி தமிழ்நாடு அரசும், அத்துணை நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆவன செய்ய அயரவேண்டாம் - வேண்டாம்!
கி.வீரமணி       தலைவர்,    திராவிடர் கழகம்.
சென்னை
22.1.2017



Nantri : Viduthalai 22.01.2017

Thursday, 19 January 2017

மாணவர்களே , நீங்கள் கரத்தை உயர்த்தினால்....




மதுரை,(19.1.2017)தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் போராட்டத்தில் மாணவ, மாணவியர்களின் அணுகுமுறை மிகவும் பாராட்டத்தக்கதாக இருந்தது. 4, 5 வரிசைகளாக மாணவியர்களும், அவர்களுக்கு எதிர்த்தால்போல் கொஞ்சம் இடைவெளிவிட்டு 6,7 வரிசைகளில்  மாணவர்களும், இளைஞர்களும் அமர்ந்து போராட்ட முழக்கங்களை எழுப்பினார்கள்.உணர்ச்சியோடும், எழுச்சியோடும் அவர்கள் எழுப்பிய முழக்கங்கள் மிகுந்த நம்பிக்கை அளித்த முழக்கங்கள். " தடை செய், தடை செய், பீட்டாவைத் தடை செய்' , 'வேண்டும், வேண்டும், ஜல்லிக்கட்டு வேண்டும்' , 'தமிழன் என்று சொல்லடா- தலை நிமிர்ந்து நில்லடா' போன்ற முழக்கங்களை , மாணவியர்கள் முழங்கினார்கள். வேடிக்கை பார்க்க நின்றிருந்தவர்களை 'உட்காரு, உட்காரு - தமிழன் என்றால் உட்காரு ' என்று முழக்கம் போட அனைவரும் அமைதியாக உட்கார்ந்தார்கள்.வீறு கொண்டு எழுந்த மாணவிகள் தெருவில் அமர்ந்து எழுப்பிய முழக்கங்களும் ,உணர்ச்சியும் எப்போதும் நான் பார்த்திராத ஒன்று. வரிசை, வரிசையாக ஒரே வயதுடைய இளம் ஆண்கள், பெண்கள்- ஆனால் போராட்ட கோரிக்கையை மட்டுமே வைத்து அவ்ரகளின் ஒற்றுமையையும் புரிதலையும் பார்த்தபோது மிக மகிழ்ச்சியாக இருந்தது. போராட்டங்களின் வாயிலாக ,கோரிக்கைக்காக ஒன்று சேருகின்றவர்கள் எளிதாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறார்கள், மரியாதையைக் கொடுக்கின்றார்கள், ஒவ்வொருவரின் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.  தொழிற்சங்கப்போராட்டங்கள், முழக்கங்கள் பலவற்றில் நான் பங்கேற்றிருக்கிறேன்.ஆனால் அவற்றில் எல்லாம் இல்லாத ஒரு தன்னெழுச்சியை, உள்ளத்து உணர்ச்சியை போராடும் மாணவ, மாணவிகளிடம் காண முடிந்தது.









மாலையில் .பி.எஸ்.என்.எல். நண்பர்கள் என்ற பதாகையில் மதுரை பி,எஸ்.என்.எல். நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள், அதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்ற ஆதரவு ஆர்ப்பாட்டம் மதுரை பி.எஸ்.என்.எல். அலுவலகத்து முன் நடந்தது. அப்படியே ஊர்வலமாகச்சென்று போராடும் மாணவ, மாணவியர்கள் மத்தியில் ஆதரவு முழக்கங்கள் எழுப்பி, பின் அவர்களின் போராட்ட வரிசையில் அமர்ந்து முழுக்கங்களை எழுப்பி, எல்லோருக்கும் ஒரு புதிய அனுபவமாக , உத்வேகமாக அமைந்தது.அனைத்து சங்கங்களைச்சார்ந்தவர்கள், அதிலும் குறிப்பாக பெண்கள், பெண் அதிகாரிகள் பலர் இந்த ஆதரவுப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். பெண்களின் பங்களிப்பு இல்லாத எந்தப்போராட்டமும் முழுமை அடையாது என்பது வரலாறு. இந்தப்போராட்டத்தில் பெண்கள், அவர்கள் மதத்தால் இந்துக்களாய், கிறித்துவர்களாய், இஸ்லாமியர்களாய், நாத்திகர்களாய் இருந்தாலும் இனத்தால் தமிழன் என்ற முறையில் இணைந்து எழுப்பிய முழக்கங்கள் மகிழ்ச்சிக்குரியன.பல்வேறு சங்கத்தை சார்ந்த பொறுப்ப்பாளர்கள் தங்களுக்குள் இருக்கும் கருத்து மாறுபாடுகளை எல்லாம் மறந்து விட்டு, போராடும் இளைய தலைமுறைக்கு இணைந்த கரங்களாய் நின்று ஆதரவு முழக்கங்களை எழுப்பினார்கள். பெருந்திரளாக போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். ஆர்வத்தோடு ஓடி,ஓடி வந்து கலந்துகொண்ட  அதிகாரிகளைப் பார்த்தபொழுது, உள்ளத்துக்குள் இருக்கும் உணர்ச்சியை மறைத்து வைத்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது வெளிப்படுத்துகின்றார்கள் எனத்தோன்றியது. நியாயமான போராட்டம் என்று வருகின்றபொழுது தங்கள் பதவி,பணி என்பதனைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஒன்றினைகின்றார்கள் எனத்தோன்றியது.








 ஒரு கருத்தை, நியாயமான கருத்தை புரிந்துகொண்டால் போராட வருவார்கள் என்பதற்கு நம் முன் செயல்முறை வடிவமாக மாணவ, மாணவிகள் போராட்டம் திகழ்கிறது. வெல்லட்டும், வெல்லட்டும், ஜல்லிக்கட்டு போராட்டம் வெல்லட்டும். புரட்சிகர வாழ்த்துக்கள், புரட்சிகர வாழ்த்துக்கள்- போராடும் நம் இளைய தலைமுறைக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.

Wednesday, 18 January 2017

ஜல்லிக்கட்டிற்காக போராடும் தமிழ் மாணவர்கள்...

சில நாட்களுக்குமுன் வாசிப்போர் களத்தின் தோழர் மு.சங்கையா அவர்களோடு பேசிக்கொண்டிருந்தபொழுது, இன்றைய சமூக வலைத்தளங்கள் பற்றிப் பேச்சு வந்தது. அதனைப் போல உலக அளவில் நடைபெற்ற புரட்சிகள்பற்றியும் பேச்சு வந்தது. சீனாவில் தோழர் மாவோ,ருசியாவில் தோழர் லெனின் மற்றும் சென்ற நூற்றாண்டில் நடந்த புரட்சி நேரத்தில் , இவ்வளவு அறிவியல் கருவிகள் இல்லை, ஆனால் இன்றைக்கு 4 பேர் ஒன்று சேர்ந்தால் கூட கண்காணிக்க கருவிகள் இருக்கிறது என்றேன். அறிவியல் நுட்பம் முதலாளிகளுக்கும், உயர் ஜாதியினருக்கும் ஆதரவாக பயன்படுத்தப்படுகிறது, ஒரு மாற்றத்திற்காக இளைஞர்கள் ஒன்று சேர்வது கடினம். அதனைப்போல இன்றைய இளைஞர்களுக்கு சமூக பொறுப்பு இல்லை, சமூக வலைத்தளங்கள் பெரும்பாலும் இளைஞர்களைத் தவறான வழியில் வழிகாட்டுகிறது என்பதாக அந்த விவாதம் விரிந்தது.

அப்போது தோழர் சங்கையா, ' நான் அப்படி நினைக்கவில்லை ' என்றார். 'இன்றைய சமூக வலைத்தளங்கள் மாற்றங்கள் விரும்புவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு ' என்றார். 'இன்றைய இளைஞர்கள் இணைவதற்கும், ஒன்று திரள்வதற்கும் சமூக வலைத்தளங்கள் மிகப்பெரிய வாய்ப்பு ' என்றார். இன்றைக்கு நடைபெறும் ஜல்லிக்கட்டிற்கான போராட்டம் மிகப்பெரிய நம்பிக்கையை நம்மைப்போன்றவர்களுக்கு கொடுத்திருக்கின்றது. இன்றைய இளைஞர்கள் சுய நலமிக்கவர்கள், தன் வீடு, தன் குடும்பம், தன் வேலை வாய்ப்பு, தன் வசதி என்று மட்டும் நினைப்பவர்கள் என்று சிலர் கொண்டிருந்ததைப் பொய் என்பதனை தமிழின இளைஞர்களும், மாணவர்களும் நிருபித்திருக்கின்றார்கள். ஒற்றைப்புள்ளியாய் சாதி, மதம் என்பதையெல்லாம் புறந்தள்ளி, தமிழர்கள், தமிழ்ப்பண்பாடு என்ற ஒற்றைப்புள்ளியில் இணைந்து போராடும் மாணவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ் இனத்தின் உயிரானவர்கள் ' என்னும் கவிஞர் காசி ஆனந்தனின் பாடல் மீண்டும் எனது காதில் ஒலிக்கிறது.

ஜல்லிக்கட்டிற்காக போராடும் இளைஞர்களுக்கான ஆதரவுக்கரம் நீள்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல, தமிழ் ஈழத்தில், இங்கிலாந்தில், ஆஸ்திரேலியாவில் என உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இந்தப்போராட்டத்தால் உத்வேகம் பெற்றிருக்கிறார்கள். தங்கள் தங்கள் இடங்களில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். நேற்று நடந்த என்.டி.டி.வி. நிகழ்ச்சியில் 'தமிழ்ப்பண்பாடு ' என்றால் என்ன என்பதனைப் பற்றி நீண்ட விவாதம் நடந்தது. நடக்கட்டும். 'தமிழா இன உணர்வு கொள்' என்பதனை தெருத்தெருவாய், சுவரெழுத்தாக திராவிடர் கழகத்தினர் ஆண்டாண்டு காலமாக எழுதினார்கள், எழுதிக்கொண்டிருக்கிறார்கள். 'தமிழன் ' என்னும் இன உணர்வோடு நடைபெறும் இப்போராட்டம் வெல்லும் என்பதனை நாளைய வரலாறு சொல்லும். போராடும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். .

Tuesday, 17 January 2017

7 பேர் சொத்து = 84 கோடி மக்கள் சொத்து

             7 பேர் சொத்து  = 84 கோடி மக்கள் சொத்து 



புதுடில்லி, ஜன.17 இந்தியாவில் வருமான ஏற்றத் தாழ்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உள்ள ஒரு சதவீத பணக்காரர்களிடம் 70 சதவீத மக்களின் சொத்து குவிந்துள்ளது என்று ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

உலக பொருளாதார மய்ய மாநாடு தொடங்கும் முன்பாக தன்னார்வ உரிமைகள் குழுவான ஆக்ஸ்பாம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கிடையிலான இடைவெளி இதில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் உள்ள 7 பெரும் பணக்காரர்களிடம் 21,600 கோடி டாலர் குவிந்துள்ளது. இது இந்தியாவின் 70 சதவீத மக்கள் வசம் உள்ள சொத்துகளின் மதிப்புக்கு இணையானது என்றும் குறிப்பிட்டுள்ளது.

உலக அளவில் 8 பெரும் கோடீசுவரர்களிடம் குவிந் துள்ள தொகையானது உலக மக்கள் தொகையில் 50 சதவீதம் பேரிடம் குவிந்துள்ள தொகைக்கு இணையாக உள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது..

இந்தியாவில் உள்ள 84 கோடீஸ்வரர்களிடம் ஒட்டு மொத்தமாக 24,800 கோடி டாலர் மதிப்பிலான சொத்து உள்ளது. இதில் முகேஷ் அம்பானி (1,930 கோடி டாலர்), திலிப் சாங்வி (1,670 கோடி டாலர்), அஸிம் பிரேம்ஜி (1,500 கோடி டாலர்), ஷிவ் நாடார் (1,110 கோடி டாலர்), சைரஸ் பூனாவாலா (850 கோடி டாலர்), லஷ்மி மிட்டல் 840 கோடி டாலர்), உதய் கோடக் (630 கோடி டாலர்), குமாரமங்களம் பிர்லா (610 கோடி டாலர்) ஆகியோரிடம் மிக அதிக அளவு சொத்துகள் உள்ளன.

உலகம் முழுவதும்....

உலகம் முழுவதும் உள்ள சொத்துகளின் மதிப்பு 25,570 லட்சம் கோடி டாலராகும். இதில் 650 லட்சம் கோடி டாலர் சொத்து கோடீசுவரர்கள் வசம் உள்ளது. பில்கேட்ஸ் (7,500 கோடி டாலர்), அமான்சியோ ஒர்டேகா (6,700 கோடி டாலர்), வாரன் பஃபெட் 6,080 கோடி டாலர்) சொத்துகள் உள்ளன.

இந்த ஆய்வறிக்கைக்கு 99 சதவீத மக்களுக்கான பொருளாதாரம் என்று பெயரிட்டுள்ள ஆக்ஸ்ஃபாம், அனைத்து மக்களுக்கும் சென்றடையக்கூடிய மனித பொருளாதாரத்தை உருவாக்குங்கள், ஒரு சிலர் மட்டும் பயனடையும் பொருளாதாரத்தால் பயனில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

2015- ஆம் ஆண்டிலிருந்து பணக்காரர்களாக உள்ள ஒரு சதவீத மக்கள்தான் தொடர்ந்து பணம் ஈட் டியுள்ளனர். மற்றவர்களின் நிலை அப்படியே உள்ளது என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

அடுத்த 20 ஆண்டுகளில் 500 கோடீசுவரர்களிடம் 210 லட்சம் கோடி டாலர் இருக்கும். இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) விட அதிகம் என்று சுட்டிக் காட்டியுள்ளது. 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் ஜிடிபி-யை விட அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ளது.

உலகிலுள்ள ஏழை மக்களில் பாதிக்கும் குறை வானவர்களின் சொத்து மதிப்பானது கடந்த இருபது ஆண்டுகளில் உள்ளதை விட தற்போது குறைந்துள்ளது. கோடீசுவரர்களில் 10 சதவீதம் பேர் சீனா, இந்தோனேசியா, லாவோஸ், இந்தியா, வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் உள்ளனர். இவர்களின் வருமானம் கடந்த 20 ஆண்டுகளில் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதேசமயம் ஏழைகளின் வருமானம் கடந்த 20 ஆண்டுகளில் 15 சதவீதம் சரிந்துள்ளது.

பெண்களுக்கு குறைவான ஊதியம்

பணியிடங்களில் ஊதியம் வழங்கலில் பாரபட்சம், பெண்களுக்கு குறைவான ஊதியம் ஆகியன ஏற்றத் தாழ்வுக்கான முக்கியக் காரணமாகும். பெண்களை விட ஆண்களுக்கு 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை வித்தியாசம் உள்ளதாக ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (அய்எல்ஓ) வெளி யிட்டுள்ள ஊதிய விகிதம் தொடர்பான அறிக்கையை சுட்டிக் காட்டியுள்ள ஆக்ஸ்ஃபாம், இந்தியாவில் பாலின ஊதிய விகித ஏற்றத் தாழ்வு மிக அதிகமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. ஒரே பணியை நிறைவேற்றும் பெண்களுக்கு ஆண்களைவிட 30 சதவீதம் குறைவாக ஊதியம் அளிக்கப்படுவதாக தெரி வித்துள்ளது.

விவசாயம் சார்ந்த பணிகள்...

இந்தியாவில் 60 சதவீத பெண்கள் குறைவான ஊதியம் பெறுகின்றனர். 15 சதவீதம்பேர்தான் அதிக ஊதியம் பெறுகின்றனர். இதனால் ஊதிய விகிதத்தில் பாலின இடைவெளி இந்தியாவில் அதிகமாக உள்ளது.

இந்தியாவில் உள்ள 40 கோடி பெண்களில் 40 சதவீதம் பேர் விவசாயம் சார்ந்த பணிகளை கிராமப் பகுதிகளில் மேற்கொள்கின்றனர். ஆனால் இவர்களுக்கு விவசாயிகளுக்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை. இவர்களுக்கென்று சொந்த விவசாய நிலம் கிடையாது. அரசு அளிக்கும் உதவிகள் மிகவும் அரிதாகவே பெண்களைச் சென்றடைகிறது.

இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறு வனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அந்நிறுவனத்தில் பணி புரியும் சாதாரண ஊழியரைக் காட்டிலும் 416 மடங்கு கூடுதலாக ஊதியம் பெறுகிறார்.

அமெரிக்காவில் பெரும் கோடீஸ்வரர்கள் தொடர்ந்து பணம் சேர்ப்பதைத் தவிர்க்கின்றனர். இதனால் இவர்களிடம் நீண்ட காலமாக பணம் தங்கி யிருப்பதில்லை.
ஆசிய பிராந்தியத்தில் சிங்கப்பூர் மற்றும் இந்தி யாவில் பன்முக தலைமுறை கோடீஸ்வரர்கள் உள் ளனர். இவர்களிடம் உள்ள சொத்துகள் அடுத்த 20 ஆண்டுகளில் வாரிசுகளுக்கு கைமாறும். எனவே சொத்து கைமாறும்போது அதற்குரிய முறைப்படியான வரி விதிப்பு இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.


நன்றி : விடுதலை 17.01.2017

Sunday, 15 January 2017

தித்திப்பிற்கு இணையாய்.........வா.நேரு


எத்தனை இலக்கியம்
படித்தாலும்
பலர் படைத்ததைப் 
பகிர்ந்தாலும்
இதற்கு நிகராய்
என் மொழியிலும்
எந்த மொழியிலும்
பார்க்கக் கிடைக்கவில்லை....

ஓர் அதிகாரத்தில்
இருபது வரிகளுக்குள்
எடுத்து வைக்கும்
கருத்துக்களை
இரண்டாயிரம் 
பக்க நூல்களுகளுக்குள்
தேடினாலும் கிடைப்பதில்லை....

முன்னொரு முறை
படித்ததையே
பின்னொரு முறை 
படிக்கும்போது 
உள்ளத்து வளர்ச்சிக்கேற்ப
புதிது புதிதாய்
விளக்கங்களை நம் மனதில்
விதைக்கும் கழனி
இதைப் போல் வேறொன்றில்லை....

உள்ளத்து அயர்ச்சியின்போதும்
உறவுகளின் பிரிவின்போதும்
எண்ணத்து தளர்ச்சிகளின்போதும்
என்றோ படித்த
இருவரிகள்
தரும் ஆறுதல் 
வேறு எதிலும் கிடைப்பதில்லை.....

ஈராயிரம் ஆண்டுகளுக்கு
முன் எமக்காக 
வாழ்வியலை சமைத்திட்ட
திருவள்ளுவரே 
நீ தந்த திருக்குறள்
எம் மொழியில்
தமிழ் மொழியில்
இயற்றினாய் என்பதற்கு
இணையாய் 
வேறு எதுவும் 
பெருமையில்லை எமக்கு.....

தினம் தினம் படிக்கும்
திருக்குறள் 
சில தரும்
தித்திப்பிற்கு இணையாய்
வேறு எதுவும் 
வாழ்வில் இனிப்பில்லை

தமிழ் மொழி வாழும்வரை
தமிழர்கள் வாழும்வரை
நின் புகழ் வாழும் !
தோழர்களே! அறிஞர்களே ! 
தமிழ்ச் சான்றோர்களே...
அய்யன் திருவள்ளுவர்
நாள் வாழ்த்துக்கள்
அன்பர்கள் அனைவருக்கும்....... 

                                            .வா.நேரு....15.01.2017

Saturday, 14 January 2017

அழுவதா....சிரிப்பதா.........

               அழுவதா....சிரிப்பதா......... 
                                       (சிறுகதை) ...... வா.நேரு


கலைக்கல்லூரியில் 'இடம்' வாங்குவது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமாக இல்லை . 'கல்வி' ஒன்றுதான் தன் பிள்ளைகளை வாழ்க்கையில் கரை சேர்க்கும் என ஒவ்வொரு ஆத்தா, அப்பன் மனதிலும்  ஆழமாகப் பதிந்த பிறகு, எப்படியாவது-காட்டை,வீட்டை விற்றாவது பிள்ளைகளைப் படிக்கவைக்கவேண்டும் என்று நினைத்து அதற்காக மெனக்கெட்ட பிறகு கல்லூரிகளில், பள்ளிக்கூடங்களில் இடம் வாங்குவது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமாக இல்லை .பிள்ளைகளைப் படிக்கவைக்கவேண்டும் என்ற பெற்றோர்களின் விருப்பம உண்மையிலேயே நல்ல செய்திதான் நாட்டிற்கு.                                                                                                                                   

ஊரிலிருந்து தொலைபேசியில் அவனது அண்ணன் சொல்லும்போதே குணசேகரனுக்கு ஜோயலின் அப்பா-சுப்பையாவின்  நினைவு மனதிற்குள் ஓடியது.குணசேகரன் பள்ளிக்கூடம் செல்லும் நாட்களில் சுப்பையா அந்தத் தெரிவிலிருக்கும் மாடுகள் அனைத்தையும் ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்கு விடுவதற்காக போய்க்கொண்டிருப்பான். இருவருக்கும் ஒரே வயதுதான் என்றாலும் சுப்பையா பள்ளிக்கூடத்திற்கு வந்ததாக நினைவு இல்லை குணசேகரனுக்கு. குணசேகரன் அண்ணன் ஜோயலின் குடும்பத்தைப் பற்றியும் அந்த வீட்டின் வறுமையைப் பற்றியும் விவரித்தபோது இவனுக்கும் அந்த வீட்டின் நினைவுகள் மனதிற்குள் ஓடியது.  குணசேகரனுக்கும் தெரிந்த குடும்பம்தான் என்றாலும் ஊரிலிருந்து  வெளியேறி சில ஆண்டுகள் ஆகியிருந்ததால் சட்டென்று அண்ணன் சொன்னவுடன் நினைவுக்கு வரவில்லை. ஆனால் அவர் விவரித்து சொல்லச்சொல்ல , ஜோயல் குடும்பத்தின் வறுமையை, வசதியின்மையை எல்லாம் எடுத்துக்கூறியபோது . குணசேகரனுக்கும் டக்கென்று நினைவில் வந்தது. டேய், ஜோயல்  +2 பாஸ் பண்ணியிருக்கிறான். மிகக் குறைந்த மார்க்குதான். அவனுக்கு மேல்படிப்புக்கு மதுரையில ஏதாவது ஒரு கல்லூரியில் இடம் வாங்கணும். அப்ளிகேசன் வாங்குவதிலிருந்து எல்லாம் நீ செய்யணும். அந்தப் பையனும் அவனது அம்மாவும் கையெழுத்து மட்டும் போடுவாங்க.அவனுக்கு ஒரு சீட் வாங்கிக்கொடு ' என்றார். 'என்னை வந்து பார்க்கச்சொல், நான் அவனுக்கு கல்லூரியில் இடம் வாங்கித்தந்து விடுகின்றேன்' என மந்திரி பதவியில் இருப்பது போல அவனது அண்ணனிடம் சொல்லிவிட்டான் குணசேகரன்.

காலையில்  ஜோயலும் அவனது அம்மாவும் அலுவலுகத்திற்கே நேரிடையாக வந்துவிட்டார்கள். ஜோயலின் அம்மா அப்படியே செவக்காட்டில் களை எடுத்துவிட்டு நேரிடையாக வந்த தோற்றத்தில் இருந்தார். குணசேகரனைப் பார்த்து 'என்னப்பா, நல்லா இருக்கியா? ஊர்ப்பக்கமே வருவது இல்லையா- உன்னைப் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டதே ' என்றபோது 'ஆமாம், அம்மா ஊரிலிருந்தால் அடிக்கடி வருவேன். அவர்கள் இப்போது என்னோடயே இருப்பதால் ஊருக்கு ஏதேனும் நல்லது ,கெட்டது என்றால் மட்டும்தான் வருவது ' என்றான். . தன்னையும் தன் மகன் ஜோயலையும் விட்டுவிட்டு ஜோயலின் அப்பா சுப்பையா வேறு ஒரு திருமணம் முடித்துக்கொண்டு ஊரை விட்டே போய்விட்டதைச்சொன்னார். உழைத்து உழைத்து காய்ந்துபோன கைகளும், எண்ணெய் காணாத தலையுமாய் ஜோயலின்  அம்மாவின் பரிதாபத் தோற்றத்தைப் பார்த்தவுடனே இந்தப்பையன் நன்றாகப் படிக்க வேண்டும், நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கவேண்டும் என நினைத்துக்கொண்டான். அம்மாவை ஒட்டி வளர்த்தியாய் நெட்டைப்பனைமரம் போல அந்தப்பையன் ஜோயல் நின்றான்.மிகச்சிறிய வயதில் அவனைப் பார்த்தது. நெடு நெடுவென அவன் நின்றபோது இளம்வயதில் சுப்பையாவைப் பார்த்ததுபோலவே இருந்தது குணசேகரனுக்கு.

       ஜோயலின்  அம்மாவிடம் மதுரையில் உங்கள் மகனுக்கு ஏதேனும் ஒரு கல்லூரியில் படிக்க இடம் வாங்கிகொடுப்பது எனது பொறுப்பு என்று வாக்குறுதி கொடுத்து ஒரு வாரம் ஆகிவிட்டது. மதுரையில் இருந்த பெரும்பாலான கல்லூரிகளில் பேராசிரியர்கள் ஒருவரோ ,இருவரோ குணசேகரனுக்கு தெரிந்தவர்கள் இருந்தார்கள், அது வசதியாக இருந்தது குணசேகரனுக்கு. ஒவ்வொரு கல்லூரியாக அவனை அழைத்துப்போய் விண்ணப்பத்தை வாங்கி, முழுமையாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பின்பு தெரிந்த பேராசிரியரைப் பார்த்து சொல்லி, அந்த வாரம் முழுவதும் 'கல்லூரி சேர்க்க முயலும் வாரமாக, குணசேகரனுக்கு அமைந்தது. ஆனால் விளக்கெண்ணெய் செலவழிந்ததுதான் மிச்சம், பிள்ளை பிழைக்க வழியில்லை என்பதைப்போல ஒரு கல்லூரியிலிருந்தும் ஜோயலுக்கு அழைப்பு வரவில்லை.

கடைசியாய் நன்றாக அறிமுகமான கல்லூரிப் பேராசிரியரின் வீட்டில்போய் ஒரு பாதி நாள் உட்கார்ந்தான். மிகவும் இரசனையும், நகைச்சுவை உணர்வும் உள்ள பேராசிரியர் அவர். தமிழ்த்துறை தலைவர் என்றாலும் ஆங்கிலத்திலும் புகுந்து விளையாடுவார்.  அவரிடம் பழியோ பழி என்று உட்கார்ந்தான் . 'இந்தப் பையனுக்கு எப்படியும் உங்கள் கல்லூரியில் இடம் வாங்கிக் கொடுக்கவேண்டும் ' என்றான். 'எப்பொழுதும் இப்படி முரண்டு பிடிக்கமாட்டேயே, ஏன் இப்படி ' என்றார். குணசேகரன், ஜோயலின் குடும்ப நிலைமையை , வறுமை பிடுங்கித்தின்னும் குடும்பத்திலிருந்து வந்திருக்கும் தன்மையை எடுத்துச்சொன்னான்.  'நீ கவலையை விடு தம்பி, இன்னும் சற்று அதிக நேரம் நான் முதல்வரோடு பேசவேண்டும், பேசி வாங்கிவிடுகின்றேன் ' என்ற பேராசிரியர் அடுத்த வாரம் ஜோயலுக்கு கல்லூரியில் படிக்க இடமும் வாங்கிக்கொடுத்துவிட்டார்.

கல்லூரியில் சேரும் நாளன்று அம்மாவோடும் , ஊரிலிருந்து கொண்டு வந்த தகரப்பெட்டியோடும் வந்த ஜோயலைப் பார்க்க பரிதாபமாக இருந்தது குணசேகரனுக்கு. அவன் எடுத்த மதிப்பெண்ணுக்கு பி.ஏ.சரித்திரப் பாடம் கிடைத்தது.வெகு நேரம் அவனோடு உட்கார்ந்து கல்லூரி வளாகத்தினுள் பேசிக்கொண்டிருந்தான். படித்ததனால் மட்டுமே தான் உயர்வு பெற்றதையும் இன்னும் ஊர்க்காரர்கள் சிலர் உயர்ந்த நிலை பெற்றதற்கெல்லாம் படிப்பே காரணம் என்பதனையும்  சொன்னான். இன்னும் பல செய்திகளைச்சொல்லி  குணசேகரன் அவனுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் பேசினான். படிக்கும்போதே போட்டித்தேர்வுகளுக்கும் சேர்த்து கல்லூரியில் படிக்கவேண்டும். ஆத்துத் தண்ணி ,திடீர்ன்னு நம்மளை அடிச்சுக்கிட்டு போகும்போது ,கையில கிடைக்கிற கட்டையைப் பிடிச்சுக்கிட்டு தாக்குப்பிடிச்சு கரையில ஏறுவதுமாதிரி, படிப்பு ஒண்ணுதான் உன் சூழலிலிருந்து உன்னைக் காப்பாத்தும், கஷ்டப்பட்டு உன்னை வளர்க்கும் அம்மாவுக்கு நீ செய்யிற உதவி நல்லா படிச்சு அவங்களுக்கு கடைசிக் காலத்தில கஞ்சி ஊத்துறதுதான் என்பது போன்ற பல படிப்பினைகளை அவனுக்குச்சொன்னான் குணசேகரன். மிக ஆர்வமாக கேட்பதுபோல ஜோயல் கேட்டுக்கொண்டிருந்தான்.கல்லூரி விடுதியில் இடம் கிடைப்பது வேறு குதிரைக் கொம்பாக இருந்தது. இரண்டு மூன்று நாட்கள் வெளியே தங்கவைத்துவிட்டு, மீண்டும் தனக்கு தெரிந்த பேராசிரியரைப் பார்த்து சொல்லி , விடுதியில் இடமும் வாங்கி கொடுத்தபின்புதான் நிம்மதி கிடைத்தது குணசேகரனுக்கு. படிப்பு உதவித்தொகை வந்த பின்பு விடுதிக்குப் பணம் கட்டினால்போதும் என்ற சலுகையை தெரிந்த பேராசிரியரோடு போய் அந்தக் கல்லூரியின் முதல்வரைப் பார்த்து பேசி வாங்கினான். உண்மையிலேயே மிகவும் துயரப்படும் ஒரு குடும்பத்தைச்சார்ந்த பையனுக்கு கல்லூரியில் இடம் வாங்கிக் கொடுத்தது மிகவும் மன நிறைவு அளிப்பதாக இருந்தது குணசேகரனுக்கு.

 கல்லூரியில் சேர்த்துவிட்டு அலுவலகத்திற்கு வந்தபின்பு ஜோயலை முழுமையாக மறந்து போனான் குணசேகரன். மிகவும் பின் தங்கிய பகுதியில் இருந்து , மிகக் கடுமையான வறுமைச்சூழலிருந்து வந்திருக்கும் பையன் , தனது ஆற்றல், நேரம் முழுவதையும் படிப்பின்பக்கம் திருப்பி படித்துக்கொண்டிருப்பான் என குணசேகரன் நினைத்துக்கொண்டிருந்தான். குடும்பம், அலுவலகம், இயக்கம், இலக்கியம் எனப் பல வேலைகளை இழுத்து வைத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த குணசேகரன் சிறிது காலம் ஜோயலை மறந்தே போனான்.

       சில மாதங்கள் கழித்து இயக்கக்கூட்டத்தில் குணசேகரனைப் பார்த்த ஜோயல் படிக்கும் கல்லூரிப்பேராசிரியர்  ' என்ன தம்பி , நம்ம கல்லூரியில் நீ சேர்த்துவிட்ட பையன் நன்றாகப் படிக்கிறானா ? ' என்றார். அந்தப் பேராசிரியர் தமிழ்த்துறை. ஜோயல் படிப்பதோ வரலாற்றுத்துறை. சில வகுப்புகள் பொதுவாக இருக்கலாம். அந்த வகுப்புகளுக்கு இவர் போகின்றாரா அல்லது சீனியர் என்பதால் முதுகலை வகுப்புகளுக்கு மட்டும் போகிறாரா என்பது குணசேகரனுக்குத் தெரியவில்லை. ஜோயல் எப்படி படித்துக்கொண்டிருக்கிறான் என்ற முழு விவரம் குணசேகரனுக்குத் தெரியவில்லை. இருந்தாலும் பேராசிரியரிடம் சமாளித்தான். ' அய்யா, நன்றாகப் படிக்கிறான் . கிராமப்புறத்திலிருந்து வரும் பசங்களுக்கு எப்போதுமே மனதிற்குள் ஒரு வெறி இருந்துகொண்டேயிருக்கும்.எப்படியாவது முன்னேறனும், வாழ்க்கையில் வெற்றி பெறனும் என்ற நோக்கம் இருக்க்கும் ' என்றான். அவரோ 'அப்படி இருந்தால், மகிழ்ச்சி, மகிழ்ச்சிதான் ' என்றார். அவரிடம் ' அய்யா, வருடம்,வருடம் நான் உங்களிடம் இப்படி கல்லூரியில் இடம் ஒன்றிரண்டு வேண்டும் என்று வருவேன். கிராமப்புறத்திலிருக்கும் மக்கள் கடுமையான உழைப்பாளிகள். உழைத்து உழைத்து சாவது தவிர அவர்களுக்கு வேறு வாழ்க்கை இல்லை. அவர்களுக்கு பணமோ, பொருளோ நம்மால் கொடுக்க முடியாது. ஆனால் அவர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரியில் இடம் கிடைத்து, நன்றாக படித்து ஒரு வேலைக்கு போய்விட்டால் அந்தக் குடும்பமே முன்னேறி விடுகிறது. எனக்குத் தெரிந்தவர்களைப் பயன்படுத்தி எவ்வளவு கெஞ்ச வேண்டுமோ கெஞ்சி இந்த அட்மிசன் போன்ற உதவிகளைச்செய்ய இயலும், அதனைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன் ' என்ற போது

        'செய் தம்பி, செய், என்னிடமெல்லாம் கெஞ்சவேண்டாம். நீ சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.வா, வா, வருடந்தோறும் வா.'  அடுத்தவனுக்கு உதவி செய்பவன் தான் பெரியாரிஸ்ட். இல்லறம்,துறவறம் என்பதையெல்லாம் விட  தொண்டறம் முக்கியம் ' எனச் சிரித்த படியே சொல்லிவிட்டு முதுகில் தட்டிக்கொடுத்து சென்று விட்டார்.முதல் வருடத்தின்  கடைசிக்கட்டத்தில் ஜோயல் படிக்கும் கல்லூரிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஜோயலை மெனக்கட்டுப்போய் பார்த்தபோது முகம் மலர வரவேற்றான். ஆள் முழுக்க மாறிப்போயிருந்தான். நவ நாகரீக உடையோடு கம்பீரமாக இருந்த ஜோயலைப் பார்க்க பெருமையாக இருந்தது குணசேகரனுக்கு. 'எப்படிப் படிக்கிற தம்பி' என்ற போது மிக வேகமாக ' மிக நன்றாகப் படிக்கிறேன் ' என்றான். அவனின் பக்கத்திலிருந்த அவனது நண்பன் சிரித்துக்கொண்டிருந்தான் நக்கலாக. நன்றாகப் படிக்கிறேன் என்று ஜோயல் சொன்னதைக் கேட்டபோது மகிழ்ச்சியாக இருந்தது குணசேகரனுக்கு.

        இரண்டாம் ஆண்டு படிப்பு முடியப்போகும் நேரத்தில் திடீரென்று ஒரு நாள் அலுவலகத்திற்கு முன்னால் வந்து நின்றான் ஜோயல்.  என்னவென்று கேட்டபோது ஓவென்று அழுதான். கல்லூரியில் தன்னை கல்லூரியை விட்டு நீக்க முடிவு செய்திருப்பதாகவும் , அதனைத் தடுக்க வேண்டுமென்றால் குடும்பத்தினரை அழைத்து வரவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள் என்றான். தனது அம்மா படிக்காதவர், அவருக்கு இது எதுவும் தெரியாதென்றும், ஏதேனும் பிரச்சனை என்றால் தன்னை விளக்குமாற்றை வைத்து அடித்தே கொண்டு விடுவார்கள் என்றும் என்னை எப்படியாவது கல்லூரிக்கு வந்து காப்பாற்றுங்கள் என்றும் சொன்னபோது 'இரத்தம் சம்பந்தம் உள்ள குடும்பத்தினர் யாரையாவது அழைத்துவரச்சொல்லியிருக்கிறார்கள் என்றால் அப்படி அழைத்துச்செல்வதுதானே சரியாக இருக்கும். அப்படி உனது குடும்பத்தினர் யாரையாவது அழைத்துச்செல்' என்று சொன்ன குணசேகரனிடம் மீண்டும் மீண்டும் கெஞ்சி ஜோயல் அழுதபோது 'சரி, போ, நாளை நான் வருகிறேன் 'என்று சொல்லி அனுப்பிவிட்டு மறு நாள் அந்தக் கல்லூரிக்குச்சென்றான் குணசேகரன்.

     இந்த ஒரு வருடத்தில் மிகப்பிரமாண்டமாய் இரண்டு கட்டிடங்கள் கல்லூரியில் புதிதாக முளைத்திருந்தன. எவ்வளவு பெரிய பெரிய கட்டிடங்கள். விடுதிகள். 50 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் ஒரு சில கலை அறிவியல் கல்லூரிகள் இருந்ததையும் இன்று எத்தனை கல்லூரிகள் இருக்கின்றன, எவ்வளவு மாணவ, மாணவிகள் படிக்கின்றார்கள். படிப்பினால் எவ்வளவு பெரிய மாற்றம் வந்திருக்கிறது என்று நினைத்துக்கொண்டே கல்லூரிக்குள் நுழைந்த குணசேகரன் தந்தை பெரியாரும், பெருந்தலைவர் காமராசரும் எண்ணிய எண்ணங்கள் இன்றைக்கு காயாய், கனியாய் கல்லூரிகளாய்ப் பூத்துக்குலுங்குகின்றன என நினைத்துக்கொண்டான்.

     ஜோயலோடு கல்லூரி முதல்வரின் அறைக்குள் நுழைந்தான் குணசேகரன். விசாரணைக்குழு போல முதல்வர் மற்றும் நான்கு பேராசிரியர்கள் என மொத்தம் ஐந்து பேர் அமர்ந்திருந்தனர். சென்றவுடன் குணசேகரனை முதல்வர் உட்காரச்சொல்ல அமர்ந்தான். 'ஜோயல்' உங்களுக்கு என்ன உறவு என்று முதல்வர் கேட்க, குணசேகரன் பதில் சொல்வதற்குள் ' எங்க  அண்ணன் சார்' என்றான் ஜோயல்.மறுக்க இயலாத நிலையில் ஆமாம் எனத் தலையாட்டினான் குணசேகரன்.

       'சார், உங்களை எதற்காக அழைத்திருக்கிறோம் என்று தெரியுமா உங்களுக்கு ? ' என்றார் ஒரு பேராசிரியர். தெரியாது எனத்தலையாட்டினான் குணசேகரன். 'உங்கள் தம்பி ஜோயலை, விடுதியை விட்டும் , கல்லூரியை விட்டும் நீக்குவது என்று எங்கள் கல்லூரியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு முடிவெடுத்திருக்கிறது. அதை உங்களுக்குத் தெரிவித்துவிட்டு, டி.சி. வாங்கிக்கொண்டு இவனை அழைத்துக்கொண்டு வீட்டுற்குப் போங்கள் என்று சொல்வதற்குத்தான் உங்களை அழைத்திருக்கிறோம் ' என்றார் இன்னொரு பேராசிரியர்.

' சார், கல்லூரியை விட்டும் , விடுதியை விட்டும் நீக்குமளவிற்கு ஜோயல் என்ன குற்றம் செய்தான் ' என்ற குணசேகரனிடம் 'ஒண்ணா,இரண்டா -எத்தனையைச்சொல்ல, தாங்க முடியலை சார் இவன் தொந்தரவு, 3 செமஸ்டர் தேர்வு இது வரைக்கும் முடிந்சிருக்கு, மொத்தம் 18 பாடம், இவன் 3 பாடம்தான் பாஸ் பண்ணியிருக்கான். ' என்றார் ஒரு பேராசிரியர்.

; படிக்க வந்தோம் என்ற நினைப்பே இல்லாமல் ஜோயல் இருக்கான் சார். கல்லூரிக்கு முன்னால் இருக்கிற பஸ் ஸ்டாப்பிலும் பக்கத்தில் இருக்கிற மகளிர் கல்லூரி பஸ் ஸ்டாப்பிலும் ஒரு கோஷ்டியாய் எப்பவும் நிக்கிறான் சார். பக்கத்து மகளிர் கல்லூரி பிரின்ஸ்பால் பலமுறை இவனை புகார் பண்ணிட்டாங்க சார் , சொன்னா கேட்கிற மாதிரி இல்ல' என்றார் இன்னொருவர்.
'கல்லூரியில் எவ்வளவு வசதிகள் செய்து கொடுத்து இவனுகளைப் படிக்கச்சொல்கிறோம். படிக்க மாட்டாறாங்கே சார். களை எடுக்காம, பயிரை வளர்க்க முடியாது சார். உங்க தம்பி களை மாதிரி இந்தக் கல்லூரியில் இருக்கான் .தயவுசெய்து இவன் டி.சி.யைத் தருகிறோம் , வாங்கிக் கொண்டு போங்கள் ' என்றார் கல்லூரி முதல்வர்.

         ஒன்றுமே புரியவில்லை குணசேகரனுக்கு. ஒவ்வொரு பேராசிரியரும் ஜோயலைப் பற்றிச்சொல்லச்சொல்ல கோபம் கோபமாக வந்தது குணசேகரனுக்கு. அவனுக்கு கல்லூரியில் சீட் வாங்குவதற்காக அழைந்த அலைச்சல் ஞாபகம் வந்தது. களை எடுத்து, விறகு சுமந்து அவனைப் படிக்கவைத்துக்கொண்டிருக்கும் ஜோயலின் அம்மாவின் ஞாபகம் வந்தது ஜோயலுக்கு. கிடைத்ததற்கு அரிய இந்த வாய்ப்பை இப்படி அநியாயமாக பாழ்படுத்தியிருக்கிறானே என்று கோபம் வந்தது வந்தது குணசேகரனுக்கு.

           ஒருகட்டத்தில் பேராசிரியர் சொல்லச்சொல்ல கேட்டுக்கொண்டிருந்த குணசேகரன்  ஜோயலிடம் ' என்ன ஜோயல், பேராசிரியர்கள் சொல்வது எல்லாம் உண்மைதான? ' என்றான் . எதுவும் சொல்லாமல் நின்ற ஜோயலைப் பார்க்க ஆத்திரமாக வந்தது குணசேகரனுக்கு.எவ்வளவு பெரிய வாய்ப்பு ஜோயலுக்கு . அனைத்தையும் பாழ்படுத்தி நமக்கும் சேர்த்து கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறானே என்று எண்ணினான் குணசேகரன்.

           கல்லூரி முதல்வர்' சார், இப்படிப் பையனை எல்லாம் வைத்துக்கொண்டு நாங்க கல்லூரி நடத்தமுடியாது சார். தயவுசெய்து வேறு கல்லூரியில் சேர்த்துவிடுங்கள்.அல்லது டி,சி. வாங்கிக்கொண்டு போய் அஞ்சல் வழியில் படிக்கச்சொல்லுங்கள். இந்தக் கல்லூரியில் இவன் இனிப்படிக்க முடியாது ' என்று தீர்மானமாகச்சொன்னதும், ஆத்திரம் கொப்பளிக்க தன்னிலை மறந்து நாற்காலியில் இருந்து எழுந்தான் குணசேகரன்.

'ஏண்டா, உன்னை படிடான்னு அனுப்பிவைச்சா, இப்படி வேண்டாத வேலையெல்லாம் பாத்துக்கிட்டு , படிக்காமத் திரியிறியா? ' என்று சொல்லிக்கொண்டே ஜோயலின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை அறைந்தான் குணசேகரன். அப்படி அடித்திருக்ககூடாதுதான். தனது பிள்ளைகளையே அடிப்பதற்கு உரிமை இல்லாத உலகில் ஊரா வீட்டுப்பிள்ளையை அப்படி அடித்திருக்கக்கூடாதுதான். குணசேகரனின் கை ஏற்கனவே கிராமத்தில் இளம்வயதில் உழைப்பாளியாக இருந்த கை.உரமான கை. கூடப்பழகும் நண்பர்கள் சாதாரணமாக அடித்தாலே,'டேய், தீப்பிடிச்சதுபோல வலிக்கிறது ' எனக் கோபிப்பது உண்டு. உண்மையிலேயே பயங்கர கோபத்தோடு ஜோயலை குணசேகரன் அறைந்தபோது மிகப்பலமாகவே விழுந்துவிட்டது. குணசேகரன் அறைந்த அறையில்,ஒரே அடியில் அப்படியே மூர்ச்சையாகி ஜோயல் கீழே விழுந்துவிட்டான். மீண்டும் மிதிக்கப்பாய்ந்த குணசேகரனை அந்தக் கல்லூரியின் பேராசிரியர்கள் தடுத்தார்கள். சோடாவைக் கொண்டுவரச்சொல்லி, முகத்தில் ஜோயலின் முகத்தில் அடித்தார்கள். கல்லூரிப்பேராசிரியர்கள் உண்மையிலேயே பயந்து போனார்கள். 'சார், இதுக்கு மேலே இவனை அடிக்க வேணாம் சார்.நாங்க பார்த்துக்கிறோம். தனியாக ஒரு கல்லூரிப்பேராசிரியரை இவனுக்கு மட்டும் அட்வைசராகப் போட்டு பார்த்துக்கொள்கிறோம். கல்லூரியில் படிக்கட்டும். நீங்கள் மட்டும் மாதம் மாதம் வந்து பார்த்துக்கொள்ளுங்கள். ' என்றார்கள். கீழே விழுந்து கிடந்த ஜோயல் இப்போது கொஞ்சம் மூர்ச்சை தெளிந்து உட்கார்ந்திருந்தான்.

'ஒழுங்கா கல்லூரியில் படி. இல்லையென்றால் உங்கள் அண்ணன் உன்னை இங்கேயே அடிச்சுக் கொண்ணு போட்டிருவார் போலிருக்கு , போ, போய் ஒழுங்காப் படி ' என்று சொன்ன கல்லூரி முதல்வரிடம் சரி எனத் தலையாட்டிவிட்டு வந்த ஜோயலோடு கல்லூரியை விட்டு வெளியே வந்தான் குணசேகரன்..

வெளியே வந்த குணசேகரனுக்கு மனது குறுகுறுத்தது. ஒரு நிமிடம் அப்படி உணர்ச்சி வசப்பட்டு 'ஜோயலை ' அடித்துவிட்டோமே, எத்தனை என்றாலும் கூடப்பிறந்த தம்பியையோ அல்லது பிள்ளைகளையோ கூட இப்படி அடிக்கமுடிவதில்லை, ஒரு நிமிடம் இப்படி காட்டுமிராண்டியாக மாறி இவனை அடித்துவிட்டோமே எனும் உறுத்தலோடு ஜோயலிடம்'சாரி,ஜோயல். ஓங்கி அடிச்சிட்டேன். நீ நல்லாப்படிச்சுக்கிட்டு இருப்ப என்னும் நம்பிக்கையில் நான் இருந்தேன். நீ சரியாப் படிக்கலைன்னு விவரமாக் கேட்டதும் தாங்க முடியலே, அப்படி அடிச்சிட்டேன் ,சாரி ' என்ற குணசேகரனிடம்

'போங்கண்ணே , நீங்க இப்படி அடிக்கலைன்னா, நான் கீழே மூர்ச்சையாகி விழுகலைன்னா, இந்த ஜென்மத்திற்கும் என்னைக் கல்லூரியிலே சேர்த்திருக்க மாட்டாங்க. அவ்வளவு தீவிரமா இருந்தாங்க. படிக்க மறுபடியும் அனுமதி கிடைச்சதக்கு நீங்க அடிச்சதுதான் காரணம் ' என்று கன்னத்தைத் தடவிக்கொண்டே ஜோயல் சொன்னபோது அழுவதா, சிரிப்பதா எனத்தெரியாமல் கல்லூரிப் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தான் குணசேகரன். 

  • எழுதியவர் : வா.நேரு
  • Nantri: Eluthu.com.