Friday, 28 December 2018

'நெருப்பினுள் துஞ்சலில்' ........ மு.சங்கையா


தோழர் நேரு,

              "நெருப்பினுள் துஞ்சல்  " சிறுகதை தொகுப்பை படித்து முடித்தபின் பல்வேறு சூழல்களில் வாழும் மனிதர்களை சந்தித்து உரையாடி வெளியில் வந்தது போல உணர்ந்தேன்.கதையில் வரும் அத்தனை மனிதர்களும் நமக்கு நெருக்கமானவர்களே.அன்றாட வாழ்வில் தினமும் சந்தித்தாலும் நம் நினைவுப் பாசறையில் அவர்கள் என்றும் நின்றதில்லை. எங்கேயோ பார்த்திருக்கிறோம் என்பதற்கு மேல் அவர்களை பற்றிய எந்த சிந்தனையும் வருவது இல்லை.

              நம் வாழ்வில் தினம் தினம் வந்து போனாலும் அவர்களது அன்றாட வாழ்க்கைக்குள் கண்ணுக்கு தெரியாத சோகங்கள் மண்ணுக்கு அடியில் உணவுக்காக போராடும் வேர்களை போல போராடிக்கொண்டிருப்பதை  போராடிக்கொண்டிருப்பதை யாரும் ஒரு கணம் கூட எண்ணிப்பார்ப்பதில்லை.அவர்களை கண்டும் காணாதது போல் எளிதாக கடந்து போய்விடுகின்ற நிலையில் சமூகம் கண்டு கொள்ளாத அந்த எளிய மனிதர்களை அருகில் சென்றும் தொலைவில் நின்றும் ,தேடிப்போய் பார்த்தும் அவர்களோடு உரையாடியும் அதனால் பெற்ற அனுபவங்களை கதைக்கான களமாக மாற்றி அவர்களை அந்த கதையின் பாத்திரங்களாக வலம் வர செய்திருப்பதும் 'நெருப்பினுள் துஞ்சல்'தொகுப்பிற்கான வெற்றியாகவே நான் கருதுகிறேன்.



              தினமும் சந்திக்கும் அதே மனிதர்களை உங்கள் கதையிலும் காணும்போது அடடே இவர்களை ஏற்கனவே சந்தித்திருக்கிறோமே என்கிற உணர்வே எழுகிறது.இந்தக் கதைகளில் வரும் எவரும் கற்பனை அல்ல எல்லாமே நிஜம்தான்.மு.வ.வின் எல்லா புதினங்களிலும் மு.வ. ஒரு பாத்திரமாக வந்து நல்லுரை வழங்குவதைப் போலவே நெருப்பினுள் துஞ்சலுக்குள்ளும் நல்லதை போதிக்கும் ஆசானாக நீங்கள் வருவதும் வாழ்க்கைக்கான கருத்துக்களையும் ஒரு சில கதைகளில் பகுத்தறிவுவாதங்களை தொட்டுப்பேசுவதும் சுவையாகவே இருக்கிறது.

              "அடி உதவுறது மாதிரி" கதையில் படிக்க மறுக்கும் பையனிடம் "  நீச்சல் கத்துக்கிறது,சைக்கிள் ஓட்டக்கத்துகிறது மாதிரிதான் படிக்கிறதும். விழுந்து விழுந்து எந்திரிச்சு,சைக்கிள் ஓட்டப்பழகினது மாதிரி முயற்சி பண்ணிக்கிட்டே இரு. கணக்கு வந்திரும் "என்று எளிமையாக புரிய வைப்பது அழகு.

               "முட்டுச்சுவரில் " படிப்பு என்பது ஒன்றும் வாழ்க்கையை விட பெரிதல்ல,ஒத்துப்போகலைன்னா தலை முடி போச்சுன்னும் போயிரணும்.ஒரு பாதையிலே போறோம்,முட்டு சுவர்.இதுக்கு மேலே போனா போக முடியாதுன்னு உணர்ந்து திரும்பி வேற பாதையிலே போறதில்லையா.அதுபோல தான் படிப்பும் என்று மண்ணின் வாசனையோடு கதையை நகர்த்துவது அருமை.

               "அடி உதவுற மாதிரி" யில் முயன்று படிக்க சொல்வதும் ,"முட்டுச்சுவரில் " ஒத்துப்போகவில்லை என்றால் விட்டுவிட அறிவுறுத்துவதும் முரணாக தோன்றினாலும் சூழல்கள்தான் முடிவைத் தீர்மானிக்கிறது என்கிற நோக்கில் இரண்டுமே உண்மையை உரத்து பேசுவதாகவே தோன்றுகிறது.இப்படி எல்லா கதைகளிலும் உங்கள் அனுபவங்கள் கருத்து செறிவோடு வெளிப்படுவதைக் காண முடிகிறது.

               "சீr சுமந்து அழிகிற சாதி சனமே " என்கிற தலைப்பே அவலத்தின் சுவையை சுமந்து வந்து நெஞ்சுக்குள் இறக்கி வைத்தது போல் இருந்தது. ...வெளிச்சத்தில் விழுந்து சாகும் விட்டில் பூச்சிகளாக இருக்கும் இந்த சனங்களுக்கு இந்த ஒரு கதை போதாது,ஒரு இயக்கமே தேவைப்படுகிறது.

              "ஒரு வளாகம்,ஒரு நாய், ஒரு பூனை "- இது ஒரு வழக்கமான கதை அல்ல. பகை முரண் கொண்ட நாயையும் பூனையையும் நெருக்கடிகள் நட்பாக்குவதும், நட்பாகி சேர்ந்து நடப்பதும்,அருகருகே படுத்து இருப்பதும் எப்படி என்கிற புதிரோடு கதை தொடங்கி பின் கணவன் மனைவி உறவுகளோடு முடிச்சு போட்டு அதை மெல்ல அவிழ்ப்பதில் ஒரு படைப்பாளனின் ரசனையைக் கண்டேன். முதல் shot ல் நாய்,பூனை. அடுத்த Shot ல் கணவன் மனைவி சண்டை ,இறுதியில் சிக்கல் மிகுந்த இல்லற உறவுக்கு தீர்வு என்று கதை முடியும்போது ஒரு குறும்படத்தின் சாயலைப் பார்த்தேன்....எல்லா உயிரினங்களின் சின்ன சின்ன அசைவுக்குள்ளும் ஒரு வாழ்க்கை புதைந்து கிடக்கிறது.கூர்ந்து கவனித்தால் அதுவே மனிதனுக்கு பாடம் சொல்லும் வேதமாகும் என்பதை சுருக்கமாக கூறியிருந்தால் இன்னும் சுவை கூடி இருக்கும்.

               ஜாதகத்தை நம்பாதே என்கிற பகுத்தறிவு கருத்தை "யார் யார் வாய்க்கேட்பினும் " கதையின் மூலம் சொல்ல முயன்றிருப்பது சரிதான். ஆனால் அது ஒரு துன்பியலில் முடிந்து அவலத்தை அதிகமாக்கி சொல்ல வந்த கருத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. ஒரு படைப்பாளியின் உரிமைக்குள் தலையிடுவது சரி அ;ல்லதான் ஆனாலும் செல்வி ஏன் சாக வேண்டும்? ...அவள் கருப்பையாவை மறுமணம் செய்துகொண்டு சிறப்பாக வாழ்ந்து காட்டி ராசி,நட்சத்திரம், ஜாதகத்தின் மீது சம்மட்டி அடி கொடுத்திருந்தால் பெரியாரும் மகிழ்ந்திருப்பாரே.ஜாதகம் பொய் என்று நிரூபிக்க ஒரு பெண்ணைத்தான் பலியிட வேண்டுமா... ? எதிர்மறை அணுகுமுறை நோக்கத்தை பல நேரங்களில் சிதைத்து விடுவதுண்டு.

               பொதுவாக கூற வேண்டுமென்றால் ஒவ்வொரு கதையும் சமூகத்தின் கீழடுக்கில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி பதிவு செய்திருக்கிறது. கூடுதலாகவும் இல்லை.குறைவாகவும் இல்லை.சரளமான நடை.வெகுளித்தனமான மண்ணின் மனம் வீசும் உரையாடல்கள் கதைக்கு நெருக்கமாக கொண்டு செல்ல உதவுகிறது. சிறுகதை நெடுங்கதையாக மாறுவதை குறைத்திருக்கலாம். கதைக் கரு சிறப்பு ஆனால் ஆழமின்றி மெதுவாக நகர்வதாகவே எனக்குத் தோன்றுகிறது.

             சமூக மாற்றத்தை விரும்பும் ஒரு படைப்பாளி உள்ளதை உள்ளபடி பதிவு செய்வதில் நிறைவு கொள்ள முடியாது.அது ஒருவகை என்றாலும் அதை எழுதிக்குவிக்க வேறு பலர் உண்டு.சமூகப் படைப்பாளிகள் எளிய மனிதர்கள் தங்களை நோக்கி வரும் சவால்களை எப்படி துணிவோடு எதிர் கொள்கின்றனர் வெற்றி பெறுகின்றனர் என்பதைக் கதைக்களமாக கொண்டு நம்பிக்கை விதைகளை தூவ வேண்டும்.
           "நெருப்பினுள் துஞ்சல் " கதை தொகுப்பிலுள்ள பல கதைகள் எதார்த்தத்தை பிரதிபலிப்பது உண்மைதான் என்றாலும் வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை குறைந்த அளவு கூட விதைக்கத் தவறிச்செல்கிறது.அதே வேளையில், ஐயோ பாவம் என்கிற பச்சாதாப உணர்வு மேலோங்கி வருவதும் உண்மை. பச்சாதபமும்,அனுதாபமும் இயலாமையில் எழும் புலம்பல்களும் கதைக்குள் ஊறுகாயாக இருப்பதில் தவறல்ல ஆனால் அதுவே உணவாக இருக்கக்கூடாது.சமூக சிக்கல்களை அது தீர்க்க உதவாது என்பது எனது கருத்து.

            எழுத்தாற்றலும் சமூக நீதிக்கோட்பாட்டின் மீதுள்ள பற்றும், சமூகத்தின் மீதான அக்கறையும் உங்களை மிகச்சிறந்த சமூக படைப்பாளியாக நிச்சயம் உருவாக்கும்.'நெருப்பினுள் துஞ்சலில்' அதற்கான அறிகுறிகளை என்னால் காணமுடிகிறது.

                                              வாழ்த்துகள்
                                                                                                                         அன்புடன்
மு.சங்கையா ,மதுரை  


தோழர் மு.சங்கையா , பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். தமிழக அரசின் விருதுபெற்ற " லண்டன் ஒருபழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலைநகரம் " மற்றும் "பன்னாட்டுச்சந்தையில் பாரதமாதா " என்னும் நூல்களின் ஆசிரியர். தொழிற்சங்கத்தில் தீவிரமாகப் பணியாற்றிய தோழர். 'நெருப்பினுள் துஞ்சல் 'நூலை முழுவதுமாகப் படித்து ,தனது மதிப்புரையைக் கொடுத்துள்ளார். தோழர் சங்கையா அவர்களுக்கு மிக்க நன்றி.
அன்புடன் 
வா.நேரு


                                                                                                                                        

Thursday, 27 December 2018

மனு நீதியும் கருஞ்சட்டைப்பெண்களும்........

மனு நீதியும் கருஞ்சட்டைப்பெண்களும்.....

அண்மையில் படித்த புத்தகம் : கருஞ்சட்டைப்பெண்கள்
நூல் ஆசிரியர்               : ஓவியா
வெளியீடு                   : கருஞ்சட்டைப் பதிப்பகம்.

                                   கட்டுரை (3)
ஓவியா அவர்கள் தனது நூலில் தொல்காப்பியம் மற்றும் மனுநீதி என்னும் நூல்களை எடுத்துக்கொண்டு ,அந்த நூல்களைப் பெண்ணியல் நோக்கில் நோக்கி எழுதுகின்றார்.தொல்காப்பியம் எந்தக் காலத்தில் தோன்றியிருக்கின்றது என்பதனை "கற்பு, பரத்தமையும் இல்லாத சமூகத்திலிருந்து கற்பும், பரத்தமையும் தோற்றுவிக்கப்படுகின்றன.அங்கு ஒரு புதிய சமூகம் உருவாகிறது. அப்படி ஒரு புதிய சமூகத்தினுடைய குரலாக தொல்காப்பியம் பதிவாகிறது....அது சமூகத்திடம் வாழ்க்கை நெறிகளை முன்வைக்கிறது " என்று சொல்லும் நூலாசிரியர், அந்த நூல் சொல்லும் வாழ்க்கை நெறிகள் அனைத்தும் ஆணாதிக்க நோக்கிலானவை என்று ஆதாரங்கள் மூலம் குறிப்பிடுகின்றார். கற்பு நல்லது என்று தொல்காப்பியம் கூறுகின்றது அதே நேரத்தில் பரத்தமை தவறு என்றும் சொல்லவில்லை என்பதனைச்சொல்கின்றார். தொல்காப்பியம் நமக்கு கிடைத்த தொன்மையான நூல்தான், இலக்கண நூல்தான், பெருமை வாய்ந்ததுதான். ஆனால் அதுவும் ஒரு ஆணால் எழுதப்பட்டதுதானே . பெண் உரிமைகளுக்கு எதிரான நூற்பாக்களை, அவைகளின் கருத்துக்களை விரிவாக எழுதியிருக்கின்றார். பரத்தமை தப்பில்லை, ஆண் பரத்தையிடம் போகலாம், ஆனால் மாதவிலக்கான நாட்களுக்கு பிந்தைய  12 நாட்களும் பரத்தையிடம் போகாதே, மனைவியோடு இரு என்று சொல்லும் நூற்பாவை (செய்யுள் 187,அகத்திணையியல்,பொருளதிகாரம் )எடுத்துக்காட்டி ,தொல்காப்பியத்தின் நோக்கம் என்பதுவும் பிள்ளை பெறும் எந்திரமாக ,மனைவி இருக்க வேண்டும் என்பதுதானே என்னும் நியாயமான கேள்வியை முன்வைக்கின்றார்.

                                    மிகப்பெரிய  கலாச்சாரமாக சொல்லப்படும் தமிழனுடைய கலாச்சாரம் என்பது நிச்சயமாக பெண்ணுக்குச் சாதகமான கலாச்சாரம் இல்லை என்பதனை அடித்துச்சொல்லும் நூலாசிரியர் அதற்கு ஆதாரமாக தொல்காப்பிய நூற்பாக்களை எடுத்துக்கொண்டே விளக்கியிருக்கின்றார்.மனுதர்மத்தோடு ஒப்பிடும்போது தொல்காப்பியம் நாம் ஏற்றுக்கொள்ளத்தக்க நூலாக இருக்கிறது என்பதனையும்  குறிப்பிடுகின்றார். 

மனுநீதி என்பது எப்படிப்பட்ட அநீதியான நூல் என்பது திராவிடர் கழகத்தினருக்கு தண்ணீர் பட்ட பாடு. அசல் மனுதருமம் என்னும் புத்தகம் திராவிடர் கழக மாநாடுகளில் ஆயிரக்கணக்கில் விற்றிருக்கிறது. மனுநீதி ஒரு மறுபார்வை என்னும் பேராசிரியர் ப.காளிமுத்து அவர்களின் புத்தகம் மிகப்பெரிய கருத்து கருவூலம். திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் உரைகளில் மிகப்பெரிய அளவிற்கு இந்த மனுநீதியைப் பற்றிய செய்திகள் இடம் பெற்றன,பெறுகின்றன. திராவிடர் கழகத்தின் செயலவைத்தலைவர் அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் 'பெண் ' என்னும் அற்புதமான புத்தகத்தில் மனைவி,திருமணம்,மக்கட்பேறு,கருத்தடை,கைம்மையார்,விபச்சாரம்,கற்பு,மணவிலக்கு போன்ற உட்தலைப்புகளில் மனுதருமம் எப்படிப்பட்ட அதர்மங்களைச்செய்திருக்கிறது என்ற பட்டியல்களை மிகச்சுவையாகத்தருவார்.தந்தை பெரியாரும் அவரது தத்துவமும் எவ்வாறெல்லாம் பெண் விடுதலைக்கு அடிப்படையாக இருக்கிறது என்ற விவரங்களைத் தந்திருக்கின்றார். எனவே விரிவாக தெரிந்திருக்கக்கூடிய நமக்கு மனுநீதியைப் பற்றி மிகச்சுருக்கமாகக் கொடுத்திருக்கும் பகுதியாகத்தான் இந்தப் பகுதி இருக்கிறது. ஆனால் வித்தியாசமாக இருக்கிறது.

மனுநீதி மனிதர்கள் எப்படிப் பிறந்தார்கள் என்று சொல்வதைப் பார்க்கும்போது . " முகத்திலிருந்து பிறப்பானோ மூடனே,தோளிலிருந்து பிறப்பானோ தொழும்பனே ...." என்னும் புரட்சிக்கவிஞரின் கவிதை நமக்கு நினைவில் வருகின்றது.  பிரம்மன் முகத்திலிருந்து பிறந்தவன் பிராமணன் அப்புறம் கடவுளின் தோளில்,இடையில் காலில் பிறந்ததாகக் கூறும் மனுநீதி பெண்கள் எப்படிப் பிறந்தார்கள் என்பதனைச்சொல்லவில்லை என்பதனை ஓவியா  சொல்கின்றார்." பெண் எப்படிப்படைக்கப்பட்டாள் என்பதற்கு மனுதர்மத்தில் பதிலே  இல்லை.பெண்ணை ஒரு பொருட்டாகவே மனுதர்மம் எடுத்துக்கொள்ளவில்லை. இந்து மதத்தில் பெண்ணுக்கு இருத்தலே கிடையாது. தொல்காப்பியம் சமூகத்தின் அனைத்துப்பிரிவினரையும் மரியாதையோடு பேசியது.ஆனால் மனுதர்மம் அப்படியல்ல, உலகத்திலேயே ஒரு மோசமான நூல் மனுதர்மம். இதை எப்படி ஒரு நீதி நூலாக ஏற்றுக்கொள்வது என்கின்ற கேள்வியைத் தோற்றுவிக்கன்ற நூலாக இருக்கிறது " எனக்குறிப்பிடுகின்றார்,

மனுதர்மம் அங்கீகரிக்ககூடிய திருமணங்களைப் பார்க்கலாம் என்று கூறும் நூலாசிரியர் " இராட்சத திருமணம் என்கின்ற திருமணத்தைப் பற்றி இந்நூல் சொல்கிறது...இராட்சச திருமணத்தின் சரியான மொழிபெயர்ப்பைப் பார்த்தால் அது பாலியல் வன்முறையைத் தவிர வேறொன்றுமில்லை. மனுதர்மத்தை ஆழமாகப் பார்த்தோமேயானால் பெண் மீதான வன்முறையை முழுக்க முழுக்க மனுதர்மம் ஆதரிக்கிறது என்பதைத் தெளிவாகச்சொல்லலாம்  " என்று சொல்கின்றார்," இளம் வயதில் தந்தை, பருவத்தில் கணவன், முதுமையில் மகன். இந்த மூன்று நிலைகளிலும் பெண் காவலில்தான் இருக்கிறாள்.அதுமட்டுமன்றி மனுதர்மம் ஆண்களிடம்தான் பேசுகிறது. இந்த நூலின் வாசிப்பாளன் ஆண்தான். ஒரு வரி கூட பெண்ணை நோக்கியது கிடையாது " என்று குறிப்பிடுகின்றார். 

பெண்ணின், தமிழ்ச்சூழலின் உளவியல் பற்றிப் பேசுகின்றார் நூல் ஆசிரியர். அந்த உளவியலை உடைத்தது பெரியார் இயக்கம். உடைத்தவர்கள் கருஞ்சட்டைப் பெண்கள் என்பதனை நிறுவியிருக்கின்றார். "..உண்மையான அர்த்தம் என்னவென்று பார்த்தால் விடுதலை கேட்கும் பெண்ணை இந்தச்சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது,அங்கீகரிக்காது என்பதாகும். இப்படித்தான் தமிழ்ச்சமூக உளவியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த உளவியல் மூலங்களில் கை வைத்து கேள்வி கேட்டு ஒரு பெரிய கலாச்சார புரட்சிக்கு வித்திட்ட இயக்கம்தான் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் " என்று சொல்கின்றார். விதிகளை எழுதியவர்களே பிள்ளை பெறவேண்டும் என்பதற்காக எப்படி விதிகளைத் தளர்த்தினார்கள் என்பதையும் மனுதர்மத்தில் உள்ள விசயங்கள் இன்றைக்கும் கூட உளவியலாக இருக்கும் தன்மை பற்றி எடுத்துக்காட்டுகளோடு கொடுக்கின்றார்.  
      
 சிலரிடம் பேசும்போது சொல்வார்கள், இதெல்லாம் அந்தக் காலத்தில் இருந்தது ,இப்ப இருக்கிறதா என்பார்கள். திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்றைக்கு இருக்கும் சட்டங்கள் எப்படி மனு நீதி அடிப்படையில் இருக்கிறது என்பதற்கான பட்டியலை ஒரு நூலாக கொடுத்திருக்கின்றார். நாம் இராமயாணத்தைப் பற்றிப்பேசும்போது, ஏங்க இதைப்பத்தி இப்ப பேசுறீங்க என்று கேட்ட பொதுவுடமை இயக்கத்தோழர்கள் கூட சேது சமுத்திரத்திட்டம், ராமர் பாலம் என்னும் பெயரால் முடக்கப்பட்டபோது, நம்பிக்கை என்னும் பெயரில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைக் கொடுக்கும் சேது சமுத்திரத்திட்டம் நிறுத்தப்பட்டபோது ,இன்னும் அதிகமாக இராமயாணப்பாத்திரங்களை மக்கள் மத்தியிலே பேசியிருக்க வேண்டும்  என்று ஒத்துக்கொண்டார்கள். அதனைப் போல சாதி ஒழியவேண்டும்,சாதி மறுப்புத்திருமணங்கள் நிறைய நடைபெற வேண்டும், பெண்கள் தங்கள் துணையைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு இயல்பாக சமூக அமைப்பில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், அதற்காக உழைப்பவர்கள் மனு நீதி என்னும் கொடுமையான சட்ட நூலைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும், சாதி அமைப்பில் மேல் அடுக்கில் இருப்பவன் கீழ் அடுக்கில் இருக்கும் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளலாம், ஆனால் சாதி அமைப்பில் கீழ் அடுக்கில் இருப்பவன் மேல் அடுக்கில் இருக்கும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று எழுதி வைத்துள்ள சட்டம் மனு நீதி. " உடுமலைப் பேட்டை சங்கர் கொலைக்கும், தருமபுரி இளவரசன் கொலைக்கும் அடிப்படைக் காரணம் மனுநீதி " என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நூலாசிரியர் சொல்வது நூற்றுக்கு நூறு சரி.

பெண்களுக்கு எதிராக நடக்கும், நடந்த அநீதிகளை பட்டியலிடும் நூலாசிரியர் " மதத்தின் பெயரால்,கடவுளின் பெயரால்,கோயிலின் பெயரால்தானே இந்த அநியாயங்கள் எல்லாம் பெண்ணின் மீது சுமத்தப்பட்டிருக்கிறது .இந்த மதம்தான்...இந்தக் கோயில்தான்...இந்தக் கடவுள்தான் பெண்ணின் எதிரி என்று திராவிடர் இயக்கத்தைத் தவிர வேறெந்த இயக்கம் சொல்லியது ? 'பெரியாரைத் தவிர வேறு எந்தத் தலைவர் இதனைக் கேட்டார் ? என்று நறுக்கென மனதில் படும் வண்ணம் கேட்கின்றார்,..

(தொடரும்)

      

Tuesday, 25 December 2018

சாதியும் கருஞ்சட்டைப்பெண்களும்.......

சாதியும் கருஞ்சட்டைப்பெண்களும்.......

அணமையில் படித்த புத்தகம் : கருஞ்சட்டைப்பெண்கள்
நூல் ஆசிரியர்               :ஓவியா
                                    கட்டுரை (2)
மொத்தம் 16 அத்தியாயங்கள் உள்ள இந்தப் புத்தகத்தில் முதல் அத்தியாயத்தின் தலைப்பு "பின்னோக்கி ஒரு முன்னோட்டம் ". களத்தில் நின்ற கருஞ்சட்டைப்பெண்களைப் பற்றி அறிவதற்கு முன் பெண்களின் நிலைமை எப்படி இருந்தது என்பதனை ஒரு வரைபடம் போலவும் ஓவியம் போலவும் எடுத்துக்காட்டுவது இந்தத் தலைப்பின் நோக்கமாக இருக்கிறது. பெண்களின் தலைமையில் இருந்த சமூகம் எப்படி ஆண்களின் தலைமைக்கு மாறியது ? பெண் ஏன் ஆணுக்கு இரண்டாம் தரமான குடிமகளாக உலகம் முழுவதும்  பார்க்கப்படுகிறாள் ? எனும் கேள்வியை எழுப்பி விடை தேடுவதற்காக தோழர் ஏங்கல்சு எழுதிய "குடும்பம்,தனிச்சொத்து,அரசு ஆகியவற்றின் தோற்றம் " எனும் நூலின் கருத்தினை விளக்குகின்றார்.ஏங்கல்சுவின் கருத்துக்களில் மாறுபடும் நூலாசிரியர் அதற்கு ஆதாரமாக 'டாவின்சி கோட் ' திரைப்படத்தின் மூலம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே தலைமைக்காக ஒரு போர் நடந்திருக்க வேண்டும் எனும் ஊகத்தினை சொல்லி அதற்கான காரணங்களையும் குறிப்பிடுகின்றார். " ஆண் தலைமையை விரும்புகிறவர்களாக வரலாற்றில் பெண்கள் " எப்படி மாற்றப்பட்டார்கள் என்பதனையும் விளக்குகின்றார். கருத்தியல் ரீதியாக உணர்ந்து கொள்ளக்கூடிய வகையில் அடுத்தடுத்து வரலாறு எப்படி நிகழ்ந்திருக்கக்கூடும் என்பதனை விளக்குகின்றார்,என்னென்ன நிகழ்ந்திருக்கக் கூடும் என்பதனை நாமும் கூட ஊகிக்க முடியும் வகையில் விளக்கம் அளித்திருக்கின்றார் நூலாசிரியர் ஓவியா.

தலைமை ஆணிடம் மாறிய நிலையில் பெண் வாரிசை உருவாக்குபளாக, முதல் அடிமை இனமாக  மாற்றப்பட்ட நிகழ்வைக் குறிப்பிட்டு உலகில் உள்ள பெண்களுக்கு எல்லாம் ஒரு ஆணிற்கு வாரிசாக  பிள்ளை பெற்றுத்தரவேண்டும் என்பது பிரச்சனை ஆனால் இந்தியாவில் ? " இங்கு ஒரு ஆணிற்கு பிள்ளை பெற்றுத்தருவது மட்டும் அவள் வேலை அல்ல.அதையும் தாண்டி ஒரே சாதிக்குள் பிள்ளை பெற்றுத்தரவேண்டும்.இது உலகில் மற்ற பெண்களுக்கு இல்லாத பிரச்சனை " என்று குறிப்பிடும் நூல் ஆசிரியர் இங்கு சாதி மட்டும் பிரச்சனை அல்ல,குடும்பம் என்னும் அமைப்பும் பிரச்சனை என்பதனை விளக்கிச்செல்கின்றார்.சாதி ஒழிய வேண்டும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்பவர்கள் கூட குடும்பம் என்னும் அமைப்பு ஒழிய வேண்டும் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வதில்லை.குடும்பம் இல்லையென்றால் சமூகம் கெட்டுவிடாதா? ஒழுங்கு குலைந்து விடாதா? என்னும் கேள்வி எழுப்பப்படுகின்றது.அதனால்தானோ என்னவோ நூல் ஆசிரியர் ஓவியா 'குடும்பம், தனிச்சொத்து ' என்னும் ஏங்கல்சின் கருத்தில் இருந்து புத்தகத்தினை  இருந்து ஆரம்பித்திருக்கின்றார் போலும். குடும்பம் வேண்டுமா ? வேண்டாமா? என்பது அடுத்த நிலை, ஆனால் இப்போது இருக்கும் குடும்ப அமைப்பு முறை என்பது பெண்களை ஒடுக்குவதற்கான கருவியாகத்தான் பெரும்பாலும் பயன்படுகின்றது என்பது கண்கூடு. 

சாதியென்னும் இழிவு நம்மைப் பாடாய்ப் படுத்திக்கொண்டிருக்கிறது. "சாதி என்னும் தாழ்ந்தபடி/நமக்கெல்லாம் தள்ளுபடி/ சேதி தெரிந்துபடி இல்லையேல்/ தீமை வந்துடுமே மறுபடி " என்றார் புரட்சிக்கவிஞர். எப்படியாவது வர்ணத்தின் அடிப்படையிலான சாதி அமைப்பினைக் கட்டிக்காக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் வரிந்துகட்டி நிற்கின்றார்கள். " ஆயிரம் உண்டிங்கு சாதி " எனக் குருமூர்த்தி சாதி அமைப்பினால் தொழில் வளர்கிறது என்று பம்மாத்துக்காட்டுகிறார். ஆனால் குடும்பம் குடும்பமாக செய்துகொண்டிருந்த சிறுதொழில்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக அழிந்து போவதற்கான வழியை செல்லாத நோட்டு அறிவிப்பு மூலமும் ஜி.எஸ்.டி. என்னும் அறிவிப்பின் மூலமும் செய்துவிட்டு இப்போதும் வெட்கமில்லாமல் பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.ஆனால் அவர்களுக்கு நோக்கம் பார்ப்பனிய மேலாண்மையை நிலை நிறுத்துவது. அதற்கு பார்ப்பனர்களுக்கு சாதி வேண்டும், சாதி அமைப்பு வேண்டும். ஆனால் சாதியால் ஒடுக்கப்படுபவர்களுக்கு,துன்பப்படுபவர்களுக்கு சாதி எப்படியாவது ஒழிய வேண்டும்.சாதி ஒழியவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு பளிச்சென்று புரியும் வண்ணம் எப்போது சாதி ஒழியும் ? என்பதற்கு தனது கருத்தை ஓவியா பகிர்ந்திருக்கின்றார் பக்கம் -5-ல். " அம்மா, அப்பாவிற்குத் தன் பெண்ணையோ பையனையோ யாருக்கு கட்டிக்கொடுக்கவேண்டும் என்னும் நிலைக்குப் பெயர்தான் சாதி. நாம் என்றைக்கு சாதியை இப்படிப் புரிந்துகொள்கிறோமோ அப்போதுதான் சாதியை ஒழிக்க முடியும்". இந்தப் புள்ளியில் இருந்து ஆரம்பித்ததுதான் சுயமரியாதை இயக்கம். கருப்புச்சட்டை பெண்கள் அப்படித்தான் உருவாகின்றார்கள். தங்களது துணையை அப்பா,அம்மா சொல்லும் தேர்வினைத் தவிர்த்து அல்லது எதிர்த்து தேர்ந்தெடுக்கின்றார்கள்.இதனை விரிவாக விளக்க இயலும். 

பெண்ணடிமைத்தனத்திற்கும் சாதி அமைப்பிற்கும் உள்ள உறவை நுட்பமாக புரிந்துகொள்வதன்மூலம் மட்டுமே நாம் அடுத்த கட்டத்திற்கு நகர இயலும்.ஈழ எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் 'தமிழனெக்கென்று ஒரு நாடில்லை " என்னும் புத்தகத்தில் தனது பேட்டியில் இன்றைய கனடா நாட்டில் வாழும் தமிழ்ப்பிள்ளைகளுக்கு, இளைஞர்களுக்கு சாதி என்றால் என்னவென்று தெரியாது என்று சொல்லியிருப்பார். புலம் பெயர்ந்து வாழும் நிலையில் இளைஞர்கள் பெரும்பாலும் தங்களது துணையைத் தானே தேர்ந்தெடுக்கின்றார்கள். ஏனெனில் மேலை நாட்டில் அதுதான் வழக்கமாக இருக்கின்றது. நூல் ஆசிரியர் சொல்வது போல மேலை நாட்டில் பெண்கள், ஆண்கள் நான் யாரோடு வாழ்வது என்பதை எப்படி என் பெற்றோர் தேர்ந்தெடுக்க முடியும் ? அவர்களுக்கு எப்படித் தெரியும் ? என்று கேட்கிறார்கள்,வியப்படைகின்றார்கள். ஆனால் இந்தியாவில் இதற்கு நேர் எதிராக உல்டாவாக இருக்கிறது. எவ்வளவு பெரிய படிப்பு படித்திருந்தாலும், எவ்வளவு பெரிய வேலையில் இருந்தாலும் தனது பெண்ணுக்கு இணையைத் தேர்ந்தெடுக்கத் தெரியாது, நாம்தான் தேர்ந்தெடுத்து தரவேண்டும் என்ற எண்ணம் பெற்றோருக்கு இருக்கிறது. இந்த எண்ணம் தப்பு, மாற வேண்டும் என்பதற்கான உழைப்புதான் கருப்புச்சட்டை பெண்களின் உழைப்பு. அதுதான் சுயமரியாதை இயக்கப்பெண்களின் துவக்கப்புள்ளி எனச்சொல்கின்றார் நூல் ஆசிரியர்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் "சாதியை ஒழிக்கும் வழி " புத்தகத்தையும் அதனை முதன்முதலில் தமிழில் மொழி பெயர்த்த தந்தை பெரியார் பற்றியும் , மேயோவின் புத்தகம் பற்றியும் எழுதுகின்றார். இவர்களின் நினைப்பு எப்போதும் சிற்றின்பம் பற்றித்தான் என்று அந்த அம்மையார் எழுதியது பற்றியும், காந்தியார் கொடுத்த மறுப்பு பற்றியும் ஆனால் மேயோ அம்மையார் கொடுத்த புள்ளி விவரங்கள், குழந்தை மணம் பற்றிய செய்திகளை எல்லாம் கொடுக்கின்றார். சுயமரியாதை இயக்கம் தோன்றிய காலத்தில் இருந்த குழந்தை மணம், விதவைகள் நிலமை, தேவதாசி முறை போன்றவற்றின் கொடுமையான தன்மைகளை குறிப்பிட்டு இப்படிப்பட்ட நிலைமையில் தோன்றியதுதான் ,இவற்றைக் களைவதற்காக தோன்றியதுதான் சுயமரியாதை இயக்கம் என்று நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்."இதற்கான ஒரு இயக்கமாக ,இந்தச்சமூகக் கொடுமைகளைக் களைவதற்கென்றே தொடங்கப்பட்ட இயக்கம் என்பது பெரியார் தொடங்குவதற்கு முன்னால், சுயமரியாதை இயக்கத்திற்கு முன்னால் வேறு ஒரு இயக்கம் கிடையாது " பக்கம்(11) என்பதனை பதிவு செய்கின்றார் நூலாசிரியர் ஓவியா.இதோடு கிறித்துவ மிசினிரிகள் வந்ததால் ஏற்பட்ட மாற்றத்தையும்,காந்தியார் தனது விடுதலைப் போருக்கு பெண்களை அழைத்ததையும் குறீப்பிட்டு சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டு அடுத்த அத்தியாயமான தொல்காப்பியமும் மனுதர்மமும் என்னும் அதிகாரத்திற்கு முன்னுரையாக செய்திகளைக் கொடுக்கின்றார்.இந்த தலைப்பைப் புரிந்துகொள்ள தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள்? , அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 'சாதியை ஒழிக்கும் வழி',கோவை அய்யாமுத்து அவர்களின் "மேயோ கூற்று மெய்யோ? பொய்யோ ? ", தோழர் ஏங்கல்சுவின் " குடும்பம்,தனிச்சொத்து,அரசு ஆகியவற்றின் தோற்றம்' போன்ற நூல்களை மேற்கோள்களாகக் காட்டியிருக்கின்றார். தோழர் ஞானையாவின் "சாதியை ஒழிக்க இயலுமா ? " ,பெருமாள் முருகன் தொகுத்த " நானும் சாதியும் " என்னும் புத்தகமும் இந்தத் தலைப்பிற்கு உதவும் என்பது என் கருத்து, இந்தப் புத்தகங்களை வாசித்துவிட்டு , இந்தத் தலைப்பை வாசிப்பது இன்னும் கூடுதல் வெளிச்சத்தை நமக்குக் காட்டும் வகையில் அமையும். 

                                                                                    ....தொடரும் .... 

  








Monday, 17 December 2018

அண்மையில் படித்த புத்தகம் : கருஞ்சட்டைப் பெண்கள்....ஓவியா

அண்மையில் படித்த புத்தகம் : கருஞ்சட்டைப் பெண்கள்
நூல் ஆசிரியர்               : ஓவியா
வெளியீடு                   : கருஞ்சட்டைப் பதிப்பகம்,சென்னை-87. தொலைபேசி : 044-42047162
முதல் பதிப்பு                :  நவம்பர் 2018 மொத்த பக்கங்கள் 155, விலை ரூ 130

கருஞ்சட்டைப் படை என்பது வெறும் மனிதர்களால் கூடிய கூட்டமல்ல,சுயமரியாதை உணர்வுகளால் கூடிய கூட்டம். என்ன கொடுத்தும் ஏன் தங்கள் உயிரைக் கொடுத்தும் தங்கள் இலட்சியத்தை அடைவோம் என்று கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக களத்தில் நிற்கும் கூட்டம்.அந்தக் கருஞ்சட்டைப் படையில் இருந்த பெண் தலைவர்கள் பற்றிய ஒரு அறிமுகமாக எழுத்தாளர் ஓவியா அவர்கள் கருஞ்சட்டைப் பெண்கள் என்னும் புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கின்றார்கள். அண்மையில் கையில் கிடைத்த புத்தகத்தை எடுத்தேன், படித்தேன், முடித்தேன் என்று மற்ற புத்தகங்களைப் போலப் படித்து முடித்து வைக்க முடியவில்லை. நரம்புகளால் ஆனது உடல் என்பதுபோல, உணர்வுகளால் ஆன எழுத்துக்களால் ஆன புத்தகம் இந்தப் புத்தகம் .அதனால்தான் அய்யா  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தனது முன்னுரையில் "பாரம்பாரியமான இயக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆதலின் அந்த உணர்வு இந்நூலின் ஒவ்வொரு எழுத்திலும் சுடர்விடுவதைக் காணமுடிகிறது " என்று குறிப்பிடுகின்றார். ஒவ்வொரு பக்கத்தையும் வாசிக்கும்போதும் இந்த உணர்வு நம்மைத் தொற்றிக்கொள்கிறது, நூல் முழுக்கத் தொடர்கின்றது.

இந்த நூலினை தனது பாட்டி காந்தியாம்மாவுக்கு ...எனச் சுட்டியுள்ளார்." பெரியார் பெருந்தொண்டர் காந்தியம்மாள்.தனது வாழ்வின் இறுதிக்கட்டத்திலும் பெரியார் கட்சிக்காரி என்பதை மட்டும் தலை நிமிர்ந்து சொல்லும் சுயமரியாதை இயக்க வீராங்கனை.மதுரையில் கருப்புச்சட்டை மாநாடு நடந்த பந்தலுக்குத் தீ வைக்கப்பட்டபோது நடந்த கலவரத்தில் கலவரக்காரர்களுடன் தீரத்துடன் போராடித் தனது கணவரையும் குழந்தையையும் காப்பாற்றி மீட்டவர். பெரியாரின் அடிச்சுவட்டில் என்னை வளர்த்து ஆளாக்கியவர். எனது அம்மாவாகிய எனது பாட்டி காந்தியம்மாவுக்கு இந்த நூல்... " எனக்குறிப்பிட்டிருக்கின்றார். ஒரு கருஞ்சட்டை பெண்ணால் வளர்த்து செதுக்கப்பட்ட  ஒரு கருஞ்சட்டைப்பெண் எழுதிய புத்தகம் இது. 



பதிப்புரையை 'பெல்' ராஜன் அளித்திருக்கின்றார். முதல்  அணிந்துரையை  திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 'பெண்ணுரிமைக் களத்தில் பதித்த சுவடுகள் என்னும் தலைப்பில் அளித்திருக்கின்றார்.."பயனுள்ள இந்நூலைக் கொண்டுவருவதற்கு அரிய முயற்சிகளை மேற்கொண்ட தோழர் ஓவியாவிற்குப் பாராட்டுகள், வாழ்த்துகள் " என விரிவான அணிந்துரையின் முடிவாக அய்யா ஆசிரியர் அளித்திருக்கின்றார்.

'தாண்ட வேண்டிய தடைக்கற்கள் ' என்னும் தலைப்பில் அணிந்துரையை தி.மு.க.வின் மகளிரணிச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் அளித்திருக்கின்றார். "சுயமரியாதைப் பாதையில் நமது கருஞ்சட்டைப்பெண்கள் துவக்கிய பயணத்தை தொடர்ந்துவரும் நாம்,கடந்து செல்ல வேண்டிய தூரமும் தாண்ட வேண்டிய தடைக்கற்களும் ஏராளமாக இருக்கலாம். ஆனால் மனத்துணிவுடனும் கொள்கைப் பற்றுடனும் நாம் அடைய வேண்டிய இலக்குகளை நோக்கி அயராமல் பயணிப்பதே நாம் அவர்களுக்குச்செலுத்தும் நன்றியாக இருக்க முடியும்.அவர்களது வாழ்க்கைப்பயணத்தில் அவர்களோடு பயணிப்பது போன்ற ஓர் உணர்வை, மன நிறைவை ஓவியா அவர்களது இந்தப்படைப்பு நமக்குத் தருகிறது..." என்று குறிப்பிடுகின்றார். உண்மை,வாசிப்பவர்கள் இந்த உணர்வை உணரமுடியும். 

திராவிடர் கழகத்தின் பிரச்சாரச்செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்களும் 'தாண்ட வேண்டிய தடைக்கற்கள் ' என்னும் தலைப்பிலேயே அணிந்துரை அளித்திருக்கின்றார். "பல ஆய்வாளர்கள் செய்ய வேண்டிய பணிகளின்மீது வெளிச்சம் பாய்ச்சும் கலங்கரை விளக்கமாக தோழர் ஓவியா அவர்களின் 'கருஞ்சட்டை பெண்கள் 'எனும் இந்த நூல் வெளியாகிறது " எனக்குறிப்பிட்டு "தோழர் ஓவியா அவர்களின் கருத்துக்கள் குழப்பமில்லாத தெளிவான சொற்களால் செதுக்கப்படும் வாக்குமூலங்கள் ...." என மிகச்செறிவான அணிந்துரையை அளித்திருக்கின்றார்.



"பெரியார் நூலகர் வாசகர் வட்டம் எனக்களித்த இந்த நல்வாய்ப்பு இந்தத் தொடர் மலரக்காரணமாக அமைந்தது " எனக் குறிப்பிட்டு சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற தொடர் சொற்பொழிவில் தான் நிகழ்த்திய சொற்பொழிவுகளே இந்த நூல் என என்னுரையில் இந்த நூலின் ஆசிரியர் ஓவியா குறிப்பிடுகின்றார். பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் மயிலை கிருட்டிணன் அவர்களுக்கும் செயலாளர் சத்ய நாராயண சிங் அவர்களுக்கும் பொருளாளர் மனோகரன் அவர்களுக்கும் தனது நன்றியை முதலில் குறிப்பிடுகின்றார். உடனடியாக இந்த நூல் வரக்காரணம் திராவிடர் இயக்கத்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் அய்யா சுப.வீரபாண்டியன் அவர்கள் என்பதையும் குறிப்பிட்டு சொல்கின்றார். " அன்னை மணியம்மையாரை சந்தித்து அவருடன் பேசுகிற வாய்ப்பெல்லாம் எனக்குக் கிடைத்திருக்கிறது எனபதைப் பெருமையுடனும் பணிவுடனும் நினைத்துப்பார்க்கிறேன்.அன்பானவர்.எளிமையானவர்.தனது வெளிப்புறத்தோற்றத்திற்கு எந்த முக்கியத்துவமும் அளிக்காதவர்..தலை கூட வாரியதில்லை.குளித்துவிட்டு முடியை உதறி முடித்துக்கொள்வார் என நினைக்கிறேன். ஆனால் எப்போதும் அமைதி தவழும் முகம். சிரிக்கும்போது மிக அழகாயிருப்பார். வெள்ளை ஜாக்கெட்டும் கருப்பு சேலையும் தவிர வேறு உடையில் நான் பார்த்ததேயில்லை....இயக்கம் என்பது குடும்பங்களின் இணைப்பாக இன்றும் தொடர்கிறது. அடையாறு அரசு மகளிர் பாலிடெக்னிக்கில் நான் சேர்ந்து படிக்க இடம் கிடைக்க உதவியதும்,விடுதியில் தங்கிய எனக்கு லோக்கல் கார்டியனாக ஆசிரியர் அவர்களும் அவரது வாழ்க்கைத்துணைவியார் மோகனா அம்மாவும் இருந்ததையும் இந்த இடத்தில் நன்றியுடன் குறிப்பிடுவதில் பெருமைப்படுகிறேன்.... " எனக்குறிப்பிட்டு "கருஞ்சட்டைப்பெண்கள் தொடர்வார்கள் ! வெல்வார்கள் ' என என்னுரையை முடித்திருக்கின்றார்.

கருஞ்சட்டைப்பெண்கள் என்னும் இந்தப்புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்த வேளையில் அண்மையில் மறைந்த கருஞ்சட்டைப்பெண்  திராவிடர் கழகத்தின் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி அவர்கள் நினைவில் வந்தார்கள். மருத்துவம் படித்து,அரசு மருத்துவமனையில் பணியாற்றி, பின்பு இயக்குநர் என நிலையில் இருந்தபொழுது விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு திராவிடர் கழகத்தின் இயக்க வேலைக்கு வந்தார்கள். பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் மதுரை கோரிப்பாளையத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் டாக்டர் பிறை நுதல்செல்வி அவர்கள்தான் சிறப்பு பேச்சாளர். அவர் அடுக்கு மொழி பேச்சாளர் இல்லை. ஆனால் ஆழமாக திராவிடர் இயக்கத்தை, தந்தை பெரியாரின் தத்துவத்தை, அய்யா ஆசிரியர் அவர்களின் தலைமையை புரிந்துகொண்டவர்கள். எந்தவிதமான தடங்கலும் இல்லாமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக உரையாற்றினார்கள். நன்றாக தயாரிக்கப்பட்ட உரை. அழுத்தம் திருத்தமாக எடுத்துக்காட்டுகளோடு உரையாற்றியதைப் பார்த்து ,கேட்டு வியந்து கூட்டம் முடிந்தபின்பு பாராட்டியபோது அவ்வளவு தூரம் மகிழ்ந்தார்கள். வெள்ளை உள்ளமும் கொள்கை உறுதியும் கொண்டவர்கள்.போராட்டங்களில் பங்கு பெற்றார்கள். மாநாடுகளில் உரையாற்றினார்கள். கலந்துரையாடல்களில் வழிகாட்டினார்கள். கணவர் டாக்டர் கவுதமனோடு இணைந்து எப்படி எப்படி எல்லாம் கழகப்பணி ஆற்ற முடியுமோ அப்படியெல்லாம் கழகப் பணியாற்றினார்கள்.தலைமைக்கு அவ்வளவு நம்பிக்கை உடையவர்களாக இருந்தார்கள். நாளை(18.12.2018)  அவருக்கு சென்னையில் அனைத்து கட்சியினரும் கலந்து கொள்ள அய்யா ஆசிரியர் தலைமையில் படத்திறப்பு நடக்கும் நிலையில், கருஞ்சட்டைப்பெண்களின் வரலாறு பதியப்படும் .கருஞ்சட்டைப்பெண்கள் தொகுதி ஒன்று,கருஞ்சட்டைப்பெண்கள் தொகுதி இரண்டு ,மூன்று என்று வரலாறுகள் பதியப்படும்  எனும் நம்பிக்கை  பிறக்கின்றது. இந்தப் புத்தகத்தின் மூலம்... 

மொத்தம் 16 தலைப்புகளில் இந்தப்புத்தகம் அமைந்துள்ளது

(தொடரும்)















 .

Wednesday, 12 December 2018

சகமனிதனுடனான உரையாடல்.......பாலகுமார் விஜயராமன்

சகமனிதனுடனான உரையாடல்

(முனைவர் வா.நேருவின் “நெருப்பினுள் துஞ்சல்” சிறுகதைத் தொகுப்பு குறித்த வாசிப்பனுபவம்)

- பாலகுமார் விஜயராமன்




சாதியக் கட்டுப்பாடுகளும், பிற்போக்குத்தனங்களும். மூடநம்பிக்கைகளும் மண்டிக்கிடக்கும் சமுதாயத்தின் கடைநிலை வாழ்விலிருந்து, தன் கல்வியாலும் பணியாலும் மேலெழுந்து வரும் ஒருவன், தனது சக மனிதர்களையும்,சூழ்நிலைகளையும் எவ்வாறு அறவுணர்வோடு அனுகுகிறான் என்பதைப் பேசுகின்றன, முனைவர். வா.நேரு அவர்கள் எழுதி, எழிலினி பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் “நெருப்பினுள் துஞ்சல்” என்னும் சிறுகதைத்தொகுப்பு.

மொத்தம் பதிமூன்று கதைகள் கொண்ட இத்தொப்பில், இலக்கிய ரசனை மிகுந்த சொற்சரங்களோ,வர்ணனைகளோ, அலங்கார விவரிப்புகளோ இல்லை. மாறாக இக்கதைகள், நம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு நடந்த அல்லது தாங்கள் எதிர்கொண்ட அன்றாட சம்பவங்களை நேரடிப் பேச்சில் விவரிப்பதைப் போன்ற சரளமான மொழியில் அமைந்திருக்கின்றன. கதையின் மையக்கருத்தை முகத்தில் அடிப்பதைப் போலக் கூறும் இந்த எளிய நடை, படைப்பிற்கு பெரும்பலத்தை அளித்திருக்கின்றது.  சாதாரணமாக வாசித்துச் செல்லும் இடங்களில் கூட திடீரென நம்மையும் அறியாமல் மனம் கனத்து, கண்களில் நீர் கோர்த்து விடுகின்றது.

நோயினாலோ, விபத்துக்களினாலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருபவருக்குத் துணையாக, வாசலில் காத்துக் கிடப்பவர்களின் மனவோட்டத்தையும், பதற்றத்தையும் சொல்லிச் செல்லும் கதை முக்கியமானது. அங்கே காத்திருக்கும் நேரங்களில் அருகில் இருப்பவர்களும் உருவாகும் நட்பு, பரஸ்பரம் தங்கள் துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், ஒருவருவருக்கு ஒருவர் ஆறுதல் வார்த்தைகள் கூறிக் கொள்ளுதல், உள்ளே எவரேனும் ஒருவர் இறந்துவிட்டால், அங்கே ஒட்டுமொத்த கூட்டத்திற்கும் எழும் பதைபதைப்பு, வெவ்வேறு வகையான பிரார்த்தனைகள், அவர்களின் துக்கங்களுக்கு வடிகாலாக மருத்துவமனை வளாகங்களில் அமைக்கப்பட்டிருக்கும் பல மதங்களைச் சேர்ந்த வழிபாட்டுத்தளங்கள், அது குறித்த மாற்றுப் பார்வை என்ற பல்வேறு சித்திரங்களையும் வழங்குகிறது அக்கதை.

சமூகத்தின் அடி ஆழத்தில் கிடக்கிறவன், மேலே ஏறி வர அவனுக்கு இருக்கும் ஒரே ஆயுதமான கல்வியை எவ்வாறு இறுகப்பற்றிக் கொள்ள வேண்டும். தன்னால் முடியாததை ஒரு சவாலாக ஏற்று எவ்வாறு வெற்றி கொள்ள வேண்டும் என்பதை மிக யதார்த்தமான மொழியில் சொல்கிறது ஒரு கதை. கிராமப்புற மாணவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் ஆங்கிலப் பாடத்தைக் கற்பதை நீச்சல் அடிக்கப் பழகுவதோடோ அல்லது சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்வதோடோ ஒப்பிடும் போது, அது ஒரு மாணவனின் மனதில் எத்தகைய நேர்மறை உணர்வுகளை விதைக்கிறது என்பதை அழகாக எடுத்துரைக்கிறது.

குடும்பத்தில் ஒரு விழா நடத்தும் போது ஏற்படும் பொருளாதார முடைகளைக் குறைக்க உதவும் விதமாக உருவான மொய் எழுதும் பழக்கம், காலப்போக்கில் பெருவட்டி போட்டுத் திருப்பிச் செலுத்தும் நிர்பந்தமாகி விட்டது. மதுரை பக்கங்களில் மொய் வசூல் செய்வதற்காகவே குடும்ப விழாக்கள் நடத்துவார்கள். இலட்சங்களில் வசூல் ஆகும் பணத்தை வட்டியோடு திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், அவமானத்தில் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. அவ்வாறு சீர் செய்கையில் எழும் சமூக அழுத்தத்தைப் பேசுகிறது ஒரு கதை.

ஒரு புரோட்டா கடையில் வேலை பார்க்கும் மாஸ்டருக்கும், சப்ளை செய்பவருக்கும் இடையேயான இயல்பான கேலி, கிண்டல் கலந்த நட்பையும், அதில் ஒருவர் பிரியும் போது, மற்றொருவரின் இயல்பான மனநிலை மாற்றத்தையும், அதனூடாக தினம் பதினாறு மணி நேரத்திற்கு மேலாக உழைக்கும் ஒரு எளிய மனிதனின் உடல்நலம் பாதிக்கப்படும் போது, அவனது குடும்பம் அடையும் இன்னல்களையும், வெள்ளத்தில் மூழ்குபவனுக்கு கையில் கிடைக்கும் சிறு மடத்துண்டு போல உதவும் அரசுக் காப்பீட்டுத் திட்டம் பற்றியும், அரசின் இத்தகைய திட்டங்கள் பரம்பரை சொத்தை சொகுசாக அனுபவித்து வரும் சமூகப் புரிதலற்ற ஒருவனின் மனதில் என்னவிதத்தில் பதிவாகுகிறது என்பதையும் சொல்கிறது இன்னொரு கதை.

இக்கதைகள் முழுவதையும் வாசித்து முடித்த பிறகு, அவை மனதில் அதிக சலனத்தை ஏற்படுத்தி இருந்தன. சமுதாயத்தில் உள்ள சகமனிதர்களுக்கு உதவுவது என்பது ஏதோ அரசாங்கம் ஐந்தாண்டுத் திட்டங்கள் வகுத்து ஆற்றக் கூடிய பெரும்பணிகளோ, சிறந்த தொண்டு நிறுவனங்கள் மேற்கொள்ளும் உதவிகளோ மட்டுமல்ல. எளியவன் ஒருவன் போகிற போக்கில் செய்துவிட்டுப் போகின்ற ஏதோவொரு நற்செயல் இன்னொருவனுடைய வாழ்க்கையையே மாற்றிப் போடக்கூடியதாக இருக்கலாம். பெரிய முனைப்புகள் இன்றி, தன் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் நல்லறத்தை விதைத்து விட்டுச் செல்லும் ஓர் எளிய மனிதனின் டைரிக்குறிப்புகளே இத்தொகுப்பில் உள்ள கதைகள். சரளமான வாசிப்பு அனுபவத்தையும் தாண்டி, இக்கதைகளின் மனிதர்கள் மனிதில் நிற்கிறார்கள்.

வாசிப்பு இன்பத்திற்காக கதைகளை அனுகும் சிறிய வட்டத்தைத் தாண்டி, இக்கதைகள் பொதுசமூகத்தின் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் உரையாடப்படவும், விவாதிக்கப்படவும் வேண்டுமென விரும்புகிறேன்.
நகர்ப்புற ஆடம்பரங்களுக்கு பரிச்சயமற்று, உள்ளடங்கிய கிராமங்களில் இருக்கும் மாணவர்கள் மட்டுமன்றி, ஓரளவு பொருளாதார தன்னிறைவும், கேட்டது கேட்டவுடன் கிடைக்கும் குடும்பச் சூழ்நிலையில் வளரும் மேல்மத்திய வர்க்க குழந்தைகளுக்கும் இத்தகைய கதைகள் சென்று சேர வேண்டும். ஒரு கப் இட்லி மாவு விற்பனையில் ஒரு குடும்பம் ஜீவித்திருக்கும் சூழ்நிலையும், ஒரு கலைக்கல்லூரியில் இடம் கிடைக்க பெயர் தெரியாத எத்தனை பேரிடம் ஒருவன் சிபாரிசுக்கு அலைய வேண்டி இருக்கிறது என்பதையும், ஒரு புரோட்டா மாஸ்டரின் நெஞ்சு வலிக்கு அரசின் காப்பீட்டுத் திட்டம் எவ்வாறு அவனது உயிரைக் காக்கிறது என்பதையும், தொழிற்சங்கங்கள் இன்றும் ஏன் தேவையாய் இருக்கின்றன என்பதையும் சமூகத்தின் பல படிநிலைகளில் இருக்கும் பிள்ளைகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன்.

 நல்லறத்தை வாழ்வின் அன்றாட நடைமுறையில் தன்னியல்பில் போற்றும் எழுத்தாளர் முனைவர் வா.நேரு அவர்களுக்கும், இத்தொகுப்பை பதிப்பித்து வெளியிட்டு இருக்கும் எழிலினி பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துகள்.

******************************************
நெருப்பினுள் துஞ்சல் (சிறுகதைத் தொகுப்பு)
முனைவர் வா.நேரு

எழிலினி பதிப்பகம்
பக்கங்கள்: 98
விலை: ரூ. 120/-
******************************************
(28/10/2018 அன்று தமுஎகச , பொள்ளாச்சி கிளை சார்பாக நடத்தப்பட்ட நூல் அறிமுக நிகழ்வில், தோழர்கள் மூலம் வாசிக்கப்பட்ட எனது கட்டுரை. நன்றி !   .... பாலகுமார் விஜயராமன்


தனது வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட எழுத்தாளர் பாலகுமார் விஜயராமன் அவர்களுக்கு நன்றி. அவர்
புறாக்காரர் வீடு என்னும் சிறுகதைத் தொகுப்பு ,அஞ்சல் நிலையம் என்னும் மொழி பெயர்ப்பு நாவல்,கடவுளின் பறவைகள்
என்னும் பல நாட்டுக் கதைகள், ஹவுல் மற்றும் சில கவிதைகள் என்னும் மொழி பெயர்ப்பு ஆகிய நூல்களின் ஆசிரியர். )

Sunday, 9 December 2018

அண்மையில் படித்த புத்தகம் : சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்.....எஸ்.ராமகிருஷ்ணன்

அண்மையில் படித்த புத்தகம் : சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்
நூல் ஆசிரியர்              :  எஸ்.ராமகிருஷ்ணன்
வெளியீடு                      : உயிர்மை பதிப்பகம், சென்னை-18
முதல் பதிப்பு               : டிசம்பர் 2014, விலை ரூ 50, மொத்த பக்கங்கள் 55

                               அண்மையில் சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ள எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது சார்பாகவும் தமிழ்நாடு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாகவும் வாழ்த்துக்கள். அவர் எழுதிய புத்தகம் 'சாக்ரடீஸின் சிவப்பு நூலகம் '. குழந்தைகளுக்கான நாவல் வடிவலான புனைவு இலக்கியம் இந்த நூல். எஸ்.ராமகிருஷ்ணன் எனத் தலைப்பிட்டு அவரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள இரண்டு பக்க குறிப்புகள் பிரமிக்க வைக்கின்றன. சிறுகதைத் தொகுப்புகள்,நாவல்,கட்டுரைத் தொகுப்புகள், திரைப்பட நூல்கள், குழந்தைகள் நூல்கள்,உலக இலக்கியப் பேருரைகள்,வரலாறு,நாடகத் தொகுப்பு, நேர்காணல் தொகுப்பு,மொழி பெயர்ப்புகள்,தொகை நூல்,ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள நூல் என அவரின் படைப்புகளின் பட்டியலே ஒரு சிறிய நூல் அளவில் இருக்கின்றது. அவரின் குழந்தைகள் நூலில் ஒன்றுதான் இந்த சாக்ரடீஸீன் சிவப்பு நூலகம்.




                           முழுக்க முழுக்க சிறுவர்களுக்குப்  புத்தகத்தின் முக்கியத்துவத்தை, பெருமையை விளங்கவைக்க முயலும் ஒரு புத்தகம். பள்ளி விடுமுறை, நூலகத்திற்கு விருப்பமில்லை எனினும் அம்மாவால் அழைத்துச்செல்லப்படும் நந்து,அங்கு கிடைக்கும் காமிக்ஸ் புத்தக வாசிப்பு, அதனை வாசிப்பதால் ஏற்படும் ஈர்ப்பு,அதனை முடிக்க விடாமல் நூலகர் கதவைப் பூட்ட, வீட்டிற்கு வந்த பின்பு கதையின் முடிவாக என்னவாக இருக்கும் என யோசிக்கும் நந்து, நீயே முடிவுகளை கற்பனை செய் என ஊக்கமூட்டும் அம்மா,மறுநாள் தனது கற்பனை முடிவே புத்தகத்தில் இருப்பதை வாசிக்கும் நந்து,நூலகத்தில் கிடைக்கும் நண்பன் பெனி, அவர்கள் இருவரும் இணைந்து செல்லும் மாய உலகமான சிவப்பு நூலகம் எனக் கதை விறுவிறுவெனச்செல்கின்றது.

                            மாய உலகமான சாக்ரடீஸின் சிவப்பு நூலகத்தின் விதிகள் " நூலகத்தில் உள்ள புத்தகங்கள் விசித்திரமானவை, அவை உங்களோடு பேசக்கூடியவை, சில புத்தகங்கள் உங்களை சரியாக வழிகாட்டும், சில தவறுகள் செய்யத் தூண்டும். எனவே புத்தகங்களைக் கவனமாகக் கையாளுங்கள்.... " இப்படி புத்தகம் முழுக்க பல இடங்களில் புத்தகங்களைப் பற்றிய செய்திகள் வருகின்றன. மாய நூலகத்தில் 8 வாசல்கள் 1.கதை 2.கவிதை 3. வரலாறு 4. விஞ்ஞானம் 5. வாழ்க்கை வரலாறு 6 .பொருளாதாரம் 7. தத்துவம் 8 கணிதம்... எந்த வாசல் வேண்டும் என்பதை படிப்பவரே தீர்மானிக்க வேண்டும் என்று மாய நூலகத்தில் வரும் கோமாளி சொல்கின்றான், " ... உனக்காகப் படி,உன்னைத் தெரிந்து கொள்வதற்காகப் படி. தன்னை அறிந்து கொள்வதற்கு மனிதனுக்கு புத்தகங்களைத் தவிர வேறு துணையில்லை ...." என்று வரும் பகுதிகள் கவனிக்கத்தக்கவை. கதை என்னும் வாசல் வழியே செல்வது என நந்துவும் பெனியும் முடிவு செய்து மாய நூலகத்திற்குள் போகின்றார்கள்.

                           சாகும் நிலையில் உள்ள புத்தகங்கள், அந்தப் புத்தகங்களைக் காப்பாற்றும் கிழவன், புத்தகத்தைப் படித்துக்கொண்டே பேசும் ஆடு,மிதந்து கொண்டே படித்துக்கொண்டிருக்கும் தொப்பி போட்ட எலி, மீன்கள்- மீன் கொத்திப்பறவைகள், தேன் கதை சொல்லும் ஆமை, புலியைக் கொன்ற கழுதையின் கதை எனத் தொடர்ந்து குழந்தைகளுக்கு ஆர்வமூட்டும் வகையில் கதை செல்கின்றது ஆனால் பேசும் எல்லா விலங்குகளும் புத்தகத்தின் பெருமையையும் சேர்த்தே பேசுகின்றன. கடைசியில் நந்து இவற்றையெல்லாம் கனவு கண்டதாக கதை நீள்கின்றது ." நிறையப் படிச்சா இது போல நிறைய கதை, கட்டுரை எல்லாம் எழுதலாம் " எனப் பாராட்டுகின்றாள் அம்மா. அப்பாவும் பாரட்டுகின்றார். " நந்துவும் பெனியும் ...நூலகத்திற்குப் போய் தவறாமல் படிக்கிறார்கள். நந்து இப்போது வீட்டில் தனக்காக ஒரு நூலகத்தை உருவாக்கிக் கொண்டான். பெனி இப்போது இனிய சொற்களை மட்டுமே பேசுகிறான். பெனியும் நந்துவையும் போல நீங்கள் எப்போது படிக்கத் துவங்குவீர்கள் ?
எப்போது எழுதத் துவங்குவீர்கள் ?
உலகில் உள்ள எல்லா நூலகமுமே மாய நூலகமே.அதற்குள் யாருக்கு என்ன விந்தை  கிடைக்கும் என சொல்லவே முடியாது " எனப் புத்தகம் முடிகின்றது.

          முன்னுரையில் முதன் முதலில் தான் தனது அப்பாவோடு நூலகத்திற்கு போன அனுபவத்தை விவரித்துள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன். " இந்தப் புத்தகம் ஒரு சாகசப்பயணம் போல ரகசிய நூலகம் ஒன்றிற்குள் பிரவேசிக்கும் இரண்டு சிறுவர்களைப் பற்றியது. அவர்கள் புத்தகத்தின் முக்கியத்துவத்தை தாங்களே தேடி உணர்கிறார்கள். விந்தையான இந்த அனுபவம் படிப்பவருக்கு சுவராஸ்யம் அளிப்பதுடன் புத்தகங்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்பதே எனது ஆசை " என்று கூறியிருக்கின்றார். எஸ்.ரா. அவரின் விருப்பம் இந்தப் புத்தகத்தில் நிறைவேறியிருக்கிறது.

                          நமக்குத் தெரிந்த குழந்தைகளிடம் இந்தப் புத்தகத்தைக் கொடுத்து படிக்கச்சொல்லலாம். இந்த நூலை 5,6,7 போன்ற வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளிடம் கொடுத்து வகுப்பறைகளிலேயே வாசிக்கச்செய்து கலந்துரையாடல் வைக்கலாம். எப்படியேனும் இன்றைய குழந்தைகளைப் படிக்கவைப்பதற்கு சாக்ரடீஸின் சிவப்பு நூலகம் என்னும் இந்தப் புத்தகம் உதவும். பெரியவர்களும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புத்தக வாசிப்பின் சிறப்புகளைத் தெரிந்து கொள்வதற்கு வாசிக்கலாம்.    


Sunday, 2 December 2018

அண்மையில் படித்த புத்தகம் : தமிழர் தலைவர் கி.வீரமணியின் வாழ்வும்-பணியும்...பேரா. நம். சீனிவாசன்

அண்மையில் படித்த புத்தகம் : தமிழர் தலைவர் கி.வீரமணியின் வாழ்வும்-பணியும்
நூல் ஆசிரியர்               : பேராசிரியர் முனைவர்.நம்.சீனிவாசன்.எம்.ஏ.,எம்.பில்.,பி.எச்.டி.
வெளியீடு                   : திராவிடர் கழக (இயக்க ) வெளியீடு,பெரியார் திடல்,            சென்னை-7
முதல் பதிப்பு                : 2015    பக்கங்கள் :384     விலை ரூ 200/-

பேரா. நம். சீனிவாசன் அவர்கள் தனது முனைவர் பட்டத்திற்காக மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் எடுத்துக்கொண்ட தலைப்பு  " வீரமணியின் வாழ்வும் பணியும் " என்பதாகும். தமிழர் தலைவர் பற்றி ஆய்வு நடத்தி அதன் மூலமாக முனைவர் பட்டம் பெற்ற பேரா.முனைவர் . நம்.சீனிவாசன் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வேடு இந்தப்புத்தகம்.இந்த நூலிற்கு டாக்டர்.மு.தவமணி அவர்கள் அணிந்துரை அளித்திருக்கின்றார். அதில் " அவர்(பேரா.நம்.சீனிவாசன்) எனக்கு இன்னொரு மகன்.அதிகம் பேசாதவர்.விளம்பர வெளிச்சத்தை விரும்பாதவர்.இயக்கத்திற்கு வெளியே இலக்கிய வட்டங்களிலும் ஏராளமான நண்பர்களைப் பெற்றிருப்பவர்...தலைவர் வீரமணி அவர்களின் செயல்பாடு எந்த ஒரு தலைவராலும் தொடமுடியாத சிகரமாகும். இந்நூல் உலகத் தமிழர்களின் கைகளில் தவழட்டும்" என்று கூறியிருக்கின்றார். உண்மை. 



இந்த நூல் 5 இயல்களைக் கொண்டிருக்கின்றது. முதல் இயலின் தலைப்பு  'வீரமணியின் வாழ்க்கைத் தகவல்கள்' என்பதாகும். 62 பக்கம் கொண்ட இயல். ஒவ்வொரு பக்கமும் ஆசிரியர் அவர்களின் வாழ்க்கை பற்றிய தகவல்களை விரிவாகத் தருகின்ற பக்கங்களாக இருக்கின்றது.. அவரது பிறந்த தேதி 02.12.1933 என்று ஆரம்பித்து அவரின் பெற்றோர், உடன் பிறந்தோர், சிற்றன்னை, கல்வி, இயக்கத்தொடர்பு,திராவிடர் கழகப்பொதுச்செயலாளர், இதழாசிரியர்,இராவண லீலா, ஆசிரியருக்கு இராகு காலத்தில் நடைபெற்ற சாதி மறுப்பு திருமணம்,திருமணத்திற்கு வந்திருந்து  வாழ்த்திய புரட்சிக்கவிஞர் அவர்களின் கவிதை, அவருக்கு கிடைத்த பரிசு, பட்டங்கள்,அவர் மீது ஏவப்பட்ட தாக்குதல்கள்,வெளி நாட்டுப்பயணங்கள்,தலைவர்கள், தமிழறிஞர்களுடன் தொடர்பு, எத்தனை முறை ,எதற்காகவெல்லாம் சிறை பட்டார், கைது செய்யப்பட்டார் என்னும் விவரங்கள், சுற்றுப்பயணம், அவருக்குள்ள அனைத்து தரப்பட்ட ஆத்திக,அரசியல்வாதியாக உள்ள நெருங்கிய நண்பர்கள், ஆசிரியர் பெயரில் உள்ள விருது, ஆசிரியர் பற்றி சான்றோர் பெருமக்களின் கருத்துகள்,கி.வீரமணியின் பண்பு நலன்கள் என்று குறுந்தலைப்புகள் இட்டு நூலாசிரியர் கொடுக்கும் புள்ளி விவரங்களும்,தகவல்களும் அருமை. அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மிக எளிமையாக எவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் அமைந்துள்ள இயல் முதல் இயலாகும். முடிவில் இயல் முடிபுகளையும்,பயன்படுத்திய புத்தகங்கள் பற்றிய தகவல்களையும் பக்கங்களோடு குறிப்பிட்டு ஆதாரங்களை அள்ளிக்கொடுத்திருக்கின்றார் நூலாசிரியர் பேரா.நம்.சீனிவாசன். 

இரண்டாவது இயல் 'வீரமணியின் பணிகளில் தமிழர்,தமிழ் நாடு, தமிழ் மொழி ' என்பதாகும்.இந்த இயல் ஆசிரியர் அவர்களின் பணியைப் பற்றிக்கூறுவதாக இருந்தாலும் கடந்த 60,70 ஆண்டுகளில் தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களின் வரலாறு பற்றி விரிவாக அடிப்படையிலிருந்து கூறுவதாக இருக்கின்றது. இந்தி எதிர்ப்பு என்னும் உணர்வு ஏன் ஏற்பட்டது, தமிழ் புறக்கணிப்பு-அதனால் ஏற்பட்ட எழுச்சி,இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் என விரிவான தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் வரலாற்றையும் அதில் ஆசிரியர் அவர்களின் பங்களிப்பையும் கூறுவதாக இந்தி எதிர்ப்பு என்னும் குறுந்தலைப்பு இருக்கிறது. அதனைப் போலவே 'தமிழ் அர்ச்சனை உரிமைப்போர், வட மொழி எதிர்ப்பு, நுழைவுத்தேர்வுக்கு எதிர்ப்பு, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு,காவிரிப்பிரச்சனை,வஞ்சிக்கப்படும் தமிழ் நாடு, சேது சமத்திரத்திட்டம் போன்ற குறுந்தலைப்புகள் ஒவ்வொன்றும் அடிப்படையை விளக்கி வாசிப்பவர் எவரும் போராடவேண்டியதன் தேவையை உணர்ந்து கொள்ளும் வண்ணமும் அதில் ஆசிரியர் அவர்களின் போராட்டத்தையும் விவரிப்பதாக இந்த இயல் இருப்பது அருமை.

மூன்றாவது இயல் 'வீரமணியின் எழுத்தும் பேச்சும் ' என்பதாகும்." திராவிடர் கழகம் ஒரு கருத்துப் பரவல் இயக்கம்." நாதசுரக்குழாயாக இருந்தால் ஊதியாகவேண்டும். தவிலாயிருந்தால் அடிப்பட்டுத்தானாகவேண்டும் என்பதுபோல் எனக்குத் தொண்டை,குரல்  உள்ளவரையில் பேசியாக வேண்டும்;பிரசங்கம் செய்தாக வேண்டும் " என்கிறார் தந்தை பெரியார் " என்று இயலின் ஆரம்பத்தில் குறிப்பிடும்  பேரா.நம்.சீனிவாசன் தந்தை பெரியாரின் பிரச்சார நாட்களை பட்டியலிடுகின்றார். தொடர்ந்து ஆசிரியரின் எழுத்து பற்றிக் குறிப்பிடும் நூலாசிரியர் கி.வீரமணி எழுதிய நூல்கள் என வரிசையாக குறிப்பிடுகின்றார்.தமிழர் தலைவர் அவர்கள் எழுதியுள்ள புத்தகங்கள் 39, அவர் பேசிய பேச்சுகளின் தொகுப்பாக வந்துள்ள புத்தகங்கள் 45( இது 2011-ல் முனைவர் பட்டம் பெற்ற போது ),இப்போது இன்னும் நிறைய புத்தகங்கள் வந்துள்ளன.ஆசிரியரின் குறிப்பிடத்தக்க நூல்களாக கீதையின் மறுபக்கம்,பெரியார் மணியம்மை திருமணம்-ஒரு வரலாற்று உண்மை விளக்கம், உலகத்தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு-பாகம் 2, சுயமரியாதைத் திருமணம் தத்துவமும் வரலாறும், கோயில்கள் தோன்றியது ஏன்? ,சக்தி வழிபாடு, அம்பேத்கர் பற்றிய அருண்சோரி நூலுக்கு மறுப்பு,விடுதலைப்போராட்டமும் திராவிட இயக்கமும் உண்மை வரலாறு, பிரார்த்தனை மோசடி, வாழ்வியல் சிந்தனைகள் தொகுப்புகள்(13 தொகுப்புகள் இப்போது ),அய்யாவின் அடிச்சுவட்டில் (6 பாகங்கள் இப்போது) என ஆசிரியர் எழுதியுள்ள ஒவ்வொரு நூலினைப் பற்றியும் விளக்கமான குறிப்புகளாக கொடுத்திருக்கின்றார். சொற்பொழிவாளர் என்ற முறையிலே அவருடைய சொற்பொழிவு எப்படிப்பட்டது, எவ்வளவு வலிமையானது என்பதையெல்லாம் எடுத்துரைத்திருக்கின்றார்.

நான்காவது இயல் " வீரமணியின் சமூகப் பணிகள்' ...இட ஒதுக்கீடு ஏன், இட ஒதுக்கீடு வரலாறு,இட ஒதுக்கீடும் நீதிக்கட்சியும், இட ஒதுக்கீட்டிற்கான அளவுகோல், எம்.ஜி.ஆர். கொண்டுவந்த 9000 வருமான வரம்பு திட்டம், அதனை எதிர்த்து நடந்திட்ட போராட்டங்கள்,வெற்றியில் ஆசிரியரின் பங்கு,மண்டல் குழு,அதனை அமுல்படுத்துவதில் ஆசிரியர் கி.வீரமணியின் பங்களிப்பு,69 விழுக்காடு உயர்வு, ஜாதி ஒழிப்பு,(ஜாதியின் தோற்றம், அதன் கொடுமைகள், தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு போராட்டங்கள், ஆசிரியர் காலத்தில் நடந்த போராட்டங்கள்) என விரிவாக கொடுத்து பின்பு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை,அதற்கான போராட்ட வரலாறு, ஜாதி ஒழிப்பிற்கான பத்து அம்சத்திட்டங்கள்,ஆசிரியரின் மத எதிர்ப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு,பெண்ணுரிமை,கல்விப்பணி, வெள்ளம்,புயல் போன்ற நேரங்களில் நேரிடையாகச்சென்று ஆசிரியர் அவர்கள் அளிக்கும் நிவாரண பங்களிப்பு என விரிவாக இந்த இயலில் குறிப்பிடுகின்றார்.முனைவர் பட்ட ஆய்வு -வாய்மொழித்தேர்வில் "சமூக நீதிக்காக தமிழர் தலைவர் அவர்கள் பாடுபட்டதுதான் மற்ற பணிகளை விட அதிகம் என்பது எனது ஆய்வின் முடிவு" என ஆய்வாளர் நம்.சீனிவாசன் குறிப்பிட்டதும் அதற்கான ஆதாரங்களை பல்வேறு ஆய்வுத் தரவுகளோடு விளக்கியதும் எனது நினைவில் வந்தது.

அய்ந்தாவது இயல் 'வீரமணியின் நிருவாகப் பணிகள் "என்பது.2007-ஆம் ஆண்டின் ஆசிரியர் அவர்களின் முழு சுற்றுப்பயணத்தையும் இணைப்பாக பேரா. நம்.சீனிவாசன் பக்கம் 294-லிருந்து 310 பக்கம் வரை கொடுத்திருக்கின்றார். அவரது ஒவ்வொரு ஆண்டின் சுற்றுப்பயணமும் நம்மை மலைக்க வைக்கிறது. ஒரு இருதய ஆப்ரேசன் என்றாலே முடங்கிவிடும் மனிதர்களுக்கு மத்தியில் மீண்டும் மீண்டும் அறுவை சிகிச்சை செய்துகொண்டு, ஆசிரியரின் சுற்றுப்பயணம் நம்மை மலைக்கவும், வியக்கவும் வைப்பது. அதனை விரிவாக எடுத்துவைத்து, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பதிவாக வைத்திருக்கின்றார். ஆசிரியர் அவர்கள் காலையில் விடுதலை அலுலவகம் வருவது,பணிகள்,மாலை நேர பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள் என அவரின் அன்றாட நிகழ்வுகளை பட்டியலிட்டுள்ளார்.  விடுதலை,உண்மை, பெரியார் பிஞ்சு,தி மாடர்ன் ரேசனலிஸ்டு போன்ற  பத்திரிகை நிருவாகம், இயக்க நிருவாகம்- திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி எனப் பல்வேறு பிரிவுகளின் பணி ஒழுங்குபடுத்துதல்-வழிபடுத்துதல்,அந்த அமைப்புகளின் செயல்ப்பாடுகள் , கல்வி நிருவாகம், பெரியார் திடல் நிருவாகம் எனப் பல்வேறு நிருவாகப் பணிகளை இந்த இயலில் பேரா.நம்.சீனிவாசன் விளக்கியுள்ளார். தந்தை பெரியார் காலத்தில் எத்தனை நிறுவனங்கள் இருந்தன, இப்போது எத்தனை இருக்கின்றன எனும் பட்டியல்களை எல்லாம் நிறைவாகக் கொடுத்திருக்கின்றார்.

முடிவில் ஆய்வு நிறைவுரை,மேலாய்வுக் களன்கள்,துணை நூற்பட்டியல்கள் என நூலாசிரியர் கொடுத்திருக்கின்றார். பின் இணைப்பாக ஆசிரியர் கி.வீரமணி-மோகனா அம்மையார் அவர்களின் வாழ்க்கைத்துணை ஒப்பந்த அழைப்பு-பெரியார் அழைத்தது,தந்தை பெரியாரின் நன்றி அறிவிப்பு,ஆசிரியர் வீரமணி அவர்களைப் பற்றி உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் கவிதை,இராவண லீலா கொண்டாடக்கூடாது என ஆசிரியர் எழுதிய கடிதத்திற்கு அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அவர்களின் ஆங்கிலக் கடிதம், முடிவில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் கண்ட பேட்டி என இந்த நூல் நிறைவு பெறுகின்றது.  

இன்று 86-ஆம் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடும் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களைப் பற்றிய முழுமையான விவரங்களை அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் ஒரு அருமையான வாய்ப்பு. அரைகுறையாய் அவரை அறிந்தவர்கள், எதிர்க்கருத்து கொண்டவர்கள் கூட இந்த நூலைப் படித்தால் ஆசிரியர் அவர்களின் முழுமையான பரிமாணங்களை அறிந்து கொள்வர். மிகவும் நேர்த்தியாக முனைவர் பட்ட ஆய்வேட்டை,புள்ளி விவரங்களாலும், ஆக்க பூர்வமான கருத்துக்களாலும், அரிய வரலாற்றுத்தகவல்களாலும் நிறைவாக ஆக்கித் தந்திருக்கும் பேரா.முனைவர். நம்.சீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாரட்டுகளும். தோழர்களே, கட்டாயம் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். பரிசுப்பொருளாக திருமணங்கள் மற்றும் நிகழ்வுகளிலும் அளித்திடுங்கள்.