எலியை அடிப்பதொன்றும்
அவ்வளவு எளிதாயில்லை !
கண்ணுக்கு முன்னே தோன்றி
கண நேரத்தில் மறைந்து
கண்ணா மூச்சி காட்டி
என்னோடு எலி விளையாடியது !
வெறுப்பான நான்
கையில் கம்போடு
ஓடி ஓடி இளைத்ததுதான்
மிச்சம் !
துவைக்கும் எந்திரத்தின்
வயரை எல்லாம்
கடித்துக் குதறி
துப்பிவிட்ட எலிமேல்
கடும்கோபம் கொண்டு
ஓடி ஓடித் தவித்த என்னை
உச்சத்தில் ஏறி அமர்ந்து
எட்டி எட்டிப் பார்த்த எலி
ஏளனமாய்ச் சிரிப்பதுபோலவே
தோன்றியது எனக்கு !
எலி தப்பிச்சிருச்சா ?
இவ்வுலகில் எல்லா உயிரும்
வாழ உரிமை இருக்கென
அடிக்கடி சொல்வீர்களே
ஏன் இந்தக் கொலைவெறி
என்றாள் மகள்
மறு நாள் எலிகொல்லும்
பேடை வாங்கி
அது வரும் வழியில்வைத்து
மாட்டிக்கொண்ட எலியை
கொன்றபோது
வலிமையாக ஓடிக்
கொல்லமுடியாமல்
வஞ்சகமாய் வீழ்த்தி
விட்டாயடா மனிதா
எனக்கேட்பது போல
ஒரு பார்வை பார்த்துவிட்டு
எந்த வித எதிர்ப்பும்
இன்றி செத்துப்போனது !
சட்டத்தின் சந்து
பொந்துகளில் நுழைந்து
தப்பித்துக்கொள்ளும்
நாட்டின் பெருச்சாளிகளை
பிடிப்பதற்கு
பெருச்சாளி பேடு
ஏதேனும்
செய்ய இயலுமா?
வா. நேரு
நன்றி: eluthu.com / 02.07.2012
1 comment:
இந்திய அரசின் நோக்கம் பெருச்சாளிகளை வளர்ப்பதுதான். அதனால் ஒலிப்பது சிரமம்.
Post a Comment