Wednesday, 24 July 2013

தீவிர சிகிச்சைப் பிரிவு- வா. நேரு

                                



"நீங்கள்  சுட்டிக் காட்டும் குறைகள் ,எங்களுக்கு நீங்கள்  கொடுக்கும் பரிசு " அந்த மருத்துவ மனையின் உள்ளும் புறமும் அநேக இடங்களில் வண்ணப்போர்டுகளில் வேறு வண்ண  எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த மருத்துவமனை பல ஏக்கரில் ,பல மாடிக் கட்டிடங்களோடு அமைந்திருந்தது. இப்போது இந்த இடத்தை வாங்குவதென்றால் பல கோடி ரூபாய் ஆகலாம். ஆனால் மருத்துவமனையின் நிறுவனர் பல வருடங்களுக்கு முன்னால் இந்த் இடத்தை வாங்கிப்போட்டிருப்பார் போலும். ஒரு தொழிற்சாலை போல இயங்கிக் கொண்டிருந்த மருத்துவமனை மிகப்பெரிய பிரமிப்பை முத்துவுக்கு  கொடுத்தது. . கார், மோட்டார் சைக்கிளை நிறுத்துமிடமே பெரும் நிலப்பரப்பு. உள்ளே ஒரு மிகப்பெரிய  உணவு விடுதி .சைவ உணவா, அசைவ உணவா, வெளி மாநில உணவா, செட்டி நாட்டு உணவா என வித விதமாய் உணவுகளைத் தயாரித்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.  வெள்ளை சேலையில் , வெள்ளை சட்டையில், வெள்ளை கோட் போட்டவாறு பலர் அங்குமிங்கும் நடந்தவாறு இருந்தனர். அந்த மருத்துவமனையின் 4-வது மாடிக்கு வந்து சேர்ந்தான் முத்து.  வரிசையாய் போடப்பட்டிருந்த இரும்பு நாற்காலிகள் , நாற்காலிகளுக்கு கீழ் கொண்டு வந்த மூட்டை முடிச்சுகள். நாற்காலிகளுக்கு மேல் காலை மடக்கியும், காலை நீட்டியும் , கைகளை விரித்தும் ,கோர்த்தும் ஆனால் கவலை தோய்ந்த முகங்களோடு ஆண்களும் பெண்களுமாய் வரிசை வரிசையாய். "தீவிர சிகிச்சைப் பிரிவு " என்னும் போர்டுக்கு முன்னாள் அமர்ந்திருக்க முத்துவும் மூட்டை முடிச்சகளோடு அவர்களோடு உட்கார்ந்தான். .

                       இன்றோடு 15 நாட்கள் ஆகிவிட்டது மருத்துவமனைக்கு உள்ளே வந்து . முத்துவின் அம்மா இன்னும் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்தார் அப்படி ஒரு அமைதி இருந்தது அந்தத் தீவிர சிகிச்சைப் பிரிவில். சுடு காட்டு அமைதி என்பார்களே அப்படி ஒரு அமைதி. மருத்துவக் கருவிகள் ஓடும் சத்தமும் , சில நேரங்களில் நர்சுகள், டாக்டர்கள் பேசும் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தன.. அம்மாவின் முகத்தை மூடியபடி ஏகப்பட்ட குழாய்கள் . தலைக்கு மேலே மூன்று மினி கம்ப்யூட்டர் போன்ற கருவிகளில் குறுக்கும் நெடுக்குமாய கோடுகள் ஓடிக்கொண்டிருந்தன. மேலே அளவுகள் தெரிந்தன. பச்சை, மஞ்சள், சிவப்பு என வெவ்வேறு கலர்களில் அளவுகள் இருநதன. முத்து படித்தவன் என்றாலும் அந்த அளவுகளை வைத்து அம்மாவின் நிலமை எப்படி என்பதனை அறியமுடியவில்லை. காலையில் ஒரு முறைதான் அம்மாவை உள்ளே சென்று பார்க்க முடியும், டாக்டரிடம் அம்மாவின் நிலமை பற்றிக் கேட்க முடியும்.  தீவிர சிகிச்சைப் பிரிவுக்குள் உள்ளே சென்று பார்க்க கோட் போட்டுத்தான் செல்ல வேண்டும். முதல் நாள் டாக்டர்கள் போடும் கோட்டைப் போட்டுக்கொண்டு உள்ளே போய்விட்டான் முத்து. . சிரித்த டாக்டர் இந்த கோட் எங்களுக்கு, உங்களுக்கு வேறு கோட் வெளியே தொங்கும், அணீந்து வாருங்கள் என்று சொல்ல வேறு கலரில் இருந்த கோட்டை அணிந்து கொண்டு உள்ளே போய் அம்மாவைப் பார்த்தான் முத்து. .சேர்த்த அன்றைக்கே கேட்டுத்தான் சேர்த்தார்கள் , செயற்கை சுவாசம் பொருத்தித்தான் காப்பாற்ற வேண்டும், அதற்கு மட்டும் ஒரு நாளைக்கு  பதினைந்தாயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்றார்கள். சரி என்று சொல்லித்தான் முத்துவும் அவனது கூடப்பிறந்தவர்களும் அம்மாவை மருத்துவமனையில் சேர்த்தார்கள் . . எதையும் மனதில் வைக்காமல் பட படவென்று பொரிந்து தள்ளும் குணமுடைய அம்மா, சில நேரங்களில் முழித்துப்பார்ப்பதுவும், எதையோ சொல்வதுபோல் முயன்று முடியாமல் கண்ணீர் வடிப்பதுவும் முத்துவுக்கு கொடுமையாக இருந்தது.. . முத்துவின் அம்மாவைப் போல இருபது முப்பது நோயாளிகள் அந்த தீவிர சிகிச்சைப்பிரிவில் .15 நாளில் 5 இலட்சம் ரூபாய் காலியாகி இருந்தது. மருந்து, மாத்திரைகள், டாக்டர் கட்டணம்,பரிசோதனை, அறை வாடகை என ராக்கெட் வேகத்தில் பணம் கட்ட வேண்டியிருந்தது. அம்மாவைச்சேர்த்தவுடன் , 1 இலட்சம் அட்வான்ஸ் கட்டுங்கள் என்றவுடன் அடவுக்கடைக்குத்தான் ஓட வேண்டியிருந்தது முத்துவுக்கு  . நகைகளை வைத்து, வீட்டை விற்று, காட்டை விற்று , ஆட்டை , மாட்டை விற்று எல்லாம் அங்கு இருந்த நோயாளிகளுக்கு உறவினர்கள் பணம் கட்டிக் கொண்டிருந்தார்கள்.

                          வந்த இரண்டு மூன்று நாட்களிலேயே முத்துவுக்கு புதிய நட்புகள் கிடைத்தன . முன்பின் அறியாதவர்கள்தான் ,ஆனால் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு முன்னால் தினந்தோறும் மணிக்கணிக்கல் அமர்ந்த போது பக்கத்தில் முத்துவுக்கு பேசத்தான் வேண்டியிருந்தது. அம்மாவைப் பார்க்க என்று சிலர் கிராமத்திலிருந்து வந்து கொண்டேயிருந்தார்கள். அவர்களுக்கு அம்மாவின் நிலமையை விளக்க வேண்டியிருந்தது. சில நேரங்களில் சாப்பிட, கழிப்பறை செல்லும் நேரங்களில் பக்கத்தில் இருப்பவர்களிடம் வைத்திருக்கும் பைகளைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிச்செல்ல வேண்டியிருந்தது. அதைப் போலவே அவர்களும் முத்துவிடம் சொல்லிவிட்டு சென்று வந்தார்கள். இரவில் முதலிலேயே வராண்டாவில் படுத்துக்கொள்ள இடத்தை ரிசர்வ் செய்ய வேண்டியிருந்தது. கொசுக்கடியும் ,இரவு முழுவதும் நோயாளிகளைத் தள்ளிக்கொண்டு வரும் வண்டிகளின் ஓசையும் , நோயாளியாய் படுத்திருக்கும் உறவினர்களைப் பற்றிய கவலையுமாய் யாரும் சரியாகத் தூங்கியதாகத் தெரியவில்லை முத்துவுக்கு. பேச்சு, பேச்சு, பேச்சுத்தான் ஒரே வடிகால். ஒவ்வொருவரும் தங்கள் கவலைகளை வார்த்தைகளால் கொட்டக்கொட்ட , கேட்டுக்கொண்டே பொழுது ஓடிக் கொண்டிருந்தது முத்துவுக்கு.

                                                       
                            இராமநாதபுரம் பக்கத்திலிரிந்து பாம்பு கடித்த பையனைத் தூக்கி கொண்டு வந்து சேர்த்திருந்தார்கள். 20 வய்தே ஆன பையன், இருட்டில் நடந்து சென்றவனைப் பாம்பு கடித்திருக்கிறது. பாம்பு கடித்த இடத்தில் கட்டைப் போட்டு அங்கு இருக்கும் ஆஸ்பத்திருக்குத் தூக்கிக் கொண்டு ஓட, இரத்தத்தில் நஞ்சு  நிறையக் கலந்து விட்டது, மதுரைக்கு கொண்டு செல்லுங்கள் என்று சொல்லிவிட்டதால் இங்கு கொண்டு வந்து சேர்த்திருந்தார்கள். பெட்டில் பக்கத்தில் போய் அந்தப் பையனைப் பார்த்தான் முத்து . பள பள என கால் முழுவதும் அப்படி ஒரு பள பளப்பு, கால் பயங்கரமாக வீங்கி வேறு இருந்தது. அந்தப் பையனைச்சேர்ந்தவர்கள் 20 , 30 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு முன்னாள் அமர்ந்திருந்தார்கள். அனைவரது முகத்திலும் சோக ரேகை. அந்தப் பையனின் தாயார் ஓங்கி குரலெடுத்து ஒப்பாரி வைக்க சுற்றி இருந்தவர்கள் இப்படி எல்லாம் அழுதால் ஆஸ்பத்திரியை விட்டு விரட்டி விடுவார்கள் , அமைதியாக இரு , அமைதியாக இரு என்று அதட்ட ஒப்பாரியை விட்டு விட்டாள் அந்த அம்மா , ஆனால் அவளின் கண்களிலிருந்து. கண்ணீர் ஆறாய் ஓடிக்கொண்டிருந்தது.    அந்தப் பையனின் அப்பா , மருத்துவமனைக்கு உள்ளே இருந்த கோயிலுக்குப் போவதும் வருவதுமாக இருந்தார். விபூதியைக் கொண்டு வந்து கூட இருந்த அனைவரிடமும் கொடுத்து நீங்களும் என் பிள்ளையைக் காப்பாற்ற கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார். 

                                தூத்துக்குடி பக்கம் கிராமத்திலிருந்து ஒருவர் அவரது மகனை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்திருந்தார். அறிமுகம் ஆகி அவரிடம் பேசஆரம்பித்து எப்படி மகனுக்கு விபத்து நிகழ்ந்தது என முத்து  கேட்டவுடன் கொட்டித் தீர்த்து விட்டார்." சார்,என் மகன்  இன்ஜினியருக்குப் படித்திருக்கிறான் , சென்னையிலே பெரிய கம்பெனியிலே வேலை பார்க்கிறான். கம்பெனியில் லீவு கிடைக்கலயாம். நெருங்கின நண்பரோடு திருமணம் என்று சொல்லி சென்னையிலே இருந்து டூ விலரில் திருநெல்வேலிக்கு வந்திருக்கிறான். மேலூருக்குப் பக்கத்தில் எவனோ தட்டி விட்டுப் போய் விட ரோட்டில் கிடந்திருக்கின்றான். பக்கத்தில் இருந்தவர்கள் ஆம்புலன்சுக்கு சொல்லி, இந்த ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு எனக்குத் தகவல் கொடுத்தார்கள். என்ன படிப்பு படித்து என்ன பண்ண ? என்ன வேலை பார்த்து என்ன செய்ய ? பிராக்டிக்கல் வாழ்க்கை தெரியலையே சார் ? பிளைட்டில் வந்திருக்கலாம் அவசரம்ன்னா, இல்லே ஒரு காரைப் பிடிச்சு வந்திருக்கலாம், இப்படித் தனியா டூ வீலரில் வந்து இப்படிக் கிடக்கிறானே சார் " என்று சொல்லும் போது கண்கள் கலங்கி அழப் போவது போல இருந்தார். " சார் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுன்னு விடுங்க சார், தேறி வந்திடுவார் " என்று முத்து தேற்றினான் . இரண்டு நாளுக்கு முன்னால் டாக்டரிடம் அவர் சொல்லிக்கொண்டிருந்தார் " சார், எவ்வளவு   ரூபாய் ஆனாலும் பரவாயில்லை , என் மகனை முழுசா நல்லாக்கி கொடுத்திருங்க " என்று . கையில் வைத்திருந்த சிலுவையை எடுத்து ஒத்திக்கொள்வதும் ,எதோ ஸ்தோத்திரம் சொல்வதும், பையில் வைத்திருந்த பைபிளை எடுத்து சில பகுதிகளைப் படிப்பதும் மருத்துவமனைக்கு உள்ளே இருந்த சர்ச்சுக்கு  போவதும் வருவதுமாக  இருந்ததை கவனித்துக்கொண்டிருந்தான் முத்து.

                               சுற்றி , சுற்றிப் பார்த்தால் அழுகை, கண்ணீர், துயரம், துன்பம், அவர்களின் துன்பங்களைப் பார்க்கின்றபோது நமது துன்பம் பரவாயில்லை என்று முத்துவுக்கு தோன்றியது. 70 வயதிற்கு மேல் ஆன  அம்மாவைக் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றோம். 20 வயது, 30 வயது ஏன் ஒரு 10 வய்து சிறுமி எனப் பலர் தீவிர சிகிச்சை பிரிவில்.இருந்தார்கள். பெரும்பாலும் இரு சக்கர வாகன விபத்துக்கள். தலையில் ஹெல்மேட் இல்லாமல் , கண நேரக் கவனக்குறைவால் விபத்தில் மாட்டி , உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்கள். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண பிரிவுக்கு சில நோயாளிகள் குணமடைந்து சென்றார்கள். சில நோயாளிகளின் உறவினர்கள் மிகப்பெரிய அளவில் சத்தத்தோடு அழும்போது , சரி முடிந்து விட்டது என்பது முத்துவுக்கு தெரியும் . கொஞ்ச நேரத்தில் நோயாளியாய் உள்ளே சென்றவரின் உடல் பிணமாய் வண்டியில் செல்லும். ஒவ்வொரு முறையும் ஒரு வண்டி செல்லும் போது மற்ற நோயாளிகளுக்காக வந்தவர்களும் சேர்ந்து அழுதார்கள். அதுவும் அந்த இராமநாதபுரம் பாம்பு கடித்த பையனோட அம்மா ஒப்பாரியும் அழுகையுமாய் தன் பிள்ளை இறந்ததுபோலவே எண்ணி அழுது கொண்டிருந்தாள் ஒவ்வொரு வண்டி போகும்போதும். ஆனால் அந்த மருத்துவ மனை ஊழியர்கள்  சில நோயாளிகள் பிணமாக வண்டியில் போகும்போது மிக இயல்பாக பார்த்துக்கொண்டிருந்தனர். கல் நெஞ்சோ, மனிதர்கள் அழுவதை மிக இயல்பாக பார்த்துக்கொண்டிருக்கிறார்களே,இறப்பை இவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்கின்றார்களே என்று தோன்றியது முத்துவுக்கு, ஆனால் அதுதான் அவர்கள் வாழ்க்கை. இவர்களுக்கும் வேலைக்குச்சேர்ந்த புதிதில் வருத்தம் இருந்திருக்கும், அழுகை வந்திருக்கும். முதன் முதலில் காசுக்காகப் படுக்கும் ஒருத்தி , போகப் போக கட்டையாகி, வெறும் ஜடமாகி மரத்துப்போவது போல இவர்களும் மாறியிருக்கக்கூடும். கண்ணீர் ,அழுகை, கதற்ல் இவற்றையெல்லாம் ஏதோ வேற்றுக் கிரகவாசிகள் பார்ப்பது போல மிகவும் இயல்பாக பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

                                                                    முத்து  உட்கார்ந்திருந்த நாற்காலிக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சிறுமியைக் கவனித்தான். இரண்டு நாட்களாக் இங்குதான் இருக்கிறாள். அவள். "எத்தனாவது படிக்கிற " என்றான் அவளிடம் முத்து .  அவள்  தன் கையில் வைத்திருந்த சாமி படத்தை நெஞ்சோடு சேர்த்து வைத்துக்கொண்டு " ஆறாம் வகுப்பு " என்றாள்.  " யார் கூட வந்திருக்கிற " என்றான் முத்து . கொஞ்சம் தூரத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணையும் பையனையும் காட்டி " என் அம்மாவோடும், என் அண்ணனோடும் " என்றாள் " யார் , உள்ளே இருக்கிறா ? " என்றவுடன் ,' ' எனது அப்பா " என்றாள். முத்து சிறுமியுடன்  பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் அந்த சிறுமியின் அம்மாவும் அண்ணனும் பக்கத்தில் வந்தார்கள் " செல்வி, என்ன பண்ணிக்கிட்டிருக்க " என்று கேட்ட அந்தப்பெண்ணிடம் முத்து  விசாரித்தான்.

                                                           அந்தச்சிறுமி, செல்வியின் அப்பாவை இங்கு சேர்த்திருக்கின்றார்கள். பள்ளிக்கூட ஆசிரியராக இருக்கிறாராம். 42 வயது ஆகின்றதாம்.  செல்வியிடமும், அவளது அம்மாவிடமும், அண்ணனிடமும் அவ்வளவு அன்பாக இருக்கக்கூடியவர் போலும், பேசும் ஒவ்வொருவரும் அவ்வளவு பிரியத்தோடு பேசினார்கள். நல்லதொரு குடும்பமாக தெரிந்தது , என்ன பிரச்சனைக்காக வந்து சேர்த்திருக்கின்றீர்கள் என்று கேட்டான் முத்து. எப்போழுதும் பள்ளிக்கு சென்று வந்தவருக்கு  மூன்று நாட்களுக்கு முன் காய்ச்சல் அடித்திருக்கிறது., அருப்புக்கோட்டைக்கு அருகில் , டாக்டரிடம் சென்று காண்பித்திருக்கின்றார்கள். காய்ச்சல் அள்வு மிக அதிகமாக இருக்கின்றது, மதுரைக்கு கொண்டு செல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள், இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கின்றார்கள் என்பது தெரிந்தது.வந்த முதல் நாள் சாதாரணமாகத்த்தான் இருந்தார்கள். சாதாரணக்காய்ச்சல் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தார்கள் போலும் .

                                                        இரண்டு நாட்களாகவே செல்வி கையில் ஒரு சாமி படத்தை வைத்திருக்கின்றாள். சிறு பிள்ளையிலிருந்து பக்தி மிக அதிகமாக சொல்லிக் கொடுக்கப்படடவள் போலத் தெரிந்தது.  . விடாது ஏதோ சொல்லி பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தாள். அந்த சாமி படத்தை அவ்வளவு பாதுகாப்பாக எந்த இடத்திற்கு போனாலும் கொண்டு சென்று கொண்டிருந்தாள். "தேவை அற்றுப்போன இடமே கடவுள் செத்துப்போன இடமாகும் "  என்று பெரியார் சொல்லியதை 'இனிவரும் உலகம்' புத்தகத்தில் படித்த் ஞாபகம் முத்துவுக்கு..  அந்த மருத்துவமனையில் -அதுவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நோயாளியின் உறவினர்களிடம் அதீத கடவுள் பக்தி இருந்தது ஒன்றும் ஆச்சரியமில்லை. " அண்ணே, பயமும், சுய நலமும்தான் கடவுள் பக்திக்கு அடிப்படை , அது இல்லையென்றால் பக்தி இல்லை " என்று வழக்கறிஞர் மகேந்திரன் அடிக்கடி சொல்வதைக் கேட்டது முத்துவிற்கு ஞாபகத்திற்கு வந்தது. உறவினர்கள் இறந்து விடுவார்களோ, என்ன நிகழுமோ எனத் தெரியாமல் பயத்தில் இருந்த நோயாளிகளின் மன நிலையை நன்றாக உணர்ந்தவர்கள்போலும் அந்த மருத்துவமனை நிர்வாகிகள் . அந்த மருத்துமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவையும் கடவுள் வழிபாட்டையும் அருமையாக இணைத்திருந்தார்கள். ஒவ்வொரு தளத்திற்கும் ஒவ்வொரு மதத்தின் கோயில் இருந்தது. இந்துக் கோவில் , கிறித்துவ தேவாலயம், இஸ்லாம் மசூதி, சீக்கியர்களின் கோவில் போன்ற வடிவமைப்புகளில் சிறிய அளவில் இருந்த வழிபாட்டுத்தலங்கள் நோயாளிகளின் உறவினர்களுக்கு மிகப்பெரிய வடிகாலாக இருந்தன. . நோயாளிகளுக்கு கவுண்டரில் சென்று கத்தை கத்தையாய் பணத்தைக் கட்டும் உறவினர்கள், மறக்காமல் தங்களுக்குரிய வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று பிரார்ததனை செய்து  கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். எல்லா மத்த்தினருக்கும் பொதுவானது இந்த மருத்தவமனை என்று காட்டுவதற்கோ, அல்லது நோயாளியைக் காப்பாற்ற முடியவில்லை என்றால் கடவுள் மேல் பழியைப் போட்டுவிடலாம் என்று எண்ணியோ மருத்துவமனை நிர்வாகமே இந்த ஏற்பாட்டைச்செய்திருந்தது .

                                                 பல விதத்திலும் வசதியானவர்களுக்கு வாய்ப்பான அந்த மருத்துவமனையில் ஒரு விசயம் மட்டும் பெரிய துயரமாக இருந்தது முத்துவுக்கு. மருந்து மாத்திரை வாங்குமிடம். சாதாரண நோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, நுரையீரல் தீவிர சிகிச்சைப் பிரிவு, அதி தீவிர சிகிச்சைப் பிரிவு எனப் பல பிரிவுகள் இருந்தன, ஆனால் மருந்து மாத்திரை வாங்குமிடத்தில் அனைவரும் சமம்தான். சீட்டைப் போய் கொண்டு கொடுக்க ஒரு இடம், பணம் கொடுக்க ஒரு இடம், மருந்து வாங்க ஒரு இடம் எனப் பல இடங்கள் இருந்தன். சீட்டைக் கொண்டு போய் கொடுத்தால் 30 நிமிடம் , 40 நிமிடம் என ஆகியது. அப்படித்தான் தீவிர சிகிச்சைப்  பிரிவில் இருந்து அம்மாவுக்கு 'உடனடியாக அய்யாயிரம் ரூபாய்க்கு மருந்து வாங்கி வாருங்கள் 'எனப் பதட்டத்துடன் சொன்னார்கள். அவர்களின் பதட்டம் முத்துவை தொற்றிக்கொள்ள , அவசரம் அவசரமாக படிகளில் ஓடிவந்து சொல்லி, பணத்தைக் கொடுத்து பில்லை மருந்து எடுக்கும் இடத்தில் கொடுத்தான். ஆண்களும் , பெண்களுமாய் சிரித்துப்பேசிக்கொண்டே மருந்துகளை எடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். 5 ந்மிடம், 10 நிமிடம் என ஆகியபோதும், ஒரே மருந்தான 5000 ரூபாய் மருந்து கைக்கு வரவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த முத்து , " உங்க அப்பன், ஆத்தா யாராவது இப்படி தீவிர சிகிச்சைப் பிரிவில் அவசரம் எனக்கேட்டால் , இப்படித்தான் தாமதப்படுத்துவீர்களா " என உரக்க குரல் எழுப்பியவுடன், தீவிரத்தை உணர்ந்த அவர்கள் மருந்தை உடனடியாக முத்துவின் கையில் கொடுத்தர்ர்கள் . தீவிர சிகிச்சைப் பிரிவினருக்கு மட்டும் தனி மருந்துக்கடை வைக்க மாட்டார்களா, மத வழிபாட்டுத் தலங்கள் இத்தனையை வைத்தவர்கள் இதனை வைக்கக்கூடாதா என எண்ணம் முத்துவின் மனதில்  ஓடியது.


                                                 செல்வியின் அம்மா மருத்துவமனைக்குள் இருக்கும் கோயிலுக்குச்செல்லுவதும் நெற்றி நிறைய குங்குமம், விபூதியைப் பூசுவதுமாக இருந்தார். செல்வியின் அண்ணன் அமைதியாக இருந்தான். செல்வி அவனது அண்ணனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் . :டேய் , நம்ம சாமி நம்மைக் கைவிடாதுடா, நம்ம அப்பா யாருக்கு என்ன கெடுதல் பண்ணினாரு, சாமிக்கு தெரியும்டா, யாரு நல்லவரு,கெட்டவர்ன்னு, நம்ம உசிரே நம்ம அப்பாதாண்டா, எத்தனை பேருக்கு என்னென்ன உதவிகள் பண்ணியிருக்கிறாரு ". அவளது அண்ணன் அமைதியாக உட்கார்ந்து தலையை ஆட்டிக்கொண்டிருந்தான். 

                                           கொஞ்ச நேரத்திற்கு முன்னால் , செல்வியின் தாயாரை அந்த டாக்டர் அழைக்கிறார் என்று சொன்னார்கள். செல்வியின் அம்மா, செல்வி, அவளது அண்ணன் மூன்று பேரும் உள்ளே  போனார்கள்.அம்மாவைப் பாக்கப்போன முத்துவும் உள்ளே இருந்தான். அந்த டாக்டர் அவர்களிடம் விவரித்ததை முத்துவும் கவனித்தான்.. " நீங்கள் மிகவும் தாமதமாக இங்கு வந்து உங்கள் கணவரைச்சேர்ர்த்திருக்கின்றீர்கள். மூளைக் காய்ச்சலோடு இரண்டு முறை ஹார்ட் அட்டாக்கும் வந்து விட்டது. இரண்டு முறை காப்பாற்றி விட்டோம் இரண்டு நாளில். ஆனால் அவரது உடல் நிலை மிகவும் கவலை தரத்தக்கதாகவே இருக்கின்றது. மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள். நாங்கள் முழு முயற்சி செய்கின்றோம். ஆனால் உறுதியாக உயிரைக் காப்பாற்றி விடுவோம் எனச்சொல்ல முடியவில்லை, கடவுளின் கையில் தான் அவரது உயிர் . பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள், கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள்.அவரது நிலைமை அப்படி இருக்கின்றது" என்றார். செல்வியின் அம்மா அழுது கொண்டே " சார் ,எப்படியாவது அவர் உயிரைக் காப்பாற்றுங்கள் " என்றாள், டாக்டரையும் அம்மாவையும் மாறி , மாறிப் பார்த்துக்கொண்டிருந்த செல்வியின் அண்ணன் திடீரென்று டாக்டரின் காலில் நெடுஞ்சாண் கிடையாய் விழுந்தான். " எங்க அப்பாதான் எங்களுக்கு எல்லாம், அவ்வளவு பிரியமாக இருப்பார் எங்களிடம், எப்படியாவது அவரைக் காப்பாற்றுங்கள் " என்று கதற ஆரம்பித்தான் . அருகில் நின்றிருந்த முத்துவுக்கு  கண்களிலிருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது. சாமி போட்டாவை தன் நெஞ்சில் வைத்திருந்த செல்வி அழுதுகொண்டே வெகு வேகமாக எதோ சொல்லி பிரார்த்திக்க ஆரம்பித்தாள்.

                                   ஒரு மணி நேரம் கழிந்திருக்கும் . செல்வியின் அம்மா பேரைச்சொல்லி அழைத்தார்கள். ஏதோ சொல்லி, ஓங்கி அழ ஆரம்பித்த அவர் " அய்யையோ ஏன் ராசா என்ன விட்டுப்போயிட்டாங்களா, பச்சை மண்ணுகளை வச்சிக்கிட்டு என்னைத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டங்களா " எனறு கதற பக்கத்தில் சென்ற அந்தப் பையனின் " அய்யய்யோ அப்பா, அப்பா,அப்பா " என்ற கதறலும் கொடுமையாக முத்துவின் மனதை அழுத்த ஆரம்பித்தது. இரண்டொரு நாட்கள் மட்டுமே அறிமுகம் ஆன அந்தக் குடும்பத்திற்காக முத்துவின் கண்களிலிருந்தும் கண்ணீர் வரஆரம்பித்தது. அம்மாவும் ,அண்ணனும் அழ ஆரம்பித்தைப் பார்த்ததும் பக்கத்தில் ஓடிய செல்வியின் , கையில் இருந்த சாமி போட்டா நழுவிக் கீழே விழுந்தது.   சாமி போட்டோ  விழுவதைப் பார்த்தவண்ணம், அதனை எடுக்காமல் அப்பாவின் பிணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தாள் செல்வி.


    

(இந்தச்சிறுகதையை வெளியிட்ட சிறுகதைகள்.காம் இணையதளத்திற்கு நன்றி .) 



5 comments:

anandam said...

வணக்கம். அருமையாக இருக்கிறது.கதைகள் தொடரட்டும்.அளவு கொஞ்சம் அதிகம் தான்.பொறுமையாக படிப்பவர்கள் இல்லாத நாடு என்பதால் சொல்கிறேன்.

முனைவர். வா.நேரு said...

நன்றி . தங்கள் கருத்தையும் உள்வாங்கிக்கொண்டு எழுத முயற்சிக்கின்றேன்.

Unknown said...

nice brother. . .

qwerty said...

என்னுடைய சகோதரி கவிஞர் பூங்கோதை சொல்ல கேட்டு இப்போது அலுவலகம் செல்லும் வழியில் படித்துக்கொண்டே சென்றேன்.வீட்டிற்கு திரும்பிவிடலாமா என்ற அளவு கனமான எதார்த்தமான கதையல்ல நடந்த நிகழ்வு என் வாழ்விலும்..
அருமை..அருமை..

முனைவர். வா.நேரு said...

நன்றி தங்களுக்கும் அன்புச்சகோதரி கவிஞர் பூங்கோதை கனகராஜன் அவர்களுக்கும்