Friday, 29 June 2012

இன்னும் சில ஆண்டுகளில் ...


காட்டாற்று வெள்ளத்தில் 

அழுக்குகள் எல்லாம் 

அடித்துச் செல்வதுபோலவே 

காலம் காலமாய் 

சொல்லப்பட்ட கருத்துக்கள் 

எல்லாம் 

அறிவியல் வெள்ளத்தில் 

அடித்துச் செல்லப்படும் 

நீங்களும் நானும் 

விரும்பினாலும் 

விரும்பாவிட்டாலும் ! 


சொர்க்கமும் நரகமும் 

மட்டுமல்ல 

அதற்காகச் சொல்லப்பட்ட 

சொர்க்க இன்பங்களும் 

நரகச் 

சித்ரவதைகளும் 

சிறுவர்களுக்குச் 

சொல்லப்படும் கதைகளாய் 

மாறக்கூடும் ! 


அனைத்து மனிதர்களும் 

ஆப்பிரிக்காவில் தோன்றியவர்களே ! 

சிவப்பும் வெளுப்பும் 

நம் மூதாதையர் தோலின் நிறமல்ல 

கருப்பு மட்டுமே நமது 

மூதாதையர் நிறம் ! 


எங்கோ தோன்றி உலகெங்கும் 

பரவி நிற்கும் உருளைக்கிழங்கு போலவே 

ஆப்பிரிக்காவில் தோன்றி 

உலகெங்கும் விரவி நிற்கிறது 

மனித இனம் என்பது 

அறிவியலின் வழியே 

நிருபிக்கப்படும்பொழுது 

இன்றைய பக்தர்களும்கூட 

அன்றைக்கு 

ஒப்புக்கொள்ளக்கூடும் 

மனிதர்கள் கடவுள் 

என்பவரால் படைக்கப்பட்டவர்களல்ல! 

பரிணாம வளர்ச்சியால் 

வளர்ச்சி பெற்றவர்கள் என்பதை ! 


தேவைக்கேற்ற வகையில் 

மனிதர்கள் செயற்கையாய் 

உருவாக்கப்படும்பொழுது 

பக்தர்களும் கூட 

நம்பக்கூடும் 

மாற்றுத்திறனாளிகளாய் 

பிறப்பது முன் ஜென்மப் 

பாவமல்ல - 

மாற்றி அமைந்திட்ட 

சில ஜீன்களின் செயல் என்று ! 


உலகில் உள்ள மக்களெல்லாம் 

என்னுடன் பிறந்த பட்டாளம் 

என்று அறிவியல் நிருபிக்கும் 

நேரத்தில் 

செயற்கையாய் மனிதர்கள் 

உருவாக்கிய ஜாதிகளும் 

மதங்களும் ஏன் 

நாடுகள் எனும் சுவர்களும்கூட 

சுக்கு நூறாய் உடையக்கூடும் 

மனிதர்கள் அனைவரும் உலகில் 

ஒரு தாய் மக்கள் எனும் 

உணர்வில் வாழக்கூடும்.

                                            வா. நேரு 
- வெளியிட்ட eluthu.com-ற்கு(28.05.2012)க்கு நன்றி 

Wednesday, 27 June 2012

அண்மையில் படித்த புத்தகம் : அனுராதா



நூலின் தலைப்பு : அனுராதா

வங்க மொழியில் எழுதியவர் : சரத் சந்திரர்

தமிழ் மொழிபெயர்ப்பு : சு.கிருஷ்ண்மூர்த்தி

வெளியிட்டவர்கள் : சந்தியா பதிப்பகம், நியூடெக் வைபவ், 57-A,53-வது தெரு,
                                             அசோக் நகர் ,சென்னை-83  பேச : 044-24896979/55855704.
முதல் பதிப்பு : 2005
விலை ரூ 60
மொத்த் பக்கங்கள் : 144

                                             சரத் சந்திரர் என்னும் வங்க எழுத்தாளரை அறிமுகப்படுத்த "தேவதாஸ் " என்னும் கதாபாத்திரத்தை சொன்னாலே புரியும். இப்பொழுதும் யாராவது தாடி வைத்துக்கொண்டு அலைந்தால் என்ன தேவதாஸ் மாதிரி அலைகிறாய் என்று சொல்வதைப் பார்க்கின்றோம். திரைப்படமாக வந்து கூட வருடக்கணக்கில் ஓடிய கதை அது . அப்படிப்பட்ட சரத் சந்திரர் எழுதிய 5 சிறுகதைகளின் தொகுப்புதான் " அனுராதா " என்னும் தலைப்பில் மொழி பெயர்க்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

முத்ல்கதை , "வழக்கின் முடிவு", இரண்டாவது கதை "அபாகியின் சுவர்க்கம்", மூன்றாவது கதை " ஏகாதாசி பைராகி", நாலாவது கதை " அனுராதா", ஐந்தாவது கதை " மகேஷ்" . . ஒரு 150 ஆண்டுகளுக்கு முன்னால் நிலவிய ஜமீந்தாரிய ஆட்சிமுறை, அதில் சாதாரண மக்கள் பட்ட துயரங்கள், துன்பங்கள், கொடுமையான ஜாதிய முறை அதில் ஒடுக்கப்பட்ட மக்களின் துயரம் - இவைதான் பொதுவான கதைக்கரு என்று எடுத்துக்கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக் 5-வது கதையான மகேஷ் என்னும் கதை ஓர் எருதுவைப் பற்றிய கதை . கபூர், அவரது மகள் அமீனா, அந்த ஊரின் பிராமண ஜமீந்தார், அவரது வெலையாட்கள் - மகேஷ் என்னும் மாடு இவர்கள்தான் கதையின் மாந்தர்கள்.  கிராமத்தில் நிலவும் வறுமை, குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அலையும் நிலைமை, ஜமீந்தார் வீட்டுக்கு மட்டும் தனிக்கிணறு ஆனால் மற்றவர்கள் அதில் தண்ணீர் எடுக்க முடியாது, அமீனா முஸ்லீம் என்பதால் பொதுக்கிணற்றில் போய் எடுக்க முடியாது, யாராவது பிடித்து ஊற்ற வேண்டும், யாரும் ஊற்ற வில்லையென்றால் நின்று கொண்டே இருக்க வேண்டியதுதான் போன்ற அந்தக்கால் சமூக நிலைமைகள் மனித நேயத்தோடு சொல்லப்பட்டிருக்கும் விதம் நம்மை நெகிழ வைக்கிறது. அடுத்த வேளைக்கு அல்லாடும் குடும்பத்தில் இருக்கும் மகேஷ் என்னும் பெயர் கொண்ட  மாட்டுக்கு போட வைக்கோல் இல்லை, குடிக்க வைக்க த்ண்ணீர் இல்லை ,விளைந்த வைக்கோல் அனைத்தையும் ஜமீந்தார் ஆட்கள் கடனுக்காக எடுத்துக்கொண்டு போய் விட்டார்கள். அடி மாடாக விற்க சம்மதித்து அட்வான்ஸ் பணம் வாங்கி பின்பு மாட்டை பிடிக்க வந்தவனை திட்டி அட்வான்ஸ் பணத்தை திருப்பிக்கொடுத்து விடுகிறான் கபூர்.மாடு அவிழ்த்துக்கொண்டு ஓடி  அடுத்தவன் காட்டில் மேய்ந்ததால் அடியும் அவமான்மும் படுகிறான்.மூக்கைத் தரையில் தேயத்துக்கொண்டே தரையில் சுற்றி சுற்றி நடப்பது என்னும் தண்டனை என்று சொல்கின்றார் கதாசிரியர். முடிவில் அரும்பாடுபட்டு தன் மக்ள் கொண்டுவரும் தண்ணீரை மகேஷ் தட்டி விடுவதால் கலப்பையைக் கொண்டு அடிக்க, மகேஷ் இறந்து விடுகிறது. ஜமிந்தாருக்கு கட்ட வேண்டிய அபராதப் பணத்திற்கு பயந்து அப்பா கபீரும் , மகள் அமீனாவும் கிராமத்தை விட்டு இரவோடு இரவாக வெளியேறுகிறார்கள். அல்லா மீது நம்பிக்கை கொண்ட கபூர் கடைசியில் சொல்வது " அல்லா , நீ எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் சரி ! ஆனா என்னோட மகேஷ் தாகத்தோடு செத்துப்போயிடுச்சு . அது மேயறதுக்குக் கொஞ்ச நெலங்கூட யாரும் மிச்சம் வைக்கல்லே. நீ கொடுத்த பூமியிலே வெளையற புல்லையும் நீ கொடுத்த தண்ணியையும் அதுக்குக் குடுக்காதவனோட குற்றத்தை மட்டும் நீ ஒருபோதும் மன்னிக்காதே " . இன்றைக்கும் கிராமங்களில் மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் நல்ல தண்ணீர் குடிக்க கிடைக்கவில்லை. மாடுகளுக்கு தீவனுமும் இல்லை. வறுமையில் இருக்கும் விவசாயி மாடுகளை வித்தால் , பசு புனிதமானது அடிமாட்டுக்கு விற்கக்கூடாது என்று மதவாதிகள் வந்து விடுகின்றார்கள். சமீபத்தில் தர்மபுரி பக்கத்தில் வியாபாரிகளை  வாங்கிச் சென்ற மாடுகளை லாரியில் இருந்து கட்டாயமாக இறக்கி வாங்கிச் செனறவர்களை விரட்டியிருக்கிறார்கள் சில பேர்.மனிதர்கள் வாழவும் , அவர்கள் வளர்க்கும் மாடுகள் வாழவும் வழியில்லாத நிலைமை ஏன்? என்று சிந்திக்க மறுக்கும் மதவாதிகள் கட்டாய்ம படிக்க வேண்டிய கதை இது.
 
                             இரண்டாவது கதையான "அபாகியின் சுவர்க்கம் " இறந்த பின்பு சுடுகாட்டில் நிலவும் சாதியத்தை சொல்லும் கதை. ஒரு பார்ப்பணப் பெண் இறக்கிறார். அவரது உடலை  சந்தனக் கட்டைகளால் அடிக்கி வைத்து எரிக்கிறார்கள். அந்தப் பெண் எரிக்கப்படுவதை தாழ்த்த்ப்பட்ட பெண்ணான அபாகி பார்த்துக்கொண்டிருக்கிறாள். ஒரு விழா போல செய்யப்படும் சடங்குகளை விவரிக்கிறார் எழுத்தாளர், அபாகியின் பக்கத்தில் வரும் தன் மகனிடன் தான் இறந்தால் , சந்தனக் கட்டைகளை வைத்து எரிக்க வேண்டாம் , நமக்கு வசதி கிடையாது, ஆனால் நம்து வீட்டின் முன்னால் நாம் வளர்க்கும்  மரத்தினை வெட்டி அக்கட்டையை வைத்து எரிக்க மகனை கேட்டுக்கொள்கிறாள். அபாகி இறந்த அன்று அந்த மரத்தை வெட்ட அனுமதி ஜமீந்தார் ஆட்களால் மறுக்கப்படுகிறது. இந்த ஜாதிக்கு கட்டையை வைத்து எரிக்க ஆசையா . அதெல்லாம் கூடாது என்று மறுக்கப்படுகிறது. தனது அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற அலையும் மகன், அதனை சாதி அடிப்ப்டையில் மறுக்கும் சமூகம் , கடைசியில் கட்டை இல்லாமல் எரிக்கப்படும் அம்மா - இதுதான் கதை . ஜாதியக்கொடுமையை , இல்லாதவர்களின் ஆசை எப்படி நகைப்புக்கு உள்ளாகப்படுகிறது என்பதும் சொல்லப்படுகின்றது.

                                     மனதை நெகிழ வைக்கும் கதைகளாக இவைகள் உள்ளன. சரத் சந்திரரைப் பற்றிய முழுமையான அறிமுகம் இப்புத்தகத்தின் முன்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. பிறப்பால் பார்ப்பனர் என்றாலும் ஜாதிய ரீதியான கொடுமைகளை மிக நுட்பமாகவும், கூர்மையாகவும் பதிவு செய்கிறார் சரத் சந்திரர். அவரின் ஊர் சுற்றிய தன்மையே அவரது எழுத்தின் வெற்றிக்கு காரணம் எனலாம்.மொழி பெயர்ப்பு செய்த சு,கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒரு மொழி பெயர்ப்பு நூல் என்ற உணர்வே நமக்கு வராத அளவுக்கு இயல்பாக மொழி பெயர்த்திருக்கிறார்.

                                          படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு "அனுராதா" . மதுரை சிம்மக்கல் பொது நூலகத்தின் எண்  166328 . வீட்டு நூலகத்தில் வாங்கி வைக்க வேண்டிய புத்தகம்.

Tuesday, 19 June 2012

மதுரையில் தமிழில் இணைய தளம் பயிற்சி


மதுரையில் தமிழில் இணைய தளம் பயிற்சி பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமும் பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து நடத்தியது

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
மதுரை, ஜூன் 19- 17.6.2012 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை மதுரை மன்னர் திரு மலை நாயக்கர் கல் லூரியில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்க விழாவில் பகுத்தறிவா ளர் கழக மாவட்ட செய லாளர் சுப.முருகானந் தம் அனைவரையும் வர வேற்றார். பகுத்தறிவா ளர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா. நேரு தலைமை தாங் கினார்.
இணைய தள பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது
திராவிடர் கழ கத்தின் தலைமைச் செயற் குழு உறுப்பினர் தே. எடிசன் ராஜா, மதுரை மண்டல தி.க. செய லாளர் வே.செல்வம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசி ரியர் ஜி.ஜெகஜோதி ஆகி யோர் முன்னிலை வகித் தனர்.
ப.க. மாநிலச் செய லாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார் அறிமுக வுரையாற்றினார். அவர் தனது உரையில் தமிழில் இணையதளப் பயிற்சி, தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலில் நடை பெறுகிறது.
நமது எதி ரிகள் இணையதளத்தில் பல்வேறு பொய் செய் திகளைப் பரப்புகிறார் கள். எடுத்துக்காட்டாக , விற்பனைக்கு என்று வெளிநாட்டில் விளம் பரம் செய்யப்பட்ட வீட்டை முன்னாள் மத் திய அமைச்சர் ஆ.ராசா வின் வீடு என்று இணை யத்தில் பொய்யாய்ப் பரப்பினார்கள்.
இப்படி பொய், பொய் யாய்ப் பார்ப்பனர்களும், ஊடகங்களும் பரப்பும் பொய்மைக்கு எதிராக இணையதளத்தில் கருத்துப்போராட்டம் நடத்த வேண்டியிருக் கிறது. அதற்கு இப்படிப் பட்ட தமிழ் இணைய தளப் பயிற்சி தேவைப் படுகின்றது என்று குறிப் பிட்டார்.
தலைமை வகித்த வா.நேரு தனது உரையில்  இக்கல்லூரி யில் பயிலரங்கம் நடத்த அனுமதி அளித்த மன் னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் செயலாளர் அய்யா எம்.விஜய ராகவன் அவர்களுக்கும், முதல்வர் ச.நேரு, சுய நிதிப் பிரிவு இயக்குநர் இராஜா.கோவிந்தசாமி அவர்களுக்கும் பேருதவி புரியும் பேரா.நம்.சீனி வாசன் அவர்களுக்கும் - பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கும் நன்றியைக்கூறி , இப்பயி லரங்க வகுப்பை முழு மையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பயிற்சி யாளர்களைக் கேட்டுக் கொண்டார்.
குடியரசுத் தலைவ ரின் செம்மொழி இளம் அறிஞர் விருது பெற்ற  புதுச்சேரியைச் சார்ந்த பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் சிறப்பு விருந்தினராகப் பங் கேற்று வகுப்புக்களை நடத்தினார்.
தமிழ் இணையம் - தோற்றம், வளர்ச்சி, தமிழில் இணை யத்தை பய்ன்படுத்துவ தற்காக உழைத்த பெரு மக்களை அவர்களின் புகைப்படங்களோடு குறிப்பிட்டு அவர்களின் பங்களிப்பை விளக் கினார். தமிழ் இணைய மாநாடுகள்,சென்னை தமிழ் இணைய மாநாடு 99-ஆம் ஆண்டு நடை பெற்றதன் பயனாக ஒருங் குறி (ரஉடினந) உருவாக் கம் போன்ற வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிட் டார்.
மின்னஞ்சல் பயன் பாடுகள், வலைப்பூ உருவாக்கம்,வலைப்பூவில் எப்படி படங்களை ஏற் றுவது, எப்படி செய்தி களை ஏற்றுவது போன் றவற்றை விளக்கிக் கூறி னார். தமிழில் எப்படி தேடுவது, எப்படி டைப் செய்வது போன்றவற்றை விளக்கிப் பயிற்சியளித் தார். அடுத்த  வகுப்பில் , தமிழ் விக்கிபீடியா, இணைய இதழ்கள், பல் வேறு வலைத்தளங்கள், தமிழ் இணையப் பல் கலைக்கழகம்  போன்ற தலைப்புகளில் செய் முறையோடு  பேராசிரி யர் முனைவர் மு.இளங் கோவன் பாடம் நடத் தினார்.
விடுதலை இணைய தளம், அதில் உள்ள பெரியார் வலைக்காட்சி, பெரியார் பண்பலை, உண்மை, பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேசன லிஸ்டு போன்ற இதழ் களை எப்படி படிப்பது, கழக நிகழ்ச்சிகளை எப் படிப் பார்ப்பது, விடு தலை குழுமத்தில் எப் படி இணைவது, பேஸ் புக் போன்ற சமூக தளங் களை எப்படிப்பார்ப் பது போன்றவற்றை ச.பிரின்சு என்னாரெசு பெரியார் விளக்கினார்.
பங்கேற்ற மாணவ மாண விகள் கணினி செயல் முறை வகுப்புகளின் மூலம் தமிழில் இணைய தளத்தைப் பயன்படுத் தவும், தமிழில் உள்ள இணையதளங்களைப் பற்றி அறிந்துகொள்ள வும் மிகப்பெரிய வாய்ப் பாக இப்பயிலரங்கம் அமைந்தது.
மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் மதுரை புற நகர் மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் மா.பவுன்ராசா, மாநகர் மாவட்ட பகுத்தறிவா ளர் கழகத் தலைவர் சே.முனியசாமி ஆகி யோர் முன்னிலை வகித் தனர். மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் நம்.சீனி வாசன், பகுத்தறிவாளர் கழகத்தின் துணைத் தலைவர் க.நல்லதம்பி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பேரா.ஜெகஜோதி  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பங்கேற்பா ளர்கள் சார்பாக சுசீலா வேல்முருகன், கவிஞர் கோ ஆகியோர் தாங்கள் பயன்பெற்றது பற்றி கருத்துக் கூறினர்.
கவிஞர் கோ, தற் செயலாக இப்பயிலரங் கம் பற்றி கேள்விப்பட்ட தாகவும், இன்றைக்கு வராமல் போயிருந்தால் எவ்வளவு பெரிய வாய்ப் பைத் தவற விட்டிருப் பேன் என்று குறிப்பிட்டு சிறப்பாக பயிலரங்கம் நடைபெற்றதற்கு நன்றி தெரிவித்தார்.   பங்கு பெற்ற மாணவ மாணவி களுக்கு சான்றிதழ்கள் வழங்கி, ஓய்வு பெற்ற நீதிபதி பொ.நடராசன் சிறப்புரையாற்றினார் .
அவர் தனது உரையில் கணினி இன்றைய நிலை யில் எல்லா நேரங்க ளிலும் தேவைப்படுகின் றது. மதுரையில் இன் னும் இதனைப் போல 4, 5 தமிழ் இணையப் பயிலரங்கங்கள் நடை பெற வேண்டும். அப்படி நடைபெற அனைத்து விதமான உதவிகளை யும் வழங்கத் தான் தயாராக  இருப்பதாக வும் தெரிவித்தார்.
மன் னர் திருமலை நாயக்கர் கல்லூரி கணினி பயிற்சி கத்தில் பணியாற்றும் பேராசிரியர் கண்ணன் மற்றும் ஊழியர்களுக் கும், பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகப்பேராசிரியர்கள் அருணா, ஜி.ஜெகஜோதி அவர்களுக்கும் புத்தங் கங்கள் வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினர்களுக் கும், வலைப்பூவை சிறப் பாக வடிவமைத்து தொடர்ந்து இயஙகும் தோழர் பழனி வ.மாரி முத்து(த மிழோவியா. பிளாக்ஸ் பாட்.காம்) ஆகியோர்களுக்கு சிறப் புகள் செய்யப்பட்டன. மதிய உணவு, தேநீர், மினரல் வாட்டர், குறிப் பேடு உள்ளிட்டவைகள் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டன.
நிகழ்வின் இறுதியில்  மதுரைபுறநகர் மாவட்ட திராவிடர் கழக செய லாளர் அ.வேல்முருகன் நன்றி கூறினார்.

Friday, 1 June 2012

தமிழ் இணையப் பயிலரங்கம்


தமிழ் இணையப் பயிலரங்கம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
மக்கள் பல்கலைக்கழகமாம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில், ஊரக வளர்ச்சி உயராய்வு மய்யத்தின் சார்பாக தமிழ் இணையப் பயிலரங்கம் 20.05.2012 காலை 10 மணி முதல் மாலை 7 வரை நடைபெற்றது. தந்தை பெரியாரின் வழிமுறையே மக்கள் நலனை முன்னிட்டு வேறு யாரும் சிந்திக்காத வழியில் சிந்திப்பது, அதனை செயல்படுத்த எத்தனை இடை யூறுகள் வந்தாலும் எதிர்கொள்வது, இறுதி வெற்றி நமதே என்னும் நம்பிக்கையில் தொடர்ந்து பயணிப்பது, வெற்றி பெறுவது என்னும் வழிமுறையாகும். அந்த வழியில் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்த தமிழ் இணையப் பயிலரங்கத்தில் பங்கு பெற்றோருக்கு ஒரு புதிய  அனுபவமாகவும் அமைந்தது. தொடக்க விழா தொடக்க விழாவில் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அனைவரையும் வரவேற்றார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் துணை முதன்மையர் பேரா.க. திருச்செல்வி தலைமையுரையாற்றினார். பகுத்தறி வாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் வா.நேரு அறிமுகவுரையாற்றினார். மக்கள் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் நல்.இராமச் சந்திரன் அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.
கிராமப் பகுதிகளிலிருந்து வந்திருந்த மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதத்தில் அவரது உரை அமைந்தது. மிக சமீபத்தில் வெளிவந்த சுபாரட்டோ பாக்சி என்பவர் எழுதிய ஆங்கிலப் புத்தகமான M.B.A. at 16 A teenagers guide to Business... என்னும் புத்தகத்தில் இருந்த வாழ்க்கை வரலாறுகளை சுட்டிக்காட்டினார். சாதாரண கிராமத் தில் பிறந்து வளர்ந்த அவர்கள் எப்படி பெரிய ஆட்களாக வளர்ந்தார்கள் என்பதனையும், அதற்கு இணையம் எவ்வளவு உதவியாக இருந்தது என்பதனை யும் புத்தகத்திலிருந்து மேற்கோள்கள் காட்டி உரை யாற்றினார். இணையத் தினை சரியாகப்பயன்படுத்து வதன் மூலம் பலவகை களில் முன்னேறலாம் என்பதனை எடுத்துக்காட்டினார். தொடர்ந்து திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் உரத்தநாடு குணசேகரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியர் கா.செந்தில்குமார் அவர்கள் நன்றி கூற காலை தொடக்க விழா முடி வுற்றது. வந்திருந்த பயிற்சியாளர்கள், விருந்தினர்கள் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டு, கணினி அறைக்கு வந்து சேர்ந்தோம்.
திராவிடர் கழக தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் உரையாற்றினார். (20.5.2012 வல்லம்)
பயிற்சியின் ஆரம்பத்தில் தடுமாற்றம்
ஏறத்தாழ 150க்கும் மேற்பட்ட  பயிற்சியாளர்கள், அனைவரும் லேப்டாப் எனப்படும் மடிக் கணினி முன் அமர்ந்தனர். பயிற்சியாளர்களில் 80 சதவீதம் 21 வயதுக்கு உட்பட்டவர்கள். பெரும்பாலோர் இப்போது தான் கணினியைப் பயன்படுத்துகிறோம் என்று கூறிட கணினி வகுப்பினை ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் எடுக்க ஆரம்பித்தார். கணினியைப் பற்றி, இணையம் பற்றிய வரலாறுகளை எடுத்துக்கூறிவிட்டு , நோட்பேடு எனப்படும் கணினி மென்பொருளை திறந்து ஆங்கிலத்தில் டைப் செய்யுங்கள் என பணித்தார். பல பேர் அப்போதுதான் தட்டுத்தடுமாறி கணினி விசைப்பலகையில் தட்டச்சு செய்ய ஆரம்பித்தனர். அடுத்து தேடு தளம் என்றால் என்ன என்பதனைக் கூறி  கூகிள் என்னும் தேடுதளம் பற்றிய குறிப்புகளைத் தந்தார். கூகிள் என்னும் தேடுதளத்தில் தமிழிலேயே நீங்கள் தேடலாம் என்பதனைத் தெளிவுபடுத்தினார். தமிழில் நீங்கள் தட்டச்சு செய்யலாம் என்பதனைக் குறிப்பிட்டு தமிழெழுதி என்னும் (Tamil editor)   இணைய தளத்தினை பயிற்சியாளர்களுக்கு அறிமுகப் படுத்தினார். தமிழ் எழுதி என்னும் பகுதிக்குச் சென்று தங்கள் பெயரை, தங்கள் ஊர்ப்பெயரை எல்லாம் அடிக்க ஆரம்பித்தவுடனேயே பயிற்சி பெறுபவர்களிடம் ஓர் உற்சாகம் பற்றிக்கொண்டது. கணிப்பொறியைக் கையாளுவது மட்டுமல்ல, அதில் தமிழில் தாங்கள் விரும்பியவண்ணம் அடிக்கலாம் என்பதனை நேரடியாகக்  கற்றுக்கொண்டனர். கணினி கற்றுக் கொள்வது கடினமல்ல, இணைய இணைப்பு இருந்தால் தமிழில் நமது கருத்துகளை பகிர்ந்து கொள்வது கடினமல்ல என்பதனை உணர்ந்து கொண்டனர். கணினியில் தட்டச்சு செய்வதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் கை தூக்குங்கள் எனச்சொல்ல, அப்படி கை தூக்கியவர்களிடத்தில் அருகில் சென்று எப்படி தட்டச்சு செய்வது என்பதனை தெளிவுபடுத்தினர். தெளிவுபடுத்தும் பணியில் ஏறத்தாழ 10க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆர்வமாக இந்த பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு தெளிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மின்னஞ்சலும் நடைமுறை வாழ்வும்
அருமையான மதிய உணவு பல்கலைக்கழகத்தின் சார்பாக வழங்கப்பட்டது. மதிய உணவுக்குப்பின் பயிற்சி பெறுபவர்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். ஏற்கெனவே கணினி தெரிந்தவர்களுக்கு, மேலும் பல செய்திகளை வழங்கும்முகமாக பிரின்சு என்னாரெசு பெரியார் வகுப்பு எடுத்தார். ஜிமெயிலில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என்பதனை வா.நேரு விளக்கிக்கூறி, ஒவ்வொரு படியாக கேட்கும் விவரங்களை பதிவு செய்யச் சொல்ல, பயிற்சி பெறுவோர் தங்களுக்குரிய மின்னஞ்சல்களை உருவாக்கிக்கொண்டனர். மின்னஞ் சல் அனுப்புவது எப்படி, மின்னஞ்சலில் உள்ள பல்வேறு வசதிகள் போன்றவை சொல்லித்தரப்பட்டது.  சமூக வலைத்தளங்கள் என்றால் என்ன? பேஸ் புக்கைப் பயன்படுத்துவது எப்படி, நாம் எப்படி கேள்விகள் கேட்கலாம், பதில்கள் எப்படிக் கொடுக்கலாம் போன்ற வற்றை பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் தகடூர் தமிழ்ச் செல்வி விளக்கினார். எங்கு போனாலும் மின்னஞ்சல் இனித் தேவை, மின்னஞ்சலின் பாஸ்வேர்டை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்பதும் சொல்லப்பட்டது. விக்கிபீடியா என்னும் இணைய தளத்தின் பயன், அதில் சென்று எப்படி கருத்துக்களை எழுதுவது, தவறாக யாரும் எழுதி யிருந்தால் எப்படி சரி செய்வது போன்றவை விளக்கிக் கூறப்பட்டன.
இணைய இணைப்பில் நீங்கள் தனியாக அமர்ந்திருந் தாலும், நீங்கள் கண்காணிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றீர்கள் என்னும் உண்மையை உணர்ந்து செயல்படுங்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் கதவு எண்ணும், தெருப்பெயர், ஊர்ப்பெயர் இருப்பதைப் போலவே, ஒவ்வொரு இணைய இணைப்பிற்கும் அய்.பி. எனப்படும் இணைய முகவரி இருக்கிறது, எளிதாக யார், எதனை எங்கிருந்து அனுப்பியிருக்கின்றார்கள் என்பதனை கண்டுபிடிக்க இயலும் என்பவை போன்ற நடைமுறை உண்மைகளை,  பயிற்சியாளர்களுக்கு செய்தித்தாள் களில் வந்த சில செய்திகளைக் குறிப்பிட்டு பயிற்றுநர்கள் விளக்கினர்.
நமது வலைதளங்கள்
நமது விடுதலை இணைய தளத்தின் முகவரி, விடுதலை இணைய தளத்தில் உள்ள Periyar.org மற்றும் பெரியார் பண்பலை , எப்படி விடுதலை இணைய தளத்தில் சென்று நமது கருத்துகளை எழுதுவது போன்ற பல்வேறு செய்திகள் விளக்கப்பட்டன. உண்மை, தி மாடர்ன் ரேசனலிஸ்ட், பெரியார் பிஞ்சு என நமது பத்திரிகைகள் அனைத்திற்கும் இருக்கும் வலைத் தளங்கள் விளக்கப் பட்டன.
நடக்க இருப்பவை பகுதியில் எப்படி கழக நிகழ்வுகளைப் பார்ப்பது என்பது விளக்கப்பட்டது. பின்பு பிளாக் என்றால் என்ன? பழனி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தோழர் வ.மாரிமுத்துவின் தமிழோ வியா.பிளாக்ஸ்பாட். காம் (tamizhoviya.blogspot.com..) மற்றும் பல தனிப்பட்ட மனிதர்களால் இயக்கப்படும் வலைத் தளங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. பயிலரங்கத்தின் இறுதிப் பகுதியில் திராவிடர் கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் கலந்து கொண்டார்.  தோழர்களின் வினாக்களுக்கு விடைகள் அளிக்கப்பட்டு சந்தேகங்கள் தீர்க்கப்பட்டன.
சான்றிதழும் நன்றியும்
பயிலரங்கத்தில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாலை 5.30 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அய்ன்ஸ்டீன் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்வுக்கு பல்கலைக் கழகப் பதிவாளர் முனைவர் மு. அய்யாவு அவர்கள் தலைமையு ரையாற்றினார். அவர் தனது உரையில் ஏன் கணினி கற்றுக் கொள்ள வேண்டும் என்பதனை விளக்கி மாணவர்கள் மனதில் பதியும் வண்ணம் உரையாற்றினார். சான்றிதழ் வழங்கிய தலைமை நிலைய செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள், இந்த பயிற்சி ஒரு தொடக்கமே, இப்பயிற்சியினைத்  தொடர்ந்து முயற்சி எடுத்து நல்ல நிலையில் கணினியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதனைக் குறிப்பிட்டு 1998-இல் முதன்முதலில் தான் கணினியை இயக்கிய சூழலை எடுத்துரைத்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சென்ற வருடம் தந்தை பெரியார் பிறந்தநாள் ஆண்டு மலரில் இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்கள். இங்கு சிறப்பாக நடந்து முடிந்தி ருக்கிறது.இன்னும் பல ஊர்களில் இந்த தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்தப்படும் எனத் தெரிவித்தார். இந்த பயிலரங்கம் சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த மாநில இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார், மாநில மாணவரணி தோழர் திராவிட எழில் மற்றும் பேராசிரியர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் பொன்னாடை  போர்த்தி சிறப்பித்தார் தலைமை நிலையச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள். தொடர்ந்துஅனைவ ருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.
பயிலரங்கத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை மேடையில் வந்து தெரிவித்தனர். கணினி பயிற்சி பெற்ற கொத்தனார் முருகேசன் சொன்னார், நான் 6ஆம் வகுப்புதான் படித்திருக் கிறேன். கணினியை என் னால் இயக்க முடியும் என்று நினைத்ததே இல்லை, இன்று இயக்கினேன், மிக்க நன்றி என்றார், கும்பகோணத்தை  சேர்ந்த நாட்டியக் கலைஞர் தமிழ்விழி  சொன்னார், நான் மட்டும் இங்கு வந்து கணினி கற்றுக்கொள்ளவில்லை, , எங்கள் அம்மாவும்  வந்து கற்றுக்கொண்டார்கள்,மிக்க மகிழ்ச்சி என்றார்.
வடசேரி பன்னீர்செல்வம் தனது மகளோடு ஒரு விண்ணப்பத்தை நிரப்பும்போது , மின்னஞ்சல் இல்லாமல் அந்த இடத்தை நிரப்ப முடியவில்லை , இப்போது கற்றுக்கொண்டேன் , மிக மிக நன்றி என்றார்.  ஓவியர் சுந்தர் , சிறீரங்கம் தமிழ் செல்வன்,ஆசிரியர் அன்பரசு எனக் கருத்து தெரிவித்த  அனைவருமே மிகப் பயனுள்ள பயிற்சி  எனத் தெரிவித்தனர்.இறுதியாக ஊரக வளர்ச்சி உயராய்வு மய்யத்தின் கூடுதல் இயக்குநர் பேரா. முனைவர்.ந.சிவசாமி அவர்கள் நன்றி கூறினார். கணினி கற்றவர்களே, அடுத்த வேலை என்ன? வலைத் தளங்கள் என்பது இன்றைக்கு பெரும்பாலும் பார்ப்பனர்கள் கையில் உள்ளது. திராவிட இயக்கத் தலைவர்களைப் பற்றி, திராவிட இயக்கம்  பற்றி கண்டபடி எழுதுகிறார்கள்.பதிலடி கொடுக்காமல் பார்ப்பனர்கள் திருந்த மாட்டார்கள். அவர்கள் எந்த மொழியில், நடையில் எழுது கிறார்களோ அதே மொழியில், அதே நடையில் நமது தோழர்கள் பதில் கொடுக்க வேண்டும். வரலாற்றைத் திரித்து எழுதுவோர்க்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். விடுதலை இணைய தளத்தை தோழர்கள் மத்தியில் பரப்ப வேண்டும். பொதுவானவர்கள் என்ற போர்வை போர்த்தி பேஸ்புக் போன்ற இணைய தளங்களில் இடக்கு மடக்காய் எழுதுவோர்க்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
மின்னஞ்சலை நன்றாகக் கையாளத் தெரிய வேண்டும். நக்கீரன் போன்ற பத்திரிகைகள் 500 வார்த்தைகளுக்குள் கருத்துக்கூற வசதி செய்து கொடுக்கின்றார்கள். நறுக்கென்று சுருக்கமாய் செய்தியை சொல்லத் தெரியவேண்டும், ஆதாரத் தோடு சொல்லத் தெரியவேண்டும்.பேஸ் புக் போன்ற சமூக வலைத்தளங்களில் நமது இயக்க தோழர் களோடு நட்பில் இருந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நமது மரியாதைக்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவது போல " நமது இயக்கம் பிரச்சார இயக்கம்". இந்த பிரச்சார இயக்கத்தின் மூலமாக  தமிழ் இணைய தளப் பயிற்சியினைப் பெற்றவர்கள்  இணைய வழிப் பிரச்சாரத்தை செய்தல் வேண்டும், அதுவே உண்மை யான நன்றியாகும்.  தோழர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் கணினி ஆசிரியராய் வகுப்பெடுத்தார், கணினி இணைப்பில் தொழில்நுட்ப மேலாளராய் சரி செய்தார், பேஸ் புக் , மற்றும் நமது விடுதலை இணைய தளத்தில் சென்றபோது  இயக்கத்தோழராய் கருத்து களை முன்வைத்தார். வலைத்தள உருவாக்கத்தில் கணினி மென்பொருள் வல்லுநராய் கணினி நுட்பங் களைச் சொன்னார்.
இந்தப் பயிலரங்கத்தில் அவரின் பன்முகப்பணி பெரிதும் பாராட்டத்தக்கது.துணைவேந்தர் அவர் களின் வழிகாட்டுதலில் பேரா.கா.செந்தில்குமார், பல்கலைக் கழக மக்கள் தொடர்பு அதிகாரி திரு. பாண்டியன், பேரா. இளங்கோ, முனைவர் அதிரடி க.அன்பழகன் என ஒரு பேராசிரியர்கள் குழுவே  முனைப்புடன் செயல்பட்டு இந்த நிகழ்வை வெற்றி கரமாக நடத்திட பேருதவி புரிந்தன

Tuesday, 22 May 2012

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்


பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.நல்.இராமச்சந்திரன் பயிற்சியைத் தொடங்கி வைத்து  உரையாற்றுகிறார்.

பெரியார் மணியம்மை ஆட்சி மன்ற குழு உறுப்பினர் வீ.அன்பராஜ் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அயன்ஸ்டீன் அரங்கத்தில் திரை வழியே பங்கேற்றவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது.

வல்லம், மே 21- பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஊரக வளர்ச்சி உயராய்வு மய்யம், திராவிடர் கழக இளைஞர் அணி மற்றும் பகுத்தறி வாளர் கழகமும் இணைந்து நடத்திய தமிழ் இணை யப் பயிலரங்கத் தொடக்க விழா நேற்று பல்கலைக் கழக வள்ளுவர் அரங்கில் கோலாகலமாய் நடை பெற்றது.
தொடக்க விழா
இந்நிகழ்ச்சிக்கு பகுத்தறிவாளர் கழக மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் வரவேற்புரை வழங்கினார்.  பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணை முதன்மையர் பேராசிரியர் க.திருச்செல்வி தலைமை தாங்கினார். பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் வா.நேரு அறிமுக உரையாற்றினார். இப்பயிலரங்கிற்கு பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. நல்.இராமச் சந்திரன் அவர்களின் தொடக்க உரையில் கிராமப் புற மாணவர்களும், இளைஞர் களும் இத்தகைய தமிழ் இணையப் பயிலரங்கம் மூலம் தங்களையும் தங்களது சமூகத்தையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியும் என்று கூறியதோடு பிரமிக்கச் செய்யும் சாதனைகளை கிராமப் புறங்களில் இருந்து வரும் இளைஞர்களால்தான் சாதிக்க முடியும். அதற்கு  கிடைத்த வாய்ப்புகளை நன்முறையில் பயன்படுத்தினால் அசாதாரண வெற்றிகளையும் நன்மைகளையும் குவிக்க இயலும் என்று தனது தொடக்க உரையில் தெரிவித்தார். பெரியார் புரா திட்டத்தின் வழியாக கிராமப் புற 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு கணிதம் மற்றும் ஆங்கில பாடங்கள் கணினி முறையில் பல்கலைக்கழகத்தின் மூலம் கற்றுத்தர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக, துணைப் பொதுச் செயலாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக பெரியார் மணியம்மை பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் கா.செந்தில்குமார் நன்றியுரை வழங்கினார்.
நிறைவு விழா
200 க்கும் மேற்பட்ட கிராம புற இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். இப் பயிலரங்கத்தில் தமிழ் இணையம் வளர்ச்சி வரலாறு வலைப்பூ உருவாக்கமும் பயன்பாடுகளும் மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய அறிமுகம் ஆகிய பல்வேறு தலைப்புகளின் கீழ் பயிற்சிகள் வழங் கப்பட்டன. திராவிடர் கழக மாநில இளைஞர் அணி செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், திராவிடர் கழக மாநில மாணவரணி செயலாளர் திராவிட எழில் இப்பயிற்சி பயிலரங்கத்தை ஒருங்கிணைத் தனர்.  இந்நிகழ்ச்சியின் நிறைவு விழாவானது மாலை பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அய்ன்ஸ்டீன் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் பகுத்தறிவா ளர் கழக மாநில துணைத் தலைவர் தகடூர் தமிழ்ச் செல்வி வரவேற்புரை வழங்க பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் மு.அய்யாவு தலைமையுரை ஆற்றினார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ்  சிறப்புரை யாற்றி, இப்பயிற்சியில் பங்கேற்ற வர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். மேலும் இப்பயிற்சியில் பங்கேற்றவர்களில் சிலர் இப்பயிற்சியானது தங்கள் அறிவுகண்களை திறந்ததாகவும், பயனுள்ளதாக அமைந்தாகவும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். இப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்த அனைவருக்கும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஊரக வளர்ச்சி உயராய்வு மய்ய கூடுதல் இயக்குநர் ந.சிவசாமி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிகள் பல்கலைக் கழக துணைவேந்தர் சீரிய வழிகாட்டுதலின்படி மிகச் சிறப்பாக நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர்.மு.அய்யாவு, ஊரக வளர்ச்சி உயராய்வு மய்யத்தின் கூடுதல் இயக்குநர் பேரா. முனை வர்.ந.சிவசாமி, பவர் தொண்டு நிறுவன செயலாளர் முனைவர்.உ.பர்வீன், பெரியார் சிந்தனை மய்ய துணை இயக்குநர் முனைவர்.க.அன்பழகன், மாநில ப.க.துணைத் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்கறிஞர் சி.அமர்சிங், மாவட்ட செயலர் மானமிகு த.ஜெக நாதன், மாநில மாணவரணி செயலர் மானமிகு திராவிட எழில் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியப் பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Saturday, 19 May 2012

ஆந்திராவில் தமிழர் தலைவர் ஒலித்த சமூக நீதிக் குரல்


தனியார் துறைகள் பெருகி வரும் பொருளாதாரச் சூழலில்
தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு என்பதே நமது அடுத்த கட்ட முக்கிய நடவடிக்கை!
ஆந்திர மாநிலம் ரேபல்லியில் நடைபெற்ற சமூகநீதி பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி எழுச்சியுரையாற்றுகின்றார். ஆந்திர சமூக நீதி பேரவையின் மதிப்புறு தலைவர் கேசன சங்கர் ராவ் உடன் உள்ளார். பேரவையின் தலைவர் கேசன ராம கோட்டிஸ்வரராவ் தமிழர் தலைவரின் ஆங்கிலப் பேச்சினை தெலுங்கில் மொழி பெயர்க்கின்றார். (10.5.2012)
தெனாலி மே, 11- புதிய பொருளா தாரச் சூழலில், தனியார்த் துறைகள் பெருகி வரும் இக்காலக் கட்டத்தில் சமூக நீதிக் கண்ணோட்டத்தில் நமது அடுத்த நடவடிக்கை - தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை என்பதை வலியுறுத்தி அதனைப் பெறுவதுதான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் தெனாலி அருகில் ரேபல்லி பேரூரில் மாபெரும் சமூக நீதிப் பொதுக் கூட்டம்  ஆந்திர மாநில சமூகநீதிப் பேரவை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மே 10 ஆம் நாள் ரேபல்லி அரசு இளநிலை கல்லூரி மைதானத்தில் மாலை 6 மணிக்கு தொடங்கிய பொதுக் கூட்டத்தில் திரா விடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேருரை ஆற்றினார். ஆந்திர மாநிலத்தின் சமூகநீதித் தலைவர்கள் மற்றும் போராளிகள் பலர் கலந்து கொண்டு உரையாற்றிச் சிறப் பித்தனர்.

தமிழர் தலைவரை வரவேற்றனர்

ரேபல்லி சமூக நீதிக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து இரயிலில் சென்ற தமிழர் தலைவரை தெனாலி இரயில் நிலையத்தில் மே 10ஆம் நாள் காலை 6 மணி அளவில் சமூக நீதிப் பேரவையின் தலைவர்கள் அன்புடன் வரவேற்றனர். தமிழர் தலைவருடன் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா. நேரு, பொதுச் செயலாளர் வீ. குமரேசன், மேனாள் நீதிபதி ஆர். பரஞ்சோதி  ஆகியோர் சென்றனர்.

முற்பகல் செய்தியாளர் சந்திப்பு

தெனாலி நகரத்திலேயே விடுதியில் தமிழர் தலைவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆந்திர சமூக நீதிப் பேரவையின் சார்பாக முற்பகல் 11.30 மணியளவில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சமூகநீதிப் பேரவையின் மதிப்புறு தலைவர் கேசன சங்கர்ராவ் அவர்களின் தெனாலி இல்ல வளாகத்திலேயே செய்தியாளர்களை தமிழர் தலைவர் சந்தித்தார்.
சமூகநீதிப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய சமூக நீதிப் பேரவையின் தலைவர் வழக்குரைஞர் கேசன ராம கோட்டீஸ்வராவ், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வீ.குமரேசன், பேராசிரியர் கவுடு சத்தியநாராயணா, வழக்குரைஞர் கேசன ராமசாமி, கொக்கிலிகட்டா வெங்கட நரசிம்மராவ், சுனில் கவுடு.
செய்தியாளர்களிடம் தெனாலியில் உள்ள தெலுங்கு, செய்திப் பத்திரிகை மற்றும் தெனாலியில் உள்ள தெலுங்கு, செய்திப் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடக செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் சுருக்கமாகக் கூறியதாவது:

சமூக நீதிப் பயணம் பல காட்டாறுகளைக் கடந்து வந்துள்ளது. பிரிட்டிஷ் இந்தியாவில் தமிழக, ஆந்திரப் பகுதியினைச் சார்ந்த மக்கள் தலைவர்கள் சமூகநீதி வெளிச்சத்தைத் தூக்கிப் பிடித்த காரணத்தால்தான் சமுதாயத்தில் கடவுள், மதத்தின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்கள் விழிப்புணர்வு பெற்று உயர்நிலைக்கு, மற்றவர் களுக்கு இணையாக வர முடிந்தது. அடுத்து சமூகநீதித் த்துவத்தை தந்தை பெரியார் மாபெரும் இயக்கமாக வளர்த்தெடுத்தார். சமூக நீதிப் பயணம் ஒழுங்காக நடைபெற தளம் அமைத்துக் கொடுத்தார்.
அடுத்த கட்டத்தில் எங்களைப் போன்றவர்கள் இதர சமூகநீதித் தலைவர்களுடன் இணைந்து போராடிய காரணத்தால் மண்டல் குழு பரிந்துரைகள் படிப்படியாக நடைமுறைக்கு வரும் சூழல்கள் உருவாயின.

இப்பொழுது மாறிவரும் பொருளாதாரச் சூழலில் அடுத்த கட்டத்தை சமூக நீதிப் பயணம் எட்டியுள்ளது. இதுவரை கல்வி, வேலை வாய்ப்புகளில் அரசு மற்றும் அரசு சார்ந்த நிலையங்கள் மற்றும் நிறுவனங்களில் மட்டுமே இருந்து வந்துள்ளது இட ஒதுக்கீடு முறை, தனியார் மயமாகும் சூழலில், தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை.

அதனை நடை முறைப்படுத்துவதற்கு திராவிடர் கழகமும் இதர சமூக நீதி அமைப்புகளும் குரல் கொடுத்து அதற்காகக் களம் இறங்கும் சூழல்கள் உருவாகி உள்ளன. இந்த சவால் நிறைந்த சமூக நீதிப் பயணத்தை ஒடுக்கப் பட்ட, அடக்கப் பட்ட மக்களுடன், சமூகத்தின் அடித்தளத் தில் உள்ள மக்களின் ஆதரவினையும் சேர்த்து போராட அணியமாக உள்ளோம். இட ஒதுக்கீடு என்பது வெறும் வேலை வாய்ப்புக்கான, வாழ்விற்கான வருவாய் ஈட்டும் வழி என்பதை விட, நாட்டு நிர்வாகத்தில், அதிகாரத்தில் அனைத்துத் தள மக்களும் பங்கேற்கும் அதிகாரப் படுத்துதல்   என்ற நோக்கத்தில்தான் என்பதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அனைத்துப்  பிரிவு மக்களும் பங்கேற்கும் ஆட்சி அதிகார முறையே உண்மையான மக்களாட்சியாகும்.

மேற்குறிப்பிட்ட தனது உரைக்குப் பின் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு தமிழர் தலைவர் பதிலளித்தார். செய்தியாளர் சந்திப்பில் தமிழர் தலை வருடன் ஆந்திர சமூக நீதிப் பேரவையின் மதிப்புறு தலைவர் கேசன சங்கர் ராவ், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா.நேரு, பொதுச் செயலாளர் வீ.குமரேசன் மற்றும் மேனாள் நீதிபதி ஆர்.பரஞ்சோதி ஆகியோர் இருந்தனர்.
மாலையில் தெனாலியில் இருந்து 43 கி.மீ. தொலைவிலுள்ள ரேபல்லியில் நடைபெற்ற சமூக நீதிப் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் சிறப்பு விருந் தினராகப் பங்கேற்று எழுச்சி மிகு பேருரை ஆற்றினார்.

தோழர் சரயா குழுவினரின் பாடல் நிகழ்ச்சி

கூட்டத்தின் தொடக்கத்தில் பகுத்தறிவாளர் தோழர் சரையா தலைமையில் மக்கள் சேவை சங்கத்தின் தோழர்கள் உணர்ச்சி மிக்க சமூக நீதிப் பாடல்களை நாட்டு இசைக் கருவிகளை இசைத்துக் கொண்டே பாடினர். தந்தைபெரியார், தமிழர் தலைவர் கி.வீரமணி ஆகியோரைப் பற்றிய தெலுங்குப் பாடல்களைப் பாடிய போது திரண்டிருந்த மக்கள் கூட்டத்தினர் கரவொலி எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
சமூக நீதிக் கூட்டத்தில் அறிமுக உரையினை சமூக நீதிப் பேரவையின் தலைவர் கேசன ராமகோடீஸ்வர ராவ் ஆற்றினார். அதனையடுத்து ஆந்திர சமூக நீதிப் பேரவையின் மதிப்புறு தலைவர் சங்கர்ராவ் தலைமையுரை ஆற்றினார்.

ஆந்திர சமூக நீதிப் பேரவை மதிப்புறு தலைவர் கேசன சங்கர் ராவ் தலைமையுரை

தலைவர் வீரமணிகாரு, இந்த சமூக நீதிப் பொதுக் கூட்டத்தின் கலந்து கொண்டு உரையாற்றுவது எங்களுக் கெல்லாம் எழுச்சியையும், ஊக்கத்தையும் தருகிறது. தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் கொள்கை வாரிசாக உள்ள வீரமணிகாரு மிகுந்த தொலைநோக் குடன் எங்களைப் போன்ற சமூக நீதி அமைப்புகளை ஊக்கப்படுத்தி நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கு பாடுபட்டு வருகிறார். இந்த தலைமுறையின் நலனுக்குப் பாடுபடுபவர்கள் அரசியல்வாதிகள்; எதிர்காலத் தலைமுறைக்கும் சேர்த்துப் பாடுபடுபவர்கள் அரசியல் அறிஞர்கள். அத்தகைய அறிஞராகத் திகழ்கின்ற வீரமணிகாரு முன்னெடுக்கும் சமூக நீதிப் பயணச் செயல் பாடுகளில் நாங்கள் - எங்களை, எங்கள் பகுதி மக்களை இணைத்துக்கொண்டு முழுமையாகப் போராடுவோம்.

இதுவரை சமூக நீதிப் பலன் கிடைக்காத அடித்தள மக்களுக்கும், இப்போது பலன் பெற்று வரும் மக்களின் அடுத்த கட்ட உயர்விற்கும் சேர்த்து எங்களது சமூக நீதிப் பேரவை பாடுபடும். அதற்கான செயல்பாடுகளில் எங்களை சமூகநீதித் தலைவர் வீரமணிகாரு வழி நடத்திட வேண்டும்.- இவ்வாறு கேசன சங்கர்ராவ் தனது உரையில் குறிப்பிட்டுப் பேசினார். பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வீ.குமரேசன்
அடுத்து பகுத்தறிவாளர் கழகப்பொதுச் செயலாளர் வீ. குமரேசன் சுருக்கமாக உரையாற்றினார்.

இந்திய அரசமைப்புச் சட்டம் முதன் முறையாகத் திருத்தப்பட்டது சமூக நீதித் தத்துவத்தின் நடைமுறை அணுகுமுறையான இட ஒதுக்கீட்டுக்காகத்தான் என்பது வரலாறு. அந்த முதல் சட்டத்திருத்தத்திற்கு தந்தை பெரியார் தலைமையேற்று நடத்திய போராட்டங்கள்தான் காரணமாக அமைந்தன- 1951 ஆம் ஆண்டில்.

தந்தை பெரியாரது கொள்கை வழித் தோன்றலாக பொது வாழ்க்கையில் உள்ள தமிழர் தலைவர் கி.வீரமணி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 76 ஆவது திருத்தத்திற்குக் காரணமாக அமைந்தார்.  ஆம். தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டின் அளவு 69 விழுக்காட்டினைப் பாதுகாக்க வேண்டிய தனி சட்டமே விதி 31 (சி)யின் கீழ் கொண்டு வரும் ஆலோசனையினை வழங்கி அரசமைப்புச் சட்டத்தில் ஒன்பதாவது அட்டவணையில் அதனைச் சேர்த்து, அந்தச் சட்டத்திற்கு நீதிமன்ற ஆய்வில் இருந்து பாதுகாப்பு வழங்கும் வழி முறைகளை நடைமுறைகளாக்கிவர் வரலாற்று சாதனையாளர் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆவார்.  தந்தை வழியில் தனயன் என சமூக நீதித் தத்துவப் போராட்டத்திலும் தந்தை பெரியாரின் கொள்கை வழித் தோன்றலாகவே தமிழர் தலைவர் விளங்குகிறார். மற்ற மாநில சமூக நீதிப் போராட்டங்களுக்கு ஊக்கம் கொடுத்து, முன் மாதிரியாகவும் தமிழர் தலைவர் விளங்குகிறார்.

சமூக நீதிப் பொதுக் கூட்டத்தில் தலைவர்கள் பலர் உரையாற்றிய பின்பு தமிழர் தலைவர் நிறைவுப் பேருரை ஆற்றினார். அவரது ஆங்கிலப் பேச்சினை பிரபல வழக்குரைஞர் கேசன ராம கோட்டீஸ்வர ராவ் தெலுங்கில் மொழி பெயர்த்தார். மொத்தம் 50 நிமிடங்கள் பேசிய தமிழர் தலைவரின் கருத்தாழ மிக்க உரையினை ஆர்வமுடனும் அமைதியாகவும் பொதுமக்களும் பங்கேற்ற தலைவர்களும் செவிமடுத்தனர்.

தமிழர் தலைவரின் சமூக நீதித் தத்துவ எழுச்சிப் பேருரை

தெலுங்கு மொழியில் உங்களுடன் பேச இயலாத தற்கு பொறுத்தருள வேண் டுகிறேன். நான் தமிழ் மொழியில் பேசினாலும், ஆங்கிலத்தில் பேசினாலும் அது ஒரு பொருட்டல்ல. காரணம், நம் அனைவருக் கும் பொதுவான மொழி, புரிந்த மொழி, போராட் டங்கள் நடத்தப்பட வேண் டிய மொழி சமூகநீதி மொழியாகும்.

ஆந்திர மாநிலம் அன்றைய சென்னை மா காணத்துடன் இணைந்து இருந்த சூழலில் அன்றைய ஆந்திரத் தலைவர்கள் பனகல் ராஜா, பொப்பிலி ராஜா ஆகியோர் நீதிக் கட்சி ஆட்சியில் சமூக நீதிக்காகப் பாடுபட்டார்கள். அடுத்து லச்சண்ண கவுடு ராமசாமி சவுத்திரி, நீதியரசர் பி.எஸ். ஏ.சாமி ஆகியோர் சமூக நீதிப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினர்.

ஜோதிபாபூலே, சாவித்ரி பாய் பூலே, சாகுமகராஜ், நாராயண குரு, தந்தை பெரியார், பாபாசாகிப் அம்பேத்கர் ஆகியோர் தூக்கிப் பிடித்த சமூக நீதிக் கொள்கை யினை இன்று தொடர்ந்து, கூடுதல் வலிமையுடன் எடுத்துச் செல்ல வேண்டிய காலக் கட்டத்தில் இருக்கி றோம். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள சமூக நீதி வழிமுறைகளை நடை முறைப்படுத்தாததால் அரசியல் விடுதலை பெற்று 65 ஆண்டுகள் நிறை வடைந்த வேளையிலும், சமூக நீதிக்காகப் போராட வேண்டியுள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டம் கூறிய வழிமுறைகளை ஒழுங்காகக் கடைப்பிடித்திருந்தால், சமூக நீதி விளக்கம், சமூக நீதிப் போராட்டத்தின் தேவையே தோன்றியிருக்காது. இந்திய அரசப்புச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தவே சமூக நீதி இயக்கம் பாடுபடவேண்டியுள்ளது; பாடுபட்டும் வருகிறது. நமக்கு பத்திரிகை ஊடகங்கள் ஆதரவாக இல்லை. அதைவிட ஆயிரக்கணக்கில் கூடியிருக்கும் உங்களின் ஆதரவே சமூக நீதிப் பயணத்தை முன்னெடுத்துச் செல்லும் வலிமை வாய்ந்தது.

சமூக நீதி விளக்கம் - ரயில் பயணம்

சமூக நீதித் தத்துவம் என்பது புரியாத புதிரல்ல. புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்துவதும் கடினமான தும் அல்ல. எடுத்துக் காட்டாக, தெனாலியிலிருந்து வெமூரு, கொல்லூரு வழியாக ரேபல்லிக்கு தினசரி ரயில் சென்று வந்து கொண்டிருக்கிறது. தெனாலியில் கிளம்பும் ரயிலில் இடம் பெரும்பாலும் காலியாக உள்ள நிலைமை ரேபல்லிக்கு வரும்போது ரயில் முழுவதும் பயணிகள் நிறைந்ததாக மாறிவிடுகிறது.

இது எதார்த்தமான நிலைமை. தெனாலியில் இருந்து வெகு சிலரே பயணப் படும் சூழலில், பயணம் செய்பவர்கள் உட்கார்ந்து கொண்டு, வசதியாகப் படுத்துக் கொண்டும் பயணம் செய்யலாம். காரணம், பெரும்பாலான இடங்கள் காலியாக இருக்கும். தெனாலியில் இருந்து கிளம்பி வெமூருக்கு வந்தவுடன், பயணிகள் ஏறுவார்கள். அடுத்த கொல்லூரு விலும் பயணிகள் ஏறுவார்கள்.
ஏறிய பயணிகள் அமர்வதற்கு இடம் வேண்டி, அது வரை படுத்துக் கொண்டு வந்த பயணிகளை எழுப்பி அவர்களை உட்காரச் சொல்வது இயல்பு. ஆனால், இதுவரை வசதியாகப் படுத்துக் கொண்டு வந்தவர்கள் தங்களை எழுந்து உட்காரச் சொல்வது தவறு என்று சொன்னால் அது எப்படி நியாயமாகும்? உட்காருவதற்கு ஆள் இல்லாத சூழலில் படுத்துக்கொண்டு பயணிக்கலாம். உட்கார ஆள் வந்ததும், எழுந்து உட்கார்ந்து அடுத்தவருக்கு இடம் அளிப்பதுதான் முறை; சரி; நியாயமும் கூட. முறையாகப் பயணம் செய்பவரைக் காத்திருக்க வைத்து, படுத்துக் கொண்டு ஒருவர் பயணம் செய்வது சரியா? இல்லை என்று நாம் சொல்லுகிறோம். ஆதிக்கவாதிகள் சரி என்று சொல்லுகிறார்கள். இப்படிநிலை ஒத்த சமூகச் சூழல்கள் நிறைந்திருக்கிறது இந்த நாட்டில்.

இதுவரை ஒடுக்கப் பட்ட மக்கள், அடக்கப்பட்ட மக்கள் படித்திட வாய்ப்பில்லை. வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதனால் ஆதிக்க வாதிகள் ஏகபோகமாக அனுபவித்து வந்தனர். இப்பொழுது அடித்தள மக்கள் எழுச்சி கொண்டு கல்வி கற்று அதிகார வேலை பார்க்கும் நிலைக்கு வரும்போது, அவர்களுக்கு உரிய பங்கினை அளிப்பதுதான் ஆதிக்க வாதிகளுக்கு முறையாகும். ஆனால் உரிய பங்கினை அளிக்க மறுத்து வருகின்றனர். உரிய பங்கு எவ்வளவு என்பது பற்றி விளக்குவதுதான் சமூகநீதித் தத்துவம்; உரிய பங்கினைப் பெற்றுத் தருவதுதான் சமூக நீதி இயக்கத்தின் பணியாகும்.

ஒடுக்கப்பட்ட மக்கள்தான் ஒழுங்கான வழிமுறையில் இயல்பாகப் பிறந்தவர்கள்!

சமுதாயத்தில் அடக்கப்பட்ட மக்களின் உரிய பங்கினை மறுப்பதற்கு ஆயிரக்கணக்கான கார ணங்கள் சொல்லப்படுகின்றன.  புராண, இதிகாச, மனுஸ்மிருதி கோட்பாடுகள் எடுத்துக் காட்டப்படுகின்றன. கடவுளை, மதத்தினை துணைக்குச் சேர்த்துக் கொள்ளுகிறார்கள். மக்கள் அனைவரும் ஒன்றல்லவாம். பிரம்மாவின் முகத்தில் உதித்தவர் பிராமணர்; தோளில்பிறந்தவர் க்ஷத்திரியர்; தொடையில் தோன்றியவர் வைசியர்; பாதத்திலிருந்து வந்தவர்கள் சூத்திரர்கள்.

இவ்வாறு புராண காரணங்கள் கூறி சூத்திரர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வந்துள்ளது தான் வரலாறு. தந்தை பெரியார் தனது பகுத்தறிவுப் பிரச்சாரக் கூட்டங்களில் இந்தப் புராண விளக்கங்களை விளக்கிக் கூறும்போது, ஒருமுறை கூட்டத்தில் ஒருவர் கேட்டாராம். இந்த நான்கு வகையிலும் வராத பஞ்சமர்கள் எப்படிப் பிறந்தார்கள் எனக்கேட்டார். அதற்குத் தந்தை பெரியார், பஞ்சமர்கள்தான் ஒழுங்காக, இயல்பாக, தந்தைக்கும் தாய்க்கும் பிறந்தவர்கள் என பதில் சொன்னார். இப்படிப் புராணத்தைக் காட்டி மக்களை வேறுபடுத்தி, அண்ணல் அம்பேத்கார் கூறுவது போல, அடுக்கு முறையில் வேறுபடுத்தி, அடித்தள மக்கள் உரிய நிலைக்கு, உயர்வு நிலைக்கு வராமல் ஆதிக்க வாதிகள் ஆண்டாண்டுகாலமாக பார்த்துக் கொண்டனர்.

நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும் சமூக நீதி இயக்கம் பாடுபட்ட காரணத்தால் அடக்கப்பட்ட மக்கள் கல்வி கற்று, அரசு அதிகார வேலை வாய்ப்புகளில் ஓரளவிற்கு உயர முடிந்தது. அடக்கப்பட்ட மக்கள் இன்னும் நுழைய முடியாத, இட ஒதுக்கீடு நடை முறைப்படுத்தப்படாத துறைகளுள் ஒன்று நீதித்துறை. உச்ச நீதிமன்ற நீதிபதியாய் பலர் உள்ளனர். அடக்கப் பட்ட மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற வகையில் ஒரு தாழ்த்தப்பட்ட நீதிபதி கூட தற்சமயம் உச்சநீதி மன்றத்தில் இல்லை.

கேட்டால் உயர்நீதிமன்றத்தில் இருந்துதான் உச்ச நீதி மன்றத்துக்கு வர இயலும் என்று காரணம் சொல்லுகிறார்கள். உயர்நீதிமன்றங்கள் பலவற்றில் தாழ்த்தப்பட்ட சமுதாய நீதிபதிகள் மிகப் பலர் உள்ளனரே; ஆனால் ஆதிக்கவாதிகளுக்கு மனமில்லை. எனவேதான் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற பதவிகளிலும் இட ஒதுக்கீடு முறை - தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். மக்கள் சமுதாயத்தில் சரி பாதியாக இருக்கும் பெண்களின் பிரதிநிதித்துவம் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிகளில் உரிய முறையில் இல்லை. தற்சமயம் உள்ள ஒரே பெண் நீதிபதியும் உயர்ஜாதி வகுப்பினரைச் சார்ந்தவராகவே உள்ளார். எனவே உயர் நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் சமூக நீதியினை பிரதிபலிக்கின்ற வகையில் இட ஒதுக்கீடு நடைமுறை யாக்கப்பட வேண்டும்; அதற்கான போராட்டம் நடத்தப்படும்.

தனியார் துறையிலும் வேண்டும் இடஒதுக்கீடு!

ஒரு பக்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் கல்வி நிலையங்களில், அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளில் வேலை வாய்ப்பு என ஓரளவு இட ஒதுக்கீடு நடைமுறை இருந்தாலும், இன்றைய மாறி வரும் பொருளாதாரச் சூழல் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆட்சி அதிகாரத்திற்கு முழுமையாக வரும் சூழலை உருவாக்க வில்லை.

தனியார் மயமாக்கல் எனும் அரசு கொள்கை மூலம், அரசு வேலை வாய்ப்புகள் குறைந்து கொண்டு வருகின்றன. அரசின் பணத்தில், ஆதரவில் துவக்கப்படும் தனியார் நிறுவனங்களில் பன்னாட்டு நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின, பிற்படுத்தப்பட்ட,  சிறுபான்மை மக்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் அடுத்த கட்ட சமூக நீதிப் பயணத்தைத் திராவிடர் கழகம் முன்னெடுக்கும். உங்கள் சமூக நீதிப் பேரவையும், இந்த மக்களும் உடன் போராட முன்வர வேண்டும். தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்பது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்கள் பல இந்நாட்டில் முளைத்துள்ளன.

அமெரிக்கா முதலாளித் துவ நாடு. அந்த நாட்டிலேயே கருப்பின மக்களுக்கு, வெள்ளை இன மக்களுக்கு என முதலாளித்துவ தனியார் நிறுவனங்களில் உடன்பாட்டு முறை   என்ற பெயரில் இட ஒதுக்கீடு நடைமுறை உள்ளது. அந்த அணுகு முறையிலேயே இந்நாட்டுச் சூழலுக்கு ஏற்றவாறு தனியார் துறையில் இடஒதுக்கீடு கடைப் பிடிக்கப்படுவது தான் சரியான அணுகுமுறை யாகும்.

அரசினரின் கவனத்தை ஈர்த்துத் தனியார் நிறுவனங் களிலும் இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்த அனைத்து விதப் போராட்ட முறைகளும் கடைப்பிடிக் கப்படும். சமூக நீதிப் பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் துவக்குவோம்! புதுப் பயணம், அடக்கப்பட்ட மக்களுக்கு மற்றுமொரு விடியலாக அமையும் என்பது உறுதி. இந்த சமூக நீதிக் கூட்டத்தினை ஏற்பாடு செய்த சமூக நீதிப் பேரவை பாராட்டுக்குரியது. உழைத்தவர்கள் அனை வருக்கும் நன்றி.

கலந்து கொண்ட தலைவர்கள்

சமூகநீதிப் பொதுக் கூட்டத்தில் கேசன ராமசாமி, முதுநிலை வழக்குரைஞர் ஒடுக்கப்பட்ட மக்கள் சங்கத் தலைவர், பேராசிரியர் கவுடு சத்தியநாராயணா, மேனாள் முதல்வர், உஸ்மானியா பல்கலைக் கழகக் கல்லூரி, பேராசிரியர் விஜய் ராஜூ, கே. சுனில் கவுடு, ஆந்திர பார் கவுன்சில் உறுப்பினர், வெண்டேரு ரவிபாபு யாதவ், ஆந்திர மாநில திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர், கொக்கிலிகட்டா வெங்கடநரசிம்ம ராவ், மக்கள் சேவை சங்கம், பொப்பிலி வெங்கடேசுவர ராவ், குண்டூர், ஆர். சுதாகர் ஆகிய சமூக நீதித் தலைவர்கள் மற்றும் போராளிகள் உரையாற்றினர்.

இரவு 9 மணி வரை நடைபெற்ற சமூக நீதிப் பொதுக் கூட்டம் நன்றி கூறலுக்குப் பின் நிறைவு பெற்றது. இறுதி வரை கூட்ட மைதானம் பொது மக்கள் நிறைந்து காணப்பட்டது சமூக நீதிப் பொதுக் கூட்ட வெற்றிச் சிறப்பினை அந்நிலை எடுத்துக் காட்டியதாக இருந்தது.

Friday, 18 May 2012

அய்.அய்.டி. நுழைவுத்தேர்வு மாற்றமும் - தமிழக மாணவர்களும் (2)


அய்.அய்.டி. நுழைவுத்தேர்வு மாற்றமும் - தமிழக மாணவர்களும் (2)

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
பல விடைகளில் ஒன்றைத் தேர்ந் தெடுக்கும் முறையின் மூலம் 3 மணி நேரம் மட்டுமே நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு அதன்மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக் கப்படவேண்டும் எனும் கோரிக்கையை வைத்திருக்கிறார். இரண்டு தேர்வுகள் 6 மணி நேரம் தேவையில்லை, இன்னும் எளிமைப்படுத்தலாம் என்று கூறியிருக்கின்றார்.
யார் இந்த ஆனந்த்? சூப்பர் 30 நிறுவனம் என்பது என்ன? எனும் கேள்வி களுக்கு விடை காண ஒரு 7 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும். ஏழை மாணவர்கள் அய்.அய்.டி. நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும், அவர் களுக்கு பயிற்சி  கொடுக்க வேண்டும் என்னும் நோக்கில் 2003-ல் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பரால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம்.  - ராமானுசம் கணிதப்பள்ளி என்னும் பெயரில் செயல் படும் இந்த நிறுவனம் வருடத்திற்கு 30 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து தனிப் பயிற்சி கொடுக்கின்றது. அவர்களுக்கு உணவு, இருப்பிடம், பயிற்சி அனைத்தை யும் இலவசமாக கொடுக்கின்றார்கள்.
இந்த நிறுவனத்தின் மூலம் இதுவரை 300 பேர் வரை அய்.அய்.டி. நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று படித்து முடித்திருக் கின்றார்கள், படித்துக் கொண்டிருக் கிறார்கள். வேறு எவரிடமும் நன் கொடையோ, பணமோ வாங்குவதில்லை, 30 பேருக்கு மேல் பயிற்சி கொடுப்பதில்லை என்று செயல்படுகின்ற இந்த நிறுவனத்தில் சென்ற இரு வருடங்களாக 30 -க்கு 30 என படித்த அனைவருமே நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று அய்.அய்.டி. நிறுவனத்தில் படித்துக் கொண்டி ருக்கிறார்கள். வெற்றி பெற்று அய்.அய்.டி.யில் படித்துக்கொண்டிருப்பவர்கள், அடுத்த ஆண்டு பயிற்சி பெறுவர்களுக்கு பாடம் நடத்துகிறார்கள்,
வெற்றி பெறும் வழி முறைகளை சொல்லித்தருகின்றார்கள், அதன்மூலம் புதியவர்கள் வெற்றி பெறு கின்றார்கள். அவர்தான் மத்திய அமைச்சரை சந்தித்து இந்தத் தேர்வினை எளிமையாக்குங்கள் என்ற கோரிக் கையை வைத்திருக்கின்றார். இந்த செய்திக்கு இணையத்தில் பின்னூட்டம் எனப்படுகின்ற வாசகர் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. பலர் அய்.அய்.டி.நுழைவுத்தேர்வில் மாற்றம் என்றவுடனேயே கூடாது, கூடாது , மாற்றினால் தகுதி, திறமை போய்விடும் என்று கூறியிருக்கின்றார்கள். . சிலர் சரியாகவே கேட்டிருக்கின்றார்கள், அய்.அய்.டிக்கள் இந்தியாவில் ஆரம் பிக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது, எத்தனை நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளை அந்த நிறு வனங்கள் தந்திருக்கின்றன, அல்லது உலக அளவிலான அறிவியல் கண்டு பிடிப்புகளை அந்த நிறுவனங்களில் படித்தவர்கள் தந்திருக்கிறார்களா? இல்லையே? அரசாங்கம் ஒவ்வொரு மாணவருக்கும் இலட்சக்கணக்கில் செலவு செய்கிறது, படிக்கிறார்கள், பெரிய பெரிய நிறுவனங்களில் வெளி நாட்டில் வேலை பார்க்கிறார்கள், தன் பெண்டு, தன் பிள்ளை, சொத்துண்டு, சுகம் உண்டு என்று வாழ்கின்றார்கள், அவர் களால் இந்த சமூகத்திற்கு என்ன பயன் என்று கேட்டிருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட பிள்ளைகள் ஏன் இந்தத் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை, எங்கே பிரச்சனை என்ற கேள்விகள் எழுகின்றபோது, அங்கே ஒரிஜனலான கிரியேட்டிவிட்டி உள்ளவர்கள் சேர்க்கப் படுவதில்லை, மாறாக 6-ஆம் வகுப்பி லிருந்து பயிற்சி கொடுக்கப்பட்டு,  அந்த பயிற்சி பெற்றவர்கள் போட்டித்தேர்வில் வெற்றி பெற்று, அய்.அய்.டி.யில் நுழை கின்றார்கள். இந்த பயிற்சியினை மிகப் பிரபலமான பல நிறுவனங்கள், பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை கட்டண மாகப் பெற்று கொடுக்கின்றன. ஒடுக்கப்பட்ட, பயிற்சி எடுக்காத மாணவர்களை பயமுறுத்தும் விதமாகவே இந்த நுழைவுத்தேர்வுகள் இருக்கின் றனவே தவிர, உண்மையிலேயே மாணவ மாணவிகளின் சிந்தனைத் திறனின் அடிப்படையில் அவர்களைத் தேர்ந் தெடுக்கும் தேர்வாக இந்த நுழைவுத் தேர்வுகள் இல்லை என்பதுதான் உண்மை. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு படிக்கும் பல இலட்சக்கணக் கான மாணவர்களுக்கு இந்த அய்.அய்.டி. நுழைவுத்தேர்வுகள் என்றால் என்ன வென்றே தெரியாத நிலைமைதான் உள்ளது. தாய்மொழியிலும் தேர்வு வைக்கப் பட்டு, அவர்களின் சிந்தனைத் திறத்தின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு பின்பு அவர்களுக்கு உயர் கல்வி அளிக்கப் பட்டால் அவர்களும் ஒளிர்வார்கள், நாட்டின் பெருமையும் ஒளிரும்.2006-இல் ஒரு அய்.அய்.டி. சேர்க்கை குறித்த வழக்கில் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், அய்.அய்.டி. சேர்க்கை எப்படி நடக்கிறது என்பதில் ஒரு வெளிப் படையான தன்மை இல்லை என்று கூறியிருக்கிறது.   பார்ப்பன ஊடகங்கள் புதிய முறை கூடாது என்று கூறுகின்றன. பார்ப்பன பேராசிரியர் அமைப்புகள் புதிய மாற்றம் வரவே கூடாது என்று கூறு கின்றன.

உடனே பயந்து போன மத்திய அரசு ஜுன் மாதத்திற்கு பின் முடிவெடுக்கலாம் என்று முடிவெடுப்பதில் நழுவுகிறது. நம்முடைய தமிழக நாடாளுமன்ற உறுப் பினர்கள் புதிய முறையை, +2 மதிப் பெண்களுக்கு 40 மதிப்பெண் கொடுக் கும் முறையை ஆதரிக்க வேண்டும் ,கருத்தொற்றுமையை உண்டாக்க வேண் டும், மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில்சிபல்  அவர்களை சந்திக்க வேண் டும்.  தமிழகத்தில், சென்னையில் அய்.அய்.டி. நிறுவனம் உள்ள்து,250 ஏக்கர் பரப்பளவில் மக்கள் வரிப்பணத்தில் பல்வேறு விதமான வசதிகளோடு மத்திய அரசால் நிறுவப்பட்டுள்ளது.  ஆனால் தமிழக மாணவ ,மாணவிகள் 2 சதவீதம் கூட இதில் படிக்க  முடிய வில்லை.  முழுக்க ஆந்திரா, மத்தியப் பிரதேசம் போன்ற பகுதிகளிலிருந்து மாணவ மாணவிகள் இத்தேர்வில் வெற்றி பெற்று சேருகின்றார்கள் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. சென்ற வருடம் கோயம்புத்தூரில் 937 பேர் இந்த நுழைவுத் தேர்வினை எழுதியிருக்கிறார்கள், ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. தேர்வு முறையில் மாற்றம் வருவதை வரவேற்கக்கூடிய அதே நிலையில், நமது மாணவ, மாணவிகள் இந்த அய்.அய்.டி. நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவதற்கு எப்படிப்பட்ட பயிற்சிகளை கொடுக்க வேண்டும், எந்த வகுப்பிலிருந்து கொடுக்க வேண்டும், ஒரு ஆனந்த் என்பரால் 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு 30 பேருமே இந்த அய்.அய்.டி .நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வைக்க முடிகிற தென்றால், தமிழகத்திலிருந்து ஏன் முடியவில்லை என்னும் கேள்வியை எழுப்பி கல்வியாளர்கள், ஆட்சியாளர்கள் விடை காண வேண்டிய நேரமிது. (நிறைவு)
நன்றி :விடுதலை 17-05-2012

அய்.அய்.டி. நுழைவுத்தேர்வு மாற்றமும் - தமிழக மாணவர்களும் (1)


அய்.அய்.டி. நுழைவுத்தேர்வு மாற்றமும் - தமிழக மாணவர்களும் (1)(வா. நேரு, தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்)  

இந்தியாவில் இந்திய தொழில் நுட்ப நிறுவனங்கள் (அய்.அய்.டி.) 15 உள்ளன. ஆண்டுதோறும் இந்த நிறுவனங்களில் மாணவ மாணவிகள் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகள் நடைபெறுகின்றன.  IIT-JEE   என்று கூறப்படும் இந்த நுழைவுத் தேர்வு முறைகளில் சில மாற்றங்களை 2013-இல் கொண்டு வரலாம் என்ற அடிப்படையில் மத்திய அரசு இரண்டு குழுக்களை அமைத்தது. அந்த குழுக்கள் சில பரிந்துரைகளை அளித்துள்ளனர்.

அதில் முக்கியமான ஒன்று +2-ல் எடுக்கும் மதிப்பெண்களுக்கு 40 மதிப் பெண்களும், மீதம் உள்ள 60 மதிப்பெண் களுக்கு நுழைவுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களையும்  சேர்த்து அதன் அடிப்படையில் மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்ப தாகும். மேலும் சில பரிந்துரைகளையும் அவர்கள் அளித்துள்ளார்கள். அய்.அய்.டி. நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள் சங்கங்கள் புதிய முறையை எதிர்த்திருக்கிறார்கள்.

பழைய முறையே நீடிக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். அய்.அய்.டி கான்பூரின் செனட்டும், டெல்லி,மும்பை போன்ற அய்.அய்.டி. நிறுவன பேராசிரியர்கள் கூட்டமைப்பு களும் புதிய முறை கூடவே கூடாது என்று அறிக்கை கொடுத்திருக்கின்றார்கள்.

நமது மரியாதைக்குரிய பேராசிரியர், பல முனைவர்களை உருவாக்கிய முனைவர் வசந்தா கந்தசாமி அவர்கள், அய்.அய்.டி. சென்னை நிறுவனத்தில் தான் பட்ட துன்பங்களை எல்லாம் நமது மேடை களிலே எடுத்துக் கூறியிருக்கிறார்கள். அய்.அய்.டி. நிறுவனத்தில் படிப்பவர்கள் மட்டுமல்ல, பணி புரியும் பேராசிரியர்கள் பலரும் பார்ப்பனர்களே.

எப்படி நீதித்துறையில் இன்னமும் அவாளின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறதோ, அவ்வாறே  அய்.அய்.டி- நிறுவனத்தில் அவாளின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறது.

அவாளின் சங்கம்தான் புதிய முறை வேண்டாம் என்று கூறியிருக் கிறது. ஏன் வேண்டாம் புதிய முறை என்று சொல்கின்றபோது, +2 வில் வாங்கும் மதிப்பெண்ணை கணக்கிலேயே எடுக்கக் கூடாது, +2-வில் வாங்கும் மதிப் பெண் ணுக்கு 40 மதிப்பெண்கள் என்று கொடுத் தால் தரம் கெட்டுவிடும், தகுதி போய் விடும், திறமை போய்விடும் என்று சொல் கின்றார்கள்.

பெருந்தலைவர் காமராசர் சொன்னதுதான் ஞாபகம் வருகின்றது, உன் தகுதி, திறமையும் தெரியும், உங்கப் பன் தகுதி, திறமையும் தெரியும் என்று. தந்தை பெரியார், பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் போன்றவர்களின் முயற்சி யால் அய்.அய்.டி நிறுவனங்களில் தாழ்த் தப்பட்டோருக்கு(15), மலைவாழ் மாணவர் களுக்கு(7.5) இட ஒதுக்கீடு உள்ளது.

மண்டல் குழுவின் அமலாக்கத்தால், தன்னுடைய பிரதமர் பதவி போனாலும் பரவாயில்லை, பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத் துவேன் என்று சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் அவர்கள் அமல்படுத்தியதால், மண்டல் குழுவை அமல்படுத்தவேண்டும் என்பதற்காக போராட்டங்களும், மாநாடு களும் திராவிடர் கழகம், திராவிடர் கழகத் தலைவர்  மானமிகு கி.வீரமணி அவர் களின் வழிகாட்டுதலில் நடத்திய காரணத்தால்  27 சதவீத இடஒதுக்கீடு அய். அய்.டி. நிறுவனங்களில் உள்ளது. ஆனால் இதிலும் ஒரு பொடியை பார்ப்பனர்கள் வைத்துள்ளார்கள்.

மொத்தம் 10000 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றால் 1500 இடங்கள் தாழ்த்தப்பட்டோருக்கு, 750 இடங்கள் மலை வாழ் மாணவர் களுக்கு, 2700 இடங்கள் பிற்படுத்தப் பட்டோருக்கு ஒதுக்க வேண்டும். இதில் 1500 இடங்களுக்கு தகுதியான (?) தாழ்த்தப்பட்டோர், தகுதியான (?) மலைவாழ் மாணவர்கள் கிடைக்கவில்லை என்றால் அதனை நிரப்பமாட்டார்கள், அடுத்த வருடம் நிரப்புவார்கள், ஆனால் பிற்படுத்தப்பட்ட 2700 இடங்களில் தகுதியான  மாணவர்கள் கிடைக்கா விட்டால் (பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவிகளுக்கு இந்த வருமான வரம்பு என்னும் இடையூறும் இருக்கிறது) பொதுப்பிரிவிலிருக்கும் மாணவர்களை எடுத்து நிரப்பி விடுவார்களாம். .

ஊருக்கு ஊர் சாதிக் கணக்கெடுப்பு நடத்துவது போல 15 அய்.அய்.டி. நிறுவ னங்களில் வேலை பார்க்கும் பேராசிரி யர்கள், அலுவலர்கள், மாணவ, மாண விகள் அனைவரையும் சாதி வாரி கணக் கெடுப்பு நடத்த வேண்டும், அப்போது தான் மக்கள் தொகையில் 3 சதவீதம் உள்ள பார்ப்பனர்கள் எவ்வளவு இடத்தை அய்.அய்.டி நிறுவனங்களில் ஆக்கிர மித்து வைத்து உள்ளார்கள் என்பது தெரிய வரும்.

அண்மையில் மத்திய மனித வளத்துறை அமைச்சர் திரு.கபில்சிபல்   அவர்களை சந்தித்த சூப்பர் 30 நிறு வனத்தின் நிறுவனர் ஆனந்த், அய். அய்.டி. நுழைவுத் தேர்வினை எளிமை யாக்க வேண்டும்.....தொடரும் 
நன்றி : விடுதலை 15-5-2012




Saturday, 28 April 2012

கணினியை இனிமேலும் கற்றுக்கொள்ள முடியுமா?


செயங்கொண்டத்தில் பெரியார் மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டுவிழாவில்(8.4.2012)  தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றும்போது இந்தப் பள்ளியில் ஜாதி, மதம், அரசியல் கிடையாது. மனிதநேய கண்ணோட்டம் மட்டும்தான். கல்வி என்பது சமுதாய மாற்றத்திற்கு பயன்பட வேண்டும். இந்தப் பள்ளிக்கு மேலும், ஒரு கோடி ரூபாயில் கட்டடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கே வந்திருக்கின்ற பெற்றோர்கள் மாணவர்களிடம் நேரத்தைச் செலவிட வேண்டும். ஆசிரியரே பார்த்துக் கொள்வார் என்று விட்டுவிடக் கூடாது. இனி வரும் காலங்களில் கணினி பயிலாத வர்கள் கற்காதவர்கள் ஆவார்கள் என்ற நிலை வரும். ஆகவே, பெற்றோர்கள் வயதாகி இருந்தாலும் கணினி கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் கணினி கற்றுக்கொள்வதற்காக பள்ளி வளாகத் திலேயே குறைந்த கட்டணத்தில் மாலை நேர கணினி வகுப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்து தரப்படும். அதுதான் இந்த ஆண்டின் திட்டமாக செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கின்றார்கள்.

கணினியை பெற்றோர் கற்றுக் கொள்வதா, அதுவும் கிராமப்புரத்து பெற்றோர் கற்றுக் கொள்ளமுடியுமா என்னும் கேள்வி எழுகிறது. கணினி கற்க என்ன படித்திருக்க வேண்டும்?  நம்மில் பல பேருக்கு கணினி கற்பதென்றால் நிறையப் படித்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வருகின்றது. 2, 3 ஆம் வகுப்பு படிக்கும் தன் மகன் கம்ப்யூட்டரில் கேம் விளையாடுவதையும், டைப் செய்வதையும் பார்த்துக்கொண்டிருக்கும் பெற்றோர் கூட கணினி முன் அமர்ந்து கற்றுக் கொள்ளத் தயங்குகின்றனர்.
பெரியார் இயக்கத்தை பொறுத்தவரை கல்வி என்பதாக இருந்தாலும் சரி, வாழ்க்கை என்பதாக இருந்தாலும் சரி  அது மற்றவர்களுக்கு, சமூகத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் பயன்படவேண்டும் என்பதுதான் அடிப்படைக் கொள்கை. அவ்வகையில் பெற்றோர்கள் கணினி  கற்றுக் கொள்வது அவர்களுக்கும், அவர் களது குழந்தைகளுக்கும், சமூகத்திற்கும் பயன்படும் என்னும் நோக்கில் கணினியை கற்றுக்கொள்ளலாம். கணினி கற்றுக் கொள்ள தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும், அத்தோடு ஆங்கில எழுத்துகளைப் பற்றிய அறிமுகமும், எந்தத் தமிழ் எழுத்துக்கு  எந்த ஆங்கில எழுத்தை டைப் செய்ய வேண்டும் எனும் அறிமுகமும் இருந்தால் போதும். கொட்டிக் கிடக்கும் தகவல்கள்
இணைய தளத்தில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. நூலகத்திற்கு சென்று, நூல்களை தேடிக் கண்டுபிடித்து அவற்றில் நமக்கு வேண்டிய தகவல்களை குறிப்பதெல்லாம் அந்தக் காலம்.
கூகிள் சர்வரிலோ அல்லது மற்ற தேடு தளங்களிலோ சென்று நமக்கு வேண்டி யதைப் பெறுவது இந்தக்காலம். நேர விரயம் குறைவு, பல்வேறு நூல்களில் உள்ள தகவலகளை ஒரே நேரத்தில் பெறக்கூடிய வசதி. அதனைப் போலவே இணைய தளத்தில் உள்ள பேஸ் புக் போன்ற குழுமங்களின் மூலமாக, வெகு காலமாக நாம் சந்திக்க இயலாத நமது ஊர்க்காரர்களை, நமது பழைய கல்லூரி நண்பர்களை, பள்ளி நண்பர்களையெல் லாம் அடையாளம் கண்டு அவர்களோடு மீண்டும் நட்பினை புதுப்பித்துக் கொள்ளலாம்.
நமது ஒத்த கருத்தோட்டமுடையவர் களின் கருத்துகளை தெரிந்து கொள்ள லாம். நமது பரம்பரை எதிரிகள் எப்படிப்பட்ட கருத்துகளோடு இருக்கிறார்கள், அவர் களின் எண்ணம் என்ன? வெளியே சொல் லும் செய்திகள் என்ன போன்றவற்றை எல்லாம் அறிந்து கொள்ளலாம். பல்வேறு பத்திரிகைகளைப் படித்துக் கொள்ளலாம். இணையமும் இடையூறுகளும்   நமது குழந்தை வேற்று நாட்டு மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டுமா?  ஆங்கிலத்தில் இன்னும் புலமை பெற வேண்டுமா? தமிழ் இலக்கணத்தை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டுமா? மேடையிலே பேசுவது எப்படி என்பதனைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? போட்டித் தேர்வுகளில் வினாக்கள் எப்படி வரும் என்று அறிந்து கொள்ள வேண்டுமா?  போட்டித் தேர்வுகளுக்கு எப்படி தயாரிக்க வேண்டும் என்பதனை ஏற்கெனவே வெற்றி பெற்றவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டுமா? அத்தனைக்கும் வலைத் தளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இணையத்தை சரியாகப் பயன்படுத்த தெரிந்த ஒரு மாணவரால் பல வகையிலும் முன்னேற முடியும். இவையெல்லாம் நேர் மறையான செய்திகள். எதிர்மறையான செய்திகளும் இணையத்துக்குள் இருக் கின்றன. இணையத்தைப் பயன்படுத்து பவர்களில் மூவரில் ஒருவர் ஆபாச படம் பார்க்க அதனைப் பயன்படுத்துகின் றார்கள் என்று புள்ளி விவரங்கள்  சொல்கின்றன. 10, 12 வயது சிறுவனிடம் மிக வேகமாக செல்லும் இரு சக்கர வண்டியைக் கொடுத்து, அதிக டிராபிக் உள்ள சாலையில் அனுப்புவது போன்றது, எந்த விதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் மாணவர்களை, மாணவிகளை இணைய தளத்தினை பயன்படுத்த சொல்வது  விபத்தில்  எந்த நேரத்திலும் நமது பிள்ளையைப் பறிகொடுக்க நேரிடலாம் என்பது போன்றதே, இணைய தளப் போதையால் நமது குழந்தையின் எதிர்கால வாழ்வும், நிகழ்கால அமைதியும் தொலைய நேரிடலாம்.
அதனால் பெற்றோரின் நிம்மதி முற்றிலுமாக தொலைந்து போகலாம். தமது குழந்தைகளின் நல்வாழ்வுக்காக பெற்றோர்களும் கொஞ்சம் கணினி கற்றுக் கொள்ளலாம். கண்காணிப்பு அவசியம் மாணவ, மாணவிகளுக்கு பெற் றோர்கள் மிகுந்த செலவு செய்து, புதிய மாடல் கண்னிகளை வாங்கிக் கொடுக் கின்றார்கள். அதனை வீட்டின் ஏதேனும் ஒரு மூலையில், இருட்டறைக்குள் வைத்து விடுகின்றார்கள். குடும்பத்தில் எல்லோ ரும் வந்து புழங்கும் இடமாக இருக்கக் கூடிய இடத்திலேயே கணினியை வைக்க வேண்டும் என்பது என் கருத்தாகும். மடிக்கணினியாக (லேப் டாப்) இருந்தால் கூட அதனை பெற்றோர்கள் பயன் படுத்தத் தெரிய வேண்டும்.

என்ன வலைத் தளங்கள் பார்க்கப் பட்டிருக்கின்றன, எவ்வளவு நேரம் இணைய தளத்தினைப் பயன்படுத்தியி ருக்கின்றார்கள், பேஸ் புக் போன்ற குழுக்களில் யார் யாரெல்லாம் நமது குழந் தைகளோடு தொடர்பில் இருக்கின் றார்கள், எப்படிப்பட்ட மன நிலை உள்ள கணினி விளையாட்டுகளை (கேம்ஸ்)  விளையாடுகிறார்கள் என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும்.  விபரம் தெரியாத வயதில், வெளுத்த தெல்லாம் பால் என்று குழந்தைகள் நினைத்துக்கொண்டிருப் பார்கள்,  பெற்றோர்கள்தான் இதனைக் கண்காணிக்க வேண்டும். கணினியையும், குழந்தையையும் கட்டுப்படுத்தலாம்
பெற்றோர்கள் கணினி கற்றுக் கொள்வதன்மூலம், தன்னுடைய குழந்தை கணினியில் எதைப் பார்க்க வேண்டும், எதைப் பார்க்கக்கூடாது, எவ்வளவு நேரம் பார்க்கலாம், கேம்ஸ் எவ்வளவு நேரம் விளையாடலாம் போன்ற பல்வேறு விசயங்களை கட்டுப்படுத்த முடியும். பெற்றோர்கள் கட்டுப்படுத்த (ஞயசநவேயட ஊடிவேசடிடள) என்ற ஒரு வசதியே கணினியில் இருக்கிறது. கணினியில் ளவயசவ-ழூஉடிவேசடிட யீயநேட-ழூ ரளநச யஉஉடிரவேள என்ற பகுதிக்குள் உள்ளே சென்றால்,     என்ற வசதி இருக் கிறது. இந்த வசதியை ஓ.கே. கொடுப் பதன் மூலம் பல்வேறு கட்டுப்பாடுகளை இணைய தளத்திற்கு கொடுக்க முடியும்.
இணைய தளத்தில் தேடு தளத்தில் ஓர் எழுத்தினை வைத்து தேடச் சொல்லும்போது பல்வேறு விதமான வலைத்தளங்களும் வருகின்றன. ஆபாசப் படங்களோடு கூடிய வலைத் தளங்களும் வருகின்றன. பல பெற்றோருக்கு இதனை எப்படி தவிர்ப்பது என்பது தெரியவில்லை.
இந்த ளநவரயீ யீயசநவேயட உடிவேசடிடள-ல் சிறுவர்கள் பார்க்கக்கூடிய வலைத் தளங்களை மட்டும் அனுமதிக்கவும் என்று கொடுப்பதன் மூலம் தேவையற்ற குப்பை களை நமது கணினிக்குள் வருவதை தவிர்க்கலாம்.  எவ்வளவு நேரம் குழந் தைகள் கணினியைப் பயன்படுத்தலாம் என்பதற்கு நீங்கள் குறிப்பிட்ட நேரத்தை கொடுத்து பயன்படுத்தச் சொல்லலாம், அந்த குறிப்பிட்ட நேரம் முடிந்தவுடன் தானகவே கணினி வேலை செய்வதை நிறுத்திவிடும். இதனைப் போன்ற பல்வேறு வசதிகள் இதில் உள்ளன. எந்த வயதில் கற்றுக் கொள்வது?
தமிழர் தலைவர் அவர்கள் கூறும் போது, பெற்றோர்கள் வயதாகி இருந் தாலும், கணினி கற்றுக் கொள்ள முடியும் என்று கூறியிருக்கின்றார். வயதுக்கும், கணினி கற்றுக் கொள்வதற்கும் தொடர் பில்லை. ஆர்வமும், வாய்ப்பும் இருந்தால்  எந்த வயதிலும் கற்றுக் கொள்ள முடியும். எனக்குத் தெரிந்த ஒருவர், மிகப் பெரிய பொறுப்பினை அரசாங்கத்தில் வகித்தவர். மிகச் சிறந்த  பேச்சாளர், எழுத்தாளர், எத்தனையோ நல்ல விசயங் களை எனக்கு கற்பித்தவர். 65-க்கு மேற்பட்ட வயதில் கணினி கற்றுக் கொள்ள விரும்பினார். பெரிய வாய்ப்பாக எண்ணி கணினி பயன்பாட்டின் வழிமுறைகளைக் கூறினேன். ஒரு பத்தாவது படிக்கும் மாணவனைப்போல குறிப்புகளை எடுத்துக்கொண்டு, ஒவ்வொன்றாக செய்முறை பயிற்சி செய்து கற்றுக் கொண்டார். இரண்டு நாளில் ஒரு மாணவர் 2 மாதத்தில் படிக்கும் கணினி விசயங் களைக் கற்றுக்கொண்டார், இப்பொழுது அவராகவே மின் அஞ்சல் அனுப்புகிறார், மின் அஞ்சல் பெற்று வாசிக்கிறார். தேவை யான விசயங்களை கூகிள் போன்றவற்றில் தேடி எடுக்கின்றார், தமிழில் செய்தி அனுப்புகின்றார், ஆங்கிலத்தில் அனுப்பு கின்றார், தனக்கு விருப்பமான வலைத் தளங்களில் உலவுகின்றார், சும்மா கணினியில் புகுந்து விளையாடுகின்றார்.
முப்பதுகளில் இருக்கும் எனக்குத் தெரிந்த மற்றொருவர், அலுவலகத்தில் கணினியைப் பயன்படுத்தி வேலை பார்க்க வேண்டும், தனக்கு வேண்டிய அளவுகூட கணினியைக் கற்றுக் கொள்ள விருப்ப மில்லை, ஏதேனும் எழுத்து வேலை கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டு, கணினியைப் பார்த்துப் பயந்து  காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார். விருப்பம் இருப்பின், எந்த வயதிலும் கற்றுக் கொள்ள முடியும். சமூக நலன் கருதி கற்றுக் கொள்ளுங்கள்  கிராமப் புற பகுதியில் இருக்கும் பெற்றோர்கள் கணினி கற்றுக் கொள் வதன் மூலம், இணையத்தைப் பயன்படுத்தி மின் அஞ்சல் போன்றவற்றை அனுப்பத் தெரிவதன் மூலம் தங்களது குறை பாடுகளை எளிதாக அதிகாரிகளுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் போன்றவர் களுக்கு அனுப்ப முடியும். தங்களது தொகுதி எம்.எல்.ஏ., எம்.பி., போன்றவர் களைத் தொடர்பு கொள்ள முடியும். கிராமத்தில் நிலவும் பிரச்சினைகளை, சமூக அமைதிக்கு எதிரான செயல்பாடு களை விடுதலை ( viduthalaimalar@gmail.com) போன்ற செய்தித் தாள்களுக்கு அனுப்ப முடியும்.
இலக்கிய நாட்டம் உள்ளவர்கள் தங்களுக்கு பிடித்த கவிஞர்களின், எழுத்தாளர்களின் படைப்புகளைப் படிக்கலாம், படி எடுக்கலாம். தங்களது குழந்தைகளுக்கு இருக்கும் வாய்ப்புகள் மட்டுமல்லாது, மற்ற கிராமப்புறத்தில் படிக்கும் மாணவர்களுக்கான வாய்ப்பு களையும் அறிந்து அவர்களுக்கு எடுத்து சொல்லலாம். ... இன்னும் பல வகையில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும், உங்கள் ஊருக்கும், சமூகத்திற்கும்  பலன் கொடுக்கும் படிப்பு கணினி படிப்பு  எனவே பெற்றோர்களே, வாருங்கள், கணினி கற்றுக் கொள்ளுங்கள்.
நன்றி - விடுதலை 27.4.12 @28.4.12