Monday, 17 October 2011

சாதி ஒழிப்பும் புரட்சிக்கவிஞரும் (4)

மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் நண்பர் சுப.முருகானந்தம் அவர்கள் புரட்சிக்கவிஞரும் சாதி ஒழிப்பும் பதிவுகளைப் படித்துவிட்டு, ஊக்கமூட்டக் கூடிய சில வார்த்தைகளையும், ஆலோசனைகளையும் கூறியுள்ளார். நன்றிகள் பல அவருக்கு. அவர் கண்ணதாசன் எழுதிய ‘சவாலே சமாளி’ பட்த்தில் வரும் பாடலைக் குறிப்பிட்டுள்ளார். இன்றைய முதல்வர் திரு.ஜெ.ஜெயல்லிதா அவர்கள்
கதாநாயகியாக நடித்த படம் , ஆணவத்தின் உச்சியில் கணவரை எதிர்த்துப் பேசித் தொடாதே எனச் சொல்லும்போது திரு சிவாஜி கணேசன் அவர்கள் பாடுவதாக அமைந்த பாடல்.
நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே
நிழலைப்பார்த்து பூமி சொன்னது என்னைத் தொடாதே
நதியைப் பார்த்து நாணல் சொன்னது என்னைத் தொடாதே
நாளைப் பார்த்து இரவு சொன்னது என்னைத் தொடாதே
புதியதல்லவே தீண்டாமை என்பது
புதுமையல்லவே அதை நீயும் சொன்னது

....
தங்கம் எடுத்த கை அது தங்கம் பார்த்தா
தர்மம காத்த கை சமதர்மம் கண்டதா
ஆலயம் செய்தோம் அங்கே அனுமதியில்லை - நீ
அந்த கூட்டமே இதில் அதிசயமில்லை

என்னும் வரிகள் அப்படித்தான் அவர்கள் அன்றுமுதல் இன்றுவரை இருக்கின்றார்கள் என்பதனைக்கண்ணதாசன் சுட்டிக் காட்டும் வரிகள்..

ஆலயம் செய்தோம், அங்கே அனுமதியில்லை. சரி ...,அனுமதியில்லாத ஆலயத்தைக் கட்டுவதிலே ஏன் தமிழன் குறியாக இருக்கின்றான்,இன்றைக்கும் கூட நகரின் புற நகர்ப்பகுதிகளில் புதிய குடியிருப்புகள் எழும்புவதற்குமுன்பே கோயில்கள் கட்டப்படுகின்றதே எப்படி? கட்டிய பின்பு மணி அடிக்க பார்ப்பான் வந்து மிக எளிதாக அமர்ந்து கொள்கிறானே .. ? தன் வீட்டில் படித்து விட்டு வேலை இல்லாமல் பிள்ளைகள் இருந்தாலும் ஒரு பார்ப்பனருக்கு பூசாரி வேலை கொடுப்பதற்கு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட தமிழனே முன்னனியில் இருக்கின்றானே ஏன் ? அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று சட்டம் இயற்றினாலும் உயர் நீதி மன்றம் ,உச்ச நீதி மன்றம் என்று சென்று பார்ப்பனர்கள் தடுக்கின்றார்களே ! பக்தி தமிழனுக்கு ஏன் உணர்ச்சி வரவில்லை, பார்ப்பனர்களை எதிர்த்து கிளர்ச்சி செய்யவேண்டும் எனும் உணர்வு ஏன் வரவில்லை? வராது ! உணர்வு வராது ! கோயிலின் பெயரால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மூளையில் போடப்பட்டுள்ள நுண்ணிய விலங்குகள் சாதாரணமாக கண்களுக்குத் தெரியாது.ஈரோட்டுக் கண்ணாடி போட்டுப் பார்க்கும்போது பளிச்சென்று தெரியும்.

கோயில் கட்டுவது மிகப்பெரிய புண்ணியச் செயல் , நீ என்னதான் பாவம் செய்திருந்தாலும், எவ்வளவு பெரிய கொடுமை செய்திருந்தாலும் கோயில் கட்டினால், குடமுழுக்குச் செய்தால், கோவில் பணிகளுக்கு கொட்டிக் கொடுத்தால் உனக்குச் சொர்க்கம் உண்டு என்று தமிழர்களின் மூளையிலே பார்ப்பனர்கள் ஏற்றி வைத்துள்ளார்கள். இந்த விலங்கை உடைக்க பகுத்தறிவுச் சம்மட்டி தேவை. தமிழர்கள் கோயில்களில் அர்ச்சகராக வருவதை நீங்கள்(பார்ப்பனர்கள் ) திட்டமிட்டு தடுக்கின்றீர்கள், எனவே பார்ப்பனர்கள் அர்ச்சகர்களாக இருக்கும் கோயில்களுக்கு வரமாட்டோம், அந்தக் கோயில் உண்டியலுக்கு காசு போடமாட்டோம், அங்கு நடக்கும் சிறப்பு பூசை போன்றவைகளுக்கு பணம் தரமாட்டோம் என்று தமிழர்கள் கூறுகின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம், அப்போது பார்ப்பனர்கள் வழிக்கு வருவார்களா? இல்லையா? ஏன் சொல்ல மறுக்கிறார்கள் ? ஏன் சொல்ல வேண்டும் என்ற உணர்ச்சி வரவில்லை ?...

பிற்படுத்தப்பட்டவரை கோவில் கருவறைக்குள் வராதே என்று சொல்கின்றான் பார்ப்பான் . தாழ்த்தப்பட்டவரை கோவிலுக்குள்ளே வராதே என்று பிற்படுத்தப்பட்டவரின் மூலமாகச் சொல்லவைக்கின்றான் பார்ப்பான். இருவரும்(தாழ்த்தப்பட்டவரும் பிற்படுத்தப்பட்டவரும்) இணைந்து கருவறைக்குள்ளிருந்தும், கோயிலுக்குள் இருந்தும் ஏன் பார்ப்பனரை வெளியேற்ற இயலவில்லை?

புரட்சிக் கவிஞர் தாழ்த்தப்பட்டோரை கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பதைக் குறித்து
தாழ்ந்தவர் வந்திடில் தன்னுயிர் போமெனில்
சாமிக்குச் சத்தில்லையோ ? எனில்
வீழ்ந்த குலத்தினை மேற்குல மாக்கிட
மேலும் சமர்தில்லையோ .....
குக்கலும் காகமும் கோயிலிற் போவதிற்
கொஞ்சமும் தீட்டில்லையோ – நாட்டு
மக்களிலே சிலர் மாத்திரம் அந்த
வகையிலும் கூட்டிலையோ ?...
“தாழ்ந்தவர் “என்றொரு சாதிப் பிரிவினைச்
சாமி வகுத்த்துவோ ? எனில்
வாழ்ந்திடு நாட்டினில் சாமி முனைந்திந்த
வம்பு புகுத்தியதோ ?......

மேற்கண்ட புரட்சிக்கவிஞரின் கவிதையில்
“கருவறைக்குள் பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர் வந்திடில் தன்னுயிர் போமெனில் ....”என்றும்
‘தாழ்ந்தவர்’ என்னும் இட்த்தில் தாழ்த்தப்பட்டோர்,பிற்படுத்தப்பட்டோர் என்னுமிரு .......என்று மாற்றிப் போட்டால் இருவருக்குமே சரியாக வரும் பாட்டுத்தானே 1 தன்னையும் கோவில் கருவறைக்குள் அனுமதிக்காதவன் பார்ப்பானே என உணர்ந்து தாழ்த்தப்பட்டோரோடு இணைந்து பிற்படுத்தப்பட்டவன் பார்ப்பனருக்கு எதிராகப் போராடுவதுதானே இயல்பாக இருக்க முடியும். இவன் ஏன் பார்ப்பனரோடு இணைந்து தாழ்த்தப்பட்டோரை கோவிலுக்குள் வராதே என்று சொல்கின்றான். பார்ப்பனரின் அடியாளாய் பிற்படுத்தப்பட்டோன் மாறி ஏன் தாழ்த்தப்பட்டோருக்கு கொடுமை இழைக்கின்றான்? வன்கொடுமை செய்கின்றான் ? ...... இந்த நிலை மாற வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் உற்றார்கள், உறவினர்கள் , பார்ப்பனர்களால் பிரிக்கப்பட்டு பல்வேறு சாதிகளாக கூறு போடப்பட்ட உறவினர்கள் என்பதனை உரத்துச் சொல்லவேண்டும்.இந்த வேலையை எப்படிச் செய்வது? களப்பணிகள் மூலமாக, கருத்துப் பணிகள் மூலமாக ,கலப்புத்திருமணங்கள் வழியாகச் செய்ய்வேண்டும். ஆயிரக்கணக்கான கலப்புத்திருமணங்கள் பெற்றோர்களின் ஏற்பாட்டின்மூலமாக , சுயமரியாதைத் திருமணங்களாக நடைபெற்றன.இன்றும் நடைபெறுகின்றன. எனக்குத் தெரிந்த கழகத் தோழர் ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர், தாழ்த்தப்பட்ட கழகத் தோழ்ருக்கு தன் பெண்ணை திருமணம் செய்து கொடுத்தார். நான் அறிந்தவரை தங்கள் சொந்த சாதியில் ,உறவுகளில் திருமணம் செய்து தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு வாழும் தம்பதிகளை விட அருமையாக எடுத்துக்காட்டாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இது இன்னும் விரிவாகப் பரவுதல் வேண்டும். சாதி ஒழிப்பு வேண்டும் என்று சொல்பவர் எவரும் தனது சொந்த சாதியில் திருமணம் முடிக்கக்கூடாது,தனது குழந்தைகளுக்கு சொந்த சாதியில் திருமணம் ஏற்பாடு செய்யக் கூடாது. ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்றால் எல்லா சாதி அமைப்புக்களும், தாங்கள் நடத்தும் பத்திரிக்கையில் நாம் ஆண்ட ஜாதி , மீண்டும் நமது ஜாதி ஆளவேண்டும், ஓடி வா, என அழைப்பதைப் பார்க்கிறோம்.

சாலையில் நடந்து போய்க்கொண்டிருக்கிறோம். ஒருவன் நம்மீது மாட்டு சாணத்தை எறிந்துவிட்டான். சட்டையில் ஒட்டி அசிங்கிமாகி விட்டால், அய்யோ என ஓடிப்போய் அசிங்கத்தை கழுவ முற்படுவதுபோல சாதி என்னும் அசிங்கத்தை நம்மீது பார்ப்பனர்கள் திட்டமிட்டு தங்கள் பிழைப்புக்காக நம்மீது எறிந்திருக்கிறார்கள் , இந்த சாதி என்னும் அசிங்கத்தை நாம் கழுவவேண்டும், நம்மை விட்டு விரட்ட வேண்டும், நமக்கு இது இழிவு என்பதனை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சார்ந்த ஒவ்வொருவரும் உணர வேண்டும். அதற்கு புரட்சிக் கவிஞரைப் படிக்க வேண்டும், பரப்ப வேண்டும்.

No comments: