Showing posts with label அண்மையில் படித்த புத்தகம். Show all posts
Showing posts with label அண்மையில் படித்த புத்தகம். Show all posts

Thursday, 29 October 2026

உணர்வுகளின் ஊர்வலம் ..சிறுகதைத் தொகுப்பு...முனைவர் ராணி சக்ரவர்த்தி

 

மதுரையில் இருந்த 'கூடு' என்னும் அமைப்பின் மூலமாக எனக்கு அறிமுகம் ஆனவர் முனைவர் ராணி சக்ரவர்த்தி அவர்கள். மதுரையில் நடைபெற்ற அவரது சிறுகதைத் தொகுப்பு நூலான 'உணர்வுகளின் ஊர்வலம் ' என்னும் நூலின் வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன்.கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற அந்த விழாவில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்துணைச்செயலாளர் ,தங்கை புதுச்சேரி வி.இளவரசி சங்கர் அவர்களும் உரையாற்றினார்.நிறைய சிறப்புக் குழந்தைகளும் அவர்களது பெற்றோர்களும் பங்குகொண்ட நூல் வெளியீட்டு விழா அது. விழாவே வித்தியாசமாக, மிகச்சிறப்பாக இருந்தது.உரைகள் எல்லாம் மிகச்சுருக்கமாக அமைந்தது.அன்றைய நூல் வெளியீட்டு விழாவில்,அந்தச் சிறுகதைத் தொகுப்பினை வாங்கி  வந்தேன்.

மதுரையில் குழந்தை மனநல ஆலோசகராகவும் மறுவாழ்வு மனநல மருத்துவராகவும்  இருக்கும் முனைவர் ராணி சக்ரவர்த்தி அவர்களின் கதைகள் எல்லாம் புனைவுகளாக இல்லாமல், தனது வாழ்வில் நடைபெற்ற பல நிகழ்வுகளை புனைவுகளோடும் இணைத்துச்சொல்லும் கதைகளாக இருக்கின்றன.

இந்தத் தொகுப்பில் இருந்த சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவைகளாக இருந்தன.எனவே 'வாருங்கள் படிப்போம் ' குழுவில் இந்த நூல் பற்றிப் பேசினேன்.அந்த உரை கீழிருக்கும் இணைப்பில் உள்ளது.  முனைவர் ராணி சக்ரவர்த்தி அவர்களின் ஏற்புரையும் உள்ளது. மற்றவர்களின் கருத்துகளும் உள்ளது. வாய்ப்பு இருக்கும்போது கேட்டுப்பாருங்கள்.






வா.நேரு,

30.10.2026

Friday, 23 October 2026

அண்மையில் படித்த புத்தகம்: மகடாலு( நாவல்)...ஏயெம்

 

அண்மையில் படித்த புத்தகம்: மகடாலு

நாவல் ஆசிரியர்                            : ஏயெம்

வெளியீடு                   : எழுத்து வெளியீடு,2022

மொத்த பக்கங்கள் : 250, விலை ரூ 300

கலைஞர்  நூற்றாண்டு நூலக எண்: 894.8113 AYE;2

 

ஜீரோ டிகிரி பப்ளிஷிங் இலக்கிய விருது 2022 தேர்ந்தெடுக்கப்பட்ட நூல் வரிசையில் இடம் பெற்ற நூல் என்று அட்டையில் அச்சிட்டு உள்ளார்கள்.இந்த நூலை சமர்ப்பணம் எனக் குறிப்பிட்டு ‘தமிழ் நாவல் உலகை வளப்படுத்திய படைப்பாளிகளுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும்’ என்று நூலாசிரியர் குறிப்பிட்டு இருக்கிறார்.

 இந்த நாவல் இந்த நாவலாசிரியரின்  முதல் நாவல்.தன்னுடைய 59 வயதில் முதல் நாவலை இந்த நாவல் ஆசிரியர் எழுதியிருக்கிறார்.இவரைப் பற்றி 

‘ ஏயெம்' என்கிற சி அண்ணாமலை (1963) சுபமங்களா, கணையாழி, குமுதம் ஆகிய இதழ்களிலும், பிபிசி உலக சேவையிலும் பணியாற்றியவர் .’கூத்துப்பட்டறை’யில்  சில ஆண்டுகள் நடிகராக இருந்தார். நாடக ஆளுமைகளான சே.ராமானுஜம் நா. முத்துச்சாமி ஆகியோரின்  சில படைப்புகளையும், தமிழ்க்கொடி  என்கிற ஆண்டு மலரையும் தொகுத்தவர். நாடக விமர்சனத்திலும் ஆவணப்பட உருவாக்கத்திலும் ஈடுபட்ட அவர் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.” என்று குறிப்பிட்டுள்ளார்கள். முதலில் 60 வயதில் தன்னுடைய முதல் நாவலை எழுதிய ஏயெம் அவர்களுக்கு வாழ்த்துகள்.

 நல்ல வலுவான கதை உள்ள நாவல். ஆனால் இந்த நாவலின் வெற்றியாக  நான் கருதுவது நம்பத்தகுந்த தகவல்களும், அதனை விவரிக்கும் முறைகளும் ,உள்ளத்தின் மன ஓட்டங்களை அப்படியே பதிந்து இருப்பதும் என்று எண்ணுகிறேன். மிகப் பெரிய தன்னம்பிக்கை கொடுக்கக்கூடிய நாவல் என்று கூடச் சொல்லலாம். கடைசியிலே கடவுள் என்று சொல்லாடல் வந்தாலும் கூட நாவலின் தொடக்கத்தில் கடவுள்  பற்றியும் கடவுள் நம்பிக்கையைப் பற்றியும் எதுவுமே இல்லை. மிக இயல்பாக ஆடு மேய்ப்பது, ஆடு மேய்ப்பதற்கான இடங்கள், காடு, வயல், வறண்ட நிலம் என்று அப்படியே வாசிப்பவரின் மனக்கண்ணால் காணும் அளவிற்கு விவரித்துள்ளார். சின்னக் கிராமம்,அங்கு இருக்கும் பல்வேறு குணமுடைய மனிதர்கள், தங்கள் ஆட்டை மேய்ப்பதற்காக மகடாலுடன் வரக்கூடிய குழந்தைகள், குழந்தைகளுக்கு உள்ளே இருக்கும் தனித்திறமைகள் என நாவல் நகர்கிறது.தொழுநோய் ஏற்பட்ட நிலையில் அவரை அந்தக் கிராமத்தில் இருக்கும் சிலர் பார்க்கும் பார்வை.அந்த நோயோடு அவர் படும் துயரம். கண்ணில் நீரை வரவழைக்கும் காட்சிகள்.

ஆடு மேய்க்க தன்னோடு வரும்  குழந்தைகளுடைய தனித் தன்மைகளை வெளிக் கொண்டுவரக் கூடிய ஒரு ஆசிரியராக அந்த முதிர்ந்த ஆடுமேய்ப்பவர்,மகடாலு  மாறுகிறார். உணர்ச்சிவயமாக இருக்கக்கூடியவர்களையும் கூடத் தனது அணுகுமுறையால் மாற்றுகிறார்.  . எத்தனை துன்பங்கள்  வந்தாலும் கூட அதனைப் பொறுத்துக் கொண்டு செல்லக்கூடியவராக இந்த நாவலின் நாயகன் மகடாலு இருக்கிறார்.

 

இந்த நாவலில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் அதற்கு உரிய குணங்களோடு செதுக்கப்பட்டிருக்கிறது.மன்னார்,அவரது மனைவி கமலா,, குறிப்பாக கனகா என்ற கதா பாத்திரம். ஒரு பாலியல் தொழிலாளியைப் போல இருக்கக் கூடிய கனகா,எப்படிப்பட்ட மன உறுதியுடையராகவும்,ஆபத்தில்  காப்பாற்றக் கூடியவராகவும் இருக்கிறார் என்பதை அழுத்தம் திருத்தமாகப் படைத்துள்ளார். அதேபோல கோபி என்ற கதாபாத்திரம் ,எரிச்சல் கோபம் ,எப்போதும் சிடு சிடு என்று இருக்கக்கூடிய அவர் எப்படி மாறுகிறார், ஏன் மாறுகிறார் என்பது நல்ல உளவியல் சார்ந்த அணுகுமுறை. நிலத்தை  அறைந்தால் நமது கைதான் வலிக்கும் என்று திருவள்ளுவர் சொன்னதைப் போல கோபி உணர்ந்து திருந்துவதும் பின்பு வக்காலத்து வாங்கி பேசுவதும் கதையில் ஒரு நல்ல திருப்புமுனை. இன்றைக்கும் கூட அதிகாரவர்க்கும் யாருக்குத் துணை நிற்கிறது என்பதும், உழைக்கும் மக்களுக்கு எப்படி எதிராக இருக்கிறது என்பதும் நாவலின் போக்கில் சுட்டப்படுகிறது.

 

 


 

 

அழகுக்கொடி அவளின் அண்ணன் தர்மன் அவரின் அம்மா அப்பா, வில்லனாக வரும் வீரபாகு அவனின் நடவடிக்கைகள் கொஞ்சம் சினிமாத்தனமாக இருந்தாலும் கூட கதைப் போக்கிற்கு மிக அழுத்தமான நிகழ்வுகளாக அமைந்திருக்கின்றன. தனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய கொடுமைக்குப் பிறகு ஆவேசத்துடன் சண்டையிட்டுப் பின்பு அமைதிவழிக்கு மாறும் மகடாலு  கதாபாத்திரம் மிகச்சிறப்பாகப் படைக்கப்பட்டுள்ளது.

 

ஒரு முறை தாராளமாக இந்த  நாவலை வாசிக்கலாம். சில புரிதல்கள் கட்டாயம் கிடைக்கும்.இந்த நாவல் மாறிய விதம், இந்த நாவலை உருவாக்குவதற்கு உதவிய அவரது நண்பர்கள் த.ராஜன்,கவிஞர் ரவிசுப்பிரமணியன்,அருண்பாரி,ஆஸ்திரேலியாவில் இருக்கும் பராசக்தி சுந்தரலிங்கம்,எழுத்தாளர் சீனிவாச ராமானுஜம்,சி.மோகன் மற்றும் வாசிப்பாளர்கள் என்று தனது என்னுரையில் இந்த நாவல் ஆசிரியர் கொடுத்திருப்பது மற்ற எந்த நாவலின் என்னுரையிலும் நான் வாசிக்காத அணுகுமுறை. இவருக்கு கருத்துகளால் உதவிய அனைவருக்கும் நமது வாழ்த்துகளைத் தெரிவிக்கலாம்.வாசித்துப்பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.

                    


வா.நேரு, 23.10.2026

Sunday, 30 August 2026

அண்மையில் படித்த புத்தகம் : பர்தா ( நாவல்).....மாஜிதா

 

அண்மையில் படித்த புத்தகம் : பர்தா ( நாவல்)

 நூல் ஆசிரியர்              : மாஜிதா

முதல் பதிப்பு                : ஜனவரி 2023

பதிப்பகம்                    : எதிர் வெளியீடு,பொள்ளாச்சி.,

                              9894875084,9942511302

மொத்த பக்கங்கள்  : 136 ,விலை ரூ 200

கலைஞர் நூற்றாண்டு நூலக எண்: 894.81135493  MAJ ;2

 

இந்த நாவலை நாவல் ஆசிரியர்  ‘ஒவ்வொரு உரையாடலிலும் என் சிந்தனையின் மையத்தை அசைத்துச்சென்ற விளிம்பின் குரல் ‘ஹெச்.ஜி.ரசூலுக்காக’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.ஹெச்.ஜி.ரசூல் ஒரு கலகக்காரர்.அந்தக் கலகக்காரருக்கு இந்த நூல் என நாவலாசிரியர் குறிப்பிட்டிருப்பது, கதையின் உள்ளடக்கத்திற்கு மிகச்சரியாகப் பொருந்துகிறது.ஊர் விலக்கம் செய்யப்பட்ட எழுத்தாளர் அவர்.

     ’    ஆயிரம் நபிமார்கள் இருந்தும்

          ஏனில்லை வாப்பா

           ஒரு பெண் நபி?’

என்னும் கேள்வியைக் கவிதையின் வாயிலாகக் கேட்டவர். இலங்கையிலிருந்து சென்று இலண்டனில் வசிக்கும் நாவல் ஆசிரியர் மாஜிதா, தமிழ்நாட்டின் தென்கோடியில் இருந்து மறைந்த ஹெச்.ஜி.ரசூலுக்கு இந்த நூல் என்று குறிப்பிட்டிருந்ததே இந்த நூலை எடுத்துப் படிப்பதற்கு எனக்குத் தூண்டுகோலாக இருந்தது.

கரன் கார்க்கி அவர்கள் தனது ‘ஒற்றைப்பல் ‘ நாவலில் ‘கடவுளின் வழியாக வாழ்க்கையைப் பார்ப்பது’ என்பதற்கும் ‘வாழ்க்கையின் வழியாகக கடவுளைப் பார்ப்பது ‘என்பதற்குமான வேறுபாட்டைத் தனது கதாபாத்திரங்களின் வழியாக நுட்பமாக விளக்கி இருப்பார். அதுபோல இந்த ‘பர்தா ‘ நாவலின் ஆசிரியர் ‘பர்தா’வை மதவாதிகளாக இருக்கும் ஆண்கள் பார்ப்பதற்கும் ,கடவுள் நம்பிக்கை இருந்தாலும் அதனைப் பெண்கள் பார்ப்பதற்குமான வேறுபாட்டை வாசிப்பவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் ஒரு புனைவாகக் கொடுத்துள்ளார்.மிக நல்ல முயற்சி. துணிவான முயற்சி. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

மதத்தின் அதிகார மையங்கள் அவ்வளவு வலிமையானவை. சாதியைப் போலவே கொடூரமானவை. மதத்தின் அதிகாரமையம் எப்போதும் பெண்ணைக் கட்டுப்படுத்தும் குரலைக் கொடுத்துக்கொண்டேயிருக்கிறது.ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்னால் நாம் பார்த்த இஸ்லாம் மதத்தைச் சார்ந்த பெண்களுக்கும், இன்றைக்கு நாம் பார்க்கும் இஸ்லாம் மதத்தைச் சார்ந்த பெண்களின் உடைகளுக்குமான வேறுபாட்டை,அதன் காரணத்தை இந்த நாவல் தெளிவாக விளக்குகிறது.



136 பக்கங்கள்.22 அத்தியாயங்கள் உள்ள நாவல்.நாவலின் முதல் அத்தியாயம் ‘சுரையா’ என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. இந்த நாவலுக்கே ‘சுரையா ‘ என்னும் பெயரைக் கொடுக்கலாம்.ஏனெனில் இந்த நாவலே சுரையா என்னும் ஒரு பெண் கதாபாத்திரத்தின் கதைதான்.ஆனால் சுரையா சிறுமியாக இருக்கும்போது ஆரம்பித்து ,முடிவில் ஓர் இளம்பெண்ணின் தாயாக இருக்கும் காலம்வரை ‘பர்தா ‘வின் தாக்கம்,உளவியல்,ஆண்களின் மனவோட்டம் எனத் தொடர்ந்து பேசுவதால் சுரையாவும் பர்தாவும் எனப் பெயர் வைத்திந்தாலும் பொருத்தமாக இருக்கும் எனினும் ‘பர்தா ‘ என்னும் தலைப்பு பொருத்தமானதாகவே இருக்கிறது.ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தும் தலைப்பாக இருக்கிறது.

இலங்கையில் இருக்கும் தனது சொந்த ஊரான மாவடியில் ,வாய்க்கால் நீர் விளையாட்டு விளையாடும் சிறுமி சுரைக்கா பற்றிய அறிமுகம்,அவளது தந்தை ஹயாத்து லெப்பை, சுரைக்கா விரும்பும் ‘டயனா கட் ‘ ,அவளது தாய் பீவி, வீட்டிற்கு யாரும் விருந்தினர்கள் வந்தால் தாவணி அணியவேண்டும் என்னும் கட்டுப்பாடு என்று முதல் அத்தியாயத்தில் வேகமெடுக்கும் இந்த நாவல், முழுவதும் அருமையான விவரிப்புகளாலும் உண்மைத்தன்மை வாய்ந்த நிகழ்வுகளின் கதைகளாலும் உயிரோட்டமாய் நகர்கிறது.

ஈரானுக்கும் அமெரிக்காவும் நடக்கும் போரில் நாமெல்லாம் ஈரானின் பக்கம் இருக்கிறோம்.ஆனால் இஸ்லாமியப் பழமைவாதத்தை உலகமெல்லாம்  பரப்புவதில்,பெண்களைக் கட்டுபடுத்துவதில்  ஈரானின் பழமைவாதப்பங்கு குறித்து இந்த நாவல் பேசுகிறது.சில ஆண்டுகளாக இஸ்லாமியப் பெண்களுக்குக் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கும் ஹபாயா என்னும் உடலை முழுவதும் மறைக்கும் கருப்பு உடைக்கு அடிப்படை ஈரான் என்று இந்த நாவல் குறிப்பிடுகிறது. இதனால் ஒரு பெண்ணுக்கு உடல் ரீதியாக ஏற்படும் வசதியின்மையை(அசெளகரியத்தை) இந்த நாவல் பேசுகிறது.

ஒரு குறிப்பிட்ட கட்டத்தில்,பர்தா வேண்டாம் எனச்சொல்லும் சுரைக்கா-விற்கு அவளது குடும்பம் கொடுக்கும் தண்டனை கொச்சிக்காய் தண்டனை என்னும் அத்தியாயம் குடும்பத்தின் வன்முறையை அப்பட்டமாகக் காட்டுகிறது.ஆமினா டீச்சரின் எதிர்க்குரல் ஹயாத்து லெப்பைக்குக் கொடுக்கும் எரிச்சல்,அவரது குடும்பத்து பெண்களின் மீதான் வன்முறையாக விழுகிறது.பல்கலைக்கழகம் படிப்புவரை பர்தா கட்டாயப்படுத்தப்பட்டதால் ,பர்தாவை அணியும் சுரைக்கா, பின்பு அதனை விட்டுவிடுகிறாள். லண்டன் சென்றபிறகு அவளுக்கு அதனை வற்புறுத்த யாருமில்லை என்பதால்,பர்தாவைப் பற்றிய சிந்தனை இல்லை. ஆனால் பர்ஹானா என்னும் பெண்மணி விரும்பி பர்தாவை லண்டனில் அணிந்து கொண்டு வாழ்கிறாள்.அவளது கருத்து, நமக்கு இது தேவை என்பதாக இருக்கிறது.அவளிடம் ஒரு வெள்ளைக்காரி வெறுப்பை உமிழ ,பர்ஹானா உடுத்தியிருக்கும் பர்தாவும் ஹபாயாவும் காரணம் என்று உணர்கிறபோது ,பாதுகாப்பின் அடிப்படையிலும் பர்தாவைப் பற்றி யோசிப்பதாக வருகிறது.

நகரத்திற்கும் கிராமத்திற்குமான வேறுபாடும் சுட்டப்படுகிறது. நகரத்தில் பர்தா இல்லாமல் இருப்பது சுலபம்.ஆனால் கிராமத்தில் அப்படி இருப்பது மிகக்கடினம் என்று ஓரிடத்தில் சுரைக்கா பேசுவார்.சாதியென்றாலும் ,மதம் என்றாலும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கிறார்களா என்று மிகத் தீவிரமாகக் கண்காணிக்கும் இடங்களாகவும்,கடைப்பிடிக்கவில்லை என்றால் தண்டனை தரும் இடங்களாகவும் கிராமங்கள்தான் இன்றைக்கும் இருக்கின்றன,அது தமிழ்நாடாக இருந்தாலும், இலங்கையாக இருந்தாலும். 

சுரைக்காவின் தாய், இலண்டனிலிருந்து வரும் சுரைக்காவை பர்தாவை அணிந்துகொள்ளச்சொல்லும்போது, சுள்ளெனச் சொல்லி சுரைக்கா மறுக்கிறாள். சுரைக்காவின் தாய் அமைதியாகிறாள். ஆனால் தனது மகளிடம் செல்லாத தனது கருத்தை , மகளின் மகளான,தனது பேத்தி றாபியாவிடம் மறைமுகமாகத் திணிக்கிறாள்.அதனை நம்பும் பேத்தி றாவியா  பர்தாவை விரும்பி ஏற்றுக்கொள்வதாகக் கதை முடிகிறது.இந்த இடத்தில் நாவல் ஆசிரியர் ஒரு சமரசம் செய்திருப்பதுபோல் தோன்றுகிறது.

பேசக்கூடாது என்று சொல்லப்படும் ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு மாஜிதா, தனது முதல் நாவலையே மிகச்சிறப்பாகப் படைத்துள்ளார்.” இஸ்லாமியப் பெண்ணுக்கான சீருடையாகப் பர்தாவை அல் குர் ஆன் பரிந்துரைக்கவில்லை எங்கிறது ஒரு தரப்பு..இஸ்லாமியப் பெண் மூடப்பட்டவளாக இருப்பதே மார்க்கம் காட்டும் நெறி என்கிறது இன்னொரு தரப்பு.இந்த இரண்டு கருத்து முனைகளுக்கு இடையில் ஊசலாடும்  பெண்களின் நிலையே நாவலின் கதையாடல்.பீவி,அவரது புதல்வி சுரையா,சுரையாவின் மகள் றாபியா ஆகிய மூன்று முதன்மைப் பாத்திரங்களும் பர்தாவின் உள்ளடக்கமாக ஆகிறார்கள். இல்லை. ஆக்கப்படுகிறார்கள். மத நம்பிக்கையாகவும், அரசியல் நிர்ப்பந்தமாகவும் அதிகார அடக்கு முறையாகவும் பர்தா உருமாற்றப்படுகிறது ஏனெனில் அது ஓர் ஆடை மட்டுமல்ல.இந்த உண்மையைச் சுட்டிக்காட்டும் நாவலாசிரியர் மதத்துக்கும்,அரசியலுக்கும் ஆண் மைய அதிகாரத்துக்கும் எதிரான எதிர்ப்புக் கொடியாகப் பர்தாவை உயர்த்துகிறார்.




கூரான வாளின் மீது நடக்கும் சாகசத்தை முதல் நாவலிலேயே அச்சமின்றி மேற்கொண்டிருக்கிறார் பாத்திமா மாஜிதா “ என்னும் சுகுமாரன் அவர்களின் கருத்து நாவலின் பின் அட்டையில் பொறிக்கப்பட்டிருக்கிறது. உண்மைதான். பெண்ணியம்,பெரியாரியம் பேசக்கூடிய தோழர்கள் மட்டுமல்ல அனைவருமே படிக்கவேண்டிய நாவல் இது. பரப்பவேண்டிய நாவல் இது. தனது வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை  ஒரு பெண் கூறுவதாக இந்த நாவலாசிரியர் குறிப்பிட்டு இந்த நாவலைப் படைத்திருக்கிறார். எல்லா மதங்களும் பெண்களுக்கு எதிராகக் கட்டிவைத்திருக்கும் கோட்டைகள் எல்லாம் பெண்களாலேயே இடிக்கப்படும் என்னும் நம்பிக்கையத் தரும் நாவல் இந்த நாவல் .முதல் நாவலையே பேசப்படும் நாவலாக, படிப்பவர்களை யோசிக்க வைக்கும் நாவலாகப் படைத்திருக்கும் எழுத்தாளர் மாஜீதா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்….

                        

முனைவர் வா.நேரு,@ மதுரை.30.08.2026