Sunday, 16 November 2014

அண்மையில் படித்த புத்தகம் : ராசம்மா-மு.அம்சா(சிறுகதைத் தொகுதி)

அண்மையில் படித்த புத்தகம் : ராசம்மா (சிறுகதைத் தொகுதி)
ஆசிரியர்                                          : மு.அம்சா
பதிப்பகம்                                         : காவ்யா பதிப்பகம் , சென்னை-24
முதல் பதிப்பு                                  : 2005 , மொத்த பக்கங்கள் 106, விலை ரூ 60
மதுரை மாவட்ட மைய நூலக எண் : 164635


                                                           பத்து சிறுகதைகளைக் கொண்ட சிறுகதைத் தொகுதி இந்தப் புத்தகம் . நூல் ஆசிரியர் மு.அம்சாவின் முதல் சிறுகதைத் தொகுதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. " இச்சிறுகதை தொகுப்பு என் முதல் முயற்சி. ஆனால் சிறுகதைக்கு நான் புதியவள் அல்ல .ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கிறேன் " என்று என்னுரையில் மு.அம்சா குறிப்பிடப்பட்டுள்ளதுபோல இந்தக் கதைகள் புதிய எழுத்தாளரின் கதைகளாக இல்லை, ஒரு தேர்ந்த சிறுகதை எழுத்தாளரின் கதைகளாகவே இருக்கின்றன.



                                        தொகுப்பில் உள்ள கதைகள் பெரும்பாலும் பெண்களின் மன உணர்வுகளைப் பேசும் கதைகளாக இருக்கின்றன. உணர்வுகள் போலியாக இல்லை, நெருப்பை அள்ளிச்சுமக்கும் மனதுகளின் அக்னி வார்த்தைகளாக வந்து விழுகின்றன ஒவ்வொரு சொற்களும். பணக்கார வீடுகளில் வேலைக்காரியாக வேலை பார்க்கும் பட்டணத்து கலா, கிராமத்துக்காரனான ஏழுமலைக்கு வாக்கப்பட்டு, கிராமத்திற்கு வந்தபின்பு ஒட்ட முடியாமல் தடுமாறுவதையும் , அவளை எப்படியாவது கிராமத்திற்கு பழக்கப்படுத்தி விடலாம் எனப்படாத பாடுபட்டு கடைசியில் தோல்வியுறுவதையும் சொல்லும் 'கனவு வாழ்க்கை' , ஒருவனை நம்பி அல்லல்பட்டு, அவனால் ஒரு பெண்குழந்தையும் பெற்று, அவள் வளரும் நிலையில் தனிக்கொடியாய் ஆகிப்போன அம்மா, தான் வளர்ந்த நிலையில் இன்னொருவரின் மேல் ஆசை கொண்டு சின்ன வீடாக ஆகிக்கொள்ளலாமா என எண்ணம் தடுமாறும் நிலையைத்  தடுக்கும் மகள்  'வசு' வின் கதையைச்சொல்லும் ' நான் உறங்கும் நாள் வேண்டும் ' என்னும் சிறுகதை, என் கணவர் ஆர்மி மேனாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டு, அத்தை மகனை மிலிட்டரிக்கு அனுப்பி , அவன் மாற்றுத் திறனாளியாக வந்த நிலையிலும் மனமுவந்து அவனைக் கட்டிக்கொள்ளும் 'துளசி' யின் கதை சொல்லும் ;கலையாத கனவுகள் " எனப் பல கதைகள் பெண்களின் மன நிலையைத் தெளிவாகப் பேசுகின்றன.

              இளம் வயதில் 'தேவகி ' என்னும் பெண்ணைக் காதலித்துவிட்டு , பின்பு அப்பாவின் வற்புறுத்தலால் வேறொரு பெண்ணை மணந்து , குழந்தை பெற்று சாகப்போகும் வேளை , தான் செய்த துரோகத்தை எண்ணி துன்புறும் விஸ்வா மற்றும் தேவகி கதை சொல்லும் ' கண் மூடும் வேளையிலே ' இரண்டாம் மனைவியாக எனக்கு இரு என்று கேட்கும் மேல் அதிகாரியிடம் , உனது மனைவிக்கு இரண்டாவது கணவனைப் பார்த்து கட்டி வைத்துவிட்டு வந்து ,என்னை இரண்டாவது மனைவியாக ஏற்றுக்கொள் என்று சொல்லும் சுமதியின் கதை சொல்லும் ' சம்மதம் தருவாயா ? " , வாழ்ந்த பத்து வருட காலமும் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்ற கணவன் செத்த நாளன்று , அழு அழு என்று மற்றவர்கள் சொன்னாலும் மனதார அழமுடியாமல் ஒப்புக்கு அழும் பவுனா " அடப்பாவி இதற்குத்தானா இத்தனை ஆட்டம் போட்டாய் ?ஊரெல்லாம் ஒப்புக்காய் அழுகிறது. ஆனால் உனக்காக அழவேண்டிய நான் அழ முடியாமல் உட்கார்ந்திருக்கிறேன். என்ன வாழ்க்கை வாழ்ந்து விட்டாய் எம் புருஷனே? உன் சாவில் எனக்கு சந்தோசமில்லை ஆனாலும் உனக்காக என்னால் அழ முடியவில்லை " என்று அழுத்தம் திருத்தமாகச்சொல்லும் 'அழ முடியவில்லை ' என்னும் கதை போன்றவை மனதில் நிற்கின்றன.

                          வயது முதிர்ந்தவர்களை வார்த்தைகளால் கொல்லும் உறவுகளின் மன வ்க்கிரங்கள் பற்றிப்பேசும் ' நிழல் தேடும் மரங்கள் ' கதை நெஞ்சைக் கணக்க வைக்கின்றது. முதிர்ந்த வயதில் ராசாராமனை பழகும் பெண்ணோடு இணைத்து பாலியல் ரீதியாகக் கொச்சைப்படுத்திப்  பேசும்  மருமகள், அதனைத் தட்டிக்கேட்க இயலா மகன் , தன்னைப்போன்ற ஓய்வுபெற்ற தோழர்களிடம் புலம்பித்தவிக்கும் ராஜாராமன் , கடைசியில் விபத்துபோல தன் வாழ்வை முடித்துக்கொள்ளும் ராஜாராமன் கதாபாத்திரம் எதார்த்த சித்திரம். வயது முதிர்ந்த நிலையில் சிலர் விபத்து போலவும், இயற்கை இறப்பு போலவும் தற்கொலை செய்துகொள்வதை வாழ்க்கையில் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம். ' உலகத்திலேயே மிகக் கொடிய ஆயுதம் ', ' நிலைகெட்டுப்போன மனிதர்களின் நாக்குதான் " என்னும் என்.எஸ்.கிருஷ்ணன் பாட்டுத்தான் ஞாபகம் வந்தது இந்தக் கதை படித்தபொழுது.

                     இந்தச்சிறுகதைத் தொகுப்பின் தலைப்பாக அமைந்துள்ள 'ராசம்மா ' கதையும் எதார்த்தமான நடையில் ஒரு பெண்ணின் போராட்டத்தைச்சொல்கின்றது. ஆனால் மத்தியதர வர்க்கம் போல இல்லாமல், அன்றாடம் உழைத்துப் பிழைக்கும்  பெண் என்பதால் துணிவாக ராசம்மா எடுக்கும் முடிவைச்சொல்கிறது இந்தக் கதை. ஒரு பெண் குழந்தை இருக்கும் ,கணவனை இழந்த ராசம்மாவை முனியன் கட்டிக்கொள்கின்றான் . இருவருக்கும் ஒரு ஆண்குழந்தையும் பிறக்கிறது. ராசம்மாவின் இரண்டாவது கணவன் முனியன், முதல் கணவனுக்கு பிறந்த ஜோதியை வெறுக்கிறான். தன் வெறுப்பை பலவகைகளில் காட்டுகிறான். முனியனை திருத்த முயற்சி செய்யும் ராசம்மா தோற்கிறாள். இருவரும் வாழவேண்டுமென்றால், மகள் ஜோதியை பாட்டி வீட்டில் விட்டு வரவேண்டும் என்று சொல்கின்றான் முனியன். பிள்ளையா? கணவனா ? என்று கேள்வி வரும்போது, பிள்ளை ஜோதியே வேண்டும் என்று முடிவுசெய்து ஊர்ப்பஞ்சாயத்து மூலம் விளகிக்கொள்கின்றாள் ராசம்மா. புல்லுக்கட்டு சுமந்து வாழ்வைக் கடக்கும் ராசம்மாவின் வாழ்க்கையை மிக எதார்த்தமான நடையில் சொல்லும்விதத்தில் , சாதாரண மக்களின் வயிற்றுக்கழுவுவதற்கான போராட்டத்தை எளிய நடையில் அருமையாகச்சொல்லிச்செல்கின்றார் மு.அம்சா.

                     இந்தச்சிறுகதைத் தொகுப்பில் மிகவும் பாதித்த கதை 'ஒரு பெண்ணும் இரண்டு தாலியும்' என்னும் கதை. வேறு சாதியைச்சார்ந்த சாவித்திரியைக் காதலித்த சிவா , சாவித்திரியின் வீட்டில் வந்து பெண் கேட்க விரட்டப்படுகின்றான். பின்னர் இருவரும் கோயிலில் திருமணம் செய்து கொண்டு ஒரு மாதகாலம் இன்பமாக வாழ்கின்றார்கள். தேடி வந்து , அழைத்துச்செல்லும் சாவித்திரியின் அப்பா மற்றும் உறவினர்கள் சிவாவை கட்டி வைத்து அடிக்கின்றார்கள், சிவாவின் கண்ணுக்கு முன்னாலேயே , சிவா கட்டியிருந்த தாலியை அறுத்து எறிந்துவிட்டு, அத்தை மகன் நோஞ்சான் சுப்புவை தாலி கட்டச்சொல்கின்றார்கள், சிவா குற்றுயிரும் குலை உயிருமாய் ஊரை விட்டுத் துரத்தப்படுகின்றான். அத்தை மகன் சுப்பு சாவித்திரியை  ஆறுமாதம் வீட்டில் வைத்திருந்து  , கொடுமையாய் கொடுமை செய்து , சாவித்திரி அப்பன் வீட்டில் வந்து விட்டுப்போகின்றான். வேறு திருமணம் முடித்துக்கொள்கின்றான். வாழாவெட்டியாய் , இரண்டு தாலிகள் கட்டப்பட்ட சாவித்திரி அப்பாவின் வீட்டில் , சகோதரர்களின் மனைவிகளிடம் வேலைக்காரியாய் பத்து வருடங்களாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றாள். தர்மபுரி இளவரசன் - திவ்யா, உசிலம்பட்டி திலீப்குமார்-விமாலாதேவி என நம்மைச்சுற்றி நிகழும் கொடுமைகளின் கருத்துருதான் இந்தக் கதை. ஒரு பெண்ணாக இருக்கும் இந்த எழுத்தாளர் மு.அம்சா காதலர்களின் பக்கம் இருக்கும் நியாயத்தை மிக நேர்த்தியாக விவாதிக்கின்றார்.

                   " ஏன் ...ஏன் . .என்னை ... என் வாழ்க்கையை கெடுத்தார்கள். எனக்கு ஏன் இந்த கொடுமையை செய்தார்கள். ஒருவரோடு சந்தஷோமாக இருந்தவளை இழுத்துவந்து இரண்டாமவனுக்கு கட்டி வைத்து நடத்தை கெட்டவள் என்ற பட்டம் சூட்டி அழகாய் நான் அமைத்துக்கொண்ட வாழ்க்கையை அலங்கோலமாக்கி ...ஆண்டவ்னே இது நியாயமா? அடுக்குமா ? தனக்குள் மறுகிப்போனாள். அன்றிலிருந்து சாமி கும்பிடுவதையே நிறுத்தினாள்.

                      காதல் காலங்காலமாய் ... வாழுகிறது. காதலர்கள் வாழ்கிறார்களா ? காதலர்கள் வாழாதபோது அந்த காதல் வாழ்வதில் என்ன நியாயம் ? காதலர்களைப் பழி வாங்கிக் கொண்டே இருக்கவா ? சுப்புவுடனான அவளது வாழ்வும் முடிந்தபிறகு அந்த ஸ்டோர் ரூமில் ஒரு மூலை அவளுக்கு ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. எந்த உறவுக்காரர்கள் முன்னாலும் வரக்கூடாது. வெளியே வாசல் திண்ணை என்று வந்தால் காலை ஒடித்துப்போட்டு விடுவதாக மிரட்டினார் அப்பா. ஏனோ அம்மாவும் அதற்கு துணை போவதைத்தான் அவளால் தாங்க முடியவில்லை.ஒரு பெண்ணின் மனம் ஒரு பெண்ணுக்குக் கூடவா புரியாது ? " பக்கம் 68 . சுற்றங்கள் என்பது எப்படி பெண்களின் உணர்வுகளை , விருப்பங்களை கொல்கின்ற ,அழிக்கின்ற கருவிகளாக இருக்கின்றது என்பதனை மிகத்தெளிவாகவும், படிப்போர் மனதில் உறுத்தும் வண்ணமும் இந்த ' ஒரு பெண்ணும் இரண்டு தாலியும் ' என்னும் கதையை அமைத்திருக்கின்றார்.

                   தமிழில் கவிதை எழுதுபவர்கள் அதிகம். சிறுகதை எழுதுபவர்கள் மிகவும் குறைவு. அதிலும் சமூகத்தில் நிலவும் கொடுமைகளை, அதனால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை  விவரிக்கும் சிறுகதை பெண் எழுத்தாளர்கள் மிகவும் குறைவு,  பெண்ணின் மனதை பெண்ணே விவிரிக்கும் விவரிப்புகளாக மு.அம்சா அவர்களின் கதைகள் இருக்கின்றன. பாராட்டுக்குரிய கதைகள் இந்தக் கதைகள்.இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் 'கலையாத கனவுகள் ' என்னும் கதை மட்டும் கொஞ்சம் செய்ற்கையாக இருக்கிறது. மற்ற கதைகள் அனைத்தும் எதார்த்தங்களின் எதிரொலியாய், சமூகத்தின் அவலங்களைச்சொல்லும் சங்கொலியாய் அமைந்திருக்கின்றன.

               


2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அவசியம் வாங்கிப் படிக்கின்றேன் ஐயா
நன்றி

முனைவர். வா.நேரு said...

நன்றி அய்யா, வாசிப்பிற்கும் கருத்திற்கும். பதிவர்களுக்கு தொடர்ந்து உற்சாகமூட்டும் பணியைச்செய்கின்றீர்கள். வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.