அலுவலகத்தில் இந்த சனிப்பெயர்ச்சி கொசுக்கடித்தொல்லை தாங்க முடியவில்லை . என்னவோ ராக்கெட் விடுகிற ஏவுதளத்தில் இருந்து நம்பர் 1,2, 3 சொல்றமாதிரியான பாவனைகளும், ஏழரை நாட்டு சனி பிடிச்சிருச்சு, பிடிச்சிருந்த சனி போயிருச்சு என்னும் உரையாடல்களும் ரொம்பவே நமக்கு பிரசரை அதிகரிக்க வைத்தது. அவர்களுக்கெல்லாம் விடுதலையில். இன்று(18..12.2014) வந்த இந்தக் கட்டுரை சமர்ப்பணம் உண்மையை பிட்டு பிட்டு வைத்திருக்கும் விடுதலை சிறப்புச்செய்தியாளர் குழுவிற்கு நமது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
Read more: http://www.viduthalai.in/page-8/93066.html#ixzz3MGAfMh00
திருநள்ளாறு - சனிப் பெயர்ச்சிப் பித்தலாட்டம்
விடுதலை செய்தியாளர்களின் நேரடி ரிப்போர்ட்
சூரிய மண்டலத்திலுள்ள இரண்டாவது பெரிய கோள் சனி. இது சூரியனிலிருந்து 142 கோடியே 60 லட்சம் கி.மீ. தொலை வில் உள்ளது. இது சூரியக் குடும்பத்தின் 6ஆவது கோளாகும். இதற்கு 47 துணைக் கோள்கள் இருக்கின்றன.
அதாவது 47 நிலவுகள், சனிக்கோள் சூரியனை ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு (பூமியின் ஆண்டுக் கணக்குப்படி) 30 ஆண்டுகள் ஆகின்றன. சனிக்கோளுக்கு அதுதான் ஓர் ஆண்டு. அதாவது, சனிக்கோள் சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்குள் பூமி சூரியனை 30 முறை சுற்றி வந்துவிடும்.
நமது முன்னோர்கள் பார்வையளவில் கணித்து வைத்திருந்ததை இன்றைய அறிவியல் மிக துல்லியமாக கணித்துக் கொடுத்திருக்கிறது.
இத்தனை கோடி (சுமார் 122 கோடி கி.மீ.) தொலைவிலுள்ள சனிக் கோள், பூமியில் இருக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்குகிறது என்று எண்ணுவதே மடமை ஆகும்.
இத்தனை கோடி (சுமார் 122 கோடி கி.மீ.) தொலைவிலுள்ள சனிக் கோள், பூமியில் இருக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்குகிறது என்று எண்ணுவதே மடமை ஆகும்.
அப்படியே அவர்களின் எண்ணப்படியே கணக்கிட்டாலும் அதுவும் மிக மிகத் தவறான ஒன்றே! அதாவது, 15 கோடி கி.மீ. தொலைவிலுள்ள சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமிக்கு வந்து சேர்வதற்கு 8 நிமிடம் ஆகிறது. அதற்குள் பூமி ஒரு நிமிடத்திற்கு 28 கி.மீ. வேகத்தில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டும், ஒரு நொடிக்கு 30 கி.மீ. வேகத்தில் தன் நீள் வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றிப் பெயர்ந்து கொண்டுமிருக்கும்..
எனில் அந்த 8 நிமிடத்திற்குள் பூமி 223 கி.மீ. தன்னைத் தானே சுற்றியிருக்கும். நாம் பார்க்கும் நேரத்தில் கிளம்பும் சூரிய ஒளிக்கதிர் பூமியில் விழும் இடம் 223 கி.மீ. மாறியிருக்கும். (அதாவது சென்னைக்கு விருத்தாசலத் துக்கும் உள்ள தொலைவு) 14300 கி.மீ. தொலைவு சூரியனைச் சுற்றி யிருக்கும். இதற்கிடையில் பூமி 23.5 டிகிரியில் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பது தனிக் கணக்கு. 15 கோடி கி.மீ.க்கே இப்படி என்றால்? 127 கோடி கி.மீ.க்கு எப்படி? அதுவும் சனிக்கோள் ஒளி உமிழக் கூடியதும் அல்ல.
அப்படியே மக்கள் இதை நம்பித் தொலைத்தாலும் சனிப் பெயர்ச்சியை பூமியின் எந்தப் பகுதியில் இருந்தும் பார்த்துக் கொள்ளலாம். இதற்கான நேரம் மட்டுமே மாறுபடும். இவ்வளவு தானே தவிர திருநள்ளாற்று கொம்யூன் பஞ்சாயத்துக்குத்தான் வரவேண்டும் என்று கட்டுப்பாடான பிரச்சாரம் செய்வது என்பது இந்து மதம் நிலைத்திருப்பதற்கும் அதற்காக மக்களை முட்டாள்களாகவே வைத்திருப்பது அவசியம் என்பதற்கும், அந்த அப்பாவி மக்களிடம் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் பொருட்களையும் கொள்ளை அடித்து விட்டு, அவர்களை இடை விடா மல் கடவுள் சிந்தனையில் ஆழ்த்தி வைப்பதற்குமே ஆகும்.
இதில் பக்தர்கள் புரிந்து கொண்டிருப்பது இந்த ஹிந்து மதத்தின் சதியைப் பற்றி அல்ல. தன்னை இந்த இந்த இராசிக்காரன் என்றும், ஒரு இராசியிலிருந்து சனி இன்னொரு இராசிக்கு பெயர்கிறது என்பதை பெயர்கிறார் என்றும், அதற்கு இரண்டரை ஆண்டுகள் ஆகிறது.
ஆகவே, 3 x 2½ = 7½ என்று கணக்கிட்டு 7½ நாட்டு சனி என்றும் மேலோட்டமாக தெரிந்து வைத்திருக்கின்றனர்; புரிந்து அல்ல.
இதை அம்பலப்படுத்த விடுதலை நாளேடு சார்பில் ஒரு குழு, திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்துக்கு சென்று வந்தது.
இனி, ஓவர் டூ திருநள்ளாறு...
சிறீ தர்ப்பாரண்யேஸ்வரர் தான் கருவறையில் இருக்கும் கல் கடவுள். அதாவது, தர்ப்பைப் புல் வளரும் காட்டைப் பாதுகாக்கும் கடவுள். (காட்டைத்தான் மனிதர்களை அல்ல!) ஆனால், வாடகைக்கு வந்தவர் வீட்டுக்காரரையே ஆக்கிரமிப்பு செய்தது போல, தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் வாடகைக்கு வந்த சனி பகவானை வைத்துக் கொண்டு, கருவறையில் இருக்கும் மூலவரை பின்னுக்குத் தள்ளி, சனிபகவானின் பெருமை பேசப்படுகிறது என்று புலம்புகிறார்கள் அங்குள்ள மூத்த குடிமக்கள்.
நளமகாராசனை சனீஸ்வரன் விரட்ட அச்சமடைந்த நளமகா ராசன் தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் தஞ்சமடைந்ததாகவும், எப்படியும் ஒருநாள் நளமகாராசன் வெளியில் வந்துதானே ஆக வேண்டும் என்று எதிர்பார்த்து சனீஸ்வரனும் அங்கேயே தங்கிவிட்டானாம்.
அரசனுக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்து அச்சப்பட்ட மக்கள் சனீஸ்வரனை வணங்க ஆரம்பித்து விட்டார்கள். ஆக தலப்பட்டா தர்ப்பாரண்யேஸ்வரர் பெயரில் இருக்க, சனீஸ்வரன் சண்டமாருதம் பண்ணி கொண்டிருக்கிறான் என்பது தான் தலவரலாறு.
தர்ப்பாரண்யேஸ்வரரை வைத்து கல்லா கட்ட முடியாமல் தான் சனி பகவான் பேரில் மார்க்கெட்டிங் செய்யப்பட்டது. அது இன்று பலன் தருகிறது என்பன போன்ற விவரங்கள் உண்மை (செப்டம்பர் 16-.30, 2014) இதழில் விரிவாகப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.
சனீஸ்வரன் ஒவ்வொரு ராசியாக இடம் பெயர்ந்து அந்த ராசிக்காரர்களுக்கு கேடு விளைவித்துக் கொண்டிருப்பானாம். இப்படி கேடு விளைவிப்பவன் எப்படி பகவானானான் என்று தெரியவில்லை! நாளேடுகளிலும், ஊடகங்களிலும் சனிப்பெயர்ச்சி திருவிழா வணிக விளம்பரம் முக்கியத்துவம் பிடிக்க, இண்டிபெண்டன்ஸ் டே, 2012, ஏலியன், ஸ்டார் வார்ஸ், அவதார், வார் ஆஃப் வேர்ல்ட்ஸ் என்று ஹாலிவுட் படங்களையெல்லாம் பார்த்திருந்த நமக்கு வானத்தில் நடக்கப்போகும் அதிசயத்தைப் பார்க்கும் ஆவல் இல்லாமலா இருக்கும்? அதுவும் பக்கத்திலேயே நடக்கிறது என்றால் பிளைட் டிக்கெட் மிச்சம்.
அப்படி என்னதான் நடக்கிறது என அறியும் ஆவலுடன்தான் புறப்பட்டுச் சென்றிரு ந்தோம். உள்ளே நுழையும் போதே நளன் குளித்த குளத்திற்குத் தான் முதலில் செல்ல வேண்டும் என்று ஆளாளுக்கு பேசிக் கொண்டனர். இதற்காகவே சோப், நல்லெண்ணெய் என்று அந்த வியாபாரம் வேறு களைக்கட்டியது. நாம் நேராக நளன் குளத்திற்குச் சென்றோம்.
அதுதான் அந்தக்குளத்திற்கு பெயர். அங்கே கண்காணிப்பு கோபுரங்கள், கண்காணிப்பு கேமராக் கள். உடை மாற்றும் அறை, பொருட்கள் வைக்கும் அறை அப்படி இப்படியென்று அமர்க்களப்பட இவைகளை ஜெயா, தந்தி, சன், டைமன்ட் (உள்ளுர்) தொலைக்காட்சிகள் வேறு நேரலை செய்து கொண்டிருந்தன.
பெண்கள், படித்துறை ஓரமாக குளித்துக் கொண்டிருந்தனர், ஒரு பக்கம் பெண்கள் உடை மாற்றும் அறைகள் இருக்க, குளிக்கும் இடத்திலேயே அணிந்திருக்கும் உடையைக் கழட்டிப்போட்டு விட வேண்டு மென்று சட்டம் வேறு. அதையும் அங்கே குளத்தினுள்ளேயே கிரில் கேட் அமைத்து அதில் எழுதியும் மாட்டியிருந்தனர்.
வேறு வழியில்லாமல் பெண்கள் சங்கடத்துடன் உடையைக் களைய வேண்டிய நிலை? இதற்காகவே படித்துறை பக்கம் குளிக்காமல், இளைஞர்கள் குளத்தின் உள்ளே கிரில் கேட் பக்கம் சென்று வேடிக்கை பார்க்கின்றனர். இது இல்லாமலா கோயில்? அண்மைக் காலமாகத்தான் இந்த உடைகளை குளத்தினுள்ளேயே கழற் றிப் போடும் பழக்கம். அதுவே இப்போது வழக்க மாகியிருக்கிறது.
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று சனி பெயரும் நேரமான 2.43 பற்றி கவலைப்படாமல் அதற்கு முன்னும் பின் னும் குளித்தவர்கள் கழற்றிப் போட்ட அழுக்குடைகள் கங்கை நதியில் இறந்த பிணங்கள் மிதப்பதை போல அருவருப்புடன் மிதக்க அதிலேயே தான் மக்கள் குளித்துக் கொண்டிருந்தனர்.
அழுக்குத்துணி... 60 லட்சம்!
சரி இதற்கு என்னதான் தீர்வு? மக்கள் இப்படியேதான் குளிக்க வேண்டுமா என்று பார்த்துக்கொண்டிருந்தபோதே சீருடை அணிந்த ஊழியர்கள் அங்கு வந்து அந்த உடைகளை சேகரிக்கின்றனர். அதை சின்ன சின்ன மூட்டையாகக் கட்டி போட்டு டிராக்டரில் எடுத்து செல்கின்றனர்.
நாம் மிகுந்த ஆவலுடன் எங்கு? எதற்கு? எடுத்துச் செல்கிறீர்கள் என்று அவர்களை விசாரித்தததில் கோயில் நிர்வாகத்தைக் கேளுங்கள் என்று நம்மை மர்மத்தில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டனர். நாம் கூடிய மட்டும் கோயில் தொடர்பான நபர்களிடம் விசாரித்ததில் அவர்களிடம் தான் கேட்கவேண்டும், இவரிடம் தான் கேட்கவேண்டும் என்று கூறி நம்மைத் தவிர்ப்பதிலேயே குறியாய் இருந்தனர். துணிக்காக மட்டுமல்ல. எல்லா விசயத்திற்கும்தான்.
வேறு வழியின்றி மக்களிடம் விசாரிக்கும் பொழுதுதான் நமக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதாவது இந்த அழுக்குத் துணிகள் வெளுக்கப்பட்டு மீண்டும் விற்கப்படுகின்றன. அல்லது மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படு கின்றன. இதற்காக இந்த ஆண்டுக்கு ரூபாய் 60 லட்சத்திற்கு கோயில் சார்பாக குத்தகை விடப்பட்டுள்ளது. குத்தகையே 60 லட்சம் என்றால்? குத்தகைதாரர் எவ்வளவிற்கு விற்பார் என் பதை உங்கள் கணக்குக்கே விட்டு விடுகிறோம்.
மக்கள் உடுத்தியுள்ளதையும் கழற்றிப் போட வைத்து அதில் லட்சக்கணக்கில் காசு பார்க்கும் சாமர்த்தியம் பாவமும், புண்ணியமும் நரகமும் இல்லை என்பதை அவர்களாகவே ஒத்துக்கொண்டதாகவே தெரிகிறது. இது மக்களுக்கு விளங்க வேண்டும். விளங்க வைக்கவும் வேண்டும்.
அதுமட்டுமல்ல காலை முதல் மாலை வரை நாம் அங்கேயே சுற்றிச்சுற்றிப் பார்த்ததில் ஊடகங்களின் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம் நமக்கு தெரிய வந்தது. அதாவது, போனால் போகிறது என்று அதிகபட்சமாக கணக்கிட்டாலும் 25,000 பேர்களுக்குமேல் வந்து போகிற மக்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் 8 லட்சம், 10 லட்சம், 12 லட்சம் என்று வெட்கமில்லா மல் புளுகித் தள்ளுகின்றனர்.
இந்த ஆண்டு வந்திருக்கின்ற மக்கள் எண்ணிக்கையே கூட சென்ற ஆண்டு வந்தவர்களை விடக் குறைவு என்று அங்கிருக்கும் மக்களே சொல்கின்றனர். அதுமட்டுமல்ல, திரும்பத்திரும்ப வருகிறவர்கள் ஒரு சிலரே. புத்தம் புதிதாக ஏமாறுபவர்கள்தான் அதிகம் வந்து செல்கின்றவர்.
பிறகு கோயில் பக்கம் நம் பார்வை திரும்பியது. பக்தி என்பது வெறும் வியாபாரம் தான் என்பதையே அங்கும் காண முடிந்தது. சாதா தரிசனம் ரூ.200, சிறப்பு தரிசனம் ரூ.500 என்று தனியே கவுன்டர் வைத்து டிக்கெட் விற்கப்பட்டுக் கொண்டிருந் தன. வழக்கம் போல தர்ம தரிசனத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள், நம்மைப் பார்த்ததும் நம்மிடம் சீறியும், புலம்பியும் தள்ளிவிட்டனர்.
காசு இருக்கிறவனுக்குத்தான் கட வுளா? எங்களைப் பார்த்தால் பக்தர்களாக தெரியவில்லையா? கால் கடுக்க, மதிய உணவு கூட உண்ண முடியாமல் தவிக்கி றோமே, இதை எப்படியாவது அம்மாவிடம் சொல்லி நடவடிக்கை எடுங்கள் என்று ஒரு பெண் நம்மிடம் புலம்பினார். என்ன செய்ய... தான் இருப்பது புதுச்சேரி மாநிலம் என்பதோ, தமிழ்நாட்டிலும் முதலமைச்சர் மாறிவிட்டார் என்பதோ தெரியமுடியாத பக்தர் அவர்.
அவர் புலம்பலில், இயலாமையும், ஏமாற்றமும் இருந்ததே தவிர இந்த ஏற்றத் தாழ்வுக்கு இடம் கொடுக்கலாமா இந்தக் கடவுள் என்று கடவுள் மீது கோபம் வரவில்லை? அதுசரி, அது வந்தாதான் அவங்க இந்த கோயிலுக்கே வந்திருக்க மாட்டார்களே.
இது ஒரு பக்கம் இருக்க, எப்படியாவது உள்ளே சென்று சனி பகவானை தரிசித்து விட வேண்டும் என்று தவித்த மக்கள் ரூ.200, டிக்கெட்டை வாங்கியபடி பார்க்க முயன்று முயன்று நேரமாக நேரமாக பொறுக்க முடியாமல், அந்த டிக்கெட்டை பாதி விலைக்காவது விற்க முயல, அதையும் வாங்க ஆளில்லாமல் நொந்து போய் திரும்பினர்.
இன்னொரு பக்கம் இலக்கு வைத்து கல்லா கட்ட கோயில் நிர்வாகம் திறந்து வைத்து கூவிக் கூவி அழைத்துக் கொண்டிருந்த இரண்டாவது சிறப்பு தரிசன டிக்கெட் கவுன்ட்டர், டிக்கெட் வாங்க ஆளில் லாமல் உள்ளே இருந்தவர்கள் ஈ ஓட்டிக் கொண்டி ருந்தனர்.
ஊடகங்களின் அதீத விளம்பரம்!
அறிவுக்கும், அறிவியலுக்கும் சற்றும் தொடர் பில்லாத இந்த மூடநம்பிக்கை வணிகக் கொள்ளைக்கு ஊடகங்கள் கொடுத்த விளம்பரங்களால்தான் இவ்வளவு பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. இன்றும் கூட அந்த ஊடகங்கள் தான் அதீத விளம்பரத்தையும், பிரச்சாரத்தையும் செய்துகொண்டிருக்கின்றன.
அதையொட்டி அவர்களுக்கும் பெரிய அளவில் விளம்பர வருவாய், லாபம், கொள்ளை! அதற்கென்று வெளியிடப்படும் சிறப்பு இதழ்களிலும், சிறப்பு நிகழ்ச்சிகளிலும் மூடநம்பிக்கைக் கருத்துகள் கொஞ்சமும் லாஜிக் இல்லாமல் பொழிந்து தள்ளப்படுகின்றன.
முகநூலில் இது குறித்து அதிஷா எழுதியிருக்கும் இந்த கருத்தே போதுமானது.
மீடியா முழுக்க கடந்த ஒன்றரை மாதமாக சனிப்பெயர்ச்சி என்பதை ஏதோ உலக அழிவுக்கு ஒப்பான ஒரு நிகழ்வாக ஊதிப்பெருக்கி வகுத்து கூட்டி... பாவப்பட்ட அப்பாவி பொது ஜனங் களை உறையும் பீதியில் முடக்கி வைத்திருக்கிறார்கள்.
அனேகமாக இவர்கள் கொடுத்த ஓவர் அலப்பறைஸ் ஆஃப் அஸ்ட்ராலஜியில் சனிபகவானுக்கே பீதியாகி அவரும் கூட நம்ம ராசிக்கு என்ன பலன் போட்டி ருக்கான் எங்கே போய் பரிகாரம் பண்ணலாம் சுவாமிஜி நான் தப்பிக்கவே முடியாதா என்று மென்டலாகி மெர்சலாகியிருக்க வாய்ப்பிருக்கிறது.
ரா..ரா...மனசுக்கு...
சனிப்பெயர்ச்சி விழா கூட்டத்தின் ரகசியம் குளக்கரைக்கு சென்றபோதுதான் புரிந்தது. பக்தர்கள் தாங்கள் அணிந்திருக்கும் ஆடையை அந்தக்குளத்தில் மூழ்கி எழுந்தபின் அங்கேயே களைந்துவிட்டு வந்து விடவேண்டுமாம்.
அப்படி விடுவதன் மூலம் அவர்களை பிடித்த சனி விலகிவிடும் என ஒரு புரட்டை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்து அமைப்பினர் திட்ட மிட்டு பரப்ப, அந்தக்காட்சியை காண்பதற்கென்றே இளைஞர்கள் கூட்டம் படையெடுக்க ஆரம்பித் திருக்கிறது.
கூட்டம் கூடுவது ஒரு புறம் அதிகரிக்க, அங்கு அவிழ்த்து விடப்படும் ஆடைகள் பல லட்சத்திற்கு ஏலமும் விடப்படுகிறது. கூட்டத்திற்கு கூட்டமும், வரும்படிக்கு வரும்படியும் வந்து சேருகிறது. (இந்த வியாபாரம் பிற கோயில் குளங்களிலும் விரைவில் அமலாகக் கூடிய அபாயம் இருக்கிறது.)
திருநள்ளாறையும் விடாத திருட்டு டிவிடி
திருநள்ளாறு தல வரலாறு - டிவிடி குறைந்த விலையில் 10, 15, 20 ரூபாய்க்கு என்று விற்கப்பட்டுக் கொண்டிருந்தது. அதே வேளையில் குறைந்தவிலை என்று போலி டிவிடிகளை வாங்கி ஏமாறாதீர்கள் என்ற விளம்பரப் பதாகையும் இன்னொரு பக்கத்தில் கண்ணில் பட்டது. சனீஸ்வரா!
ரொட்டேசனில் பூஜைப் பொருட்கள்
இது பல கோவில்களிலும் நடக்கும் ஒன்று தான். இங்கேயும் உண்டு - ஆனால் இங்கே மேட்டர் துண்டுதான். கோவிலுக்குப் பூஜைக்குச் செல்லும்போது அர்ச்சனைப் பொருட்களை (எள்ளு, கருப்புத் துண்டு, பூ, பழம், தேங்காய் எக்சட்ரா.. எக்சட்ரா..) வீட்டிலிருந்து நீங்கள் எடுத்துவரக்கூடாது. அங்கு உள்ள கடைகளில் தான் வாங்க வேண்டும். அப்படி வாங்குவது எல்லாமே பக்தர்கள் வீட்டுக்குச் செல்வதில்லை.
அவற்றை கோயி லிலேயே கொடுத்துவிடவேண்டுமாம். விருப்பப்படும் சிலர் மட்டும் கையில் வாங்கிச் செல்கிறார்கள். மற்றபடி, 90 விழுக்காடு மடிப்புக் கலையாத துண்டுகள் மீண்டும் அடுத்த சுற்று விற்பனைக்கு கோயிலின் உள்ளே உள்ள கடைகளுக்கு வந்துவிடுகின்றன. (உணவு டோக்கன்கள் பற்றி தனியாக படித்திருப்பீர்கள்)
சனிப்பெயர்ச்சியைப் பற்றிக் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் இருந்தவர்கள் அங்கிருந்த வியாபாரிகளே! பக்திப் பிரவாகத்தோடு மதியம் 2:43 மணி-க்குக் காத்திருந்த பக்தர்களிடம் இருந்து கூடுமானவரை காசுவாங்கி கல்லாவை நிரப்புவதில் குறியாய் இருந்தது கோயில் நிர்வாகமும், சுற்றுப்பட்டு கடைகளும்! வெளியூர் களிலிருந்து வந்து கும்பிட்டுக் கொண்டிருந்த பக்தர்கள் மத்தியில், உள்ளூர்க்காரர்களும் சுற்றுப்பட்டு கிராமத்த வர்களும் புது வியாபாரிகளாக மாறியிருந்தனர்.
பலித்தவரை பார்ப்பனியம் என்பது போல, முடிந்த வரையிலும் மக்களிடம் சுரண்டும் தொழில் அங்கு நடந்து கொண்டிருந்தது.
இதெல்லாம் சரி, அந்த உலகப் புகழ் பெற்ற சனிப் பெயர்ச்சி பற்றி தெரிந்துகொள்ள நீங்கள் ஆவலாய் இருப்பீர்கள். அந்த 2.43இல் என்னதான் நடந்தது. ஆனால், அதிலும் ஒரு முக்கியமான சதி நடந்தது.
அதாவது, நளன் குளத்தைச் சுற்றி புறாக்கள், காகங்கள், பருந்துகள் ஆகியவை பறந்தும், சுற்றியிருக்கும் மரங்களில், அமர்வது மாக இருந்தன. இது மக்கள் கூடத் தொடங்கியதுமே அவைகள் பறக்கத் தொடங்கிவிட்டன. இப்படி பறப் பதும், அமர்வதும் என்று இருந்த பறவைகள் 2.30க்கு மேல் சென்று அதனதன் இடங்களில் அடங்கிவிட்டன.
பிரளயம் போல் ஏதாவது நடந்திருக்க வேண்டு மல்லவா? ம்... ஹூம்... நஹி... நஹி... 2.43 மணிக்காக குளத்தில் மக்களும், வெளியில் மிகக் குறைந்த அளவில் மீடியாக்களும் என்ன நடக்குமோ என்று காத்தி ருந்தனர். 2.43 மணியும் தொடங்கியது. சரி, எப்படித்தான் இதை அறிவிப்பார்கள் என்றிருக்கையில், கோயில் தேர் வடம் பிடிப்பதை அறிவிக்க வேட்டு வைப்பார்களே! அந்த வேட்டை மூன்று முறை வெடித்தார்கள். உடனே குளத்தில் இருந்தவர்கள் உணர்ச்சி வயப்பட்டு முங்கி எழுந்தனர். மறுமுறை இரண்டு வேட்டு விட்டனர்.
வேட்டு நளன் குளத்தருகில் வைக்காமல், திட்டமிட்டு வெளியில் வைத்ததால், வேறு வழியின்றி பறவைகள் நளன் குளத்தின் மேலேயே பறந்தன. வேட்டு இங்கே வைத்திருந்தால், பறவைகள் குளத்திற்கு வெளியே பறந்திருக்கும். இந்தச் சதியைப் புரிந்து கொள்ளாமல், பறவையோடு பறவையாக பறந்த பருந்துகளையும், சனி பகவானையும் இணைத்து மக்கள் பரவசமடைந்தனர். மதியம் மணி 2:43அய் இயல்பாகக் கடந்து 2:44க்கு நகர்ந்தது கடிகார முள்.
எப்படியும் ஏமாற, மக்கள் தயாராக இருக்கும் போது இப்படிப்பட்ட மோசடிகள் நடந்து கொண்டுதானிருக்கும். இத்தகைய மடமைகளுக்கு எதிரான நம் போராட் டமும் தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.
பணமும் கோவிந்தா? புண்ணியமும் கோவிந்தா?
எந்த கோயிலாக இருந்தாலும் சரி அன்னதானம் செய்தால் புண்ணியம் என்பது பொதுவான அய்தீகம். (அதற்காகவென்றே சுற்றிலும் பிச்சைகாரர்கள் கும்பல்) அதற்கு இந்த திருநள்ளாறு கோயிலும் விதிவிலக்கல்ல. அங்கு வந்து சமைத்து வைத்து படைக்க வாய்ப்பில்லாததால், பக்தர்கள் சிலர் அங்குள்ள உணவுக் கூடங்களில் (Hotels) உணவுக்கான சீட்டு (Token) வாங்கி அதை தானம் பெற காத்திருப்போரிடம் கொடுத்துவிடுகின்றனர்.
அதை வாங்குவது பெரும்பாலும் பிச்சை எடுப்பவர்களே. இப்படி ஒரே பிச்சைக்காரரிடம் உணவிற்கான எண்ணற்ற சீட்டுகள் (Token) சேர்ந்துவிடுகிறது. சரி அவர்களாவது இதை பயன்படுத்தினால், அதை வாங்கிக்கொடுத்துவருக்கு புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால் அதிலும் மண்தான். அதாவது பிச்சைக்காரர்கள் அங்கு ஓசியில் கிடைக்கும் உண்டைக்கட்டி உணவை வாங்கி சாப்பிட்டுவிடுவதால், அவர்களுக்கு தானம் செய்யப்பட்ட அந்த உணவுக்கான சீட்டை அந்தப் பிச்சைகாரரும் பயன்படுத்தவில்லை.
சரி, என்னதான் செய்கிறார் என்று பார்த்தால் அது, எந்த உணவுக்கூடத்தில் காசுக்காக வழங்கப்பட்டதோ அதே உணவுக் கூடத்துக்கு பாதி விலைக்கே திரும்ப போய்விடுகிறது. (சாப்பாட்டுக் கடைக்காரருக்கும், பிச்சைக்காரருக்கும் இடையே இப்படி ஓர் ஒப்பந்தம்) இது எப்படி இருக்கிறது? கடைக்காரருக்கு காசு!
உணவும் தயாரிக்கப்படாமல், வழங்கப்படாமல் அதோடு மட்டுமா? வழங்கப்பட்ட உணவுச்சீட்டும் பாதி விலைக்கே திரும்ப எடுத்துக் கொண்டார் அல்லவா? மீண்டும் அந்த உணவு டோக்கன் விற்பனைக்குத்தயார். இது எப்படியோ போகட்டும். இந்த அன்னதானம் செய்ய நினைத்தாரே... அந்த பக்தரின் நிலை?
இருந்த பணமும் கோவிந்தா!! இல்லாத புண்ணியமும் கோவிந்தா!
வியாபாரத் துளிகள்
- சிறு துணியில் கட்டி விற்கப்படும் எள்ளை வாங்கி எரிந்து கொண்டிருக்கும் கொப்பறையில் போட்டால், பாவம் தொலையும் என்பதால், பக்தர்கள் தங்கள் தலையைச் சுற்றி எண்ணை அந்த கொப்பறையில் போடுகின்றனர். கொஞ்ச நேரத்தில் காசு கரியாகிறது.
- ஒட்டு மொத்த பாவம் போக்க சனி பெயர்ச்சி, அது இது என்று ஒரு பக்கம் மக்கள் பையிலிருக்கும் பணத்தை பிடுங்காத குறையாக வாங்கிவிட, இது போதாதென்று கைரேகை, ஜோதிடம், கல் விற்பனை என்று இது ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருந்தது.
- சனிப் பெயர்ச்சிக்கு மக்களை வரவேற்று கோயில் நிர்வாகம் சார்பிலும், ஹிந்து மதம் சார்பிலும் வரவேற்பு பேனர்கள் எங்கெங்கும் காணக்கிடக்க, நாங்கள் மட்டும் இளைத்தவர்களா என்ன என்று, பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகளின் உள்ளூர்ப் பிரநிதிகளும் அந்த வரிசையில் கலந்து கொண்டனர்.
- மோடி என்றாலே மோசடி என்பது போல, பிரத மர் மோடி பற்றிய ரூ.10 மதிப்பு உள்ள புத்தகம் ரூ.20க்கு விற்றுக் கொண்டிருந்தனர். அதே போல, பத்து ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த தேங்காய், கோயில் பக்கத்தில் 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
- மக்களை நெறிப்படுத்த முயன்று கொண்டிருந்த காவல் துறையினருக்கே தங்கள் மீது நம்பிக்கையில்லை திருடர்கள் ஜாக்கிரதை என்று நூற்றுக்கணக்கானவர் களின் படத்துடன் பிளெக்ஸ் போட்டு நிறுத்தியிருந்தனர். ஆக, மக்கள் கோயிலில் இழந்தது போக, இந்த திருடர் களிடமும் இழந்திருக்க வேண்டும். இது பற்றிய செய்தி கள் வராமலேயே கூட போகலாம்.
- அழுக்கும், சிறுநீரகம் சேர்ந்த நளன் குளத்து நீரை பம்ப் செட் வைத்து தொடர்ந்து வெளியேற்றுகின்றனர். அதையும் சிலர் பாட்டிலில் பிடித்துக் செல்கின்றனர். இதிலென்ன வேடிக்கை, அண்மையில் மறைந்த ஒரு பார்ப்பனர், இந்தப் புனித (?) நீரை சின்னச் சின்ன பாட்டில் களில் அடைத்து விற்பனையே செய்திருக்கிறார்.
- பிராமணாள் கபே ஒழிந்து ஆங்காங்கே "அய்யர் காபி" விற்பதை பார்க்க முடிந்தது
- சனீஸ்வர பகவானுக்கு வேண்டி மொட்டை யடிக்க (இதுவும் அந்தக் கோயிலில் அண்மைக்கால புது வியாபாரமே) ரஜினிகாந்த் மொட்டைத்தலை கெட் அப்பில் உள்ள படத்தைப் போட்டு விளம்பரம் செய் திருந்ததைப் பார்த்து குபீரென சிரித்துவிட்டோம்.
- முன்பெல்லாம் தில தீபம் என்று ஒற்றைத் திரியை வைத்து கொளுத்தி வழிபடுவதுதான் வழக்கமாம். நடிகர் ரஜினிகாந்த் இந்த கோவிலுக்கு வந்து 12 தீபங்களை ஒரே தட்டில் வைத்து வழிபட்டதிலிருந்து, புதிதாக அந்தப் பழக்கமும் சேர்ந்துவிட்டதாம். கோயிலுக்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டதே சிவாஜி என்ற படத்தில் இக்கோயிலைப் பற்றிக் காண்பித்தபின்பு தானாம். ஏதோ வியாபாரம் ஆனால் சரி!
- கோயிலில் அர்ச்சகர்களுக்குள் முறை வைத்து, அதற்கென ஆள்போட்டு அர்ச்சனைத் தட்சணையில் பங்கு வைக்கப்படுமாம்.
செயற்கைக்கோள் செயலிழக்குமா? பொய்ப்பித்த தொலைக்காட்சி நேரலை
சனீஸ்வர பகவானின் அருளால், தாக்கத்தால் சனிக் கிரகத்திலிருந்து வரும் ஒளிக்கற்றை அல்லது கதிர்வீச்சால் திருநள்ளாறுக்கு மேலே பறக்கும் விமானம், செயற்கைக்கோள் அல்லது ராக்கெட் போன்றவை ஓரிரு நிமிடங்கள் அல்லது நொடிகள் செயலிழந்து விடுகின்றன அல்லது நின்று மீண்டும் பறக்கின்றன. (எதுவும் உறுதி இல்லாததால் தான் இத்தனை அல்லதுகள்.
கண்ணதாசனோ, ஜேசுதாசோ... பாவம் அவரே கன்பீஸ் ஆயிட்டாரு என்ற திரைப்பட நகைச்சுவை போலத் தான் இருக்கிறது இவர்கள் கதையும்!) சரி... இப்படிச் சொன்னது யார்? நாசாவாம்! திருநள்ளாறின் இந்த சக்தியைக் கண்டு அதிசயித்து ரகசியமாக வந்து ஆராய்ச்சி செய்து பார்த்தார்களாம்.
ஆனால், எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லையாம்! இப்படி ஒரு புரட்டுக் கதையை உலகப் புகழ் பெற்ற நாசா ஆய்வு மய்யத்தை வைத்தே, 7 ஆண்டுகளுக்கு முன்னர் கிளப்பிவிட்டனர். ஆனால், இன்றும் அது புதுசு போலவே ஓடிக் கொண்டிருக்கிறது. இதையே விளம்பரமாகவும் கொடுத்திருக்கிறார்கள். அதைப் படித்துவிட்டு நம்மிடம் நாசாவே வியந்த திருநள்ளாறு என்று பதிகம் பாடாத குறையாக வியந்து புகழ்கிறார்கள் பக்தர்கள்.
நாசா அப்படிச் சொன்னதா? ஓரிரு நிமிடங்களோ, நொடியோ செயற்கைக் கோள் செயலிழந்து போகுமா? அப்படி செயலிழந்தால் மீண்டும் செயல்படவைக்க முடியுமா? அதன் சுற்றுப் பாதையில் சுற்றுமா? நியூட்டன் விளக்கிச் சொன்ன விதிப்படி, எந்த ஒரு புற விசையும் இல்லாமல் ஒரு பொருள் மீண்டும் நகரமுடியுமா? அப்படியே சனிபகவான் சக்தியால், செயற்கைக் கோள் நிற்குமேயானால், பின்னர் யார் சக்தியால் பறக்கிறது? செயற்கைக் கோள் செயலிழக்கும் என்றால், கூகிள், விக்கிபீடியா மேப்புகளில் திரு நள்ளாறு படம் வந்தது எப்படி? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினால், இல்லையில்லை... அது சனிப்பெயர்ச்சி நடக்கும் நேரத்தில் தான் அப்படி.
அதுவும் அந்தக் குளத்தில் தான் நடக்கும்.! என்றார்கள் சிலர். இல்லை யில்லை..கோவிலில் என்றார்கள் சிலர். செயற்கைக் கோளையே செயலிழக்க வைக்கும் அளவு சக்தியுள்ள ஒரு ஒளி/ஒலிக்கற்றை சனிக் கோளிலிருந்து வரமுடியுமா? சனி ஒளி உமிழும் கோள் அல்ல.. அது சூரியனின் ஒளியைப் பிரதிபலிக்கக் கூடிய ஒன்று தான். அங்கிருந்து அப்படி எந்த ஒளியோ, அலையோ, கதிர்வீச்சோ இங்கு வர வாய்ப்பில்லை.
அப்படி வருவதாயிருந்தாலும் அது வந்துசேர்வதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பதை முன்பு நாம் சொன்ன சூரிய ஒளிக் கணக்கை வைத்து நீங்கள் கணக்குப் போட்டுக் கொள்ளலாம். அதே சனிப்பெயர்ச்சி நேரத்தில் செயற் கைக் கோளே செயலிழந்து போகும் எனில், செல் பேசிகள் என்னாவது? குறைந்தபட்சம் அவையாவது செயலிழந்து போக வேண்டாமா? அதையும் சோதித்துப் பார்த்தோம்.
அதே 2:43 மணிக்கு கோயிலுக்குள்ளிருந்து நண்பர் அழைத்த அழைப்பை, குளத்திலிருந்து எடுத்துப் பேசிய போதும் எந்த வித சிக்னல் பிரச்சினையு மில்லாமல் தெளிவாகக் கேட்டது. (அதைப் பதிவு செய்தும் வைத்துள்ளோம்.) அடுத்த ஆண்டில் ஜாமர் கருவிகளைப் போட்டு தடை செய்ய முயன்று மீண்டும் அறிவியலைத் தேடி வந்தாலும் வருவார்கள்.
தவிர, காவல்துறையினரின் வாக்கிடாக்கிகள் இயங்கின. திருநள்ளாறிலிருந்து நேரலை (செயற்கைக் கோள்களின் உதவியுடன்) செய்துகொண்டிருந்த சன் நியூஸ், தந்தி, ஜெயா மற்றும் சில உள்ளூர் தொலைக் காட்சிகளின் ஒளிபரப்புகளும் எவ்வித சிக்னல் சிக்கலுமின்றி துல்லியமான ஒளிபரப்புடன் இயங்கின. 2:43 மணி-க்கு சனியிலிருந்து வரும் கருநீலக் கதிர்களை படம்பிடித்துவிடலாம் என்று எதிர்பார்த்து சுற்றிலும் கேமராவோடு நம்மைப்போலவே நின்றுகொண்டி ருந்த யாருக்கும் கதிர்கள் புலப்படவில்லை;
கதிர்களால் எந்தத் தடையும் ஏற்படவில்லை. ஊடகங்கள் பரப்பிய புரளியும், பொய்யும் அந்த ஊடகங்களின் நேரலை ஒளிபரப் பினாலேயே பொய் என்று நிரூபிக்கப்பட்டு விட்டதே! இனியாவது, இந்த ஊடகங்கள் இந்த பித்தலாட்டத் திற்குத் தரும் விளம்பரத்தை நிறுத்திக் கொள்ளுமா?
Mobile Court
வந்திருக்கும் மக்கள் அனைவரும் தங்கள் பாவத்தை போக்குவதற்காக இங்கே வந்திருக் கிறார்கள் என்று ஜலக்கிரீடையை நேரலை செய்த தனியார் தொலைக்காட்சிகள் ஓயாமல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தன. ஆக, அங்கு வந்திருக்கும் மக்கள் ஏதோ ஒரு வகையில் பாவம் செய்தவர்களே!
அதாவது, குற்றங்களைச் செய்து விட்டு, இதிலிருந்து - அந்த பாவத்திலிருந்து விடுபட நளன் குளத்திற்கு வந்திருக்கின்றனர்.
அப்படி என்றால்? வந்திருக்கும் அனைவரின் மீதும் FIR போட்டு குற்றப் பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்திருக் கலாமே? வந்தவர்களை விட்டுவிட்டு, பின்னர் வடை போச்சே என்று திரைப்பட நடிகர் வடிவேலு மாதிரி அங்கலாய்க்க வேண்டியதில்லை அல்லவா?
திருநள்ளாற்றைச் சுற்றி வளைக்கும் இந்துத்துவாக்கள்!
திருநள்ளாறுக்குச் சென்று இறங்கிய உடனேயே நமக்குக் கிடைத்த தகவல்களில் ஒன்று. போன வருசம் மாதிரி இந்த வருசம் கூட்டமில்லை என்பது. அதனால் உடனே பக்தி போய்விட்டது என்றெல்லாம் முடிவு கட்டிவிட முடியாது.
அந்த ஆட்டோகாரரின் கருத்துப்படி, இப்போ பிஜேபி ஆட்சியிலிருப்பதால் இந்து முஸ்லிம் பிரச்சினை அது இதுன்னே ஏதாவது பிரச்சினையாகும்கிற பயம் இருக்கு! என்றார். அவர் சொன்னதில் ஓர் உண்மை உண்டு. திருநள்ளாறு பகுதியில் உள்ள பக்தி வணிகத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்துத்துவக் கும்பல் பலவகையிலும் உள்ளே புகுந்திருக்கிறது.
பி.ஜே.பி.யில் வந்து சேருங்கள்... எங்களுக்கு மிஸ்டு கால் கொடுங்கள் என்று எர்வாமாட்டின் விளம்பரம் போல சுற்றிலும் வைக்கப்பட்டிருக்கும் பதாகைகளில் ஒரு கையை உயர்த்தியபடி ஷோ காட்டுகிறார் மோடி.
கூடவே அமித்ஷா, உள்ளூர் பி.ஜே.பி.யினர் படங்கள். ஹரே ராமா... ஹரே கிருஷ்ணா என்று கீதையை ரூ.100க்கும், நூற்றி சொச்சத்துக்கும் உரக்கக் கூவி விற்றுக் கொண்டிருக்கிறார்கள் சில சிண்டு தரித்த பார்ப் பனர்கள். அவர்களுக்குப் பக்கத்திலேயே கையேந்திக் கொண்டிருக்கிறார்கள் பார்வையற்ற பக்தர்கள் சிலர்!
உங்களுக்காகப் பிரார்த்திக்கிறோம்... உங்கள் உடல்நலனுக்காகப் பிரார்த்திக்கிறோம்... அதற்காக இந்த(து) அமைப்பு! உங்கள் கல்வி வளர்ச்சிக்காகப் பிரார்த்திக்கிறோம்... அதற்கு இந்து மதம் இன்னின்ன வழிமுறைகளைக் கூறுகிறது அதற்காக இந்த அமைப்பு! எப்படி மந்திரங்களைச் சொல்லி, இறைவனைப் பிரார்த்தித்து அதிக மதிப்பெண் பெறுவது என்பதைச் சொல்லுவதற்கும், வழிகாட்டுவதற்கும் (!?) ஓர் அமைப்பு! நீங்கள் இதில் பயன்பெறலாம்... வந்து பார்க்கலாம்... அங்கு எண்ணற்றோர் உதவிபெறுகிறார்கள்...
எல்லோருக்கும் தங்குமிடம், உணவு இலவசம்... என்று நான்கைந்து துண்டறிக்கைகளைக் கையில் திணித்துவிட்டு, உங்களால் முடிந்ததைக் கொடுத்து உதவலாம் என்று வருகிறது கடைசி வார்த்தை. பிறகு பார்க்கலாம் என்றால்... இருப்பதைக் கொடுங்க என்கிறார் அந்தப் பெண்மணி. சில்லறை இல்லைங்க என்றால், எவ்ளோன்னாலும் நாங்க கொடுக்கிறோம் என்கிறார்.
சரி, பார்ப்போம் என்று கிளம்பியவரிடம், நோட்டீசுக்காவது காசு கொடுங்க என்றார். 10 ரூபாய் எடுத்து நீட்டியவரிடம் 20 ரூபாயைப் பிடுங்கிக் கொண்டு தான் விட்டார் அந்த அம்மையார். பக்கத்தில் இருந்து பார்த்ததே நம்மை பயமுறுத்த, மாட்டுவோமா நாம்? எஸ்கேப்.
தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருந்தது காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு. ஏகப்பட்ட அய்யர்களையும், அய்யாக்களையும் இந்திராணிகளையும் காணாமல் அறிவிப்பு வந்துகொண்டிருக்க, ஜோசியர் சுப்பிரமணியத்தின் மனைவியைக் காணாமல் அவர் தேடிக் கொண்டிருந்தபோது தான், மனுசன்... இதைக் கண்டுபிடிக்க முடியாமல் என்ன ஜோசியர் என்று அலுத்துக் கொண்டார்கள் பக்தர்கள்.பாவம்!
அறிவிப்பு செய்தவரைத் தவிர மற்ற அனைவரையும் தேடியிருப் பார்கள் போல... அவர்கள் அறிவித்த பட்டியல் அவ்ளோ நீளம். திருநள்ளாறு கோயில், குளத்தைச் சுற்றிலும் ஒலித்துக் கொண்டிருந்த இந்த அறிவிப்புகளின் மூலமாக தங்களுடைய ஆக்கிரமிப்பைச் செலுத்திக் கொண்டிருந்தது ஜன கல்யாண் அமைப்பு! ஒட்டுமொத்த நிகழ்ச்சியையும் அவர்கள் நடத்துவதைப் போன்ற ஒரு பிரமையைத் தோற்றுவித்திருந்தது மக்கள் மத்தியில்.
பக்தி மய்யங்களை இந்துத்துவாவின் பெயரால் ஒன்றிணைப்பது எளிது என்பதுதானே அவர்களின் வளர்ச்சிக்கான சூத்திரம்!
- விடுதலை சிறப்புச் செய்தியாளர் குழு
Read more: http://www.viduthalai.in/page-8/93066.html#ixzz3MGAfMh00
2 comments:
அருமையான பதிவு! மக்களிடம் பணம் பறிக்க இவர்கள் கூறும் காரணம் ஆன்மிகம். ஆகமவிதிகள். இந்த துணியை தண்ணீரில் விடுவது ஐயப்பன் கோவிலைப் பாது வந்த ஐடியா. நல்ல காசு! அர்ச்சனைத் தட்டு முழுவதும் மறு சுழற்சி தான்-வைதீஸ்வரன் கோவில் இதற்கு பெயர் பெற்றது! இரண்டு பேர் தட்டில் ஒரு தட்டு கடைக்கே சென்று விடும். மற்றொரு தட்டில் உள்ள தேங்காயை மட்டும் உடைத்தது இரு மூடிகள்; ஒரு தட்டுக்கு ஒன்று. ஒரு தேங்காய், பூ, பழம் எல்லாம் லாபம்! பக்தி வந்தால் புத்தி [போகும்-பொறிக்கித்தனம் வந்துவிடும் போல!
நன்றி நம்பள்கி அவர்களே, வலைத்தளத்திற்கு வருகைக்கும் தங்களின் ஊக்கமூட்டும் கருத்திற்கும்.
Post a Comment