அண்மையில் படித்த புத்தகம் : உயரப்பறக்கும் காகங்கள்(சிறுகதைத் தொகுப்பு)
நூல் ஆசிரியர் : ஆசி.கந்தராஜா
பதிப்ப்கம் : மித்ரா ஆர்ட்ஸ் & கிரியேஷ்ன்ஸ் ,சென்னை-24.
முதற்பதிப்பு : டிசம்பர் 2003, மொத்த பக்கங்கள் 144, விலை ரூ 45
மதுரை மைய நூலக எண் : 156214
தமிழ் ஈழ்த்தைச்சார்ந்த எழுத்தாளர், புலம் பெயர்ந்து வாழும் நிலையில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பே இந்த 'உயரப்பறக்கும் காகங்கள்' . தமிழகத்தைச்சார்ந்த நாம் வாசிக்கும்போது சில சொற்களின் உச்சரிப்புக்கள் புதிதாக இருப்பது போலவே, கதைகளின் களங்கள் சொல்லும் முறை அனைத்துமே இந்தக் கதைகளில் புதிதாக இருக்கின்றது. " இச்சிறுகதைத் தொகுதியிலுள்ள சிறுகதைகள் யாவும் கோள மயம் தழுவியவை. சுந்தரராஜா என்ற பேராசிரியர் அவுஸ்திரேலியப் பல்கலைக் கழகமொன்றில் பணிபுரிவதும் அதனால் உலகின் பல பாகங்களுக்கும் பயணம் செய்யும் வாய்ப்பினைப் பெற்றமையும் ஆசி.கந்தராஜா என்ற படைப்பாளியைத் தமிழுக்குத் தந்துள்ளது. அவரது சிறுகதைகளுக்கான ஊக்குகை அல்லது இன்ஸ்பிரேசன் தான் பயணித்த நாடுகளில் தரிசித்த ஒழுக்க நெறி சார்ந்தவையாக இருக்கின்றன. ஆனால் அவை மானிடத்தையும் மானிட நடத்தை வேறுபாடுகளையும் மானிட நேசத்தையும் தம் பேசும் பொருளாகக் கொண்டுள்ளன. அதனால் அச்சிறுகதைகள் உள்ளடக்கத்தில் தமிழ் வாசகன் அறியாத கருத்துக்களையும் புதிய அனுபங்களையும் அறிமுகப்படுத்துகின்றன. சர்வதேச மானிடத்தினைப் பேசும் ஊடகமாகத் தமிழ்மொழியைப் பரிணமிக்க வைத்துள்ளன. " என்று முன்னுரையில் கலாநிதி க.குணராசா (செங்கை ஆழியான்) அவர்கள் சொல்வது மிகச்சரியானது என்பதனை இந்தத் தொகுப்பு கதைகளை வாசித்து முடித்தவுடன் தோன்றுகிறது.
உலகம் முழுவதும் இந்தக் கதைகளின் களமாக இருக்கிறது.ஆப்பிரிக்காவில் நிகழ்வும் நிகழ்வாக ' துர்காதாண்டவம், வெள்ளிக்கிழமை விரதம், பாலன் பிறக்கிறான் ' என்னும் சிறுகதைகள் இருக்கின்றன. வெள்ளிக்கிழமை விரதம் ஒரு மாறுபட்ட வாழ்க்கை முறை, ஆப்பிரிக்காவில் நிகழ்வதைச்சுட்டிக்காட்டுகிறது. வரதட்சணை கொடுத்து பெண்ணைக் கட்டிக்கொடுக்கும் நாட்டில் வாழும் நாம், வரதட்சணை பெற்றுக்கொண்டு பெண் வீட்டார் பெண்ணைக் கட்டிக்கொடுக்கும் வழக்கம் பற்றியும் அது காதலுக்கும், காதலர்களுக்கும் தடையாக இருப்பது பற்றியும் , தனது தந்தைக்கு தன் காதலன் கொடுக்க வேண்டிய பணத்திற்காக காதலியே தடம் மாறிப்போவதாகவும் ஆனால் காதலனிடம் உண்மையான காதலோடு இருப்பதாகவும் 'வெள்ளிக்கிழமை விரதம் ' கதை குறிப்பிடுகின்றது. அதைப்போல 'துர்க்காதாண்டவம்' ஆணின் ஆதிக்கத்தையும் பணம் வைத்திருப்பவன் செய்யும் அடாவடிகளையும், 'பாலன் பிறக்கிறான் கதை' ஆப்பிரிக்கச்சமூகத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தால் ஆகாது என்னும் மூட நம்பிக்கை பற்றியும் பேசுகிறது. நான் இதுவரை கேள்விப்படாத கருக்களைக் கொண்ட கதைகள் இவை.
ஜப்பான் நாட்டின் இன்னொரு முகத்தைக் காட்டுவதாக ' தேன் சுவைக்காத தேனீக்கள் " கதை உள்ளது. இறப்பை இறப்பாகக் கூட நினைக்க மறுக்கும் ஒரு அடக்குமுறையும் வாழ்க்கைமுறையும் ஜப்பானில் இருப்பதை இக்கதை சுட்டுகிறது.
'அந்நியமாதல் ' கதையில் வரும் வங்காளதேசத்து தங்கும் விடுதியின் பணியாள் யூசுப் கதையை வாசித்து முடித்த பின்பும் மனதில் நிற்கின்றார்.
ஆஸ்திரேலியாவில் நிகழும் கதைகளாக 'ஒட்டுக்கன்றுகளின் காலம்' , 'முன்னிரவு மயக்கங்கள்', 'உயரப்பறக்கும் காகங்கள்', 'கோபுர தரிசனம் ' என்ற 4 கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. எல்லாமே புலம் பெயர்ந்து வாழும் மனிதர்களின் அகம், மற்றும் புறம் சார்ந்த கதைகள். உறவுகளால் ஏமாற்றப்பட்ட பார்வதி அம்மாள் , கோபுர தரிசனத்தை மட்டும் நம்பியே வாழும் அவரின் வாழ்க்கை, சங்கீதா மற்றும் அபி என்னும் இரண்டு மகள்கள், அவர்களின் பெற்றோர்களின் மனப்போக்குகள் பற்றிப் பேசி 'தன் ஜாதி, தன் இனம் ' என்று மட்டும் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளமுடியாது என்று சொல்லும் ஒட்டுக்கன்றுகளின் காலம் தமிழகத்தில் வாழ்பவர்களும் உணரவேண்டிய கதை. விருந்தும் வேடிக்கையும் ஆடம்பரங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளன என்பதைப் பேசும் முன்னிரவு மயக்கங்கள் , இந்தத் தொகுப்பின் தலைப்பாக உள்ள ' உயரப்பறக்கும் காகங்கள் ' என்னதான் நீ வெள்ளைக்காரிகளோடு பேசினாலும் , மணமுடித்தாலும் வாழ்க்கை இன்பமாக இருக்காது, அது நமது இனத்துப் பெண் என்றால்தான் நிம்மதி இருக்கும் என்று சொல்கின்றது. உயர உயரப் பறந்தாலும் காக்கா காக்காதான் என்று சொல்கின்றாரோ எனத் தோன்றுகிறது. ஈழத்து மண்ணை அடிப்படையாகக் கொண்ட 'தவக்கோலங்கள் ' 2003-ல் நிகழ்கின்ற சில அவலங்களையும் முன்னர் இருந்த இனிமையான நினைவுகளையும் இணைத்து சொல்லப்பட்டுள்ள கதை.
இந்தத் தொகுப்பை வாசித்து முடித்தவுடன் பல்வேறு நாட்டு நடப்புக்களை, உணர்வுகளை அறிந்துகொண்டது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது. சிறுகதை என்பது அழுத்தமான, கனமான கருத்துக்களை நிகழ்வுகளின் மூலம் நமக்கு படம் பிடித்துக்காட்டுவது . அதனை இந்தத் தொகுப்பின் ஆசிரியர் ஆசி.கந்தராஜா மிக நேர்த்தியாகவும் , உள நேர்மையோடும் செய்திருக்கின்றார் எனத்தோன்றுகிறது. ஒரு நல்ல சிறுகதைத் தொகுப்பை வாசிப்பதற்கான புத்தகத்தை அளித்த மதுரை மைய நூலகத்திற்கு நன்றி.
No comments:
Post a Comment