Tuesday, 19 January 2016

ஜாதி வெறியர்கள் அடங்க மறுத்தது மன்னிக்கத் தகுந்ததுதானா?

முளையிலேயே கிள்ளி எறிக!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுவாக ஜாதிப் பிரச்சினைகள், ஜாதிக் கலவரங்கள் நடைபெறுவது கிடையாது. ஆனால், அண்மையில் மயிலாடுதுறை வட்டம், வழுவூரையடுத்த திருநாள் கொண்டச்சேரி என்னும் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மரணமடைந்த முதியவர் ஒருவரின் உடலை எடுத்துச் செல்லுவது தொடர்பாக ஜாதி சர்ச்சை கிளப்பப்பட்டுள்ளது.
2015 நவம்பர் 26ஆம் தேதியன்று அதே ஊரைச் சேர்ந்த குஞ்சம்மாள் என்பவர் மறைந்த போதும் இந்தப் பிரச்சினை ஏற்பட்டதுண்டு.
பொது வீதியில் பிணத்தை எடுத்துச் செல்லக் கூடாது என்று ஜாதி வெறி பிடித்தவர்கள் போட்ட கூக்குரல், அச்சுறுத்தல் காரணமாக சேறும் சகதியும் நிறைந்த வயல்வெளிப் பாதையில் பிணத்தைத் தூக்கிச் சென்றுள்ளனர்.
இது நடந்து 40 நாள் இடைவெளியில் மறைந்த குஞ்சம்மாள் அவர்களின் கணவர் செல்லமுத்துவின் உடலை (3.1.2016) அடக்கம் செய்ய முயன்றபோது மீண்டும் ஜாதி வெறியர்கள் தங்களின் அட்டகாசத்தைத் தொடர்ந்தனர்.
இவ்வளவுக்கும் நீதிமன்றம் சென்று பொது வீதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலை எடுத்துச் செல்லலாம் என்ற உத்தரவை அதிகார பூர்வமாகப் பெற்று வந்ததற்குப் பிறகும்கூட ஜாதி வெறியர்கள் அடங்க மறுத்தது மன்னிக்கத் தகுந்ததுதானா?
நீதிமன்றத்தின் ஆணையை நிறைவேற்ற வேண்டிய காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காது மிதித்தது எப்படி என்றுதான் தெரியவில்லை.
அவசர அவசரமாக பொக்லைன் மூலம் பாதை ஒன்றை புதிதாக அமைத்து, காவல்துறையினரே பிணத்தைக் கைப்பற்றி அடக்கம் செய்தது என்பது உண்மையிலேயே அதீதமானது - கடுமையான நீதிமன்ற அவமதிப்பும் ஆகும்.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக் கோரிய தாழ்த்தப்பட்ட மக்கள்மீது  தடியடி நடத்தியும், அவர்களைக் கைது செய்தும், தான் தோன்றித்தனமாகக் காவல் துறை செயல்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையத்தின் தலைவர் டாக்டர் பி.எஸ். புனியா அவர்களே நேரில் வந்து விசாரணை நடத்தியுள்ளார். காவல்துறை சட்டத்தைத் துச்சமாக மதித்து வரம்புமீறி நடந்துள்ளதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். காவல்துறை அதிகாரியான மாவட்டக் கண்காணிப்பாளரும், மாவட்ட ஆட்சித் தலைவரும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள்; அதன் முடிவில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
ஜாதிய உணர்வு அதிகார வட்டாரத்திலும் வேர்ப் பிடித்துள்ளதோ என்று சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது இது மிகவும் வெட்கப்படத்தக்கதாகும். தக்க தண்டனைகள் தான் அதிகார வட்டாரத்திலும் ஒரு நேர்மை உணர்வை உண்டாக்கும் என்றால் அதனை வரவேற்க வேண்டியதுதான்.
கும்பகோணம் வட்டம், திருவாவடுதுறையிலும் பொங்கலை ஒட்டி ஜாதிக் கண்ணோட்டத்தில் கலவரம் நடைபெற்றுள்ளது. மாட்டுப் பொங்கலின்போது மாட்டு வண்டியில் ஏறிக் கொண்டு சிறுவர்கள் உட்பட பெரியவர்களும் பொங்கலோ பொங்கல் என்று முழக்கம் செய்து கொண்டு போவது வழமையான ஒன்றுதான்.
இந்த நிலையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீதிக்கு வரக் கூடாது என்று போர்க் கொடி தூக்குவதும்  கலகம் விளைவிப்பதும் எந்தவகையில் நியாயம்?
எந்த வீதியும், எந்த ஒரு சாலையும் எந்த ஒரு தனிப்பட்டவருக்கும், எந்த ஒரு குழுவினருக்கும் உரிமையுடையதாக பட்டா போட்டுக் கொடுக்கப்படவில்லை.
ஒரு கால கட்டம் இருந்தது; தாழ்த்தப்பட்டவர் பொது வீதியில் நடக்கக் கூடாது, பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது,. உணவு விடுதிகளில்கூட தாழ்த்தப்பட்டோர் அமர்ந்து சாப்பிடக் கூடாது; ஏன் இரயில்வே நிலையங்களில்கூட ‘பிராமணாள்’ சாப்பிடும் இடம் ‘இதராள்’ சாப்பிடும் இடம் என்ற பேதம் எல்லாம் இருந்ததுண்டு.
தலைநகரமான சென்னையில்கூட, ஜார்ஜ்டவுன், அன்றைய  மவுண்ட் ரோடு போன்ற இடங்களில் இருந்த உணவு விடுதிகளில் பறையர்களும், நாய்களும், குஷ்டரோகிகளும் உள்ளே நுழையக் கூடாது என்ற விளம்பரப் பலகைகள் மாட்டப்பட்டிருந்தன.
இவை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஆக்கப்பட்டு விட்டன. அதற்குக் காரணமாக சமூகப் புரட்சித் தலைவராகவும், தந்தையாகவும் பெரியார் அவர்கள் இருந்திருக்கிறார்கள். திராவிடர் கழகம் இருந்து வந்திருக்கிறது.
அண்மைக் காலத்தில் சில அரசியல் கட்சித்தலைவர்கள் கைவசம் கொள்கைகளோ, திட்டங்களோ இல்லாதவர்கள் ஜாதியைப் பிடித்துக் கொண்டு கரை ஏறலாம் என்று கருதி சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஜாதி வெறித்தீயிக்கு எண்ணெய் ஊற்றுகிறார்கள்.
ஜாதிக் கட்சிகளைக் கூட்டுகிறார்கள் - இதுவே தேர்தல் கூட்டணியாக மாறும் என்று அறிவிக்கிறார்கள் - இதன் மூலம்தான் செத்துச் சுண்ணாம்பாகிக் கொண்டிருக்கும் ஜாதிக்குப் புத்துயிர் ஊட்டப்படுகிறது. கவுரவக் கொலை என்ற ஒரு சொலவடைகூட உருவாக்கப்பட்டுள்ளது. கொலையில் என்ன கவுரவக் கொலை - அகவுரவக் கொலை?
தாழ்த்தப்பட்டவர்களைத் தங்களுக்குக் கீழானவர்கள் என்று எண்ணுபவர்கள் யாராக இருந்தாலும்  அவர்கள் அத்தனைப் பேர்களும், பிரிவுகளும், இன்றும் பார்ப்பனிய வருணாசிரமக் கட்டமைப்பில் ‘சூத்திரர்கள்தான்’ என்பதை மறந்து விடக் கூடாது, மட்டத்தில் உசத்தி என்று மார் தட்டக் கூடாது. இந்த இழிவை ஒழிக்க முன் வர வேண்டாமா?
இந்து மத சாத்திர சம்பிரதாயங்களில் மட்டுமல்ல, இந்திய அரசமைப்புச் சட்டமேகூட இந்தச் சூத்திரத் தன்மையை நிலை நாட்டிக் கொண்டு தானிருக்கிறது.
அதனால்தான் ஜாதியை பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவை பகிரங்கமாக கொளுத்தும் போராட்டத்தை நடத்தினார் தந்தை பெரியார் (26.11.1957). பத்தாயிரம் கருஞ்சட்டைத் தோழர்கள் அதில் ஈடுபட்டு மூன்றாண்டு கடுங்காவல் தண்டனையை ஏற்றனர் என்பதையும் இந்தநேரத்தில் சுட்டிக் காட்ட வேண்டியது நமது கடமை. அரசியல் தலைவர்களுக்குப் பொறுப்பு இருக்கிறது;  அதனை அவர்கள் உணர வேண்டும். முக்கியமாக திருநாள் கொண்டச்சேரி, திருவாவடுதுறை நிகழ்வுகள் தொடரப்படாமல் முளையிலே கிள்ளி எறியப்பட வேண்டும்; அரசு செயல்படட்டும்!
விடுதலை தலையங்கம் : 19.01.2016

No comments: