சிறு அசம்பாவிதமும் இல்லாமல் இராணுவக் கட்டுப்பாடாக அறப்போர் நடத்தும் மாணவர்களுக்குப் பாராட்டு - தலைதாழ்ந்த வணக்கம்!ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரச் சட்டம்தேவை என்பது நியாயமான கோரிக்கையே!காவிரி உரிமை மறுப்பு- புதிய கல்வி- ‘நீட்' இவற்றை முறியடிக்கவும் தமிழக அரசின் முயற்சி தேவை! தேவை!!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ளமிக முக்கிய அறிக்கை
ஜல்லிக்கட்டு உரிமைக்கான நிரந்தரச் சட்டம் தேவை எனும் மாணவர்கள் கோரிக்கை நியாயமானதே; அத்துடன் காவிரி உரிமை மறுப்பு, புதிய கல்வி என்னும் குலக்கல்வி, கிராமப்புற மாணவர்களை ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதிக்கச் செய்யும் ‘நீட்’ எனும் நுழைவுத் தேர்வையும் முறியடிக்க நாடாளுமன்றத்தில் நல்ல தீர்வு காண தமிழக அ.இ.அ.தி.மு.க. அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:
உலகமே கண்டு வியந்து மூக்கில் விரலை வைத்துச் சிந்திக்கும் வண்ணம், சென்னைக் கடற்கரையிலும், தமிழ்நாட்டின் பற்பல ஊர்களிலும் இருபால் மாணவச் செல்வங்களும், இளைஞர்களும் அவர்களையொட்டி தாய்மார்களும் இணைந்து, தமிழ் இன உணர்வினைக் கட்டுப்பாடாக ‘பெருஉரு’ (விஸ்வரூபம்) எடுக்க வைத்து, பெருந்திரள் போராட்டமாக - எடுத்துக்காட்டான அறப்போராட்டமாக ‘ஜல்லிக்கட்டுத் தடை என்பதை உடை' என்ற முழக்கத்தோடு நடத்தி, வரலாறு படைத்துள்ளனர்!
மாணவர்களின் தன்னெழுச்சிப் போராட்டம்மாணவர்களின் தன்னெழுச்சியாக கட்டுப்பாட்டுடன் இரவு பகல் என்று பாராது தொடர்ந்து 5 நாள்கள் நடைபெற்ற இந்த அறப்போராட்டத்தினால், பொது மக்களுக்கு இடையூறோ, பொதுச் சொத்துகளுக்கு நாசமோ, பொது அமைதிக்குப் பங்கமோ ஏற்படவில்லை என்பது வரலாறு.
சிறு அசம்பாவிதமும் இல்லை!அதுமட்டுமா?
பல லட்சக்கணக்கில் திரண்டு அருகருகே அமர்ந்து லட்சிய முழக்கத்துடன் நடத்திய இந்தப் போராட்டத்தில் ஒரு சிறு அசம்பாவிதமோ, பாலியல் வன்மம், வக்கிரம் எதுவும் நடக்கவில்லை.
தமிழ்நாட்டு மாணவ இளைஞர்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. இராணுவக் கட்டுப்பாட்டையும் தோற் கடிக்கும் ‘அனாசயமான’ ஒழுங்குமுறை அங்கே ஆட்சி புரிந்தது!
முதல் முறையாக காவல்துறையினருக்கும், போராட்டக்காரர் களுக்கும் இடையே அன்புப் பெருக்கெடுத்தோடியது!
இதனால் தமிழர்கள் - திராவிடர்களின் பண்பாட்டு அடை யாளத்தையே திட்டமிட்டு அழிக்க முயன்ற ஆரிய ஆதிக்க சக்திகளுக்கு எதிராக, கட்சி, ஜாதி, மதம் போன்ற எந்தப் பிரிவினையும் தலைதூக்காது அறப்போர் நடத்தி,
‘அச்சம் என்பது மடமையடாஅஞ்சாமை திராவிடர் உடைமையடா!’என்று முழங்கி, எச்சரிக்கை மணி அடித்து, ஆளும் தரப்பை இறங்கி வரச் செய்தனர்.
ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் என்றாலும் இதன் அடிநீரோட்டம் முக்கியமானது
இது ஜல்லிக்கட்டு என்று ஒரு முனை தலைப்பாக இருந்தாலும், இதன் அடிநீரோட்ட உணர்வு - பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து தமிழனை - திராவிடனைக் காப்பாற்றும் அமைதிப் போராகவே அமைந்தது!
டில்லி அதிகாரவர்க்கம் - இதற்குமுன் தமிழ்நாட்டை அலட்சியப் பார்வையோடு பார்த்த நிலை மாறி, கைபிசைந்து, தாங்களும் இதில் ஒத்துழைப்புத் தருகிறோம் என்று கூறி, வேஷத்தை மாற்றவேண்டிய தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது! மகத்தான வெற்றியை, தமது சுயக்கட்டுப்பாட்டினால் பறித்த மாணவ, இளைஞர்களுக்கு நமது தலைதாழ்ந்த வணக்கம்!
மாநில அவசரச் சட்டம் என்பது போதாது; நிரந்தரத் தீர்வே எமக்குத் தேவை என்ற மாணவப் போராட்டக்காரர்களின் கோரிக் கையின் நியாயத்தை எவரும் மறுத்துவிடவே முடியாது.
நிரந்தர சட்டம் தேவை!இதில் மாநில அரசு உடனடியாக செயல்படவே இந்த அவசர சட்டம் - அதனையொட்டி 23 ஆம் தேதி நாளை கூடும் தமிழக சட்டமன்றத் தொடரில் ஒரு நிரந்தரச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டு, நம் திராவிடக் காளைகளின் கட்டுண்ட போராட்டத்தால் கட்டுண்ட காளைகளின் தளைகள் விடுவிக்கப்படும் என்பது சரிதான்!
காவிரிப் பிரச்சினை - சமூகநீதிப் பிரச்சினைகளில் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடுஏற்கெனவே தமிழ்நாடு அரசு காவிரி நதிநீர் ஆணைய நியமனப் பிரச்சினையில் வஞ்சிக்கப்பட்டுள்ளது!
அண்டை மாநில அரசுகள் ஆறுகளில் மத்திய அரசு அனுமதி யில்லாமல் அணைகள் கட்டும் திட்டம்; அதுபற்றி மத்திய அரசு கண்டும், காணாத போக்கு!
புதிய கல்விக் கொள்கை என்று ஒரு நவீன குல தர்மக் கல்வித் திட்டத்தை திணிப்பதில் முழு முயற்சி.அதில், சமஸ்கிருதம் என்ற வடமொழித் திணிப்பு - நம் தமிழ் பண்பாட்டு அழிப்பு - இவைகளைத் திட்டமிட்டுச் செய்தல்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக சிகரம் வைத்ததுபோல், கல்வி மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதை வாய்ப்பாகப் பயன்படுத்தி,
மருத்துவக் கல்லூரிகளில் கிராமப்புற, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் எளிதில் இடம் பெற்று படிக்கும் வாய்ப்பில் மண்ணை அள்ளிப் போடும் - ‘நீட்’ என்ற நுழைவுத் தேர்வினை வரும் மே மாதம் முதல் நடத்திட ஆயத்தமாகி விட்டோம் என்று மாநில அரசின் ஒப்புதல் - இசைவு பெறாமலேயே நடத்தும் நிலை.
இப்படி தமிழ்நாடு ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்படும் வேதனையால் அவை நீறுபூத்த நெருப்பாக இருந்து, திடீர் போராட்டத் தீயாய் இன்று கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிவிட்டது!
குட்டக் குட்ட குனியலாமா அ.தி.மு.க. அரசு?இதன் அனலை இப்போதுதான் மோடி அரசும், குட்டக் குட்டக் குனியும் இன்றைய அ.தி.மு.க. அரசும் உணரத் தொடங்கியுள்ளன.
வெறும் ஜல்லிக்கட்டு என்ற ஒன்றுக்கானது அல்ல - எரிமலை யாய் வெடித்ததுதான் இந்த உணர்வு! இதனை மத்திய - மாநில அரசுகள் புரிந்துகொள்ளவேண்டும்; மற்றவைகளுக்கும் தீர்வுகாண முன்வரவேண்டும்.
கிராமத்துப் பிள்ளைகளை டாக்டராகாமல் தடுக்கும் ‘நீட்’ எனும் நுழைவுத் தேர்வுமருத்துவக் கல்லூரியில் ‘நீட்’ என்ற மத்திய நுழைவுத் தேர்வை நமது தமிழ்நாடு ஏற்றால், இனி நமது கிராமத்துப் பிள்ளைகள் டாக்டர் களாக வரவே முடியாத சூழ்நிலைதான் கண்டிப்பாக ஏற்படும்!
தமிழ்நாட்டிற்கு முன்பு தந்த விதிவிலக்கினை மாநில அரசு, ஜல்லிக்கட்டுப் போலவே வலியுறுத்தவேண்டும்.
ஆந்திரா, தெலங்கானா, காஷ்மீருக்கு முன்பு விதிவிலக்கு இருந்ததுபோல, தமிழ்நாட்டுக்கும் தருவதற்கு இந்தச் சட்டமன்றத் தொடரில் தீர்மானம் இயற்றியும், மேற்கொண்டு நாடாளுமன்றத்திலும் இதனை உறுதி செய்யும் ஏற்பாடுகளையும் செய்ய தமிழக அரசு மத்தியில் உள்ள மோடி அரசினை வலியுறுத்தவேண்டும். அவசரம்! அவசரம்!! அவசரம்!!!
இந்தியா முழுவதிலும் ஒரே மாதிரியான கல்வியா இருக்கிறது? மாநில உரிமைகளை மத்திய அரசு இப்படி அதன் காலில் போட்டு மிதிப்பதை, தமிழ்நாடு அரசு ஏற்பதா?
தமிழ்நாட்டில் சட்ட ரீதியாக ஒழிக்கப்பட்ட நுழைவுத் தேர்வை காலில் போட்டு மிதிக்க மத்திய அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?
இதில் தமிழக அரசு தமிழ்நாட்டுக்குரிய இந்த சமூகநீதி உரிமை யைக் காப்பதில் போதிய கவனம் செலுத்தவேண்டும் - வேண்டும்! முக்கியம், மிக முக்கியம்!
கடந்தாண்டு கொடுக்கப்பட்ட விதிவிலக்குத் தொடரப்பட வேண்டும் என்பதே நமது நிலையாக இருக்கவேண்டும்.
நாடாளுமன்றத்தில் அழுத்தம் தருக!எனவே, இதற்கு ஒரு விடிவு - உடனடியாகக் கிடைத்தட மெத்தனம் இன்றி தமிழ்நாடு அரசும், அத்துணை நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆவன செய்ய அயரவேண்டாம் - வேண்டாம்!
கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை
22.1.2017
Nantri : Viduthalai 22.01.2017
2 comments:
விரைவில் விடியல் பிறக்கட்டும் ஐயா...
விடியல் பிறக்கிறதோ இல்லையோ, மாற்றத்திற்கான ஒரு அறிகுறி தெரிகின்றது அய்யா...
Post a Comment