Saturday, 18 February 2017

அண்மையில் படித்த புத்தகம் : ' எங்கேயும் எப்போதும் ' சிறுகதைத் தொகுப்பு




இன்று நாம் காண இருக்கின்ற புத்தகத்தின் தலைப்பு " எங்கேயும் எப்போதும் " . இதன் ஆசிரியர் பொள்ளாச்சி அபி. 'ஒரு துளிக்கவிதை' புதுச்சேரி வெளியீடு. கவிஞர் ஈரோடு தமிழன்பன் பிறந்த நாள் வெளியீடாக வெளியிட்ட நாள் 25.10.2016,  232 பக்கங்கள் உள்ள இந்த புத்தகத்தின் விலை ரூ 160

'எங்கேயும் எப்போதும் ' இன்னும் இந்தப்புத்தகம் ஒரு சிறுகதைத் தொகுப்பு. இதன் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி தனது என்னுரையில் ' வணக்கம் தோழர்களே ' என ஆரம்பித்து இது தனது முதல் சிறுகதைத் தொகுப்பு என்பதனைக்கூறுகின்றார்.  தொடர்ந்து ' அன்றாடம் சந்திக்கின்ற ,கேள்விப்படுகின்ற, வாசிக்கின்ற சில அனுபவங்களுக்கு முன்னும் பின்னும் இருப்பவற்றை- இருந்தவற்றையே சிறுகதைகளாக எழுதுகிறோம் என எல்லோரும் சொல்வதைத்தான் நானும் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
அந்த வகையில் , இந்தக் கதைகள் எல்லாமே நீங்கள் தந்ததுதான். அதனைப் பதிவு செய்தது மட்டுமே நானாக இருக்கிறேன். முடிந்தவரை புனைவுகளைத் தவிர்த்து எதார்த்தத்தில் என்னவெல்லாம் நடந்ததோ அதனைப் பெரும்பாலும் அப்படியே தந்திருக்கிறேன் ' எனக் குறிப்பிடுகின்றார். இந்தச்சிறுகதைத் தொகுப்பில் உள்ள 27 கதைகளையும் படித்து முடித்தபிறகு பொள்ளாச்சி அபியின் கதைகள் அனைத்தும் நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை இலக்கிய விவரிப்புகளோடு காண்கின்ற காட்சியாகத்தான் தென்படுகிறது.எதுவுமே வானத்திலிருந்து குதித்து எழுதிய கதையாகத் தெரியவில்லை.

'எங்கேயும் எப்போதும் ' என்னும் இந்தச்சிறுகதை தொகுப்பு நூலுக்கு புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ அவர்கள் அணிந்துரை அளித்துள்ளார். அவர் தனது அணிந்துரையில் 'இலக்கிய வடிவங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது சிறுகதைதான் .கவிதைகளை நேசிப்பது, வாசிப்பது என்பதைவிட ஒரு பிடி கூடுதலாகத்தான் நான் சிறுகதையை நேசிக்கிறேன். வாசிக்கிறேன். புதுமைப்பித்தனை, அழகிரிசாமியை, மெளனியை,ஜெயகாந்தனை, பிரபஞ்சனை வாசிப்பதுபோலவே இன்றைய புதிய சிறுகதை ஆசிரியர்களையும்  நான் வாசிக்கிறேன்.

செய் நேர்த்தியில் வேறுபாடுகள் தெரிந்தாலும் வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் படைப்புக்குள் கொண்டு வருவதில் புதியவர்கள் ஒன்றும் சளைத்தவர்களில்லை.
சிறுகதைகளில் மட்டும் அப்படி என்ன ஈர்ப்பு ?        

 தேனீக்கள் எல்லைகள் கடந்து மலர்க் கூட்டங்களைத் தேடி,நாடித் துளித்துளிகளாய் மலர்களில் உள்ள இனிப்புச் சுரப்பை உறிஞ்சி வயிற்றில் சுமந்து,கூட்டுக்கு வந்ததும் ஆற அமர வயிற்றிலே சில பல வேதிமாற்றங்களைச் செய்து,அந்த இனிப்பைத் தேனாக்கிச் சேமித்துத் தருகிறதே,அப்படித்தான் சிறுகதை ஆசிரியர்களும்.வாழ்க்கை அவர்களின் படைப்பில்,படைப்பாற்றலில் வேதி மாற்றமடைந்து அழியாத கலையாகிறது;இலக்கியமாகிறது.

       சிறுகதை என்பது சிறிய கதை இல்லை.சின்னதாய்க் கதை சொல்வதால் அது சிறுகதை ஆவதில்லை.கதைகள் வேறு இது வேறு.வாழ்க்கையின் ஒரு பகுதி,உணர்வோட்டத்தின் ஒரு துணுக்கு,கதாபாத்திரங்களினுடனான கணநேரத் தீண்டலின் சிலிர்ப்பு இவற்றில் ஏதோவொன்றோ அல்லது இதுபோன்ற பிறிதொன்றோ படைப்பாளியின் எழுத்தாற்றலால் நம் மனமேடையில் நடத்தும் நாடகமே சிறுகதை.

       சிறுகதை ஆசிரியன் பேராற்றலோடு சுழித்தோடும் வாழ்க்கை என்னும் ஆற்றின் ஒரு கரையில் இறங்கி வாசகர்களின் கழுத்தைப் பிடித்து ஓடும் ஆற்று நீரில் சில கணங்கள் முக்கி எடுத்து விடுகிறான்.

முங்கி எழுந்த வாசகர்களாகிய நமக்கோ அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே கொஞ்ச நேரம் பிடிக்கிறது.உள்ளே முங்கியிருந்த கணத்தில் வந்து மோதிய ஆற்று நீரின் வேகம்,குளிர்ச்சி,வாசம்,சுவை இவைகளெல்லாம் நினைவில் மீண்டும் மீண்டும் அலை அலையாய் வந்து மோதி நம்மைப் பரவசப்படுத்துகின்றன.ஆறு எங்கே தொடங்கியது? எங்கே முடியப் போகிறது? எதுவும் நமக்குத் தெரியாது;நமக்கு அதைப் பற்றிக் கவலையுமில்லை.

       நீரில் முங்கிய நேரத்தில் கடந்துபோன ஆற்றுப் பெருக்கைத்தான் நமக்குத் தெரியும்.நம் உறவு அதனோடுதான்.அது தந்த அதிர்ச்சி,சிலிர்ப்பு,மகிழ்ச்சி,பரவசம் இவை தாம் நமக்கு முக்கியம்.சிறுகதைகளும் அப்படித்தான்.நண்பர் பொள்ளாச்சி அபியின் சிறுகதைகளும்  சற்றேறக்குறைய அதைத்தான் செய்கின்றன.


                                               

       பொள்ளாச்சி அபியின் "எங்கேயும் எப்போதும்" சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் இருபத்தேழு சிறுகதைகள் உள்ளன.பெரும்பாலான சிறுகதைகள்,அவரின் சொந்த வாழ்க்கை அனுபவங்களிலிருந்தே சிறுகதை வடிவம் பெற்றிருக்கின்றன என்று ஊகிக்க முடிகிறது.எழுத்தாளர் அபியின் சிறுகதைகளுக்கான படைப்புலகம் மிக விரிந்தது.அவருடைய கதைகளின் மைய அச்சு உயிர் இரக்கம்.அபியின் உயிர் இரக்கச் சிந்தனை மனித நேயத்திற்கும் மேலானது.வள்ளலாரின் ஜீவகாருண்யச் சிந்தனையை ஒத்தது.இவரின் சிறுகதைகள் மனிதர்கள் மீதான கரிசனத்தோடு மட்டும் நின்று விடவில்லை.சிட்டுக் குருவிகள்,யானை,நாய்,புளியமரம் என்று உலகின் அனைத்து உயிர்களின் வதை மற்றும் வாதைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றது.உயிர் இரக்கம் என்கிற மைய அச்சினைச் சுற்றியே அவரின் கதைகள் இயங்குகின்றன.  " எனக்குறிப்பிட்டு தனது அணிந்துரையை கொடுத்துள்ளார். உண்மைதான், இந்தத் தொகுப்பின் மையக்க்ருத்தோட்டம் மனித நேயமும் ,உயிர்கள் நேயமும் எனத்தான் சொல்லத்தோன்றுகிறது.

                     இந்தத் தொகுப்பில் 'மெய்ப்பொருள் காண்பது அறிவு ' என்னும் சிறுகதை உள்ளது. கோயம்புத்தூர் விமான நிலையம். விமானத்திலிருந்து இறங்கி வெளியே வரும் பயணி சண்முகம், அவரைச்சுற்றி வாடகைக்கு கார் வேண்டுமா எனும் பல குரல்கள், அந்தக்குரல்களில் மிகப்பாவமாக இருக்கும் ஒரு ஓட்டுநரின் காரில் ஏறிக்கொள்ளும் சண்முகம், அந்தக் கார் என்ன வகைக் கார் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஏறிய சண்முகத்திடம், ஓட்டுநர் பேச ஆரம்பிக்கின்றார். ஓட்டுநர்  பாடல் கேட்கிறீர்களா ? எனக்கேட்க , சண்முகம் தன்னிடம் இருக்கும் பென் டிரைவைக் கொடுத்து அதனைப் போடச்சொல்கின்றார். பென் டிரைவ் -லிருந்து பறை இசை கேட்கிறது. அந்த இசை எழுவதை, ஒலிப்பதை மிக நுணுக்கமாக நூலின் ஆசிரியர் விவரித்துச்செல்கிறார். முடிவில் பலர் கைதட்டுவதும் , பாராட்டுவதும் கேட்கிறது. கார் ஓட்டுநர் ," இசை நமது இசை, பாராட்டுவது வெள்ளைக்காரர்கள் குரல்போல இருக்கிறதே " எனக் கேட்கிறார். ஆமாம் , லண்டனில் சென்று இசை வாசித்தேன். வெள்ளைக்காரர்கள்தான் பாராட்டினார்கள் என சண்முகம் சொல்கின்றார். பேசிக்கொண்டே வரும்போது சண்முகம் இறங்க வேண்டிய கிராமம் வருகிறது. முன்னாடியே இறங்கிக்கொள்கிறேன் என்று சண்முகம் சொல்ல , இல்லை சார் நான் ஊருக்குள்ளேயே வந்து இறக்கி விடுகின்றேன், நானும் ஒரு தேனீர் குடித்து செல்கிறேன் என்று சொன்ன ஓட்டுநர் ஊருக்குள் இருக்கும் ஒரு தேனீர்கடைக்கு முன்னால் நிறுத்துகின்றார். அப்போது ஒரு இறுக்கமான முகத்தோடு சண்முகம் இருக்கின்றார். கார் ஓட்டுநர் தேநீர்கடையில் தேநீர் கேட்க, பிளாஸ்டிக் கப்புகளில் தேநீர் தரப்படுகிறது. சூடாக இருக்கும் தேநீரை பிளாஸ்டிக் கப்பில் குடிக்க அல்லல்படும் கார் ஓட்டுநர் கடைக்கு உள்ளே அமர்ந்திருப்பவர்கள் சிலர் சில்வர் டம்பளர்களில் தேநீர் குடிப்பதைப் பார்க்கின்றார். இவர்களைப் போல இன்னும் சிலர் கடைக்கு வெளியே நின்று பிளாஸ்டிக் கப்புகளில் தேநீர் குடிப்பதைப் பார்க்கின்றார். ஏதோ புரிய சண்முகத்தை கார் ஓட்டுநர் பார்க்கின்றார். சண்முகத்தின் கண்களில் நீர் கோர்த்து நிற்கிறது. இதுதான் கதை. மிக நுட்பமாக சில கிராமங்களில் இன்றைக்கும் நிலவும் சாதிக் கொடுமையை, இரட்டை டம்ளர் முறையை விவரிக்கும் கதை. லண்டனில் சென்று நீ இசைக்காகப் பரிசு வாங்கி வந்தாலும் , எங்கள் கிராமத்தைப் பொறுத்தவரை உனக்குத் தனி டம்ளர்தான் என்ற மனப்பான்மை கொண்டிருக்கும் மனிதர்களைப் பற்றிச்சொல்லும் கதை.

            இந்தத் தொகுப்பின் தலைப்பாக அமைந்திருக்கும் 'எங்கேயும் எப்போதும் ' என்னும் சிறுகதை ஜனவரி மாதம் 4ந்தேதி 2015-ல் மூன்று நாடுகளில் நடக்கும் மூன்று வகையான நிகழ்வுகளை நமக்குத் தருகின்றது. நியூயார்க் நகரில் தனது காதலனோடு சண்டையிடும் சாரா, இலங்கை யாழ்ப்பாணத்தில் அரேபியா நாட்டிற்கு தனது பெண் ரிசானைவை  வேலைக்கு அனுப்பிவிட்டு ஒரு வருசம் முடியட்டும் என்று காத்திருக்கும் அவரது பெற்றோர் பசீர், பாத்திமா, இந்தியாவில் தமிழகத்தின் ஒரு கிராமத்தில் இருக்கும் இசக்கியம்மாவின் பத்தாவது படிக்கும் மகள் செல்வி, கழிப்பறை இல்லாத காரணத்தால் கிராமத்தை ஒட்டி இருக்கும் காட்டுக்குள் செல்கின்றாள் என மூன்று பேரை விவரித்து விட்டு முடிவுரையாக  2015-ஜனவரி 5 என்று தேதியிட்டு நியூயார்க் சர்ச்சு வளாகத்திலும், சவூதியில் ஒரு அரேபியன் வீட்டிலும், தமிழக கிராமம் ஒன்றின் சாலையோரக்கோவில் அருகிலும், சித்திரவதை செய்யப்பட்டு, கற்பழித்துக்கொலை செய்யப்பட்டதாக அன்றைக்கு வெளியாகியிருந்த அந்தந்த நாட்டு தினசரி செய்தித்தாள்களில் , தொலைக்காட்சிகளில் பெண்களின் புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகியிருந்தன. " கடவுளே ....உனக்கு இரக்கம் என்பதே இல்லையா ...? என்று எங்கேயும் எப்போதும் நிறைந்திருக்கும் அவரவர்களின் கடவுளை எண்ணி மனதுக்குள் அங்கலாய்த்துக்கொண்டே , அந்தந்த நாட்டு மக்கள் படித்துக்கொண்டும் பார்த்துக்கொண்டுமிருந்தனர் " என்று முடியும் இந்தச்சிறுகதை மிக அழுத்தமாக எங்கும், எந்த நாட்டிலும், எந்த இடத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதனை மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது.

             யானைகள் கூட்டம் கூட்டமாக குடியிருப்பு பகுதிகளில் வருகின்றன என்று செய்தித்தாள்களில் படிக்கின்றோம். யானைகள் இருக்கும் இடத்தில் நாம் போய் குடியிருப்புக்களைக் கட்டிக்கொண்டு வசிக்கின்றோம். பின்பு யானைகளைத் துரத்துகிறோம். யானை தன் நிலையிலிருந்து சொல்லும் கதையான 'நீயே சொல்லு சார்'  யானைகள் தங்கள் தரப்பு நியாயத்தை மனிதர்களிடம் பேசுவதாக அமைந்த கதை. அதனைப் போல வெட்டப்படும் மரங்களால் பூமியில் சுற்றுச்சூழல் மாறுகிறது.ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழுகிறது. அடுத்தடுத்த சந்திதிகளுக்கு உயிர்வாயு கிடைக்குமா என்னும் கேள்வி எழுகிறது. புளியமரம் ஒன்று தனது சொந்தக்கதையை, சோகக்கதையைப் பேசும் ' இதுதான் விதியா ? " என்னும் கதை மனிதர்கள் பேசுவது போல பேசிக்கோண்டே சென்று கடைசியில் புளியமரம் சொல்வதாக முடிகின்றது. 'சுத்தம் ' என்னும் சிறுகதை அஞ்சல் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்வுகளோடு ஒப்பிட்டு இன்றைய எதார்த்தத்தைப் பேசுகிறது. நல்ல நையாண்டித்தனம் நிறைந்த வார்த்தகளால் ஆன கதை. வங்கிகளின் மாறுபட்ட முகங்களைக் காட்டும் ' நமக்கும் தெரிந்த முகங்கள் ' நாம் அனைவரும் வாசித்து பார்த்து உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டிய கதை.

" இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளின் முழுமை என்பது அதன் அரசியல் பார்வையோடு தொடர்புடையது. கதையின் ஊடாக வெளிப்படும் படைப்பாளியின் சமூக விமர்சனங்களும் எதிர்க்குரல்களுமே இத்தொகுதியின் தனித்த அடையாளம் . அபியின் பெரும்பாலான கதைகள் எந்த அரசியலையும் தனித்த அடையாளங்களோடு உரத்த குரலில் பேசுவதில்லை. மாறாக எல்லாக்கதைகளின் ஊடாகவும் இழையோடும் நுண் அரசியலோடு இத்தொகுப்பு இயங்குகின்றது." என பேரா.இளங்கோவன் சொல்வதைப்போல இந்தத் தொகுப்பு இலக்கியத்தின் வழியான ஒரு கலகக்குரலாகவே வாசிக்க இயலுகிறது. நீங்களும் வாசித்துப்பாருங்கள் .புத்தகத்தின் தலைப்பு " எங்கேயும் எப்போதும் " . இதன் ஆசிரியர் பொள்ளாச்சி அபி. 'ஒரு துளிக்கவிதை' புதுச்சேரி வெளியீடு. கவிஞர் ஈரோடு தமிழன்பன் பிறந்த நாள் வெளியீடாக வெளியிட்ட நாள் 25.10.2016,  232 பக்கங்கள் உள்ள இந்த புத்தகத்தின் விலை ரூ 160 .

18.02.2017 காலை 7-05 மணிக்கு மதுரை வானொலியில் நூல் விமர்சனம் பகுதியில் முனைவர் வா.நேரு-வின் குரலில், அவரால் தயாரிக்கப்பட்டு , ஒலிபரப்பபட்டதன் எழுத்து வடிவம்.
நன்றி : அகில இந்திய வானொலி, மதுரை .


3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான நூல் அறிமுகம்
நன்றி ஐயா

முனைவர். வா.நேரு said...

படிக்கவேண்டிய தொகுப்பு, அய்யா-நன்றி, வருகைக்கும் கருத்திற்கும்

அகன் said...

நல்ல விமர்சனம். இதுவரை நீங்கள் அளித்த பல விமர்சனங்களை எனக்கு அனுப்புங்கள். தொகுத்து நூலாக்குவோம் . உங்கள் எழுத்துகள் ஆவணப்படுத்தப்பட வேண்டியவை தோழர்.
அகன் ( சிகாகோ )