விடுதலை 11.05.2020-ல் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத்தலைவர்,கல்வி அதிகாரி அண்ணா சரவணன் அவர்கள் எழுதிய 'சிங்கப்பூரில் தமிழர் தலைவர் ' என்னும் கட்டுரை படித்தேன். மிக நன்றாக இருந்தது. ஆற்றொழுக்கு நடையில், 'படித்ததில் பிடித்தது' என்னும் தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை. சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கு பெற்றபோது, தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் இந்தக் கரானோ காலத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த நிறைய இயக்க புத்தகங்களைப் படியுங்கள், படித்ததோடு நில்லாமல், 'படித்ததில் பிடித்தது ' என்னும் தலைப்பில் விடுதலைக்கு எழுதி அனுப்புங்கள் என்று அறிவுறுத்தியதை திராவிடர் கழகத்தின் பொருளாளர் அண்ணன் வீ.குமரேசன் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டார்.அண்ணா சரவணன் அவர்கள் பேசியபோது, 'சிங்கப்பூரில் தமிழர் தலைவர் ' புத்தகம் படித்ததைப் பற்றிப் பேசினார். நானும் அண்ணன் குமரேசன் அவர்களும் அதனை அப்படியே எழுதி விடுதலைக்கு அனுப்புங்கள் என்று அண்ணா சரவணனிடம் வலியுறுத்தினோம்.
நேற்று(11.05.2020) மாலை விடுதலையில் கட்டுரையைப் படித்துவிட்டு , அண்ணா சரவணனை தொலைபேசியில் அழைத்து பாராட்டினேன். "அய்யா, நீங்களும் அய்யா குமரேசன் அவர்களும் சொன்னீர்கள். ஆனால் மிகுந்த தயக்கத்தோடுதான் விடுதலைக்கு அனுப்பினேன். இதுதான் எனது முதல் கட்டுரை " என்றார். "இது ஏதோ ஆயிரக்கணக்கான கட்டுரைகளை எழுதியவர் எழுதியதுபோல அவ்வளவு நன்றாக, கோர்வையாக இருக்கிறது உங்கள் திருப்பத்தூர் மாவட்டச்செயலாளர் அய்யா வி.ஜி.இளங்கோ, அவரது இணையர் கவிதா அவர்களை பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள்
அன்பிற்கினிய தோழர்களே, " தட்டுத்தடுமாறி முதன்முதலாக இப்படி எழுதுகிறேன். " என்று அண்ணா சரவணன் இந்தக் கட்டுரையில் எழுதுகின்றார். அண்ணா சரவணன் போன்ற ஆயிரக்கணக்கான தோழர்கள், எழுதும் ஆற்றல் உள்ளவர்கள் நம்மிடம் இருக்கிறார்கள்.ஆனால் நாம் எழுதினால் வெளியிடுவார்களா? நம்மால் எழுத முடியுமா என்னும் தயக்கம்தான் பலரையும் தடுக்கிறது. முதலில் இந்தத் தயக்கத்தை தூக்கி வங்களா விரிகுடாக் கடலில் எறியுங்கள். புதுக்கோட்டையைச்சார்ந்த மறைந்த கவிஞர் பாலா அவர்கள் ஒருமுறை சொன்னார்கள். " புதுக்கவிதை எழுத விரும்புகிறவர்கள் எல்லாம் எழுதட்டும். தமிழகத்தில் ஏழரைக் கோடி பேர் இருக்கிறார்கள் என்றால், ஏழைரைக் கோடிப்பேரும் எழுதட்டும். அதனால் என்ன கெட்டு விடும். எது நிற்கிறது, எது கால வெள்ளத்தில் கரைந்து போகிறது என்பதனை காலம் தீர்மானிக்கும். எல்லோரும் எழுதுகிறார்கள், அதனால் நான் எழுதவில்லை என்று சொல்லாதீர்கள். எழுதுங்கள்,எழுதுங்கள் " என்று சொன்னார். அதனைப்போல நமது தோழர்கள் ஒவ்வொருவரும் 'படித்ததில் பிடித்ததை' எழுதி விடுதலைக்கு அனுப்புங்கள். எது வெளியிடத்தகுந்தது என்பதனை விடுதலை முடிவுசெய்து வெளியிடும்.அதனைப் போல ஆங்கிலத்தில் எழுத விருப்பம் உள்ளவர்கள், ஆங்கிலத்தில் எழுதும் ஆற்றல் உள்ளவர்கள் ஒவ்வொரு பக்க கட்டுரையாக கூட தி மாடர்ன் ரேசனலிஸ்டு பத்திர்க்கைக்கு எழுதி அனுப்புங்கள். அண்ணா சரவணன் " நம் குடும்பத்தலைவர் எல்லா வ்கையிலும் நம்மை பயிற்றுவித்து வருகிறார் என்பதற்கு நானே எடுத்துக்காட்டு ' என்று சொல்வதைப் போல நம் ஒவ்வொருவரையும் ஆங்கிலத்தில்,தமிழில் எழுதுவதை நமது தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் பயிற்றுவிக்கிறார்.முயற்சி செய்ய அழைக்கிறார்.களத்தில் நின்று பணியாற்றுவது போலவே நமது போராட்டங்களை,அனுபவங்களை, எண்ணங்களை காகிதத்தில் எழுதி பதிந்து வைப்பதுவும் மிகவும் முக்கியம்.எழுதுங்கள் தோழர்களே,எழுதுங்கள்.
முனைவர் வா.நேரு,
தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.
நன்றி : விடுதலை 12.05.2020...ஆசிரியருக்கு கடிதம்:
No comments:
Post a Comment