வள்ளுவரே ! உனது நாளில்
உனக்கு என் வணக்கம்!
உன்னோடு உரையாட
இந்த நாளில் எனக்கு விருப்பம்..
உலகம் பழித்ததை
ஒழிக்காத
கார்பரேட் சாமியார்கள்
நீளமான தாடியோடு
மழித்தல் வேண்டாம்
எனும் உனது
அறிவுரையைப்
பின்பற்றுகிறார்கள்....
'கூத்தாட்டு அவைக்குழத்து
அற்றாய்'
கொரானாவில்
மடிந்து போயினர் மக்கள்..
'அல்லவை செய்து ஒழுகும்'
அரசால்
நடந்து நடந்து
மடிந்து போயினர்
புலம் பெயர் தொழிலாளிகள்..
'உழுவார் உலகத்தார்க்கு
ஆணி ' என்றாய்
'உழுதுண்டு வாழ்வாரெல்லாம்'
ஓர் அணியாய் நிற்கின்றார்
கொட்டும் பனியில்
மாதக்கணக்காய்
தில்லி முகப்பில்...
'தீவினையார் அஞ்சார்'
திரும்பிப் பார்க்க மறுக்கிறார்.
எதிலும் உன் அறிவுரையை
ஏற்காத ஒரு கூட்டம்
எங்களுக்கு உரித்தானவர்
வள்ளுவர் என உன்னை உரிமை
கொண்டாடப்பார்க்கிறது..
உனது சிலைக்கு
காவிக்கலர் பூசுகிறது...
உனது சிலைக்கு
விபூதிப்பட்டை அடிக்கிறது...
அதிகாரம் இருக்கும் திமிரில்
'கொலை மேற்கொண் டாரின்
கொடிதாய்' ஆட்டம் போடுகிறது...
'காலம் பார்த்து
உள்வேர்த்து' காத்திருக்கிறோம் நாங்கள்..
நீ எழுதிய திருக்குறளுக்கு
பொருந்தா உரை
பலவற்றை வலிந்து
எழுதுகிறார் சிலர்....
நாகமென விசம் கக்கும்
சாமிகளுக்கு
விருது அளித்து
உன்னை நிந்தனை
செய்கிறது மய்ய அரசு..
ஒரு குலத்துக்கு ஒரு நீதி
சொல்லும் மனு(அ) நீதியும்
நீ எழுதிய குறளும் ஒன்றாம்
அதனைத் தடைசெய்தால்
குறளையும் தடை
செய்தல் வேண்டுமாம்..
தமிழ் வேடம் போட்டு
நரி ஒன்று நாளிதழில்
இடம் கொடுக்கிறது எழுத...
'கண் 'என்றாய் கல்வியை...
கற்றால்தான் உனக்கு
இருப்பது கண்கள்..
இல்லையெனில்
வெறும் புண்கள் என்றாய்.
கற்பவை கற்கச்சொன்னாய்
கசடறக் கற்கச்சொன்னாய்
'கேடில் விழுச்செல்வம்
கல்வி 'என்றாய் வள்ளுவ.
அய்யகோ! சூத்திரனா
வில்வித்தை கற்றான் என
ஏகலைவன் கட்டைவிரலை
காவு வாங்கிய
கயவர் கூட்டம்
நாங்கள் படிப்பதைப்
பல நூற்றாண்டாய்
தடை செய்த கூட்டம்
இரண்டும் ஒன்று என
இறுமாப்பாய் பேசுகிறது..
ஆரியக் கருத்துகளை
அடியோடு எடுத்து எறி
என்பதையே
இரண்டு இரண்டு வரியாய்
அழகிய உவமைகள் ததும்ப
வாழ்வியலாய் எடுத்துச்
சொன்னாய் நீ!
குஜராத்தில் பிறந்த
உத்தமராம் காந்திக்கு
இருசியாவில் பிறந்த
டால்ஸ்டாய் உணர்த்திட்ட...
இன்னா செய்தார்க்கும்
இனியவை செய்யச்சொல்லும்...
உன்னதக் கருத்துகளை
உரைத்துச்சென்றாய் நீ !
மதத்தால் பிரிந்தவர்களை
இனத்தால் பிரிந்தவர்களை
நாட்டால் பிரிந்தவர்களை
மொழியால் பிரிந்தவர்களை
உன் கருத்தின்
ஈர்ப்பால்
இணைக்கின்றாய் !
தமிழ் பேசும் எங்களை
தமிழ்நாட்டார் எங்களை
தலை நிமிர்ந்து
நிற்கச்செய்கிறாய் !
உன்னை அறிந்ததால்
மேலும் மனிதர்களானோம்
நாங்கள்...
உலகப்பொதுமறை தந்த
உன்னை
ஒரு மதக்கூண்டுக்குள்
அடைக்கப்பார்க்கிறார் சிலர்...
உனது நாளில்
சூளுரைக்கிறோம் நாங்கள்!
'மனத்தது மாசாக'
வஞ்சகம் செய்யும்
பொய்மைகளைத் தோலுரிப்போம்!
இன்னும் இரண்டு ஆயிரம்
ஆண்டுகள் ஆனாலும்
அழியாத நீ எழுதிய
குறளின் பெருமைகளை
உள்ளது உள்ளபடி
உலகிற்குக் கொண்டு சேர்ப்போம்..
வா.நேரு, 15.01.2021
7 comments:
குறள் என்றும் என்றென்றும் மதக் கூண்டுக்குள் அடங்காது ஐயா
உண்மை அய்யா...ஆனால் அவர்கள் செய்யும் முயற்சியை நாம் சொல்லல் வேண்டும் என நினைக்கிறேன்.
"வள்ளுவருடன் உரையாடல் மிக அருமை நடைமுறை எதார்த்தம நாட்டின் கொடுமைகள் என அனைத்தும் சிறப்பு! வாழ்த்துக்கள்! உறுதி ஏற்போம் வள்ளுவம் காப்போம்!"..முக நூலில் அண்ணன் ஆ.செல்லப்பாண்டி அவர்கள்
நன்றிங்க அண்ணே...
"உன்னை அறிந்ததால் மேலும் மனிதர்களானோம்... வா. நேரு...!"...தோழர் கு.வெ.கி.செந்தில் முக நூலில்
" சிறப்பான சிந்தனை நண்பர் நேரு அவர்களே!உழுகுடிகளின் போர்ப்பரணி குறித்து இப்பொங்கல் நாளில் யாரும் பதியவில்லையே என வருந்தினேன். வாட்டம் போக்கிவிட்டீர்கள்.மகிழ்ச்சி." திரு.மகாதேவன் அவர்கள்'வாருங்கள் படிப்போம்'வாட்சப் குழுவில்
சிலர் செய்யும் அநியாயங்களைக் கண்டால் கோபம் அதிகம் வருகிறது; ஆனால் தாத்தா அதற்கும் தீர்வு சொல்லி உள்ளார்... ம்...
Post a Comment