உள் மனது விசாரிப்புகளோடு…
ஒவ்வொருவர்
மனதிற்குள்ளும்
மாபெரும் காயங்கள்
புதைந்து கிடக்கின்றன…
பேச இயலாதவன் கண்ட
கனாப்போல
சொற்கள் பல இருந்தும்
சொல்ல இயலாமல்
புதைந்து கிடக்கின்றன…
ஒரு நொடிக் கவனக்குறைவால்
இருசக்கர வாகனம் கவிழ்ந்து
ஏற்பட்ட விபத்தால்
ஏற்பட்ட காயத்தின்
அடையாளங்கள் புறத்தில்
எளிதாக அடையாளம்
காட்டி நிற்கின்றன…
அகத்தில் ஏற்பட்ட
காயங்களுக்கு
அடையாளங்கள் ஏதுமில்லை…
எப்போதாவது ஏன் அப்படி
நிகழ்ந்தது எனும்
உள் மனது விசாரிப்புகளோடு
கடந்து போகும்
அந்தக் காயங்கள்
ஒவ்வொருவரின் உடலும்
புதைக்கப்படும்போதுதான்
புதைக்கப்படுகிறது நிரந்தரமாய்…
வா.நேரு,
26.07.2025