Wednesday, 3 September 2025
Tuesday, 19 August 2025
திரு.மில்லர் நினைவு நூலகம்- முனைவர் வா.நேரு
Tuesday, 5 August 2025
நூல்களின் வேடந்தாங்கல்- முனைவர் வா.நேரு
சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் போல, பெரியார் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மய்யம்போல நாம் கவனிக்கவேண்டிய நூலகம் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகமாகும். இந்த நூலகம் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது ஒரு தனிப்பட்ட நபரின் வாசிப்பு ஆர்வமும், அவர் தனது வருமானத்தில் பெரும்பகுதியை புத்தகங்கள் வாங்குவதற்குச் செலவழித்துச் சேகரித்த புத்தகங்களும் ஆகும். அவரது பெயராலும் அவர் வைத்திருந்த நிறுவனத்தின் பெயராலும் இந்த நூலகம் அமைந்திருப்பது சிறப்பாகும்.
ஆம், அவரது பெயர் முத்தையா.1926ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி பிறந்தவர்.சொந்த ஊர் இப்போதுள்ள சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையூர்.
திராவிட இயக்கத் தலைவர்கள் பலர் நடத்திய இதழ்கள் மற்றும் அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த இதழ்களையெல்லாம் வாங்கிச் சேகரித்து வைத்திருந்திருக்கிறார். இவர் சேர்த்து வைத்ததில் இரண்டு இலட்சம் சிறுகதைகள்,5 இலட்சம் செய்தித் துணுக்குகள், ஆங்கிலேயரால் தடை செய்யப்பட்ட புத்தகங்கள், விலங்குகள் தொடர்பான 5000 கட்டுரைகள், அவருக்குக் கொடுக்கப்படும் அழைப்பிதழ்கள் என்று இவர் சேமிப்பைப் பற்றி அறியும்போது வியப்பு மேலிடுகிறது.
https://rmrl.in/ta/visit என்னும் இணையதளம் மிக விரிவான தகவல்களைத் தருகிறது. இந்த நூலை எதற்கு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறார்கள்.” தமிழ்ப் பண்பாட்டின் பல அம்சங்களைக் காட்சிப்படுத்தி வருகிறது ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம். இதன் முக்கியச் செயல்பாடுகள் நூல் சேகரித்தல், நூல்பட்டியலிடுதல், எணினிமயமாக்கல், நூல் பாதுகாப்பு, ஆராய்ச்சி, கண்காட்சி வடிமைத்தல் முதலியவையாகும்.
தனி நபர் சேகரிப்புகள் என்னும் பகுதி, தனிப்பட்டவர்கள் தங்கள் வாழ்நாளில் தாங்கள் சேகரித்து வைத்திருந்த நூல்களை எல்லாம் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்கு வழங்கியவர்கள் பற்றியும், அவர்கள் வழங்கிய நூல்கள் பட்டியலும் உள்ளது.அந்த வகையில் முனைவர் வசந்ததேவி மற்றும் பலர் வழங்கிய நூல் பட்டியல் தனி நபர் சேகரிப்புகள் என்னும் பகுதியில் இருக்கிறது.(இந்தக் கட்டுரை எழுதி அனுப்பும்போது தோழர் பேரா வசந்ததேவி அவர்கள் இருந்தார்கள்.இந்தக் கட்டுரை வெளிவரும்போது அவர்கள் இல்லை.தன் வாழ் நாளிலேயே தான் சேகரித்த நூல்களை எல்லாம் ரோஜா முத்தையா நூலகத்திற்கு அளித்த தோழர் பேரா வசந்ததேவி அவர்களுக்கு வீரவணக்கம்...வா.நேரு)
இந்த நூலகத்தில் சிந்துவெளி ஆய்வு மய்யம் என்னும் தனிப்பிரிவு இருக்கிறது. அய்ராவதம் மகாதேவன் அவர்களைத் தலைவராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆய்வு மய்யத்தின் தற்போதைய தலைவர் திரு.ஆர். பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். ஆவார். “சிந்துவெளி ஆய்வு மய்யம் மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச், சென்னை கணித அறிவியல் நிறுவனம், சியாட்டில் வாஷிங்டன் பல்கலைக்கழகம் போன்ற உலகெங்கிலும் உள்ள முதன்மையான நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இத்துடன் ஓர் ஆய்விதழையும் ஆண்டுதோறும் வெளியிட்டுவருகிறது.
அய்ராவதம் மகாதேவன் வெளியிட்ட சிந்துவெளித் தொடரடைவை (1977) இணையச் செயலியாக மாற்றி, அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் indusscript.in என்னும் தளத்தில் வெளியிட்டுள்ளது. இது சிந்துவெளி அறிஞர்கள், ஆர்வமுள்ள நபர்களுக்கு சிந்துவெளி எழுத்துகளைப் பகுப்பாய்வு செய்வதற்கும் விளக்குவதற்கும் திறந்தநிலை இணையக் கருவியாகச் செயல்படுகிறது. இந்தத் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்பும் அனைத்து அறிஞர்களுக்கும் சிந்துவெளி ஆய்வு மய்யம் எப்போதும் உதவுதற்குத் தயாராக இருக்கும்.அய்ராவதம் மகாதேவன், ஆர். பாலகிருஷ்ணன் ஆகியோரின் எழுத்துகளை எங்கள் மின்நூலகத்தில் வாசிக்கலாம்.” என்று அதன் இணையதளத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு ஆலமரமாய், திராவிட மாடல் அரசினை நடத்தும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலோடு பல்வேறு நிதியுதவிகளைப் பெறும் நிறுவனமாக ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் திகழ்வதுடன், உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் எல்லாம் விரும்பி வரும் நூல்களின் வேடந்தாங்கலாக ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் திகழ்கிறது. இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.
நூலகத் தொடர்புக்கு : 914422542551
செல்பேசி : 8015312686
நன்றி: உண்மை மாதம் இருமுறை இதழ் ஆகஸ்டு 1-15,2025
Thursday, 17 July 2025
Friday, 4 July 2025
நூல் தேர்வு- முனைவர் வா.நேரு
சென்னையில் இருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்பு நான் சென்று பார்த்தபோது அவ்வளவு பெருமலைப்பாக இருந்தது. பல மாடிக் கட்டடங்கள், குளிரூட்டப்பட்ட அறைகள், சிறுவர், பெண்களுக்கு எனத் தனித்தனிப் பகுதிகள் எனப் பார்த்தவுடன் வியப்பும் மகிழ்ச்சியும் அளித்தது. சென்னையில் கலைஞர் அவர்கள் காலத்தில் அவர் பார்த்து பார்த்து அண்ணாவின் பெயரால் கட்டப்பட்ட நூலகம் அண்ணா நூற்றாண்டு நூலகம். ஆனால், அதன் வடிவமைப்பை டாக்டர் கலைஞர் அவர்கள் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தூண்டுதலால் உருவாக்கினார் என்றால் அது மிகையில்லை.
திராவிட மாடல் ஆட்சியின் நாயகர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் முதன்முதலாகக் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மதுரையிலே அமைத்தார்.கலைஞர் நூற்றாண்டு நூலகம் போன்ற பெரிய நூலகத்திற்குச் செல்லும் பொழுது பல நேரங்களில் நமக்கு எந்த நூலை வாசிப்பது அல்லது எந்த நூலை எடுத்துச் சென்று வாசிப்பது என்ற குழப்பம் வரும்.
“நான் படிக்க விரும்பும் புத்தகம் நல்ல புத்தகம்தானா? பயனுறு புத்தகம்தானா? என்று அறிந்து அதனைத் தேர்வு செய்து படிப்பதே முக்கியம்.எப்படிப்பட்ட புத்தகங்களை நாம் வாசிக்கவேண்டும் என்று முடிவெடுப்பதற்குச் சிலஇயக்கங்கள், சில வாட்சப் குழுக்கள் வழிகாட்டுகின்றன. பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக கடந்த சில ஆண்டுகளாக வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 6.30 முதல் 8 மணி வரைதிராவிட இயக்க எழுத்தாளர்களின் புத்தகங்கள் மதிப்புரை செய்யப்படுகின்றன. அமெரிக்காவில் இருக்கும் மருத்துவர் சரோஜா இளங்கோவன் அவர்கள் எல்லாம் இணைந்து நடத்தும் ‘தமிழ் ரீடிங் சர்க்கிள்’ என்னும் வாட்சப் குழுமத்தில் தொடர்ச்சியாக நூல் அறிமுகங்கள் நடைபெறுகின்றன.இப்படிப்பட்ட குழுக்களின் வாயிலாகவும் நாம் எந்தப் புத்தகங்களைப் படிக்கலாம், படிக்கவேண்டும் என்று முடிவு செய்யலாம்.
நூலைப் படி, சங்கத் தமிழ் நூலைப்படி, காலையில் படி, கடும்பகல்படி மாலை இரவு முழுவதும் படி என்று படி படி என்று சொல்லிக்கொண்டே வரும் புரட்சிக் கவிஞர் சிலவற்றைப் படிக்காதே என்று சொல்கிறார். “பொய்யிலே முக்காற்படி புரட்டிலே காற்படி, வையகம் ஏமாறும்படி வைத்துள்ள நூல்களை ஒப்புவது எப்படி? என்னும் கேள்வியைக் கேட்கின்றார். எனவே, நூலகத்திற்குச் செல்லும் பொழுது சில நேரங்களில் வையகம் ஏமாறும்படி வைத்துள்ள நூல்களை வாசிக்க வேண்டாம் என்று முடிவு எடுப்பது நல்லது.
பொது நூலகம் என்று வருகின்றபோது, அங்கு எல்லாவகையான புத்தகங்களும் வாங்கி வைக்கப்படுகின்றன.கற்பனை இதிகாசங்கள், புராணங்கள், அறிவுக்கு ஒவ்வாத, நடைமுறை வாழ்விற்குப் பயன்படாதவற்றை ஒதுக்கிவிட்டு, பகுத்தறிவு உகந்த, வாழ்வைச் செம்மைப்படுத்தக்கூடிய, முன்னேற்றத்திற்கு வழிகாட்டக்கூடிய அறிவு வளர்ச்சிக்கு உதவக்கூடிய நூல்களைத் தேர்வு செய்து படிக்க வேண்டும்.
இலக்கிய வகைகளில் சிலருக்குக் கவிதைகள் பிடிக்கும், சிலருக்குக் கதைகள் பிடிக்கும், சிலருக்குக் கட்டுரைகள் மட்டுமே பிடிக்கும். இந்த மனப்பான்மைக்குத் தக்கவாறு நாம் விரும்பும் இலக்கிய வகைமையில் புத்தகங்களை எடுத்துக்கொள்வதற்கு நூலகங்கள் வழி வகுக்கின்றன. சிலர் மட்டும் கதை, கவிதை, கட்டுரை என எல்லாவற்றையும் எடுத்துப் படிப்பார்கள்.
நம்முடைய குழந்தைகள் நூலகத்திற்குச் சென்று படிக்கின்றபொழுது அவர்கள் பெரும்பாலும் சிறுவயதில் கதைகளைத்தான் தேர்ந்தெடுத்துப் படிப்பார்கள். அதிலும் தெனாலிராமன் கதை, பீர்பால் கதை, ஈசாப் கதை போன்ற புகழ்பெற்ற கதைகளைக் குழந்தைகள் படிக்கிறார்கள். அவர்களுக்கு பெரியார் பிஞ்சு மாத இதழ் பயனுள்ள ஒரு மாற்று. நமது இயக்கத்தால் நடத்தப்படும் ‘பெரியார் பிஞ்சு’ இதழ் சிறப்பான கதைகளோடு, அறிவியல் செய்திகள், கட்டுரைகள், சித்திரக் கதைகள் என்று அனைத்தையும் உள்ளடக்கியதாக வருகிறது. ’பெரியார் பிஞ்சு’ இதழை ஒழுங்காக ஒரு குழந்தை வாசித்தால், வாசிப்பில் ஈர்ப்பு வருவது மட்டுமல்ல; அறிவியலிலும் பெரும் ஈர்ப்பு வரும்.
நூலகத்திற்குச் சென்று நூலைத் தேடுவது பழைய முறை. கணினி முன் அமர்ந்துகொண்டு நாம் படிக்கவிரும்புகிற புத்தகம் நூலகத்திற்குள் இருக்கிறதா என்று தேடுவது புதிய முறை. கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் வலைத்தளத்திற்குள் சென்று, அய்யா கு.வெ.கி. ஆசான் அவர்கள் மொழி பெயர்த்த ‘கடவுள் ஒரு பொய் நம்பிக்கை’ என்னும் புத்தகம் இருக்கிறதா என்று தேடுபொறியில் கேட்டால், இருக்கிறது, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இரண்டாவது தளத்தில் நுழைந்தவுடன் முதல் பகுதியில் இருக்கிறது என்று வரிசை எண் உட்படச் சுட்டிக்காட்டி அடையாளம் காட்டுகிறது. பின்பு நேரிடையாகச் சென்று அந்தப் புத்தகத்தை எடுத்து வந்து வீட்டில் வாசிக்க முடிகிறது.குறிப்புகள் எடுக்க முடிகிறது.
உருவாக்கப்பட்டுப் பல இலட்சம்பேர் வந்து செல்லும் கலைஞர் நூற்றாண்டு நூலகம், உருவாக்கப்படவிருக்கும் கோயம்புத்தூர் தந்தை பெரியார் நூலகம், திருச்சியில் பெருந்தலைவர் காமராசர் நூலகம், திருநெல்வேலியில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் நூலகம் ஆகியவை மிகப்பெரிய நம்பிக்கையை நமக்கு அளிக்கின்றன. மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன.தொடரட்டும் நூலகங்கள் உருவாக்கம்! வெல்லட்டும் திராவிடம்!!
நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் ஜூலை 1-15,2025.
Saturday, 7 June 2025
அறிவு முதலீடு- முனைவர் வா.நேரு
அனுபவங்கள்தான் புத்தகங்கள் ஆகின்றன. ஒவ்வொரு நூலுக்குள்ளும் ஓராயிரம் அனுபவங்கள் புதைந்து கிடக்கின்றன.ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருக்கும் நூலகங்களுக்குள் நுழைந்து, நாம் அங்கிருக்கும் புத்தகங்களை வாசிக்க ஆரம்பிக்கும்போது, பல ஆயிரம் பேர்களின் அனுபவங்களை நாம் அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன.
அதுவும் திராவிட இயக்க எழுத்தாளர்களின் புத்தகங்கள் எதிர்ப்பில் எழுந்தவை. அறிவில் முகிழ்த்தவை. களத்தில் விளைந்தவை.காலத்திற்கும் அறிவையும் ஆற்றலையும் விதைப்பவை. எனவேதான் திராவிட இயக்க எழுத்தாளர்களின் புத்தகங்களை மறைத்து வைக்கவே நமது பரம்பரை எதிரிகள் அன்றுமுதல் இன்றுவரை
விரும்புகிறார்கள். மறைக்கிறார்கள். ஆனால், நமது தலைவர்கள், நமது திராவிட இயக்கப் புத்தகங்கள் எளியவர்களின் கைகளில் சென்றடைய வேண்டும் என விரும்பினார்கள்,
விரும்புகிறார்கள். ஆதலால்தான், தந்தை பெரியார் காலந்தொட்டு, குறைந்த விலையில் நமது கருத்து நூல்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, நட்டம் என்றாலும் பரவாயில்லை என்று அச்சடித்துக் கொடுக்கிறார்கள்.
‘ஞானசூரியன்’ வெளிவந்தவுடன், ‘குடிஅரசு’ இதழில் அதுபற்றி அறிமுகம் வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு:
‘‘ஞானசூரியன் என்ற புத்தகம் கானாடுகாத் தான் திருவாளர் வயி.சு.சண்முகம் செட்டியார் அவர்களின் வேண்டுகோளின் பேரில் சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்களால் எழுதப்பட்டது. இது முழுதும் ஆரியர்களின் வேதம், சாஸ்திரம், புராணம், சாமி என்பவைகளின் புரட்டுகளை வெளியாக்கும் கருத்துக் கொண்டே எழுதப்பட்டதாகும். இதில், பெரும்பாலும் வேதத்திலும் மற்றும் பல ஆரிய ஆதாரங்களிலும் உள்ள சுலோகங்களை எடுத்து எழுதி அவற்றுக்கு ஏற்பட்ட பொருள்களையும் எழுதி அப்படி ஏன் அவர்கள் எழுதி வைத்துக் கொண்டு நம்மை நம்பச் செய்து வருகிறார்கள் என்பதற்கு உள்ள அவ்வாரியர்களின் சூழ்ச்சியும் கெட்ட எண்ணமும் சுயநலமும் பளிங்கு போல் வெளியாக்கப்பட்டிருக்கின்றன.’’ (ஆசிரியர் அவர்கள்,வாழ்வியல் சிந்தனைகள், உலகின் தனித்த புத்தகப் புரட்சி இதோ(3)
– ‘விடுதலை’ 28.04.2025).
சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்கள் இந்த நூலில்தான் 16 வருடங்களாக ஆராய்ந்து, இந்தியா முழுவதும்,நேபாளம்,காஷ்மீரம் (அப்போது தனி நாடாக இருந்தது),சிலோன் முதலிய பல தேசங்களுக்குச் சென்று முற்கால, தற்கால வழக்க ஒழுக்கங்களை அறிஞர்களை நேரில் கண்டும் கேட்டும், தமிழர்கள் ஏமாந்து கிடக்கும் தன்மையை அறிந்து இந்த நூலை எழுதியதாகக் குறிப்பிடுகின்றார்.
‘ஞான சூரியன்’ போன்ற 169 புத்தகங்கள் திராவிட இயக்கத்தவர்க்கு அடையாளம் காட்டப்பட்டுள்ளன. ‘ஏப்ரல் 23, உலகப் புத்தக நாளை முன்னிட்டு, 8 நாட்களுக்கு 10% முதல் 50% சிறப்புத் தள்ளுபடியில், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் மற்றும் திராவிடர் கழக(இயக்க) வெளியீடுகள் விற்கப்பட்டன. தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி, கவிஞர் கலி.பூங்குன்றன், மஞ்சை வசந்தன் உள்ளிட்ட பலரின் படைப்புகள், 169 புத்தகங்கள் 50 விழுக்காடு தள்ளுபடி விலையில் கொடுக்கப்பட்டன.
ரூபாய் 9665 மதிப்புள்ள குடிஅரசு தொகுதிகள் 5000 ரூபாய்க்கும், ரூபாய் 3650 மதிப்புள்ள வாழ்வியல் சிந்தனைகள்-18 தொகுதிகள் ரூபாய் 2500க்கும் இன்னும் பல தொகுப்புகளாகப் புத்தகங்கள் விற்கப்பட்டன.இவையெல்லாம் நமது தோழர்கள் தங்கள் வீடுகளில் நூலகம் அமைக்க வேண்டும் என்னும் அடிப்படை நோக்கத்தில் விற்கப்பட்டவை – விற்கப்படுபவை. திராவிடர் கழகத்துத் தோழன் என்றால் அவரிடம் சில புத்தகங்கள் கட்டாயம் இருக்கும் என்ற நம்பிக்கை தோழமைக் கட்சியினரிடம் இருக்கிறது. அதனை இன்னும் வலுப்படுத்தும் விதமாக இப்படிப்பட்ட விற்பனைகள் அமைகின்றன. எவ்வளவு சிறிய வீடாக இருந்தாலும் நமது இயக்கப் புத்தகங்கள் இருக்கும் சிறிய நூலகம் அந்த வீட்டுக்குள் இருப்பது என்பது நமது தோழரின் வீடு என்பதைப் பறைசாற்றும்.
மதுரைத் தோழர்களில் புத்தகங்கள் மீது அளவற்ற ஆசையும் கவனிப்பும் காட்டுபவர் தோழர் ப.சடகோபன் அவர்கள். பல ஆண்டுகள் மதுரையில் நடமாடும் புத்தக நிலையமாக யாழ் வாடகை நூலகம் வைத்திருந்தவர். தான் படித்த இயக்கப் புத்தகங்களை, மற்ற தோழர்களும் படிக்கவேண்டும் என்பதற்காக நிறைய மெனக்கிடுபவர். சென்னை பெரியார் திடலில் அமைந்திருக்கும் பெரியார் பகுத்தறிவு நூலகம் & ஆய்வகம் வாசலில் ப.சடகோபன் அவர்கள் அச்சிட்டு வெளியிட்ட, புத்தகங்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும், பயன்படுத்த வேண்டும் என்னும் துண்டறிக்கை ஒட்டப்பட்டுள்ளது. அந்தத் துண்டறிக்கையை அங்கு பார்த்தவுடன் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.
‘‘தமிழ்நாட்டில் வீட்டுக்கு ஒரு நூலகம் (புத்தகசாலை) வைக்கவேண்டும் என்று கனவு கண்டவர் பேரறிஞர் அண்ணா.அவர்கள்.’’ பாதுகாப் பான அறை – படுக்கை அறை சமையலறை – பூஜையறை – இவை எல்லாம் இருக்கும் – புத்தகம் உள்ள இடம், படிப்பதற்கென்று ஓர் அறை தேடிப்பாருங்கள் மிகமிகக் கஷ்டம்.
பல வீடுகளிலே தூண்களின் மீது சாளரங்களின் இடுக்கில், பிள்ளையார் மாடத்தில் சில புத்தகங்கள் இருக்கும். ஆனால் புத்தகசாலை உண்டா? என்று கேளுங்கள் – பதில் கூறமாட்டார்கள்; ஒரு புன்னகை தோன்றும். பைத்தியக்காரா! இது வீடு நீ என்ன இங்கு வந்து புத்தக சாலை கேட்கிறாயே, என்று பொருள் அந்தப் புன்னகைக்கு…
வீட்டுக்கோர் புத்தகசாலை நிச்சயம் வேண்டும் – வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம், அலங்காரப் பொருள்களுக்கும், போகப் போக்கியப் பொருள்களுக்கும் தரப்படும் நிலை மாறி, புத்தகசாலைக்கு அந்த இடம் தரப்படவேண்டும். உணவு, உடை, அடிப்படைத் தேவை – அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தானதும், முதல் இடம், புத்தகசாலைக்குத் தரப்பட வேண்டும். என்றார் பேரறிஞர் அண்ணா.’’
திராவிட இயக்கத்தவர் என்றால் அவர், திராவிடர் கழகமாக இருந்தாலும் திராவிட முன்னேற்றக்கழகமாக இருந்தாலும் அல்லது மற்ற திராவிட இயக்கங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அடிப்படையில் அவர்களின் இல்லங்களிலே இருக்கவேண்டியது நூலகமே. அந்த நூலகத்தில் முதலில் இடம் பெறவேண்டியவை தந்தை பெரியாரின் நூல்கள்.பின்பு மற்ற திராவிட இயக்க நூல்கள், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், புரட்சிக்கவிஞரின் கவிதைத் தொகுப்புகள் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் நூல்கள் போன்றவை.கட்டாயம் இருக்கவேண்டும்.இவற்றைச் சிறுகச் சிறுகச் சேகரிக்கவேண்டும்.
புத்தகம் என்பது அறிவு முதலீடு. நமக்கு மட்டுமான முதலீடு மட்டுமல்ல; நமது குழந்தைகள்,அவர்களின் குழந்தைகள் என்று நமது பரம்பரைக்கு உண்மையாக நாம் போட்டு வைக்கும் முதலீடு என்பது நல்ல புத்தகங்கள். நாம் நமது திராவிட இயக்கத்தில் இருக்கிறோம், பணியாற்றுகிறோம் என்று சொன்னால் அதற்கு அடையாளமாக இருப்பது நமது வீட்டில் இருக்கும் புத்தகங்கள் வைத்திருக்கும். சிறு நூலகம்தான். எனவே, வீட்டில் சிறு நூலகம் வைப்பதை நமது இயக்கக் கடமைகளில் ஒன்றாகக் கொள்வோம். நூலகங் களில் இருப்பது போல நம் வீட்டில் இருக்கும் நூல்களைப் பட்டியலிடுவோம்.அதனைக் கணினியில் அல்லது ஏடுகளில் எழுதி, முறைப்படுத்தி வைப்போம். அந்த நூல்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வோம்.
நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் ஜூன் 1-15,2025
Saturday, 17 May 2025
Wednesday, 16 April 2025
Tuesday, 1 April 2025
இதழாளர்கள் அம்பேத்கரும் பெரியாரும் – முனைவர் வா.நேரு
காலம் காலமாய் வர்ணத்தின் அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்ட மனிதர்கள் தங்கள் நிலையை உணராமல் வாழ்ந்து வந்தனர். ஆடு மாடுகளைப் போல நடத்தப்பட்டாலும், ஏன் நமக்கு இந்த இழிநிலை என்னும் உணர்வு அவர்களுக்கு ஏற்படவில்லை. அவர்களின் நிலையை அவர்களுக்கு உணர்த்துவதற்கு நம் தலைவர்கள் பத்திரிகைகள் ஆரம்பித்தார்கள்..அப்படி உருவாக்கப்பட்ட பத்திரிகைகளில் மிக முக்கியமானவை (மூக்நாயக்) ‘ஊமைகளின் தலைவன்‘ என்னும் பத்திரிகையும் ‘குடிஅரசு’ பத்திரிகையும் ஆகும்.
‘மூக் நாயக்’ முதல் இதழில் அவ்விதழின் குறிக்கோள் பற்றி எளிமையான முறையில், புரிந்து ஏற்றுக் கொள்ளும் தன்மையில், அழுத்தமான வீச்சுடன் அம்பேத்கர் அறிவித்துள்ளார். ‘இந்தியா ஒரு சமத்துவம் இல்லாத நாடு. இந்தியா பல அடுக்குகளை உடைய கோபுரம் போன்றது. ஆனால், இதற்கு நுழைவாயிலே இல்லை. ஓர் அடுக்கிலிருந்து மற்றொரு அடுக்குக்குச் செல்ல ஏணிப்படிகளும் இல்லை. ஓர் அடுக்கில் பிறந்த ஒருவர் அங்கேயே தான் மடிய வேண்டும்’ என்று எழுதியுள்ளார். இந்தியாவில் உள்ள ஜாதிப்பிரிவுகள் போல், உலகின் எந்த நாட்டிலும் இல்லை. ஆனால், இன்றைக்குக் கல்வி வளர்ச்சியால், பன்னாட்டுத் தொடர்பால் வெளி நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் தங்களுடன் இந்தச் ஜாதிய மனப்பான்மையையும் கொண்டு செல்கிறார்கள். அம்பேத்கர் அவர்கள் பயப்பட்டதுபோல் இந்தச் ஜாதியக் கொடுமை இந்தியர்களால் உலகமெங்கும் இன்று கொண்டு செல்லப்பட்டுள்ளது.அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டுள்ள ஜாதியத்திற்கு எதிரான சட்டங்கள் இதனை இன்று உறுதிப்படுத்துகின்றன.
“பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார், தீண்டப்படாதவர்கள் என்ற மூன்று பிரிவுகளாக இந்து சமூகம் உள்ளது என்று அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார் கடவுள் விலங்குகளிலும் மற்ற உயிரற்ற பொருள்களிலும் இருக்கிறார் என்று தத்துவ விளக்கம் கூறிக் கொண்டும், அதே சமயம் தன் சொந்த மதத்துக்காரர்களையே தீண்டப்படாதவர்களாக நடத்துகின்றவர்களுக்காக இரக்கப்படுகிறேன் என்றும் எழுதி உள்ளார். அறிவையும் கல்வியையும் பரப்புதலை நோக்கமாகக் கொண்டிருக்காமல் பார்ப்பனர்கள் இவற்றை முழுவதுமாகத் தாமே பெற்று ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருப்பதற்காக வருந்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். கல்வியும் அதிகாரமும் இல்லாமையே பார்ப்பனர் அல்லாதவரின் பின் தங்கிய நிலைக்குக் காரணம் என்று கருதினார் இறுகப் பிணைத்துள்ள அடிமைத் தளையிலிருந்து, வறுமையிலிருந்து, அறியாமையிலிருந்து, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களைக் காப்பாற்றி மீட்டிட மிகப்பெரிய அளவிலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது சமூக இயலாமைகளை உணர்த்திடும் வகையில் விழிப்புணர்வு பெறச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் (ஆங்கிலத்தில் தனஞ்சய்கீர்; தமிழில் கா.முகிலன்).
‘மூக் நாயக்’ இதழ் சில ஆண்டுகள்தான் நடந்திருக்கிறது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கல்விக்காக வெளி நாடு சென்ற பின்பு அது நிறுத்தப்பட்டது.மீண்டும் 1927இல் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ‘பகிஷ்கருக் பாரத்’ (நிராகரிக்கப்பட்டவர்களின் இந்தியா) என்னும் ஏட்டை நடத்தியிருக்கிறார். அதுவும் சில ஆண்டுகளில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து பல இதழ்களில் அவர் கட்டுரைகளைத் தந்து கொண்டே இருந்திருக்கிறார். நூல்களை எழுதிக்கொண்டே இருந்திருக்கிறார். அவரைப் பற்றிய செய்திகள், கட்டுரைகள் உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் வந்து கொண்டே இருந்திருக்கின்றன. இன்றும் வெளியிடப்பட்டு வருகின்றன.
வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு, அதில் வெற்றி கண்ட பின்பு பார்ப்பனர் சூழ்ச்சியைப் பார்ப்பனர்களின் வஞ்சகத்தை உணர்ந்து கொண்ட தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய மக்களுக்கு உண்மை நிலையை உணர்த்துவதற்கு ஒரு பத்திரிகை அவசியம் என்று உணருகின்றார் வைக்கம் போராட்டத்தில் சிறையில் இருக்கும்போதே அதை முடிவு செய்கிறார். பின்பு தொடர்ச்சியாகக் காங்கிரஸ் மாநாடுகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத் தீர்மானங்களைக் கொண்டு வர முயன்று, வஞ்சகமாகப் பார்ப்பனர்களால் அந்தத் தீர்மானங்கள் தோற்கடிப்படுவதைக் கண்டு காங்கிரசை விட்டு வெளியே வருவதற்கு முன்பே தந்தை பெரியார் அவர்கள் 1925 ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் நாள் ‘குடி அரசு’ இதழைத் தொடங்குகிறார்.
அதனைத் தொடர்ந்து, புரட்சி, ரிவோல்ட், பகுத்தறிவு, ‘விடுதலை’, உண்மை போன்ற இதழ்கள்.திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காலத்தில் தி மாடர்ன் ரேசனலிஸ்ட் (ஆங்கில இதழ்), பெரியார் பிஞ்சு இதழ், திராவிடப்பொழில் என்னும் ஆராய்ச்சி இதழ் போன்றவை ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த இரு பெரும் தலைவர்கள் பத்திரிகையை ஆரம்பிப்பதற்கான நோக்கம் என்பது, அடிமைப்பட்ட நிலை இருக்கக்கூடிய மக்கள் தங்கள் நிலையை உணர வேண்டும் அடிமைத் தளையை உடைத்து நொறுக்கி வெளியே வந்து தங்களுக்கான உரிமையைப் பெறுதல் வேண்டும் என்பதுதான் அடிப்படையான நோக்கம்.
ஆனால், இந்த நோக்கத்தினைச் சிதைக்கும் வகையில் அன்று முதல் இன்று வரை பார்ப்பனப் பத்திரிகைகள் செயல்படுகின்றன.” எல்லாவற்றையும்விட நமக்குப் பெரிய ஆபத்தாயிருப்பது பார்ப்பனப் பத்திரிகைகளே …நமது கெடுதிக்காகவே இப்பார்ப்பனப் பத்திரிகைகள் நடந்து வருவதையும், பார்ப்பன ஆதிக்கப் பிரச்சாரமே அதன் கொள்கைகளாக இருப்பதையும். நாம் சந்தேகமற- மனப்பூர்வமாகத் தெரிந்திருந்தும், இப்பிரச்சாரங்களுக்குப் பணம் கொடுத்து நாம் நாசமாகப் போவதற்காக இப்பத்திரிகைகளை வாங்கிப் படிப்பதென்றால் யாராவது நம்மை அறிவு, புத்தி, ஒழுக்கம், மானம், வெட்கம், சுயமரியாதை உள்ள சமூகம் என்று சொல்லக்கூடுமா என்பதை நன்றாய் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது” என்றார் தந்தை பெரியார்.இந்தக் கூற்று இன்றைக்கும் பொருந்தும்.
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் 14இல் நாம் ஓர் உறுதி மொழி எடுத்துக்கொள்வோம், இதழாளர்கள் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிந்தனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இன்றைய புதிய சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோம்! நமது இதழ்களைப் பரப்புவோம்! தோழர்கள் கலையரசன், சுரேசு போன்றவர்கள் சென்னையில் இருந்து இன்றைய விடுதலைச் செய்தி என்ற தலைப்பில் சிறப்பாக நாள்தோறும் உரையாற்றுவதுபோலப் புதிய புதிய வடிவங்களில் நமது தலைவர்களின் சிந்தனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம். கற்பிப்போம் ஒன்று சேர்வதற்காக! கற்பிப்பிப்போம் புரட்சி செய்வதற்காக! கற்பிப்போம் பார்ப்பனப் புரட்டுகளை உணர்ந்து நமது மக்கள் மேன்மையடைவதற்காக; அதிகாரங்களைப் பெறுவதற்காக! நமது இதழ்களைப் பரப்புவோம்- அண்ணல் அம்பேத்கரைப் புரிந்துகொள்ள, தந்தை பெரியாரைப் புரிந்துகொள்ள..
நன்றி: உண்மை ஏப்ரல்(1-15),2025 இதழ்.
Sunday, 16 March 2025
சுயமரியாதை சுடரொளிகள் நாள்
சுயமரியாதை சுடரொளிகள் நாள்
(முனைவர் வா.நேரு)
திராவிடர் கழகத்தால் ,அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாள் சுயமரியாதைச் சுடரொளிகள் நாள் என்று அனுசரிக்கப்படுகிறது .இந்த நாளில் அன்னை மணியம்மையார் அவர்களை நினைவில் கொள்வதோடு, அவர்களுக்கு முன்னும் பின்னும் சுயமரியாதை இயக்கத்திற்காக, சுயமரியாதைக் கருத்திற்காக உழைத்தவர்களை நினைவில் கொள்ளும் நாள் இந்த நாள். தன்னுடைய உறவுகளை, தன்னுடைய ஊரை, தான் பிறந்த ஜாதியை ,தான் பிறந்த மதத்தை எதிர்த்து தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையை ஏற்றுக் களமாடிய சுயமரியாதை இயக்க வீரர்களை,வீராங்கனைகளை நினைவில் கொள்ளும் நாளே சுயமரியாதைச் சுடரொளிகள் நாளாகும்.
சுயமரியாதைச் சுடரொளிகள் என்னும் அந்தப் பெயர் கொடுக்கும் பெருமிதம் அளப்பரியது.சுயமரியாதைச் சுடரொளிகளில் சிலர் பணக்காரர்கள். பெரும்பான்மையினர் ஏழைகள்,அனைத்து ஜாதிகளைச்சார்ந்தவர்களும் சுயமரியாதைச்சுடரொளிகளாக இருக்கிறார்கள்- பார்ப்பனைர்களைத் தவிர. சுயமரியாதைச் சுடரொளிகள் என்பவர்கள் மிக அரிதான தொண்டர்களைக் கொண்ட ஒரு படையில் அணிவகுத்தவர்கள், போராடியவர்கள், களத்திலே மடிந்தவர்கள் என்று பலவிதமான தோழர்களை நாம் நினைவில் கொள்ள முடியும்.
என்னுடைய கடந்த 40 ஆண்டுகாலத் திராவிடர் கழக இயக்க வரலாற்றில் நினைத்துப்பார்க்கிறேன்.எப்படி
மதுரை மாவட்டம் என்று பார்த்தால் அய்யானார்குளம் ம.பவுன்ராசா,கருப்பட்டி நல்.லோகநாதன், அய்யா பே.தேவசகாயம்,அம்மா அன்னத்தாயம்மாள் தேவசகாயம்,வழக்கறிஞர் கி.மகேந்திரன்,பொறியாளர் சி.மனோகரன்,திருப்பரங்குன்றம் அழகர்சாமி,ஹார்விபட்டி ஆசிரியர் இராமசாமி,முனிச்சாலை துரைராசு,செல்லூர் எல்.ஆர்.ராசன், கைவண்டிக்கருப்பு, வண்டியூர் சேது,மாகளிபட்டி பாலகிருஷ்ணன்,ஆசிரியர் சுப்பிரமணி,சொக்கலிங்க நகர் இராமமூர்த்தி,சக்கர நாற்காலியில் வரும் சின்னக்கண்மாய் முருகேசன், மீனாம்பாள்புரம் சீனி அய்யா,பீபிகுளம் நவநீதகிருட்டிணன்,எல்.ஐ.சி. மு.கனி,விராட்டிபத்து அய்யாச்சாமி எனப் பல சுயமரியாதைச்சுடரொளிகள் கண்ணுக்கு முன்னால் வருகின்றனர்.
சுயமரியாதைச் சுடரொளிகள் நாள் பற்றி நினைத்து இவர்களைப் பற்றி எல்லாம் யோசிக்கிறபோது கண்களில் கண்ணீர் வருகிறது.உணர்ச்சி மேலிடுகிறது.குடும்பத்தோடு இணைந்து இயக்கத்திற்காக உழைத்தவர் பலர்,குடும்பத்தை எதிர்த்து இயக்கத்திற்காக உழைத்தவர் சிலர் என அவர்களைப் பற்றிய சிந்தனைகள் மனதிற்குள் ஓடுகிறது.
சின்னாளபட்டி விடுதலை மணி என்று ஒரு தோழர் இருந்தார். பெரியகுளத்தில் நான் இருக்கும் பொழுது அவர் தன்னுடைய உழைப்பால் வெகு சொற்பமான வருமானத்தை ஈட்டிக்கொண்டு அதில் வாழ்ந்து வந்தார். ஆனால் விடுதலைப் பத்திரிகையைக் காண்கின்ற அனைவரிடத்திலும் விற்பார். அதில் எந்தவிதமான மனச் சஞ்சலமும்,தயக்கமும் இல்லாமல் தொடர்ச்சியான ஒரு முயற்சியைக் கண்டு வியந்திருக்கிறேன். இன்னும் கேட்டால் கொஞ்சம் படித்ததால் என்னைப் போன்றவர்கள் ஒதுங்கி இருக்கக்கூடிய வேலைகளில் சின்னாளப்பட்டி விடுதலை மணி போன்ற தோழர்கள் மிகப்பெரும் செயல்களை ஆற்றுவதைப் பார்க்கும் பொழுது வியப்பாக இருக்கும்.
மதுரை முனிச்சாலை பகுதியில் இருந்த அய்யா துரைராஜ் அவர்கள் நன்றாகப் பாடுவார். புதிய புதிய தோழர்களை இயக்கத்தில் சேர்ப்பதற்கு அப்படி ஒரு ஆர்வம் காட்டுவார். அவர் தன்னுடைய வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்ளவில்லை. தன்னுடைய முழு வாழ்க்கையையும் திராவிடர் கழகத்திற்காக அர்ப்பணித்த தோழர் அவர் முதலில் ஒரு கடை வைத்திருந்தார் அப்புறம் சின்னச் சின்ன வேலைகளை செய்து கொண்டு மிகப்பெரும் தொண்டினை செய்து கொண்டிருந்தார்.அதைப்போல மதுரை செல்லூர் பகுதியில் இருந்த அய்யா எல்.ஆர்.ராசன் அவர்கள்,தந்தை பெரியார்,அண்ணல் அம்பேத்கர்,அன்னை மணியம்மையார் போன்றவர்களின் படங்களை ஸ்டிக்கராகப் போட்டு விற்பார். நம் இயக்கப் புத்தகங்கள் சிலவற்றை விற்பார்.மதுரையில் எங்குத் திராவிடர் கழகக்கூட்டம் போட்டாலும் அய்யா எல்.ஆர்.இராசன் அவர்கள் இருப்பார்.வறுமையில் வாழ்ந்த தோழர் அவர்,ஆனால் கொள்கை வளமிக்கவர்.அவர் இருக்கும் காலத்தில்தான் மதுரை செல்லூர் பகுதியில் பல புதிய தோழர்களை உருவாக்கினார்.
மதுரை ஹார்விபட்டியில் வாழ்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் இராமசாமி அவர்கள் ,அப்படி ஒரு சிக்கனக்காரர்.இணையர் இல்லாத நிலையில் தானே சமைத்து,தானே துவைத்து வாழ்ந்து வந்தவர்.ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பணத்தை வங்கியில் சேமித்து வைத்திருந்தார்.பல ஆண்டுகளாக விடுதலையின் வாசகர்.நெருக்கடி நிலை காலத்தில் தான் ஆசிரியராகப் பணியாற்றியபோது தான் விடுதலையை எப்படிப் பெற்று வாசித்தேன் என்பதை எல்லாம் ஒரு கதை போல ஒரு முறை நேரில் சந்தித்தபோது கூறினார்.அய்யா ஆசிரியர் அவர்களின் தலைமையில் திருச்சி,தஞ்சை வல்லம் பகுதியில் நடைபெறும் கல்விப்பணிகளை,நம் இயக்க கல்வி நிறுவனங்களை எல்லாம் பல நாட்கள் சுற்றிப்பார்த்தார்.அய்யா ஆசிரியர் அவர்களின் கல்வி அறப்பணியைப் புரிந்துகொண்டு தனது பங்களிப்பாக ரூபாய் 32 இலட்சத்தை நன்கொடையாக அளித்தார்.அய்யா ஆசிரியர் அவர்கள் அவரின் பெயரால் ஒரு கல்விக் கட்டடத்தையே நிறுவியுள்ளார்கள்.வாழ்வியல் சிந்தனைகள் பகுதியில் அவரைப் பற்றி எழுதி மகிழ்ந்தார்கள்.
இன்றைய நாளில் பொது வாழ்க்கைக்கு வர நினைக்கின்ற ஒரு நபர் அரசியலில் ஈடுபட வேண்டும், தான் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்று பலவித கனவுகளோடு தான் பொது வாழ்க்கைக்கு வருகின்றார்கள். ஆனால் சுயமரியாதை இயக்கத் தொண்டர்களைப் பொறுத்த வரை தனக்கு என்ன கிடைக்க வேண்டும்?, கிடைக்கும் என்று எதிர்பார்த்து வந்தவர்கள் அல்ல மாறாக ஆண்டாண்டு காலமாக நம்மீது சுமத்தப்பட்ட சூத்திரப் பட்டம், பஞ்சமர் பட்டம் போக வேண்டும் என்பதற்காகத் தங்களைக் கருப்பு மெழுகுவர்த்திகளாக உருக்கி கொண்டவர்கள்.தங்களுக்கு ஏதும் கிடைக்காது என்றாலும் இந்தக் கொள்கை பரவவேண்டும்,சம நீதி எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்,பெண்களுக்கு உரிமை வேண்டும் என்பதற்காக வாழ்க்கைத் தீயில் தங்களை உருக்கிக்கொண்டவர்கள்,அதனால் எல்லோருக்கும் வெளிச்சம் கிடைப்பதற்கு அடிப்படையாய் அமைந்தவர்கள்.
தோழர்களே,சுயமரியாதைச் சுடரொளிகள் நாளில் நாம் நம் கண்களை மூடி ,இயக்கத்திற்காக வாழ்ந்து மறைந்த நம்மைச் சுற்றி இருந்த தோழர்களை நினைவில் கொள்வோம்.அவர்களின் எதிர் நீச்சல் வாழ்க்கையை மீண்டும் நம் மனதிற்குள் கொண்டு வருவோம்.எத்தனை இடர்பாடுகள் வந்தபோதும்,எத்தனை எதிர்ப்புகள் வந்தபோதும் அஞ்சாமல் கொள்கைப் போர் புரிந்த அந்தச் சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு உளமார்ந்த வீரவணக்கத்தைச் செலுத்துவோம்.அந்த வீரவணக்கத்தின் வழியாக இன்னும் வேகமாக,தீரமாகச் சுயமரியாதை இயக்கப்பணிகளை ஆற்றுவதற்கு உறுதி ஏற்றுக்கொள்வோம்.
வாழ்க அன்னை மணியம்மையார் !
வாழ்க சுயமரியாதைச்சுடரொளிகள்..!
நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் மார்ச் 16-31,2025