"இந்த நிகழ்ச்சி மிக அருமையாக நடந்து முடிந்தது.. ஒவ்வொன்றையும் தனித்தனியாக பேசலாம். மிக ஆழமான அவசியமான கருத்துக்களை அனைத்து பயிற்சியாளர்களும் நம்மோடு பகிர்ந்து கொண்டார்கள். நமது குழுவின் பங்களிப்பு அபரிமிதமாக இருந்தது. அன்பு நன்றிகள் பேரன்பும் அனைவருக்கும்
தோழர் அர்ஷா "வாருங்கள் படிப்போம்" வாட்சப் குழுவில்
" இன்று நடந்த நிகழ்வில் மிக ஆச்சரியகரமான நிகழ்ச்சிகள் நடந்தது...
ஒன்று என் வாழ்க்கையில் நான் இதுவரையிலும் 20 நிமிடங்களுக்கு மேல் மேடைகளில் பேசுவது அரிது.. சில வேலைகளில் அது அரை மணி நேரத்தை தாண்டி இருக்கும் அவ்வளவுதான்...
ஒன்றரை மணி நேரம் கடந்த பிறகு எனக்கு ஒரு சீட்டு வருகிறது ஆனால் நான் நினைத்தது நான் ஒரு 30 நிமிடத்தை கூட கடக்கவில்லை அதற்குள் ஏன் சீட்டு தருகிறார்கள் என்று முதல் விடயம் என் வாழ்வில் முதல் முறையாக நேரம் ஆகிவிட்டது என்று சீட்டு வந்தது இதுதான் முதல் முறை...
நான் உடனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை பார்த்து அரை மணி நேரம் முடிவதற்குள் ஏன் இப்படி
என்று கேட்க அவர்கள் சொன்னார்கள் ஒன்றரை மணி நேரமாக 1.1/2பேசிக் கொண்டிருக்கிறீர்கள் எதிர்பாராத விதமாக ஆசிரியர் வந்து விட்டார்.
அதாவது தோழர் கி. வீரமணி அவர்கள் வந்து விட்டதால் என்று காரணம் சொன்னார்கள்...
நாவல் குறித்து பேசும் போது ஏனோ எனக்கு அவ்வளவு தீவிரமான ஆவேசம் வருகிறது ஏனெனில் நான் 20 வருடங்களாக அதில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதால் இருக்கலாம்
குறைந்தது ஒரு 80 இளங்கலை மாணவர்கள்,
முனைவர் பட்டம் பெற்றவர்கள்,
முதுகலை முடித்தவர்கள்
வெற்றிகரமாக படித்து முடித்து தொழிலில் இருப்பவர்கள்
என விதவிதமான இளைஞர் பட்டாளம் நடுவயதினர் என பாகுபாடு அற்று இலக்கியம் படைப்பது குறித்து தீவிரம் காட்டுகிறார்கள் என்பது மிக மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கிறது
ஆனாலும் நான் மேடையில் ஏறி பேச ஆரம்பித்தபோது எனக்கு ஒரு பெரும் துயரம் என்னை வாட்டிக் கொண்டிருந்தது..
என் அன்புக்குரிய தோழர்
மனுஷ புத்திரன் அவர்கள் கவிதை குறித்தான தனது அற்புதமான உரையை நிகழ்த்தி விட்டு கிளம்பி சென்றுவிட் டார்... அதை நான் எதிர்பார்க்கவில்லை
அவர் மேடையில் இல்லை என்பது எனக்கு மிகப்பெரிய துயரமாக இருந்தது.. ஆனால் எப்போதையும் எப்போதையும் விட இன்று மிக நல்லதொரு
உரையாடலை நிகழ்த்தி இருக்கிறேன்.. என்பது மட்டும் நிச்சயம்..
நாவல் ஆசிரியர் கரன்கார்க்கி
மற்றும் பல பின்னோட்டங்கள் comments பகுதியில்...
5 comments:
தினமும் நாட்கள் கடந்து சென்றாலும் ஏதேனும் சில நாட்கள் நமக்கு பயனுள்ளாதாக அமைந்து கற்றலை கொடுத்துச் செல்லும். அப்படியான நாள் நேற்று.
வாருங்கள் படிப்போம் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர்கள் மன்றம் இணைந்து நடத்திய ஒரு நாள் பயிற்சிப் பட்டறை. எழுத்தில் உயரம் தொட்ட ஆளுமைகளின் நேரடிப் பயிற்சி. கவிஞர் மனுஷ், எழுத்தாளர் கரண் கார்க்கி, இயக்குனர் ISR செல்வக்குமார், எழுத்தாளர் ஒளிவண்ணன் ஆகியோர்களின் கருத்துகள் நம் அறிவு நிலையை சற்றுக் கூட்டியது. பயிற்சியில் கல்லூரி மாணவர்கள் அதிகம் பங்கேற்றது மகிழ்ச்சி. மதிய உணவு ஏற்பாடு கூடுதல் சிறப்பு.
மௌன ராகம் படத்தில் படம் முழுவதும் மோகன் உட்பட அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருபார்கள். ஆனால் சில காட்சிகளில் மட்டும் வந்து சென்ற கார்த்திக் நம்மை ஆட்கொண்டு விடுவார். அப்படித்தான் நிகழ்ச்சியின் நடுவே திடீரென இன்ப அதிர்வை கொடுத்தார் மிதிப்புமிகு ஆசிரியர் வீரமணி ஐயா. ஆசிரியர் என்று யார் அவருக்கு பெயர் சூட்டினார்கள் என்பது தெரியாது. கிடைத்த சிறிது நேரத்தில் அவ்வளவு செய்திகளை கற்றுத் தந்தார். தொன்னூற்றியொரு வயதிலும் அப்படியொரு புத்துணர்ச்சி கொண்ட மனிதராக வியப்பளித்தார்.
நண்பர்களோடு இணைந்து கற்பதும், உண்பதும், நட்புறவாடுவதும் நமை நலமாக வைத்திருக்கும். நேற்று மற்றுமொரு நலமான நாள்.
அண்ணன் லோ.குமரன் அவர்கள் முக நூலில்..
பயிற்சிப் பட்டறைகள் எப்போதுமே நம்மைப் பட்டை தீட்டிக்கொள்ள உதவுகிறது.
நேற்று சனிக்கிழமை வாருங்கள் படிப்போம் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைந்து நடத்திய வளரும் எழுத்தாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை பெரும் ஆதரவைப் பங்கேற்பாளர்களிடம் பெற்றது என்று சொன்னால் அது எளிய வார்த்தை.
காரணம் இந்த பயிற்சிப் பட்டறை பதிவு கட்டணம் பெற்று நடத்தப்பட்ட ஒன்று.
இரு நாட்களுக்கு முன்பே பதிவை நிறுத்த வேண்டிய கட்டாயத்திலிருந்தோம்.
வெள்ளிக்கிழமை அன்று பலர் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டபோது மறுக்க வேண்டிய சூழல் வந்தது.
இப்படி கூட நடக்குமா? இந்த காலத்தில். அதுவும் காசு கொடுத்து நாள் முழுக்க ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுவது நியாயம்? ( காரணம் புள்ளி விவரங்கள் இன்றைக்கு மனிதர்களுடைய சராசரி கவனம் 3லிருந்து 5 நிமிடங்களுக்கு மேல் இல்லை என்று கூறுகிறது).
இதன் வெற்றி பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் தொடர்ந்து இப்படி கருத்தரங்குகள் பயிற்சிப் பட்டறைகள் நடத்தி வரும் எங்களுக்கு இது வழக்கமான ஒன்றுதான்.
காரணம் எதையும் ஈடுபாட்டுடன் ஆங்கிலத்தில் சொல்வதாக இருந்தால் சீரியஸாக செய்தால் கைமேல் பலன் கிடைக்கும் என்பது நம் நம்பிக்கை.
ஒன்பது முப்பதுக்குத் தொடக்கம் என்றால் 9:30க்கு தொடக்கம்.
எல்லா அமர்வுகளும் நேரம் சரியாகக் கணித்துத் திட்டமிட்டு நடத்துதல், குறித்த நேரத்தில் உணவு வழங்குதல், கருத்தரங்கை நேரத்துக்கு முடித்தல் என அடிப்படையான விஷயங்களில் சமரசம் செய்து கொள்ளாமை. அதைப்போலவே சிறந்த கருத்துரையாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் முன்கூட்டியே தலைப்புகள் கொடுத்து அந்த தலைப்புகளின் நோக்கம் என்ன அதை நோக்கி எவ்வாறு அவர்கள் கொடுத்த நேரத்தில் பயணிக்க வேண்டும் என்பதையும் விவாதிக்கிறோம். தீர்மானிக்கிறோம்.
80க்கும் மேற்பட்ட பதிவு செய்த பங்கேற்பாளர்கள். கூடுதலாக 20 நண்பர்கள் உதவி செய்வதற்காக என 100 பேரை அந்த அரங்கம் காலையிலிருந்து மாலை வரை சுமந்து கொண்டு இருந்தது.
பிற்பகல் உணவு. இன்றைக்குக் காய்கறி உணவைக் காட்டிலும் மாமிச உணவை விரும்புபவர்கள் 98 சதவீதம் இருப்பதால், அதுவே வழங்கிட வேண்டும் என்று தீர்மானித்து அமைப்பாளர்கள் சுவையான உணவை வழங்கினார்கள்.
உணவு இடைவேளைக்குப் பிறகு முதல் பேச்சாளர் நான் என்பதைக் கருத்தில் கொண்டே சில சதியாளர்கள் சுவையான உணவு ஏற்பாடு செய்திருப்பார்களோ என்று கூட எனக்கு ஒரு சந்தேகம் வந்தது.
நல்ல வாய்ப்பாகக் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் நம்மை விட உற்சாகத்தோடு இருந்ததால் இதெல்லாம் ரொம்ப சாதாரணம் என்ற வகையில் சுறுசுறுப்பாக மதியத்தைக் கடந்தார்கள்.
வாருங்கள் படிப்போம் தோழர்கள் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தோழர்கள், பலர் தங்களுக்கு அளிக்கப்பட்ட பங்கினை சிறப்பாகச் செய்து நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்தனர்.
பங்கேற்பாளர்களில், பங்கு கொண்டோரில் பாதிப் பேர் மாணவர்கள்.
நிகழ்ச்சி நடைபெற்ற இடம் பெரியார் திடலில் அன்னை மணியம்மை அரங்கம்.
பிற்பகல் தன்னுடைய அலுவலக பணிகளை முடித்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பிய திராவிட கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் 'இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறதே அதுவும் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை' என்றவுடன் 'நேரமாகிறது, மருத்துவரிடம் செல்ல வேண்டும்: என்ற நினைவூட்டல்களை ஒரு புறம் வைத்துவிட்டு ஆர்வத்தோடு தன்னுடைய இளம் வயதில் சுறுசுறுப்பாக நடந்து அரங்கத்திற்கு வந்தார்.
அவரைக் கண்டவுடன் அங்கிருந்தோர் அனைவரும் எழுந்து கைதட்டி வரவேற்றனர் .
அப்போது நடந்து கொண்டிருந்த அமர்வு முடிந்தவுடன், ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டுச் செல்லுங்கள் என்று பணித்த போது, மிகச் சுருக்கமாக அதே நேரத்தில் ஆழமான கருத்துக்களை எழுத்தாளர்களுக்கு எடுத்துரைத்து விட்டுச் சென்றார்.
என்னுடைய தோழி சுமதியின் மகள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவர் ஆசிரியர் அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டதைத் தோழி சுமதி செய்தியாக அனுப்பியிருந்தார்.
(ஒரு தாத்தா பேசினாங்க....
"அவங்க ரொம்பவே இன்ஸ்பிரேஷனா பேசினது பிடிச்சிருந்தது...
எழுத்தை ஆள்பவர் தான் எழுத்தாளர்ன்னு அவரின் ஆரம்பமே சிறப்பா இருந்துச்சு...
அவரின் பேச்சு ரொம்ப பிடிச்சது....
(அப்புறம் வீடியோ காட்டினா இவஙக்தான் அவஙகனு... கி.வீரமணி அவர்கள்)
எனக்கு இதுதான் பிடித்ததே....")
என்னைப் பொருத்தவரை இத்தகைய நிகழ்வுகள் சென்னையோடு முடிந்து விடக்கூடாது. பல நகரங்களில் குறிப்பாக மதுரை திருச்சி கோயம்புத்தூர் திருநெல்வேலி போன்ற இடங்களில் நடத்த வேண்டும்
அண்ணன் டாக்டர் கோ.ஒளிவண்ணன் முகநூலில்
"கவிதை எழுதச் சொல்லித் தரேன் வாங்க"
"இதெல்லாம் கத்துகிட்டு வர்றதா? தானா வரணுங்க."
பெரும்பான்மை எண்ணமிது.
இருந்தாலும் அவர் தொடர்ந்தார். "டான்ஸ்ல ஆர்வம் இருக்கிறவங்களுக்கு டான்ஸ் கற்றுக் கொடுக்கிறாங்க பாட்டுல ஆர்வம் இருக்கிறவங்களுக்கு பாட்டு கற்றுக் கொடுக்கிறாங்க. ஆனால் கவிதை எழுதக் கத்துக்க முடியும் என்றால் மட்டும் ஏன் நம்ப மாட்டேங்கறீங்க?" என்றார். சொன்னவர் வேறு யாருமல்ல. 40 வருடங்களாக 12000 கவிதைகளுக்கு மேல் எழுதி நம் மனங்களில் இடம் பிடித்துள்ள கவிஞர் மனுஷ்ய புத்திரன்.
ஆர்வம் இருந்தால் உடனே எழுதிடலாம். ஆனால் அது கோரியோகிராப் செய்யப்படாத நடனம் போல், பயிற்சி இல்லாத குரலின் பாட்டு போலத்தான் இருக்கும். பரந்த வாசிப்பாலும் தொடர்ந்து எழுதியதால் மட்டுமே தனக்கான கவிதை நடை கைவசப்பட்டது என்றும் ஒரு தரமான கவிதையை எழுத என்னவெல்லாம் வாசிக்க வேண்டும் என பட்டியலிட்டு எப்படி பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்னும் நுணுக்கங்களைச் சொன்னார்.
அடுத்ததாக நாவலாசிரியர் கரன் கார்க்கி அவர்களின் உரை. சென்னை மாநகரையும் அதன் மக்களையும் பற்றி பல நாவல்களை எழுதி இருக்கும் இவர் எடுத்த எடுப்பிலேயே 'நம்ம எல்லாரும் ரசனை கெட்டவர்கள். அதனால்தான் இவ்வளவு அழகான சென்னையை இப்படி கெடுத்து வைத்திருக்கிறோம்' என்று ஆரம்பித்தார். மூன்று நதிகள் ஏழு குன்றுகள் ஒரு மகா கடல் சூழ்ந்த அழகிய நகரம் சென்னை என்று அவர் சிலாகித்தது சென்னையை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்று காட்டியது. சின்ன வயசுல எப்போதும் 'பராக்' பாப்பேங்க. அப்புறம் மெல்ல படிக்க ஆரம்பிச்சேன். ரஷ்ய இலக்கிய மொழிபெயர்ப்புகள் எனக்குள்ள பெரிய மாற்றத்தை ஏற்படுத்துச்சு. கதை அல்லது நாவல் எழுதனும்னா முதல்ல உங்களை நேசியுங்கள்; உங்களை சுற்றியுள்ள மனிதர்களை நேசியுங்கள்; உங்கள் தெருவை நேசியுங்கள்; உங்கள் நாட்டை நேசியுங்கள்; கதைகள் தானாக வரும் என்றார். பராக் பார்த்து பார்த்து அவருக்குள் நிரம்பி இருக்கும் கதைகள் அவரது உரையினூடே வந்து வந்து போனது அழகு. இவரும், வாசிப்பும் எழுத்தும் தான் உங்களுக்குள் இருக்கும் படைப்பாளியை நாளடைவில் காட்டிக் கொடுக்கும். 24 ஆயிரம் பக்கங்களுக்கு மேல் தான் கைப்பட எழுதி எழுதி பயிற்சி மேற்கொண்டு தான் இந்த நிலைக்கு வந்துள்ளதாகவும் தனது முதல் நாவலை அச்சுக்குக் கொண்டுவர 10 வருடங்கள் போராடியதையும் குறிப்பிட்டார். எந்த பொருளைப் பற்றி நாவல் எழுதினாலும் உங்கள் சொந்த கருத்தை எழுதுங்கள். அதே பொருளில் ஏற்கனவே எழுதப்பட்ட நாவல்களைப் படிப்பதைத் தவிர்ப்பது நல்லது என்றார்.
அடுத்ததாக எழுத்தாளர் பேச்சாளர் பதிப்பாளர் முனைவர் ஒளிவண்ணன் அவர்கள் ஒரு தரமான கட்டுரையை எப்படி வடிவமைப்பது எனக் கற்பித்தார். ஒரு கருத்தை மற்றவர்களுக்கு தெரிவித்தே ஆக வேண்டும் என்று நமக்குள் எழும் உந்துதலே எழுத்திற்கான முதல் படி என்றார். ஒரு பொருள் பற்றிய முழுமையான தகவல்களை மக்களுக்குச் சேர்க்க நினைக்கும் போதும் பொய்யான தகவல்களுக்கு எதிரான பதிலடியாக ஒரு கட்டுரை அமையும் போதும் அதை சரியான வடிவத்தில் சரியான தரவுகளுடன் மக்களுக்கு எப்படித் தரவேண்டும், குறைவான வார்த்தைகளில் சிறப்பான தெளிவான கட்டுரைகள் எழுதுவது எப்படி என்று பேசினார்.
இறுதியாக ஐ எஸ் ஆர் செல்வகுமார் அவர்கள் AI பற்றி விளக்கினார். அரங்கிலேயே அவரவர்களது கைபேசியில் செயற்கை நுண்ணறிவு செயலியைப் பதிவிறக்கம் செய்ய வைத்து பயிற்சி அளித்தார். எழுத்தாளர்கள், படித்து முடித்து பணியிலிருப்பவர்கள், மாணவர்கள் என பல நிலைகளில் இருக்கும் பங்கேற்பாளர் அனைவருக்கும் ஏற்றபடி வகுப்பை வடிவமைத்திருந்தார்.
கவிதை, கதை, கட்டுரை, ஏ அய் என
வளரும் எழுத்தாளர்களுக்காக சென்னை பெரியார் திடலில் வாருங்கள் படிப்போம் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்திய ஒரு நாள் பயிற்சிப்பட்டறை நேற்று (29.6.24) தேநீர் மதிய உணவுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
ஒருங்கிணைத்த தோழர் நேரு, ஒளிவண்ணன் பிரின்ஸ் என்னாரெசு அன்புமணி கவிதா அர்ஷா உமா மகேஸ்வரி ஆகியோருக்குப் பாராட்டுகளும் நன்றியும்.
எழுத்தாளர் -ரெஜினா சந்திரா... முக நூலில்
ஒரு அறையில் புத்தகங்களை சிதறி கிடப்பது போல் என் மனதில் எழுத்துகளை பற்றிய சிந்தனை சிதறி கிடந்தன. எப்படி எழுதுவது என்று தெரியாமல் அங்கு மிங்கும் சிதறி கிடைந்தவற்றை எப்பது அடுக்குகளாக அடுக்கினால், ஒவ்வொரு புத்தகம் எந்தெந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதைப் போல, சிறுகதைகள், நாவல்கள், கவிதை, கட்டுரை என ஒவ்வொரு பயிற்சியும் எடுக்கப்பட்டது. என் மனதில் சிதறி கிடந்த எல்லாமே இந்த பயிற்சியினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்து. நிகழ்வு சிறந்த முறையில் நடத்தப்பட்டது. இதை நடத்திய ஒளி வண்ணன் ஐயா, வர்ஷா மேடம், நேரு சார், மற்றும் வாருங்கள் படிப்போம் குழுவினர் அனைவருக்கும் என் நன்றிகள்.
மிகவும் சிறந்த முறையில் பயிற்சி இருந்தது நான் மிகவும் மகிழ்ந்து பயின்று கொண்டேன். ஒரு பள்ளி மாணவனை போல. ஒவ்வொரு விஷயங்களும் அழகாக சொல்லித் தரப்பட்டது. மிகவும் அருமையாக அனைவருக்கும் சொல்லிக் கொடுத்தது அருமை.
மதிய உணவு அருமை. நிகழ்ச்சி ஒரு கல்லூரியில் கட்டமைக்கப்பட்ட கருத்தாய்வு போல அமைந்து இருந்தது. மாணவர்களிடையே எந்த சத்தமும் இல்லை. பேசியவர்கள் அனைத்தும் தேவையற்ற வார்த்தைகளை வீசவில்லை. எது தேவையோ அதை அனைவருக்கும் எந்தவித சலனமும் இல்லாமல் கொடுத்தனர்கள் . நன்றி வாருங்கள் படிப்போம் குழுவிற்கு🙏💐👍
Dr.V.Mohanraj Ph.D
மிக அருமையான ஒத்துழைப்புடன் சிறப்பாக பயிற்சி பட்டறை நிகழ்வு நடந்து முடிந்தது. அண்ணன் ஒளிவண்ணன் அவர்களுடைய வழிகாட்டுதலுடன், பேராசிரியர் உமாமகேஸ்வரி அவர்களின் உதவியுடன்... அண்ணன் குமரன் அவர்கள் ...அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. பொருளாதார ரீதியாக உதவி ,பொருளாக உதவி ,உணவு பரிமாறும் இடத்தில் உடல் உழைப்பு உதவி என இந்தப் பயிற்சிப் பட்டறையின் ஒவ்வொரு இடத்திலும் அவரின் உதவிக்கரங்கள்... அதேபோல வாருங்கள் படிப்போம் குழுவினைச் சார்ந்த தோழர்கள் தோழியர்கள் உற்சாகமாய் கலந்து கொண்டு நமது நிகழ்வு என்னும் உணர்வோடு பட்டறையில் முழுமையாக கலந்து கொண்டதோடு கேள்விகள் விளக்கங்கள் என முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். மாணவ, மாணவிகளாகவே மாறிப்போனார்கள். பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தைச் சார்ந்த நமது உறுப்பினர் ம.கவிதா அவர்கள் பொருளாதார உதவியும் இணைப்பு உரையும் ஆற்றிச் சிறப்பித்தார்கள். தோழர் அர்ஷா அவர்கள் கடந்த இரண்டு மூன்று நாட்களாக இந்தப் பயிற்சி பட்டறையின் நினைவாகவே... ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயங்களுக்கும் சிரத்தை எடுத்து,அதிகாலையில் முதல் ஆளாய் வந்து சிறப்பாக நிகழ்வு நடக்க உதவி புரிந்தார்கள். நன்றி ,நன்றி..தோழர் அர்ஷா. தோழர் மீனா அவர்கள் நிறைய மாணவர்கள் கலந்து கொள்வதற்கு பொருளாதார உதவி செய்ததோடு தானும் குடும்பத்தோடு கலந்து கொண்டு உற்சாகப்படுத்தினார். நன்றி தோழமைகளே... இதைப்போல பெரியார் திடலில் இருக்கக்கூடிய திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் அருமைக்குரிய இளவல் பிரின்ஸ் என்.ஆர்.எஸ் பெரியார் அவர்கள் எழுத்தாளர் உடுமலை அவர்கள் என ஒரு பெரிய பட்டாளமே உதவி புரிந்தனர். பயிற்சியாளர்கள் கவிஞர் மனுஷிய புத்திரன் ,எழுத்தாளர் கரன் கார்க்கி, எழுத்தாளர் அண்ணன் ஒளிவண்ணன், எழுத்தாளர் ஐ எஸ் ஆர் செல்வகுமார் என ஒவ்வொருவரும் அசத்தினர். பயிற்சியை முழுமையாகக் கொடுத்தனர். 91 வயது இளைஞர், திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி வீரமணி அவர்கள் நேரில் வந்து வாழ்த்திப்பேசி உற்சாகப்படுத்தினார். பல கல்லூரிகளில் இருந்து வந்து கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள் அவ்வளவு ஈர்ப்பாக வகுப்புகளைக் கவனித்தனர். குறிப்புகளை எடுத்தனர். கேள்விகளைத் தொடுத்தனர். ஒட்டு மொத்தமாக இந்நிகழ்வில் அவர்கள் எல்லாம் மூழ்கி, பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டது எல்லையில்லா மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஒவ்வொரு கல்லூரியும் முத்துக்களாய்த் தேர்ந்தெடுத்து இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள அனுப்பி வைத்திருக்கிறார்கள் அவர்களுக்கு நம் நன்றி. வாழ்வில் எனக்கு மிக ஒரு முக்கியமான நாளாக மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்த நாளாக இந்த நாள் அமைந்தது. அனைவருக்கும் நன்றி. இந்த நிகழ்வைத் தொடர்ந்து முகநூலில் எழுதிக் கொண்டே இருக்கக்கூடிய அத்தனை ஆளுமைகளுக்கும் மனமார்ந்த நன்றி. வாருங்கள் படிப்போம் குழு மீண்டும் தனது முத்திரையை மிக அழுத்தமாக பதித்திருக்கிறது. மகிழ்ச்சி.
அன்புடன் வா.நேரு
Post a Comment