Saturday, 5 October 2013

நிகழ்வும் நினைப்பும் (5) : சாப்டூர் கல்வி அறக்கட்டளை

சாப்டூரில் இருக்கும் எனது உறவினர் பெ.நேரு, நேரு பெரியசாமி என்னும் பெயரில் பேஸ் புக்கில் இருக்கின்றார். சாப்டூரில் படித்து வெளியூரில் வேலைபார்க்கும், அல்லது சாப்டூரை சொந்த ஊராகக் கொண்டவர்கள் சிலரை  பேஸ் புக்கில் இணைத்து ஒரு குழுவை உருவாக்கி இருக்கின்றார். அனைத்து சாதியைச்சேர்ந்தவர்களையும் இணைத்து உருவாக்கி உள்ள ஒரு குழு.அந்தக் குழு. பாராட்டப்பட வேண்டிய பணி, இந்த இளைஞரின் பணி.  அண்ணன் ஜோதி மதிவாணன் அவர்கள் சாப்டூரில் படித்து வெளி நாட்டில் வேலை பார்க்கும் பொறியாளர். தன்னுடைய இளமைக் கால நினைவுகளை இக்குழுவில் நிறைவாகப்  பகிர்ந்து கொண்டார்.

                                     சில நாட்களுக்கு முன்னால், எனது பெரியம்மாவின் இறப்பிற்காக சொந்த ஊருக்குப்போயிருந்த பொழுது, என்னை பெரியசாமி நேரு சந்தித்தார். ஊரைப் பற்றி நிறையப்பேசிக்கொண்டிருந்தோம். கோவிலுக்கு நமது ஊரில் நிறையச்செலவழிக்கின்றார்கள். ஆனால் கல்வி பற்றிய விழிப்புணர்வு இருந்தாலும், கோவிலுக்கு நன்கொடை வாங்குவது போல யாரும் வாங்குவது இல்லை என்றார். தாராளமாக வாங்கலாம். கொடுப்பார்கள் உறுதியாக. ஆனால் சில விதிகளை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றேன்.

1. கணக்கு வழக்கு மிக வெளிப்படையாக இருக்க வேண்டும். யார் யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்பதும், அதனைப் பெற்ற பயனாளிகள் யார் என்பதும் உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிய வேண்டும். நன்கொடை கொடுப்பவர்கள் மட்டுமே இதன் உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள். இதற்கு முன் உதாரணமாக திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களின் பெயரால் , நன்கொடை பெற்று நடக்கும் கல்வி அறக்கொடை டிரஸ்ட். இதன் தலைவராக எனது ஆசிரியர் பேரா.கி.ஆழவார் அவர்கள் இருப்பதையும் அதன் வெளிப்படையான தன்மை பற்றியும் கூறினேன் . அதனைப் போல நாமும் செயல்படலாம். என்றேன்.

2. மாணவ் மாணவிகளுக்கு கொடுக்கும் உதவி படிப்பு கட்டணமாகவோ, விடுதிக் கட்டணமாகவோ இருக்கலாம். பெற்றோர்களிடம் கொடுப்பதைவிட செக்காக அந்த நிறுவனங்களுக்கு மாணவ், மாணவியர்கள் சார்பாக கொடுக்கலாம்.நமது ஊரைச்சார்ந்த அனைத்து ஜாதி, மதத்தினருக்கும்- பொருளாதாரம் இல்லாமல் கல்வியைத் தொடர முடியாத மாணவ், மாணவிகளுக்கு இந்த உதவியைச்செய்ய வேண்டும்.

                    இதனைப் போலவே சில விதிமுறைகளை உருவாக்கிக்கொண்டு, கொடுக்கும் பணம் கொடுக்கும் காரியத்திற்கு மட்டுமே பயன்படும், தவறுகள் இருக்காது எனத்தெரிந்தால், கொடுப்பவர்கள் நிறைய இருக்கின்றார்கள். அதுவும் சாப்டூரில் படித்தவர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றார்கள். நிறைய உயர் பதவிகளில் இருக்கின்றார்கள். நம்மால் வசூல் செய்ய முடியும்,உதவி செய்ய முடியும்  என்றேன்.
                      பெ. நேரு, அதனை செயல்படுத்தும் விதமாக "நமது சாப்டூர் அரசுமேல்நிலைப்பள்ளியில் பயின்ற செல்வி பி.ரஞ்சிதா என்ற மாணவி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 471 மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார். சக மாணவ-மாணவிகள் தன்னலம் கருதி தனியார் பள்ளிகளை நோக்கி சென்றபோதும், நமது பள்ளியிலேயே பயின்று முதல் மதிப்பெண்(969) பெற்று பள்ளியின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கும், பின்வரும் மாணவ-மாணவிகளுக்கு முன் மாதிரியாகவும் திகழ்ந்துள்ளார். தற்போது மதுரை மீனாட்சி கலைக்கல்லூரியில் BA(English) பயின்று வருகிறார். " என்று குறிப்பிட்டு அறக்கட்டளையின் முதல் பயனாளியை அடையாளப்படுத்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். எனது பங்களிப்பு இந்த அறக்கட்டளைக்கு பணத்தாலும் கரத்தாலும் உண்டு.எங்கள் ஊர் இளைஞர்களின் உருப்படியான முயற்சி. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். 10000 மைல் பயணம் முதல் அடியில் இருந்து தான் தொடங்குகின்றது. முதல் அடி எடுத்து வைத்திருக்கும் பெ.நேருவுக்கும் அவரது தோழர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள்.

Wednesday, 2 October 2013

நிகழ்வும் நினைப்பும் (4)-ப்ரண்டலைன் பத்திரிக்கையும் மூட நம்பிக்கை தொழிற்சாலைகள் கட்டுரையும் :...

நிகழ்வும் நினைப்பும் (4)- ப்ரண்டலைன் பத்திரிக்கையும் மூட நம்பிக்கை தொழிற்சாலைகள் கட்டுரையும் :

                                திராவிடர் கழகத்தின் சொற்பொழிவாளர், வழக்கறிஞர் பூவை புலிகேசி அவர்கள் இன்று (02,10.2013) காலை அலைபேசியில் அழைத்து, அய்யா ப்ரண்டலைன் பத்திரிக்கை(அக்டோடபர் 4) வாங்கிப் படித்துப்பாருங்கள் என்றார். தி ஹிந்து பத்திரிக்கை குழுமத்தில் இருந்து வரும் மாதம் இருமுறை பத்திரிக்கை, தலைப்பே 'Superstition Industry '- மூட நம்பிக்கை தொழிற்சாலை என்று தலைப்பிட்டு வந்திருந்தது. வாங்கிப் படித்துப்பார்த்தால் , ஆச்சரியம். நடமாடும் கடவுள்கள் எனப்படும் சாமியார்களைப் பற்றிய விரிவான கட்டுரைகள், ஆசிரமம் பாபு என்றழைக்கப்படும், 16 வய்துப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக சிறையில் இருக்கும் ஆசிரமம் பாபு, அந்தக் கிரிமனலோடு மேடைகளைப் பகிர்ந்து கொண்ட அதவானி, உமாபாரதி படங்கள், தங்களைத் தாங்களே கடவுள் என்று அழைத்துக்கொள்ளும் சாமியார்கள்,அவர்களுக்குத் துணை நிற்கும் அரசு இயந்திரங்கள், அரசு, அரசியல் தலைவர்கள், அரசியல் தரகர்கள், கார்பரேட் நிறுவனங்கள் .இவர்களெல்லாம் இணைந்து எப்படி , பக்தி என்ற பெயரில் சாதாரண மனிதர்களை சுரண்டுகிறார்கள் என்பதனை விரிவான கட்டுரைகளாக கொடுத்துள்ளார்கள். திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் வீரமணி அவர்கள் ஊடகங்கள் எப்படியெல்லாம் மூட நம்பிக்கைகளைப்  பரப்புவதற்கு துணை போகின்றார்கள் என்பதனையும் அவர்களின் போக்கு மாறவேண்டும் என்பதனையும் அவரது பேட்டியில் கொடுத்திருக்கின்றார். பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் அவர்கள் பகுத்தறிவாளர் கழக, திராவிடர் கழகத்தின் பணிகளைப் பற்றியும், அறிவியலுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான முரண்பாடுகள் பற்றியும், மூட நம்பிக்கை ஒழிப்பினை எந்தெந்த முறையில் எல்லாம் , எந்தெந்த் வடிவங்களில் எல்லாம் எடுத்துச்சென்று கொண்டிருக்கின்றோம் என்பதனைக் குறிப்பிட்டிருக்கின்றார்.அகில இந்திய நாத்திகக்கூட்டமைப்பின் தலைவர் பேரா.நரேந்திர நாயக், ஆந்திரா நாத்திக மையத்தின் தலைவர் டாக்டர் விஜயம், மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பாடுபட்டதிற்காக கொல்லப்பட்ட நரேந்திர தபோல்கரின் பேரன் சுகாத் தபோல்கர், கேராளவைச்சேர்ந்த சானல் இடமருகு- இவர்களிடம் எல்லாம் பேட்டி கண்டு வெளியிட்டிருக்கின்றார்கள். 'திராவிட நிலத்தில்' எனத் தலைப்பிட்டு   தந்தை பெரியாரின் பணியையும் இன்றைய திராவிடர் கழகத்தின் பணியைப் பற்றியும் நன்றாகவே விரிவாகவே வெளியிட்டிருக்கின்றார்கள். பாராட்டப்பட வேண்டிய கட்டுரைகள். ஏறத்தாழ 21 பக்கங்களை மூட நம்பிக்கை ஒழிப்பு சம்பந்தமாக வெளியிட்டிருக்கின்றார்கள். உளமாற பாராட்டுகிறோம்..மனதார பாரட்டுகின்றோம். ஒவ்வொரு இதழுக்கும் சில பக்கங்களை இப்படி ஒவ்வொரு பத்திரிக்கையும் ஒதுக்கினால் ,நிச்சயமாக 'நாடு ஒளிரும்'..   கட்டுரை மட்டுமல்ல, கட்டுரைக்கு போடப்பட்டிருக்கும் சில கமெண்ட்ஸ் நன்றாக உள்ளது.
http://www.frontline.in/cover-story/in-the-name-of-faith/article5137396.ece
http://www.frontline.in/cover-story/asarams-empire/article5137420.ece
http://www.frontline.in/cover-story/thriving-business/article5137608.ece
சில பேர் இந்தக் கட்டுரைகளுக்காக ப்ரண்ட்லைன பத்திரிக்கையை குற்றமும் சொல்கின்றார்கள். படித்துப்பாருங்கள்.

Monday, 30 September 2013

அணமையில் படித்த புத்தகம் : நீ எழுத மறுக்கும் எனதழகு- இளம்பிறை கவிதைகள்

அணமையில் படித்த புத்தகம் : நீ எழுத மறுக்கும் எனதழகு- இளம்பிறை கவிதைகள்
நூலின் ஆசிரியர்             கவிஞர் இளம்பிறை
வெளியீடு                   பொன்னி, சென்னை-91
முதற்பதிப்பு                : 2007
மொத்த பக்கங்கள்          : 272  விலை ரூ 140

                                          இளம்பிறையின் கவிதைத் தொகுப்புகளான இளவேனில் பாடல்கள்(1990),மெளனக்கூடு(1993), நிசப்தம்(1998), முதல் மனுசி(2003),பிறகொரு நாள்(2005) ,2005க்குப்பின் பல்வேறு இதழ்களில் பிரசுரமான புதிய கவிதைகள் என இளம்பிறையின் 2007-வரையிலான முழுப்படைப்புகளும் தொகுக்குப்பட்டுள்ள நூல்.

                                       இளம்பிறையின்  இயற்பெயர் பஞ்சவர்ணம்.சென்னையில் ஆசிரியராக வேலை பார்க்கின்றார். பெற்ற விருதுகள் என முதல்பக்கத்திலேயே அவ்ரைப் பற்றிய தகவல்கள். கவிதைகளுக்கு முன்பாக எனத் தன் கருத்துக்களை பக்கம் 7 முதல் 10வரை இளம்பிறை கொடுத்துள்ளார். இயல்பாக இருந்த ஆர்வம், வயல் வேலைக்குச்சென்றபோது ,'நான் அதிகமான பாடங்களை அங்குதான் கற்றுக்கொண்டேன் ' எனக்கூறும் இளம்பிறையின் கவிதைகளில் கிராமத்து மண்ணின் மணம் கமழ்கின்றது. சிந்தனையாளர் மன்றம் என்ற அமைப்பால் தனக்குக்கிடைத்த வாய்ப்பு , அதனைத் தொடர்ந்த ஆர்வம், உதவியவர்கள், நன்றிக்குரியவர்கள் என ஒரு  பட்டியலைக் கொடுத்துள்ளார்.

                                    மொத்தம் 169 கவிதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. 'மழைத்துளிகளோடு
என் கண்ணீர்த் துளிகளும்
வயலில் விழுந்ததை அறிந்ததுபோல் ' என அறிமுகப்படுத்தும் தனது அப்பாவிற்கும் 'உன் வயதையொத்த உன் நண்பர்களுக்கும்/இந்தப் புத்தகம் " எனக் காணிக்கையாக்குகின்றார். நான் பல கூட்டங்களில் கீற்று இணையதளத்தில் வந்த இளம்பிறையின் பேட்டியை குறிப்பிடுவதுண்டு. 'படிக்கப்போவியா? படிக்கப்போவியா ? ' என விளக்குமாத்தோடு இளம்பிறையின் அம்மா ,இளம்பிறையை விரட்டியதை....    'அம்மா' என்னும் இளம்பிறையின் கவிதை
                                                'வயது பத்தாகுமுன்னே
                                                வயலுக் கிழுத்தவளே...
                                                வாடி வயலுக்கென
                                                வம்பு செஞ்ச எந்தாயே ' என எந்தவிதப் பூச்சும் இல்லாமல் அம்மா செய்த வம்பை இயல்பாகப் பாடிவிட்டு ' காலுக்குச் செருப்பில்லாமே நான்
                      கஷ்டப்பட்டு நடக்குறேன்னு
                      மொட்டக்காலோடு நீ
                      முள்ளு வெட்டி வித்துப்புட்டு
                      மட்ட விலையில் ஜோடி
                      செருப்பு வாங்கித் தந்தவளே...' என்று அம்மாவின் தியாகத்தைப் பாடிவிட்டு
                       'நான் எங்க திரிஞ்சாலும் என்
                       இதயத்துலே வாழுகிற
                        உனக்குத்தான் மொதப்பாட்டு
                        என் உயிர் பாடும் தாலாட்டு ' எனத் தனக்கு தாலாட்டுப்பாடாத தாயை நினைவுகூறும் 'அம்மா' கவிதை வாசிக்கும் எவரையும் உருக்கும்.  

                           தாத்தாவின் பிணத்தருகே அம்மா அழுக, 'வெற்று ஊளையிட்டேன் நான் '  என எழுதும் இளம்பிறை எது எதற்காக அழுதேன் எனப் பட்டியலிடும் 'அழுத நினைவுகள் ' கவிதை கனமான கவிதை.
 'என் கூடு
 கொடூரமான
மெளனங்களால் ஆனது ' என்று பறை சாற்றும் 'மெளனக்கூடு ' கவிதையும், அதன் தொடர்பான சில கவிதைகளும் தலைச்சும்மாட்டை கொஞ்ச நேரம் இறக்கிவைத்து இளைப்பாறி மறுபடியும் சுமப்பதைப் போல , குடும்பத்தை சுமத்தலையும் அதனால் தவித்தலையும் மிக நுட்பமாக உணர்த்துகின்றன.
நீங்கள்
உங்களைத் தோண்டிச்செல்கையில்
அடியாழத்தில்
ஒரு மூலையில் கேட்கும்
அழுகுரலே...
உண்மைக்குரல்
கேட்டதுண்டா எப்போதாவது ?
என்னும் 'உண்மை' கவிதை(பக்கம் 44)யின் கருத்தைப் போலவே அடியாழத்தில் கேட்கும் அழுகுரலாய் பல கவிதைகள் இத்தொகுப்பில் .  'அறுவடைக்காலம்' என்னும் கவிதை என் தங்கைகளும், அக்காக்களும் கிராமங்களில், குடிகார கணவனைக் கட்டிக்கொண்டு, அடியும் மிதியுமாய் ஓடும் வாழ்க்கை அவலத்தை அப்படியே எழுத்தில் வடித்த கவிதை.
இந்தத் கவிதைப் புத்தகத்தின் தலைப்பாய் அமைந்திருக்கும் 'நீ எழுத மறுக்கும் எனதழகு' -உழைக்கும் மக்களை அல்ட்சியப்படுத்தும் ஊடகங்களுக்கும் , காமிராக்களும் நல்ல் இடி.

              கவிதைகள் கண்ணாடி(பக்கம் 75) , இப்பவும் என் கிராமத்திலே(95), தொட்டிச்செடி(99), அதுவரை(104) ,வி.ஐ.பி.பகுதி(171),விலகிச்செல்லும் திருடர்களும் மின்னும் நட்சத்திரங்களும் (191)போன்ற கவிதைகளைப் பற்றி நிறைய எழுதலாம். 'இப்பவும் என் கிராமத்திலே' என்னும் கவிதை இன்ன்மும் புரையோடிப்போய்க்கிடக்கும் ஜாதியத்தை,மத்த்தை  வரிகளால் வறுத்தெடுக்கிறது

' நேத்து பொறந்த பய
  பேரு சொல்லிக் கூப்புடுறான்
 ஆளூ 'நடவாளு'னு
அப்பங்காரன் சொல்லித்தாரான்.

வேல கிடைச்சாலும்
வித்த பல கத்தாலும்
வாடகக்கி வீடு கேட்டா
சாதி கேட்டு இல்லேங்கிறான்

களத்த செதுக்குவோம்
காவடியுந் தூக்குவோம்
அம்மன குளிப்பாட்ட
ஆழ்கெண்றும் வெட்டுவோம்
அபிசேவம் பண்ணயில
வெளியிலதான் நிக்கிறோம்.

ஆண்ட நொழஞ்ச்சாதான்
கற்பூரம் காட்டுறாங்க
அவருக்கு மட்டுதாங்க
பிரசாதம் நீட்டுறாங்க
விபூதிய அள்ளிப்போட்டு
'வெலகு ...வெலகு'ங்கிறார்
கேவலத்த தாங்கிக்கிட்டு
கோவிலுக்குப் போயி வாரோம் .

கல்லு செலய வச்சி
காசு போட உண்டி வச்சு
எல்லாமே சாமிக்கென
சொல்லிப் பொழச்சிக்கிட்டு
அநியாயந்தான் பண்ணுறாங்க.

பட்டுச்சேலை கட்டுக்கிட்டு
பவளத்தோடு போட்டுக்கிட்டு
நெய்யும் பருப்புமா
நெதம் திங்கும் பொம்பளங்க
உடம்பு எளக்கனும்னு-கோயிலுக்கு
ஓயாம வந்து போறா...
அய்யருக்கும் ....சாமிக்கும்
அவளைப்புடிக்காம
கட்டிப்ப்ழஞ்சோறும்
சுட்ட மெளகாயும்
வேலைத்தளத்துலேயே
வெரசாக சாப்பிடுற
எங்களையா பிடிக்கும் ?
வெளியில நின்னுதாங்க- சாமிகிட்ட
வேதனைய சொல்லி வாரோம்.

புள்ளகள கூட்டிப்போயி
பள்ளிக்கூடம் சேக்கயில
எங்களையும் 'இந்து'  னுதான்
எழுதிக்கிறான் அவனாவே....
எதுக்குப்பின்னே ஏமாத்துறான் ? (பக்கம் 96)


பெயர் சொல்லி, சிலரைப் பற்றிய கவிதைகளும் இத்தொகுப்பில்  உள்ளது. திராவிடர் கழகத்தின் பிரச்சாரச்செயலாளர் தோழியர் அருள்மொழி பற்றி ஒரு கவிதை உள்ளது .

நட்பொளிரும் கண்களுடன்
நிழல்களிருந்து
சேகரித்து வந்த நினைவுகளைக்
கலந்து கொண்டிருக்கிறாள் காற்றில்
தனக்குக் கறுத்த நிறம் வாய்க்கவில்லையே !-என்று
மெய்யாகக் கவலைப்பட்ட ஒருத்தியை
அப்போதுதான் நேரில் பார்த்தேன்
எள்ளலுடன் குறைசுட்டிப் பேசும்
அவளின் பேச்சுமொழி புன்சிரிப்பில்
ப்ரியமுடன் கலக்கிறேன்.....
வாய்ப்பு கிட்டும் போதெல்லாம்
பார்வையாளர் வரிசையிருந்து(திராவிடர் கழக அருள்மொழி அவர்களுக்கு ) பக்கம் 219/
இதைப்போலவே இளங்கோ என்னும் பெயர் சுட்டி அவரைப்பற்றி ஒரு கவிதை எழுதியுள்ளார்.

                  இளம்பிறையின் கவிதைகளில் அழகியல் உள்ளது.உவமை உள்ளது. கவிதைக்கான இலக்கணம் அனைத்தும் உள்ளதோடு உண்மை நிலை உணர்த்தும் கவிதைகளாக இருப்பதுதான் இந்தத் தொகுப்பின் வெற்றி. பத்து முறை படித்தால்தான் புரியும் என் கவிதை என்னும் பாசாங்குத்தனம் இல்லை. உள்ளது உள்ளபடி வெகு இயல்பாக கிராமத்தை சொல்லிச்செல்லும் இக்கவிதைத் தொகுப்பு, கிராமத்தில் பரவிக்கிடக்கும் ஜாதி நச்சையும் சொல்லிச்செல்லத் தவறவில்லை. பக்கம் 225 முதல் 270 வரை இளம்பிறை கவிதைகளைப் பற்றிய விமர்சனங்களும் மதிப்பீடுகளும் என்னும் பகுதி உள்ளது,கவிஞர் கந்தர்வன், எழுத்தாளர்கள்  சுஜாதா,வெங்கட்சுவாமி நாதன்,கவிஞர்கள் அறிவுமதி,ராஜ மார்த்தாண்டன்,ஞானக்கூத்தன் ,இந்திரன எனப்பலரும் எழுதிய இளம்பிறையின் கவிதைகள் பற்றிய மதிப்புரைகள் மிக நன்றாக உள்ளன. படித்துப்பாருங்கள்.                                             

Saturday, 28 September 2013

நிகழ்வும் நினைப்பும்(3)

நேற்று(27.9.13) வந்த ஒரு மின்னஞ்சல் மூலமாக journeyfree.org என்னும் வலைத்தளத்தைப் பார்த்தேன், படித்தேன். டாக்டர் மர்லின் வினெல் என்பவரின் வ்லைத்தளம் அது. மத நம்பிக்கைகளிலிருந்து அல்லது மதங்களிலிருந்து விடுபடுவது எப்படி என்பதில் சிறப்பு சிந்தனையாளர் அவர் . கடந்த 20 ஆண்டுகளாக மனித வள மேம்பாட்டுத்துறையில் சிறப்பாகப் பணியாற்றும் அவர் மனித வள் மேம்பாட்டில் , அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் டாக்டரேட் பட்ட்ம் பெற்றிருக்கின்றார். பிறப்பால் கிறித்துவரான அவர் இளம் வய்தில் பைபிள் படிப்பிற்கு மற்றவர்களைப்போலவே அனுப்பப்பட்டிருக்கின்றார், படித்திருக்கின்றார். பிரச்சனைகள் வந்தபோது, கடவுளிடத்தில் ஒப்படைத்து விடு,பைபிளை இன்னும் நன்றாகப் படி என்ற சொன்னதால் மீண்டும் மீண்டும் பைபிளைப் படித்திருக்கின்றார்,.பிரச்சனைகள் தீரவில்லை.  பின்னர் பிரச்சனைகளின் தீர்வு கடவுள் நம்பிக்கையில்  இல்லை, மாறாக கடவுள் நம்பிக்கையால்தான், மத நம்பிக்கையால்தான் தனக்குப் பிரச்சனை என்று உணர்ந்திருக்கின்றார்.மெல்ல மெல்ல மத, கடவுள் நம்பிக்கையிலிருந்து வெளி வந்து நாத்திகராக மாறி, மனித நேயத்திற்கு , மனிதரை மனிதர் நேசிப்பதற்கு கடவுள் பற்றுத தடை என்று உணர்கின்றார். .தனது கடந்த கால கடவுள் நம்பிக்கை  ஒரு மன நோய் என்று உணர்கின்றார்.  

                                                           பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான ஒரு பெண் , அதற்குப்பின் மனம் சார்ந்த தொல்லைகளுக்கு உள்ளாவதற்கு Rape Trauma Syndrome என்று பெயர் .பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணுக்கு ஏற்படும் மன அழுத்தம் அதீதக் கொடுமையானது.  இந்தந்தொடர் எதற்கு பயன்படுகிறது என்றால் பாதிக்கப்பட்ட பெண் அந்த சூழலிருந்து மாறி, மறந்து வாழ்வதற்கான ஒரு சிகிச்சை முறை .. பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணின் உடல்,செயல்,வித்தியாசமான நடவடிக்கைகளைக் கவனித்து அதிலிருந்து அவர்களை மாற்றுவது, அவர்களுக்கு சிகிச்சை அளித்துக் காப்பாற்றுவது. அத்ற்குப் பெயர்  Rape Trauma Syndrome.

                                        டாக்டர் மர்லின் வினெல் , இதனைப் போலவே மத நம்பிக்கையால் ஒரு ஆண் அல்லது ஒரு  பெண் உடல், செயல், வித்தியாசமான நடவடிக்கைகளால் மிகப்பெரிய மன அழுத்ததிற்கு உள்ளாகின்றார்கள். அறிவியல் சொல்லும் உண்மைக்கு மாறான மதங்களை, அதன் சடங்குகளை மனதார ஒத்துக்கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் மத நம்பிக்கையிலிருந்து விடுபடவும் முடியவில்லை . அப்படிப்பட்டவர்கள் மதம் என்னும் நோயிலிருந்து, செயலிருந்து விடுபட்டு, மன அழுத்தம் இல்லாமல் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்காக பாடுப்டுகின்றார். மத நம்பிக்கையால் மனமுடைந்து , திகைத்து ,உண்மையா பொய்யா என குழ்ம்புகிறவர்களின் நிலைக்கு Religious Trauma Syndrome(RTS)  எனப் பெயர் கொடுத்திருக்கின்றார். அதிலிருந்து விடுபட பயிற்சியும் , சிகிச்சையும் அளிக்கின்றார். இன்னும் இந்த வலைத்தளத்தில் நிறைய இருக்கிறது. நேரமும், இணையமும் இருப்பவர்கள் படித்து இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதலாம்.

Thursday, 26 September 2013

நிக்ழ்வும் நினைப்பும் (2)

நிக்ழ்வும் நினைப்பும் (2)                             
நேற்று(25.9.13) காலை 5.30 மணிக்கு நடைப்பயிற்சி நாங்கள் நடக்கும்   பூங்காவில். பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் அதீத ஒலியில் வடமொழி பக்திப்  பாடலை  ஒலிக்க விட்டுக்கொண்டிருந்தார். என்னைப் போன்ற நாத்திகர்கள், கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள் என அனைவரும் காலையில் நடைப்பயிற்சி எடுக்கும் நேரம்,இடம். அவருக்கு பக்திப்பாடல்  பிடிக்கிறது என்றால் , வீட்டு அளவில் வைத்துக் கேட்கலாம். மைக் செட் போட்டுப்பாடுவது போல அவ்வளவு சத்தம். காலையிலேயே எரிச்சல் வரவைப்பதாக இருந்தது.பக்திப் பாடல் என்றாலே அடுத்தவர்களைப் பற்றிக் கவலை இல்லை. ஏய்.பக்திமானா இருங்கப்பா, அடுத்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் என்று கத்தவேண்டும் போல் இருந்தது. மதுரையில் கோயில் விழா என்ற பெயரில் மைக் போட்டு , பெரிய பெரிய குழாயை வைத்து ,பெரிய அளவில் ,சத்தத்தில் ஒலி பரப்புகின்றார்கள். திருவிழாக்கள் இல்லாத மாதம் இல்லை. பிள்ளைகள் படிக்கின்றார்களே,ப்ரீட்சை நேரமே, ஒருவருக்கும் கவலை இல்லை. பக்தி வந்தால் புத்தி போய்விடும என்றார் பெரியார். புத்தி மட்டுமல்ல, பொது ஒழுக்கம், பொது விதிகள் எல்லாம் போய் விடுகின்றது. எவ்வளவு பெரிய களவாணிப்பயலும், அய்யப்பனுக்கு மாலை போட்டா சாமி ஆகி விடுகிறான் அல்லவா..பக்தி என்ற பெயரால் எவரும் எதுவும் செய்யலாம். எவனும் கேள்வி கேட்கக்கூடாது . நல்ல நாடடா,இந்த நாடு.   புரட்சிக் கவிஞரின் தமிழியக்கம் - சிறிய அளவிலான புத்தகம்(பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத்தலைவர்- புதுவை மு.ந.நடராசன் அவர்கள் அன்பளிப்பாக அளித்தது ) கையில் இருந்தது. அதில்

"சொற்கோவின் நற்போற்றித் திருஅகவல் செந்தமிழில் இருக்கும் போது
கற்கோயில் உட்புறத்தில் கால்வைத்த தெவ்வாறு சகத்ர நாமம்!
தெற்கோதும் தேவாரம் திருவாய்நன் மொழியான தேனி ருக்கச்
செக்காடும் இரைச்சலென வேதபா ராயணமேன் திருக்கோ யில்பால்?"  என்றும்

காற்செருப்பைப் பிறனொருவன் கழிவிடத்தில் தள்ளிடினும் பொறாத உள்ளம்,
மேற்படுத்தும் எவற்றினுக்கும் மேற்பட்ட தன்மொழியைத் தமிழைத் தீயோர்
போற்றுவதற் குரியதொரு பொதுவினின்று நீக்கிவைத்தால் பொறுப்ப துண்டோ?
வேற்றுவரின் வடமொழியை வேரறுப்பீர் கோயிலிலே மேவி டாமே. " என்றும் இருந்தது. வேற்றுவரின் வடமொழி பக்திப்பாடல் கோயிலுக்குள் மட்டும் இருந்து அல்ல,   தமிழர்களின் வீட்டுக்குள்ளிருந்தும் அதிகாலையில் அதீத சத்தத்தில் ஒலித்து உயிரை எடுக்கிறது.

Wednesday, 25 September 2013

நிகழ்வும் நினைப்பும் : ...

நிகழ்வும் நினைப்பும் :

நேற்று (24.9.13) மாலை மதுரை பிரேம் நிவாஸ் ஹோட்டலில் ரோட்டரி கிளப்-கிழக்கு கிளையின் சார்பாக சிறப்புக்கூட்டம். பி,எஸ்.என்.எல்.மதுரையில் பணியாற்றும் ராமச்சந்திரன் அதன் தலைவர். 'புத்தகங்களும் வாழ்க்கையும் ' என்னும் தலைப்பில்  என்னை  உரையாற்ற அழைத்திருந்தார்கள். . புத்தகங்கள் -என்னை ஈர்த்த தமிழ் மற்றும் ஆங்கிலப்புத்தகங்கள் சிலவற்றைப் பற்றியும் அவை சொல்லும் செய்தி பற்றியும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது மகிழ்ச்சியாக இருந்தது. எப்பொழுதுமே , எங்கேயும் புத்தகஙகளைப் பற்றிப்பேசுவது என்றால் உடனே தயார் என்பது போல மனநிலை இருக்கிறது .பேசிட முடிகின்றது.

                         பேசி முடித்தவுடன் கேள்வி நேரம் இருந்தது. பேராசிரியர் வில்பர்ட், நூலகத்தைப் பற்றியும், வாசிப்பை நேசிப்பதைப் பற்றியும் பேசினீர்கள். நன்றாக் இருந்தது. ஆனால் கல்லூரிகளில் வைக்கப்படும் நூலகம் , வெறும் பாடம் சார்ந்து மட்டும் இருக்க வேண்டுமா? இல்லை பொது நூலகம் போல அனைத்தும் இருக்கவேண்டுமா ? எனக்கேட்டார். வெறும் பாடம் சார்ந்து இருப்பது என்பது எனக்கு உடன்பாடு அல்ல. நல்ல கவிதைகள், சிறுகதை, நாவல், க்ட்டுரை என்று அனைத்தும் இருக்க வேண்டும் என்று பதில் அளித்தேன்.

                        இப்போது இருக்கும் பாடத்திட்டத்தில் ,பிள்ளைகள் மற்ற புத்தகங்களைப் படிப்பதற்கு நேரமிருக்கிறதா, ஆர்வம் இருந்தாலும் என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்த வீட்டுப்பாடங்களைச்செய்வது என்பதனை எவர் கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை. தண்டிக்கப்படவேண்டிய ஆள். 'அவனை அழைத்து வந்து,ஆடடா ஆடு என்று ஆடவிட்டுப்பார்த்திருப்பேன் ; என்று கண்ணதாசன் சொன்னது போல, வீட்டுப்பாடம் செய்வதை முதலில் புகுத்திய ஆளைக் கூப்பிட்டு வந்து வீட்டுப்பாடம் செய்ய வைக்கவேண்டும். கொடுமையோ,கொடுமை-வீட்டுப்பாடம் என்ற பெயரில் குழ்ந்தைகளுக்கு. அதுவும் 10,12-ஆம் வகுப்பு என்றால் அத்தனை பாடங்களிலும் அம்புட்டு வீட்டுப்பாடம். பிள்ளைகள் தூங்கணுமா? வேண்டாமா? ஊகூம் எந்தக் கவலையும் இல்லை ஆசிரியர்களுக்கு. 50 பக்கம், 60 பக்கம் எழுதி வா, ஒவ்வொரு பாடத்திலும். என்பதும் , வீட்டுப்பாடம் செய்து வரவில்லை எனில் வகுப்பை விட்டு வெளியில் போ, முட்டிக்கால் போடு என்று முட்டிக்கால் போடவைப்பதும் ....ஆசிரியர்கள் அடிப்பதில்லை, ஆனால் மறைமுகமான வன்முறை, வீட்டுப்பாடம் என்ற பெயரில் இருக்கிறது. ஆனால் இத்தனையையும் மீறி, பிள்ளைகளை மற்ற நூல்களைப் படிக்கவைக்க வேண்டும். நூல்களின் பெருமையை அறியச்செய்ய வேண்டும்.

                  நூலகத்தில்  நூல்களைத் தேடி,தேடி எடுத்து வர வேண்டியிருக்கிறது. சில நேரங்களில் ஒரு நாள் முழுவதும் தேடினாலும் நாம் தேடும் நூல் கிடைப்பதில்லை(மதுரை சிம்மக்கல் நூலகம்).. ஏன் நூலகத்திலேயே ஒருவர் என்ன புத்தகம் வேண்டும் என்று கேட்டு அவர்களுக்கு கிடைப்பதற்கு உதவி செய்தால் என்ன? அப்படி ஒரு நியமனத்தை நூலகத்தில் அரசு செய்தால் என்ன? மாணவ, மாணவிகள் அப்படி நூலகத்திற்கு வந்தால் அவர்களுக்கு இது ஒரு வழிகாட்டுதலாக இருக்குமே என்ற கேள்வியோடு கூடிய ஒரு கருத்து-ஆலோசனை கூறப்பட்டது.

              தாராளமாகச்செய்யலாம். இன்னும் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டு, எந்த இடத்தில் புத்தகம் உள்ளது என்பது வரை கணிணியில் ஏற்றப்பட்டு ,கேட்பதை எடுத்துக்கொடுக்கலாம். இந்த இடத்தில் இருக்கிறது, உங்களுக்கு பயன்படும், எடுத்து படித்து வாருங்கள் என இளைஞர்களுக்குச்சொல்லலாம். ஆனால் நூலகத்தைப் பயன்படுத்துவதைப் பற்றிய விழிப்புணர்வு மாணவ,மாணவிகளிடத்தும் இல்லை, அவர்களுக்கு பாடம் எடுக்கும் பெரும்பாலான ஆசிரியர்களிடத்திலும் இல்லை. இதில் மாற்றம் வேண்டும் என்பதனை அரசும் உணரவேண்டும்.மக்களும் உணரவேண்டும்.

Monday, 23 September 2013

அண்மையில் படித்த புத்தகம் : இவர்தாம் புரட்சிக் கவிஞர் பார்..சு.அறிவுக்கரசு

அண்மையில் படித்த புத்தகம் :    இவர்தாம் புரட்சிக் கவிஞர் பார்
நூல் ஆசிரியர்                               :    சு.அறிவுக்கரசு
வெளியீடு                                       :   நாம் தமிழர் பதிப்பகம் சென்னை -5  செல் : 9790706549
முதற்பதிப்பு                                   : ஆகஸ்டு 2012,176 பக்கங்கள்  விலை ரூ70.

                                                    மதுரையில்  14.9.2013 - சனிக்கிழமை  பி.எஸ்.என்.எல். வாசிப்போர் களத்தில் நான் அறிமுகம் செய்த புத்தகம் . "இந்நூலை எழுதியிருக்கும் திரு.சு.அறிவுக்கரசு அவர்கள் மிகச்சிறந்த திராவிட உணர்வாளர்; சிறந்த பேச்சாளர்; வளமான சிந்தனையாளர்; நினைவாற்றல் மிக்கவர்; கருத்தோட்டமுள்ள எழுத்தாளர்; அரசுப் பணி அனுபவத்துடன் நல்ல நண்பர் குழாத்தை உடையவர் " என நூலாசிரியரைப்பற்றி பதிப்பகத்தார் குறிப்பிட்டுள்ளனர்.  " பொங்கும் கோபக்கனலோடு , தமது ஆய்வறிவையும் ,ஆழமான இலக்கியச்சிந்தனைகளையும் பயன்படுத்தி எழுதியுள்ள மிக அருமையான ஒரு புரட்சி நூல்தான் இது" என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளதைப்போல புரட்சிக் கவிஞரைப் பற்றிய புதுமையான நூல் இது.

                                                       'எழுவாய்' என முதல் அத்தியாயம் தொடங்குகிறது. புரட்சிக் கவிஞரைப் பாராட்டிய தந்தை பெரியாரின் வரிகளோடு ஆரம்பித்து, பக்திப் பாடல் எழுதுபவராக இருந்த கனகசுப்புரத்தினம், தேசியப் பாடல் புனைபவராக மாறி , பின்பு 1928-ல் இருந்து சுயமரியாதைக் கவிஞராக மாறிய வரலாறு , கடவுளுக்கு கருணை மனுப்போட்டு முதலில் பாடிய அவர் பின்பு எப்படி ' இல்லை என்பேன் நானடா -அந்தத் தில்லை கண்டு தானடா ' என்று பாடுபவராக மாறினார் என்பதனை விளக்கமாக வரலாற்றுக் குறிப்புகளோடு கொடுத்துள்ளார் நூலாசிரியர்.
             
                                                'நம் மொழி பற்றி' என்னும் தலைப்பில் தமிழ் மொழி பற்றி புரட்சிக்கவிஞர் பாடியுள்ள பல்வேறு பாடல்களைக் குறிப்பிட்டுள்ளார். " இந்தளவுக்குத் தம் மொழியைச் சிறப்பித்து பாடிய கவிஞர்கள் எவரேனும் இருப்பரோ என்பது அய்யமே. யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் எனப்பாடி புலவர் பாரதி இனிமை என்று கூறினார். ஆனால் பாரதிதாசனோ தமிழைத் தமது உயிர் என்றே கூறி விட்டார் " (பக்கம் 25) என்பதனைக் குறிப்பிட்டு, 'தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர் ' ,' தமிழும் நானும் மெய்யாய் உடலுயிர் கண்டீர் ' என்றும் மற்றும் 'தமிழுக்கும் அமுதென்று பேர்...','கனியிடை ஏறிய சுளையும்...' போன்ற தமிழின் பெருமை சாற்றும் கவிதைகள், பின்பு தமிழுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதனை தமிழியக்கமாகப் பாடிய புரட்சிக் கவிஞரின் 'எளிய நடையில் தமிழ் நூல் எழுதிடவும் வேண்டும்...' போன்ற கவிதைகள் , தமிழ் ,தமிழரின் பற்றிய புரட்சிக் கவிஞரின் ஏக்கம், அந்த ஏக்கம் தவிர்த்திட என்ன செய்ய வேண்டும் என்பதனைச்சொல்லும் அவரின் கவிதை வரிகள் எனப் பல முனைவர் பட்ட ஆய்வேடுகளுக்கான தரவுகளைப் பட்டியலிட்டுக் கொடுத்திருக்கின்றார் நூலாசிரியர் திரு சு.அறிவுக்கரசு. வழிகாட்டியை(பாரதியை) விஞ்சியிருக்கின்றார் தமிழ் மொழியைப் பற்றிப் பாடியதில் வழி நடந்தவர் (பாரதிதாசன் ) என்பதனை ஆய்வேடு போல நிருபித்திருக்கின்றார் இந்த இயலில்.

                                     இயற்கையைப் பாடாத எவரும் தன்னைக் கவிஞர் என அழைத்துக்கொள்ளத் தகுதியில்லை. 'இயற்கை எழில் பற்றி ' என்னும் தலைப்பில் சங்கத்தமிழுக்கு அடுத்து இயற்கை அழகை அழகுத் தமிழில் வடித்தவர் பாரதிதாசன் என்பதனை பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலம் கூறுகின்றார் . 'குயில் கூவிக்கொண்டிருக்கும்....' நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து...'  பொதிகை மலை விட்டெழுந்து சந்தனத்தின் ...' விட்டுவிட்டுக் குழல் ஊதும் மெட்டு வைத்துக் குயில் பாடும் ...' போன்ற கவிதைகளை எடுத்து பாரதிதாசன் பாடியிருக்கும் இயற்கையின் எழிலை எடுத்து இயம்பும் அழகின் சிரிப்பாய் இந்த இயல் அமைந்துள்ளது.

                             'உவமை அழகு' என்பது அடுத்த இயல். உவமை என்றால் என்ன என்பதனை விளக்கிவிட்டு ' அத்தகைய உவமை நயத்தை மிகவும்  அழகுடனும் ஆற்றலுடனும் தம் கவிதைகளில் ஆண்டிருப்பவர் புரட்சிக்கவிஞர் ' (பக்கம் 42)  எனக்கூறும் இந்த நூலின் ஆசிரியர் புரட்சிக் கவிஞர் கையாண்டிருக்கும் உவமைகளின் பட்டியலை பட்டியலிட்டுக்கொடுத்துள்ளார். காதலியின் முகம் கண்டு பாடும் கவிஞன் போல , 50 ஆண்டுகளுக்கும் மேலாக புரட்சிக் கவிஞரின் பாடல்களை மேடைதோறும் முழங்குபவர், புரட்சிக் கவிஞரின் பாடல்களிலேயே புழங்குபவர் என்பதாலோ என்னவோ, ஏழை வாழ்வுக்கு, மழலை மகிழ்வுக்கு, மூப்பின் கொடுமைக்கு, பகுத்தறிவைப் பற்றி, சமூகப்புரட்சிக்கு...,எனப் பட்டியலிட்டு 'இருட்டடிப்புச்செய்தாலும் மின்னுகிற ரேடியம் -புரட்சிக் கவிஞர் ' என் முடிக்கின்றார் இந்த இயலை. காதல் குறும்புகள், மானுடப்பற்று, பெண் உரிமை எனும் உள்தலைப்புகளில் புரட்சிக் கவிஞரின் தனித்தன்மையான கவிதைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

                         உலகக் கவிஞ்ர்களோடு என்னும் தலைப்பில் இந்த நூலாசிரியர் சு.அறிவுக்கரசு அவர்கள் கொடுத்திருக்கும் தரவுகள் முனைவர் பட்டத்திற்கு தமிழ்- ஒப்பியல் இலக்கியத்தில் ஆய்வு செய்வோருக்கு உதவும் கருவூலங்கள். தமிழில் புரட்சிக் கவிஞர் என்பது போல ஆங்கிலத்தில் Poet of revolt என்று அழைக்கப்படும்  பைரனோடு ஒப்பிடுகின்றார். ' தம் காலச்சமுதாயத்தை விமர்சித்துத் தம் கவிதைகளைப் படைத்தவர் என்பதால் இப்பெருமை(பைரனுக்கு) . அத்தகு பெருமை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்கும் உண்டு' பக்கம் 75   என்று குறிப்பிடும் நூலாசிரியர் இருவருக்குமான ஒற்றுமைகளைக் குறிப்பிடுகின்றார். அதனைப்போல வால்ட் விட்மனோடு, கிளாட் மெக்கேயுடன், இராபர்ட் பிராஸ்ட்டுடன், வில்லியம் பட்லர் யேஸ்டுடன், செவ்சென்கோவுடன், இயற்கைக் கவிஞர் வேர்ட்ஸ் வொர்த்துடன் என உலகின் போற்றத்தக்க கவிஞர்களின் கவிதையும் புரட்சிக் கவிஞர் கவிதையும் கருத்தளவில் எப்படி ஒத்துப்போகின்றது என்பதனைக் கொடுத்துள்ளார்.

                                அதனைப் போலவே சங்கம்புழ மற்றும் குமரன் ஆசான் போன்ற  மலையாளக்கவிஞர்கள், வங்காளக் கவிஞர் ஜீவானந்த தாஸ் போன்றவர்களின் கவிதைகளோடு ஒப்பிட்டு பிற  மாநிலக் கவிஞர்களோடு என்னும் தலைப்பில் நூலாசிரியர் கொடுத்துள்ளார். வெளி மாநிலங்களில், வெளி நாட்டில் வாழும் தமிழர்கள்  இந்தக் கவிஞர்களின் கவிதைகளையும் , புரட்சிக் கவிஞரின் கவிதைகளையும் ஒப்பிட்டு இன்னும் விரிவாக அளிக்கலாம்.

                                 தொழிலாளர் பற்றி என்னும் இயலில் ' கவித்துவத்தூவலில் மானுடப்பற்றை நிரப்பி எழுதப்பட்ட கவிதைகள் காலத்தை வென்று நிற்பதைக் காண்கிறோம். ' பக்கம் 115 எனக்குறிப்பிடும் இந்த நூலாசிரியர் தொழிலாளர்களைப் பற்றிய புரட்சிக்கவிஞரின் பாடல்கள் எத்தன்மை வாய்ந்தவை என்பதனைப் படித்து உணருங்கள்  எனச்சொல்லும் வண்ணம் பட்டியலிடுகின்றார். சோசலிசம், கமயூனிசம், கேப்டலிசம் போன்றவற்றிற்கு கவிஞர் தரும் விளக்கங்கள் எவ்வளவு எளிமையானவை , எவ்வளவு நுட்பமானவை   என்பதனைக் கவிதையைச்சுட்டி சுட்டுகின்றார். பொதுவுடமை இயக்கங்கள் பாரதியைக் கட்டி அழுதுகொண்டு, பாரதிதாசனை விட்ட மர்மம் என்ன என்பதனை விளக்கும் இயலாக இந்த இயல் உள்ளது. பொதுவுடமை இயக்கத்தோழர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பகுதி இந்த நூலின் இப்பகுதி.

                                   எழுவாய் என இந்த நூலினை ஆரம்பித்த நூலாசிரியர் முடிவாய் எனப்பல செய்திகளைக் கூறி முடிக்கின்றார். பாரதியும், புரட்சிக் கவிரும் வாழ்ந்த வருடங்கள், பாடிய பாடல்களின் உள்ளடக்கங்கள், போன்ற பல செய்திகளைக் குறிப்பிட்டு புரட்சிக் கவிஞர் -பாரதிதாசன் அல்ல,பாரதியை விடப் பல நிலைகளில் விஞ்சியவர் என்பதனை ஆய்வேடு போல நிறுவுகின்றார். தோழர் தா.பாண்டியனே பாரதி தடுமாறும் இடங்களைப் பட்டியலிடுவதை சுட்டியுள்ளார் இந்த நூலின் ஆசிரியர்.

                                 " எழுதுவதல்ல கவிதை; ஆழ்மனதில் படிந்து இருக்கும் இலட்சியக் கனல்கங்குகள் எழுவதுதான் கவிதை என்பதை எடுத்துக்காட்டிய எழுதிக்காட்டிய எழுச்சிக் கவிஞர் புரட்சிக்கவிஞர், ..." பக்கம் 167 எனக் குறிப்பிடும் நூலாசிரியர் அறிவுக்கரசு அவர்களின் இந்தப் புத்தகம் புரட்சிக் கவிஞரை பற்றி  பத்தோடு பதினொன்றாய் வந்துள்ள புத்தகம் அல்ல. பாரதியின் தாசன் அல்ல புரட்சிக் கவிஞர் , அவர் வேறு இவர் வேறு என்பதனை ஆய்வு நோக்கில் நிறுவும் புத்தகம். மேடைப்பேச்சாளர்கள் தங்கள் கைவசமும், திராவிட இயக்கத்தவர்கள் தங்கள் மனதிற்குள் மனனமும் செய்து வைத்துக்கொள்ள வேண்டிய புத்தகம். அனைத்து கருத்தோட்டம் உள்ளவர்களும் உண்மையில் பாரதிதாசன் யார் ? என்பதனை உணர்ந்து கொள்ள ,தெரிந்து கொள்ள ,படிக்க வேண்டிய புத்தகம்,. பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல  வேண்டிய புத்தகம். .

                                  இந்தப் புத்தகத்தை வாசிப்போர் களத்தில் அறிமுகம் செய்து விட்டு வெளியே வரும்போது தோழர் மு.சங்கையா, "புரட்சிக் கவிஞர் பாடல்கள் நாடி, நரம்புகளில் ஊடுருவும் தன்மை வாய்ந்தது" என்றார். "படிக்கும்போதே உணர்ச்சி ஊட்டும் கவிதைகள் அவரின் கவிதைகள்" என்றார். ஆம், புரட்சிக் கவிஞரின் பாடல்களில் ஏதேனும் ஒன்றிரண்டாவது படித்து, மனப்பாடம் செய்து பின்பு உங்களுக்கு நீங்களே சொல்லிப்பாருங்கள்.அப்போது நீங்களும் உணர்ந்து கொள்வீர்கள், புரட்சிக் கவிஞர்  பாடல் ஏற்றும் உணர்வு ஓட்டத்தை, மனதில் ஏற்படும் அதிர்வுகளை .

Thursday, 5 September 2013

அண்மையில் படித்த புத்தகம் : ஆதலினால் காதலித்தேன்

அண்மையில் படித்த புத்தகம் : ஆதலினால் காதலித்தேன்
நூலின் ஆசிரியர் : பொள்ளாச்சி அபி
பதிப்பகம் : சிவச்சந்திரா பதிப்பகம் , புதுச்சேரி -3
முதல் பதிப்பு : 2012
மொத்த பக்கங்கள் : 184, விலை ரூ 120

எழுத்து.காம் என்னும் இணைய தளம் தமிழில் கவிதை, கதை எழுதுபவர்களின் வேடந்தாங்கல். பல நாட்டு பறவைகள் வந்து அடையும் வேடந்தாங்கல் போல , பல நாட்டில் வாழும் தமிழர்கள் தங்கள் படைப்புக்களைப் பதியவும், பதிந்ததைப் பலர் படித்து கருத்து கூறவும் தமிழர்களுக்கு மிக்க வாய்ப்பாய் அமைந்த பொது எழுத்து மேடை. இணையத்தின் நேர்மறையான பலனின் விளைச்சல் எழுத்து.காம் இணையதளம். அதில் நான் எழுதிய 'சீரு சுமந்து அழிகிற சாதி சனமே ' என்னும் சிறுகதை , சிறந்த சிறுகதையெனத் தேர்ந்த்டுக்கப்பட்டு அதற்காக தபாலில் சான்றிதழும் , அருமையான இரண்டு புத்தகங்களும் எனது வீடு நோக்கி வந்தன, அவற்றில் ஒன்று இந்த 'ஆதலினால் காதலித்தேன் ' என்னும் புத்தகம் மற்றொன்று அய்யா தி.அமிர்தகணேசனின் 'ழகரக்காரனின் முக நாக்கு ' என்னும் புத்தகம் .

ஆதலினால் காதலித்தேன் என்னும் நூல் தோழர் பொள்ளாச்சி அபி அவர்களின் தன் வரலாறு என எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இந்தத் தன் வரலாறு , அவரின் வாழ்க்கைப்போக்கில் குறுக்கிட்ட பெண்களின் வரலாறு. காதலிப்பது என்பதை அன்பு செலுத்துவது என்னும் பொருள் எடுத்துக்கொண்டு அவர் அன்பு செலுத்திய பெண்களையும், அவரிடம் அன்பு காட்டிய பெண்களையும் பற்றிய வரலாறு..இந்தப் புத்தகம் ' சாதி மதங்களை மறுத்து சமத்துவம் நாடி இரு மனம் கலந்து திருமணம் புரிந்த காதலர்கள் அனைவருக்கும் ' எனக் குறிக்கப்பட்டு இருக்கிறது முதல் பக்கத்திலேயே. 'ஈர்ப்பினோடு ஒன்றிவிடுவதான வெற்றியே காதல் ' என அரிய நாச்சியும், 'சரமாகத் தொடுக்கப்பட்ட சாராம்சங்கள் ' என சோழவந்தான் புலமி அம்பிகாவும் முன்னுரை அளித்திருக்கின்றார்கள். ' சுய அனுபவங்களின் உணர்வுகளும் உன்னதங்களும் கலந்த ஒரு கலவையாக இக்குறு நாவல் நம்மை நெகிழச்செய்கிறது ' என புலமி அம்பிகா குறிப்பிடுவது உண்மை..

உண்மையாக, நேர்மையாக எழுதப்படும் எதுவும் படிக்கும் வாசகனை ஈர்க்கும். தன் முனைப்பு இல்லாமல் , தன் வாழ்வின் நிகழ்வுகளை விவரித்துக்கொண்டு செல்லும் பாணியால் படிப்பவரை ஈர்க்கின்றார் இந்த நூல் ஆசிரியர். இந்த குறு நாவலில், பொள்ளாச்சி அபியின் தன் வரலாறு உண்டு, வர்ணனை உண்டு, கதை உண்டு, சில பக்கங்களின் நிகழ்வுகள் கவிதைகளாகவே உண்டு, அவர் எழுதிய திரை இசை மெட்டில் அமைந்த பாடல் உண்டு , காதலிப்பவர் படும் அவஸ்தைகள் உண்டு, காதலிக்க நினைப்பவர்கள் கருத வேண்டியவை எவை, எவை எனப் பட்டியல் உண்டு ,அனைத்தும் கலந்த் கலவையாக ஆனால் உண்மை என்பதே பக்கங்களைக் கோர்க்கும் நூலாக இருக்கின்றது. அதுவே இந்த குறு நாவலின் வெற்றியாக இருக்கின்றது. மொழியின் வாயிலாக தன் வாழ்வை மொழிந்து , இந்த அற்புதமான இலக்கியத்தைக் கொடுத்திருக்கின்றார் பொள்ளாச்சி அபி.

எழுத்து.காம் இணையதளத்தில்  எழுதும் பலரின் கவிதைகள், ஒரு அத்தியாத்தைத் தொடங்கும்முன் இருக்கும் தலைப்புக் கவிதைகளாக இருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. தன் சக எழுத்தாளர்களையும் மதிக்கும் மாண்பு தெரிகின்றது. அப்படி பாரதிராஜ்,அகாரா, முத்து நாடன், பிரபா பன்னீர்செல்வம், எஸ்.ராஜேந்திரன், நவீன்குமார்,சங்கரன் அய்யா, காளியப்பன் எசேக்கியல், இன்போ அம்பிகா, ரமேஷ் ஆலம், தூ.சிவபாலன், கவிதாயினி, கோமதி, நாணல், தம்பு, சி.பொற்கொடி, பொ.கவியமுதன், ஹரிஹரி நாராயணன், புலமி அம்பிகா, பாஷா ஜமீல், அனிதபாலா, நிலா சூரியன், ஜாவித் மியாண்டெட், ரெள்த்திரன், பொள்ளாசி அபி, அகன், அனுசரண், தமிழ்தாசன் எனப் பலரின் கவிதை வரிகள் முகப்பு வரிகளாக மின்னுகின்றன அத்தியாயங்களின் நுழைவு வாயிலில். அதனைப் போலவே ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பமும் படங்களோடும் ஆரம்பிக்கின்றது.

தன்னுடைய வாழ்க்கை எவ்வளவு போராட்டமாக இருந்தது என்பதனை பொள்ளாச்சி அபி பல இடங்களில் குறிப்பிடுகின்றார். 'இப்போதெல்லாம் எனக்குப் பட்டறையில் இரவு நேரப்பணியும் கொடுக்கப்பட்டது. மிக் நீளமான அளவுள்ள் இரும்பு ராடுகளை , கட்டிங் மிஷின் மூலம் , குறிப்பிட்ட நீளமுள்ளவையாக அறுத்து வைப்பது ...' அதில் நேரத்தை தொழில் நேர்த்தியின் மூலம் மிச்சப்படுத்தி , ' அடுத்த் நாள் இரவுப்பணிக்குச்சென்றபோது , ஒரு நோட்டையும் எடுத்துச்சென்றேன். ஓய்வின்போது எதையாவது எழுதலாம் என்று நிறையக் கருத்துக்களை மனதில் அசை போட்டுக்கொண்டேன்.அதனைச்சிறியதும் பெரியதுமான கவிதைகளை நோட்டில் பதிவும் செய்தேன். அழுக்கும் , எண்ணெய்ப் பிசுக்கும் .மையின் நீலமும், எழுதாத இடத்தின் வெள்ளையுமாக , அந்த நோட்டே ஒரு சிறிய வானவில் போல எனக்கு மிகவும் ரசிக்கத்தக்க வண்ணம் காட்டியது. வாரம் ஒரு முறை அதனை வீட்டிற்கு எடுத்து வந்து, அதில் எழுதப்பட்டவற்றை விரித்தோ, சுருக்கியோ, திருத்தி மற்றொரு நோட்டில் எழுதி வைக்கவும் தவறவில்லை " (பக்கம் 50) - படாத பாட்டிலும் பொள்ளாச்சி அபியின் ஈடுபாடு எனக்கு மார்க்ச்சிம் கார்க்கியின் இளைய வயது வரலாற்றை ஞாபகப்படுத்தியது. பசியை ஆற்ற ஓடி ஓடி பல்வேறு தொழில்களை வேலைகளைப் பார்த்த மார்க்ச்சீம் கார்க்கி புத்தகத்திற்காகவும் ,எழுதவதற்காகவும் பட்ட பாடு , ஆனால் அவரின் ஆர்வம்தான் மார்க்ச்சீம் கார்க்கியின் ஏழ்மையைத் தொலைத்து , உலகப் புகழைத் தந்தது, தமிழில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் எனப் பலரைச்சொல்ல முடியும். வயிற்றுப்பாட்டுக்கு படாத பாடு பட்டதோடு வாசிப்பையும் , எழுதுவதையும் கை விடாதவர்களை.. அவர்களைப் போல பொள்ளாச்சி அபி எனக்குத் தெரிகின்றார். விளிம்பு நிலை மக்களின் துயரத்தை தனது எழுத்துக்களில் பதியும் பொள்ளாச்சி அபி இன்னும் நிறைய எழுத வேண்டும்.

தான் எழுத வேண்டும் என்று முடிவுசெய்தபோது ' எழுதுவதை தாய், தந்தை, சகோதரி, இன்னும் யார் படிக்கக்கேட்டாலும் தைரியமாய் கொடுக்கும் வகையில் படைப்புகள் இருக்கவேண்டும் என்று எனக்குள் ஏற்பட்ட தீர்மானம் இறுகிக்கொண்டே வந்தது ' (பக்கம் 51) என்னும் நூல் ஆசிரியரின் முடிவு எழுத வேண்டும் என்று நினைக்கும் எல்லோரும் மனதில் எடுத்துக்க்கொள்ள வேண்டிய முடிவு.

உள்ளடக்கங்களைப் பற்றி எழுதினால் , பக்கம் பக்கமாக எழுத இயலும் என்றாலும் பெண்களின் நிலை பற்றிப் பேசும் பக்கங்கள் 54-55, சரோவினைப் பற்றிய பதிவுகள் 45-46...,தாகீராவிடம் ஏற்பட்ட காதல், அதனை எதார்த்தமாக இருவரும் எதிர்கொண்ட விதம்- 'அவ்வாறான தேவைகள் எதுவும் இப்போது எனக்கில்லை'பக்கம் 68 , நூலகத்திற்குச்சென்று படித்தது ,அதனால் ஏற்பட்ட விளைவுகள் 'தாய் , தந்தை , நட்பு, சினிமா,என்ற எல்லாமும் எனக்குக் கற்றுக் கொடுத்ததை விட புத்தகங்கள் மிக அதிகமாக- நாம் நன்றாகப் புரிந்து கொள்ளும்வரை , பொறுமையாய் நிறையக் கற்றுக் கொடுத்தது ' பக்கம் -73 , ' உடனடி பணப்பலன் கிடைக்கிறது என்பதற்காக நான் ஒரு சுமை தூக்கும் -கலாசித் தொழிலாளியாக மாறிப்போனேன்' பக்கம் 91 போன்ற செய்திகளைக் கொண்டே நிறைய எழுதலாம்.

பாட்டு பாடியதற்காக இன்னொரு முறை படகில் சுற்றி வரச்செய்து பாராட்டிய படகோட்டியின் பரிசு ' அந்த எளிமையான மனிதரின் வலிமையான செய்கை ' பக்கம்-127 , மாரிமுத்து என்னும் ஆசிரியரைப் பார்த்த்வுடன் .... 'ஆசிரியர்கள் எப்போதும் இரண்டாவது தாய் தந்தையர்கள் அல்லவா ? ' பக்கம் 151 போன்று நுட்பமான செய்திகள் நூல் முழுக்க பரவிக்கிடக்கின்றன. தொழிற்சாலை, அதில் தொழிற்சங்க ஈடுபாடு, தன்னைப் போலவே தொழிற்சங்க ஈடுபாடு கொண்ட பிரேமாவின் சந்திப்பு, இருவருக்கும் ஏற்படும் காதல், 'அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்துப் போராடாமல் அநீதி களைய முடியாது ' என்பது தொழிற்சங்கக்கோஷம் என்றாலும் , ஆர்ப்பரித்துப் போராடி அநீதி களைந்ததற்காக அநியாயமாக முதலாளிகளால் வேலையை ராஜினாமா செய்யச்சொல்லப்பட, யாருக்காக குரல் கொடுத்தார்களோ அவர்களே அமைதியாக இருக்கும் எதார்த்தம் , பின்பு தனித்தொழில் , மத மறுப்புத் திருமணமாய் முடிந்த காதல் என மிக எளிமையான தன் வரலாற்று நூலாக அமைந்துள்ளது அருமை. அக்பரும், பிரேமாவும் ஒரு மனதாய் இணைந்தது மட்டுமல்ல, இல்லறத்தில் சிறந்த, நல்லறம் புரியும் பறவைகளாய் இருபது ஆண்டுகளுக்கும் மேலாய் சமூக பிரிவினைகளுக்கு சாட்டையடி இணையராய் வலம் வருவது வாழ்த்தலுக்குரியது, பாராட்டுக்குரியது. எழுத்து ஆற்றல் உள்ள ஒருவரைக் கண்டுபிடித்து, அவரை எழுதத் தூண்டி, அந்த எழுத்தை புத்த்கமாகக் கொண்டு வந்து,'ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தாயாய் ' இப்புதின ஆசிரியருக்கு அமைந்த தோழர் அகன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு இரண்டு மாத இடைவெளிக்குள் , தன்னுடைய மனதில் பதிந்த சுவடுகளை , வண்ணக் கோலமாய் வரைய நூல் ஆசிரியர் பொள்ளாச்சி அபி அவர்களுக்கு வாய்ப்பு அளித்த எழுத்து இணையதளம் மிகுந்த பாராட்டிற்கும் , நன்றிக்கும் உரியது. அதனைப் போலவே எழுத்துவில் பொள்ளாச்சி அபி எழுத , எழுத ஊக்குவிக்கும் அருமருந்தாய் அமைந்த பின்னூட்டங்கள், அதனை எழுதிய எழுத்துத் தோழர்கள், தோழியர்கள் அத்தனை பேரும் பாராட்டுக்குரியவர்கள். இந்த நூல் எழுத்து.காம்- இணையதளத்தின் வெற்றி, அதில் இணைந்துள்ள தோழர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் . 'ஆதலினால் காதலித்தேன் ' புத்தகத்தை வாங்கிப் படித்துப்பாருங்கள், வீட்டு நூலகத்தில் பாதுகாத்து வையுங்கள்.

Wednesday, 21 August 2013

பொய்மை ஆடைகள்

கதை கவிதை
எழுதும்
எழுத்தாளன் இவன் !
கொஞ்சம் கவனமாகப் பழகு!
இவனிடத்தில் என்றான் நண்பன் !
ஏன்? என்றேன் நான்

எழுத்தாளனின் வேலை
கவனித்தல் மட்டுமே !
கவனித்ததை பின்பு
காகிதத்தில்
கொட்டுவது மட்டுமே !

மின் அஞ்சல் போலவே
மூளை அஞ்சலில்
ஏற்றி வைப்பான் எழுத்தாளன்
தன் முன்னால் தென்படும்
முரண்பாடுகள் அத்தனையையும் !

என்றோ எடுத்தால்
எழுது கோலின் கால்களுக்குள்ளே
மூளை அஞ்சல்
பதிவுகள் எல்லாம்
மொத்தமாய் வந்து வந்து
கொட்டி நிற்கும்.

கொட்டுகின்ற மூளை அஞ்சல்
எதிரி என்றோ நண்பன் என்றோ
உறவு என்றோ
எதுவும் பார்க்காது அவ்விடத்தில் !

அன்று மனதில் விழுந்த
முரண்களை எல்லாம்
மொத்தமாய் காகிதத்தில்
முக்கி முக்கி
கொட்டித் தீர்க்கும்
பிரசவிக்கும் தாய்போல !

எழுத்துப் பிரசவத்தில்
அழகு நிலா பிள்ளைகளும்
இலக்கியமாய்ப் பிறக்கலாம்!
அய்யகோ ! அவலட்சணம்
எனச்சொல்லும் பிள்ளைகளும்
பிறக்கலாம் !

ஆனால் பிறக்கின்ற
குழந்தை அம்மணமாகத்தான்
பிறக்கும் !
நீ இட்டுக் கட்டிய
பூசி மெழுகிய
பொய்கள் எனும்
ஆடைகள் எல்லாம்
அவிழ்ந்து அங்கே
அம்மணமாய் உண்மைகள்
சிரிக்கும்போது
கழற்றப்பட்ட ஆடைக்காரனாய்
நீயும் கூட இருக்கலாம் !
நீ போட்டு மெழுகிய
பொய்மை ஆடைகள் எல்லாம்
அங்கே அக்கு அக்காய்
கழற்றப்படலாம் !

ஆதலால்
பார்த்துப்பழகு !
உண்மையாகப் பழகு !
கதை கவிதை
எழுதும் அவனிடம்
பார்த்துப் பழகு !
கவனமாகப் பழகு !
உண்மையாகப் பழகு ! என்றான்.


எழுதியவர் : வா.நேரு
நாள் : 7-Aug-13, 7:30 am
நன்றி : எழுத்து.காம்

Wednesday, 7 August 2013

அடி உதவுறது மாதிரி -வா. நேரு

உழைத்து உழைத்து உரத்துப்போன கை. அந்தக் கையின் மூலமாக விழுந்த அடி ஒவ்வொன்றும் இடியைப் போல மதியின் முதுகில் விழுந்து கொண்டிருந்தது. அப்போதுதான் சாப்பிட உட்கார்ந்திருந்தான் முத்து. மாதம் ஒரு முறையோ, இருமுறையோ அம்மாவைப் பார்க்க கிராமத்திற்கு வரும் முத்துவுக்கு அப்போதுதான் அவனது அம்மா, சோற்றை வடித்து, கறிக்கொழம்பை ஊத்தினார். பக்கத்தில் வறுத்த கோழி வேறு இருந்தது. ஆசையாக சாப்பிடப்போகும் நேரந்தான் இந்தச்சத்தம் கேட்டது. அண்ணே, அடிக்காத, அடிக்காத, படிச்சிறேன், நான் படிச்சிறேன் என்னும் சத்தமும் அழுகையும், அடி விழும் சத்தமும் கேட்க ,சாப்பாட்டுத் தட்டை தூக்கி வைத்து விட்டு வெளியே ஓடி வந்தான் முத்து.

                                    எப்போது வந்தாலும், ஊரில் முத்துவின் தெருவில் ஏதாவது ஒரு ரகளை நடந்து கொண்டிருக்கும். தெரு முழுக்க இருப்பவர்கள் எல்லோரும் சொந்தக்காரர்கள்தான் இருந்தாலும் ஏதாவது ஒரு காரணத்தால் சண்டை நடந்து கொண்டிருக்கும். சில சண்டைகளை எட்டி நின்று வேடிக்கை பார்ப்பான், சில சண்டைகளைப் பார்த்தவுடன், பார்த்தும் பார்க்காததுபோல உள்ளே போய் விடுவான், சில சண்டைகளப் பார்த்தவுடன் , நடுவில் போய் நின்று தடுத்து விலக்கி விடுவான், இன்று நடந்து கொண்டிருந்தது சண்டையில்லை. மதியின் அண்ணன் பேரின்பம் மதியை அடித்து வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தான்,. விழும் அடியைத் தாங்கமுடியாமல் ,ஓட முயன்ற மதியை, " ஓடவா பாக்கிற, முடடாப் பயலே , இன்னைக்கு ஒன்னைய அடிச்சு கொல்லாமல் விடப்போறதில்ல" என்று பேரின்பம் துரத்தி துரத்தி, கெட்ட வார்த்தைகளால் திட்டி மதியை அடித்து கொண்டிருந்தான். எச்சில் கையோடு வெளியில் வந்த முத்து, பேரின்பத்திற்கும், மதிக்கும் இடையில் போய் நின்று " ஏய், நிப்பாட்டு மாமா, பச்சப் பயலைப் போட்டு ஏன் இப்படி எருமை மாட்டை அடிக்கிறது மாதிரி அடிச்சுகிட்டு இருக்க" என்றான்.

                                 முத்துவை எதிர்பார்க்காத பேரின்பம் ஒரு கணம் நிறுத்தி சுதாரித்து " ஏய், மாப்பிள்ளை நீ எப்ப, ஊர்ல் இருந்து வந்த " என்று கேட்கவும் "காலையில்தான் வந்தேன் " என்று பதில் சொன்ன முத்துவின் பக்கத்தில் ஒட்டி நின்று கொண்டான் மதி. ஏதோ தவறுதலாக கிணற்றுக்குள்  விழுந்து சாகப்போனவனுக்கு , பிடிக்க ஒரு மரக்கிளை கிடைத்து உயிர்தப்பியவன் போல மதி இப்போது நன்றாக முத்துவின் அருகில் வந்து நின்று கொண்டான்.பேரின்பம் ஏதும் குடி வெறியில் அடிக்கிறானோ என்று நினைத்து பேரின்பத்தின் கண்ணையும் முகத்தையும் பார்த்தான். முத்து என்ன நினைக்கிறான் என்பதை ஊகித்தவன் போல 'மாப்பிள்ளை, நான் ஒன்னும் குடிச்சுப்போட்டுலாம் இவனை அடிக்கல " என்றான் பேரின்பம்

                                  " பிறகு ஏன் அடிக்கிற மாமா ?" என்று கேட்ட முத்துவிடம் " இந்தப் பய்லை படிக்க வைக்க என்னா பாடுபட்டு படிக்க வைச்சிக்கிட்டு இருக்கேன், எட்டாவது படிக்கிற இவன் கால்பரிட்சையிலே , பெயில் மார்க்கு எடுத்திருக்கான், நேத்துத்தான் இவன் வாத்தியார் கூப்பிட்டு விட்டாருன்னு பள்ளிக்கூடத்துக்குப்போனேன், அப்ப வாத்தியாரு, இவன் சரியாகவே படிக்க மாட்டிங்கிறான், வகுப்புக்கு வராம கூட சில நேரம் பெத்தனசாமி கோயிலுப்பக்கம் இருக்கிற லவா மரத்துல போயி, லவாப்பழம் பொறுக்கப்போயிறான்னு சொன்னாரு, இவனை படிடான்னு பள்ளிக்கூடத்திற்கு அனுப்புனா இப்படி பண்றான்னே மாப்பிள்ளை " என்றவனின் உள்ளம் புரிந்தது முத்துவுக்கு.


                                " மாப்பிள்ளை, எங்க அப்பா என்ன பாடுபட்டாரு, என்னைப் படிக்க வைக்க, அடிச்சாரு, கெஞ்சினாரு, அழுதாரு, படிடா, படிடான்னு எத்தனை தரம் சொன்னாரு, கேட்டனா மாப்பிள்ளை " என்று பேரின்பம் சொல்ல ஆரம்பித்தவுடன் முத்துவுக்கு பழைய நினைவுகள் ஓடின,.

                                   பேரின்பம், மதியோடு சேர்த்து ஆறு குழ்ந்தைகள் பேரின்பத்தின் அப்பா மாணிக்கத்திற்கு. மிக அருமையான மனிதர் மாணிக்கம். சிறு வயதில் முத்து சில நேரம் கிழிந்து போன பழைய சட்டைகளைப்போட்டுகிட்டு பள்ளிக்கூடத்திற்கு போன நிலையில் பேரின்பம் ஜம்மென்று பள்ளிக்கூடம் வருவான்.முதல் வகுப்பு படிக்கும்போதே டவுனில் படிக்கும் பிள்ளைகள் போல டை போட்டு,சூ கட்டி எல்லாம் வருவான். அவனது அப்பா வெளி மாநிலங்களில் எல்லாம் போய் மிலிட்டரியில் வேலை பார்த்தவர். தன் பிள்ளைகளை மிக நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தார். பேரின்பத்திற்கும் மதிக்கும் 15, 16 வயது வித்தியாசம் இருந்தது. பேரின்பம்  இரண்டு வயது மூத்தவன் முத்துவுக்கு . முத்து ஆறாவது படிக்கும்போது பேரின்பம் எட்டாவது படித்தான். இப்போயிருக்கிற ஹெட்மாஸ்டர் பரவாயில்லை, மாணவர்களின் படிப்பில் அக்கறை எடுத்து  வீட்டிற்கு எல்லாம் சொல்லி விட்டு படிக்க வைக்கின்றார். அப்போது அப்படியில்லை. கவர்மெண்ட பள்ளிக்கூடம். உயிரைக் கொடுத்து பாடம் எடுக்கும் வாத்தியார்களும் இருந்தார்கள், ஏனோ தானோ, ஒன்றாம்தேதி வந்தால் நமக்கு சம்பளம் வரப்போகிறது என்று நினைக்கும் வாத்தியார்களும் இருந்தார்கள். பேரின்பம் சரியாகப் படிக்கவில்லை. நல்லா மற்ற பையங்களோடு சுற்றினான். பம்பரம் சுத்தி சூப்பரா விடுவான். நொண்டிக்கால் விளையாட்டை சூப்பரா விளையாடுவான். கபடி, கோகோ, உப்பு மூட்டை என்று சின்னப்பையங்க விளையாட்டு எல்லாத்திலேயும் கலந்து கலக்குவான்.ஆனால் வகுப்பறைக்குள் மட்டும் ரொம்ப அமைதியாகி விடுவான். எதையோ பறிகொடுத்தவன்போல உட்கார்ந்திருப்பான். கை நிறைய வேப்பங்கொழுந்த அள்ளி வாயில போட்டுட்டு , அந்த கசப்பில முகத்தை சுளிக்கிறவன் மாதிரியே வகுப்புக்குள்ள உட்கார்ந்திருப்பான். எட்டாவது வகுப்பில் இரண்டு முறை பெயிலாகி முத்துவோடும் சேர்ந்து படித்தான். பின்பு என்ன நினைததானோ , சின்னப்பையல்களோடு எல்லாம் சேர்ந்து படிக்க வேண்டியிருக்கிறது, நான் பள்ளிக்கூடம் போக மாட்டேன் என்று சொல்லி நின்றுவிட்டான்

                                       இப்போ இருக்கிற மாதிரி அப்ப கவர்மெண்ட் பள்ளிக்கூடம் இல்லே. கூரைக்கட்டிடம்தான் ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரைக்கும். அன்னைக்கொரு தடவை மூக்கையா வாத்தியார் பாடம் நடத்திக்கொண்டு இருக்கும்பொழுது தொப்பென்று கூரையிலிருந்து பாம்பு ஒன்று விழுந்தது. கையிலிருந்த பிரம்பை வைத்தே மூக்கையா வாத்தியார் பாம்பை அடித்துக்கொன்று விட்டு பாடம் நடத்தினார். மகாராசன் மதுரையிலிருந்து வீரிசெட்டி என்னும் ஒரு தலைமையாசிரியர் வந்தப்பறம்தான் பள்ளிக்கூடமே மாறுச்சு. முத்து பத்தாவது படிக்கும்போதுதான் வீரிசெட்டிசார் வந்தார் . வந்த ஒரு மாதத்திலேயே பள்ளிக்கூடத்தை தலை கீழாக மாற்றி காட்டினார். பள்ளிக்கூடத்திலே கரண்ட் இல்லே. பள்ளிக்கு அருகில் இருந்த  ஜமீந்தர்ர் பங்களாவுக்குப்போய்  அவரைப் பார்த்து பள்ளிக்கூடத்திலே கரண்ட் இல்லை என்பதைச்சொல்லி, தங்கள் பங்களாவில் இருந்து ஒரு வயரை ஒரு லைட்டுக்கு இழுக்க அனுமதி கேட்டு வாங்கி வந்தார். இரவு முழுக்க படிக்க வசதி செய்து கொடுத்தார். பின்பு மேல் அதிகாரிகளுக்கு எழுதி நிரந்தரமாக கரண்ட் வாங்கித்தந்தார். முத்துவின் வீட்டில் எல்லாம் அப்போ கரண்ட் இல்லை . பள்ளிக்கூடத்தில் போய் இரவு முழுவதும் தங்கிப் படித்தான். சுப்பையா, சுப்பிரமணி, சுந்தரசேகர், இராமநாதன். நவநீதகிருஷ்ணன்,இராஜேந்திரன்,சொக்கர், ஜெயராஜு, குருசாமி,பழையூர் ரவி, மெய்யுனத்தம்பட்டி ராஜாராம் என்று பலரின் வீட்டிலும் கரண்ட் இல்லை . வீரிசெட்டி சாரின் வரவு மிகப்பெரிய வாய்ப்பை அந்தப் பள்ளி மாணவர்களுக்கு அதுவும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுத்தது. எல்லோரும் நல்ல மதிப்பெண்   எடுத்தார்கள், . பேரின்பமும் படித்திருந்தால் பத்தாம் வகுப்பை பாஸ் பண்ணியிருக்கலாம். அவனுக்கும் ஒரு மாற்றத்தைக் கொடுத்திருக்கலாம். அவன் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே படிப்பைப்பார்த்து பயந்து ஓடிவிட்டான்.

                  முத்து கல்லூரிக்கு படிக்கப்போன காலத்தில் பேரின்பம் வண்டி மாடு வைத்து ஊரில் வேலை செய்து கொண்டிருந்தான். காள வாசலுக்கு மண் அடிக்கப்போவான் . காலையிலிருந்து மாலைவரை வண்டியோடும் மாட்டோடும் அந்த செம்மண்ணோடும் அவனது வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. முத்து கல்லூரி முடித்து அரசு வேலையில் சேர்ந்த நேரத்தில் பேரின்பத்திற்கு திருமணம் ஆனது. ஒருமுறை முத்து ஊருக்கு வந்த நேரத்தில் தனது மனைவி இளவரசியை அடித்து வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தான் பேரின்பம். அம்மா மிகவும் வருத்தமாக " டேய், பேரின்பம் இப்போ நல்லா குடிச்சு பழகிட்டாண்டா, நாசமாப்போற கவர்ண்மெண்ட், ஏந்தேன்,இப்படி ஊரு ஊருக்கு சாராயக்கடை திறந்து விட்டு அநியாயம் பண்ணுதோ , நல்லா உழைக்கிற பயலுக எல்லாம் இப்படி குடிச்சுப்பழகி நாசமாப்போறாங்க், குடிச்சுபோட்டு, அகம்பாவமா பேசிக்கிட்டு, பொண்டாட்டியைப் போட்டு அடிச்சிக்கிட்டு இருக்கான், நீ அங்கே போக வேணாம் தம்பி " என்றார்கள். முத்து அன்று வெளியே செல்லவில்லை.

               ஊருக்குள்ளேயும் பேரின்பத்தைப் பற்றிச்சொன்னார்கள். நல்ல முரட்டு உருவம் உள்ளவன் பேரின்பம். நல்ல கடுமையான உழைப்பாளி.அசால்ட்டா பச்சை நெல்லு மூட்டையைத் தூக்கி தனியாளா வண்டியிலே போடுவான். எவ்வளவு பெரிய பாரத்தையும் வண்டியில் ஏற்றி கட்டி ஓட்டிப்போவான்.  வம்புக்கு வந்தா ஒத்த ஆளா எவனையும் தெம்பா அடிச்சு நொறுக்குவான்.  மிகத்துணிச்சலானவன். ஆனால் குடி அவனை முழுவதுமாக மாற்றியிருந்தது. " ஏய் , நல்லா குடிச்சுப்போட்டு வேட்டி அவிழ்ந்து கீழே விழுந்தது கூடத்தெரியாமல் பல நேரம் தெருவில் விழுந்து கிடக்கின்றான " என்று சொன்னார்கள். எப்படி இருந்த பேரின்பம் இப்படி மாறிப்போய்விட்டானே என்று வருத்தமாக இருந்தது முத்துவுக்கு. ஆனால் குடிபோதையில் ,தெருவில் எதையாவது உளறிக்கொண்டிருந்தாலும் முத்துவைப்பார்த்தவுடன் கொஞ்சம் அமைதியாகி விடுவான் பேரின்பம். தன்னோட  மாமன் மகன் படிச்சு வேலைக்குப்போனதில் உண்மையிலேயே பேரின்பத்திற்கு மகிழ்ச்சி இருந்தது. பேரின்பத்தின் மேல் முத்துவுக்கும் மரியாதை இருந்தது, அதனாலேயே ஊருக்கு வந்த நேரங்களில் அவன் வம்பு பண்ணிக்கொண்டிருக்கும் இடங்களில் அவனைப் பார்க்காதவன் போல  தாண்டிப்போய்க்கொண்டிருந்தான்.

                             இன்று பேரின்பம் தனது தம்பி மதியைப்போட்டு இந்த அடி அடிக்கும்போது தாள முடியவில்லை முத்துவிற்கு. " ஏய் என்ன ஒண்ணும் சொல்லாமா , பேசாம நின்னுக்கிட்டு இருக்கிற " என்று பேரின்பம் கேட்டவுடன் நிகழ்காலத்திற்கு வந்தான். முத்துவின் கைப்பிடியில் இருந்த மதியை இழுத்த பேரின்பம் மேலும் இரண்டு அடியைப் போட்டான். தடுக்கப்போன முத்துவுக்கும் இலேசாக ஒரு அடி விழுந்தது. " படிப்பியாடா, படிப்பியாடா, பன்னிப்பயலே படிப்பியாடா " என்று சொல்லி மேலும் அடிக்கப்பாய்ந்தவனை , " ஏய் நிப்பாட்டு மாமா, அடிச்சாப்பில உன் தம்பி படிச்சிருவானா ? மாமாவும்தான் அத்தனை அடி அடிச்சாரு உன்னையே , நீ படிச்சயா " என்று முத்து கேட்டவுடன் ஒரு மாதிரி அழப்போறவன் போல ஆன பேரின்பம் " எப்படி மாப்பிள்ளை , இவனைப் படிக்க வைக்கிறது ?" என்றவன் பேச ஆரம்பித்தான்..

                      " ஏய் முத்து , நானும்தான் ஊங்கூடப் படிச்சேன். படிடா ,படிடான்னு இராத்திரி பகலா எங்கப்பா சொன்னாரு. கேட்கலை நான். படிச்சாத்தாண்டா பிழைக்க முடியும், நாலு பேரு  மத்தியிலே கவுரவமா வாழ முடியுமுன்னு படிச்சு படிச்சு சொன்னாரு. கேட்கலையே மாப்பிள்ளை, கேட்கலையே. படிப்புனா என்னான்னு தெரியலையே மாப்பிள்ளை எனக்கு அப்ப . நீ படிச்சே,  ஒரு வேலைக்கு போனே. அன்னைக்கு உன்னையை  திண்டுக்கல்ல வந்து பார்த்துவிட்டு வநத சுப்பு மாமன் என்னமா சொன்னாரு. ஏலே முத்து வேலை பார்க்கிற ஆபிஸுக்குப்போயிருந்தேன். கலர் கலரா லைட்டா எரியுதுடா,எவ்வளவு பிரமாதமா ஆம்பிளையும் , பொம்பளையும் சேர்ல உக்காந்து வேலை பார்த்துக்கிட்டு இருந்தாங்க. நம்ம முத்துவை அந்த அறைக்குள்ள பார்த்தவுடன் எவ்வளவு பெருமையா இருந்துச்சு. ஏலே, முத்து அங்க வேலை பாக்கலைன்னா நம்மளை உள்ளேயாவாது விடுவாங்களான்னு ? "   சொல்லிச்சொல்லி பெருமையா சொன்னாரு மாப்பிள்ளை. உனக்கு எப்படி இது கிடைச்சது படிச்ச படிப்புதானே காரணம் ?

                அடுத்த தெருவிலே சிங்கம் மாமா அவரு பையனை படிக்க வச்சாரு,சிங்கம் மாமாவும் அந்த அக்காவும் அமெரிக்காவிற்கே போய் அங்க வேலை பார்க்கிற மகனை, மருமகளை, பேரப்பிள்ளைகளை பார்த்துவிட்டு வந்துட்டாங்க . இந்த வானம் பார்த்த பூமியிலே பிறந்து , வயக்காட்டுலேயும் செவக்காட்டுலேயும் உழைச்சு உழைச்சு ஓடாப்போய் உட்கார்ந்திருக்கேன் நான். என் பிள்ளைகளை  வளர்த்திக்கிட்டு, எங்க அப்பா செத்துப்போனதால நான் இவனுக்கும் பள்ளிக்கூடத்திற்கு பணத்தைக்கட்டி படிக்க வச்சுக்கிட்டிருக்கேன். படிக்க மாட்டேங்கிறான்னே, மாப்பிள்ளை இவன் படிக்க மாட்டேங்க்கிறான்னே " என்று மதியைக் காட்டி குமுற ஆரம்பித்தார்.

                   மதிக்கும் பேரின்பத்திற்கும் 15, 16 வய்து வித்தியாசம் இருக்கும். வீட்டில் கடைசிப்பையனான மதி படிக்கவில்லையே என்னும் குறையை தான் படிக்காததால் காட்டிலும் மேட்டிலும் அலையும் அலைச்சலையும் வயித்துக்காக பட வேண்டிய பாட்டையும் எண்ணி, தன்னுடைய தம்பியாவது படித்து ஏதாவது ஒரு வேலைக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் ஈடேறாமல் போய்விடுமோ என்னும் விரக்தியில்தான் மதியை பேரின்பம் இந்த அடி அடித்திருக்கின்றான் என்ற எண்ணம் முத்துவின் மனதில் ஓடியது.

                  "நீ போ மாமா, நான் மதிகிட்டே பேசுறேன், ஏன் படிக்கலேன்னு கேட்கிறேன் " என்று பேரின்பத்திடம் சொல்லி விட்டு தனது வீட்டிற்குள் மதியையும் அழைத்துக்கொண்டு உள்ளே வந்தான் முத்து. "எம்மா, மதிக்கும் சேர்த்து சோத்தைப் போடுங்க"  என்று சொன்னவுடன் மிரண்டு போயிருந்த மதி , அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்றான். "வாடா, வா,உட்கார், உக்காந்து சாப்பிடு" என்று முத்து அம்மா சொன்னவுடன் அவனும் முத்துவின் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான். உடம்பெல்லாம் அடி வாங்கியது , தடிப்பு தடிப்பாக இருந்தது. இன்னும் அழுதுகொண்டேதான் சாப்பிட்டுக்கொண்டிருந்தான் மதி.

                   " ஏன் படிக்கலை, எத்தனை பாடத்தில காப்பரிட்சையில் பெயிலு நீ " என்று மதியிடம்  முத்து கேட்டான். " படிச்சேன் மாமா, இருந்தாலும் இங்கிலீசு பாடத்திலேயும் , கணக்கிலேயும் பெயிலு " என்றான் மதி.

                       " சைக்கிள் ஓட்டத் தெரியுமா ? " என்றான் முத்து மதியிடம் . ஆர்வமாக " நல்லா ஓட்டுவேன் மாமா, வாடகைச்சைக்கிள் எடுத்து ஓட்ட காசுதான் கிடைக்க மாட்டேங்குது " என்றான் மதி.

                       " கிணத்துல்  நீச்சல் அடிக்கத்தெரியுமா ? " என்றவுடன் குறுக்கிட்ட முத்து அம்மா, "ஏண்டா , நம்ம ஊர் பிள்ளைக யாருக்குடா நீச்சல் தெரியாம இருக்கு, எல்லாம் முங்கி , முங்கி தண்ணியைக் குடிச்சாவது நீச்சல் கத்துக்கிறாங்கெடா " என்று சொன்னார்.
                      "சைக்கிள் எத்தனை நாளில கத்துக்கிட்ட" என்ற முத்துவிடம் "அது இரண்டு மூணு மாசம் ஆச்சு மாமா. வாடகைக்கு சைக்கிள் எடுத்து போயி கத்துக்கிட்டது. கத்துக்கொடுக்கிறதுக்கு ஆள வேற கூட்டிக்கிட்டுப்போய்த்தான் கத்துக்கிட வேண்டியிருந்துச்சு " என்றான் .
                        " நீச்சல் கத்துகிறது, சைக்கிள் ஓட்டக் கத்துக்கிறது  மாதிரிதான் படிக்கிறது. நீச்சல் பழக பயந்துகிட்டு , கிணத்து மேட்டுலேயே நின்னுக்கிட்டு இருந்தா நீச்சல் கத்துக்கிட முடியுமா , முடியாது. அது மாதிரி படிப்பு வரலைன்னு சொல்லி , புத்த்கத்தை மூடி வச்சுக்கிட்டே இருந்தா படிப்பு வராது " என்று மதியிடம் சொன்ன முத்து, மேலும் தொடர்ந்தான்.

                       " கணக்கை போட்டுப்போட்டு பாரு. பயிற்சிக்கணக்கை எடுத்து போட்டுப்பாரு. மறுபடியும் மறுபடியும் போட்டுப்போட்டு பாரு. கணக்கு வந்துரும். தெரியாத கணக்கை வாத்தியார் கிட்ட கேளு,. நான் வந்தா எங்கிட்ட கேளு, அல்லது நம்ம தெருவிலே படிச்சவங்க யாருகிட்டேயும் கேளு. கேட்டுப் போட்டுப்பாரு. விழுந்து விழுந்து எந்திருச்சு சைக்கிள் ஓட்டிப் பழகினதுமாதிரி, முயற்சி பண்ணிக்கிடடே இரு. கணக்கு வந்துடும் . "

                    "நம்மள மாதிரி கிராமத்துப்பிள்ளைக பயப்படுற்தே இங்கிலீசைப் பார்த்துத்தான். பயப்படுற அளவுக்கு அதுல ஒண்ணும் இல்லே. நம்ம பள்ளிக்கூடத்திலே தக்கி முக்கி இங்கிலீசு படிச்சவர்தான் வக்கீல் அழகு. இன்றைக்கு மதுரையிலே பெரிய வக்கீல். இங்கிலீசுலே அடிச்சு வெளுத்து வாங்கிறாரு. பழக்கம்தான், பயப்படாம முயற்சியும் பயிற்சியும் பண்றதுதான் படிப்பு.இங்கிலீசைப் பார்த்து பயப்படாதே.சத்தம் போட்டு எஸ்ஸேயைப் படி. சத்தம் போட்டு பத்துத் தடவை, பதினைஞ்சு தடவை நீயாப் படி. அப்புறம் ஒவ்வொரு பாராவா மனப்பாடம் பண்ணு. ஒரு பாராவை மனப்பாடம் பண்ணி முடிச்சவுடனே எழுதிப்பாரு. அப்புறம் அடுத்த பாரா.எழுதிப்பாரு. அப்புறம் மொத்தமா படிச்சுட்டு எழுதிப்பாரு. நீயா திருத்து. மனப்பாட இங்கிலீசு பாட்டை ஒவ்வொரு வரியா மன்ப்பாடம் பண்ணு. ஒவ்வொரு வரியா எழுதி, எழுதி கூட்டிக்கிட்டே எழுதிப்பாரு. " என்று முத்துவுக்கு தெரிந்த வழிமுறையை எல்லாம் மதிக்கு சொல்லிக்கொடுத்தான். "விடாதே பிடின்னு  மாட்டை விரட்டுனாத்தானா மாட்டைப் பிடிக்க முடியும், என்னால பிடிக்க முடியாதுன்னு சொல்லி வீட்டுக்குள்ளேயே உக்காந்துகிட்டா மாட்டைப் பிடிக்க முடியுமா ? அது போலத்தான் படிப்பும். நீயா , நானான்னு பார்த்துருவோம்ன்னு மனசைத் திடம் பண்ணி, படிச்சாத்தான் நமக்கு உசத்தி என்கிறதை உணர்ந்து உக்காந்திட்டா போதும் , தானா படிப்பு வந்திரும், மார்க்கும் வந்திரும் " என்றவுடன் மதி நிமிர்ந்து உட்கார்ந்தான்.

                      சாப்பிட்டு, பின்பு சாப்பிட்டு முடித்து ஒரு ஒரு மணி நேரம் உட்கார்ந்து அவனோடு பேசிய பிறகு அவனுக்கு ஏதோ பிடிபட்டது போல , " முத்து மாமா, இனி நான் நல்லாப்படிச்சிருவேன் மாமா " என்றான் மதி  தன்னம்பிக்கையோடு.

                       அடுத்த வருடம் தைப்பொங்கலுக்கு ,ஊருக்கு போன போது தனது மார்க் கார்டைக் கொண்டுவந்து காட்டினான் மதி. எல்லாவற்றிலும் எழுபதுக்கு மேல் மதிப்பெண் எடுத்திருந்தான். மகிழ்ச்சியாக இருந்தது. ரோட்டுக்கு வந்தவுடன் பேரின்பம் நின்று கொண்டிருந்தான். முத்துவைப்  பார்த்ததும் வேகமாக வந்த அவர்" சும்மாவா சொன்னாங்க, அடி உதவுறது மாதிரி,அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்கேன்னு, காப்பரிட்சையிலே பெயிலானதுக்கு போட்ட அடியில , உன் மச்சுனன், அதுதான் என் தம்பி மதி எல்லாத்திலேயும் பாஸ் மார்க்கு, அதுவும் நிறைய மார்க்கு எடுத்திருக்கிறான் தெரியும்ல " என்றான். " அப்படியா , சந்தோசம் மாமா " என்று சொல்லிக்கொண்டே பேரின்பத்தை தாண்டிச்சென்று கொண்டிருந்தான் முத்து.  













சிறுகதை எழுதியவர் : வா. நேரு
வெளியிட்ட எழுத்து.காம் இணைய தளத்திற்கு நன்றி 

Friday, 2 August 2013

அண்மையில் படித்த புத்தகம் : அரைக்கணத்தின் புத்தகம்-சமய்வேல்

அண்மையில் படித்த புத்தகம் : அரைக்கணத்தின் புத்தகம்
புத்தக் ஆசிரியர்                        :  சமய்வேல்
வெளியீடு                                 :  உயிர்மை பதிப்பகம், சென்னை-18
முத்ல் பதிப்பு                            : டிசம்பர் 2007  விலை ரூ 70, பக்கங்கள் : 120
மதுரை மைய நூலக எண்      : 177202

                                                            கவிஞர் சமய்வேல் அவர்களின் கவிதைத்தொகுப்பு இந்த நூல்.மொத்தம் 81 கவிதைகளை உள்ளடக்கியது. என் கண் முன்னால் பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்குள் சில ஆண்டுகளாகவே திரு.சமய்வேல் நடமாடினாலும், தான் ஒரு படைப்பாளி என்பதைக் காட்டிக்கொள்ளாத தோற்றமும், அமைதியும் எப்போதும் அவரிடம் .  அவர் உரக்கப் பேசி நான் பார்த்ததில்லை, அவருடைய கவிதைகளும் அப்படித்தான் அமைந்துள்ளன, மௌனமாய் பல்வேறு கேள்விகளை எழுப்பும் வண்ணம்.

                       பூமியின் கோடிக் கணக்கான /ஜீவங்களில் நானும் ஒன்று என்/
                       துக்கம் தாகம் சந்தோஷமென / நானொரு பெரும் சமுத்திரம் /  என்று சொல்கின்றார் 'என் பெயர் ' என்னும் கவிதையில் (பக்கம் 22) .'அவன் பாடல் ' என்னும் கவிதை
" ஆறுமுகக் கிழவன் பாடிக்கொண்டிருக்கிறான்/ ராத்திரி முழுதும் விடிய விடிய /
பிள்ளைகள் இழந்தான் கிழவியும் இறந்தாள்/ சொத்தும் அற்றான்/இரத்தம் உலர்ந்து/
தசைகள் கரைந்து எண்ண முடியாக் /கோடுகளாகத் தோலும் சுருங்க/
மீதி உயிரையும் பாடலாக்கி/இரவை நிரப்புகிறான் " என்னும் கவிதை வரிகளும் அதன் தொடர்ச்சி வரிகளும் கடைசியில்
" ஆறுமுகக் கிழவன் அனாதைதான் / உலகு போல வானம் போல. " (பக்கம் 25) என்று கவிதை முடிகின்றபோது இரங்கலை நமது மனதில் அடர்த்தியாகவே கவிதை வரிகள் நிரப்புகின்றன. 

                         இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை 'அக்கினிக் காட்சிகள் '

'சுற்றிலும்  வெட்ட வெளிக் கரிசல் / வட்ட வனாந்திரத்தில் ஒருவன் /
'வெயில் முதுகில் வியர்வையாய் வழிய / தன்னந்தனியே உழுது கொண்டிருக்கிறான் /

சால் சாலாக் அடி அடியாக / பொறுமையாக ஒவ்வொரு கோடாய் /
உழுது கொண்டிருக்கிறான்/ விலா எலும்பு தெரிகிற மாடுகளோடு /
சிறிய கலப்பையால் கரிசல் உழவன் / உழுது கொண்டிருக்கிறான்-மண்ணை/
கறுப்பு மண்ணை உழுது கொண்டிருக்கிறான்

எங்கள் நவீன வாழ்க்கை பற்றியும்/ விஞ்ஞான விவசாயம் பற்றியும்/
எந்திர எலட்ரானிக் விந்தைகள் பற்றியும்/ கவலையின்றி உழது கொண்டிருக்கிறான்.

ரெண்டு வருஷமும் பெய்யாத மழை / இந்த வருஷம் பெய்துவிடும் என்று/
வெள்ளை மேகங்களை நம்பி/ உழுது கொண்டிருக்கிறான்.

'இடுப்பில் ஒரு கோவணம் /தலையில் ஒரு துண்டு/ கரும் 'பூமியின் 'மேலே/
களிமண் உருண்டையாய்/ ஊர்ந்து உழும் கரிசல் உழவனே ,/

அழகில் ஊறிய என் கவிதை வரிகளை/ ஓடையில் கொட்டிவிட்டு/
உன் காலடியை நெருங்க முயற்சிக்கிறேன்/ முடியவில்லை முடியவே இல்லை " (பக்கம் 48-49)

உழவுக்கு வந்தனை செய்வோம் என்பதை இவ்வளவு அழுத்தம் திருத்தமாய் எந்தக் கவிஞரின் வரிகளும் உழவனைச்சொல்லி சொன்னதாய் நான் படித்ததில்லை. சால் சாலாக உழுது பார்த்த அனுபவம் இருந்தால்தான் , உழவனாக நின்று எழுத முடியும். சமய்வேல் எழுதியிருக்கின்றார்.

' நகரத்துச் சுவர்களின் மத்தியில் ஒரு கிராமத்து மனிதன் ' என்னும் கவிதை அற்புதமாய்.
 " எல்லாச்சுவர்களையும் வெறுக்கிறேன்....
அவ்வளவு சுவர்களும் அந்நியச்சுவர்கள்/நம்மைக் கூறுகட்டிப் பிரித்து
நம் உரையாடலைக் குலைக்கிற / அடையாளமற்ற சுவர்கள் ...." (பக்கம் 60-61)  எனும் கவிதை நகரத்தின் போலித்தனததை, அந்நியத்தனத்தை அப்பட்டமாய் தோலுரிக்கிறது.

'கோயில் கலாச்சாரம்' என்னும் கவிதை
பாம்பை வணங்குவோம் /பெருச்சாளியை வணங்குவோம்/பேப்பரை வணங்குவோம்/
சதுரங்களை வணங்குவோம்/முக்கோணங்களை வணங்குவோம்/
பஸ்ஸைக் கும்பிடு /ரயிலைக் கும்பிடு /பல்லியைக் கும்பிடு /நெருப்பைக் கும்பிடு /
நடிகை ஸ்ரீஸ்ரீயைக் கும்பிடு/சாராய வியாபாரியைக் கும்பிடு / ஆட்டோவுக்குப் பொட்டு வைத்து /விழுந்து கும்பிடு /
எம்.எல்.ஏ.வைக் கும்பிடுவோம்/ஆபிசரை வணங்குவோம்/பெரிய ஆபிசரைத் தண்டனிடுவோம்/
டி.வி.யைக் கும்பிடுவோம்/ மந்திரிகள் காலில் விழுவோம்/உளுந்த வடையைக் கும்பிடுவோம் /
பனியனைக் கும்பிடு /ஜட்டியைக் கும்பிடு /பனியனைக் கும்பிடு / நிலாவைக் கும்பிடு /
சூரியனைக் கும்பிடு /காக்காவை வணங்கு /கழுதையைக் கும்பிடு /
தமிழா / இரு கரங்குவித்து / கும்பிட்டுக்கொண்டே இரு " (பக்கம் 74). நல்ல நையாண்டிக் கவிதை. படிக்கிறவனுக்கு பட்டென்று உரைக்கிறமாதிரியான கவிதை இது. 

இந்த நூலின் தலைப்பாக உள்ள 'அரைக்கணத்தின் புத்தகம் ' என்னும் கவிதை வாழ்க்கையின் வினோதத்தைச்சொல்லும் கவிதையாக " ஏய் , நில், நில்லு /சொல்லி முடிப்பதற்குள் / மாடிப்படிகளில் என் குட்டி மகள்/ உருண்டு கொண்டிருக்கிறாள்/ ....
ஒரு சொடுக்கில். இழுப்பில்.புரட்டலில்/முழுச்சித்திரமே மாறிவிடும் / வினோதப் புத்தகம் அது "  சொல்லப்பட்டிருக்கிறது. .

                   இது மாதிரியான நிறைய கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பாக இந்தக் கவிதை நூலை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ' வாழ்க்கை பற்றிய என் கருத்துக்கள் /அனைத்தும் ஒரு மரங்கொத்தியாய் மாறி / என் முன் பறந்து கொண்டிருந்தது " (பக்கம் 102 ) என்று கவிஞர் சமயவேல் சொல்வதைப் போல வாழ்க்கை பற்றிய பலவிதமான தனது கருத்துக்களை பருந்துப்பார்வையாய் பார்த்து அதனைக் கவிதையாய் வடித்திருக்கும் புத்தகம் . படித்துப்பார்க்கலாம். சில கவிதைகளில் நாமும் அதன் பாத்திரங்களாய் மாறி , நம்மையும் அக்கவிதை உணர வைப்பதை உணரலாம். 'சில சொற்கள் ' என்னும் முன்னுரையும் , பின் இணைப்பும் கவிஞரைப் புரிந்து கொள்ளவும் கவிதையின் சூழலைப் புரிந்து கொள்ளவும் உதவுகின்றன.


Wednesday, 24 July 2013

தீவிர சிகிச்சைப் பிரிவு- வா. நேரு

                                



"நீங்கள்  சுட்டிக் காட்டும் குறைகள் ,எங்களுக்கு நீங்கள்  கொடுக்கும் பரிசு " அந்த மருத்துவ மனையின் உள்ளும் புறமும் அநேக இடங்களில் வண்ணப்போர்டுகளில் வேறு வண்ண  எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த மருத்துவமனை பல ஏக்கரில் ,பல மாடிக் கட்டிடங்களோடு அமைந்திருந்தது. இப்போது இந்த இடத்தை வாங்குவதென்றால் பல கோடி ரூபாய் ஆகலாம். ஆனால் மருத்துவமனையின் நிறுவனர் பல வருடங்களுக்கு முன்னால் இந்த் இடத்தை வாங்கிப்போட்டிருப்பார் போலும். ஒரு தொழிற்சாலை போல இயங்கிக் கொண்டிருந்த மருத்துவமனை மிகப்பெரிய பிரமிப்பை முத்துவுக்கு  கொடுத்தது. . கார், மோட்டார் சைக்கிளை நிறுத்துமிடமே பெரும் நிலப்பரப்பு. உள்ளே ஒரு மிகப்பெரிய  உணவு விடுதி .சைவ உணவா, அசைவ உணவா, வெளி மாநில உணவா, செட்டி நாட்டு உணவா என வித விதமாய் உணவுகளைத் தயாரித்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.  வெள்ளை சேலையில் , வெள்ளை சட்டையில், வெள்ளை கோட் போட்டவாறு பலர் அங்குமிங்கும் நடந்தவாறு இருந்தனர். அந்த மருத்துவமனையின் 4-வது மாடிக்கு வந்து சேர்ந்தான் முத்து.  வரிசையாய் போடப்பட்டிருந்த இரும்பு நாற்காலிகள் , நாற்காலிகளுக்கு கீழ் கொண்டு வந்த மூட்டை முடிச்சுகள். நாற்காலிகளுக்கு மேல் காலை மடக்கியும், காலை நீட்டியும் , கைகளை விரித்தும் ,கோர்த்தும் ஆனால் கவலை தோய்ந்த முகங்களோடு ஆண்களும் பெண்களுமாய் வரிசை வரிசையாய். "தீவிர சிகிச்சைப் பிரிவு " என்னும் போர்டுக்கு முன்னாள் அமர்ந்திருக்க முத்துவும் மூட்டை முடிச்சகளோடு அவர்களோடு உட்கார்ந்தான். .

                       இன்றோடு 15 நாட்கள் ஆகிவிட்டது மருத்துவமனைக்கு உள்ளே வந்து . முத்துவின் அம்மா இன்னும் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்தார் அப்படி ஒரு அமைதி இருந்தது அந்தத் தீவிர சிகிச்சைப் பிரிவில். சுடு காட்டு அமைதி என்பார்களே அப்படி ஒரு அமைதி. மருத்துவக் கருவிகள் ஓடும் சத்தமும் , சில நேரங்களில் நர்சுகள், டாக்டர்கள் பேசும் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தன.. அம்மாவின் முகத்தை மூடியபடி ஏகப்பட்ட குழாய்கள் . தலைக்கு மேலே மூன்று மினி கம்ப்யூட்டர் போன்ற கருவிகளில் குறுக்கும் நெடுக்குமாய கோடுகள் ஓடிக்கொண்டிருந்தன. மேலே அளவுகள் தெரிந்தன. பச்சை, மஞ்சள், சிவப்பு என வெவ்வேறு கலர்களில் அளவுகள் இருநதன. முத்து படித்தவன் என்றாலும் அந்த அளவுகளை வைத்து அம்மாவின் நிலமை எப்படி என்பதனை அறியமுடியவில்லை. காலையில் ஒரு முறைதான் அம்மாவை உள்ளே சென்று பார்க்க முடியும், டாக்டரிடம் அம்மாவின் நிலமை பற்றிக் கேட்க முடியும்.  தீவிர சிகிச்சைப் பிரிவுக்குள் உள்ளே சென்று பார்க்க கோட் போட்டுத்தான் செல்ல வேண்டும். முதல் நாள் டாக்டர்கள் போடும் கோட்டைப் போட்டுக்கொண்டு உள்ளே போய்விட்டான் முத்து. . சிரித்த டாக்டர் இந்த கோட் எங்களுக்கு, உங்களுக்கு வேறு கோட் வெளியே தொங்கும், அணீந்து வாருங்கள் என்று சொல்ல வேறு கலரில் இருந்த கோட்டை அணிந்து கொண்டு உள்ளே போய் அம்மாவைப் பார்த்தான் முத்து. .சேர்த்த அன்றைக்கே கேட்டுத்தான் சேர்த்தார்கள் , செயற்கை சுவாசம் பொருத்தித்தான் காப்பாற்ற வேண்டும், அதற்கு மட்டும் ஒரு நாளைக்கு  பதினைந்தாயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்றார்கள். சரி என்று சொல்லித்தான் முத்துவும் அவனது கூடப்பிறந்தவர்களும் அம்மாவை மருத்துவமனையில் சேர்த்தார்கள் . . எதையும் மனதில் வைக்காமல் பட படவென்று பொரிந்து தள்ளும் குணமுடைய அம்மா, சில நேரங்களில் முழித்துப்பார்ப்பதுவும், எதையோ சொல்வதுபோல் முயன்று முடியாமல் கண்ணீர் வடிப்பதுவும் முத்துவுக்கு கொடுமையாக இருந்தது.. . முத்துவின் அம்மாவைப் போல இருபது முப்பது நோயாளிகள் அந்த தீவிர சிகிச்சைப்பிரிவில் .15 நாளில் 5 இலட்சம் ரூபாய் காலியாகி இருந்தது. மருந்து, மாத்திரைகள், டாக்டர் கட்டணம்,பரிசோதனை, அறை வாடகை என ராக்கெட் வேகத்தில் பணம் கட்ட வேண்டியிருந்தது. அம்மாவைச்சேர்த்தவுடன் , 1 இலட்சம் அட்வான்ஸ் கட்டுங்கள் என்றவுடன் அடவுக்கடைக்குத்தான் ஓட வேண்டியிருந்தது முத்துவுக்கு  . நகைகளை வைத்து, வீட்டை விற்று, காட்டை விற்று , ஆட்டை , மாட்டை விற்று எல்லாம் அங்கு இருந்த நோயாளிகளுக்கு உறவினர்கள் பணம் கட்டிக் கொண்டிருந்தார்கள்.

                          வந்த இரண்டு மூன்று நாட்களிலேயே முத்துவுக்கு புதிய நட்புகள் கிடைத்தன . முன்பின் அறியாதவர்கள்தான் ,ஆனால் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு முன்னால் தினந்தோறும் மணிக்கணிக்கல் அமர்ந்த போது பக்கத்தில் முத்துவுக்கு பேசத்தான் வேண்டியிருந்தது. அம்மாவைப் பார்க்க என்று சிலர் கிராமத்திலிருந்து வந்து கொண்டேயிருந்தார்கள். அவர்களுக்கு அம்மாவின் நிலமையை விளக்க வேண்டியிருந்தது. சில நேரங்களில் சாப்பிட, கழிப்பறை செல்லும் நேரங்களில் பக்கத்தில் இருப்பவர்களிடம் வைத்திருக்கும் பைகளைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிச்செல்ல வேண்டியிருந்தது. அதைப் போலவே அவர்களும் முத்துவிடம் சொல்லிவிட்டு சென்று வந்தார்கள். இரவில் முதலிலேயே வராண்டாவில் படுத்துக்கொள்ள இடத்தை ரிசர்வ் செய்ய வேண்டியிருந்தது. கொசுக்கடியும் ,இரவு முழுவதும் நோயாளிகளைத் தள்ளிக்கொண்டு வரும் வண்டிகளின் ஓசையும் , நோயாளியாய் படுத்திருக்கும் உறவினர்களைப் பற்றிய கவலையுமாய் யாரும் சரியாகத் தூங்கியதாகத் தெரியவில்லை முத்துவுக்கு. பேச்சு, பேச்சு, பேச்சுத்தான் ஒரே வடிகால். ஒவ்வொருவரும் தங்கள் கவலைகளை வார்த்தைகளால் கொட்டக்கொட்ட , கேட்டுக்கொண்டே பொழுது ஓடிக் கொண்டிருந்தது முத்துவுக்கு.

                                                       
                            இராமநாதபுரம் பக்கத்திலிரிந்து பாம்பு கடித்த பையனைத் தூக்கி கொண்டு வந்து சேர்த்திருந்தார்கள். 20 வய்தே ஆன பையன், இருட்டில் நடந்து சென்றவனைப் பாம்பு கடித்திருக்கிறது. பாம்பு கடித்த இடத்தில் கட்டைப் போட்டு அங்கு இருக்கும் ஆஸ்பத்திருக்குத் தூக்கிக் கொண்டு ஓட, இரத்தத்தில் நஞ்சு  நிறையக் கலந்து விட்டது, மதுரைக்கு கொண்டு செல்லுங்கள் என்று சொல்லிவிட்டதால் இங்கு கொண்டு வந்து சேர்த்திருந்தார்கள். பெட்டில் பக்கத்தில் போய் அந்தப் பையனைப் பார்த்தான் முத்து . பள பள என கால் முழுவதும் அப்படி ஒரு பள பளப்பு, கால் பயங்கரமாக வீங்கி வேறு இருந்தது. அந்தப் பையனைச்சேர்ந்தவர்கள் 20 , 30 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு முன்னாள் அமர்ந்திருந்தார்கள். அனைவரது முகத்திலும் சோக ரேகை. அந்தப் பையனின் தாயார் ஓங்கி குரலெடுத்து ஒப்பாரி வைக்க சுற்றி இருந்தவர்கள் இப்படி எல்லாம் அழுதால் ஆஸ்பத்திரியை விட்டு விரட்டி விடுவார்கள் , அமைதியாக இரு , அமைதியாக இரு என்று அதட்ட ஒப்பாரியை விட்டு விட்டாள் அந்த அம்மா , ஆனால் அவளின் கண்களிலிருந்து. கண்ணீர் ஆறாய் ஓடிக்கொண்டிருந்தது.    அந்தப் பையனின் அப்பா , மருத்துவமனைக்கு உள்ளே இருந்த கோயிலுக்குப் போவதும் வருவதுமாக இருந்தார். விபூதியைக் கொண்டு வந்து கூட இருந்த அனைவரிடமும் கொடுத்து நீங்களும் என் பிள்ளையைக் காப்பாற்ற கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார். 

                                தூத்துக்குடி பக்கம் கிராமத்திலிருந்து ஒருவர் அவரது மகனை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்திருந்தார். அறிமுகம் ஆகி அவரிடம் பேசஆரம்பித்து எப்படி மகனுக்கு விபத்து நிகழ்ந்தது என முத்து  கேட்டவுடன் கொட்டித் தீர்த்து விட்டார்." சார்,என் மகன்  இன்ஜினியருக்குப் படித்திருக்கிறான் , சென்னையிலே பெரிய கம்பெனியிலே வேலை பார்க்கிறான். கம்பெனியில் லீவு கிடைக்கலயாம். நெருங்கின நண்பரோடு திருமணம் என்று சொல்லி சென்னையிலே இருந்து டூ விலரில் திருநெல்வேலிக்கு வந்திருக்கிறான். மேலூருக்குப் பக்கத்தில் எவனோ தட்டி விட்டுப் போய் விட ரோட்டில் கிடந்திருக்கின்றான். பக்கத்தில் இருந்தவர்கள் ஆம்புலன்சுக்கு சொல்லி, இந்த ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு எனக்குத் தகவல் கொடுத்தார்கள். என்ன படிப்பு படித்து என்ன பண்ண ? என்ன வேலை பார்த்து என்ன செய்ய ? பிராக்டிக்கல் வாழ்க்கை தெரியலையே சார் ? பிளைட்டில் வந்திருக்கலாம் அவசரம்ன்னா, இல்லே ஒரு காரைப் பிடிச்சு வந்திருக்கலாம், இப்படித் தனியா டூ வீலரில் வந்து இப்படிக் கிடக்கிறானே சார் " என்று சொல்லும் போது கண்கள் கலங்கி அழப் போவது போல இருந்தார். " சார் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுன்னு விடுங்க சார், தேறி வந்திடுவார் " என்று முத்து தேற்றினான் . இரண்டு நாளுக்கு முன்னால் டாக்டரிடம் அவர் சொல்லிக்கொண்டிருந்தார் " சார், எவ்வளவு   ரூபாய் ஆனாலும் பரவாயில்லை , என் மகனை முழுசா நல்லாக்கி கொடுத்திருங்க " என்று . கையில் வைத்திருந்த சிலுவையை எடுத்து ஒத்திக்கொள்வதும் ,எதோ ஸ்தோத்திரம் சொல்வதும், பையில் வைத்திருந்த பைபிளை எடுத்து சில பகுதிகளைப் படிப்பதும் மருத்துவமனைக்கு உள்ளே இருந்த சர்ச்சுக்கு  போவதும் வருவதுமாக  இருந்ததை கவனித்துக்கொண்டிருந்தான் முத்து.

                               சுற்றி , சுற்றிப் பார்த்தால் அழுகை, கண்ணீர், துயரம், துன்பம், அவர்களின் துன்பங்களைப் பார்க்கின்றபோது நமது துன்பம் பரவாயில்லை என்று முத்துவுக்கு தோன்றியது. 70 வயதிற்கு மேல் ஆன  அம்மாவைக் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றோம். 20 வயது, 30 வயது ஏன் ஒரு 10 வய்து சிறுமி எனப் பலர் தீவிர சிகிச்சை பிரிவில்.இருந்தார்கள். பெரும்பாலும் இரு சக்கர வாகன விபத்துக்கள். தலையில் ஹெல்மேட் இல்லாமல் , கண நேரக் கவனக்குறைவால் விபத்தில் மாட்டி , உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்கள். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண பிரிவுக்கு சில நோயாளிகள் குணமடைந்து சென்றார்கள். சில நோயாளிகளின் உறவினர்கள் மிகப்பெரிய அளவில் சத்தத்தோடு அழும்போது , சரி முடிந்து விட்டது என்பது முத்துவுக்கு தெரியும் . கொஞ்ச நேரத்தில் நோயாளியாய் உள்ளே சென்றவரின் உடல் பிணமாய் வண்டியில் செல்லும். ஒவ்வொரு முறையும் ஒரு வண்டி செல்லும் போது மற்ற நோயாளிகளுக்காக வந்தவர்களும் சேர்ந்து அழுதார்கள். அதுவும் அந்த இராமநாதபுரம் பாம்பு கடித்த பையனோட அம்மா ஒப்பாரியும் அழுகையுமாய் தன் பிள்ளை இறந்ததுபோலவே எண்ணி அழுது கொண்டிருந்தாள் ஒவ்வொரு வண்டி போகும்போதும். ஆனால் அந்த மருத்துவ மனை ஊழியர்கள்  சில நோயாளிகள் பிணமாக வண்டியில் போகும்போது மிக இயல்பாக பார்த்துக்கொண்டிருந்தனர். கல் நெஞ்சோ, மனிதர்கள் அழுவதை மிக இயல்பாக பார்த்துக்கொண்டிருக்கிறார்களே,இறப்பை இவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்கின்றார்களே என்று தோன்றியது முத்துவுக்கு, ஆனால் அதுதான் அவர்கள் வாழ்க்கை. இவர்களுக்கும் வேலைக்குச்சேர்ந்த புதிதில் வருத்தம் இருந்திருக்கும், அழுகை வந்திருக்கும். முதன் முதலில் காசுக்காகப் படுக்கும் ஒருத்தி , போகப் போக கட்டையாகி, வெறும் ஜடமாகி மரத்துப்போவது போல இவர்களும் மாறியிருக்கக்கூடும். கண்ணீர் ,அழுகை, கதற்ல் இவற்றையெல்லாம் ஏதோ வேற்றுக் கிரகவாசிகள் பார்ப்பது போல மிகவும் இயல்பாக பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

                                                                    முத்து  உட்கார்ந்திருந்த நாற்காலிக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சிறுமியைக் கவனித்தான். இரண்டு நாட்களாக் இங்குதான் இருக்கிறாள். அவள். "எத்தனாவது படிக்கிற " என்றான் அவளிடம் முத்து .  அவள்  தன் கையில் வைத்திருந்த சாமி படத்தை நெஞ்சோடு சேர்த்து வைத்துக்கொண்டு " ஆறாம் வகுப்பு " என்றாள்.  " யார் கூட வந்திருக்கிற " என்றான் முத்து . கொஞ்சம் தூரத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணையும் பையனையும் காட்டி " என் அம்மாவோடும், என் அண்ணனோடும் " என்றாள் " யார் , உள்ளே இருக்கிறா ? " என்றவுடன் ,' ' எனது அப்பா " என்றாள். முத்து சிறுமியுடன்  பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் அந்த சிறுமியின் அம்மாவும் அண்ணனும் பக்கத்தில் வந்தார்கள் " செல்வி, என்ன பண்ணிக்கிட்டிருக்க " என்று கேட்ட அந்தப்பெண்ணிடம் முத்து  விசாரித்தான்.

                                                           அந்தச்சிறுமி, செல்வியின் அப்பாவை இங்கு சேர்த்திருக்கின்றார்கள். பள்ளிக்கூட ஆசிரியராக இருக்கிறாராம். 42 வயது ஆகின்றதாம்.  செல்வியிடமும், அவளது அம்மாவிடமும், அண்ணனிடமும் அவ்வளவு அன்பாக இருக்கக்கூடியவர் போலும், பேசும் ஒவ்வொருவரும் அவ்வளவு பிரியத்தோடு பேசினார்கள். நல்லதொரு குடும்பமாக தெரிந்தது , என்ன பிரச்சனைக்காக வந்து சேர்த்திருக்கின்றீர்கள் என்று கேட்டான் முத்து. எப்போழுதும் பள்ளிக்கு சென்று வந்தவருக்கு  மூன்று நாட்களுக்கு முன் காய்ச்சல் அடித்திருக்கிறது., அருப்புக்கோட்டைக்கு அருகில் , டாக்டரிடம் சென்று காண்பித்திருக்கின்றார்கள். காய்ச்சல் அள்வு மிக அதிகமாக இருக்கின்றது, மதுரைக்கு கொண்டு செல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள், இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கின்றார்கள் என்பது தெரிந்தது.வந்த முதல் நாள் சாதாரணமாகத்த்தான் இருந்தார்கள். சாதாரணக்காய்ச்சல் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தார்கள் போலும் .

                                                        இரண்டு நாட்களாகவே செல்வி கையில் ஒரு சாமி படத்தை வைத்திருக்கின்றாள். சிறு பிள்ளையிலிருந்து பக்தி மிக அதிகமாக சொல்லிக் கொடுக்கப்படடவள் போலத் தெரிந்தது.  . விடாது ஏதோ சொல்லி பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தாள். அந்த சாமி படத்தை அவ்வளவு பாதுகாப்பாக எந்த இடத்திற்கு போனாலும் கொண்டு சென்று கொண்டிருந்தாள். "தேவை அற்றுப்போன இடமே கடவுள் செத்துப்போன இடமாகும் "  என்று பெரியார் சொல்லியதை 'இனிவரும் உலகம்' புத்தகத்தில் படித்த் ஞாபகம் முத்துவுக்கு..  அந்த மருத்துவமனையில் -அதுவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நோயாளியின் உறவினர்களிடம் அதீத கடவுள் பக்தி இருந்தது ஒன்றும் ஆச்சரியமில்லை. " அண்ணே, பயமும், சுய நலமும்தான் கடவுள் பக்திக்கு அடிப்படை , அது இல்லையென்றால் பக்தி இல்லை " என்று வழக்கறிஞர் மகேந்திரன் அடிக்கடி சொல்வதைக் கேட்டது முத்துவிற்கு ஞாபகத்திற்கு வந்தது. உறவினர்கள் இறந்து விடுவார்களோ, என்ன நிகழுமோ எனத் தெரியாமல் பயத்தில் இருந்த நோயாளிகளின் மன நிலையை நன்றாக உணர்ந்தவர்கள்போலும் அந்த மருத்துவமனை நிர்வாகிகள் . அந்த மருத்துமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவையும் கடவுள் வழிபாட்டையும் அருமையாக இணைத்திருந்தார்கள். ஒவ்வொரு தளத்திற்கும் ஒவ்வொரு மதத்தின் கோயில் இருந்தது. இந்துக் கோவில் , கிறித்துவ தேவாலயம், இஸ்லாம் மசூதி, சீக்கியர்களின் கோவில் போன்ற வடிவமைப்புகளில் சிறிய அளவில் இருந்த வழிபாட்டுத்தலங்கள் நோயாளிகளின் உறவினர்களுக்கு மிகப்பெரிய வடிகாலாக இருந்தன. . நோயாளிகளுக்கு கவுண்டரில் சென்று கத்தை கத்தையாய் பணத்தைக் கட்டும் உறவினர்கள், மறக்காமல் தங்களுக்குரிய வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று பிரார்ததனை செய்து  கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். எல்லா மத்த்தினருக்கும் பொதுவானது இந்த மருத்தவமனை என்று காட்டுவதற்கோ, அல்லது நோயாளியைக் காப்பாற்ற முடியவில்லை என்றால் கடவுள் மேல் பழியைப் போட்டுவிடலாம் என்று எண்ணியோ மருத்துவமனை நிர்வாகமே இந்த ஏற்பாட்டைச்செய்திருந்தது .

                                                 பல விதத்திலும் வசதியானவர்களுக்கு வாய்ப்பான அந்த மருத்துவமனையில் ஒரு விசயம் மட்டும் பெரிய துயரமாக இருந்தது முத்துவுக்கு. மருந்து மாத்திரை வாங்குமிடம். சாதாரண நோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, நுரையீரல் தீவிர சிகிச்சைப் பிரிவு, அதி தீவிர சிகிச்சைப் பிரிவு எனப் பல பிரிவுகள் இருந்தன, ஆனால் மருந்து மாத்திரை வாங்குமிடத்தில் அனைவரும் சமம்தான். சீட்டைப் போய் கொண்டு கொடுக்க ஒரு இடம், பணம் கொடுக்க ஒரு இடம், மருந்து வாங்க ஒரு இடம் எனப் பல இடங்கள் இருந்தன். சீட்டைக் கொண்டு போய் கொடுத்தால் 30 நிமிடம் , 40 நிமிடம் என ஆகியது. அப்படித்தான் தீவிர சிகிச்சைப்  பிரிவில் இருந்து அம்மாவுக்கு 'உடனடியாக அய்யாயிரம் ரூபாய்க்கு மருந்து வாங்கி வாருங்கள் 'எனப் பதட்டத்துடன் சொன்னார்கள். அவர்களின் பதட்டம் முத்துவை தொற்றிக்கொள்ள , அவசரம் அவசரமாக படிகளில் ஓடிவந்து சொல்லி, பணத்தைக் கொடுத்து பில்லை மருந்து எடுக்கும் இடத்தில் கொடுத்தான். ஆண்களும் , பெண்களுமாய் சிரித்துப்பேசிக்கொண்டே மருந்துகளை எடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். 5 ந்மிடம், 10 நிமிடம் என ஆகியபோதும், ஒரே மருந்தான 5000 ரூபாய் மருந்து கைக்கு வரவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த முத்து , " உங்க அப்பன், ஆத்தா யாராவது இப்படி தீவிர சிகிச்சைப் பிரிவில் அவசரம் எனக்கேட்டால் , இப்படித்தான் தாமதப்படுத்துவீர்களா " என உரக்க குரல் எழுப்பியவுடன், தீவிரத்தை உணர்ந்த அவர்கள் மருந்தை உடனடியாக முத்துவின் கையில் கொடுத்தர்ர்கள் . தீவிர சிகிச்சைப் பிரிவினருக்கு மட்டும் தனி மருந்துக்கடை வைக்க மாட்டார்களா, மத வழிபாட்டுத் தலங்கள் இத்தனையை வைத்தவர்கள் இதனை வைக்கக்கூடாதா என எண்ணம் முத்துவின் மனதில்  ஓடியது.


                                                 செல்வியின் அம்மா மருத்துவமனைக்குள் இருக்கும் கோயிலுக்குச்செல்லுவதும் நெற்றி நிறைய குங்குமம், விபூதியைப் பூசுவதுமாக இருந்தார். செல்வியின் அண்ணன் அமைதியாக இருந்தான். செல்வி அவனது அண்ணனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் . :டேய் , நம்ம சாமி நம்மைக் கைவிடாதுடா, நம்ம அப்பா யாருக்கு என்ன கெடுதல் பண்ணினாரு, சாமிக்கு தெரியும்டா, யாரு நல்லவரு,கெட்டவர்ன்னு, நம்ம உசிரே நம்ம அப்பாதாண்டா, எத்தனை பேருக்கு என்னென்ன உதவிகள் பண்ணியிருக்கிறாரு ". அவளது அண்ணன் அமைதியாக உட்கார்ந்து தலையை ஆட்டிக்கொண்டிருந்தான். 

                                           கொஞ்ச நேரத்திற்கு முன்னால் , செல்வியின் தாயாரை அந்த டாக்டர் அழைக்கிறார் என்று சொன்னார்கள். செல்வியின் அம்மா, செல்வி, அவளது அண்ணன் மூன்று பேரும் உள்ளே  போனார்கள்.அம்மாவைப் பாக்கப்போன முத்துவும் உள்ளே இருந்தான். அந்த டாக்டர் அவர்களிடம் விவரித்ததை முத்துவும் கவனித்தான்.. " நீங்கள் மிகவும் தாமதமாக இங்கு வந்து உங்கள் கணவரைச்சேர்ர்த்திருக்கின்றீர்கள். மூளைக் காய்ச்சலோடு இரண்டு முறை ஹார்ட் அட்டாக்கும் வந்து விட்டது. இரண்டு முறை காப்பாற்றி விட்டோம் இரண்டு நாளில். ஆனால் அவரது உடல் நிலை மிகவும் கவலை தரத்தக்கதாகவே இருக்கின்றது. மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள். நாங்கள் முழு முயற்சி செய்கின்றோம். ஆனால் உறுதியாக உயிரைக் காப்பாற்றி விடுவோம் எனச்சொல்ல முடியவில்லை, கடவுளின் கையில் தான் அவரது உயிர் . பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள், கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள்.அவரது நிலைமை அப்படி இருக்கின்றது" என்றார். செல்வியின் அம்மா அழுது கொண்டே " சார் ,எப்படியாவது அவர் உயிரைக் காப்பாற்றுங்கள் " என்றாள், டாக்டரையும் அம்மாவையும் மாறி , மாறிப் பார்த்துக்கொண்டிருந்த செல்வியின் அண்ணன் திடீரென்று டாக்டரின் காலில் நெடுஞ்சாண் கிடையாய் விழுந்தான். " எங்க அப்பாதான் எங்களுக்கு எல்லாம், அவ்வளவு பிரியமாக இருப்பார் எங்களிடம், எப்படியாவது அவரைக் காப்பாற்றுங்கள் " என்று கதற ஆரம்பித்தான் . அருகில் நின்றிருந்த முத்துவுக்கு  கண்களிலிருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது. சாமி போட்டாவை தன் நெஞ்சில் வைத்திருந்த செல்வி அழுதுகொண்டே வெகு வேகமாக எதோ சொல்லி பிரார்த்திக்க ஆரம்பித்தாள்.

                                   ஒரு மணி நேரம் கழிந்திருக்கும் . செல்வியின் அம்மா பேரைச்சொல்லி அழைத்தார்கள். ஏதோ சொல்லி, ஓங்கி அழ ஆரம்பித்த அவர் " அய்யையோ ஏன் ராசா என்ன விட்டுப்போயிட்டாங்களா, பச்சை மண்ணுகளை வச்சிக்கிட்டு என்னைத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டங்களா " எனறு கதற பக்கத்தில் சென்ற அந்தப் பையனின் " அய்யய்யோ அப்பா, அப்பா,அப்பா " என்ற கதறலும் கொடுமையாக முத்துவின் மனதை அழுத்த ஆரம்பித்தது. இரண்டொரு நாட்கள் மட்டுமே அறிமுகம் ஆன அந்தக் குடும்பத்திற்காக முத்துவின் கண்களிலிருந்தும் கண்ணீர் வரஆரம்பித்தது. அம்மாவும் ,அண்ணனும் அழ ஆரம்பித்தைப் பார்த்ததும் பக்கத்தில் ஓடிய செல்வியின் , கையில் இருந்த சாமி போட்டா நழுவிக் கீழே விழுந்தது.   சாமி போட்டோ  விழுவதைப் பார்த்தவண்ணம், அதனை எடுக்காமல் அப்பாவின் பிணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தாள் செல்வி.


    

(இந்தச்சிறுகதையை வெளியிட்ட சிறுகதைகள்.காம் இணையதளத்திற்கு நன்றி .) 



Saturday, 20 July 2013

அணமையில் படித்த புத்தகம் : மனப்பத்தாயம் (கவிதை நூல்)-கவிஞர் யுக பாரதி

அணமையில் படித்த புத்தகம் : மனப்பத்தாயம் (கவிதை நூல்)

ஆசிரியர்                     கவிஞர் யுக பாரதி
பதிப்பகம்                   : நேர் நிரை வெளியீடு ,முதல் பதிப்பு மார்ச் 2006                        :
மொத்த பக்கங்கள்    96           :    
விலை                           45                          :

                                                             கவிஞர் யுகபாரதியின் கவிதைத் தொகுப்பு .பத்தாயம் என்றால் என்ன என்பதற்கு நூலின் முன்பகுதியில் விளக்கம் உள்ளது. " பத்தாயம் -பண்டைய வீடுகளில் தானியக் குதிர்களாகப் புழங்கப்பட்டு- இன்று பழுதுபட்டும் புழுதி மண்டியும் கிடக்கின்ற ஒரு நினைவுச்சின்னம்." மதுரைப் பக்கங்களில் சொல்லப்படுகின்ற சால் என்று நினைக்கின்றேன். சேமிக்கப் பயன்படும் பழைய காலத்து சின்னக் கிட்டங்கி. பழைய நினைவுகளைச்சொல்லும் பத்தாயம் போல கிராமத்து நினைவுகளை எதார்த்தமாகச் சொல்லிடும் கவிதைத் தொகுப்பாய் இக்கவிதை நூல்.   குட்டிக் குட்டி கவிதைகள்., சில நீள் கவிதைகள்,  பல்வேறு தளங்களில் தன்னுடைய கிராமத்து அனுபவங்களை எழுதியிருக்கின்றார்.  யுக பாரதி ஒரு பொதுவுடமை இயக்கவாதியின் மகன். இயங்கிக் கொண்டேயிருந்த அப்பாவைப்  பற்றியும் அவருடைய இயக்கத்தைப்ப்ற்றியும் குறிப்பிடும் கவிதை 'வண்க்கம் காம்ரேட்'   இத்தொகுப்பில் எனக்கு மிகப்பிடித்த கவிதை

"வீட்டுக்குள் நுழையும் போதே / அப்பாவிடம் சொல்வார்கள் / வணக்கம் காம்ரேட்/
வசந்தி / வந்தவங்களுக்கு காபி கொடு / அரக்க பரக்க அம்மா / அடுத்த வீட்டுக் கதவு தட்டுவாள் /
வர்ற ஆறாம் தேதி / செய்ற்குழு / மறக்காம வந்திடுங்க/
ஐந்தாம் தேதியே / அம்மாவின் நகைகள் / அடகுக் க்டையில் /
பத்தாம் தேதியும் /அப்பா உறுதியோடு இருந்தார் / புரட்சி வரும் /
இதே போன்றொரு கனவோடு / ஐம்பது ஆண்டுகளாய் / பக்கத்து வீட்டுக் /கிறிஸ்துவத் தாத்தாவும் /

சொல்லிக் கொண்டே இருந்தார் /
இயேசு வருகிறார்/ இயேசு வருகிறார்/ இதோ இதோ/
வணக்கம் காம்ரேட்
.  ". 

அதே மழையில் என்னும் தலைப்பில் முன்னுரை போல யுகபாரதியின் நண்பர் அபிவை சரவணன் , யுகபாரதி பற்றி எழுதியுள்ளார். கவிதைத் தொகுப்பின் இறுதியில் ' மிக நுட்பமான அழகான கவனிப்பு " என்று ஞானக்கூத்தனும், 'கூட்டை உடைத்துக்கொண்டு ' என்று இராஜேந்திர சோழனும் இக்கவிதைகளைப் பற்றிய தங்கள் விமர்சனப் பார்வையை பதிந்துள்ளார்கள்

                    " அறிந்த கழிப்பறைகள் /அத்தனையிலும் /உடைந்தே கிடக்கும் /நீரள்ளும் குவளைகள் " நமது மனப்பான்மையை வெளிப்படுத்தும் கவிதையெனலாம். அது மட்டுமல்ல  பல பொது இடங்களில்  பேனாக்கள் நூலினால் கட்டித்தான் வைக்கப்பட்டிருகின்றன. பல இடங்களில் இன்னும் டம்ளர்கள் இரும்புசங்கிலிகலால் கட்டப்பட்டே தண்ணீர் குடிக்கப் பயன்படுகின்றன. இதனைப் போல பல கவிதைகள் ஒரு கருத்தைச்சொல்லி அதன் தொடர்பாய் பல கருத்துக்களைத் தூண்டும் வண்ணம் உள்ளன.'க்ல்லெறிதல், எலியின் நகங்கள், ஆகக்கூடி  அவள் பேர்' போன்ற கவிதைகள் தரும் வாசிப்பனுபவம் வேறுபட்டதாய், மாறுபட்டதாய் உள்ளத்தைத் தொடும் வண்ணம் . பின் அட்டையில் " யுக பாரதி -ஜிலு ஜிலு வர்த்தக எழுத்திற்கும் ,உண்மையான இலக்கியத்திற்குமான வேறுபாட்டை புரிந்திருப்பவர். தானறிந்த வாழ்வை சபைமுன் வைக்கும் தைரியமான நேர்மையானவர் " என்று வித்யாஷங்கர் சொல்வது உண்மைதான் என்பது வாசித்துப்பார்க்கும்போது எளிதாகப் புரிகின்றது.

Wednesday, 10 July 2013

வாழ்க மணமக்கள் !.



7.7.2013 , ஞாயிற்றுக்கிழமை , காலை 10 மணியளவில் திருச்சி உறையூரில் உள்ள கைத்தறி நெசவாளர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வாழ்க்கைத்துணை ஏற்பு விழா மனதிற்கு மிக நிறைவு  தந்த விழாவாக அமைந்தது. அகில இந்திய நாத்திகக்கூட்டமைப்பின் தலைவர் பேரா. ந்ரேந்திர நாயக் அவர்களின்  உதவியாளர் -தமிழகத்திற்குள் நரேந்திர நாயக் வரும் நேரமமெல்லாம்  அவரோடு இருந்து, அவரின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியையும் கற்றுக்கொண்டு செய்து , மூட நம்பிக்கை ஒழிப்பில் பணியாற்றும் தோழர் திருச்சியை சேர்ந்த செ.காளிமுத்து. . அவரின் திருமணம் எனது (வா. நேரு ) தலைமையிலும் பேரா. நரேந்திர நாயக் அவர்களின் வாழ்த்துரையோடும் நடைபெற்றது. திவ்யா- இளவரசன் இணைந்து வாழ முடியாத ஒரு கேடு கட்ட சமூகம் சார்ந்த சூழலில் , அந்தச்சமூகத்தை எதிர்த்து நடைபெற்ற திருமணம். பிற்படுத்தப்பட்டவரும் தாழ்த்தப்பட்டவரும் மணமக்களாக மன்றத்தில் இணைந்து பல பேர் முன்னிலையில் உறுதி மொழி எடுத்துக்கொண்ட திருமணம். ஆதியிலே இல்லையடா இந்த சாதி, பாதியிலே வந்த கேடு இது என்பதனையும் தாழ்த்தப்பட்டவர்-பிற்படுத்தப்பட்டவர் மணமக்களாக இணைந்து வாழக்கூடாதா? எத்தனை தோழர்கள் எடுத்துக்காட்டாக வாழ்கின்றார்கள் என்பதனை மன்றத்தில் எடுத்துச்சொல்ல வாய்ப்பாக அமைந்த துணை ஏற்பு விழா .

                               தோழர் காளிமுத்துவின் தாயார் மட்டும் விழாவில் பங்கேற்றார். தந்தை பங்கேற்கவில்லை. தோழியர் கல்பனாவின் தாயும் தந்தையும் விழாவில் , மேடையில் பங்கேற்றனர். வரவேற்புரையை தோழர் ஸ்டாலின் முடித்தவுடன் தலைமை உரையாக எனது உரை ஏறத்தாழ 40 நிமிடங்கள் அமைந்தது. தந்தை பெரியாரை, அண்ணல் அம்பேத்கரை, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய சுய மரியாதைத்திருமணம் வரலாறு என்னும் புத்தகத்தின் பகுதிகளை, சாதி என்னும் சகதியில் இன்னும் உழல வேண்டிய அவசியம் என்ன? ஏன் இந்த நிலை -மாற வேண்டாமா ? என்பதனை எல்லாம் சொல்ல வாய்ப்பாக அமைந்தது. தந்தை பெரியாரின் தொண்டர்கள் நாங்கள் , சொல்பவர்கள் மட்டுமல்ல, சொல்வதை செய்பவர்கள் நானும் என் துணைவியார் நே.சொர்ணமும்  சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டோம், 20 ஆண்டுகளுக்கு முன்னால் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்கள்தான் சனிக்கிழமை நடத்தி வைத்தார்கள் . . நானும் என் துணைவியாரும் எதில் குறைந்து போனோம், எவருக்குத்  தாழ்ந்து போனோம் ? எனக்கேட்டு தர்மபுரி ஊமை ஜெயராமன்- தகடூர் தமிழ்ச்செல்வி சாதி மறுப்புத்திருமணம் 30 ஆண்டுகளுக்கு முன்னால் செய்து கொண்டார்கள், பிள்ளைகள் எல்லாம் டாக்டராக பெரிய பதவிகளில், எத்தனை பேருக்கு கிராமத்தில் இருந்து வருகின்ற மாணவர்களுக்கு அவர்கள் வீட்டில் கல்வி மற்றும் உதவி அளிக்கப்படுகின்றது. தாங்களும் நன்றாக வாழ்ந்து மற்றவர்களுக்கும் உதவும் இவர்களைப் போன்றவர்கள் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டது தவறா? இதைப் போல ஆயிரக்கணக்கான கறுப்புச்சட்டைத் தோழர்கள், தோழியர்கள் ,பொது உடமை இயக்கத் தோழர்கள் களப்போராளிகளாக, ஜாதி ஒழிப்புப்போராளிகளாக இருந்தார்கள், இருக்கின்றார்கள்,இருப்பார்கள். . அதில் இன்று தோழர் செ.காளிமுத்துவும் ,ந. கல்பனவும் இணைந்திருக்கின்றார்கள் போன்ற செய்திகளையும் சொல்லி  ஜாதகம், சோதிடம் போன்ற மூடத்தனத்தின் முடை நாற்றம் ஊடகங்கள் வாயிலாக ,தொலைக்காட்சி வாயிலாக வீட்டிற்குள் வரும் கொடுமைகளைச்சொல்லி சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு என்பதனை எடுத்துக்கூற முடிந்தது.

                                   மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியினை எளிய முறையில் பேரா. நரேந்திர நாயக் அவர்கள் மன்றத்தில் செய்துகாட்டினார்.அவர் செய்து முடித்த போது ஆச்சரியமாகப் பார்த்த கிராமத்து மக்கள், அது எப்படி நிகழ்ந்தது என்னும் விளக்கத்தைக் காட்டியபோது கைதட்டி வரவேற்றனர். சாய்பாபா செய்த அற்புதங்கள், மாதா அமிர்ந்தானந்த மாயி , சூடாமணியாக இருந்தவர் எந்த தந்திரத்தின் மூலம் பிரபலமானார் போன்ற பல செய்திகளைக் கூறி மந்திரமா ,தந்திரமா நிகழ்ச்சிகளை செய்து காட்டினார். மருத்துவக் கல்லூரியின் பேராசிரியராக இருந்தவர், விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு மாநிலம் மாநிலமாக தொடர்ச்சியாக பயணித்து, பல மொழிகளைக் கற்றுக்கொண்டு (கன்னடம், ஆங்கிலம் ,இந்தி, மலையாளம், தெலுங்கு,தமிழ் ....)   அந்தந்த மக்களின் மொழியில் நிகழ்ச்சிகளை நடத்தும் தோழர். திரு நரேந்திர நாயக் அவர்கள் . ஏறத்தாழ 1400 கி.மீ(போக-வர ) பயணம் செய்து இந்த வாழ்க்கைத் துணை ஒப்பந்த விழாவில் கலந்து கொண்டது பாராட்டுக்குரியது. தொடர்ந்து தோழர்கள் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் கொராடாச்சேரி ஒன்றியச்செயலாளர்             தோழர் கா.ஜெயபால், , திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் த்லைவர் மு.நற்குணம், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ம.நாராயணசாமி ஆகியோர் வாழ்த்துரை மணமக்களுக்குச்சொல்லி, இந்த வாழ்க்கைத் துணை ஒப்பந்த விழா தாலியில்லாத, வரதட்சணை இல்லாத, நல்ல நேரம், ஜாதகம் பார்க்காத  சாதி மறுப்புத் திருமணம் என்பதனைச் சொல்லி தோழர் செ.காளிமுத்துவை, தோழியர் ந.கல்பனாவை அவரது பெற்றோரைப் பாராட்டினர்.

                                    வாழ்க்கைத் துணை ஒப்பந்த உறுதி மொழியினை  நான் கூற , அதனைத் தொடர்ந்து கூறி தோழியர் ந.கல்பனாவும்(பெற்றோர் மு.நடராசன்-அஞ்சம்மாள்,மணக்கால்,திருவாரூர் மாவட்டம்)  தோழர் செ.காளிமுத்துவும்(பெற்றோர் அ.சென்னிமலை- நாச்சம்மாள், இடையன்வலசு திண்டுக்கல் மாவட்டம்)  மாலை மாற்றி வாழ்க்கைத் துணைவர்களாக ஆகிக் கொண்டனர். இரண்டு மூன்று நிமிடத்தில் முடிந்த வாழ்க்கைத்துணை உறுதி ஏற்பு விழா. இந்தத் திருமண முறையை தொடங்கியவர் தந்தை பெரியார், சட்டப்படியாக செல்லுபடியாக்கியவர் பேரறிஞர் அண்ணா அவர்க்ள். அவர்கள் இருவருக்கும் நன்றி கூறி , மணமக்களை வாழ்த்தி அன்பும் , தொண்டறமும் உடையவர்களாக வாழுங்கள் என வாழ்த்தினேன்.

                                    முடிவில் தோழர் காளிமுத்து நன்றியுரை வழங்கினார். எனது உறவினர்கள், தந்தை முதலியோர் வராதது எனக்கு வருத்தம்தான். ஆனால் வரமாட்டேன் என்று சொல்கின்றார்கள் என்பதற்காக நான் பின் வாங்குவதில்லை என்று முடிவு செய்தேன். அய்யா நேரு போன்றவர்கள் எங்க்ளைப் போன்றவர்களுக்கு அதில் முன் உதாரணம் எனக்குறிப்பிட்டு நெகிழ்வான நன்றியுரை வழங்கினார். நன்றாக வாழ்ந்து காடடுவதுதான் சரியான பதில் என்பதனை வாழ்த்திய  அனைவரும் குறிப்பிட்டிருக்கின்றார்கள். வாழ்ந்து காட்டுவோம் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக என உறுதி கூறினார். மொய் வாங்காதது மட்டுமல்ல, மொய்க்கவரோடு வந்த பலரை, தயவு செய்து மொய்யைத் திருப்பிக்கொண்டு போய்விடுங்கள் எனத் திருப்பி அனுப்பியது இந்த ஒப்பந்த விழாவின் கூடுதல் சிறப்பு.   என்னைச்சுற்றி அலுவலகத்தில் இருக்கும் பல தோழர்கள், தோழியர்கள் சாதி மறுப்புத் திருமணம் புரிந்து கொண்டவர்கள்,சிலர் மத மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். அம்மி பார்த்து, அருந்ததி பார்த்து சொந்த ஜாதியில் திருமணம் முடிதத பல பேரை விட ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் நன்றாகத் தான் இருக்கின்றார்கள். இன்னும் கேட்டால் சொந்த ஜாதியில் மணம் முடித்த பல பேர் , ஜாதியை விடுத்து வேறு ஜாதியில் திருமணம் முடித்தவர்களின் பிள்ளைகள் எல்லாம் நன்றாக படிக்கின்றார்கள் , நல்ல வேலைக்கு போகின்றார்கள் என்று சொல்வதைக் கேட்டிருக்கின்றேன் .


                                         பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் வடசேரி வ.இளங்கோவன், திருச்சி மாநகர மாவட்ட பகுத்தறிவாளர் கழக்த் தலைவர்  ப.லெ.மதிவாணன், மு.குத்புதின்(தனது பெண் குழந்தைக்கு தஸ்லிமா நஸ்ரின் எனப் பெயர் வைத்துள்ளவர்), ஜோ.பென்னி(பகுத்தறிவாளர் கழக நகரச்செயலாளர்), பெரியார் பெருந்தொண்டர் அ.கணபதி, பெரியாரின் உதவியாளராக இருந்த சி.மகாலிங்கம், பி.மலர் மன்னன்,  திருச்சி நகர தி.க. தலைவர் அ.ஜெயராஜ், நகர அமைப்பாளர் விடுதலை செல்வம், ஓய்வு பெற்ற ஆசிரியர் தீன தயாளன், எஸ்.மணியன், எஸ்.பி. கனகராசு, ஆறுமுகம் எனத் திராவிடர் கழகத் தோழர்கள், பகுத்தறிவாளர் கழக்த் தோழர்கள், ந.கல்பனாவின் தந்தை மு. நடராசன் , ஊராட்சி மன்றத் தலைவர், மணக்கால்,- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் என்பதால் பொதுவுடமை இயக்கத்தோழர்கள் செ.காளிமுத்துவின் நண்பர்கள் கூட்டம் ,உறவினர்கள் என அரங்கம் முழுமையாக இருந்து  சாதி மறுப்புத் திருமணத்திற்கு ஆதரவு அளித்த விழா. வாழ்க மணமக்கள் !.