Sunday, 22 June 2014

சூரியக்கீற்றுகள்-வா.நேரு.-நூல் அறிமுகம்- பொள்ளாச்சி அபி




சூரியக்கீற்றுகள்-வா.நேரு.-நூல் அறிமுகம்- பொள்ளாச்சி அபி

சூரியக்கீற்றுகள்..தனது வெளிச்சக் கைளால் உலகை அளந்து,நிலவும் இருளை துளைத்து சிதறடித்து,எங்கும் பரவுகின்ற தன்மையால் சுற்றிலுமிருக்கும் மெய்யை உணரச்செய்யும் தன்மை கொண்டது.

“தோழர் வா.நேருவின் சூரியக்கீற்றுகள் கவிதைத் தொகுப்பும்”,ஆண்டாண்டு காலமாய் அகத்திலே நிலவும் இருண்ட சிந்தனைகளை அகற்றி,தெளிந்த சிந்தனையெனும் புதிய வெளிச்சம் தருகின்றதாய் அமைந்திருக்கிறது.

பொதுவாய் கவிதைகள் எனில்,வாசிப்பவனை வார்த்தை ஜாலங்களுக்குள் சிக்கவைத்து,சொல்லவருவது என்ன என மனதை அலைபாயவைத்து,இறுதிவரை இதுதான் சொல்லப்பட்டிருக்கிறது..என்றே புரிந்துகொள்ள முடியாத,வாசகனின் ரசனையை,அறிவை மட்டம் தட்டும் கவிதைகள் இப்போது ஏராளமாய் வந்து கொண்டிருக்கின்றன.

வாசிப்பவன் உணரவேண்டியதை,நேரடியாக உணர்த்தாமல் நிற்கின்ற கவிதைகள்,வாசகனின் மனதிற்குள், கடக்க முடியாமல்,அப்படியே புறவெளியில் நின்று,பின் மறைந்தே போகின்றன.ஆனால், “பேனாவால் எழுதியதை வாளாலும் வெட்டியெடுக்க முடியாது”என்று ரஷ்ய இலக்கியமேதையான மக்சீம் கார்க்கி சொன்னதைப்போல,எளிமையையும், வாழ்வின் யதார்த்தத்தையும் கொண்ட கவிதைகள் காலம்தோறும்,சந்ததிகளோடும் பேசிக் கொண்டே இருக்கின்றன. கவிஞர் நேருவின் வார்த்தைகளிலேயே குறிப்பிடுவதென்றால், “ஏழுகோடித் தமிழர்களும் கவிதை எழுதினாலும்,காலவெள்ளத்தில் கரைவது எது.? என்பதனைக் காலம் தீர்மானிக்கும்.”

கவிஞர் வா.நேருவோடு,நேரடியாக பரிச்சயம் இல்லாதபோதே,அவரின் கவிதைகள் மூலம் எனக்குள் நுழைந்து இடம் பிடித்துக் கொண்டவர்.. என்பதை, மிகப் பெருமையோடு இங்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.இவர் எழுதியுள்ள 51 கவிதைகளைத் தொகுத்து,அழகு மிளிரும் அட்டைப் படத்துடனும், திராவிடர் கழக செயலவைத்தலைவர் திரு சு..அறிவுக்கரசு,மற்றும் தோழர்.அகன் அவர்களின் அணிந்துரைகளோடும், இவரின் இரண்டாவது தொகுப்பாக “சூரியக் கீற்றுகள்” கவிதை தொகுப்பு வந்துள்ளது. இவருடைய முதல் தொகுப்பு “பங்குனி உத்திரமும்,பள்ளிக்கூடமும்..!”

இவருடைய கவிதைகளில் எப்போதும்,மானுட நலன் விரும்பும் சிந்தனைகள் துளிர்த்து நிற்பதோடு,மானுட நலனைப் புறக்கணிக்கின்ற எதனையும் வெறுக்கின்ற போக்கும் நிச்சயம் இருக்கும்.அவ்வாறான காரணிகளில் முதலிடம் பிடித்துக் கொண்டிருப்பது மதமும்,சாதியும்.

தொகுப்பிலுள்ள முதல் கவிதையே,பட்டினி கிடக்கும் பிள்ளைகளுக்காக உணவைத் தேடிச் சென்று, மதவெறியர்களால் பலிவாங்கப்பட்ட,காதர்மைதீனைப் பற்றி உருக்கமாகப் பேசுகிறது.
“எந்தத் தவறும் செய்யவில்லை
எனது பெற்றோர் புகட்டிய
மதத்தினைப் பின்பற்றியதைத் தவிர..!
.. .. .. .. ..
மதவெறியின் கோரதாண்டவத்தினால்,வயிற்றில் குத்துப்பட்டு இறந்துபோன சம்பவத்தை நான் மறக்கவில்லை என,நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்தியா சென் குறிப்பிட்டுள்ள நினைவுகளையும் பகிர்ந்து சென்றுள்ளார்.


“என்காலில் பட்டு
என்னை அறியாமலேயே
சிற்றெறும்பு ஒன்று
சிதைந்துபோனது போலவே
உனது வாழ்க்கையும்
எனது வாழ்க்கையும்..!

இதில் எதற்கு
சாதிப் பெருமையும்
தற்பெருமையும்..?
முடிந்தால்
எவருக்கேனும் உதவு
இல்லையெனில்
அமைதியாய் முடங்கு..!” - என்று ஒரு கவிதையில் சொல்லும் கவிஞர்,தனக்குள் குமுறுகின்ற ஆத்திரத்தையெல்லாம் அடக்கிக் கொண்டு,மிக நாகரீகமாக,உதவு அல்லது அமைதியாய் முடங்கு..என்று சொல்லும்போது, படியாத பிள்ளையின் தலையில் லேசாக கொட்டு வைப்பதுபோல,அவர் அடக்கிவைத்த வார்த்தை நம் மனதுக்குள்,‘இன்னொரு வார்த்தையாக’வந்துபோவதை தவிர்க்க முடியவில்லை. ,

சாதியையும் மதத்தையும்
நெஞ்சுநிறைய சுமந்து திரியும்
அந்தப் பெரிய மனிதர்
ஊரை அழைத்து வைத்த
விருந்தில்.., -அறியாத வயதில் கலந்து கொண்டு,உண்ட உணவு,”இன்னும் செறிக்க மறுக்கிறது”. என்று சொல்லும்போது,சாதிய உணர்வுகள் எந்த அளவிற்கு,ஒரு பக்குவப்பட்ட மனதில் அருவெறுப்பை ஏற்படுத்துகிறது..என்பதை துல்லியமாகப் பதிவு செய்துள்ளார்.இந்த கவிதையை வாசிக்கும்போது,நாமும் அப்படிப்பட்ட விருந்துகளில் ஏதாவது கலந்து கொண்டிருந்தால்..,நமக்கும் குமட்டத்தான் செய்யும்.

மாடாய்த்தான் அலைகிறோமோ..?,நடமாடும் கடவுளாகி விடு,முடநம்பிக்கை நாட்டியம்,எங்கே கடவுள்.? நியாயநாள் தீர்ப்புகள்,ஏடெழுதும் எழுத்தாளர்கள், பசியால் உலர்ந்து.., போன்ற கவிதைகள் சாதி மதங்களை மறுத்து மானுடம் பேசும் கவிதைகளாக இருக்கின்றன.

தன்னை கேள்விக்குள்ளாக்கும் சக்திகளை நசுக்குவதும்,பெரும் வணிகக் குழுமங்களின் போஷாக்கில்,தன்னை வளர்த்து கொள்ளும் முயற்சியில் காலம்,இடம்,சூழல் என அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டு, அதிகாரத்தைக் கைப்பற்றி,அதன் அடிப்படைப் பண்புக்கேற்ப,ஆதிக்கத்தை நிலைநாட்டியிருக்கிறது ஆத்திகம்.

மேலும்,மதத்தையும்,சாதியத்தையும் தமது வாழ்நாள் முழுவதும் எதிர்த்துப் போராடிய அய்யா வைகுந்தர்,நாராயண குரு,மற்றும் உலகறிந்த புரட்சிக்காரனான பகத்சிங் மட்டுமின்றி, “சிவசக்தி,பீம்சக்தி, இந்துசக்தி..” என அம்பேத்கர் பிறந்த மராட்டிய மாநிலத்தில் தலித்துகளுக்கு நடுவே முழக்கங்கள் எழுப்பி, அம்பேத்கரையும் மதச் சட்டகத்திற்குள் அடைக்கப் பார்க்கின்ற காலமாக, நிகழ்காலம் கடந்து கொண்டிருக்கிறது.

அன்றைய பேரரசுகளின் மறுஉருவமாக இன்று இருக்கும் பெருவணிகக் குழுமங்களின் பொருளாதார நலன்களை முன்னிறுத்தும் வகையில், மதத்தை ஒரு காப்புக் கேடயமாகப் பயன்படுத்தும் முயற்சியே இது என..‘மதம்’ பிடிக்காத சிந்தனையாளர்களும் பொதுமக்களும் அறிவார்கள் என நம்பலாம்.

இந்த நேரத்தில்,தோழர்.வா.நேருவின்,‘சூரியக் கீற்றுகள்’ வெளிப்பட்டு, சாதி, மதங்களின் மென்னியைத் திருகும் கேள்விகளை முன்வைப்பதும் பொருத்தமாக இருக்கிறது. ‘மதம்’பிடித்தவர்கள் இப்போது ஏற்றுக் கொள்ளாவிட்டால்தான் என்ன..? அவர்கள் ஏற்றுக் கொள்ளும்வரை, சொல்லவேண்டியதை சொல்லிக் கொண்டேதான் இருக்கும் இவரது கவிதைகள்.

இதுமட்டுமின்றி,புத்தகங்களைப் பற்றிப் பேசுகின்ற கவிதையாக இருக்கும் ‘எழுதுவோம் தினந்தோறும்’ எனும் தலைப்பிலான அவர் கவிதை,

உனது வாசிப்பும்
எனது வாசிப்பும்
ஒரே நேர்கோட்டில் என
அறியும்போது
முகிழ்க்கும் நட்பும்
உதவ நீளும் கரங்களும்
புத்தகத்தின் வெற்றி மட்டுமல்ல,
மானுடத்தின் வெற்றியாய்..!

உன்னை நானும்
என்னை நீயும்
அறிந்திட
வார்த்தைகளை விட
வலிமையாய்
வாசிக்கும் புத்தகங்களும்
எழுதும் எழுத்துக்களும்
இணைக்கும் பாலமாய்..! –என்று சொல்லியிருப்பது ஒத்த சிந்தனையுடையவர்களுக்கு, உற்சாக டானிக்.

உள்மனதின் ஓசை எனும் தலைப்பில்,அவலங்களைச் சுட்டிக்காட்டி,அதனைக் களைவதற்காக ஏதேனும் செய்வோமா..? என்ற பரிதவிப்பே தனது கவிதையாக முகிழ்க்கிறது என கவிதை பிறக்கும் புள்ளியை சுட்டுகிற கவிஞர்,ஏழுகோடித் தமிழர்களும் கவிதை எழுதினாலும்,காலவெள்ளத்தில் கரைவது எது.? என்பதனைக் காலம் தீர்மானிக்கும் என்றும் கவிதைகளின் பொதுவான தகுதிகளையும் சுட்டிக் காட்டுகிறார்.

அழகாய் படமெடுத்தாலும் பாம்பு கொட்டப்போவது என்னவோ நஞ்சுதான்.” விளம்பரத்திற்காக உண்ணாவிரதம் இருக்கும் அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழிக்கிறது, அழகாய் படமெடுத்தாலும் கவிதை.!

என்று மாறும் இநத நிலை.?, தேவை அல்ல,மனத்தெளிவே.! என்ற கவிதைகள்,கவிதைச் சிறுகதைகள்.!

புரளிப் பிள்ளையார்..நல்ல நகைச்சுவைக் கவிதை.

இதுமட்டுமின்றி,இன்னும் பல தலைப்புகளில் உள்ள கவிதைகள் அனைத்தும் அரசியல்,சமூகம்,மனிதநேயம், உழைப்பு என தனது பாடுபொருட்களால் நம்மை ரசிக்க வைக்கிறது.

பொதுவாக நமக்கு,கையில் எப்போது,எந்தப் புத்தகம் கிடைத்தாலும் மேலோட்டமாக புரட்டி அங்கொன்றும்,இங்கொன்றுமாகப் படிக்கும்போதே அந்தப்புத்தகம் எதனைப் பற்றிப் பேசுகிறது என்று தெரிந்துவிடும். சிலநேரம் எப்போதும் படித்துச் சலிக்கின்ற விஷயங்கள்.., என அலுப்பும்,கோபமும்கூட வந்துவிடும்.எதைப்பற்றியும் கவலைப்படாத சில ஜந்துக்கள்,எப்போதும் எழுதுகின்ற சில சுயநலத் தன்னுணர்வுக் கவிதைகள் வந்துகொண்டே இருந்தாலும்,தோழர் வா.நேருவின் கவிதைத் தொகுப்பை அவ்வாறு கடந்துவிட முடியாது. காரணம்..,தோழர் நேருவின் கவிதைகள்கள்தான்,எனக்கு முதல் முகவரி.அதற்குப் பிறகுதான் அவரோடான நட்பு.

எப்போது வாசித்தாலும் அந்தக் காலத்திற்குப் பொருத்தமானதாக இருக்கும்,தோழர்.நேருவின் கவிதைகளை காலவெள்ளம் எந்நாளும் கரைக்க முடியாது.மாறாக,அவை விதைக்கும் சிந்தனைகளில் இருந்து புதிய விதைகள் முளைத்துக் கொண்டேதான் இருக்கும்.!..இன்னும்,இன்னும் சிறப்பாய் சொல்ல,இத்தொகுப்பில் நிறையக் கவிதைகள் இருக்கின்றதே என்ற தவிப்புடனும்,அன்புடனும்.., பொள்ளாச்சி அபி

தகவலுக்காக..,
புத்தகத்தின் விலை.ரூ 70.
மானமிகு பதிப்பகம்
3ஃ20.ஏ-ஆதிபராசக்தி நகர்,
திருப்பாலை-மதுரை-625014
தொடர்புக்கு- 94433 62300
நன்றி : எழுத்து. காம்

Tuesday, 17 June 2014

அண்மையில் படித்த புத்தகம் : வெட்டி வாழ்க்கைக்கு நோ, வெற்றி வாழ்க்கைக்கு எஸ், டாக்டர் சி.எஸ்.ராஜீ

அண்மையில் படித்த புத்தகம் : வெட்டி வாழ்க்கைக்கு நோ, வெற்றி வாழ்க்கைக்கு எஸ்
ஆசிரியர் : டாக்டர் சி.எஸ்.ராஜீ
பதிப்பகம் : சாய் பப்ளிஷ்ர்ஸ், சென்னை-87
முதல் பதிபபு : 2012, மொத்த பக்கங்கள் : 160, விலை ரூ 120.

                                 இந்த நூல் யாருக்காக ? எதற்காக? எழுதப்பட்டது என்பதனை ஆசிரியர் உரையில் இந்த நூலின் ஆசிரியர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். " ஒன்பதாம் வகுப்பில் இருந்து +2 முடிக்கும் பருவத்தில்தான் பிள்ளைகள் பெரும்பாலான உடல்வளர்ச்சி பெறுகின்றனர். அறியாத குழந்தைப் பருவத்தைத் தாண்டி அறிந்த வாலிபப்பருவத்தை அடைகின்றனர்... அந்த முக்கிய காலகட்டத்தில் பிள்ளைகளை நல்ல திசையில் திருப்பிவிடத்தான் இந்நூல் எழுதப்பட்டது ஆயிரக்கணக்கான பெற்றோர் மற்றும் குழ்ந்தைகளையும் அவர்க்ள் உயர்வு தாழ்வுகளையும் கண்ட அனுபவம்தான் இந்நூலை எழுதத்தூண்டியது.

                                     இந்தப் புத்தகம் 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, பாகம் 1 - சுய ஆய்வும் ஊக்குவிப்பும் என்னும் தலைப்பு கொண்டது. ஒரு கழுகு தன் குஞ்சுகளுக்கு எப்படிக் கூடுகட்டுகிறது.பின்பு குஞ்சு பொரித்து தன் குழந்தை வளர வளர குழந்தையை பயிற்றுவிப்பதற்காக
 எப்படிக் கூட்டைக் கலைத்து முட்களின் மேல் கழுகுக்குஞ்சை உட்கார வைத்து,விழ வைத்து,பயத்தினால் அழ வைத்து,பின்பு அச்சம் போக்கி,பயமற்ற,தானக இரையைத் தேடிக் கொள்ளும் கழுகுக்குஞ்சாக உருவாக்குகிறது என்பதனைச் சொல்லி நீங்கள் கூட்டிலிருந்து வெளியே வரவேண்டிய நேரம் வந்துவிட்டது என வளர் பருவத்திலிருக்கும் மாணவமாணவிகளுக்கு நினைவூட்டுகிறார்."உங்கள் சொந்தக்கால்களிலே நிற்பது உங்களுக்கும் பெருமை,உங்கள் பெற்றோருக்கும் பெருமை.உற்றார் உறவினருக்கும் பெருமை ,உங்கள் சிறகுகள் முளைத்து விட்டன,பறக்க ஆயத்தமாகுங்கள்'.
                                 
                                                        வளர் பருவத்தில் பிள்ளைகளைச் சமாளிக்க பெற்றோர்கள் படும்பாடு பெரும்பாடு.பெற்றோர்களை இந்த வயதினர் சரியாகப் புரிந்து கொள்வதில்லை.அவர்களுக்கு புரிய வைக்கும் விதமாக்"உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும்  உள்ள பந்தபாசம் "எனும் தலைப்பில் கொடுக்கின்றார்."நீங்கள் மேல்நிலைப்பள்ளி (அ)உயர்நிலைப்பள்ளி,அல்லது கல்லூரியில் படிக்கிறீர்கள் என்றால் எப்பொழுதாவது உங்கள் அப்பா,அம்மா உங்களுக்காக செய்யும் தியாகங்களையும் உங்கள் உயர்வில் எவ்வளவு அக்கறையையும் கொண்டுள்ளார்கள் என்பதையும் எண்ணிப் பார்த்ததுண்டா? எனப் பக்கம் 11ல் வினா எழுப்புகின்றார்."உங்கள் பெற்றோர் உங்கள் மேல் கொண்டுள்ள அன்பும் பாசமும் அளவிட முடியாதது...இந்த  உலகத்தில் அந்த அன்பிற்கு ஈடு இணையான அன்பே கிடையாது எனக் கூறும் ஆசிரியர் பெற்றோர்கள் செய்யும் தியாகங்களை பிள்ளைகளை வளர்க்க ,படிக்க வைக்க படும்  இன்னல்களை பக்கங்கள் 12,13 ல் குறிப்பிடுகின்றார். "இத்தனை தியாகங்களைச் செய்யும் உங்கள் பெற்றோர் உங்களிடம் எதை   எதிர்பார்க்கின்றார்கள்?... நீங்கள் பெற்றோருக்குச் செய்யும் கைம்மாறு அனைத்தும் உங்கள் படிப்பு வளர்ச்சி ,முன்னேற்றம் தான்.திருவள்ளுவர் ,இந்தக் கருத்தை பின்வரும் குறளிலே மிக அழகாகச் சொல்லியிருக்கிறார் எனச்சொல்லி ,
                            "மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி  இவன்தந்தை
             என்நோற்றான் கொல் எனும்சொல்."
என்னும் குறளைக் குறிப்பிடுகின்றார்.

                                          2 கால்களும் 2 கைகளும் இல்லாத திரு.ராஜண்ணா பெங்களூரில் ஒரு தொழிற்சாலையை வெற்றிகரமாக நடத்தி வருவதையும் ,15 மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை கொடுத்துள்ளதையும் முன்னாள் ஜனாதிபதி.டாக்டர்.அப்துல்கலாம் அவர்களிடம் உற்சாகமாக பரிசு பெற்றதையும் குறிப்பிட்டு ,
  
                         என்ன பலம் இல்லை உங்களிடம் ?
                          ஏன் இன்னும் குழம்ப வேண்டும் உங்கள் மனம்?
                          திட்டமிட்டு உழைத்திடுங்கள் தினம் தினம் .
                         வேகமாக உயரும் உங்கள் வாழ்க்கைத்தரம்.

என வளர்பருவ மாணவ-மாணவிகளுக்கு ஊக்கமூட்டுகிறார்.மாணவ-மாணவியர்களே நீங்கள் உங்களிடம் செய்துகொள்ள வேண்டிய கூட்டல்,கழித்தல்,பெருக்கல் எனப் பட்டியல்களை அணுகுமுறையின் அடிப்படையில் வரிசைப்படுத்தி பக்கம் 21,22ன்றில் குறிப்பிடுகின்றார்.

                          சுய ஆய்வு மேற்கொள்ளுங்கள்.பிரச்சனையே இல்லாத  ஒருவர் உலகத்தில் இல்லை .பிரச்சனைகளை எதிர்கொள்ளுங்கள்.
"உளிதாங்கும் கற்கள்தானே ; மண் மீது சிலையாகும்
வலிகாணும் உள்ளந்தானே ; நிலையான சுகம் காணும் ;
யாருக்கில்லை போராட்டம் ;கண்ணில் என்ன நீரோட்டம் ;
ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும் ." எனும் கவிஞர் பா.விஜய் அவர்களின் திரைப்படப் பாடலைக் குறிப்பிட்டு பிள்ளைகளுக்கு நம்பிக்கை ஊட்டுகிறார்.

                            அதிக பயத்தால் வாழ்வே இருள்மயமாகிவிடும் எனச்சுட்டிக் காட்டும் இந்த நூலின் ஆசிரியர் " எப்பொழுதும் ஏதாவது ஒரு நல்ல காரியத்தில் ஈடுபட்டு உற்சாகத்துடன் வேலை செய்துகொண்டிருப்பவர்களுக்கு கவலையும் , பயமும் வளராமல் அடிமட்டத்திலேயே தங்கிவிடுகின்றன " எனப்பக்கம் 42-ல் குறிப்பிட்டு உங்கள் மனதைக் கெடாமல் வைத்திருப்பதற்கு குளிர்சாதனமோ, பணமோ தேவையில்லை, உங்கள் மன உணர்வை ஒழுங்குபடுத்துவதே அதற்கு தீர்வு எனக்குறிப்பிடுகிறார்.

                             முன்னேற்றத்திற்கான தடைகள் அனைத்தும் திட்டமிடாத, செயல்படாத, நேரத்தை வீணாக்குபவர்களின் பாதைகளில்தான் அதிகம்,எனவே திட்டமிடுதலை வாழ்க்கையின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள் எனக்குறிப்பிடுகின்றார். களிமண்ணாக இருந்த களிமண் அழகிய டீ  கப்பாக மாறும்வரை அது படும் இன்னல்களைக் குறிப்பிடும் ஆசிரியர் வாழ்வின் பல்வேறு இன்னல்களைத் தாண்டித்தான் உயரத்தை அடைய முடியும் எனும் எதார்த்தத்தை பில்கேட்ஸ், எடிசன், ஐன்ஸ்டீன், கலீல் கிப்ரான், ஏலன் ஸ்டிரிக்,பென்னிப்லெயிர், ஜிக ஜிக்லர், பெஞ்சமின் பிராங்களின் போன்ற 10 மேதைகளின் கருத்துக்கள் என பல்வேறு கருத்துக்களை பாகம் ஒன்றின் முடிவுரையாக கொடுக்கின்றார். 

                                                     இலக்கை நிர்ணயித்தலும் சுயமுன்னேற்றமும் என்பது 2ம் பாகமாகும்.இலக்கு என்றால் என்ன?இன்றைக்கு அல்லது இந்த வாரத்தில் செய்ய வேண்டிய குட்டி இலக்குகள்,இந்த மாதத்தில் செய்ய வேண்டிய சிறு இலக்குகள்.இந்த ஆண்டில் செய்ய வேண்டிய பெரிய இலக்குகள்.வாழ்க்கையில் இலக்கு என்பது எதையாவது ஒன்றைச் சாதிப்பதும் அதனால் ஏற்படும் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் தான் மகா இலக்குகளை அடைய குட்டி இலக்குகள்,சிறு இலக்குகள்,பெரிய இலக்குகள் அவசியம் எனச் சொல்லும் ஆசிரியர், மார்டின் லூதர் சொன்ன மகத்தான கருத்து என

 'உங்களால் பறக்கமுடியவில்லை எனில் ஓடுங்கள்;
  ஓடமுடியாவிட்டால் நடந்து செல்லுங்கள்;
 நடக்க முடியாவிட்டால் ஊர்ந்து செல்லுங்கள்;
எப்படியாவது இலக்கை நோக்கி முன்னேறி செல்லுங்கள்."குறிப்பிடுகின்றார்.

                 மாணவ மாணவிகளிடம் தங்கள் பலத்தை(strength) பலவீனத்தை பட்டியலிடச் சொல்லுகின்றார்.பலவீனத்தை நீக்கி பலத்தை அதிகரிக்கச் செய்யும் பத்துப் படிகளை சுட்டிச் சொல்லுகின்றார்.10வது படியாக "நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் (பிறர் உங்களைப் பார்க்கும் போதும்,யாரும் பார்க்காத போதும்)முக்கியமானது என்னவென்றால் நீங்கள் நன்னடத்தையிலிருந்து சற்றும் நழுவக்கூடாது.உங்கள் நடத்தை எப்படி இருக்க வேண்டும் என்றால் யாராவது உங்கள் நடத்தை பற்றி தவறாகச் சொன்னால் கூட யாரும் நம்பக்கூடாது.உங்கள் வாழ்க்கை என்னும் சூப்பர் கட்டடத்தை நேர்மை,நியாயம்,கண்ணியம்,கட்டுப்பாடு,அன்பு ஆகியவை கொண்ட அஸ்திவாரத்தின் மேல் கட்ட வேண்டும் . அப்பொழுதுதான் வாழ்நாள் முழுவதும் உங்கள் மகிழ்ச்சியுடன் தலை நிமிர்ந்து நடக்க முடியும்.நன்னடத்தைதான் உங்கள் கிரீடத்தில் பொதிக்கும் வைரக்கல்' எனப்பக்கம் 75ல் குறிப்பிட்டு ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை வேண்டுமெனில் ஒழுக்கம் வேண்டுமென்பதனை பசுமரத்தாணிபோல அடித்துக் கூறுகின்றார்.

              சுய நிர்வாகம் தேவை எனக் குறிப்பிட்டு அதற்கு ஒவ்வொரு பொருளுக்கும் ஓரிடம் அந்தந்த பொருள் அந்தந்த இடத்தில், எங்கும் எதிலும் ஒழுங்கு, எங்கும் எதிலும் சுத்தம் என்னும் வழிமுறைகளைக் கூறுகின்றார்.

                   கடுமையான் வெயிலை மறைக்க குடை பயன்படுகின்றது.மற்றவர்கள் செய்யும் கேலிய,கிண்டலை,ஏளனங்களை மறைக்க மனதளவிலே ஒரு குடையை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
யாரவது ஏளனம் செய்தால் மனதிற்குள் உருவாக்கிய குடையை விரித்து குரைக்கும் நாய்கள் என அலட்சியமாகச் சொல்லுங்கள்.எனப் பக்கம் 82,83ந்றில் குறிப்பிடுகின்றார்.

                 ஜப்பானில் ஹோண்டா என்ற இளைஞன் சந்தித்த சோதனைகளையும் தன்னம்பிக்கை,விடாமுயற்சி எனும் 2 சாவிகளால் கார் தயாரிக்கும் தொழிற்சாலையை ஹோண்டா நிறுவனத்தை நிறுவிய வெற்றி வரலாற்றைச் சொல்லி நீங்களும் வாழ்க்கையில் வெற்றி பெற தன்னம்பிக்கை,விடாமுயற்சி  எனும் சாவிகளை உபயோகிங்கள் உயர்வாக எண்ணுங்கள் .நீங்கள் உயர்வீர்கள் என்றும் சுட்டிக்காட்டுகின்றார்.

          வளர்பருவத்தில் ஆழ்பள்ளத்தில் விழுந்து அவதிப்பட வைக்கும் 3கொடிய பழக்கங்கள் புகைப்பழக்கம்,மதுப்பழக்கம்,போதைப்பழக்கம் இப்பழக்கங்களுக்கு ஆட்பட்டு வீடாதீர்கள்.இப்பழக்கங்களுக்கு ஆட்பட்டு இருப்போர்களோடு நட்பு பாராட்டாதீர்கள்,விலகி நில்லுங்கள் எனக் குறிப்பிடுகின்றார்.

                        நேரத்தை நன்றாக கையாள 10 உன்னத உத்திகள் எனக் குறிப்பிட்டு பக்கம் 96 முதல் 101 வரை விவரிக்கின்றார்."கையில் சரியான நேரத்தைக் காட்டும் கடிகாரம் இருந்தும் குறித்த நேரத்தில் குறித்த வேலைக்கு போகவில்லையென்றால் அவர்கள் கடிகாரம் கட்டிக்கொள்ள தகுதியானவர்கள் அல்ல."

                         பேசும் ஆற்றலை வளர்த்துக்கொள்வது பற்றி பக்கம் 103 முதல் 106 வரை விவரிக்கின்றார்..மேடையில்பேசும் வாய்ப்புகள்,உங்களுக்கு தானாக வந்துவிடாது.வாய்ப்புகளை நீங்கள் தான் உண்டாக்கி கொள்ள வேண்டும்.பள்ளிகள்,கல்லூரிகள்,சங்கங்கள்,நற்பணி மன்றங்கள் போன்ற பல இடங்களிலே வாய்ப்புகளை உண்டாக்கிக் கொண்டு நன்கு தயார் செய்து பேசிப்பேசித்தான் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

               மாணவப் பருவத்திலே உடல் வளர்ச்சி இருப்பதால் உடல்நலம் நன்றாக இருக்கிறதே என்று எப்படி வேண்டுமென்றாலும் எங்கு வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டு  ஒரு கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை வாழ்ந்தால் சுமார் 10 ஆண்டுகளுக்குள் உடல்னலம் கெடுவது நிச்சயம்.என எச்சரிக்கும் ஆசிரியர்.உங்கள் உடல்னலமே முன்னேற்றத்திற்கு பலம் .எனவே முன்னேற்றத்தை கவனியுங்கள் என அறிவுறுத்துகிறார்.

             தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வாங்க வழிமுறைகள் என்பது 3ம்பாகமாகும் தாமஸ் ஆல்வா எடிசன் சொன்ன "அறிஞனாக தேவை ஒரு சதவீத சுய ஊக்குவிப்பும் 99சதவீத உழைப்பும் தான்.என்பதைக் குறிப்பிட்டு 30 அறிவுரைகளை படிப்பது குறித்தும்,தேர்வுக்கு தயாராவது பயிற்சிகள் குறித்தும் தேர்வுக்கு போகும் முன் தேர்வில் விடைத்தாள்களை கையாளும் முறை.,அதிக மார்க்குகள் வாங்க தேர்வு எழுதுவது எப்படி,மிகவும் கடினமான தேர்வை சந்திப்பது எப்படி!என்பதனைப் பற்றியெல்லாம் விளக்கியுள்ளார்.

              நன்னடத்தைதான் உங்களின் மாபெரும் சொத்து என்பது பாகம் 4 ஆகும்.நல்லவர் சேர்க்கை-நல்லதொரு வாழ்க்கை.பொல்லாதோர் சேர்க்கை-தொல்லைமிகு வாழ்க்கை எனக் குறிப்பிடும் இந்நூல் ஆசிரியர்.If character is lost,everything is lost எனும் ஆங்கில வாசகத்தைச் சொல்லி நன்னடத்தையை வலியுறுத்துகிறார்.

                     உங்கள் மாதாந்திர வளர்ச்சி அறிக்கை என்பது 5ம் பாகம்.இது ஒரு பயிற்சியாக இந்த நூலில் இணைக்கப்பட்டுள்ளது,வளர்பருவத்தினர் மட்டுமல்ல,நம்மைப் போன்ற பெற்றோர்களும் படிக்க வேண்டிய புத்தகம் ,டாக்டர் சி.எஸ்.ராஜி அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தை நாம் வாசிப்பது மட்டுமல்ல,நமது  பிள்ளைகளையும் வாசிக்கச் சொல்ல வேண்டும். அவர்கள் மன்ம் உவந்து வாசித்துவிட்டால் வளர் பருவப் பிள்ளைகளின் மனதில் ஒரு மாற்றம் நிகழ் வைக்கும் அளவிற்கு கருத்துக்கள் உள்ள புத்தகம் இது..

( மதுரை, அகில இந்திய வானொலியில் நூல் அறிமுகம் பகுதிக்காக தயாரிக்கப்பட்டது)

 
                      

Friday, 13 June 2014

அணமையில் படித்த புத்தகம் : ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம் .....(நாவல்) -க.பஞ்சாங்கம்

அணமையில் படித்த புத்தகம் : ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம் .....(நாவல்) 
ஆசிரியர்    க.பஞ்சாங்கம்
வெளியீடு : காவ்யா, சென்னை -24
முதல் பதிப்பு : 2005, மொத்த பக்கங்கள் : 170, விலை ரூ 85

                                       இவ்வளவு  பாதிப்பை உண்டாக்கும் நாவலை அண்மையில் படிக்கவில்லை. படிக்கும்போதும், படித்து முடித்து இரண்டு நாட்கள் ஆன பின்பும் கேள்விகளாக மனதில் எழுப்பிக்கொண்டேயிருக்கும் நாவல் இந்த நாவல். நான் , என் என்று தன்னை ஒரு பாத்திரமாக இந்த நாவலாசிரியர் வரித்துக்கொள்ளும் வார்த்தைகளோடுதான் கதை ஆரம்பமாகின்றது. உள்ளத்துக்குள் கொதித்துக்கொண்டிருந்த பெரு நெருப்பை வார்த்தைகளாய் கொட்டி வடிக்கும் வடிகாலாய் இந்த நாவல். ஒரு அத்தியாயம் என்பது 2, 3 பக்கங்களில் ,ஏன் ஒரு அத்தியாயம் (33) சில வரிகளில் என்றாலும், தொடர்ச்சியாய் இழவு வீட்டில் முட்டி முட்டி அழும் ஒரு மன நிலையோடு  , ஏன் இப்படி நிகழ்ந்தது , நிகழ்கிறது என்னும் கேள்விகளோடு கதை நகர்கின்றது

                                    தன்னோடு கல்லூரியில் வேலை பார்க்கும் பாலன், எந்த அநியாயத்தையும் பொறுத்துக்கொள்ள இயலாத பேராசிரியர் பாலன், தலித் என்பதாலேயே அவமானப்படுத்தப்படும் பேரா. பாலன், குழந்தைத் தனமான பாலன், போட்டித்தேர்வு எழுதி அதிகாரியாகப் போகும் பாலன், அதிகாரியாக வாழும் காலங்களில் தன்னைச்சுற்றி நிகழும் நிகழ்வுகளால் புழுங்கித் தவிக்கும் பாலன்,தன்னுடைய குடும்பம் முழுவதும் தன்னுடைய பணத்தை நம்பி வாழும் சூழ் நிலையால் மனம் குமுறும் பாலன், குடும்பத்து மூத்த மகனாகப் பிறந்ததால் முழுக்க குடும்பத்தை தாங்கும் பாலன்,தன்னுடைய தங்கை வாழ்க்கை திருமணம் என்னும் பந்தத்தால் தலைகீழாகப் போவதைப் பொறுக்காமல் அழும் பாலன், தன்னுடைய மனைவியின் குடும்பத்தினருக்கு தான் சம்பாதித்துக் கொடுக்கும் வீட்டில் கிடைக்கும் மரியாதையும் , மதிப்பும் தன்னுடைய குடும்பத்தினருக்கு கிடைக்கும் அவமானமும், அவமரியாதையும் கண்டு மனதுக்குள் வெம்பி, மனைவியோடு சண்டை போட்டு அடிக்கும் பாலன், இது போன்ற நேரங்களில் பிறப்பால் தலித் இல்லையென்றாலும் தன்னை தலித்தாக பாவித்துக்கொள்ளும் தன்னுடைய நண்பன் கொடுக்கும் விளக்கங்களை ஏற்றுக்கொள்ளும் பாலன், ஓசோவை படித்து ஆகோ ஓகோவென்று புகழ்ந்து விட்டு, அம்பேத்கரின் புத்தகங்களைப் படித்தபின் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து ஓசோ புத்தங்கங்களை இனித் தொடுவதில்லை என்று சொல்லும் பாலன், நண்பனின் அண்ணல் அம்பேத்கர் பற்றிய புரிதல், ஏன் இந்த சமூகம் இப்படி சாதி வயப்பட்ட சமூகமாக இருக்கிறது என்பதை அண்ணல் அம்பேதகர் புத்தகங்களால் புரிந்து கொள்ள முயலும் நண்பன், ,    தற்கொலைக்கு முயலும் பாலன், கடைசியில் டில்லியில் இறந்து போன பாலன் என்று இந்த நாவல் முழுவதும் பாலன் என்னும் மனிதனின் அகமனமும் அவன் புறச்சூழலும் முரண்படும் இடங்களும் ,முடிவில் பாலன் முடிந்து போவதும் , அவனுக்கு உயிருக்குயிராய் இருக்கும் பிறப்பால் தலித் அல்லாத நண்பனும் , அவனது நடவடிக்கைகளும் என நாவல் விரிகின்றது. 

                                                 
" நாம் ஏன் இப்படிக் கிடக்கிறோம்? நம் வாழ்வைத் திருடியவர்கள் யார் ? இதோ என் முன்னால் நிர்வாணமாக எலும்பும் தோலுமாய் நிற்கிறானே சிறுவன், இவனுக்குச்சேர வேண்டிய உணவையும் துணியையும் திருடிய தீய சக்திகள் யார் ? ஆட்டைத் தொடுகிறான், மாட்டைத் தொடுகிறான், நாயைக் கொஞ்சுகிறான் ; ஆனால் நம்மைத் தொடமாட்டானாம். அந்த அளவிற்கு நம்மைக் கேவலமான பிறவியாய் அருவருக்கத்தக்க ஒரு பொருளாய் ஆக்கிய நாசகாரர்கள் யார் ? இதிலுள்ள சூழ்ச்சிகளை எல்லாம் கொஞ்சமாவது அறிந்தோமா ? சரி, இனி மேலாவது அறிய முயல வேண்டாமா ? நமது அன்றாட வாழ்வையே அலங்கோலமாக்கிய மிருகத்தனங்களை நாம் ஏன் இன்னும் பொறுத்துக்கொண்டு வாழவேண்டும் ? பொங்கி எழ வேண்டாமா? எழுந்து இந்த அக்கிரமங்களின் ஆணிவேரையும் சல்லி வேர்களையும் அழித்து ஒழித்து விட்டலவ்வா இப்படித் திருமணம் முடிக்க நினைக்க வேண்டும். ஒவ்வொரு தாழ்த்தப்பட்டவனும் இத்தகைய திருமணங்கள் மூலம் , இன்னொரு தாழ்த்தப்பட்டவனைத்தானே இந்தத் திமிர் பிடித்த உயர் சாதியினருக்குப் பெற்று வளர்த்துக் கொடுக்கிறான. எண்ணிப் பார்த்துச்செயல்பட வேண்டாமா ? சரி, திருமணம் முடிக்கிறீர்கள்; பெற்ற பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும். அம்பேத்கர் சொன்னது போலப் பிச்சை எடுத்தாவது பிள்ளைகளைப் படிக்கப் போட வேண்டாமா? தாழ்த்தப்பட்ட மக்களுக்கான விடுதலை 'கல்வி கற்பதில்தான் ' இருக்கிறது  என்பதை அந்த மேதை சொல்லால் சொல்லியதோடு மட்டுமல்லாமல் செயலால் செய்தும் காட்டினாரே ! நான் இந்த மண்விழாவில் மணமக்களுக்குச்சொல்லிக் கொள்ள விரும்பவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் . தாழ்த்தப்பட்ட மக்களாகிய நமக்கு விதிக்கப்பட்டிருக்கிற வாழ்க்கை " போராடுதல் " ஒன்றுதான் . " வாழ்க்கையே போராட்டம் " என்று சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைக் கூட்டம் நூத்துக்கு நூறு நமக்குத்தான் பொருந்தும். இதைப் புரிந்து கொள்ளுங்கள் . கணவன்-மனைவியாய் இணையும் நீங்கள் அதோடு வாழ்க்கையைச்சுருக்கிக் கொள்ளாதீர்கள் . உங்கள் மேல் இந்த ஆதிக்கச்சாதிகள் திணித்திருக்கும் பாரங்களுக்கு எதிராகப் போராட இணைந்திருக்கிறோம் என்று எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்; வரலாறு நம்மை விடுதலை செய்யும் ; வாழ்க மணமக்கள்; வளர்க நீடூழி " (பக்கம் 13). ஒரு தி.க.காரரும், பாலனும், நான் என்று வரும் பாத்திரமும் கலந்து கொண்ட திருமணத்தில் பாலன் பேசியதாக கூறப்பட்ட வரிகள்தான் மேலே சொல்லப்பட்டவை.  இதைப் போன்ற பகுதிகள் நாவல் முழுவதும் இருக்கிறன. நியாயமான பல விமர்சனங்கள் இந்த நாவலில் இருக்கின்றன.


                                                                 பாலனின் வாழ்க்கையை விவரிக்கும் பகுதி போலவே , பாலனின் டைரிக்குறிப்புகளும் பல்வேறு விவாதங்களை மனதுக்குள் எழுப்புகிறது.     ஏன் இந்த நாவல் பலரின் கவனத்தையோ, பரிசையோ பெறவில்லை என்பது கேள்விக்குரியாய் நிற்கிறது. தடித்த புத்தகங்களுக்குத்தான் பரிசு கொடுப்பார்களோ, சமூகத்தில் தடித்துப் போய்க்  கிடக்கும் சாதிக்கொடுமைகளை மிகத் துல்லியமாக, நுண் கண்ணாடிகளால் காட்டும் இதனைப் போன்ற நாவலகள் ஏன் தமிழ் இலக்கிய உலகில் விவாதிக்கப்படுவதில்லை என்னும் கேள்விக்கு சாதி சார்ந்த சமூகம் என்பதுதான் பதிலாக இருக்கும். தந்தை பெரியார் கூறியது போல, " உனது இலக்கியம் சாதியைக் காப்பாற்றும் இலக்கியம், உனது கடவுள் சாதியைக் காப்பாற்றும் கடவுள், உனது மதம் சாதியைக் காப்பாற்றும் மதம், உனது மொழி கடவுளைக் காப்பாற்றும் மொழி " என்று கூறியதைப் போல அனைத்தும் சாதிமயமாகிப் போன சூழலில், கலகக் குரலாய் வரும் இதுபோன்ற நாவல்கள் நிராகரிக்கப்படுவதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. நாத்திகனாக வாழும் நண்பனை உயிருக்குயிராய் நேசிக்கும் பாலன், தன்னுடைய சடங்குகளை விடாத தன்மையும், மகன் இறந்த நிலையிலும் கூட சடங்குகளை விடாப்பிடியாக விடாத பாலனின் தந்தை என , கவிஞர் இன்குலாப் சொன்னதைப் போல " தொட்டில் தொடங்கி சுடுகாடு வரைக்கும் " விடாது பிடித்துக்கொண்டிருக்கும் சடங்குகளை ஏன் விடாப்பிடியாக ஒடுக்கப்பட்டவர்கள்  பிடித்துக்கொண்டு தொங்கவேண்டும் எனும் கேள்வியையும் இந்த நாவல் எழுப்புகிறது.,

                                சமகாலத்தில் நிகழும் நிகழ்வுகளை முன்னிறுத்தி, மிக நேர்மையாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு நிகழும் அவமானங்களை, அவமரியாதைகளை பிறப்பால் தாழ்த்தப்பட்டோராக இல்லாத ஒருவர் எழுதிய நாவல் இது. மிகக் கூடுதல் கவனத்தை இந்த நாவல் பெற வேண்டும். நாவலின்  தலைப்பு ஒரு தலித், ஒரு அதிகாரி, ஒரு மரணம் என்று இருந்தாலும் ஒரு மரணம், ஒரு பேராசிரியர், ஒரு அதிகாரி, ஒரு தலித்தாக இருந்ததனால் ஏற்பட்ட நிகழ்வுகள் என இந்த நாவல் விரிகின்றது. இந்த நாவலைப் படிக்கும்போது நான் மிக நெருங்கிப் பழகிய , பழகும் சில நண்பர்களின் வாழ்க்கையோடும் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைப் போன்ற நிகழ்வுகள் பல சுட்டிக் காட்டுப்பட்டுள்ளன.  படிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த அனுபவத்தை இந்த நாவல் அளிக்கக்கூடும் . வாசித்துப்பாருங்கள்.
                                       :

Tuesday, 10 June 2014

வசூலுக்கு வந்த வண்ணம்...

பெண்கள் நாங்கள்
ஊர் தாண்டி
எல்லை தாண்டி
இருட்டுக்குள்தான்
செல்ல வேண்டியிருக்கிறது !
இயற்கை உந்துதலைக்
கழிப்பதற்கு !

கண்மாய்க்குள்
காட்டுக்குள்
பாம்பு கிடக்குமோ
தேள் கிடக்குமோ
தெரியாத கொடுமையினால்

கிராமத்து ரோடுகளில்
அமர்ந்து
வெளிச்சத்தோடு வரும்
வண்டிகளுக்கு
எழுந்து எழுந்து பின்
அமர்ந்து அமர்ந்து
கழிக்கும் அவலம்
தொடரத்தான் செய்கிறது !


பேருந்து கழிப்பறையோ
ஊருக்குள் இருக்கும்
ஒரே ஒரு கழிப்பறையோ
ஏன் பள்ளிக்கூடத்திற்குள்
இருக்கும் கழிப்பறையோ
மூக்கை பொத்திக்கொண்டுதான்
போகவேண்டியிருக்கிறது !
இதில் சுத்தம் சோறுபோடும்
என்னும் வார்த்தைகள் வேறு !


ஊர் ஊருக்கு
சில பெரியவர்கள்
நோட்டுக்களைத் தூக்கிக்கொண்டு
கோவில் ,கும்பாவிசேகம் என்று
வசூலுக்கு வந்த வண்ணம்
உள்ளனரே !

கிராமத்தில்
தெருவுக்கு மூன்று
கழிப்பறை கட்டுவோம்
அதனை எந்த நாளும்
சுத்தமாக வைத்துக்காட்டுவோம்
அதற்குத் தாருங்கள்
நன்கொடை என வாருங்கள்
பெரியோரே !
                                                    ------: வா. நேரு------
நன்றி : எழுத்து,காம்

------------------------------------------------------------------------------------------------------------

அருமையான பதிவு. அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று. இதை எந்த அரசியல் கட்சிகளோ அரசியவல்வாதிகளோ , பெரும் பணக்கார பெருமக்களோ இதை பற்றி கவலைப்படுவதில்லை. சிந்திப்பதும் இல்லை. எனக்கே 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சி மாவட்டத்தில் அலுவல் காரணமாக சென்ற பொது , நிறைய பெண்கள் என்னிடம் கிராம பகுதியில் உள்ளவர்கள் கண்ணீர் மல்க இந்த விடயத்தை சொலும்போது என் நெஞ்சம் வெடித்து.. இதயம் கண்ணீர் சிந்தியது. இது வார்த்தைக்காக , பெருமைக்காக எழுதுவது இல்லை. உண்மை உணர்வை கூறினேன். சில வயதான மூதாட்டிகள் சொல்லும்போதே அழுது விட்டார்கள் .
ஊர் பெயர் நினைவில் இல்லை. லால்குடி தாண்டியவுடன் வரும் அந்த பகுதி. இன்னும் அப்படியேதான் உள்ளது என்று கேள்விப்பட்டவுடன் மனம் நொந்து விட்டேன்.
கோயில்களில் எடுத்து சென்று பணத்தை தெரிந்தும் தெரியாமலும் கொட்டுபவர்கள் , பல வழிகளில் வீண் செய்து விரயம் செய்பவர்கள் தயை செய்து யோசிக்கவேண்டும்.
அடிப்படை வசதி செய்துதராமல் எந்த அரசும் நெடிக கூடாது. ஆனால் இன்று சென்னை மாநகரமே அப்படிதான் உள்ளது. குப்பை கூடாரங்களும் பூட்டிக்கிடக்கும் கழிப்பறைகளும் நெஞ்சை உறுத்துகிறது. யார் யாரை சொல்வது ...  பழனிக்குமார் :

----------------------------------------------------------------------------------------------------------
 




மிகவும் அவசியமான செய்தியைக் குறிப்பிட்டு உள்ளீர்கள் தோழரே.!

ஊர் ஊருக்கு
சில பெரியவர்கள்
நோட்டுக்களைத் தூக்கிக்கொண்டு
கோவில் ,கும்பாவிசேகம் என்று
வசூலுக்கு வந்த வண்ணம்
உள்ளனரே ! "

கடந்தமுறை மத்திய சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த ஜெயராம் ரமேஷ்.கோவில்களைவிட,கழிப்பறைகள்தான் தற்போது அவசியமாக உள்ளது என்று ஒரு கருத்து தெரிவித்தார்.உடனே சில அமைப்புகள் திரண்டு எழுந்து,கோவில்களை விட கழிப்பறைகள்தான் அவசியம் என்று எப்படி சொல்லலாம்..என்று கூறி,அவரது வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்,போராட்டம் செய்தது தங்களுக்கும் நினைவிருக்கலாம்.

இந்த விவகாரம் அப்படியிருக்கும்போது,
"
கிராமத்தில்
தெருவுக்கு மூன்று
கழிப்பறை கட்டுவோம்
அதனை எந்த நாளும்
சுத்தமாக வைத்துக்காட்டுவோம்
அதற்குத் தாருங்கள்
நன்கொடை என வாருங்கள்
பெரியோரே !.." - இது நடந்தால் நல்லதுதான்.

மேலும் ,இது தொடர்பாக சமீபத்தில் வந்த செய்தி ஒன்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
------------------------------------
"தேவை தூய கழிப்பறை."

இரு இளம்பெண்கள் அந்தி வேளையில் ஊருக்கு வெளியே இயற்கையின் அழைப்புக்காக சென்றபோது வல்லுறவுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அனைத்து கிராமங்களிலும் கழிவறை வசதிகள் இல்லை என்பது குறித்து அனைவராலும் பேசப்படுகிறது.

இதில் அரசை மட்டும் குறைகூறிப் பயனில்லை என்பதையும், மனிதர்களின் பழக்க வழக்கம் எளிதில் மாறுவதில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

2012க்குள் அனைவருக்கும் கழிவறை வசதி உருவாக்கப்படும் என்று திட்டம் தீட்டி ஆண்டுதோறும் 35 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டாலும், இத்திட்டம் 2022ஆம் ஆண்டில்தான் சாத்தியமாகும் என்று தற்போது அரசு சொல்வதற்குக் காரணம்: மக்கள் இதற்குத் தயாராக இல்லை.

இத்திட்டத்தின் கீழ் நாட்டின் பல பகுதிகளிலும் கட்டப்பட்ட பொதுக்கழிப்பறைகள் 50% பயன்படுத்தப்படவில்லை. அல்லது பயன்படுத்த முடியாத அளவுக்கு பாழாக்கப்பட்டு, சமூக விரோதச் செயல்களுக்கான இடமாக மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு பயன்பாடு இல்லாமல் ஆனதற்குக் கூறப்படும் காரணங்கள், அங்கே தண்ணீர் வசதி இல்லை. இது ஓரளவு உண்மையும்கூட. ஆனால் தண்ணீர் இருக்கும் இடத்திலும், ஆற்றங்கரை மேட்டில் அமைந்துள்ள பொதுக் கழிப்பிடங்கள்கூட பயன்பாடற்றுப் போகக் காரணம் என்ன?

சாலையோர உணவகங்களில் பேருந்துகளை பத்து நிமிடம் நிறுத்துகிறார்கள். நடந்துநர் ஓட்டுநர் இருவர் மட்டும்தான் சாப்பிடுகிறார்கள். பயணிகளில் மிகச் சிலரே சாப்பிடுகின்றனர். அந்த சாலையோர உணவகத்துக்கு வருவாய் எதில் கிடைக்கிறது? கழிவறையில்.

ஒரு பேருந்தில் வருபவர்களில் குறைந்தது 10 பேர் பயன்படுத்துவார்கள் என்றால், குறைந்தபட்சம் 100 பேருந்துகளுக்கு 1000 பேர் பயன்படுத்துகிறார்கள். கட்டணம் நபருக்கு ரூ.4. ஒரு நாளைக்கு எந்த முதலீடும் இல்லாமல் ரூ.4000 கிடைக்கிறது. மாதம் ரூ.1.20 லட்சம்!

ஆனால் அந்தக் கழிவறைகள் முகம் சுழிக்கச்செய்யும் வகையில்தான் பராமரிக்கப்படுகின்றன. அப்படியென்றால், லாபம் இல்லாத பொதுக் கழிப்பறைகளின் பராமரிப்பு எப்படியிருக்கும்!

ஒரு ஓட்டலில் உள்ள பொதுக் கழிப்பறையில் எழுதப்பட்ட வாசகம்: நீங்கள் இந்தக் கழிப்பறை எவ்வாறு சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதேபோன்று நீங்கள் வெளியே போகும்போதும் சுத்தமாக தண்ணீர் ஊற்றிச் செல்லுங்கள்.

இவ்வாறு எழுதக்காரணம், பலரும் தாங்கள் பயன்படுத்தியதோடு முடிந்தது என்று அக்கறை இல்லாமல் போவதால், அந்தக் கழிப்பறையை அடுத்தவர் பயன்படுத்த முடியாத அளவுக்கு ஆகிவிடுகிறது.

கழிப்பறையைப் பயன்படுத்துவது எப்படி என்று தெரியாத இந்தியர்களே அதிகம். இதில் படித்தவர், படிப்பறிவில்லாதவர் என்ற பாகுபாடு கிடையாது.

இவ்வாறு கழிப்பறை குறித்து யாரும் அதிக அக்கறை கொள்வதில்லை என்பதால், இதில் ஊழலும் நாறுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் கழிப்பறை வசதி குறித்த தகவல்களுக்கும், மத்திய அரசு கட்டியிருப்பதாக சொல்லும் புள்ளிவிவரத்துக்கும் 3.75 கோடி கழிப்பறைகள் வித்தியாசம் இருக்கிறது. அப்படியானால் இந்த 3.75 கோடி கழிப்பறைகள் கட்டப்படாமல் கணக்கு எழுதப்பட்டனவா?

பெரும்பாலும் பள்ளி, கல்லூரிகளில்தான் பொய்க்கணக்குகள் எழுதப்படுவது வழக்கம். அப்படியிருந்தும் கழிப்பறை இல்லாத பள்ளிகள் இன்னமும் இருக்கின்றன.

பல கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கும் கழிப்பறை வசதிக்கும் சம்பந்தமே இல்லை. பேருந்து நிலையங்களிலும் இதே நிலைமைதான்! புகழ்பெற்ற பக்தி மணக்கும் கோவில் மதில் சுவர்கள் நாறுகின்றன. வாரச் சந்தை நடைபெறும் பகுதிகள், திருவிழா நடைபெறும் பகுதிகளிலும் முடை வீச்சம்.

சுற்றுச்சூழலால் ஏற்படும் நோய்கள் குறித்து புள்ளிவிவரங்கள் நம்மிடம் இல்லை என்று உலக சுற்றுச்சூழல் நாளில் பேசிய மத்திய சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் பெரும்பாலான நோய் கழிப்பறை வசதி குறைவாக இருப்பதால்தான் பரவுகின்றன.

இந்தியாவில் நாளொன்றுக்கு 10,000 டன் மலஜலக் கழிவுகள் ஆற்றிலும், வாய்க்காலிலும் கலக்கின்றன. இவற்றில் ஒரு கிராம் மலத்தில் ஒரு கோடி வைரஸ்கள், 10 லட்சம் பாக்டீரியா, 1000 தொற்றுக்கிருமிகள், அவற்றின் முட்டைகள் 100 இருப்பதாகச் சொல்கிறது யூனிசெப் நிறுவனம்.

நோயற்ற இந்தியா உருவாக வேண்டும் என்றால், அனைவருக்கும் தூய்மையான கழிப்பறை வசதி வேண்டும். நோயற்ற வாழ்வும் தூய கழிப்பறையும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை!
----------------------இணையத்தின் உதவியுடன் பொள்ளாச்சி அபி

Friday, 30 May 2014

வேட்டையாடப்படும் விலங்காக.......

உனது விருப்பம்
என்பது உனதல்ல
உன் குடும்பத்தினர்
விருப்பமே உன் விருப்பம்

பெண்ணே,
அவன் உனைப் பெற்றவனாக இருக்கலாம்,
பெண்ணே,
அவன் உன் உடன் பிறந்தவனாக இருக்கலாம்
உனது விருப்பமும்
அவர்கள் விருப்பமும்
வேறு வேறானால்
வேட்டையாடப்படும் விலங்காக
எறிந்து கொள்வார் உன்னை!

கர்ப்பிணியா நீ !
நீயாகத் தேர்ந்தெடுத்த
ஒருவனோடு வாழ்வதா நீ!
சாகடிப்பார் உன்னை !
நட்ட நடுத்தெருவில்
காக்கிச்சட்டைகள் பார்த்திருக்க
கற்களால் எறிந்து கொள்வார் உன்னை !

அடிபணிந்து போ !
அப்பனுக்கு,அண்ணனுக்கு,
அவர்கள் காட்டும்
ஒருவனுக்கு சொந்தமாகிப்போ!
காட்டும் ஒருவன்
கிழமோ,கீழ்த்தரமோ
குடிகாரனோ, ஒழுங்கீனனோ
எதைப் பற்றியும்
கவலைப் படாதே !
அவர்கள் சுட்டும்
ஒருவனோடு நீ வாழ வேண்டும்!
இல்லையேல் நீ சாக வேண்டும் !

பாழாய்ப்போன சாதியால்
செய்கிறான் சிலர் இங்கே !
சாதி இல்லை அங்கே
இருந்தாலும் ஏன் இக்கொலை அங்கே!

ஒன்றல்ல ! இரண்டல்ல !
ஓராண்டில்
நூற்றுக்கணக்கில்
கொல்லப்பட்ட பெண்கள்!
சொந்த குடும்பத்து ஆண்களால்
கவுரவக் கொலைகளாம் !
சொல்லக் கொதிக்கதடா நெஞ்சம் !

உனது விருப்பம்
என்பது உனதல்ல
உன் குடும்பத்தினர்
விருப்பமே உன் விருப்பம் !

குடும்பம் எனும்
அமைப்பு நொறுங்காமல்
பெண்ணடிமை ஒழியாது !
வேலியாவது - வெங்காயமாவது
என்று வெகுண்டெழாமல்
பெண் வேதனைகள் தீராது !

(பாகிஸ்தானில் தனது குடும்பத்தாராலேயே கொல்லப்பட்ட பர்ஸானா பர்வீன் என்ற பெண்ணின் நினைவாக) .
                                                                 வா.நேரு 


நன்றி : எழுத்து.காம்

Saturday, 24 May 2014

அண்மையில் படித்த புத்தகம் : ஊர் சுற்றிப் புராணம் ஆசிரியர் : ராகுல் சாங்கிருத்யாயன்

அண்மையில் படித்த புத்தகம் : ஊர் சுற்றிப் புராணம்
ஆசிரியர் :  ராகுல் சாங்கிருத்யாயன்
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை-98
நான்காம் ப்திப்பு  செப்டம்பர் 2003,விலை ரூ 70  மொத்த பக்கங்கள் : 236

                          புகழ் பெற்ற எழுத்தாளரான ராகுல் சாங்கிருத்யாயன் அவர்கள் எழுதிய  இந்த 'ஊர் சுற்றிப் புராணம்' - புத்தக வாசிப்பு ஒரு வேறுபட்ட அனுபவத்தைக் கொடுத்தது. " உலகம் இன்பத்திலும் துன்பத்திலும் யாரிடமிருந்தாவது உதவி பெறுகிறது என்றால் அது ஊர் சுற்றிகளினால்தான் " எனச்சொல்கின்றார் இந்தப் புத்தகத்தின்  ஆசிரியர். " ஏ , கிணற்றுத்தவளை மன்ப்பான்மையே , நீ அடியோடு ஒழிக " என்பதுதான் இந்த நூலின் நோக்கம் எனக் கொள்ளலாம்.

                               மொத்தம் 16 அத்தியாயங்கள். 'ஊர் சுற்றும் அவா'வில்  ஆரம்பித்து, 'நினைவுகள்' என்பதுவரை இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. ஊர் சுற்றும் அவாவில் ' எதிர்கால ஊர் சுற்றிகளே , புறப்படத் தயாராகுங்கள், உங்களை வரவேற்க உலகம் இரண்டு கைகளையும் விரித்து நிற்கிறது ' எனச்சொல்லும் ராகுல்ஜி புத்தர், மகாவீரர் போன்ற பலரைச்சொல்லி, அவர்கள் ஊர் சுற்றிகளாக இருந்ததால்தான் உலகம் பயன்பெற்றது என்பதனை மிக அழகாகச்சொல்லி, ஊர் சுற்ற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அம்மா அழுவதை, அப்பா சொல்வதை, மனைவி சொல்வதை, கண்வன் சொல்வதை  எல்லாம் கேட்காதீர்கள், ஊர் சுற்றக்கிளம்பி விடுங்கள்  என்று ' தடைகளைத் தகர்த்தெறியச்' சொல்கின்றார், மகன் இல்லாவிட்டால் மோட்சமில்லை என்று நினைத்து, தந்தை விடமாட்டார் அதனை எல்லாம் கண்டு கொள்ளாதே என்று சொல்லும் ராகுல்ஜி, " தற்போதைய மக்கள் தொகையே சமாளிக்க முடியாததாக இருக்கின்றதென்றால் ஒவ்வொரு ஆண்டும் ஐம்பது இலட்சம் புதிய ஜீவன்கள் கந்து வட்டி விகிதத்தில் பெருகி வருகின்றனர்.. புதிய உயிர்களை உலகிற்கு கொண்டு வர விரும்பாத ஆண் பெண்கள் இன்று புண்ணியவான்களாகக் கருதப்படவேண்டும். புண்ணியத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையெனில், அவர்களை மரியாதைக்குரியவர்கள் என்றுதான் சொல்வோமே, அவர்கள் நாட்டின் பளுவைக் குறைக்கின்றனர்...சுமேரு ,மலையின் மேல் இருப்பதாகக்கூறப்பட்ட சொர்க்கமும், பாதாளத்தில் இருப்பதாகச்சொல்லப்பட்ட நரகமும் பொய்யானவை என்று தற்காலப் பூகோள சாஸ்திரம் ஐயந்திரிபின்றி நிருபித்துவிட்டது. " (பக்கம் 27) என்று சொல்லும் ராகுல்ஜி அப்பாவும் மகனும் தள்ளி இருந்தால்தான் அன்பும் பாசமும் கூடும் என்று சொல்கின்றார்.
                                  ஊர் சுற்ற ஆர்வம் இருக்கும் மனிதர்களை உசுப்பேற்றும் ராகுல்ஜி அதனைச்சொல்லும் விதம் மிகவும் சுவையாக உள்ளது. " நீங்கள் உங்கள் நகரைத் துறக்கத் தயாரானால் ஆயிரக்கணக்கான நகரங்கள் உங்களை வரவேற்க முன்வரும். நீங்கள் உங்கள் கிராமத்தை விட்டு வெளியேறுங்கள்; ஆயிரக்கணக்கான கிராமங்கள் உங்களை வரவேற்கத் தயாராயிருக்கும். ஒரு சில நண்பர் சுற்றத்தாருக்குப் பதிலாக ஆயிரக்கணக்கான நண்பர்களும் சுற்றத்தாரும் உங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் தனியாரவரல்ல. இங்கு நான் மீண்டும் ஆயிரம் பொய்களையும் , ஓரிரு உண்மைகளையும் எடுத்துக்கூறும் இந்துக்களின் புனித நூலாகக் கருதப்படும் 'பகவத் கீதை'யின் சுலோகத்தை மேற்கோள் காட்டுவேன். " (பக்கம் 34-35) . மேலே உள்ள வாசகங்களில் உள்ள கேலியைப் பாருங்கள். இதே மாதிரியான வசனங்கள் நூல் முழுவதும் அங்கங்கு விரவிக் கிடக்கின்றன. 

                                 ஊர் சுற்றும் எண்ணத்தை மிக ஆழமாக படிக்கும் வாசகர்களின் மனதில் ஏற்படுத்தும் ராகுல்ஜி , ஊர் சுற்றுவதற்கு முன் முடிவு செய்ய வேண்டிய விசயங்கள் என்று சிலவற்றைச்சொல்கின்றார்.
" சில விசயங்களை முன்னதாகவே முடிவு செய்து கொண்டுவிட்டால், மனிதனின் வாழ்க்கையில் பன்னிரண்டு ஆண்டுகளில் சாதிப்பதை இரண்டே ஆண்டுகளில் சாதிக்க முடியும் " (பக்கம் 39) எனச்சொல்லும் ராகுல்ஜி ஊர் சுற்றுவது என்று முடிவுசெய்துவிட்டால் என்னென்ன செய்ய வேண்டும், முன் தயாரிப்புகள் எப்படி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில்  கல்வியின் அவசியம் பற்றி மூன்றாம் அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றார். படித்து முடித்து 24 வய்துக்குள் வீட்டை விட்டு வெளியேறி விடவேண்டும் என்று சொல்கின்றார். " நீங்கள் ஊர் சுற்ற வேண்டுமென்ற முடிவெடுத்துக் கொண்டதும் சுற்றுப் புறத்திலுள்ள நூல் நிலையங்களிலும் பள்ளி நூல் நிலையத்திலுள்ள பயண நூல்களையும், வாழ்க்கை வரலாறுகளையும் நன்றாகப் படித்துக்கொள்ளவேண்டும் " பக்கம் (44) குறிப்பிடுகின்றார். ப்ல மொழிகளைக் கற்றுக் கொள்வது பயனுள்ளதாக இருக்கும் , உடல் வலிமையாக இருக்க உடல் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்  என்று அறிவுறுத்துகின்றார். உடல் உழைப்பு பயிற்சி கட்டாயம் வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.

                                       அண்ணல் அம்பேத்கர் " எனக்கு மேலானவர் என்று எவரும் இல்லை, அதனைப் போலவே எனக்கு கீழானவர் எவரும் இல்லை " என்று சொன்னதைப் போல சம நிலைப் பார்வை ஊர் சுற்றிக்கு வேண்டும் என்கின்றார் ராகுல்ஜி. " உலகத்தில் எவரையுமே த்ன்னைவிட உயர்ந்தவர்களாகவும், அதே சமய்த்தில் தன்னைவிட தாழ்ந்தவர்களாகவும் எண்ணா மனோநிலையை ஊர் சுற்றி பெற்றிருக்க வேண்டும். அவனுடைய நடவடிக்கைகளும் இதனைப் பொறுத்திருக்க வேண்டும். சம நிலைப் பார்வையும், நெருக்கமான நட்புறவும் அவன் கொண்டிருக்க வேண்டும் " பக்கம் (57) ." கல்வியும், பண்பாடும், தன் மானமும் ஊர் சுற்றிக்கு இருக்க வேண்டிய முக்கிய குணங்கள் " என்றும் குறிப்பிடுகின்றார்.

                             ஊர் சுற்றி உடலுழைப்பு செய்து பணம் சம்பாதிக்க தெரிய வேண்டும் என்று சொல்கின்றார். " முகச்சவரம் செய்வதையோ, சிகையலங்காரத்தையோ ' கற்றுக் கொண்டால் எளிது எனக்குறிப்பிடுகின்றார். (பக்கம் 60,61). யுவதிகள் அழகுபடுத்தும் கலையை கற்றுக்கொள்ளலாம் என்று சொல்கின்றார். இயந்திரத் தொழில், நகைத் தொழில், தையல் , ஆடை வெளுத்தல், தச்சுத் தொழிலை கற்றுக் கொள்ளலாம். கடிகார ரிப்பேர், இயந்திர ரிப்பேர், புகைப்படத் தொழில் போன்றவை ஊர் சுற்றிகள் பணம் சம்பாரித்து ஊர் சுற்ற தேவைப்படும் தொழில்கள் என்றும் சொல்கின்றார். ஜோதிடம், கைரேகை போன்றவை பணம் சம்பாதிக்கப் பயன்படும் ஆனால் அவை மூட் நம்பிக்கை வளர்ப்பவை எனவே அதனைக் கற்றுக்கொள்ளாதே, பயன்படுத்தாதே என்று சொல்கின்றார். முதலுதவிச்சிகிச்சை கற்றுக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடுகின்றார்.

                               சிற்பக் கலை, கலைகள் பற்றிய ஆர்வம் ஊர் சுற்றிக்கு இருந்தால் அதனை வளர்த்துக் கொள்ள வேண்டும் . நடனம் , சங்கீதம், வாத்திய இசை போன்றவை  ஊர் சுற்றிக்கு எந்த நாட்டு மக்களிடத்திலும் எளிதாக அணுகவும் , பாராட்டு பெறவும் உதவியாக இருக்கும் என்று விளக்குகின்றார். பழங்குடி மக்கள் பற்றியும், ஊர் சுற்றிகள் கவனமாக இருக்க வேண்டிய செயல்கள் பற்றியும் 'பழங்குடிகளிடையே ' என்னும் அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றார். " காட்டுவாழ் மக்களிடம் செல்லும் ஊர் சுற்றி, அவர்களுக்குச்சில விசயங்களைக் கற்றுத் தருவதுடன் அவர்களிடமிருந்தும் சில விசயங்களைக் கற்றுக் கொள்கிறான் " (பக்கம் 89 )- கற்றுத் தருபவை, கற்றுக் கொள்ள வேண்டியவை என அவர் விவரிக்கும் தனமை அருமை.

                                  ஊர் சுற்றி இனத்தவர் என்ற தலைப்பில் நாடோடி மக்களாக வாழும் மக்கள் பற்றிய தகவலகள் தகவல் களஞ்சியங்களாக உள்ளன. பெண் ஊர் சுற்றிகள் என்னும் தலைப்பில் , பெண்கள் ஏன் ஊர் சுற்ற வேண்டும் என்பதனை விவரிக்கின்றார். தந்தை பெரியார், "பூனைகளால் எலிகளுக்கு எப்போதும் விடுதலை கிடைக்காது, அத்னைப் போல ஆண்களால் பெண்களுக்கு எப்போதும் விடுதலை கிடைக்காது"  என்று  சொன்னதைப் போல ராகுல்ஜி ஆணாதிக்கத்தின் கொடுமைகளை பட்டியலிடுகின்றார், " ஆயிரக்கணக்கான விலங்குகளால் (ஆண்கள்) தம்மைக் கட்டி வைத்திருக்கிறார்களென்பதைத் துணிவு படைத்த யுவதிகள் உணர வேண்டும். ஆண் , பெண்ணின் ஒவ்வொரு ரோமக் கண்ணிலும் ஆணி வைத்து அடித்திருக்கிறான். பெண்களின் அவல நிலையைப் பார்க்கும்போது சிறு வயதில் கேட்ட ஒரு கதை நினைவுக்கு வருகிறது. " மனித நடமாட்டமில்லாத மாளிகையொன்றில் ஒரு பிணம் அழுகாமல் நல்ல நிலைமையில் விழுந்து கிடந்தது. பிணத்தின் ஒவ்வொரு ரோமத்திலும் ஆணிகள் அடிக்கப்பட்டிருந்தன. அவ்வாணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கப் பிடுங்க, பிணத்துள் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் வரத் தொடங்கியது. அதன் கண்களில் செலுத்தப்பட்டிருந்த ஆணிகளைப் பிடுங்கியதுமே பிணம் எழுந்து உட்கார்ந்து ரொம்ப நேரம் தூங்கிவிட்டேன் என்று முணு முணுத்துக் கொண்டதாம். இன்றைய சமுதாயத்தில் ஆண்கள், தம் கைகளால் பெண்களின் ஒவ்வொரு ரோமத்திலும் அடிமைத்தனத்தின் ஆணிகளை அடித்திருக்கின்றனர். ஆனால் ஆண்களே அந்த ஆணிகளை எடுத்து விடுவார்களென்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம் " (பக்கம் 117). அருமையான வரிகள். இன்றைக்கு நமது பெண்கள் ஐ.டி. படித்து தன்னந்தனியாக சென்னை, பெங்களூரிலும், வெளி நாடுகளிலும் வேலை பார்க்கின்றனர். கை நிறையச்சம்பளம் வாங்குகின்றனர்.பெரும்பாலும் தங்கள் வாழ்க்கை இணையர்களைத் தாங்களே அமைத்துக் கொள்கின்றனர். எவ்வளவு பெரிய மாற்றம். ராகுல்ஜி தன்னுடைய வாழ்க்கையில் கடந்த நூற்றாண்டு, இந்த நூற்றாண்டு, இன்றைய கால கட்டப்பெண்கள் என்று ஒப்பிடுகின்றார், பத்தாம் பசலிகளை தன்னுடைய வார்த்தைகளால் எள்ளி நகையாடுகின்றார். இன்றைய பெண்கள் அதையெல்லாம் கடந்து அடுத்த கட்டம் சென்று விட்டார்கள்.

                     மதமும் ஊர் சுற்றுதலும் என்னும் தலைப்பில் மத நம்பிக்கையாளன் ஊர் சுற்றுபவனாக இருந்தால் அவனுக்கு மத வெறி இருக்காது என்று சொல்கின்றார்." மதங்களின் குறுகிய எல்லைகளை ஊர் சுற்றி கடந்து போய்விடுகிறான். அவன் மதப் பாகுபாட்டைத் துச்சமெனக் கருதிகிறான். ...உண்மையில் ஊர் சுற்றி , மதம் என்பதை ஒரு தனி மனிதனின் சொந்த விசயமாகவே கருதுகிறான் " (பக்கம் 139). நாத்திக ஊர் சுற்றி, ஆத்திக  ஊர் சுற்றி எனப்பிரிக்கின்றார் ராகுல்ஜி. " வாய்ப்பு கிடைக்கும்போது நாத்திக ஊர் சுற்றி , தன் கருத்துக்களைத் தெளிவாகக் கூறுவதற்குப் பின் வாங்குவதில்லை; என்றாலும் மத்ததில் உண்மையான நம்பிக்கை உள்ள சக ஊர் சுற்றியின் உள்ளத்தைச்சுடு சொல்லால் வேதனைக்குள்ளாக்க விரும்பவும் மாட்டான். எல்லாருடனும் அன்பாகப் பழகுவதுதான் அவனுடைய ல்ட்சியமாகும் " (பக்கம் 142).

                      காதல் பற்றி, ஊர் சுற்றிக்கு இருக்க வேண்டிய ஊர் சுற்றப்போகும் நாட்டறிவு பற்றி, மரண தத்துவம் பற்றி தொடர் அத்தியாயங்களில் எழுதுகின்றார். ஊர் சுற்றிகள் எப்படியெல்லாம் எழுதுகோலையும் , தூரிகையையும் பயன்படுத்தலாம், அதனால் எப்படி, எப்படி எல்லாம் நன்மைகள் விளைந்தன , ந்ன்மைகள் விளையும் என்பதனை அழகுற எழுதியிருக்கின்றார். இன்றைக்கும் கூட மேல் நாட்டு அறிஞர்கள் ஒரு புத்தகம் எழுதுவதற்கு முன்னால் அந்தப் புத்தகம் எழுதுவதற்காகப் பயணிக்கின்றார்கள், தகவல்கள் சேகரிக்கின்றார்கள், பின்னர்தான் எழுதுகிறார்கள் என்று படிக்கின்றோம். ஆனால் இயல்பாகவே ஊர் சுற்றியாக இருக்கும் ஒருவரின் எழுத்தாற்றல் எவ்வளவு வலிமையானது என்பதனை ராகுல்ஜி விளக்கும் விதமே அருமை. பொய்யாக எழுதாதே, இட்டுக் கட்டி எழுதாதே, அழகுற உண்மையோடு எழுது  என்று சொல்கின்றார். ஊர் சுற்றுதல் பயன் கருதாப் பயணம் அல்ல, மனித இனத்திற்கு  வலிமை சேர்க்கும் பயணம் என விவரிக்கின்றார். " இளம் பெண்கள் ஊர் சுற்றுவதெப்படி " என்னும் அத்தியாயத்திற்கு மட்டும் தனிக் கட்டுரை எழுதலாம். அவ்வளவு விசயங்கள் அந்த அத்தியாயத்தில் உள்ளன. இன்றைய புதுமைப் பெண்கள் எவை எவையெற்றையெல்லாம் தகர்த்தெறிந்து இன்றைய புதுமை நிலையை அடைந்திருக்கின்றார்கள் என்பதனை உணர இந்த அத்தியாயத்தை ஊன்றிப் படிக்கலாம். உணரலாம்.

                        நினைவுகள் என்னும் கடைசிப் பகுதியில் தான் ஊர் சுற்றிய அனுபங்களைப் பகிர்ந்து கொள்கின்றார். இதிலும் மேம்பட்ட நூல்கள் வரவேண்டும் என்னும் தன் விருப்பத்தை வெளியிடுகின்றார் ராகுல்ஜி.

                     2000-க்குப் பிறகு உலகம் முழுவதும் தமிழர்கள் புலம் பெயர்ந்தும், வெளி நாடுகளில் வேலை வாய்ப்புக் கிடைத்தும் வாழ்கின்றார்கள். அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என விமானங்களில் பறந்து கொண்டுள்ளார்கள். ராகுல்ஜி எழுதிய காலத்தில் கணினியும் , இணைய தளமும் இல்லை. இவை இரண்டும் இன்றைக்கு ஊர் சுற்றுதலை மிக எளிதாக ஆக்கி இருக்கின்றன. ஆனால் பறந்து பறந்து போய் , ஏதோ ஒரு குளிரூட்டப்பட்ட அறையில் அடைந்து கொள்ளுதல் என்பதுதான் இன்றைய வழக்கமாக இருக்கின்றது,ஆனால் ராகுல்ஜியின் இந்த 'ஊர் சுற்றிப் புராணம் ' என்னும் இந்தப் புத்தகம் மக்களோடு பழகுவதை, மக்களோடு வாழ்வதை, மக்களைப் புரிந்து கொள்வதை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், தங்கள் பயண அனுபவத்தை, வாழும் சூழலை பதிய வேண்டும், நூலாக வெளியிட வேண்டும் என்னும் உணர்வை இந்தப் புத்தகம் படிப்பவர்கள் மனதில் உறுதியாக ஏற்படுத்தும். படிக்கலாம். இந்த நூலை அடுத்தவர்களையும் படிக்கச்சொல்லலாம். 




                       

Tuesday, 13 May 2014

நிகழ்வும் நினைப்பும்(23) : வீர வணக்கம் ! வீரவணக்கம்! தோழர் பெரியார் சாக்ரடீஸுக்கு வீரவணக்கம் !

நிகழ்வும் நினைப்பும்(23) : வீர வணக்கம் ! வீரவணக்கம்! தோழர் பெரியார் சாக்ரடீஸுக்கு வீரவணக்கம் !

தோழர் விருதுநகர் க. நல்லதம்பி அவர்கள் , 12.05.2014 மாலை 7 ம்ணியளவில் அழைத்து, ' அய்யா, செய்தி உண்மையா? ' என்றார். என்ன? என்று கேட்க, இடியென விழுந்த அந்த செய்தியைச்சொன்னார், தோழர் பெரியார் சாக்ரடீஸ் இறந்து விட்டாரமே,உண்மையா ?  என்றார்.அண்ணன் வீ.குமரேசன்  அவர்கள் ஆமாம் என்று உறுதி செய்தபோது , அந்த முகமும் , பெரியார் திடலுக்குள் துறு, துறுவென்ற அவரின் செயல்பாடும், உண்மை இதழும் ஞாபகத்திற்கு வர , மிகப்பெரிய துயரம் மனதை அடைத்தது.

                              திராவிடர் கழகம் அதைச்செய்ய வேண்டும் , இதைச்செய்ய வேண்டும் என்று ஆலோசனை  சொல்லுவோர் நிறைய உண்டு. செயல்பாடுகளில்   என்ன குற்றம் சொல்லலாம் என்று யோசித்து யோசித்து குறை சொல்வோர் உண்டு. ஆனால் தந்தை பெரியாருக்குப் பின்னால் இன்று சூழ்ந்துள்ள ஆபத்தையும் அந்த ஆபததை நீக்க  அரும்பணியாற்றும் அய்யா ஆசிரியரின் நம்பிக்கைக்கு உரியவர்களாய், அவர் சொல்லும் செய்ல்களை,இராணுவக் கட்டுப்பாட்டோடு செய்து முடிக்கும் தோழர்களில் மிக முக்கியமானவர் பெரியார் சாக்ரடீஸ். உண்மை இதழின் பக்கங்களுக்கு மெருகேற்றி, மெருகேற்றி , அவ்விதழ் மிகச்சிறப்பாக வரக் காரணமானவர் தோழர் பெரியார் சாக்ரடீஸ். பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலப் பொறுப்பாளராக இருந்த்  செயல்பட்ட அருமைத்தோழர் பெரியார் சாகரடீஸின் இழப்பு இயக்கத்திற்கு மிகப்பெரிய இழப்பு. வீரவணக்கம், வீர வணக்கம். தோழர் பெரியார் சாக்ரடீஸ் அவர்களுக்கு வீர வணக்கம்.

                  திராவிடர் கழகத்து தோழர்களின் குடும்பங்களின் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களின் அறிக்கை படிக்கும்போதே கண்களில் கண்ணீரை  வரவழைத்தது, இதோ அவரின் அறிக்கை:
பெரியார் குடும்பத்து மூன்றாம் தலைமுறையே!

பெரியார் சாக்ரடீஸே, மறைந்தாயா? நம்பமுடியவில்லையே!

- தமிழர் தலைவர் ஆசிரியர் கண்ணீர் அறிக்கை

காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளியும், தந்தை பெரியாரின் தன் மான இயக்கத்தை தலை தாழாது தூக்கிப்பிடித்த பெரியார் பெருந்தொண்டருமான காரைக்குடி (கல்லுக்கட்டி) என்.ஆர். சாமி என்ற மாபெரும் ஆலமரத்து அருங்கிளையின் விழுதான எங்கள் அன்புச் செல்வன் பெரியார் சாக்ரடிஸை (வயது 44) விபத்து பதம் பார்த்து விட்ட நிலையில், எப்படியாவது பிழைத்துவிட மாட்டாரா என்று ஏங்கித் துடித்த எங்களை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டாரே!

அவரை வளர்த்து ஆளாக்கிய அவரின் பெற்றோர்களான தந்தை, சாமி திராவிடமணியும், தாய் ஜெயா அம்மையாரும் வாழ்விணையர் இங்கர்சாலும், ஒரே அன்பு மகள் தமிழ் ஈழமும்,  அவரது சகோதரர்கள் மற்றும் பெரியப்பா, சித்தப்பா குடும்பவத்தார்கள், அதைவிட இயக்கத்தோடு பின்னிப்பிணைந்த உறவால் எங்களையும் இப்படித் தவிக்கவிட்டுவிட்டுச் சென்றுவிட்டாரே என்று எண்ணும்போது எழுதக்கூட எனது கையும், மனமும் ஒத்துழைக்க மறுக்கின்றனவே!

பெரியார் குடும்பத்து மூன்றாம் தலைமுறையே!

உன் இழப்பை எப்படி  நாங்கள் சரிசெய்வோம்?

எங்கள் இயக்கக் கொள்கை குலக்கொழுந்தே, என் பணியில் பெரும்பகுதியை ஏட்டுத்துறையில் எடுத்துக்கொண்டு உதவிய எனது இளம் ஏந்தலே!

எனக்குரிய நம்பிக்கையான செய்திப் புறாவாக எப்போதும் பறந்துவந்து, தந்து, உன் கடமையாற்றிப் பறந்து போவாயே; அதுபோல இப்போதும் சொல்லாமல் விடைபெறாமல் சென்றுவிட்டாயே -  எங்கள் கொள்கைத் தங்கமே!

கொண்ட தலைமைக்கும், கொள்கைக்கும் நெறிதவறாது ஒரு கவசத் தொண்டராக இருந்து பெற்ற தந்தையைவிட எம்மை உற்ற தந்தை தாயாகவே கருதி, பெரியார் திடல் முகவரியாகவே வாழ்ந்த எங்கள் இலட்சிய முகமே!

உன்னை பறித்தெடுத்த இயற்கையின் கோணல் புத்தியை எப்படித்தான் விமர்சிப்பது, எங்களுக்கே புரியவில்லையே!

திடலில் பல அறிஞர்கள் இறையனாரும், கு.வெ.கி.ஆசானும், ஆளுமைக்குரிய ஆளவந்தார், பொருளாளர் சாமிதுரை, கல்வியாளர் சிவராசன்களும் எம்மை விட்டுப் பிரிந்த நிலையிலும் இதோ நம் கொள்கைப் பரப்ப நம்பிக்கை நட்சத்திரங்களான பெரியார் சாக்ரடிஸை போன்ற இளம்புலிகள் உள்ளனரே என்று நாங்கள் பெற்ற ஆறுதலையும் பறித்துவிட்டாயே!

நீ மறைந்து விட்டாயா? நம்பமுடியவில்லையே!  எனது மற்றொரு துரைச் சக்ரவர்த்தி ஆகிவிட்டாயே!

எப்படித்தான் தாங்குவதோ. எங்களுக்கே இப்படியென்றால் உங்கள் குருதி கொள்கைக் குடும்பம், வாழ்விணையர்கள், எம் பேரப்பிள்ளைகள் இவர்களுக்கு யார்தான் ஆறுதலும், தேறுதலும் கூறுவது?

எல்லோரும் சேர்ந்து வழியனுப்பக் கூடாத அந்த வசீகரக் கொள்கைத் தங்கக் கட்டியை வழியனுப்புவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டதே... அந்தோ!

வழியில்லாமல் விழிநீரைத் துடைத்து, கட்டுப்பாட்டின் சின்னமான இராணுவ வீரனுக்கு வீர வணக்கம் கூறி, ஒருவருக்கொருவர் தேற்றமுடியாத நிலையிலும், பெரியாரின் கொள்கை உறுதித் துணையோடு இலட்சியப் பயணத்தை தொடர்ந்து, மேலும் ஆயிரம் ஆயிரம் பெரியார் சாக்ரடீஸ்களை உருவாக்குவோம்!

உறுதி கொள்ளுவோம்!!!

புரந்தார்கண் நீர் மல்க, உன்னை வழி அனுப்பும் உன் கொள்கைக் குடும்பத்து முகவரியாளன்,

உண்மை இதழில் ஒவ்வொரு வளர்ச்சிப் பக்கத்திலும் என்றும் வாழ்வாய்- வாழ்ந்துகொண்டே எம்முடன் பயணிப்பாய்! என்ற ஆறுதலுடன்...

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

12.5.2014
 

http://www.viduthalai.in/images/stories/dailymagazine/2014/may/13/35.jpg

Tuesday, 6 May 2014

வயலில் விடிந்ததுபோல....

கணினி முகத்தில்தான்
எனது விடியல்
எனது தாத்தா பாட்டன்
வாழ்க்கை
வயலில் விடிந்ததுபோல

சூரிய ஒளிக்கதிர்கள்
தரையில் விழுவதற்குமுன்னே
துயில் எழுகின்றேன்
என் முன்னோர்கள் போலவே

அவரக்ள் வெளி உலகில்
விடியலுக்காக
கால்வைத்த வேளைகளில்
நான் வீட்டிற்குள்ளேயே
ஒரு மூலையில்
கணினினுக்குள் மூழ்குகின்றேன்
இதுவும் கூட விடியலுக்காக

வயிற்றுப் பசி அடங்கியது
என் காலத்தில்
அறிவுப் பசி தொடர்கிறது
என் காலத்திலும்
என் பிள்ளைகள் காலத்திலும்

அடக்கப்பட்டோம் - ஏன்?
ஒடுக்கப்பட்டோம் -ஏன் ?
எனும் கேள்விகள்
அன்று விடை தெரியாத
வினாகக்ள் ?
இன்று தெரிந்த
விடைகளால்
மீண்டும் ஒருமுறை
அந்த நிலைக்கு ஆட்படோம்
எனும் தெளிவு நிலையால்
கணினினுக்குள் மூழ்குகின்றேன்

ஒரு நாள் முழுதாய் விடியும்
எனும் நம்பிக்கை இருக்கிறது !
உண்ண உணவில்லா நிலையில்
எவரும் இல்லை என்னும்
நிலை வரும் என்னும்
நம்பிக்கை வலுக்கிறது !

ஒடுக்கப்பட்டு மூலையில்
கிடந்தோரெல்லாம்
ஒன்றிணையும்
இணைப்புப் புள்ளிகளாய்
சமூக வலைத்தளங்களைப்
பார்க்கிறபோது
இணையத்திற்குள்
கருத்துக்களால்
இணையும்
இளைஞர்களைப் பார்க்கிறபோது
ஒரு நாள் முழுதாய் விடியும்
எனும் நம்பிக்கை
வலுக்கிறது மனதில் !
                                                   ...........வா. நேரு ....................
நன்றி : எழுத்து.காம்

Sunday, 4 May 2014

அண்மையில் படித்த புத்தகம் : எனக்கென்று முகம் இல்லை

அண்மையில் படித்த புத்தகம் : எனக்கென்று முகம் இல்லை
தொகுப்பாசிரியர் : தி.அமிர்தகணேசன்
வெளியீடு : சபானந்தாச்சார்யா பதிப்பகம், புதுச்சேரி-1
முதல் பதிப்பு : 2014, 144 பக்கங்கள் , விலை ரூ 130.

'எனக்கென்று முகம் இல்லை' என்னும் இக்கவிதைத் தொகுப்பு 12 பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு நூல். எழுத்து.காம். இணையதளத்தில் வெளி வந்த கவிதைகளின் தொகுப்பு. வய்தில், கருத்தில் வேற்றுமை இருந்தாலும் பெண் கவிஞர்களால் படைக்கப்பட்ட படைப்புகளின் தொகுப்பாய், பல மலர்கள் இணைந்த கதம்பமாய் மணக்கிறது. தொகுப்பாசிரியர் ' மேலெழும்பும் முகப்பிம்பங்கள் ' என்னும் தலைப்பில் அணிந்துரையும், ' ஒரு சோறு பதமென...அகத்தின் புற முழக்கம் ' என தோழர் பொள்ளாச்சி அபி அவர்களும் அணிந்துரை கொடுத்துள்ளார்கள். இரண்டுமே சிறப்பான ஒரு உள்ளடகத்தை, அதன் நோக்கத்தை நூலுக்குள் புகுமுன்னே கொடுக்கின்றன.

மனிதர்கள் குடியேறினால் செவ்வாய்க்கிரகம் என்ன வாகும் ? என்னும் கற்பனையில் 'செவ்வாய்க்கிரகம் பாவம்தான்' , உறுதி கொள் பெண்ணே என்னும் நோக்கில் அமைந்த 'பெண்ணே ,...நெஞ்சில் உறுதி வேண்டும் ' 'வலிகள் விற்பனைக்கல்ல ; போன்ற சொ. சாந்தி-யின் கவிதைகள் நேர் கொண்ட பார்வையோடு நினைவில் நிற்கின்றன.
.

கே.பிரியாவின் ' முதலிடம் எப்போதும் என் சைக்கிளுக்கு மட்டும்தான் ' என முடியும் சைக்கிள் நினைவுகள் அருமை. என்னென்மோ அதிசயம் நடக்குதுன்னு சொல்றீங்க, 'பிச்சை எடுக்கும் கைகளும் நாளை புத்தகம் தூக்காதோ ' என்னும் கேள்வி, 'கடல் நீர்', 'தனிமை' போன்ற கவிதைகள் கற்பனை வளத்தோடு நன்றாக அமைந்துள்ளது. 'முற்படுத்தப்பட்டவள் ' என்னும் கவிதையின் பொருளோடு எனக்கு 100 சதவீதம் மாறுபாடு உண்டு. என்னதான் பொருளாதார ரீதியாக துன்பப்பட்டாலும், அவரது சாதியின் பெயரை இழிவுச்சொல்லாய் யாரும் பயன்படுத்தப்போவதில்லை.


ஒரு மன்னிப்பாவது கேளேன் என்னும் கவிதை வேறு வழியில்லாமல் வாழ்வைக் கடக்கும் பெண்ணின் வலியை வார்த்தை சித்திரங்களாய் கொடுத்திருக்கிறது. 'நீ விரும்பும் முகமாய் ' என் முகத்தை மாற்றுகிறாய் தந்தையே, கணவனே, மகனே என்னும் மனு(அ)தர்மத்தின் நடைமுறையை சுட்டிக் காட்டும் ' எனக்கென்று முகம் இல்லை ' என்னும் கவிதையே தலைப்பாக அமைந்துள்ளது. தலைப்பிற்கு தகுதியான கவிதை கவிஞர் திலகவதியின் கவிதை( கே.பிரியாவின் கவிதையின் தொடர்ச்சியாகவே கவிஞர் திலகவதியின் கவிதை உள்ளது. கவிஞர் திலகவதி( நாஞ்சில் திலகா சிவம் ) என கவிதையாளர்கள் பட்டியலில் உள்ளது. உள்ளே தனித் தலைப்பாக இல்லை, தொகுப்பாளர் அடுத்த பதிப்பில் கவ்னிக்கவும்)

சென்னை ஹீஜ்ஜாவின் ' ஏன் சகாக்களே ' என்னும் கவிதையின் கேள்வி நியாயமானது. சந்தேகப்படுபவன் கூட வாழ்வதும், நல்ல பாம்போடு வாழ்வதும் ஒன்று என்றார் திருவள்ளுவர் . ' சதை விற்கும் பெண்ணா உன் மனைவி ? ' என சந்தேகப்படும் ஆணை பற்றிய கவிதை உள்ளம் தொடுகிறது. அதைப்போலவே ' எனதருமைக் கணவரே ? ' என்னும் கவிதை வரிசையாகக் காரணம் சொல்லி' உம் வாழ் நாள முழுவதும் தாமதாகி விட்டதே என்ன செய்யப்போகிறீர் ? ' எனும் கேள்வியோடு அருமையாக முடிகிறது.

மதுரை புலமி அம்பிகாவின் கவிதைகளில் வார்த்தைகள் புகுந்து விளையாடுகின்றன. மயக்க நிலையில் கொடுக்கப்படும் அறுவைச்சிகிச்சை போல , மயக்கும் வார்த்தைகளுக்குள் வந்து விழுகின்றன நல்கருத்துக்கள். சுதா யுவராஜின் 'புரட்சி செய், புரட்சி செய்' என்னும் கவிதை பிறப்பு முதல் இறப்புவரை பெண்ணுக்கு நேரும் கொடுமைகளைப் பட்டியலிட்டு,.புரட்சி செய் என விளிக்கின்றார். கோபமும், நியாயமும் கொப்புளிப்பதை வார்த்தைகளில் அப்படியே வடித்திருக்கின்றார். வாழ்த்துக்கள் சுதா யுவராஜ். சுதா யுவராஜின் ' விஞ்ஞானி கவிஞனானால் ' என்னும் கவிதை நல்ல கற்பனை .

'நெஞ்சில் சுமந்து வளர்த்த எனை
நட்ட நடு வீதியில் விட்டுவிடாமல்
முதியோர் இல்லத்தில் சேர்த்த' தன் கண்மணியை நலமுடன் நூறாண்டு வாழ வாழ்த்தும் சென்னை சியாமளா ராஜசேகரனின் கவிதைகள் 'ரசிக்க வாங்க' என்று அழைக்கின்றன. 'மனிதை மயக்கும் மழலை ' பாடும் சரண்யா, 'வேண்டாத நட்பை'யும்,'வாழ்க்கையை'யும் பாடும் நாகின் கருப்பசாமி, 'தாய்மை'யின் பெருமை பாடும் உத்தரப்பிரதேசம் புனிதா வேளாங்கன்னி, 'பிள்ளையில்லாதவள் ' படும் பாட்டை கனமான வார்த்தைகளால் கவிதையாகத் தொடுத்திருக்கும் உமா பாரதியின் ' என்னைப் பற்றியோ, என் கனவுகளைப் பற்றியோ எப்போதாகிலும் நீ அறிவாயா? ' என்னும் 'என் கணவனே ' என்னும் கவிதை படிக்கும் எல்லா கணவன்மாரையும் யோசிக்க வைக்கும்.

' வணக்கத்திற்குரிய வயிறே ' என்று மருத்துவரைப் போல கவிதை சொல்லும் குஜராத் யாத்விகா கோமுவின் 'புத்த்கம் ' கவிதை புத்தகத்தின் பெருமை பேசுகிறது.

மொத்தத்தில் இந்தத் தொகுப்பு, பல பெண் கவிஞர்களின் , பல பாடு பொருள், பல்சுவை கவிதைகளின் தொகுப்பாய் தித்திக்கின்றது. பெண் மனதைப் புரிந்து கொள்ள, அவர்களின் மன ஓட்டங்களைப் புரிந்து கொள்ள உதவும் தொகுப்பு. எல்லோருமே, ஒரு எல்லைக்குள் இருந்தே எழுதப்பட்ட கவிதைகளாக உள்ளன. இன்னும் உள்ளத்தின் கோபத்தையெல்லாம் , மகிழ்ச்சியையெல்லாம், துக்கத்தையெல்லாம் எழுத்துக்களில் வடிப்பதற்கு ஒரு முன்னோட்டமான தொகுப்பாக இந்தத் தொகுப்பு உள்ள்து எனலாம். தொகுத்து அளித்த தோழர் அகன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நன்றி : எழுத்து.காம்


Thursday, 1 May 2014

நிகழ்வும் நினைப்பும்(22) : மழையும் வருண பூசையும்

நிகழ்வும் நினைப்பும்(22) : மழையும் வருண பூசையும்

                             நேற்று 30.4.2014, மதுரையில் நல்ல மழை. சரியான நேரத்தில், எப்போது மழை பெய்யும் என்று மக்கள் ஆர்வமாக இருந்த நேரத்தில் பெய்த மழை. மகிழ்ச்சியாக இருந்தது. இடியும், மின்னலும், காற்றும் என கோடை மழைக்கே உரித்தான பக்க வாத்தியங்களோடு கொட்டித் தீர்த்தது  மழை. ஒரு தமிழ் பத்திரிக்கையில்  ' வருண பூசை ' செய்தலால் மழை என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டு இருந்தார்கள். என் மகள் அறிவு மதி , 'அப்பா 5 மாதமாக மழை இல்லை, கடந்த 5 மாதமா கடவுளுக்கு எதுவும் பூசை செய்யாமலா இருந்தார்கள் ? இப்படி போயி , அறிவுக்கு பொருந்தாமல்  பத்திரிக்கையில் செய்தி போட்டிருக்கின்றார்களே ? " என்றாள். அப்படித்தான் போடுவார்கள் என்றேன் நான் அவளிடம் .

                  200, 300 ஆண்டுகளுக்கு முன்னால் இப்படி செய்தி போட்டிருந்தால் ,ஏதோ தெரியாமல் போட்டிருக்கின்றார்கள். மழை எப்படி பெய்கின்றது என்று தெரியவில்லை. அதற்கான அறிவியல் காரணங்கள் புர்யவில்லை என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இன்றைக்கு பத்திரிக்கைகள் இப்படி செய்தி போடுகின்றன, தமிழக அரசின் இந்து சமய்அறநிலையத்துறை வருண பகவான் பூசை செய்யச்சொல்கின்றது என்று சொன்னால், நமது மக்களை எவ்வளவு ஏமாளிகளாக ,கோமாளிகளாக நினைக்கின்றார்கள் இவர்கள்

                    ஒரு மாதத்திற்கு முன்னால், பால் விற்கும் பெண்மணி சொல்லிக்கொண்டிருந்தார் பக்கத்தில் இருக்கும் பெண்மணியிடம். "என்னங்க, ரிசர்வ் லைன் மாரியாத்தாளுக்கு, கூழ் ஊத்தி, கும்பிட்டும் மழையைக் காணாமே" என்று . அவர் படிக்காத பெண்மணி , ஏதோ மாரியாத்தாளுக்கு கூழ் ஊத்துறதுக்கும், மழை பெயவதற்கும் தொடர்பு உண்டு என்று நம்புகிறார் என எண்ணலாம்.

                  பக்கத்தில் இருக்கும் கேரளாவில் நல்ல மழை பெய்கின்றது , மழைக்காலங்களில். பெரும்பாலும் அவர்களின் வீடுகளைப் பார்த்தால், வீட்டிற்குள் மரம் வளர்ப்பதற்குப் பதிலாக, மரங்களுக்குள் வீடு கட்டுகின்றார்கள். ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் 30, 40 மரங்கள் இருக்கின்றன, தமிழகத்தில் ,கிராமப்புறங்களில் கூடவீடுகளுக்குள்ளோ, வீட்டைச்சுற்றியோ மரங்கள் இல்லை. மரம் வளர்ப்பதற்கான மன்நிலை மக்கள் மனதில் இல்லை. ஊர் ஊருக்கு, பங்குனி உத்திரமும், பங்குனிப்பொங்கலும் கொண்டாடி, மாரியாத்தாளுக்கும் , காளியாத்தாளுக்கும் இலட்சக்கணக்கில் செலவு செய்து கூழ் ஊற்றும் இந்த கோமாளிகளுக்கு மரத்திற்கும் மழைக்குமான தொடர்பு தெரியவில்லை. பெரும்பாலான கண்மாய்கள் அழிக்கப்பட்டு , பிளாட்டுகளாக மாறிவிட்டன., இருக்கும் கண்மாய்கள் தூர் வாரப்படவில்லை. சின்ன சின்ன நீர்த்தேக்கங்கள் இல்லை. மழை நீர் சேகரிப்பு ஏட்டளவில் இருக்கிறது. இப்போது நடைமுறையில் இல்லை. ஊர்த்திருவிழாக்கள் என்னும் பெயரில் இலட்சக்கணக்கில் செலவு செய்து வான வேடிக்கைகள் போடுகிறார்கள் . போட்டி போட்டிக்கொண்டு போடப்படும் இந்த வெடிகள் , சுற்றுப்புற சூழலுக்கு கேடு என்பதையோ, மழை வராமல் போவதற்கு கார்பன் டை ஆக்சைடு கூடுவதும் ஒரு காரணம் என்பதையோ இந்த மக்களுக்கு தெரிவிப்பதில்லை. டேய், மழை வருவதற்கும் , மழை வராமல் போவதற்கும் கட்வுள்தான் காரணம் என்று ஒற்றை வரியில் முடித்து விடுகிறார்களே, இது கொடுமை இல்லையா ? மூடத்தனம் இல்லையா? முட்டாள்தனம் இல்லையா?  

                        சின்னப்பிள்ளைகளாக நாங்கள் இருந்த காலத்தில், கிராமத்தில் மழை பெய்கிற போது, சிலர் மழையை கடவுள் ஒன்னுக்கு அடிக்கிறார் என்பார்கள், அவர் ஒன்னுக்கு அடிக்க மறந்து போனால் என்ன ஆகும் என்பார்கள் . அப்படிப்பட்ட மன்நிலையில் பத்திரிக்கைகளும், அரசாங்கமும் இருந்தால் நாம் எங்கே போய் இந்தக் கொடுமையை சொல்வது . எல்லாவற்றிற்கும் கடவுளோடு கனெக்சன் கொடுத்து விடுகின்றார்கள். கடவுள் சிலை கோவிலிலேயே காணாமல் போகிறதே, அப்போ உங்க கடவுள் எங்கே போயிருந்தார், ஏதாவது லீவு போட்டுட்டு நம்மாளுக வீடடைப் பூட்டி போன நேரத்திலே கொள்ளை போவது மாதிரி, உங்க கடவுள் டூர் போயிருந்தாரா ? என்று கேட்டால் நம்மை முறைக்கின்றார்கள்.  
 

Sunday, 20 April 2014

கையில் குழ்ந்தையோடும் கண்களில் வழியும் நீரோடும் ...

கையில் குழந்தையோடும்
கண்களில் ஆறாய்
வழியும் நீரோடும்
தெருத்தெருவாய் வந்தான் அவன் !
ஆண்டுகள் பல
ஆன போதும்
அந்த அழுகைமுகம்
நெஞ்சில் பதிவாய் இன்றும் !

ஏதும் சொல்லவில்லை
அவன் ! எவரிடத்தும்
முறையிடவில்லை !
தனக்கு இழைக்கப்பட்ட
துரோகத்திற்காக
மண்ணை வாரித்
தூற்றினான் என்றார்கள் !

நகையும் சதையுமாய்
தன்னில் ஒருவளாய்
இருந்த ஒருத்தி
தன் உதிரத்திலிருந்து
தன்னைப் போலவே
ஒரு குழுந்தையை
நகலெடுத்துக் கொடுத்த
அந்த ஒருத்தி
செய்த செய்கையால்
செய்வதறியாது
திகைத்துப் போன
அவன்
கையில் குழ்ந்தையோடும்
கண்களில் வழியும்
நீரோடும்
தெருத்தெருவாய் வந்தான் !

அந்தப் பணக்காரரின்
பண்ணையில் அவன்
வேலைக்கு அமர்ந்தபோதே
அருகில் இருந்தவர்கள்
சொன்னார்கள் !
அழகான மனைவி
வைத்திருக்கிறாய் - நீ
அவரிடம் வேலைக்குப்
போகாதே என்று !

அப்படிச்சொன்னவர்களிடம்
அபரிதமான
நம்பிக்கையோடு சொன்னான்
என் மனைவி அனல்
அண்ட முடியாது அவளிடம்
அக்கினியாய் பொசுக்கி
விடுவாள் என்றான்

அக்கினி பன்னீராக மாறி
அடுத்த உடலை
அலங்கரித்தபொழுது
தணலில் விழுந்த
புழுவாய்த் துடித்த அவன்
கையில் குழ்ந்தையோடும்
கண்களில் வழியும் நீரோடும்
தெருத்தெருவாய் வந்தான்
அவன் !

உடம்பில் இருக்கும்
தழும்பு போல
நினைவில் இருக்கும்
தழும்புகளாய்
சில் நினைவுகள் ....
                                     வா. நேரு .....
நன்றி : எழுத்து.காம்

Saturday, 12 April 2014

புல் திட்டுக்களாய் நண்பர்கள் !....




ஆழமாய் ஓடும் நதி
அங்கங்கே புல் திட்டுக்கள்

வெள்ளத்தால் இழுத்துச்
செல்லப்படும் விலங்கென
ஓடும் வாழ்க்கை ....

புல் திட்டுக்களாய் நண்பர்கள்
ஆண்களாய், பெண்களாய்
நண்பர்கள்....

புரிதல் மட்டுமே
பரிமாற்றமாய்
வெள்ளத்தனைய
மலர் நீட்டம்
உள்ளத்து உயர்வு
மட்டுமே இணைப்புக்களாய்
வாழும் நட்பு

படிப்பதுவும்
எழுதுவதும்
மனதில் தைத்ததைப்
பகிர்வதும்
பகிர்வதைப் பரப்புவதுமாய்
உயிர் வாழ்தலுக்கான
ஆக்சிஜன் காற்றாய்
வாழும் நட்பு
                            --வா. நேரு---
Nantri : Eluthu.com

நிகழ்வும் நினைப்பும் (21) :மான் கராத்தே சினிமாவிற்கு போன கதை

சில நாட்களுக்கு முன்னால் , பக்கத்து வீட்லே தண்ணீர் வரலைன்னு, போர் போட, மொத்த குடும்பமே என்னைய மட்டும் மதுரையில விட்டுட்டு , திண்டுக்கல்லுக்கு எஸ்கேப். போர் போடற சத்தமும், 10 நிமிடத்திற்கு ஒரு தரம் அது ஏறி இறங்கும் கொடூரமான சத்தமும் தாங்க முடியலை, தூங்க முடியலை. திடீர்ன்னு எங்கே போய் தூங்குவது என்று ஒரு குழப்பம். யாராவது நண்பர் வீட்டிற்கு போய்த்தூங்கலாமா என்று நினைத்தேன். திடீரென்று இரவு 8 மணிக்கு அழைத்து , உங்க வீட்டுக்கு தூங்க வாரேன் என்று சொல்வது நன்றாகவா இருக்கும் என்று யோசித்தேன். அப்படி சொன்னாலும், வா என்று சொல்லக்கூடிய நண்பர்கள் இருக்கின்றார்கள் மதுரையில் என்றாலும் எவரையும் அழைக்கவில்லை. நண்பர் புத்தகத்தூதன் பா.சடகோபன் கடைக்குச்சென்று நிதானமாக அமர்ந்து இலக்கியம், இயக்கம் என்று நிறையப் பேசிக்கொண்டிருந்தோம், தோழர் அழகுபாண்டியும் உடன் இருந்தார். மணி 10 ஆக, நான் எப்போது கடை அடைப்பீர்கள் என்றேன். எப்பவும் 9.30 க்கு அடைச்சிருவேன். நீங்க வந்து பேசிக்கொண்டிருந்ததால் இன்னும் அடைக்கவில்லை என்றார். மேலும் பசிக்கவில்லையா என்றார். நான் 8 மணிக்கு உங்க கடைக்கு வந்தப்பவே சாப்பிட்டு விட்டுத்தான் வந்தேன் என்றேன். ஏற இறங்கப் பார்த்தார் என்னை. . வீட்டில் எல்லோரும் திண்டுக்கல்லுக்கு போய்விட்டார்கள் என்று சொல்லி, கடையை அடைக்கச்சொன்னேன். அடைத்துவிட்டு, பசியைத் த்ணிக்கப் பறந்து விட்டார். மீண்டும் வீட்டிற்கு வந்தால் போர் சத்தம் நின்ற பாடில்லை. என்ன செய்வது என்று ஒரே யோசனை.

                            சினிமாவிற்கு போகலாம் என்று முடிவெடுத்து, மதுரை  ரிசர்வ் லைன் பக்கம் உள்ள தியேட்டருக்குச்சென்றேன்.   20 ஆண்டுகளுக்கு முன்னால் தென்காசியில் படம் பார்த்து விட்டு, குற்றாலத்திற்கு மழைத்தூறலோடு இரவு 1 மணிக்கு நடந்து வந்தது ஞாபகம் வந்தது. வாழ்க்கையிலே ஒரு 3 வருடத்திற்கு பிறகு  செகண்ட் சோ, அதுவும் தன்னந்தனியா. 3 வருடத்திற்கு முன் திராவிடர் கழகத்தின் தோழர் இராஜபாளையம் திருப்பதி அவர்களின் தூண்டுதலில்  ஒரு படம் பார்த்தேன். அய்யா சுப.வீ அவர்களோடு இராஜபாளையம் கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு, உணவெல்லாம் முடித்து தூங்குவோம் என்று நினைத்த வேளை , திருப்பதி சினிமாவுக்குப் போவோமா என்றார். அய்யா சுப.வீ. அவர்கள் உற்சாகத்தோடு போகலாமே என்றார்கள். அன்று இராஜபாளையத்தில் படம் பார்த்தது  செகண்ட் சோ.  அதற்குப் பிறகு இன்றைக்கு பக்கத்து வீட்டுக்காரர் போர் போடும் தூண்டுதலில் எங்காவது இரவைக் கழிக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் இன்றைக்கு இந்த செகண்ட் சோ.

                              . வண்டி நிபபாட்றதுக்கு டோக்கன் வாங்கிட்டு, ஏங்க இங்க ஓடுற இரண்டு படத்திலே எந்தப் படம் நல்லாயிருக்கின்னு, அவருகிட்ட கேட்டா, ஏற இறங்க என்னைப் பார்த்த டோக்கன் கொடுக்கிறவர் , இந்தப் படத்திற்குத் தான் நிறையப் பேர் போறாஙகே என்று மான் கராத்தே படத்தைக் காண்பித்தார். டிக்கெட் எங்கே வாங்குறது என்றவுடன் , தியேட்டருக்கு உள்ளேதான் சார் வாங்க்ணும் என்றார் சீரியசாக. பின்பு கையைக் காட்டினார். ஒரு கூட்டமும் இல்லை, டிக்கெட் வாங்கும் இடத்தில். டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனேன். பஸ்ட் கிளாஸ் என்று டிக்கெட் கொடுத்தார்கள் . ஆனால் சீட்டில் நம்பர் போட்டு , கிட்டத்தட்ட திரைக்கு மிக அருகில் உட்கார வைத்து விட்டார்கள். எல்லோருக்கும் ஒரே டிக்கெட்தானாம். முன்னால் போனால் முன்னாடி போய்த்தான் உட்காரணுமாம். திரைக்குப் பக்கத்தில் உட்காருவதற்கு , முன்னாடியெல்லாம் டிக்கெட் விலை குறையாக இருக்கும். பின்னாடி வர வர டிக்கெட் விலை கூடும். இப்போ எல்லாம் ஒன்று தானாம். தியேட்டரில் திரைக்குப் பக்கத்தில் உட்கார்ந்தால் , உருவங்கள் எல்லாமே பெரிது , பெரிதாய்த் தெரிந்தது

                                     மான் கராத்தே படம். சிவ கார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து உள்ள படம். எடுத்தவுடன் பி.எஸ்.என்.எல். லோகோவைக் காட்டினார்கள். பின்பு பீட்டர் பி.எஸ்.என்.எல்.லில் வேலை பார்ப்பவர் மகன் என்றார்கள். படம் எடுத்தவரோ, நடித்தவரோ  பி.எஸ்.என்.எல்.லில் வேலை பார்ப்பவர் பிள்ளையாக இருப்பார் போலும். எப்படியோ நாம் வேலை பார்க்கும் நிறுவனத்தை விளம்பரம் செய்கிறார்கள் என்பது  மகிழ்ச்சிதான் ஒரு லாஜிக்கும் இல்லை, ஒரு உருப்படியான கதையும் இல்லை, ஆனால் 3 மணி நேரம் ஓடியது தெரியவில்லை. குததாட்டம், கும்மாளம், அரை குறை ஆடை டான்ஸ்.,மொத்தமாய் பாடிக்கிட்டே குடி , அடி, .... பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிற ஆளு கைதட்டறான், விசில் அடிக்கிறான் , நான் மட்டும் அமைதியாக உட்கார்ந்து படம் பார்த்துக்கிட்டு இருந்தேன்.

                                   ஒரு சாமியார் ஆய்த பூசைக்கு மறு நாள் வந்த தினத்தந்தி பேப்பரை( 22 வருடமாக நாங்கள் ஆயுத பூசை அன்று பிரிண்ட் செய்வதில்லை என்று தினத்தந்தி  பத்திரிகை ஆசிரியர் பேட்டி வேறு )  ஆகாயத்தில் இருந்து எடுத்துத்தர, அதை ஐ.டி. படித்து வேலை பார்க்கும் 5 பேர் ஆராய, 4 மாதங்களுக்குப் பிறகு தேதியிட்ட அந்தச்செய்தி எல்லாம் உண்மையாக நடக்க, 2 கோடி ரூபாய் அடைவதற்காக ஒரு தொத்த ஆளை  , வீரனாக்கி, குத்துச்சண்டை போட்டியிலே ஜெயிக்க வைப்பதுதான் மான் கராத்தே படத்தின் கதை.ரெண்டு பீட்டர், கொஞ்சம் செண்டிமண்ட், கொஞ்சம் காதல் , கொஞ்சம் காமெடி அதற்காக குத்துச்சண்டை மைதானத்தையே காமடியாக்கிறது ரொம்ப ஓவர்,  ஆரம்பமே மூட நம்பிக்கை . அப்புறம் எல்லாம் அபத்தம். எப்படியோ மூன்று மணி நேரம் ஓடியது. இரவு 1 மணிக்கு வந்தால் போர் சத்தம் நின்றிருந்தது. இப்படி எல்லாம் மூட நம்பிக்கையை அடிப்படையாக வைத்து, ஏற்கனவே படிச்சவன் பாதிப்பேரு மந்திரிச்சுகிட்டு, ஜோசியம் பார்த்துக்கிட்டு அலையுற சமயத்திலே, இப்படி படங்கள் வேறயா, கொடுமையடா என்று எண்ணங்கள் ஓட ஆரம்பிக்க, தூக்கம் போனது


                                  

Friday, 11 April 2014

அண்மையில் படித்த புத்தகம் : தொட்டில் சூரியன்

அண்மையில் படித்த புத்தகம் : தொட்டில் சூரியன்
எழுதியவர் : தி.அமிர்த கணேசன்(எ) அகன்
ஆங்கில மொழியாக்கம் : டி.ஜோசப் சூலியஸ்
வெளியீடு : தருண் பதிப்பகம், சீர்காழி- சட்ட நாத புரம்
முதல் பதிப்பு : 2013, பக்கங்கள் : 104, விலை ரூ 75.

புதுச்சேரியின் முதல் பேரத் தமிழ் நூல் என்ற குறிப்போடு வெளி வந்திருக்கும் இந்த நூல் , பேரனைப் பற்றி தாத்தா எழுதிய நூல். புதுமையான முயற்சி. எதை எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்பது ஒரு எழுத்தாளரின் உரிமை. எப்படி இந்த நூல் புதுமை என்றால், தமிழ்க் கவிதை இடது புறத்தில், அதற்கு ஒரு அருமையான மொழி பெயர்ப்பை- ஆங்கிலத்தில் டி.ஜோசப் ஜீலியஸ் அவர்கள் கொடுத்திருக்கின்றார்கள். தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதையை ஒரே நேரத்தில் படிக்கலாம்,

'தொட்டில் சூரியனுக்குத் தாத்தாவின் தாலாட்டு ' என்று அணிந்துரையை கவிஞர் ஈரோடு தமிழன்பன் கொடுத்திருக்கின்றார். அணிந்துரையும் கூட அய்யா ஈரோடு தமிழன்பன் அவர்களின் கவிதையைப் போல துள்ளி விளையாடுகிறது " அமிர்தகணேசனுக்கும் அவர் வார்த்தைகளுக்கும் இடையே கவிதையும் தன்னை இழந்த இன்பமயக்கத்தில் கூத்தாடுகிறது; கொண்டாட்டம் போடுகிறது,வாழ்வின் பொருண்மைகள் வியப்புத் தளங்களைக் கைப்பற்றி வெளிச்சம் பாய்ச்சுகின்றன. கொண்டாட்டமான கவிதை-தொட்டில் உற்சவம் நடத்துகிறது, ஒளிக்கள் அருந்திய மதர்ப்பு விசித்திர வண்ணக் கோலங்களைப் படைத்துத் தள்ளுகிறது....." எழுதிக் கொண்டே போகலாம். கரந்தைப் புலவர் அய்யா ந.இராமநாதன் அவர்கள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களைப் பற்றிப் பாடம் எடுத்தது ஞாபகம் வருகிறது எனக்கு. அய்யா ஈரோடு தமிழன்பன் அவர்கள் அவ்வளவு ஈடுபாட்டோடு இந்த அணிந்துரையை அளித்துள்ளார்கள்.

" This is a pure literary creation in which the author having a comprehensive view of the world is trying to teach his grandson ,every thing under the sun " என்று ஆரம்பிக்கும் டி.ஜோசப் ஜீலியஸ் அவர்களின் அணிந்துரை தொட்டுச்செல்லும் தூரங்கள் அதிகம். வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், தங்களின் மொழிபெயர்ப்புக்கு என்று சொல்லும் அளவுக்கு மொழி பெயர்ப்பும் , ஆங்கில அணிந்துரையும்.
" உணர்வைக் கிளர்த்தி அதன் உட்பொருளைக் கிரகித்து கொள்ளச்செய்வதன்றி, ஒரு கவிதையின் செயல் வேறு எதுவும் இருக்காது என்றே கருதுகிறேன் . சூழல் இயல் குறித்தும், மொழி உணர்வு குறித்தும் ஒரு பேரனுக்குச்சொல்வதுதான் இன்றைய ஆகப்பெரும் தேவை. அதை அமிர்தகணேசன் வெகு செப்பமாகச் செய்திருக்கிறார்..." என்று சொல்லும் கவிஞர் யுகபாரதியின் ' தமிழ்த்தாத்தாவின் அமிர்தம்' எனும் அணிந்துரை, ஆங்கிலத்தில் டி.ஜோசப் ஜீலியஸ் அவர்கள் மொழிபெயர்த்தால் நான் மரபுக் கவிதையாக இப்புதுக் கவிதையை மாற்றுகிறேன் பார் என ' மடிக்குள் பெய்த மழை ....' என அய்யா எசேக்கியல் காளியப்பன், ' ஒற்றை மலருக்கல்ல , இது....மொத்தத் தோட்டத்திற்கும் 'என சரவணன் ஜெகன்நாதன் என அனைவரும் படைப்பாளி அகன் அவர்களின் படைப்பாக்கத்தை பல கோணங்களில் படம் பிடித்துக்காட்டுகின்றனர் . தி.அமிர்தகணேசன் அவர்களின் என்னுரை, இந்தப் படைப்பு எழுந்ததன் பின்னணியை, அதற்குக் கை கொடுத்தவர்களை பட்டியலிட்டுக் காட்டுகிறது,.

இந்த நூலை மூன்று பாகங்களாகப் பிரிக்கலாம்.
" வணக்கம் என்றே வாய் மலர்ந்து
வளர் தமிழில்
சுணக்கமின்றிச்சொல்லிப் பழகு .
சுகம் காண் ..." என்று தொடங்கும் முதல் பாகம் , இன்று நீ .... என்று

"தங்கத் தொட்டிலிடப் பெருஞ்செல்வம்
இல்லையாதலால்
சந்த்த் தொட்டிலில் தாலாட்டுகிறேன்
உறங்கடா நீ

காணி நிலமில்லை
கை நிறையப் பொருள் இல்லை
மேனி முழுதும் வற்றா
அன்புண்டு என்னிடம் காண் ' என்று அன்பை, பாசத்தைக் கொட்டும் கவிதைகளாக, ஆலம் கட்டி மழை போல அன்பு கொட்டும் பா துளிகளாக வாசிப்போரை பரவசப் படுத்துகிறது. வார்த்தைகள் இயல்பாய் வந்து விழும் வேகம் ,
"புல்லினம் பூவினம்
வண்டினம்- பல் புள்ளினம்
துள்ளிடும் மானினம்
உன்னினம் நேசங்கொள் " - வியக்க வைக்கிற்து.உணர்ச்சிக் கொட்டலாய் பக்கம் 28 முதல் 63 வரை முதல் பாகம்.

இவர்களோடு நீ
என அடுத்த பாகம். பேரனுக்கு அவன் யார் என்பதையும், அவனது உறவுகள் சாதி கடந்த, மதம் கடந்த தமிழ் உறவுகள் என்பதையும் படம் பிடித்துக் காட்டும் பாகமாக அமைந்துள்ளது.
" பொய்ம்மையை அறிந்திட
மெய்யாய இருந்திடப் -பா
நெய்யும் நெசவாளி
'தமிழ்ன்பன் உன் உறவு காண்....

மண்ணில் நீயுமோர்
மனிதன் மண்ணன்று என்று
பண்ணில் பொழிந்த
பாரதிதாசன் உன் நில உறவு "
என்று பட்டியலிடும் கவிஞர் , பேரனுக்கு தாய் வழி உறவுகளையும், தந்தை வழி உறவுகளையும், தமிழ் வழி உறவுகளையும் கவிதையால் பட்டியலிடும் பகுதியாக இரண்டாம் பாகம்

நாளை நீ
என்னும் மூன்றாம் பாகம் தன் பேரன் எப்படி வரவேண்டும் என்பதையும் , எதை எதைக் கற்க வேண்டும், என்ன என்ன ஆற்றல் பெற வேண்டும் என்பதையும் பட்டியலிடுகின்றர்ர்.
" பாராடா உன்னுடன் பிறந்த பட்டாளம் " என்று புரட்சிக் கவிஞர் முழுங்குவதைப் போல
' விழி, கதிர் முன் நாளும்
விரி பார்வை புவியெங்கும்
மொழி, தமிழில் மட்டும்
உயர் வளர்ச்சி காண்....

யாரோடும் நட்புக் கொள்
க்ண்டம் மற
ஊரோடும் சேர்ந்து வாழ்
உயர்வுண்டு காண் "

என முழுங்குகின்றார். அறிவுரைக் கொத்துக்களாய், கவிதை மூலம் பரப்ப விரும்பும் நல் முத்துக்களாய் இந்த மூன்றாம் பாகம் அமைந்துள்ளது.
முடிவாக புதிய ஆத்திசூடி உனக்களிப்பேன் பூபாளப் புயலே " எனப் புதிய ஆத்தி சூடி பாடி முடிக்கின்றார்
நான் கொள்கை அளவில் மாறுபடும் இடங்களும் இத் தொகுப்பில் உள்ளன.
'இறை உணர்வு
இன்பம் ஏற்றிடு -அன்றியும்
கறை அதில் மூட நம்பிக்கை
தூற்றி எறிந்திடு " எனப் பக்கம் 92-ல் குறிப்பிடுகின்றார். இறை உணர்வு என்றாலே மூட நம்பிக்கை குவியல்தானே, அதில் எப்படி நீக்குவது எனும் கேள்வி எழுந்தது என்னுள்.

ஒரு மாறுபட்ட வாசிப்பு அனுபவத்தை, பல புதுமைகளைப் புகுத்தியுள்ள ஒரு நூலினை படித்தோம் என்னும் மன நிறைவை, மழலையின் குறும்புகளை, அசைவுகளை உங்கள் மனக்கண் முன்னால் நிறுத்தும் கவிதை மழலை ஓவியத்தை நீங்கள் காண் இயலும் , இந்த தொட்டில் சூரியன் நூலை வாசிப்பதால். வாசியுங்கள், நீங்களும் அந்த மழலை உலகத்திற்குள் சென்று வாருங்கள்.

Saturday, 29 March 2014

நிகழ்வும் நினைப்பும்(20) வாழும் படைப்பாளியை அவர் வாழும் காலத்திலேயே பாராட்டுவது

           நிகழ்வும் நினைப்பும்(20)  வாழும் படைப்பாளியை  அவர் வாழும் காலத்திலேயே பாராட்டுவது :


                                         புதுச்சேரியில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் 80-ம் ஆண்டு  பிறந்த நாள் விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை 23.3.2014 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. எழுத்து. காம் இணையதளத்தில் எழுதக் கூடிய பல தோழர்களை, தோழியர்களை சந்திக்கும் வாய்ப்பினை புதுச்சேரி தோழர் அகன் என்னும் தி.அமிர்த கணேசன் ஏற்படுத்தித் தந்திருந்தார்.  80 படைப்பாளிகளுக்கு விருது அளிக்கப்பட்டது,9 நூல்கள் வெளியிடப்பட்டன.அதில் சூரியக் கீற்றுகள் என்னும் என்னுடைய கவிதைத் தொகுப்பும் ஒன்று. தொடர்ந்து இயங்கும், தன்னுடன் இருப்பவர்களை இயக்கும் பல்துறைக் கவிஞர் அய்யா கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களால் என்னுடைய கவிதை நூல் வெளியிடப்பட்டது மகிழ்ச்சி தந்தது.

                                                        புதுச்சேரி சென்று அடைந்தவுடனேயே, புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் அய்யா சிவ.வீரமணி அவர்கள் ரெயில் நிலையத்திற்கே வந்து வரவேற்றார்கள். அன்று முழுவதும் அவரோடு சில மணி நேரங்கள் இருப்பதற்கும், உரையாடுவதற்கும்,சிற்றுண்டி அருந்துவதற்குமான வாய்ப்பாக அமைந்தது. திராவிடர் கழகத் தோழர்களுக்கு உரித்தான எவ்வளவு வ்சதி வாய்ப்புகள் இருந்தாலும், உயர் பணியில் இருந்தாலும் தோழமை கலந்த நட்பும் மரியாதையும் வியப்புத் தருவது. அந்த வகையில் அய்யா சிவ.வீரமணி அவர்களின் இல்லத்தில் இருந்து காலையில் குளித்துவிட்டு, உணவ்ருந்திப் பின்பு பகுத்தறிவாளர் கழகத் துணைத்தலைவர் அய்யா புதுச்சேரி மு. ந. நடராசன் அவர்களோடு சேர்ந்து நிகழ்வு நடைபெறும் விவேகானந்தா பள்ளியைச்சென்று அடைந்தோம்.தோழர்கள் கடலூர் பகுத்தறிவாளர் கழக மாவட்டத்தலைவர்  ஜெயக்குமார், பொறியாளர் சிவக்குமரன் ஆகியோரும் வந்திருந்தனர். தோழர் புதுச்சேரி பழனி எங்கிருந்தோ வந்து தங்களின் படைப்பாக்கத்திற்கு வாழ்த்துக்கள் என்று சொல்லி பொன்னாடையப்  போர்த்தி விட்டு போனார்.

                                                             பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன் நட்பு போல தொலைபேசி வாயிலாகவும், கணினி வாயிலாகவும் நான் அறிந்த தோழர் அகன் அவர்களைச்சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 60 வயது என நம்ப்முடியாத 35, 40 என எண்ணத்தோன்றும் தோற்றம். உற்சாகமான வரவேற்பு அளித்த தோழர் அகன் நான் நினைத்ததைவிட அதிகமாகவே நெற்றிக் குறிகளோடு இருந்தார். அதனை கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் பேசும்போது, என்னுடைய மூத்தமகனைப் போன்றவர்  அகன்  , நான் நாத்திகன், நான் வேண்டாம் என்று சொல்ல சொல்ல, இல்லை வேண்டும் என்று சொல்லி இத்தனை ஏற்பாடுகளையும் செய்த அகன் ஆத்திகன் என்று சொன்னபோது அரங்கம் அதிர்ந்தது.  எந்த இடத்திலும் நான் நாத்திகன் அல்லது ஆத்திகன் என்று தன்னை வெளிப்படையாக வெளிப்படுத்திக் கொள்வது , மாற்றுக் கருத்து உள்ளவரிடமும் அன்பு செலுத்துவது வரவேற்புக்குரியதுதான். பாராட்டுக்குரியதுதான்.

                                                     சில்ம்பொலி செல்லப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற உரையரங்கம் நன்றாக் இருந்தது. முனைவர் க. பஞ்சாங்கம், முனைவர் மணிகண்டன் போன்றோரின் உரைகள், கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் இலக்கியப் படைப்புகளின் மேன்மையையும், தனித்தன்மையையும் தெளிவு படுத்தின, தொடர்ந்து தமிழகத்தின் மிகப்பிரபலமான கவிஞர்கள் யுகபாரதி, கருணாநிதி, இளம்பிறை உள்ளிட்டோரின் கவியரங்கம் நடந்தது. தொடர்ந்து கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் அருமையானதொரு ஏற்புரையை நிகழ்த்தினார். எனக்குப் பிடித்த கவிஞர்களில் ஒருவரான இளம்பிறை அவர்களைச்சந்திக்கும் வாய்ப்பும் ,உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. தோழர் பொள்ளாச்சி அபி , அகனோடு சேர்ந்து ஒத்துழைத்துக்கொண்டிருந்தார்.

                                    முழுக்க, ,முழுக்க இலக்கிய நிகழ்வாக, அரசியல் கடந்து , மதம் கடந்து நிகழ்ந்த நிகழ்வாக மிகச்சிறப்பாக அய்யா கவிஞர்  ஈரோடு தமிழன்பன் அவர்களின் விழா நடந்தது மகிழ்ச்சியாக இருந்தது. வாழும் படைப்பாளியை, அவர் வாழும் காலத்திலேயே பாராட்டுவது, அவருக்கு விழா எடுப்பது, எடுக்கும் விழாவையும் இலக்கியப் படைப்பாக்கத்திற்கான ஒரு களமாக ஆக்குவது, புதிய புதிய தோழர்களை ஊக்குவிப்பது, அவர்களின் படைப்பாக்கத்திறனை வெளிப்படுத்தும் நிகழ்வாக அந்தப் பாராட்டு விழாவை ஆக்குவது, எந்த விதப் பிசிறும் இல்லாமல் நிகழ்ச்சிகளை திட்டமிட்டு நடத்தியது, செவிக்கு உணவு மட்டுமல்லாது ஒரு நல்ல விருந்தினை அளித்தது என அத்தனையும் அகம் குளிர நடந்தது. அத்தனைக்கும் காரணமான தோழர் புதுச்சேரி அகன் என்ற தி.அமிர்த கணேசன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

                                  
                                                        




பு