Tuesday, 24 March 2015

அண்மையில் படித்த புத்தகம் : கெடை காடு(நாவல்)

அண்மையில் படித்த புத்தகம் : கெடை காடு(நாவல்)
ஆசிரியர்                                    : ஏக்நாத்
பதிப்பகம்                                   :  காவ்யா, சென்னை -24. 044- 23726882
முதல் பதிப்பு                             :   2014, 184 பக்கங்கள், விலை ரூ 170.





                                           வாசிப்போர் களத்தில் கவிஞர் பாலகுமார் (JTO)  அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நாவல். அவரிடம் இரவல் வாங்கி வந்து படித்தேன். வித்தியாசமான வாசிப்பு அனுபவமாக இருந்தது . இன்று நகரத்தில் வேலைபார்க்கும் ஏக்நாத்தின் இளவயது அனுபவமாக , 1980-களின் இறுதியில்  நிகழ்ந்த நிகழ்வாக இக்கதை சொல்லப்பட்டுள்ளது. என்னதான் நாம் நகரத்தில் கணினிக்கு முன் அமர்ந்து வேலை பார்த்தாலும், கிராமத்திலிருந்து வந்தவனுக்கு கிராமத்து ஓடையும் , கிணறும் , ஆடும், மாடும் அங்கு வாழும் பல்வகைக் குணமுடைய மனிதர்களும்தான் 20, 30 ஆண்டுகளுக்கு பின்னும் கூட நினைவில் இருக்கிறது. கிராமத்திலிருந்து வந்த ஏக்நாத் தன்னுடைய கிராமத்தை, மாடுகளை , மாடுகளைப் போலத் தெரியும் சில மனிதர்களை , அவர்களின் குணங்களை கதையாக வடித்திருக்கின்றார். நானும் ஒரு மேற்குத்தொடர்ச்சி மலைக்கு கீழே உள்ள சாப்டூர் கிராமத்தில் வளர்ந்தவன் என்பதலோ, கிடை அமர்த்தும் மனிதர்களை இளம் வயதில் நன்றாக அறிந்தவன் என்பதாலோ என்னவோ, மிகவும் நெருக்கமான ஒரு கதையாக இக்கதை வாசிப்பு எனக்கு அமைந்தது.

                                     கிராமத்து மனிதர்களை அப்படியே வார்த்தைகளில் வார்த்தெடுத்திருப்பது இந்த நாவலின் சிறப்பு . முதல் பக்கத்தில் உச்சிமாகாளி என்னும் மனிதனை அறிமுகப்படுத்தும் வார்த்தைகளிலேயே , வர்ணனைகளிலேயே தான் ஒரு சிறந்த கதை சொல்பவன் என்பதனை நிருபித்துவிடுகின்றார் இந்த நாவலாசிரியர். கிராமத்தில் மாட்டுவண்டியில் படுத்திருப்பவனை அப்படியே மனக்கண்ணால் கொண்டுவருகின்றார். " வாதமடக்கி மர நிழலில் நின்றிருந்த மாட்டு வண்டியின் நோக்காலில் உட்கார்ந்திருந்தான் உச்சி மாகாளி. பொடதியில் கைகளை வைத்துக்கொண்டு பின்பக்கமாக அப்படியே படுத்தான். வாய் பிளந்து வந்த கொட்டாவியை விட்டுக்கொண்டு  வானம் பார்த்தான். இப்போதுதான் விடிந்து ஈரப்பதம்கொண்ட காற்று மெதுவாக உடலைத்தேய்த்துக்கொண்டு சென்றது. ....." இந்தச்சித்தரிப்பு கதையின் கடைசி வரி வரை தொடர்வது இந்த நாவலின் சிறப்பு.

                                   'குள்ராட்டி -மேற்கு மலைத்தொடர்ச்சியின் குளூ குளூ பிரதேசம்' என ஆரம்பித்து ஊரில் இருக்கும் 150 மாடுகளை காட்டுக்கு   மேய்ச்சலுக்காகப் பத்திக்கொண்டு போய் காவல் காத்து திருப்பிக் கொண்டு வந்து 10 நாட்கள் கழித்து விடுவதுதான் இந்த நாவலின் கதை. காடு, காட்டு விலங்குகள், பாரஸ்டு அதிகாரிகள் வாங்கும் கையூட்டுகள், அவர்களின் அதிகாரங்கள், காட்டுக்குள் இருக்க நேரிடும் மனிதர்களின் பரஸ்பர உதவிகள், உபசரிப்புகள், பகிர்தல்கள், எப்போதுமே அச்சத்தோடு தூங்க நேரிடும் காடு , காட்டில் எழும் வேறுபட்ட ஒலிகள், புலிகளின் கால்தடம் கொடுக்கும் பயம், செந்நாயால் கடிக்கப்பட்டு இரத்தக்காயமான மாட்டிற்கு செய்யப்படும் சூடு மற்றும் மூலிகை மருத்துவம் எனக் காட்டின் கதை விரிகிறது .  உச்சிமாகாளி, தவிட்டான், நொடிஞ்சான்,கந்தையா,  கேசரி என்று மாட்டை பத்திக்கொண்டு குள்ராட்டிக்கு போகும் மனிதர்கள்,அவர்களின் கதைகள்; நொடிஞ்சான் திருமணம் முடித்த கதை, தவிட்டான் அத்தை மகளைத் திருமணம் முடிக்காமல் விட்ட கதை, உச்சிமாகாளியிம் அப்பன் செண்பகக்கோன், அவனது அம்மா புண்ணியதாக்கும் இடையிலான தாம்பத்ய உறவு இல்லாமை, பேச்சுவார்த்தை அறுந்து போன கதை என்று நிறையக் குட்டிக் குட்டிக்கதைகள், நாவலின் தொடர்ச்சியாக இணைப்பாக கொண்டு செல்லப்பட்டிருப்பது இந்த  நாவல் ஆசிரியர் ஏக்நாத்தின் வெற்றி.

                              கிராமத்து சாதிச்சங்கம்.ராமசுப்பு என்னும் சங்கத்தலைவர். அவனது சல்லித்தனம். கல்யாணி என்னும் கணவரை இழந்த பெண். அவளது மகன். கோயிலுக்கு வீட்டு வீட்டுக்கு வரி. அதில் வரி கொடுக்கவில்லை என்று சொல்லி கல்யாணியை ஜாதியை விட்டுத்தள்ளி வைப்பது, அதனால் எழும் பிரச்சனைகள். கோயிலுக்கு வரி என்று சொல்லி ,வறுமையால் கொடுக்க முடியாதவர்களை எப்படி எல்லாம் பழி வாங்குகிறார்கள் என்பதனை மிக விரிவாகவே ஏக்நாத் எழுதியுள்ளார். சாதிக் கட்டுமானம் என்னும் பெயரில் நடைபெறும் அநீதிகளைத் தொட்டிக்காட்டியுள்ளார். இருபத்தி மூன்று வயதாகும் உச்சி மாகாளி காதலித்த, பழகிய பெண்களைப் பற்றி நிறைய எழுதியிருக்கின்றார். குறைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது எனக்கு.

                          இதுவரை எழுதாத ஒரு கதையை, தன்னுடைய இளமைக்கால அனுபவங்களால், கிராமத்து வாழ்க்கையால் எழுதியிருக்கும் ஏக்நாத் பாராட்டப்படவேண்டியவர். ஏதோ கற்பனையில் எழுதுவதுதான் சிறந்த கதை என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு மத்தியில் தனது மண்ணின் மைந்தர்களை, அவர்களது மாடுகளை கதாபாத்திரமாக எடுத்துக்கொண்டு அதனை கிராமத்து மொழியில் , அங்கு புழங்கும் வட்டார மொழிகளோடும், வசவு மொழிகளோடும் படைத்திருக்கின்றார். நகரத்துவாசிகள் எத்தனை பேருக்கு இந்தக் கதையின் மொழி புரியும் என்று தெரியவில்லை. ஆனால் கிராமத்துக்காரனுக்கு, கிராமத்திலிருந்து நகரத்திற்கு  பிழைக்க வந்த அனைவருக்கும் இந்த நாவலின் மொழி புரியும் , பழைய நினைவுகளுக்கு கொண்டு செல்லும் ஆக்கபூர்வமான படைப்பு. வாழ்த்துக்கள் இளம் எழுத்தாளருக்கு.

பரவும் கருத்துக்களின் நறுமணம்

பரவும் கருத்துக்களின் நறுமணம்

‘மாவீரர்களே, ஆயிரம் மடங்கு வணக்கம்!' என்னும் கட்டுரையை பகத் சிங்கின் வீர வணக்க நாளில் வெளியிட்டமைக்கு நன்றி. இந்திய மக்கள் அனைவருக்கும் பொது உரிமையும், பொது உடமையும் வேண்டும் என்பதற்காக இன்னுயிர் ஈந்தவர்.
‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?' எனப் புத்தகம் எழுதியவர். தமிழில் அதனை மொழிபெயர்த்து பெரியார் இயக்கம் மக்களிடம் கொண்டுசென்றது. மனித நேயத்தை மையமாகக் கொண்ட பொதுவுடமைவாதிகளின் அடிப்படைக் கோட்பாடு, கடவுள் என்னும் கருத்தியல் மறுப்புதான், மத அடிப்படையிலான சடங்குகள் மறுப்புதான். அதனை தோழர் பகத் சிங்கும் அவருடைய தோழர்களும் கொண்டிருந்தனர் என்பது வரலாறு.
மதமற்ற, மனித நேய, பொதுவுடமைச் சுதந்திரமே பகத் சிங்கின் கோட்பாடு. பகத் சிங்கை நினைவுகொள்வது என்பது அந்தத் திசை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதே ஆகும். “உயிருள்ள பகத் சிங்கை விட உயிரற்ற பகத் சிங் பிரிட்டிஷ் ஆதிக்கவாதிகளுக்கு ஆபத்தானவன். நான் தூக்கிலிடப்பட்ட பின்னர், என்னுடைய புரட்சிகரக் கருத்துக்களின் நறுமணம் நம்முடைய இந்த அழகான தேசத்தின் சூழலெங்கும் பரவும்.
இளைஞர்களுக்கு வெறியூட்டி சுதந்திரம் மற்றும் புரட்சி ஆகியவற்றின் மீது அவர்களைப் பித்துக்கொள்ளச் செய்யும். அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் அழிவை விரைவில் கொண்டுவரும். இது என்னுடைய உறுதியான நம்பிக்கை” என பகத் சிங் கூறினார்.
ஆம், பகத் சிங் பற்றிய முழுமையான அறிதல் இன்றைய இளைஞர்களுக்குக் கிடைத்துவிட்டால், அடிப்படைவாதிகள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இளைஞர்களை அண்ட இயலாது. எனவேதான் மேலோட்டமாக பகத் சிங் ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி என்பதோடு முடிக்கப் பார்க்கிறார்கள். அவர் அதற்கும் மேலே!
- முனைவர். வா. நேரு, தலைவர், மாநிலப் பகுத்தறிவாளர் கழகம், மதுரை

நன்றி : தமிழ் இந்து நாளிதழ் - 24.03.2015.

Tuesday, 17 March 2015

ஒன்ற இயலுவதில்லை......

எப்படியோ
எங்கேயோ
ஆரம்பிக்கும் விரிசல்
அவ்வளவு எளிதாய்
ஆரம்ப நாட்களில்
கண்களுக்குத் தெரிவதில்லை

சுவற்றைப் பிளந்து
நிற்கும் விரிசல்
எளிதில் அடையாளம்
காட்டுகிறது
என்றோ ஆரம்பித்த
ஒவ்வாமையை

சுவற்றில் ஆரம்பிக்கும்
விரிசல்போல
ஏதோ ஒரு வார்த்தை
ஏதோ ஒரு செயல்
ஏதோ ஒரு உடலசைவு
ஏற்படுத்தும் விரிசல்
உடல் முழுக்கப் பரவி
மெல்லக் கொல்லும்
நஞ்சு போல
மனம் முழுக்கப் பரவி
விரிசலாய் விரிகிறது

நகமும் சதையமுமாய்
இருந்தார்களே
ஈருடல் ஓருயிர்போல
நட்பாக இருந்தார்களே
எல்லோரும் வியக்க
இணைந்து இயைந்து
இருந்தவர்களின்
விரிசல் எப்படி
ஆரம்பித்தது?
எங்கே ஆரம்பித்தது ?

விரிசலால்
விலகி நிற்பவர்கள்
வினாக்குறிகளாய்
பார்ப்பவர் பார்வைகளில்

விரிசலுக்கு ஆட்பட்டவர்களிடம்
விடைகள் கேட்டால்
பெரும்பாலும் மெளனமே
விடையாக
சில நேரங்களில் புன்னகை
மட்டுமே பதிலாக

சுட்ட மண்பாண்டங்கள்
களி மண்களாவதில்லை
மன விரிசல்கள்
உண்டான பின்
என்னதான் ஓரிடத்தில்
ஒன்றாய் நின்றாலும்
பழைய நிலையில்
ஒன்ற இயலுவதில்லை...

                        ..... வா.நேரு.....


நன்றி: எழுத்து.காம்

Wednesday, 11 March 2015

அண்மையில் படித்த புத்தகம் : வேடிக்கை பார்ப்பவன்...கவிஞர் நா.முத்துக்குமார்

அண்மையில் படித்த புத்தகம் : வேடிக்கை பார்ப்பவன்
புத்தக ஆசிரியர்             :  கவிஞர் நா.முத்துக்குமார்
பதிப்பகம்                   :  விகடன் பிரசுரம்
வெளியிடப்பட்ட ஆண்டு     : செப்டம்பர் -2014, மொத்த பக்கங்கள் 240, விலை ரூ 140.

                          இந்த நூல் ' என் எல்லா கிறுக்குத்தனங்களோடும் என்னைப்பொறுத்துக்கொண்டிருக்கும் மனைவி ஜீவல்ட்சுமிக்கு '  எனக்குறிப்பிட்டிருக்கின்றார். தன்னை 'எல்லா கிறுக்குத்தனங்களோடும் ' என்று விமர்சிக்கும் இந்த மனப்போக்குத்தான் , தன் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளை 'வேடிக்கை பார்ப்பவனாக ' பார்க்கத்தூண்டியதுபோலும். பதிப்புரையில் ' நா.முத்துக்குமார் வித்தியாசமாக வேடிக்கை பார்த்திருக்கிறார். இந்த சமூகத்தில் தன்னைச்சுற்றி நடந்தவற்றை புதிய கோணத்தில் கூர்ந்து பார்த்து அதன் தாக்கத்தை, வலியை, சுகத்தை, இன்பத்தை இந்த நூலில் பகிர்ந்துகொண்டு இருக்கிறார் " என்று கூறியிருப்பது நூலை வாசிக்க, வாசிக்க பொருத்தமாகத்தோன்றுகிறது.
                          தனது தாய் இறந்த சமயத்தில் தான் அறியாப்பருவத்தில் இருந்ததை " உங்க அம்மா செத்துட்டாங்க... உன்னை கூப்பிட்டுப்போக ஆள் வந்திருக்கு " ...ஸ்கூல் ஆயா வந்து சொன்னபோது ,இவனுக்குச்சந்தோசமாக இருந்தது. மேத்ஸ் ஹோமொர்க்கை இவன் செய்யவில்லை. அடுத்த பீரியடின் அடியில் இருந்து இவன் தப்பித்துக்கொண்டதாக நினைத்தான். இவனை விட்டு தள்ளி நின்று, இவன் வாழ்க்கை இவனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதை இவன் அறியவில்லை.  அம்மாவின் பிணம் கிடக்க ,அறியாமல் தான் விளையாடியதையும் . 'எங்க அம்மா தலைல நான் தான் நெருப்பு வச்ச்சேன். ..எப்படி எரிஞ்சுச்சு தெரியுமா ? " என்று பால்ய நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதையும் வாசிக்கும்போது நம் மனதும் கனக்கிறது.அறியாவயதில் பெற்றோரை இழப்பது பெரும் துயரம் என்பதும் புரிகிறது.

                                                   'நட்சத்திரங்களின் தேசம் ' என்று தலைப்புக்கொடுத்து, தனது அப்பாவைப் பற்றிச்சொல்வதற்கு முன் புகழ்பெற்ற எழுத்தாளர் கேப்ரியேல் கார்ஸியோ மார்க்வெஸ் சொன்ன மேற்கோளைச்சுட்டிக்காட்டுகிறார். " என் தகப்பன் எனக்கு எப்படி வாழவேண்டும் என்று நேரடியாகச்சொல்லித் தரவில்லை. அவன் வாழ்ந்தான். அதை உடனிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன் " என்பதனை சுட்டிவிட்டு, " அம்மா இறந்தபிறகு, இவன் அப்பாவின் கைகளை இறுகப்பற்றிக் கொண்டான். இந்த உலகை பகலில் சூரியன் வழி நடத்துகிறது. இரவில் சந்திரன் வழி நடத்துகிறது. பகலிலும் இரவிலும் வழி நடத்துவது தகப்பனின் கைவிரல்களே என்பதை இவன் அறிந்துகொண்ட காலம் அது. இவன் தந்தையின் விரல்கள், இவனை பல்வேறு திசைகளுக்கு அழைத்துச்சென்றன. இந்த உலகம் இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது; அதிசயமாக இருந்தது; அதிர்ச்சியாக இருந்தது; அச்சமாக இருந்தது; தன் தந்தையின் கைவிரல்களைப் பற்றியிருந்ததால் , எல்லாமே அனுபவமாக இருந்தது " என்று பக்கம் 29-ல் கவித்துவமான உரை நடையில் தனக்கும் தனது தந்தைக்குமான பாசப்பிணைப்பைப் பட்டியலிடுகின்றார் நா.முத்துக்குமார்.

                                       'கிராமத்தில் முன் ஏர் எப்படிப்போகிறதோ , அப்படித்தான் பின் ஏர் போகும் என்பார்கள்'. தன் வாழ்வின் முன் ஏராய் , தனது தந்தை எப்படி வாழ்ந்தார் என்பதனைச்சொல்கின்றார் நா.முத்துக்குமார். 10-ம்வகுப்பு வரை தானும் தன் தந்தையும் வாழ்ந்தது குடிசை வீடு என்பதையும் தாழ்ப்பாள் இல்லாத குடிசை வீட்டிற்குள் " அந்த அறை முழுக்க மூட்டை மூட்டையாகப் புத்தகங்களை அப்பா குவித்து வைத்திருந்தார். கட்டிலிலும், கட்டிலுக்கு அடியிலும் , அலமாரியிலும் , பரணியிலும் ....கிட்டத்தட்ட ஒரு ல்ட்சம் புத்தகங்கள். வீட்டிற்கு நிறைய சிறு பத்திரிக்கைகள் வரும். எல்லாவற்றிற்கும் இவன் அப்பா சந்தா கட்டி வரவழைத்துக்கொண்டிருந்தார். கணையாழி, கொல்லிப்பாவை, அஃக், கசடதபற.... என பல்வேறு வண்ணங்கள், பல்வேறு விவாதங்களைச்சுமந்து வரும் அந்த இதழ்களை இவன் புரிந்தும் புரியாமலும் படித்துக்கொண்டிருந்தான்." என்று விவரிக்கின்றார். நாமும் கூட வியப்படைகின்றோம். புத்தகங்கள் மீதும் , சில பத்திரிக்கைகள் மீதும் தீராக்காதல் கொண்டிருந்த ஒருவரின் மகனாக வளர்ந்த சூழல், நா.முத்துக்குமார் என்னும் கவிஞரின் வளர்ச்சியின் வேர்த்தளம் என்று புரிந்துகொள்கின்றோம்.

                         ஒரு நண்பருக்காக பூங்காவில் காத்திருந்தவேளையில் , தன்னைச்சந்தித்த கல்யாணராமன் பற்றியும், அவர் தனக்கு எழுதுவது பற்றிக் கொடுத்த அறிவுரைகள் பற்றியும் முடிவில் இவர் சுந்தரராமசாமி எழுதிய ஒரு கவிதையைச்சொன்னவுடன் இடம் பெயர்ந்து நகர்ந்ததையும் சொல்லும் விதம் நகைச்சுவையாக உள்ளது என்றாலும் இன்றைய எதார்த்தம்.
"  உன் கவிதையை நீ எழுது
    எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி
    எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி
    நீ அர்ப்பணித்துக்கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது
    உன்னை ஏமாற்றும் போலிப்புரட்சியாளர்கள்பற்றி எழுது
    சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகுபற்றி எழுது
    நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது
    எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப்பற்றி எழுது
    எவரிடமும் அதைக்காட்ட முடியாமலிருக்கும்
    தத்தளிப்பைப்பற்றி எழுது
    எழுது உன் கவிதையை நீ எழுது
    அதற்கு உனக்கு வக்கில்லையென்றால் ஒன்றுசெய்
    உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று
    என்னைக்கேட்காமலேனும் இரு " என்னும் கவிதை ஈர்ப்பாக உள்ளது. புத்தகம் முழுவதும் இதைப்போன்ற தான் இரசித்த கவிதைகளை, மேற்கோள்களை ஆபரணத்தில் பதியும் முத்துக்களாய் அங்கங்கே பதித்து இருக்கின்றார் நா.முத்துக்குமார்.

             " பள்ளிக்கூடத்தைப் பற்றி நினைக்கையில் வகுப்பறைகளை விட, வெளியே இருக்கிற மரங்களும் மைதானமும்தான் இவன் நினைவுக்கு வருகின்றன. இவன் பள்ளி மைதானத்தில் நட்டுவைத்த குடைகள்போல அசோக மரங்கள் வரிசையாக நின்றிருக்கும் " என ஆரம்பித்து பள்ளி நினைவுகளைப் பகிரும்பகுதி பசுமை நிறைந்த நினைவுகளை வார்த்தை ஓவியங்களால் வார்த்திருக்கிறார் எனலாம்.தனக்கு +2-வில் இயற்பியல் பாடம் எடுத்த சந்திரசேகர் மாஸ்டரால் இயற்பியலில் விருப்பம் உண்டான கதையை, இயற்பியலில் நல்ல மதிப்பெண் எடுத்து கல்லூரியில் இளம் அறிவியல் இயற்பியல் எடுத்து படித்ததைக் கூறுகின்றார். காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் படித்த காலத்தை விவரிக்கின்றார். " அந்தக் கல்லூரி , பசுமை நிறைந்த நினைவுகளாக , பாடித்திரிந்த  பறவைகளாக இவனை அணைத்துக்கொண்டது. இவன் பாடம் படித்தான் . கட்டடித்து , நண்பர்களுடன் படங்கள் பார்த்தான். அவ்வப்போது பெண்கள் கல்லூரிப்பக்கம் ஒதுங்கி, பார்வைகளால் காதலும் செய்தான். கல்லூரிப்பருவம் என்பது , காலம் ஒரு மாணவனைக் கூட்டுப்புழு பருவத்தில் இருந்து வண்ணத்துப்பூச்சியாக மாற்றி வெளியே பறக்கவிடும் பருவம். இவன் சுதந்திரமாகப்பறந்தான்; பதின் வயதுகளின் பூந்தோட்டங்களில் மிதந்தான்; முள்மரங்களில் சிக்கி ,இறகுகள் கிழிந்தான்; மீண்டும் வண்ணங்களைப் பூசிக்கொண்டு வானம் அளந்தான்; கைப்பிடிக்குத் தப்பிப்போன அந்த வண்ணத்துப்பூச்சியின் வண்ணங்கள் , இன்றும் இவன் நெஞ்சுக்குள் கொட்டிக்கிடக்கின்றன " என விவரித்து தன்னுடைய கல்லூரிக்கால  நண்பர்களின் பெயர்களையும் குறிப்பிடுகின்றார், கல்லூரியில் தன்னோடு படித்த டி.எஸ்.இராஜராஜனும் , தானும் மாலையில் மரத்தடியில் அமர்ந்து ஒரு தலைப்புக் கொடுத்து கவிதைகளை எழுதியதைக் குறிப்பிடுகின்றார்.

                         தான் +2 படிக்கும்போது , தனது ஊரான காஞ்சிபுரத்தில் வந்து எடிட்டர் பி.லெனின்  தேசிய விருது பெற்ற 'நாக் அவுட் ' படத்தை திரையிட்டதையும் , அவரின் பேச்சு  தனது சினிமா பற்றிய பார்வையை மாற்றியதையும் குறிப்பிடுகின்றார். ' திரைத்துறைதான் தன் தொழில் என்று முடிவானதும் இவன் தன் அப்பாவிடம் எப்படிச்சொல்வது என்று பல வாரங்களாக யோசித்துக்கொண்டிருந்தான். இவன் உறவுகளிலிருந்து திரைத்துறையில் சாதித்தவர் யாரென்று பட்டியலிட்டான். அந்தப்பட்டியலில் ஒரேயொரு பெயர்தான் இருந்தது. இவன் பிறப்பதற்கு முன்பே இறந்துவிட்ட அவர், திரைத்துறையில் தன் அடுக்குமொழி வசனங்களில் கோலாச்சினார். தமிழ் சினிமாவை திராவிடக் கொள்கைகளின் பின்னால் திசை திருப்பினார். அரசியலிலும் ஆங்கிலப்புலமையிலும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். அவரது இறுதி ஊர்வலத்தின்போது வரலாறு காணாத அளவு மக்கள் திரண்டார்கள். அவர்தான் பேரறிஞர் அண்ணா. இவன் அம்மா வழியிலும் , அப்பா வழியிலும் பேரறிஞர் அண்ண இவன் உறவினர் " என்று சொல்லும் நூல் ஆசிரியர் அண்ணாவின் மகன் சி.என்.ஏ.பரிமளம் இளவயதில் தன்னுடைய கவிதைகளைக் கேட்டு பாராட்டி உற்சாகப்படுத்தியவர் எனக் குறிப்பிடுகின்றார். சினிமாவில் சேரவேண்டும் என்ற ஆசையை அப்பாவிடம் சொன்னவுடன் , அவரது அப்பா நடிகர் சிவகுமார் எழுதிய 'இது இராஜாபாட்டை அல்ல' என்ற புத்தகத்தைக் கொடுத்ததையும் இரவு முழுவதும் படித்துவிட்டு , நான் சினிமாவிற்குப்போகிறேன் என்று சொல்ல அப்பாவும் அனுமதி கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

                                            தான் உதவி இயக்குநராக பணியாற்றிய படங்களை, காலங்களைக் குறிப்பிட்டுள்ளார்.  நடிக்க சான்ஸ் கேட்டுவந்த , வாழ்ந்து கெட்ட தஞ்சாவூர் குடும்பததைச்சார்ந்த ஒருவரின் கதையை 138, 139 பக்கங்களில் விவரித்துள்ளார். " வாழ்ந்து கெட்ட் வீடுகளில் இருந்து ஒரு வலி, மெள்ளக் கசிந்து காற்றில் பரவி நிலையற்று அலைவதை எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா ? கிராமத்தில் வாழ்ந்த சொந்த வீட்டை பூனைகள் உறங்கவும் , அரசமரச்செடிகள் சுவர் வழி வேர்விட்டு, வெடித்துக் கிளம்ப அனுமதித்துவிட்டு மாநகரத்து வீதிகளில் பசியுடன் அலையும் கண்கள் நடு நிசியில் வந்து உங்களை அலைக்கழித்ததுண்டா ? ..... " என வரிசையாகக் கேட்டு அவர் விவரிக்கும்போதே நமக்கும் நமக்குத்தெரிந்த வாழ்ந்து கெட்டவர்களின் வாழ்க்கை அவலங்கள் மனக்கண் முன்னால் விரிகின்றன.

                    " சினிமா, விநோதமான ஒரு ரங்கராட்டினம். ஆகாயத்துக்கும் பூமிக்குமாக அடிவயிற்றுப்பயத்துடன் சுற்றிக்கொண்டு இருந்தாலும், கீழே வந்து போகும் அந்த ஒரு கணம் , மனதுக்கும் புத்திக்கும் ஏறுவதே இல்லை. நாம் எப்போதும் மேலேதான் இருந்துகொண்டிருக்கிறோம் எனும் மாயத்தோற்றத்தை சினிமா ரங்கராட்டினம் காலம் காலமாக எல்லோர் மனதிலும் தந்து கொண்டிருக்கிறது " என்று சொல்லும் ந.முத்துக்குமார் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் ரங்கராட்டினம் கீழே வந்த கதையை 'முன்பனிக்காலம் ' எனத் தலைப்பிட்டுத்தருகின்றார். " வேலையற்றவனின் பகலும்,நோயாளியின் இரவும் நீளமானவை என்பதை இவன் உணர்ந்த காலம் அது. தூரத்தில் இருந்து பார்க்கையில் தங்க நிலவாகத் தெரிந்த சினிமாவின் மறுபக்கம் வேறுவிதமாக இருந்தது . மஞ்சள் வணணத்தில் தகதகத்த அந்த நிலவின் உள்பக்கம், ஆக்சிஜனற்று, தண்ணீரற்று, பள்ளம் பள்ளமாக இவன் முன் விரிந்தது .' எனக் குறிப்பிட்டு தான் சினிமாவில் வாய்ப்பு கேட்டு அலைந்த கதையைச்சொல்லுகின்றார்.' சிறுகதைக் கதிர் ' என்னும் இதழில் துணை ஆசிரியராகப்பணியாற்றியதை, திரைப்பட இயக்குநர் ஷ்ங்கரிடம் பேட்டி எடுத்ததை  வேடிக்கை பார்ப்பவனாகத் தொடர்கின்றார் நா.முத்துக்குமார் இந்தப்புத்தகத்தில்.

                         என்னுடைய ஞானத்தகப்பனே, என இயக்குநர் பாலுமகேந்திரா பற்றி , அவரின் மறைந்தவுடன் எழுதிய கட்டுரை படிக்கும் எவர் மனதையும் உருக்கும். நா.முத்துக்குமாரின் நன்றி உணர்ச்சியும் படிப்போர்க்கு எளிதில் புரியும். " என் ஞானத்தகப்பனே ! நீங்கள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில்தானே , என் தகப்பன் ஏழு வருடங்களுக்கு முன்பு என்னை விட்டு விட்டு இறந்துபோனான். நீங்களும் பாதியிலேயே விட்டுவிட்டுப்போனால் , இனி நான் எங்கு செல்வது ? ஒரு கூட்டுப்புழுவாக உங்கள் அலுவலகத்துக்குள் நுழைந்த என்னை, பாட்டுப்புழுவாக மாற்றி, பட்டாம் பூச்சியாகப் பறக்கவிட்டவர் நீங்கள் " என்று ப்க்கம் 166 குறிப்பிடும் நா.முத்துக்குமார் பாலுமகேந்திராவின் தனித்தன்மைகளைக் கூறும் விதமே அழ்கு, அருமை, பெருமை அத்தனையும் ஒன்று இணைந்து தன்மையாக உள்ளது.

                   சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ.தமிழ் இலக்கியப்பாடம் எடுத்துப்படித்த நிகழ்வுகளைக் கூறி " ஒரு மாணவன் வேதியியல் படித்தால் , அந்தப்பாடப்புத்தகம் வேதியியலை மட்டும்தான் கற்றுத்தரும். இப்படித்தான் கணிதமும், இயற்பியலும், கணிப்பொறியும், பொறியியலும், மருத்துவமும் அந்தந்தத் துறையைச்சார்ந்த அறிவை மட்டுமே வளர்க்கும். ஆனால் இலக்கியம் மட்டுமே வாழ்க்கையைச்சொல்லிக்கொடுக்கும், சகமனிதர்கள் மீதான் மனித நேயத்தை, தோல்விகளைத் துரத்தும் தன்னம்பிக்கையை, புல் நுனியில் தூங்கும் பனித்துளியின் அழகியலை வேறு எந்தப்பாடம் சொல்லிக்கொடுக்கும் ? இவன் கசிந்துருகிக் காதலித்துத் தமிழ் கற்றான். பக்கம் 179-ல் நா.முத்துக்குமார் தமிழ் இலக்கியம் படிப்பதன் மேன்மையை சொல்லும் விதம் அருமை. " ஒழுங்காப்படிச்சா தமிழ் எவனையும் தெருவுல நிக்கவெக்காது. ஓய்வா இருக்கும்போது வாங்க. நான் ரசிச்ச நூற்றுக்கணக்கான பாடல்களைக் குறிச்சுக் கொடுக்கிறேன். அதைப்புரிஞ்சுகிட்டு மனப்பாடம் பண்ணா மட்டும்போதும்.வாழ்ற வரைக்கும் நீங்க பேசியே பொழச்சிக்கலாம் " என்று அவரின் பேராசிரியர் சொல்வதாக வரும் பகுதியும் எதார்த்தம்.

                     63-வது ஆளாக பேச்சுப்போட்டியில் மேடையேறி " புறாக்கள் வளர்க்கும் எதிர்வீட்டுக்காரன்; என்னிடம் இருந்து பறிக்கிறான்; பூனை வளர்க்கும் சுதந்திரம் " என்னும் கவிதை பாடி ,முதல் பரிசு பெற்ற கதையை வேடிக்கையாகச்சொல்கின்றார். தொடர்ந்து சென்னை முழுவதும் நடந்த கல்லூரிகளுக்கான கவிதைப்போட்டிகளில் கலந்து கொண்டதுதான், சொன்னவுடன் இன்று கவிதை எழுதுவதற்கான காரணம் என்று குறிப்பிடுகின்றார். ' பச்சையப்பன் கல்லூரியில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்' நமக்கும் கூட நினைவில் நிற்கிறது இவரின் எழுத்துக்களால். கணையாழி இதழில் வந்த 'தூர்' என்னும்  கவிதையையும் அதனை வாசித்த எழுத்தாளர் சுஜாதா பாராட்டியதையும்   பெயர் தெரியாத அன்பர் கொடுத்த ஆயிரம் ரூபாயும், அதில் கணையாழி இதழுக்கு நா.முத்துக்குமார் கொடுத்த ரூ ஐநூறும்  'பெள்ர்ணமி 'காலமாய் பதியப்பட்டிருக்கிறது.

                    தன்னுடைய பேராசிரியர்களும், பேராசிரியர் பெரியார்தாசனும் பாராட்டிய நிகழ்வைப் பகிர்ந்துகொள்கின்றார். தன்னுடைய வளர்ச்சியில் கவிஞர் அறிவுமதி, எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பேராசிரியர் வ.ஜெயதேவன், முனைவர் பட்ட ஆய்வு, படைப்புக்கலை பற்றி எம்.ஏ.மாணவர்களுக்கு எடுத்த பாடம், அதனால் கிடைத்த அனுபவங்கள் என விவரித்து முடிவில் 'வீர நடை ' என்னும் திரைப்படத்தில் தான் முதன்முதலில் எழுதிய ' முத்து முத்தாய்ப் பூத்திருக்கும் ' என்னும் பாடல் அதனைப் பாராட்டிய இயுக்குநர் சீமான், இசையமைப்பாளர் தேவா  என விவரிக்கின்றார். முடிவில் " சுடலையிலே வேகும்வரை : சூத்திரம் இதுதான் கற்றுப்பார் ! ; உடலை விட்டு வெளியேறி உன்னை நீயே உற்றுப்பார் " என்னும் தன் கவிதையைக்கூறி பனித்துளியின் வாழ்க்கையோடு வாழ்க்கையை ஒப்பிட்டு முடிக்கின்றார். படித்துப்பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும் இந்தப்புத்தகம்.

(மதுரை வானொலி நிலையம்- புத்தக விமர்சனத்திற்காக என்னால் தயாரிக்கப்பட்டது-வா.நேரு... )  

Tuesday, 10 March 2015

முகநூலில் விண்ணப்பங்கள்.......

விரிந்து கிடக்கிறது முக நூல்
விரிந்து கிடக்கும் வானம் போலவே !
வித விதமாய்க் கண்சிமிட்டும்
நட்சத்திரங்கள் போலவே
எவரெவரோ தரும்
விவரங்களும் கேள்விகளும்
வித விதமாய் சிந்தனைத்
துளிகளைத் தூவுகின்றன !

காற்றும் மழையும்
வெயிலும் குளிரும்
நண்பர் விண்ணப்பம்
கொடுத்து வருவதில்லை !
வந்தபின்புதான்
உடையாலோ குடையாலோ
மறைத்துக்கொள்ள
வேண்டியிருக்கிறது !

முகநூலில்
விண்ணப்பங்கள்
வந்து கொண்டேயிருக்கின்றன
அறிந்தவர்கள்
அறியாதவர்கள்
தெரிந்தவர்கள்
தெரியாதவர்கள்
என நட்பு விண்ணப்பங்கள்
வந்து கொண்டேயிருக்கின்றன !

செயற்கரிய யாவுள நட்பின்
வினைக்கரிய யாவுள காப்பு
வினாவும் கேட்டு
விடையும் சொன்ன
திருவள்ளுவரின்
அதிகாரங்களில்
'ஒன்று ஈத்தும் ஒருவுக நட்பை'
என அறிவுறுத்தும்
'கூடா நட்பும் ' 'தீ நட்பும் '
கூடவே இருக்கிறது !

விலக்க வேண்டிய நட்பு பற்றி
தூரத்தில் வரும்போதே
வேண்டாம் என ஓடவேண்டிய
நட்பு பற்றியெல்லாம்
நயமாக இயம்புகின்றன
திருக்குறளின் வரிகள் !


போலிகள் நிறைந்துகிடக்கும்
முக நூலில்
எவரின் நட்பை ஏற்பது ?
எவரின் நட்பை வெறுப்பது ?
புதுக்குறள் எவரேனும்
எழுதுங்களேன் !
திணறும் முக நூல்
நட்புகளுக்கு உதவுங்களேன் !

                                         ....வா.நேரு......

                                       நன்றி : எழுத்து.காம்

Monday, 9 March 2015

எவரின் தாக்கம் ?......

இந்துப்பண்பாடாம் !
'இந்திய மகள்'
படத்தால் இந்திய
மாண்பைக் கெடுக்கிறார்களாம் !
என்னனமோ எழுதுகிறார்கள்
தி...மணிகளின்
நடுப்பக்கங்களில் !

சீதனமாகப் பொருள்
கொடுத்தார்களாம் ...
மேற்கத்தியத்தாக்கத்தால்
சொத்துரிமை கேட்டதால்
பெண்களுக்கு கேடாம் ...

மகன் என்றால் மற்றவர்க்கு
இனிப்பும்
மகள் என்றால் பச்சைக்குழந்தைக்கு
கள்ளிப்பாலும் கொடுக்கச்சொன்னது
எவரின் தாக்கம் !

மேற்கத்தியத் தாக்கத்து
முன்னமே
மகாபாரதக்கதையில்
ஒருத்தியை கட்டிவந்து
ஐந்து பேர் பங்குபோட்டது
எந்தத் தாக்கம் !

பொம்பளை மோகம் பிடித்தவனை
கூடையில் சுமந்து போய்
அடுத்த பொம்பளையிடம்
விட்டவளுக்கு
பத்தினிப் பட்டம் கொடுத்தது
எவரின் தாக்கம் !

தீக்குள் குளித்துவா !
பத்தினி என உன்னை
நான் ஏற்றுக்கொள்கிறேன்
என்று கடவுள் சொன்னதாய்
எழுதி வைத்தது
எந்தத் தாக்கம் ?
எவரின் தாக்கம் ?

மாயக்கண்ணாடியாம் !
கண்ணாடிக்கு முன்னால்
நின்றால் மனதில் இருப்பவர்
எவர் எனத்தெரியுமாம் !
கடவுளின் மனதில் இருப்பவர்
நீயா ? நானா ? எனச்
சக்களத்திகள் இருவரும்
சண்டையிட்டு
இருவரும் இல்லையென்றால்
இருப்பவள் வேறு எவள்
என அறியக்
கடவுளைக் கண்ணாடிமுன்
நிப்பாட்டினார்களாம் ....
உங்க கடவுள்களின்
யோக்கியதை இப்படி
ஆனதற்கு காரணம்
எந்தத் தாக்கம் !

பத்தினியைக் களங்கப்படுத்த
மாறுவேடத்தில்
பிச்சைகேட்டு
கடவுள்கள் போனதாக
கதை எழுதியது
எந்த மேற்கத்தியத் தாக்கம் ?

உங்களது
புராணக் கடவுள்கள்முதல்
நடமாடும் கடவுள்கள்வரை
பெண்களிடத்தில் யோக்கியமாய்
நடந்த கடவுள் ஒன்றைக்
காட்டுங்கள் ! பின்பு
மேற்கத்தியத் தாக்கம்
பற்றிப்பேசலாம் .....

வக்கிரமாய்
இந்திய ஆண்கள்
மனது ஆனதன்
காரணம்
உங்களது கடவுள்கள்
அவர்களின் லீலைகள்
எனச்சொல்லும் கதைகள்

கடவுள் கதைகளைத்
திருத்துங்கள் ...
அல்லது திருந்தாத
கடவுள்களைக்
கொளுத்துங்கள் ....
பெண்களின் நிலைமாறும்
இந்த நாட்டில் ....

                           ..... வா.நேரு....

Tuesday, 3 March 2015

படித்த செய்தியில் பிடித்த செய்தி(2) : வீடில்லா புத்தகங்கள் 23: வாழ்க்கைத் துணை! - எஸ். ராமகிருஷ்ணன்

படித்த செய்தியில் பிடித்த செய்தி(2) : வீடில்லா புத்தகங்கள் 23: வாழ்க்கைத் துணை! -  எஸ். ராமகிருஷ்ணன்

ஓர் எழுத்தாளன் உருவாவதற்கு அவனது குடும்பச் சூழல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டில் எழுதுவதற்கான சூழல் கிடைக்காத எழுத்தாளர்களே அதிகம். படிப்பையும் எழுத்தையும் அவ்வளவு சீக்கிரமாக வீடு அங்கீகரித்துவிடுவது இல்லை.

குடும்பப் பிரச்சினைகளின் காரண மாக இலக்கியம் படிப்பதை கைவிட்ட வர்கள், எழுதுவதை நிறுத்திக்கொண்ட வர்கள் பலரை நான் அறிவேன். பல எழுத்தாளர்கள் குடும்பத்தின் கோபம், சண்டைகளை மீறியே தனது எழுத்து செயல்பாடுகளைத் தொடர்ந்து வருகி றார்கள். அரிதாக சிலருக்கே நல்ல துணையும் எழுதுவதற்கான இலக்கியச் சூழல்கொண்ட வீடும் அமைகிறது.

ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் தனது மனைவியோடு சண்டையிட்டுக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறிய போது அவருடைய வயது 82.

கவிஞர் டி.எஸ். எலியட் கருத்துவேறு பாட்டால் மனைவி விவியனை விவாக ரத்து செய்துவிட்டார். ஆனால், எலியட் எந்த இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொண்டாலும் விவியன் அங்கே தேடிவந்து முன்னிருக்கையில் அமர்ந்தபடியே, ‘‘நீ ஒரு பொய்யன்…” என்ற அட்டையைத் தூக்கிப் பிடித்து கலாட்டா செய்வார்.

‘இழந்த சொர்க்கம்’ (பேரடைஸ் லாஸ்ட்) என்கிற காவியம் படைத்த மகாகவி மில்டன், தனது 35-வது வயதில் மேரி பாவல் என்ற அரசக் குடும்பத்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். மனைவியின் கடுமையான நடத்தையால் அவதிப்பட்ட மில்டன், தனது இறப்புவரை தான் இழந்த சொர்க்கத்தை மீண்டும் பெறவே இல்லை என்கிறார்கள் இலக்கிய விமர்சகர்கள்.

சார்லஸ் டிக்கன்ஸ் தன் மனைவி கேதரின் கண்ணிலேயே படக் கூடாது என்று படுக்கை அறை நடுவில் தடுப்புச் சுவர் ஒன்றைக் கட்டியிருந்தாராம்.

சிந்தனையாளர் சாக்ரடீஸின் மனைவி ஜாந்திபி, ஒருநாள் தனது பேச்சைக் கேட்காத சாக்ரடீஸின் தலையில் கோபத்தில் ஒரு வாளி தண்ணீரைத் தூக்கி ஊற்றினாள். அதற்கு ‘முன்பு இடி இடித்தது… இப் போது மழை பெய்கிறது’ என்று சாக்ரடீஸ் சொன்னதாக ஒரு கட்டுக் கதை நெடுங் காலமாகவே இருந்து வருகிறது.

இப்படி எழுத்தாளர்களின் மோசமான மனைவிகுறித்து நிறைய சம்பவங்கள் திரும்பத் திரும்ப சொல்லப்படுகின்றன. அவை எல்லாம் உண்மை கலந்த பொய்கள்!

சாக்ரடீஸ் ஜாந்திபியைத் திருமணம் செய்து கொள்ளும்போது அவருடைய வயது 50. ஜாந்திபிக்கோ 20 வயது. ஜாந்திபி வறுமையின் காரணமாகவே சாக்ரடீஸைத் திருமணம் செய்து கொண்டார் என்கிறார்கள். குடியும், கூத்தும், பெண் தொடர்பும் கொண்ட கிரீஸ் நாட்டு ஆண்களைப் போலவே சாக்ரடீஸ் நடந்துகொண்டார் என்பதால் தான் அவர்களுக்குள் சண்டை என்றும் ஒரு தரப்பு வாதிடுகிறது.

ஜாந்திபி சாக்ரடீஸோடு வாழ்ந்து மூன்று குழந்தைகளைப் பெற்றிருக் கிறாள். மரண தண்டனை விதிக்கப்பட்ட சாக்ரடீஸைப் பார்க்க சிறைக்கு வரும்போது மூன்றாவது கைக் குழந்தையோடு ஜாந்திபி வந்திருந்தாள் என்றும் குறிப்பிடப்படுகிறது. சாக்ரடீஸ் சாகும்போது அவருக்கு 71 வயது.

சாக்ரடீஸீன் மரணத்துக்குப் பிறகு ஜாந்திபி என்ன ஆனாள்? எப்படி வாழ்ந்தாள்? பிள்ளைகளை எப்படி வளர்த்தாள்… என்கிற கேள்விகளுக்குப் பதில் இல்லை.

மோசமான மனைவிகள் ஒருபுறம் என்றால், மறுபக்கம் தன் வாழ்க்கை யைக் கணவரின் வெற்றிக்காக அர்ப் பணித்துக்கொண்ட பெண்கள் பலரும் வரலாற்றில் நினைவு கூரப்படுகிறார்கள்.

ஜென்னியின் ஆதவுரவுதான் காரல் மார்க்ஸை மாபெரும் சிந்தனையாளராக உருவாக்கியது. பார்வையற்ற போர் ஹெஸுக்குத் துணையாக இருந்தவர் அவரது தாய். வர்ஜீனியா வுல்ப் என்ற பெண் எழுத்தாளரின் கணவர் லியோனார்டு, தன் மனைவி எழுத்தாள ராகச் செயல்பட சகல விதங்களிலும் உறுதுணையாக இருந்தார்.

இவ்வளவு ஏன்… டால்ஸ்டாயின் மனைவி சோபியா, ஒவ்வோர் இரவும் கணவர் எழுதிப் போட்ட நாவலின் பக்கங்களை முதுகு ஒடியப் பிரதி எடுத்து உதவி செய்திருக்கிறார். இப்படி ஒருவரையொருவர் புரிந்து கொண்ட துணை கிடைத்த எழுத் தாளர்கள் பாக்கியவான்கள்.

அப்படியான ஒரு மனிதர் கரிசல் இலக்கியத்தின் தந்தை, எழுத்தாளர் கி.ராஜநாராயணன்! அவரது துணைவி யார் கணவதி, அற்புதமான பெண்மணி. அன்பிலும் உபசரிப்பிலும் அவருக்கு இணையே கிடையாது. கி.ராவின் எழுத்துப் பணிக்கும் குடும்ப வாழ்வுக் கும் அவரே அச்சாணி!

கணவதி அம்மாள்குறித்து ‘கி.ரா இணைநலம்’ என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியாகியிருக்கிறது. எழுதிய வர் எஸ்.பி.சாந்தி. வெளியிட்டது ‘அகரம்’ பதிப்பகம். ஓர் எழுத்தாளரின் மனைவிகுறித்து, தமிழில் எழுதப்பட்ட முதல் நூல் இதுதான் என நினைக்கிறேன். கணவதி அம்மாளின் நினைவுகளை வாசிக்கும்போது நெகிழ்வாக இருக்கிறது.

கி.ரா பிறந்த இடைசெவல் கிராமம்தான் கணவதி அம்மாளின் ஊரும். ஜில்லா போர்டு தொடக்கப் பள்ளியில் படித்த தனது பள்ளி நாட்கள் பற்றியும், உடன் படித்த தோழிகள் குறித்தும் நினைவுகூரும் கணவதி அம்மாள், பொதுவாக ‘திருமணத்துக்குப் பிறகு பெண்கள் தன்னோடு படித்த பெண் தோழிகளை, விருப்பமான மனிதர்களைப் பிரிந்து சென்றுவிடுகிறார்கள். பிள்ளை பெற்றதோடு அவளது சகல தனித் தன்மைகளும் புதையுண்டுப் போய் விடுகின்றன’ என ஆதங்கத்துடன் குறிப்பிடுகிறார்.

காசநோயாளியாக இருந்த கி.ராவை நம்பிக்கையுடன் தைரிய மாக தான் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டதையும், தங்களுடைய கல்யாணத்துக்கு போட்டோ கிடையாது, மேளதாளம் கிடையாது, சடங்குகள் எதுவும் கிடையாது, விருந்து சாப்பாடு கூட கிடையாது. முகூர்த்தப் பட்டுப் புடவைகூட நூல் புடவைதான். கல்யாணத்துக்கு ஆன மொத்த செலவு 200 ரூபாய் மட்டுமே என நினைவுகூர்கிறார்.

விவசாயப் பணிகளுக்கு ஓடியோடி உதவிகள் செய்தது, நோயாளியான கணவரைக் கவனித்துக்கொண்டது, பிள்ளைகளை நோய் நொடியில் இருந்து காத்து வளர்க்கப் பாடுபட்டது, வீடு தேடிவரும் இலக்கியவாதிகளுக்கு விருந்து உபசாரம் செய்தது,

விவசாயச் சங்கப் போராட்டத்தில் கலந்துகொண்டு கி.ரா சிறைப்பட்டபோது ஒற்றை ஆளாக குடும்பத்தை கவனித்துக்கொண்டது… என நீளும் கணவதி அம்மா ளின் பல்வேறு நினைவுகளின் ஊடாக, ஒரு பெண்ணின் அர்ப்பணிப்புமிக்க மனதும் போராட்டமான வாழ்க்கையும் வெளிப்படுகிறது.

‘ஆனந்த விகடன்’ இதழில் முத்திரை கதை எழுதி கிடைத்த 100 ரூபாயில், கி.ரா தனக்கு காஞ்சிபுரம் பட்டுப் புடவை எடுத்து தந்தது, எங்கே சென்றாலும் தன்னை உடன் அழைத்துப் போனது, ஹிந்தி படங்களுக்குக் கூட தன்னை அழைத்துப் போனது,

கடிந்து பேசாமல், முகம் சுளித்துத் திட்டாமல், தன்னை கவுரவமாக, மரியாதையாக நடத்தியது. திருமணமானது முதல் இன்று வரை தனது விருப்பங்களை மதித்து நடந்துகொள்ளும் அன்பான கணவராக கி.ரா திகழ்வதை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறார் கணவதி அம்மாள்.

தண்ணீர் மாதிரி தன் வழித் தடமெங்கும் ஈரப்படுத்திக்கொண்டு, புல்முளைக்கச் செய்யும் காதலே உயர்வானது. அத்தகைய ஓர் ஆதர்ச தம்பதி என்கிறார் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ள சாந்தி.

எழுத்தையும் எழுத்தாளனையும் கொண்டாடும் நாம், அந்த எழுத்தாள னுக்குத் துணை நிற்கும் குடும்பத் தினரையும் நன்றியோடு நினைவு கொள்ள வேண்டும். அதுவே சிறந்த பண்பாடு!

- வாசிப்போம்…

நன்றி : தமிழ் இந்து நாளிதழ் -பிப்ரவரி -26.

                      இரு வகையான எழுத்தாளர்கள் இருக்கின்றார்கள். துணையாக இருக்கும் குடும்பத்தினரால் எழுதுபவர்கள், கொடுமையாக இருக்கும் குடும்பத்தினரை மறக்க எழுதுபவர்களும் இருக்கின்றார்கள். வரலாறு முழுக்க இந்த இருவகையான எழுத்தாளர்களும் இருந்திருக்கின்றார்கள். என்னைச்சுற்றி இருக்கும், நான் அறிந்த எழுத்தாளர்களையும் பார்க்கின்றேன். இந்த இருவகையான எழுத்தாளர்களும் இருக்கின்றார்கள். வயதான காலத்தில் தன்னுடைய இணையரோடு இணைந்து வீட்டிற்குள் வாழ முடியாத காரணத்தால் பிரியாமல் ஆனால் இணையரை விட்டுத்தனித்துப்போய் ஏதோ ஓர் இல்லத்தில் இருந்து எழுதும் எழுத்தாளர்களும் உண்டு. வீட்டில் இருவர் மட்டுமே என்றாலும் அன்றாடம் சண்டைக்கோழியாய் எதெற்கெடுத்தாலும் சண்டையிடும் இணையைச்சமாளித்துக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களையும் நான் அறிவேன். போராட்டமே வாழ்க்கைக்களமாய் தொழிற்சங்கத்திலும் பொதுப்பணியிலும் அமைத்துக்கொண்டு மனம் ஒத்த தம்பதிகளாய் வாழ்ந்து , கணவர் எழுதும் நூல் அத்தனைக்கும் ஆக்கமும் ஊக்கமுமாய் இருக்கும் தோழியர்களையும் நான் அறிவேன். எந்த வகையில் என்றாலும் ஆக்கத்தாலோ அல்லது எதிர்மறை தாக்கத்தாலோ எழுதத்தூண்டும் குடும்பத்தினர்கள் சமூகத்தின் நன்றிக்குரியவர்க்ள், பாராட்டுக்குரியவர்கள்தானே .  அவர்கள் கொடுக்கும் வினையால்(Action-ல்) தானே எழுத்து என்னும் எதிர்வினை(Reaction ) நிகழ்கிறது. இன்று வெற்றிகரமான எழுத்தாளராக இருக்கும் எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் தனது குடும்பத்தினரின் , இணையரின் ஒத்துழைப்பு பற்றி இதுவரை எழுதியதாக நான் படித்ததில்லை. இல்லையெனில் பதியவேண்டும். 

Sunday, 1 March 2015

பசியால் பட்டறிவு.....

     

எதிர்பார்த்துக்
காத்திருக்கிறேன்
எவரேனும்
வருவார்களா என்று !

மருத்துவமனையில்
நோய்வாய்ப்பட்ட மகளோடு
துணையாய் நான் !
நோயால்
மருள மருள விழிக்கும்
மகளைத் தனியே
விட்டுச்செல்ல மனமில்லாமல்
நெருக்கமான நண்பர்கள்
எவரேனும் வருவார்களா என
எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன் !

நண்பர்கள்
படை உண்டு
வாருங்கள் என்று
சொன்னால் வந்து
குவிவார்கள் என்றாலும்
எவரையும் தொந்தரவு
செய்ய வேண்டாம்
எனும் எண்ணத்தில்
தானாக எவரேனும்
வருவார்களா என
எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன் !

பை நிறையப்
பணம் இருக்கிறது !
பத்து நிமிட தூரத்தில்
உணவு விடுதிகள் இருக்கின்றன
என்றாலும் பட்டினியாய்
பலமணி நேரம்
எவரேனும் வருவார்களா என
எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன் !

எண்ணிப்பார்க்கிறேன் !
எத்தனை நண்பர்களின்
குழ்ந்தைகள் இருந்தனர்
மருத்துவமனைகளில் !
கால்களில் சுடுதண்ணீர்
ஊற்றிக்கொண்டு
சென்றோம் , விசாரித்தோம்
வந்தோம் என்றுதானே
இருந்தோம் !
எப்போதாவது நண்பர்களிடம்
நானும் இருக்கவேண்டுமா
என்றோ
ஏதேனும் குறிப்பிட்ட நேரத்தில்
வந்து இருக்கவேண்டுமா
என்றோ
கேட்டதில்லை இதுவரை !

வயிற்றைக் கடிக்கும்
பசியால் பட்டறிவு கிடைத்தது !
இனிமேல் மருத்துவமனைகளில்
இருக்கும் நட்புகளிடம்
கேட்டல் வேண்டும் !
நேரத்தை நிறைய
ஒதுக்கவேண்டும் !

செயற்கை புன்னகை
உதிர்த்து
நலமடைய வாழ்த்துக்கள்
எனச்சொல்லி வருவதைவிட
நானும் உன்னோடு
இருக்கிறேன்
உனக்கு வரும் இடர்களில்
என்னும் உரிமையோடு
நேரத்தை ஒதுக்கியும்
நட்புகள் இருக்கும்
மருத்துவமனைகளில்
நுழைந்திடவும்
இருந்திடவும் நினைக்கிறேன்....

                                              -- வா.நேரு---

நன்றி : எழுத்து.காம்.

Friday, 27 February 2015

அண்மையில் படித்த புத்தகம் : மாப்பசான் சிறுகதைகள்-புலவர் சொ.ஞானசம்பந்தன்

அண்மையில் படித்த புத்தகம் : மாப்பசான் சிறுகதைகள்
மொழிபெயர்ப்பு ஆசிரியர்        : புலவர் சொ.ஞானசம்பந்தன்
வெளியீடு                                  : கமலகுகன் பதிப்பகம்,மேடவாக்கம், சென்னை -302. பேசி : 22530954
முதல் பதிப்பு                             : 2007 , 248 பக்கங்கள் , விலை ரூ 110
மதுரை மைய நூலக எண்       : 180152

                                                          உலகப்புகழ் பெற்ற சிறுகதை எழுத்தாளர் மாப்பசான் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் அவருடைய சிறுகதைகள் நிறையப்படித்ததில்லை. 300 சிறுகதைகளுக்கு மேல் எழுதியிருக்கும் மாப்பசானின் சிறுகதைகளில் 25 சிறுகதைகளைத் தமிழில் மொழி பெயர்த்து கொடுத்திருக்கின்றார்கள்.

                                             அச்சம் என்ற சிறுகதை முதல்கதை. ஒரு கொலையைச்செய்துவிட்டு பயந்து போயிருக்கும் ஒருவனின் குடும்பமே அச்சத்தில் உறையும் கதை. கடைசியில் நாயை ஆவி என நினைத்து சுட்டுக்கொல்லும் கதை. திகில் கதை போல உள்ளகதை. பிள்ளை(யின்) பாசம் என்னும் கதை , இரண்டு பிள்ளைகள் இரண்டு ஏழைக் குடும்பங்களில், ஒரு பணக்காரக்குடும்பம் முதல் குடும்பத்தில் வந்து தத்து கேட்க, முடியாது என்று திட்டி விரட்டிவிடுகின்றார்கள் பெற்றோர்கள். இரண்டாவது குடும்பத்தில் மாதம் மாதம் பணம் பெற்றுக்கொள்ள இசைவு தெரித்து பிள்ளையைத் தத்து கொடுத்து விடுகின்றார்கள். 25 வருடம் கழித்து, தத்து கொடுக்காமல் வளர்த்த மகன், தத்து கொடுத்த பக்கத்து வீட்டுப்பையனின் செல்வச்செழிப்பைப் பார்த்து, 'முட்டாள்களே ' என்று பெற்றோரைப் பார்த்து திட்டுவதாக வரும் கதை, பார்வை மாறுபடும் விதம் அருமை.

                        இரவல் வாங்கும் நகையால் ஏற்படும் துன்பம் பற்றிய கதையான ' நெக்லஸ் ' ஏகப்பட்ட பட்டிமன்றங்களில் கேட்ட கதை. ஆனால் இதன் ஒரிஜனல் உரிமையாளர் மாப்பசான் என்பது இப்போதுதான் தெரிகிறது. இரவல் நகையை வாங்கித் தொலைத்துவிட்டு, ஒரிஜினல் நகையை கடன்பட்டு வாங்கிக் கொடுத்துவிட்டு, 10 ஆண்டுகளாக உழைத்து கடனை அடைக்கும் நேரத்தில் இரவல் வாங்கிய நகை கவரிங் நகை என்று தெரிவதாக வருகின்றது . நல்ல வருணனை உள்ள கதையாக உள்ளது. அப்பா பெயர் தெரியாமல் , பலரிடம் இழிவுப்பேச்சு வாங்கும் சிமோனுக்கு, அப்பாவாக பிலிப்ரெமி என்பவர் கிடைப்பதைப் பற்றிக்கூறும் 'சிமோனின் அப்பா' கதை என்னவென்றே தெரியாமல் சிறுவயதில் இழிவு படும் சிமோனை விவரிக்கின்றது. உளரீதியாக சிமோன் படும் வேதனைகளை மிக நன்றாக விவரித்துள்ளார்.

                     பழைய பகையால் , அநியாயமாக திருடன் எனப் பழிசுமத்தப்படும் ஓஷ்கோர்னே என்னும் கதாபாத்திரம் , கடைசிவரை அந்தத் திருடன் என்னும் பழியைத் துடைக்கமுடியாமல் புலம்பியே சாகும் ' கயிறு ' என்னும் கதை , அப்படி நோய் வந்து விடுமோ இப்படி நோய் வந்து விடுமோ என்று பயந்து பயந்து சாகும் பனார் என்னும் கதாபாத்திரம் பற்றிச்சொல்லும் ' ஆரோக்க்கியப் பயணம் ' என்னும் கதை நல்ல கிண்டலும் கேலியும் கலந்த கதை. இன்றைக்கும் இக்கதை பொருந்தும். எச்சரிக்கை என்ற பெயரில் படாதபாடு படுத்தும் மனிதர்களைப் பற்றிய கதை.

                       குடும்பத்தை விட்டு வெகுதூரம் போன சித்தப்பா ழுய்ல் , பெரிய பணக்காரனாக ஊருக்கு வருவான் என்று நம்பிக்கொண்டிருந்த வேலையில் , பக்கத்து தீவுக்குப்போன இடத்தில் பிச்சைக்காரக் கோலத்தில் பார்த்துவிட்டு தன் தந்தையும் ,தாயும் சித்தப்பாவைத் தெரியாதவர்கள் போல வந்து விட பொருளை வாங்கிக்கொண்டு இனாமாகப் பணமும் சித்தப்பாவுக்கு கொடுத்துவிட்டு வரும் சிறுவனின் கதை. மனிதர்கள் பொருள் இல்லையென்றால் எவ்வளவு மதிப்பிழந்து போவார்கள் என்பதைச்சொல்லும் கதை.' சிற்றப்பா ழுய்ல் '. கஞ்சத்தனம் பிடித்த மனைவியிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் ஒரேயின் கதை சொல்லும் 'குடை ' கதை போன்றவை நல்ல நையாண்டி கதை.

                                      பாதிரியார்களின் பொய்மைகளைத் தோலுரிக்கும் ' நார்மாண்டிப் பாதிரியார்' , போர் வீரனின் அச்சத்தைச்சொல்லும் ' வால்ட்டரின் கனவு ', சாகக்கிடக்கும் தாய்க்கு துணையாக ஆளை அமர்த்தும் மகன், வேலைக்காரியாக வந்த பெண்ணும் மகனும் போடும் பொருளாதாரக்கணக்கு, பொருளாதாரக்கணக்குப்போட்டு 'பேய்' வேசம் போட்டு கிழவியைச்சாகவைக்கும் கதை சொல்லும் 'பேய் ' போன்ற கதைகள் இன்றைக்கும் கூடப்பொருந்தும்.

                            'சிறுமி ரோக்கு ' என்னும் கதை, ஒரு சிறுமியை பலாத்காரம் செய்து கொன்று விட்ட ஊர்ப்பெரியவர், மேயர் தன்னுடைய பேச்சுத்திறனால் , நடிப்பால் அந்தக் கொலையை யார் செய்தார் என்பதே தெரியாமல் மறைத்துவிடுகின்றான். ஆனால் எல்லாம் முடிந்த பிறகு கொல்லும் அவனது மனச்சாட்சியால் பீதியடைந்து நித்தம் நித்தம் செத்துப்பிழைத்து, கடைசியில் தற்கொலை செய்து கொளவதாக வரும் கதை.

                               மன ரீதியாக ஏற்படும் அச்சம், உள்ளத்தில் ஏற்படும் குழப்பம், நடுக்கம் , இயலாமை, சாப்பாடு இல்லாமல் படும் பாடு, பசியை ஆற்ற திருடிக்கூட சாப்பிடும் கதாபாத்திரங்கள், பணக்காரர்கள் மற்றும் பாதிரியார்களின் வேடங்களை வெளிக்காட்டும் கதாபாத்திரங்கள் என இருக்கின்றன. ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட கதைகள். அன்றைய சூழல், நம்பிக்கைகள்  போன்ற பலவற்றையும் தாண்டி இன்றைக்கும் படிக்கக்கூடிய கதைகளாக இருக்கின்றன. தமிழ் மொழிபெயர்ப்பும் நன்றாக உள்ளது. கதை ஓட்டம் எந்தவிதத்தடங்கலும் இல்லாமல், தமிழ் எழுத்தாளர் கதைபோலவே ஓடுவது  மொழிபெயர்ப்பாளர் புலவர் சொ.ஞானசம்பந்தன் அவர்களின் வெற்றி எனலாம். இந்தக் கதைகளைப் படித்தபிறகு, மாப்பசானை முழுவதுமாகப்படிக்கவேண்டும் என்ற ஆவல் பிறந்திருக்கிறது. பிரெஞ்சு மொழி தெரிந்தால், மூல மொழியிலேயே மாப்பசானை படிக்கலாமே என்ற எண்ணமும் பிறக்கின்றது.

Wednesday, 25 February 2015

படித்த செய்தியில் பிடித்த செய்தி (1) : கற்றதனால் ஆய பயனென் கொல்

படித்த செய்தியில் பிடித்த செய்தி (1) : கற்றதனால் ஆய பயனென் கொல்

கல்வியின் அவசியத்தை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் 10 அதிகாரத்தில் தெளிவு படுத்தியுள்ளார்.  உலக நாகரிக வளர்ச்சியை எடுத்துக் கொண்டால் கல்வி அறிவு வளர வளர நாகரிகமும் வளர்ச்சியடைந்து வந்துள்ளது. அய்ரோப்பிய கண்டங்களில் கல்விமுறை, அந்த மக்களை மேலும் மேலும் அறிவுடை யோராக மாற்றியது இது சுபாஷ் சந்திர போஸ் ஆஸ்திரியாவில் மருத்துவ சிகிச் சைக்காக தங்கி இருந்தபோது கூறியது.   அப்படி என்னதான் இருக்கிறது அய்ரோப்பிய கல்விமுறையில்? உலக அளவில் கல்வியின் கலங்கரை விளக்கம் என அழைக்கப்படுவது  பின்லாந்து தான். அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்ட நிலை யில் இருந்தாலும், அவர்களால் கல்வியில் பின்லாந்துடன் போட்டிபோட முடியவில்லை.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (Oced-Organisation for economic co-operation and Development) என்பது வளர்ச்சி யடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள் நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப் போது நடைபெறும். இதற்கு - - PISA-Programme for International Students Assessment என்று பெயர். மற்ற நாடுகள் விருப்பப்பட்டால், இதில் சேர்ந்துகொள் ளலாம். இந்த ஆய்வில் பின்லாந்து எப்போதும் முன்வரிசையிலேயே இடம் பிடிக்கிறது.

பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்கு கிறது. சுமார் 6 வயது வரையில் ஆன அனைத்து காலமும் கற்றலுக்கான துடிப் புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ் சிறு மூளை, தனது சுற்றுப்புறத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் கற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுகிறது.

ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தைக்கு கல்வியுடன் இசை, ஓவியம், விளையாட்டு, என அவரவர்களுக்கு பிடித்தமான பாடங்களைத் தேர்ந் தெடுத்து படிக்க முழு சுதந்திரம் உண்டு. பெற்றோர்கள்  தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும் பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப் பித்து தெரிந்து கொள்ளலாம்.

1. கற்றலில் போட்டி கிடையாது என்ப தால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர் களுக்கு இல்லை.

2. சக மாணவர்களைப் போட்டியாளர் களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை.


3. இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப் படுவது இல்லை.

5. ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத் துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்.


6. ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது.


7. முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம்.  அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி அங்கு உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக  பின்லாந்தில் 99 சத விகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வி யைப் பெற்றுவிடுகின்றனர்.


8. அதில் 94 சதவிகிதம் பேர் உயர் கல்விக்குச் செல்கின்றனர். பயிற்சி வகுப்பு கள், சிறப்பு வகுப்புகள் போன்றவை பின் லாந்து கல்வி முறையில் கிடையாது.


9. தேர்வுகளை அடிப்படையாகக் கொள்ளாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உல களாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக் கின்றனர். இது எப்படி என்பது கல்வி யாளர்களுக்கே பெருங்கேள்வியாக எழுந்தது. அந்தக் கேள்விக்கான விடை தேட அய்.நா சபை ஆய்வு ஒன்றை நடத்தியது.

உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, அய்க்கிய நாடுகள் சபை ஒவ் வோராண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது. பின்லாந்து கல்விமுறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர்.

உல கின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதி நிதிகள் ஒவ்வோராண்டும் செல்கின்றனர். நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிச மான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது.

இத்தகைய சிறந்த கல்விமுறையை உருவாக்கியதிலும், பராமரிப்பதிலும் பின் லாந்தின் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.

பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, சமூகத்தில் மிகுந்த மதிப்பு உடையது. அரசின் கொள்கை வகுக்கும் முடிவு களில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்குண்டு. மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ்நாள் லட்சியம்.  பள்ளிக்காலங்களில் இருந்தே தனக்கான தகுதிகளை வளர்த் துக்கொள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் முழு உரிமை உண்டு.  பின்லாந்தின் கல்வி முறையின் தாக்கம். டென்மார்க், ஆஸ் திரியா, சுவிசர்லாந்து, நெதர்லாந்து, இத்தாலி, ஜெர்மன், நார்வே,ஸ்வீடன் போன்ற நாடுகளிலும் கடைப்பிடிக்கப்படு கிறது.   இப்பொழுது புரிகிறதா அவர்கள் கற்றதனால் எழுந்த பயன் என்னவென்று
: சரவணா ராஜேந்திரன்
நன்றி : விடுதலை 22.02.2015



Read more: http://www.viduthalai.in/page1/96684-2015-02-22-10-29-45.html#ixzz3SfdV45Bf

Monday, 23 February 2015

நிகழ்வும் நினைப்பும் (35) : வாசிப்போர் களத்தின் சிறப்புக் கூட்டம்

மு.சங்கையா 
நிகழ்வும் நினைப்பும் (35) : வாசிப்போர் களத்தின் சிறப்புக் கூட்டம்

சுப.முருகானந்தம்
வி.பாலகுமார்
 கவிஞர் க.சமயவேல் 

 க.தெய்வேந்திரன்
சு.கருப்பையா 





                              மதுரை பி.எஸ்.என்.எல். வாசிப்போர் களத்தின் சிறப்புக்கூட்டம் 21.02.2015 மாலை 6 மணியளவில் மதுரை அண்ணாநகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் ஸ்டார் ரெசிடன்சியில் ரிஷ்வாந்த் ஹாலில் நடைபெற்றது. தோழர்கள் மு.சங்கையா. சு.கருப்பையா, வி.பாலகுமார் என்று பலரின் முயற்சியால் நடைபெற்ற சிறப்புக்கூட்டம் என்றாலும் , முழு முயற்சியாக இதற்கு பல வேலைகளைச்செய்து  நடத்தியே தீருவது என்று செயல்பட்டவர் திரு க.தெய்வேந்திரன்(SDE )  அவர்கள். SNEA தொழிற்சங்கத்தின் மாவட்டச்செயலாளர் அவர், திரு. க.தெய்வேந்திரன் மிகச்சிறந்த பேச்சாளர் என்பது எல்லாருக்கும் தெரியும் ஆனால் அதனைவிட மிகச்சிறந்த ஒருங்கிணைப்பாளர் (Organiser) அவர். மனிதர்களுக்கிடையே உள்ள வேற்றுமையை ஒதுக்கித்தள்ளிவிட்டு, மிகவும் நேர்மறையாக அணுகக்கூடியவராக அவரை நான் உணர்கின்றேன்.எப்போதும் சிரித்த முகமும், உதவ நீளும் கரங்களும்  , மனிதர்களை இணைக்கும் மனமும் உடையவராக இருக்கும் க.தெய்வேந்திரன் வாசிப்போர் களத்தின் மூலமாக கிடைத்த மிகப்பெரிய நட்பு  எனக்கு.அதனைப்போலவே திரு.வி.பாலகுமார் அவர்களும். அண்ணன் சு.கருப்பையா அவர்களை 30 ஆண்டுகளாக அறிவேன், அதனைப்போலவே தோழர் மு.சங்கையா அவர்களும் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமானவர்.   எனக்கு(வா. நேரு ) 'சூரியக்கீற்றுகள்' கவிதை தொகுப்பிற்காக பாராட்டையும், கவிஞர் க.சமயவேல் அவர்களுக்கு அவருடைய ' பறவைகள் நிரம்பிய முன்னிரவு ' என்னும் கவிதைத்தொகுப்பிற்காகவும் நடந்த பாராட்டு விழா என்றாலும் பலரும் தங்கள் இணையரோடு வந்து கலந்து கொள்ள ,  சிறப்புக்கூட்டம் ஒரு குடும்பவிழாவாகவும் அமைந்தது மகிழ்ச்சி.

Sunday, 22 February 2015

நிகழ்வும் நினைப்பும் (34) : நீயா நானா ? 22.02.2015 நிகழ்ச்சி -விஜய் டி.விக்கும் , திரு. கோபிநாத் அவர்களுக்கும் பாராட்டுக்கள் :

நிகழ்வும் நினைப்பும் (34) :   நீயா நானா ? 22.02.2015 நிகழ்ச்சி -விஜய் டி.விக்கும் , திரு. கோபிநாத் அவர்களுக்கும் பாராட்டுக்கள் :

                     நீயா நானா நிகழ்ச்சியை 'திருக்குறள் பற்றித்தெரியுமா உங்களுக்கு ? ' என்னும் தலைப்பில் நடத்திய விதம் அருமை. திருக்குறளை மக்களிடம் கொண்டுபோய்ச்  சேர்த்தது திராவிட இயக்கங்கள்தான் என்பதனை மிக அழுத்தம் திருத்தமாக முன்னுரையில் திரு கோபிநாத் கூறினார்.நன்றி கோபிநாத் அவர்களே நன்றி, உண்மையை உரக்கச்சொன்னதற்கு . அன்று முதல் இன்று வரை தந்தை பெரியார் முதல் இன்று வாழும் டாக்டர் கலைஞர், ஆசிரியர் அய்யா  கி.வீரமணி அவர்கள்  வரை அவர்களின் உணர்வோடும் உயிரோடும் கலந்த இலக்கியமாக திருக்குறள்தான் இருக்கிறது.திருக்குறளை விரும்பாத திராவிடர் இயக்கத்தவர் எவரும் கிடையாது.அழகியல், கருத்தியல், இன்றைய தேவை எனப் பல வினாக்களோடு மாணவர்கள், ஆசிரியர்கள் , பல துறை சார்ந்தவர்கள் எனத் திருக்குறளை விரும்புகிறவர்களை எல்லாம் ஓரிடத்தில் அமரவைத்து , அவர்களின் கருத்துக்களைப் பகிர்ந்த தன்மை மிக நன்றாக இருந்தது.

  உங்களுக்குப் பிடித்த திருக்குறள் உவமை என்ன என்னும் வினாவிற்கு  பங்கு பெற்ற ஒவ்வொருவரும் மிகவும்  நுட்பமாக  பதிவு செய்தனர்.  "நீட்டலும் மழித்தலும் வேண்டா" என்னும் உவமையை ஒருவர் அழகாகச்சொன்னார். பசியின் கொடுமை பற்றிச்சொல்லும் குறளை ஒரு தோழியர் கூறினார். திருவள்ளுவர் காலம்  முதல் இன்றுவரை பசிதான் பிரச்சனை என்பதனை "நெருப்பில் தூங்கினால் கூடத்தூங்க முடியும், பசியினால் தூங்க முடியாது." என்பதையும் "நேற்று வந்த பசி ,இன்று வந்து விடுமோ " என்று பயப்படுதலையும் குறிப்பிட்டார். ஒரு உவமைப் படுத்தப்படுகிற உவமை. எனச் சுட்டியது  அருமை ."இளைதாக முள்மரம் கொல்க..",அம்பு நேராக செம்மையாக இருக்கிறது. யாழ் பார்க்க அழகானது .அம்பு கொல்லும், யாழ் இனிமை கொடுக்கும் , அழகாக இருக்கிறது கெடுதல் செய்யலாம், தாறுமாறாக இருப்பது நல்லது செய்யலாம் " என்பது போன்ற கருத்துக்கள் வந்தன.

                 காமத்துப்பாலைப் பற்றி பலரும் தங்கள் கருத்துக்களை கூறினர். அதுவும் இளம்பெண் ஒருவர்(கயல்)  ஊடல் பற்றியும் கூடல் பற்றியும் சொல்லும் கடைசித்திருக்குறளை மிக நன்றாக கூறினார். நான் சைட் அடிக்கும்போது உணர்ந்தது என்று ஒருவர் " யான் நோக்குங்கால் " என்னும் குறளைக் கூறினார். காமத்துப்பாலில் உள்ள "ஒரு கண் நோய், மற்றொன்று நோய் தீர்க்கும் மருந்து." என்பதை ஒருவர் நாணத்தோடு குறிப்பிட்டார். திருக்குறளில் திருவள்ளுவர் காமத்துப்பால் எழுதும்போது பெண்ணாகிவிடுகின்றார்.மிகவும் உளவியல் சார்ந்து எழுதியுள்ளார் என்றார் ஒருவர்.
         உங்கள் வாழ்க்கையில் மிகவும் கவர்ந்த குறள் அல்லது நீங்கள் கடைப்பிடிக்கும் ஒரு குறள் என்ற வினாவும் அதற்கான விடையும் மிகவும் ஈர்ப்பாக இருந்தது. "வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்" என்னும் குறளை குறிப்பிட்டு இன்றைய ஆளுமைத்திறன் வகுப்புகளில் எடுக்கப்படும் - மன வலிமை பற்றிக் குறிப்பிட்டார். ' இடிப்பாரை இல்லா ..." " சொலல் வல்லன் சோர்விலான்" , 'உவப்பத்தலைக் கூடி உளப்பிரிதல்' ' பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் ' போன்ற குறள்களின் விளக்கங்களைச்சொன்னார்கள்.

               அறம் பற்றிய விளக்கம் ஒவ்வொருவரும் சொன்னார்கள் . கன்பூசியஸ் கருத்தோடு ஒப்பிட்டு ஒருவர் சொன்ன " ஈன்றா: பசி காண்பாள் ஆயினும் " விளக்கம் அருமை. நட்பு பற்றிய விளக்கம் , 50 குறள்கள் நட்பிற்கு என்னும் விளக்கம் போன்றவையும் உரையாடல்களில் வந்தது. ஒரு இளைஞர் " அழுக்காறு  அவா வெகுளி இன்னாச்சொல் நான் கும்
இழுக்கா இயன்றது அறம் : என்பதற்கு விளக்கம் தந்தார்.  டால்ஸ்டாய் கடிதம் மூலம் காந்தியடிகள் திருக்குறளின் பெருமையை அறிந்ததை,-தமிழைப்படிக்க விரும்புகிறேன் என்று காந்தியடிகள் சொன்னது ஏனென்றால் திருக்குறளை மூலமொழியில் படிக்க விரும்புகின்றேன். திருக்குறளின் அறம் என்பது ரிலேட்டிவ் சிந்தனை , திருக்குறளின் ஒட்டுமொத்த சிந்தனையே  ரிலேட்டிவ் என்று
சொன்னவிதம் அருமையாக இருந்தது.  

                     திருக்குறள் கூறும் அரசியல் பற்றிச்செய்திகள், தந்தை பெரியாருக்குப் பிடித்த குறளான "குடி செய்வார்க்கு இல்லை பருவம்" என்னும் குறளின் விளக்கம் .  பெண் என்று வரும்போது -பாலியல் சமம் என்று வரும்போது  சில குறளின் கருத்தினை ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்னும் பெண்ணிய எழுத்தாளரின் கருத்து வந்தது.

                 இன்றைய சூழலில் திருக்குறளின் தேவை, பொருட்பாலில் பிடித்த குறள் பற்றிய பகிர்தல். திருக்குறள் என்பது ஒரு நிராயுத பாணியின் ஆயுதம் என்றார்  மோகன் . ஒரு மனிதனின் வெளித்தோற்றத்தில் இருக்கிறது என்று எல்லோரும் சொல்ல, " வெள்ளத்தனைய மலர் நீட்டம்" என்பதனைச்சொல்லி உள்ளத்தனையது உயர்வு,கேட்டலின் சிறப்பு

                " 2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஒளி. பெருமித உணர்ச்சி. " என்றார் ஒருவர்.மனதிலும் ,மூளையிலும் குண்டு வெடிப்பதைப்போல வெடிக்கக்கூடியது திருக்குறள். தன்னைச்சுற்றி இருக்கும் பல சங்கிலிகளில் இருந்து வெளியே வருவான் என்றார் ஒருவர். எந்த மொழியில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டாலும் அந்த மொழியில் படிப்பவரை திருக்குறள் மாற்றும் என்றார். திருக்குறள் ஆய்வு இருக்கைகள் பற்றிய செய்தி. குறளுக்கு அபிநயம் பிடித்தார் ஒருவர். புதுமையாக இருந்தது. .  திருக்குறள் எண்ணைச்சொன்னவுடன் , திருக்குறளை அழகாகச்சொன்னார் எல்லப்பன். வாழ்த்துக்கள்
                     மிக நல்ல நிகழ்ச்சி. ஊடகங்கள் இப்படியெல்லாம் பயணிக்குமா ? இப்படியெல்லாம் அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நெகிழ வைத்த நிகழ்ச்சி. உளமார்ந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் திரு.கோபிநாத் அவர்களுக்கும் , விஜய் தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும் ,மிக ஈடுபாட்டோடு கலந்துகொண்ட பங்கேற்பாளர்களுக்கும். 

Thursday, 19 February 2015

நிகழ்வும் நினைப்பும் (33): உழைக்கத்தானே வேண்டும் ......

நிகழ்வும் நினைப்பும் (33): உழைக்கத்தானே வேண்டும் ......
மதுரை அகில இந்திய வானொலி நிலையம் - 28.02.2015 சனிக்கிழமை காலை 7.05 மணிக்கு புத்தக விமர்சனம் பகுதியில் " :கனவு ஆசிரியர்".   என்னும் புத்தகம் விமர்சனத்திற்கு என்னால் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் தொகுப்பாசிரியர் திரு. க. துளசிதாசன். வெளியிட்டவர்கள் : புக்ஸ் பார் சில்ரன் -பாரதி புத்தகலாயத்தின் ஓர் அங்கம் ,சென்னை-18  முதல் பதிப்பு: மே 2012  விலை ரூ 90 - மொத்த பக்கங்கள் : 144. எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களுள் ஒன்றான இந்தப்புத்தகத்தின் விமர்சனத்தை வாய்ப்பிருந்தால் கேட்டுப்பாருங்கள். எழுத்தாளர்கள் அசோகமித்திரன், பிரபஞ்சன், பொன்னீலன், பேரா.ச.மாடசாமி, ச.தமிழ்ச்செல்வன், பாமா, ஞாநி, ஆயிஷா இரா.நடராசன், த.வி.வெங்கடேஸ்வரன்,ஜாகீர் ராசா, பவா.செல்லத்துரை ஓவியர் டிராட்ஸ்கி , வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்.,ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். ,பேரா.இரத்தின நடராசன், நாடகக் கலைஞர் பிரளயன் போன்றோரின் கட்டுரைகளை எனது பார்வையில் சுருக்கமாகக் கொடுக்க முயற்சி செய்திருக்கின்றேன். கேட்டுப்பாருங்கள், கேட்டுவிட்டு முடிந்தால் கருத்தைச்சொல்லுங்கள் எனக்கு.

                             புத்தக மதிப்புரை , 4 புத்தகங்களை ஒன்றாக , ஒரே நேரத்தில் பதிவு செய்ய பேச வேண்டியிருக்கிறது என்று என் மகளிடம் சொன்னேன். நல்லதுதானே அப்பா , என்றார் என் மகள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகமாக பதிவு செய்தால் நன்றாக இருக்கும் என்றேன் நான் . என் மகள் சிரித்துவிட்டு, அப்பா, தொலைக்காட்சி பேச்சைப் பதிவு செய்வதைப் பற்றி சொல்லியிருக்கின்றீர்களே, மறந்து விட்டீர்களே என்றார். என்ன ? என்றேன். அய்யா சுப.வீ அவர்கள் கலைஞர் டி.வி.யில் பேசுவது, இறையன்பு சார் புதுயுகம் டி.வி.யில் பேசுவது, அய்யா கு.ஞானசம்பந்தன் ஜெயா டி.வி.யில் பேசுவது எல்லாம், ஒரே நாளில் உட்கார்ந்து பேசிப்பதிவு செய்து  பத்து நாட்கள், பதினைந்து நாட்களுக்கு பேசி விடுவார்கள் என்று சொல்லியிருக்கின்றீர்கள். அவர்கள் 10 நாட்கள், பதினைந்து நாட்களுக்கு பேசுவதை ஒரே நாளில் பேசி விடுகின்றார்கள், நீங்கள் ரேடியோவில் நாலு நாட்களுக்கு பேசுவதை ஒரே நாளில் பேசமாட்டீர்களா ? , ஊடகத்தில்  பேச வேண்டும் என்றால் உழைக்கத்தானே வேண்டும் என்றார். ஆமாம் என்று சொல்லிவிட்டு நான் அமைதியாகி விட்டேன். பிள்ளைகளிடம் ரொம்ப விரிவாகப் பேசக்கூடாது போல....

Sunday, 15 February 2015

அண்மையில் படித்த புத்தகம் :' மஞ்சத்தண்ணி ' சிறுகதைத் தொகுப்பு-உரப்புளி நா.ஜெயராமன்.

அண்மையில் படித்த புத்தகம் :'  மஞ்சத்தண்ணி ' சிறுகதைத் தொகுப்பு .
ஆசிரியர் உரப்புளி நா.ஜெயராமன்,....9486101986
பதிப்பகம் : அட்சயா பதிப்பகம், பரமக்குடி.
வெளியிடப்பட்ட ஆண்டு மார்ச். 2014.
மொத்த பக்கங்கள்                           :   128 விலை  ரூபாய் 70
                                                  இத்தொகுப்பின் ஆசிரியர் திரு உரப்புளி நா.ஜெயராமன் தொலைபேசித்துறையில் 1971-சேர்ந்து, 2012-ல் பரமக்குடியில் சப்-டிவிசனல் என்ஜீனியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார். 1971-முதல் 2011 வரை ஒரு நாற்பதாண்டு காலத்தில் அவர் எழுதிய கதைகளுள் பதினொன்றைத் தேர்ந்தெடுத்து இத்தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
"கதை சொல்வதும் , கதை கேட்பதும் மனித குலத்தின் இயல்பு. தத்தம் காலத்திற்கேற்பக் கதை சொல்வதும், கேட்பதும் மாறுபட்டுக்கொண்டே இருக்கும். நண்பர் திரு. நா.ஜெயராமன் சமுதாயத்தை மையமாகக் கொண்ட சிறுகதைகளை எழுதுவதிலும் , சமுதாயம் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் காட்டி விழிப்பூட்டுவதிலும் , தீர்வுகளைக் காட்ட முயற்சிப்பதிலும் முற்பட்டிருப்பதை இச்சிறுகதைத் தொகுப்பு வெளிப்படுத்துகிறது" என அணிந்துரையில் முனைவர் மு.அருணகிரி குறிப்பிட்டுள்ளார்.

" வாழ்வு எப்போதும் புதிரும் , புன்னகையும் நிரம்பியதாகவே இருக்கிறது. புதிர்களின் வழி விழுகிற முடிச்சுக்களின் அதிர்வுகளும், புன்னகையின் ஊடே மிளிர்கிற சந்தோஷங்களுமாய் நம்மைக் கைப்பிடித்திருக்கிற வாழ்வை, படைப்புக்களின் வழியாக தரிசிக்கக் கிடைக்கிற தருணங்கள் எல்லாம் மகத்துவமிக்கதாக மாறி விடுகின்றன. உரப்புளி நா. ஜெயராமன் அவர்களின் இத்தொகுப்புக் கதைகளைப் படிக்க நேர்ந்த தருணமும் , எனக்கு அவ்வாறகத்தான் அமைந்தது " , " தினமும் மக்களைச்சந்திக்கும் தொலைபேசித்துறையில் பணியாற்றியவர் என்பதால் , எழுதுவதற்கான விஷயங்களை யதார்த்த வாழ்விலிருந்தே எடுத்துக்கொண்டிருக்கிறார். அதனாலேயே மனித இயல்புகள் பலவற்றைக் கூர்மையாக வெளிப்படுத்தும் நுட்பம் செறிந்த அழுத்தமான சிறுகதைகள் , அவரிலிருந்தே வெளிப்பட்டிருக்கின்றன. சமூக மாற்றத்திற்கான கனவுகளுக்கும், யதார்த்தத்திற்குமான பெரும் இடைவெளியை இட்டு நிரப்ப முய்ற்சித்தபடியே இருக்கிறது சமூக மேன்மைக்கு விழையும் அவரது மனம் "  என எழுத்தாளர் பா.உஷாராணி தன்னுடைய அணிந்துரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.

                 சிறுகதை என்பது ஒரு நிகழ்வை எடுத்துக்கொண்டு , அந்த நிகழ்வை விரிவாகவும்,வாசகர் மனதில் பதியும்படியாகவும் சொல்லும் எழுத்துக்கலையாகும் .   . இந்தச்சிறுகதைத்தொகுப்பின் தலைப்பாக அமைந்துள்ள ' மஞ்சத்தண்ணி ' , இத்தொகுப்பின் முதல்கதையாக அமைந்துள்ளது. ஆசை, ஆசையாய் ஆட்டுக்குட்டியை வளர்க்கும் சரசு, ஆட்டுக்குட்டிக்கு ராசுக்குட்டி எனப்பெயர் சூட்டி , அழைத்து அழைத்து விளையாடி மகிழும் சரசு எனச் சிறுமி சரசுவுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் உள்ள பாசப்பிணைப்பை சித்திரம் போல வாசகர்கள் மனதில் தீட்டுகின்றார் இக்கதையாசிரியர். குலசாமி கோயிலில் ஆட்டை வெட்டப்போகிறார்கள் என்று அறிந்து கொண்ட சரசு, ஆடு தண்ணீர் தெளித்தவுடன் சிலிர்க்கவில்லையென்றால், வெட்ட மாட்டார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு, ஆட்டின் மேல் கொஞ்சம் கொஞ்சமாக தினமும் தண்ணீர் தெளித்து , பழக்கப்படுத்தி, ஆட்டை வெட்டக்கொண்டுபோகும் நாளில் ஆடு வெட்டப்படாமல் தப்பிக்க வழி செய்கின்றாள். ஆடு வெட்டமிடுத்திற்கு கொண்டுசெல்லப்பட்டவுடன் மயக்கமடையும் சரசு, ஆடு உயிரோடு வந்து தன்னை வந்து தொட்டவுடன் கண் திறக்கிறாள், உயிர் பிழைக்கிறாள். கிராமத்துப்பழக்க வழக்கங்கள், ஆடு வெட்டப்படும் முறை, கெடாய் வெட்டி பொங்கல் வைக்கும் நிகழ்வு போன்றவற்றை கண் முன்னே நிறுத்தும் அருமையான கதையாக இக்கதை உள்ளது எனலாம்.

                  உழைக்கும் தொழிலாளி சிலம்பனுக்கு தண்ணீர் கொடுத்தால் தீட்டாகிவிடும் என்று சொல்லும் தெய்வானை அம்மாள் பற்றியும் , காக்கைக்கு உணவிடும் அவர் மனிதனுக்கு உணவு தேவை,தண்ணீர் தேவை என்பதைப் பற்றி உணராததைக் கூறும் ' மகனுக்குத் தெரிந்தது ...' என்னும் கதை மனதில் நிற்கிறது.  கிராமத்தில் டெலிபோன் இல்லாததால் அந்த ஊர் மக்கள் படும் வேதனை, கிராமத்தில் டெலிபோன் வைப்பதற்க்காக தெருத்தெருவாக வாடகை வீடு கேட்டு அலையும் தங்கச்சாமி, டெலிபோன் எக்சேஞ் தனது கிராமத்திற்கு வரவேண்டும் என்பதற்காக தனது பூர்விக வீட்டையே வாடகைக்கு கொடுக்கும்  தங்கச்சாமி, பூர்வீக வீட்டைக் கொடுத்ததால் வருடம் ஒருமுறை சாமி கும்பிட வரும் தனது தம்பிகள், தம்பி மனைவிகளிடம் வசவு வாங்கும் தங்கச்சாமி, அதனால் ஏற்படும் மோதலில் தலையில் காயப்பட்டு மயக்கமாகும் தங்கச்சாமி என தங்கச்சாமி எனும் கதாபாத்திரத்தின் மேன்மைக்குணங்களால் பின்னப்பட்டிருக்கும் ' சாமி வீடு ' என்னும் கதை , பொது நன்மைக்காகத் தன் நலத்தை விட்டுக்கொடும் மனிதர்கள் , உறவுகளிடம் ஏற்கும் ஏச்சுக்களை கோடிட்டுக்காட்டுகிறது. " நீங்க குலதெய்வம் கும்பிடுறதன்னு ஒரு முறை அவர் வீட்டுக்கு வர்றீங்க. நாங்க எல்லாரும் அவரைத்தான் குலதெய்வம்னு வருஷம்பூரா கொண்டாடுறோம். இந்த ஆண்டியூரு, ஒளியூரு, இருமுடிச்சாத்தான், குயவசேரி, கீரைக்கொல்லை, அய்யனேந்தல் இந்தக் கிராமமெல்லாம் இப்ப நல்லா இருக்குன்னா இவருதான் காரணம். இவரு டெலிபோன் எக்சேஞ் வைக்க இடம் கொடுத்ததாலே ஐம்பதே நாளில் நம்மளுடைய அத்தனை ஊருக்கும் டெலிபோன் கிடைச்சிடுச்சு. ஆண்டியூரிலே கள்ளச்சாராயம் வித்தவனுக தொழிலை விட்டுவிட்டு ,எஸ் டி டி , பி.சி.ஓ வச்சு நல்லாப் புழைச்சுக்கிட்டானுங்க. எங்க ஒளியூரிலே வருஷத்துக்கு ஒரு உசிராவது பிரவசத்திலே போயிரும். இப்ப ஒரு போன்ல ஊருக்கு டாக்ஸி வந்துருது. ஒளியூரிலே இண்டர்நெட் மூலமா புருஷனுங்க, பெண்டாட்டிகளோடு தினமும் பேசிக்கிறானுங்க. தவிப்பு இல்லை. அழுகை இல்லை ... " என்று எழுத்தாளர் அடுக்கும் காரணங்கள் கதையோடு ஒட்டி அதே நேரத்தில் தொலைத்தொடர்பு வசதிகளால் கிராமங்களில் ஏற்பட்ட மாற்றங்களை வரிசைப்படுத்துவது அருமை.

                   " ஆயி ...பொட்டி வாங்கலியோ ..ஆயி ! " என்று ஆரம்பிக்கும் பசிக்கொடுமை சிறுகதை , படித்து முடித்தபின்னும் மனதை விட்டு அகலாத கதையாக இருக்கிறது. ' அந்த ஒரு சேலையில் தன் பெண்மையைப் பூரா மறைக்க வேண்டும். தன் பிள்ளைக்கும் அதே சேலைக்குள் ஒரு தொட்டில் கட்டிக்கொள்ள வேண்டும். ரவிக்கை செய்யும் பணியையும் அந்த்ச்சேலை செய்ய வேண்டும். குழ்ந்தையை முதுகில் ஒரு விதத் தூளிவைத்துச் சுமந்துவரும் ஜப்பானியப்பெண்களின் பழக்கத்தை , அவள் நினைவுபடுத்துகிறாள். " என்று பக்கம் 73-ல் அந்த நார்ப்பெட்டி விற்கும் பெண்ணின் தோற்றத்தையும் , ஏழ்மையையும் , பசிக்கொடுமையையும் விவரிக்கும் நிகழ்வுகள் ஒரு கைதேர்ந்த புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர்களின் எழுத்துக்களை நினைவுபடுத்துகின்றன. வசதியான வீடுகளுக்கு மத்தியில் கூவிக் கூவி நிற்கும் அவளது கோலத்தை, 4 ரூபா பெறுமானமுள்ள பெட்டியை எட்டணாவிற்கு கேட்கும் பெண்ணின் பணக்காரத்தனத் தோரணையை " பத்துப்படிப் பொட்டியை வச்சுக்கிட்டு இந்தத் தெருப்பூரா அலைஞ்சாலும் எவளும் பத்துப்பிடி போட்டுக்கூட வாங்க மாட்டா. என்னமோ...ஒன்னைக்கூப்பிட்டதும் ஒன் நிலையைப்பார்த்து பரிதாபம். முடிவாச்சொல்றேன். நீ வச்சிருக்கிற அலுமனியச்சட்டி நிறையப் பழசு போடுறேன். ஆணம் ஊத்துறேன். காசு எட்டணா கையிலே வச்சுக்க " என்று விவரிக்கின்றார். பேரம் பேசும் பெண்ணிடம் , அழும் குழ்ந்தையின் பசி பொருட்டு ஒத்துக்கொள்ளும் அவளிடம் உழைப்பாளி " உழைக்கிறவனகளுக்குத்தானே உழைக்கிற பொருள் அருமை தெரியும் . என் கிட்டே கொடுத்திருந்தா நாலு ரூபாயும் கம்மங்கஞ்சியும் கொடுத்திருப்பேன் " என்று சொல்ல, சேரித்தெருவுக்கு போக ஆசைப்பட்டாலும் பெண்ணிடம் ஒத்துக்கொண்டதற்காக காத்து நிற்க, தட்டுத் தடுமாறி கீழே விழுந்த அந்த வய்தான பெண், சகுனம் என்று திட்ட , நாலு ரூபாய்க்கு பெட்டியை வாங்கிக்கிறேன் என்று சொன்ன பெரியவரின் வீடு நோக்கி போவதாக இந்த பசிக்கொடுமை கதை முடிகிறது. பசிக் கொடுமையை அனுபவித்தவர்களுக்குத்தான் பசியின் கொடுமை புரியுமென்பது மிக அழுத்தம் திருத்துமாக இந்தச்சிறுகதையின் மூலமாக  ஆசிரியரால் கொடுக்கப்பட்டிருக்கிறது.

                 மணல் அள்ளும் குவாரிகள் , அதற்கு துணை போகும் அரசியல்வாதிகளைப்பற்றிப் பேசுகிற , ஒரு நல்ல காரியத்திற்காகப் போராடுகிற மருதமுத்து வாத்தியாரைப் பற்றிப் பேசுகிற ' விடியுமா ' என்னும் கதை எதார்த்தமாகவும், வரப்போகிற ஆபத்துக்களை மக்களுக்கு எடுத்துச்சுட்டுவதாகவும் இருக்கிறது. சுற்றுச்சூழல் கருத்துக்கள் நிறைந்த,'நீரோடை நிலங்கிழிக்க, நெடுமரங்கள் நிறைந்த பெருங்காடாக்க ' என்று புரட்சிக்கவிஞர் சொன்னதைபோல இயற்கை எழில்கள் எல்லாம் ,சில சுய நலம் பிடித்த மனிதர்களால் அழிக்கப்படும் அவலம் பற்றிச்சொல்லும் கதையாக  இந்த 'விடியுமா ? ' என்னும் கதை இருக்கிறது. " எங்க கிராமத்தருகே குவாரி வந்து என்னென்ன ஆச்சு தெரியுமா ? ஆத்துக் கரைக்கு கொஞ்சம் தள்ளி , கெட்டியாய்க் கட்டிய களம் பாளம் பாளமா தகர்ந்துருச்சு. காசுக்கு ஆசைப்பட்ட பயலுக, தங்களோட கடலை விளையுற வண்டல் காட்டு மணலை அள்ளச்சொல்லி காசாக்க, ஆறு அகண்டு போச்சு. பேச்சுக்கு ஒரு மீட்டர் ஆழந்தான் மணல் அள்ளுறம்ன்னு சொல்லிட்டு, கடைசியா களிமண் தெரியிற அளவுக்குத் தோண்ட கழுங்கு தாழ்ந்து போச்சு. செருப்புக்குக் காலை வெட்டினமாதிரி நல்லா இருந்த கழுங்கை வெட்டிக் குறைச்சாங்க. ஆத்துலே தண்ணி வந்து கால்வாயிலே பாஞ்சு , கம்மாய் நெறையணும். இவுங்க பண்ணுன கூத்துக்கு , கம்மாய் நெறைஞ்சாத்தான் , தண்ணி ஆத்துலே பாயும் போலிருக்கு " என்று கிராமத்து மொழியாடும், கிராமத்து மண் சார்ந்த வர்ணனைகளோடும் தொடரும் சிறுகதை நல்ல ஒரு விழிப்புணர்வுக் கதை எனலாம்

                        முழுக்க தொலைபேசி நிலையங்கள், அதில் உள்ள பல்வேறு டவர்கள், டவர்களின் வகைகள், ஆண்டெனாக்கள் என ஆங்கிலச்சொற்கள் பல கலந்த் கதையாக 'கால் முளைக்கும் மனசு ' என்னும் கதை உள்ளது. ஜீனியர் டெலிகாம் ஆபிசர், அருமை நாயகம், சப் டிவிசனல் இன்ஜீனியர் செண்பகராமன், டிவிசனல் இன்ஜீனியர் ராஜதுரை அவர்களின் செயல்பாடுகள், கிராமப்புறங்களில் இருக்கும் சாதிப்பிரச்சனைகள்,சாதி சார்ந்த இளைஞர்களின் முரண்பாடுகள், செயல்பாடுகள், யாரும் முன்வராத நேரத்தில் முன் வந்து பொதுத் தொலைபேசிக்கு பொறுப்பேற்கும் மாற்றுத்திறனாளி தங்கராசு என விரிகிறது இக்கதை. வில் போன் தொழில் நுட்பம் பற்றியெல்லாம் விவரிக்கும் இக்கதை ' இந்தப்பொதுத் தொலைபேசியை பொறுப்பா வச்சு நடத்துறவங்களுக்கு வசூலாகிற பில் தொகையிலிருந்து கமிசன் தர்றோம். இந்தப்போனிலிருந்து உங்க பயிருக்கு என்ன மருந்தடிக்கணுங்கிறதைப் பத்தி கேக்கலாம். ...பத்து வைக்கோல் படப்பு எறிஞ்சு சாம்பாலாகிக் கிடக்கிறதையும் வழியிலே பார்த்தேன். தீயணைப்பு நிலையத்துக்குப் போன் செய்தோம்னா இவ்வளவு சேதம் ஆகியிருக்காது " என்று பொதுத்தோலைபேசியைக் கிராமத்தில் எப்படி எப்படி எல்லாம் நன்மையாக பயன்படுத்தலாம் என்று பட்டியலே சிறுகதையின் வாயிலாக இந்த நூலாசிரியர் ந.ஜெயராமன் கொடுத்திருக்கின்றார்

                      தன்னுள் மிக அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்திய கதை என பா.உஷாராணியால் சுட்டப்படும் 'காறிச்சாமியும் வேயன்னாவும் ' என்னும் கதை இன்றைய எதார்த்தம். காலி இடத்தை பிளாட்டுகளாகப்போட்டு விட்டு, பிளாட்டின் அனுமதிக்காக காட்டப்பட்ட கோவில் மற்றும் பூங்கா நிலத்தையும் விலைக்கு விற்றுவிடும் ரியல் எஸ்டேட் விற்பனையாளர் வேல்முருகன் என்னும் வேயண்ணாவின் பக்தி வேடம் கபடமானது என்பதனை மிகக் கவனமாகவும், கனமாகவும் படைத்திருக்கின்றார் இந்த சிறுகதையின் ஆசிரியர். பைத்தியம் போல இருக்கும் காறிச்சாமி , வேயண்ணாவின் வேடங்களை ஒவ்வொன்றாகப் பார்த்த்வந்து முடிவில் வெடிப்பதாகவும் முடியும் கதை. ரோட்டின் மேல் எழுப்பப்படும் கோயில் எப்படியெல்லாம் தான் விற்ற கோயில் இடத்தை மக்கள் மனதில் இருந்து மாற்றும் என்பதனை அறிந்து காய் நகர்த்தும் வேயண்ணாவின் ஒவ்வொரு நடவடிக்கையையும் மிக விவரமாக விவரிக்கின்றார். " அவனவன் மனசிலே கட்டணும்டா, மனசுதான் கோயில் கட்டுற இடம். அதுலே மட்டும் கட்டு .அப்புறம் பாரு. எந்த புல்டோசராவது இடிச்சுடுமா ? எந்தக் கடப்பாறையாவது இறங்கிடுமா ? போங்க, இனியாவது கட்டப்பாருங்க; அதோட இங்கு வாழும் மக்களுக்கு எவ்வளவோ நல்லது செய்ய வேண்டியிருக்கு; அதுக்கு உங்க உழைப்பையும் , பணத்தையும் நேரத்தையும் பயன்படுத்துங்க " என்று சாமியார் காறிச்சாமி கூறுவதாகக் கதையை முடித்திருப்பது நல்ல உத்தி.  .

                             இத்தொகுப்பின் கடைசிக்கதையாக் 'மாலதிகள் பள்ளிக்குப்போவார்கள் ' என்னும் கதை உள்ளது. மூன்று பெண்களைப் பெற்ற அப்பா செல்லத்துரை,தொலைபேசித்துறையில் வேலைபார்ப்பதாகவும்,அவரது மூன்றாவது மகள் சாந்தி மாலதி என்னும் பெணணோடு படிப்பதாகவும், வயதுக்கு வந்துவிட்டால் என்று வீட்டில் தள்ளி வைத்து தலைக்கு ஊற்றிய மாலதியின் பெற்றோர் , வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாலதியை பள்ளிக்குப்போகவேண்டாம் என்று தடுப்பதாகவும்., செல்லத்துரை மாலதியின் அப்பா மாணிக்கத்தைச்சந்தித்து பேசி, தன்னுடைய மூத்த பெண்கள் எல்லாம் வேலைக்கு செல்வதையும் , பெண்ணை படிக்கவைத்து வேலைக்குப் போகச்சொல்ல வேண்டும், அப்படி பெண்கள் வேலைக்குச்சென்றால் அவர்களும் துன்பப்படமாட்டார்கள், பெற்றோர்களும் துன்பப்படமாட்டார்கள் என்று எடுத்துச்சொல்லி  மாலதியை பள்ளிக்கு அவரது அப்பாமூலம் அனுப்பி வைப்பதாகவும் அமைந்த கதை .இந்தக்கதையையும் நா.ஜெயராமன் மிக நன்றாகச்சொல்லியுள்ளார். " டெலிபோன் எக்சேஞ்சிலே வேலைக்குச்சேரும் பெண்களைப்பார்த்திருக்கிறேன். முதலில் வரும்போது உடையில் நடையில் சாதாரணமாகத் தெரிவார்கள். முதல் மாதச்சம்பளத்தில் உடை மாறும். இரண்டாவது மாதச்சம்பளத்தில் நடை மாறும். போகப்போக அவர்களின் உடை,நடை,பாவனை அனைத்திலும் உயர்ந்த நாகரிகம் மின்னி மின்னிப் பிரகாசிக்கும்.கற்ற கல்வியால் வந்த செருக்கு, கையில் கிடைக்கும் சம்பளத்தின் மாட்சி, தன் காலிலே நிற்கிறோம் என்ற துணிவு இவையனைத்தும் வர அவர்கள் முகத்திலே ஒரு பிரகாசம். ஒரு பெண்ணுக்கு இவை கிடைத்தாலே போதும். அதற்கடுத்துத்தான் வாழ்க்கை. அதுவும் அவர்களுக்கு எளிதில் கைகூடுவதைப்பார்க்கிறேன் " என்றார் செல்லத்துரை என்று பக்கம் 126-ல் வரும் கருத்துக்கள், தன்னுடைய அனுபவத்தில் இருந்து பெண்கல்வியின் தேவையை, பெண்கல்வியால் ஏற்படும் மாற்றத்தை இந்த்ச்சிறுகதையின் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். 

                  இத்தொகுப்பில் உள்ள எல்லாச்சிறுகதைகளுமே எதார்த்தமாகவும், வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளுமாக இருப்பது சிறப்பு.பத்து நாட்களுக்குள் நான் நாற்பது கதைகள் ,சிறுகதைகள் எழுதிவிட்டேன் என்று சொல்பவர்களுக்கு மத்தியில் ,நாற்பதாண்டுகளில் நான் எழுதிய 11 கதைகள் என்று கதையாசிரியர் குறிப்பிடுகிறார். அதனாலோ என்னவோ ஒவ்வொரு கதையும் நம் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்கிறது, ஆக்கிரமித்துக்கொள்கிறது. "யாரோடும் குரோதமில்லாமல், யாருடைய வெளியையும் சேதப்படுத்தாமல், யாருடைய செல்வத்தையும் பிறர் அபகரித்து விடாமல், வாழும் வாழ்க்கையொன்றே, எல்லா சமூகப் பிரச்சனைகளுக்குமான தீர்வாக இருக்கும் என்ற சிந்தனை, இத்தொகுப்புக் கதைகளை வாசித்து முடித்த்வுடன் எழுகிறது. உரப்புளி நா.ஜெயராமன் என்கிற படைப்பாளியின் விருப்பமும் அதுதானே "என்ற அணிந்துரை உண்மைதான் என்பதனை இத்தொகுப்பை வாசித்து முடித்தவுடன் உணரமுடிகிறது. நீங்களும் வாசித்துப்பார்க்கலாம்.
( மதுரை ,அகில இந்திய வானொலி, புத்தக விமர்சனத்திற்காக தயாரிக்கப்பட்டது)

Sunday, 1 February 2015

நிகழ்வும் நினைப்பும்(32) : தே.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரம மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் அய்யா திரு.து.பால்ராஜ் அவர்கள் :


தே.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரம மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் அய்யா  திரு.து.பால்ராஜ்  அவர்கள் மறைந்திருக்கின்றார். 80 வயதைக் கடந்தவர் , உடல் நலம் இல்லாமல் சிலகாலம் இருந்து மறைந்திருக்கின்றார்,. நானும் , நண்பர்கள் இரா.சீனிவாசன், பதஞ்சலி சில்க்ஸ் செல்வம்,தே.கல்லுப்பட்டி கென்னடி ஆகியோர் அய்யாவின் சொந்த ஊரான சுப்புலாபுரத்திற்கு சென்று (31.01.2015)  மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தி விட்டு வந்தோம்.

            1979-81 இரண்டு ஆண்டுகள் தே.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமத்தில் மேல் நிலைப்பள்ளியில் +1, +2 படித்தேன். அப்போது அய்யா பால்ராஜ் அவர்கள்தான் தலைமை ஆசிரியர். அவர் தலைமை ஆசிரியர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் தன்மை அவ்வளவு கம்பீரமாக இருக்கும். தூய வெள்ளை வேட்டி, சட்டை என அவ்வளவு வெண்மையான உடை இருக்கும். நான் சென்று சில நாட்களுக்குப்பிறகுதான் அவரால் இயல்பாக நடக்க முடியாத நிலையில் அவரின் கால் இருந்ததைப்பார்த்தேன். அதிர்ச்சியாக இருந்தது. என்னைப் பார்த்தால், என்னடா, சாப்டூரான், எப்படி இருக்க என்பார். நான் நன்றாக இருக்கிறேன் அய்யா என்பேன். எனது நண்பன் சாப்டூர் நவ நீதகிருஷ்ணன் , எஸ்.பி.இராமநாதன்(தற்போதைய மதுரை ஆவின் பால் துணை மேலாளர் ) , நான் மூவரும் சாப்டூரிலிருந்து வந்திருந்த மாணவர்கள். அரசு பள்ளியில் சார், சார் என்று கூப்பிட்டுவிட்டு, கல்லுப்பட்டி பள்ளியில் அய்யா என்று ஆசிரியர்களைக் கூப்பிட பழகுவதற்கு கொஞ்ச நாட்களாக ஆனது. அய்யா, என்று சொல்லாமல் சார் என்று சொன்னால் அடி விழுகும். நண்பன் நவ நீதகிருஷ்ணன் அய்யா  .பால்ராஜ்  அவர்களை , சார் என்று சொல்ல , அய்யா என்று சொல் என்று அடிவிழுந்தது.அடியை வாங்கிக்கொண்டு , இனிமேல் அய்யா என்று சொல்லுறேன் சார் என்று சொன்னது  இன்றும் நினைவில் நிற்கிறது. கல்லுப்பட்டி ஆசிரமம் என்றால் அய்யா குருசாமி,அய்யாமுனியாண்டி, அய்யா  .பால்ராஜ்  மூன்று ஆளுமைகள்தான் அன்று.

                      +2-வில் இன்று அளவு கெடுபிடிகள் இல்லாத காலம் அது. +1 ஆங்கிலப்பாடம் அய்யா பால்ராஜ்தான் எடுப்பார். முதன்முதலாக வகுப்பு நடத்த வந்த அன்று , வாட் ஆர் தி பார்ட்ஸ் ஆப் ஸ்பீச்   ஆப் இங்கிலீஸ் என்றார் .தெரியாது என்றேன். 10-ம் வகுப்புத்தேர்வில் எத்தனை மார்க் என்றார் . 82 என்றேன். எவன் உனக்கு இவ்வளவு மார்க் போட்டான் என்றார். தெரியாது என்றேன். பார்த்து எழுதி வந்தாயா ? என்றார். இல்லை என்றேன். "இஸ் வந்தா என்ன போடணும், வாஸ் வந்தா என்ன போடணும் , நவ் வந்தா என்ன போடணும்ன்னு கேளுங்க , சொல்றேன்" என்றேன். கேட்டார் , சொன்னேன். சிரித்து விட்டார். டேய், உனக்கு என்னதுன்னு தெரியாமலேயே விசயம் தெரிஞ்சிருக்கு பரவாயில்லை , உட்கார் என்றார்.தமிழ் மீடியம் 10-ம்வகுப்பு வரை படித்து விட்டு , +2-வில் ஆங்கில மீடியத்தில் (அப்போது ஆங்கிலத்தில் மட்டுமே முதல் குரூப் இருந்த்து ) படித்தது, பாடம் புரியாமல் மதிப்பெண் குறைவாக எடுக்க வழி வகுத்தது.

                     சாப்டூரில் 10-ம் வகுப்புவரை டவுசர் சட்டையோடு திரிந்து கொண்டிருந்த எங்களுக்கு, +1,+2-வில் வெள்ளை வேட்டி கட்டவேண்டும் என்பது பெரிய சுமையாகத் தெரிந்தது. நான் படாத பாடுபட்டுப்போனேன். வாரா வாரம் வெள்ளிக்கிழமை , காந்தி நிகேதன் ஆசிரமத்துப்பள்ளியில் கூட்டுப்பிரார்த்தனை நடக்கும். " ரகுபதி ராகவ ராஜராம் " பாட்டும், " அகிம்சா சத்தியஸ்தேய ..." என்னும் பாட்டும் இன்றைக்கும் கூட மனப்பாடமாகத்தெரியும் . அன்று 2 வருடங்கள் கூட்டுப்பிரார்த்தனைக்கூட்டங்களில் உட்கார்ந்த பலன் அது. ஒரு நாள் கூட்டுப்பிரார்தனை முடிந்தபிறகு , மாணவர்கள் தங்கள் மனதில் இருக்கும் என்ன பிரச்சனை பற்றியும் கேள்வி கேட்கலாம் . பதில் கூறுகின்றோம். கேள்வி கேட்டதற்காக உங்களைத் தண்டிக்க மாட்டோம் என்றார். நான் எழுந்து " அய்யா காந்தி, நேரு, விவேகானந்தர் பற்றியெல்லாம் பேச்சாளர்களைக்கூப்பிட்டு வந்து பேசச்சொல்கின்றீர்கள், விழா எடுக்கின்றீர்கள். பெரியார், பகத்சிங் போன்றோருக்கு ஏன் விழா எடுப்பதில்லை ? " என்று கேட்டேன் . அய்யா  .பால்ராஜ்  அவர்கள், "பெரியாருக்கு விழா காந்தி நிகேதன் ஆசிரமத்தில் எடுக்கணுமா? எடுப்போம், எடுப்போம். உன்னையே சிறப்பு பேச்சாளராகப் பேசச்சொல்லிவிடுவோம் " என்றார். மறு நாள் அய்யா முனியாண்டி, அய்யா  பால்ராஜ்  அவர்களைக் கதர் கடையில் பார்த்து எனது தாயார் திருமதி முத்துக்கிருஷ்ணம்மாள் வணக்கம் சொல்லியிருக்கின்றார். அய்யா, முனியாண்டி அவர்கள் பதில் வணக்கம் சொல்லிவிட்டு, "இவர்கள் யார் ? "என்று அடையாளம் தெரியவில்லையே என்று பக்கத்திலிருக்கும் அய்யா  .பால்ராஜ்  அவர்களிடம் கேட்க, நேற்று வில்லங்கமா ஒரு பையன் கேள்வி கேட்டானே, அவனது அம்மா " என்று சொல்லியிருக்கின்றார். எனது அம்மா, வீட்டில் வந்து ,டேய் பள்ளிக்கூடத்துக்கூட்டத்தில் அவ்வளவு பெரியவங்ககிட்ட என்னடா கேள்வி கேட்ட , என்று என்னைக் கேள்விகளால் துளைத்து எடுத்துவிட்டார்.
                     மாணவர்களைத் திட்டினாலும் , அவர்கள் வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்று நினைத்தவர்   அய்யா  பால்ராஜ் அவர்கள். ஆசிரியர்களிடமும் அவ்வளவு கண்டிப்புடன் இருப்பார். எங்கள் பள்ளிக்கூடம் மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம். சுற்று வட்டாரத்தில் இருக்கும் கிராமத்துப்பையன், பெண்கள் ஒழுங்காகப் படிப்பதற்கான இடமாக இருந்தால் போதும் என்பார். ஆசிரமத்திற்கான தொடர்பு அவருடைய கடைசிக்காலங்களில் துண்டிக்கப்பட்டது அவருக்கு மிகப்பெரிய வேதனையாக இருந்திருக்கின்றது. இறுதி வணக்கம் செலுத்தி அவரின் உடலுக்கு மலர்வளையம் வைத்தபோது , 35 வருடத்திற்கு முந்தைய அனுபவங்கள் வரிசையாக மனதிற்குள் வந்து வந்து போனது.