Monday, 24 June 2019

நெருப்பினுள் துஞ்சல்....டாக்டர் மா.பா.குருசாமி

டாக்டர் மா.பா.குருசாமி அவர்கள் டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களுக்குப் பின்னால் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் முதல்வராகவும் ,ஆதித்தனார் கல்லூரிகளுக்கு வழிகாட்டுபராகவும் இருந்தவர்கள். பொருளியல் துறை பேராசிரியரான அவர் 150 புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கின்றார். தற்போது மதுரை  காந்தி அருங்காட்சியத்தின் செயலாளராக இருக்கின்றார்கள். அவர் எனது சிறுகதைத் தொகுப்பு நூல் 'நெருப்பினுள் துஞ்சல் 'நூலைப் படித்துவிட்டு எழுதிய புத்தக அறிமுகம் 'சர்வோதயம் மலர்கிறது' என்னும் மாத இதழில் வெளிவந்துள்ளது. மிகப்பெரியவர் அவர்.அவரின் இந்த விமர்சனம் மிகப்பெரிய ஊட்டச்சத்து எனக்கு.மிக்க நன்றியோடு இதனை எனது வலைப்பக்கத்தில் வெளியிடுகின்றேன்.படிக்க கீழே உள்ள சுட்டியை (நெருப்பினுள் துஞ்சல்) அழுத்தவும்.
அன்புடன்
வா.நேரு

நெருப்பினுள் துஞ்சல்

Thursday, 9 May 2019

பாராட்டு பெற்ற கவிஞர் இளம்பிறை......

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா (29.4.2019) தமிழர் தலைவர் அவர்களால் பாராட்டு பெற்ற கவிஞர் இளம்பிறை (தன்குறிப்பு)


தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வைய கம் என்பதுதான், புத்தக வாசிப்பின் அரு மையை உணர்ந்தவர்களின் நிலை. இதைத் தான் விசாலப்பார்வையால் விழுங்கு மக் களை என்று புரட்சிக் கவிஞர் சொன்னார். வாசிப்பு என்பது ஒரு தனித்த இன்பம். அந்த இன்பம் பலரது துன்பத்தைத் தீர்க்கும் அருமருந்து. வாசிப்புத் தூண்டலை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த சமுகம் நமக்கு எவ்வளவோ செய்துள்ளது. நாம் அதற்குத் திருப்பிச் செய்தது என்ன? ஒன்றுமே இலையென்றாலும், ஒரு நல்ல புத்தகத்தையாவது பிறர் வாசிக்கத் தூண்டி விடலாமே! அதனால் சமுகத்திற்கு ஒரு நல்ல படைப்பாளி கிடைக்கலாம்.

அப்படி உருமலர்ச்சி பெற்றுக் கிடைத்த கவிஞர்களில் ஒருவர்தான் கவிஞர் இளம் பிறை!



இவர் 1971 இல் பிறந்தவர். இயற்பெயர் ச.பஞ்சவர்ணம். பெற்றோர் சன்னாசி, கருப் பாயி ஆகியோரின் 5 ஆவது மகளாகப் பிறந்தவர்.. பிறந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டம் சாட்டியக்குடி கிராமம். எளிய குடும்பத்தில் பிறந்து எம்.ஏ.பிஎட் பயின்றவர். தற்போது சென்னை அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டபிறகு இவர் தயங்காமல் எழுதிப் பார்த்திருக்கிறார். உரை நடை வசப்பட்டிருக்கிறது! தொடர்ந்து எழுதி யிருக்கிறார். கவிதையும் வசப்பட்டிருக்கிறது! சின்னச் சின்ன அங்கீகாரம் இவரை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டியிருக்கிறது.

புத்தகம் என்பது விதைநெல் போன்றது என்று புரட்சிக்கவிஞர் சொல்லியிருப்பதாக கவிஞர் இளம்பிறையே சொல்கிறார்.

இளவேனில் பாடல்கள், மவுனக்கூடு, நிசப்தம், முதல் மனுசி, பிறகொரு நாள், இவற்றின் மொத்தத் தொகுப்பு, நீ எழுத மறுக்கும் எனதழகு, அவதூறுகளின் காலம் போன்ற கவிதைத் தொகுப்புகளும் வனாந் திரப் பயணி, காற்றில் நடனமாடும் பூக்கள் போன்ற கட்டுரைத் தொகுப்புகளும் கவிஞர் இளம்பிறையால் எழுதப்பட்டிருக்கின்றன.

புத்தகம் விதைநெல் என்று சொன்னா ரல்லவா? அதன் விளைச்சல்தான் மேற் கண்ட படைப்புகள்.

தமிழக அரசின் சிறந்த பாநூல் பரிசு, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, களம் இலக்கிய விருது, கவிஞர்கள் தின விருது, சேலம் தமிழ்ச்சங்கம் விருது, பாவலர் இலக்கிய விருது, சிற்பி இலக்கிய விருது, தனியார் மற்றும் அரசு உயர்கல்வி நிறுவனங்களிலும், பள்ளிக்கல்வியிலும் இவரது கவிதைகள் பாடங்களாக இடம் பெற்றுள்ளன. இவை யெல்லாம் விதைநெல்களின் விளைச்சலுக் குக் கிடைத்த பயன்கள்.

இப்படிபட்ட சிறப்புகளைப் பெற்ற கவிஞர் இளம்பிறை அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 129 ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் 40 ஆம் ஆண்டு தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சிவிழாவில், புரட்சிக் கவிஞர் விருது வழங்குவதில் பெருமகிழ்வு எய்துகிறோம்.

நன்றி :விடுதலை 07.05.2019

அண்மையில் படித்த புத்தகம் தலைப்பில்   நீ எழுத மறுக்கும் எனதழகு- இளம்பிறை கவிதைகள்.....
 கவிஞர் இளம்பிறை அவர்களைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன் எழுதியது

https://vaanehru.blogspot.com/2013/09/blog-post_30.html



Sunday, 21 April 2019

'அடிமரம் ஒன்றேடா அதன் பெயர் திராவிடம்......'

புரட்சிக் கவிஞரே...
நீ மறைந்த நாள் இன்று .....
நாங்கள் உன்னை
மறவாமல் நினைக்கும் நாள் இன்று....




சங்கத் தமிழுக்குப் பின்னே
இயற்கையை இயற்கையாய்
பாடிய இக்கால சங்கக் கவிஞன் நீ.....

'கரும்பு தந்த  தீஞ்சாறே....
கனி தந்த நறுஞ்சுளையே ' எனத்
தமிழை தன் அறிவினில்
உறைத்துப் பாடிய கவிஞரெனினும்
நுனிக்கொம்பில் ஏறி சிலர்
அடிமரத்தை வெட்ட முனையும்
அறியாமை நோக்கியோ
'அடிமரம் ஒன்றேடா
அதன் பெயர் திராவிடம் '
என்று அழுத்தம் திருத்தமாய் உச்சரித்தாயோ

"நீரோடை நிலங்கிழிக்க
நெடுமரங்கள் நிறைந்து பெருங்காடாக்க"
எத்தனை சொற்பொழிவாளர்கள்
இந்தப் பாடலில் கசிந்துருகி
கண்ணீர் மல்க
இவ்வுலகின்
வரலாற்றை விவரிக்க
எத்தனை பேர் ..எத்தனை  வருடங்களாய்
உன் பாடல் வரிகளை மேற்கோளாய்......

"நாங்கள் காணத்தகுந்தது  வறுமையா?
பூணத்தகந்தது பொறுமையா?"
ஏழைகள் கேட்பதாய் நீ
வரைந்த  வரிகள் இன்றும் கூட
அப்படியே பொருந்துவதாய்
பொருத்தமாகத்தான் அன்றே சொன்னாய்
'இரவில் வாங்கினோம்
இன்னும் விடியவே இல்லை ' என்று.......

சாணிக்குப் பொட்டிட்டு
சாமியென்பார் செய்கைக்கு
நகைத்து நீ கண்ணுறங்கு என்றாய்
பெண்குழந்தை தாலாட்டில்....
தொலைக்காட்சி பெட்டிக்குள்
கொண்டு வந்து திணிக்கின்றார்
மூடத்தனத்தின் முடை நாற்றத்தை....

"தமிழுயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும்"
தமிழ் உயர்வதற்கான வழியாய்
தமிழியக்கம்
கவிதைகள் தந்தாய்....
உயிர் போன்ற உங்கள் தமிழ்
உரைத்தக்கால்
கடவுளுக்கு உவப்பாதல்  இல்லை போலும்
நெருப்படியாய்  நீ கொடுத்த
பாஅடிகள்
எதிரிகளுக்கு விழுந்த செருப்படிகள்....

சாதி ஒழிப்பா...
இருட்டறையில் உள்ளதடா உலகம்
இன்னும் சாதி இருக்கிறதுஎன்பானும்
இருக்கின்றானே என்னும் வேதனைதான்
மனதில் ஓடுகின்றது.....
மத  பீடத்தில் ஏறிய மாந்தர்காள்
பலி பீடத்தில் ஏறி விட்டீரே
என்னும்  குரல்தான்
மதத்தால் வெட்டிக்கொண்டு
சாகும் மனிதர்களைப்
பார்க்கும் நேரமல்லாம் ஓடுகிறது....


உனது  வரிகளில் கிடைக்கும்
வலிமையும் திண்மையும்
போருக்குப் போகும் வீரனின்
கையில் இருக்கும் ஆயுதமாய்
எந்த நாளும் எங்கள் கைகளில்...
மறப்பது எப்படி உன்னை...?

                                       வா.நேரு,
                                          21.04.2019


Wednesday, 17 April 2019

அண்மையில் படித்த புத்தகம் : பாக்குத்தோட்டம்....பாவண்ணன்......

அண்மையில் படித்த புத்தகம் : பாக்குத்தோட்டம்
நூல் ஆசிரியர் : பாவண்ணன்
வெளியீடு     :உயிர்மை பதிப்பகம்(499)
முதல்பதிப்பு   : ஜனவரி 2015
மதுரை மைய நூலக எண் : 216638

                           

    மொத்தம் 10 சிறுகதைகள்.ஒவ்வொன்றும் வெவ்வேறு களங்களில்,வெவ்வேறு சூழல்களில்....ஆனால் அனுபவப் பகிர்வாகவும்,ஆற்றுப்படுத்தும் எழுத்தாகவும் இருக்கிறது.சைக்கிள் ஓட்டத்தெரியாமல் அப்பாவிடம் அடிவாங்கும் முத்துசாமி,குடிகார அப்பனிடம் அடிக்கடி அடிவாங்கும் அம்மா,அதன் பின் திடீரெனக்காணாமல் போகும் அப்பா முடிவில் அம்மா சொல்வதாக அமையும் அந்த சொல் "ஓடிப்போன ஆளவிட உயிரோட இருக்கிறவங்க முக்கியம் எப்பவும்.அது ஞாபகத்திலே இருக்கட்டும்.புரிதா?" என்றாள் அம்மா...அவன் தலையை அசைத்தான்." ஒரு பத்துப்பக்க கதைப்பின்னலில் இந்த முடிவுச்சொல்லாடல் மிக முக்கியமாகப் படுகிறது.

   கல்தொட்டி செய்யும் தொழிலாளியைப் பற்றிய கதை 'கல்தொட்டி'. வருமானத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தனக்கு பிடித்தமான வேலையை அணுஅணுவாக இரசித்து இரசித்து செய்யும் தொழிலாளியைப் பற்றிய கதை. இதைப் போன்றே கூத்தின் மேல் அதீத ஆர்வம் கொண்ட உதயகுமார்(பாக்குத்தோட்டம்), பின்னணிப்பாடகனாக வேண்டும் என்ற ஆசையில் உள்ள சண்முகப்பிரியனின் மாமா-இரயில்வே துறையில் வேலைபார்த்தாலும் பாடுவதில் தன்னையே உருக்கிக்கொள்ளும் கதாபாத்திரம் (வாழ்க்கையில் ஒரு நாள்), நாடகக்கம்பெனியில் அளவற்ற நாட்டத்துடன் வேலைபார்க்கும் 'ஒளிவட்டம் சிங்காரம் ' கதை சொல்லும் 'ஒளிவட்டம் 'எலையிலே படம் வரைவதற்காக தன்னையே இழக்கத்துணியும் குமாரசாமியின் கதை சொல்லும் 'நூறுவது படம் ' என்று பல சிறுகதைகளின் கதாநாயகர்கள் ஒவ்வொரு துறை சார்ந்த திறமையாளர்கள். தங்கள் திறமையை விற்காமல் அதே  நேரத்தில் அதில் ஈடுபடுவதால் தங்களுக்குத் தாங்களே மன நிறைவும் அதன் மூலம் வாழ்க்கை  நிறைவும் கொள்பவர்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்திரமும் அவர்கள் பெயர்களால் அல்ல அவர்களின் தனித்திறமைகளால், அதனை ஆசிரியர் பாவண்ணன் வடித்திருக்கும் வார்த்தை  ஓவியங்களால் நாம் படித்து முடித்த பிறகும் மனதில் நிற்கிறார்கள்.



  'ஒரு நாள் ஆசிரியர் ' துணிகளைத் தேய்த்து வீடு வீடாகக்கொடுக்கும் திருவருட்செல்வனின் கதை. திருவருட்செல்வனுக்கு திருக்குறள் மீது இருக்கும் ஈர்ப்பு...அதற்கு காரணமாக இருந்தசேது மாதவன் என்னும் ஆசிரியர்... அவர் திருக்குறளை கற்றுக்கொள்ள மாணவர்களுக்கு கொடுத்த புதுமையான பயிற்சி...விளையாட்டு மாதிரியே திருக்குறளை மாணவர்கள் மனதிலே பதிய வைத்த விதம்....திருவருட்செல்வனும் அவனது  வகுப்புத்தோழன் கரிகாலனும் போட்டி போட்டு திருக்குறளை மனப்பாடம் செய்த விதம்... என செய்முறைப் பயிற்சி போல பல பக்கங்கள் இந்தச்சிறுகதையில் திருக்குறள் பற்றி.                  
இஸ்திரி போட்டுக்கொண்டே திருக்குறளை மனப்பாடம் செய்வதை " 'என் திருக்குறள் ஆர்வத்தை ஒரு நாளும் நான் மறந்ததே இல்லை சார்.இஸ்திரி போடறதயே திருக்குறள் எழுதறதா மாத்திக்கிட்டேன்.எல்லாம் ஒரு புதுமைதான்' என்று  குறும்பாகச் சிரித்தான்.நான் புரியாமல் அவனையே பார்த்தேன்.
'ஆமா சார்.இப்ப சட்டைக்கு இஸ்திரி போடறம்ன்னு வச்சிங்குங்க...காலர் மேல பொட்டியை வச்சு தேய்க்கும்போது கற்க கசடறன்னு மனசுக்குள்ளேயே எழுதிடுவேன்.அப்புறம் கைப்பக்கம் தேய்க்கும்போது கற்பவை கற்றபின்னு எழுதிடுவேன்.துணிய உதறி திருப்பிப்போட்டு முதுகுப்பக்கம் அழுத்திப்போடும்போது நிற்க அதற்குத் தகன்னு எழுதிடுவேன்.சட்டைக்கு ஒரு குறள்.பேண்டுக்கு  ரெண்டு குறள்.புடவைக்கு ஒரு அதிகாரம்.அதான் என் கணக்கு.இஸ்திரி போடறோம்ன்னு நினைக்கமாட்டன். தெனம் எரநூறு முந்நூறு திருக்குறள எழுதிப்பாக்கறமன்னு  நெனைச்சுக்குவேன்' " (பக்கம் 54). (இந்தக் கதையைப் படித்த போது மதுரை மெஜீரா கோட்ஸில் வேலைபார்த்து ,திருக்குறள் மேல் அளவற்ற நாட்டம் கொண்ட மறைந்த அய்யா திருப்பரங்குன்றம் தமிழ்க்கூத்தன் நினைவுக்கு வந்தார்.) திருவருட்செல்வன், தமிழ்ப்படித்து ஆசிரியர் பயிற்சியும் படித்து முடித்து வைத்திருப்பதை  அறிந்து, அவனுக்காக வேலைக்கு அலைவது, முடியாத பெற்றோரைப்பார்ப்பதற்காக அவன் மறுப்பது ,பின்னர் தீவிபத்தில் பெற்றோரை இழந்த திருவருட்செல்வனுக்குக்  கல்லூரி ஆசிரியரான அவர்  வேலை வாங்கிக்கொடுப்பது  என இந்தக்கதை முடிகிறது.இந்தத் தொகுதியில் எனக்கு மிகவும் பிடித்த கதை இது. பள்ளிகளில்,கல்லூரிகளில் இந்தக் கதையைப் பாடமாக வைக்கவேண்டும்.

'பள்ளிக்கூடம்' கதை இன்றைய நடப்புக்கதை. அரசாங்கப் பள்ளிக்கூடங்களை அரசாங்கங்களே மூடத்துடிக்கும் இக்காலக்கட்டக்கதை. 30 ஆண்டுகளுக்கு முன்னால் தான் படித்த பள்ளிக்கூடத்திற்கும், வாழ்ந்த ஊருக்கும் செல்லும் கதாபாத்திரம்.தான் படித்த பள்ளிக்கூடம் பூட்டிக்கிடக்கிறது.ஊரில் தெரிந்தவர்கள் யாரும் தென்படாத நிலையில் 'பள்ளிக்கூடத்தையே வெறித்து நோக்கியபடி ,எதிர்ப்பக்கத்தில் ஒரு வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்திருந்த வயதான பெரியவர் ஒருவரின் உருவம்' தெரிகிறது.கதர் வேட்டியும் கதர்  சட்டையும் அணிந்திருந்த அந்தப் பெரியவர்தான் அந்தக் கால கட்டத்தில் ,இந்த ஊருக்கு பள்ளிக்கூடம் வருவதற்காக  5 ஏக்கர் தனது சொந்த நிலத்தைக்கொடுத்தவர்.சின்னப்பிள்ளையாக இருந்தபோது அவரிடம் வணக்கம் சொல்லி 'பென்சில்' வாங்கிச்சென்றது நினைவுக்கு வருகிறது.அவரோடு பேசுகின்றார்.தான் கொண்டு வந்த பள்ளிக்கூடம்,மாணவர்கள் இல்லையென்று மூடப்பட்டதை சோகமாகப்பகிர்ந்து கொள்கின்றார்  பெரியவர். அந்த அரசுப்பள்ளிக்கூடத்தை மூடக்கூடாது என்று தான் அலைந்ததையும்,மாவட்ட ஆட்சியர் ஒரு 50 மாணவ,மாணவியர் இருந்தால் பள்ளிக்கூடம் தொடர அனுமதி அளிப்பதாகக் கூற,தான் கிராமத்தில் ஒவ்வொரு பெற்றோராகப் பார்த்துச்சொல்ல,மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்க்கமுடியாது  என்று சொன்னதையும் முடிவில் அரசுப்பள்ளிக்கூடம் மூடப்பட்டதையும் பெரியவர் சொல்கின்றார்.......  
இன்றைய கிராமங்களின் நிலை இதுதான்.சின்னச்சின்ன கிராமங்களுக்குக்கூட  4,5பேருந்துகள் தினந்தோறும் வருகின்றன.மெட்ரிக் பள்ளிகளுக்கு பிள்ளைகளைச்சுமந்து செல்கின்றன.இன்றைய அரசுப்பள்ளிகளின் பெரிய ஆபத்தே பக்கத்திலிருக்கும் மெட்ரிக் பள்ளிகள்தான்.100 மெட்ரிக்,நர்சரி பள்ளிகளில் 10தான் கட்டமைப்பு வசதிகளோடும்,தரமான ஆசிரியர்களோடும் இருக்கின்றன.மெட்ரிக் பள்ளிகள் புதிதாகத்தோன்றுவதை  முதலில் தடுக்கவேண்டும்.பின்பு மெட்ரிக் பள்ளிகள் படிப்படியாகக் குறைக்கப்படவேண்டும்.அதுவெல்லாம் இப்போதைக்கு நிகழ்வதாகத் தெரியவில்லை.அரசுப்பள்ளிக்கூடம் நமது பள்ளிக்கூடம் என்னும் உணர்வு குறைந்திருக்கிறது. இதனைக் கதைப்போக்கில் இந்த  நூலாசிரியர் அழகாக சுட்டிச்செல்கின்றார்.
"அரசாங்கப் பள்ளிக்கூடம்னா பிஞ்சிப்போன தொடப்பக்கட்டன்னு நெனைக்கற ஊருல வேற என்ன நடக்கும் ....?".....""இங்கிலீஷ் பள்ளிக்கூடத்திலே படிச்சாத்தான் அறிவு வளரும்ன்னு டவுன் ஸ்கூல்ங்கள்ல சேந்து படிக்கிறாங்க...அடிவாசல் வரைக்கும் வண்டிங்க வந்து குப்பைய அள்ளறாப்புல புள்ளைங்கள வாரிப்போட்டுக்கினும் போவுது" என்றார்.  இப்படி எதார்த்த நிலையை சுட்டிக்காட்டும் பல உரையாடல்கள் இந்தப் பள்ளிக்கூடம் கதையில்  உள்ளது.

இந்தத் தொகுப்பில் உள்ள கதை ஒவ்வொன்றும் உயிர்ப்பும்,வர்ணிப்பும் உள்ளதாக இருக்கிறது. 'என்னுரை'யில் "விதைகளைக் கரை சேர்க்கிற காலம் கதைகளையும் கரை சேர்க்காதா என்றொரு வரி தோன்றியது...." எனச்சொல்லும் பாவண்ணன் அந்த வரி தோன்றியதற்கான காரணத்தைச் சொல்வதும் கவனித்திற்குரியது." ஒரு கூட்டத்துக்காக சென்றிருந்தபோது ஓர் எழுத்தாளரைச்சந்தித்தேன். சுவாரசியமாக வளர்ந்துகொண்டிருந்த உரையாடலை நிறுத்திவிட்டு அவர் திடீரென்று என்னைப்பார்த்து உங்கள் எழுத்துக்கு எத்தனை வாசகர்கள் இருப்பார்கள்?"என்று கேட்டார்.என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஒரு கணம் குழம்பித் திகைத்து மறுகணமே அதை  என் புன்னகையால் கடந்து  வந்தேன். பேருந்து  பிடித்து இரவெல்லாம் பயணம் செய்து மறு  நாள் அதிகாலை வீட்டுக்கு வரும் வரைக்கும் அந்தக் கேள்வி எனக்குள் ஒரு  முள்ளாக உழன்றபடியே  இருந்தது.வழக்கம்போல தொட்டிக்குத் தண்ணீர் ஊற்றச்சென்ற கணத்தில் விதைகளைக் கரை சேர்க்கிற காலம் கதைகளையும் கரை சேர்க்காதா என்றொரு வரி தோன்றியது.கேள்வி கேட்ட எழுத்தாளருக்குச்சொல்லவேண்டிய பதிலாக அல்ல.என்னைத் திடப்படுத்திக்கொள்ள கிடைத்த பதிலாக அவ்வரியை நினைத்துக்கொண்டேன்..காலத்தை நம்பி எழுதப்பட்டவையே இத்தொகுப்பிலிருக்கும் கதைகள்" என்று சொல்கிறார்.

 சிறுகதைகளை முழுவதுமாக வாசித்து முடித்தபொழுது, இவ்வளவு மென்மையாகவும் அதே நேரத்தில்மனித நேய சிந்தனைகளை வலிமையாகவும் சொல்லக்கூடிய ஓர் எழுத்தாகவும் இனி மேல் நான் எழுதும் சிறுகதைகள் இப்படி,இப்படி இருக்கவேண்டும் என வழிகாட்டும் எழுத்தாகவும் இந்தச் சிறுகதைத் தொகுப்பு அமைந்திருப்பது மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

பாவண்ணன் சார், "உங்கள் பார்வைப்படியே,விதைகளை பறவைகள் தூவிக்கொண்டே இருக்கின்றன..ஈரம்  இருக்கும் இடத்தில்,வலிமை இருக்கும் விதைகள் முளைத்துக்கொள்கின்றன.உங்கள் கதைகள் மிக வலிமையான விதைகளாக  இருக்கின்றன.பறவைகளுக்குப் பதிலாக கதை விதைகளைத் தூவ இணையமும், பேஸ்புக்கும்,டுவிட்டரும்,வலைத்தளங்களும் இருக்கின்றன. இவை எங்கெங்கோ மனித  நேயமுள்ள, வீரியமிக்கக் கதைகளை கொண்டு செல்கின்றன. நமது கண்ணுக்குத் தெரியாத வாசிப்பாளர்கள்,உலகெங்குமிருந்து வாசிக்கிறார்கள்...மகிழ்கிறார்கள்..பகிர்கிறார்கள்... ஒரு கதை ஆசிரியராய் ,மிகவும் வெற்றிகரமாக கதை சொல்லும் ஆசிரியராய்,அதுவும் சமூகத்திற்குத் தேவையான கதைகளை எழுதுபவராக இருக்கிறீர்கள்.....இன்னும் எழுதுங்கள்......எழுதுங்கள்......வாழ்த்துகள்"  

Saturday, 23 March 2019

வறுமையும் பிணியுமற்ற.....

தூக்குக்கயிற்றை முத்தமிட்ட
தோழர்களின் நினைவு நாள்...
நாடு விடுதலை பெற்றால்
வறுமையிலிருந்தும்
பிணியிலிருந்தும்
நாட்டின் மக்கள் எல்லாம்
விடுதலை பெறுவார்கள்
எனும் நம்பிக்கையில்
எமது தோழர்கள்... தியாகிகள்
பகத்சிங்கும் அவரது
தோழர்களும் தூக்குக்கயிற்றை
முத்தமிட்ட நாள் இந்த நாள்.....

அகப்படாமல் வாக்காளர்களுக்கு
பணம் கொடுப்பதில் அவன் நிபுணன்
எனப்பேசிக்கொள்கிறார்கள்.....
அரசியல் கட்சியில் சேர்ந்த நேரத்தில்
வெறும் ஆளாய் இருந்த அவன்
வெகுவேகமாய்
பல வீடுகளுக்கு அதிபதியாய்
எப்படி ஆனான்......
புரியாத புதிராக இருக்கிறது
விடுதலை பெற்ற தேசத்தில்.....

சில படி கடலைகளை முன்னால்
குவித்துப்  போட்டபடி
இணையர்களாய் உட்கார்ந்திருக்கிறார்கள்
உழவர் சந்தையின் முன்னால் அவர்கள்...
அழுக்கேறிய வேட்டியோடும்
கிழிந்த சேலையோடும்
எழுபதுகளைக் கடந்த அவர்கள்
கடும் வெயிலிலும் வீதியினைப்
பார்த்தபடி உட்காந்திருக்கிறார்கள்
எவரேனும் கடலை வாங்கக்கூடும்
எனும் எதிர்பார்ப்பில்...
அதன் மூலம் இன்றைக்கு
தங்கள் வயிறு நிரம்புக்கூடும் எனும் நினைப்பில்....
ஒரு நாளைக்கு ஒருவேளை
முழு வயிற்றுக்கும் சோறு
எட்டாத கனவு என்று சொல்கிறார்கள்
சிரித்தபடி ......
ஏழைகள் வயிற்றுப் பசி ஆறாமல்
பசித்துக்கிடக்க...
பத்து பதினைந்து  லட்சம் ரூபாய்க்கு
தலைவர்கள் சட்டை போடும்
விடுதலை பெற்ற தேசத்தையா
கனவு கண்டாய் தோழா  நீ?.....

கிராமத்தில் குடிக்கத் தண்ணீரில்லை...
.குளிக்கவும் தண்ணீரில்லை....
நடு இரவில் குழாயில் வரும்
நாலு குடம் தண்ணீரைப் பிடிக்க
நடந்த மல்லுக்கட்டை விளக்கிவிட்டு
என்னடா நாடும் ஊரும்
இப்படி போகுது ?
என்ன செய்றதுன்னு புரியாம
ஏழை ஜனம்
எல்லாம் விழி பிதுங்கிச்சாகுதுண்ணு...
அழுகுற குரலிலே
சொந்த ஊரிலிருந்து செல்பேசியில்
உறவினர் சொன்னபோது
எல்லோர் கையிலும் செல்பேசி வந்திருச்சு...
ஓசியிலே செல்பேச வழிசெய்த
மகாராசனுக ஏண்டா
குடிக்கிற தண்ணியையும்
குளிக்கிற தண்ணியையும்
காசுன்னு ஆக்குனாங்க என்று
எதுவும் புரியாமல் கேட்டபோது
இப்படிப்பட்ட
விடுதலை பெற்ற தேசத்திற்கா
தோழா நீ  தூக்கில் தொங்கினாய்
எனும் நினைப்புத்தான் மனதில் ஓடியது....

இன்னும் கூட நம்பிக்கை
இருக்கிறது மனதில்....
ஜல்லிக்கட்டு போராட்டம் போல
ஒன்றிணைவார்கள் மக்கள்
என்னும் கனவு இருக்கிறது மனதில்...
அந்த நம்பிக்கையில்
வறுமையும் பிணியுமற்ற
விடுதலை பெற்ற தேசத்தைக்
கனவு கண்ட தோழர்களே !
வீர வணக்கம் ! வீரவணக்கம்...
உங்கள் நினைவுகளுக்கு
செவ்வணக்கம் ! செவ்வணக்கம்....

                            வா.நேரு,23.03.2019








Wednesday, 20 February 2019

அண்மையில் படித்த புத்தகம் : மீட்சி....ஒல்கா....கெளரி கிருபானந்தன்

அண்மையில் படித்த புத்தகம் : மீட்சி
மூலநூல்(தெலுங்கில்)ஆசிரியர் : ஒல்கா
தமிழில் மொழிபெயர்ப்பு      : கெளரி கிருபானந்தன்
வெளியீடு                  : பாரதி புத்தகாலயம், சென்னை-18 பேச : 044-24332424
மொத்த பக்கங்கள்           : 112, விலை ரூ 70/-
மதுரை மைய நூலக எண்   : 216296

                          இராமயணத்தில் இராமனால் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவர். ஒருவர் சீதை..இன்னொருவர் சூர்ப்பனகை....இருவரும் பல ஆண்டுகளுக்கு பின்னால் சந்தித்தால், அந்தச்சந்திப்பு எப்படிப்பட்டதாக இருக்கும் ? அதிலும் ஆண்களைப் பற்றி சூர்ப்பனகை சீதைக்கு அறிவுரை கூறும் சந்திப்பாக அமைந்தால் ...அந்தக் கற்பனையில் முகிழ்த்த கதை  முதல் கதை என இந்த நூலின் ஆசிரியர் ஒல்கா குறிப்பிடுகிறார்.இராமனுக்கு ஆசையாய் வாக்கப்பட்டு அவனோடு காட்டுக்குப்போய், சூர்ப்பனகையின் மூக்கையும் காதையும் அறுக்கப்பட்டதால் இராவணனால் சிறை பிடிக்கப்பட்டு, பின்பு இராமனால் மீட்கப்பட்டு மறுபடியும் இராமனால் காட்டுக்கு அனுப்பப்பட்ட சீதை, கானகத்தில் தன்னுடைய குழந்தைகளை வளர்க்கும் சீதை , கானகத்தில் சூர்ப்பனகையை சந்திக்கிறாள். அற்புதமான கற்பனை..ஆனால் நாக்கைப் பிடுங்கும்படியான ஆணாதிக்கத்தைப் பற்றிய கேள்விகள் கேட்கும் நிகழ்காலத்தின் கேள்விகள்....ஒரு பெண்ணால் எழுதப்பட்ட புத்தகம். ஒரு பெண்ணால் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகம்.ஒல்கா இந்தக் கதைகள் உருவான வரலாறைக் கூறுகிறார் இப்படி...



" நான் இந்தக் கதைகளில் முதலில் 'சகாமகம் 'எழுதினேன். அந்தக் கதையை எழுதுவதற்கு என்னைத் தூண்டிவிட்ட காரணம் இருக்கிறது.நான் எழுதிய 'யுத்தம் அமைதி' என்ற நாட்டிய நாடகத்தில் சீதையும் சூர்ப்பனகையும் ராம ராவண யுத்தம் நடப்பதற்கு தாம் காரணங்கள் இல்லை என்று சொல்லிக்கொண்டே 
" ஆரிய சாம்ராஜ்ய விஸ்தரிப்பு கோரிக்கை
 ஏற்படுத்திய ராம ராவண போர்க்களம்
 அது ஆரியர் திராவிடர் இடையில் மூண்ட சமரம்
  பெண்கள் அதில் பகடைக்காய்களாக மாறிய விதம் "
என்று பாடிக்கொண்டே நாட்டியம் செய்வார்கள்.தொடக்கத்தில் சீதையும் சூர்ப்பனகையும் தனித்தனியாக வனவாசம் தங்களுக்குப் பிரியமானது என்றும் ,தாம் அமைதியை விரும்புகிறவர்கள் என்றும் ,அழகை ஆராதிப்பவர்கள் என்றும் சொல்லிவிட்டு அப்படியும் தங்களுக்கு அவமானங்கள்,சந்தேகங்கள்,அவமதிப்புகள் தப்பவில்லை என்று சொல்லிக்கொண்டே நாட்டியம் செய்வார்கள்.இறுதியில் இருவரும் சேர்ந்து மேலே குறிப்பிட்ட வரிகளுக்கு நடனம் புரிவார்கள்.

       இந்தக்காட்சி பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.சூர்ப்பனகை பாத்திரத்திற்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன.ஆனால் சிலருக்கு சந்தேகங்களும் வந்தன.முக்கியமாக நடனம் புரிபவர்களுக்கே அவை வந்தன.அவர்களுக்குத் தெரிந்தவரையில் சூர்ப்பனகை ஒரு அரக்கி.நான் உருவாக்கிய சூர்ப்பனகை அழகி.செளந்த்ரியத்தை ஆராதிப்பதை வாழ்க்கையின் சூத்திரமாக கடைப்பிடிப்பவள்.நட்பை,அன்பை விரும்புகிறவள் என்று தன்னைப்பற்றி சொல்லிக்கொள்வாள்.இதற்கு நாட்டியம் செய்வதில் அவர்கள் குழப்பமடைந்தார்கள்.

         சூர்ப்பனகை திராவிடப்பெண்மணி என்றும், அவர்களுடைய பழக்க வழக்கங்கள் ஆரியர்களிடமிருந்து மாறுபட்டு இருக்கும் என்றும் புராணங்களில் திராவிடர்களை அரக்கர்களாக உருவகப்படுத்தி இருக்கிறார்கள் என்றும் எடுத்துச்சொன்ன பிறகு அவர்கள் சமாதானம் அடைந்தார்கள்.சூர்ப்பனகை பாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தினார்கள். இதை 'தூர்தர்ஷனில்' ஒளிபரப்பு செய்தபோது பிரச்சனை வந்தது. சூர்ப்பனகையை அரக்கியாகத் தவிர வேறுவிதமாக அவர்களால் பார்க்க முடியவில்லை. சீதை,திரௌபதியின் வேதனையைப் புரிந்துகொள்வது அவர்களுக்கு பழக்கப்பட்ட விஷயம்.சூர்ப்பனகையை அவர்களுக்குச் சமமாக எப்படி சேர்ப்பது ?சூர்ப்பனகை அப்படி என்ன வேதனையை அனுபவித்துவிட்டாள்? பர புருஷனை விரும்பினாள்.தண்டிக்கப்பட்டாள்.அவ்வளவுதானே தவிர,அவளுக்கு வந்த வேதனை என்ன?சீதையும் சூர்ப்பனகையும் எதிரிகள் இல்லையா? சேர்ந்து நாட்டியம் செய்வதாவது ?இப்படி பல கேள்விகள் கேட்கப்பட்டன.எங்களுடைய பதில்கள் அவர்களை சமாதானப்படுத்த முடியவில்லை.சூர்ப்பனகையின் பாத்திரத்தை 'சென்சார் 'செய்து விட்டு ஒளிபரப்பினார்கள்.

       அப்போது எனக்கு சூர்ப்பனகையின் வேதனையைப் பற்றி ஒரு கதை எழுத வேண்டும் போல் தோன்றியது.சீதையும் சூர்ப்பனகையும் ஏன் நட்புடன் இருக்கக்கூடாது என்று கதை எழுதத்தோன்றியது.அதன் விளைவுதான் 'சமாகமம்'. இந்தக் கதையில் சீதை சூர்ப்பனகையிடம் ஒரு ஆழமான கண்ணோட்டம் இருப்பதை உணருகிறாள் " என  ஒல்கா ஒரு விரிவான முன்னோட்டத்தை ஆசிரியர் உரையில் கொடுக்கின்றார்.      

                 

தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ள இந்தப் புத்தகம் கட்டுடைப்பு என்னும் இலக்கியக் கோட்பாட்டிற்கு எடுத்துக்காட்டான புத்தகம் எனலாம். நடந்த நிகழ்வுகளை, கதைகளை எடுத்துக்கொண்டு இன்றைய நோக்கின்படி கேள்விகளை எழுப்புவதும் அந்தக் கேள்விகளின் அடிப்படையில் விளக்கங்களைக் கூறுவதும் கட்டுடைத்தல் என்னும் கோட்பாட்டின் முக்கிய நிகழ்வுகள் எனலாம். இராமாயணத்தினை கட்டுடைத்து தெருவுக்கு கொண்டுவந்து அதன் கதாபாத்திரங்களைப் போட்டுடைத்தவர்கள் தந்தை பெரியாரும் அவரது இயக்கத்தவரும். அந்த வகையில் இந்த மீட்சி என்னும் புத்தகம் சீதையென்னும் இராமாயாண கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டு கற்பனையில் சீதை சூர்ப்பனகை, அகலிகை, ரேணுகாதேவி, ஊர்வசி என்னும் சமகால கதாபாத்திரங்களை சந்திப்பதாகவும் அந்தச்சந்தப்பில் தனது வேதனைகளை வெளிப்படுத்துவதோடு அவர்களின் வேதனைகளையும் உணர்ந்துகொண்டு அதன்மூலமாக இன்றைக்கும் வேதனைப்படும் பெண்களுக்கு சில தீர்வுகளைச்சொல்வதாகவும் இந்தக்கதைகள் அமைந்துள்ளது.

ஆசிரியர் உரை தவிர இந்தப்புத்தகம் 'இதிகாசம் ஒரு புதிய பார்வை, புதிய வெளிச்சம் 'என்னும் தலைப்பில் ஒரு முன்னுரை இருக்கிறது. அதற்கு அடுத்தாற்போல் சீதையும் சூர்ப்பனகையும் சந்திக்கும் 'இணைதல் ' என்னும் கதை, 'சீதையின் குரல் கம்மியது. தான் கடந்துவந்த அக்கினிப்பரீட்சைக்கு சூர்ப்பனகை சந்தித்த பரீட்சை குறைவானது இல்லை என்று நினைத்ததும் சீதையின் கண்களில் நீர் தளும்பியது ".சீதை சூர்ப்பனகையை உணர்ந்துகொள்வது, சூர்ப்பனகைக்கு இருக்கும் இயற்கையின்மீதான ஈர்ப்பு போன்ற பல செய்திகள் மிகக்கவனமாக இக்கதையில் சொல்லப்பட்டுள்ளது.

சீதையும் அகல்யாவும் சந்திக்கும் கதை 'மண்ணின் ஓசை ' என்னும் கதை. " அகல்யா, மிக அழகான பெயர். ஏர் கொண்டு உழப்படாத பூமி  என்று பொருள் '....அகல்யாவிடம் சீதை சொல்கிறாள்..." செய்யாத தவறுக்கு உங்களை குற்றவாளியாக்கி விட்டார்கள்..." அதற்கு அகல்யா பதில் சொல்கிறாள்..." இந்த உலகில் பெரும்பாலான பெண்கள் அப்படி குற்றவாளியாக்கப்பட்டவர்கள்தானே சீதை "....மேலும் " ஒரு நாளும் விசாரணைக்கு சம்மதிக்காதே சீதை...அதிகாரத்திற்கு அடி பணிந்து விடாதே ' என்றாள்....ராமன் அக்கினிப்பிரவேசம் செய்ய வேண்டுமென்று ராமன் சொன்னதாக வந்து சொன்னபோது அகல்யாவின் வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. " தீட்டு,தூய்மை,பவித்திரம்,அபவித்ரம்,ஒழுக்கம்,ஒழுக்கக்கேடு -இந்த வார்த்தைகளை ,உணர்வுகளை புருஷர்கள் எவ்வளவு வலிமையாக உருவாக்கி இருக்கிறார்கள் என்றால்" என்னும் அகல்யாவின் வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன சீதைக்கு...

பரசுராமனின் தாயான 'ரேணுகாதேவியை ' சீதை சந்தித்து உரையாற்றும் கதை 'மணல் குடம் ' பரசுராமன் என்றவுடன் சீதைக்கு வில்லை ராமன் முறித்தபிறகு ராமனோடு வந்து பரசுராமன் சண்டையிட்டது நினைவுக்கு வருகிறது.பரசுராமன் சத்திரியர்களை கொன்று குவித்த கொடூரன். ஆனால் ராமனும் பரசுராமனும் சமாதானமாகிறார்கள். சீதை ராமனிடம் எப்படி சமாதானமானீர்கள் பரசுராமனோடு என்று கேட்கிறாள். அதற்கு ராமன் " அவர்(பரசுராமன்) சம்ஹரித்த சத்திரியர்கள் ஆரிய தர்மங்களைக் கடைப்பிடிக்காதவர்கள்.வடக்கு எல்லை முழுவதும் அவர் ஆரிய தர்மத்தை முழுவதுமாக நிலை நாட்டி விட்டார். என்னுடைய எண்ணங்களைத் தெரிந்துகொள்ள வந்தார்.சிவனின் வில்லை முறித்த நான் ஆரிய தர்மங்களைத் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என்பது அவருடைய எண்ணம்.ஆரிய தர்மங்கள் எனக்கும் கொண்டாடத்தகுந்தவை என்று தெரிந்து மகிழ்ச்சி அடைந்தார்.என்னைத் தன்னுடைய வாரிசாக சுவிகரித்து தெற்கு எல்லை முழுவதும் அந்தத் தர்மங்களை நிலை நாட்டும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துவிட்டுச்சென்றார் "......ஆரிய தர்மத்தை நிலை நிறுத்துவதான் எனது நோக்கம் என்று இராமன் சொல்வதை விரிவாக இந்தக் கதையில் ஒல்கா பதிவு செய்திருக்கிறார்.மணலைக் கொண்டு பானை செய்யும் ரேணுகாதேவி சீதையின் முன் தன் கருத்துக்களை வைக்கின்றார்...

" என்னைக் கொன்றுவிடச்சொல்லி மகன்களிடம் ஆணையிட்டார் எனது கணவர். பரசுராமன் அதற்கு சித்தமானான்.என் தலையைத் துண்டித்தான்.பாதி தலை அறுந்தபிறகு என் கணவரின் கோபம் தணிந்தது. பரசுராமனை நிறுத்தச்சொன்னார்.ஆசிரமப்பெண்கள்,காட்டுவாசிப்பெண்கள் எனக்கு வைத்தியம் செய்து என் தலை கழுத்தின் மீது நிற்கும்படியாகச்செய்தார்கள். மாதக்கணக்கில் நான் சாவுக்கும் வாழ்வுக்கும் இடையே போராடினேன்.....வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில் நடந்த அந்தப் போராட்டத்தின்போது எத்தனையோ கேள்விகள். கணவன் மகன்கள் என்ற பந்தங்கள் ஒரு பெண்ணுக்கு அவசியமா? அவசியம் இல்லை என்று முடிவு செய்து நான் அவர்கள் எல்லோரிடமிருந்தும் தொலைவாக வந்து விட்டேன்.என் வித்தையுடன் வாழ்ந்து வருகிறேன்.என் சீடர்களுக்கும் அதைத்தான் உபதேசம் செய்கிறான் " இந்தக் கதையில் வரும் ரேணுகாதேவியின் உரையாடல்கள் தனித்தன்மையாகவும் ,பெண்ணியம் நோக்கிலும் விரிவான உரையாடல்களாக இருக்கின்றன.

சீதை வனவாசம் முடிந்தபிறகு இராமனோடு அரண்மனைக்கு வந்தபின் இலட்சுமணன் மனைவி ஊர்மிளாவை சந்தித்து உரையாடும் கதை 'மீட்சி' அதுதான் இந்த நூலுக்கும் தலைப்பாக இருக்கிறது. இராமன் காட்டுக்குப் போனான்,சீதையை அழைத்துக்கொண்டு போனான். இராமனோடு அவனது தம்பி இலட்சுமணன் போனான். அவன் ஏன் தனது மனைவி ஊர்மிளாவை அழைத்துப்போகாமல், அதுவும் ஊர்மிளாவிடம் சொல்லாமல் கூடப்போனான் என்ற வருத்தத்தில் 14 ஆண்டுகளாய் தனிமையில் தனித்து இருக்கும் ஊர்மிளாவை சீதை பார்க்கின்றாள்.பேசுகிறாள். ஊர்மிளா சீதைக்கு அறிவுரை சொல்கிறாள். நல்ல வேறுபட்ட கோணத்தில் நோக்கும் கதை மீட்சி."உன் மீது அதிகாரத்தை நீயே எடுத்துக்கொள்.மற்றவர் மீது உன் அதிகாரத்தை விட்டுவிடு. அப்போது உனக்கு நீ சொந்தமாவாய். உனக்கு நீ எஞ்சியிருப்பாய். நமக்கு நாமே எஞ்சியிருப்பது என்றாள் சாதாரணம் இல்லை அக்கா, என் பேச்சை நீ நம்பு " ஊர்மிளா சொல்லும் இந்த வார்த்தைகள் வேறு ஒரு இடத்தில் சீதைக்கு முடிவெடுக்கத் துணையாக நிற்கிறது.

ராமன் தனக்குத் தானே தன்னை நினைத்து நொந்து கொள்ளும், ஆரிய தர்மத்தைக் காப்பதற்காக தான் இழந்த இன்பங்களை, அடுத்தவர்களுக்கு செய்த துன்பங்களை நினைப்பதாக வரும் கதை 'சிறைப்பட்டவன் ' இறுதியில் இந்தக் கதைகளைப் பற்றிய ஆய்வுக்கட்டுரையாக 'ராஜ்ஜிய அதிகார வரம்பிற்குள் ராமன்...பெண்மையின் வரம்பிற்குள் சீதை ' என்னும் கட்டுரை இருக்கிறது. இந்தக் கதைகளைப் படித்துவிட்டு இந்த ஆய்வுக்கட்டுரையை ஆழமாகப் படித்தால் ஒல்காவின் பார்வையை எளிதாகப் புரிந்துகொள்ளமுடியும்.இணையத்திற்குள் சென்று பார்த்தால் இந்தக் கதைகளை மொழிபெயர்த்தமைக்காக கெளரி கிருபானந்தன் சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கிறார், 2015 ஆம் ஆண்டில். " 2015  வருடத்தின் சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு விருதை பெற்றுள்ளது.அதன் மூல புத்தகம் “VIMUKTHA ” விற்காக திருமதி ஒல்கா அவர்களுக்கு அதே வருடம் சாகித்ய அகாதமி விருது கிடைத்திருப்பது பிரமிக்கத்தக்க, யதேச்சையாக நிகழ்ந்த நிகழ்வு. ஒரு புத்தகத்தின் மூல மொழிக்கும், அதன் மொழிபெயர்ப்புக்கும் ஒரே ஆண்டில் சாகித்ய அகாதமி விருது கிடைத்திருப்பது இதுதான் முதல் முறை". எனக் கெளரி கிருபானந்தன் பதிவிட்டிருக்கிறார்.விருதுகளை விட உயர்வாக மதிக்கப்பட வேண்டிய கதைகள் இவை. நூலகத்தில் இருந்து எடுத்து வாசித்த புத்தகம், விலைக்கு வாங்கி வீட்டு நூலகத்தில் வைக்கவேண்டும். 



Tuesday, 12 February 2019

அண்மையில் படித்த புத்தகம் :நிலவுக்குத் தெரியும்...சந்திரா இரவீந்திரன்

அண்மையில் படித்த புத்தகம் :நிலவுக்குத் தெரியும்
நூல் ஆசிரியர்              : சந்திரா இரவீந்திரன்
முதல் பதிப்பு               : நவம்பர் 2011
வெளீயீடு                  :  காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., நாகர்கோவில்
மொத்த பக்கங்கள்          : 119 ,விலை ரூ 120
மதுரை மைய நூலக எண்  : 193157

                          தமிழ் ஈழ எழுத்தாளர் சந்திரா இரவீந்திரன் அவர்களின் சிறுகதை தொகுப்பு நூல் இது.தற்செயலாக மதுரை நூலகத்தில் கண்ணில் பட்டது. இந்த நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள உமா வரதராசன் அவர்களின் அறிமுகத்தை சில வரிகள் படித்து, அது பிடித்துப்போனதால் எடுத்துவந்து படித்த புத்தகம். " இந்த நூலின் ஆசிரியை( சந்திரா இரவீந்திரன்) ஒரு கட்டத்தில் தவிர்க்க இயலாத சூழலில் துயரங்களை மனத்தில் சுமந்துகொண்டு நாட்டை விட்டு வெளியேறியவர். இந்த வகையில் அவருடைய கதைகளுக்கு இன்னொரு பரிமாணமும் கிடைக்கின்றது. அவருடைய கதைகள் மூன்று வகையான நிலப்பகுதிகளுடன் தொடர்புபடுகின்றன. அவர் பிறந்து,வளர்ந்த யாழ்ப்பாண மண்.புகலிடம் நோக்கிய பயணத்தில் இடைத்தங்கல் நாடாக அமைந்த நைஜர்,இறுதியாக அவர் சென்றடையும் ஐரோப்பாவில் லண்டன். இந்த அனுபவம் எல்லா எழுத்தாளர்களுக்கும் வாய்ப்பதில்லை.வாய்த்தாலும் அநேகமான எழுத்தாளர்களின் அனுபவங்கள் இலக்கியப்படைப்புகளில் சிறப்பாக வெளிப்படுவதில்லை "ஆம், 9 சிறுகதைகள் என்றாலும் உமா வரதராசன் அவர்கள் சொல்வதுபோல மூன்று நிலப்பகுதியிலும் நடந்த சம்பவங்களின் விவரிப்பாகவே இச்சிறுகதைத் தொகுப்பு அமைந்திருக்கிறது.ஏழு கதைகள் ஈழத்து மண்ணில் ,இரண்டு கதைகள் வெளி நாட்டில் என அமைந்திருக்கிறது இத்தொகுப்பு. 



                 கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக வெளி நாட்டில் வேலை பார்த்தாலும்,தான் பிறந்த மண்ணை விவரிக்கும் பாணி தனித்தன்மையாக இருக்கிறது. 'பால்யம்' கதையில் ஆலமரத்தை விவரிக்கும் வர்ணனையில் ஆரம்பிக்கும் அவரின் கவித்தன்மையான எழுத்து ,கடைசிக் கதை வரை அத்தன்மையிலே தொடர்கிறது. எவ்விடத்திலும் செயற்கை அலங்காரமாக இல்லை. " ஒரு வாழ்க்கையை வாழ்ந்து எழுதியமைக்கும், கற்றறிந்து எழுதியமைக்கும் ,கற்பனையில் கிறுக்கியமைக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன.செயற்கைப் பூவை அடையாளங்காண இயலாத தோட்டக்காரன் எங்காவது இருப்பானா? உயிர்த்துடிப்புடன் ,அனுபவ வாசனையைப் பரவவிட்ட ஈழத்து எழுத்தாளர்கள் வெகு சொற்பம். இந்தக் கதைகள் மூலம் அந்த சொற்பமானவர்களில் ஒருவராக சந்திராவை அடையாளங் காண இயலும். அவருடைய கதையுலகத்தை அனுபவ ஒளி பிரகாசிக்கச்செய்கின்றது. ஓர் இலக்கிய வாசிப்பின் முக்கிய அம்சமே இதுதான்.தன் அனுபங்களை இரத்தமும் சதையுமாகப் பகிர்தல். யதார்த்தமான உலகமொன்றுக்குள் வாசகனுடன் சேர்ந்து பயணித்தல்,சந்திராவின் பெரும்பாலான கதைகள் அவற்றுக்கு உதாரணங்களாக அமைகின்றன. " இதுவும் முன்னுரை அளித்த உமா வரதராசன் அவர்களின் வார்த்தைகள்தான். முன்னுரையே உண்மைகளை கன்னத்தில் அறைந்து சொல்வது போல இருக்கிறது. இலக்கியம் என்ற பெயரில் நடிக்காதீர்கள் என்று நறுக்கென சொல்லியிருக்கிறார் 

'பால்யம் ' என்பது முதல் கதை. "கோவில் வீதி ,ஆலம்பழங்களோடு ஆட்டுப்புழுக்கைகளும் கலைந்து சிதறிக்கிடக்க ...மிதிபட்ட புற்களோடு புழுதி படிந்து ,காய்ந்து நொறுங்கிய சருகுகள் கலக்க, ...காற்றில் அசைந்தாடி  வந்து விழும் பழுத்த அரசிலைகளின் பட்டு விரிப்பில் வழமையான ஊர்வாசனை பறைசாற்றப்பட்டுக்கொண்டிருக்கும்! " இது ஒரு பத்தி எழுத்து வர்ணனைத் தேன் இப்படியே பத்தி பத்தியாய் ஈழுத்து எழுத்து தமிழில்..பத்மாவதி என்னும் பெண்ணின் அறிமுகம். அவளுக்கு நேரும் அவலம்.விசாலி என்னும் பாத்திரப்படைப்பு மூலம் விவரிக்கப்படுகிறது. பத்மாவதி இப்படிக்கூறுகிறாள்.." ஆம் போகாட்டில் ...அம்மா அடிப்பா,விறகில்லாட்டில் அப்பா அம்மாவை உதைப்பான். சொல்லுக் கேக்கல்லை யென்று அண்ணன்கள் எல்லாம் மாறி மாறி குத்துவான்கள் " அவள் வீட்டில் நிகழும் அவலத்தை இந்த்  மூன்று வரிகளில் முழுவதுமாக நூல் ஆசிரியர் சொல்லிவிடுகின்றார் ....பின்பு "பத்மாவதி சமைந்து போனாள் மட்டும் இந்த ஊருக்குத் தெரியும்.சமையும் முன்பே அவள் வாழ்வு கரைந்து கொண்டிருப்பது யாருக்குத் தெரியும் ? " என்று கேள்வியைக் கேட்டுவிட்டு தன் நினைவுகளை இன்றைய மீ டூ போலக் கூறுகின்றார். " எனக்குக் கண்கள் முட்டி வழிந்தன,பயம் உணர்வுகளை மேவி ,உடலையும் பற்றிக்கொண்டது.என் சித்தப்பன் பெரியப்பனிலிருந்து கணக்குப் பாடம் சொல்லித்தரும் கமலநாதன் வாத்திவரை அத்தனை பேரின் விலங்கு முகங்களும் என் முன்னால் நின்று கோமாளிக் கூத்தாடுவது போலிருந்தன. ஸ்பரிசம்...அணைப்பு....நசிப்பு....முத்தம்...பிடுங்கல்....ஓட்டம்...கலைப்பு....களைப்பு....பயம் இவையே பால்யப்பருவத்தின் நிகழ்ச்சி அட்டவணைகளாய் நிர்ப்பந்தகளாய்......." என அவரின் விவரிப்பும் பனைக்காட்டிற்குள் சென்று பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் பத்மாவதியோடு தன்னையும் ஒப்பிட்டு விசாலி என்னும் பாத்திரப்படைப்பு பார்ப்பதே 'பால்யம் ' என்னும் சிறுகதை. நீ ஒடுக்கப்பட்ட சாதியென்றாலும்,உயர்ந்த சாதி என்றாலும், ஏழை என்றாலும் பணக்காரி என்றாலும் பாலியல் தொந்தரவு என்பது பெண்களுக்கு பால்யத்தின் கொடுமை என்பதனை விவரிக்கும் கதை. 

'தரிசு நிலத்து அரும்பு' என்னும் கதையில் வரும் ராசன் அன்பை அள்ளி வழங்கும் கதாபாத்திரம். புள்ளி வாழைக்கும் கப்பல் வாழைக்கும் வேறுபாட்டை எளிமையாக விளக்கும் விவரம், ஆனால் அடையாள அட்டை என்று ஒன்று இல்லாமல் அப்பா இல்லாமல், அம்மா இருப்பது தெரியாமல் அவள் இறந்த பிறகே தனக்கு அம்மா இருந்தாள் என்று தெரியவந்த ராசன் மனதில் நிற்கிறான் கடைசியில் சிவப்பு கடுதாசிகளோடு சைக்கிளில் செல்லும்போது....


'என் மண்ணும் என் வீடும் என் உறவும் " மற்றும் 'முறிந்த பனை ' இரண்டும் இந்திய அமைதிப்படை ஈழத்தில் இருந்தபோது நிகழ்ந்தவைகளை விவரிக்கும் கதைகள்.'துயரத்தின் வடிவம் ஒப்பாரியாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை.மனதில் உறைந்துபோன கண்ணீரின் பாறைகளாகவும் இருக்கக்கூடும் " ஆம் படிப்பவரையும் உறையவைக்கும் கதைகள். தன் மகனை இழந்த துயரத்தைக் கூட சத்தம் போட்டு அழ முடியாமல் தவிக்கும் தாயும் அந்த சூழலைப் பற்றிச்சொல்லும்   'முறிந்த பனை ', அக்காவும் தங்கையும் இந்திய அமைதிப்படையிடம் பட்டு அல்லல் உறும் நிகழ்வுகளும், அவர்களின் துயரங்களும் கடைசியில் தலைமைப்பொறுப்பில் உள்ள 'சிங்'கால் அந்த கொடுமையான இக்கட்டிலிருந்து தப்பும் கதை சொல்லும் 'என் மண்ணும் என் வீடும் என் உறவும் ' என்னும் கதையும் மிகக் கனமான கதைகள் இத்தொகுப்பில்....கண்ணீரை வரவழைக்கும் கதைகள் மட்டுமல்ல, இவ்வளவு இன்னல்பட்ட பின்பும் தமிழெனுக்கென்று ஒரு நாடு என்னும் தமிழ் ஈழம் கனவாய் இருக்கும் எதார்த்தமும் நெருப்பாய் சுடுகிறது.களத்தில் நின்ற தம்பியின் தம்பிகளின் தியாகங்களைப்  புரிந்துகொள்ள இக்கதைகள் உதவுகின்றன.2009-க்கு முன்பு எழுதப்பட்ட கதைகள் இவை.

'நெய்தல் நினைவுகள் ' என்னும் கதை கடல் அலைகளை, அதன் அழகை, ஆழி அலையாய் உயிர்களைச்சுருட்டிய் கோரத்தை மொத்தமாக ஒரு உரைநடைக் கவிதையாய் சொல்லும் கதை. இவரின் கதைகளைப் படிக்கிறபோது அண்மையில் மறைந்த தமிழ்க் கவிஞர் நா.காமராசன் நினைவுக்கு வருகிறார். அவ்வளவு உவமைகளும் ஒப்பிடுகளும்..

'காற்று ' என்னும் கதை அவர் இடையில் தங்கிய 'நைஜீரியா ' நாட்டின் அனுபவமாக இருக்கக்கூடும்.பள்ளிவாசல்கள், பெண்கள், இடைத்தரகர்கள்,அவர்களைப் பற்றிய விவரணைகள்,நைல் நதி  எனத் தனி அனுபவ விவரிப்பாக இக்கதை இருக்கிறது. 

இலண்டன் மாநகரம் பற்றியும் அதில் நிகழும் நிகழ்வைகளைப் பற்றியும் சொல்லும் கதை 'கண்ணில் தெரியும் ஓவியங்கள்' ....கண்ணில் தெரிந்த ஓவியத்தைப் பார்த்தவுடன் புரிந்து கொள்ள முடியாமல்,புரிந்து கொள்ள முயற்சிக்கும் வேளையில் தன் மகன் 'அருணை'க் காணவில்லை என்று பதறுவதில் இருந்து ஆரம்பிக்கும் கதை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும் சில மனிதர்களைப் பற்றிய விவரிப்பாக விரிகின்ற ஒரு வேறுபட்ட கதை. 

இக்கதைகளை பொழுதுபோக்காக வாசிக்க இயலாது,வாசித்து முடித்தபின்பு நம்மையும் ஒரு குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கும் கதைகள் இவை.தமிழ் நாட்டிற்கும் தமிழ் ஈழத்திற்கும் தூரம் வெகு குறைவு என்றாலும் நடந்த நிகழ்வுகளை அறிந்து கொள்வது கடல் அளவு தூரமாக இருக்கிறது. இத்தூரத்தைக் குறைக்கும் ஒரு நல்ல முயற்சியாக 'நிலவுக்குத் தெரியும் ' என்னும் இந்தச்சிறுகதைத் தொகுப்பு எனக்குப் படுகின்றது..   

Saturday, 19 January 2019

ஒளவையின் கூற்றை அடித்துத் துவைக்கிறார் அய்யா பெரியார்..

அரிது அரிது மானிடராய்ப்
பிறத்தல் அரிது என்றார் ஒளவை...
ஒளவையின் கூற்றை
அடித்துத் துவைக்கிறார் அய்யா பெரியார்..
கொடிது ! கொடிது! என்று கூறடா
மானுடப்பிறப்பை எனக் கூறுகிறார்....

தேடித் தேடி இரையைத் தின்னும்
இணையோடு குதுகலிக்கும்
சில நேரங்களில் துன்புறும்
ஆனால் துன்பமிது என்று உணரும்
கொடுமை விலங்குகளுக்கு இல்லை

குதிரையை வண்டியில் பூட்டி நோகடித்தாலும்
காளையைப் பிடித்து காயடித்தாலும்
துன்புறும் ஆனால் துன்புறுகிறோமே எனும்
துயர உணர்ச்சி அவைகளுக்கு உண்டோ....

நாளைக்கு வேண்டுமே எனும் கவலை உண்டா?
போதாது போதாது எனும் பேராசை உண்டோ?
விலங்குகளிடம் ..

அடப்போடா, இத்தனையும் கொண்ட மனிதா,
நீதான் உலகில் இழிந்த பிறவி போ,போ
என்று சொல்கிறார்....

கவலை இல்லா மனிதரில்லை...
பேராசை இல்லா மானிடப்பிறப்பு இல்லை
அட இவைகள் கூட இயற்கைத் தடைகள்....

செயற்கைத் தடைகள் எத்தனை? எத்தனை?
ஆளுக்கொரு கடவுள்....
அவரவர் விருப்பப்படி வணங்கும் முறைகள்....
ஒன்றிணையா விடாது துரத்தும்
சாதிகள்...மதங்கள்..சாத்திரங்கள்...குப்பைகள்...
பார்ப்பானுக்கு கொட்டி அழவே
எத்தனை சடங்குகள்...விழாக்கள் ...
அரசு வசூலிக்கும் வரிகள் அறிவாய் நீ
அவாள்கள் வசூலிக்கும் வரிகள் அறிவாயோ நீ?

பகுத்து உணரும் அறிவு உண்டு உனக்கு
அட அதனைப் பயன்படுத்தும்
அறிவு உனக்கு உண்டோ ?
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என
எந்த வகையில் குதுகலிக்கிறாய் நீ?

பெரியார் அன்றும் இன்றும்
புத்தகத்தைத் திறந்த உடனே
வந்து விழும் வினாக்களுக்கு
விடை சொல்வார் யாருமுண்டோ...சொல்வீரே....



                                                                                                        வா.நேரு
                                                                                                          19.01.2019


Tuesday, 15 January 2019

'கருஞ்சட்டைப்பெண்களின் மணிமகுடம் மணியம்மையார்........ஓவியா...

அண்மையில் படித்த புத்தகம் : கருஞ்சட்டைப் பெண்கள்
நூல் ஆசிரியர்               : ஓவியா
வெளியீடு : கருஞ்சட்டைப்பதிப்பகம்,044-42047162
முதல் பதிப்பு : நவம்பர் 2018, 176 பக்கங்கள்,விலை ரூ 130/-

                                   கட்டுரை (5)

முடிவாக 'கருஞ்சட்டைப்பெண்களின் மணிமகுடம் மணியம்மையார் ' என்னும் தலைப்பில் கொடுத்திருக்கும் கட்டுரை மிக அரிதான கட்டுரை. எதிர்மறைக் கருத்துகள் கொண்டவர்களுக்கு மட்டுமல்ல , திராவிட இயக்கத்தைச்சார்ந்தவர்களே ஒரு முறைக்கு இருமுறை படித்து தெரிந்துகொள்ள வேண்டிய கட்டுரை. "பொதுவாக அன்றைய கருஞ்சட்டைப்பெண்கள் அனைவருமே சமூகத்தின் அவமதிப்புகளை ஏற்றுக்கொண்டவர்கள்தான். ஆனால், எவரும் ஏற்றிராத பழியேற்று தியாகத்தீயில் தன்னையே எரித்துக்கொண்ட தலைவர் அன்னை மணியம்மையார்.மணியம்மையார் அளவுக்கு ஒரு மிகப்பெரிய எதிர்ப்பலையை,வசவுச்சொற்களை,அபவாதத்தைச்சந்தித்த வேறு ஒரு பெண் தலைவர் திராவிடர் இயக்கத்தில் மட்டுமல்ல,வேறு எந்த இயக்கத்திலாவது இருக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.இல்லையென்றே சொல்லலாம்  " என்று ஆரம்பித்து நூல் ஆசிரியர் கொடுக்கும் புள்ளிவிவரங்களும், வரலாற்றுத் தகவல்களும்,உணர்வு பூர்வமான விவரிப்புகளும் அருமை.

தந்தை பெரியார்-அன்னை மணியம்மையார் திருமணத்திற்கு பிறகு இயக்க நிகழ்வுகளுக்கு வந்தவரல்ல மணியம்மையார். சிறுவயதிலிருந்தே திராவிடர் கழகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.வசதியுள்ள குடும்பத்தில் பிறந்தவர். அந்தக்காலத்தில் 10-ஆம் வகுப்பு வரை படித்தவர். " ஒரு பெண் பொதுவாழ்க்கையில் அடியெடுத்து வைப்பது என்பது இயல்பாக நடப்பது இல்லை....பெண்களை பொதுவெளிக்கு அழைத்து வந்ததில் திராவிடர் கழகத்தின் பங்கு மிகவும் தனித்துவமானது.குடும்பத்தினருடன் கூட்டங்களுக்கு வரவேண்டும் என்பதை வாழ்க்கை முறையாக பெரியார் வலியுறுத்தினார் " பெரியாரைத் திருமணம் செய்துகொள்வதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே தன்னை திராவிடர் கழக இயக்கச்செயல்பாடுகளில் ஈடுபடுத்திக்கொண்டவர். திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்டு 2 முறை சிறைக்குச் சென்றவர்.அவரது இயற்பெயர் காந்திமதி.கே.காந்திமதி,கே.மணி உள்ளிட்ட சில பெயர்களில் எழுத்தாளராக இருந்திருக்கின்றார். திராவிடர் கழக பேச்சாளராக இருந்திருக்கின்றார். "நான் படிப்பது நல்ல அடிமையாகவா? அல்லது மேன்மையும் விடுதலையும் பெறவா? இதற்கு மாதர் சங்கங்கள் பாடுபடவேண்டும் " என்று திருமணத்திற்கு முன்பே எழுதியிருக்கின்றார்.திருமணத்திற்கு முன்பே பெண்கள் திராவிடர் கழகத்தில் வந்து பணியாற்ற வாருங்கள் என்னும் பெரியார் கொடுத்த அழைப்பைப் பற்றி மணியம்மையார் பேசியிருக்கின்றார்,அவருக்கு திருமணம் ஆகும்போது வயது 30, அன்றைய காலகட்டத்தில் 15 வயதில் அனைத்துப்பெண்களுக்கும் திருமணம் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் அவரது வயது திருமண வயதைப் போல இருமடங்கு வயது, அந்த வயதுவரை அவர் திருமணத்தை மறுத்து பொது வாழ்க்கையில் இருந்திருக்கின்றார்,மணியம்மையார் ,திராவிடர் கழகத்தை தேர்ந்தெடுத்தது அவரது சுய தேர்வாகும்  போன்ற பல செய்திகளை எடுத்துக்காட்டுகளோடு குறிப்பிட்டிருக்கின்றார்.

"பொதுவாழ்வின் தூய்மைக்கு இலக்கணம் என்றால் ,அது பெரியாரும் மணியம்மையாரும் என்று சொல்லத்தக்கவகையில் உயர்ந்து நிற்கின்றார்கள்." என்று குறிப்பிடும் ஓவியா," பெரியாரைப் பராமரிக்கும் பொறுப்பைத் திருமணத்திற்குபிறகுதான் அவர் எடுத்துக்கொண்டார் என்பது இல்லை. இது மிகவும் முக்கியமாக நாம் புரிந்துகொள்ளவேண்டிய விசயம் " மற்றும் " பெறுவதற்கு அரிதாகத் தோன்றிய மாமணியாக இந்த சமூகத்திற்கு கிடைத்தவர் பெரியார். இந்த சமூகத்தை நேசிக்கும் ஒரு வடிவமாகவும்,சமூகத்திற்கு தொண்டு செய்வதன் ஒரு வடிவமாக பெரியாருக்கு தொண்டு செய்வதை மணியம்மையார் ஏற்றுக்கொண்டார் " என்பதனைக் குறிப்பிட்டு மணியம்மையார் அவர்களை படிப்பவர் புரிந்துகொள்ளும்வகையில் நூலாசிரியர் வரிசைப்படுத்திக்கொடுத்திருக்கின்றார். 

"கடவுளை மறுக்கின்ற,நாத்திகத்தைப் பிரச்சாரம் செய்யும் ஒரு இயக்கம் தொண்டு செய்வதை தன்னுடைய இயக்கச்செயல்பாட்டின் ஒரு பகுதியாக வைத்துள்ளது.அந்த ஆதரவற்ற இல்லக்குழந்தைகள்(நாகம்மையார் குழந்தைகள் இல்லம்) அனைவருக்கும் தன்னை தாயாக வரித்துக்கொண்டவர் அன்னை மணியம்மையார். திராவிடர் கழகத்திற்கு உள்ள இந்த 'தொண்டு முகம்' வெளியே பரப்பப்படாத ஒரு செய்தியாகவே உள்ளது " பக்கம் 134. பெரும்பாலும் திராவிடர் கழகம் செய்யும் தொண்டறப்பணிகளை விளம்பரத்திக்கொள்வதில்லை.ஆனால் திராவிடர் கழகத்தினை அறிந்தவர்கள் அறிவார்கள். சத்தமில்லாமல், அதற்கு ஆதரவுக்கரமும் நன் கொடையும் அளிப்பவர்கள் அதிகம்.திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர்  வீ,அன்புராஜ் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட நாகம்மையார் குழந்தைகள் இல்ல 50-ஆம் ஆண்டு விழா , அதைப் பற்றிய வெளிச்சத்தை சமூகத்திற்கு காட்டியது. அந்த வகையில் நூலாசிரியர் இப்படியெல்லாம் தொண்டு செய்யும் திராவிடர் கழகம் அதனை மிகப்பெரிய அளவில் பரப்புவதில்லையே என்னும் ஆதங்கத்தை காட்டியுள்ளார். 

"சாதி ஒழிப்பு குறித்து இன்று அதிகம் பேசப்பட்டாலும், சாதி ஒழிப்பு போர் பற்றி ஏன் பேசப்படுவதில்லை ?அந்த நினைவுகள் ஏன் புதுப்பிக்கப்படுவதில்லை? ஏன் மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்படுவதில்லை ? " என்னும் நியாயமான கேள்விகளை முன்வைத்து "சாதி ஒழிப்பு என்பதை இலக்காக வைத்து இந்தியாவிலேயே ஒரு இயக்கம் போராடி இருக்கிறது என்றால் அது திராவிடர் கழகம் மட்டுமே " என்று குறிப்பிடும் நூலாசிரியர் அந்தப்போராட்டத்தில் அன்னை மணியம்மையாரின் பங்களிப்பை மிகச்சரியாக விவரித்திருக்கிறார். 2009-ல் தோழர் முத்துக்குமார் இறந்தபோது அவரின் உடலை ஊர்வலமாகக் கொண்டு போகமுடியவில்லை ஆனால் சாதி ஒழிப்பு போரில் மாண்ட இரண்டு தியாகிகளின் உடலை ஊர்வலமாக அன்னை மணியம்மையார் கொண்டு போனார் என்பதனை" இன்றைய காலத்தில் ஆண் தலைவர்களாலேயே செய்ய முடியாத இந்த காரியத்தை அன்று செய்து காட்டியவர் அன்னை மணியம்மையார்...அன்று திருச்சியின் முக்கிய வீதிகள் வழியாக,அரசாங்கத்தின் கெடுபிடிகளை மீறி இரண்டு தியாகிகளின் உடல்களை எடுத்துச்சென்று எரியூட்டினார் மணியம்மையார். ஆக்ரோசமான காத்திரமான தலைவராக மட்டுமல்ல, அந்த உத்வேகத்தை தொண்டர்களிடமும் கடத்திய எழுச்சிமிக்க தலைவராக செயல்பட்டவர் அன்னை மணியம்மையார் " எனச்சொல்லி அந்த நிகழ்வு முழுவதையும் நூலாசிரியர் விவரிக்கின்றார். 


பத்திரிக்கை சுதந்திரத்திற்காக என்று தலைப்பிட்டு " பத்திரிக்கை சுதந்திரம் என்பதற்காகத் தொடர்ந்து எண்ணற்ற சுமைகளைத் தாங்கிய இயக்கம் திராவிடர் கழகம்.இந்த இயக்கத்தின் பத்திரிக்கைகள் சந்திக்காத தடைகளே கிடையாது....பகையில் இருந்து தமிழர்களைக் காக்கும் தடுப்பரண் திராவிடர் கழகம்.இந்தக் காரணத்தினாலேயே 'தமிழகம் ஒழுங்கற்ற மாநிலம்' என்று நெருக்கடி காலத்தில் எரிச்சலாகச்சொன்னார் இந்திராகாந்தி. அவர்களால் எப்போதும் சமாளிக்க முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.இந்தியாவின் வேறு எந்தப்பகுதியும் அவர்களுக்கு இப்படிப்பட்ட அச்சுறுத்தலைத் தருவதில்லை. தமிழ் நாட்டின் இந்த நிலைக்குக் காரணம் 'ஒரு நாள் புரட்சி அல்ல' அல்ல.அது ஒரு இயக்கத்தின் தொடர் நிகழ்வு.அதன் தொடர் பணிகளால் விளைந்த கனி ' என்று சிறப்பாக குறிப்பிடுகிறார். இன்றைக்கு இருக்கும் மத்திய அரசும் கூட தமிழகத்தைப் பொறுத்த அளவில் குழம்பிப்போய்த்தான் கிடக்கிறார்கள்.....அதனால்தான் பெரியார் மீதும் திராவிட இயக்கத்தலைவர்கள் மீதும் வெறுப்பை உமிழ்கிறார்கள்.

இராவண லீலா நிகழ்வினை, அந்த மகத்தான போராட்டத்தை நினைவு கூறுகின்றார். "அறிவித்தபடியே பெரியார் நினைவு நாளுக்கு அடுத்த நாள்,மணியம்மையார் தலைமையில் இலட்சக்கணக்கான தொண்டர்கள் சூழ பெரியார் திடலில் இராவண லீலா நடைபெற்றது. அதில் நானும் பங்கேற்றிருப்பதில் பெருமைப்படுகிறேன் " எனும் குறிப்பிடும் ஓவியா " திராவிடர்களின் கலாச்சாரத்திற்காகப் போராடவேண்டுமென்றால் அன்னை மணியம்மையாரின் பெயரை உச்சரிக்காமல் வரலாற்றை எழுதி விடமுடியாது.இராமாயாணத்திற்கு மிக நீண்ட வரலாறு இருக்கிறது என்று எடுத்துக்கொண்டால்,இராமனைக் கொளுத்திய திராவிடர் கழகத்திற்கும் இராவண லீலா நடத்திய மணியம்மையாருக்கும் அந்த வரலாற்றில் இடமுண்டு ' எனப் பெருமையாகப் பதிவு செய்கின்றார்.

நெருக்கடி காலத்தில்  திராவிடர் கழகத்திற்கு ஏற்பட்ட நெருக்கடிகளையும் அதனைத் தீரமாக எதிர்த்து போரிட்ட அன்னை மணியம்மையாரையும் உணர்வு பூர்வமாக விவரித்துள்ளார் நூலாசிரியர் ஓவியா.தனது அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார். "நெருக்கடி காலத்தில் பத்திரிக்கை நடத்தியது  மிகப்பெரிய விசயம். 'மின்சாரம்' என்னும் பெயரில் கவிஞர் எழுதிய கட்டுரைகளைப் படிக்க  அப்போது ஆவலாகக் காத்திருப்போம். எனது பள்ளிக்காலத்தில் அதைக் கார்பன் காப்பி எடுத்து ,பேருந்துகளில் அதை விட்டுவிட்டு வருவோம். அதை யாராவது எடுத்துப்படிப்பார்கள் என்பதற்காக அப்படிச்செய்தோம்.திராவிடர் கழகக் குடும்பத்தின் சிறு பிள்ளைகளுக்குக் கூட இருந்த இயக்க உணர்வு அது '' எனக்குறிப்பிடுகின்றார்.

அய்யா ஆசிரியர் உட்பட திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்படுகிறார்கள்.சிறைச்சாலைகளில் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். அப்போது ஆளுநரைப் பார்த்து, " எதற்காக எங்கள் இயக்கத்தைவரைக் கைது செய்கிறீர்கள் ...."என்று அன்னை மணியம்மையார் ஆளுநர் சொல்கிறார் " நீங்கள் திமுகவை ஆதரிப்பதுதான் தவறு. திமுகவை ஆதரிக்கமாட்டோம் என்று நீங்கள் சொன்னால் நாங்கள் உங்கள் தோழர்களை விட்டுவிடுகிறோம் என்று  சொன்னார். 'அப்படிச்சொல்ல முடியாது 'என்று தீர்மானமாகச் சொன்னார் அன்னை மணியம்மையார்."அரசின் அடக்குமுறைக்கும் ,நியாயமற்ற கோரிக்கைகளுக்கும் இடம் தராதவர் அவர்.வரலாற்றில் இது எவ்வளவு முக்கியமான பக்கம் என்பதைச் சிந்தியுங்கள்.எந்த இயக்கம் தன் மீதான அவதூறில் தொடங்கப்பட்டதோ அந்த இயக்கத்துக்கான ஆதரவை தரவேண்டிய வரலாற்றுத்தேவையை அந்தத் தியாகப்பெண்மணி பற்றற்ற உறுதியுள்ளத்துடன் நல்கினார் ' என்று குறிப்பிடுகின்றார்...."அவரது(அன்னை மணியம்மையார்) உடல் நலன் குன்றியபோது ,ஆசிரியர் அவர்களை பொறுப்பெடுக்கச்சொல்லிக் கேட்டார்கள். அதை ஆசிரியர் மறுத்துவிட்டார்." இது ஒரு வரலாற்றுப்பதிவு. என்னைப்போன்றவர்கள் இயக்கத்திற்குள் வராத காலகட்டம்.அன்னை மணியம்மையார் அவர்கள் கேட்டுக்கொண்டபோதும், அவர் இருக்க நான் தலைமைப்பொறுப்பு எடுக்க மாட்டேன் என்று அய்யா ஆசிரியர் அவர்கள் மறுத்திருக்கின்றார்.

"அந்தக் காலத்திலேயே திராவிடர் கழகம் என்னும் மகத்தான இயக்கத்திற்கு தலைமை தாங்கியவர் அன்னை மணியம்மையார்.இந்த அளப்பரிய சாதனை கண்டுகொள்ளப்படாதது ஏன் ? அவரின் மறைவுச்செய்தியை 'ஹிந்து ' பத்திரிக்கை செய்தியாகக் கூட வெளியிடாமல் ,காலமானவர்கள் பட்டியலில் வெளியிட்டது .அவர் இராவண லீலா கொண்டாட்டத்தை முன்னெடுக்காமல் இருந்திருந்தால் 'ஹிந்து 'இவ்வாறு செய்திருக்குமா? வரலாற்றின் பக்கங்களில் இந்தக் கேள்வி பதிந்து நிற்கிறது." என்று குறிப்பிடுகின்றார்.

முடிவாக போர்க்குணமிக்க கொள்கைப் பிடிப்பு கொண்டவர் மட்டுமல்ல அன்னை மணியம்மையார் நிர்வாகத்திறன் மிகுந்தவர் என்பதனை பட்டியலிட்டு காட்டியுள்ளார் இந்த நூலின் ஆசிரியர் ஓவியா அவர்கள். "தனது திருமண ஏற்பாட்டின்  நோக்கத்தை நிறைவு செய்யும் பொருட்டு அம்மா அவர்களை அய்யா அவர்கள் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் ஆயுட்செயலாளராக நியமித்தார். அவருடைய எண்ணமும் மதிப்பீடும் எவ்வளவு சரியானது என்பதை வாழ்ந்து மெய்ப்பித்தார் அம்மா .பெரியாருடைய சொத்தைத் தொடர்புபடுத்தி அம்மையார் அவமதிக்கப்பட்டது மிக அதிகம்.ஆனால் தனக்கென கொடுத்த சொத்துக்களையும் காப்பாற்றி அவருடைய சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கே எழுதிக்கொடுத்தார் அம்மா " என உருக்கமாக , மிகச்சரியான தனது தாய் பட்ட வேதனை பொறுக்காமல் அவரது தியாகத்தை, பணியை,நெஞ்சுரத்தை,கொள்கை வீரியத்தை,தன்னலமற்ற பொது நலத்தை விவரிக்கும் அன்னை மணியம்மையாரின் மகளாக இந்த இடத்தில் நூலாசிரியர் ஓவியா தென்படுகின்றார். பாராட்டுகள், நன்றிகள்,வணக்கங்கள்....

"நிறைவாக அன்னை மணியம்மையாரின் மறைவுக்குப்பிறகு அவரது வழியில் திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழி நடத்தி வருகிறார்.அய்யா அவர்களின் பெண் விடுதலைக் கொள்கைகளை தொடர்ந்து பரப்புரை செய்துவருகிறது இயக்கம் .பெண்களின் கல்விக்காக நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன....." எனக் குறிப்பிட்டு அன்னை மணியம்மையார் காலகட்டத்துக்கு பின்னால் இந்த நூல் பயணிக்கவில்லை எனக்குறிப்பிடுகின்றார். அண்மையில் மறைந்த திராவிடர் கழகத்தின் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி உள்ளிட்ட கருஞ்சட்டைப்பெண்களின் வரலாறு அடுத்தப் பாகமாக எழுதப்படல் வேண்டும்.

பின் இணைப்பாக "சுயமரியாதை இயக்கப்  பெண்கள் பங்கேற்ற கூட்டங்களும் மாநாடுகளும்" எனத் தலைப்பிட்டு கொடுத்திருக்கின்றார். " உலக வரலாற்றில் ஒரு நாத்திக இயக்கத்துக்குத் தலைமை வகித்து எழுச்சியுடன் நடத்திக்காட்டிய அன்னை மணியம்மையார் குறித்து ,வெளி உலகத்துக்குக் கொண்டு வரவேண்டிய பல தகவல்களை அரிதின் முயற்சி செய்து வெளியில் கொண்டு வந்துள்ள தோழர் ஓவியாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும் " இது திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தனது அணிந்துரையில் கொடுத்திருக்கும் பாராட்டுரை. படித்துப்பாருங்கள். பாராட்டி மகிழ்வீர்கள்.   


Saturday, 12 January 2019

அண்மையில் படித்த புத்தகம் : கருஞ்சட்டைப் பெண்கள்.....(4)...ஓவியா

ண்மையில் படித்த புத்தகம் : கருஞ்சட்டைப் பெண்கள்
நூல் ஆசிரியர்               : ஓவியா
                                   கட்டுரை (4)
அண்மையில் எழுத்தாளர் சமஸ் அவர்கள் " பெரியாரைப் புரிந்து கொள்வது எப்படி ? " என்று தி இந்து தமிழ் நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். நல்ல கட்டுரை. இந்தக் கருஞ்சட்டைப் பெண்கள்   நூலின் ஆசிரியர் ஓவியா அவர்கள் இந்தப் புத்தகத்தில் " காந்தியாரைப் புரிந்து கொள்வது எப்படி? -அதுவும் பெண்ணியல் நோக்கில் " என்று தலைப்புக் கொடுக்கும் வண்ணம் ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றார். அதன் தலைப்பு " இந்தியப் பெண்ணுரிமைப் போராட்டத்தின் பிதாமகனா காந்தியார் ? " என்னும் கட்டுரை.  சங்க கால இலக்கியத்தில் இருந்து ஆரம்பித்து பெண் கல்வி பற்றி ஒரு முன்னோட்டத்தை,வரலாற்றை சொல்லும் நூல் ஆசிரியர் ஓவியா காந்தியின் போராட்ட களத்தில் பெண்கள், தந்தை பெரியாரின் போராட்ட களத்தில் பெண்கள் என இரண்டு பார்வைகளை வைக்கின்றார்.இரண்டையும் வேறுபடுத்திக்காட்டும் விதம் புதுமை.

காந்தியைப் புரிந்து கொள்வது மிகவும் கடினமான ஒன்று. நமக்கு காந்தியார் கொள்கைகளில் மாற்றுக்கருத்து உண்டே தவிர, அவர் மீது மரியாதை உண்டு. அவரின் எளிமை, உண்மைத்தன்மை போன்றவற்றில் இன்றைக்கும் எனக்கு ஈர்ப்பு உண்டு.ஆனால் பெரியாரியல்,அம்பேத்கர் இயல் நோக்கில் விமர்சனப்பார்வை எப்போதும் உண்டு.காந்தியார்  தெரிந்துதான் குழப்பினாரா? அல்லது தெரியாமல் குழப்பினரா ? என்பது நம்மையே குழப்பிவிடும் கேள்வி. விவாதத்துக்குரியது.ஓவியா இந்த நூலில் அதனைத் தெளிவுபடுத்துகிறார். காந்தியாரின் நம்பிக்கை என்பது எதன் அடிப்படையலானது என்னும்  உண்மை புரிந்தால் நம்மால் காந்தியைப் புரிந்து கொள்ள முடியும்.

" காந்தியாரைப் போலி மனிதராகப் பார்க்கவில்லை.அவர் போலியான வார்த்தைகளை உச்சரிக்கவில்லை.உண்மையாகவும் ,உணர்வு பூர்வமாகவும் இவ்வாக்கியங்களை அவர் சொல்கிறார். 'மதத்தில் இருந்து ஒரு நொடி கூட என்னைப் பிரிக்க முடியாது'. என்னுடைய அரசியலாக இருக்கட்டும், என்னுடைய நடவடிக்கைகளாக இருக்கட்டும். அவை என்னுடைய மதத்திலிருந்துதான் வருகின்றன.'என்று அவர் சொல்கிறார். அவருடைய மதம் என்பது இந்து மதம்...." மதத்தை எதிர்க்காமல் பெண் விடுதலையைப் பேச முடியுமா? அப்படிப் பேசினால் அது உண்மையானதாக இருக்குமா ?என்பதுதான் நாம் அடிப்படையாக வைக்கின்ற கேள்வி". எந்த மதமாக இருந்தாலும் மதத்தை நான் உண்மையாகப் பின்பற்றுகிறேன் என்று ஒருவர் சொன்னால், அவர் பெண் விடுதலைக்கு எதிரான மன நிலை உள்ளவர் என்பதனை நாம் உணர்ந்து கொள்ள முடியும். உணர்ந்து கொள்ள வேண்டும். சாதியை எதிர்த்தால் நமது நாட்டில் ஆணவக்கொலையில் முடிகின்றது. அயல் நாடுகளில் மதத்தை எதிர்த்தாலும் ஆணவக்கொலையில் முடிகின்றது. 18 வயதான 'ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன்' -சவூதி அரேபியப் பெண் இன்றைக்கு இஸ்லாத்தில் இருந்து நான் விடுபட்டுக்கொண்டேன், எங்கள் நாட்டு சட்டப்படி என்னைக் கொன்று விடுவார்கள், எனக்கு அடைக்கலம் கொடுங்கள் என்று கனடாவில் தஞ்சம் புகுந்திருக்கின்றார். எங்கள் குடும்பத்தினரே என்னைக் கொன்று விடுவார்கள் என்று சொல்கின்றார்.எனவே எவராக இருந்தாலும் ஈரோட்டுக்கண்ணாடியில் பார்த்தால், மத ஆதரவாளர் என்றால் பெண் விடுதலைக்கு எதிரானவர் எனப்பொருள். காந்தியார் தன்னுடைய அரசியல், உண்ணல், உடுத்தல்,உறங்கல், பேசுதல்  என அனைத்தும் தன்னுடைய மதத்திலிருந்துதான் வருகின்றது என்று சொல்கின்றார். எனவே  ஒரு அளவிற்கு பெண்ணுக்கு உரிமை  வேண்டும் எனச்சிந்தித்தவர் காந்தியார் எனக்குறிப்பிடுகின்றார்.   

 "காந்தியார் எவ்வாறு ஒருபுறம் தாழ்த்தப்பட்டோர் விடுதலையை முன்னிறுத்தி பேசிக்கொண்டே மற்றொரு புறம் அவர்களை அடிமைப்படுத்துகிற வர்ணாசிரமத்தை ஆதரித்தாரோ அதே போல்தான் பெண்கள் விசயத்திலும் அவரது எண்ணப்போக்கு இருந்தது. இது காந்தியாரின் முரண்பட்ட சிந்தனைப்போக்கு. அவருடைய மகன், தனது மனைவி இறந்தபின் மறுமணம் செய்துகொள்ள விரும்பி  அவரிடம் கேட்டபோது " உன்னைப்போலவே திருமணமாகி ஒரு குழந்தையுடனிருக்கும் விதவைப் பெண்ணைத் திருமணம் செய்துகொள் ' என்று சொல்கின்ற காந்தியாரைப் பார்த்து வியக்கின்ற நேரத்தில் ,அவரது மகன் ஒரு இஸ்லாமியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதை கேள்விப்பட்டவுடன் எதிர்க்கின்ற காந்தியாரை எப்படி புரிந்து கொள்வது என்று நாம் திகைக்க வேண்டியிருக்கிறது ...." பக்கம்(34).. 

" ஒரு பெண் ஜாதிக்கும் மதத்திற்கும் கட்டுப்பட்டு இருக்கவேண்டும் என்பதில் எந்த மாற்றத்தையும் விரும்பாத காந்தியார்,பெண்கள் படிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைக்கிறார்  அது எப்படி சாத்தியம் ? எனக் கேள்வி கேட்கும் நூல் ஆசிரியர் அது ஏன் சாத்தியமில்லை என்பதற்கான காரணங்களை விளக்கியிருக்கின்றார், இன்றைய அமைப்பு என்பது ஆணாதிக்க அமைப்பு, பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்தும் அமைப்பு. " நமது நோக்கமெல்லாம் தத்துவார்த்த ரீதியாக இந்த அமைப்பைக் கேள்வி கேட்கின்ற தலைவர்கள் யார் இருந்தார்கள் என்பதுதான்.எனக்குத்தெரிந்த வரையில் பெரியார் ஒருவரே அந்த இடத்தை மிகச்சிறப்பாக நிரப்புகிறார். நாம் இதுவரை பார்த்த அந்த வரலாற்றில் பெண்ணடிமை தொடங்கிய மூலத்தை கேள்வி கேட்டவராக அவர் மட்டும்தான் இருக்கிறார்.திருமண அமைப்புக்கு வெளியே நின்ற பெண்கள்தான் சாதனையாளர்களாக இருந்திருக்கிறார்கள்.பெரியார் ஒருவர்தான் அந்த மூலத்திற்கு வருகிறார். அவர் கூறுகிறார்."திருமணம் என்பது கிரிமினல் குற்றமாகக் கருதப்படக்கூடிய சமுதாயம் வர வேண்டும் " என்று. "பெண் விடுதலைக் கோரிக்கைகளை பகுதி பகுதியாக பலர் முன்வைத்திருக்கிறார்கள்.ஆனால் அவற்றை ஆணிவேரிலிருந்து தொட்ட,தொடர்ந்து பயணித்த இயக்கமாக பெரியார் இயக்கம் இருந்தது ..." எனக்குறிப்பிடுகின்றார்.

உலகப் பெண் விடுதலை இயக்கத்திற்கும்,இந்திய பெண் விடுதலை இயக்கத்திற்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டும் ஓவியா,இரண்டுக்கும் உள்ள மொழி வேறுபாட்டை சுட்டிக்காட்டுகிறார்.மாற்றி யோசிக்க சொல்கிறார் நம்மை. ஏன் இப்படி எனச்சிந்திக்கவும் சொல்லி அதற்கான விடையையும் நூல் ஆசிரியரே கூறுகின்றார். வர்ணாசிரமம் என்பது வெறுமனே சாதி வேறுபாட்டை நிலை நிறுத்துவது மட்டுமல்ல, பெண் அடிமைத்தனத்தை வலியுறுத்துவது என்பதைச்சொல்கிறார். " எப்படி வர்ணாசிரமம் பார்ப்பனர்களைத் தூக்கி நிறுத்துகிறதோ,அப்படியே ஆண்களையும் தூக்கி நிறுத்துகிறது " ...அந்த வர்ணாசிரமத்தை முழுமனதோடு ஆதரித்தவர் காந்தியார் என்பதனை வலியுறுத்துகின்றார்.
காந்தியார் 'உடல் ரீதியாக பெண் ஆணுக்கு இணையானவள் 'என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கான ஆதாரங்களைப் பட்டியலிட்டு கொடுத்திருக்கின்றார்.பெண்களைப் பொறுத்தவரையில் காந்தியாரின் கோட்பாடும் வர்ணாசிரமக் கோட்பாடும் ஒன்றுதான் எனச்சொல்கின்றார். இதற்கு நேர் எதிரானது தந்தை பெரியாரின் புரிதல்...ஒரே வாக்கியத்தில் 'வீட்டிற்கு ஒரு அடுப்படி, ஆணுக்கு ஒரு பெண் என்கிற அமைப்பை என்று  மாற்றுகிறாயோ அன்றுதான் பெண்ணுக்கும் விடுதலை, ஆணுக்கும் விடுதலை ' என்று சொல்கின்றார். இது இன்னொரு எல்லை என்பதையும் குறிப்பிட்டு சொல்லி விளக்கியிருக்கின்றார்.காந்தியாரின் கொள்கையைப் பற்றியும் அவர் ஏன் அகிம்சைப்போரட்டத்தில்,சுதந்திரப்போராட்டத்தில் பெண்களை பங்குபெறச்செய்தார் என்பதைப் பற்றியும் நூல் ஆசிரியரின் பார்வை தனித்தன்மையாக இருக்கிறது.இதனை திராவிடர் கழகத்தின் வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் மிகச்சிறப்பாக இந்தப் புத்தகத்தின் வெளியீட்டின்போது தனது உரையில் குறிப்பிட்டார்.

குடும்பத்திலிருந்து தொடங்கினார் என்னும் தலைப்பிட்டு, தந்தை பெரியாரின் தாயார் சின்னத்தாயம்மா பற்றியும்,அன்னை நாகம்மையார் பற்றியும் அன்னை நாகம்மையார் அவர்களை நெறிப்படுத்த தந்தை பெரியார் மேற்கொண்ட முயற்சிகள் பற்றிக் குறிப்பிட்டு, அப்படி அய்யா பெரியார் அவர்கள் முயற்சி எடுத்திருக்காவிட்டால்,அப்பேற்பட்ட நாகம்மையார் கிடைத்திருப்பாரா என்பதனைக் குறிப்பிடுகின்றார்.கள்ளுக்கடை மறியல், அன்னை நாகம்மையார் அவர்கள் இறந்தபோது பெரியாரின் இரங்கலுரை போன்றவற்றை விரிவாக எடுத்துரைக்கின்றார்.தந்தை பெரியார் அவர்களின் தங்கை கண்ணம்மா பற்றி தனி அத்தியாயம் இருக்கிறது. அதனைப் போலவே மூவலூர் இராமமிர்தம் அம்மையார்(அரிய பல தகவல்களோடு ஒரு 17 பக்க கட்டுரை) பற்றிய கட்டுரை பல நியாயமான கேள்விகளை எழுப்புகிறது . மூவலூர் இராமமிர்தம் அம்மையாரின் நூலிற்கு முன்னுரை எழுதியவர் ஒரு பெண்,பொருள் உதவி செய்தவர் ஒரு பெண், மற்றும் அவரின் போராட்ட முறைகள்,எந்த நிலையில் இருந்து அவர் பொதுப்பணிக்கு வந்தார், எப்படி சமாளித்தார் என விரிவான தகவல்களோடு அந்தக் கட்டுரை உள்ளது.  முத்துலெட்சுமி அம்மையாரின் மவுனம் பற்றிய கட்டுரை, குஞ்சிதம் குருசாமி, மீனாம்பாள் சிவராஜ்,வீரம்மாள், டாக்டர் எஸ்.தருமாம்பாள்,நீலாவதி அம்மையார்,தொடரும் வீராங்கனைகள், பார்ப்பனியப் பெண்களின் சாட்சியம் என்று தொடர் கட்டுரைகளைக் கொடுத்திருக்கின்றார்.ஒவ்வொரு கருஞ்சட்டைப் பெண் தலைவரைப் பற்றியும் அவர் கொடுத்திருக்கும் தகவல்களும் விவரிப்பும் சொல்வதற்கு நிறைய இருக்கிறது.பேச்சாளர்கள் கட்டாயம் படித்து குறிப்புகள் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டுரைகள் அவை.எப்பேர்ப்பட்ட கருஞ்சட்டை பெண் தலைவர்களைப் பெற்றிருக்கிறோம் நாம் எனும் இறுமாப்பு கொள்ளவைக்கும் தகவல்கள் அவை... 

                                                                                         (அடுத்த பகுதியோடு முடியும்) 

Friday, 28 December 2018

'நெருப்பினுள் துஞ்சலில்' ........ மு.சங்கையா


தோழர் நேரு,

              "நெருப்பினுள் துஞ்சல்  " சிறுகதை தொகுப்பை படித்து முடித்தபின் பல்வேறு சூழல்களில் வாழும் மனிதர்களை சந்தித்து உரையாடி வெளியில் வந்தது போல உணர்ந்தேன்.கதையில் வரும் அத்தனை மனிதர்களும் நமக்கு நெருக்கமானவர்களே.அன்றாட வாழ்வில் தினமும் சந்தித்தாலும் நம் நினைவுப் பாசறையில் அவர்கள் என்றும் நின்றதில்லை. எங்கேயோ பார்த்திருக்கிறோம் என்பதற்கு மேல் அவர்களை பற்றிய எந்த சிந்தனையும் வருவது இல்லை.

              நம் வாழ்வில் தினம் தினம் வந்து போனாலும் அவர்களது அன்றாட வாழ்க்கைக்குள் கண்ணுக்கு தெரியாத சோகங்கள் மண்ணுக்கு அடியில் உணவுக்காக போராடும் வேர்களை போல போராடிக்கொண்டிருப்பதை  போராடிக்கொண்டிருப்பதை யாரும் ஒரு கணம் கூட எண்ணிப்பார்ப்பதில்லை.அவர்களை கண்டும் காணாதது போல் எளிதாக கடந்து போய்விடுகின்ற நிலையில் சமூகம் கண்டு கொள்ளாத அந்த எளிய மனிதர்களை அருகில் சென்றும் தொலைவில் நின்றும் ,தேடிப்போய் பார்த்தும் அவர்களோடு உரையாடியும் அதனால் பெற்ற அனுபவங்களை கதைக்கான களமாக மாற்றி அவர்களை அந்த கதையின் பாத்திரங்களாக வலம் வர செய்திருப்பதும் 'நெருப்பினுள் துஞ்சல்'தொகுப்பிற்கான வெற்றியாகவே நான் கருதுகிறேன்.



              தினமும் சந்திக்கும் அதே மனிதர்களை உங்கள் கதையிலும் காணும்போது அடடே இவர்களை ஏற்கனவே சந்தித்திருக்கிறோமே என்கிற உணர்வே எழுகிறது.இந்தக் கதைகளில் வரும் எவரும் கற்பனை அல்ல எல்லாமே நிஜம்தான்.மு.வ.வின் எல்லா புதினங்களிலும் மு.வ. ஒரு பாத்திரமாக வந்து நல்லுரை வழங்குவதைப் போலவே நெருப்பினுள் துஞ்சலுக்குள்ளும் நல்லதை போதிக்கும் ஆசானாக நீங்கள் வருவதும் வாழ்க்கைக்கான கருத்துக்களையும் ஒரு சில கதைகளில் பகுத்தறிவுவாதங்களை தொட்டுப்பேசுவதும் சுவையாகவே இருக்கிறது.

              "அடி உதவுறது மாதிரி" கதையில் படிக்க மறுக்கும் பையனிடம் "  நீச்சல் கத்துக்கிறது,சைக்கிள் ஓட்டக்கத்துகிறது மாதிரிதான் படிக்கிறதும். விழுந்து விழுந்து எந்திரிச்சு,சைக்கிள் ஓட்டப்பழகினது மாதிரி முயற்சி பண்ணிக்கிட்டே இரு. கணக்கு வந்திரும் "என்று எளிமையாக புரிய வைப்பது அழகு.

               "முட்டுச்சுவரில் " படிப்பு என்பது ஒன்றும் வாழ்க்கையை விட பெரிதல்ல,ஒத்துப்போகலைன்னா தலை முடி போச்சுன்னும் போயிரணும்.ஒரு பாதையிலே போறோம்,முட்டு சுவர்.இதுக்கு மேலே போனா போக முடியாதுன்னு உணர்ந்து திரும்பி வேற பாதையிலே போறதில்லையா.அதுபோல தான் படிப்பும் என்று மண்ணின் வாசனையோடு கதையை நகர்த்துவது அருமை.

               "அடி உதவுற மாதிரி" யில் முயன்று படிக்க சொல்வதும் ,"முட்டுச்சுவரில் " ஒத்துப்போகவில்லை என்றால் விட்டுவிட அறிவுறுத்துவதும் முரணாக தோன்றினாலும் சூழல்கள்தான் முடிவைத் தீர்மானிக்கிறது என்கிற நோக்கில் இரண்டுமே உண்மையை உரத்து பேசுவதாகவே தோன்றுகிறது.இப்படி எல்லா கதைகளிலும் உங்கள் அனுபவங்கள் கருத்து செறிவோடு வெளிப்படுவதைக் காண முடிகிறது.

               "சீr சுமந்து அழிகிற சாதி சனமே " என்கிற தலைப்பே அவலத்தின் சுவையை சுமந்து வந்து நெஞ்சுக்குள் இறக்கி வைத்தது போல் இருந்தது. ...வெளிச்சத்தில் விழுந்து சாகும் விட்டில் பூச்சிகளாக இருக்கும் இந்த சனங்களுக்கு இந்த ஒரு கதை போதாது,ஒரு இயக்கமே தேவைப்படுகிறது.

              "ஒரு வளாகம்,ஒரு நாய், ஒரு பூனை "- இது ஒரு வழக்கமான கதை அல்ல. பகை முரண் கொண்ட நாயையும் பூனையையும் நெருக்கடிகள் நட்பாக்குவதும், நட்பாகி சேர்ந்து நடப்பதும்,அருகருகே படுத்து இருப்பதும் எப்படி என்கிற புதிரோடு கதை தொடங்கி பின் கணவன் மனைவி உறவுகளோடு முடிச்சு போட்டு அதை மெல்ல அவிழ்ப்பதில் ஒரு படைப்பாளனின் ரசனையைக் கண்டேன். முதல் shot ல் நாய்,பூனை. அடுத்த Shot ல் கணவன் மனைவி சண்டை ,இறுதியில் சிக்கல் மிகுந்த இல்லற உறவுக்கு தீர்வு என்று கதை முடியும்போது ஒரு குறும்படத்தின் சாயலைப் பார்த்தேன்....எல்லா உயிரினங்களின் சின்ன சின்ன அசைவுக்குள்ளும் ஒரு வாழ்க்கை புதைந்து கிடக்கிறது.கூர்ந்து கவனித்தால் அதுவே மனிதனுக்கு பாடம் சொல்லும் வேதமாகும் என்பதை சுருக்கமாக கூறியிருந்தால் இன்னும் சுவை கூடி இருக்கும்.

               ஜாதகத்தை நம்பாதே என்கிற பகுத்தறிவு கருத்தை "யார் யார் வாய்க்கேட்பினும் " கதையின் மூலம் சொல்ல முயன்றிருப்பது சரிதான். ஆனால் அது ஒரு துன்பியலில் முடிந்து அவலத்தை அதிகமாக்கி சொல்ல வந்த கருத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. ஒரு படைப்பாளியின் உரிமைக்குள் தலையிடுவது சரி அ;ல்லதான் ஆனாலும் செல்வி ஏன் சாக வேண்டும்? ...அவள் கருப்பையாவை மறுமணம் செய்துகொண்டு சிறப்பாக வாழ்ந்து காட்டி ராசி,நட்சத்திரம், ஜாதகத்தின் மீது சம்மட்டி அடி கொடுத்திருந்தால் பெரியாரும் மகிழ்ந்திருப்பாரே.ஜாதகம் பொய் என்று நிரூபிக்க ஒரு பெண்ணைத்தான் பலியிட வேண்டுமா... ? எதிர்மறை அணுகுமுறை நோக்கத்தை பல நேரங்களில் சிதைத்து விடுவதுண்டு.

               பொதுவாக கூற வேண்டுமென்றால் ஒவ்வொரு கதையும் சமூகத்தின் கீழடுக்கில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி பதிவு செய்திருக்கிறது. கூடுதலாகவும் இல்லை.குறைவாகவும் இல்லை.சரளமான நடை.வெகுளித்தனமான மண்ணின் மனம் வீசும் உரையாடல்கள் கதைக்கு நெருக்கமாக கொண்டு செல்ல உதவுகிறது. சிறுகதை நெடுங்கதையாக மாறுவதை குறைத்திருக்கலாம். கதைக் கரு சிறப்பு ஆனால் ஆழமின்றி மெதுவாக நகர்வதாகவே எனக்குத் தோன்றுகிறது.

             சமூக மாற்றத்தை விரும்பும் ஒரு படைப்பாளி உள்ளதை உள்ளபடி பதிவு செய்வதில் நிறைவு கொள்ள முடியாது.அது ஒருவகை என்றாலும் அதை எழுதிக்குவிக்க வேறு பலர் உண்டு.சமூகப் படைப்பாளிகள் எளிய மனிதர்கள் தங்களை நோக்கி வரும் சவால்களை எப்படி துணிவோடு எதிர் கொள்கின்றனர் வெற்றி பெறுகின்றனர் என்பதைக் கதைக்களமாக கொண்டு நம்பிக்கை விதைகளை தூவ வேண்டும்.
           "நெருப்பினுள் துஞ்சல் " கதை தொகுப்பிலுள்ள பல கதைகள் எதார்த்தத்தை பிரதிபலிப்பது உண்மைதான் என்றாலும் வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை குறைந்த அளவு கூட விதைக்கத் தவறிச்செல்கிறது.அதே வேளையில், ஐயோ பாவம் என்கிற பச்சாதாப உணர்வு மேலோங்கி வருவதும் உண்மை. பச்சாதபமும்,அனுதாபமும் இயலாமையில் எழும் புலம்பல்களும் கதைக்குள் ஊறுகாயாக இருப்பதில் தவறல்ல ஆனால் அதுவே உணவாக இருக்கக்கூடாது.சமூக சிக்கல்களை அது தீர்க்க உதவாது என்பது எனது கருத்து.

            எழுத்தாற்றலும் சமூக நீதிக்கோட்பாட்டின் மீதுள்ள பற்றும், சமூகத்தின் மீதான அக்கறையும் உங்களை மிகச்சிறந்த சமூக படைப்பாளியாக நிச்சயம் உருவாக்கும்.'நெருப்பினுள் துஞ்சலில்' அதற்கான அறிகுறிகளை என்னால் காணமுடிகிறது.

                                              வாழ்த்துகள்
                                                                                                                         அன்புடன்
மு.சங்கையா ,மதுரை  


தோழர் மு.சங்கையா , பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். தமிழக அரசின் விருதுபெற்ற " லண்டன் ஒருபழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலைநகரம் " மற்றும் "பன்னாட்டுச்சந்தையில் பாரதமாதா " என்னும் நூல்களின் ஆசிரியர். தொழிற்சங்கத்தில் தீவிரமாகப் பணியாற்றிய தோழர். 'நெருப்பினுள் துஞ்சல் 'நூலை முழுவதுமாகப் படித்து ,தனது மதிப்புரையைக் கொடுத்துள்ளார். தோழர் சங்கையா அவர்களுக்கு மிக்க நன்றி.
அன்புடன் 
வா.நேரு


                                                                                                                                        

Thursday, 27 December 2018

மனு நீதியும் கருஞ்சட்டைப்பெண்களும்........

மனு நீதியும் கருஞ்சட்டைப்பெண்களும்.....

அண்மையில் படித்த புத்தகம் : கருஞ்சட்டைப்பெண்கள்
நூல் ஆசிரியர்               : ஓவியா
வெளியீடு                   : கருஞ்சட்டைப் பதிப்பகம்.

                                   கட்டுரை (3)
ஓவியா அவர்கள் தனது நூலில் தொல்காப்பியம் மற்றும் மனுநீதி என்னும் நூல்களை எடுத்துக்கொண்டு ,அந்த நூல்களைப் பெண்ணியல் நோக்கில் நோக்கி எழுதுகின்றார்.தொல்காப்பியம் எந்தக் காலத்தில் தோன்றியிருக்கின்றது என்பதனை "கற்பு, பரத்தமையும் இல்லாத சமூகத்திலிருந்து கற்பும், பரத்தமையும் தோற்றுவிக்கப்படுகின்றன.அங்கு ஒரு புதிய சமூகம் உருவாகிறது. அப்படி ஒரு புதிய சமூகத்தினுடைய குரலாக தொல்காப்பியம் பதிவாகிறது....அது சமூகத்திடம் வாழ்க்கை நெறிகளை முன்வைக்கிறது " என்று சொல்லும் நூலாசிரியர், அந்த நூல் சொல்லும் வாழ்க்கை நெறிகள் அனைத்தும் ஆணாதிக்க நோக்கிலானவை என்று ஆதாரங்கள் மூலம் குறிப்பிடுகின்றார். கற்பு நல்லது என்று தொல்காப்பியம் கூறுகின்றது அதே நேரத்தில் பரத்தமை தவறு என்றும் சொல்லவில்லை என்பதனைச்சொல்கின்றார். தொல்காப்பியம் நமக்கு கிடைத்த தொன்மையான நூல்தான், இலக்கண நூல்தான், பெருமை வாய்ந்ததுதான். ஆனால் அதுவும் ஒரு ஆணால் எழுதப்பட்டதுதானே . பெண் உரிமைகளுக்கு எதிரான நூற்பாக்களை, அவைகளின் கருத்துக்களை விரிவாக எழுதியிருக்கின்றார். பரத்தமை தப்பில்லை, ஆண் பரத்தையிடம் போகலாம், ஆனால் மாதவிலக்கான நாட்களுக்கு பிந்தைய  12 நாட்களும் பரத்தையிடம் போகாதே, மனைவியோடு இரு என்று சொல்லும் நூற்பாவை (செய்யுள் 187,அகத்திணையியல்,பொருளதிகாரம் )எடுத்துக்காட்டி ,தொல்காப்பியத்தின் நோக்கம் என்பதுவும் பிள்ளை பெறும் எந்திரமாக ,மனைவி இருக்க வேண்டும் என்பதுதானே என்னும் நியாயமான கேள்வியை முன்வைக்கின்றார்.

                                    மிகப்பெரிய  கலாச்சாரமாக சொல்லப்படும் தமிழனுடைய கலாச்சாரம் என்பது நிச்சயமாக பெண்ணுக்குச் சாதகமான கலாச்சாரம் இல்லை என்பதனை அடித்துச்சொல்லும் நூலாசிரியர் அதற்கு ஆதாரமாக தொல்காப்பிய நூற்பாக்களை எடுத்துக்கொண்டே விளக்கியிருக்கின்றார்.மனுதர்மத்தோடு ஒப்பிடும்போது தொல்காப்பியம் நாம் ஏற்றுக்கொள்ளத்தக்க நூலாக இருக்கிறது என்பதனையும்  குறிப்பிடுகின்றார். 

மனுநீதி என்பது எப்படிப்பட்ட அநீதியான நூல் என்பது திராவிடர் கழகத்தினருக்கு தண்ணீர் பட்ட பாடு. அசல் மனுதருமம் என்னும் புத்தகம் திராவிடர் கழக மாநாடுகளில் ஆயிரக்கணக்கில் விற்றிருக்கிறது. மனுநீதி ஒரு மறுபார்வை என்னும் பேராசிரியர் ப.காளிமுத்து அவர்களின் புத்தகம் மிகப்பெரிய கருத்து கருவூலம். திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் உரைகளில் மிகப்பெரிய அளவிற்கு இந்த மனுநீதியைப் பற்றிய செய்திகள் இடம் பெற்றன,பெறுகின்றன. திராவிடர் கழகத்தின் செயலவைத்தலைவர் அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் 'பெண் ' என்னும் அற்புதமான புத்தகத்தில் மனைவி,திருமணம்,மக்கட்பேறு,கருத்தடை,கைம்மையார்,விபச்சாரம்,கற்பு,மணவிலக்கு போன்ற உட்தலைப்புகளில் மனுதருமம் எப்படிப்பட்ட அதர்மங்களைச்செய்திருக்கிறது என்ற பட்டியல்களை மிகச்சுவையாகத்தருவார்.தந்தை பெரியாரும் அவரது தத்துவமும் எவ்வாறெல்லாம் பெண் விடுதலைக்கு அடிப்படையாக இருக்கிறது என்ற விவரங்களைத் தந்திருக்கின்றார். எனவே விரிவாக தெரிந்திருக்கக்கூடிய நமக்கு மனுநீதியைப் பற்றி மிகச்சுருக்கமாகக் கொடுத்திருக்கும் பகுதியாகத்தான் இந்தப் பகுதி இருக்கிறது. ஆனால் வித்தியாசமாக இருக்கிறது.

மனுநீதி மனிதர்கள் எப்படிப் பிறந்தார்கள் என்று சொல்வதைப் பார்க்கும்போது . " முகத்திலிருந்து பிறப்பானோ மூடனே,தோளிலிருந்து பிறப்பானோ தொழும்பனே ...." என்னும் புரட்சிக்கவிஞரின் கவிதை நமக்கு நினைவில் வருகின்றது.  பிரம்மன் முகத்திலிருந்து பிறந்தவன் பிராமணன் அப்புறம் கடவுளின் தோளில்,இடையில் காலில் பிறந்ததாகக் கூறும் மனுநீதி பெண்கள் எப்படிப் பிறந்தார்கள் என்பதனைச்சொல்லவில்லை என்பதனை ஓவியா  சொல்கின்றார்." பெண் எப்படிப்படைக்கப்பட்டாள் என்பதற்கு மனுதர்மத்தில் பதிலே  இல்லை.பெண்ணை ஒரு பொருட்டாகவே மனுதர்மம் எடுத்துக்கொள்ளவில்லை. இந்து மதத்தில் பெண்ணுக்கு இருத்தலே கிடையாது. தொல்காப்பியம் சமூகத்தின் அனைத்துப்பிரிவினரையும் மரியாதையோடு பேசியது.ஆனால் மனுதர்மம் அப்படியல்ல, உலகத்திலேயே ஒரு மோசமான நூல் மனுதர்மம். இதை எப்படி ஒரு நீதி நூலாக ஏற்றுக்கொள்வது என்கின்ற கேள்வியைத் தோற்றுவிக்கன்ற நூலாக இருக்கிறது " எனக்குறிப்பிடுகின்றார்,

மனுதர்மம் அங்கீகரிக்ககூடிய திருமணங்களைப் பார்க்கலாம் என்று கூறும் நூலாசிரியர் " இராட்சத திருமணம் என்கின்ற திருமணத்தைப் பற்றி இந்நூல் சொல்கிறது...இராட்சச திருமணத்தின் சரியான மொழிபெயர்ப்பைப் பார்த்தால் அது பாலியல் வன்முறையைத் தவிர வேறொன்றுமில்லை. மனுதர்மத்தை ஆழமாகப் பார்த்தோமேயானால் பெண் மீதான வன்முறையை முழுக்க முழுக்க மனுதர்மம் ஆதரிக்கிறது என்பதைத் தெளிவாகச்சொல்லலாம்  " என்று சொல்கின்றார்," இளம் வயதில் தந்தை, பருவத்தில் கணவன், முதுமையில் மகன். இந்த மூன்று நிலைகளிலும் பெண் காவலில்தான் இருக்கிறாள்.அதுமட்டுமன்றி மனுதர்மம் ஆண்களிடம்தான் பேசுகிறது. இந்த நூலின் வாசிப்பாளன் ஆண்தான். ஒரு வரி கூட பெண்ணை நோக்கியது கிடையாது " என்று குறிப்பிடுகின்றார். 

பெண்ணின், தமிழ்ச்சூழலின் உளவியல் பற்றிப் பேசுகின்றார் நூல் ஆசிரியர். அந்த உளவியலை உடைத்தது பெரியார் இயக்கம். உடைத்தவர்கள் கருஞ்சட்டைப் பெண்கள் என்பதனை நிறுவியிருக்கின்றார். "..உண்மையான அர்த்தம் என்னவென்று பார்த்தால் விடுதலை கேட்கும் பெண்ணை இந்தச்சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது,அங்கீகரிக்காது என்பதாகும். இப்படித்தான் தமிழ்ச்சமூக உளவியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த உளவியல் மூலங்களில் கை வைத்து கேள்வி கேட்டு ஒரு பெரிய கலாச்சார புரட்சிக்கு வித்திட்ட இயக்கம்தான் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் " என்று சொல்கின்றார். விதிகளை எழுதியவர்களே பிள்ளை பெறவேண்டும் என்பதற்காக எப்படி விதிகளைத் தளர்த்தினார்கள் என்பதையும் மனுதர்மத்தில் உள்ள விசயங்கள் இன்றைக்கும் கூட உளவியலாக இருக்கும் தன்மை பற்றி எடுத்துக்காட்டுகளோடு கொடுக்கின்றார்.  
      
 சிலரிடம் பேசும்போது சொல்வார்கள், இதெல்லாம் அந்தக் காலத்தில் இருந்தது ,இப்ப இருக்கிறதா என்பார்கள். திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்றைக்கு இருக்கும் சட்டங்கள் எப்படி மனு நீதி அடிப்படையில் இருக்கிறது என்பதற்கான பட்டியலை ஒரு நூலாக கொடுத்திருக்கின்றார். நாம் இராமயாணத்தைப் பற்றிப்பேசும்போது, ஏங்க இதைப்பத்தி இப்ப பேசுறீங்க என்று கேட்ட பொதுவுடமை இயக்கத்தோழர்கள் கூட சேது சமுத்திரத்திட்டம், ராமர் பாலம் என்னும் பெயரால் முடக்கப்பட்டபோது, நம்பிக்கை என்னும் பெயரில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைக் கொடுக்கும் சேது சமுத்திரத்திட்டம் நிறுத்தப்பட்டபோது ,இன்னும் அதிகமாக இராமயாணப்பாத்திரங்களை மக்கள் மத்தியிலே பேசியிருக்க வேண்டும்  என்று ஒத்துக்கொண்டார்கள். அதனைப் போல சாதி ஒழியவேண்டும்,சாதி மறுப்புத்திருமணங்கள் நிறைய நடைபெற வேண்டும், பெண்கள் தங்கள் துணையைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு இயல்பாக சமூக அமைப்பில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், அதற்காக உழைப்பவர்கள் மனு நீதி என்னும் கொடுமையான சட்ட நூலைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும், சாதி அமைப்பில் மேல் அடுக்கில் இருப்பவன் கீழ் அடுக்கில் இருக்கும் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளலாம், ஆனால் சாதி அமைப்பில் கீழ் அடுக்கில் இருப்பவன் மேல் அடுக்கில் இருக்கும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று எழுதி வைத்துள்ள சட்டம் மனு நீதி. " உடுமலைப் பேட்டை சங்கர் கொலைக்கும், தருமபுரி இளவரசன் கொலைக்கும் அடிப்படைக் காரணம் மனுநீதி " என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நூலாசிரியர் சொல்வது நூற்றுக்கு நூறு சரி.

பெண்களுக்கு எதிராக நடக்கும், நடந்த அநீதிகளை பட்டியலிடும் நூலாசிரியர் " மதத்தின் பெயரால்,கடவுளின் பெயரால்,கோயிலின் பெயரால்தானே இந்த அநியாயங்கள் எல்லாம் பெண்ணின் மீது சுமத்தப்பட்டிருக்கிறது .இந்த மதம்தான்...இந்தக் கோயில்தான்...இந்தக் கடவுள்தான் பெண்ணின் எதிரி என்று திராவிடர் இயக்கத்தைத் தவிர வேறெந்த இயக்கம் சொல்லியது ? 'பெரியாரைத் தவிர வேறு எந்தத் தலைவர் இதனைக் கேட்டார் ? என்று நறுக்கென மனதில் படும் வண்ணம் கேட்கின்றார்,..

(தொடரும்)

      

Tuesday, 25 December 2018

சாதியும் கருஞ்சட்டைப்பெண்களும்.......

சாதியும் கருஞ்சட்டைப்பெண்களும்.......

அணமையில் படித்த புத்தகம் : கருஞ்சட்டைப்பெண்கள்
நூல் ஆசிரியர்               :ஓவியா
                                    கட்டுரை (2)
மொத்தம் 16 அத்தியாயங்கள் உள்ள இந்தப் புத்தகத்தில் முதல் அத்தியாயத்தின் தலைப்பு "பின்னோக்கி ஒரு முன்னோட்டம் ". களத்தில் நின்ற கருஞ்சட்டைப்பெண்களைப் பற்றி அறிவதற்கு முன் பெண்களின் நிலைமை எப்படி இருந்தது என்பதனை ஒரு வரைபடம் போலவும் ஓவியம் போலவும் எடுத்துக்காட்டுவது இந்தத் தலைப்பின் நோக்கமாக இருக்கிறது. பெண்களின் தலைமையில் இருந்த சமூகம் எப்படி ஆண்களின் தலைமைக்கு மாறியது ? பெண் ஏன் ஆணுக்கு இரண்டாம் தரமான குடிமகளாக உலகம் முழுவதும்  பார்க்கப்படுகிறாள் ? எனும் கேள்வியை எழுப்பி விடை தேடுவதற்காக தோழர் ஏங்கல்சு எழுதிய "குடும்பம்,தனிச்சொத்து,அரசு ஆகியவற்றின் தோற்றம் " எனும் நூலின் கருத்தினை விளக்குகின்றார்.ஏங்கல்சுவின் கருத்துக்களில் மாறுபடும் நூலாசிரியர் அதற்கு ஆதாரமாக 'டாவின்சி கோட் ' திரைப்படத்தின் மூலம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே தலைமைக்காக ஒரு போர் நடந்திருக்க வேண்டும் எனும் ஊகத்தினை சொல்லி அதற்கான காரணங்களையும் குறிப்பிடுகின்றார். " ஆண் தலைமையை விரும்புகிறவர்களாக வரலாற்றில் பெண்கள் " எப்படி மாற்றப்பட்டார்கள் என்பதனையும் விளக்குகின்றார். கருத்தியல் ரீதியாக உணர்ந்து கொள்ளக்கூடிய வகையில் அடுத்தடுத்து வரலாறு எப்படி நிகழ்ந்திருக்கக்கூடும் என்பதனை விளக்குகின்றார்,என்னென்ன நிகழ்ந்திருக்கக் கூடும் என்பதனை நாமும் கூட ஊகிக்க முடியும் வகையில் விளக்கம் அளித்திருக்கின்றார் நூலாசிரியர் ஓவியா.

தலைமை ஆணிடம் மாறிய நிலையில் பெண் வாரிசை உருவாக்குபளாக, முதல் அடிமை இனமாக  மாற்றப்பட்ட நிகழ்வைக் குறிப்பிட்டு உலகில் உள்ள பெண்களுக்கு எல்லாம் ஒரு ஆணிற்கு வாரிசாக  பிள்ளை பெற்றுத்தரவேண்டும் என்பது பிரச்சனை ஆனால் இந்தியாவில் ? " இங்கு ஒரு ஆணிற்கு பிள்ளை பெற்றுத்தருவது மட்டும் அவள் வேலை அல்ல.அதையும் தாண்டி ஒரே சாதிக்குள் பிள்ளை பெற்றுத்தரவேண்டும்.இது உலகில் மற்ற பெண்களுக்கு இல்லாத பிரச்சனை " என்று குறிப்பிடும் நூல் ஆசிரியர் இங்கு சாதி மட்டும் பிரச்சனை அல்ல,குடும்பம் என்னும் அமைப்பும் பிரச்சனை என்பதனை விளக்கிச்செல்கின்றார்.சாதி ஒழிய வேண்டும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்பவர்கள் கூட குடும்பம் என்னும் அமைப்பு ஒழிய வேண்டும் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வதில்லை.குடும்பம் இல்லையென்றால் சமூகம் கெட்டுவிடாதா? ஒழுங்கு குலைந்து விடாதா? என்னும் கேள்வி எழுப்பப்படுகின்றது.அதனால்தானோ என்னவோ நூல் ஆசிரியர் ஓவியா 'குடும்பம், தனிச்சொத்து ' என்னும் ஏங்கல்சின் கருத்தில் இருந்து புத்தகத்தினை  இருந்து ஆரம்பித்திருக்கின்றார் போலும். குடும்பம் வேண்டுமா ? வேண்டாமா? என்பது அடுத்த நிலை, ஆனால் இப்போது இருக்கும் குடும்ப அமைப்பு முறை என்பது பெண்களை ஒடுக்குவதற்கான கருவியாகத்தான் பெரும்பாலும் பயன்படுகின்றது என்பது கண்கூடு. 

சாதியென்னும் இழிவு நம்மைப் பாடாய்ப் படுத்திக்கொண்டிருக்கிறது. "சாதி என்னும் தாழ்ந்தபடி/நமக்கெல்லாம் தள்ளுபடி/ சேதி தெரிந்துபடி இல்லையேல்/ தீமை வந்துடுமே மறுபடி " என்றார் புரட்சிக்கவிஞர். எப்படியாவது வர்ணத்தின் அடிப்படையிலான சாதி அமைப்பினைக் கட்டிக்காக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் வரிந்துகட்டி நிற்கின்றார்கள். " ஆயிரம் உண்டிங்கு சாதி " எனக் குருமூர்த்தி சாதி அமைப்பினால் தொழில் வளர்கிறது என்று பம்மாத்துக்காட்டுகிறார். ஆனால் குடும்பம் குடும்பமாக செய்துகொண்டிருந்த சிறுதொழில்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக அழிந்து போவதற்கான வழியை செல்லாத நோட்டு அறிவிப்பு மூலமும் ஜி.எஸ்.டி. என்னும் அறிவிப்பின் மூலமும் செய்துவிட்டு இப்போதும் வெட்கமில்லாமல் பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.ஆனால் அவர்களுக்கு நோக்கம் பார்ப்பனிய மேலாண்மையை நிலை நிறுத்துவது. அதற்கு பார்ப்பனர்களுக்கு சாதி வேண்டும், சாதி அமைப்பு வேண்டும். ஆனால் சாதியால் ஒடுக்கப்படுபவர்களுக்கு,துன்பப்படுபவர்களுக்கு சாதி எப்படியாவது ஒழிய வேண்டும்.சாதி ஒழியவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு பளிச்சென்று புரியும் வண்ணம் எப்போது சாதி ஒழியும் ? என்பதற்கு தனது கருத்தை ஓவியா பகிர்ந்திருக்கின்றார் பக்கம் -5-ல். " அம்மா, அப்பாவிற்குத் தன் பெண்ணையோ பையனையோ யாருக்கு கட்டிக்கொடுக்கவேண்டும் என்னும் நிலைக்குப் பெயர்தான் சாதி. நாம் என்றைக்கு சாதியை இப்படிப் புரிந்துகொள்கிறோமோ அப்போதுதான் சாதியை ஒழிக்க முடியும்". இந்தப் புள்ளியில் இருந்து ஆரம்பித்ததுதான் சுயமரியாதை இயக்கம். கருப்புச்சட்டை பெண்கள் அப்படித்தான் உருவாகின்றார்கள். தங்களது துணையை அப்பா,அம்மா சொல்லும் தேர்வினைத் தவிர்த்து அல்லது எதிர்த்து தேர்ந்தெடுக்கின்றார்கள்.இதனை விரிவாக விளக்க இயலும். 

பெண்ணடிமைத்தனத்திற்கும் சாதி அமைப்பிற்கும் உள்ள உறவை நுட்பமாக புரிந்துகொள்வதன்மூலம் மட்டுமே நாம் அடுத்த கட்டத்திற்கு நகர இயலும்.ஈழ எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் 'தமிழனெக்கென்று ஒரு நாடில்லை " என்னும் புத்தகத்தில் தனது பேட்டியில் இன்றைய கனடா நாட்டில் வாழும் தமிழ்ப்பிள்ளைகளுக்கு, இளைஞர்களுக்கு சாதி என்றால் என்னவென்று தெரியாது என்று சொல்லியிருப்பார். புலம் பெயர்ந்து வாழும் நிலையில் இளைஞர்கள் பெரும்பாலும் தங்களது துணையைத் தானே தேர்ந்தெடுக்கின்றார்கள். ஏனெனில் மேலை நாட்டில் அதுதான் வழக்கமாக இருக்கின்றது. நூல் ஆசிரியர் சொல்வது போல மேலை நாட்டில் பெண்கள், ஆண்கள் நான் யாரோடு வாழ்வது என்பதை எப்படி என் பெற்றோர் தேர்ந்தெடுக்க முடியும் ? அவர்களுக்கு எப்படித் தெரியும் ? என்று கேட்கிறார்கள்,வியப்படைகின்றார்கள். ஆனால் இந்தியாவில் இதற்கு நேர் எதிராக உல்டாவாக இருக்கிறது. எவ்வளவு பெரிய படிப்பு படித்திருந்தாலும், எவ்வளவு பெரிய வேலையில் இருந்தாலும் தனது பெண்ணுக்கு இணையைத் தேர்ந்தெடுக்கத் தெரியாது, நாம்தான் தேர்ந்தெடுத்து தரவேண்டும் என்ற எண்ணம் பெற்றோருக்கு இருக்கிறது. இந்த எண்ணம் தப்பு, மாற வேண்டும் என்பதற்கான உழைப்புதான் கருப்புச்சட்டை பெண்களின் உழைப்பு. அதுதான் சுயமரியாதை இயக்கப்பெண்களின் துவக்கப்புள்ளி எனச்சொல்கின்றார் நூல் ஆசிரியர்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் "சாதியை ஒழிக்கும் வழி " புத்தகத்தையும் அதனை முதன்முதலில் தமிழில் மொழி பெயர்த்த தந்தை பெரியார் பற்றியும் , மேயோவின் புத்தகம் பற்றியும் எழுதுகின்றார். இவர்களின் நினைப்பு எப்போதும் சிற்றின்பம் பற்றித்தான் என்று அந்த அம்மையார் எழுதியது பற்றியும், காந்தியார் கொடுத்த மறுப்பு பற்றியும் ஆனால் மேயோ அம்மையார் கொடுத்த புள்ளி விவரங்கள், குழந்தை மணம் பற்றிய செய்திகளை எல்லாம் கொடுக்கின்றார். சுயமரியாதை இயக்கம் தோன்றிய காலத்தில் இருந்த குழந்தை மணம், விதவைகள் நிலமை, தேவதாசி முறை போன்றவற்றின் கொடுமையான தன்மைகளை குறிப்பிட்டு இப்படிப்பட்ட நிலைமையில் தோன்றியதுதான் ,இவற்றைக் களைவதற்காக தோன்றியதுதான் சுயமரியாதை இயக்கம் என்று நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்."இதற்கான ஒரு இயக்கமாக ,இந்தச்சமூகக் கொடுமைகளைக் களைவதற்கென்றே தொடங்கப்பட்ட இயக்கம் என்பது பெரியார் தொடங்குவதற்கு முன்னால், சுயமரியாதை இயக்கத்திற்கு முன்னால் வேறு ஒரு இயக்கம் கிடையாது " பக்கம்(11) என்பதனை பதிவு செய்கின்றார் நூலாசிரியர் ஓவியா.இதோடு கிறித்துவ மிசினிரிகள் வந்ததால் ஏற்பட்ட மாற்றத்தையும்,காந்தியார் தனது விடுதலைப் போருக்கு பெண்களை அழைத்ததையும் குறீப்பிட்டு சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டு அடுத்த அத்தியாயமான தொல்காப்பியமும் மனுதர்மமும் என்னும் அதிகாரத்திற்கு முன்னுரையாக செய்திகளைக் கொடுக்கின்றார்.இந்த தலைப்பைப் புரிந்துகொள்ள தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள்? , அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 'சாதியை ஒழிக்கும் வழி',கோவை அய்யாமுத்து அவர்களின் "மேயோ கூற்று மெய்யோ? பொய்யோ ? ", தோழர் ஏங்கல்சுவின் " குடும்பம்,தனிச்சொத்து,அரசு ஆகியவற்றின் தோற்றம்' போன்ற நூல்களை மேற்கோள்களாகக் காட்டியிருக்கின்றார். தோழர் ஞானையாவின் "சாதியை ஒழிக்க இயலுமா ? " ,பெருமாள் முருகன் தொகுத்த " நானும் சாதியும் " என்னும் புத்தகமும் இந்தத் தலைப்பிற்கு உதவும் என்பது என் கருத்து, இந்தப் புத்தகங்களை வாசித்துவிட்டு , இந்தத் தலைப்பை வாசிப்பது இன்னும் கூடுதல் வெளிச்சத்தை நமக்குக் காட்டும் வகையில் அமையும். 

                                                                                    ....தொடரும் ....