அண்மையில் படித்த புத்தகம் : அஞ்சல் நிலையம் (மொழி பெயர்ப்பு புதினம்)
மூல ஆசிரியர் : சார்லஸ் புக்கோவ்ஸ்கி
தமிழில் : பாலகுமார் விஜயராமன்
வெளியீடு : எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி -2
முதல் பதிப்பு : ஜனவரி 2016, மொத்த பக்கங்கள் 244, விலை ரூ 200/-
ஒரு எழுத்தாளரின் முதல் மொழி பெயர்ப்பு புதினம் தமிழில். 244 பக்கங்கள் உள்ள இந்த புதினத்தைப் படித்து முடிக்கும்வரை , எந்த இடத்திலும் தொய்வில்லாமல் தொடர்ச்சியாக விறுவிறுப்பான ஒரு புதிய தமிழ் புதினம் போலவே செல்கிறது. அதற்காக மொழி பெயர்ப்பாளருக்கு முதலில் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
ஓர் அஞ்சல் அலுவலக ஊழியர் எப்படி இருக்கவேண்டும் என்னும் அரசின் குறிப்பாணையோடு புதினம் ஆரம்பிக்கிறது. அடுத்த பக்கத்தில் இருந்து புதினம் ,அந்த அஞ்சல் விதிமுறைகளுக்கு எதிராக எப்படியெல்லாம் இந்த புதினத்தின் நாயகன் சின்னஸ்கி செயல்படுகின்றார் என்பதனை விவரிக்க ஆரம்பிக்கின்றது. 'ஜோன்ஸ்டன் ' என்னும் கண்காணிப்பாளர் அஞ்சல் அலுவலக ஊழியர்களிடம் எவ்வளவு கடுமையாக நடந்து கொள்கின்றான் என்பதும் எப்படியெல்லாம் அவன் ஊழியர்களைக் கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறான் ,இரக்கமில்லாமல் வேலை வாங்குகிறான் என்பதும்,சின்னஸ்கி அவனுக்கு அடங்கமுடியாமல் திமிறி செய்யும் செயல்பாடுகள் விவரிக்கப்பட்டிருக்கின்றது.கடைசியில் எழுத்தர் பதவி உயர்வு இன்னும் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் என்றாலும் இது வேண்டாம் என்று சின்னஸ்கி அஞ்சல் அலுவலக வேலையை ராஜினமா செய்து விட்டு வெளியே வருகிறார் - நாவலின் முதல் பகுதி இதனை விவரிக்கின்றது.
இரண்டாம் பகுதி , வேலையை விட்டுவிட்டு குதிரைப்பந்தயத்தில் பணம் கட்டி சூதாடிக்கொண்டிருக்கும் சின்னஸ்கி, ஜோய்ஸ் என்னும் பெண்ணை சந்திப்பதும், அவளைத் திருமணம் செய்து கொள்வதும் அவளோடு சேர்ந்து வாழ்வதும் , அவளது அப்பா ,பாட்டி,தாத்தா பற்றியும் அவளது பணம் பற்றியும் அவளது உடம்பினைப் பற்றியும் அவளது இச்சைகள் பற்றியும் விவரிக்கின்றது. கடைசியில் அவள் இன்னொருவனோடு சேர்ந்து வாழப்போகிறேன் என்று சொன்னதும் அவளை விட்டுப் பிரிவதும் , பிரியும்போது இவனின் உடைகள் மற்றும் பெட்டிகளை எல்லாம் ஜோய்ஸ் என்னும் அந்தப் பெண்ணே எடுத்துக் கொடுப்பதும் விவரிக்கப்படுகின்றது. ஒரு ஆணும் பெண்ணும் இணைவதும் அது வேண்டாம் என்று தோன்றும்போது கரச்சல் இல்லாமல் பிரிவதும் அந்த நாட்டிற்கு சாதாரணம் என்றாலும் நமது நாட்டில் அப்படி வருவது எல்லாம் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகும் என்று தெரியவில்லை.
தனது பழைய பெண் தோழி பேபியை சந்திப்பதும் அவளோடு பாலியல் தொடர்பில் இருப்பதும், மீண்டும் சின்னஸ்கி அஞ்சல் அலுவலகத்தில் வேலைக்குச்சேர்வதும், கொடுக்கப்படும் மெமோக்கள் பற்றியும் அதன் விசாரணைகள் பற்றியும் , நாவலின் மூன்றாம் பகுதி விவரிக்கிறது.
குதிரைப் பந்தயங்கள் பற்றியும் அதில் சின்னஸ்கி கலந்து கொள்வது பற்றியும் யாரும் கட்டாத குதிரைகளில் இவர் பணம் கட்டி வெல்வது பற்றியும் நாவலின் 4-ஆம் பகுதி பேசுகின்றது. மதுக்கூடத்தில் சந்திக்கும் ஒரு பெண் பற்றியும் அவளோடு கொள்ளும் பாலியல் உறவு பற்றியும் அதன் அடிப்படையில் அவளால் ஒரு இடத்திற்கு செல்லும் இடத்தில் அவளும் அவள் நண்பனும் சின்னஸ்கியிடம் கொள்ளையடிக்க முயல்கையில் அவர்களைத் தாக்கிவிட்டு இவர் த்ப்பிப்பதும் விவரிக்கப்படுகிறது. இவரது காதலி பே கர்ப்பமாவதும் அதன் மூலம் பொறுப்பற்ற சின்னஸ்கி ஒரு குழந்தைக்கு தகப்பனாவது பற்றியும் விவரிக்கப்படுகின்றது.
குடிபோதையில் இருந்த குற்றத்திற்காக காவல்துறை கைது செய்வதும் , அதனை முன்னிட்டு அலுவலகத்தில் நடைபெறும் விசாரணையும் நாவலின் 5-ஆம் பகுதியில் விவரிக்கப்படுகின்றன. நாவலின் 6-ஆம் பகுதியான கடைசிப்பகுதியில் சின்னஸ்கி அஞ்சல் அலுவலக விசாரணைக்கு உள்ளாவதும் ,' வேறு வேலை செய்ய' விரும்பி அஞ்சல் அலுவலக வேலையை ராஜினமா செய்வதும், இறுதியாக வாழ்வில் அஞ்சல் அலுவலகத்தில் இருந்த காலத்தை எல்லாம் எழுத்தில் வடிக்க விரும்பி," காலையில் விடிந்தது. நான் இன்னும் உயிரோடு இருந்து கொண்டிருந்தேன். எனவே, இது பற்றி ஒரு புதினம் எழுதலாமென நினைத்தேன்.அதன்படி எழுதி முடித்து விட்டேன் " என்னும் வார்த்தைகளோடு இந்த நாவல் முடிகின்றது.
சின்னஸ்கியின் பெண் பித்து பிடித்த மனம் எப்படியெல்லாம் எண்ணுகிறது , பெண்களைப் பற்றிய மிக இழிவான கருத்துக்களைக் கொண்டிருக்கும் சின்னஸ்கி எப்படி பெண்களைப் பயன்படுத்திக்கொள்கிறார் என்பதும் அவரைப் பெண்கள் எப்படி பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதும் நாவல் முழுக்க விவரிக்கப்படுகின்றது.பாலியலில் கட்டுக்கடங்கா இச்சை உள்ள அவர் எப்படி எல்லாம் பெண்களை பாலியல் நோக்கில் எண்ணுகிறார் என்பது மிக விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றது.
அஞ்சல் நிலையம் சின்னஸ்கியை படித்து முடித்தவுடன் எனக்கும் ஒரு நண்பர் நினைவில் வந்தார். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பெண் தொடர்பு, குடி ,சூதாட்டம் என்று தனது வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கும் மனிதர். அவரால் அவரது குடும்பத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எந்தவிதமான பயனும் இல்லாத நண்பர். ஆனால் அவரைக் கேட்டால் அவருக்கு பாலியல் அடிப்படையில் அறிமுகமான அத்தனை பெண்களைப் பற்றியும் இந்த நாவல் நாயகன் சொல்வதை விட அதிகமாக விவரிக்கக்கூடும் , ஆனால் அதனால் சமூகத்திற்கு என்ன பலன் விளையப்போகிறது ?..ஆனால் அந்த நண்பர் தனது தறிகெட்ட வாழ்க்கையை எழுத்தாகப் பதிந்தால் , யாரும் வாழாத, முரண்பட்ட அவரின் வாழ்க்கையின் தொகுப்பாக அது அமையக் கூடும். அப்படித்தான் இந்த புதினம் அமைந்துள்ளதாகக் கருதுகிறேன்.
'குறத்தி முடுக்கு' நாவலில் ஜி.நாகராஜன் ' என் வருத்தம் ' என முன்னுரை எழுதியிருப்பார். " நாட்டில் நடப்பதைச்சொல்லியிருக்கிறேன்.இதில் உங்களுக்குப் பிடிக்காதது இருந்தால் ' இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது ? '' என்று வேண்டுமானால் கேளுங்கள்; " இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும் ? ' என்று கேட்டுத் தப்பித்துக்கொள்ளப் பார்க்காதீர்கள்.உண்மையைச்சொல்வதென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவுக்குச்சொல்ல முடியவில்லையே என்பதுதான் என் வருத்தம் " என்று சொல்வார். ஜி. நாகராஜனின் குறத்தி முடுக்கு ' தங்கம் ' சூழலினால் எப்படி பாலியல் தொழிலாளியாகிப் போனாள் என்பதனை விவரிக்கும். இந்த நாவல் தனது மனப்பான்மையால் சின்னஸ்கி ஆண் பாலியல் தொழிலாளி போல வாழ்ந்தான் என்பதை விவரிப்பதாகக் கொள்ளலாம்.
வா.மு.கோமு என்னும் வலைத்தளத்திலும் இந்தப் புதினத்தைப் பற்றிய விமர்சனம் உள்ளது. விருப்பமுள்ளவர்கள் அதனையும் படிக்கலாம்.
http://vaamukomu.blogspot.in/2016/02/blog-post_4.html
2 comments:
விரிவான விமர்சனத்திற்கு நன்றி!
நன்றி. அருமையான மொழி வளமும் அதனைத் திறம்படக் கையாளும் திறனும் தங்களுக்கு இருக்கிறது.மொழி பெயர்ப்பு எளிதல்ல ஆனால் அதனைத் திறம்பட செய்கின்றீர்கள். மார்க்ச்சிம் கார்க்கியின் 'தாய் ' நாவலை, தகழி சிவசங்கரன் பிள்ளையின் 'செம்மீன் ' நாவலை, முகந்தனின் 'மய்யழிக் கரையோரம் ' நாவலை இன்னும் அற்புதமான பல நாவல்கள் தமிழ் நாவலாகவே வாசகர்கள் படித்து நெகிழக் காரணம் மொழி பெயர்ப்பு. இன்னும் நல்ல மொழி பெயர்ப்பு நாவலை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன். தொடர்ந்து இயங்கினால் இந்தியாவின் எழுத்துலகில் தனித்த இடமுண்டு தங்களுக்கு இன்னும் சில ஆண்டுகளில்...
Post a Comment