Saturday, 27 March 2021

நூல் மதிப்புரை : மாண்புமிகு மதிவாணன்(புதினம்)

வண்ணப் படத்தோடு வாசிக்க ....வல்லினச்சிறகுகள் இதழில் படிக்க இதனைச்சொடுக்குங்கள்...




நூல் : மாண்புமிகு மதிவாணன்(புதினம்)

நூல் ஆசிரியர் :இளவரசி சங்கர்

வெளியீடு : சாதரசி சங்கர் பதிப்பகம்,புதுச்சேரி-605 005

முதற்பதிப்பு : ஜனவரி 2021

மொத்த பக்கங்கள் :180  விலை ரூ 180.


நூல் ஆசிரியரின்  முதல் புதினம்'மாண்புமிகு மதிவாணன்'. இந்தப் புதினத்தின் முதல் பகுதியில் நூல் ஆசிரியரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.தமிழ் இலக்கியம்,ஆங்கில இலக்கியம் இரண்டிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் முதல் நிலை சுருக்கெழுத்தாளராகப் பணியாற்றுபவர்.நாடகத்தில் நடிப்பவர்.பறை இசை அடிப்பவர், கரகாட்டம் ஆடுபவர்,பட்டிமன்றம்,பாட்டரங்குகளில் சொற்பொழிவு ஆற்றுபவர்,மொழி பெயர்ப்பவர்,வானொலி,தொலைக்காட்சி நிகழ்வுகளில் பங்கேற்பவர்.தான் இறந்த பிறகு தனது உடல் ஜிப்மர் மருத்துவமனைக்கு அளிக்கப்படவேண்டும் என உடல்கொடையை எழுதிக்கொடுத்துள்ளவர் என இவரைப் பற்றிய பல குறிப்புகள்… இவரின் பன்முக ஆற்றலை  உணர்த்துகிறது.


“இன்றைக்குப் புதினம் என்பது அரிதாகவே படைப்பாளர்களால் படைக்கப்படுகிறது. எப்படி கவிஞர்கள் காப்பியத்தின் பக்கம் செல்லாமல் தவிர்க்கிறார்களோ அப்படிப் பிற படைப்பாளிகள் இன்று புதினத்தை விருப்பத்துடன் ஈடுபட்டுப் படைப்பதைப் பெரும்பாலும் தவிர்க்கிறார்கள்..”என்று முனைவர் அ.உசேன் அணிந்துரையில் குறிப்பிடுகின்றார். இதில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. எழுத வருகிறவர்கள் எல்லோராலும் புதினம் படைக்க இயலுவதில்லை. ஆனால் அப்படி புதினம் எழுதி வெற்றி பெற்ற பல எழுத்தாளர்களைக் கொண்ட்து தமிழ் இலக்கியம். இன்றைய பெண் புதினப்படைப்பாளிகள் என்று எடுத்துக்கொண்டால்கூட பாமா,திலகவதி,சிவகாமி,அம்பை,மலர்வதி எனப்பலர் உணடு.அவர்களில் ஒருவராக,புதிதாக  இளவரசி சங்கர் இணைந்திருக்கிறார்.


முனைவர் சுந்தரமுருகன் அவர்களின் மகிழ்வுரை,முனைவர் அ.உசேன் அவர்களின் அணிந்துரை , அரிமதி இளம்பரிதி அவர்களின் அன்புரை,  பாவலர் ஆறு செல்வன் அவர்களின் கருத்துரை,புதுவை யுகபாரதி அவர்களின் வாழ்த்துப்பா எனப் புதுச்சேரியின் புகழ் மிக்க  தமிழ் இலக்கிய ஆளுமைகளால்  நூலின் முதல் 30 பக்கங்கள் கருத்துகளால் நிரம்பி நிற்கிறது.


“ஒரு மனிதனின் நற்பண்புகளையும்,அதீத திறமைகளையும்,சிறப்புத்தன்மைகளையும்,அறிவாற்றலையும்,புத்திக்கூர்மையையும்,தொண்டுள்ளத்தையும்,உழைப்பையும்,வெற்றிகளையும் அவர் வாழும் காலத்திலேயே மெச்சவேண்டும்,போற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் படைக்கப்பட்ட்துதான் இந்த ‘மாண்புமிகு மதிவாணன் “ என்னும் புதினம் “ என்று என்னுரையில் குறிப்பிடும் இந்த நூலின் ஆசிரியர் இளவரசி சங்கர்  மேலும் ‘இந்தப் புதினம் என்னுடைய முதல் முயற்சி.சோதனைகளும் சாதனைகளும்  நிறைந்த மதிவாணன் அண்ணனின் வாழ்க்கையைச் சிறிது புனைவுகளுடன் படைப்பாக்கம் செய்துள்ளேன் ‘ என்று குறிப்பிட்டுள்ளார். வாழும் மனிதரின் கதை,சில புனைவுகளோடு என்று நாம் புரிந்துகொள்கிறோம்.


இந்தப் புதினத்தின் இரண்டாம்பக்கமே, இந்தப் புதினத்தின் நாயகன் இறந்து விட்டதாகப் பரப்பப்படும் ஒரு பொய்யான செய்தி..அதன் மூலமாகத்தான் கதை நகர்கிறது.`போகும் வழியில் ஒரு மனிதன் இறந்துவிட்டாரா? இல்லையா? என்பதை உறுதி செய்வதற்கு முன்பாகவே மனிதர்கள் இந்தச்செய்தியைப் பரப்புவதில் குறியாக இருக்கிறார்கள் என்ற வேதனையோடு …


`இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை ` ஆகிவிட்டது என எனக்குள் ஏதோதோ புலம்பிக்கொண்டே என் இருக்கையை வந்தடைந்தேன் …` என விவரிக்கும் நூல் ஆசிரியர் ..`யார் இந்த மதிவாணன் ? `என்னும் கேள்வியைப் புதினத்திலேயே கேட்கிறார். பின்பு அவரைப் பற்றிய செய்திகளை கதையாகச்சொல்லிச் செல்கிறார்.


புதுச்சேரியில் இருக்கும் ஜிப்மர் மருத்துவமனையில் வேலை பார்ப்பவர் மதிவாணன் என்று ஒற்றை வரியில் சொல்லாமல் முதலில் தான் வசிக்கும் புதுச்சேரியின் பெருமைகளை,சிறப்புகளைப் பட்டியலிட்டு சொல்கின்றார்.`ஓயாமல் அலையோசை கேட்டுக்கொண்டிருக்கும் வங்கக் கரையோரம் அமைந்துள்ளது அழகிய புதுச்சேரி ` என்று ஆரம்பித்து புதுச்சேரியை வர்ணிப்பது ஒரு கவிதை போல செல்கிறது.முடிவில் இத்தனை சிறப்புகளையும் கொண்ட புதுச்சேரியில் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ளது `ஜிப்மர் `மருத்துவமனை ` என்று முடிக்கும்போது ஒரு திரைப்பட ஒளிப்பதிவாளர் சுற்றுப்புற அழகையெல்லாம் காட்டி முடிவில் காட்ட வேண்டிய காட்சியை பெரிதாகக் காட்டுவது போல  சிறப்பாக உள்ளது.அந்த ஜிப்மர் மருத்துவமனையில் வேலை பார்ப்பவர் மதிவாணன் எனக் காட்டுகிறார். புதினம் முழுவதுமே இப்படி ஒரு செய்தியைச் சொல்வதை அழகியலோடும் ,விறுவிறுப்பாகவும் சொல்லிச்செல்வதே இந்த நூலின் வெற்றி எனலாம்.


மதிவாணன் தனக்கு அறிமுகம் ஆன விதம், அவர் தனக்கு உடன் பிறவா அண்ணனாகச்செய்த உதவிகள், அவருடைய சொந்த ஊர் என விவரித்துச்சொல்லிச்செல்லும்  நூல் ஆசிரியர்,மதிவாணனே தன்னை அழைத்து, தனக்கு மலக்குடல் புற்று நோய் வந்திருப்பதை சொன்ன நிகழ்வை,அதனால் தான் கலங்கியதை,பின்பு அவரே தனக்கு ஆறுதல் சொன்னதை எல்லாம் நம் கண் முன்னே அப்படியே காட்சிப் படிமமாக நிறுத்தியிருக்கிறார்.அப்படி புற்று  நோயால் பாதிக்கப்பட்டு ,மருத்துவமனையில் இருக்கும்போதுதான் அவர் இறந்துவிட்ட்தாக சிலர் பரப்பிய செய்தியை எழுதியிருக்கிறார்.பின்பு அவர் அந்த நோயை வென்ற விதம்,தனக்கு ஏற்பட்ட இன்னலைப் பொறுத்துக்கொண்டே மற்றவர்களுக்கு உதவிய விதம் என்று புதினத்தின்  நாயகன் மதிவாணனைப் பற்றிய செய்திகளை தொடர்ச்சியாக கதையாகச்சொல்லிக்கொண்டே செல்கிறார் நூல் ஆசிரியர்.


வாழ்க்கையின் அனுபவங்களை பல்வேறு இடங்கள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. சுடுகாடு காட்டும் படிப்பினை தனித்தன்மையானது. ஆனால் நோய் வாய்ப்பட்டு,மருத்துவமனையில் நோயாளியாக படுத்துக்கிடக்கும்போது கிடைக்கும் படிப்பினை அனைத்திலும் மேலானது. மருத்துவமனை,உயிர் காக்கும் மருத்துவர்கள், நோயாளிகளைக் குழந்தைகளைப் போலக் கவனிக்கும் செவிலியர்கள் என அந்த உலகம் தரும் அனுபவம் மற்ற எந்த இடமும் தராத மேன்மையான் அனுபவம்.அதிலும் உயிர்க்கொல்லி நோயாக அறியப்பட்டிருக்கும் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் இருக்கும்போது கிடைக்கும் அனுபவத்தையும்,அதனை மன அடிப்படையில்,மருத்துவ அடிப்படையில் வென்ற கதையை இந்தப்புதினம் பேசுகிறது. மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கும் மக்களுக்கு வரும் நோயைப் பற்றிய விழிப்புணர்வு  இன்றைய தேவை.அதனை இந்தப் புதினத்தின் வாயிலாக நூல் ஆசிரியர் விரிவாகவே விளக்கியிருக்கிறார்.


கன்னடத்தில் பி.வி.பாரதி அவர்கள் எழுதியதை தமிழில் 'கடுகு வாங்கி வந்தவள் 'என்னும் தலைப்பில் கே.நல்லதம்பி அவர்கள் மொழி பெயர்த்த நூல் கூட அண்மையில் வாசித்தேன்.நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட அந்தக் 'கடுகு வாங்கி வந்தவள் 'என்னும் நூல் ' ஒரு அனுபவக்கதை' என்று தலைப்போடு சேர்த்து அச்சிடப்பட்டிருந்தது. மார்பகப் புற்று நோய் வந்த ஒரு பெண் அதனை எதிர்கொண்டு ,சிகிச்சை எடுத்து வெற்றி பெற்ற அனுபவக்கதை அது. அது போல மதிவாணன் அவர்கள் மலக்குடல் புற்று நோயில் இருந்து சிகிச்சையால் குணமடைந்ததை சொல்லும் அனுபவக் கதையாக இந்த நூலினை எடுத்துக்கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் அந்த நோய், தன் தாய்க்கு வந்த போது அதனை எதிர்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமடைய இந்த அனுபவம் எப்படி ஊக்கம் கொடுத்தது என்பதையும் நூல் ஆசிரியர்  புதினத்தின் மூன்றாம் பாகமாக சுட்டிச்செல்கிறார். மதிவாணன் புற்று நோயிலிருந்து விடுபட்டது மட்டுமல்லாமல் ,அவரின்  நேர்மை,பணி புரியும் இடத்தில் சிறப்பான சேவை புரியும் தன்மை, அவர் பிறந்த ஊரின் சிறப்பு, நூல் ஆசிரியர் பிறந்த ஊரின் சிறப்பு என்று பல தகவல்களை எடுத்துக்கொண்டு அவற்றை இணைத்து,கற்பனையான விருதான 'மாண்புமிகு மதிவாணன்' என்னும் விருது அளிப்பு நிகழ்வு  பற்றியும்  வாசிப்பவருக்கு அலுப்பு தட்டாமல் ,விறுவிறுப்பாக அமைந்துள்ள புதினமாக இந்த நூல் உள்ளது.


இந்தப் புதினத்தில் எதிர்மறை சிந்தனை உள்ள கதாபாத்திரங்களே இல்லை. பொதுவாக  புதினம் என்பது சிக்கல்கள் பின்பு சிக்கல்களைத் தீர்த்து வெற்றியாகவோ அல்லது சிக்கல்களைத் தீர்க்க இயலாத தோல்வியாகவோ அமையும். இந்தப் புதினம் இந்த இரண்டு தன்மையும் இல்லாமல் ஒரு வேறுபட்ட நோக்கில் படைக்கப்பட்டிருக்கிறது.

மதிவாணன் என்னும் கதாபாத்திரத்தின் இலக்கியப் படைப்புகளையும் இந்தப் புதினத்தில் அறிமுகப்படுத்துகிறார்.'புழுதி மண்' என்னும் சிறுகதைத் தொகுப்பு,நோய்வாய்ப்பட்ட நேரத்திலும்கூட அந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் எப்படி உருவாகின என்பதனை விளக்கும் 'கதைகளின் கதை' என்னும் குறிப்புகள்,'நிலா முற்றத்தில் கவிதைகள்'என்னும் கவிதைத் தொகுப்பு,விருது அளிக்கும் விழாவில் 'புற்று நோய்த் தடுப்பு மற்றும் விழிப்புணர்வுத்தூதர்' என்னும் மதிப்புறு பணி,ஏற்புரையாக மதிவாணன் ஆற்றுவதாக வரும் உரை...அவரின் வாழ்க்கை நிகழ்வுகளை அவரே சொல்வதாக விவரிப்பது போன்றவை  நூலில் மிக நன்றாக அமைந்துள்ளது.


உலகம் முழுவதும் இருக்கும் பெண் எழுத்து ஆளுமைகள் பங்கு பெறும் ,வாசிக்கும் 'வல்லினச்சிறகுகள்' இதழில், புதினம் எழுத விரும்புகிறவர்கள் இப்படியும் கூட் எழுதலாம் என்று ஒரு புதிய பாதையை, தன்-பிறர்  வரலாறையே புதினமாக எழுதும் பாதையைக் காட்டியிருக்கும் நூலாக இந்த  'மாண்புமிகு மதிவாணன்'நூலைப் பார்க்கிறேன்.'இந்த நூல் ஆகச்சிறந்த புதிய முயற்சி.நானறிந்தவரையில் தமிழுலகம் அறியாத புது முயற்சி' என அன்புரையில் அரிமதி இளம்பரிதி அவர்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல புது முயற்சி இது. நீங்களும் கூட இந்த நூலை ஒருமுறை வாசித்துப்பார்க்கலாம்.இதனைப் போல நமக்கு நன்றாகத் தெரிந்த  மேன்மையானவர்களை புதினமாக எழுதலாமா எனச் சிந்திக்கலாம்.


நன்றி : வல்லினச்சிறகுகள் மார்ச்-2021




No comments: