Showing posts with label அண்மையில் படித்த புத்தகம் :. Show all posts
Showing posts with label அண்மையில் படித்த புத்தகம் :. Show all posts

Saturday, 21 October 2023

அண்மையில் படித்த புத்தகம் : இடதுபுறமுள்ள கதவுகள் திறக்கும்((சிறுகதைத் தொகுப்பு)

 அண்மையில் படித்த புத்தகம் : இடதுபுறமுள்ள கதவுகள் திறக்கும்(சிறுகதைத் தொகுப்பு)

 நூல் ஆசிரியர் : ரெஜினா சந்திரா

பதிப்பகம்           : எழிலினி பதிப்பகம்,எழும்பூர்,சென்னை-8

முதல்பதிப்பு     : அக்டோபர் 2023

விலை                  : ரூ  250          மொத்த பக்கங்கள் 122

தோழர் ரெஜினா சந்திரா அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பு' இடதுபுறமுள்ள கதவுகள் திறக்கும்'. சென்னை மெட்ரோ ரெயிலில் பயணித்தவர்களுக்கு இந்தத் தலைப்பு சட்டெனப்புரியும். 13 சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு இந்த நூல்.

ஒரு சிறுகதைக்கான கதைக்கருவினை எங்கிருந்து எடுப்பது ?... இதற்கான தெளிவான விளக்கத்தைத் தனது கதைகள் மூலம் கொடுத்திருக்கிறார் தோழர் ரெஜினா சந்திரா. அவருடைய எல்லாச் சிறுகதைகளும் அன்றாட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பேசுகின்றன .சின்னச் சின்ன மகிழ்ச்சியை ,சின்னச் சின்ன துக்கங்களை ,சின்ன சின்ன  மனப்பிணக்குகளை,சின்னச்சின்ன அறியாமையை உணரும் தருணங்களை  விவரிக்கும் இச்சிறுகதைகள் நம் தோள் மீது தோள் போட்டுக் கொண்டு உரையாடும் ஒரு தோழனைப் போல ,அறிவுரையாக அல்லாமல் நட்பாக பல விஷயங்களைப் பேசுகிறது. இந்தச் சிறுகதைகளின் குரலும் புதிது, அணுகும் முறையும் புதிது ,எழுத்து நடையும் புதிது.இயல்பாகப் பேசும் நடையாக இந்தப் புத்தகம் அமைந்திருப்பது சிறப்பு.

அண்ணன் கோ.ஒளிவண்ணன்,பேரா.உமா மஹேஸ்வரி அவர்களின் முன்னேற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட 'வாருங்கள் படிப்போம்','வாருங்கள் படைப்போம் ' குழுக்களின் துடிப்பான உறுப்பினர்களில் ஒருவர்.அதில் நடைபெற்ற சிறுகதைத் திறனாய்வு போட்டிகளில் கலந்துகொண்டு திறனாய்வுகள் செய்தவர்.சிறுகதை எழுதுவது எப்படி என்பதனை ஒரு 6 மாதத்திற்கு முன்னால் சென்னை பெரியார் திடலில்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக நடைபெற்ற பயிலரங்கில் கலந்து கொண்டு கற்றுக்கொண்டவர்..பயிற்சி முடிந்த மறுநாளே.ஒரு சிறுகதை முயற்சியைக் கைக்கொண்டு,அந்தக் கதையை தோழர்களுக்கு அனுப்பிக் கருத்தினைக் கேட்டவர்.இன்று மிகச்சிறப்பாக ஒரு தொகுப்பினைக் கொண்டு வந்துள்ளார் பாராட்டுகள்.



இத்தொகுப்பில் விண்மீன்கள்,ரோலர் கோஸ்டர்,மேட்டிமை,நெஞ்சே! நெஞ்சே!,இடதுபுறமுள்ள கதவுகள் திறக்கும்,தீ நுண்மி,நாங்க ஒரு தினுசுதான்,எண்10-புதுத்தெரு,சில்லுனு ஒரு மெட்ரோ காதல்,செல்வி இஆப,வைத்தியம்,மே மாதக் கல்யாணம்,ஜெனிபர் என 13 கதைகள்.இந்தக் கதைகளுக்கு முக நூலில் வந்த பின்னோட்டங்கள் பின் இணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தத் தொகுப்பில் உள்ள 'தீ நுண்மி 'என்னும் சிறுகதை மிகவும் பிடித்தது. கீழ்க்கண்ட இணைப்பில் அந்தக் கதை பற்றி விரிவாகப் பேசியுள்ளேன். இதில் உள்ள பல கதைகள்,ஒவ்வொன்றையும் அரைமணி நேரம் பேசலாம்.

புதுச்சேரி ஒரு துளிக்கவிதை அமைப்பும்,தமிழ் அமெரிக்கா மற்றும் வல்லினச்சிறகுகள் மின் இதழ் அமைப்பாளர்கள் இணைந்து நடத்தும் இணைய வழிக்கூட்டத்தில் இந்தப் புத்தகத்தினைப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. பேசியிருக்கிறேன். இணைப்பும் அளித்துள்ளேன். வாய்ப்பு உள்ளோர் கேட்டுப்பாருங்கள். உங்கள் கருத்துகளையும் வலைத்தளத்தில் பதிவு செய்யுங்கள்.




https://youtube.com/live/0uNKnq8JsFc?feature=shared


Wednesday, 30 August 2023

அண்மையில் படித்த புத்தகம் : என் இளம்பிராயத்துக் கதைகள்....சரத்சந்திரர்

 

அண்மையில் படித்த புத்தகம் : என் இளம்பிராயத்துக் கதைகள்

ஆசிரியர்                    : சரத்சந்திரர் தமிழில் ஆர்.சி.சம்பத்

வெளியீடு                   : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்,

                                                             சென்னை-98, 044-26241288

முதல் பதிப்பு                :      செப்டம்பர் 2014,மொத்தப் பக்கம் 62

                                                                                                     விலை ரூ 55

மதுரை மாவட்ட மைய நூலக எண்   215637

மொத்தம் 5 சிறுகதைகளின் தொகுப்பு இந்த நூல். : சரத்சந்திரர் ஒரு நூறாண்டுக்கு முன்னால் எழுதி மறைந்தவர்.அழியாத கதைகளை அளித்ததால் வாசிப்பவர்களின் மனதில் என்றும் நிற்பவர்.’தேவதாஸ் ‘போன்ற அழியாப் புகழ் நாவல்களை அளித்தவர். பின்னர் திரைப்படமாகவும் வந்து எல்லோரையும் ‘ஓ தேவதாஸ்’ என்னும் பாட்டை முணுமுணுக்க வைத்த கதைக்கு சொந்தக்காரர். இந்தத் தொகுப்பில் உள்ள 5 கதைகளும்(காளிதேவிக்கு பலி,வந்தார் குருதேவர்,ஐயாவை யாருன்னு நினைச்சே?, பிள்ளை பிடிக்கிறவன்,அது ஒரு ஐம்பது வருஷத்துக்கு முன்னே) இப்போது வாசிப்பதற்கும் மிகவும் ஈர்ப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருப்பது சிறப்பாக உள்ளது.

காளிதேவிக்கு பலி என்னும் சிறுகதை ‘லல்லு’ என்பவரைப் பற்றி பேசுகிறது. நமக்கு பீகாரின் லல்லு பிரசாத் அவர்களைத் தெரியும்.நகைச்சுவையாக பாராளுமன்றத்தில் பேசி பிஜேபிக்காரர்களை ஓடவிட்டவர்.’லால் ‘என்றால் செல்லமானவன்,பிரியமானவன் என்னும் பொருளாம்.தேவி பூஜைக்கு ஆடு வெட்டுகிறவர் வரவில்லை. லல்லுவைக் கூப்பிடுகிறார்கள்.இளைஞனான லல்லு வர மறுக்கிறான்.அவனது அப்பா வற்புறுத்த ,சென்று விருப்பம் இல்லாமல் பூஜைக்கு ஆட்டை வெட்டுகிறான்.ஆட்டை வெட்டிப் பலி கொடுத்துவிட்டு ,அடுத்த பலி எங்கே என்று சாமி வந்தவன் போல கேட்க ,இல்லை என்று சொல்ல  புரோகிதரைப் பலி கொடுக்க வா என்று சொல்கிறான்.புரோகிதர் பயந்து ஓடுகின்றார். இன்னும் சிலரும் பயந்து ஓடுகின்றார்கள்.இந்தக் கதையைப் படித்துவிட்டு நன்றாக வாய்விட்டுச்சிரிக்கலாம்.இதில் உள்ள எல்லாக் கதைகளுமே  நமக்கு சிரிப்பை வரவழைக்கும் கதைகளாகவே இருக்கின்றன்.வீட்டிற்கு வந்த குருதேவரை, லல்லு கவனிக்கும் கவனிப்பு அடுத்த கதை. நல்ல நகைச்சுவை.

இந்த 5 கதைகளின் வழியாக அன்றைய வங்காளத்தையும், அன்று மண்டிக் கிடந்த மூட நம்பிக்கைகளையும் கண்டு கொள்ளமுடிகிறது.நயன் என்னும் கதாபாத்திரம் அது ஒரு ஐம்பது வருஷத்திற்கு முன்பு என்னும் கதையில் வருகின்றது.அதில் வரும் ஒரு உரையாடலை அப்படியே தருகிறேன்

“ அன்றிலிருந்து அவன் முழுமையான வைஷ்ணவனாகி விட்டான்.

நயன் தரையில் சிரம் வைத்து என் பாட்டிக்கு நமஸ்காரம் செய்வான்.

அவள் பிராமண விதவை.அதனால் நயனைத் தீண்டக்கூடாது.எனவே,அவன் ஏதாவது தழைக் கொத்துகளைப் பறித்துக்கொண்டு வந்து அவள் பாதத்தருகே வைப்பான்.பாட்டி அதைத் தன் பாதங்களால் தீண்டுவாள்.

அவன் அந்தத் தழைகளைத் தலைமீது வைத்துக்கொண்டு “அம்மா ! என்னை ஆசிர்வதியுங்கள்.இந்தத் தடவை நான் இறந்தால் மீண்டும் உயர்ந்த குலத்தில் பிறக்கவேண்டும் என்று ஆசியளியுங்கள்.அதனால் நான் என் கைகளினாலேயே உங்கள் பாத துளியை எடுத்துக்கொள்ளும் பாக்கியம் கிடைக்கட்டும் “ என்பான்.

பாட்டியும் அன்புடன் சிரித்துக்கொண்டே “ நயன்,என் ஆசிர்வாதத்தால் அடுத்த ஜென்மத்தில் நீ பிராமணனாகவே பிறப்பாய்,போ!” என்பாள்.

நயன் கண்களில் கண்ணீர் துளிர்த்துவிடும்.” 

அந்தக் கால நிலைமை.ஆசிர்வாதம் பண்ணக் கூடக் கால்களில் விழுந்துவிடக்கூடாது.தீட்டுப்பட்டு விடும். சாதி என்பது ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் புகுத்தப்பட்டது என்று உளறிக்கொட்டும் சனாதன ஆளுநர் ‘இரவிக்கு ‘ இந்தக் கதையை யாராவது படித்துக்காட்ட வேண்டும்.

ஒரு கதை என்பது நகைச்சுவையும் எதார்த்தமும்  கலந்து எழுதப்படும்போது எந்தக் காலத்திலும் வாசிக்க ஈர்ப்பாக இருக்கும் என்பதற்கு இந்தச்சிறுகதைத் தொகுதி எடுத்துக்காட்டு.அந்தக் காலகட்டத்தில் நடந்த காலரா இறப்புகள்,மூட நம்பிக்கை குருதேவர்கள் நடமாட்டம்,சடங்குகள் மூலம் வழிப்பறி செய்பவர்கள் போலவே இருட்டில் சாலையில் செல்பவர்களைக் கொன்று கொள்ளையடிக்கும் கும்பல் என்று பல செய்திகளைச்சொல்லும் சிறுகதைகளாக இந்தக் கதைகள் இருக்கின்றன.வாசித்துப்பார்க்கலாம். வாய்விட்டுச்சிரிக்கலாம்.அக்கால நிலைமைக்கும் இக்கால நிலைமைக்குமான வேறுபாட்டை சிந்தித்துப்பார்க்கலாம்.

நூலகத்தில் எடுத்துப் படித்த நல்ல புத்தகத்தை விலை கொடுத்து வாங்கி வீட்டில் வைப்பது என் பழக்கம்.அப்படி இந்தப் புத்தகத்தையும் வாங்கி வைக்கவேண்டும்.


 

 

 

 

Monday, 21 August 2023

செப்பேடுகளும் சதுர்வேதி மங்கலங்களும்...ஞான வள்ளுவன்

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்துணைத்தலைவர் அய்யா ஞான.வள்ளுவன் அவர்களின் எட்டாவது நூல் அண்மையில் வெளிவந்திருக்கிறது.ஏற்கனவே பெரியார்-95,தமிழர் வாழ்வில் சாதியும் மதமும் அன்றும் இன்றும்,திராவிட இயக்கமும் எங்கள் ஊரும்,இசைவேளாளர்,ராஜநாயகம்(வரலாற்றுப்புதினம்),ஆச்சாரம்(சமூகப்புதினம்),வரலாற்றில் வென்ற அவர்தாம் பெரியார் என்னும் ஏழு நூல்களின் ஆசிரியர்.மிகச்சிறப்பாக வெளிவந்திருக்கும் இந்த 'செப்பேடுகளும் சதுர்வேதி மங்கலங்களும் ' என்னும் இந்த நூல் பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நூலுக்கு நான் எழுதியிருக்கும் அணிந்துரையை இத்துடன் இணைத்துள்ளதோடு,புத்தகம் எப்படிப்பெறுவது என்பதற்கு தொடர்பு எண்ணும்,மின் அஞ்சல் முகவரியும் பதிவு செய்துள்ளேன். வாங்கிப் பயன் பெறுக.





                              அணிந்துரை

                          முனைவர்.வா.நேரு,

            தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,

                  பெரியார் திடல், சென்னை-600 007.

 

இந்த நூலை ஆக்கியிருக்கும் நூல் ஆசிரியர் அய்யா ஞான.வள்ளுவன் அவர்கள் தமிழ்நாடு, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்துணைத்தலைவர். தந்தை பெரியாரியலை களப்பணி வழியாகவும்,கருத்துப்பணி வழியாகவும் பரப்புவதோடு அதனை வாழ்வியலாகக் கடைப்பிடிப்பவர். தன் தந்தை காலந்தொட்டு திராவிடர் கழகத்தில்,தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் பயணித்து,பல்வேறு பணிகளைச்செய்து வருபவர்.

அவரால் எழுதப்பட்டு ,அவரின் எட்டாவது நூலாக ‘செப்பேடுகளும் சதுர்வேதி மங்கலங்களும்’ என்னும் இந்த நூல் வெளிவருவது மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது.பரந்து பட்ட வாசிப்பு அறிவும்,எப்பொருளையும் மெய்ப்பொருள் காணும் அறிவோடு அணுகுவதும் இவரின் சிறப்பு. வாசிப்பவர்கள் ‘மெய்ப்பொருள் அறியும்’ நோக்கோடு படைக்கப்பட்டிருக்கும் நூல் இந்த நூல்.தனக்குத் தோன்றியதை மட்டுமே எழுதிய நூல் அல்ல இது, பலவகைப்பட்ட தரவுகளைப் பட்டியலிட்டு அதனின் விளக்கமாகவும் ஆய்வு நூலாகவும் இந்த நூல் படைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நூல் ‘பார்ப்பனர்களும் சாஸ்திரங்களும் ‘என்னும் இயலில் தொடங்கி,’அடிமையாகப்போன அரசர்கள் ‘ என்னும்  இயல்வரை 19 இயல்களைக் கொண்டுள்ளது.’செப்பேடுகளையும் சதுர்வேதி மங்கலங்களையும் பற்றிக் கூற வந்த இடத்தில் பார்ப்பனர்கள் பற்றியும் அவர்களின் சாஸ்திரங்களைப் பற்றியும் கூற வந்தது ஏன்? ‘ என்னும் கேள்வியோடுதான் இந்த நூல் தொடங்குகிறது. இந்தக் கேள்விக்கான பதில் ,இந்த நூலை வாசித்து முடிக்கும்போது மிகத் தெளிவாகத் தெரியும்.

மதுரை உலகத்தமிழ்ச்சங்க வளாகத்தில் அய்யா ஞான.வள்ளுவன் அவர்களுக்கு கிடைத்த ‘திருவிந்தளூர்ச் செப்பேடு’ என்னும் நூல்தான் இந்த நூலை அவர் எழுதுவதற்குத் தூண்டுதலாக இருந்திருக்கிறது.’தமிழக வரலாற்றில் கிட்டத்தட்ட ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழமையான செப்பேடுகள் தொடங்கி சமீபத்திய செப்பேடுகள் வரையிலும் பெரும்பான்மையானவை பார்ப்பனர்களுக்கான சதுர்வேதி மங்கலங்கள்,பிரம்மதேயங்கள்,கொடைகள் அளித்த செய்திகளைக் கொண்டவையே.அவைகளைப் பற்றியும் ,அச்செப்பேடுகளில் கூறப்படாத விரிவான ,நிலக் கொடையளிக்கப்படும் நடைமுறையை விளக்கும் திருஇந்தளூர் செப்பேடு பற்றி முழுமையாகவும் எழுதிட வேண்டும் என்ற எண்ணத்தில் தொகுக்கப்பட்டதே இந்த முயற்சி ‘ என்று இந்த நூலின் ஆசிரியர் ,இந்த நூல் ஆக்கம் பற்றிக் குறிப்பிடுகிறார். மிக நல்ல முயற்சி.அந்த முயற்சியின் விளைவு நமக்கு இந்த ஆராய்ச்சி நூல் கிடைத்திருக்கிறது.

இந்த நூல் பார்ப்பனர்கள் பற்றியும் அவர்களின் சாஸ்திரங்களைப் பற்றிய உண்மையையும் எளிமையான சொற்களால் விளக்குவதோடு சோழ மன்னர்கள் அதிலும் குறிப்பாக பிற்காலச்சோழ மன்னர்கள் எப்படி பக்தி என்னும் மயக்கத்தால் ஏமாந்தார்கள் என்பதை விரிவாகக் குறிப்பிடுகிறது.அய்யா ஞான.வள்ளுவன் அவர்களின் நூல்களின் சிறப்பே, நம்முடைய கருத்திற்கு நேர் எதிராக இருக்கக்கூடியவர்களின் நூல்களில் இருந்தே  நம்முடைய கருத்துக்கு வலு சேர்க்கும் ஆதாரங்களைத் தருவதாகும். ஒவ்வொரு இயலிலும் அவர் கொடுத்திருக்கும் ஆதாரங்களை நாம் வாசிக்கும்பொழுது அவரின் உழைப்பு நமக்குத் தெரிகிறது.

இந்த நூலில் வரலாற்றுத் தகவல்கள் இருக்கின்றன.பல்வேறு செப்பேடுகள் பற்றிய தகவல்கள் இருக்கின்றன.தமிழர்களும் தமிழ் மன்னர்களும் பார்ப்பனர்களிடம் எப்படி ஏமாந்தார்கள்,என்ற விவரமும் இருக்கிறது.இந்த நூல் வாசித்துவிட்டு வைத்துவிட்டுப் போகும் நூல் அல்ல.ஆங்கிலத்தில் Reference Book என்று சொல்வார்களே,அதனைப் போல நாம் பாதுகாத்து,பத்திரப்படுத்தி வைக்க வேண்டிய நூல்.பல்கலைக் கழகங்களில்,கல்லூரிகளிலும்  பாட நூலாக வைக்கும் அளவுக்கு செழுமையான கருத்துகளைக் கொண்ட நூல்.

இதனைப் போல இன்னும் பல நூல்களை பெரியாரிய நோக்கில் அய்யா ஞான.வள்ளுவன அவர்கள் படைக்கவேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவிப்பதோடு,இந்த நூலை நல்ல முறையில் திராவிட இயக்கத்தைச்சார்ந்த தோழமைகளும்,அம்பேத்கரிய,பொதுவுடமை இயக்கத் தோழமைகளும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்கின்றேன், நூல் ஆசிரியர் அய்யா ஞான.வள்ளுவன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

                                              தோழமையுடன்

                                              வா.நேரு,15.07.2023


நூலின் தலைப்பு : செப்பேடுகளும் சதுர்வேதி மங்கலங்களும்

நூல் ஆசிரியர்   : ஞான வள்ளுவன்

வெளியீடு       :  இனியன் பதிப்பகம்,வைத்தீஸ்வரன் கோவில்

தொடர்பு எண்   :  9443985889,valluvan54@gmail.com

மொத்த பக்கங்கள் : 142,விலை ரூ 150






 

Friday, 4 June 2021

சிந்தனைக் கட்டுரை : ஒரு நூற்றாண்டின் எழுத்துச் சாட்சியம்....முனைவர் வா.நேரு

முழுமையாக ,படங்களுடன் வாசிக்க உண்மை இணையதளம்:

http://www.unmaionline.com/index.php/6079-oru-nutrandil-eluthu-satsiyam.html 


தமிழ் எழுத்துலகில் தனக்கென தனி இடம் பதித்த  கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் 17.5.2021 அன்று மறைந்திருக்கின்றார். நூறு ஆண்டுகள் தொட்டுவிட ஒரே ஓர் ஆண்டும் சில மாதங்களும்  இருந்த நிலையில் கி.ரா. இயற்கை எய்தியிருக்கிறார்.

திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ‘ஒரு நூற்றாண்டின் எழுத்துச் சாட்சியம்’ என்று தலைப்பிட்டு, எழுத்தாளர் கி.ரா. அவர்களின் மறைவிற்கு மிகச் சிறப்பான இரங்கல் அறிக்கையை வெளியிட்டிருக்கின்றார். (‘விடுதலை’ 18.5.2021). புதுச்சேரியில் மறைந்த கி.ரா. அவர்களுக்கு புதுச்சேரி அரசின் சார்பாக அரசு மரியாதை செலுத்தி, உடல் தமிழகத்திற்கு அனுப்பப் பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் முதல்வர் மாண்புமிகு. மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, கி.ரா. அவர்களின் சொந்த ஊரான இடைச்செவல் கிராமத்தில், குண்டுகள் முழங்க, அரசு மரியாதையோடு அவருக்கு இறுதி நிகழ்வு நிகழ்ந்திருக்கிறது. அவருக்கு கோவில்பட்டியில்  சிலை அமைக்கப்படும் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக்கிறார். அதுமட்டுமல்ல; “கி.ரா படித்த இடைச்செவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை அரசு சார்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கவும், அவருடைய நினைவைப் போற்றும் வகையில், அவருடைய படைப் பாளுமையை வெளிப்படுத்தும் விதமாக அவருடைய புகைப்படங்கள், படைப்புகள் ஆகியவற்றை மாணவர்களும், பொதுமக்களும் அறிந்துகொள்ளும் வகையில் ஓர் அரங்கம் நிறுவப்படும்“ என்றும் மாண்புமிகு முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஓர்  எழுத்தாளன் என்கிற வகையில், ஓர் எழுத்தாளர் கி.ரா.விற்கு கிடைக்கும் அங்கீகாரம் மிகப்பெரிய மனநிறைவை நமக்கு அளிக்கிறது. பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்.

தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றையும், கி.ரா. அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் ஒப்பிடும் போது சில ஒற்றுமைகளைக் காண்கின்றோம். இருவரும் 35 வயதிற்கு மேல் தாங்கள் எடுத்துக்கொண்ட இலட்சியத்திற்கு வந்தவர்கள். தந்தை பெரியார் 1879ஆம் ஆண்டு பிறந்தவர். 1915-களுக்குப் பிறகுதான் பொது வாழ்வுக்குள் வருகின்றார். ஆனால் 95 ஆண்டு காலம் வாழ்ந்து யாரும் எட்ட முடியாத பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரராகப் புகழ் பெற்றார். தொண்டு புரிந்தார். மக்கள் மனதில் நின்றார். அதனைப்போலவே 1923-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் நாள் பிறந்தவர் கி.ரா. அவர்கள். தன்னுடைய முதல் கதையை 1958இல் தான் எழுதுகிறார். அன்றைய ‘சரஸ்வதி’ இதழில்  வெளிவருகிறது. 1958இல் தொடங்கி தனது இறுதிவரை எழுத்துப் பணியை அவர் நிறுத்தவேயில்லை. தனது பணி எழுத்து என்று எடுத்துக் கொண்டபின், தொடர்ச்சியாக எழுதிக் கொண்டே இருந்திருக்கின்றார். தந்தை பெரியார் தனது இறப்புக்கு முந்தைய சில நாள்களுக்கு முன் கூட எப்படி பேசிக் கொண்டிருந்தாரோ, அதனைப் போலவே எழுதிக் கொண்டும், இலக்கியத்தைப் பற்றிப் பேசிக் கொண்டும் இருந்தவர் கி.ரா.  ஆவார்.

தந்தை பெரியார் மூன்றாம் வகுப்புவரைதான் படித்தவர். கி.ரா. படித்தது 4ஆம் வகுப்பு வரை என்றும், ஏழாம் வகுப்பு வரை என்றும் இருவேறு செய்திகள் வருகின்றன. எப்படி இருந்தபோதிலும் அவர் ஏழாம் வகுப்பைத் தாண்டவில்லை என்பது உறுதியாகிறது. தந்தை பெரியார் தன்னைச்சுற்றி இருந்த சமூகத்தைப் படித்தார். இதற்கான காரணம் என்ன என்பதனைச் சிந்தித்தார். இதனைச் சீர்படுத்த பிரச்சாரமும் எழுத்துமே தனது வழி எனத் தீர்மானித்தார். அப்படித் தீர்மானித்த பிறகு தன்னுடன் யார் வருவார், தன்னை விட்டு யார் போவார் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல்  எடுத்துக்கொண்ட இலட்சியத்திற்காக இரவும் பகலும் பாடுபட்டார். ‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ நிலைக்குத் தந்தை பெரியார் உயர்ந்தார்.

கி.ரா. அவர்கள் தனது 35ஆம் வயதில் எழுத ஆரம்பிக்கிறார். 99ஆம் வயதில் மறைந்திருக்கும் அவரின் படைப்புப் பட்டியல் நம்மைத்  திகைக்க வைக்கிறது. கண்ணிமை, மின்னல், கோமதி, நிலை நிறுத்தல், கதவு உள்ளிட்ட 24 தலைப்புகளில் சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், (சாகித்திய அகாடமி விருது பெற்றது), அந்தமான் நாயக்கர் என்னும் மூன்று நாவல்கள் வெளியிட்டிருக்கிறார். கிடை, பிஞ்சுகள் என்னும் தலைப்பில் குறுநாவல்கள். ருஷ்ய மண்ணின் நிறம் என்ன?, புதுமைப்பித்தன், மாமலை ஜீவா. இசை மகா சமுத்திரம். அழிந்து போன நந்தவனங்கள், கரிசல் காட்டுக் கடுதாசி என்னும் தலைப்புகளில் அவரது கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகி உள்ளன. இது தவிர நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் என்னும் தொகுப்பு, இதனைத் தவிர கரிசல் வட்டார வழக்கு அகராதி என்னும் சிறப்பான அகராதியினைத் தொகுத்து வெளியிட்டுள்ளார்.


தந்தை பெரியார் படாத உடல் நோவு இல்லை. ஆனால், அந்த உடல் நோயினை உள்ளத்தில் எடுத்துக்கொண்டவர் இல்லை. தனது கடைசிக் கூட்டத்தில், சென்னையில் 19.12.1973 அன்று உடல் நோயினால், வலியினால் துன்பப்பட்டாலும், அந்தத் துன்பத்தை கண நொடியில் தாண்டிவிட்டு, இன இழிவினை ஒழிப்பதற்காக அவர் முழுங்கிய முழக்கம், எம்மைப் போன்று ஒலி நாடாவில் கேட்பவர்களின் கண்களிலேயே கண்ணீரை வரவைத்து, உணர்ச்சி மேலோங்கி நிற்கச் செய்கிறது. தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி போன்றவர்கள், அன்னை மணியம்மையார் போன்றவர்கள், அந்த நிகழ்விலே தந்தை பெரியாரின் உடன் இருந்தவர்கள் உள்ளத்திலே எத்தனை வேதனையை ஏற்படுத்தியிருக்கும். ஆனாலும் கூட நமக்காக அந்த வேதனையிலும் கர்ச்சனை செய்த அந்தப் பகுத்தறிவுச் சிங்கத்தின் குரல் நம்மை “இன்னும் வேலை செய்!’’ என்று அன்புக் கட்டளை இடுவதாகத்தான் எடுத்துக் கொள்கிறோம். உயர்ந்த நோக்கத்திற்காக தனது வாழ்க்கை என்று அமைத்துக் கொண்டவர்களுக்கு நோய் அஞ்சத்தான் செய்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. எழுத்தாளர் கி.ரா. அவர்கள் காச நோயால் மிகவும் அவதிப்பட்டிருக்கிறார். அவருக்கு திருமணமான போது அவருக்கு வயது 19. அவரது துணைவியார் பெயர் கணவதி அம்மாள். 19- வயதில் கி.ரா.வுக்கு திருமணம்  நடந்தபோதே அவருக்கு காச நோய் இருந்திருக்கிறது. காச நோய் உள்ள கி.ரா.வை. தைரியமாக மனமுவந்து திருமணம் முடித்துக் கொண்டதாக கணவதி அம்மாள் தெரிவித்திருக்கிறார். அன்னை நாகம்மையார் தனது கணவர் தந்தை பெரியாருக்கு செய்த பணிவிடைகள் போல கி.ரா.விற்கு கணவதி அம்மாள் பணிவிடைகள் செய்திருக்கிறார். காதலால் கசிந்துருகிக் கவனித்திருக்கிறார். வீட்டுக்கு வந்த விருந்தினர்களை நன்றாகக் கவனித்து  விருந்தோம்பல் செய்திருக்கிறார். தன் கணவர் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்ற நேரத்தில், தனி ஆளாக நின்று சமாளித்து, தனது இரு பிள்ளைகளை வளர்த்திருக்கின்றார். (நன்றி: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்).


தன்னுடைய வாழ்க்கையிலிருந்து, தன்னுடைய இலட்சியத்தை அமைத்துக் கொண்டவர் தந்தை பெரியார். தன்னுடைய குழந்தைப் பருவத்தில் தனது வீட்டிற்கு வந்தடையும் பார்ப்பனர் களையும் அவர்களுக்குக் கிடைக்கும் மரியாதையை, செல்வாக்கை உள்வாங்கிய தந்தை பெரியார் ஏன் எனச் சிந்தித்தார். பின் அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளைப் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றார். கி.ரா.வைப் பொறுத்தளவில் அவர் ஒரு விவசாயி. இடைச்செவல் கிராமத்தில் நாற்பது வயதான நிலையில் தனது நிலத்திற்கு வரிகட்ட, தாசில்தார் அலுவலகத்திற்குச் செல்கிறார். அங்கு ஒரு கதவு சாத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இங்கே ஏன் இந்தக் கதவு தனியாக நிற்கிறது என்று கேட்டிருக்கிறார். ஒரு விவசாயி கிஸ்தி (நில வரி) கட்டவில்லை. அதற்காக, அவரது வீட்டில் இருந்து கதவு பிடுங்கப்பட்டு இங்கு வந்து வைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறது. அதனை வைத்துத்தான், ‘அந்தக் கதவு’ என்ற சிறுகதையை எழுதியிருக்கிறார். பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள அந்தக் கதைக்கான அடித்தளம் வாழ்வில் ஒரு விவசாயிக்கு ஏற்பட்ட நிகழ்வு. தன்னைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கையிலிருந்து கதைக் கருவை எடுத்துக் கொண்டவர் கி.ரா. தன்னைச் சுற்றி இருப்பவர்களின் மொழிகளை, தனது கதைகளின் மொழியாக எடுத்துக்கொண்டவர் கி.ரா. அவரது  கதை மாந்தர்கள் கள்ளங் கபடமற்றவர்கள்.  எதார்த்தவாதிகள். பிழைக்கத் தெரியாதவர்கள். ஆனால், பெரிய மனதுக் காரர்கள். வட்டார வழக்கில் எழுதுவது எப்படி என்பதற்கான அகராதி கி.ரா ஆவார். இன்று பலர் வட்டார வழக்கு என்று எழுதுகின்றனர். ஆனால், அவையெல்லாம் கி.ரா.வின் வட்டார வழக்கு எழுத்துக்கு முன்னால் மிகச் சாதாரணமாக இருப்பதைப் படிக்கும்போது உணர்கின்றோம். அவரின் முதல் நாவலான ‘கோபல்ல கிராமம்‘ நாவலைப் படித்து முடித்தவுடன் அந்தக் கதைக்குள் இருந்து நாம் விடுபட நாள்கள் ஆகும். அப்படித்தான் அவரின் ஒவ்வொரு நாவலும் சிறுகதையும். 

இந்தக் கரோனா தொற்றுக் காலத்தில் மூட நம்பிக்கையைப் பரப்புவதிலேயே குறியாய் இருக்கும் சில மனிதர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாடாளுமன்ற உறுப்பினரே கூட, பி.ஜே.பி.யைச் சார்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர், மாட்டு மூத்திரம் குடித்தால் கரோனா சரியாகிவிடும் என்றும், குஜராத்தில் மாட்டுச் சாணியில் குளியல் எடுத்தால் கரோனா சரியாகி விடும் என்றும் பொய்கள் பரப்பப் படுவதைப் பார்க்கின்றோம். மனிதர்களுக்கு ஏற்படும் கரோனாவைப் போல மாடுகளுக்கு ஏற்படும் தொற்றான கணை நோய் பற்றியும், தங்களுடைய கடவுள் நம்பிக்கைகளைக் கைவிட்டுவிட்டு மாடுகளுக்குத் தொற்று ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போடும் மருத்துவர்களை, மனிதர்களைக் கேலி பேசும் அயிரக்கா, தொட்டணன் பாத்திரப் படைப்பும், எப்படி பாதிக்கப்படும் மக்களிடத்தில் மூட நம்பிக்கையைச் சிலர் பரப்புகிறார்கள் என்பதனைக் கதையாகச் சொல்லும் ‘குடும்பத்தில் ஒரு நபர்’ என்னும் கி.ரா.வின் சிறுகதை நினைவுக்கு வருகிறது. இந்தக் கரோனா காலத்தில், கரோனா பாதித்த தாயை வீட்டிற்குள் விடமாட்டேன் என்று சொல்லி, மகளும் மருமகனும் கதவைப் பூட்டிக்கொண்ட செய்தி சில நாள்களுக்கு முன் செய்தித்தாளில் வந்தது. அந்த நிலையில் மனிதர்கள், தாங்கள் வளர்க்கும் விலங்குகளுக்குக்கூட எவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள், ‘குடும்பத்தில் ஒரு நபரா’க நினைக்கிறார்கள் என்பதனை விவரிக்கும் கதை ‘குடும்பத்தில் ஒரு நபர்’ என்னும் கதை.

தந்தை பெரியார், “தாகம் எடுப்பது போல, பசிப்பது போல, பாலியலும் ஓர் உணர்வு’’ என்றார். ஒரு உணவு விடுதியில் சென்று சாப்பிடுவது போல அது தனிப்பட்டவரின் விருப்பம் என்றார். கி.ரா. தனது  கதைகளில் பாலியல் என்பதும் ஒரு பசி என்பதனை மிகத் தெளிவாகவும் அதே நேரத்தில் விரசமில்லாமல் மிக நளினமாகவும் எடுத்துச் சொன்னவர். அவரின் ‘வயது வந்தவர்களுக்கு மட்டும் ‘ என்னும் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பு இதனை விரிவாகப் பேசும்.


திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தன்னுடைய இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டது போல “தமிழகத்தின் கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் என்னும் கிராமத்தில் பிறந்து, அம்மக்களின் பண்பாட்டை, வாழ்வியலைக் கதைகளாக்கி உலகெங்கும் உலவ விட்டவர். கரிசல் எழுத்துகளுக்கென்று களம் அமைத்தவர். தமிழின் மிகச் சிறந்த படைப்பாளியாகவும், படைப்பாளிகளை உருவாக்கவும், ஊக்குவிக்கவும் பெரும் பங்காற்றியவராகவும் அவரது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். இந்திய விடுதலைப் போராட்டம், இடதுசாரி இயக்கம் என்று அரசியல் பாதைகளிலும் பயணம் செய்தவர். இறுதி வரைக்கும் எழுத்துப் பணியைத் தொடர்ந்தவர். ஒரு நூற்றாண்டின் எழுத்துச் சாட்சியமாகத் திகழ்ந்தவர்” என்று சிறப்பாகக் குறிப்பிட்டு, அந்த ஒரு நூற்றாண்டின் எழுத்துச் சாட்சியம் தந்தை பெரியார் பற்றி என்ன கருத்துக் கொண்டிருந்தார் என்பதையும் ஆசிரியர் அய்யா அவர்கள் அறிக்கையில் குறிப்பிடுகின்றார். “திராவிட இயக்க எழுத்தாளர்களின் மீதான சிலரின் வன்மைப் பார்வைக்கு பார்ப்பனிய சிந்தனையே காரணம் என்பதை வெளிப்படையாகச் சொல்லத் தயங்காதவர். தந்தை பெரியாரின் மனித நேயத்தையும் சமூகப் பணியையும் போற்றி, ‘புதிய வழிகாட்டி’ என்று விளித்து மதித்தவர். மனதில் பட்டதை மறைக்கும் தன்மையின்றி உண்மையை வெளிப்படுத்தக் கூடியவர்” என்று கி.ரா. அவர்களைப் பற்றி புகைப்படம் போல விவரித்திருக்கின்றார்.

சில நாள்களுக்கு முன்னால், கோ.ஒளிவண்ணன் அவர்கள் நடத்திய ‘வாருங்கள் படிப்போம்‘ நிகழ்வில் கலந்து கொண்டு, கி.ரா. அவர்கள் கருத்துகளைத் தெரிவித்தார். அவருடைய ‘கிடை’ குறு நாவல், அவருடைய 96ஆம் வயதில் எழுதப்பட்டது. அதற்குப் பின் அவருடைய ‘மிச்சமிருக்கும் கதைகள்’ நூல் வெளிவந்தது. இப்படி இறுதிவரை இலக்கியம் குறித்து பேசிக் கொண்டும், இலக்கியப் படைப்புகளை அளித்துக் கொண்டும் இருந்தவர் கி.ரா. அவர்கள். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தனக்கு பேராசிரியர் பதவி கிடைத்தபோது, வேண்டாம் என்று மறுத்தார். ஆனால் துணைவேந்தர் நேரிடையாக வந்து கேட்டுக் கொண்ட பின்பு ஏற்றுக்கொண்டு, நாட்டுப்புற இலக்கியம் குறித்து பல மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டினார்.

ஓர் எழுத்தாளரைப் போற்றுவது என்பது, அவரது எழுத்துகளை வாசிப்பது. ஓர் எழுத்தாளரை நினைவில் கொள்வது என்பது அந்த எழுத்தாளரின் படைப்புகளில் சிலவற்றையாவது படித்து மனதில் இருத்துவது. அந்த வகையில் இவ்வளவு சிறப்புப் பெற்றிருக்கும், தன்னுடைய எழுத்தால் ஒரு நூற்றாண்டின் சாட்சியமாகத் திகழ்ந்து மறைந்திருக்கும் கி.ரா. அவர்களின் படைப்புகளைப் படிப்பதோடு, மற்றவர்களுக்கும் அதனை சிறப்பாக எடுத்துக் கூறும் ஆண்டாகவும் இந்த ஆண்டை அமைத்துக் கொள்வோம்.


நன்றி உண்மை 01-06-2021

Saturday, 27 March 2021

நூல் மதிப்புரை : மாண்புமிகு மதிவாணன்(புதினம்)

வண்ணப் படத்தோடு வாசிக்க ....வல்லினச்சிறகுகள் இதழில் படிக்க இதனைச்சொடுக்குங்கள்...




நூல் : மாண்புமிகு மதிவாணன்(புதினம்)

நூல் ஆசிரியர் :இளவரசி சங்கர்

வெளியீடு : சாதரசி சங்கர் பதிப்பகம்,புதுச்சேரி-605 005

முதற்பதிப்பு : ஜனவரி 2021

மொத்த பக்கங்கள் :180  விலை ரூ 180.


நூல் ஆசிரியரின்  முதல் புதினம்'மாண்புமிகு மதிவாணன்'. இந்தப் புதினத்தின் முதல் பகுதியில் நூல் ஆசிரியரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.தமிழ் இலக்கியம்,ஆங்கில இலக்கியம் இரண்டிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் முதல் நிலை சுருக்கெழுத்தாளராகப் பணியாற்றுபவர்.நாடகத்தில் நடிப்பவர்.பறை இசை அடிப்பவர், கரகாட்டம் ஆடுபவர்,பட்டிமன்றம்,பாட்டரங்குகளில் சொற்பொழிவு ஆற்றுபவர்,மொழி பெயர்ப்பவர்,வானொலி,தொலைக்காட்சி நிகழ்வுகளில் பங்கேற்பவர்.தான் இறந்த பிறகு தனது உடல் ஜிப்மர் மருத்துவமனைக்கு அளிக்கப்படவேண்டும் என உடல்கொடையை எழுதிக்கொடுத்துள்ளவர் என இவரைப் பற்றிய பல குறிப்புகள்… இவரின் பன்முக ஆற்றலை  உணர்த்துகிறது.


“இன்றைக்குப் புதினம் என்பது அரிதாகவே படைப்பாளர்களால் படைக்கப்படுகிறது. எப்படி கவிஞர்கள் காப்பியத்தின் பக்கம் செல்லாமல் தவிர்க்கிறார்களோ அப்படிப் பிற படைப்பாளிகள் இன்று புதினத்தை விருப்பத்துடன் ஈடுபட்டுப் படைப்பதைப் பெரும்பாலும் தவிர்க்கிறார்கள்..”என்று முனைவர் அ.உசேன் அணிந்துரையில் குறிப்பிடுகின்றார். இதில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. எழுத வருகிறவர்கள் எல்லோராலும் புதினம் படைக்க இயலுவதில்லை. ஆனால் அப்படி புதினம் எழுதி வெற்றி பெற்ற பல எழுத்தாளர்களைக் கொண்ட்து தமிழ் இலக்கியம். இன்றைய பெண் புதினப்படைப்பாளிகள் என்று எடுத்துக்கொண்டால்கூட பாமா,திலகவதி,சிவகாமி,அம்பை,மலர்வதி எனப்பலர் உணடு.அவர்களில் ஒருவராக,புதிதாக  இளவரசி சங்கர் இணைந்திருக்கிறார்.


முனைவர் சுந்தரமுருகன் அவர்களின் மகிழ்வுரை,முனைவர் அ.உசேன் அவர்களின் அணிந்துரை , அரிமதி இளம்பரிதி அவர்களின் அன்புரை,  பாவலர் ஆறு செல்வன் அவர்களின் கருத்துரை,புதுவை யுகபாரதி அவர்களின் வாழ்த்துப்பா எனப் புதுச்சேரியின் புகழ் மிக்க  தமிழ் இலக்கிய ஆளுமைகளால்  நூலின் முதல் 30 பக்கங்கள் கருத்துகளால் நிரம்பி நிற்கிறது.


“ஒரு மனிதனின் நற்பண்புகளையும்,அதீத திறமைகளையும்,சிறப்புத்தன்மைகளையும்,அறிவாற்றலையும்,புத்திக்கூர்மையையும்,தொண்டுள்ளத்தையும்,உழைப்பையும்,வெற்றிகளையும் அவர் வாழும் காலத்திலேயே மெச்சவேண்டும்,போற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் படைக்கப்பட்ட்துதான் இந்த ‘மாண்புமிகு மதிவாணன் “ என்னும் புதினம் “ என்று என்னுரையில் குறிப்பிடும் இந்த நூலின் ஆசிரியர் இளவரசி சங்கர்  மேலும் ‘இந்தப் புதினம் என்னுடைய முதல் முயற்சி.சோதனைகளும் சாதனைகளும்  நிறைந்த மதிவாணன் அண்ணனின் வாழ்க்கையைச் சிறிது புனைவுகளுடன் படைப்பாக்கம் செய்துள்ளேன் ‘ என்று குறிப்பிட்டுள்ளார். வாழும் மனிதரின் கதை,சில புனைவுகளோடு என்று நாம் புரிந்துகொள்கிறோம்.


இந்தப் புதினத்தின் இரண்டாம்பக்கமே, இந்தப் புதினத்தின் நாயகன் இறந்து விட்டதாகப் பரப்பப்படும் ஒரு பொய்யான செய்தி..அதன் மூலமாகத்தான் கதை நகர்கிறது.`போகும் வழியில் ஒரு மனிதன் இறந்துவிட்டாரா? இல்லையா? என்பதை உறுதி செய்வதற்கு முன்பாகவே மனிதர்கள் இந்தச்செய்தியைப் பரப்புவதில் குறியாக இருக்கிறார்கள் என்ற வேதனையோடு …


`இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை ` ஆகிவிட்டது என எனக்குள் ஏதோதோ புலம்பிக்கொண்டே என் இருக்கையை வந்தடைந்தேன் …` என விவரிக்கும் நூல் ஆசிரியர் ..`யார் இந்த மதிவாணன் ? `என்னும் கேள்வியைப் புதினத்திலேயே கேட்கிறார். பின்பு அவரைப் பற்றிய செய்திகளை கதையாகச்சொல்லிச் செல்கிறார்.


புதுச்சேரியில் இருக்கும் ஜிப்மர் மருத்துவமனையில் வேலை பார்ப்பவர் மதிவாணன் என்று ஒற்றை வரியில் சொல்லாமல் முதலில் தான் வசிக்கும் புதுச்சேரியின் பெருமைகளை,சிறப்புகளைப் பட்டியலிட்டு சொல்கின்றார்.`ஓயாமல் அலையோசை கேட்டுக்கொண்டிருக்கும் வங்கக் கரையோரம் அமைந்துள்ளது அழகிய புதுச்சேரி ` என்று ஆரம்பித்து புதுச்சேரியை வர்ணிப்பது ஒரு கவிதை போல செல்கிறது.முடிவில் இத்தனை சிறப்புகளையும் கொண்ட புதுச்சேரியில் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ளது `ஜிப்மர் `மருத்துவமனை ` என்று முடிக்கும்போது ஒரு திரைப்பட ஒளிப்பதிவாளர் சுற்றுப்புற அழகையெல்லாம் காட்டி முடிவில் காட்ட வேண்டிய காட்சியை பெரிதாகக் காட்டுவது போல  சிறப்பாக உள்ளது.அந்த ஜிப்மர் மருத்துவமனையில் வேலை பார்ப்பவர் மதிவாணன் எனக் காட்டுகிறார். புதினம் முழுவதுமே இப்படி ஒரு செய்தியைச் சொல்வதை அழகியலோடும் ,விறுவிறுப்பாகவும் சொல்லிச்செல்வதே இந்த நூலின் வெற்றி எனலாம்.


மதிவாணன் தனக்கு அறிமுகம் ஆன விதம், அவர் தனக்கு உடன் பிறவா அண்ணனாகச்செய்த உதவிகள், அவருடைய சொந்த ஊர் என விவரித்துச்சொல்லிச்செல்லும்  நூல் ஆசிரியர்,மதிவாணனே தன்னை அழைத்து, தனக்கு மலக்குடல் புற்று நோய் வந்திருப்பதை சொன்ன நிகழ்வை,அதனால் தான் கலங்கியதை,பின்பு அவரே தனக்கு ஆறுதல் சொன்னதை எல்லாம் நம் கண் முன்னே அப்படியே காட்சிப் படிமமாக நிறுத்தியிருக்கிறார்.அப்படி புற்று  நோயால் பாதிக்கப்பட்டு ,மருத்துவமனையில் இருக்கும்போதுதான் அவர் இறந்துவிட்ட்தாக சிலர் பரப்பிய செய்தியை எழுதியிருக்கிறார்.பின்பு அவர் அந்த நோயை வென்ற விதம்,தனக்கு ஏற்பட்ட இன்னலைப் பொறுத்துக்கொண்டே மற்றவர்களுக்கு உதவிய விதம் என்று புதினத்தின்  நாயகன் மதிவாணனைப் பற்றிய செய்திகளை தொடர்ச்சியாக கதையாகச்சொல்லிக்கொண்டே செல்கிறார் நூல் ஆசிரியர்.


வாழ்க்கையின் அனுபவங்களை பல்வேறு இடங்கள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. சுடுகாடு காட்டும் படிப்பினை தனித்தன்மையானது. ஆனால் நோய் வாய்ப்பட்டு,மருத்துவமனையில் நோயாளியாக படுத்துக்கிடக்கும்போது கிடைக்கும் படிப்பினை அனைத்திலும் மேலானது. மருத்துவமனை,உயிர் காக்கும் மருத்துவர்கள், நோயாளிகளைக் குழந்தைகளைப் போலக் கவனிக்கும் செவிலியர்கள் என அந்த உலகம் தரும் அனுபவம் மற்ற எந்த இடமும் தராத மேன்மையான் அனுபவம்.அதிலும் உயிர்க்கொல்லி நோயாக அறியப்பட்டிருக்கும் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் இருக்கும்போது கிடைக்கும் அனுபவத்தையும்,அதனை மன அடிப்படையில்,மருத்துவ அடிப்படையில் வென்ற கதையை இந்தப்புதினம் பேசுகிறது. மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கும் மக்களுக்கு வரும் நோயைப் பற்றிய விழிப்புணர்வு  இன்றைய தேவை.அதனை இந்தப் புதினத்தின் வாயிலாக நூல் ஆசிரியர் விரிவாகவே விளக்கியிருக்கிறார்.


கன்னடத்தில் பி.வி.பாரதி அவர்கள் எழுதியதை தமிழில் 'கடுகு வாங்கி வந்தவள் 'என்னும் தலைப்பில் கே.நல்லதம்பி அவர்கள் மொழி பெயர்த்த நூல் கூட அண்மையில் வாசித்தேன்.நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட அந்தக் 'கடுகு வாங்கி வந்தவள் 'என்னும் நூல் ' ஒரு அனுபவக்கதை' என்று தலைப்போடு சேர்த்து அச்சிடப்பட்டிருந்தது. மார்பகப் புற்று நோய் வந்த ஒரு பெண் அதனை எதிர்கொண்டு ,சிகிச்சை எடுத்து வெற்றி பெற்ற அனுபவக்கதை அது. அது போல மதிவாணன் அவர்கள் மலக்குடல் புற்று நோயில் இருந்து சிகிச்சையால் குணமடைந்ததை சொல்லும் அனுபவக் கதையாக இந்த நூலினை எடுத்துக்கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் அந்த நோய், தன் தாய்க்கு வந்த போது அதனை எதிர்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமடைய இந்த அனுபவம் எப்படி ஊக்கம் கொடுத்தது என்பதையும் நூல் ஆசிரியர்  புதினத்தின் மூன்றாம் பாகமாக சுட்டிச்செல்கிறார். மதிவாணன் புற்று நோயிலிருந்து விடுபட்டது மட்டுமல்லாமல் ,அவரின்  நேர்மை,பணி புரியும் இடத்தில் சிறப்பான சேவை புரியும் தன்மை, அவர் பிறந்த ஊரின் சிறப்பு, நூல் ஆசிரியர் பிறந்த ஊரின் சிறப்பு என்று பல தகவல்களை எடுத்துக்கொண்டு அவற்றை இணைத்து,கற்பனையான விருதான 'மாண்புமிகு மதிவாணன்' என்னும் விருது அளிப்பு நிகழ்வு  பற்றியும்  வாசிப்பவருக்கு அலுப்பு தட்டாமல் ,விறுவிறுப்பாக அமைந்துள்ள புதினமாக இந்த நூல் உள்ளது.


இந்தப் புதினத்தில் எதிர்மறை சிந்தனை உள்ள கதாபாத்திரங்களே இல்லை. பொதுவாக  புதினம் என்பது சிக்கல்கள் பின்பு சிக்கல்களைத் தீர்த்து வெற்றியாகவோ அல்லது சிக்கல்களைத் தீர்க்க இயலாத தோல்வியாகவோ அமையும். இந்தப் புதினம் இந்த இரண்டு தன்மையும் இல்லாமல் ஒரு வேறுபட்ட நோக்கில் படைக்கப்பட்டிருக்கிறது.

மதிவாணன் என்னும் கதாபாத்திரத்தின் இலக்கியப் படைப்புகளையும் இந்தப் புதினத்தில் அறிமுகப்படுத்துகிறார்.'புழுதி மண்' என்னும் சிறுகதைத் தொகுப்பு,நோய்வாய்ப்பட்ட நேரத்திலும்கூட அந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் எப்படி உருவாகின என்பதனை விளக்கும் 'கதைகளின் கதை' என்னும் குறிப்புகள்,'நிலா முற்றத்தில் கவிதைகள்'என்னும் கவிதைத் தொகுப்பு,விருது அளிக்கும் விழாவில் 'புற்று நோய்த் தடுப்பு மற்றும் விழிப்புணர்வுத்தூதர்' என்னும் மதிப்புறு பணி,ஏற்புரையாக மதிவாணன் ஆற்றுவதாக வரும் உரை...அவரின் வாழ்க்கை நிகழ்வுகளை அவரே சொல்வதாக விவரிப்பது போன்றவை  நூலில் மிக நன்றாக அமைந்துள்ளது.


உலகம் முழுவதும் இருக்கும் பெண் எழுத்து ஆளுமைகள் பங்கு பெறும் ,வாசிக்கும் 'வல்லினச்சிறகுகள்' இதழில், புதினம் எழுத விரும்புகிறவர்கள் இப்படியும் கூட் எழுதலாம் என்று ஒரு புதிய பாதையை, தன்-பிறர்  வரலாறையே புதினமாக எழுதும் பாதையைக் காட்டியிருக்கும் நூலாக இந்த  'மாண்புமிகு மதிவாணன்'நூலைப் பார்க்கிறேன்.'இந்த நூல் ஆகச்சிறந்த புதிய முயற்சி.நானறிந்தவரையில் தமிழுலகம் அறியாத புது முயற்சி' என அன்புரையில் அரிமதி இளம்பரிதி அவர்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல புது முயற்சி இது. நீங்களும் கூட இந்த நூலை ஒருமுறை வாசித்துப்பார்க்கலாம்.இதனைப் போல நமக்கு நன்றாகத் தெரிந்த  மேன்மையானவர்களை புதினமாக எழுதலாமா எனச் சிந்திக்கலாம்.


நன்றி : வல்லினச்சிறகுகள் மார்ச்-2021




Thursday, 10 October 2013

அண்மையில் படித்த புத்தகம் : : கனவு ஆசிரியர்

அண்மையில் படித்த புத்தகம் : : கனவு ஆசிரியர்
தொகுப்பாசிரியர்                          திரு. க. துளசிதாசன்.
 வெளியீடு                                     : புக்ஸ் பார் சில்ரன் -பாரதி புத்தகலாயத்தின் ஓர் அங்கம் ,சென்னை-18
முதல் பதிப்பு                               : மே 2012  விலை ரூ 90 - மொத்த பக்கங்கள் : 144

                                                மதுரையில் நடைபெற்ற . புத்தகச்சந்தையில் கிடைத்த புத்தகம் . படித்து முடித்த பின் , படித்த நாள்  முழுவதும் புத்தகத்தில் இருக்கும் கருத்தைப் பற்றி யோசிக்க வைத்த புத்தகம். புகழ்பெற்ற  ஆளுமைகளிடம், அவர்களின் கனவு ஆசிரியர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் எனக் கேட்டு, அந்த புகழ் பெற்ற  ஆளுமைகளின் கட்டுரைகளை புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள். ஒவ்வொருவரின் கட்டுரையும்  தனித் தன்மையாக உள்ளது. எந்தக் கட்டுரையும் மற்றொரு கட்டுரையைப் போல இல்லை. சிலர் தங்கள் கனவு ஆசிரியரை வர்ணிக்க, பலர் தங்கள் அனுபவங்களைத்  தங்களை  ஆற்றுப்படுத்திய, வழி காட்டிய  ஆசிரியரை அடையாளம் காட்டக் கிடைத்த வாய்ப்பாக இக்கட்டுரைகளை ஆக்கியுள்ளார்கள். 
 
                                   முதல் கட்டுரையாளர் எழுத்தாளர் அசோகமித்திரன். அவர்  'பிஸினஸ் லைன் ' பத்திரிக்கையைச்சுட்டிக் காட்டி, அதில் 8க்கு 6 பேர், தங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான வழிகாட்டியாக பள்ளி ஆசிரியரைத்தான் சுட்டுகின்றார்கள் என்பதனைச்சுட்டிக் காட்டுகின்றார்.

                                  எழுத்தாளர் பிரபஞ்சன் தனது கட்டுரையில் ' ஐயா , நான் தங்களுக்குக் கடன் பட்டவன் ' என்று தனது தமிழ் ஆசிரியர் திருநாவுக்கரசைக் குறிப்பிடுகின்றார்.தமிழகத்துப் பள்ளிகளுக்கும், பிரெஞ்சுப் பள்ளிகளுக்குமான வேறுபாட்டைச்சுட்டிக் காட்டுகின்றார். ஏன் பிள்ளை படிக்கவில்லை என்று பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் கேட்கலாம், அதற்கு அவர்கள் பதில் சொல்வார்கள் பொறுப்பாய் என்று குறிப்பிடுகின்றார்.'என் தமிழ் ஆசிரியர் வணக்கத்திற்குரிய வித்வான் திருநாவுக்கரசு அவர்கள் ஒரு நாள் என் கட்டுரை நோட்டைப் பார்த்து, என்னை என்னிடம் இருந்த எழுதுகிறவனைக் கண்டு பிடித்தார். நான் ஏழாம் வகுப்பில் இருந்தேன்....ஆசிரியர்கள் என்பவர்கள்,  மூடிய கதவுகளைத் தட்டித் திறப்பவர்கள். வெளிகளின் காற்றை உங்களுக்கு நமக்கு சுவாசிக்க கற்றுத் தருபவர்கள். எங்கள் இருட்டை அவர்கள் திறந்து எங்களுக்கு ஒளி தந்தவர்கள். அவர்கள் கைகளில் விளக்குகள்  இல்லை. அவர்களே தீபங்களாக இருக்கிறர்ர்கள், எரிகிறார்கள் ... " பக்கம் 16 . " கற்கத் தொடங்குகிறவன் மாணவன், கற்றுக்கொண்டே இருக்கிறவன் ஆசிரியன் " எனக் குறிப்பிடும் பிரபஞ்சனின் கட்டுரை ஆழமான விமர்சனங்களைக் கொண்ட கட்டுரை இத்தொகுப்பில்.

                               எழுத்தாளர்  பொன்னீலன் கல்வித்துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றிவர். தான் வியந்த ஆசிரியரையும் அந்தச்சூழலையும் அவர் விவரிக்கும் பாணி அலாதியானது,வியப்பூட்டக் கூடியது அந்த ஆசிரியரின் வகுப்பில் மாணவர்கள் எவ்வளவு ஈர்ப்பாய்,ல்யித்து செயல்முறை மூலமாக கற்றுக்கொண்டார்கள் என்பதனை நன்றாக விவரிக்கின்றார். அவர் வியந்ததைச்சொன்னவுடன் நமக்கும் கூட அந்த வியப்பு தொற்றிக்கொள்கின்றது.. " இதுவரை சேமிக்கப்பட்ட அறிவைத் தன்வயப்படுத்திக் கொள்ள வேண்டியவர்கள் மட்டுமல்ல குழந்தைகள், அவற்றைத் தன் வயப்படுத்திக்கொண்டு , நாளைய தேவைகளுக்கான அறிவை உருவாக்க வேண்டியவர்களும் அவர்கள். இந்தப் பேருண்மையை உணர்ந்து செயல்படவேண்டியவர்கள் ஆசிரியர்கள் " எனப் பொன்னீலன் குறிப்பிடுகின்றார் (பக்கம் 25) .

                                                               'கிள்ளுவது ,கொட்டுவது, பிரம்பால் அடிப்பது போன்ற கொடுமைகள் நான் பள்ளியில் படித்தபோது சர்வசாதாரணம். இன்று அது மிகவும் குறைந்து விட்டது'  எனச்சொல்லும் தியடோர் பாஸ்கரன், முன்னாள் அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல்.  வன்முறை என்பது உடலளவில் வருத்துவது மட்டுமல்ல, வாய்ப்பேச்சு வன்முறையும் பயங்கரமானதுதான் என்பதனைச்சுட்டிக்காட்டி டில்லியில் தனது மகள் வகுப்பில் நடந்த நிகழ்வைச்சுட்டிக் காட்டுகின்றார். மேலும் " மக்களிடையே மத ரீதியில் ,மொழி ரீதியில் ,ஜாதி ரீதியில் உள்ள வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு ,அவைகளை மதிக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கலாம் அந்தப்புனித வாய்ப்பு அவர்க்ளுக்கு இருக்கின்றது " என்றும் குறிப்பிடுகின்றார்(பக்கம் 29).

                                                          தமிழ் இலக்கியத்தில் இளங்க்லை,முதுகலை பயின்று,இந்திய ஆட்சிப்பணியில் இருக்கும் ஆர்.பாலகிருஷ்ணன் 'கடவுள் பதவிகள் காலியாய்க் கிடப்பது எதனால் ? ' எனும் கேள்வியைத் தலைப்பாக்கி தனது கட்டுரையைத் தந்துள்ளார். : "கற்பித்தல் என்பது ஒரு வகையில் கண்டுபிடிக்கும் கலை, கண்டுபிடிப்பில் உதவும் கலை, பலருக்கு தங்களின் பலம் எதுவென்று கூடத் தெரிவதில்லை. நல்ல ஆசிரியர்கள் மாணவர்கள் தங்களின் தனித்திறனை, பலத்தைக் கண்டுபிடிக்க உதவுகின்றார்கள். எனது சொந்த அனுபத்திலிருந்தே சொல்கிறேன். 'என்னை','எனக்கு','அடையாளம்' காட்டி 'அறிமுகம்' செய்து வைத்ததே எனது ஆசிரியர்தான். எனக்கு மேடையில் பேசும் திறமை உள்ளது என்று கண்டுபிடித்து ,என்னைப் பேசவைத்து, கைதட்டல், பரிசுகள் பாராட்டுக்கள் வாங்கிக் கொடுத்த அவரே என்னைக் கண்டு பிடித்த 'விஞ்ஞானி ' " எனக்குறிப்பிடுகின்றார்.ஆனால் அந்த ஆசிரியரின் பெயரை திரு.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் குறிப்பிடவில்லை. குறிப்பிட்டிருந்தால் இவரை உருவாக்கிய ஆசிரியரின் பெயரையும் உலகம் தெரிந்திருக்கும்.

 " ஆசிரியப் பணி என்பது மற்ற எல்லா வேலைகளைப் போன்ற இன்னொரு 'வேலை' அல்ல. ஊதியத்தை மட்டும் கருதும் உழைப்பும் அல்ல. விரும்பிச்செய்வது, இன்னும் சொல்லப்போனால் விரும்புவர்கள் மட்டுமே செய்ய வேண்டியது(பக்கம் 32) எனச்சொல்லும் ஆர்.பாலகிருஷ்ணன் ஆசிரியப் பணியின் அடிப்படைகள், நல்ல ஆசிரியர் நல்ல மாணவர், நல்லாசிரியர் தாயுமானவர் , நல்லாசிரியரின் சமூகப்பொறுப்பு, நம்பிக்கையை விதைப்பவர், யார் கனவு ஆசிரியர் எனத் தலைப்புகள் கொடுத்து, ஒவ்வொரு தலைப்பிற்கு கீழும் தனது கருத்துக்களை கொடுத்துள்ளார். முடிவில் " எந்தப் பஞ்சத்தையும் இந்தப்பாரத  தேசம் தாங்கும். நல்ல ஆசிரியர்களுக்கான பஞ்சத்தைத் தவிர" என முடிக்கின்றார்.

                                                               'நல்ல ஆசிரியருக்கு அடிப்படை நல்ல மனிதராக இருப்பதுதான்' எனத் தன கட்டுரையில் குறிப்பிடும் பேரா. ச.மாடசாமி 'கலங்கிய கண்களைக் கண்டுபிடிப்ப்து முக்கியமானது ' எனத் தலைப்பிட்டு தனது கட்டுரையைத் தந்துள்ளார். அதற்கான எடுத்துக்காட்டுக்களாக  தான் பேராசிரியராக இருந்தபொழுது நடந்த நிகழ்வுகளை எடுத்துக்காட்டியுள்ளார்.'எனக்குரிய இடம் எங்கே? ' என்று புத்தகத்தின் ஆசிரியர் பேரா.ச,மாடசாமியிடம் இன்னும் அதிகமாக நான் எதிர்பார்த்தேன். ஏமாற்றம்தான் எனக்கு.ஒரு ஆசிரியர் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதனை பேரா,இரத்தின நடராசன் , இப்படி இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று தான் எண்ணும் 10 எண்ணங்களைப் பட்டியலிட்டு உள்ளார். பக்கம் (50-51) .

                                                              எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் ' ஒவ்வொரு ஆசிரியரின் முகத்திலும் கனவு ஆசிரியரின் முகத்தைத் தேடுகிறேன் ' என்னும் தலைப்பிட்டு தனது கட்டுரையைக் கொடுத்துள்ளார். 'டோட்டோ ஜான் -ஜன்னலில் ஒரு சிறுமி என்கிற புத்தகத்தை வாசிக்காத ஆசிரியர் கனவு ஆசிரியராவது அப்புறம், ஓரளவுக்கு நல்ல ஆசிரியராகக்கூட இருக்க முடியாது " என்று கூறுகின்றார். பக்கம் 55. பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, நாம் கனவு ஆசிரியராகக் கூட நினைக்கமுடியாத ஒரு உண்மையான ஆசிரியரைப் பற்றிய ஜப்பான் மொழிப் புத்தகம் அது. பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகம். அதனை வாசித்திருப்பது ஒரு ஆசிரியருக்கான இலக்கணம் என்று அழுத்தம் திருத்தமாக இந்தப் புத்தகத்தில் கூறுகின்றார். 

என் கனவு ஆசிரியர் சாதி உணர்வு இல்லாதவராக ,எல்லாச்சாதி குழ்ந்தைகளையும் சமமாகப் பாவிக்கிறவராக அதே சமயம் சமூக நீதிப்போராட்டத்தின் வரலாற்றை அறிந்தவராக இருப்பார் என்று கூறும் ச.தமிழ்ச்செல்வன் அறிவியல் பாடம் எடுப்பவர் வெறும் அறிவியல் பாடம் எடுப்பவராக மட்டும் இருந்தால் போதாது, அறிவியல் மனப்பான்மை உள்ளவராக இருக்கவேண்டும் என்றும் கூறுகின்றார். மற்றவர்கள் யாரும் தொடாத கருத்துக்களை துணிந்து கூறும் கட்டுரையாக ச,தமிழ்ச்செல்வனின் கனவு ஆசிரியர் கட்டுரை உள்ளது கவனிக்கத்தக்கது.

                                                நாடகக் கலைஞர் பிரளயனின் கட்டுரை கல கல என அவரின் கடந்த் கால நிகழ்வுகளால் சிரிப்பும் சிந்தனையும் வரவைக்கும் கட்டுரை. அவருக்கு நான்காம்  வகுப்பு நடத்திய வடிவேலு வாத்தியார் சந்திர கிரகணம் பற்றி நடத்தியதையும், தமிழ்ப்பாடத்தின் பாடல் பகுதிகளை சொல்லித்தரும்போது 'தத்தகாரத்தோடு சொல்லித்தந்ததையும் நன்றாக ,சுவை பட விளக்கியுள்ளார். 'ட்ர்ர டும்ம டர்ரடும்/ டர்ர டும்ம டர்ரடும் எனப் பாடிக்கொண்டே வீட்டிற்கு போவோம் என்பதனைச்சொல்லும்போது , நாமே ஏதோ நாலாம் வகுப்பில் படித்துக்கொண்டு இந்தப் பாடலைப் பாடுவதுபோல ஓர் உணர்வு வருகின்றது. முடிவில் அன்று அவர் படித்த காலத்தில் இருந்த ஆசிரியர்கள்,சமூகம் இன்றைய காலத்தில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் ,சமூகம் பற்றிய ஒப்பீடும், மதிப்பீடும் மிக எதார்த்தமாக, நடைமுறைச்சிக்கல்களை எடுத்துக்காட்டுவதாக உள்ளன.  

                                        எழுத்தாளர் பாமா, ஓர் ஆசிரியையாக இருப்பவர். தனது ஆசிரியருக்கு கடிதம் எழுதுவதுபோலத் தனது கட்டுரையை 'இந்த் டீச்சருகிட்ட அடிக்க மாட்டாங்க ' என்னும் தலைப்பில் கொடுத்திருக்கின்றார். தனது சிறுவயதுக் கனவு ஓர் ஆசிரியை ஆக வேண்டும் என்பதும் அதற்குக் காரணம் நீங்கள்தான் என்று தனது ஆசிரியை பற்றிக் குறிப்பிடுகின்றார். தனது ஆசிரியை சொல்லிக் கொடுத்த சில பாடல்கள் இன்றும் நினைவில் இருப்பதாகக் குறிப்பிட்டு , அந்தப் பாடல்களைக் குறிப்பிடுகின்றார். சாதி அடிப்படையில் தன்னை இழிவுபடுத்திய தலைமை ஆசிரியர் பற்றிக் குறிப்பிடுகின்றார். " என்னைப் பதப்படுத்திய உருவாக்கிய ஊக்கமூட்டிய பல ஆசிரியைகளின் கைவண்ணந்தான் இப்போது இருக்கும் இந்த 'நான்' .இவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டவை ஏராளம் ...." பக்கம் 81 என்று குறிப்பிடும் பாமா இத்தனைக்கும் ஆதிமூலமான உங்களை என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் என்று தனது பல ஆசிரியர்களை நினைவுபடுத்தி அவர்களைப் பாமா வணங்குகின்றார்.
                    
                                         பத்திரிக்கையாளர் ஞாநி , 'நான் பள்ளி ஆசிரியனாக இருந்தால்' என்று தனது கனவு ஆசிரியரைப் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கின்றார். ' என்னைச்சுற்றியுள்ள இன்றைய உலகம் புத்திசாலி மனிதர்களின் அயோக்கியத்தனங்களாலும் , நல்ல மனிதர்களின் முட்டாள்தனங்களாலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது " என்று குறிப்பிடும் ஞாநி, இந்த நிலையை மாற்றக்கூடியவர்கள் தன் வகுப்பறையில் இருப்பதாக தான் ஆசிரியராக இருந்தால் நம்புவேன்  என விவரிக்கின்றார்.  

                             இந்த கனவு ஆசிரியர் நூலில் மிகவும் குறிப்பிடத்தக்க கட்டுரை ஆயிஷா இரா, நடராஜனின் 'எங்கள் ஆசிரியரிடம் ஒரு பயாஸ்கோப் இருந்தது ' என்னும் கட்டுரை. நிறைய அறிவியல் நூல்களை இன்று எழுதும் நடராஜன் , தனக்கு அறிவியல் மனப்பான்மை வரக்காரணமாக இருந்தவர் பெரியசாமி வாத்தியார் என்பதனை மிக்க நன்றி உணர்ச்சியோடும், உணர்வோடும் எழுதுகின்றார். ஆறாம் வகுப்பில் " என் வாழ்வின் மொத்த அர்த்தத்தையும் மாற்றித் திசை திருப்பும் பெரிய சக்தியாக அங்கே போன மூன்றாம் நாள் பெரியசாமி சார் அறிவியல் ஆசிரியராய் எங்கள் வகுப்பறைக்குள் நுழைந்தார் ' என்று விவரிக்கும் இரா.நடராஜனின் கட்டுரை இன்றைய அறிவியல் ஆசிரியர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை.

                    ஓவியரான டிராட்ஸ்கி மருது 'அப்பாதான் எனது கனவு ஆசிரியர்' என்று தனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கின்றார். 'உலகம் மிகப்பெரிய வகுப்பறை ' என்ற தலைப்பில் எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் தனது எண்ண ஓட்டங்களை வாசகர்களிடம் தெரிவிக்கின்றார். 'பொறுமைதான் ஆசிரியருக்கான அடிப்படைப் ப்ண்பு ' எனச்சொல்லும் எஸ்.இராமகிருஷ்ணன், 'கற்றுக்கொள், கற்றுக் கொடு,கற்றதை செய்ல்படுத்து ' என்று குறிப்பிடுகின்றார்.

                                   ஆயிஷா இரா.நட்ராசன் தன் அறிவியல் வாத்தியாரைச்சொல்லி  கலக்குகிறார் என்றால் எழுத்தாளர் த.வி.வெங்கடேஸ்வரன் தனது கணக்கு வாத்தியாரைச்சொல்லி கலக்குகிறார். த.வி.வெங்கடேஸ்வரன் தனது உயர் நிலைப்பள்ளி கணித ஆசிரியர் சங்கரன் சார் பற்றி ' காதலைத் தூண்டி விட்ட எனது கணித ஆசிரியர் '  என்னும் கட்டுரையை எல்லோரும் படிக்க வேண்டும். புதுமையான, எளிமையான சங்கரன் சார் அவர்கள் கணிதப்பாடத்தை நடத்திய விதம் அறியவாவது நீங்கள் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம்.

                                         " அந்நிய சூழல், அன்பற்ற ஆசிரியர்கள்,கழுத்தை அறுக்கும் போட்டி, தலைசுற்றும் வீட்டுப்பாடம், நாளொரு தேர்வு என்று அவர்கள் (மாணவர்கள்) வெளியே வரத் தெரியாத மாயப்பாதையில் மாட்டிக்கொண்டு அவதியுறுகிறார்கள்.குழ்ந்தைகளின் படைப்பாக்கத்திறன் மிக நேர்த்தியாக நசுக்கப்பட்டு அவர்கள் நெஞ்சங்களில் தங்கப்பதக்கங்கள் தவழ்கின்றன.அவர்களின் கருத்துக்கள் குருத்துக்களிலேயே வெட்டப்பட்டுவிடுகின்றன" பக்கம் 118 என்று கூறும் வெ.இறையன்பு இலட்சிய ஆசிரியர்களுக்கான 10 படிகளை வரிசைப்படுத்திக்கூறுகின்றார்.

                                            எழுத்தாளர் கீரனூர் ஜாகீர்ராசா 'நீங்களும் மருதமுத்து அய்யாவாக விரும்புகிறேன் ' என்று தனது கட்டுரை தலைப்பையே தனது ஆசிரியர் பெயரால் கொடுத்திருக்கின்றார். தனது தந்தை, தாய். ..பள்ளி இறுதித்தேர்வில் தோல்வி ...,அதற்காக கலங்கிய தன் தந்தையின் கண்களும், அதன் தொடர்ச்சியாக தூக்கம் தொலைத்த இரவுகளும் என விவரித்துச்செல்கின்றார். மருதமுத்து அய்யா போதித்த தமிழுணர்வு, பகுத்தறிவு,பொதுவுடமை மட்டுமல்ல , நீ பின்னாளில் எழுத்தாளனாகவோ,பேச்சாளனாகவோ வருவாய் எனும் கணிப்பு போன்றவற்றை எழுதிச்செல்லும் கீரனூர் ஜாகீர்ராசா தன் வாழ்வின் நிகழ்வுகளை முன்னிறுத்தி எழுதியுள்ள கட்டுரை எதார்த்தமாக உள்ளது. எழுத்தாளர் பவா.செல்லத்துரையின் கட்டுரை பல கசப்பான அனுபங்களையும் , பல ஆசிரியர்களின் இழிவுகளை  தன் எளிய கம்பீரத்தால் துடைத்த தனது ஆசிரியர் எ.அ.ஜெயக்குமார் பற்றிக் குறிப்பிடுகின்றார். முடிவில் இந்தப் புத்தகத்தின் தொகுப்பு ஆசிரியர் க.துளசிதாசன் அவர்களின் கட்டுரையும் முடிவில் ஆப்ரஹாம் லிங்கன் தனது மகன் படித்த தலைமை ஆசிரியருக்கு எழுதிய கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது.

                                                        சில கட்டுரைகளை மிக விரிவாகப் பேசலாம். குறிப்பாக ச.தமிழ்ச்செல்வன், ஆயிஷா இரா.நடராசன், த,வி,வெங்கடேஸ்வரன், கீரனூர் ஜாகீர்ராசா ஆகியோரின் கட்டுரைகள் ஒவ்வொன்றைப்பற்றியும் பல பக்கங்கள் எழுதலாம் .விவாதிக்கலாம். இந்தப் புத்தகத்தை வாங்கி வீட்டில் கட்டாயம் வைத்திருங்கள். படியுங்கள். கண்ணில் படுகின்ற ஆசிரியர், ஆசிரியைகளிடம் கொடுத்து படிக்கச்சொல்லலாம். இந்தப் புத்தகத்தின் சில கட்டுரைகளை ஆசிரியர்களுக்குப்பாடம் எடுப்பவர்களிடம் கொடுத்து விவாதிக்கச்சொல்லலாம். பல ஆண்டுகள் கழிந்த பின்னும் மாணவர்களின் மனதில் மாமனிதர்களாய் அமர்ந்திருக்கும் ஆசிரியர்களின் குண நலன்கள் என்ன என்பதனை உணரச்செய்யலாம். ( அகில இந்திய வானொலி- புத்தக அறிமுகத்திற்காக எழுதியது  )
.