Monday, 13 February 2023

தொடர்ந்து வரும் நினைவலைகள்....

 கல்லூரியில் படித்த காலத்தில் எடுத்த போட்டோ இது.1984-ல் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பி.எஸ்.ஸி. வேதியியல் படித்த காலத்தில் , நாங்கள் தங்கியிருந்த விடுதிக்குப் பெயர் ஃபைவ் ஹவுஸ். காந்தி விடுதியின் ஒரு பகுதி.காந்தி விடுதி என்பது திருச்செந்தூர் ரெயில்வே நிலையத்திற்குப் போகும் வழியில் இருக்கும் விடுதி.அங்குதான் உணவு சாப்பிட நாங்கள் போகவேண்டும்.நாங்கள் இருந்த பைவ் ஹவுஸ் என்பது திருச்செந்தூர்-தூத்துக்குடி ரோட்டில் இருக்கும் 5 பெரிய அறைகள் கொண்ட ஹாஸ்டல். இந்தப் படத்தில் இருக்கும் இடதுபுறம் முதலில் நின்று கொண்டு இருப்பவர் தோழர் வேலுச்சாமி.அன்று முதல் இன்று வரை சி.பி.எம். கட்சியைச்சார்ந்தவர். மிக எளிமையானவர்.நிறைய வாசிப்பவர்.நிறைய விவாதிப்பவர். இரண்டாவதாக இருப்பவர் தே.கல்லுப்பட்டியைச்சாந்த தமிழ்ச்செல்வன்..(இவன்தான் இந்தப்படத்தை இப்போது அனுப்பிவைத்தவன்).படித்து முடித்து வேலைக்காக இப்போது கோயம்புத்தூரில். 3-வதாக இருப்பவர் பகவதி. கல்லூரிக்காலத்திற்குப் பின்பு அவரிடம் பேசவும் இல்லை.நேரில் பார்க்கவும் இல்லை. வெள்ளந்தி என்றால் அப்படி ஒரு வெள்ளந்தியான மனிதர். நாங்கள் கல்லூரி படிக்கும் காலத்திலேயே அவருக்குத் திருமணம் ஆகி குழந்தை இருந்தது.உற்சாகமாக நெல்லை மொழியில் பேசுவார். 4-வது நிற்பவன் சண்முக நாதன். மதுரை மாவட்டம் பி.சுப்புலாபுரம் சார்ந்தவன்.எங்களுக்கு ஜீனியர்.இப்போது சென்னை ஹைஹோர்ட் வக்கீல்.தொலைபேசியில் அண்மையில் பேசினேன். நேரில் பார்க்கவேண்டும்.5-வதாக நிற்பது நான். என் தோளில் கைப்போட்டு நிற்பவர் சுரேந்திரன்.கடலூர் பகுதியைச்சார்ந்தவர். பி.பி.ஏ.படித்தார். மிக எளிமையாக இருப்பார். நன்றாக வாதம் செய்வார்.எளிதில் தன்னுடைய கருத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்.






உட்கார்ந்திருப்பவர்களில் முதலில் இருப்பவர் முருகேசன். வத்திராயிருப்பு அருகில் உள்ள சுந்தரபாண்டியம் என்னும் ஊரைச்சார்ந்தவர்.அமைதியாக இருப்பார்.10-ஆம் வகுப்பு,12-ஆம் வகுப்பில் இயல்பாக படித்து சராசரியான மதிப்பெண் எடுத்தவர். ஆனால் கல்லூரியில் பி.எஸ்.ஸி. கணிதம் எடுத்து தீயாய்ப் படித்தார்.பி.எஸ்.ஸி. முடித்துவிட்டு ,ஏரோனோட்டிகல் இன்ஜினியரிங்க் படித்துவிட்டு,பெங்களூரில் வேலை பார்ப்பதாக சொன்னார்கள்.நாங்கள் வாதம் செய்வதை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்,அடுத்து எங்கள் பக்கத்து ஊரான அத்திப்பட்டியைச்சார்ந்த அண்ணன் ராமராஜ் அவர்கள்.எங்களுக்கு சீனியர். படித்து முடித்து எல்.ஐ.சி,யில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.அடிக்கடி நான் பார்க்க வாய்ப்பு கிடைத்தவர்.அடுத்ததாக இருப்பவர் அண்ணன் நாராயணசாமி அவர்கள். எங்களுக்கு சீனியர்.படித்து முடித்து தூத்துக்குடி கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர்/அடுத்து இருப்பது தே.கல்லுப்பட்டி நண்பன் சீனிவாசன்.இப்போது இராம.ஸ்ரீனிவாசன்.பி.ஜே.பி.பொதுச்செயலாளர்.அடுத்து இருப்பது தே.கல்லுப்பட்டி என்னும் ஊருக்குஇன்ஜியலாக அமைந்த தேவங்குறிச்சி பாண்டி.எங்களுக்கு ஜீனியர்.படித்துமுடித்து இப்போது காஞ்சிபுரத்தில் வேலை பார்க்கும் தம்பி.தொடர்பில் இருப்பவர்.அடுத்ததாக இருப்பவர் நண்பர் அய்யாத்துரை. சங்கரன்கோவில் அருகில் சொந்த ஊர். வேதியியலை அற்புதமாகப் படிக்கும் நண்பர். ஆனால் அவரது எழுத்து தெளிவாக இருக்காது.அதனால் மதிப்பெண் குறையும்.அண்மையில் தொலைபேசி வாயிலாக பேசும் வாய்ப்புக் கி டைத்தது.பேசவேண்டும்.பார்க்கவேண்டும் நண்பரை.



மகளின் கைவண்ணத்தால் அன்றைய நேருவும் இன்றைய நேருவும்

இன்றைக்குப் போல் செல்போன்கள் இல்லாத காலம்.கையில் கேமரா இருந்தால் பெரிய ஆள் அன்று.நாங்கள் 12 பேரும் தயாராகி போட்டோ ஸ்டுடியோவில் போய் எடுத்த புகைப்படம். நீண்ட நாள் நான் பாதுகாப்பாக வைத்திருந்த புகைப்படம்.நண்பன் தமிழ்ச்செல்வன் அனுப்பியது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.பைவ் ஹவுஸ் வாழ்க்கையைப் பற்றி நிறைய எழுதலாம். எழுதுவேன்.

4 comments:

Anonymous said...

வாழ்த்துகள் அய்யா

முனைவர். வா.நேரு said...

நன்றி.மகிழ்ச்சி

Anonymous said...

மிக்க மகிழ்ச்சி நேரு அவர்களே. சமயம் கிடைக்கும் பொழுது சந்திப்போம். நன்றி
நாராயணசாமி, தூத்துக்குடி

முனைவர். வா.நேரு said...

நன்றி.மகிழ்ச்சி அண்ணே..சந்திப்போம்