கடவுள் கற்பனையைப் போட்டுடைத்த சார்லஸ் டார்வின்
முனைவர் வா.நேரு
சமூக விஞ்ஞானி தந்தை பெரியார் 1879-ஆம் ஆண்டு பிறந்து 1973-ஆம் ஆண்டு மறைந்தார். அறிவியல் விஞ்ஞானி சார்லஸ் டார்வின் 1809-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்து, ஏப்ரல் 19, 1882இல் தனது 73-ஆம் வயதில் மறைந்தார். தந்தை பெரியார் மறைந்து 49 ஆண்டுகளுக்குப் பின்பும் அவர் நினைக்கப்படுவதும், அவரின் பணி இன்னும் பல பணிகளை நாம் ஆற்றுவதற்கு அடிப்படையாகவும் உந்துதலாகவும் இருப்பதைப் போலவே சார்லஸ் டார்வின் மறைந்து 140 ஆண்டுகள் ஆனாலும் அவர் தொடங்கி வைத்த பணி என்பது இன்னும் முழுமையாகவில்லை, தொடர்ந்து அறிவியல் அறிஞர்கள் புதிய புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது.
மனிதர்களை எளிதாக வசப்படுத்துவதற்கு கடவுள் என்னும் கற்பனையை மதவாதிகள் ஏற்படுத்தி, இந்த உலகம் என்பது கடவுளால் படைக்கப்பட்டது, இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு உயிரும், எப்படி எப்படி இருக்கிறதோ, அப்படி அப்படியே கடவுளால் உருவாக்கப்பட்டது என்னும் சித்திரத்தை மனிதர்களின் மனங்களில் மிக ஆழமாக வரைந்து வைத்திருந்தனர். அதனை மிகக் கட்டுப்பாடாக பிரச்சாரத்தின் மூலம் நிலை நிறுத்தி வைத்திருந்தனர். இந்த மனச்சித்திரத்தை போட்டு உடைத்தவர் சார்லஸ் டார்வின்.
ஆனால், அன்றைக்கு சார்லஸ்டார்வின் அவர்கள் சொன்ன இயற்கைத் தேர்வும், பரிணாமமும் என்னும் கோட்பாடு பலருக்குப் புரியவில்லை. மதவாதிகள் அதை எதிர்த்து பரப்புரை செய்த நிலையில், சக அறிவியல் அறிஞர்களும் ஓவன் போன்றவர்களும் சார்லஸ் டார்வினின் கோட்பாட்டைப் புரிந்து கொள்ளாமல் எதிர்த்து இருக்கின்றனர். இன்றைக்கு சார்லஸ் டார்வின் அவர்-களின் இயற்கைத் தெரிவு, உயிரினங்கள் தோற்றம், பரிணாம வளர்ச்சி போன்றவற்றை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது, ஆனாலும் மதவாதிகள் இன்றும் கூட ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். குறிப்பாக கிறித்துவ, இஸ்லாமிய சமூகத்தைச்சார்ந்த மதவாதிகள் பரிணாமக் கொள்கையை ஏற்றுக்கொள்வதில்லை. அப்படி ஏற்றுக்கொள்வது, தங்கள் மத நூல்கள் சொல்லும் கருத்துக்கு எதிரானது என்று கருதுகின்றனர்.
அறிவியல் என்பது உண்மை. ஒரு கருத்தை எடுத்துக்கொள்வது, அந்தக் கருத்தை அறிவியல் முறைப்படி சோதனைகள் செய்வது.
சோதனைகளின் முடிவுகளை அட்டவணைப் படுத்துவது, மீண்டும் மீண்டும் சோதனைகள் செய்து உண்மையை உலகிற்கு எடுத்துக்காட்டுவது என்பது அறிவியல் வழிமுறையாகும். சார்லஸ் டார்வின் அவர்கள் 160 ஆண்டுகளுக்கு முன்னால் தனது ஆய்வுப் பயணத்தின் விளைவாக விளைந்த கருத்தினை, பரிணாமக் கொள்கையினை ஆராய்ச்சி செய்தவர்.மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து தனக்கு முதல் தடயம் அளித்த தொல்லுயிர் படிவங்களைச் சேகரித்து,சேகரித்து இயற்கைத் தெரிவு என்னும் கருத்தினை வெளியிட்டவர். பல சோதனைகளுக்கும் ஆய்வுகளுக்கும் 20 ஆண்டுகள் உட்படுத்தி, தான் உலகில் பல பாகங்களில் கண்ட, பரிசோதித்த கருத்தினை தன்னுடைய கோட்பாடாக வெளியிட்டவர். அவரின் ஆராய்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது தொல்லுயிர் படிவங்களும் (இறந்த உயிர்களின் உடல்கள்) ஆமைகளும்.
இன்றைய உலகிலேயே இல்லாத, அழிந்து போன இனமான டைனோசர் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த உலகத்தில் வாழ்ந்தது என்பதை அறிய முடிகிறது. கீழடியில் கிடைத்த ஒரு மண்பாண்டம் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை இந்தக் கரிமக் காலக் கணிப்பு மூலமாகக் கண்டறிய முடிகிறது.தொல்லுயிர்ப் படிவங்கள் மூலமாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த உயிரினங்கள் இப்படித்தான் வாழ்ந்திருக்கும் என்னும் முடிவைக்கூட இன்றைய அறிவியல் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்படி விடை தரும் ‘கரிமக் காலக் கணிப்பு’ பற்றி அறியாத சார்லஸ் டார்வின் அவர்கள் மிக நுட்பமாக இந்த உலகில் இருக்கும் உயிரிகளின் பரிணாம வளர்ச்சியை தனது ஆராய்ச்சியின் மூலம் சொன்னது வியப்பாக இருக்கிறது.
மரபணுக் குறியீடு பற்றிய ஆராய்ச்சி இன்றைக்கு அறிவியலின் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. உயிரியல் துறை என்பது தனது புதிய புதிய கண்டுபிடிப்புகள் மூலம் நம்மை வியப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறது. பாரம்பரியப் பண்புகள் எப்படி தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுகிறது என்பதைப் பற்றியெல்லாம் பல விளக்கங்கள் இன்று நமக்குக் கிடைக்கிறது.குரோமோசோமுக்குள் இருக்கும் மரபணுக்கள் பற்றிய ஆராய்ச்சியும் அதன் விளைவாக விளையும் பயனும் மனித குலத்திற்கு மிகப்பெரிய பாய்ச்சலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
மனித உடலுக்குள்இன்றைக்கு ஏறக்குறைய 30000 மரபணுக்கள் இருக்கின்றன, மனித உடலில் இருக்கும் ஒவ்வொரு மரபணுவும் எப்படிப்பட்ட தன்மையைக் கொண்டிருக்கிறது என்பது மட்டுமல்ல, உலகில் உள்ள பல்வேறு உயிரினங்களில் இருக்கும் மரபணுக்கள் பற்றிய ஆராய்ச்சிகளும் புதிது புதிதாய் செய்திகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
ஒருவன் மிகத் தீவிரமான பக்திமானாக இருப்பதற்குக் காரணமாக இருக்கும் மூளைக்குள் இருக்கும் வேதிப்பொருள்கள் பற்றியும் மரபணுக்கள் பற்றியும் ஆராய்ச்சி இன்று நடந்துகொண்டிருக்கிறது.
ஒருவன் பெண் பித்தனாக, காமப் பைத்தியம் பிடித்து அலைவதற்குக் காரணம் என்ன? அதனை மரபணு மாற்றத்தின் மூலமாக மாற்ற இயலுமா? என்பன போன்ற சோதனைகளும், செயற்கை இருதயம் பொருத்துவதுபோல செயற்கை மூளையை உருவாக்க முடியுமா என்னும் முயற்சியும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இன்னமும் கடவுள்தான் இந்த உலகத்தில் இருக்கும் உயிரினங்களைப் படைத்தார் _ படைக்கிறார் என்று சொல்பவர்களும் மதவாதிகளும் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒருவர், தான் படித்த காலத்தில், தனக்குப் பாடம் நடத்திய கிறித்துவ நம்பிக்கை கொண்ட ஆசிரியர், சார்லஸ் டார்வின் அவர்களின் பரிணாமக் கொள்கைப் பாடத்தை நடத்திவிட்டு, முடிவில் இப்படியெல்லாம் ஆராய்ச்சி செய்த சார்லஸ் டார்வின் அவர்கள் தன்னுடைய கடைசிக் காலத்தில், இவை எல்லாம் தப்பு என்றும், கடவுள்தான் உலகத்தைப் படைத்தார் என்றும் டைரியில் எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார் என்றும் சொன்னார் என்பதைச் சொன்னார்.
அறிவியல் ஒருபக்கம் உண்மையை வெளிப்-படுத்திக் கொண்டே இருக்கிறது. இன்னொரு பக்கம் கடவுள் நம்பிக்கையாளர்கள் அறிவியலுக்கு எதிரான கருத்துகளை விதைத்துக் கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக குழந்தைகள் மனதில் விதைக்கிறார்கள். அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் ‘கடவுள் இல்லை,கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை’ என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி அதையே அடிப்படை முழக்கமாக வைத்தார். கடவுள் இந்த உலகத்தைப் படைக்கவில்லை, இந்த உலகத்தில் உள்ள உயிரினங்கள் எல்லாம் இயற்கையாக, பரிணாம வளர்ச்சியில் தோன்றியவை என்று நிரூபணம் செய்த சார்லஸ் டார்வின் அவர்களைத் தந்தை பெரியார் தந்த ஈரோட்டுக் கண்ணாடி வழியாகப் பார்க்கின்றபோது மிகத் தெளிவாக சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை அறிய முடிகிறது. மிக நுட்பமாக உணரமுடிகிறது. வாழ்க சார்லஸ் டார்வின் அவர்களின் புகழ்!
நன்றி : உண்மை மாதமிருமுறை இதழ் பிப்ரவரி 1-15,2023.
No comments:
Post a Comment