Showing posts with label கடந்து போன காலங்கள். Show all posts
Showing posts with label கடந்து போன காலங்கள். Show all posts

Monday, 13 February 2023

தொடர்ந்து வரும் நினைவலைகள்....

 கல்லூரியில் படித்த காலத்தில் எடுத்த போட்டோ இது.1984-ல் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பி.எஸ்.ஸி. வேதியியல் படித்த காலத்தில் , நாங்கள் தங்கியிருந்த விடுதிக்குப் பெயர் ஃபைவ் ஹவுஸ். காந்தி விடுதியின் ஒரு பகுதி.காந்தி விடுதி என்பது திருச்செந்தூர் ரெயில்வே நிலையத்திற்குப் போகும் வழியில் இருக்கும் விடுதி.அங்குதான் உணவு சாப்பிட நாங்கள் போகவேண்டும்.நாங்கள் இருந்த பைவ் ஹவுஸ் என்பது திருச்செந்தூர்-தூத்துக்குடி ரோட்டில் இருக்கும் 5 பெரிய அறைகள் கொண்ட ஹாஸ்டல். இந்தப் படத்தில் இருக்கும் இடதுபுறம் முதலில் நின்று கொண்டு இருப்பவர் தோழர் வேலுச்சாமி.அன்று முதல் இன்று வரை சி.பி.எம். கட்சியைச்சார்ந்தவர். மிக எளிமையானவர்.நிறைய வாசிப்பவர்.நிறைய விவாதிப்பவர். இரண்டாவதாக இருப்பவர் தே.கல்லுப்பட்டியைச்சாந்த தமிழ்ச்செல்வன்..(இவன்தான் இந்தப்படத்தை இப்போது அனுப்பிவைத்தவன்).படித்து முடித்து வேலைக்காக இப்போது கோயம்புத்தூரில். 3-வதாக இருப்பவர் பகவதி. கல்லூரிக்காலத்திற்குப் பின்பு அவரிடம் பேசவும் இல்லை.நேரில் பார்க்கவும் இல்லை. வெள்ளந்தி என்றால் அப்படி ஒரு வெள்ளந்தியான மனிதர். நாங்கள் கல்லூரி படிக்கும் காலத்திலேயே அவருக்குத் திருமணம் ஆகி குழந்தை இருந்தது.உற்சாகமாக நெல்லை மொழியில் பேசுவார். 4-வது நிற்பவன் சண்முக நாதன். மதுரை மாவட்டம் பி.சுப்புலாபுரம் சார்ந்தவன்.எங்களுக்கு ஜீனியர்.இப்போது சென்னை ஹைஹோர்ட் வக்கீல்.தொலைபேசியில் அண்மையில் பேசினேன். நேரில் பார்க்கவேண்டும்.5-வதாக நிற்பது நான். என் தோளில் கைப்போட்டு நிற்பவர் சுரேந்திரன்.கடலூர் பகுதியைச்சார்ந்தவர். பி.பி.ஏ.படித்தார். மிக எளிமையாக இருப்பார். நன்றாக வாதம் செய்வார்.எளிதில் தன்னுடைய கருத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்.






உட்கார்ந்திருப்பவர்களில் முதலில் இருப்பவர் முருகேசன். வத்திராயிருப்பு அருகில் உள்ள சுந்தரபாண்டியம் என்னும் ஊரைச்சார்ந்தவர்.அமைதியாக இருப்பார்.10-ஆம் வகுப்பு,12-ஆம் வகுப்பில் இயல்பாக படித்து சராசரியான மதிப்பெண் எடுத்தவர். ஆனால் கல்லூரியில் பி.எஸ்.ஸி. கணிதம் எடுத்து தீயாய்ப் படித்தார்.பி.எஸ்.ஸி. முடித்துவிட்டு ,ஏரோனோட்டிகல் இன்ஜினியரிங்க் படித்துவிட்டு,பெங்களூரில் வேலை பார்ப்பதாக சொன்னார்கள்.நாங்கள் வாதம் செய்வதை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்,அடுத்து எங்கள் பக்கத்து ஊரான அத்திப்பட்டியைச்சார்ந்த அண்ணன் ராமராஜ் அவர்கள்.எங்களுக்கு சீனியர். படித்து முடித்து எல்.ஐ.சி,யில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.அடிக்கடி நான் பார்க்க வாய்ப்பு கிடைத்தவர்.அடுத்ததாக இருப்பவர் அண்ணன் நாராயணசாமி அவர்கள். எங்களுக்கு சீனியர்.படித்து முடித்து தூத்துக்குடி கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர்/அடுத்து இருப்பது தே.கல்லுப்பட்டி நண்பன் சீனிவாசன்.இப்போது இராம.ஸ்ரீனிவாசன்.பி.ஜே.பி.பொதுச்செயலாளர்.அடுத்து இருப்பது தே.கல்லுப்பட்டி என்னும் ஊருக்குஇன்ஜியலாக அமைந்த தேவங்குறிச்சி பாண்டி.எங்களுக்கு ஜீனியர்.படித்துமுடித்து இப்போது காஞ்சிபுரத்தில் வேலை பார்க்கும் தம்பி.தொடர்பில் இருப்பவர்.அடுத்ததாக இருப்பவர் நண்பர் அய்யாத்துரை. சங்கரன்கோவில் அருகில் சொந்த ஊர். வேதியியலை அற்புதமாகப் படிக்கும் நண்பர். ஆனால் அவரது எழுத்து தெளிவாக இருக்காது.அதனால் மதிப்பெண் குறையும்.அண்மையில் தொலைபேசி வாயிலாக பேசும் வாய்ப்புக் கி டைத்தது.பேசவேண்டும்.பார்க்கவேண்டும் நண்பரை.



மகளின் கைவண்ணத்தால் அன்றைய நேருவும் இன்றைய நேருவும்

இன்றைக்குப் போல் செல்போன்கள் இல்லாத காலம்.கையில் கேமரா இருந்தால் பெரிய ஆள் அன்று.நாங்கள் 12 பேரும் தயாராகி போட்டோ ஸ்டுடியோவில் போய் எடுத்த புகைப்படம். நீண்ட நாள் நான் பாதுகாப்பாக வைத்திருந்த புகைப்படம்.நண்பன் தமிழ்ச்செல்வன் அனுப்பியது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.பைவ் ஹவுஸ் வாழ்க்கையைப் பற்றி நிறைய எழுதலாம். எழுதுவேன்.

Sunday, 31 May 2020

செய்ய வேண்டியன செய்தலுக்காய்....

அய்ம்பத்து ஆறு
ஆண்டுகள் ஓடி
மறைந்திருக்கிறது...
அய்ம்பத்து ஏழு இன்று
பிறந்திருக்கிறது....

அய்ம்பத்து ஆறில் வாழ்வில்
நிகழ்ந்த பெரும் நிகழ்வு
விருப்ப ஓய்வு எனும் நிகழ்வு...

சென்ற வருடப் பிறந்த நாளில்
துளி கூட எண்ணமில்லை...
அடுத்த பிறந்த நாளில் நாம்
விருப்ப ஓய்வில் இருப்போமென்று...

மறைமுக அரசின் அழுத்தங்களும்
பணிச்சுமை தந்த அழுத்தங்களும்
இணைந்து விருப்ப ஓய்வு எனும்
முடிவினைத் தந்தது....எனினும்
மகிழ்ச்சி தரும் முடிவே இது....

இருக்கும் வாழ்வை
குடும்பத்தினருக்கு கூடுதல் நேரமும்
இயக்கத்திற்கும்
வாசிக்க எழுத என
உள்ளத்திற்கு உகந்தவை
அனைத்தும் செய்திட விருப்பம்....

முப்பத்தாறு ஆண்டுகள் பணியை
முழுவதாய்ச்செய்ததாக மன நிறைவு...
எத்தனை மனிதர்கள்..
எத்தனை தொழில் நுட்பங்கள்...
ஒரு நாவலுக்குள் அடக்கமுடியாத
அத்தனை அத்தியாயங்களும்
மனதுக்குள் ஓடும் பணி நிகழ்வுகள்...

சிறந்த ஊழியன் எனப் பெற்ற
தங்கப் பதக்கம் சான்றிதழைவிட
மனதார வாழ்த்திய வாடிக்கையாளர்களால்
நிறைவாக பணிக்காலம் முடிந்தது...

சராசரி இந்தியனின் வாழ்விற்கு
சில வருடங்களே இன்னும் பாக்கி..
அதற்குள் செய்ய வேண்டியன
செய்தலுக்காய் திட்டமிடலும்
செயல்படுத்தலுமே மீத வாழ்க்கையாய்..
                                                                         வா.நேரு...31.05.2020



Thursday, 18 July 2019

பாம்புக் கிணற்றின் நினைவுகள்..


கடந்து போன காலங்கள் (18)


விலைக்குத் தண்ணீரை
குடிக்கவும் குளிக்கவும்
வாங்கும்  நிலையில்தான்
கொட்டும் மழை நீரைச்
சேகரிக்கும் எண்ணம் வலுக்கிறது மனதில்...

சின்ன ஊர் அது......
மழை நீர் சேகரிப்பாய்
சில ஊர் நல விரும்பிகள் உழைப்பால்
ஊருக்குள் பெய்யும் மழையை
ஒருங்கிணைத்து
ஒரு கிணற்றுக்குள் விடும்செயலை
கட்செவியில்
பகிர்ந்திருந்தான் தம்பி.....

சின்ன சின்ன ஊருணிகள்
எல்லாம் மழை நீர் சேகரிப்பு நிலையங்கள்தான்..
ஊருக்குள் இருந்த கிணறுகள்
எல்லாம் நிலத்தடி நீரை உயர்த்தும்
அறிவியல் கூடங்கள்தான் ....
எனது கிராமத்தில்
நான் சிறுவனாக இருந்த காலத்தில்
தெருவுக்கு ஒரு கிணறு இருந்த நாளும்
அதன் தொடர்பான செய்திகளும்
நினைவுக்கு வர
கட்ச்செவியில் பதிவுகள் போட்டேன்....

எங்கள் தெருவில் இருந்த கிணற்றுக்கு
பெயர் பாம்புக்கிணறு.....
தெருவின் நுழைவு வாயிலில்
வெளியில் சென்று திரும்பும் நேரமெல்லாம்
வரவேற்கும் பாம்புக்கிணறு

சிறுவயதில் கேப்பக்களி தாத்தா
கமலையில் தண்ணீர் இறைத்து
அவர் தோட்டத்திற்கு பாய்ச்சியதைப் பார்த்திருக்கிறேன்....

எனது உடன் பிறப்பும்
அவரோடு படித்த இன்றைய வி.ஐ.பியும்
தண்ணீர்ப் பாம்பை பிடித்துப்போய்
வகுப்பில் விட்டு
செமையாய் வாத்தியாரிடம்
அடிவாங்கியதற்கு
அடித்தளமாய் பாம்பைக் கொடுத்தது இக்கிணறுதான்

கிணறு நிறையத் தண்ணீர்
இருந்த காலமும்
பெயருக்கு ஏற்ப சில பாம்புகள்
கிணற்றுக்குள் இருந்த நினைவும்
குளித்த நினைவும்
வாளியில் தண்ணீர் இறைத்த நினைவும்
என நினைவுகளால் நிறைகிறது
பாம்புக் கிணற்றின் நினைவுகள்......

பகிரக்கூடியதாய் சில
பகிர முடியாததாய் சில
அதன் நினைப்பே சிரிப்பும்
மகிழ்ச்சியுமாய் விரிகிறது மழைத்துளியாய்....

இப்போது வெறும் குப்பைக் கிடங்காக
இருக்கிறது கிணறு என்றான் தம்பி....
கிணறு எப்படி குப்பைக் கிடங்காக மாறும்?
கிணற்றுக்குள் தண்ணீர் இல்லை...
மக்கள் குப்பைக் கிடங்காக
மாற்றி விட்டார்கள் ...இப்போது அது
குப்பை நாறும் குழியாகக் கிடக்கிறது என்றான்....

நிலத்தடி மொத்தமாக குறைந்து விட்டது ஊரில்...
மழை பெய்தால் இக்கிணற்றுக்குள்
மழைத்தண்ணீர் செல்ல வழி செயல் வேண்டும்...
குப்பைகளை மொத்தமாக அள்ளி
வெளியில் போட்டு
மீண்டும் கிணறாய் அது ஊற்றெடுக்க வேண்டும்.....
ஆர்வமாகச் சொன்னான் தம்பி...

ஆம்! ஆம்!
குப்பைக் கிடங்குகளாய் மாறிவிட்ட
ஊர்க் கிணறுகள் எல்லாம்
மழை நீர் சேகரிப்பு கிணறுகள்
ஆகிட வேண்டும்....
மீண்டும் ஒரு நாள்
ஊற்றெடுக்கும் கிணறுகளாய் மாறிடல் வேண்டும்...

                          வா.நேரு ,
                          18.07.2019


Saturday, 28 July 2018

கடந்துபோன காலங்கள்(17)

   கடந்துபோன காலங்கள்(17).....

எனது படங்கள்
எத்தனை எத்தனை
ஒளிப்படங்களாய்
என் மகனின்
கணினி சேமிப்பில்.....

எப்படி எப்படியோ
எடுத்து வைத்திருக்கின்றான்
எனது படங்களை....
உட்கார்ந்த வண்ணம்....
ஓடிய வண்ணம்...
கைகூப்பிய வண்ணம்....
கையைக் கட்டிய வண்ணம்
எனது இணையரோடு
ஒருவரோடு ஒருவர்
சாய்ந்த வண்ணம்
எத்தனையோ படங்களை
எடுத்து வைத்திருக்கிறான்

சென்ற இடங்களின்
நினைவுகள் எல்லாம்
சேமிக்கப்பட்ட
வண்ணப்படங்களாய்
அடைத்துக்கிடக்கின்றன
அவனது கணினி
நினைவுகளில்.....

புத்தகத்தில் போட வேண்டுமா?
முக நூலில் போடவேண்டுமா?
கேட்டுவிட்டால் போதும்
படங்களாய் கொண்டுவந்து
கொட்டுகிறான்
கணினித்திரையில்......
எது வேண்டும்
எடுத்துக்கொள்ளுங்கள் .
எடுத்துக்கொள்ளுங்கள் எனச்சொல்கிறான்....
எல்லார் கைகளிலும் செல்பேசி..
செல்பேசிக்குள் நிழற்படம்
எடுக்கும் கருவியென
அனைத்தையும் சாத்தியமாக்கிய அறிவியல்....

எனக்கும் கூட எனது அப்பாவை
கணினித்திரையில்
பார்க்க ஆசை !
எனது ஏழு வயதில் இறந்துபோன
அப்பாவின் முகம்
நிழலாகக் கூட நினைவில் இல்லை....
அப்பாவின் புகைப்படம்
இறந்த பின்பு யாரோ ஒருவரால்
வரையப்பட்ட படம் ....
அதில் உயிரோட்டம் இல்லை...
அதனால் உணர்வோட்டமும் இல்லை....

அப்பாவின் மாணவர்கள்....
அப்பாவின் நண்பர்கள்....
அப்பாவின் கைப்பந்து
விளையாட்டின் தோழர்கள்.....
எல்லோரிடமும் கேட்டு
கேட்டுப்பார்க்கின்றேன்.....

சாப்டூர் வாலகுரு ஆசிரியர்
ஆண்டவர் வாத்தியார் என
அன்புடன் அழைக்கப்பட்டவர்
ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்குமுன்
ஆயிரத்து தொழாயிரத்து
எழுபத்து ஒன்றில் திடீரென
இருதய நோயால் மறைந்து போனவர்....
எங்கேணும் அவரது புகைப்படம்
உங்கள் வீட்டில் இருந்தால்
தனிப்படமோ....இல்லை
குழுப்படமோ இருந்தால்
கொடுங்கள் எனக் கேட்டுக்
கொண்டே இருக்கின்றேன்,,,,,,
எனக்கும் கூட எனது அப்பாவை
கணினித் திரையில்
பார்க்க ஆசை !....

                                               வா.நேரு......29.07.2018

Sunday, 3 June 2018

நாடி நரம்புகளில் ஓடுவது......

                          கடந்து போன காலங்கள் 16


அதிகாலை எழுந்து
பள்ளிக்கு கிளம்பல் வேண்டும்....
யாரும் பள்ளிக்கு வராத நேரத்தில்
மரங்களைப் பார்த்து
பேசிக்கொண்டிருத்தல் வேண்டும்...
இல்லையெனில் பள்ளி
ஆரம்பித்தபின்னே அரைமணி நேரம்
தாமதமாகச்செல்லல் வேண்டும்....
அப்படித்தான் பேருந்து இருந்தது
எனது கிராமத்தில் இருந்து
தே.கல்லுப்பட்டிக்கு
நான் +2 படிக்கும் காலத்தில்

சில நாட்கள் அம்மா கட்டிக்கொடுக்கும்
பழைய சோற்றோடு
அதிகாலைப் பேருந்து....
சில நாட்கள் பழைய சோறு இல்லைடா
இரு இரு சுடுசொறு ஆக்கிவிடுகின்றேன்
என்று அம்மா சொல்ல
தாமதமாகப் பள்ளிக்கு பேருந்தில் சென்று
கல்லுப்பட்டி காந்தி நிகேதனில்
அடியோ.. திட்டோ வாங்கியதும் உண்டு.....

அதிகாலை 6.30க்கு பேருந்து
இல்லையெனில் 8.50 மணிக்குத்தான்
கல்லுப்பட்டிக்கு எமது ஊரிலிருந்து
பேருந்து எனும் நிலையில்
இடைப்பட்ட நேரத்தில்
ஏதேனும் பேருந்து எமது
ஊருக்கு வராதா ? என
ஏங்கியிருந்த வேளை.....

பாராளுமன்றத்திற்கு பெரியகுளம்
மக்களைவைத் தொகுதியின்
உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
முறுக்கு மீசை அய்யா
கம்பம் நடராசன்
எங்கள் ஊராம் சாப்டூருக்கு
நன்றி சொல்ல வந்திருந்தார்.....

11-ஆம் வகுப்பு படிக்கும்
மாணவன் நான் !
பல பேரிடம் கையெழுத்தினை வாங்கி
அன்றைய எங்கள் ஊரின்
தி.மு.க.செயலாளர்
அய்யா ஜோதி அவர்களிடம் கூறிவிட்டு
எங்கள் ஊருக்கு கூடுதலாக
பேருந்து வரல் வேண்டும்
நாங்கள் பள்ளி செல்ல
மிகவும் வாய்ப்பாக அமையும்
என மேடையில் ஏறிப் பேசி
மனுவினைக் கொடுத்தேன்.....

இன்றைக்கும் கூட அந்த நிகழ்வு
கனவு போலத்தான் இருக்கிறது....
மனுவினை வாங்கிய நாலைந்து நாட்களில்
தே.கல்லுப்பட்டிக்கு செல்லும்
அரசு டவுன் பேருந்தோடு
ஊருக்குள் வந்தார் அய்யா
கம்பம் நடராஜன்......
காலை 7.30 மணிக்கு
அருமையாக வந்துசென்றது
அந்தப் பேருந்து.........
எங்கள் கவலை தீர்ந்தது ....

திராவிட இயக்கத்தினை
புரிந்து கொண்டவர்களின்
நாடி நரம்புகளில் ஓடுவது
படிப்பதற்கு உதவி செய்தல்...
படிப்பதற்கு வசதி செய்தல்......



Thursday, 20 October 2016

கடந்து போன காலங்கள்(11)

           கடந்து போன காலங்கள்(11)

படிக்கும் காலங்களில்
உதவிய
மனிதர்கள் போலவே
சில மரங்களும் கூட
எந்நாளும் என் நினைவில்......

நிறைந்து நிற்கும்
பெரியகுளம் கண்மாய்
எங்கள் ஊருக்கு கிழக்காக
பழையூர் செல்வதற்கு பாதையாக.....

கண்மாய்க் கரையின்
இருபக்கமும் மாமரம்
புளியமரம் பனைமரம்
என எத்தனை மரங்கள் ......
கரைக்கு கீழே
பசுமையாய் எத்தனை வயல்கள்.....

ஒரு மாமரத்தின்
கிளைதனை உரசிச்செல்லும்
பனைமரம்
மரத்தின் மீதேறி
மாமரத்துக் கிளையில்
அமர்ந்து
பனைமரத்தில் சாய்ந்து
பல மணி நேரங்கள்
படித்திருக்கிறேன்
பிள்ளைகளிடம் சொன்னால்
சிரிக்கிறார்கள்
பரிணாம வளர்ச்சியை
நிருபித்திருக்கிறீர்கள்
எனக் கேலிகூட  பேசுகிறார்கள்....
ஆனால் அந்த அமைதி
இலைகளும் கிளைகளுமே
மட்டுமே கண்ணில்
பட்ட காலங்களில்
ஒன்றிய மனமும்
அதில் மனதிற்குள்
அழுந்திப் பதிந்த பாடங்களும்....

இன்றைக்கு எனது ஊர்
மாணவர்களும் கூட
டைகட்டி சூட்போட்டு
வேனில் ஏற்றப்பட்டு
அயல் ஊர்களுக்கு
படிப்பு எனக் கடத்தப்படும்
நேரங்களில்

கண்மாய் நிறைய
நீர் கிடக்க
நீரின் மேலே
வெண் நாரைகள் மிதக்க
பறவை ஒலிகளும்
பசுமைத் தாவரங்களும்
மட்டுமே கவனத்தில் விழ
கவனமாகப் படித்த காலங்கள்
நினைவில் மங்கா
கடந்து போன காலங்கள்.......
                                                          வா.நேரு-20.10.2016





Saturday, 25 June 2016

இரண்டு ஊர்க்காரர்களும் அவதிப்பட்ட காலங்கள்.....



                                                           கடந்துபோன காலங்கள்(10)

மதுரையில் அழகர்
ஆற்றில் இறக்கப்படும்
சித்திரை திருவிழா
போல எங்கள் ஊரிலும்
சித்திரைத் திருவிழா உண்டு....

சித்திரைத் திருவிழாவிற்கு
பூந்தியும் இலட்டும்
வீட்டில் அம்மாவால்
பலகாரமாய்  செய்யப்படும்
பல வருடங்கள் தொடர்ச்சியாக...

திருவிழா நாட்களில்
அம்மா ஏதாவது
பலகாரம் செய்துவிடுவார்கள்!
இல்லையென்றால் வீட்டிற்கு
மற்றவர்களின் பலகாரங்கள்
படையெடுக்கும் எனப்பயந்து
அம்மா சாமி கும்பிடவில்லை
என்றாலும்
பலகாரங்களை செய்துவிடுவார்கள்
எங்கள் வீட்டில்.....

வருடாவருடம்
சுற்றி இருக்கும்
கிராமத்தைச்சேர்ந்தவர்கள்
சாமியைத் தூக்கி வருவார்கள்
அந்த வருடம்
எங்கள் ஊரின்
பக்கத்து ஊர்க்காரர்கள்
சாமியைத் தூக்கி வந்தார்கள்....


சின்ன வயதில்
நானும் அழகரைப் பார்க்க
போலீஸ் ஸ்டேசன் பக்கத்தில்
இருக்கும் கோயிலுக்கு
முன்னால் போக


பெரிய பல்லக்கு
பல்லக்கு மேலே சாமி
சாமிக்கு பக்கத்தில் அய்யர்
எனத் தூக்கி வந்த வேளை

எங்கள் ஊர்க்காரர்கள் சிலர்
சாமியை மேற்குப் பக்கமாகத்
திருப்பு எனச் சொல்ல
சாமியைத் தூக்கி வந்த
பக்கத்து ஊர்க்காரர்கள்
அது வழக்கமில்லை என
மறுக்க
வாக்குவாதம் சிறிது
நேரத்தில் சண்டையாக மாற

சாமி தூக்கி வந்தவர்களை
எங்கள் ஊர்க்காரர்கள் சிலர்
அடித்து விட
அடியைப் பொறுக்க இயலாத
பக்கத்து ஊர்க்காரர்கள்
அய்யரோடும் சாமியோடும்
பல்லக்கை டொம்மென்று
கீழே போட்டு  விட
விழுந்து கிடந்த அய்யர்
எழுந்திருக்கும்முன்னேயே
அந்த இடம் ஒரு
போர்க்களமாக மாற

அடிபட்ட பக்கத்து ஊர்க்காரர்கள்
திரும்பப் போகும் வழியில்
வைக்கோல் படப்புகளுக்கு தீவைக்க
காட்டில் இருந்த கிழவியைத்
தூக்கிக் கிணற்றில்
போட்டு விட்டார்கள் என
வதந்தி பரவ

ஏதோ ஒரு
போர்க்களத்திற்கு போவது
போல ஆரம்பப்பள்ளிக்கூடத்திலிருந்து
விசிலிடித்துக்கொண்டு
இளைஞர்களும் முதியவர்களும்
கைகளில் கம்புகளோடும்
கூர்மையான ஆயுதங்களோடும்
ஒட்டு மொத்தமாய்
பக்கத்து ஊருக்கு ஓடிய
காட்சி இன்றும் கூட
நினைவில் நிற்கிறது.....


அந்த ஊரிலிருந்துதான்
அருமை நண்பன்
மனுநீதி உடன் படித்தான்
ஊரும் ஊரும் சண்டையிட்டு
ரொம்ப நாளா
பகை ஊராக இருந்தது
இப்போது நகைப்பாக இருக்கிறது...
ஆனால்

அந்தச்சண்டைக்காக
எங்கள் ஊரிலிருந்தும்
பக்கத்து ஊரிலிருந்தும்
நிறையப் பேர்
இருபது வருடம்
நீதிமன்றத்திற்கு
அலைந்தார்கள்,,,,,
கடைசியில் வழக்கு
முடித்துவைக்கப்பட்டது
என்றாலும்
வழக்குக்காக நடந்தவர்கள்
இருபது வருடங்களாக
நடந்துகொண்டேதான்
இருந்தார்கள்
வாய்தா வாய்தாவாக....

யாரோ ஒருவர் இருவர்
அடாவடித்தனத்தால்
இரண்டு ஊர்க்காரர்களும்
அவதிப்பட்ட காலங்கள்.....
மறக்க இயலா காலங்கள்....

                                                           வா.நேரு-----25.06.2016

Sunday, 19 June 2016

வடக்கயிற்றில் கூனையைக் கட்டி.......

                                                                கடந்து போன காலங்கள்(9)


எங்கள் வயக்காடு
பொதுக்காடு
முறை வைத்து முறைவைத்து
வாரத்தில் ஒரு நாள்
தண்ணீர் பாய்ச்சல் வேண்டும்

கூனையில் நீரை மோந்து
கமலையில் தண்ணீர் இறைக்கும்
விவசாய முறை
இன்றைய தலைமுறையில்
எத்தனை பேருக்குத் தெரியும்
எனத்தெரியவில்லை !

வடக்கயிற்றில்
கூனையைக் கட்டி
கூனை உருள்வதற்கு ஒரு
உருளை அமைத்து
கூனையை இணைக்கும்
வடக்கயிற்றை
மேக்காலில்  கட்டி
மேக்காலின் இருபக்கமும்
மாட்டைக் கட்டி
மாடுகளும் மனிதனும்
நடந்து நடந்து
நாள் முழுக்க
தண்ணீரை இறைக்கும் முறை

பின்னால் வரும்போது
மாட்டோடு நடந்தும்
கூனையில் தண்ணீரை
மோந்து முன்னால் வரும்போது
வடக்கயிற்றில் உட்கார்ந்து
மாடுகளை விரைவுபடுத்தியும்
முன்னும் பின்னுமாய்
மாட்டோடு நடந்து நடந்து
காலை முதல் மாலைவரை
தண்ணீர் இறைத்தால்
எங்களுக்குரிய கால் ஏக்கர்
பயிர்கள் தண்ணீரில் நனையும்

எங்கள் ஊரில்
இப்போது மாடுகளே
அரிதாக ....
உழவுக்கே மாடுகள்
இல்லா நிலையில்
கமலை இறைக்க மாடுகளா...
சாத்தியமில்லை....

மின்சார சுவிட்சு
போட்டவுடன்
மோட்டார் பம்பில்
தண்ணீர் அடிக்கும்
இக்காலங்களில் அவை
தேவையுமில்லை....

மாட்டோடு கமலையில்
நீர் இறைத்த  தருணங்கள்....
நீர் இறைக்கும் நேரங்களில்
அண்ணன் மறைந்துபோன
'பாட்டுக்கார பரம்சிவம் 'போல
நீரோடையாய்
தங்கு தடையின்றி ஓடிவரும்
நாட்டுப்புற பாடல்களோடு
நீர் இறைத்த
எங்களுக்கு மூத்த
 தலைமுறையினர்....
கடந்து போன காலங்கள்
இனிப் பார்க்க இயலா
அழிந்து போன ஓவியங்கள்.....


                                         வா.நேரு - 19.06.2016



Thursday, 16 June 2016

வாழ்வில் மறக்க இயலாத ஆசிரியர்கள்....

                                            கடந்து போன காலங்கள்(8)


வாழ்வில் மறக்க
இயலாத ஆசிரியர்கள்....
வாழ்கின்ற நாளெல்லாம்
மனதில் நிலைத்து
நிற்கும் ஆசிரியர்கள்
சிலர் உண்டு .....

சாப்டூர் அரசு
உயர் நிலைப்பள்ளியில்
மறக்க இயலா ஆசிரியர்
மூக்கையா வாத்தியார்....

ஐந்தாம் வகுப்புவரை
ஏ,பி,சி,டி-கூடத் தெரியாமல்
வரும் மாணவர்களுக்கு
ஆங்கிலத்தை அப்படி
ஒரு கரிசனத்தோடு
கற்றுத்தரும் ஆசிரியர் அவர்...

அவர் கொடுத்த அடித்தளம்தான்
இன்று எங்கெங்கும்
பல்வேறு உயர் பதவிகளில்
நிறைந்து கிடக்கும்
எங்கள் ஊர்ப் பள்ளியின்
பழைய மாணவர்கள் என்பேன் நான்....

அடித்தும் கண்டித்தும்
நிலைமையை எடுத்துச்சொல்லியும்
எப்படியேனும் படிக்கும்
மாணவர்களைப் படிக்க
வைத்த ஆசிரியர் மூக்கையா வாத்தியார்....

நெஞ்சம் நிறைந்த நன்றி
அவருக்கு உண்டு என்றும் என் வாழ்வில்

செஸ் விளையாட அழைத்து
10 நகர்வுக்கு முன்பே
10-வது நகர்வில் உன்னை
ஜெயிக்கப்போகிறேன்
எனச்சொல்லி நம்பிக்கை ஊட்டும்
சுப்பிரமணிய வாத்தியார்

இலக்கணத்தை தமிழில்
இயல்பாகக் கற்கும்படி
கற்றுக்கொடுத்த
தமிழய்யா குழந்தைவேல்

எனப் பல ஆசிரியர்களின்
முகங்கள் இன்றும்கூட
மறவாமல் கண்முன்னே
தோன்றுகிறது
கை எடுத்து கும்பிடத்
தோன்றுகிறது எப்போதும்
அவர்களின் பணிக்கு....
                                                    வா. நேரு - 16.06.2016.
                                                  

Saturday, 11 June 2016

உச்சிப் பனைமரத்தில்... பாம்பு கொத்த.......

                                         கடந்துபோன காலங்கள்(7)

சில மாதங்களுக்கு முன்
மாவட்ட ஆட்சியரிடம்
ஊருக்காக மனு கொடுக்க
எங்கள் ஊரிலிருந்து
'கோதண்டராமன் ' ஆசிரியர்
தலைமையில் ஒரு
குழு வந்தனர்.....

கொடுத்த கோரிக்கைகளில்
ஒன்று சாப்டூர் அரசு
மருத்துவமனையில்
'பாம்புக்கடி'க்கு சிகிச்சை
அளிக்க மருத்துவரும்
மருந்தும் வேண்டும் என்பது.....

மேற்குத் தொடர்ச்சி மலையின்
அடிவாரம் என்பதாலோ
பெரியதோப்பு ,பாளையந்தோப்பு
என மரங்கள் வளர்ந்து நிற்பதாலோ
எங்கள் ஊரில் எப்போதும்
பாம்புக்கு பஞ்சமில்லை.....
பாம்புக்கடிக்கு மருந்துமில்லை....

பெரியதோப்பில்
பெரிது பெரிதாய்
பாம்புப் புற்றுகள்
இருக்கும்.....

காளையப்பன் மாமா
காட்டில் இருக்கும்போது
அவரது மகனை
நல்லபாம்பு கடித்துவிட
இளந்தாரி மகனைத்
தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டு
'ஒன்பது ரூபாய் நோட்டு' நாவலில்
வரும் நாயகன் போல
ஊருக்குள் ஓடி வர
பாம்புக்கடிக்கு மருந்தில்லாமல்
கல்லுப்பட்டி 'முத்துக்கிருட்டிணன்'
மருத்துவமனையில் சேர்த்து
கால்கள் வீங்கி கருத்து
பின்பு மருத்துவத்தால்
நலமாகி வந்த கதை.....

சடையாண்டி தம்பி
பனைமரத்தில் ஏறி
மட்டை வெட்டப்போன இடத்தில்
உச்சிப் பனைமரத்தில்
மட்டைக்குள் உள்ளிருந்த
பாம்பு கொத்த
பதறிப்போன மனுசன்
பட்டென கையை விட்டு
கீழே விழாமல்
கீழே இறங்கி வந்து
ஊருக்குள் ஓடிவந்து
மருத்துவத்தால்
பிழைத்த கதை தனிக்கதை....

கடலைச்செடியை
பிடிங்கும்போது
சில நேரம் செடியோடு
ஒட்டி நிற்கும் 'சுருட்டை' பாம்பு
கவனியாமல் சேர்த்துப்பிடிங்கினால்
சிக்கல்தான் வாழ்க்கைக்கு....

இளம்வயதில்
அம்மா அவிச்சுப்போட்டு
வீட்டுக்குள்
உணர வைத்திருக்கும்
நெல்லின் மேல்
அழகாக 'பாம்பு 'ஊர்ந்த
தடம் இருக்கும்
காலையில் எழுந்தவுடன்
எங்களுக்குள்
ஆகா, நம்ம வீட்டுக்கு
விருந்தாளி வந்திருக்கு
போல
எனச்சிரித்துக்கொண்டே
சொல்லுவதும்
சில நேரம் கண்ணில் பட்டால்
அதனை அடிப்பதும்
இல்லெயெனில் நாங்களும்
அந்த அறைக்குள்ளேயே
தூங்குவதுமாய் வாழ்ந்த நாட்கள் ....

இன்னும் எங்கள் ஊரில்
பாம்புக்கடிக்கு நிரந்தமாய்
மருந்து  கிடைப்பதில்லை...

நகரத்தில் 'பாம்பு ' எனும்
பெயர் கேட்டாலே
சில பேர் பதறுவதைக் கண்டால்
சிரிப்புத்தான் வருகிறது ....

                                                    வா.நேரு.... 11.06.2016

Wednesday, 8 June 2016

எருமைக் காலங்கள்.......

                                                 கடந்து போன காலங்கள்(6)

       
படிக்கும் காலங்களில்
அதிகாலைப் பயணங்கள்
பெரும்பாலும்
எருமை மாட்டின் மேல்தான்....
இளம் வயதில்
எருமை மாட்டுச்சவாரிதான்
ஏரோப்பிளான் சவாரிபோல,,,,

சின்ன எருமை பெரிய எருமை
நடு எருமை என
மூன்று எருமைகள் இருந்தன
எங்கள் வீட்டில் .....

ஏதேனும் ஒரு மாடு
பால் கறக்கும் நிலையில்...
ஆபத்துக்காலங்களில்
அட்சய பாத்திரம் அவைகள்தான்
'மூக்கையா' அண்ணன்
பால்பண்ணையில்
எப்போது கேட்டாலும்
முன் பணம் கிடைக்கும்
பாலை ஊற்றி பின்பு
கடனை அடைக்கலாம்...

என் காலில் பெரிய எருமை
ஒருமுறை தன் காலைத்
தூக்கி வைத்து விட்டது !
ஆனந்தமாய் அசை போட்டுக்கொண்டு
பெரிய எருமை அசையாமல் நிற்க
நானோ வலியில் துடிக்க
அடித்தாலும் அசையாத எருமை..
காலை எடுக்க வைப்பதற்குள்
போதும் போதும் என்றாகிவிட்டது....

அதிகாலை எழுந்து
மாட்டின் சாணி அள்ளி
அதிகாலையில் மாடுகள்
மூன்றையும் ஓட்டிக்கொண்டு
வயல்களில் மேயவிட்டு
மாடுகள் மேயும் நேரத்திற்குள்
குளித்து துவைத்து
தயாராகி
வீட்டில் வந்து மாடுகளைக்
குளுதாடியில் தவிட்டைப் போட்டு
தண்ணீர் குடிக்கவிட்டு
கடலைக் கொடி அல்லது
கூளத்தை அள்ளிப்போட்டு


அம்மா ஆக்கி வைத்திருக்கும்
சோற்றையும் பருப்பையும்
அவசரமாய் என் வாயில்
அள்ளிப்போட்டு
பள்ளிக்கூடத்திற்கு  ஓடி
9 மணி முதல் 1 மணிவரை
வகுப்பிற்குள் அமர்ந்துவிட்டு

1 மணிக்கு வீட்டிற்கு வந்து
மாட்டிற்கு தண்ணீர் வைத்து
பாலைக் கறந்து ஊத்தி
மீதம் நுரையோடு இருக்கும்
பச்சை எருமைப்பாலை
வாயினில் அப்படியே ஊற்றிவிட்டு
இரண்டு மணிக்கு
மீண்டும் பள்ளிக்கு ஓடி

பின்பு 5 மணிக்கு வீட்டிற்கு
வந்து படித்து
வீட்டில் இருக்கும்
மாட்டைப் பார்த்து
வீட்டு வேலைகளையும்
பார்த்ததோடு
படிப்பையும் சேர்த்து
படித்த காலங்கள் .....

பள்ளிக்கும் வீட்டிற்கும்
ஏறத்தாழ ஒரு மைல் இருக்கும்
ஒரு நாளைக்கு
எத்தனை மைல்கள்
ஓட்டமும் நடையமுமாய்....

வயிற்றுக்கும்
அறிவுக்குமாய்
ஓடி ஓடி
உழைத்த காலங்கள்!...

                                                    வா.நேரு ...09.06.2016



Monday, 6 June 2016

கசப்பாகத்தான் இருந்திருக்கிறது.....

                                                  கடந்து போன காலங்கள்(5)


கடவுள் இல்லை
கடவுள் இல்லை
கடவுள் இல்லவே இல்லை
என உலக நாத்திக
மாநாடுகளில் உரையாற்றும்
நான்
நாத்திகக் குடும்பத்தில்
வந்தவனல்ல....

எனது அம்மா
பின்னாளில் நாத்திகர்
என்றாலும் எனது
அப்பா நாத்திகர் அல்ல....

ஆண்டவன் மேல் அதிபக்தி
கொண்டதால் 'ஆண்டவர்'
எனப் பெயர் பெற்ற
அப்பாவின் பிள்ளை நான்...

சிறுவயதில் புரட்டாசி
மாதங்களில்
சக்திவேல் வாத்தியாரின்
பஜனைக் கோஷ்டியோடு
ஒன்றிணைந்து நானும்
'கோவிந்தா '  முழக்கம்
போட்டிருக்கிறேன்

சனிக்கிழமை ஊரைச்சுற்றி
வந்து பின்பு
உட்கார்ந்து சாப்பிடும்
பொங்கல் இட்லிகளை
நானும் கூட
சாப்பிட்டிருக்கிறேன் .....

ஆனால் விவரம்
தெரிந்த காலத்திலிருந்து
'க்டவுள் ' எனும் பெயரே
கசப்பாகத்தான் இருந்திருக்கிறது.....

சர்வ சக்தி சாமி
என்று சொல்லப்படும்
'சதுரகிரி' மலை அடிவாரத்தில்
சாமி கும்பிடப்போன இடத்தில்
எனது அக்கா மகன்
பொன்னுக்காளை 'கை' போனதால்
ஏழாம் வகுப்பு படிக்கும்போதே
என்னடா கடவுள் இது
கும்பிட வந்தவனையே
காப்பாற்ற வக்கில்லாத
க்டவுள் எனத்தோன்றியது......

கடவுளை விடாது
கும்பிடும் ஒருவர்
சாட்டையால் சகமனிதரை
விடாது அடிப்பதையும்
அடிவாங்கிய மனிதர்
அத்தனை அடியையும்
வாங்கிக்கொண்டு
அழுது அழுது புரண்டாரே தவிர
ஒரு வார்த்தை கூட
அடித்தவரை
எதிர்த்துப்பேசாமையும்
பள்ளிக்குச்செல்லும்
வழியில் பார்த்த
எனக்குள் விதைத்த
இராசயனங்கள் பல பல.....

                                                            வா.நேரு  07.06.16




Saturday, 4 June 2016

மீனென கிணற்றுக்குள்........

                                       
                                            கடந்துபோன காலங்கள்(4) .....



எத்தனை கிணறுகள்
ஊரைச்சுற்றி !
மீனென கிணற்றுக்குள்
மூழ்கிக் கிடந்த காலங்கள் !
மூச்சடக்கி கிணற்றுக்குள்
கண்ணாமூச்சியாய்
வந்து பிடித்துப்பார்
என வளைந்து வளைந்து
நண்பர்களுக்கு
போக்குக் காட்டிய காலங்கள் !

பத்துவயதுவரை
கிணற்றுக்குள் நீந்தும்போது
உடம்பில் எதுவும் துணி
போட்டுக்கொண்டு
குளித்ததில்லை
ஜட்டியெல்லாம் கிராமத்துக்குள்
அப்போது அறிமுகமில்லை
இன்றைக்குப் போல்
அன்றைக்கு அது
விரசமாக
ஊருக்கோ எங்களுக்கோ
உறுத்தியதில்லை....

கிணற்றுக்குள் குளிக்க
கழட்டி வைத்த துணியை
மேலேறிய
சுப்பிரமணி தூக்கிக்கொண்டு
ஓடிவிட
கொஞ்சதூரம் ஓடி
அவனிடம் துணியை
கெஞ்சி வாங்கி......
மறுநாள் கிணற்றில்
குளிக்க வந்த அவனை
கிணற்றுக்குள்
முக்கி முக்கி எடுக்க....
மூச்சுத்திணறி
சிக்கித் தவித்த அவன்
மேலே ஏறி ஓடிப்போய்
'அம்மா என்னைக்
கொல்லப்பார்த்தான் ' என
அவன் அம்மாவை அழைத்துவந்து
என் அம்மாவிடம் புகார்சொல்லி
முதுகு வீங்கியதெல்லாம்
தனிக்கதை....

காட்டுவா ராவுத்தர் கிணற்றின்
மேல் நின்று
பல்டி அடித்து கிணற்றுக்குள்
குதித்து எழுந்த நாட்கள் !


பாண்டியன் கிணற்றில்
நாங்கள்
ஒரு பக்கம் நீந்த
தண்ணீர்ப்பாம்பு
கிணற்றுக்குள்
இன்னொரு பக்கம் நீந்த....
மறைந்துவிட்ட அன்புஇளவல்
ஹெல்த் இன்ஸ்பெக்டர்
கருவாடு முருகேசன்
பாம்போடு பாம்பாய்
நீந்தி நீந்தி
கடைசியில் பாம்பைக்
கையில் பிடித்து
கிணற்றுப் படியில் ஏற
பயந்து போன எனது
வெளியூர் நண்பன்
பாதிக் குளியலில்
தலையைத் துவட்டிய
நாட்கள்
நகைப்போடு நகரும் நினைவுகள்...

எட்ட நின்று
தங்களுக்கும் உரிய
கிணற்றை
வேடிக்கை பார்க்கிறார்கள்
என் பிள்ளைகள்.....
துக்கமாகத்தான் இருக்கிறது

அவர்கள் வாழ்வின்
ஒரு அங்கமாய் நீச்சல்
இல்லை என்பது மட்டுமல்ல
நீச்சலடிக்கும் நிலையில்
பெரும்பாலான கிணறுகளில்
தண்ணீர்
இல்லை என்பதும்...
ஊரும் உறவுகளும்கூட
தூரமாகிப்போனது
என்பதும்தான்.....

                                       வா. நேரு, 05.06.16


                            

Wednesday, 1 June 2016

ஆண்டவர் வாத்தியார் !....

                                   கடந்து போன காலங்கள்(3)



ஆறாவதோ ஏழாவதோ
படிக்கும்போது
ஊரின் மத்தியில் இருக்கும்
வேலுச்சாமி (நாடார்) கடையில்
பொருள் வாங்கச்சென்றேன்

கடையில் 50 ரூபாய்
கொடுத்து பொருள்
வாங்க
அவரோ 50 ரூபாய்க்கு
பொருள் கொடுத்து
மீதம் 50 ரூபாயை
என் கையில் கொடுத்தார்
நூறு ரூபாய் நான்
கொடுத்ததாக எண்ணி....

நான் 100 ரூபாய் கொடுக்கவில்லை
50 ரூபாய்தான் கொடுத்தேன்
இந்தாருங்கள் 50 ரூபாய்
என்று அவரிடம்
திருப்பிக்கொடுத்தபோது

ஆண்டவர் வாத்தியார் மகன்
என்பதை நிருபிச்சிட்ட தம்பி
என்று உளப்பூரிப்போடும்
உவகையோடும்
உடல் மொழியோடு
அவர் சொன்ன வார்த்தைகள்
ஆழமாகப் பதிந்து போனது

ஆண்டவர் எனும் பட்டப்பெயர்
கொண்ட வாலகுரு வாத்தியார்
என்றால் 'நேர்மை ' என்னும்
பொருள் புரிந்து போனது ......


'நேர்மை ' என்னும்
ஆளுமை கொண்ட
அப்பாவுக்கு பிள்ளை
என்னும் பெருமிதம் இருந்தது....

                      வா. நேரு - 02.06.16

Tuesday, 31 May 2016

எழில் மிகு ஊர்தான்.....

                                            கடந்து போன காலங்கள்(2) .......

"வானரங்கள் கனிகொடுத்து
மந்தியோடு கொஞ்சும்
மந்தி சிந்தும் கனிகளுக்கு
வான் கவிகள் கெஞ்சும்"
என இயற்கை அழகைப்பாடும்
குற்றாலக் குறவஞ்சி போல
இயற்கை அழகு பொங்கும்
எழில் மிகு ஊர்தான்
நான் பிறந்த சாப்டூர்

மேற்கே திரும்பி
அண்ணாந்து பார்த்தால்
மேற்கு மலைத்தொடரும்
கிழக்கே முழுமையாய்
ததும்பி நிற்கும்
பெரியகுளம் கண்மாயும்
தென்மேற்கில்
அடர் மரக்காடுகளாய்
நிற்கும் பெரியதோப்பும்
பாளையந்தோப்பும்
வடக்கே விளைந்து நிற்கும்
வயல்காடுகளுமாய்
இளவயதில் நான்
பார்த்த ஊர் எங்கள் ஊர்

பெரியகுளம் கண்மாயை
ஒட்டி இருக்கும்
மாரிமுத்து(மணியார்) கிணற்றில்
தண்ணீர் நிறைந்து
தானாக ஓடும்
சிறுவயதில் நண்பன்
சுந்தரசேகர் சட்டை
உள்ளே விழுந்து விட
காதுக்குள் சிவ் சிவ்வென்று
தண்ணீர் அடைத்த நிலையிலும்
மூச்சடக்கி உள்ளே சென்று
கிணற்றின் அடியில்
கிடந்த சட்டையை
எடுத்து வந்த ஞாபகம் வருகிறது !
சில நாட்களுக்கு முன்னால்
அக்கிணற்றை எட்டிப்பார்த்தால்
ஏதோ புதைகுழிக்குள்
கிடப்பது போல தண்ணீர் தெரிந்தது
ஒரு நாற்பது ஆண்டுகளில்
கிணற்றடி நீர் இவ்வளவு
கீழாக இறங்கியது ஏன் ?
கேள்விகள் மட்டுமே
இருக்கிறது ......
விடைகள் தெரியவில்லை...

                                                      வா.நேரு....01.06.2016




Monday, 30 May 2016

கடந்து போன காலங்கள்(1) .......



 கடந்து போன காலங்கள்(1) .......

அய்ம்பத்து இரண்டு
ஆண்டுகள் ஓடி
மறைந்திருக்கின்றன
நாளைக்(31.05.2016) காலை
அய்ம்பத்து மூன்று
பிறக்கின்றது .....

முதல்பத்து ஆண்டுகள்
பெரும்பாலான நினைவுகள்
நினைவுகளில் இல்லை !
ஓரீரண்டைத் தவிர ....

எனது அப்பா
இறந்த வீட்டில்
அவரது பிணம்
பொது வீட்டில்
சுவற்றில் சாத்திக்கிடக்க
பசிக்கிறதே என்று
அழுதேனாம்.....
சாப்பிட்டு பலமணி நேரம்
ஆனதால் நான்
பசி ! பசி என்றழுக
செத்த வீட்டிற்கு
வந்த பலரும்
எனைப் பார்த்து
பார்த்து அழுதார்களாம்....

நீர்மாலை எடுத்துவர
எங்கள் சாப்டூரின்
சந்தணக்கிணற்றில்
குளித்தபோது
பின்னர்  தற்காலிகமாக
போடப்பட்ட பூணூலோடு
சிரித்துக்கொண்டே
நடந்தேனாம்
பார்த்தவர்களில் சிலபேர்
இன்னும் கூடச்சொல்வார்கள் ....
அறியா வயதில்
அப்பனை பறிகொடுத்துவிட்டோம்
என்பது கூட
அறியாது சிரித்த வயது அது .....

ஆனால் ஒன்று
மட்டும் எனது
நினைவில் அப்படியே
இருக்கிறது ....
ஆறடிக் குழி தோண்டி
ஆறடி உயரமுள்ள
அப்பாவை பிணமென்று
உள்ளே போட்டு
மண்ணை அள்ளிப்
போடச்சொன்னதும்
பின்பு
பெரிய பெரிய
கல்லைப் போட்டு
அப்பாவின் சவக்குழியை
மூடியதும்
இன்னும்கூட
மனதிற்குள் இருக்கிறது .....

பெத்த அப்பாவின் மேல்
ஏழு வயதில்
கல்லையும் மண்ணையும்
போட்டு மூடும் கொடுமை
எனது எதிரிகளின்
பிள்ளைகளுக்குக் கூட
வாய்க்கலாகாது
என மனதில் ஓடுகிறது.....

மொட்டமச்சு
மெத்தில் ஏறி
காய்ந்த விறகை
எடுத்துப்போடச்சொல்ல
ஏணிப்படிஏறிப்போய்
விறகை எடுத்து
எடுத்துப்போட்ட நான்

முடிவில் விறகு மட்டும்
பறந்து செல்கிறது
நாம் மட்டும் ஏன்
படியில் செல்லல் வேண்டும்
என விறகோடு
கீழே விழுந்தேனாம்....

பிறவியிலேயே
ஆராய்ச்சியாளன்
உங்க அப்பா
என்று என் பிள்ளைகளிடம்
இன்றும்கூட
கேலி செய்வார்
எனது  மூத்த அண்ணன் .....

                                                ----வா. நேரு---- 30.05.16