Sunday, 28 July 2024

பாடத்திட்டத்திற்குள் வந்தால்தான்...

 

பாடத்திட்டத்திற்குள் வந்தால்தான்….

---------------------------------------------------------------

பாரதியை அறிந்த பலர்

பாரதிதாசனை அறிந்தாரில்லை..

பாரதிதாசனைப் பலகாலம்

அறிந்த நான் ஏனோ

அவரின் முதல் மாணாக்கன்

வாணிதாசனை அதிகம்

அறிந்தவனில்லை..

 

'எழிலோவியம்' வடித்திட்ட

இந்த இயற்கைக் குயிலின்

வசந்த கீதங்களை

எப்படி வாசிக்காமல் போனேன் நான்?

இயற்கையை அணுஅணுவாய்

உள்வாங்கி இரசித்து

உன்னதக் கவிதைகளை

எழுதியிருக்கும் இந்தத்

தமிழ் ‘வேர்ட்ஸ்வர்த்தை’

எப்படிப் படிக்காமல் போனேன் நான்?

தமிழின் ‘தாகூர்’ எனப்

போற்றப்பட்ட இந்தப்

பொன்நிகர் கவிஞரின்

வரிகளை எப்படி நான்

மனப்பாடம் செய்யாமல் போனேன்?

 

நினைத்துப்பார்க்கிறேன்..

அன்றைக்கு நான்

படித்த பள்ளிப்பாடங்களில்…

கல்லூரிப் பாடங்களில்

வாணிதாசனைக் கடந்து

நான் வந்ததில்லை..

ஏனோ எந்தப் பாடத்திலும்

அவர் பாடலைப் படித்த

நினைவுகள் இல்லை…

 

அவரின் ஒரு பாடல்

பாடத்தில் இருந்திருந்தாலும்

அவரைக் குறித்த

குறிப்புகளை நான்

தேடியிருக்கக்கூடும்…

தேடிப்படித்து

தெவிட்டாத அவரது

தேன் கவிதைகளுக்குள்

மூழ்கியிருக்கக்கூடும்

 

எத்தகைய கவிஞர் என்றாலும்

பாடத்திட்டத்திற்குள்

வந்தால்தான் மக்கள்

கண்ணில் அகப்படுகிறார்கள்..

மாபெரும் கவிஞர்கள்கூட..

 

                        வா.நேரு

                        28.07.2024

 

 

 

2 comments:

Anonymous said...

💐👍

Anonymous said...

நன்றி...