Saturday, 9 June 2018

நிகழ்வும் நினைப்பும் 2018 (1).....

நிகழ்வும் நினைப்பும் 2018 (1).....மதுரை நிகில் பவுண்டேசன்....

மதுரை நிகில் பவுண்டேசன் சார்பாக மாணவ மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி இன்று எனது ஊரான சாப்டூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் 9,10 மற்றும் 12 மாணவ மாணவிகளுக்காக நடைபெற்றது. மொத்தம் சுமார் 120 மாணவ மாணவிகள் பங்குபெற்றனர். நிகில் பவுண்டேசன் நிறுவனர் மரியாதைக்குரிய மதுரை திரு.சோம.நாகலிங்கம் ஐ.ஆர்.எஸ். அவர்கள் நிகிழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்கள். நிகழ்ச்சிக்கு நான்(வா.நேரு) தலைமை தாங்கினேன். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு.மீனாட்சிசுந்தரம் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.சாப்டூர் அக்னி சிறகுகள் அறக்கட்டளை உறுப்பினர்கள் திரு.வணங்காமுடி,பொறியாளர் சு.இரா.மணிமாறன்,பொறியாளர் லட்சுமிகாந்த்,கணினி ஆசிரியர் பாண்டி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பயிற்சியாளர்களாக மதுரை திரு.குமரகுருபரன் சார்,இராஜபாளையம் கண்மருத்துவர் பால்ராஜ் சார்,மதுரையினைச்சார்ந்த திரு தயாளன் சார் ஆகியோர் மிகச்சிறந்த பயிற்சியினை அளித்தனர். சாப்டூர் அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்கள் திருமதி சுகந்தி அவர்களும் முருகேஸ்வரி அவர்களும் விடுமுறை நாளில் காலையிலிருந்து மாலைவரை பயிற்சி நடக்கும் இடத்தில் இருந்ததோடு, மாணவ,மாணவிகளை ஒழுங்குபடுத்தி வகுப்பில் அமரவைத்து மிகப்பெரிய உதவியைச்செய்தார்கள். மதியம் உணவினை,காலையில் தேநீரை அக்னி சிறகுகள் அறக்கட்டளையின் சார்பாக வழங்கினார்கள்.

                            மதுரையிலிருந்து விருந்தினர்களை அழைத்துச்சென்று, எனது மகன் அன்புமணியும் , நானும் நிகழ்வில் கலந்துகொண்டோம். மிகப்பெரிய மன நிறைவினைக் கொடுத்த நாளாக இந்த நாள்(09.06.2018) அமைந்தது. நிகழ்ச்சியின் முடிவில் மாணவ, மாணவிகள் கொடுத்த நிகழ்வு மதிப்பீடு மனம் நெகிழும் அளவிற்கு அமைந்தது.சில ஆண்டுகளுக்கு முன்னால் பழனி ஆண்டவர் பெண்கள் கல்லூரியில் மதுரை ஸ்பார்க் செண்டர் பார் ஐ.ஏ.எஸ். ஸ்டடிஸ் சார்பாக நான்,திரு.இரா.சீனிவாசன், பேரா.சேகர்,பேரா.ஆண்டியப்பன் சார் போன்றவர்கள் கலந்துகொண்டு கொடுத்த ஒரு நாள் பயிற்சி முடிவில் ஒரு மாணவி  நிகழ்வு மதிப்பீடு சொல்லும்போது 'எனது வாழ்க்கையை இந்த பயிற்சிக்கு முன்/இந்த பயிற்சிக்குப் பின்  என்று பிரித்துக்கொள்ளலாம். அவ்வளவு செய்திகள் இன்று கற்றிருக்கின்றேன். இதனை வாழ்க்கையில் கடைப்பிடித்து வெற்றி பெறுவேன் 'என்றார். அதனைப் போல இன்றைக்கு சாப்டூர் அரசு உயர் நிலைப்பள்ளி +2 மாணவி தன்னுடைய வாழ்க்கையில் இலக்கினை முடிவு செய்ய இந்த நாள் உதவியிருக்கிறது. நான் தெளிவாக இந்தப்பயிற்சி உதவியிருக்கிறது. மிக்க மகிழ்ச்சி என்றார். மனம் மகிழ்வாக இருந்தது.  நிகில் பவுண்டேசன் வெளியீடான, திரு.சோம. நாகலிங்கம் அவர்கள் கருக்கொண்டு வடிவமைத்த 'வல்லமை காணீர் ' என்னும் புத்தகம் அனைவருக்கும்  வழங்கப்பட்டது.  


                               இது ஒரு நல்ல தொடக்கம். சாப்டூர் அரசு ஆரம்பப்பள்ளி, அரசு மேல் நிலைப்பள்ளி இரண்டின் வளர்ச்சிக்கான வேலைகளை அக்னி சிறகுகள் அறக்கட்டளையும், ஊரில் உள்ள பெரிய மனிதர்களும்  வெளியூரில் உள்ள பெரிய மனதுக்காரர்களும் செய்யத்தொடங்கியிருக்கின்றார்கள். அங்கங்கு இருக்கும் நல்ல உள்ளங்கள் தங்கள் கரங்களின் மூலமும் உள்ளங்களின் மூலமும் உதவத்தொடங்கியிருக்கின்றார்கள். திருப்பூரில் இருக்கும் அருமை நண்பர்கள் க.சுப்பிரமணியமும்,ஜொ.இராஜேந்திரனும் இணைந்து ரூ 2000 இந்த நிகழ்வுக்கு உதவியிருக்கின்றார்கள். மிக்க நன்றியும் பாராட்டுகளும் அவர்களுக்கு. சாப்டூர் அரசு ஆரம்பப்பள்ளியில் தங்கள் குழந்தைகளைச்சேர்த்த பெற்றோர்களுக்கு அக்னி அறக்கட்டளை சார்பாக பாரட்டு விழாவினை இன்றைக்கு நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். இதயம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும் அவர்களுக்கு....

                  இணைவோம். சாப்டூர் அரசு ஆரம்பப்பள்ளி, அரசு மேல் நிலைப்பள்ளி இரண்டின் வளர்ச்சிக்கான
நல்லதை செய்வோம் .....   அதன் மூலம் மன நிறைவு கொள்வோம்

Sunday, 3 June 2018

நாடி நரம்புகளில் ஓடுவது......

                          கடந்து போன காலங்கள் 16


அதிகாலை எழுந்து
பள்ளிக்கு கிளம்பல் வேண்டும்....
யாரும் பள்ளிக்கு வராத நேரத்தில்
மரங்களைப் பார்த்து
பேசிக்கொண்டிருத்தல் வேண்டும்...
இல்லையெனில் பள்ளி
ஆரம்பித்தபின்னே அரைமணி நேரம்
தாமதமாகச்செல்லல் வேண்டும்....
அப்படித்தான் பேருந்து இருந்தது
எனது கிராமத்தில் இருந்து
தே.கல்லுப்பட்டிக்கு
நான் +2 படிக்கும் காலத்தில்

சில நாட்கள் அம்மா கட்டிக்கொடுக்கும்
பழைய சோற்றோடு
அதிகாலைப் பேருந்து....
சில நாட்கள் பழைய சோறு இல்லைடா
இரு இரு சுடுசொறு ஆக்கிவிடுகின்றேன்
என்று அம்மா சொல்ல
தாமதமாகப் பள்ளிக்கு பேருந்தில் சென்று
கல்லுப்பட்டி காந்தி நிகேதனில்
அடியோ.. திட்டோ வாங்கியதும் உண்டு.....

அதிகாலை 6.30க்கு பேருந்து
இல்லையெனில் 8.50 மணிக்குத்தான்
கல்லுப்பட்டிக்கு எமது ஊரிலிருந்து
பேருந்து எனும் நிலையில்
இடைப்பட்ட நேரத்தில்
ஏதேனும் பேருந்து எமது
ஊருக்கு வராதா ? என
ஏங்கியிருந்த வேளை.....

பாராளுமன்றத்திற்கு பெரியகுளம்
மக்களைவைத் தொகுதியின்
உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
முறுக்கு மீசை அய்யா
கம்பம் நடராசன்
எங்கள் ஊராம் சாப்டூருக்கு
நன்றி சொல்ல வந்திருந்தார்.....

11-ஆம் வகுப்பு படிக்கும்
மாணவன் நான் !
பல பேரிடம் கையெழுத்தினை வாங்கி
அன்றைய எங்கள் ஊரின்
தி.மு.க.செயலாளர்
அய்யா ஜோதி அவர்களிடம் கூறிவிட்டு
எங்கள் ஊருக்கு கூடுதலாக
பேருந்து வரல் வேண்டும்
நாங்கள் பள்ளி செல்ல
மிகவும் வாய்ப்பாக அமையும்
என மேடையில் ஏறிப் பேசி
மனுவினைக் கொடுத்தேன்.....

இன்றைக்கும் கூட அந்த நிகழ்வு
கனவு போலத்தான் இருக்கிறது....
மனுவினை வாங்கிய நாலைந்து நாட்களில்
தே.கல்லுப்பட்டிக்கு செல்லும்
அரசு டவுன் பேருந்தோடு
ஊருக்குள் வந்தார் அய்யா
கம்பம் நடராஜன்......
காலை 7.30 மணிக்கு
அருமையாக வந்துசென்றது
அந்தப் பேருந்து.........
எங்கள் கவலை தீர்ந்தது ....

திராவிட இயக்கத்தினை
புரிந்து கொண்டவர்களின்
நாடி நரம்புகளில் ஓடுவது
படிப்பதற்கு உதவி செய்தல்...
படிப்பதற்கு வசதி செய்தல்......Wednesday, 30 May 2018

சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வாய்.....

           

சுயமரியாதை வாழ்வே
சுகவாழ்வு என்றார் பெரியார்
வாயால் கூறுபவர்களைவிட
ஒருபடி மேலே நின்று
வாழ்ந்து பார்த்து சொல்கின்றேன்
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு......

சாதிச்சகதியில்
எந்நாளும் மாட்டியதில்லை
சக மனிதனை எந்த நாளும்
சாதிக்கண் கண்டு நோக்கியதில்லை
பார்ப்பன நண்பரைக் கூட
அளவு கடந்து  நேசிக்கவைக்கும்
அய்யாவின் மனித நேயம்
மண்டைக்குள் புகுந்ததால்
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வாய்.....

இடையூறுகள் ஏதும் என்றால்
சிலர் சோதிடர்களை
நோக்கி ஓடுகின்றார்...
எதை எதையோ நாடுகின்றார்..
அறிவு கொண்டு இடையூறு
நீக்கும் அய்யாவின் வழி ஏற்றதால்
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வாய்...

இல்லாத கடவுளுக்காக
எந்த நாளும் காசைச்செலவழித்ததில்லை...
கடவுளுக்கென எவர் கேட்டு வந்தாலும்
இந்த நாள் வரை ஒரு ரூபாய் கொடுத்ததில்லை
விடுதலை இதழின் வளர்ச்சி நிதி
முதியோர் இல்லம் குழந்தைகள் இல்லம்
படிப்போர்க்கு உதவி எனத்தான்
கரங்கள் நீண்டிருக்கின்றன.......
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வாய்....

வரவுக்குள்தான் செலவு
கஞ்சியோ கூழோ குடிப்போம்
கடன் வாங்கி பகட்டு வேண்டாம்,,,
எவ்வளவு பெரிய பணக்காரரோடு
பதவிக்காரரோடு பழகினாலும்
நம் நிலையில் நாம் இருப்போம்
நம்மால் முடிந்ததை
தொண்டாய்க் கொடுப்போம் எனும்
பொருளாதார நடைமுறையால்
எனது வாழ்க்கை
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வாய்

மற்றவர்கள் உனக்கு மரியாதை
காட்ட வேண்டும் என நினைத்தால்
அவர்களுக்கு மரியாதை காட்டு
எனும் தந்தை பெரியாரின் தத்துவம்
மனதில் பதிந்த காரணத்தால்
கடிந்து சொல்ல மனம் வருவதில்லை
எவர் மனதையும் நோகவைக்கும்
எண்ணம் எப்போதும் இல்லை
அதற்காக எந்த நிலையிலும்
எனது கொள்கையை விட்டுக்கொடுத்தலும்
இல்லை எனும் எனது வாழ்க்கை
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வாய்....

ஒழுக்கம் என்பது உனக்கு
கொடுத்த பொறுப்பை ஒழுங்காக
நிறைவேற்றுதல்
என அடித்துச்சொன்னார் அய்யா பெரியார்...
இயக்கப்பொறுப்போ குடும்பப்பொறுப்போ
அலுவலகப்பொறுப்போ
ஒழுக்கமே உயிர் எனக்கொள்வதால்
எந்த நாளும் தளர்ச்சி இல்லை
வாழ்வில் வளர்ச்சிதான் எனும்
வாழ்க்கை முறையால்
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வாய்....

தந்தை பெரியாரின்
தலைமைக் கொள்கை மகன்
அய்யா ஆசிரியரின் வழிகாட்டல்
நாளும் 'விடுதலையில்' அவர் ஊட்டும்
வாழ்வியல் சிந்தனைகளை
வாழ்வின் கைத்தடிகளாய்ப்
பற்றிக்கொண்டதால்
வளமாய் நலமாய் வாழ்கின்றேன்
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு...

இன்று மே முப்பத்தி ஒன்று....
அய்ம்பத்து ஐந்தாம் ஆண்டு
பிறந்த நாளை எளிமையாகக்
கொண்டாடும் இந்த நாளில்
உங்களுக்கு வலிமையாகவே
பரிந்துரைக்கின்றேன்.....
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு....

                                       

                         வா.நேரு ....31.05.2018

               

Monday, 30 April 2018

எங்களது கனவில் ஒரு மேதின நாள் ....

எங்களது கனவில்
ஒரு மேதின நாள் இருக்கிறது;

உலகம் முழுதும் இருக்கும்
உழைக்கும் மக்கள் எல்லாம்
இன்புற்று இருக்கும் நாள்....

உழைத்து உழைத்து உருக்குலைந்து
உண்ணும் உணவிற்காக அலைந்தலைந்து
அல்லல்படும் இந்த நாள் போல் அல்லாது
அந்த நாளில்
எல்லோரும் உழைப்பதுவும்
உழைக்கும் அனைவருக்கும் உணவு
உறுதிபடுத்தப்படுவதுமான நாளாக
அந்த நாள்....
எங்களது கனவில்
ஒரு மேதின நாள் இருக்கிறது;

உண்டு கொழுக்க சிலரும்
உணவின்றி உழைத்து சாக பலருமாய்
இருக்கும் இந்த நாள் போலல்லாது
அந்த நாளில்
அவரவரால் முடிந்த உழைப்பு
ஆனால் அனைவருக்கும்
தேவையான அவரவர் உணவு
அவரவர் தட்டில் வந்து
நிரம்பி வழியும் நாளாய் அந்த நாள்
எங்களது கனவில்
ஒரு மேதின நாள் இருக்கிறது....

கடவுளின் நெற்றியில் இருந்து
பிறந்தவர்கள் நாங்கள் என்னும்
உளறல்கள் எல்லாம் ஒழிந்து
உலகில் பிறக்கும் அத்தனை
குழந்தைகளும் பேதமில்லாமல்
கறுப்பென்றும் சிவப்பென்றும்
வேற்றுமைகள் காட்டாது
உயர்சாதியென்றும் தாழ் சாதியென்றும்
பிறக்கும்போதே சாதி ஏற்றத்தாழ்வு
ஏணிப்படிகளில் பொருத்தாது
பிறக்கும் குழந்தைகள் எல்லாம்
மனிதக் குழந்தைகளாய்
பிறக்கும்  நாளாய்
எங்களது கனவில்
ஒரு மேதின நாள் இருக்கிறது....

சாதியா ? அப்படியென்றால்.....என்னது ?
மதமா ? அப்படியென்றால் ....தெரியாது ?
கடவுளா ? நன்றாக வாழத் தேவையா அது ?
என்னும் கேள்விகளோடு
இனிவரும் ஓரிரு தலைமுறைகளில்
எங்களது பிள்ளைகளின் பிள்ளைகள்
பிரசவிக்கும் பிள்ளைகள் எழுப்பும்
கேள்விகளால் நிரப்பப்படும் நாளது .....

உலகம் ழுழுவதும் இருக்கும்
செல்வமெல்லாம் ஓரிருவர் கையில்
இருக்க அல்ல! அல்லடா அல்ல !
என ஆர்ப்பரித்து உழைக்கும் கூட்டம்
உலகச்சொத்துக்களையெல்லாம்
பொதுவாக்கும் காலமது .....
தனியுடமை அழிந்து
பொது உடமை செழித்து
தந்தை பெரியார் காணவிரும்பிய
பொது உரிமையோடு மக்கள்
எல்லாம் மகிழ்ச்சி பொங்க வாழும் காலம் அது.....

எங்களது கனவில்
ஒரு மேதின நாள் இருக்கிறது !
அந்த நாளை நோக்கி நகர்வதற்காக
தந்தை பெரியாரின் தடி இருக்கிறது..
அண்ணல் அம்பேத்கரின் சுட்டும் விரல் இருக்கிறது....
ஓங்கிய கைகளோடு புரட்சியாளர் லெனின்
போட்டுத்தந்த முழக்கங்கள் இருக்கிறது ....
தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும்
தோழர் லெனினும் போட்டுத்தந்த
பாதை தெளிவாகவே எங்கள்
இளைஞர்களின் கண்களில் தெரிகிறது....

எங்களது கனவில்
ஒரு மேதின நாள் இருக்கிறது !
ஆணும் பெண்ணும் சமமாய்
வர்க்கப்பேதம் ஒழிந்து
வர்ணபேதம் அழிந்து
மனித நேயம் தழைத்து
உலகமெல்லாம் ஒரு நாடாய்
உழைக்கும் மக்களெல்லாம் ஒரு வீடாய்
செழித்துக்குலுங்கும் அந்த நாள்...
அந்த நாள் ! அந்த நாள்....
எங்களது கனவில்
ஒரு மேதின நாள் இருக்கிறது!

                                                               வா.நேரு ....
                                                மேதின(மே-1,2018) வாழ்த்துகள் அனைவர்க்கும்


Sunday, 1 April 2018

தந்தை பெரியாரும் கோராவும்.........உலகப்பெரியார் பற்றிய கருத்தரங்கம்......


'உலகப்பெரியார் பற்றிய கருத்தரங்கம் " 29,30.03.2018 தேதிகளில் தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தில் ' தந்தை பெரியாரும் கோராவும் ' என்னும் தலைப்பில் 30.03.2018 அன்று காலை உரையாற்றும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. ஆந்திர நாத்திக அறிஞர் கோரா அவர்களின் வாழ்க்கை வரலாறு, அவரின் போராட்டம், அவரின் வாழ்வியல் போன்ற பலவற்றை வாசிக்கும் வாய்ப்பு இந்தக் கருத்தரங்கத்திற்கு தயாரித்ததன்  வாயிலாகக் கிட்டியது. பிறப்பால் பார்ப்பனராக பிறந்த கோரா அவர்கள் 22 வயதில் பூணூலைக் கழட்டிப்போட்டுவிட்டு மறுபடியும் பூணூலை போட மறுத்தவர். வாழ் நாளெல்லாம் பூணூல் நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடியவர். வாதாடியவர். பூணூல் போடாவிட்டால் வீட்டில் இருக்காதே,வீட்டை விட்டு வெளியில் போ என்று சொன்னவுடன் தனது மனைவி சரஸ்வதி கோரா அவர்களோடும் தனது மூத்த மகன் 3 மாதப்பிள்ளையான இலவணத்தோடு வீட்டை விட்டு வெளியேறியவர். அக்கிரகாரத்திலிருந்து வெளியேறி, சேரியில் போய் குடியேறியவர். மிகுந்த கடவுள் நம்பிக்கையுடைய்வராக இருந்த அவர் எப்படி நாத்திகவாதியாக மாறினார். நாத்தியவாதியாக மாறியதால் தனக்கு கிடைத்த தன்னம்பிக்கை,துணிச்சல் மற்றவர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காக நாத்திகத்தை தனது வாழ் நாள் முழுவதும் பரப்பியவர் போன்ற பல செய்திகளை அரங்கத்தில் பகிர்ந்துகொள்ள முடிந்தது.(விரிவான கட்டுரை புத்தகத்தில் வருகின்றது.) பெரியார் சிந்தனை உயராய்வு  மய்யத்தின் பேராசிரியர்கள் முனைவர்.க.அன்பழகன், முனைவர்.த.ஜெயக்குமார் மற்றும் துறை சார்ந்தோர் மிகச்சிறப்பான ஏற்பாடுகளைச்செய்திருந்தனர். ஒவ்வொரு கருத்தாளரும் மிக நுட்பமாக நன்றாக தயாரித்து வந்திருந்த கட்டுரைகளை அரங்கத்தில் வாசித்தனர். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. புதிய கோணத்தில் தந்தை பெரியாரின் தத்துவத்தை உழைப்பை மற்ற தலைவர்களோடு,அறிஞர்களோடு ஒப்பிட்டு கருத்துரைத்த விதம் மிகவும் பாராட்டத்தக்கதாக இருந்தது. நிறைவாக திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரை ஆற்றி, சான்றிதழ்களை வழங்கி,இந்த நிகழ்வுக்கு உழைத்தோர்க்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தார்கள். அய்யா ஆசிரியரின் அவர்களின் உரை, தந்தை பெரியாரை நீதிமன்றத்தில் தண்டித்த நீதிபதியே சட்டக்கல்லூரி முதல்வராக இருந்த நேரத்தில், பெரியாரின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த நேரத்தில், தண்டித்த நீதிபதியே தலைமை ஏற்று அய்யா அவர்களை வரவேற்று, மேல் நாட்டு அறிஞர்களோடு ஒப்பிட்டு தந்தை பெரியார் அவர்களை பாராட்டியதை நினைவு கூர்ந்து உரையாற்றினார். உணவு,இருப்பிடம், விருந்தோம்பல்,நல்ல நிறைவான கருத்துப் பரிமாற்றம், புதிய நோக்கில் அறிஞர்கள் கருத்துக்களை எடுத்துவைத்த விதம் என ஒவ்வொன்றும் மிகவும் ஈர்ப்பாக அமைந்த கருத்தரங்கமாக அமைந்தது. எனது அறையில் உடன் தங்கிய தோழர்கள் எழுத்தாளர் உடுமலை வடிவேல், எழுத்தாளர், பேச்சாளர் பிரின்ஸ் என்னாரசு பெரியார் அவர்களோடு இயக்க நிகழ்வுகள் பரிமாற்றம் என குறிப்பிடத்தக்க நாளாக 30.03.2018 அமைந்தது உண்மையிலேயே மகிழ்ச்சியும் பெருமையும் தந்த நிகழ்வு,பங்கேற்பு.

'உலகப்பெரியார் பற்றிய கருத்தரங்கம்' என்னும் தலைப்பில் விடுதலை நாளிதழ் தீட்டிய 30.03.2018 தலையங்கம்

"வல்லம் - பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழகம் - அதன் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் சார்பில் பல்கலைக் கழக அய்ன்ஸ்டின் மன்றத்தில் மார்ச்சு 29,30 ஆகிய இரு நாட்களில் "உலகப் பெரியாரும் பன்னாட்டுச் சிந்தனையாளர்களும் - ஓர் ஒப்பிடு" என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரைகள் அளிக்கும் கருத்தரங்கம் நேர்த்தியாக நடைபெறுவது - அறிவியல் துறையில் ஓர் அத்தியாயம் என்றே கூற வேண்டும்.

மனித குல வரலாற்றில் சமுதாய வளர்ச்சி என்பது - மனிதனின் அறிவு வளர்ச்சியைச் சார்ந்ததே. காட்டு விலங் காண்டிக் காலந் தொடங்கி அறிவியல் வளர்ச்சியால் மானுடம் அடைந்திருக்கும் எல்லா வகையிலுமான வசதிகளும், வாய்ப்புகளும், மனிதனின் அறிவு வளர்ச்சி விளைச்சலைச் சார்ந்ததேயாகும்.

கடவுள், மதம் தொடர்பான நம்பிக்கைகள் மானுட வளர்ச்சியின் கால்களை ஒரு பக்கம் கீழே இழுத்தாலும் அவற்றை யெல்லாம் கடந்து மானுட சமுதாயம், வளர்ச்சி நோக்கித் தன் பயணத்தை மேற்கொண்டுதான் வருகிறது.

"கொஞ்ச காலத்திற்குமுன் கடவுளைப் பற்றிய கதைகளை அப்படியே அதாவது கடவுள் சக்தியில் நடைபெற்றது என்று நம்பி இருந்தவர்கள்கூட, இப்போது அப்படியே நம்புவதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு, தங்களுக்குள்ள அறிவு வளர்ச்சியில்லாத தன்மையை மறைத்துக் கொண்டு விஞ்ஞானத்தின் மூலம் அக்கதைகளை மெய்ப்பிக்க முயற்சி எடுத்துக் கொண்டு சிரமப்படுகிறார்கள்" என்கிறார் உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியார் ('குடிஅரசு' 11.8.1929).

அஞ்ஞான குப்பைகளுக்கு விஞ்ஞான முலாம் பூசும் போக்கிரித்தனத்தைத்தான் தந்தை பெரியார் இப்படிக் குறிப்பிடுகிறார்.

மத்திய அமைச்சராக - அதுவும் கல்வித் துறையின் (மனிதவள மேம்பாட்டுத் துறையின்) இணை அமைச்சராக இருக்கக்கூடிய ஒருவரே 'டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கூற்றுத் தவறானது' என்று கூறியதோடு நிற்கவில்லை. "விஞ்ஞானம் என்றும் பொய்யானது, மெய்ஞ்ஞானமே உண்மை" என்று கூறியிருப்பது - நம் நாட்டின் வெறும் படிப்பறிவு விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவில்லையோ என்ற கேள்வியை எழுப்புவதைவிட ஒரு மனிதனின் மத நம்பிக்கை மனிதனுக்குள் இருக்கும் பகுத்தறிவின் வேர்களை அழிக்கும் வேர்ப் புழுக்களாக இருப்பதையே உறுதிப்படுத்துகிறது.

இவ்வளவுக்கும் இந்திய அரசமைப்புச் சட்டம் மக்களி டத்தில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று வலி யுறுத்துகிறது. (51கி-லீ)

ஏட்டுச் சர்க்கரையாக இருந்து பயன் என்ன? மத்திய அமைச்சராக இருக்கக் கூடியவரே அஞ்ஞானத்தை உயர்த்திப் பிடிக்கும் நிலையில் உள்ளார். பிரதமராக இருக்கக் கூடியவரே "சிவபெருமான் யானை தலையை வெட்டி ஒரு முண்டத்தின் கழுத்தில் பொருந்துமாறு பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார்" என்று கூறுகிறார் என்றால், இந்த நிலையை என்னவென்று சொல்லி பரிகசிப்பது!

இந்த நிலையில் சிந்தனையாளர்களின் அரிய வழிகாட்டும் பகுத்தறிவுச் சிந்தனைகள், உயர் எண்ணங்கள் மானுட வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை அளித்து வருகின்றன.

அதிலும் குறிப்பாக - சிறப்பாக தந்தை பெரியார் அவர் களின் சுய சிந்தனைகள் மானுட வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்களிப்பை அளித்து வருகின்றன. சோதனைக் குழாய்க் குழந்தையைப் பற்றி விஞ்ஞானிகள்கூட நினைத்துப் பார்க் காத ஒரு கால கட்டத்தில்  தந்தை பெரியார் (1938இல்) சொல்லி யிருப்பது சாதாரணமானதா?

அதனால்தான் அய்.நா.வின் "யுனெஸ்கோ" அமைப்பு தந்தை பெரியார் அவர்களுக்கு அளித்த விருதில் புதிய "உலகின் தொலைநோக்காளர் (Prophet of the New age)"
என்று குறிப்பிட்டுள்ளது. (27.6.1970).

தந்தை பெரியார் அவர்களின் சிந்தனையும், தொண்டும் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் நடந்திருந்தாலும், அவர்கள் வெளிப்படுத்திய தனித்தன்மை மிக்க சிந்தனைகள், உலக மானுடத்திற்கே தேவையானவையே! அவர் அளித்த கொள்கைகள் வெற்றிகரமான வாழ்க்கைக்கான ஒரு நெறி முறையாகும். (A way of Life).

கடவுள், மதம், மத நூல்கள், ஜாதி போன்றவைகளால் மனிதன் அறிவையும், தன்னம்பிக்கைகளையும், பொரு ளையும், காலத்தையும் விரயமாக்குவது பற்றி கவலை கொண்ட தந்தை பெரியார் அவர்கள், இந்தக் கொடூரமான சிறையிலிருந்து அவனின் பகுத்தறிவை விடுதலை செய்வ தற்குக் கடைசி மூச்சு அடங்கும் வரை பாடுபட்டார். அதன் விளைச்சலைத்தான் இன்றைக்குத் தமிழ்நாடு அனுபவித்துக் கொண்டு இருக்கிறது.

"இந்தியாவில் இரண்டாயிரம் வருடத்தில் மகத்தான ஒரு சமுதாயப் புரட்சி தமிழ்நாட்டில்தான் நடந்திருக்கிறது. திராவிடர் கழகத் தலைவர் பெரியார்தான் அந்தப் புரட் சியைச் செய்தார் என்பது அமெரிக்காவிலுள்ள மூத்த பேராசிரியர்களின் கருத்தாகும்"

- பேராசிரியர் ஜான்ரைலி ('ஆனந்தவிகடன்' 16.7.1972)

இத்தகு தலைவரின் கருத்துக்கள் உலகெங்கும் பரவச் செய்வதற்கு வல்லத்தில் நடைபெற்ற கருத்தரங்கும் பெரிதும் பயன்படும் என்பதில் அய்யமில்லை.

பன்னாட்டுச் சிந்தனையாளர்களை, இந்திய அள விலான சிந்தனையாளர்களை தந்தை பெரியாரோடு ஒப் பிட்டுக் கல்வியாளர்களும், எழுத்தாளர்களும் ஆய்வுக் கட்டுரைகளை  வல்லம் கருத்தரங்கில் வழங்கியுள்ளனர்; அது சிறப்பான நூலாக வெளிவரவிருக்கிறது என்பது அறிவு விருந்துக்கான ஏற்பாடாகும்.

பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தின் ஒரு துறையான பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் பெரியார் சிந்தனைப்பற்றி 'டிப்ளோமா' வகுப்புகளை நடத்தி வருகிறது. அஞ்சல் வழியாக நடத்தப்படும் இந்தக் கல்வித் திட்டத்தில் பங்கேற்பது பெரும் பயன் தரக் கூடியதாகும். வாழ்வை வளப் படுத்திக் கொள்ள வளமான சிந்தனைகளை வாரி வழங்கக் கூடிய தத்துவத்திற்குச் சொந்தமானவர் தந்தை பெரியார். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்வீர்களாக!"

Tuesday, 20 March 2018

முழுமையான பாலின சமத்துவமும், பொருளாதார சமத்துவமும் ...உலகின் மகிழ்ச்சியான நாடு ஃபின்லாந்து

மகிழ்ச்சியாக இருப்பவரை எந்த நோயும் அண்டாது என்று இந்திய கிராமங்களில் சொல்வார்கள். இதையே கொலம்பியா எழுத்தாளர் கேப்ரியல், சந்தோஷத்தால் குணப்படுத்த முடியாத நோயை, உலகின் எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாது என்கிறார். மகிழ்ச்சி அனைத்தையும் குணப்படுத்தவல்லது.

ஆனாலும் அனைவராலும் எப்போதும் சந்தோஷமாக இருக்க முடியாது. சந்தோஷத்தை தீர்மானிப்பதில் குடும்பம் முதல் உலக அரசியல் வரை பல காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அண்மையில் ஐ.நா வெளியிட்ட உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா 133 வது இடத்தில் இருக்கிறது. இன்னும் துல்லியமாக சொல்லவேண்டுமென்றால் சந்தோஷ விஷயத்தில் காங்கோவுக்கும் நைஜீரியாவுக்கும் மத்தியில் இருக்கிறது இந்தியா.

உலகின் மகிழ்ச்சியான நாடு ஃபின்லாந்து : ஐ.நா அறிக்கை
ஃபின்லாந்து இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. உலகெங்கும் குடிபெயர்தல் பிரச்னை தலைப்பு செய்தியாக இருக்கும் இக்காலக்கட்டத்தில், ஃபின்லாந்தில் குடியேறியவர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்கிறது இந்த ஐ.நா அறிக்கை.

இது எப்படி சாத்தியமானது?

இலவச கல்வி, தரமான சுகாதாரம்

மகிழ்ச்சி என்பது ஒரு அகநிலை அனுபவம். ஆனால், அதையெல்லாம் கடந்து எம்மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இலவச கல்வியும், தரமான சுகாதார வசதியும்தான் காரணம் என்கிறார் ஃபின்லாந்தை சேர்ந்த அன்ட்டி காப்பினன்.

அதே மனநிலையில் அவர், "என்தேசம் குறித்து நான் பெருமை கொள்கிறேன். ஐ.நா அறிக்கைகாக அல்ல. இந்த மகிழ்ச்சி குறியீடு அறிக்கையில் என் நாடு இடம் பெறாமல் போயிருந்தாலும், நான் இதே மனநிலையில்தான் இருப்பேன்."என்கிறார்.

எல்லாருக்கும் எல்லாமும்

மேலும் அவர், "எல்லாருக்கும் எல்லாவற்றுக்குமான வாய்ப்பு இங்கு இருக்கிறது. அது அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம். அதுமட்டுமல்ல, இரண்டாவது உலக போருக்குப் பின் இங்கு எந்த அரசியல் நெருக்கடியும் நிலவவில்லை. ஃபின்லாந்த் ஒரு நடுநிலையான நாடு. எங்களுக்கு யாருடனும் விரோதம் இல்லை." என்கிறார்.

"நாங்கள் இருபத்துநான்கு மணிநேரமும் வேலை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்க மாட்டோம். ஓய்வு நேரங்களை எங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் செலவிடுவோம். இசை, குடும்பம், விளையாட்டு என எங்களுக்கு விருப்பமானவற்றில் மூழ்குவோம். இவையெல்லாம்தான் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணமென்று கருதுகிறேன்." என்கிறார் அதே மகிழ்வுடன்.

முழுமையான பாலின சமத்துவமும், பொருளாதார சமத்துவமும் நிலவுகிறது. எல்லாருக்கும் எங்கள்நாடு வாய்ப்பு வழங்குகிறது.
சமத்துவம்

இதே கருத்தைதான் முன் வைக்கிறார் தொடர்பியல் துறை மாணவரான யெனா வுரெலாவும். இலவச கல்வியையும், தரமான மருத்துவ வசதியையும் சுட்டிக்காட்டும் யெனா, "ஃபின்லாந்து ஒரு பாதுகாப்பான நாடு. இங்கு யாருக்குள்ளும் எந்த வேற்றுமையும் இல்லை. முழுமையான பாலின சமத்துவமும், பொருளாதார சமத்துவமும் நிலவுகிறது. எல்லாருக்கும் எங்கள்நாடு வாய்ப்பு வழங்குகிறது. இவையெல்லாம் எங்களை மகிழ்சியாக வைத்துக் கொள்கிறது." என்கிறார்.

இந்த ஆய்வில் வெளிநாடுகளிலும் குடியேறியவர்களும் ஃபின்லாந்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக யெனா, " எங்கள் நாட்டில் குடியேறியவர்களிடமும் நாங்கள் எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை. ஒரு ஃபின்லாந்து நாட்டவருக்கு என்னென்ன வாய்ப்புகள் எல்லாம் கிடைக்குமோ... அது அனைத்தையும் வெளிநாடுகளிலிருந்து குடியேறியவருக்கும் என் நாடு வழங்குகிறது. அம்மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். ஒரு விஷயம் சம்பந்தப்பட்ட ஒருவரை சந்தோஷப்படுத்துகிறது என்றால், அது சரி என்றுதானே அர்த்தம். அந்த `சரி` எங்களுக்கும் (ஃபின்லாந்து மக்கள்) மகிழ்ச்சியையே தருகிறது.


கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் நார்வே முதல் இடத்தில் இருந்தது. ஃபின்லாந்து ஐந்தாவது இடத்தில் இருந்தது.

மகிழ்ச்சிக்கான முதலீடு

நார்வே, சுவீடன் என நார்டிக் நாடுகளில் தனது நானோ தொழிற்நுட்ப ஆய்வை மேற்கொண்டு வரும் தமிழகத்தைச் சேர்ந்த விஜய்சங்கர் , "நார்டிக் நாடுகள் அனைத்து தரப்பு மக்களையும் அங்கீகரிக்கின்றன. அனைவரையும் எப்போதும் கொண்டாட்டத்தில் வைத்திருக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கின்றன. அதனால்தான், நார்டிக் நாடுகள் இந்த மகிழ்ச்சி குறியீடு பட்டியலில் எப்போதும் முதல் பத்து இடத்தில் இருக்கின்றன." என்கிறார்.

மேலும், "மக்களை கொண்டாட்டத்தில் வைத்திருப்பதற்காக அவர்கள் செலவிடும் தொகையை செலவாக அந்நாட்டு அரசுகள் கருதுவதில்லை. அவர்களை பொறுத்தவரை அது `சமூக முதலீடு`. மனித மனம் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக இருந்தால்தான், அதனால் ஆரோக்கியமாக சிந்திக்க முடியும். அப்படி சிந்தித்தல் நல்ல விளைவுகளை கொண்டு வரும் என்று அந்நாட்டு அரசுகள் தொலைநோக்கு பார்வையுடன் சிந்திக்கின்றன. அதற்காக மெனக்கெடுகின்றன. அதனால் அவை இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது எந்த வியப்பும் இல்லை." என்று விவரிக்கிறார் விஜய் அசோகன்.

மனித மனம் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக இருந்தால்தான், அதனால் ஆரோக்கியமாக சிந்திக்க முடியும்.
குரோதமில்லை... வெறுப்பில்லை

நார்டிக் நாடுகளில் வரி அதிகம்தான். ஆனால், பெறும் வரி அனைத்தும் மக்கள் நல திட்டங்களுக்காக மட்டும்தான் செலவிடப்படுகிறது. அதனால், பெரும்பாலும் அம்மக்களுக்கு வரி குறித்த எந்த வருத்தங்களும் இல்லை என்கிறார் அவர்.

"வெளிநாடுகளிலிருந்து அங்கு குடிபெயர்பவர்களுக்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவம் அலாதியானது. தாய் மொழி கல்வியை அந்நாடுகள் ஊக்குவிக்கின்றன. உதாரணமாக, முப்பது குடும்பங்கள் சேர்ந்து எங்கள் பிள்ளைகள் தமிழ் மொழியில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்கு ஆவனசெய்ய வேண்டும் என்று அரசிடம் முறையிட்டால், அவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள். அனைத்தையும், அனைவரையும் உள்ளடக்கிய சமூகமாக இருக்க வேண்டும் என்பதில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். இப்படியான சமூகத்தில் வெறுப்பிற்கும், குரோதத்திற்கும் எங்கு இடம் இருக்கப் போகிறது. எங்கும் எப்போதும் மகிழ்ச்சிதான்" என்கிறார் விஜய் அசோகன்.
நன்றி : பி.பி.சி. தமிழ் 20.03.2018..படங்கள் சேர்க்கப்படவில்லை


Wednesday, 14 March 2018

வீரவணக்கம் ..தோழனே...இந்த நூற்றாண்டின் அறிஞனே !
வீரவணக்கம் ..தோழனே...
இந்த நூற்றாண்டின் அறிஞனே !
வீரவணக்கம் உனக்கு எங்கள் வீரவணக்கம் !

அசையாத உடல் இருக்கலாம் ஆனால்
அஞ்சாத உள்ளம் இருந்தால் அகிலமும்
உனைத் திரும்பிப்பார்க்கும் என
நிருபித்த இந்த நூற்றாண்டின் அறிஞனே!
வீரவணக்கம் உனக்கு எங்கள் வீரவணக்கம்!

ஒரு நாள் சாவது உறுதி எனினும்
இன்று சாவேனோ நாளை சாவேனோ
என அஞ்சி அஞ்சி சாகப்போவதில்லை
எவனுக்கும் அஞ்சாமல் சொல்லும்
கருத்துக்களால் அடுத்தடுத்த நூற்றாண்டில்
வாழும் மனிதர்கள் நினைவுகளிலும்
வாழ்வேன் என உரைத்து வாழ்ந்த தீரா...
வீரவணக்கம் உனக்கு எங்கள் வீரவணக்கம் !..

நேரில் உனைப் பார்த்ததில்லை
உனது நிழல் கூட எங்கள் மீது பட்டதில்லை...
கொண்ட கொள்கை உறுதிப்பாட்டால்
நீ கொண்ட விசாலப்பார்வையால்
உலகம் முழுக்க வாழும் நாத்திகர்களின்
வீரவணக்கம் பெற்றாய் தோழா ! உன் புகழ் வாழி !

கடவுளை மறுத்தாய் ! மறுபிறப்பா
எனக்கேட்டு மெதுவாய் சிரித்தாய்!
உலகத்தைப் படைத்தது கடவுளா ? எனக்கேட்டு
அறிவியலால்... உலகம் வளர்ந்தவிதத்தை
விவரித்தாய் !விளக்கினாய்!
இருக்கும் பூமி இன்னும் சில நூற்றாண்டில்
பழுதாகும்... அடுத்த கிரகத்தில் வாழ
மனிதர்களே ஆயுத்தப்படுங்கள் என்றாய்!....
குமித்துவைத்த மணல்கோபுரம்
ஒரு குத்து விட்டால் சரிதல்போல
கடவுள் கதைகள் அனைத்தும்
அறிவியலால் சரிந்திடவே வாதிட்டாய் !வென்றிட்டாய் !

உடம்பில் ஏதேனும் குறை என்றாலே
சுற்றி நிற்கும் உறவுக்கூட்டம்
அச் சடங்கை நீ செய்யவில்லை...
இச் சாமியை நீ கும்பிடவில்லை...
அதனால்தான் இந்தக் குறை எனக்
கைகாட்டி கள்ளத்தனமாய்
இக்கட்டு நேரத்தில் கடவுள் விற்பனை
செய்யும் முட்டாள்கள் மத்தியில்தான்
ஐம்பது ஆண்டுகளாய் சக்கர நாற்காலியில்தான்
வாழ்க்கை என்றாலும் தோழா நீ
கம்பீரமாகச்சொன்னாய் ....
சொர்க்கமாவது ....நரகமாவது ....
க்டவுளாவது ...கத்திரிக்காயாவது...
நோய்க்கும் கடவுளுக்கும் சம்பந்தமாவது....
என்று உரக்க உனது செயல்களால்
சொன்ன மாவீரா ! உன் புகழ் வாழி !

வலிமை என்பது உடலாளல்லடா கோழைகளே!
மனதால் என வாழ்ந்து நிருபித்தாய் !
இருபது வயதில் செத்துப்போவாய் என்றார்கள்
எழுபத்தி ஆறு ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறாய்!
நிறையவே உலகுக்கு அறிவியலால்
விட்டுச்சென்றிருக்கின்றாய்!தோழனே !
எங்கள் அறிவியல் அறிஞன் ஸ்டீபன் ஹாக்கின்ஸே !
வீரவணக்கம் ! உனக்கு எங்கள் வீரவணக்கம் !

                                                     வா.நேரு,
                                                     மாநிலத்தலைவர்,
                                                     பகுத்தறிவாளர் கழகம்,தமிழ்நாடு....
                                                      14.03.2018 ....

Tuesday, 13 March 2018

March 14.......... (Vaa.Nehru )


               March 14..........
             (Vaa.Nehru )

By rising questions,
You told the ways and means
for the new life !
Hail You Comrade !

You have weapons,
to remove the
adamantine of
the capitalist......
Hail You Comrade!

At time when you have
no money
to buy the corpse-box and bury
your own dead heir....
You told the ways and
saved the poor children
from being buried
Hail You comrade !

You said not money
alike mind is enough
for better half
to earn
unequalled frame
on earth .....

Dear Comrade !
You lived long
with Comrade Jennie...
Hail You Comrade ....

Working hands will all
raise up to the sky
and greet " Red Salute " to You
Comrade 'Karl Marx '
Hail your fame !....

 (From my Suriyakeetrukal Tamil Poem book- Translated  by B.Shyamala And by V.Balakumar)....Vaa.Nehru....March-14,2018
    

வாழ்த்துகள், பாராட்டுகள்.....

மதுரையில் 10.03.2018 அன்று விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் சிறப்புரையாற்றிய திராவிடர் கழக மகளிர் பாசறை மாநில செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி அவர்களின் உரை மிகச்சிறப்பாக இருந்தது.


தனது அனுபவத்திலிருந்தே கூட்டத்தில் மெதுவாக பேச்சினை ஆரம்பித்த தோழியர் கொ.செந்தமிழ்ச்செல்வி அவர்கள்  மிகச்சிறப்பாக தனது வாதங்களை முன்வைத்தார். தந்தை பெரியாரின், அன்னை மணியம்மையாரின், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சிறப்புகளை உரையில் தொட்டுக்காட்டினார். தான் ஒரு ஆசிரியராகப் பணியாற்றுவதையும் ஆசிரியர் பணியில் ஏற்பட்ட அனுபவங்களைக் குறிப்பிட்டு இன்னும் பெண்கள் செல்லவேண்டிய தூரம் எவ்வளவு இருக்கிறது என்பதனைக் குறிப்பிட்டார். இணையத்தில் பதிவிடும் ஒரு பெண்ணாக பேஸ்புக்கில், வாட்ஸ் அப்பில் பதிவிடும்போது, கருத்துக்களை கருத்துக்களால் சந்திக்க இயலாத கோழைகள்  எப்படியெல்லாம் கொச்சைப்படுத்துகிறார்கள் என்பதனைக் குறிப்பிட்டார். அதற்காக அஞ்சிடப்போவதில்லை, பெண்களுக்கு கிடைத்திட்ட மிகப்பெரிய வாய்ப்பு இந்த வாட்ஸ் அப், பேஸ்புக் -அதனை முழுமையாக பதிவிடுவோம் என்று சூளுரைத்தார். எப்படியெல்லாம் தந்தை பெரியார் பற்றி, திராவிடர் இயக்கம் பற்றி தெரியாமல் பதிவிடுவதையும் சிலர் தெரிந்துகொண்டே நரித்தனம் செய்வதையும் எடுத்துரைத்தார்.தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை அகற்றுவோம் என்று சொன்னதால் ஏற்பட்ட எழுச்சியை,ஒற்றுமையை குறிப்பிட்டு பார்ப்பனர்கள் எந்த நாளும் திருந்தப்போவதில்லை என்பதைக் குறிப்பிட்டார். ஏறத்தாழ 90 நிமிடங்கள் அரங்கத்தை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்து அவர் உரையாற்றிய விதம் அருமை. தோழியருக்கு பாராட்டுகள். திருவாரூரிலிருந்து மதுரை விடுதலைவாசகர் வட்டக்கூட்டத்திற்காக வருகை தந்து பெரியாரியம், எதிரிகளின் தகிடுதத்தங்கள்,பெண்களின் கடமை,உழைக்கும் மகளிர் தினம்,  அன்னை மணியம்மையார் அவர்களின் சிறப்பு, அத்தனை கேலிகளையும் வசவுகளையும் அவர் தாங்கிக் கொண்டு தந்தை பெரியாருக்கு உறுதுணையாக இருந்த விதம், அய்யா அவர்களின் மறைவுக்குப்பிறகு உலகிலேயே ஒரு நாத்திக இயக்கத்தின் தலைவராக இருந்து பணியாற்றியது, அய்யா அவர்களின் அறக்கட்டளையைக் காப்பாற்றியது மட்டுமல்ல தன்னுடைய சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு அளித்தது என அன்னை மணியம்மையாரின் சிறப்புக்களை பட்டியலிட்டு   சிறப்புரையாற்றியது அருமையாக இருந்தது. வாழ்த்துகள், பாராட்டுகள்.....

முனைவர்.வா.நேரு,
தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்.

Thursday, 22 February 2018

அண்மையில் படித்த புத்தகம் : பதிவு செய்யப்படாத மனிதர்கள்....வி.எஸ்.முஹம்மது அமீன்

அண்மையில் படித்த புத்தகம் : பதிவு செய்யப்படாத மனிதர்கள்
நூல் ஆசிரியர்              : வி.எஸ்.முஹம்மது அமீன்
வெளியீடு                  : மனக்குகை,சென்னை-33 அலைபேசி : 9841436889
முதல்பதிப்பு                : மே,2007. மொத்த பக்கங்கள் 95 ,விலை ரூ 30/-
மதுரை மைய நூலகம் எண்  : 177829

                              'பதிவு செய்யப்படாத மனிதர்கள்' என்னும் இந்த நூல் ஒரு சிறுகதைத்தொகுப்பு. 9 சிறுகதைகள் இந்த நூலில் உள்ளன. 'ஒரு நெசவாளியும் பட்டறையும் ' என்னும் தலைப்பில் தாழை மதியவன், 'துணிச்சல் மிக்க பதிவு ' எனும் தலைப்பில் எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான், 'இன்ஷா அல்லாஹ் ' என்னும் பெயரில் கலாப்ரியா ஆகியோர் நூலின் உள்ளே புகுவதற்குமுன் இந்த நூலைப் பற்றியும், நூலின் ஆசிரியர் பற்றியும் ஒரு நல்ல அறிமுகத்தையும் பாராட்டையும் கொடுத்திருக்கின்றார்கள். 


                            9 சிறுகதைகளும் ஒவ்வொரு உட்பொருளில் உள்ளன. ஆனால் அனைத்திலும் வாழ்தலுக்கான உழைக்கும் மக்களின் துயரமும் சுற்றியுள்ள சமூகத்தில் ஏற்படும் துன்பங்களும் சுட்டப்பட்டுள்ளன. 'நெய்தல் ' என்னும் முதல்கதை சிக்கந்தர் என்னும் நெசவாளியை , அவரின் நெய்தல் நேர்த்தியை அப்படியே படம் பிடித்துக்காட்டுகிறது. உழைப்பதில் கிடைக்கும் சுகம் மட்டுமே அவருக்கு சுகமாகத்தெரிவதையும் மகன் நல்ல வேலைக்கு வெளி நாட்டில் போனதால் மனைவி உழைக்க வேண்டாம் ஓய்வு எடுக்கலாம் என்று சொல்வதைக் கேட்காமல் உழைப்பதையும் மகன் வந்து தறியை விற்றபின்பு என்னதான் சுகமான சாப்பாடாக இருந்தாலும் உழைக்காமல் சாப்பிடப்பிடிக்காமல் அவர் மனம் படும் பாட்டையும் மிக நேர்த்தியாகவே வி.எஸ்.முஹம்மது அமீன் சொல்லிச்செல்கின்றார். பக்கத்து தெருவில் இருக்கும் கரீம் வீட்டிற்குச்சென்று வீட்டிற்குத் தெரியாமல் அவர் நெய்ய ஆரம்பிப்பதையும் 'கொத்து ரூபா முக்கியமில்லப்பா...உழைச்சுத் திண்ண உடம்புக்கு ...உறங்கித் திண்ண முடியல... தினசரி காலையில் உன் வீட்டிற்கு வந்து நெய்றேன் ' என்று சொல்வதை மிக அருமையாக கதையைச்சொல்கின்றார் ஆசிரியர். எனது உறவினர் ஒருவரின் மகன் சாப்டூவேர் கம்பெனியில் வேலை பார்க்கிறான். அவர் 70 வயதுகளைக் கடந்து உழைத்து உழைத்து ஓடானாவர். உட்கார்ந்து சாப்பிடுங்கள் என்று பிள்ளை வருந்தி அழைத்தாலும் அங்கு அவர் சென்றாலும் அவருக்கு நிம்மதி கிராமத்திற்கு வந்து காட்டு வேலையைப் பார்ப்பதில்தான் இருக்கிறது என்பது ஞாபகம் வந்தது. உண்மைதான் இன்றைய இளைய தலைமுறை ,போன தலைமுறையின் உழைப்பையும் ,அவர்களுக்கு இயல்பாகவே இருக்கும் உழைப்பிற்கான ஈர்ப்பையும் புரிந்து கொள்வதில்லை, இந்தக் கதை அதற்கு உதவும்.

'வெளிச்சம் இல்லாத உலகு ' - தம்பிக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது, அண்ணனுக்கு நடக்காமலேயே , கதையின் இறுதியில்தான் அண்ணன் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடப்படுகின்றது. அவர்களுக்கு உலகமும் உறவுகளுமே வெளிச்சம் இல்லாமல்தான் இருக்கின்றார்கள் என்பதனை சுட்டுகின்றார்.நட்புக்கு முன்னால் மதங்கள் எல்லாம் காணாமல் போகும் மனித நேயம் பற்றிப் பேசும் கதை 'திசம்பர் 6' . என்னுடன் பணியாற்றிய நண்பர் பசீர் அகமதுவும்,சின்னாளபட்டி காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் ஆறுமுகமும் அப்படி ஒரு நண்பர்கள். உயிருக்குயிரான நண்பர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டான நண்பர்கள். அவர்களை எல்லாம் இந்த மதம் பிடித்த மனிதர்கள் மத அடிப்படையில் பிரிக்க இயலாது. அப்படி இரு வேறு நம்பிக்கை உள்ள இரண்டு நண்பர்கள், அவர்களது நம்பிக்கை, உடைந்த ஒரு சிலை பற்றிய கதை திசம்பர் 6. நடப்பு கொடுமைகளையும் சுட்டிக்காட்டி எழுதியிருக்கின்றார். 

"பாத்திமா +2" பணம் இல்லாத காரணத்தால் ஆசிரியர் பயிற்சி சேர இயலாத ஒரு மாணவியின் கதையைச்சொல்கின்றது.வாப்பா,படிக்காத அண்ணன்மார்கள், அதில் சாதிக் என்பரால் வாப்பா அடையும் துன்பம், 'நீயாவது ஒழுங்கா படிப்பிளா ? ' என்னும் கதையின் முதல் வாக்கியத்தில் துவங்கும் இயலாமை கலந்த எதிர்பார்ப்பு கதை முழுக்க பரவி, முடியாமையில் முடிகின்றது. ஆனால் இஸ்லாம் என்பதால் சீட்டு கிடைக்கவில்லை என்பதாக கதை முடிவதில் மாறுபட்ட கருத்து உண்டு. பணம் உள்ளவர் கொடுத்தால் வாங்கிக்கொள்ளும் பயிற்சிக்கல்லூரி முதலாளிக்கு பணம்தான் முக்கியமாகத் தெரியும் என்பது எதார்த்தம்.

'பொய்த்துப்போகும் சாபங்கள்' ,'29 A' என்னும் தலைப்பில் அடுத்தடுத்த கதைகள்.ஒரு மின்சார ஊழியருக்கு நேர்ந்த இறப்பையும் அதற்கு பின்னால் அவர் குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகளையும் சேகர் என்னும் பாத்திரப்படைப்பால் நேர்த்தியாக 'பொய்த்துப்போகும் சாபங்கள் கதையில் சொல்கின்றார்.  அவரின் அனுபவத்தையும் பார்த்த அனுபவத்தையும் சொல்லும் கதை'29A'. 'பதிவு செய்யப்படாத மனிதர்கள் ' என்னும் தலைப்பில் ஆன கதை அடுத்த கதை." சுபாஷ் சந்திர போஸூடன் நெருக்கமாக இருந்த போராட்ட தியாகியின் சுதந்திரப்போராட்ட வரலாறு பதிவு செய்யப்படாமல் போவதைப்பற்றிய ஆசிரியரின் மனக்கவலையை வெளிப்படுத்தும் கதைதான் பதிவு செய்யப்படாத மனிதர்கள். ....ஒரு நல்ல கதை வாசித்த அனுபவத்தை இந்தக் கதை தருகிறது " என்னும் தோப்பில் முகம்மது மீரான் அவர்களின் கருத்து உண்மைதான். இஸ்லாம் மதத்திற்குள் நிலவும் மூட நம்பிக்கை பற்றி 'செய்யதலி பாத்திமா ' என்னும் கதை பேசுகிறது. இரயில் பயணத்தில் உடன் பயணிப்பவர்களைப் பற்றிய கதையாக 'யாவரும் கேளிர் ' என்னும் கதை அமைந்திருக்கிறது. தனது மன எதிர்ப்பை கதையாகக் கொடுத்திருக்கிறார் எனலாம்.

                        மொத்தத்தில் 9 கதைகள்தான் என்றாலும் கதைகளின் நடை மிக ஈர்ப்பாக இருக்கின்றது.தோப்பில் முகம்மது மீரான் கதைகளைப் போல வட்டார மொழியில் அமைந்திருக்கும் கதைகள், ஆனால் வாசிப்பதும் ,சொற்களைப் புரிந்துகொள்வதும் அவ்வளவு கடினமாக இல்லை. கதைகளை வாசிக்கும்போது ,தனது மார்க்கத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர் எனத்தெரிகிறது, ஆனால் கதைகளின் ஊடாக மனித நேயம்தான் வெளிப்படுகின்றது,பக்தி வேண்டும் என்னும் பறைசாற்றல் இல்லை. 

                           " அமீனுக்கு கரு,களங்கள் மட்டுமல்ல,கனிவான மொழி நடையும் கைகூடி வந்திருக்கிறது.;கை கொடுக்கிறது.இனிமையும் எளிமையும் கைகோர்த்து கதையோட்டத்தையே நீரோட்டமாக்குகிறது.அந்நீரோட்டத்தின் அலைகளாய் நுரைகளாய் உரையாடல் உயிர்த்தெழும் அழகை கதைகள் தோறும் காணலாம் " என்று சொல்கின்றார் தாழை மதியவன் தனது முன்னுரையில். 
படித்துப்பார்க்கலாம். நம்மைச்சுற்றி வாழும் நமது இஸ்லாமிய சகோதரர்களின் மன ஓட்டத்தைப் புரிந்துகொள்ள இதனைப் போன்ற சிறுகதைகள் உதவும். தெரிந்து கொள்ளலும்,புரிந்து கொண்டு உதவுவதும்தானே மனித நேயத்தின் அடிப்படை,அதற்கு இக்கதைகள் உறுதியாக உதவும். படித்துப்பாருங்கள்.

குறிப்பு : இணையத்தில் இந்தப்புத்தகத்தினை தேடியபொழுது இரண்டாம் பதிப்பும் வெளிவந்துள்ளது தெரிந்தது. இரண்டாம் பதிப்பின் அட்டையை இணையத்திலிருந்து எடுத்துப்போட்டிருக்கின்றேன்.

23.02.2018 காலை 7 மணி

 

Sunday, 18 February 2018

‘தினமணி’ ஏட்டுக்கே (16.2.2018) பொறுக்காமல்......

‘தினமணி’ ஏட்டுக்கே (16.2.2018) பொறுக்காமல் கீழ்க்கண்ட தலையங்கத்தில் தீட்டியுள்ளது.
தலையங்கம் வருமாறு:
பாஜகவா இப்படி?
கடந்த சனிக்கிழமை ஒடிஸா மாநிலத் தலைநகர் புவனேசுவரத்தில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராகத் திறம்பட செயல்படுகிறார் என்கிற ஒரே காரணத்துக்காக, இந்திய அரசுப் பணி அதிகாரியான வி. கார்த்திகேயன் பாண்டியனின் வீட்டை வன்முறைக் கும்பல் ஒன்று தாக்கி இருக்கிறது. மதிற்சுவரைத் தாண்டிச் சென்று பூந்தொட்டிகளை உடைத்தெறிந்திருக்கிறார்கள். சாணத்தைக் கரைத்து வீட்டின் சுவரில் ஊற்றி இருக்கிறார்கள்.
இது ஏதோ அரசின் முடிவால் பாதிக்கப்பட்ட மக்களால் நடத்தப்பட்ட தாக்குதலாக இருந்தால், ஆத்திரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது என்று கூறிவிடலாம். ஆனால் திட்டமிட்டு ஓர் அரசியல் கட்சியால், அதுவும் ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம் என்று களமிறங்கி இருக்கும், மத்திய ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியால் இந்த வன்முறை நடத்தப்பட்டிருக்கிறது என்பதுதான் அதிர்ச்சி அளிக்கிறது.
முதலிலேயே ஊடகங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டதா என்றால் இல்லை. பாரதிய ஜனதா கட்சியின் கொடியுடன், புவனேசுவர் நகர பாஜக தொண்டர்கள் முதல்வரின் தனிச்செயலாளரான கார்த்திகேயன் பாண்டியனின் வீட்டின் முன் திரண்டு, தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். அனைத்துமே ஊடகங்களால் பதிவு செய்யப்பட்டு செய்தியாக்கப்பட்டிருக்கிறது.
யார் இந்த கார்த்திகேயன் பாண்டியன்? தமிழகத்தில் மேலூரைச் சேர்ந்த எளிய குடும்பத்தில் பிறந்து, தனது விடா முயற்சியாலும் உழைப்பாலும் அய்.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று இப்போது ஒடிஸா மாநிலத்தில் பணிபுரியும் இந்திய அரசுப் பணி அதிகாரி அவர். இவரது திறமைக்கும் நேர்மைக்கும், ஒடிஸாவில் பல்வேறு சம்பவங்களும், செயல்பாடுகளும் எடுத்துக் காட்டப்படுகின்றன.
விஜயந்த் பாண்டே என்பவருக்கு, ஒடிஸா மாநிலத்தைச் சேராத தமிழர் ஒருவர் மீது முதல்வர் இந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருப்பதில் பொறாமை ஏற்பட்டதில் வியப்பில்லை. விஜயந்த் பாண்டே இப்போது பாஜகவில் சேர்ந்து விட்டிருக்கிறார். இந்த நிலையில்தான் பாண்டியனின் வீட்டில் வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தி இருக்கிறது. தேசியக் கட்சியான பாஜக இப்படி யொரு செயலில் ஈடுபட்டிருப்பதுதான் வியப்பாக இருக்கிறது.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரும், அடுத்த ஆண்டு ஒடிஸாவில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராகக் களமிறக்கப்படுவார் என்று கூறப்படுபவருமான தர்மேந்திர பிரதான் இந்த சம்பவம் குறித்து வெளியிட்டிருக்கும் கருத்து அதைவிட ஆச்சரியமாக இருக்கிறது. ‘ஒடிஸா மக்களின் வரிப்பணத்திலிருந்து மாத ஊதியம் பெறும் அரசு ஊழியரான பாண்டியன், ஒடிஸா மக்கள் போராடத் தயங்கமாட்டார்கள் என்று கருதிவிட வேண்டாம்’ என்று அவர் கூறி இருப்பது இந்திய இறையாண்மைக்கே சவால் விடுவதாக அல்லவா அமைந்திருக்கிறது?
இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும், வேற்று மாநிலத்தவர்கள் இந்திய அரசுப் பணி அதிகாரிகளாகவும், காவல் துறை உயர் அதிகாரிகளாகவும் பணியாற்றுகிறார்கள். தமிழகத்தில் ஒரு காலகட்டத்தில் தலைமைச் செயலாளராக எல்.கே. திரிபாதியும், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையராக ஜே.கே. திரிபாதியும், உளவுத் துறைத் தலைவராக அமரேஷ் பூஜாரியும் இருந்திருக்கிறார்கள். அந்த மூன்று பேருமே ஒடிஸாக்காரர்கள். தமிழரல்லாதவர்கள் என்பதால் அவர்கள் தவிர்க்கப்படவோ ஒதுக்கப்படவோ இல்லையே...
தற்போது ஒடிஸாவில் தமிழகத்தைச் சேர்ந்த 11 இந்திய அரசுப் பணி அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள். அவர்கள் அனைவருமே தங்களது திறமையால் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார்கள். மேலூர் வெள்ளையாம் பட்டியைச் சேர்ந்த கார்த்திகேயன் பாண்டியன் திருமணம் செய்து கொண்டிருப்பது ஒடிஸாவைச் சேர்ந்த சுஜாதா என்பவரை. அவரும்கூட ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரிதான்.
ஒடிஸாவில் கடந்த 19 ஆண்டுகளாகத் தொடர்ந்து பிஜு ஜனதா தளம் ஆட்சியில் இருக்கிறது. இன்று இந்தியாவிலேயே அதிக காலம் முதல்வராகத் தொடர்பவர் நவீன் பட்நாயக்தான். அதுமட்டுமல்ல, தேர்தலுக்குத் தேர்தல் பிஜு ஜனதா தளத்தின் சட்டப்பேரவை பலம் அதிகரித்து வந்திருக்கிறதே தவிர, குறையவில்லை. நவீன் பட்நாயக்கின் வெற்றிக்குக் காரணம், அவர் நம்பிக்கை வைத்திருக்கும் தமிழரான அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் சிறப்பான நிர்வாகம்தான் என்பது அனை வருக்குமே தெரியும்.
வர இருக்கும் பிப்ரவரி 24ஆம் தேதி பிஜெபூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் களமிறங்க இருக்கும் பாரதிய ஜனதா கட்சி, வெற்றி பெறாவிட்டாலும் காங்கிரஸைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாவது இடத்திலாவது வந்து விட வேண்டும் என்று துடிக்கிறது. அதற்காக, திறமையான ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீட்டின் மீதா தாக்குதல் நடத்துவது? பாண்டியனை முதல்வர் நவீன் பட்நாயக்கிடமிருந்து அகற்றுவதால் பிஜு ஜனதா தளம் பலவீனமடைந்துவிடும் என்றா பகல் கனவு காண்பது?
மாநில உணர்வுகளின் அடிப்படையில் தோன்றிய திமுக, தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்ட்டிரிய சமிதி, பிஜு ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், அகாலி தளம், சிவசேனை உள்ளிட்ட கட்சிகள்கூட, இந்திய அரசுப் பணி அதிகாரிகள் மாநிலங்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறார்கள் என்று பேசியதில்லை. தேசியக் கட்சியான பாஜக, மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக, இப்படி மாநில உணர்வுகளைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட முற்பட்டிருக்கிறதே, அதுதான் வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது!
......நன்றி : விடுதலை 18.02.2018


Monday, 29 January 2018

எதிர்க்கவிதையாளர் நிகனோர் பர்ரா!........சமயவேல்

எதிர்க்கவிதையின் முன்னோடியான நிகனோர் பர்ரா, சிலியின் சான்டியாகோ நகரில் ஜனவரி 23-ல் தனது 103-வது வயதில் காலமானார். “சிலி தனது இலக்கிய வரலாற்றில் ஒரு மாபெரும் ஆசிரியரை இழந்துவிட்டது. மேற்கத்தியக் கலாச்சாரத்தில் தனித்ததொரு ஒற்றைக் குரல் அவருடையது” என்று அந்நாட்டு அதிபர் மிச்செல் பாச்சிலே புகழஞ்சலி செலுத்தியிருக்கிறார். தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடவும், நாடு முழுவதும் இரண்டு நாள் துக்கம் அனுஷ்டிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

நிகனோர் பர்ரா, லத்தீன் அமெரிக்காவில் மிகுந்த செல்வாக்குள்ள கவிஞர். நீண்டகாலமாகக் கவிஞர் பாப்லோ நெருதா தக்கவைத்திருந்த ஸ்தானத்தின் சரியான வாரிசாக அமைந்தார். எதிர்க்கவிதையின் பிரதிநிதியாக, சிலியில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இலக்கிய வெளிப்பாட்டை புரட்சிகரமாக மாற்றியவர். ஒரே சமயத்தில் நகைச்சுவையாகவும் உணர்ச்சித் ததும்பலாகவும் எல்லாவற்றுக்குமான பதிலியாகவும் எளிதில் அணுக முடிவதாகவும் இருந்த இவரது எதிர்க்கவிதை, ஸ்பெயின், லத்தீன் அமெரிக்கக் கவிஞர்களின் அலங்கார ‘ரொமாண்டிக்’ மரபுக்கு எதிரானதாக இருந்தது.

சிலி நாட்டின் சில்லான் என்னும் சிறுநகரில் 1914-ல், இசையால் ஆசிர்வதிக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்தார். அவரது சகோதரி வயலெட்டா பர்ரா, உலக அளவில் புகழ்பெற்ற பாடகியாகவும் பாடலாசிரியராகவும் இருந்தார். பள்ளி ஆசிரியரான அவரது அப்பா இரவில் கிட்டார் வாசிப்பதில் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால், பாடுவதும் ஆடுவதும் போக அவர் குடிக்கவும் செய்தார். அப்பாவின் இந்த நடவடிக்கைகளைக் கண்டித்து அவரது கிட்டாரின் நரம்புகளைக் கழற்றிவிட்டார் இளம்வயது நிகனோர் பர்ரா. தனது வாழ்க்கை முழுவதும் அவர் செய்யவிருந்த கலகங்களின் முன்னோட்டம் அது.

சான்டியாகோவில் உள்ள ஒரு சிறந்த உயர்நிலைப் பள்ளியின் கல்வி உதவித்தொகையை பர்ரா வென்றார். அவரது முதன்மையான ஆர்வம் இலக்கியமாக இருந்தபோதும் கணிதத்தின்பால் அவர் ஈர்க்கப்பட்டார். சிலி பல்கலைக்கழகத்தில் கணிதத்திலும் இயற்பியலிலும் பட்டங்கள் பெற்றார். பின்னர் ஆக்ஸ்ஃபோர்டு சென்று எந்திரவியலும் பிரபஞ்சவியலும் பயின்றார். ஒரு இயற்பியல் பேராசிரியராக சிலி திரும்பிய அவர் ஆர்க்கிமிடீஸ், அரிஸ்டாட்டிலிருந்து நியூட்டன் வரையிலும் பயின்றார். நியூட்டனை நிராகரித்த அறிவியல் ஞானம், ஒரு கவியாக பர்ரா வளர்வதைப் பாதித்தது. எந்த ஒரு விஷயத்தின் உண்மையும் அது எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது என அவர் நம்பத் தொடங்கினார். கலாச்சாரம், அரசியல் மற்றும் மதம் ஆகியவற்றின் உண்மையான பிரச்சினைகளைக் கவிதை கையாள வேண்டும் என நம்பினார்.

தனது சமகால அக்கறைகளைக் கையாள ஒரு புதிய மொழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். வால்ட் விட்மனின் பேச்சு மொழியையும், காஃப்காவின் அவல நகைச்சுவையையும் இணைக்கும் முயற்சியில் சொற்களை இரு நிலைகளில் பயன்படுத்தினார். ஒன்று மற்றதை விமர்சிக்கையில் ஒரு நகைமுரண் விளைவு உருவாகியது. இந்த வகையில் கவிதைகளை, கணிதத் தேற்றங்களாக எழுத ஆரம்பித்தார் பர்ரா. குறைந்த சொற்கள், நிறைந்த உள்ளடக்கம். மொழிச் சிக்கனம். படிமங்கள் இல்லை. உருவகங்கள் இல்லை. நேரடிக் கவிதைகள் இவ்வாறே உருவாகின. பிழைப்புக்கு இயற்பியல், உயிர்த்திருப்பதற்குக் கவிதை என்றார்.

லத்தீன் அமெரிக்காவில் முதல் நோபல் பரிசைப் பெற்ற, கவிஞர் கேப்ரீயலா மிஸ்ட்ரால் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட பிறகு, மேடையில் தாவிக் குதித்த ஏறிய பர்ரா ஒரு கவிதை வாசித்தார். அதைக் கேட்ட மிஸ்ட்ரால், “உலகளாவிய புகழை அடையப்போகிற ஒரு கவி நம்முன் நிற்கிறார்” என்றார். அது உண்மையும் ஆகியது. பிறகு, பாப்லோ நெருடாவைச் சந்தித்தார். பர்ராவின் ‘கவிதைகளும் எதிர்க்கவிதைகளும்’ தொகுப்பை வெளியிட ஒரு பதிப்பகத்தை ஏற்பாடு செய்துகொடுத்தார் நெருதா. இத்தொகுப்பு 1954-ல் வெளியாகிப் பரவலாக வாசிக்கப்பட்டது. இரு விருதுகளையும் வென்றது. கவிதை என்னும் வடிவத்தைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த தீவிரமான புனிதக் கோட்டை, பர்ராவால் தகர்த்தெறியப்பட்டது. அடுத்ததாக வெளியான ‘சலான் செய்யுள்கள்’ என்னும் தொகுப்பு, லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் அசலான, புதிதான குரலை உறுதிசெய்தது. பிறகு 20-க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள் வெளியாகின.

சமூக அரசியல் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தொடர்ந்து பேசிவந்தார். தனது சுதந்திரத்தை அவர் பெரிதும் பேணிய போதிலும் அவரது கவிதைகளில் அரசியல் அதிகரித்துக்கொண்டே இருந்தது. “நான் வலதையோ இடதையோ ஆதரிக்கவில்லை. வார்ப்பில் கட்டிதட்டிப்போன எல்லாவற்றையும் உடைக்கிறேன்” என்றார். யதார்த்தத்தை சார்பியல்ரீதியாகப் பார்க்கும் அவரது பார்வை, எல்லா வகையான அரசியல் கோஷங்களையும், அவை எத்திசையில் இருந்து வந்தாலும், ஐயப்பட வைத்தது. சிலியின் அயந்தே நாட்களில் அவர் விலக்கப்பட்ட கவியாக இருந்தார். ஆனால் ‘கலைப் பொருட்கள்’ என்னும் ஒரு சிறிய கேலிச்சித்திரம் போன்ற கிறுக்கல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டு தனது சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொண்டார். இதுவரை கவிதையே வாசிக்காதவர்கள்கூடப் புரிந்துகொள்ளும்படி விளம்பரங்களைப் போல அவை வடிவமைக்கப்பட்டிருந்தன. பின்னாட்களில் சூழலியல் கவிதைகளையும் எழுதி ‘எக்கோ போயம்ஸ்’ என்னும் தொகுப்பை வெளியிட்டார். ‘இன்னொரு முறை என்னால் இந்தப் பூமியைப் படைக்க முடியாது’ என்று கடவுள் கூறுவதாக எழுதினார்.

சிலியின் தேசிய விருதை 1969-லும் 1981-லும் பெற்றார். ஸ்பானிஷ் மொழியின் மிக உயரிய செர்வாண்டிஸ் விருதை 2011-ல் பெற்றார். தான் எழுதத் தொடங்கியதிலிருந்து ஒரு கலகக்காரக் கவியாகவே வாழ்ந்து மறைந்துள்ளார் நிகனோர் பர்ரா.

- சமயவேல், கவிஞர், ‘அரைக் கணத்தின் புத்தகம்’,

‘இனி நான் டைகர் இல்லை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்

தொடர்புக்கு: samayavelk@gmail.com

நான் கூறிய எல்லாவற்றையும் திரும்ப எடுத்துக்கொள்கிறேன்

நான் செல்வதற்கு முன்பு

ஒரு கடைசி ஆசையைப் பெறுவதாக நான் நம்புகிறேன்:

தாராளமான வாசகர்களே

இந்தப் புத்தகத்தை எரித்துவிடுங்கள்

நான் என்ன கூற விரும்பினேனோ அதுவே இல்லை

இது ரத்தத்தில் எழுதப்பட்டபோதிலும்

நான் என்ன கூற விரும்பினேனோ அது இல்லை.

என்னுடையதைப் போலத் துயரமானது எதுவும்

இருந்திருக்க முடியாது

எனது சொந்த நிழலால் நான் தோற்கடிக்கப்பட்டேன்:

எனது சொற்கள் என் மேல் பழி தீர்த்தன

வாசகரே, நல் வாசகரே, என்னை மன்னித்துவிடுங்கள்

நான் உங்களை விட்டுப் போக முடியாவிட்டால்

ஒரு கதகதப்பான தழுவலோடு,

நான் உங்களை விட்டுப் போகிறேன்

ஒரு கட்டாயப்படுத்தப்பட்ட மற்றும் வருத்தமான புன்னகையோடு.

அவ்வளவுதான் நானாக இருக்கலாம்

ஆனால், எனது கடைசி வார்த்தையைக் கேளுங்கள்:

உலகத்தில் இருக்கும் மாபெரும் கசப்புடன்

நான் கூறிய எல்லாவற்றையும் திரும்ப எடுத்துக்கொள்கிறேன்.

ஸ்பானிஷ் மொழியிலிருந்து ஆங்கிலத்தில்: மில்லர் வில்லியம்ஸ்; தமிழில்: சமயவேல்
-------------------------------------------------------------------------------------------------------------------------

நாம் பாப்லோ நெருதாவை தமிழ் வழியாக அறிந்திருக்கின்றோம். அப்படி நிகனோர் பர்ரோவை தமிழ் வழியாக அறியும் வாய்ப்பை தி இந்து -தமிழ் வழியாக கவிஞர் சமயவேல் ஆரம்பித்து வைத்திருக்கின்றார் என நினைக்கின்றேன். (ஏற்கனவே இருந்திருந்தால் குறிப்பிட்டிருப்பார்). நல்ல கவிஞர்கள் எல்லோருமே உலகம் முழுவதும் அறியப்படவேண்டும். தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட்டும், நாடு முழுவதும் இரண்டு நாள் துக்கம் கடைப்பிடித்தும் ஒரு கவிஞனுக்காக மரியாதையை செலுத்திய சிலி நாடு,சிறிய நாடு என்றாலும் பண்பால் பெரிய நாடாகத்தோன்றுகிறது.எதிர்க்கவிதையாளர் நிகனார் பர்ரோ பற்றிய நினைவஞ்சலி கட்டுரை மிகவும் உருப்படியான கட்டுரை.இதனைப் படித்து இணையத்திலும் தேட ஆரம்பித்து இருப்பார்கள் நமது இளைஞர்கள்.வெளி நாட்டு கவிஞர்களைப் பற்றிய கட்டுரைகளில் கவிஞர்களின் பெயரை ஓரிடத்திலாவது ஆங்கிலத்திலும்-அடைப்புக்குறிகளுக்குள் குறிப்பிடலாம். அவர்களின் கவிதைகளைப் படிப்பதற்கான இணைய சுட்டிகளையும் குறிப்பிடலாம். முனைவர்.வா.நேரு,மதுரை
------------------------------------------------------------------------------------------------------------
நன்றி : தி இந்து தமிழ் 28.01.2018

Wednesday, 24 January 2018

தந்தை பெரியாரும்-உளவியலும்.....ஜெ. வெண்ணிலா

உளவியல் என்பது ஒரு மிகப்பெரிய பகுதி. உளவியல் குறித்து பல கோட்பாடுகள் இருக்கின்றன. அவற்றுள் அடிப்படையான ஒன்று மாஸ்லோ கோட்பாடு. தேவைதான் அனைத்தையும் தீர்மானிக்கிறது என்றார் அவர். அந்த அடிப்படையில்  மனிதர்களின் தேவைகளை  5 அடுக்குகளாகக் காட்டினார். அது பிரமிட் வடிவம் கொண்டது. ஒவ்வொருவருக்கும் அடிப்படைத் தேவை உண்ண உணவு, இருப்பிடம் போன்றவை. அப்புறம் பாதுகாப்பான இடம், பாதுகாப்பான வேலை போன்றவை அடுத்த அடுக்கு. அடுத்து அன்பு செலுத்தப்படுதல், அப்புறம் சமூக ரீதியலான மரியாதை. அப்புறம் முழுத்திறனையும் நான் உயயோகப்படுத்தி விட்டேன், நான் நன்றாக இருக்கின்றேன் எனத் தன்னை உணர்தல் போன்றவை.தேவைகள் மனிதர்களுக்கு மனிதர் மாறுபடும் என்றாலும்,  எந்தத் தேவையாக இருந்தாலும் இந்த 5 அடுக்குகளுக்குள் கொண்டு வந்து விடலாம். இந்த 5 அடுக்குகளில் எல்லாக் காரணிகளும் நிறைவேறி இருந்தால் ஒரு மனிதன் மன நிறைவாக இருக்கலாம்.
இந்த 5 அடுக்குகளில் இருப்பதில் எது குறைந்தாலும் அது நமக்கு பிரச்சினையைத் தரும்  என்பது உளவியல். நமது தேவை நிறைவேறவில்லையென்றால்  நமக்கு மன உளைச்சல் வரும். என்றைக்காவது காலையில் எழுந்தவுடன் அலுப்பு, சலிப்பு போன்றவை இருந்தால் நமக்கு உளவியல் பிரச்சினை இருக்கிறது என அர்த்தம்..திருப்தி இல்லாத நிலைமையில் நாம் அடுத்தவர்களை நோண்டுவோம்.தேவையைப் பொறுத்து இந்த நோண் டுதல் தொடரும் -பிரச்சினைகள் தொடரும்.
மனிதர்கள் நம்பிக்கைகளின் அடிப்படையில் வாழ்கின்றார்கள். நான் நன்றாக இருக்கிறேன் என்று நினைப்பது ஒரு வகையான நம்பிக்கை என்றால், நான் எதற்குமே லாயக்கில்லை என்று நினைப்பது, யாரும் என்னை விரும்புவதில்லை என்று நினைப்பது இவை எல்லாம் கூட நம்பிக்கைதான். இந்த நம்பிக்கைதான் மன உளைச்சலைக் கொடுக்கின்றது. சேரக் கூடாத வர்களோடு சேர வைக்கிறது, தவறான காரியங்களைச் செய்ய வைக்கிறது. இதுதான் அடிப்படையான தன்மை.
நம்மை, சமூகத்தை மிகவும் பாதித்த சம்பவம் மாணவி அனிதாவின் தற்கொலை. அண்மையில் ஒரு பள்ளியில் படித்த 4 மாணவிகள் ஒன்றாக தற்கொலை செய்துகொண்டார்கள். இப்படி நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகள் நமக்கு மிகுந்த கவலையைத் தருகின்றன.எங்கோ நடக்கும் மன உளைச்சல் விளைவு இது என நாம் விட்டுவிடமுடியாது.இது நமது வீட்டைத் தாக்க எவ்வளவு நேரம் ஆகும்?. எப்படி இதனை அணுகப் போகிறோம்?ஏன் மன உளைச்சல், தற்கொலை போன் றவை நிகழ்கின்றன? என்பதனை நாம் உளவியல் கருத் துக்களோடு பார்க்க வேண்டும்.
வாழ்க்கையில் நம்பிக்கைதான் குணத்தை மாற்று கின்றது. தந்தை பெரியார் நாம் நம்பிக் கொண்டிருந்த நம்பிக்கைகளைத்தான் அசைத்தார்.  நம்பிக்கைகளுக்கு  ஆதாரமான விசயங்களை அசைத்தார் .நம்பிக்கைகளை அசைப்பதற்கு கேள்விகள்தான் அடிப்படை..பெரியார் அத்தனையையும்  கேள்வி கேட்டார். கேள்வியைக் கேட்டு கேட்டு பதிலை வரவழைத்தார். நாம் கேள்வி கேட்கப் பழக வேண்டும். நான் கேள்வி கேட்கச் சொன்னேன் ?ஏன் கூட்டத்தில் இருக்கும் பெண்கள்  யாரும் கேள்வி கேட்கவில்லை? நமக்கு பெண்களுக்கு  பதில் சொல்லித்தான் பழக்கம்.சிறுவயதிலிருந்து நாம் கேள்வி கேட்கப்பழகவில்லை.பெரியார் சொன்னது கேள்வி கேட்கத்தான். நிறையக் கேள்விகள் நாம்  கேட்க வேண்டும். பெண் விடுதலை என்பதே கேள்விகள் அடிப்படையில்தான் நிகழும். நமக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால்  என்ன மாதிரியான நம்பிக்கை யினால் நமக்கு இந்தப் பிரச்சினை வருகிறது என்று நமக்குள்ளேயே நாம் கேள்வி கேட்டிருக்கின்றோமா ?
பணமே அத்தனை மகிழ்ச்சியை யும் நமக்கு  கொடுத்துவிடும் என்னும் நம்பிக்கையா? எல்லாமே ஒழுங்கு இல்லாமல் இருக்கிறது என்னும்  நம்பிக்கையா? வீடுகளில் செல்போன் தான் பிரச்சினை என்னும் நம்பிக் கையா? இப்படி நமக்கு நாமே கேள்வி கேட்க வேண்டும். என்ன பிரச்சினை என்று தெரியாமலேயே நமது பெண்கள் இருக்கின்றார்கள், அதுதான் பிரச் சினை.  பெண்கள் படிக்கின்றார்கள், வெளியில் வந்து வேலை பார்க்கின் றார்கள். இன்றைக்கு ஒரு ஆய்வு சில சாதிப் பெண்களுக்கு, வீட்டுப் பெண் களுக்கு  மனச்சிதைவு நோய் அதிகமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. ஏன்? அந்தப் பெண்களுக்கு மதம் சார்ந்த சடங்குகள் மிக அதிகம். அது அவர்களைப் பாதிக்கின்றது. மனச் சிதைவு நோய்வாய்ப்படுகின்றார்கள்.  அடுப்படியிலேயே வைத்திருந்தால் நமது வீட்டுப் பெண்களுக்கும்  வரும் பெண்களுக்கு அவர்களுடைய திறனை, சக்தியைப் பயன்படுத்த விடவேண்டும்.பெண் விடுதலை வேண் டும். இன்னும் வரவில்லை என்பதற்கு பெண்களின் எண்ணமும் காரணமாக இருக்கிறது. ஆண்களைச் சார்ந்தே சிறுவயதிலிருந்தே பழகிவிடு கின்றோம். சுயமாக வாழ வேண்டும். பெரியார் சொன் னது போல பெண்கள் சுயமாக எதையும் எதிர்கொள்ள வேண்டும்.
தந்தை பெரியார் பெண்களிடம் கர்ப்பப்பையை எடுத்து விடுங்கள் என்றார். அப்புறம் சந்ததி எப்படி வளரும் என்று கேட்டபோது அது ஆண்களின் கவலை என்றார். அது உன் கவலை இல்லை. உளவியலில் ஒருமுகமாக பார்ப்பது, அதாவது போகஸாகப் பார்ப்பது மிக முக்கியம். தந்தை பெரியார் பெண் விடுதலை விசயத்தில் போகஸாக பெண்களுக்கு கர்ப்பப்பை என்பது பெண் விடுதலைக்கு தடையாக இருக்கிறது என்று பார்க்கின்றார். இப்படித்தான் பார்க்க வேண்டும் உளவியல் அடிப்படையில். .
தந்தை பெரியார் எப்படி  ஒரு பிரச்சினையை அணுகுவது என்பதனை நமக்கு கற்றுக் கொடுத் திருக்கின்றார். அது உளவியல் அடிப்படை சார்ந்தது. எதையும் மேலோட்டமாகப் பார்ப்பதல்ல தந்தை பெரியாரின் அணுகுமுறை. எதனையும் ஆழமாகப் பார்ப்பது. உள்ளுக்குள் சென்று பார்ப்பது என்பதல்ல, பெரியாரின் அணுகுமுறை. உள்ளுக்குள் உள்ளுக்குள் உள்ளுக்குள் சென்று பார்ப்பது, ஒவ்வொரு விசயத்தை யும் நிர்வாணமாகப் பார்ப்பது. அடிப்படையிலிருந்து ஆரம்பித்து அணுகி அணுகிப் பார்ப்பது என்பது. தந்தை பெரியாரின் இந்த அணுகுமுறையை நான் பயன்படுத்துகின்றேன். பிரச்சனைகளைத் தீர்க்கின்றேன். கடவுளைப் பற்றி இப்படி அணுகினால் அச்சம்தான் கடவுளுக்கு அடிப்படை என்பதனை நாம் உணரமுடியும்
நாங்கள் உளவியலில் ஒவ்வொரு விசயத்தையும் என்ன? ஏன், எதற்கு? யார்? எங்கே? என்னும் 5 டபுள்யூ மற்றும் எப்படி என்னும் ஒரு ஹெச் என்பதாகப் பார்க்கவேண்டும் என்று சொல்லித்தருகின்றோம். இதைத்தான் பெரியார் சொல்கின்றார். இல்லை, இல்லை பெரியார் சொன்னதை நாங்கள் சொல்கின்றோம். அவரின் தர்க்க முறைகள் ஆச்சரியமானவை.பெரியார் சொன்ன தத்துவ விசாரணை  என்று ஒரு பகுதி இருக் கிறது. சர்வ சக்தி என்று சொல்லப்படும் கடவுள் பற்றி
7 கேள்விகள் கேட்கின்றார். 70 வகையான பதில்கள் இருப்பதைச் சொல்கின்றார்.
நாம் நினைப்பதற்கும் நடப்பதற்கும் உள்ள வேறுபாடே மன அழுத்தம். நான் உளவியல் ரீதியாக அணுகும்போது ஒவ்வொரு விசயத்தையும் நிர்வாண மாகப் பார்ப்பது போல் பார்க்கின்றேன். அதுதான் உண்மை. நீங்கள் முகம் சுளிக்கலாம். ஆனால் அப்படிப் பார்த்துப் பழக வேண்டும்.  சமூக அறிவியல் படிக்கும் போது முதல் நாள் நாமெல்லாம் ஸ்பிருச்சுவலாக (ஆன்மிகமாக) இருக்க வேண்டும் என்றார்கள். மறு நாள் பாடம் ஆரம்பிக்கும்போது முதல் பாடமே தந்தை பெரியார் பற்றித்தான். ஆசிரியரிடம் கேட்டேன், அவர் பெரியார் இல்லாமல் சமூக அறிவியல் பாடம் எப்படி இருக்க முடியும் என்றார்! பெரியாரைத் தாண்டி சமூக அறிவியல் கிடையாது. நாம் எந்தத் துறைக்குள் சென் றாலும் பெரியார் சொன்ன கருத்துக்களைப் பார்க்கலாம். உளவியலிலும் அப்படித்தான். பெரியார் சொன்ன பல விசயங்கள் உளவியலாக சொல்லித்தரப்படுகின்றன.
மும்பையில் உளவியல் சார்ந்து ஒரு கருத்தரங்கம் வைத்திருந்தார்கள். சென்றிருந்தேன். அங்கே சென்றால் தந்தை பெரியார் சொன்ன  கேள்விகள் கேட்பதைத் தான் சொல்லித்தருகின்றார்கள். இதுதான் எனக்கு முதலிலேயே பெரியார் மூலமாகத்தெரியுமே என்றுதான் நினைத்தேன். பெரியார் ஒழுக்கத்தை மாணவப் பருவத் திலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்திச் சொல்கின்றார். நாம் நினைத்துக் கொண்டி ருக்கின்ற ஒழுக்கம் என்பது வேறு. பெரியார் சொன்ன ஒழுக்கம் என்பது வேறு. நாம் எடுத்துக் கொண்டிருக்கின்ற பொறுப்பை செவ்வனே செய்வதுதான் ஒழுக்கம் என்று சொல்கின்றார் பெரியார்.. இந்த அரங்கத்தில் பேச வந்தி ருக்கின்ற எனது ஒழுக்கம், நான் பேசுவது 10 பேருக்கா வது உபயோகமாக இருக்கும்படி பேசுவதுதான். ஒவ் வொரு நிமிடத்தையும் நாம் ஒழுக்கமாக செய்திருக்கின் றோமா என்று யோசிக்கவேண்டும் என்று சொல்கின்றார் பெரியார். ஒவ்வொரு நிமிடமும், படிக்கும்தோறும் ஆச்சரியத்தைக் கொடுக்கின்றார் பெரியார்.
உறவு முறைகளில் வரும் சிக்கல்கள் என்பவை உளவியலில் மிக முக்கியமானவை. உறவுமுறைகளில் வரும் சிக்கலுக்கு தீர்வு கொடுக்க  நான் ஒரு மன நல மருத்துவரைத்தான் நாடுகின்றேன். அந்த மன நல மருத்துவர் அய்யா ஆசிரியர் வீரமணி. நமது மாமியார் ஏதாவது சொல்லிவிட்டார் என்று சொன்னால் அதனையே நினைத்துக்கொண்டிருப்போம். இல்லை வேறு யாரும் ஏதாவது சொல்லிவிட்டால் அதனைப் பற்றி நினைப்பது,பேசுவது என இருப்போம். அய்யா ஆசிரியர் சொல்கின்றார் , மாடு அசை போடுவதுபோல, உறவுகள் சொல்லும் சொற்களை அசை போடுவதை நிறுத்துங்கள் என்று சொல்கின்றார்.  அவரின் வாழ்வியல் சிந்தனைகள் மனதைத் தொடுபவை. ஒரு நிகழ்வை நாம் பாதிக்கப்பட்டவர்கள் நிலையில் நின்று பார்க்க வேண்டும். இதனைத்தான் “வாழ்வியல் சிந்தனைகள்” கட்டுரையில் அய்யா ஆசிரியர் அவர்கள் “எம்பதி” யோடு இருங்கள் என்று சொல்கின்றார். அடுத்தவர் களைப் பற்றிக் குறை சொல்வதற்கு முன் அவர்கள் நிலையில் நின்று நாம் யோசிக்க வேண்டும் என்று சொல்கின்றார். அடுத்தவர் நிலையில் நின்று பிரச்சினை களை அலசுகின்றபோது மன அழுத்தம் இருக்காது. மன அழுத்தம் இல்லையென்றால் அமைதி இருக்கும்.மகிழ்ச்சி இருக்கும். ஒவ்வொரு நாளும் இரவு படுக்கப் போவதற்கு முன்பு மனிதத்தன்மையோடு நடந்து கொண்டோமா ? என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் சொல்கின்றார்.
அடுத்து கல்வி. பகுத்தறிவுக் கல்வி வேண்டும் என்றார் பெரியார். சுயமரியாதை உணர்ச்சியைத் தரும் கல்வி வேண்டும் என்றார். குழந்தைகளுக்கு சுயமரி யாதையை, பகுத்தறிவைச்சொல்லித்தரும் கல்வி வேண்டும் என்றார்.நமது பிள்ளைகளுக்கு 13 வயது வரை தான் நாம் சொல்லித்தர முடியும். நாம் சொல்வதை அந்த வயதுவரைதான் கேட்பார்கள். அதற்குப்பின் அவர்கள் சொல்வதை நாம் கேட்கவேண்டும். கேள்வி கேட்கவிட வேண்டும். உங்களை எதிர்த்து பேச விடவில்லையென்றால் அடிமையாகத்தான் இருப்பான். சுதந்திரமாக சிந்திக்க வேண்டும் என்றால் கேள்வி கேட்க விடுங்கள். 13 வயதுவரை நிறையப் பேச வேண்டும். அப்போதுதான் நம்மிடம் பேசுவான்.
பிள்ளைகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடாது.எதையும் சமாளிக்கும் மன வலிமையை உண்டாக்க வேண்டும். எனது மகளிடம் “கணினியை பயன்படுத்து, போட்டோவை நெட்டில் போட்டு விடுவேன் என்று சொன்னால், போட்டால் போடுடா, எனக்கு ஒரு காபி அனுப்படா” என்று சொல்லிவை என்றுதான் சொல்லி வைத்திருக்கிறேன். புளுவேல் கேமிற்குப் பிள்ளைகள் எப்படி பலியாவர்கள், நாம் நம் பிள்ளைகளிடம் பேசினால்? நாம் நமது பிள்ளைகள் சொல்வதைக் காது கொடுத்து கேட்க வேண்டும். பிள்ளைகளைக் கவனிக்க வேண்டும். “வாழ்வியல் சிந்தனைகள்”  5-ஆம் பாகத்தில் விடலைப் பருவத்தில் என்னும் தலைப்பில் ஆசிரியர் வீரமணி எழுதியிருக்கின்றார்; குழந்தைகள் அடிக்கடி உடல் ரீதியாகப் பிரச்சினை இருக்கிறது என்று சொன் னால், கை வலிக்கிறது,வயிறு வலிக்கிறது என்று சொன் னால் கவனிக்க வேண்டும். பேசவேண்டும்.  மருத்து வரிடம் காண்பிக்க வேண்டும்.அப்படியே உளவியல் மருத்துவரைப் போல அந்த வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரையில் அய்யா ஆசிரியர் எழுதியிருக்கின்றார். படிக்கும் பிள்ளைகளுக்கு ஹோமோ செக்ஸ் தொந்தரவு இருக்கின்றது. வெளி நாட்டில்தான் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு இருக்காதீர்கள். இங்கும் இருக் கிறது. பகுத்தறிவோடு குழந்தைகளை வளர்க்க வேண் டியது அவசியம். அப்போதுதான் பிள்ளைகள் எந்தப் பிரச்சனையையும் சமாளிப்பார்கள்.மனம் என்னும் குப்பையை கிளீன் செய்யுங்கள் என்று ஆசிரியர் சொல்கின்றார்.
பகுத்தறிவை பயன்படுத்த வேண்டும். பகுத்தறி வோடு சிந்திக்காத சமூகத்தில் என்ன கொண்டு வந்தாலும் பலன் இல்லை என்றார் பெரியார். டிஜிட்டல் இண்டியா கொண்டு வந்தாலும் பகுத்தறிவு இல்லை யென்றல் பலன் இல்லை.எதையும் பகுத்தறிவு மூலம் அணுக வேண்டும். அப்படித்தான் திருமணம் என்ப தனை கிரிமினல் குற்றமாக்க வேண்டும் என்றார் பெரியார். சமூகப்பணி ஆற்றுவதற்கு திருமணம் தடையாக இருக்கிறது என்றார் பெரியார். மன நலத் தோடு வாழ்வதற்கான வழிதான் பகுத் தறிவு. எனக்கு உடல் ரீதியாக பல பிரச் சினைகள் உண்டு. ஆனால் மன தைரியத் தோடு இருப்பதற்கு பகுத்தறிவுதான் கார ணம். பிள்ளைகள் அவர்களாக வளர்கின் றார்கள் என்றார் பெரியார்.பிள்ளைகள் வளரவேண்டும். நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். எனது மகள் பத்தாம் வகுப்பு படிக்கும் போது தனியாக வெளி நாடு சென்று வந்தாள் .உலக அளவில் நடந்த போட்டியில் முதல் பரிசு பெற்றாள். அய்யா ஆசிரியர் அவர்களிடம் பாராட்டு பெற்றாள்.
உடல் ரீதியாக எல்லோருக்கும் பிரச் சினைகள் இருக்கின்றன. நான் முதுகு வலிக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீட்டில் படுத்துக்கொண்டு கொஞ்சம் சோர்ந்து இருந்தேன். எனது பெரிய அத்தான் வந்து பார்த்தார்.எனக்கு இருதயத்தில் எத்தனை ஓட்டை இருக்கிறது தெரியுமா? என்ன நடந் தது என்று படுத்துக் கொண்டு கிடக்கிறாய், நாமெல்லாம் பெரியாரிஸ்ட் இல்லையா ? என்றார். துள்ளி எழுந்து உட்காருவதுபோல எழுந்தேன். எத்தனை வலிகளைத் தாங்கிக்கொண்டு தந்தை பெரியார் பாடுபட்டார். அவரின் உடல் வலியோடு ஒப்பிடும் போது நமது உடல் வலியெல்லாம் வலியே அல்ல என்பதுதான் உண்மை.
மற்ற தலைவர் எல்லாம் நெஞ்சில் இருக்கின்றார்கள். ஆனால் பெரியார் மூளையில் இருக்கின்றார். நெஞ்சில் இருப்பது அழிந்துவிடும். ஆனால் மூளையில் இருப்பது அழியாது. அதனால் தான் நமது எதிரிகளால் தமிழகத்தில் நோட்டாவைக் கூட வெல்ல முடியவில்லை. என்னோடு இருப்பவர்களுக்கு, உளவியல் துறையில் இருப்பவர் களுக்கு  இல்லாத ஒரு விசயம் என்னிடம் இருக்கிறது. அது பெரியார் கொள்கை. அது மனப்பாடமாகத்தெரியும். அதனை இன்றைக்கு இருக்கும் பிரச்சினைகளோடு இணைத்து தீர்வைச்சொல்கின்றேன். தன்னம்பிக்கை எனக்கு இருக்கிறது என்பதற்கு அடிப்படைக்காரணம் பெரியார்தான். அதனால் எனது துறையில் வெற்றி பெற முடிகிறது.உளவியல் பற்றி நாள் கணக்கில் பேச இயலும், நான் அதனின் சில பகுதிகளை மட்டும் எடுத்துக் காட்டியிருக்கிறேன்!
மதுரையில் 30.12.2017 அன்று நடைபெற்ற  கருத்தரங்கத்தில் “தந்தை பெரியாரும் உளவியலும்” என்னும் தலைப்பில் ஜெ.வெண்ணிலா அவர்கள் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.
தகவல்: வா.நேரு

நன்றி : விடுதலை 24.01.2018

Monday, 22 January 2018

தந்தை பெரியாரும்-உளவியலும்: கருத்தரங்கம்...

மதுரை, ஜன.22 மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக சிறப்புக்கூட்டம் 30.12.2017 அன்று மாலை 6.15 மணிக்கு மதுரை யானைக்கல்லில் உள்ள எஸ்.ஏ.எஸ். அரங்கில் நடைபெற்றது.
பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் பா.சடகோபன் அனைவரையும் வரவேற்றார். ஓய்வுபெற்ற நீதியரசர் பொ.நடராசன், மதுரை மண்டல  செயலாளர் மா.பவுன்ராசா, திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் வே.செல்வம் ஆகியோர் முன் னிலை வகித்தனர். கூட்டத்திற்கு பகுத்தறி வாளர் கழகத்தின் மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு தலைமை தாங்கினார்.

அவர் தனது தலைமை உரையில் “கவிஞர் வைரமுத்து அவர்கள் ஒரு கவிதையில் மனிதனுக்கு மலச்சிக்கலும், மனச்சிக்கலும்? இருக்கக்கூடாது என்பார்.  மனச்சிக்கல் நம்மைப் பலவிதத்திலும் தொல்லைப்படுத் துவது. மனச்சிக்கலில் மாட்டிக்கொள்பவர்கள் அதனை முறையாக அணுகத் தெரியாமல் கார்ப்பரேட் சாமியார்களிடம் மாட்டிக்கொண்டு அவதிப்படுகின்றார்கள். மனச்சிக்கலில் மாட்டிக் கொள்பவர்கள் படிக்காதவர்கள் அல்ல, மெத்தப்படித்தவர்கள், சாப்ட்வேர் போன்ற துறைகளில் பணியாற்றுபவர்கள், நிறைய சம்பாதிப்பவர்கள். சிலர் மனச்சிக்கல் களில் மாட்டிக்கொண்டு, அதனைத் தீர்ப்பதற் காக என்று சொல்லி கார்பரேட் சாமியார்களின்  அடிமைகளாக மாட்டிக்கொண்டு முழிக்கின் றார்கள். இன்றைய சிறப்புப்பேச்சாளர் ஜெ. வெண்ணிலா பகுத்தறிவுக் குடும்பத்தைச் சார்ந்தவர். பல ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான  பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்றவர்” எனக்குறிப்பிட்டு உரையாற்றினார்.
“மானம், மானுடம் பெரியார்”
நூல் அறிமுகம் பகுதியில் புத்தகத் தூதன் பா.சடகோபன் திராவிடர் கழகத்தின் செயலவைத்தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் எழுதிய “ மானம், மானுடம் பெரியார் “ என் னும் நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார். அவர் தனது உரையில் “ சு.அறிவுக்கரசு அவர் களால் எழுதப்பட்டுள்ள இந்த நூல் மிகப் பெரிய வரலாற்றுக் கருவூலம். கருவூலம் என்பது சேர்ப்பவருக்கும் பயன்படும், பயன் படுத்துபவருக்கும் பயன்படும். அப்படி அய்யா அறிவுக்கரசின் மன ஓட்டத்தை மட்டு மல்ல, வாசிக்கும் நமது மன ஓட்டத்தையும் செலுமைப்படுத்தும் கருவூலம் இந்தப்புத்தகம்.
இந்த நூலின் அறிமுகவுரையில் நேரு அவர்கள், ஆற்றில் ஓடும் வெள்ளம், கரை புரண்டு ஓடும். அது சுழற்றி சுழற்றி அழுக்கு களை அடித்துச்செல்லும் . அப்படி உணர்ச்சி வெள்ளமாகச்செல்லும் அறிவுக்கரசு அவர் களின் எழுத்துகள் சமூக அழுக்குகளை அடித்துச்செல்லும் தன்மை உள்ளதாக உள்ளது என எழுதியிருப்பார். அப்படி ஒரு உணர்ச்சி வெள்ளமாக இந்த நூல் வந்துள்ளது. மனி தனை அச்சத்திலிருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் விடுதலை செய்வதுதான் பெரியாரின் கருத் துக்கள் என்று இந்த நூல் ஆசிரியர் எழுதியிருக்கின்றார். உண்மை, அச்சம் பல வகை என்றாலும் மனிதனுக்கு முதலில் ஏற் பட்ட அச்சம் உடல் வலியாகத்தான் இருக்கவேண்டும். உடல் வலிதான் மனிதனை முடக்குகின்றது.உடல் வலிக்குப்பின்புதான் உயிர் அச்சம், இழப்பு அச்சம் போன்ற பல அச்சங்கள். ஆனால் உடல் வலி என்னும் அச்சம் தந்தை பெரியாரை ஒன்றும் செய்ய இயலவில்லை.சிறுவயது முதல் இறப்புவரை தந்தை பெரியாரை உடல் வலி தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. ஆனால் அதனை  மீறி வெற்றி படைத்தவர் பெரியார்.
அதனைப் போலவே ஆதிக்கத்திலிருந்து விடுதலை. காட்டில் வாழ்ந்த மனிதனை முதலில் ஆதிக்கப்படுத்தியது அவன் விரும் பிய உணவு என்று நான் கருதுகின்றேன். எந்த உணவு மீண்டும் மீண்டும் உண்ண வேண்டு மென்று தோன்றியதோ அதுதான் அவனை ஆதிக்கப்படுத்தியிருக்க வேண்டும்.ஆனால்  எந்தவொரு ஆதிக்கமும் தந்தை பெரியாரை ஆட்கொள்ள இயலவில்லை. ஒடுக்கப்படு பவர்கள் அவர்களை ஒடுக்குபவர்கள், இரு வருக்கும் ஒருவர் நல்லவராக இருக்கமுடியாது. இதற்கு பெரியார் ஒரு எடுத்துக்காட்டு சொல் கின்றார். .திருடனுக்கும் திருட்டுக்கொடுப்பவ னுக்கும் ஒருவன் நன்மை செய்யமுடியாது. அப்படித்தான் திருடுபவர்கள் ஒரு வகுப்பார். திருட்டு கொடுப்பவர்கள் ஒரு வகுப்பார் எனச்சொல்கின்றார். ஆனால் எல்லாவிதமான ஆதிக்கத்தையும் எதிர்ப்பேன் என்று சொல் கின்றார் பெரியார்.  பார்ப்பனர்கள் ஏதாவதொரு ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்டால் அந்த ஆதிக்கத்தையும் நான் எதிர்ப்பேன் என்று சொல்கின்றார் பெரியார். இப்படி ஏராளமான செய்திகள் இந்தப்புத்தகத்தில்  இருக்கிறது” எனக் குறிப்பிட்டு உரையாற்றினார்.
திராவிடர் கழகத்தின் அமைப்புச்செயலாளர் வே.செல்வம் சிறப்புரையாற்றிய ஜெ.வெண் ணிலா  மகேந்திரன் பற்றிய அறிமுக உரையை ஆற்றினார். மதுரை அய்.ஜெயராமன் அவர்களின் மகள். தூத்துக்குடி மாவட்டத்தின் தலைவராக இருந்து மறைந்த  சிவானணைந்த பெருமாள் அவர்களின் மருமகள், அண்ணன் மறைந்தும் மறையாமல் இருக்கின்ற தூத்துக் குடி பொறியாளர் மனோகரன் அவர்களின் தம்பி- திண்டுக்கல்லில் பேராசிரியராகப் பணியாற்றும் டாக்டர் மகேந்திரன் அவர்களின்  மனைவி என்னும் சிறப்புக்குரியவர். சமூக அறிவியல்,உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் நிறுவனத்தில் உளவியல் ஆலோசகராக,தற்போது மேலாளராகப் பணியாற்றுபவர். தொடர்ந்து இளைஞர் களின், பெண்களின், மாணவ, மாணவி களின் பிரச்சினைகளைப் பேசித்தீர்த்து வைப்பவர்..” என்று சிறப்பாக சிறப்புரையாற்றுபவரின் தனித்தன்மைகளை எடுத்துரைத்தார். தொடர்ந்து “ தந்தை பெரியாரும் உளவியலும்” “ என்னும் தலைப்பில் ஜெ.வெண்ணிலா அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில் “சிறு வயது  முதல் பெரியாரைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்து, படித்து வருபவள் நான். எனது இணையர் மகேந்திரனின் குடும்பமும் பெரியாரைப் பின்பற்றும் குடும்பம். எனது கணவரின் அண்ணன் மறைந்த எனது மாமா மனோகரன் எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்து நிற்பவர். எனவே பெரியாரைப் பற்றிப் பேசுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடியது. அதிலும் பகுத்தறிவாளர் கழகக் கூட்டத்தில் பேசுவது மிகுந்த மகிழ்ச்சி தருவது ஏன் என் றால் பகுத்தறிவாளர் கழகம் என்றால்  மனி தர்கள் கழகம் என்றார் பெரியார். மனிதர்கள் கழகத்தில் பேசப்போகிறோம் என்பது எனக்கு மகிழ்ச்சி.
“தந்தை பெரியாரும் உளவியலும்” என்பது என் தலைப்பு. உளவியல் துறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நிறுவனத்தில் பணி புரிபவள் நான் “ எனக்குறிப்பிட்டு உளவியல் தத்துவம், தந்தை பெரியாரின் கருத்துக்கள், திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகள் கருத்துக்களை இணைத்து பவர் பாயிண்ட் மூலம் காணொலிக் காட்சிகளாவும் காட்டி, திரை யிட்டும் திரையிட்டதை விளக்கியும் புதிய அணுகுமுறையில் புத்துணர்ச்சி தரும் அடிப்படையில் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தின் முடிவில் கேட்கப்பட்ட அய்யங்களுக்கு எல்லாம் ஜெ.வெண்ணிலா பதில் அளித்தார். கூட்டத்தின் நிறைவில் கல்லூரி மாணவி சொ.நே.அறிவுமதி நன்றி கூறினார்.
கூட்டத்தில் உசிலை மாவட்டத்தலைவர் சிவகுருநாதன்,பொதுக்குழு உறுப்பினர் இராக்கு தங்கம், வழக்குரைஞர் அணி மாநில துணைச்செயலாளர் நா.கணேசன், பொறியாளர் முத்தையா, ந.முருகேசன் -அவரது துணைவி யார்,வழக்குரைஞர் தியாகராசன்,வடக்குமாசி வீதி செல்லதுரை, சுமதி செல்வம், மாரிமுத்து, பேக்கரி கண்ணன், ஆட்டோ செல்வம் உட் பட்ட பொறுப்பாளர்களும், மகளிரும், ஆர்வ லர்களும் கலந்து கொண்டனர்.