Showing posts with label எனது தோழர்கள்...... Show all posts
Showing posts with label எனது தோழர்கள்...... Show all posts

Monday, 7 November 2022

விடை பெற்றீர்கள் தோழரே,கோரா..அவர்களே .வீரவணக்கம்...வீரவணக்கம்.



 விடை பெற்றீர்கள் தோழரே,கோரா..அவர்களே .வீரவணக்கம்...வீரவணக்கம்.


மதுரையில் எனக்கு பல ஆண்டுகளுக்கு முன் இயக்கரீதியாக அறிமுகமானவர் தோழர் கோவிந்தராஜ் என்ற கோரா. மதுரையில் மத்திய அரசு நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவில் வேலை பார்த்தார்.மதுரையில் அந்த அலுவலகத்தில் இருந்த திரு.கீதா இளங்கோவன் ITS அவர்கள் எனக்கு அறிமுகமானவராக இருந்தார். அவருக்கு கீழே வேலைபார்க்கும் அலுவலராக கோரா இருந்தார். நான் மத்திய அரசு நிறுவனமான தொலைபேசித்துறையில் இருந்த நிலையில் இயக்க நிகழ்வுகளுக்கு மட்டும் கறுப்புச்சட்டை போடுபவனாக இருந்தேன்.கோரா அவர்கள் அலுவலகத்தில் ,வெளியில் எப்போதும் கறுப்புச்சட்டைதான்.கறுப்புச்சட்டை என்பது மட்டுமல்ல,கறுப்புச்சட்டையில் சிவப்பு நூலால் நெய்யப்பட்ட NO GOD கடவுள் இல்லை என்னும் வாசகமும் இருக்கும்.மதுரையில் அவர் இருந்தபொழுது ,அவரது குடும்பம் சென்னையில் இருந்தது.அவர் மட்டும் மதுரையில் தங்கி,வெளியில் உணவு சாப்பிட்டுக்கொண்டு அலுவலகப் பணி செய்து கொண்டிருந்தார்.மதுரையில் திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களில் கட்டாயம் இருப்பார்.மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கூட்டங்கள்,தெருமுனைக் கூட்டங்கள் என்று வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் மதுரையில் திராவிடர் கழகக் கூட்டங்களில் கலந்து கொள்வார்.2005-2010 காலங்களில் மாற்றலாகி சென்னை சென்று விட்டார்.சில ஆண்டுகள் தொடர்பில் இல்லை.


வாட்சப் வந்த பிறகு மீண்டும் தொடர்பில் இணைந்தார்.பல செய்திகளை எனக்கு அனுப்பிக்கொண்டே இருப்பார்.விடுதலையில் நான் கலந்து கொண்ட செய்தி வந்தாலோ அல்லது நான் எழுதிய கட்டுரைகள் வந்தாலோ அழைத்துப்பேசுவார். வெறுமனே பாராட்டு என்பதாக அந்த உரையாடல் இருக்காது.சரியாக இருந்தால் பாரட்டுவார்.தவறு என்று பட்டால் மிகத்தீவிரமாக விவாதிப்பார்.வாதாடுவார்.இருவரும் ஒத்துக்கொள்ளும் பொதுக்கருத்து வரும்வரை அவரின் கருத்து விவாதம் இருக்கும்.ஆனால் விடுதலை,உண்மை என எந்த இதழில் வந்தாலும் முதலில் ஒரு தீவிரமான வாசகராக அதைப் படித்து,தனக்குப் பட்டதை உடனே தெரிவிப்பார்.


தந்தை பெரியார் மீதும் திராவிடர் கழகத்தின் மீதும் அவருக்கு இருந்த பற்று என்பது சொற்களால் விவரிக்க இயலாது.அப்படி ஒரு பற்று.அய்யா ஆசிரியர் அவர்கள் மீது பற்றும்,அவர் சொல்வதை அப்படியே ஏற்று கழகச்செயல்பாடுகளை செய்ய வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தார்.அவரது வீட்டிற்கு ஒரு முறை தந்தை பெரியார் பிறந்த நாள் சமயம் சென்றிருந்தேன். வீட்டிற்கு முன்னால் கொடிக்கம்பம்.திராவிடர் கழகக் கொடியை ஏற்றச்சொன்னார். கடவுள் இல்லை கல்வெட்டு வீட்டின் முன்னால்.தன்னுடைய இணையர் அம்மா ஹேமமாலினி அவர்களையும்,மகன் புவனன்,மகள் தமிழரசி எனக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.அவரது மகள் தமிழரசி ,தனது தந்தையின் குண நலன்களையும் தங்களைக் கவனித்து வளர்த்த விதத்தையும் மிக அருமையாகவும் நெகிழ்வாகவும் குறிப்பிட்டார்.அது மட்டுமல்ல தனது தந்தையின் பிடிவாதக் குணத்தைப் பற்றியும் பல செய்திகளைச் சொன்னார்.


மதுரையில் இருக்கும்போது நடந்து கொண்டே இருப்பார். பயணித்துக்கொண்டே இருப்பார்.விடுதலை,விடுதலை ஞாயிறு மலர் போன்றவற்றில் அவரின் கட்டுரை வரும்.திடீரென்று அவரது இல்லத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன் சென்றபோது ,வீட்டில் ஏதோ முயற்சி செய்தபோது தவறிக் கீழே விழுந்து விட்டார் என்று சொன்னார்கள்.அந்த விழுந்ததன் காரணமாக அவரது பயணம் தடைபட்டது.முதுகுத் தண்டில் பிரச்சனை ஏற்பட்டதால் நிறைய தூரம் பயணம் செய்யக்கூடாது என்று சொல்கின்றார்கள் நேரு என்றார் ஒருமுறை. அதில் ஆரம்பித்து கொஞ்சம், கொஞ்சமாக வெளியில் செல்லவேண்டும் என்றால் இரண்டு மூன்று பேர் துணை இருந்தால்தான் செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது.அப்போதும் தொடர்ந்து படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருந்தார்.


அவருக்கு நன்றாகத் தெலுங்கு தெரியும்.பெரியார் பெருந்தொண்டர் அய்யா வீரபத்திரன் அவர்களும் ,இவரும்(கோராவும்)தான் விசாகப்பட்டினம்  மற்றும் ஆந்திரா தெலுங்கானா தோழர்களோடு திராவிடர் கழகத்தின் தொடர்பாளராக இருந்தவர்கள்.இனி அய்யா வீரபத்திரன் மட்டும்தான்.தெலுங்கான தோழர் சாராய்யா மீது அவ்வளவு அன்பு செலுத்துவார்.அவரும் கோரா மீது மாறாத பாசம் வைத்திருப்பார்.அண்மையில் பஞ்சாபில் நடந்த அகில இந்திய நாத்திக மாநாட்டில் கலந்து கொண்டபோது கூட நானும் சாராய்யாவும் கோரா அவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.


சில ஆண்டுகளுக்கு முன் அவர் எனக்கு வாட்சப்பில் அனுப்பிய பல மொழிபெயர்ப்புகளை ஒன்றிணைத்து 'மதம் தேவைதானா? ' என்னும் தலைப்பில் மின்புத்தகமாக வெளியிட்டோம். இளவல்,திராவிடர் கழக மாணவரணித்தலைவர் பிரின்ஸ் என்னாரசு பெரியார் அவர்களும்,உடுமலை அவர்களும் அந்த மின்புத்தகம் வெளிவருவதற்கு பெரிதும் உதவி புரிந்தனர்.


ஏறத்தாழ ஓர் ஆண்டுக்கு முன் தனக்கு புற்று நோய் வந்திருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.மிக அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது.உண்மையான,உரமான ஒரு பெரியார் தொண்டராக அந்த நோயை அவர் எதிர்கொண்டார்.டைம்ஸ் ஆப் இந்தியாவில் வரும் ஆங்கிலச்செய்திகளை தமிழில் மொழி பெயர்த்து எனக்கும் மற்றவர்களுக்கும் அனுப்புவார்.நாத்திகக் கருத்து உடைய தெலுங்குக் கட்டுரைகளை மொழி பெயர்த்து எனக்கு அனுப்பிக் கொண்டே இருந்தார்.வாட்சப்பில் அழைப்பார்.குரல் எப்போதும் போல கம்பீரமாகவே இருக்கும்.இரண்டு நாட்களுக்கு முன்னால் அவர் அனுப்பிய செய்திக்கு பதிலாக வணக்கம் போட்டு அனுப்பியிருந்தேன்.(நவம்பர் 4)." வணக்கம் எமக்கு வேண்டாம்;வந்தேறிகள் பார்ப்பனர்களை எதிர்த்து நாணேற்றுக " என்று பதிவு இட்டிருந்தார்.இதுதான் அவர் எனக்கு கடைசியாக கொடுத்த செய்தி. எனது இறுதி மூச்சுவரை அதைச்செய்வேன் தோழா..... அவரின் இணையர் அவர்களும் ,மகன் புவனன் அவர்களும் மருமகள் நிலவழகி அவர்களும்,மகள் தமிழரசி அவரின் இணையர் ,அவரின் பேரப்பிள்ளைகள் என அத்தனை பேரும் அவர் மீது அன்பு மழை பொழிந்து ,நோய் வாய்ப்பட்டு இருந்த நேரத்தில் கவனித்துக்கொண்டனர்.


இன்று(7.11.2022) அதிகாலை இயற்கை எய்தினார் என்ற செய்தி கிடைத்தபோது அதிர்ச்சியாக இருந்தது.என்னதான் பகுத்தறிவாதியாக இருந்தாலும் அழுகை வந்தது.உறவுகள் இழப்பை விட தோழமைகளின் இழப்பு கண்ணீரை வரவைக்கிறது.வீரவணக்கம்! வீரவணக்கம் தோழரே! 


மதம் தேவைதானா மின் புத்தகத்தில் இருக்கும் சில குறிப்புகள்


நூலாசிரியர் கோரா பற்றி அவரின் துணைவியார்


'கோரா'வின் நடய்ப் பயணம்: 26.4.1952 இல் சென்னய் மயிலாப்பூரில் பிறந்த கோரா என்கிற‌ கோவிந்த ராஜன், 1971இல் பத்திரிகய்த் தகவல் அமய்வனத்தில் தமிழ்த் தட்டச்சராகச் சேர்ந்தார்: 1976இல் சுருக்கெழுத்தராக விஜயவாடாவுக்கு மாற்றப்பட்டார்; அங்கு அலுவலக நேரத்திற்குப் பிறகு, தனக்குத் தானே எந்தப் பயிற்றுநர்களின் உதவியும் இல்லாமல், தெலுங்கு மொழி பேச ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக அதில் முன்னேறினார்.அவரது முன்னேற்றம் மிகுந்த வியப்பிலாழ்த்தியது; தெலுங்கய் எழுத்துக் கூட்டிப் படிக்கவும் எழுதவும் மட்டுமல்லாமல் மொழி பெயர்த்து எழுதவும் ஆரம்பித்தார்; நமது தாய் மொழியான தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார்.அடுத்து, அய்தராபாதுக்கு மாற்றலானார்,அவர், அலுவலகம் மற்றும் எங்கு சென்றாலும் கருப்புச் சட்டய்தான் அணிந்து செல்வார்; தெலுங்குப் பத்திரிகய்யான 'யோஜனா-வில் சார்-ஆசிரியராக பணியாற்றினார்.இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னய்க்கே மாற்றப்பட்டார்.21 வயது வரய் மூடநம்பிக்கய்யில் இருந்த என்னய், அதிலிருந்து வெளியே கொண்டுவர, பத்து ஆண்டுகள் பெரியாரியலய்ப் போதித்து, தந்தய் பெரியாரின் அறிவுரய்களய் எடுத்துக் கூறி, கடவுள் மறுப்பாளராக மாறினேன் (மாற்றினார்); பிள்ளய்களய் அதே போல் வளர்த்து சுய மரியாதய்த்‌ திருமணங்களும் நடத்தி வய்த்தோம்; அவரது விருப்பமான தந்தய் பெரியாரின் சிலய்யினய் வீட்டில் வய்த்தோம்; இனனும் எழத நிறய்ய விடய்யங்கள்   இருந்தாலும், ஒரு பக்க அளவுக்கே எழுதச் சொன்னதால், இத்துடன் முடிக்கிறேன்! 

என்றும் கோராவின் அன்பு துணய்வி (காதலி) வே. ஹேம மாலினி


நூலாசிரியர் கோரா பற்றி அவரின் மகள்


அப்பா... ன்னா  பெரியார் பித்தன்; வெளிப்படை ; சுயமரியாதை; ஏடாகூடம் (இதுதான் சரி இப்படித் தான் செய்யணும் னு சொன்னா கண்டிப்பா ஏறுக்கு மாறாக செய்வதில் வல்லமை பெற்றவர்.) ; நாத்திகம் பேசுவதற்கு அஞ்சாதவர்; அதுவும் மத்திய அரசில் வேலை பார்த்துக்கொண்டு பாப்பானுக்கு எதிரே (Single Man Army) கருப்பு சட்டையில் சிகப்பு நிறத்தில் " NO GOD" னு போட்டு உட்காருவார்.  


எந்த வெயிலிலும் வெப்பத்திலும் நிறம் மாறாத கருஞ்சட்டைக்கு சொந்தக்காரர்.   யாரிடமும் எதையும் எதிர்பார்க்காத தன்மானத்தின் எடுத்துக்காட்டு. 


அப்பா கொஞ்சியதில்லை (பேரப் பிள்ளைகள் வரும் வரை )

ஏசியதில்லை, அதிர்ந்து பேசியதில்லை, முறைத்ததில்லை,

சோறு ஊட்டியதில்லை ஆனால் நாத்திகத்தை என்னில் ஊற வைத்த ஊற்று அவர். 


நான், நானாக சுயமரியாதையுடன் வாழ பெரியாரியத்தை புகுத்தாமல், வாழ்க்கை முறையில் சொல்லித்தந்த என் பெரியார் .


என்னை பார்த்தும், என் அப்பாவைப் பார்த்து வியந்தும், என் நண்பர் ஒருவர் பகுத்தறிவுவாதியாக மாறி இன்று தன் மனைவிக்கும்  பிள்ளைகளுக்கும்  பெரியாரையும், நாத்திகத்தையும் கொண்டுசேர்த்து  வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்கிறார் என்று எண்ணும் போது, நான் அப்பா பொண்ணுதான்ப்பா... என்று பெருமையுடன் மார்தட்டி கொள்ளலாம்.


அப்பா அளவுக்கு அறிவும், சொற்களை கையாளும் திறமையும், இல்லனாலும் அப்பாவோட இந்த ,மொழிபெயர்ப்புக்கு தட்டச்சு உள்ளீடு செஞ்சதுல பெருமகிழ்ச்சி எனக்கு. 

அப்பாவுடன் சேர்ந்து நானும் மணக்கிறேன். 😉😇


கோரா. தமிழரசி சோபன்


நூலாசிரியர் கோரா பற்றி அவரின் மகன்

 

அவர்தான் கோரா

வெண்தாடி வைத்தபயிர் பகுத்தறிந்து வளர்ந்தார்

வெண்டூவி வைத்தமயிர் மைதீட்டலை விரும்பார்

வெண்டாவி மடைமைதனை இடித்துரைக்க மரவார்

வெண்சாரைத் துவையலொக்க மனக்கறையைத் துடைப்பார்


கருத்துகளைத் துணிவுடனே எடுத்துரைக்கும் மவ்வம்

கருங்காலி உருதியினால் இலனென்னும் எவ்வம்

கருந்தோலின் உழைப்பதனை பூநூலது தெவ்வும்

கருந்துகிலன் கண்டதுமே திருமண் மண்கவ்வும்

- கோரா புவன்




புத்தகத்திற்குள்  புகுவதுற்கு முன்,

                                 வணக்கம்.

பெரியாரியலை வாழ்க்கையாக ஏற்றுக்கொண்டவர்கள் எப்போதும் தங்கள் வாழ்க்கையின் மூலம் எனக்கு வியப்பையும் , ஒரு நேர்மறையான அணுகுமுறைக்கான வாழ்க்கை முறையையும் அளித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.அந்த வகையில் சென்னையில் வாழும் திரு.தி.கோரா என்னும் கோவிந்தராசன் அவர்கள் தான் மட்டும் தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவராக மற்றும் அல்ல , தனது குடும்பத்தையே பெரியாரியலை ஏற்றுக்கொண்டவர்களாக மாற்றியிருப்பது மகிழ்ச்சி தரக்கூடியது. எந்த வித சபலங்களுக்கும் ஆளாகாமல் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் பீடு நடை போடும் பெரியாரியல் குடும்பம் அவரது குடும்பம்.ர். எனக்கு மதுரையில் கிடைத்த அருமையான நண்பர் திரு.கோரா அவர்கள்.சில ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் மத்திய அரசுத்துறையில் , பத்திரிக்கை நிறுவனத்தில் வேலை பார்த்தவர்.மத்திய அரசுப்பணியில் இருக்கும்போதே எப்போதும் கருப்புச்சட்டைதான் போட்டிருப்பார்.மத்திய அரசுப்பணி என்பதே பெரும்பாலும் பார்ப்பனர்களை அதிகாரிகளாகக் கொண்டிருக்கும் பணி. அந்தப் பணியில் கருப்புச்சட்டை மட்டுமல்ல, கருப்புச்சட்டையில் கடவுள் இல்லை " NO GOD " என்னும் வாசகம் எழுதிய கருப்புச்சட்டையோடுதான் வலம் வருவார்.



மதுரையில் இருந்து சென்னைக்குப் போய் பணி நிறைவு பெற்றார்.பணியில் இருந்தபோதும் சரி,ஓய்வுக்குப்பின்னும் சரி பெரியாரியல்தான் வாழ்க்கை.பேச்சு,மூச்சு எல்லாம் அய்யா பெரியாரும்,ஆசிரியர் அய்யா வீரமணியும்தான்.இவர் பிறப்பால் தெலுங்கு பேசும் வாய்ப்பு  பெற்றவரல்ல, ஆந்திராவில் வேலை பார்த்தபொழுது தெலுங்கைகத் தானாகக்  கற்றிருக்கிறார்.தெலுங்கினைப் பேசவும் எழுதவும் அதன் மூலம் பயிற்சி பெற்றிருக்கிறார். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள நாத்திகர்கள், பகுத்தறிவாதிகள் பல பேரை தெலுங்கு மூலம் தொடர்பு கொள்ளவும் வாய்ப்பு பெற்றிருக்கிறார்.


வாழ்க்கையில் சில தவிர்க்க முடியாத நிகழ்வுகள் ஏற்படும்போது தந்தை பெரியாரின் தொண்டர்களைப் பொறுத்த அளவில் அப்படியே இடிந்து உட்கார்ந்து விடுபவர்கள் அல்ல. அதற்கு மாற்றாக தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சொன்னது போல 'தவிர்க்க இயலாததை ஏற்றுக்கொண்டு ' தொடர்ந்து உற்சாகமாக பயணிப்பவர்கள்.சமூகத்திற்கு பயனளிப்பவர்கள்.  



இந்த மின் புத்தகம் கோரா என்னும் கோவிந்தராசன் அவர்கள் தெலுங்கிலிருந்து  தமிழில் மொழி பெயர்த்த தொகுப்புகள். இந்த மொழி பெயர்ப்பில் கவிதைகள் இருக்கின்றன. ஒரு சிறுகதை இருக்கிறது. பல தலைப்புகள் குறித்து கட்டுரைகள் இருக்கிறது.தலைவர்களின் வாழ்க்கை வரலாறு இருக்கிறது.எல்லாமே தெலுங்கு இதழ்களில் கடந்த சில மாதங்களாக வெளிவந்தவை.திடீரென உடல் சீர்கெட்டது.படுத்த படுக்கையாகவே நீண்ட நேரம் படுத்திருக்க வேண்டிய சூழல்.அவரது அன்பு இணையர் திருமதி ஹேமா கோரா அவர்கள் மிக நன்றாகப் பார்த்துக்கொள்கிறார்கள்.தடைகள் கண்டு அஞ்சுபவர்கள் அல்ல தந்தை பெரியாரின் தொண்டர்கள்.மாறாக தங்கள் மன உறுதியின் மூலம் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்கக்கூடியவர்கள் பெரியார் இயக்கத்தவர்கள் என்பதற்கு வாழும் எடுத்துக்காட்டு திரு.கோரா அவர்கள்.படுத்த படுக்கையாக இருந்தாலும் தொடர்ச்சியாக தெலுங்கில் இருந்து  மொழி பெயர்த்து அதனை தனது மகள் தமிழரசியிடம் தட்டச்சு செய்யச் சொல்லி, அதனை வாட்சப்பில் எனக்கு  அனுப்பிக்கொண்டிருக்கிறார். பல நாட்களாக எனக்கு வந்த பின்பு இதனை ஒரு தொகுப்பாக ,புத்தகமாக ஆக்கினால் என்ன ? என்னும் கேள்வி பிறந்தது. அருமைத்தோழர் பிரின்சு என்னாரசு பெரியார் அவர்களிடம் அந்தக் கேள்வியைப் பகிர்ந்து கொண்டபோது அவரும், பெரியார் திடல் தோழர் எழுத்தாளர் உடுமலை அவர்களும் உற்சாகமாக மின் புத்தகமாக இதனைக் கொண்டுவரலாம் என்று உற்சாகம் அளித்தனர்.அதன் விளைவாக இந்த மின் புத்தகம் தங்கள் கைகளில்........


பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் என்ற வகையில் இவரது மொழிபெயர்ப்புகள் மிகப்பெரிய மகிழ்ச்சியை எங்களுக்கு கொடுக்கின்றன.தான் யாருடைய கட்டுரையை,கருத்தை மொழியாக்கம் செய்கின்றேன் என்பதனை கட்டுரையின் துவக்கத்திலேயே மொழி பெயர்ப்பாளர் கோரா அவர்கள் கொடுத்து விடுகின்றார். இடை இடையே தனது கருத்துக்களை அடைப்புக்குறிக்குள் கொடுத்திருக்கின்றார்.புத்தகத்தை அச்சிடாமல ,அதே நேரத்தில் விரும்புகிறவர்கள் படிக்கும் வண்ணம் இந்த மின் புத்தகம் என்னும் ஆக்கம் அமைந்திருக்கிறது.இந்த நூற்றாண்டின் கணினியால் வந்த விளைச்சல் இது. படித்து தாங்களும் ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கலாம்.


                                                                                                                                                                        அன்புடன்

                                                                                                                                                                        வா.நேரு,11.08.2019 




 



 


Thursday, 10 March 2022

எனது தோழர்கள் : மாகாளிபட்டி மா.பாலகிருஷ்ணன் அவர்கள்....

 எனது தோழர்கள் : மாகாளிபட்டி மா.பாலகிருஷ்ணன் அவர்கள்....

மதுரை பெரியார் பெருந்தொண்டர் மாகாளிபட்டி அண்ணன் மா.பாலகிருஷ்ணன் அவர்கள் நேற்றிரவு(9.3.2022 ) மறைந்தார்.அவருக்கு வயது 77. அந்தப்பகுதியில் இருக்கும் அண்ணன் கேசவன் அவர்களும் ,பாலகிருஷ்ணன் அவர்களும் இரட்டையர்கள் போல. திராவிடர் கழக,பகுத்தறிவாளர் கழக  நிகழ்ச்சி என்றால் இருவரும் இணைந்தே வருவார்கள்.இரட்டையர்கள் போல இருப்பார்கள்.அண்ணன் பாலகிருஷ்ணன் அவர்களின் தந்தை கே.மாணிக்கம் அவர்கள் திராவிடர் கழகத்தில் இருந்தவர்.தந்தை பெரியாரின் காலத்தில் இயக்கப்பணி ஆற்றியவர்.அதனால் அண்ணன் பாலகிருஷ்ணன்-விஜயலெட்சுமி திருமணத்தைத் தந்தை பெரியார் நடத்தி வைத்திருக்கிறார். எப்போதுமே தந்தை பெரியார் தலைமையில் வாழ்க்கைத்துணை நலத்தை ஏற்றுக்கொண்டவர்கள், என்னைப்போன்றவர்கள் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற திருமணத்தைச்சொல்வது போல பெருமைபடச் சொல்வார்கள்.அப்படி அடிக்கடி தன்னுடைய திருமண நிகழ்வு,அந்த நிகழ்வில் தந்தை பெரியார் பேசிய பேச்சுகள் போன்றவற்றை நினைவு கூர்ந்து தோழர்களோடு பகிர்ந்து கொள்வார்.மகிழ்ச்சி கொள்வார்.





மிக எளிமையாக இருப்பார்.பெரிய பொருளாதார வசதிகள் இல்லை. ஆனால் தன்னால் முடிந்த நன்கொடையை இயக்க நிகழ்ச்சிகளுக்கு மனமுவந்து கொடுப்பவர்.தனது தந்தை கே.மாணிக்கம் அய்யா வழிகாட்டுதலில் இளமையில் இருந்தே கருப்புச்சட்டைக்காரராக வளர்ந்தவர்.வாழ்ந்தவர்.அய்யா நீறுகாத்தலிங்கம் அவர்கள் மதுரை மாவட்டத்தலைவராக இருந்த காலத்திலிருந்து,கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திராவிடர் கழகத்தின் ஏதேனும் பொறுப்புகளில் இருந்து பணியாற்றியவர்.தல்லாகுளத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு வரலாற்று நிகழ்வு.அந்த நிகழ்விற்கு மதுரை மாநகர் முழுவதும் திராவிடர் கழகக் கொடிகளைக் கட்டும் பொறுப்பை ஏற்று சிறப்பாகக் களப்பணியாற்றியவர்.

அய்யா ஆசிரியர் அவர்களின் இரங்கல்

மதுரை மாநகரில் விடுதலை பத்திரிக்கை வழங்கும் பணியை மேற்கொண்டவர். மிதிவிண்டியில் ஏறி மிதித்து,மதுரை மாநகர் முழுவதும் வலம் வந்து விடுதலைப் பத்திரிக்கையை சந்தாதாரர் வீடுகளில் வழங்கியவர். மாநில அமைப்புச்செயலாளர் அண்ணன் வே.செல்வம் அவர்கள்  "விடுதலை சந்தா சேர்ப்பு பணி, மாநாடு, கழக நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள்,எது நடந்தாலும் அவரும் கொடுத்து நண்பர்களிடத்திலும் நன்கொடை பெற்றுக்கொடுக்கும் கொடையுள்ளம் கொண்டவர்.இயக்கப்பணி காரணமாக சந்திக்கும் போதெல்லாம் புன்முறுவலோடு வரவேற்று தன்னிடம் உள்ள சிறிய தொகையை வழங்கி மகிழ்ந்து மிகுந்த உற்சாகப்படுத்துவார்.அமைதியாகவும் கனிவாகவும் பேசக்கூடியவர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் மீது எல்லையற்ற அன்பு கொண்டவர்.ஆசிரியர் அவர்களை சந்திக்கின்றபோது என்ன பாலகிருஷ்ணன் நலமாக இருக்கின்றீர்களா ? என்று ஆசிரியர் அவர்கள் கேட்டவுடன் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் ததும்ப அய்யா நீங்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழவேண்டும் அய்யா என்று படபடத்தகுரலில் சொல்லியது இன்றும் நம் செவிகளில் ஒலிக்கிறது." என்று தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.


எனது கருப்புச்சட்டைத் தோழர்கள் எளிமையானவர்கள். ஆனால் இனிமையானவர்கள்.பொதுத்தொண்டில் மான அவமானம் பாராதவர்கள். தொண்டறத்தில் முன் நிற்பவர்கள்.எத்தனையோ எதிர்ப்புகள் வந்தாலும் ,தந்தை பெரியார் கொள்கையைப் புரிந்து கொண்ட காரணத்தால் கொள்கை ரீதியாக களத்தில் எதிர்த்து நிற்பவர்கள்.உண்மையை உரக்க சொல்ல அஞ்சாதவர்கள்.அதே நேரத்தில் மிகப்பெரிய மனித நேயமிக்கவர்கள்.அவருடைய இணையர் விஜயலெட்சுமி அவர்கள். ,அவரது மகன் எழிலரசன்,பொறியாளராக இருக்கிறார்.ஒரே மகனை நன்றாகப் படிக்கவைத்து நல்ல பொறுப்பில் இருக்க வைத்திருக்கிறார் அண்ணன் பாலகிருஷ்ணன் அவர்களின் உடல் இன்று(10.03.2022) மாலை 3.30 மணி அளவில் ..கழகத்தோழர்களின் இரங்கல் உரைக்குப் பின்பு "வீரவணக்கம்! வீரவணக்கம்! பெரியாரின் பெருந்தொண்டர் அண்ணன் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு வீரவணக்கம்" என்னும் முழக்கத்தோடு வேனில் ஏற்றப்பட்டு,கீரைத்துறை மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.எந்த வித மூடச்சடங்குகள் இல்லாமல் இறுதி நிகழ்வு நடந்தது. ஒத்துழைத்த அண்ணன் பாலகிருஷ்ணன் அவர்களின் உறவினர்களுக்கு நன்றி.


தந்தை பெரியாரின் தொண்டர்கள் மறைந்தாலும் தாங்கள் வாழ்ந்த காலத்தில் கடைப்பிடித்த மனித நேய அணுகுமுறையால் இறப்பிற்குப் பின்னும் முன் உதாரணமாக வாழ்கிறார்கள்.நெஞ்சுரமும்,தந்தை பெரியாரின் கொள்கையில் பிடிப்பும்,இன்றைய தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மீது வற்றாத பாசமும் அன்பும் கொண்ட அண்ணன் மாகாளிபட்டி மா.பாலகிருஷ்ணன் அவர்கள் இறந்தாலும்.நமது நெஞ்சங்களில் என்றும் வாழ்வார். வீரவணக்கம் அண்ணன் மாகாளிபட்டி மா.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு....

Wednesday, 22 July 2020

என்னுடைய தோழர்கள்: புதுச்சேரி மு.ந.நடராசன்

என்னுடைய தோழர்கள்:    புதுச்சேரி மு.ந.நடராசன், மேனாள் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்துணைத்தலைவர்.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்துணைத்தலைவராக இருந்து மறைந்த அய்யா புதுச்சேரி மு.ந.நடராசன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் (24.07.2020).புதுச்சேரி மு.ந. நடராசன் அவர்கள் பகுத்தறிவாளர் கழகத்தில் என்னோடு இணைந்து பணியாற்றியவர்.2002- முதல் இறக்கும்வரை தொடர்பில் இருந்தவர். மாதம் ஒரு முறை அல்லது இருமுறை கட்டாயம் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும்.அவர் அழைக்கவில்லையென்றால் நான்  அழைப்பேன். புதுச்சேரி கூட்டத்திற்கு செல்லும்போதெல்லாம் அவரது இல்லத்தில்தான் பெரும்பாலும்  தங்கியிருக்கிறேன். அன்போடும் பாசத்தோடும் விருந்தோம்பல் செய்பவர். அவரது இணையர் அம்மா அவர்களும் அப்படி ஒரு உபசரிப்பு செய்வார்கள்.

முதலில் குடும்பத்தை சரிசெய்ய வேண்டும் என்பார். குடும்பக்கடமைகளை முதலில் முடிக்க வேண்டும் என்பார். மாதத்தின் முதல் வாரத்திலேயே வீட்டிற்கு வாங்க வேண்டிய பொருளை எல்லாம் வாங்கி வீட்டில் போட்டு விடுங்கள் என்பார். அவரை விட நான் 18 வயது இளையவன் என்றாலும் நான் மாநிலத்தலைவர் அவர் மாநிலத்துணைத்தலைவர் என்றாலும் எந்தவிதமான ஈகோ இல்லாமல் பழகக்கூடியவர்.அன்பு காட்டுபவர். ஆனால் தன் மனதிற்கு பட்டதை மிகப் பளிச்சென்று சொல்வார். அய்யா ஆசிரியர் அவர்கள் அறிவிக்கும் பெரியார் திரைப்படம் உள்ளிட்ட அத்தனை அறிவிப்புக்களுக்கும் அவருடைய பங்களிப்பு என்பது முதலிலேயே இருக்கும்.தன்னுடைய பங்களிப்பை முதலில் கொடுத்துவிட்டு பின்பு வசூல் செய்தும் கொடுப்பார்.

தி.மு.க.வின் புதுச்சேரி மாநிலப்பொருளாராக இருந்து தி.மு.க. மாநில மாநாடு நடத்தியதை குறிப்பிடுவார்.மறைந்த தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் திருச்சி அன்பில்.தர்மலிங்கம் அவர்கள் அய்யா பெரியாருக்கு மோதிரம் செய்து கொடுக்க விரும்பியதையும், அதற்காக முதன் முதலில் தந்தை பெரியாரை திருச்சி பெரியார் மாளிகையில் சந்தித்ததையும் அய்யா அவர்களுக்கு கைவிரல் அளவு எடுத்து மோதிரம் செய்து கொடுத்ததையும் அடிக்கடி குறிப்பிடுவார்.அந்த நிகழ்வை சொல்லும்போதெல்லாம் ஒரு சிறு குழந்தையைப் போல அந்த நிகழ்வை சொல்லி சொல்லி மகிழ்வார்.
தி.மு.க்.விலிருந்து திராவிடர் கழகத்திற்கு வந்தவர். பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப்புகளிலேயே இருக்க விரும்பினார்.இருந்தார். சின்ன சின்ன வெளியீடுகளாக பல வெளியீடுகளை கொண்டு வந்தார்.அந்த வெளியீடுகளை திராவிடர் கழக,பகுத்தறிவாளர் கழக நிகழ்வில் எல்லோருக்கும் கொடுப்ப்பார்.கொடுக்கச்செய்வார். மாநாட்டு நிகழ்வில் அய்யா மு.ந.நடராசன் அவர்களின் வெளியீடு கைக்கு வந்துவிட்டது என்றால் அய்யா மு.ந.நடராசன் வந்துவிட்டார் என்பதனை புரிந்துகொள்வோம்.  மதுரையில் நடந்த பகுத்தறிவாளர் கழகக்கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

விஜயவாடாவில் நடைபெற்ற உலக நாத்திக மாநாடுகள்,மகாராஷ்டிரா நாக்பூரில் நடைபெற்ற இந்திய நாத்திக மாநாடுகளில் நாங்கள் எல்லாம் இணைந்து கலந்துகொண்டு இருக்கின்றோம்.அங்கு வரும்போது ஆங்கிலத்தில் தனது வெளியீடுகளைக் கொண்டு வருவார். யார்? எவர் ? என்னும் தலைப்பில் தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், ஆசிரியர் கி.வீரமணி எனத் திராவிட இயக்கத்தின் தலைவர்களைப் பற்றி தொடர்ச்சியாக வெளியீடுகளைக் கொண்டுவந்தார்.  சிக்கனமாக இருப்பார். ஆனால் நல்ல செயல்களுக்கு பணம் செலவு செய்வதைப் பற்றி எப்போதும் கவலைப்படாமல் செலவழிப்பார்.இளைஞரைப்போல எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்.

அவருடைய சொந்த ஊர் திருச்சி அருகில் உள்ள சிறுகாம்பூர். அந்த ஊரில் சில ஆண்டுகளுக்குமுன் அரசு உயர் நிலைப்பள்ளியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடினார். என்னையும் மற்ற பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர்களையும் அழைத்திருந்தார். பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி,போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி, ஆசிரியர்களுக்கு தந்தை பெரியாரின் புத்தகங்களை வழங்கி என மிகப்பெரிய அளவில் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். இன்றைக்கும் கூட நினைவில் நிற்கிறது.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில மாநாடு இரண்டு நாட்கள் புதுச்சேரியில் 2004-ஆம் ஆண்டில் நடைபெற்றது.மிகப்பிரமாண்டமாக நடந்த அந்த மாநாட்டின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு ,மிகப்பெரிய வெற்றி மாநாடாக நடத்திக்காட்டினார்.அதைப்போல இராவண லீலா தொடர் நிகழ்வுகளை புதுச்சேரியில் நடத்தினார். அய்யா சிவ.வீரமணி அவர்கள் புதுச்சேரி மாநில திராவிடர் கழகத்தலைவராக வந்த பின்பு, அவரோடு இணைந்து பல இயக்க நிகழ்வுகளுக்கு உறுதுணையாக இருந்தார்.

அய்யா மு.ந.நடராசன் அவர்களின் 73-ஆம் ஆண்டு பிறந்த நாள் அன்று(24.05.2020) மாலை நடைபெற்ற காணொளி நிகழ்வில் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் அய்யா துரை.சந்திரசேகரன் அவர்களும் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் காணொளி வழியாக உரையாற்றினார்கள்.திராவிடர் கழகத்தின் அய்யா ஆசிரியர் அவர்கள் உரையாற்றும்போது "அருமைத்தோழர் மு.ந.நடராசன் அவர்கள் புதுவையில் மட்டுமல்ல, புதுமையான உலகம் அமையவேண்டும் என்பதற்காக தன் வாழ் நாள் முழுவதும் உழைத்து வாழ்ந்து காட்டியவர்.துரு துருவென்று சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்.எங்கு சென்றாலும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்றாலும் கூட திராவிடர் இயக்கத்தை,பகுத்தறிவாளர் கழகத்தை கையோடு எடுத்துச்சென்றவர்.விபத்துகள் எதிர்பாராதவை.அதிர்ச்சியாக நமக்கு அமைந்துவிடுபவை. ஆனால் நாம் பகுத்த்றிவாளர்கள். தவிர்க்க முடியாததை ஏற்றுக்கொண்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதனை செயல்படுத்துபவர்கள்.
தோழர் நடராசன் அவர்கள் தான் மட்டும் கொள்கையாளராக வாழவில்லை. அவருடைய வாழ்விணையராக இருந்தாலும் அவரது பிள்ளைகளானாலும் கொள்கைத்தங்கங்களாக இருப்பதும், விடுதலை வாசகர்களாக இருப்பதும்,இயக்கப்பணிகளுக்கு உறுதுணையாக இருப்பதும் நடராசன் அவர்கள் இன்னும் நம்மை விட்டு மறையவில்லை,ஆலமரம் விழுந்தாலும் அதனுடைய  விழுதுகள் தாங்கி நிற்பதுபோல வாழைமரம் சாய்ந்தாலும் அதன் கன்றுகள் நிற்பதுபோல அவரின் குடும்பத்தினர் இருக்கின்றனர்.ஒளிக்கீற்றாய் நடராசன் அவர்கள் பாடுபட்ட பகுத்தறிவு பரப்பலும், சாதி ஒழிப்பும், அறிவியல் மனப்பான்மை வளர்ப்புமான அந்த லட்சியச்சுடரை ஏந்தி தொடர்ந்து பயணிப்போம். " என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.


அவரின் நினைவு நாளில் அவரின் உணர்ச்சியும் வேகமும் இயக்க ஈடுபாடும் மனது முழுவதும் நிற்கிறது. அவரது மூத்தமகன் பாஸ்கர் அவர்களோடு அவரின் பிறந்த நாளை ஒட்டி பேச வாய்ப்புக்கிடைத்தது. மிக நல்ல பொறுப்பில் உயர் பதவியில் இருக்கும் அவரின் பெரியாரியல் பற்றி புரிதலும், அவரது அப்பாவைப் பற்றிய அவரின் மதிப்பீடும், தனது தந்தை மு.ந.நடராசன் அவர்கள் கிராமத்தில் பிறந்து வளர்ந்து,எப்படி ஒரு எதிர் நீச்சல்காரரை வாழ்க்கையில் உயர்ந்து திடீர் விபத்தால் மறைந்தார் என்பதனை அவர் பேசப்பேச, ஏறத்தாழ ஒரு மணி நேரம் அவரோடு உரையாடிய நிகழ்வு, அய்யா மு.ந.நடராசன் அவர்கள் தான் மறைந்தாலும் தனது உணர்ச்சியை, வேகத்தை,அறிவை, இயக்க ஈடுபாட்டை தனது குடும்பத்தினருக்கு அளித்துச்சென்றிருக்கார் என்பது மிகப்பெரும் ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. எனது தோழர்கள் எதையும் எதிர்பாராதவர்கள்,கொள்கைக்காக உயிரையும் கொடுக்கக்கூடியவர்கள், எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக உணமையை உரக்கச்சொல்வதனால், பொய்யர்களிடமிருந்தும்,ஏமாற்றுக்காரர்களிடம் இருந்து வரும் எதிர்ப்புக்களை எதிர்பார்த்தும்,எதிர்கொண்டும் வாழ்வில் செம்மையாக வாழ்பவர்கள்.

முதலாம் ஆண்டு நினைவு நாளினை ஒட்டி, புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக காணொளி வழிக்கூட்டம் நடத்துகிறார்கள். பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொறுப்பாளர்களோடு திராவிடர் கழகத்தின் பொருளாளர் அண்ணன் வீ.குமரேசன்,பொதுச்செயலாளர் அய்யா முனைவர் துரை.சந்திரசேகரன்,துணைத்தலைவர் அய்யா கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் காணோளி நிகழ்வில் கலந்துகொண்டு அய்யா சுயமரியாதைச்சுடரொளி மு.ந. நடராசன் நினைவு உரை நிகழ்த்துகிறார்கள். நிகழ்வு சிறக்கட்டும்.

புதுச்சேரி மு.ந.நடராசன் அவர்கள் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறார்.முதலாம் ஆண்டு நினைவு நாளில் எனது அருமைத்தோழர், தமிழகம் &புதுச்சேரி மாநிலப்பகுத்தறிவாளர் கழகத்தின் முன்னாள் துணைத்தலைவர் அய்யா மு.ந. நடராசன் அவர்களுக்கு வீரவணக்கம்.

                            வா.நேரு, 23.07.2020 இரவு 10.15 மணி

Monday, 13 July 2020

போனாயே எங்கள் தோழா......



போனாயே எங்கள் தோழா......
மதுரை மண்டலத் திராவிடர் கழகத்தலைவர் அய்யா மா.பவுன்ராசா(வயது 58) இன்று 05.07.2020 மாரைடைப்பால் தூக்கத்திலேயே மரணம் அடைந்திருக்கிறார். காலையில் மிக அதிர்ச்சி தரத்தக்க இந்தச்செய்தியைச்சொல்லி , மாநில மகளிரணி அமைப்பாளர் மானமிகு தகடூர் தமிழ்ச்செல்வி அவர்கள் உண்மையா எனக்கேட்டபோது,உறுதிப்படுத்திக்கொள்ள ,மதுரை புறநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தலைவர் மன்னர்மன்னன் அவர்களைத் தொடர்புகொண்டபோது,ஆமாம் அய்யா,உசிலம்பட்டியில் பவுன்ராசா வீட்டில்தான் இருக்கிறோம்,இரவில் தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது என்றார்.
கடந்த 30 ஆண்டுகளாக திராவிடர்கழகத்தின் அடிப்படையில் தொடர்பில் இருந்தவர். திராவிடர் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்.கரடுமுரடான தனது பகுதியில் பெரியார் கொள்கைக்கு பாதை அமைத்தவர். அதில் ஏற்பட்ட இன்னல்களை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டவர். அவர் தான் திராவிடர் கழகத்தில் இணைந்தது,தனது ஊரில் கூட்டம் நடத்தியது, அப்போது ஏற்பட்ட நிகழ்வுகள் போன்றவற்றை எல்லாம் அவ்வளவு ஈடுபாட்டோடு விவரிப்பார். இப்போது பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்டத்தலைவராக இருக்கும் மன்னர்மன்னன் மூலமாகத்தான் இயக்கம் பற்றியும், தந்தை பெரியார் பற்றியும் தெரியும் என்று சொல்வார்.
டவுசர் போட்டுக்கொண்டிருந்த காலத்தில் ,உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள அய்யனார்குளத்தில் திராவிடர் கழகம் கூட்டம் போடவேண்டும் என்று விரும்பியதையும் அதற்காக மதுரை மேற்கு மாவட்ட திராவிடர்கழகத்தின் தலைவராக அப்போதிருந்த அய்யா பெரியகுளம் ம.பெ.முத்துக்கருப்பையா அவர்களைப் போய்ச்சந்தித்ததையும், அவர் டவுசர் போட்டு வந்த ஒரு பையன் கிராமத்தில் தி.க.கூட்டம் போட விரும்பியதை ஏற்றுக்கொண்டு தனது கிராமத்திற்கு வந்ததையும் ,அய்யா போடி இரகுநாகநாதன் .ம.பெ.முத்துக்கருப்பையா அவர்களின் வழிகாட்டுதலோடு முதன்முதலில் அய்யனார்குளத்தில் திராவிடர் கழக கூட்டம் நடைபெற்றதையும், அன்றைக்கு திராவிடர் கழகத்தின் பேச்சாளராக இருந்த கண்மணி தமிழரசன் அவர்களும், தமிழரசன்(தோழர் ஓவியாவின் தந்தை) அவர்களும் கலந்து கொண்டு பேசியதையும் குறிப்பிட்டு,
" அண்ணே, முதன் முதலில் உசிலம்பட்டி அய்யனார்குளத்தில் திராவிடர் கழகப்பொதுக்கூட்டம்.நம்ம கூட்டத்துக்கு நாமே காசு செலவழிக்காமலேயே பயங்கர விளம்பரம் ஆகிப்போச்சு. கடவுள் இல்லைன்னு சொல்றவங்க கூட்டம் போடுறாங்க,அதுவும் சின்னப்பையல்களா சேர்ந்து கூட்டம் போடுறாங்க என்று சொல்லி ஊர் முழுவதும் பரபரப்பு. கூட்டம் ஆரம்பிச்சு நடந்துக்கொண்டு இருக்கும்போது சத்தம் போட்டாங்கே,கலாட்டா பண்றது மாதிரி ஆளுங்க இங்குட்டு அங்குட்டு போய்க்கிட்டு கத்திக்கிட்டு இருந்தாங்கே...சிறப்பு பேச்சாளர் கண்மணி தமிழரசன் அவர்கள் பேச ஆரம்பிக்கும்போது நிறைய கல் வந்து விழுந்தது.ஒரு கல் கண்மணி தமிழரசன் அவர்களின் நெற்றியில் பட்டு, பொல பொல வென்று இரத்தம் வந்தது. சும்மா சொல்லக்கூடாது அந்த அம்மாவை... மேடையில் இருந்த சில ஆட்கள் எல்லாம் கீழே இறங்கியபோதும் தன்னுடைய சேலையின் முந்தானையில் ஒரு பகுதியை கிழித்து நெற்றியில் கட்டிக்கொண்டு பேச ஆரம்பித்தார். மூன்று மணி நேரம் பேசினார். அவரின் பேச்சுக்கு முதலில் இருந்த எதிர்ப்பு மறைந்து கொஞ்சம் கொஞ்சமாக உட்கார ஆரம்பித்தார்கள்.உங்களுக்காக பாடுபடும் இயக்கம் என்பதை அந்த மக்களுக்கு புரியும் மொழியில் பேச பேச கூட்டம் அப்படியே நின்றது" என்பதனைச்சொல்லி அடுத்து தொடர்ந்து அய்யனார்குளத்தில் கூட்டம் நடத்தியதையும் குறிப்பிடுவார். நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திராவிடர்கழகத்தில் அய்யனார்குளம் பகுதியில் இணைந்ததற்கும், கொள்கை வழி நின்றதற்கும் அய்யா பவுன்ராசா அவர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் மிகப்பெரிய காரணம்.
"உசிலம்பட்டி பகுதியில் மிகமிக பின் தங்கிய கிராமத்திலிருந்து சுமார் 10 கி.மீ நடந்து மெயின்ரோடு வந்து தான் பஸ் ஏற வேண்டும் - என்ற நிலையிலும் நான் அறிய சுமார் 30 ஆண்டு காலம் இயக்க நிகழ்வுகள் அனைத்திலும் முன்கூட்டியே வந்து விடுவார்.தமிழ்நாடு முழுவதும் ஏதாவது ஒரு நிகழ்வில் பங்கேற்றுக் கொண்டிருப்பார்.இயக்க வேலைகளை பிடிவாதமாக விரும்பி களத்தில் வேலை செய்யும் முன்னோடித் தோழர் அய்யா பவுன்ராஜா அவர்கள். போராட்டங்கள் ,இரத்ததான முகாம்கள் , பெரியார் 1000 , பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் -இவற்றையெல்லாம் பாம்பட்டிக்காட்டில்( பழமை நிறைந்த கிராமத்தில்) - முன்னின்று நடத்திக் காட்டியவர். தமிழர் தலைவர் அய்யா அவர்கள் மதுரை வருகிறார் என்ற செய்தியை விடுதலை யில் பார்த்தவுடன் எங்களிடம் வேலையைத் துவங்கி விடுவார் .அய்யா தலைவர் மதுரைவர்றாங்க 2 விடுதலை ஆண்டுச் சந்தா வாங்கிக் கொடுங்க என வேலையைத் துவங்கி விடுவார் எப்படியாவது தலைவர் அவர்களைப் பார்க்கும் போது விடுதலை,உண்மை சந்தா கொடுக்காமல் சந்திக்க மாட்டார். ஒரு கறுப்புச் சட்டைக்காரன் - இழப்பு என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல. ஒரு முதலாளி மறைந்து விட்டால் இரண்டு முதலாளி அந்தக் குடும்பத்தில் தோன்றி விடுவார்.ஒரு தொழிலாளி மறைந்துவிட்டால் இன்னொரு தொழிலாளி கிடைத்து விடுவார்.ஒரு விவசாயி மறைந்துவிட்டால் இன்னொரு விவசாயி நம் குடும்பத்திலேயே கிடைத்து விடுவார்.ஒரு கட்சிக்காரன் மறைந்து விட்டால் இன்னொறு கட்சிக்காரன் கிடைத்து விடுவான்.ஆனால் ஒரு கொள்கைக்காரன் மறைந்துவிட்டால் - அந்த இடத்தை நிறப்புவது எளிதல்ல அதிலும் ஒரு கறுப்புச் சட்டைக் காரனின் இழப்பை ஈடுகட்டுவது அவ்வளவு எளிதான காரியமல்ல.தோழருக்கு வீரவணக்கம்l வீரவணக்கம்l.தமிழர் தலைவர் வணக்கத்திற்குறிய அய்யா அவர்கள் தலைமையில் பெரியார் பணி முடிப்போம்" .மேலே சொன்ன வரிகள் மதுரை புற நகர் மாவட்டத்திராவிடர் கழகத்தின் முன்னாள் மாவட்டச்செயலாளர், தலைமைக்கழகப்பேச்சாளர் அ.வேல்முருகன் அவர்கள் எழுதியது.
"நான் தி.க.வில் இருந்தபோது 1993 ல் எங்கள் ஊரில் RSS அமைப்புக்கும் எங்களுக்கும் மோதல் இருந்தது. தோழர் பவுன்ராசா அவர்களிடம் இதைப்பற்றிப் பேசினோம். மோதலை முடிவுக்குக் கொண்டுவர, ஒரு மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் ஏற்பாடு செய்தோம். எதிர்பார்த்தபடியே காவல்துறை வழியாக காவிகள் தடைவிதித்தனர். ஒரு சமரசத் தீர்வு உண்டானது. "மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் வேண்டாம். வெறும் ஊர்வலம் நடத்திக்கொள்ளுங்கள்" என்றது காவல்துறை. எங்களது விருப்பமும் அதுமட்டும் தான்.
உசிலம்பட்டியிலிருந்து கையில் அரிவாள்களுடன் 100 தோழர்களுடன் வந்து களமிறங்கினார் பவுன்ராசா. அவரோடு திண்டுக்கல் மாவட்ட தி.க.தோழர்கள், உள்ளூர் தோழர்கள் என நூற்றுக்கணக்கானோர் கையில் அரிவாள்களுடன் ஊர்வலத்தை நடத்தினோம். அந்த ஊர்வலத்திற்குப் பிறகு RSS அமைதியாகிவிட்டது. அதில் இருந்த பலர் சில ஆண்டுகளில் தி.க.வுக்கே வந்தனர். 1993 ல் எங்களுடன் மோதிய RSS ல் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள் தோழர் பவுன்ராசா அவர்களின் ஜாதியினர்தான். ஒருவர் அவரது உறவினர். ஆனாலும் பெரியாருக்காக, தனது ஜாதியையும் உறவுகளையும் எதிர்த்து 100 இளைஞர்களை - அரிவாளைத் தூக்குமளவுக்குத் தயாரிப்பது என்பதுதான் பெரியாரிஸ்ட்டுகளின் அடையாளம்.
பொதுவெளியில் எழுத இயலாத பலவற்றைச் சாதித்துக் காட்டிய உற்ற தோழர் பவுன்ராசா அவர்களுக்கு காட்டாறுகுழுவின் சார்பில் வீரவணக்கம். AThi Asuran"
நெஞ்சினில் கொண்ட கொள்கை. நினைவினில் தேக்கி நின்று
அஞ்சிடா பயணம் செய்து
அலைந்துமே ஊரூர் சென்று
துஞ்சலும் மறந்து நித்தம்
தொடர்ந்துமே தொண்ட றந்தான் விஞ்சினாய் புகழாம் வானை
வென்றதோர் கதிரைப் போல!
இயக்கமே வாழ்வாய்க் கண்டு
எளியதோர் தோற்றம் கொண்டு
தயங்கிடா தணுகி மக்கள்
தன்நிலை உணரச் செய்ய
அயர்விலா உழைப்பைத் தந்து
அனுதினம் செய்தாய் தொண்டு!
புயலென செயலால் வென்றாய் போனாயே எங்கள் தோழா!!
- சுப.முருகானந்தம்
மதுரை மாநகர் திராவிடர் கழகம்.
திராவிடர் கழகம் என்பது அரசியல் கட்சி அல்ல. இது ஒரு இயக்கம். இந்த இயக்கத்தில் இயங்கிக்கொண்டே இருந்தவர் அண்ணன் மா.பவுன்ராசா அவர்கள்.நான் தல்லாகுளம் தொலைபேசி நிலையத்தில் வேலை பார்த்தபொழுது அடிக்கடி வருவார். நிறையப் பேசுவோம். இயக்க நிகழ்வுகள் நடந்தவை, நடக்க இருப்பவை என்று பல செய்திகளைப் பகிர்ந்துகொள்வோம். எனக்குத் தெரிய மிகவும் வெளிப்படையாக எதையும் பேசுவார். திராவிடர்கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களிடமே பல விசயங்களைப் பேசுவார். இயக்க நடப்புகளைச்சொல்வார்.காணொலி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டிருந்தார்.
திராவிடர் கழகப்பொறுப்பாளர்கள் யாரேனும் விடுதலைக்கு சந்தா கட்டாவிட்டால் நன்றாகவே கோபப்படுவார். விடுதலையை வாங்க வலியுறுத்துவார். இரங்கல் அறிக்கையில் அய்யா ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டிருப்பது போல எவரையும் சந்தித்து துணிந்து பேசுவார். வாதாடுவார். தன்னுடைய பிறந்த நாளில்(12.06.2020), விடுதலையின் 86வது பிறந்த நாள் வரும் ஜீன் மாதத்தில் தான் பிறந்திருக்கிறேன் என்று குறிப்பிட்டு வாழ்த்து சொன்னவர்களுக்கு நன்றி சொல்லியிருந்தார்.கடந்த 10 நாட்களில் இரு முறை விடுதலையில் அவரின் வாசகர் கடிதம் வந்தது. நேற்று (விடுதலை வெளியூர் 04.07.2020) வந்த கடிதத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி ! என்று குறிப்பிட்டு கடிதம் எழுதியிருந்தார். தனது வாழ்வில் அய்யா ஆசிரியர் அவர்களுக்கு இறுதியாக அவர் சொல்லும் நன்றி என்பது நமக்கு தெரியாமல் போயிற்று.நேற்று(04.07.2020) மாலை நடைபெற்ற அய்யா ஆசிரியர் அவர்களின் ஒப்பற்ற தலைமை உரையை கேட்டுக்கொண்டு ,கம்பீரமாய் உசிலம்பட்டியில் அவரது இல்லத்தில் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்தோம். இன்று அவர் இல்லை.ஒப்பற்ற ஒரு தோழரை இழந்திருக்கிறோம்.
வீரவணக்கம் எங்கள் தோழனே! அய்யனார் குளம் பவுன்ராசாவே! ஆற்றல் மிகு மதுரை மண்டலத்திராவிடர் கழகத்தலைவரே!..டவுசர் போட்ட காலம் முதல் இறக்கும் நொடி வரை ஒரே தலைவர்,ஒரே கொடி,ஒரே இயக்கம்-திராவிடர் கழகம் எனப் பாடுபட்ட எங்கள் தோழனே ! வீரவணக்கம். வீரவணக்கம்.

Thursday, 26 September 2019

எமது தோழர் ஜெ.சுப்பிரமணியன்......

                                 எமது தோழர் ஜெ.சுப்பிரமணியன்

இனிய தோழர், பார்க்கும் நேரமெல்லாம் அகம் மலர முகம் மலர 'அண்ணே ' என்று அழைத்து பாசம் பொழியும் அன்புத் தம்பி, மதுரை திருப்பரங்குன்றம் ஹார்விபட்டி ஜெ.சுப்பிரமணியன் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாள் (27.09.2019). ஆசிரியராகப் பணியாற்றியவர்.மதுரை புற நகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் செயலாளராகப் பணியாற்றியவர்.வீட்டிலிருந்து பக்கத்தில் கடைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றவர்,  வேகமாக வண்டியை ஓட்டி வந்த ஒரு மடையனால் மோதப்பட்டு, தலையில் காயம் ஏற்பட்டு இரு நாட்கள் மருத்துவமனையில் இருந்து , நினைவு திரும்பாமலேயே இயற்கை எய்திய  நாள்.

"அழகான நல்ல வாழ்க்கை என்பது அன்பால் உருவாக்கப்பட்டு, அறிவால் அணை காக்கப்படுவதுதான் " என்றார் ரஸ்ஸல்.அப்படி வாழ்ந்து காட்டியவர் தம்பி சுப்பிரமணியன் அவர்கள். . உறவுகள் இழப்பைவிட எனக்கு எனது தோழர்களின் இழப்பு அதிக வருத்ததை தருவது எப்போதும். தன் வாழ்வு, தன் குடும்பம் என்று போய்க்கொண்டிருப்பவர்களுக்கு நடுவில் சமூகம் எனச்சிந்தித்து அதற்காக நேரத்தை, உழப்பை, பணத்தை செலவழிக்கும் எனது தோழர்களின் இழப்பு எப்போதும் அழியாத வருத்தத்தைத் தருகிறது. 

தம்பி ஆசிரியர் ஜெ.சுப்பிரமணியன் மதுரையில் விடுதலை பத்திரிக்கையின் முகவராகப் பணியாற்றியவர். வீடு வீடாகச்சென்று விடுதலையைக் கொண்டு சேர்த்தவர். மதுரை அருகில் உள்ள திருமங்கலம் நகராட்சி பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.தான் பணியாற்றிய பள்ளிக்கூடத்தினை  அரசாங்கப்பள்ளியை, தனியார் பள்ளிக்கு உரிய தரத்தோடு நடத்தியவர்.அந்த அரசுப்பள்ளியினை பலரின் உதவியோடு பள்ளிக்குழந்தைகளுக்கு சீருடை,ஒரே மாதிரியான பை எனப் பல வசதிகளை செய்துகொடுத்தவர் அவர்.சென்ற ஆண்டில் கொட்டும் மழையில் இதே நாளில் நிகழ்ந்த நிகழ்வுகள் வரிசையாக கண் முன்னே ஓடுகின்றது.மிகுந்த துயரத்தோடு இருந்தாலும் கறுப்பு உடையை அணிந்து அவரின் துணைவியார் கிருஷ்ண வேணி, அவரது மகன் சு.சித்தார்த், அவரது மகள் சு.யாழினி ஆகியோர் எந்தவிதமான சடங்குகள் இல்லாமல் இறுதி நிகழ்வு நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என உறவினர்களைக் கேட்டுக்கொண்டது,.அவரது உடல் எந்த விதமான மூடச்சடங்குகளும் இன்றி ஹார்வி பட்டியில் உள்ள சுடுகாட்டிற்கு வேனில் எடுத்துச்செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது,.இறுதியாக தனது துணைவரின் முகத்தைப் பார்த்து ,ஜெ.சுப்பிரமணியன் அவர்களின் துணைவியார் கிருஷ்ணவேணி அவர்கள்' " நீங்கள் கடைப்பிடித்த கொள்கையை நாங்கள் வாழ்க்கை முழுவதும் கடைப்பிடிப்போம். நான் எனது பிள்ளைகள் என்றும் பெரியார் கொள்கை வழிப்படி நடப்போம் " என பெருத்த குரலோடு உறுதிமொழி எடுத்தது என அனைத்தும் நினைவில் நிற்கின்றன. இறுதி நிகழ்வாய்   அஞ்சலிக் கூட்டம் நடந்ததும் அதில் அவரால் பலன் பெற்ற மாணவர் சரவணன் உட்பட பலர் பேசியதும் நினைவில் வருகிறது.

'தவிர்க்க இயலாததை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை "என்பார் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். உண்மைதான் ஏற்றுக்கொண்டு இன்னும் வேகமாக சமூகத்திற்கு உழைப்பதுதான் தம்பி சுப்பிரமணியன் போன்றவர்கள் நினைவைப் போற்றும் உண்மையான வழி.தொடர்வோம், தொண்டறம்-பகுத்தறிவுப் பணியினை.



திராவிடர் கழகத்தின் மாவட்ட துணைச்செயலாளர் சுப.முருகானந்தம் அவர்களின் ஜெ.சுப்பிரமணியன் நினைவுக் கவிதை

பொன்னுடல் நெஞ்சில் பெரியார்
புகன்றவை போற்றி போற்றித்

தென்றலை மிஞ்சும் மென்மை
தேனிதழ் தன்னில் தேக்கித்

தன்னல மில்லா வாழ்வில்
தன்னையே கரைத்த தம்பி

சென்றது மெங்கே யென்று
தேடுவோம் தினமும் காலை

தந்தைதாய் மறுத்த போதும்
தயவுடன் கெஞ்சிக் கெஞ்சிக்

கந்தையா யிருந்தோர் வாழ்வில்
கல்வியைப் புகட்டு தற்கு

முந்தியை விரித்துத் தானம்
முடிந்தவ ரிடத்தில் பெற்று

சிந்திய வேர்வை யிந்தச்
சீர்மிகு நிலத்தைக் காக்கும்

வந்தரு ளென்றே யுன்னை
வாயினா லழைக்க மாட்டேன்

தந்தது போதும் தம்பி
தாயக வுரிமைப் போரில்

முந்திநீ  நின்றாய் நாளும்
முடிந்தவை யாவுஞ் செய்தாய்

சிந்தையில் நினைத்த தெல்லாம்
செயலினில் செய்வோ மய்யா!!

Thursday, 22 January 2015

நிகழ்வும் நினைப்பும் 30 : இயக்க நிகழ்விற்கு கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களின் சொந்தக்காரர் -அண்ணன் சி.மனோகரன்





நிகழ்வும் நினைப்பும் 30 : இயக்க நிகழ்விற்கு  கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களின் சொந்தக்காரர் -அண்ணன் சி.மனோகரன்

நெல்லை மண்டல திராவிடர் கழகத்தலைவர், முன்னாள் தமிழக நெடுஞ்சாலைத்துறை தலைமைப்பொறியாளர் அண்ணன் சி.மனோகரன் அவர்கள் மறைவுற்றார் என்னும் செய்தி 09.01.2014 இரவு 9 மணியளவில் தோழர் ஈரோடு அவர்கள் மூலமாக கேட்டபோது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அண்ணே, கடையில்தான் இரவு 7 மணிவரை இருந்தார். பின்பு வீட்டிற்குச்சென்றார். வீட்டிற்குச்சென்றவுடன் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. அப்பாவும்( அய்யா தே.எடிசன்ராசா) அண்ணன் செல்வமும் (திராவிடர் கழக மாநில அமைப்புச்செயலாளர் ) சென்றார்கள். சென்று அடைவதற்குள் உயிர் பிரிந்துவிட்டது என்றார். மனோகரன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் திராவிடர் கழகத்தலைவர் அய்யா சிவனைந்தபெருமாள அவர்களின் மகன். சுயமரியாதைக்காரரின் மகனாகப்பிறந்து இறுதிமூச்சுவரை சுயமரியாதைக்காரராக வாழ்ந்து மறைந்திருக்கின்றார். அவர் மறைந்தவுடன் , சிலர் வந்து அவரின் இறுதிச்சடங்கிற்கு எப்படி ஏற்பாடு செய்வது என்று கேட்டவுடன் அவரது துணைவியார் பேராசிரியர் கஸ்தூரிபாய் மனோகரன் அவர்கள் , பெரியாரியல் முறைப்படிதான் இறுதி நிகழ்வுகள் நடக்கும் என்பதைச்சொன்னதோடு மட்டுமல்லாது, எங்கள் மாமனார் காலத்திலிருந்து எங்கள் வீட்டு நிகழ்வுகள் எல்லாம் எந்தவிதமான சடங்குகளும் இல்லாமல்தான் நடக்கும் என்பதனை மிகத்தெளிவாகவும் இயல்பாகவும் சொன்னார்கள் என்பது பெருமைக்குரியது.
தன்னுடைய வாழ்வை ஒரு தொண்டற வாழ்வாக அமைத்துக்கொண்டவர் அண்ணன் சி.மனோகரன் அவர்கள். அவரோடு நெருங்கிப்பழகிய  அய்யா சே.முனியசாமி (மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் )  இறுதி நிகழ்வில் உரையாற்றியபோது பல நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார். கடந்த 5 ஆண்டுகளாகத்தான் அவரோடு நான் பழகினேன். முழுவதுமாக என்னை வ்சீகரித்துக்கொண்டார், அவரின் பழகும்தன்மையும் நகைச்சுவை உணர்வும் , எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் மனப்பாங்கும் எவருக்கும் வாய்க்காது.எனது உயிரைப்போன்று ஒப்பற்ற நண்பராக விளங்கினார் என்றார்.எதற்கும் கலங்காத அவர் கண்ணீர் விட்டு அழுதார். அண்ணன் தே.எடிசன்ராசா அவர்கள், என் தந்தை பே,தேவசகாயமும், அண்ணன் மனோகரன் அவர்களின் தந்தை சிவனைந்தபெருமாளும் ஒன்றாக இயக்கப்பணியாற்றியவர்கள். நானும் அவரும் ஒன்றாகப் பணியாற்றினோம். அண்ணன் ம்னோகரன் அவர்கள் தலைமுறை இடைவெளி இல்லாமல் பழகக்கூடியவர் . என்னோடு பழகுவது போலவே எனது மகன்கள் ஈரோட்டுப்பெரியார், செல்வப்பெரியாரிடமும் பழகக்கூடியவர். ஒரு அருமையான இயக்கத்தவரை, குடும்ப நண்பரை இழந்தோம் என்றார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டக் கழகப்பொறுப்பாளர்கள் அனைவரும் கண்ணில் நீர் மல்க இரங்கலுரை ஆற்றி அண்ணன் மனோகரன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

               அண்ணன் சி.மனோகரன் அவர்களின் கண்கள்  மதுரையில் உள்ள அரவிந்த கண் மருத்துவமனைக்குத்  தானமாக வழங்கப்பட்டன.அவரது உடல் தூத்துக்குடியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் விதத்தில் தானமாக வழங்கப்பட்டது. திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் வீ.அன்புராஜ் அவர்கள் , உடலைத் தானமாக வழங்கும் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு இரங்கலுரை ஆற்றினார். அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் இரங்கலுரையை வாசித்தும், தன்னுடைய வீர வணக்கத்தைச்செலுத்தியும் , தூத்துக்குடியில் அய்யா பெரியார் சிலை அமைவதற்கும் , படிப்பகம் அமைவதற்கும் அவரின் பங்களிப்பை, கொடையுள்ளத்தை நினைவு கூர்ந்தும் உரை நிகழ்த்தினார்.

                           முதலில் அவர்கள் குடும்பத்தில் , அண்ணன் சி.மனோகரன் அவர்களின் தம்பி பேராசிரியர் சி.மகேந்திரன் அவர்களைத்தான் நான் அறிவேன். பேரா.சி.மகேந்திரன் அவர்களின் துணைவியார் திருமதி வெண்ணிலா அவர்கள் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பெரியார் பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டு முதல்பரிசு பெற்றவர். அவரின் திருமணத்தின் மூலம் சி.மகேந்திரன், பின்பு அவரின் மூலம் அண்ணன் சி.மனோகரன் அவர்கள் பழக்கம். ஆனால் பழக ஆரம்பித்த சில நாட்களிலேயே அவரின் வெள்ளை உள்ளமும், நகைச்சுவை உணர்வும், இயக்க நிகழ்வுகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்னும் உந்துதலும் மிக நெருக்கமாக ஆக்கியது. அடிக்கடி மதுரை தல்லாகுளம் வருவார். ஏதேனும் ஒரு இடத்தில் ஒரு டீயைக் குடிப்போம். பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மய்யத்திற்குச்செல்வோம். லேட்டஸ்டாக வந்த லேப்டாப் , ஆண்டிராய்டு எனக்கையில் வைத்திருப்பார். மைக்ரோ சிம், நானோ சிம் என செல்லில் போடுவார். எங்கு சென்றாலும் இண்டர் நெட் பயன்படுத்துவார். எனது மெயிலுக்கு விடாமல் ஏதேனும் தகவலகள், உலக அதிசயங்கள், மருத்துவக்குறிப்புகள் என அனுப்பிக்கொண்டே இருப்பார்.கடந்த முறை குடும்பத்தோடு குற்றாலம் சென்ற நேரத்தில் அவரின் உதவி மறக்க முடியாதது.

                     வெளியூர் செல்வது, மற்றும் இயக்க நிகழ்ச்சிகளுக்கு குறித்த நேரத்தில் சரியாக வந்துவிடுவார். அவர் வருகிறார் என்றாலே தாமதமாக வரும் ஆட்கள்கூட சரியான நேரத்திற்கு வந்து விடுவார்கள். கடந்த மாதம் சேலம் பொதுக்குழுவுக்குச்சென்ற போது, காலை 6 மணியிலிருந்து நாகமலைப்புதுக்கோட்டையில் வீட்டிற்குவெளியே நின்றிருக்கிறார், நாங்கள் சென்றது 6.30க்கு. அரைமணி நேரமாக வாசலிலேயே நிற்கிறேன் என்றார். ஏன் வந்தவுடன் வீட்டிற்குள்ளிருந்து வரலாமே என்றால் , என்னால் லேட் ஆகக்கூடாது என்றார். அதே போல் வெளியூர் செல்லும்போது பேச ஆரம்பித்தால் பட்டாசு வெடித்ததுபோல நாம் சிரித்துக்கொண்டே போகலாம். அவ்வளவு நகைச்சுவை இருக்கும் அவரது பேச்சில். பணத்தை எப்போதும் பெரிதாக நினைக்க மாட்டார். ஆனால் எப்போதும் கணக்கு வழக்கு சரியாக இருக்கவேண்டும் என நினைப்பார். பெரியாரியல் அடிப்படையில் சிலரோடு வாதிட்ட வாதங்களை விவரிப்பார். மிகவும் ஆர்வமாக இருக்கும். ஆறாவது படிக்கும்போது தந்தை பெரியார் அவர்கள் தூத்துக்குடியில் விடுதியில் தங்கியிருந்தபோது வாயிற்காப்பாளராக நின்ற கதையைக் கூறுவார். எல்லோருக்கும் உதவுவார். இயக்க நிகழ்வுகளுக்கு கொடுப்பதற்கு யோசிக்க மாட்டார். தாராளமாக தருவார். உடன் பிறந்தவர்களுக்கு மிகப்பெரிய வழிகாட்டியாக வாழ்ந்திருக்கிறார். இயக்க தோழர்களுக்கு மிகப்பெரிய தோழராக வாழ்ந்திருக்கிறார். தான் மறைந்த பின்பும் தனது கண்களையும், உடலையும் தானமாக வழங்கி பெரியாரியல் அடிப்படையில் வாழ்ந்ததுபோலவே மறையவும் செய்திருக்கிறார். இறக்கும்போது கூட ஏதாவது நகைச்சுவையாக கூற வேண்டும் என நினைத்திருப்பார் போலும். மலர்ந்த முகமாய் உடல் இருந்தது. இருப்பவர் எல்லாம் ஒரு நாள் இறப்பது உறுதி. ஆனால் இருந்தபோதும், இறந்தபோதும் மற்றவர்களின் நலனை முன்னிறுத்திய, இயக்க நிகழ்வுகளுக்கு கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களின் சொந்தக்காரர் அண்ணன் சி.மனோகரன் அவர்களின் புகழ என்றும் நிலைத்து நிற்கும். வாழ்க அவரின் தொண்டறம்.