உலகத் தமிழ்நாள்
உலகத் தமிழரெல்லாம்
ஒன்றாய்க் கூடுவோம்..
உலகத் தமிழ் நாளாம்
ஏப்ரல் இருபத்து
ஒன்பதை
எழுச்சியாய்க்
கொண்டாடுவோம்..
எந்தக் கவிஞர்
தமிழில்
புரட்சிக் கவிஞருக்கு
இணையாய்?
உலகில் எந்தக்
கவிஞர் பாடினார்?
புரட்சிக்கவிஞர்போல்
தம் தாய்மொழியை..
எங்கள் வளமும்
எங்கள் வாழ்வும்
மங்காத தமிழ் என்று
சங்கை முழங்கிய
பிற கவிஞர் யார்?
எக்கவிஞரை நினைக்கையிலே
உள்ளத்தில் உணர்ச்சி
கூடுகிறது?
எவர் கவிதையைப்
படிக்கையிலே
அநீதிக்கு எதிராய்
அணிதிரளும் படையில்
நாமும்
இணையவேண்டும் எனும்
எண்ணம் உதிக்கிறது?
அடுக்கடுக்காய்
ஆசிரியர் பணியில்
தண்டனைகள் கொடுத்தபோதும்
அஞ்சாமல் கண் துஞ்சாமல்
களப்பணியில் நின்று
பாரதிதாசன் போல்
பணியாற்றிய
பிற கவிஞர் எவர்
தமிழ்நாட்டில் ?
சங்க காலத்திற்குப்
பின்னே
இயற்கையின் எழிலை
தமிழில்
இவர் போல் எடுத்து
இயம்பியவர் யார்?
‘சுயமரியாதை உலகைச்’
சமைக்க
உந்துதல் தரும்
கவிதை எவரின் கவிதை?
சாதி மத இருட்டறையில்
உள்ள
உலகத்தின் செவிட்டில்
கவிதைகளால் அறை
கொடுத்த
வேறு கவிஞர் யார்
உலகில்?
‘பாரடா உனது மானுடப்பரப்பை’
என உலக மக்களெல்லாம்
ஒன்று
என உணர்த்தும்
கவிதை எவரின் கவிதை?
பேத உலகினைப் பெயர்க்கும்
கடப்பாரையாய்
வந்த கவிதைகள்
எவரின் கவிதைகள்?
இளையோர் காதலை
எழுதிக் குவித்த
கவிஞர்கள் உலகமெலாம்
உண்டு..
முதியோர் காதலைக்
கவிதையில்
கொண்டு வைத்த பிற
கவிஞர் எவர் உலகில்?
நாற்பதானாயிரம்
வரிகள் கவிதைகளாய்..
எளிய தமிழில் புரியும்
வகையில்
இத்தனை பா வகையில்
பாடிய பிற கவிஞர் யார்?
உரக்கச்சொல்வோம்..
உணர்ச்சியோடு சொல்வோம்..
உலகத் தமிழர் எல்லோரும்
ஒன்றாய் இணைந்து
சொல்வோம்..
புரட்சிக் கவிஞர்
பாரதிதாசன்
பிறந்திட்ட ‘ஏப்ரல்
இருபத்து ஒன்பதே’
உலகத் தமிழ் நாள்…
முனைவர் வா.நேரு
29.04.2024