Sunday, 22 January 2012

ஏடெழுதும் பார்ப்பனர்களே!

ஏடெழுதும் பார்ப்பனர்களே!
ஏதேனும் ஒருநாளிலாவது
இதயத்தின் ஓரத்திலாவது
உண்மையை எழுதுதல் வேண்டும்
எனும் எண்ணம் உண்டா ?

சிறீரங்கநாதர் சொர்க்கவாசல்
திறப்பன்று விரஜாநதி மண்டபத்தில்
பட்டர்களின்
வேத விண்ணப்பங்களை
கேட்டாராம் !

சொர்க்க வாசல்
திறப்பு பற்றி
பக்கம் பக்கமாய்
பத்திரிகைகளில்
டவுட் தனபாலுக்கு
எந்தவித டவுட்டுமில்லே

தினமணியில்
இது உண்மையா?
சரிதானா? நியாயம்தானா?
இது உங்கள்
கடிதத்திலும் இல்லை!
தலையங்கத்திலும் இல்லை!

சொர்க்க வாசலா!
திறப்பா ! அப்படியா?
என்று மாமிகள் எல்லாம்
செய்தி மட்டும்
விசாரித்துக் கொண்டிருக்க
உண்மைதான் என்று
நம்பி
நாலு மணிக்கு எழுந்து
ஏழு மணி நேரம்
வரிசையில் நின்னு
சொர்க்கவாசல் பார்க்க
கோவிலுக்குப் போய்வந்த
எங்க சின்னாத்தா
காலு ஒடிஞ்சு கிடக்கா
கூட்டத்திலே
மிதிபட்டு

படிக்காத பாமர ஜனங்க மண்டையிலே
ஏத்திட்டிங்கே
எங்க மக்களையெல்லாம்
மரமண்டையா ஆக்கிட்டீங்க

உனது நம்பிக்கை
என்கிறாய்
உருக்குலைக்கிறதே
எனது உறவுகளை
உடலால் உள்ளத்தால்
எப்படி பார்த்துவிட்டு
அது உனது நம்பிக்கை
என நான் எட்டிச் செல்வது

நாங்களும் சொல்லிப்
பார்க்கிறோம்
விடாமல்தான்
அவங்க காதுக்கு
எங்க செய்தி
போகுமுன்னே
எட்டுக் கால் பத்தியிலே
கூசாமல் புளுகுறீங்க !
முதியவர்கள் அப்படியே
வளர்ந்துவிட்டார்கள் !

மூளையிலே ஊனமாகி
விட்டார்கள் !
வருகுது பார் !
இளையோர் பட்டாளம் !
இணையத்திலும்
பேஸ் புக்கிலும் உங்களது
பொய்மைகளை நொறுக்கி!

பெரியார் வழிப்
பேரப்பிள்ளைகள் வருகிறார்கள் !
கைகளில் கணினியோடும்
கண்களில் பொய்மை
கண்டு பொங்கும்
வெறியோடும்!
உங்கள் சொர்க்கவாசல்
புரட்டும் இனி
ரொம்ப நாள் தாங்காது !

- வா.நேரு நன்றி - விடுதலை நாளிதழ் -14-1-12

Sunday, 8 January 2012

அண்மையில் படித்த புத்தகம் : கடவுளை பார்த்தவனின் கதை

நூலின் தலைப்பு : கடவுளை பார்த்தவனின் கதை
மூல ஆசிரியர் : லியோ டால்ஸ்டாய்
தமிழில் : பாலு சத்யா
வெளியீடு : புக்ஸ் பார் சில்ரன் , சென்னை-18
இரண்டாம் பதிப்பு : 2008
விலை : ரூ 20
மொத்த பக்கங்கள் : 64
மதுரை மைய நூலக எண் : 174037

லியோ டால்ஸ்டாய் மிகச்சிறந்த எழுத்தாளர் என்பதை நாம் அறிவோம். காந்தியார் தனது வாழ்க்கையில் பாதித்த நூல்களில் ஒன்று லியோ டால்ஸ்டாய் அவர்களின் போரும் அமைதியும் எனக் குறிப்பிடுவோர். எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட நூல் இந்த "கடவுளை பார்த்தவனின் கதை".புனிதப் பயணம் என்று பணத்தை அள்ளி இரைத்து சென்று வருபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கதை

இரண்டு பெரியவர்கள், இருவருமே கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், நிறையப் பணத்தை வைத்துக்கொண்டு புனிதப் பயணம் போகின்றார்கள் , அதில் ஒருவர் மிக ஏழ்மையோடு சாகக் கிடக்கும் குடும்பத்தைப் பார்த்து அவர்களுக்கு உதவுகின்றார். புனிதப் பயணம் போவதற்காக வைத்திருந்த பணத்தை இவர்களுக்கு செலவழித்ததால் , மீதப் பயணத்தை தொடர முடியவில்லை . பயணத்திலிருந்து திரும்பி ஊருக்கு வந்து விடுகின்றார். மற்றொருவர் புனிதப் பயணத்தை முடித்துக்கொண்டு ஊருக்கு வருகின்றார். இதுதான் கதை. ஆனால் இதனை லியோ டால்ஸ்டாய் சொல்லும் விதம் அற்புதம். லியோ டால்ஸ்டாய் 1828-ல் பிறந்து 1910-ல் மறைந்தவர். ஏறத்தாழ 150,160 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட கதையாக இருக்கலாம் இது. கடவுள் இல்லை என்று உரக்க சொல்லவில்லை இதில் ஆனால் மனிதனை நினை என்பது கடவுளை நினைப்பதை விட அதிகத் தேவையானது என்பது மிக அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

வா.நேரு - 09-01-2012

Thursday, 5 January 2012

மூன்று செய்திகள்

மூன்று செய்திகள்




30.12.2011 செய்தித் தாள்களில் மூன்று செய்திகள் என் கண்ணில் பட்டன. மூன்றுமே தனித் தனியானவை, ஆனால் கருத்து வகையில் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. முதல் செய்தி:

குறி சொல்வதாகக் கூறி பெண்ணை பலாத்காரம் செய்த சாமியார்

காளையார்கோவில், டிச 30: குறி சொல்வதாகக் கூறி, பெண்ணை பலாத் காரம் செய்த சாமியாரை, காளையார் கோவிலில் காவல்துறையினர் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், இளை யான்குடி அருகேயுள்ள திருவேங் கடத்தை சேர்ந்த கருப்பையா மகன் மாரிமுத்து.

இவர், காளையார்கோவிலில் வசிக்கிறார். ஊத்துப்பட்டியில், கருப்புசாமி கோவில் கட்டி, குறி சொல்லி வந்தார். சிறுவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா. கட்டடத் தொழிலாளி. இவர், கடந்த ஒரு வாரமாக சாமியார் வீட்டில் வேலை பார்த்து வந்தார். சாமியாரிடம் என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை; மருத்துவமனைக்கு செல்ல சம்பளம் தாருங்கள் எனக் கேட்டுள்ளார். உன் மனைவியை என்னிடம் அழைத்து வந்தால், குறி பார்த்து நோயை சரி செய்து விடுகிறேன் என சாமியார் கூறியுள்ளார்.

முத்தையாவும் இதை நம்பி, அவரின் மனைவி அழகம்மாளை சாமியார் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். கடந்த 27ஆம் தேதி இரவு 9 மணிக்கு சாமியார் அழகம்மாளை தனி அறைக்குள் அழைத்து சென்று பலாத்காரம் செய்து கழுத்தில் கிடந்த மூன்றரை பவுன் தங்க செயினை பறித்துள்ளார்.

மனைவியின் சத்தம் கேட்டு தட்டிக்கேட்ட முத்தையாவை சாமியார் அரிவாளால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை யாரிடமாவது சொன் னால், இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். காவல்துறை யினர் வழக்கு பதிந்து அழகம்மாளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சாமியார் மாரிமுத்துவைக் கைது செய்தனர்.

இரண்டாவது செய்தி மூடநம்பிக் கைகளை கைவிட்டு, அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்ட விஷயங்களை நம்ப வேண்டும்

சென்னை, டிச 30 : மூடநம்பிக்கை களைக் கைவிட்டு, அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்ட விஷயங்களை நம்ப வேண்டும்; மூட நம்பிக்கைகளால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து மனித இனத்தை அறிவியல் காத்து வருகிறது'' என, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட் ராமன் ராமகிருஷ்ணன் கூறினார். தொழில் அதிபரும், பாரதிய வித்யாபவன் முன்னாள் தலைவருமான, மறைந்த எஸ்.வி.நரசிம்மன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னையில் 29.12.2011 நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், வேதியியல் கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் பேசியதாவது: இன்றைய நவீன அறிவியலுக்கு, அய்ரோப்பாவில், 1600ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட ராயல் சொசைட்டி தான் அடிப்படை.

முந்தைய நம்பிக்கைகளிலிருந்து மாறு பட்டு, கோபர் நிகோஸ், கலிலியோ போன்ற விஞ்ஞானிகள் சூரியன் மற்றும் கோள்களின் இயக்கத்தைக் கண்டு பிடித்து அறிவித்தனர். அறிவியல் பல்வேறு காலகட்டங்களைக் கடந்து காலமாற்றத்துக்கு ஏற்ப தன்னைத் தானே சரி செய்து கொண்டு வளர்ந்து வந்துள்ளது. பரிசோதனைகளின் அடிப்படையில் நிரூபிக்கப்படும் நம்பிக் கைகள், சிந்தனைகளே அறிவியல். இவை உண்மைகளின் அடிப்படையில் சொல்லப் படுபவை.

ஜோதிடம் அறிவியல் பூர்வமானது அல்ல. கோள்கள், நட்சத்திரங்கள் நமது தலைவிதியை நிர்ணயிக்க கூடியவை அல்ல. பிறக்கும்போதே நம் தலைவிதி நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது என்பதற்கு அடிப்படை ஆதாரம் ஏதும் இல்லை.

நவீன விஞ்ஞானம் மருத்துவத்துடன் கைகோர்த்ததால் தான், மனிதனின் சராசரி ஆயுள் காலம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. மருத்துவத்திலும் அறிவி யல் பூர்வமான விஷயங்களை மட்டுமே நம்ப வேண்டும். ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாதவற்றை நம்பக் கூடாது.

சுற்றியிருக்கும் உலகத்தை நம்பிக் கையின் அடிப்படையில் பார்க்காமல் அறிவியல் பூர்வமாக பார்க்க வேண்டும். பலமுறை பரிசோதிக்கப்பட்ட விஷயங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும்..

மூன்றாவது செய்தி : அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தின் விளம் பரம் The Dirctorate of Distance Education, Annamalai University in collaboration with Saptharishi Astrological Sciences Training and Research Academy, Madurai, Offers the Diploma in Astrology Programme during the academic year 2011-2012.
Diploma in Astrology 293, Advanced Diploma in Astrology 450, B.A., in Astrology 820 M.A., in Astrology 821.

மேலே இருப்பது அவர்களுடைய அதிகாரபூர்வமான இணைய வலைத் தளத்தில் இருக்கும் விளம்பரம் படிப்பு இதற்கான கட்டணம் எப்படி விண்ணப் பிப்பது போன்ற விவரங்கள் இருக் கின்றன. இதன் அதாவது சோதிடப் பாடத்தின் பாடத்திட்டமும், பாடப் புத்த கங்களும் தனியார் அறக்கட்டளையால் தயாரிக்கப்பட்டு அளிக்கப்படும் என அறிவித்திருக்கின்றார்கள்.

முதல் செய்தியைப் பாருங்கள். கிராமத்தைச் சேர்ந்தவர், உழைப்பாளி, குறி சொல் லுதல், சாமியார் மீது நம்பிக்கை உள்ளது.அறியாமையால் சாமியாரை நம்பி அல்லல்படுகின்றார். இப்படி லட்சக் கணக்கான மக்கள் நாட்டில் உள்ளனர்.

தந்தை பெரியார் அவர்கள் சொல்வதைப் போல அவர்களின் மூளையில் மூட நம்பிக்கை சங்கிலி பூட்டப்பட்டுள்ளது. அதனை உடைத்து சாதாரண மக்களை இந்த சதிகாரர்களான சாமியார்கள், ஜோதிடர்கள் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும். இதனைத் தான் நமது அரசியல் சட்டம் கூட அறிவியல் மனப் பானமையை வளர்க்க வேண்டும் என்று கூறுகின்றது. இரண்டாவது செய்தியைப் பாருங்கள். நோபல் பரிசு பற்ற அறிவியல் அறிஞர், ஜோதிடம் பொய் என்று சொல்லி யிருக்கின்றார்.

பிறக்கும் நேரத்தை வைத்தெல்லாம் நமது வாழ்க்கை இல்லை, இதனை நம்பாதீர்கள், கோள்கள், நட்சத்திரங் களை வைத்தெல்லாம் நமது வாழ்க்கை இல்லை. .அறிவியல் பூர்வமாகப் பாருங் கள். மூடநம்பிக்கைகளை விட்டொழி யுங்கள் என்று கூறியிருக்கின்றார்.

இதனை வெளியிட்ட பத்திரிகை, இணைய தளத்தில் பின்னூட்டம் என்ற பெயரில் வெகுவாக இவரைச் சாடியிருக்கிறது. மூன்றாவது செய்தியைப் பாருங்கள். பல்கலைக் கழகத்தில் சோதிடப்பாடமாம். சிரிப்பாய் வரவில்லை.

பல்கலைக் கழகத்தில் திருடுவது எப்படி எனச் சொல்லிக்கொடுக்கலாமா? ஏமாற்றுவது எப்படி எனச் சொல்லிக் கொடுக்கலாமா? அறியாமையில் இருக் கும் மக்களிடமிருந்து பணம் பறிப்பது எப்படி எனச் சொல்லிக் கொடுக்கலாமா? மோசடித்தனத்தை மட்டுமே அடிப்படை யாகக் கொண்ட சோதிடத்தைப் பல்கலைக் கழகங்களில், அதுவும் தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகங்களில் சொல் லிக் கொடுக்கலாமா?

கல்வியாளர்கள் எதிர்க்க வேண்டாமா? மாணவர் அமைப் புக்கள் எதிர்க்க வேண்டாமா? அறிவி யலுக்குப் புறம்பான இந்த ஏமாற்றுத் தனத்தை எப்படிப் பொறுப்பது? களத்தில் இறங்க வேண்டாமா? அண்ணாமலைப் பல்கலைக் கழகம் புகழ் பெற்ற பல்கலைக் கழகம். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தனது வாழ்வியல் சிந்தனைகள் நூலில் அதன் பெருமை களை, அதனை நிறுவிய வள்ளல் அண்ணாமலை செட்டியார் அவர்களின் தனித்தன்மைகளை சிறப்பித்து சொல் லியிருப்பார் தமிழர் தலைவர் ஆசிரியர் போன்ற பல வரலாற்று நாயகர்களை உருவாக்கிய பல்கலைக் கழகம் . அப்படி பெருமைக்குரிய பல்கலைக் கழகம்தான் ஒரு தனியார் டிரஸ்டோடு சேர்ந்து இதனை சொல்லிக் கொடுக்கிறோம் என்று ஆரம்பித்திருக்கின்றார்கள், இந்தக் கொடுமையைக் கண்டு சும்மாயிருப்பதா?

சோதிடம் என்பது மனிதர்களின் வாழ்க்கையோடு விளையாடுகின்றது. அதிலும் இந்தியா போன்ற படித்த தற்குறிகள் அதிகம் வசிக்கும் நாடுகளில் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் சோதிடம் என்னும் பொய்மை கலக்கப்படுகினறது மிகச் சாதுரியமாய். தினசரி ராசிபலன், வார ராசி பலன், மாத ராசி பலன், வருட ராசி பலன் என்று ஒரு பக்கம், வாஸ்து சாஸ்திரம், பெயர் மாற்றம், குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி இப்படி ஏகப்பட்ட மோசடி வித்தைகளால் மக்கள் ஏமாற்றப்படுகின் றார்கள். பல்கலைக் கழகங்கள் கல்வியின் மூலம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்து இப்படிப்பட்ட மூடப்பழக்க வழக்கங்களிலிருந்து மக்கள் விடுபட வழி செய்ய வேண்டும், அதற்கு மாறாக மேலும் மூடத்தனத்தில் மூழ்கும் வண்ணம் பாடத் திட்டம் கொடுக்கலாமா? ஊடகங்கள் செய்ய வேண்டும் சோதிட எதிர்ப்பு பிரச் சாரத்தை?

ஆனால் நம் நாட்டில் தொலைக் காட்சிகளும், செய்தித்தாள்களும் தான் இந்த பொய்மையாம் ஜோதிடத்தைப் பரப்புவதில் முன்னணி வகிக்கின்றனர். இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகை இன்றைய ராசி, இன்றைய நாள் பலன், இன்றைய நட்சத்திர பலன் என்று ஆரம் பித்து 20 தலைப்புகளில் சோதிட பலன் என்று போட்டிருக்கின்றார்கள்.

எல்லாப் பத்திரிகையும் சோதிட இணைப்புகள் வழங்குகின்றன, விடுதலைதான் இதனை எதிர்த்து உண்மையை எழுதுகின்றது. எது எதற்கோ, சந்தேகப்படும் டவுட் தனபாலு' இதில் மட்டும் எந்த வித சந்தேகமும் இல்லாமல் அந்தப் பரிகாரம் செய்யுங்கள், சரியாகும், இந்தப் பரிகாரம் செய்யுங்கள் சரியாகும் எனத் தன் பார்ப்பன இனம் உழைக்காமல் வாழ கைகாட்டிக் கொண்டி ருக்கின்றாரே, தமிழ் இனத்தைச் சார்ந்த வர்களுக்கு உணர்ச்சி வர வேண்டாமா?

தமிழ்த் தேசியம் பேசுகின்றவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? அதே பத்திரிகை பெயர் வைக்க ஜோதிடத்தின் அடிப்படையில் கொடுத்திருக்கும் எழுத்துக் களைப் பாருங்கள்

இன்று (30.12.11) காலை 11.05 வரை பிறக்கும் குழந்தைகளுக்கு பெயர் வைக்க முதல் எழுத்துகள்:

கோ (GI) ஸ (SA) ஸி (SI) ஸு (SU) கொ, ஸா, ஸீ, ஸூ

இன்று காலை 11.05க்கு பின் பிறக்கும் குழந்தைகளுக்கு பெயர் வைக்க முதல் எழுத்துகள்:

ஸே(SE) ஸோ (SO) தா (THA) தி (THI)

இரண்டு எழுத்துக்களைத் தவிர மற்ற எழுத்துக்களுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு? ஜோதிடம் என்னும் பெயரில் மறைமுகமாய் தமிழன் தன் பிள்ளைக்குத் தமிழில் பெயர் வைப்பது தடுக்கப்படு கின்றதே நரித்தனமாய், இது ஈரோட்டுக் கண்ணாடி போட்டவர்களுக்கு பளிச் செனத் தெரிகிறதே , மற்றவர்களுக்குத் தெரியவில்லையா?

பார்ப்பனப் பத்திரிகைகள் ஜோதிடத் திற்கு எதிராக எழுத மாட்டார்கள். அறிவியலின் அடிப்படையில் ஜோதிடம் ஓர் இட்டுக்கட்டிய பொய் என்றாலும் உண்மையைச் சொல்ல மாட்டார்கள்.

பார்ப்பனர்கள் ஏடெழுதும் பாழ்நிலைமை போகுமட்டும் பைந்தமிழ்க்கோ சீர்ப்பெரிய நாட்டினுக்கோ சிறிதேனும் நன்மை யில்லை என்றார் புரட்சிக்கவிஞர். ஆம், ஊடகங்கள் அனைத்தும் பெரும்பாலும் பார்ப்பனர்கள் கையில்தான் இருக்கிறது.

விடுதலைதான் எழுதுகிறது, அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாய் ஒரு நாத்திக பத்திரிகையின் ஆசிரியராய் தொடர்ந்து இருந்து உலக சாதனை படைத்துள்ள ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுது கிறார் என்றால் நமது தமிழ் இனமக்கள் இந்த ஜோதிட நம்பிக்கையால் படும் துன்பங்களிலிருந்து விடுபட எழுது கின்றார்.

கல்வி என்பது அறியாமையைப் போக்க வேண்டும், ஆனால் அறியாமை யில் இருக்கும் மக்களை மேலும் அறியா மையில் ஆழ்த்துகின்ற செயலை செய்யும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தைக் கண்டிக்கிறோம். உடனடியாக சோதிடப் பாடப்பிரிவை நீக்கவேண்டும். இல்லை யெனில் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவதன் மூலம் நீக்க வைக்க வேண்டும்.
நன்றி - விடுதலை 06.01.2012 - 2ஆம் பக்கம் கட்டுரை

Tuesday, 3 January 2012

அண்மையில் படித்த புத்தகம் : சந்தித்ததும் சிந்தித்ததும்

நூலின் தலைப்பு : சந்தித்ததும் சிந்தித்ததும்

ஆசிரியர் : முனைவர் கு.ஞானசம்பந்தன்

வெளியீடு : அமுதம் பதிப்பகம், மதுரை-20

முதல் பதிப்பு : செப்டம்பர் 2011

மொத்த பக்கங்கள் : 76

விலை : ரூ 60


பிள்ளைகள் பெரும்பாலும் நகைச்சுவைக் காட்சிகளைத்தான் தொலைக்காட்சிகளில் பார்க்க விரும்புகிறார்கள், செல்லும் பேருந்துகளில் திரைப்படத்திற்குப் பதில் நகைச்சுவைக் காட்சிகளை ஒலிபரப்புகிறார்கள், அந்தளவிற்கு டென்சன் மிகுந்த பர பர உலகில் நகைச் சுவையின் தேவையிருக்கிறது. ஒரு சிறந்த , படிக்கும்போதே நம்மை வாய்விட்டு சிரிக்கவைக்கும் புத்தகமாக 'சந்தித்ததும் சிந்தித்ததும் ' வந்திருக்கிறது.

10 கட்டுரைகளின் தொகுப்பு. கமல் பற்றி, எழுத்தாளர் சுஜாதா பற்றி, பாக்யராஜ் பற்றி, மதுரையில் இருந்த தங்கம் திரையரங்கு பற்றி, சுற்றுலா சென்றது பற்றி, கையில் காசில்லாமல் ஓசியில் தீபாவளிக்கு வேட்டுப் போட அலைந்தது பற்றி என்று பல்வேறு தலைப்புகளில் கருத்துக்களை கூறியுள்ளார்.

பேச்சில் அனைவரையும் சிரிக்க வைக்கும் ஆற்றல், எழுத்திலும் வந்திருப்பது வியப்புதான். பாராட்டுக்குரியதுதான். அதிலும் இள்வயதில் வைகை அணைக்கு சுற்றுலா கூப்பிட்டுச் சென்றதில் இருக்கும் நகைச் சுவை இருக்கிறதே ,அப்பப்பா.... நேற்று இரவு இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு சிரித்துக்கொண்டே படுத்தேன். இன்று காலை மீதம் இருப்பதை படித்துவிட்டு சிரித்துக்கொண்டே கணினி முன் அமர்ந்திருக்கிறேன்.

கடுமையான வேலைப்பளுவில் இருப்பவர்களிடம் கொடுத்து , கொஞ்சம் படித்து, சிரித்து ,இளைப்பாறுங்கள் என்று கூறலாம்.

வா.நேரு, 4.1.2012

Saturday, 31 December 2011

அண்மையில் படித்த புத்தகம் ; முழுமையாகச் செய்யுங்கள் (DO IT TI A FINISH )

அண்மையில் படித்த புத்தகம் ; முழுமையாகச் செய்யுங்கள் (DO IT TI A FINISH )

நூலின் தலைப்பு : முழுமையாகச் செய்யுங்கள் ( DO IT TI A FINISH )

மூல நூலின் ஆசிரியர் : ஆரிசன் ஸ்வெட் மார்டன்
தமிழில் : மலர்க்கொடி B.A.
வெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம், சென்னை- 600017 தொலைபேசி: 2433 2682
முதற்பதிப்பு : நவம்பர் 2005
நான்காம் பதிப்பு : ஜீலை 2010
மொத்த பக்கங்கள் : 56
விலை : ரூ 28.

மொத்தம் 9 தலைப்புகளில் உள்ள 56 பக்கம் உள்ள புத்தகம். முழுமையாக, அருமையாக மொழி பெயர்க்கப்பட்டுள்ள புத்தகம் . மொழி பெயர்ப்பாளருக்கு பாராட்டுக்கள்(ஆங்கிலத்தில் உள்ளதையும் படித்ததால்) .

முழுமையாகச் செய்தல் என்றால் என்ன? ஏன் முழுமையாகச் செய்ய வேண்டும், ஒரு சிறு கவனக்குறைவு எப்படியெல்லாம் பாதிக்கும் போன்ற பல்வேறு தகவல்களை ஆரிசன் விவரிக்கும் போக்கே தனித்தன்மையானது. இளைஞர்கள் அதிலும் குறிப்பாக ஒரே நேரத்தில் ஏகப்பட்ட வேலைகளை அரைகுறையாகச் செய்துவிட்டு பரபரவென்று தெரிவோர் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம். தொழிலுக்கும் நடத்தைக்கும் உள்ள தொடர்பு (THE RELATION OF WORK TO CHARACTER) என்னும் அத்தியாயம் 'ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை " என்பதனை விளக்கும் அத்தியாயம் எனலாம். தனக்கு உண்மையாயிருத்தல், நேர்மையாயிருத்தல் போன்றவையே சாதிக்கத் துணை புரியும் என்பதனை பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கியிருக்கிறார். பக்கம் 49,50 ல் உள்ள பிரபல நீதிபதி, வேலி கட்டிய இளைஞன் ஒரு நல்ல எடுத்துக்காட்டான பதிவு.

வா.நேரு -31-12-11

Friday, 30 December 2011

டிசம்பர் 24: தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம்

விடுதலையின் விழுமிய பணிகள்
கழகத்தின் களப்பணி பேச்சாளர்களின் உரை வீச்சு

சென்னை, டிச. 29- சென்னை - பெரியார் திடலில், தந்தை பெரியாரின் நினைவுநாள் நிகழ்ச்சிகளுள் ஒன்றாக நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 24.12.2011 அன்று மாலை 4.30 மணிக்கு விடுதலையின் விழுமிய பணிகள் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங் கத்திற்கு பேராசிரியர் முனைவர் நம்.சீனிவாசன் தலைமை வகித்தார். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் முன்னிலை வகித் தார். கருத்தரங்கத்தின் தொடக்க உரையினை பேராசிரி யர் முனைவர் பு.இராசதுரை ஆற்றினார். பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு வருகை தந்தோரை வரவேற்றுப் பேசினார்.

விடுதலை சந்தித்த அடக்குமுறைகள் எனும் தலைப்பில் விடுதலை இதழ் பல்வேறு சமூகத் தளங்களில் ஆற்றிவரும் முன்னேற்றப் பணிகளைப் பற்றி வழக்குரைஞர் அ.அருள்மொழி, முனைவர் அதிரடி க.அன்பழகன், தஞ்சை இரா.பெரியார்செல்வன், இராம.அன்பழகன் ஆகியோர் கருத்துச் செறிவு மிக்க உரைகளை ஆற்றினர்.

கருத்தரங்கின் நன்றியுரையினை திராவிடர் மகளிர் பாசறையின் செயலாளர் பொறியாளர் கனிமொழி வழங்கினார்.

விடுதலை - இரவும் பகலுமாய் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்ப் பத்திரிகை

முனைவர் பு.இராசதுரை பேசியதாவது: ஆண்டாண்டு காலமாக, மன்னர் ஆட்சி காலம் முதற்கொண்டு பார்ப்பனர்கள் ஆதிக்கம் தலைதூக்கியே வந்தது. வீரம் மிகு மன்னர்கள் எல்லாம் கடவுள் தத்துவ மயக்கத்தில் பார்ப்பனர்களின் அடிமைகளாகவே இருந் தனர். பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியார் பொது வாழ்க்கையில் தலை எடுத்ததற்குப் பின், அவரது அருஞ் சமூகப் பணியினால் அடிமைத்தளை மெல்ல மெல்ல விலக ஆரம்பித்தது.

அறிவுப் புரட்சிக்கான வித்து முளைத்து விளைச்சல் தரத் தொடங்கியது. தந்தை பெரியார் ஏற்படுத்திய அறிவுப்புரட்சியின் ஆற்றல்மிக்க கருவி, கருத்துப் படைக்கலன்தான் விடுதலை ஏடு. 1935ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் வாரம் இருமுறை ஏடாகத் தொடங்கப்பட்டதுதான் விடுதலை.

விடுதலை ஏடு வெளிவந்ததன் மகிழ்ச்சியை தனது குடிஅரசு இதழில் தந்தை பெரியார் வெளிப்படுத்தினார். ஒவ்வொரு பார்ப்பனர் அல்லாதாரும் இரவும் பகலுமாய் தமிழ் பத்திரிகை, தமிழ்ப் பத்திரிகை என்ற தாகத்துடன் அலைந்து கொண்டிருந்த வேளையில் வெளிவந்துள்ளது விடுதலை ஏடு. விடுதலை வெளிவந்ததைப் பார்த்து எந்தப் பார்ப்பனரல்லாதாரும் தங்களுக்கு ஏதோ ஒரு பாக்கியம் கிடைத்ததாக மகிழ்ச்சி அடைவார்களே ஒழிய, இதற்கு மதிப்புரை வருகின்றதா, அது எப்படி வருகிறது என்று கவனிக்க மாட்டார்கள். தமிழ் மக்கள் எதிர்பார்த்த படி தமிழ்பத்திரிகை வந்துவிட்டது.

அதைத் துய்த்து தினசரிக்கு நிலைநிறுத்த வேண்டியது தமிழர்களின் கடமை என அறைகூவல் விடுத்தார். அன்றைய விடுதலை யின் ஆண்டுச் சந்தா 3 ரூபாய் 62 காசுகள். அப்படி ஆரம்பிக்கப்பட்ட விடுதலை ஏட்டினை நீதிக்கட்சியின் தலைவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தந்தை பெரியாரால் தினசரி ஏடாக மாற்றம் பெற்று ஈரோட்டி லிருந்து காலணா விலையில் வெளிவரத் துவங்கியது.

பணச்சுமை, நிருவாக நட்டம் மிகுந்த நிலையில் 1962ஆம் ஆண்டில் விடுதலை ஏட்டினை அதற்கு மேல் நடத்திட முடியாது என்ற நெருக்கடியில்தான் இயக்கத் திற்கு வாராது வந்த மாமணியாய், நமது ஆசிரியர் வீரமணி அவர்கள் கிடைத்தார். அவரது பொறுப்பில் விடுதலையை ஒப்படைத்தார். தந்தை பெரியார். விடுதலை ஏட்டின் வெள்ளி விழாவின் போது விடுதலை சந்தா சேகரிப்புப் பணியாக இரண்டு மாத கால அவகாசத்தில் 2500 சந்தாக்கள் சேகரிக்க வேண்டும் என்று தந்தை பெரியார் வேண்டுகோள் விடுத்தார்.

அப்படிப்பட்ட சந்தா சேகரிப்பு நிலையிலிருந்து இன்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுதலை ஆசிரியராக 50 ஆண்டுப் பொது வாழ்வின் சிறப்பாக மூன்றே மாதங்களில் 50,000 விடுதலை சந்தாக்களை வழங்கிட முன் வந்துள்ளோம். விடுதலை சந்தா சேகரிப்பு என்பது வெறும் பத்திரிகை சந்தா சேகரிப்பு அல்ல. தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளை அவரது இயக்கப் பணியின் இன்றைய தேவையை, சமூகத்தின் மூலை முடுக்கெல்லாம் எடுத்துக்கொண்டு சேர்க்கும் நீடித்த நிலைத்த கருத்துப் பிரச்சாரப் பணியாகும்.

அப்படிப்பட்ட விடுதலை ஏட்டின் வளர்ச்சி பன்மடங்கு பெருகி தமிழ்ச் சமுதாயத்திற்கு பயன்படவேண்டும் என வாழ்த்துகிறேன். அதற்கு உண்டான பணிகளுக்கு ஆக்கம் சேர்த்திட அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். விடுதலை -
சமூகப் பணிக்கான போர்வாள்
பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு அவர்கள் தந்தை பெரியாரைப் பற்றி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் எழுதிய கவிதையை மேற்கோள் காட்டி அத்தகைய சமூகப் பணிக்கான போர்வாள் விடுதலை ஏடு என எடுத்துரைத்து அதன் வளர்ச்சிக்கு மேலும் வலுகூட்ட வேண்டும் என்றார். வருகைதந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

விடுதலை - வெறும் செய்தித்தாள் அல்ல கருத்து இதழ்

முனைவர் நம்.சீனிவாசன் பேசியதாவது: பயிற்சி வகுப்புகளும், கருத்தரங்குகளும் அறிவு ஆட்சி செய்யும் களமாகும். சுயமரியாதை இயக்கம் தொடங்கிய நாள் தொட்டு கருத்துப் பிரச்சாரத்திற்கு இந்த அறிவியல் வடிவம் பயன்பட்டு வருகிறது.

விடுதலை நாத்திகக் கருத்துகளைத் தாங்கி வரும் ஒரே நாளிதழ். இது செய்தித்தாள் அல்ல; கருத்து இதழ். ஒழுக்கக் கேடானதும், மூடநம்பிக்கைகளை வளர்க்கக் கூடியதும், தமிழ்மக்களுக்குச் சமுதாயத்திலும், அரசிய லிலும், உத்தியோகத் துறையிலும் கேடு அளிக்கக்கூடியது மான காரியங்களை வெளியாக்கி, அக்கேடுகளைப் போக்குவதற்காகப் பயன்படும் பத்திரிகை விடுதலை என்று விடுதலை ஏட்டின் இலட்சியப் பணியினை தந்தை பெரியார் தெளிவுபடுத்துகிறார்.

சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய வற்றைத் தமிழ் மக்களிடத்தே வலியுறுத்தி வளர்த்தல், தீண்டாமைக் கொடுமை ஒழிப்பு, வேத, சாஸ்திர, புராண இதிகாசங்களை எதிர்த்து ஒதுக்குதல், புரோகிதம் புறக்கணிப்பு, கடவுள் மதக்கற்பனைகளை மறுத்தல், பெண்ணடிமை நீக்கம், கைம்பெண் மணம், மணவிலக்கு உரிமை, சுயமரியாதை முறை வாழ்க்கை ஒப்பந்தம், வடமொழி, இந்தி மொழிகளின் தீங்குகளைத் துடைத் தெறியக் கிளர்ச்சிகள் மேற்கொள்ளுதல், வடநாட்டாரின் வல்லாட்சி கூடாதென அறவழிப்போராட்டங்களை நடத்துதல், அனைத்துச் ஜாதிப் பிரிவினருக்கும் கல்விச் செல்வம் கிட்டுமாறு செய்தல், அரசுப்பணிகளில் வகுப்பு வாரி உரிமை வழங்கும் சட்டம் இயற்றல் இவற்றையெல்லாம் வழங்குவதற்கான முயற்சிகள், சிறை வாழ்க்கையையும் ஏற்க அணியமாயிருத்தல் முதலிய தன்மான இயக்கக் கொள்கைகள்-திட்டங்கள் தொடர்பாக கருத்துகளைத் தாங்கி வெளிவந்து கொண்டிருக்கும் இதழ் விடுதலையே என்று பேராசிரியர் இறையனார் விடுதலையின் பாதை இலக்கணத்தை வரையறை செய்கிறார்.

விடுதலை என்ற சொல் எந்த பொருள் உடையது.
ஜாதியிலிருந்து விடுதலை
மதத்திலிருந்து விடுதலை
மூடநம்பிக்கையிலிருந்து விடுதலை
அடிமைத்தனத்திலிருந்து விடுதலை
வறுமையிலிருந்து விடுதலை
ஆணாதிக்கத்திலிருந்து விடுதலை
சுரண்டலிலிருந்து விடுதலை
பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து விடுதலை
பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து விடுதலை
என்று பரந்து விரிந்த பொருளைக் கொண்டிருக்கிறது விடுதலை.

விடுதலையின் சாதனை சாதாரணமானதல்ல. தமிழ் அறிஞர்களையும், மடாதிபதிகளையும் மக்களுக்குச் சேவை செய்ய அழைத்த பெருமை விடுதலைக்கு உண்டு. சைவத்தின் உச்சியில் தான் உண்டு, தன் சைவம் உண்டு என்று தவமிருந்த தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரை 1938இல் இந்தித் திணிப்பை எதிர்த்து களமிறக்கியது விடுதலை. தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களை யும் மக்கள் மன்றத்திற்கு அழைத்து வந்ததும்-தந்தை பெரியாரும், விடுதலையும்தான். அதனை அடிகளாரே ஒப்புக்கொண்டு பேசியதுண்டு.

மாநில அரசுப் பணியில் நடைமுறையில் இருந்த ஊழியர்களுக்கான ரகசியக் குறிப்பை எதிர்த்து அந்த நடைமுறையினை நீக்கிய ஏடு விடுதலை. ஜாதி வெறியர்களின் நிர்ப்பந்தத்தின் பேரில் பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட சத்துணைவுக் கூட பெண் சமையல் பணி யாளருக்கு ஆதரவாக கண்டித்து எழுதி மாவட்ட ஆட்சியர் மூலம் பணியிட மாறுதல் ஆணையினை ரத்து செய்திட வைத்தது விடுதலை ஏடுதான்.

இப்படி சமுதாய மேம்பாட்டில் விடுதலை ஏட்டின் பங்கு பற்றிய விடுதலையின் விழுமிய பணிகள் எனும் கருத்தரங்கம் பகுத்தறிவுக் கருத்துப் பரவலுக்கு மேலும் வலுவூட்டும். உரையாற்றுவோரின் கருத்து வீச்சு களப் பணியில் எதிரொலிக்க வேண்டும். தமிழர் வீடுதோறும் விடுதலை என்பது நடைமுறை இயல்பு எனும் நிலையினை உருவாக்கிட நாம் பாடுபட வேண்டும் எனக்கூறி கருத்தரங்கை தொடங்கி வைப்பதும், உங்களைப் போல் கேட்டு மூளைக்குள் பதித்து வைப்பதும் என் பணியாகும். கருத்தரங்கினை மகிழ்ச்சியோடு தொடங்கி வைக்கிறேன்.

விடுதலை - உரிமை மீட்புப் பணி

முனைவர் இராம.அன்பழகன் பேசியதாவது: தமிழர் தம் இயற்கைச் செல்வமீட்பு, பொருளாதார மேம்பாட்டுப் பணியில் விடுதலை ஏட்டின் பணி மகத்தானது. நெய்வேலியில் நிலக்கரி எடுப்பதில், தமிழக மக்களுக்குப் பயன்படுகின்ற வகையில் மாநில அரசுக்கு ராயல்டி கிடைக்க வேண்டும் எனும் கோரிக்கையினை முதன் முதலாக எடுத்து வெற்றியைப் பெற்றது விடுதலை ஏடு. பெரும்பாலான மக்கள் ராயல்டி என்பதன் பொருள், உரிமை பற்றிய விளக்கம் பெற்றது விடுதலை ஏட்டின் வாயிலாகத்தான். கிடப்பில் போடப்பட்டிருந்த சேது கால் வாய் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்ததில் ஆரம்பக் காலம் முதல் பெரும்பங்கு வகித்தது விடுதலை தான்.

முல்லைப் பெரியாறு நீரில் தமிழகத்திற்கான உரிமை யினை தக்க வைக்கும் தரு விடுதலை. சபரிமலைக்குப் போகும் பக்தர்களை உரிமை வேட்கை கொள்ளச் செய்து பக்தி மாலையை எடுத்துப்போட்டுவிட்டு போராட வைத்தது விடுதலை நாளிதழ். சேர வேண்டிய ஒப்பந்த அடிப்படையிலான நீர்ப் பங்கீட்டு உரிமை என தொடர்ந்து வலியுறுத்தி தமிழர்தம் உரிமை மீட்புப் பணியில் உரக்கக் குரல் எழுப்பி வருவது விடுதலை ஏடு. தமிழர்தம் உரிமை மீட்பு விடியலுக்கான தனித்துவமான, சிறப்புமிகு போர்க்கருவி விடுதலையே.

விடுதலை - பகுத்தறிவுப் பணி

தஞ்சை பெரியார்செல்வன் பேசியதாவது: மற்ற ஏடுகளிலிருந்து விடுதலை ஏடு முற்றிலும் மாறுபட்டது. ஜோதிடம், ராசிபலன், சொல்லாத ஏடு விடுதலை. மத பண்டிகைக்களுக்கு விடுமுறை விடாத ஏடு விடுதலை. அய்ரோப்பிய நாத்திக அறிஞர் லெவி பிரகல் டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசும் பொழுது, உலகில் நாத்திகக் கொள்கையினை தாங்கி பரப்பிவரும் ஒரே நாளேடு விடுதலை எனக் குறிப்பிட்டது உலக பத்திரிகை உலகில் விடுதலை ஏட்டின் தனியிடத்தை சிறப்பிடத்தை பறைசாற்றுவதாக உள்ளது.

பார்ப்பனர்களின் வஜ்ஜீராயுதம் ஊடகங்கள். அத் தகைய ஊடகத்துறையில் பல வித எதிர்ப்புகளையும் தாண்டி பீடு நடைபோட்டு வருகிறது விடுதலை. டில்லியில் பிள்ளையார் பால் குடிக்கிறார் எனும் செய்தி யினை கன்னியாகுமரி வரை எடுத்துச் சென்ற பார்ப்பனர் களின் செயலை தமிழர் தலைவரின் பிள்ளையார் பால் குடிப்பதை நிரூபித்தால் ரூ.1 லட்சம் வழங்கப்படும் எனும் அறிவிப்பால் மூடநம்பிக்கையை முறியடித்த பெருமை விடுதலைக்கு உண்டு. பகுத்தறிவின் அடிப்படையில் மனிதநேய உணர்வுடன் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக தொடர்ந்து குரல் கொடுத்து நடை முறைக்கு பாடுபட்டு வருகிறது விடுதலை.

அய்யப்ப மகரஜோதி - அப்பட்டமான பொய், மோசடி என பிரச்சாரம் செய்ததில் அரசே மகரஜோதி என்பது மனிதசெயல்தான் என ஒப்புக்கொள்ளச் செய்தது விடுதலை. மலைபோன்று நிலைத்துவிட்ட மூடநம்பிக்கையை பகுத்தறிவு உளிமூலம் செதுக்கிய பெருமை விடுதலைக்கு உண்டு. மூடநம்பிக்கை பலூனை, பகுத்தறிவு ஊசிகொண்டு குத்தி செயலிழக்கச் செய்து வலு விழக்கச் செய்தது விடுதலை என்பது வரலாற்றுச் செய்தி மட்டுமல்ல, தொடர்ந்து வரும் நிகழ்வுகளாகும்.

விடுதலை - இனமானப் பணி

முனைவர் அதிரடி க.அன்பழகன் பேசியதாவது: திராவிடர்களுக்கு குரல் கொடுக்க திராவிடர்களிடம் இன உணர்வினை இன மேம்பாட்டு எதிர்பார்ப்பினை ஊக்கப் படுத்திய ஏடு விடுதலை. தமிழர் தலைவர் வீரமணி அவர்களை விடுதலை ஏட்டின் ஆசிரியர் பணியினை ஏற்றிட தந்தை பெரியார் வேண்டுகோள் விடுத்தபொழுது, இந்து ஆங்கில நாளேடு தலையங்கமாக எதை எழுது கிறதோ அதற்கு எதிராக எழுதினாலே நமது கருத்து வெளிப்பட்டு விடும் எனப் பொருள்படும் வகையில் ஆசிரியருக்கு அறிவுறுத்தியது ஒன்றே போதும்; அதுவும் விடுதலையின் இனமானப் பணிக்கு எடுத்துக் காட்டாக அமைந்துவிட்டது.

மேலும் இராஜாஜி விடுதலையும், நாயக்கரும் (பெரியார்) எனது அன்பான எதிரிகள் எனக் குறிப்பிட்டது விடுதலை திராவிடர் இனம் மேம்பாட்டுக்கு பாடுபட்டு வரும் ஏடு என்பதற்கு விளக்கமாக அமைந்துவிட்டது. கலைஞர் ஒரு முறை காய்ச்சலால் உடல்நலம் குன்றிய நிலையில், காஞ்சி சங்கராச்சாரியார், தான் கடவுளிடம் விடுத்த வேண்டுகோளால் கலைஞருக்கு காய்ச்சல் வர செய்துவிட்டார் எனும் சிறிதும் மனிதநேயமற்ற மதவாதி யின் செயலை, ஆரிய ஆதிக்க அடையாளத்தை தோலுரித் துக் காட்டியது விடுதலை ஏடு.

விடுதலை ஏட்டின் இனப்பற்றினை டவுட் செய் யும் சில ஏடுகள் அவுட் ஆகிவிடும் நாள் தூரத்தில் இல்லை. அந்த தூரத்தின் தொலைவை குறைக்கும் பணி விடுதலை ஏட்டின் பரந்துபட்ட வாசிப்பில்தான் நிறைவேறும். திராவிடர் இனமும் மேம்படும்.

விடுதலை - சமூகநீதிப்பணி

வழக்குரைஞர் அ.அருள்மொழி பேசியதாவது: விடுதலை ஏட்டிற்கு எதிர்ப்பு வந்தபொழுது தந்தை பெரியார் எழுதுகிறார். தனிப்பட்ட ஜாதியை எதிர்க்கவோ, மதத்தை துரத்தவோ, தனி மதத்தை துவக்கவோ விடுதலை எடு தொடங்கப்படவில். இந்த நாட்டிற்குச் சொந்தமான ஒரு பெரிய மக்கள் கூட்டத்தை குறிப்பிடுவ தற்கு ஒரு பெயர் கூட இல்லை. பலநூற்றாண்டுகளாக நிலவிவந்த இந்த இழிவை போக்க வந்த ஏடு விடுதலை எனக்கூறினார்.

சமூகநீதித்தளத்தில் விடுதலை ஏடு அளப்பரிய சாதனை புரிந்துள்ளது. அவ்வப்போது இடஒதுக்கீட்டின் நடைமுறை குறைபாடுகளை, எதிர்ப்பாடுகளை குறித்து எழுதி சமூகநீதியை நிலைநாட்டி வருகிறது. எடுத்துக் காட்டாக சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள மொத்த நீதிபதிகளில் 10 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்த வர்கள். மொத்த நீதிபதிகளில் ஏறக்குறைய சரிபாதிப்பேர் பெண் நீதியரசர்கள்.

இத்தகைய நிலைமை இந்தியாவின் எந்த உயர்நீதிமன்றத்திலும் இல்லை. சமூகநீதிக்குச் சாதகமாக அரசியல் அதிகாரத்தில் உள்ளோரை, மக்கள் மன்றத்தின் கருத்தைத் திரட்டுவதன் மூலம் பக்குவப் படுத்தி, நேர்செய்து, கொண்டு சென்ற பணியில் விடுதலை ஏடு பெரும்பங்கு வகிக்கிறது.

1980களில் தமிழ்நாட்டில் சென்னையைத் தலைமையிட மாகக் கொண்டுள்ள இந்தியன் வங்கியில் பெரும்பாலான அதிகாரப் பொறுப்பில் பார்ப்பனர்கள் இருந்து அக்கிரகார வங்கி எனச் சொல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டதை பாராளுமன்றத்தில் பேச வைத்தது நிவர்த்தி செய்தது விடுதலை ஏடு. சமூகத்தின் அடித்தள மக்கள் வீட்டுப் பிள்ளைகள் கல்வி வாய்ப்புகளில் உரிய இடம் பெறுவதற்கு தடையாக இருந்த நுழைவுத்தேர்வினை நீக்கப் பாடுபட்டது விடுதலை நாளிதழ்.

இன்னும் சொல்லப்போனால் நுழைவுத் தேர்வு நுழைவதற்கு முன்பே அதன் பாதக அடையாளங்களை எடுத்துக்கூறிய ஏடு விடுதலைதான் ரூ.9000 வருமான வரம்பு ஆணையை விலக்கிக்கொள்ள வைத்தது. தமிழகத்தில் 69 விழுக்காடு, சட்ட வடிவ இடஒதுக்கீட்டுக்கான ஏற்பாடு, மண்டல் குழு பரிந்துரை நடைமுறையாக்கம் என விடுதலையின் பங்கு, வரலாற் றுச் சுவடுகளாய் தடம் பதித்து நிற்கிறது. வஞ்சிக்கப்பட்டு வரும் தமிழ்நாட்டின் உரிமைக்கு குரல் கொடுத்துவரும் விடுதலை ஏட்டிற்கு நன்றி. விடுதலை ஆசிரியர் தமிழர் தலைவருக்கு நன்றி.

கருத்தரங்கின் உரை வீச்சால் கருஞ்சட்டைப் பட்டாளத்திற்கு நினைவூட்டலும் ஊக்கமும், இன உணர்வாளர்களுக்கு புத்தாக்கமும் ஒருங்கே கிடைத்தது, வருகை தந்த அனைவரும் பரந்துபட்ட தளத்தில் விடுதலை ஏட்டின் விழுமிய பணி பற்றிய செய்தி மழை யில் நனைந்து சென்றனர். கருத்து வீச்சால் எழுச்சியும் பெற்று மகிழ்ந்தனர்.

திராவிடர் கழக மகளிர் பாசறையின் செயலாளர் பொறியாளர் கனிமொழி நன்றி கூறிட கருத்தரங்க நிகழ்வு நிறைவு பெற்றது.

- தொகுப்பு வீ.குமரேசன்

Tuesday, 27 December 2011

அண்மையில் படித்த புத்தகம்(28.12.11)- குழந்தைகளைக் கொண்டாடுவோம்

நூலின் தலைப்பு : குழந்தைகளைக் கொண்டாடுவோம்
ரஷ்ய மூலம் : ஷ.அமனஷ்வீலி
தமிழில் : டாக்டர் இரா.பாஸ்கரன்
தமிழில் மறுவரைவு : முனைவர் அ.வள்ளிநாயகம்
வ.அம்பிகா
முதல் வெளியீடு : டிசம்பர் 2007,புக்ஸ் பார் சில்ரன்
விற்பனை உரிமை : பாரதி புத்தகாலயம்,சென்னை-18 -044-24332924
மொத்த பக்கங்கள் : 158
விலை : ரூ 80

சோவியத் நாட்டின் கல்வியியல் அறிஞர் ஷ.அமனஷ்வீலி ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் பாடம் நடத்தியது, பாடம் நடத்துவதற்கு முன் ஆசிரியரின் மனநிலை, பாடம் நடத்துவதற்காக அவர் தயாரித்த முன் தயாரிப்புகள் - மனதாலும், செய்கையாலும் போன்றவற்றை விவரிக்கும் நூல். ஷ.அமனஷ்வீலி கைவசம் இருந்த 800 பக்க நாட்குறிப்பின் அடிப்படையில் , பள்ளி திறந்த 1வது நாள், 20,84,122,170-வது நாட்களிம் நிகழ்ந்தவைகளை படம் பிடித்துக் காட்டும் நூல்.

26.12.2011 விஜய் டி.வி.யில் நடந்த நீயா? நானா? நிகழ்ச்சியில் (ஆசிரியர்கள் & மாணவர்கள்) ,ஒரு மாணவர் "ஆசிரியர்கள் எந்தவிதமான தயாரிப்பும் இல்லாமல் வந்து எதையாவது பேசி வகுப்பைப் போரடிக்கவைத்து காலத்தைக் கடத்துகிறார்கள் "எனக்குறிப்பிட்டார். கல்லூரி மாணவ,மாணவிகள் புரிந்துகொள்வார்கள் -ஆசிரியர் தயாரிப்போடு வந்திருக்கிறாரா, இல்லையா என்று. ஆனால் 6 வயதுக் குழந்தைகள் புரிந்துகொள்ள இயலுமா? புரிய இயலாத குழந்தைகளுக்குப் பாடம் நடத்தப்போகும்போது எவ்வளவு தயாரிப்போடு போகவேண்டும், அப்படிச் சென்றால் வகுப்பில் எவ்வளவு வெற்றி பெற முடியும் , எவ்வளவு தூரம் அந்தப் பிள்ளைகள் மனதில் இடம்பிடிக்க முடியும், இந்தப் புத்தகத்தைப் படித்தால் உணரலாம்.குழந்தைகள் பற்றி அக்க்றை உள்ள யாரென்றாலும் அவர்கள் ஆசிரியர்களாக இருக்கலாம்,பெற்றோர்களாக இருக்கலாம், கல்வியாளர்களாக இருக்கலாம், சமூக அக்கறை உள்ளவர்களாக இருக்கலாம் அவர்கள் எல்லாம் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

"குழந்தைகள் என் ஆசிரியர்கள் " என்றுதான் முதல் அத்தியாயம் தொடங்குகிறது. கற்றுக்கொள்ள எவ்வளவு விசயங்கள் குழந்தைகளிடம் இருக்கின்றன என்பதனை உணர்த்துகிறார். " நாங்கள் பிறந்ததிலிருந்து நல்லவர்கள், எங்களைக் கொடியவர்களாக ஆக்காதீர்கள் " எனக் குழந்தைகள் கூறுவார்கள் என பக்கம் 16-ல் குறிப்பிடுகின்றார். பெரும்பாலான பள்ளிகள் அப்படித்தான் இருக்கின்றன நம்மைச் சுற்றி . நல்லவர்களாக வரும் குழந்தைகளை கெட்டவர்களாக ஆக்குவதற்காக.

"குழந்தைகள் பெரியவர்களாக உதவ வேண்டும் என்றால் அவர்களில் தன்னைப் பார்க்கவேண்டும்.அவர்களின் மூலம் தன்னைத்தானே மேம்படுத்திக்கொள்ள தனது குழந்தைப் பருவத்தை மீண்டும் அவர்களின் உருவத்தில் காணவேண்டும்,என்றென்றும் மனிதாபிமானம் மிக்க ஆசிரியராக இருக்க வேண்டுமெனில் குழந்தையோடு குழந்தையாக வாழவேண்டும் " பக்கம் 39

" இங்கே குழந்தையுடைய மனதின் ஒவ்வொரு பகுதியையும் சீராட்டி வளர்க்க வேண்டும்.சிறு இதயங்களின் ஒவ்வொரு ஜீவ அசைவிலும் மனித நேயத்தை ஊட்ட வேண்டும் " -பக்கம் 45
"உண்மையான ஆசிரியர்கள் இறப்பதில்லை,இவர்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்,யுவதிகளில் கரைந்து அவர்களை உயர்ந்த லட்சியங்களை உடைய நபர்களாக மாற்றுகின்றனர் " பக்கம் 24

இப்படி நூற்றுக்கணக்கான மேற்கோள்களை இப்புத்தகத்தில் காட்டலாம். ஒரு மணி நேரத்திற்குமேல் இப்புத்தகம் குறித்து மட்டுமே ஆசிரியர்கள், பெற்றொர்கள் முன் பேசலாம் அந்தளவிற்கு நிறைய அனுபவங்களை சொல்லும் நூலாக உள்ளது இப்புத்தகம். தமிழில் மறுவரைவு செய்த முனைவர் அ.வள்ளி நாயகம்,வ.அம்பிகா,மொழி பெயர்த்த டாக்டர் இரா.பாஸ்கரனை இப்புத்தகத்தை வாங்கிப் படிப்பதன் மூலம் பாராட்டலாம். இப்புத்தகத்தை என்னிடம் அளித்த(விற்பனை செய்த) மதுரை புத்தகத்தூதன் பா.சடகோபன் (9443362300) அவர்களுக்கு என் நன்றிகள். ஒரு நல்ல புத்தகத்தைப் படித்து முடித்தால் அதில் வரும் திருப்தி ......................படித்துப் பார்த்தால்தான் தெரியும்.

வா.நேரு - 28.12.11

Sunday, 25 December 2011

நேற்று (25.12.2011 ) படித்த புத்தகம்

நூலின் தலைப்பு : புதிய நோக்கில் புரட்சிக் கவிஞர்
நூலின் ஆசிரியர் : இல.சொ.சத்தியமூர்த்தி, எம்.ஏ., பி.எல்.
பதிப்பகம் : வயல்வெளிப் பதிப்பகம்,இடைக்கட்டு, உள்கோட்டை(அஞ்சல்),பெரம்பலூர் மாவட்டம்- 612901
விலை : ரூபாய் ஐம்பது
முதல் பதிப்பு : திசம்பர் 2003

தமிழில் பலதுறை சார்ந்த அறிஞர்கள் எழுதுகிறார்கள். இந்த நூலின் ஆசிரியர் ஒரு நீதிபதி. கல்லூரிக் காலத்தில் புரட்சிக் கவிஞர் பற்றிக் கலந்து கொண்ட கட்டுரைப்போட்டியில் வெற்றி பெறுகின்றார். பின் பல் வருடங்கள் கழித்து அந்தக் கட்டுரையின் அடிப்படையில் இந்த நூலை எழுதியிருப்பதாகக் குறிப்பிடுகின்றார். புரட்சிக் கவிஞர் பற்றி பல நுட்பமான செய்திகளை உள்ளடக்கிய புத்தகமாக இந்தப் புத்த்கம் உள்ளது.

மொத்தம் 128 பக்கங்கள் உள்ள இந்தப் புத்தகத்தில் 10 தலைப்புகளில் கருத்துக்கள் தரப்பட்டுள்ளன. புதிய நோக்கில் புரட்சிக் கவிஞரை பார்த்திருக்கின்றார் என சொல்லலாம். "கல்வி நல்காக் கசடர்களுக்குத் தூக்கு மரம் உண்டாம் " எனும் கவிதையைக் குறிப்பிட்டு , கற்றவன் ஒவ்வொருவனும் கல்லாதவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்னும் கருத்தில் பாடிய பாடல் என்பதனை எடுத்துக் காட்டுகளோடு கூறியுள்ளார். மிகவும் அக்க்றையோடு பல்வேறு தகவல்களைத் திரட்டி ஒன்று சேர்த்து , தன் எழுத்துக் கை வண்ணம் சேர்த்துக் கொடுத்துள்ளார். பாராட்டப் படவேண்டியவர். மதுரை மத்திய நூலகத்தில் இதன் எண்: 156244.

வா.நேரு ,26.12.2011

பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் நூல் அறிமுக விழா

பகுத்தறிவாளர் கழக மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு எழுதிய பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் நூல் அறிமுக விழா
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முனைவர் வா.நேரு எழுதிய பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் புத்தக வெளியீடு

பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் சோம.இளங்கோவன் பங்கேற்றார்

மதுரை, டிச. 15- 11.12.2011 ஞாயிறு மாலை 6.00 மணியளவில் மதுரை நியூ காலேஜ் ஹவுஸ், திருவள்ளுவர் அரங்கத்தில் பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் நூல் அறிமுக விழா நடைபெற்றது.

விழாவிற்கு வந்தவர்களை இனிப் போடு வரவேற்று வா.நேரு, நே.சொர் ணம் இணையரின் குழந்தைகள் சொ.நே.அன்புமணி, சொ.நே.அறிவு மதி ஆகியோர் பகுத்தறிவுப் புத்தகங் களை வழங்கினர். விழாவிற்கு வந்த அனைவரையும் மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் க.அழகர் வரவேற்றார்.

வீ.குமரேசன்

பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் தலைமை யேற்று உரையாற்றினார். அவர் தனது உரையில் பகுத்தறிவாளர் கழகத்தை தந்தை பெரியார் அவர்கள் தொடங் கியதன் நோக்கம், தொடக்க காலம் முதல் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் புரவலராக இருந்து வழி நடத்தும் இயக்கமாகிய பகுத்தறி வாளர் கழகத்தின் சிறப்புகள், ஆசிரி யர் அவர்களின் அணுகுமுறை போன்ற பல்வேறு செய்திகளைக் கூறி, கவிதை நூலைப் பாராட்டி பேசினார். தொடர்ந்து சிகாகோ, பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் அவர்கள் கவிதை நூலினை வெளியிட முதல் பிரதியினை திராவிடர் கழகத் தின் மாநில சட்டத்துறைத் தலைவர் கி.மகேந்திரன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தி.க. தலைமை செயற்குழு உறுப்பினர் தே.எடிசன் ராசா, மண்டலத்தலைவர் வே.செல்வம், மண்டல செயலாளர் மீ.அழகர்சாமி, மதுரை புற நகர் மாவட்டத் தலைவர் மா.பவுண்ராசா நூலினைப் பெற்றுக் கொண்டனர்.

பேராசிரியர் நம்.சீனிவாசன்

கவிதை நூலின் ஆய்வுரையினை மதுரை மன்னர் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் பேரா.நம். சீனிவாசன் அளித்தார். அவர் தனது ஆய்வுரையில் தமிழ்க் கவிதையின் வகைகள், புதுக் கவிதையின் சிறப்புக்கள், கவிஞர் வைர முத்துவின் கவிதைகள் போன்றவற் றைக் கூறி பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் என்ற கவிதையினை முழுமை யாக வாசித்து சிறப்புக்களை எடுத்துக் கூறி கவிதை நூலின் நிறை குறைகளை எடுத்துரைத்தார்.

தொடர்ந்து தி.க. நெல்லை மண்ட லத் தலைவர் பொறியாளர் சி.மனோ கரன், ப.க.பொதுச் செயலாளர் வடசேரி வ. இளங்கோவன், தொலை தொடர்புத் துறை தொ.மு.ச. மாவட்ட செயலாளர் ந.முருகன், எழுத்தாளர் க.சி. அகமுடை நம்பி, மதுரை மாநகர் மாவட்ட ப.க. தலைவர் சே.முனிய சாமி, செயலாளர் சுப.முருகானந்தம், பழக்கடை வணிகர் சங்க செயலாளர் அ.முருகானந்தம், திருப்பூர் ஜோ. இராஜேந்திரன், ஐ.ஓ.சி. உதவி மேலா ளர் இரா.பழனிவேல்ராஜன், வழக்கறி ஞர் நா.கணேசன், தேனி மாவட்ட ப.க. தலைவர் ஸ்டார் நாகராசன், திண்டுக் கல் மாவட்ட ப.க. செயலாளர் மு.நாக ராசன், அருப்புக்கோட்டை தி.ஆதவன், அய்யா ஆனந்தம், வா.நேருவின் தாயார் சு.முத்துக்கிருட்டிணம்மாள், தங்கை ஆசிரியை வா.சாரதா, அண் ணண்கள் ஆசிரியர் வா.ஜெயராஜ், வா,தமிழ் செல்வன், மாமா சு.இராதா கிருட்டிணன் , வா.நேருவின் துணைவி யார் நே.சொர்ணம் மற்றும் பலர் கவிதை நூலினைப் பெற்றுக்கொண் டனர்.

நூலினைப் பெற்றுக்கொண்டு கருத்துரையினை பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் தகடூர் தமிழ்ச் செல்வி, மதுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் முனைவர் க.பசும்பொன் ஆகியோர் அளித்தனர். தொடர்ந்து திராவிடர் கழகத்தின் மாநில சட்டத்துறைத் தலைவர் கி.மகேந்திரன் கவிதை நூலினை விமர்சனம் செய்து உரையாற்றினார்.

டாக்டர் சோம.இளங்கோவன்

நிறைவாக பெரியார் பன்னாட்டு மையத்தின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் நிறைவுரை யாற்றினார். அவர் தனது உரையில் புரட்சிக் கவிஞரின் பாடல்களை எடுத்துக்கூறி நேருவின் கவிதைகளை ஒப்பிட்டுக் கூறினார். தந்தை பெரியா ரின் தனித்துவத்தை எடுத்துக்கூறினார். 'பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் ' கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகளை எடுத்துக்கூறி விமர்சனம் செய்தார்.

தமிழர் தலைவர் அவர் களின் உழைப்பினைக் கூறி அவருக்கு முழுமையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண் டார். இணையத்தில் வரும் அவதூறு களுக்கு பதிலடி கொடுக்கும் பழனி தமிழ் ஓவியா, காரைக்குடி பிராட்லா போன்றவர்களைப் பாராட்டினார். இணையத்தை ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டும், அது ஒன்றும் கடினமல்ல என்று எடுத்துரைத்தார். தமிழ் ஓவியாவிற்கு நினைவுப் பரிசு அளித்துப் பாராட்டினார்.

முடிவில் வா.நேரு ஏற்புரையாற் றினார். தனது ஆசிரியர் வீரி செட்டி அவர்கள் இவ்விழாவிற்கு வந்து சிறப்பித்ததற்காகவும் மற்றும் தனது தாயார், உறவினர்கள், நண்பர்கள், இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்தார். சிக்காகோவில் இருந்து இங்கு வந்த நிலையில், இந்த விழாவிற்கு வந்து சிறப்பித்த, இந்த கவிதை நூலினை வெளியிட்ட பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் அவர்களுக்கு என்றைக் கும் நன்றி உடையவனாக இருப்பேன் என்று உரைத்தார்.

நூலினைப் படித்த சிலர் கருத்துக் களை சொல்லும்விதம் மிகக் கடுமை யாக இருப்பதாகக் குறிப்பிட்டார்கள். யாரையும் புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல, பண்படுத்துவதே எங் கள் நோக்கம், அதுவே எங்களுக்கு தந்தை பெரியாரும் , தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களும் கற்றுக் கொடுத்த பாடம் எனக்குறிப்பிட்டார்.

முடிவில் மானமிகு பதிப்பகத்தின் உரிமையாளரும், ப.க. மாவட்ட துணை செயலாளருமான பா.சடகோ பன் நன்றி கூறினார். விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு தமிழர் தலைவரின் அறிவுரைப்படி சால்வைக்குப் பதிலாக விழா நினை வுப் பரிசுகள் அளிக்கப்பட்டன.

மாநில ப.க.

ப.க. தோழர்கள் விடுதலை சந்தா ரூ.3,74,430 2013-இல் உலக பகுத்தறிவு, மனிதநேய மாநாடு

மாநில ப.க. கலந்துரையாடலில் தமிழர் தலைவர் அறிவிப்பு

சென்னை, டிச. 19-சென்னை பெரியார் திடலில் மாநில பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் ரூ.3,74,430 விடுதலைக்கான சந்தா வழங்கப்பட்டது. 2013ஆம் ஆண்டின் துவக்கத்தில் உலக பகுத்தறிவு மனிதநேய மாநாடு நடைபெறும் என்று கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி அறிவித்தார்.

விடுதலை ஆசிரியராக தமிழர் தலைவர் பொன் விழா ஆண்டில் சென்னையில் பகுத்தறி வாளர் கழக மாநில, மாவட்டப் பொறுப்பா ளர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தாவாக ரூ3,74,430 அளிக்கப்பட்டது.

ஊமை.ஜெயராமன் உள்ளிட்ட தோழர்கள் கழகத் தலைவரிடம் சந்தாவை வழங்கினர்.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் 18.12.2011 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு சென்னை-பெரியார் திடல் அன்னை மணியம்மை மன்றத்தில் தொடங்கியது. கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்டு பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலை வர் கி.வீரமணி அவர் கள் வழிகாட்டு நெறி யுரையாற்றினார்.

பொறுப்பாளர்கள் தாங்கள் சேகரித்த விடுதலை சந்தாக்களின் தொகையாக ரூ3,74,430 அய் தமிழர் தலைவ ரிடம் அளித்தனர்.

கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக அமெரிக்காவில் உள்ள பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம.இளங் கோவன் கலந்துகொண் டார்.

பொதுச் செயலாளர் வீ. குமரேசன்

கலந்துரையாடல் கூட்டத்திற்கு வருகை தந்த பொறுப்பாளர் களை, தோழர்களை வரவேற்று பகுத்தறிவா ளர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.குமரே சன் உரையாற்றினார்.

விடுதலை சந்தா சேகரிப்புப் பணியில், கடந்த கலந்துரையாடல் கூட்டங்களில் வழங்கப் பட்ட தொகை, களப்பணி ஆற்றிவரும் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களின் மாவட்ட அளவிலான பங்கேற்பு, பங்களிப்பு பற்றி எடுத்துக்கூறினார்.

இயக்கத்தின் பிற அணியினருடன் இணைந்து பணியாற்றி, தங்களது விடுதலை சந்தா சேகரிப்பு பங்க ளிப்பினை தனித்துவ மாக காட்டிடும் பகுத் தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களின் பணிபற்றி ஊக்கப்படுத் திப் பேசினார். விடுதலை ஆசிரியராக தமிழர் தலைவர் பொன்விழா ஆண்டு நிறைவு பெற இருக்கின்ற தருணத்தில் விடுபட்ட விடுதலை சந்தாக்களை சேகரித்து இன்னும் முனைப்பாகப் பணி ஆற்றிட வேண்டு கோள் விடுத்தார்.

ப.க. தலைவர் வா. நேரு

பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் வா.நேருவுக்கு தமிழர் தலைவர் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.

பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் வா.நேரு தலைமை உரையாற்றியதாவது:
பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக 50 ஆண்டுகள் விடுதலை நாளிதழின் ஆசிரியராக தொடர்ந்து பணியாற்றி சாதனை படைத்திருக் கும் அய்யா ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்து களை, பாராட்டுகளை, நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறோம்.

தந்தை பெரியாரின் இயலே, மனிதநேய நெறி, உலகுக்கு புதுப் பாதை காட்டும் நெறி-அந்த நெறியை உலக மெங்கும் பரப்பிட அய்யா ஆசிரியர் அவர் களின் பணிக்கு உறு துணையாக இருப் போம். பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக பிற மொழிகளில் நமது இயக்க நூல்கள் வெளி யீடு, இணையதள பயிற்சி முகாம் போன்ற வற்றை முன்னெடுத்துச் செல்வோம் என்றார்.

தமிழர் தலைவர் நெறியுரை

பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் கி.வீரமணி நெறியுரையாற்றினார்.
விடுதலை ஏட் டிற்கு சந்தா சேர்த்திடும் பணியில் முனைப்பாக ஈடுபட்டுள்ள பகுத்தறி வாளர் கழகத்தின் செயல்பாடு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பகுத்தறிவாளர் கழகத் தின் பணித்தளம் பரந்து பட்டது.

பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப்பா ளர்கள் மற்றும் தோழர் கள் அரசுப்பணி, அலு வலகப் பணியில் ஈடுபட் டுள்ள தன்மையால் களம் இறங்கி போராட்ட தளத்தில் பங்கேற்க இய லாது. ஆனால் பகுத்த றிவுக் கருத்துகளை மூட நம்பிக்கை ஒழிப்பினை, அறிவியல் மனப்பான்மை வளர்ப்பது பற்றிய பிரச் சாரப் பணியில் முழு மையாக ஈடுபடலாம்.

பெரியார் உலக மயமாக்கல் பணியில் பகுத்தறிவாளர் கழகம் பெரும்பங்கு வகித்திட வேண்டும். வெளி மாநி லங்களில் அயல்நாடு களில் பெரியாரின் மனிதநேயக் கருத்துகள் சென்றடையும் வகையில் பல்வேறு நவீன தொழில் நுட்ப தளங்களான இணையதளம், மின் னஞ்சல் மூலம் பிரச்சா ரம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

2013ஆம் ஆண்டின் துவக்கத்தில் உலக பகுத்தறிவு, மனிதநேய மாநாடுபெரியார் உலகமய மாக்கல் பணியில் ஒரு கட்டமாக 2013ஆம்ஆண்டு தொடக்கத்தில் இயக்கத்தின் சார்பாக உலக பகுத்தறிவு, மனிதநேய மாநாடு நடத்திட வேண்டும்.

அம்மாநாட்டினை நடத்துவதில் பகுத்தறிவாளர் கழகத்தின் பணி பெரும்பங்கு வகித்திட வேண்டும். கால அவகாசம் கணிசமாகவே உள்ளது. பகுத்தறிவுக் கருத்துகள் பரப்பும் பணியினை பல்வேறு தளங்களில் பிரித்து காலக்கட்டத்தின் முன்னுரிமை அறிந்து களப்பணி ஆற்றிட தோழர்கள் முன் வரவேண்டும். விடுதலை சந்தா சேர்க்கும் பணியினை நிலைத்து நீடிக்கும் கொள்கை பரப்பும் அணுகுமுறையாகக் கருதி அளிக்கப்பட்ட இலக்கினை பொறுப்பாளர்கள் விரைந்து முடித்திடல் வேண்டும் என்று கூறி விளக்கவுரையாற்றினார்.

பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் கலந்துரையாடல் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் பேசியதாவது:

கணினி தொழில்நுட்பம் வளர்ந்து வரும் சூழலில் கருத்துப் பரப்பும் பணியிலும் புதுமையான தொழில்நுட்ப அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இணையதளம் மூலம் உலகின் மூலை முடுக்குகளில் உள்ளவர் களிடமெல்லாம் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு இருப்பதை முழுமையாகப் பயன்படுத்தும் வண்ணம் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தங்களது அணுகுமுறை ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த நூற்றாண்டும், இன்னும்வருகின்ற காலமும் பெரியார் கருத்து வெற்றியடையும் காலம் என்பது உறுதி. தந்தை பெரியார் விட்டுச் சென்ற சொத்துகளுக்கெல்லாம் முதன்மைச் சொத்து தமிழர் தலைவர் ஆசிரியர் ஆவார்கள். அவர்களது வழிகாட்டுதலில் வரக் கூடிய காலங்களில் பெரியார் உலகமயமாக்கல் மேலும் வலுப்படும். வலுப்படுத்தும் கரங்களாக கழகத் தோழர்கள் செயல்பட வேண்டும் என்றார்.

கோ.சாமிதுரை

திராவிடர் கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை தமது உரையில் கூறியதாவது:
பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் இயக்கத்தின் மற்ற அணியினரைவிட, பலதரப்பட்ட மக்களுடன் பழகும் வாய்ப்பினைப் பெற்றவர்கள். பழகுநிலைச் சூழலுக்கு ஏற்றவாறு பகுத்தறிவுக் கருத்து பிரச் சாரப் பணியில் ஈடுபட முன்வரவேண்டும். விடுதலை சந்தா சேகரிப்புப் பணியில் பகுத்தறி வாளர் கழகத் தோழர்கள் தனி முத்திரை பதித்திட வாய்ப்பு உள்ளது. அந்த வாய்ப்பினை வளப்படுத்தி சந்தா சேகரிப்புப் பணியினை விரைந்து முடித்திட வேண்டுகிறேன்.

கவிஞர் கலி.பூங்குன்றன்

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் தமது உரையில் கூறியதாவது:

விடுதலை சந்தா சேர்த்திடும் பணியில் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் பல்வேறு மாவட்டங்களில் இயக்கத்தின் இதர அணித் தோழர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின் றனர். தனிப்பட்ட முயற்சியில், உரியவர்களைச் சந்தித்து சந்தா தொகையினை மட்டுமல்ல. விடுதலை வளர்ச்சிக்கு நிதி திரட்டும் ஆற்றல் பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கு உண்டு. அந்த ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தி விடுதலை பரப்பும் பணியில் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட பங்களிப்பினை விரைந்து, குறித்த காலத்தில் முடித்திட பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் முயல வேண்டும்.

முயற்சி திருவினை யாக்கும் என்பது உங்களது செயல்பாடுகளில் பிரதிபலித்திட வேண்டும். மேலும் கலந்துரை யாடல் கூட்டத்தில் பகுத்தறி வாளர் கழகத்தில் மாநில துணைத் தலைவர் பொறுப்பினை புதிதாக ஏற்றுள்ள கோ.ஒளிவண்ணன் மற்றும் தென் சென்னை மாவட்ட தலைவர் டாக்டர் ஆர்.எஸ். இரத்தினசபாபதி ஆகியோர் உரையாற்றினர்.

Tuesday, 25 October 2011

உதைக்கும் கழுதையின்

பூமாதேவி
ஒரு கடவுள்
பன்றி
ஒரு கடவுள்
பன்றியும்
பூமாதேவியும்
போகம் செய்ததால்
நரகாசுரன் பிறந்தானாம்

கதை சொன்னேன்
இந்தக் கதை
எல்லாம் யார்
நம்புகிறார் என்றான்

எந்தக் கதையை
வைத்து சேது
சமுத்தரத் திட்டம்
தடுக்கப்பட்டது
நிறுத்தப்பட்டது என்றேன்

ஆமாம்ல என்றான்
தீபாவளி என்றால்
தீப ஒளித் திருநாள்
அல்லவோ என்றான்

இல்லை இல்லை
இது ஆரியப் பகட்டு
உடன்பிறப்பே உனக்கே
இது புரியவில்லையே என்றேன்

உதைக்கும் கழுதையின்
காலுக்கு உதை வாங்கியோன்
தங்கத்தால் இலாடம் கட்டுவதும்
ஆட்டை அழைத்து
ஓநாய்க்கு விருந்தளி
எனக் கூறுவதும்
கொட்டும் தேளை
எடுத்து கண்ணில்
ஒத்திக் கொளவதும்
தமிழன் தீபாவளி
கொண்டாடுவதும் ஒன்று
என்றார் அண்ணா!

அறிவாயோ !
உடன்பிறப்பே அறிவாயோ!
அண்ணாவின் படத்தோடு
கட்சி நடத்துவோர்
தீபாவளி வாழ்த்துக்
கூறுகின்றார்
அது ஆரியம்
நுழைந்ததால்
விழுந்த ஓட்டை

உனக்கோ பழைய
வரலாறை நூலை
அறியாததால்
வந்த ஓட்டை என்றேன்


தனக்கு ஏற்பட்ட
இழிவைக் கொண்டாடும்
இனமாய் தமிழனை
தர்ப்பைப்புல்காரன்
ஆக்கி வைத்தான்
தடுமாறலாமா ?
உடன்பிறப்பே தடுமாறலாமா?
தடம் மாறலாமா ?
உடன்பிறப்பே தடம் மாறலாமா?

Monday, 17 October 2011

சாதி ஒழிப்பும் புரட்சிக்கவிஞரும் (4)

மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் நண்பர் சுப.முருகானந்தம் அவர்கள் புரட்சிக்கவிஞரும் சாதி ஒழிப்பும் பதிவுகளைப் படித்துவிட்டு, ஊக்கமூட்டக் கூடிய சில வார்த்தைகளையும், ஆலோசனைகளையும் கூறியுள்ளார். நன்றிகள் பல அவருக்கு. அவர் கண்ணதாசன் எழுதிய ‘சவாலே சமாளி’ பட்த்தில் வரும் பாடலைக் குறிப்பிட்டுள்ளார். இன்றைய முதல்வர் திரு.ஜெ.ஜெயல்லிதா அவர்கள்
கதாநாயகியாக நடித்த படம் , ஆணவத்தின் உச்சியில் கணவரை எதிர்த்துப் பேசித் தொடாதே எனச் சொல்லும்போது திரு சிவாஜி கணேசன் அவர்கள் பாடுவதாக அமைந்த பாடல்.
நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே
நிழலைப்பார்த்து பூமி சொன்னது என்னைத் தொடாதே
நதியைப் பார்த்து நாணல் சொன்னது என்னைத் தொடாதே
நாளைப் பார்த்து இரவு சொன்னது என்னைத் தொடாதே
புதியதல்லவே தீண்டாமை என்பது
புதுமையல்லவே அதை நீயும் சொன்னது

....
தங்கம் எடுத்த கை அது தங்கம் பார்த்தா
தர்மம காத்த கை சமதர்மம் கண்டதா
ஆலயம் செய்தோம் அங்கே அனுமதியில்லை - நீ
அந்த கூட்டமே இதில் அதிசயமில்லை

என்னும் வரிகள் அப்படித்தான் அவர்கள் அன்றுமுதல் இன்றுவரை இருக்கின்றார்கள் என்பதனைக்கண்ணதாசன் சுட்டிக் காட்டும் வரிகள்..

ஆலயம் செய்தோம், அங்கே அனுமதியில்லை. சரி ...,அனுமதியில்லாத ஆலயத்தைக் கட்டுவதிலே ஏன் தமிழன் குறியாக இருக்கின்றான்,இன்றைக்கும் கூட நகரின் புற நகர்ப்பகுதிகளில் புதிய குடியிருப்புகள் எழும்புவதற்குமுன்பே கோயில்கள் கட்டப்படுகின்றதே எப்படி? கட்டிய பின்பு மணி அடிக்க பார்ப்பான் வந்து மிக எளிதாக அமர்ந்து கொள்கிறானே .. ? தன் வீட்டில் படித்து விட்டு வேலை இல்லாமல் பிள்ளைகள் இருந்தாலும் ஒரு பார்ப்பனருக்கு பூசாரி வேலை கொடுப்பதற்கு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட தமிழனே முன்னனியில் இருக்கின்றானே ஏன் ? அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று சட்டம் இயற்றினாலும் உயர் நீதி மன்றம் ,உச்ச நீதி மன்றம் என்று சென்று பார்ப்பனர்கள் தடுக்கின்றார்களே ! பக்தி தமிழனுக்கு ஏன் உணர்ச்சி வரவில்லை, பார்ப்பனர்களை எதிர்த்து கிளர்ச்சி செய்யவேண்டும் எனும் உணர்வு ஏன் வரவில்லை? வராது ! உணர்வு வராது ! கோயிலின் பெயரால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மூளையில் போடப்பட்டுள்ள நுண்ணிய விலங்குகள் சாதாரணமாக கண்களுக்குத் தெரியாது.ஈரோட்டுக் கண்ணாடி போட்டுப் பார்க்கும்போது பளிச்சென்று தெரியும்.

கோயில் கட்டுவது மிகப்பெரிய புண்ணியச் செயல் , நீ என்னதான் பாவம் செய்திருந்தாலும், எவ்வளவு பெரிய கொடுமை செய்திருந்தாலும் கோயில் கட்டினால், குடமுழுக்குச் செய்தால், கோவில் பணிகளுக்கு கொட்டிக் கொடுத்தால் உனக்குச் சொர்க்கம் உண்டு என்று தமிழர்களின் மூளையிலே பார்ப்பனர்கள் ஏற்றி வைத்துள்ளார்கள். இந்த விலங்கை உடைக்க பகுத்தறிவுச் சம்மட்டி தேவை. தமிழர்கள் கோயில்களில் அர்ச்சகராக வருவதை நீங்கள்(பார்ப்பனர்கள் ) திட்டமிட்டு தடுக்கின்றீர்கள், எனவே பார்ப்பனர்கள் அர்ச்சகர்களாக இருக்கும் கோயில்களுக்கு வரமாட்டோம், அந்தக் கோயில் உண்டியலுக்கு காசு போடமாட்டோம், அங்கு நடக்கும் சிறப்பு பூசை போன்றவைகளுக்கு பணம் தரமாட்டோம் என்று தமிழர்கள் கூறுகின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம், அப்போது பார்ப்பனர்கள் வழிக்கு வருவார்களா? இல்லையா? ஏன் சொல்ல மறுக்கிறார்கள் ? ஏன் சொல்ல வேண்டும் என்ற உணர்ச்சி வரவில்லை ?...

பிற்படுத்தப்பட்டவரை கோவில் கருவறைக்குள் வராதே என்று சொல்கின்றான் பார்ப்பான் . தாழ்த்தப்பட்டவரை கோவிலுக்குள்ளே வராதே என்று பிற்படுத்தப்பட்டவரின் மூலமாகச் சொல்லவைக்கின்றான் பார்ப்பான். இருவரும்(தாழ்த்தப்பட்டவரும் பிற்படுத்தப்பட்டவரும்) இணைந்து கருவறைக்குள்ளிருந்தும், கோயிலுக்குள் இருந்தும் ஏன் பார்ப்பனரை வெளியேற்ற இயலவில்லை?

புரட்சிக் கவிஞர் தாழ்த்தப்பட்டோரை கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பதைக் குறித்து
தாழ்ந்தவர் வந்திடில் தன்னுயிர் போமெனில்
சாமிக்குச் சத்தில்லையோ ? எனில்
வீழ்ந்த குலத்தினை மேற்குல மாக்கிட
மேலும் சமர்தில்லையோ .....
குக்கலும் காகமும் கோயிலிற் போவதிற்
கொஞ்சமும் தீட்டில்லையோ – நாட்டு
மக்களிலே சிலர் மாத்திரம் அந்த
வகையிலும் கூட்டிலையோ ?...
“தாழ்ந்தவர் “என்றொரு சாதிப் பிரிவினைச்
சாமி வகுத்த்துவோ ? எனில்
வாழ்ந்திடு நாட்டினில் சாமி முனைந்திந்த
வம்பு புகுத்தியதோ ?......

மேற்கண்ட புரட்சிக்கவிஞரின் கவிதையில்
“கருவறைக்குள் பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர் வந்திடில் தன்னுயிர் போமெனில் ....”என்றும்
‘தாழ்ந்தவர்’ என்னும் இட்த்தில் தாழ்த்தப்பட்டோர்,பிற்படுத்தப்பட்டோர் என்னுமிரு .......என்று மாற்றிப் போட்டால் இருவருக்குமே சரியாக வரும் பாட்டுத்தானே 1 தன்னையும் கோவில் கருவறைக்குள் அனுமதிக்காதவன் பார்ப்பானே என உணர்ந்து தாழ்த்தப்பட்டோரோடு இணைந்து பிற்படுத்தப்பட்டவன் பார்ப்பனருக்கு எதிராகப் போராடுவதுதானே இயல்பாக இருக்க முடியும். இவன் ஏன் பார்ப்பனரோடு இணைந்து தாழ்த்தப்பட்டோரை கோவிலுக்குள் வராதே என்று சொல்கின்றான். பார்ப்பனரின் அடியாளாய் பிற்படுத்தப்பட்டோன் மாறி ஏன் தாழ்த்தப்பட்டோருக்கு கொடுமை இழைக்கின்றான்? வன்கொடுமை செய்கின்றான் ? ...... இந்த நிலை மாற வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் உற்றார்கள், உறவினர்கள் , பார்ப்பனர்களால் பிரிக்கப்பட்டு பல்வேறு சாதிகளாக கூறு போடப்பட்ட உறவினர்கள் என்பதனை உரத்துச் சொல்லவேண்டும்.இந்த வேலையை எப்படிச் செய்வது? களப்பணிகள் மூலமாக, கருத்துப் பணிகள் மூலமாக ,கலப்புத்திருமணங்கள் வழியாகச் செய்ய்வேண்டும். ஆயிரக்கணக்கான கலப்புத்திருமணங்கள் பெற்றோர்களின் ஏற்பாட்டின்மூலமாக , சுயமரியாதைத் திருமணங்களாக நடைபெற்றன.இன்றும் நடைபெறுகின்றன. எனக்குத் தெரிந்த கழகத் தோழர் ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர், தாழ்த்தப்பட்ட கழகத் தோழ்ருக்கு தன் பெண்ணை திருமணம் செய்து கொடுத்தார். நான் அறிந்தவரை தங்கள் சொந்த சாதியில் ,உறவுகளில் திருமணம் செய்து தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு வாழும் தம்பதிகளை விட அருமையாக எடுத்துக்காட்டாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இது இன்னும் விரிவாகப் பரவுதல் வேண்டும். சாதி ஒழிப்பு வேண்டும் என்று சொல்பவர் எவரும் தனது சொந்த சாதியில் திருமணம் முடிக்கக்கூடாது,தனது குழந்தைகளுக்கு சொந்த சாதியில் திருமணம் ஏற்பாடு செய்யக் கூடாது. ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்றால் எல்லா சாதி அமைப்புக்களும், தாங்கள் நடத்தும் பத்திரிக்கையில் நாம் ஆண்ட ஜாதி , மீண்டும் நமது ஜாதி ஆளவேண்டும், ஓடி வா, என அழைப்பதைப் பார்க்கிறோம்.

சாலையில் நடந்து போய்க்கொண்டிருக்கிறோம். ஒருவன் நம்மீது மாட்டு சாணத்தை எறிந்துவிட்டான். சட்டையில் ஒட்டி அசிங்கிமாகி விட்டால், அய்யோ என ஓடிப்போய் அசிங்கத்தை கழுவ முற்படுவதுபோல சாதி என்னும் அசிங்கத்தை நம்மீது பார்ப்பனர்கள் திட்டமிட்டு தங்கள் பிழைப்புக்காக நம்மீது எறிந்திருக்கிறார்கள் , இந்த சாதி என்னும் அசிங்கத்தை நாம் கழுவவேண்டும், நம்மை விட்டு விரட்ட வேண்டும், நமக்கு இது இழிவு என்பதனை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சார்ந்த ஒவ்வொருவரும் உணர வேண்டும். அதற்கு புரட்சிக் கவிஞரைப் படிக்க வேண்டும், பரப்ப வேண்டும்.

Saturday, 15 October 2011

சாதி ஒழிப்பும் புரட்சிக் கவிஞரும்(3)

ஆரியர்கள் எப்படி திராவிடர்களைத் தங்கள் வயப்படுத்தினர் என்பதை அர்த்தமுள்ள இந்துமதம்! எனப் பாகம் பாகமாய் எழுதிக் குவித்த , கோப்பையிலே என் குடியிருப்பு எனத் தன்வாக்குமூலம் எழுதிய கவிஞர் கண்ணதாசன் கவிதை வழியாக இன்னும் சிறப்பாகக் காணலாம். நாம் திராவிடர் என்றால் ஆரியர் யார் என்பதனை கண்ணதாசன் கூறுகின்றார் கேளுங்கள் .
“ஆடுமாடுகள் முன் நடந்திட
ஆரணங்குகள் பின் தொடர்ந்திட
காடு யாவையும் கடந்து சிற்சிலர்
கன்னித் தாயக எல்லை தொட்டனர்;”

நமது எல்லையை ஆடுமாடோடும் ஆரணங்கோடும் தொட்டவர்கள் யார்?இன்றைய சுப்பிரமணிய சுவாமி, சோ, குருமூர்த்தி அய்யர்களின் மூதாதையர்கள் , எத்தனை பேருக்குத் தெரியும் இது ...
“மஞ்சள் மேனியும் வஞ்ச நெஞ்சமும்
மான மென்னும் ஓர் எண்ணம் இன்மையும்
கொஞ்சும் வார்த்தையும் கொண்டவர் தமிழ்க்
கோட்டை வாசற் படியை மிதித்தனர்;”

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயையில் முதல் பக்கத்தில் வரும் “ பேராசைப் பெருந்தகையே, போற்றி,போற்றி “ பாடலோடு மேற்கண்ட வரிகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

“சொந்தமாக ஓர் நாடி லாதவர்
தொட்ட பூமியில் சூழ்ந்து வாழ்பவர்
எந்த நாடுமதம் சொந்த நாடென
ஏற்று மாந்தரை மாற்றி ஆள்பவர் “

ஈழத்தமிழெருக்கென ஒரு நாடு கிடைத்துவிடக்கூடாது , தமிழனின் கொடி தனி நாட்டில் பறக்கக்கூடாது என்பதற்காக எத்தனை சூழ்ச்சி செய்தனர், இன்றும் செய்கின்றனர், ஏனெனில் சொந்த நாடென்றால் என்னவென்றே அறியாதவர்கள் பார்ப்பனர்கள்.

சொத்து என்பதோ தர்ப்பை ஒன்றுதான்
தூய்மை என்பதோ துணியும் இன்மையாம்
வித்தை யாவையும் சூழ்ச்சிப் பள்ளியில்
விரும்பிக் கற்றதாம்; வேறு என் சொல!
நச்சரவுகள் மனித மேனியில்
நடமிடும் கதை இவர்கள் கதையாம்

அச்சம் மிக்கவர் கோழையர்; ஆயினும்
அடுத்து வீழ்த்திடும் திறமை மிக்கவர்!
அடியெடுத்து வைத்ததும், கண்ணெதிர்
அங்கு நின்றவோர் தமிழனைப்பார்த்து, இப்
படி அமர்ந்திடும் பண்புடை தென்னவ!
பாரில் உம்புகழ் பரவக் காண்கிறோம்!
மிடிமை இல்லதாம் உங்கள் தாயகம்!

வீரர் தேயமாம்! கேள்வி யுற்றனம்!
எனில் உமக்கொரு தெய்வம் இல்லையாம்!
என்ன மோசம், இஃதாண்டவன் ஏற்பரோ!
என்றதும் தமிழ் ஏறு கூறுவன்;
ஏன் இலை! கதிரோன் ஒரு தெய்வமாம்!
எழில் நிலாவும் யாம் போற்றிடு தெய்வமாம்
என்றுகூற அவ்வீணர்கள் யாவரும்
எழுதபதாயிரம் கடவுள்கள் கூறி, அக்
கடவுள் யாவரும் வானில் உண்டெனக்
கதைய ளந்தனர் கற்பனை பொங்கிட!

பொய்ய லால்சிறு மெய்யுமி லாமலே
புவியில் வாழும் திறம்மிகு ஆரியர்
சொன்ன யாவையும் தமிழன் ஏற்றனன்!
சூழ்ச்சி வென்றது! நாடு சாய்ந்ததே!

கடவுள் வாசலை காத்தனர் ஆரியர்!
கன்னியர் விழிக் கடலைக் காட்டினர்!
வீரம் முற்றும் ஒழிந்தது ஏட்டிலே!
தீரம் மாண்டு ஆரியர் சாத்திரத்
தீக்குழி யிடைச் சாய்ந்தனர் தென்னவர்!

இந்தக் கவிதையை இன்றைய இளைஞர்கள் கையில் கொடுத்து மனப்பாடம் செய்யச் சொல்லல் வேண்டும். அப்போதுதான் உண்மை வரலாறு அவர்களுக்குப் புரியும் . கடவுள் என்னும் கருத்தாக்கத்தால் எப்படி திராவிடன் ஆரியரின் சாத்திரத் தீக்குழியிடைச் சாய்ந்தனர் என்னும் வரலாற்றை உணர்வர்.
எப்படியெல்லாம் பொய் சொல்லித்தமிழர்களை ஆரியர்கள் ஏமாற்றினார்கள் என்பதனைப் பட்டியலிடும் புரட்சிக்கவிஞர் அதனை வெறுத்த, அந்தக் கடவுள் ,வேதம் என்னும் பொய்மைகளை எதிர்த்தவர்களை பார்ப்பனர்கள் என்ன செய்தார்கள் என்பதனைப் பட்டியலிடுகின்றார்.
தம் சிறு வேதம் ஒப்பாத்
தமிழரை ஆரிய்ர்கள்
நஞ்சென்று கொண்டாரடி...
வெஞ்சிறு வேதம் ஒப்பா
வீரரை ஆரியர்கள்
வஞ்சித்துக் கொன்றாரடி .....

ஆரியர்தமை ஒப்பா
ஆதித் திராவிடரைச்
சேரியில் வைத்தாரடி ...
சேரிப் பறையர் என்றும்
தீண்டாதார் என்று சொல்லும்
வீரர் நம் உற்றாரடி “
தீண்டப்படாதவர்கள் என்று சொல்லப்படும் வீரர்கள் நம் உறவினர்கள் என்பதனை தமிழர்கள் அனைவருக்கும் சமத்துவப்பாட்டில் புரட்சிக் கவிஞர் சொல்வதைக் காண்கிறோம்......... நடைமுறையில் அப்படி இல்லையே ஏன்? எங்கே கோளாறு ?
வா.நேரு – 15-10-2011

Friday, 14 October 2011

சாதி ஒழிப்பும் புரட்சிக் கவிஞரும் (2)

இந்தியாவில், தமிழகத்தில் சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசுகிற எவரும் பார்ப்பன எதிர்ப்பையும் சேர்த்துப் பேசவேண்டும். பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கார் அதனைச் செய்தார். தந்தை பெரியார் அதனைச் செய்தார்,அவரது இயக்கமான திராவிடர் கழகம் இன்றும் செய்கின்றது-ஏனெனில் பார்ப்பனர் பிழைப்பும் சாதி அமைப்பும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்தவை. அவ்வளவு எளிதில் பிரிக்கமுடியாதவை. சாதி எனும் அமைப்பு தோன்றுவதற்கும் அது ஆண்டாண்டு காலமாக இம்மண்ணில் முள்ளாக வளர்ந்து விசச் செடியாய் மண்டிப்போய்க் கிடப்பதற்கும் பார்ப்பனர்களே, அவர்கள் வளர்த்தெடுத்த பார்ப்பனீயமே காரணம்.

இன்றைய நிலையில் இதனை நாம் சொல்கின்றபோது சாதி அமைப்பை பாதுகாக்கின்றவர்களாக பிற்படுத்தப்பட்டவர்கள்தானே இருக்கின்றார்கள், ஆதிக்க வெறியர்களாக தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதியின் பெயரால் வன்கொடுமை புரிகின்றவர்களாக பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டவர்கள்தானே இருக்கின்றார்கள் என்னும் உண்மை சுட்டப்படுகின்றது. உண்மைதான், இதனை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.வெட்கப்படவேண்டும், வேதனைப்படவேண்டும். அப்போதுதான் இதற்கு தீர்வு என்ன என்பது பற்றி யோசிக்கமுடியும். டாகடர் அம்பேத்கர் அவர்கள் சுட்டிக் காட்டிய ஏணிப்படிகள் போன்ற இந்த சாதி அமைப்பைப் புரிந்துகொள்ள வேண்டும்,. சின்னக்குழந்தைகள் சில நேரம் அமர்ந்திருக்கும், பக்கத்தில் வரும் பெரியவன் ஒருவன் அக்குழந்தையின் கன்னத்தில் குழந்தையின் கைகளை எடுத்தே அடிக்க வைப்பான், பார்ப்போருக்கு குழந்தை தன் கன்னத்தில் தன் கைகளாலேயே அடித்துக் கொள்வதுபோலத் தோன்றும்.ஊன்றிக் கவனித்தால்தான் இன்னொருவனின் கைங்கரியம் தெரியும் அதனைப் போல சாதி அமைப்பை ஊன்றிக் கவனித்தால்தான் பார்ப்பானர்களின் சூழ்ச்சியும் தந்திரமும் புரியும். சாதாரண மக்களுக்கு இதனைப் புரிய வைக்கவேண்டும், எளிதில் புரிய வைக்க புரட்சிக் கவிஞரின் கவிதை வரிகள் கையில் வேண்டும்

ஆரியர்கள் வருவதற்கு முன்னர் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தில் பிறப்பின் பெயரால் பேதமில்லை, பெருமிதத்துடன் திராவிடர்களாய் வாழ்ந்தோம் என்பதனை
“ஆரியர்கள் இங்கே அடிவைக்கும் முன்னமே
வேரிட்டு வாழ்ந்த வெற்றித் திராவிடரின்
பேரர்க்குப் பேரனே ! பிள்ளையாய் நீ கண்ணுறங்கு “ என்று பாடுகின்றார் புரட்சிக் கவிஞர் ஆண் குழந்தை தாலாட்டில் . வெற்றித் திராவிடரின் பேரனுக்குப் பேரன் எப்படி தாழ்த்தப்பட்டவனானான், பிற்படுத்தப்பட்டவனான், எப்படி நான் மேல் என்றும் நீ கீழ் என்றும் சண்டையிட ஆரம்பித்தான் சொல்கின்றார் புரட்சிக் கவிஞர்.

“ஆண்டார் தமிழர் இந்நா
ட்தன்பின் ஆரியர் என்போர்
ஈண்டுக் குடியேறினார் –சகியே
ஈண்டுக் குடியேறினார் “ என்று தொடங்கி சமத்துவப் பாட்டில் பார்ப்பனர்கள் எப்படி வஞ்சகமாக தமிழர்களை ஏமாற்றினார்கள் என்பதனை பட்டியலிடுகின்றார் புரட்சிக் கவிஞர்

“ வெள்ளை யுடம்பு காட்டி
வெறும் வாக்கு நயம் காட்டிக்
கள்ளங்கள் செய்தாரடி ......”

“மேலே மூலோகம் என்றார்
கீழே மூலோகம் என்றார்
நூலெல்லாம் பொய் கூறினார்...”

“சுவர்க்கத்தில் தேவர் என்போர்
சுகமாய் இருப்பதுண்டாம்
அவர்க்குத் தாம் சொந்தம் என்றார்...”

அறிவியல் எவ்வளவோ வளர்ந்து விட்டது. மனிதன் சந்திரனுக்குப் போய் வந்து விட்டான், செவ்வாய்க்குப் போகப் போகின்றான் அண்டங்களைப் பற்றிய ஆராய்ச்சி ஆழமாய்ப் போய்க்கொண்டேயிருக்கிறது ஆனால் எவரும் சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்த்தாகத் தெரியவில்லை,கண்டு பிடித்த்தாகத் தெரியவில்லை. பார்ப்பனர்கள் , சொர்க்கம் என்று ஒன்று இருக்கிறது, அதில் தேவாதி தேவர்கள் என்பவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் யார் என்றால் இந்த உலகில் வாழும் பார்ப்பனர்களுக்கு மாமன் , மச்சி,அண்ணன் ,தம்பி என்று கதை கட்டிய கதையை புரட்சிக் கவிஞர் மேற்கண்ட கவிதையிலே எடுத்துரைக்கின்றார்.....
வா.நேரு -14-10-11

Wednesday, 12 October 2011

சாதி ஒழிப்பும் புரட்சிக் கவிஞரும்

நமது சமூகம் சாதிகளால் ஆன சமூகம். மனிதர்களை சாதியால் மட்டுமே பல நேரங்களில் அடையாளப்படுத்தும் சமூகம். செத்த பின்பும் கூட இன்றும் தனித்தனியாய் சுடுகாடும் இடுகாடும் வைத்து மனிதர்களைப் பிரித்து எரிக்கும்,புதைக்கும் சமூகம். குறிப்பிட்ட மக்களை மனிதர்களாய் மதிக்காது மாடுகளைப் போல மதித்து மனநிலையில் இன்னும் விலங்குகளாய் இருக்கும் கேடு கெட்ட சமூகம். புராதனப் பெருமையுனும் புணுகு பூசி ,சாதியால் அழுகிக்கிடக்கும் சமூகத்தை மணக்க வைக்க முயற்சி செய்யும் சமூகம். இப்போது இருக்கும் நிலையைப் போல நூறு மடங்கு சாதி இறுக்கமாய் இருந்த நேரத்தில்தான் பொது வாழ்வில் தந்தை பெரியார் நுழைந்தார். எனக்குச் சரியெனப்பட்டதைச் சொல்வேன், எனக்குச் சரியெனப்பட்டதை- இந்த சமூகம் மேன்மையுறச் செய்வேன். அதற்காக நீ கொடுக்கும் சிறைத்தண்டனையை ,அவதூறுகளை,அவமானங்களைச் சகித்துக்கொள்வேன். சாதி ஒழிப்பே எனது வாழ்வின் இலட்சியம் எனக்கொண்டு சுழன்று சுழன்று பணியாற்றினார். தனது பணியில் பெரும் வெற்றியும் கண்டார்.

தந்தை பெரியாரின் சாதி ஒழிப்புக் களத்திலே தோளோடு தோள் நின்றவர்கள் பலபேர். தங்களது வாழ்க்கையை, சொத்தை, சுகத்தை அனைத்தையும் துறந்துவிட்டு தலைவா, நீ ஆணையிடு,சாதியை ஒழிக்க நீ ஆணையிட்டு களம் அமைத்தால் சாதாரண சிறை என்ன, கடும் சிறையையே சந்திக்கத் தயார் எனத் தந்தை பெரியாரின் பின்னால் நின்று, சிறையேகி செத்து மடிந்த சுயமரியாதைச் சுடரொளிகளின் நாடு இந்தத் தமிழ்நாடு.பதவியா, பணமா, புகழா எதுவும் வேண்டாம் எங்களுக்கு, நம்மைப் பிடித்து ஆட்டும் இந்தச் சாதி செத்துத் தொலையட்டும் என்பதற்காக தங்களைத் தாங்களே கருக்கிக் கொண்ட கருப்பு மெழுகுவர்த்திகளின் நாடு இந்தத் தமிழ்நாடு.1957-ல் சாதி ஒழிப்புக்காக இந்திய அரசியல் சட்ட்த்த்தையே எரித்து சாரை சாரையாய் சிறையேகிய சாதி ஒழிப்புத் தீரர்களின் நாடு இது.

தந்தை பெரியாரின் பெரும்படையில் இணைந்து சாதி ஒழிப்பும் போரில் பணியாற்றிய, பணியாற்றும் சுயமரியாதை இயக்கத் தோழர்கள், தோழியர்கள் மேடைப் பிரச்சாரம் என்றாலும், திண்ணைப்பிரச்சாரம் என்றாலும் பயன்படுத்தும் கவிதை வரிகள் சில உண்டு. ரசிய மண்ணைப் பக்குவப்படுத்துவதற்கு தோழர் லெனினுக்கு கிடைத்த மார்க்சிம் கார்க்கி போல தந்தை பெரியாருக்கு கிடைத்த இலக்கியவாதி அவர். போர்க்களத்திலே எதிரிகள் சுற்றி வளைக்கும்போது,போராடும் வீரரின் கையிலே இருக்கும் கத்தி போல, கேடயம் போல ஆண்டாண்டு காலமாய் இந்தச் சமூகத்தை சாதியெனும் சங்கிலியால் கட்டிப்போட்ட சதிகாரர்கள் சுற்றி இருக்கும் நிலையிலே, அவர்கள்தான் நம்மைக் காப்பவர்கள் என்று தமிழர்கள் எண்ணி ஏமாந்து நிற்கும் நிலையிலே அவர்களின் சிந்தையிலே சுருக்கென்று தைக்கும் அளவுக்கு சொல்வதற்கு சில சாதி ஒழிப்புக் கவிதைகள் தமிழில் உண்டு – அந்தக் கவிதை வரிகளுக்கு சொந்தக்காரர் புரட்சிக் கவிஞர்.

பாரதிதாசன் என்று தன்னை அழைத்துக்கொண்டாலும் தமிழன் எவனுக்கும் எந்த நாட்டுக்கும் தாசனாக இருக்கக்கூடாது என்பதற்காகப் பாடிய தமிழ்ப்புலவர் புரட்சிக்கவிஞர். சாதியால் வெந்து, நொந்து புலம்பிக்கொண்டிருந்த தமிழன் கைகளிலே சாதி ஒழிப்பு அணுகுண்டுக் கவிதைகளை கொடுத்த தன்மானப்புலவன். “மனிதரில் நீயுமோர் மனிதன், மீசை முறுக்கு,எழு,விழி, கொலை வாளினை எட்டா, மிகு கொடியோர் செயல் அறவே” எனத் தீரம் பாடிய செந்தமிழ்க்கவிஞன் .தமிழ்க் கவிதைகளைப் பொறுத்தவரை தனக்குப் பின்னால் தமிழை ஆள பரம்பரைக் கவிஞர்களை தந்து சென்ற பாவேந்தன். இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிஞர்களில் வேறு எவரும் எழுதாத அளவுக்கு 41000 வரிகளை எழுதிக் குவித்த சுயமரியாதைக் கவிஞன். தனது கவிதை வரிகளைப் படிப்பதாலேயே படிப்பவனுக்கு உணர்ச்சியும் மனதிலே அநீதிக்கு எதிராகப் போராட வேண்டும் எனும் கிளர்ச்சியும் தந்த கவிஞன், தமிழுக்கு கிடைத்த பெரும்கொடையாம் புரட்சிக் கவிஞர் சுயமரியாதை இயக்கத்தவர்களைத் தவிர மற்றவர்களால் புகழப்பட்டாரா? ஏற்றுக் கொள்ளப்பட்டாரா? இல்லை, இல்லை, மறைக்கப்பட்டார், மிகச் சாதுர்யமாக ஒதுக்கப்பட்டார், மிகத் தந்திரமாக முற்போக்கு முகமூடி அணிந்தவர்களால் கூட விலக்கி வைக்கப்பட்டார். ஏன்? ஏன்?....
வா.நேரு 13-10-11