Wednesday, 21 December 2022

கட்டுரை : மானுட வளர்ச்சிக்கு மதம் மாபெரும் தடை!...முனைவர்.வா.நேரு

 

தந்தை பெரியாரை நினைக்கும் போதெல்லாம் பெருமிதமும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. தந்தை பெரியார் அவர்கள் மறைந்து 48 ஆண்டுகள் முடிந்து போனது. வரும் டிசம்பர் 24,2022 அவரின் 49ஆம் ஆண்டு நினைவு நாள்.முன் எப்போதும் விட மிக வேகமாகவும் விரைவாகவும் பரவும் தத்துவமாக தந்தை பெரியாரின் தத்துவம்-,கடவுள்,மத மறுப்புத் தத்துவம்- விளங்குவதைப் பார்க்கிறோம்.அண்மையில் பஞ்சாப் மாநிலம் பர்னாலா நகரத்தில் நடைபெற்ற இந்திய நாத்திகக் கூட்டமைப்பு மாநாட்டில், மாநாட்டு விளம்பரங்களில் தந்தை பெரியாரின் படம், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் படத்தோடும் தோழர் பகத்சிங் அவர்களின் படத்தோடும் இணைந்து இடம் பெற்றிருந்தது. ”ஜிந்தாபாத், ஜிந்தாபாத், பெரியார் ஜிந்தாபாத்” என்னும் முழக்கம் பஞ்சாப் மாநிலத் தோழர்களால் எழுப்பப்பட்டது.

தெலங்கானா மாநிலத் தோழர்கள் தந்தை பெரியாரைப் பற்றி தெலுங்கு மொழியில் உணர்ச்சிகரமான பாடலை மேடையில் இசையோடு பாடினர்.அவர்களின் மொழி நமக்குப் புரியவில்லை என்றாலும் உணர்வால் ஒன்றுபட்டு நிற்கும் ஆனந்தத்தை அந்த நிகழ்வு கொடுத்தது. பல மாநிலங்களில் இருந்து பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்ட அந்த மாநாட்டில் பலர் கருப்புச்சட்டை அணிந்து இருப்பதைக் காணமுடிந்தது. தந்தை பெரியாரும் கருப்புச்சட்டையும் கடவுள்,மதம்,ஜாதி ஒழிப்புக் குறியீடுகளாக தமிழ்நாட்டைத் தாண்டி இந்திய ஒன்றியத்தின் மற்ற மாநிலத்தவர்களின் மனதில் இடம் பெறுவது மகிழ்ச்சியைத் தருகிறது.

“மதம் என்பது ஒரு கட்டுப்பாடு. மதத்தில் ஈடுபட்ட ஒரு மனிதன் அவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும் அந்தக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்பதைத் தவிர,மற்றபடி அந்த மனிதனுக்கு எந்த விதமான பயனும் ஏற்படப்போவதில்லை.” என்றார் தந்தை பெரியார்.

கடந்த20 ஆண்டுகளில் கணினியால், இணையத்தால் ஏற்பட்ட புரட்சி என்பது மதம் என்னும் கட்டுப்பாட்டைத் தகர்க்கும் புரட்சிஎனலாம்.மதத்தினால் மனிதனுக்கு யாதொரு பலனும் இல்லை என்பதை மனிதர்கள் உணரத் தொடங்கி விட்டார்கள் என்பதற்கான எடுத்துக் காட்டுகளை உலகம் முழுவதும் இப்போது பார்க்கின்றோம்..

இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், நாத்திகர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. 37 விழுக்காடு மக்கள் ,நாங்கள் எந்த மதத்தையும் பின்பற்றுபவர்கள் அல்ல, நாங்கள் மதமற்றவர்கள் என்று அறிவித்திருக்கிறார்கள் என்று இங்கிலாந்து நாட்டின் 2021 கணக்கெடுப்பு சொல்கிறது.2011இல் 59.3 விழுக்காடாக இருந்த கிறித்துவர்களின் எண்ணிக்கை 46.2 விழுக்காடாக 2021இல் குறைந்திருக்கிறது.இங்கிலாந்தைப் போன்ற ஜனநாயக உரிமை உள்ள நாட்டில் மக்கள் மதத்தின் மீதான தங்களின் நம்பிக்கையின்மையை வெளிப்படையாக அறிவிக்க முடிகிறது, ஒன்று திரள முடிகிறது.மதம் தேவைதானா? என்னும் கேள்வியை மனதிற்குள் எழுப்புவது போலவே பொதுவெளிகளிலும் எழுப்பி ஒன்றிணைய முடிகிறது.மதத்தின் மீதான கோபங்களையும்,உணர்வுகளையும் வெளிக்காட்ட முடிகிறது.

ஆனால், மதக்கட்டுப்பாடு அதிகம் உள்ள நாடுகளில் உள்ள மக்கள் தங்கள் நம்பிக்கையின்மையைக் காட்டினால் பழி வாங்கப்படுவோம், தண்டனை கொடுக்கப்படுவோம் என்ற அச்சத்தினால் அமைதியாக இருக்கிறார்கள். ஈரான் நாட்டில் நடந்துவரும் மதத்தின் அடிப்படையில் அமைந்த ஆடைக் கட்டுப்பாட்டுக்கு எதிரான போராட்டம் மிகப்பெரிய அளவில் நடந்துவருவதைப் பார்க்கின்றோம். ஆண்களும் பெண்களும் பெருமளவில் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள்.மதம் என்னும் கட்டுப்பாட்டைக் காப்பாற்றும் நிறுவனங்களாகத்தான் நாடுகளின் அரசுகள் இருந்திருக்கின்றன,- இருக்கின்றன.

“ஒரு மதவாதிக்கு அவன் எந்த மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனுக்குக் கடவுள்- அது எப்படிப்பட்ட கடவுளானாலும் அது செயற்கைக் கடவுளே ஆகும்” என்றார் தந்தை பெரியார்.கடவுள் செயற்கை என்பதை எடுத்துக்காட்டும் நோயாக இந்தக் கொரோனோ நோய் அமைந்ததைப் பார்த்தோம்.கொரோனோ காலத்தில் எல்லா மத வழிபாட்டுத்தலங்களும் அடைக்கப்பட்டன.கடவுள் இருக்குமிடமாகச் சொல்லப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்குள் எந்த மனிதர்களும் அனுமதிக்கப்படவில்லை.எல்லா மதக்கடவுள்களுக்கும் விடுமுறை கொடுக்கப்பட்டு,வழிபாட்டுத் தலங்களுக்குள் பூட்டி வைக்கப்பட்டார்கள். நோயின் பயத்தில் தங்களைக் காப்பாற்ற வீடுகளுக்குள் முடங்கிய மனிதர்களுக்கு செயற்கையாக உருவாக்கப்பட்ட கடவுள்களைப் பற்றிக் கவலைப்படாத காலமாக கொரோனா காலம் இருந்ததைப் பார்த்தோம்.”ஒரு மதவாதிக்கு மதம் காரணத்தால் ஏற்பட்ட கடவுள், மோட்சம், நரகம், வேதம், மத தர்மம், மதத் தலைவன் என்பனவெல்லாம் அந்த- அதாவது, அவன் சார்ந்து இருக்கிற- மதக் கட்டுப்பாட்டினால் ஏற்பட்டவையே ஒழிய, உண்மைப் பொருளோ, உண்மைத் தத்துவமோ அல்ல என்பதோடு, அவையெல்லாம் செயற்கையே ஒழிய இயற்கையும் அல்ல.” என்றார் பெரியார்.

“மோட்சமும் சுவர்க்கமும் கள்ளு, சாராயக் கடைகளை விட,தாசி, வேசிகள் வீடுகளை விட மோசமானவை என்பதை மக்கள் உணரும்படி செய்யவேண்டும்.மோட்சம், நரகம் என்பது எப்படித் திருடர்கள் பிரயாணிகளை வழிப்பறி செய்வதற்குத் தனி வழியில், ஆள் அடையாளம் தெரியாத வகையில் வேஷம் போட்டுக்கொண்டு வந்து வழிமறித்து, மண்டையை உடைக்க ,தடிக்கம்பையும், ஈட்டியையும் ஆயுதமாகக் கொண்டு பறித்துச்செல்கிறார்களோ,அது போலவே பகல் வழிப்பறிக்காரர்கள் மக்களின் வாழ்க்கைப் பிரயாணத்தில் வழி மறித்துப், பொருள் பறித்துப்போகச்செய்து கொண்ட ஆயுதங்களே. ஆகையால் அதை மனிதன் முதலில் மறந்தாக வேண்டும் “ என்றார் தந்தை பெரியார்.செயற்கையாக உருவாக்கப்பட்ட மதம் என்பது மோசமானது என்பதனை உணர்ந்த காரணத்தால்தான் இங்கிலாந்தில் மதமற்றவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.


மதம் என்னும் கட்டுப்பாட்டை அடித்து நொறுக்கி அதன் பொய்ம்மைகளை மிக எளிதாக மக்களுக்கு எடுத்துச்செல்லும் வாகனங்களாக இன்றைய சமூக ஊடகங்கள் இருக்கின்றன. ஒரு பக்கம் அறிவியலைப் பயன்படுத்தி,அறிவியலுக்கு எதிரான மூட நம்பிக்கையைப் பரப்ப சமூக ஊடகங்கள் பயன்படுகின்றன என்றாலும் கூட, அவர்கள் ஊதிப் பெரிதாக்கும் பலூனை நொடியில் உடைத்து தூள் தூளாக்கும் கூர்மையான ஊசிகளாகவும் சமூக ஊடகங்கள் பயன்படுகின்றன.தந்தை பெரியாருக்குப் பின் அவர்தம் தத்துவத்தை இந்திய ஒன்றியம் முழுமைக்கும்,உலகம் முழுவதற்கும் எடுத்துச்செல்ல,எந்த நாளும் நான் பெரியாரின் மாணவன் என்று சொல்லும் திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கையில் எடுத்து இருக்கும் ஆயுதங்களில் மிக முக்கியமானது சமூக ஊடகம் ஆகும்.


நவீன சமூக ஊடகங்களான வாட்சப்,முகநூல், டுவிட்டர், டுவிட்டர் ஸ்பேஸ், டெலிகிராம், யூ டியூப், இன்ஸ்டாகிராம் என்னும் பல முகங்களிலும் பேசப்படும் ஒரு முகமாகத் தந்தை பெரியார் இருக்கிறார். மிக விரிவாகப் பேசப்படும் தத்துவமாக தந்தை பெரியாரின் தத்துவம் இருக்கிறது.எதிராளிகள் கொச்சைப்படுத்தி, இழிவுபடுத்தி தந்தை பெரியாரின் தத்துவத்தை,கொள்கையை எளிதில் சிதைத்து விடலாம் என்று மனப்பால் குடிப்பதற்கு மாறாக தந்தை பெரியாரின் தத்துவம் இருபால் இளைஞர்களால் தூக்கிப் பிடிக்கப்படுகிறது. மதம் என்பது எதற்கு? மதக் கட்டுப்பாடுகள் எதற்கு? செயற்கையாகப் புகுத்தப்பட்ட மதத்தினால் ஏற்படும் தீமைகளை இந்த உலகம் ஏன் பொறுத்துப் போகவேண்டும்? என்னும் கேள்விகளை இளைஞர்கள் முன்வைக்கிறார்கள். விவாதிக்கிறார்கள்.தீர்வுகளைச் சொல்கிறார்கள்.


ஜாதியற்ற, மதமற்ற, கடவுள்கள் அற்ற மனித நேயம் மிக்க ஓர் உலகத்தைத் தந்தை பெரியார் கனவு கண்டார். ஆணும் பெண்ணும் சமமாக வாழும் சமத்துவ உலகத்தை உருவாக்க தந்தை பெரியார் கனவு கண்டார்.ஏழைகளும்,பணக்காரர்களும் அற்ற எல்லோருக்கும் எல்லாம் என்னும் ஒரு புதிய உலகம் அமையத் தந்தை பெரியார் தன் வாழ்க்கையை ஒரு போராட்ட வாழ்க்கையாக அமைத்துக் கொண்டார்.அவரது நினைவு நாளில்,அவர் வழியில் நமக்கு வழிகாட்டும் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில்,அவர் போட்டுத்தரும் பாதையில் எந்த விதமான சபலங்களுக்கும் ஆளாகாமல்,தந்தை பெரியார் நினைத்த,கனவு கண்ட உலகம் சமைக்க நாமும் நமது பங்கை அளிக்க உறுதி ஏற்போம்.


நன்றி: உண்மை மாதம் இருமுறை இதழ் திசம்பர் 16-31,2022 

No comments: