சதுரகிரி மலை..
சித்தர்கள் பற்றி
கதைகளை அளந்து
விட்டிருக்கிறார்கள்
ஓர் ஆன்மிகப் புத்தகத்தில்..
படிக்க படிக்க
சிரிப்புதான் வந்தது..
இளம் வயதில்
சித்தர்போல் ஒருவர்
எங்கள் ஊருக்குள்
வருவார்..
ஒருவரை மட்டும் பார்ப்பார்
சில பொருட்களை
கொடுத்துவிட்டு
சிலவற்றை வாங்கிச்செல்வார்
பல்லாண்டு காலமாய்
எங்கள் சதுரகிரி
மலைக்குள் வாழும்
பழங்குடி மக்களுள்
ஒருவர் அவர்..
நம்மைக் கண்டால்
மிரண்டு ஓடிவிடுவார்கள்
மலைகளுக்குள் என
என் முன்னோர்கள்
சொல்லக் கேட்டிருக்கிறேன்..
யானைகளும்
மலைப்பாம்புகளும்
நடமாடும் மலைக்குள்
இயல்பாய் நடமாடிய
அவர்கள் நம்மைக்
கண்டுதான் அரண்டுபோய்
ஒளிந்திருக்கிறார்கள்..
அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது
நாட்டுக்குள் இருக்கும்
மனிதர்கள் விலங்குகளை
விட மோசமானவர்கள் என்று..
மலைக்குள் இருந்து
சமவெளிக்கு வந்த
அவர்களில் சிலர்
தங்களுக்கான படிப்பை
வசதியைக் கேட்டுப்
போராடிக்கொண்டிருக்கிறார்கள்
இருக்கும் சித்தரோ
செத்த சித்தர்களோ
அவர்களின் வாழ்க்கை
உயர உருப்படியாய்
ஏதும் செய்திட்டதாகத்
தெரியவில்லை
பழங்குடியினர் இருக்கும்
பகுதி என்பதைத் தெரிந்துகொண்ட
சிலர் பரம்பரையாய்
அவர்களின் இடஒதுக்கீட்டைப்
போலிச் சான்றிதழ்கள் மூலம்
ஆட்டையைப் போட்டுக்
கொண்டிருக்கிறார்கள்..
பாவம் அந்தப் பழங்குடி
மக்கள் மட்டுமா?!
ஆன்மிகச்சித்தர் கதைகள்
படிக்கும் அன்பர்களும் கூடத்தான்..
தன் மலைகளுக்குள் இருக்கும்
மனிதர்களுக்கே ஏதும் செய்திடாத
சித்தர்கள் …கடவுள்கள்
தங்களுக்கு ஏதேதோ செய்வார்கள்
என நினைக்கும்
அன்பர்களும் கூடத்தான்
அய்யோ பாவம்!
வா.நேரு,14.08.2024
2 comments:
அருமை உண்மை அண்ணே!
என்ன கொடுத்து என்ன வாங்கிட்டுப் போவார்கள், 🙄
நன்றிங்க அண்ணே,மலைத்தேனைக் கொடுத்து அரிசி போன்றவற்றை வாங்கிச்செல்வார்கள் எனச்சொல்லக் கேட்டிருக்கிறேன்.
Post a Comment