அச்சில் எழுத்து சரியாகத் தெரியவில்லை என்று சிலர் சொன்ன காரணத்தால்,கீழே எழுத்து வடிவலான கட்டுரையையும் கொடுத்திருக்கிறேன். நன்றி.
வா.நேரு
14.08.2024
சங்கப் பலகை
நூல் : அமெரிக்காவில் அய்ம்பது
ஆண்டுகள் (ஒரு
பகுத்தறிவுவாதியின் பயணம்)
நூலாசிரியர் மருத்துவர் சோம.இளங்கோவன்
வெளியீடு நன்செய் பிரசுரம்
திருத்துறைப்பூண்டி
முதல் பதிப்பு செப்டம்பர் 2023
மொத்த பக்கங்கள் 144 விலை ரூபாய் 150
அமெரிக்கா செல்வது என்பது நமக்கு
ஒரு கனவு.அமெரிக்காவில் சென்று படிப்பது,வேலை பார்ப்பது என்பது பெரும் கனவு இன்றைக்கும் கூட பல இளைஞர்களுக்கு.ஆனால் ஓர் அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவில் சென்று மேல்படிப்பு
படிப்பதற்கு ஓர் இளைஞருக்கு வாய்ப்புக் கிடைக்கிறது.அவர்தான்
இந்த நூலாசிரியர் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள்.
இந்த நூலினுடைய என்னுரையில்
இந்த நூலின் ஆசிரியர் இப்படி ஆரம்பிக்கின்றார். “ அரை நூற்றாண்டு வாழ்வின் பெரும் பகுதி. நான் ஓர் அய்ந்தாண்டுத் திட்டத்துடன்தான் அமெரிக்கா சென்றேன் மேல்
படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் . ஒரு லட்ச ரூபாயுடன்
தாயகம் திரும்ப வேண்டும். அய்ந்தாண்டு திட்டங்கள்
சரியாக நிறைவேறுமா? பத்தாவது அய்ந்தாண்டுத் திட்டத்தில்
உள்ளேன். தந்தை பெரியார் அவர்களிடம் விடைபெற்றுச் சென்றேன். வாழ்வில் பலவற்றைக் கற்றுக் கொண்டேன். வெற்றிகள், தோல்விகள், இன்பம், துன்பம்
அனைத்துமேதான் வாழ்வு” என்று குறிப்பிட்டு
இருக்கிறார்.ஆமாம் இந்த நூல் நூலாசிரியரின்
வெற்றிகளை,எதிர்கொண்ட சவால்களை,அதை எதிர்த்துப்
போராடிய தருணங்களை,அவரின் இணையர் அம்மா மருத்துவர் சரோஜா இளங்கோவன்
அவர்களின் ஒத்துழைப்பை,அவர் கண்ட வெற்றிகளை,இருவரும் சேர்ந்து செய்த பொதுத்தொண்டுகளை,அறப்பணிகளை
எல்லாவற்றையும் பதிவு செய்து கொடுத்திருக்கும் ஓர் ஆவணமாக அய்ம்பது தலைப்புகளில் அமைந்த
நூலாக இந்த நூல் அமைந்துள்ளது.
இந்த நூலுக்கு வாழ்த்துரையை அய்யா மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களுடைய அண்ணன் அய்யா
பேரா.சோம.வேலாயுதம் அவர்களும்
அவரின் இணையர் கலைச்செல்வி வேலாயுதம் அவர்களும் இணைந்து கொடுத்திருக்கிறார்கள். “ அதில் யாரைக் கண்டும் அஞ்சாமல் பேசும் திறமை சிறுவயதிலேயே
அவருக்கு அமைந்தது. அது கல்லூரி நாட்களில்
பயணித்தது வாழ்நாளில் பலவிதமான போராட்டங்களிலும் வெற்றி அடைய வழி வகுத்தது
போராட்டங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.. இது வரும்
நாட்களில் வெளிநாடு செல்லும் எந்த மாணவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று இந்த நூலின்
அருமையை,தேவையைப் பற்றிச் சொல்லுகிறார். ஆம் இது ஒரு வகையில் அமெரிக்கா செல்ல நினைக்கும் தமிழர்களுக்கு
ஆற்றுப்படுத்தும் நூல். ஆற்றுப்படை நூல்.
மொத்தம் 50 தலைப்புகள் இந்த நூலிலே உள்ளன. 50 ஆண்டுகள், 50 கட்டுரைகள். ‘ பிரியாவிடை’ என்பது முதல் அத்தியாயத்தின் தலைப்பு. தந்தை பெரியார்
அவர்களைச் சந்தித்த நிகழ்வை அவருக்கே உரித்தான நகைச்சுவை கலந்து அய்யா சோம இளங்கோவன்
அவர்கள் எழுதியிருக்கிறார்கள். இன்றைக்கு அமெரிக்கா பயணம் செய்வது
எளிது. நவீன வசதிகள் இருக்கிறது. ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்னால் தன்னுடைய விமானப் பயணம் எப்படி இருந்தது
என்பதைப் பெரிய பயணம் என்ற தலைப்பிட்டுக் கொடுத்திருக்கிறார். அறியாமல் பணத்தைச் செலவு செய்து விட்டு அல்லல்பட்ட கதையையும் எழுதி இருக்கிறார்.
அமெரிக்காவில் உள்ள மருத்துவத்திற்கும் நம்
நாட்டில் உள்ள மருத்துவதற்கும் உள்ள வேறுபாட்டை மிகச் சிறப்பாக குறிப்பிட்டு அந்த
மருத்துவப் பயிற்சி பற்றி எழுதுகின்ற பொழுது ‘அந்த மூன்று ஆண்டுகள் பற்றியே 30 பக்கங்களுக்கு மேல் எழுதலாம ஆனால் நீங்கள்
எல்லோரும் மருத்துவராக ஆகிவிடுவீர்கள்’ என்று குறிப்பிட்டு
இருக்கிறார். அதைப்போல ‘உண்மையிலேயே அந்த
வயதிலே அங்குள்ள பெண்களிடம் தப்பித்து ஊரில் வந்து மணம் முடிக்க வேண்டும் என்பது
ஒரு பெரிய சோதனைதான்.” என்று
குறிப்பிட்டுத் தான் தமிழ்நாட்டிற்கு வந்து அம்மா மருத்துவர் சரோஜா அவர்களை மணம் முடித்த
நிகழ்வை எழுதியிருக்கிறார். தன்னுடைய மாமனார் பற்றி அவர் எழுதியிருக்கும்
பகுதி சிறப்பு.
1973-ல்
தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த டாக்டர் கலைஞர் அவர்கள் அமெரிக்காவிற்கு
வந்ததையையும் அவருக்கு வரவேற்புக் கவிதையை வாசித்ததை மலரும்
நினைவுகளாகப் புகைப்படத்தோடு இந்த நூலில் குறிப்பிட்டு இருக்கிறார். அவர்களுடைய ‘மருத்துவத் தொழில் வேலைக்குத் தந்த விலை’ என்ற தலைப்பில்
குழந்தையாக இருந்த கனிமொழியின் உடல்நிலை கெட்டதைப் பற்றி,பின்பு
சரியானது பற்றி,தங்களுடைய மருத்துவப் பணியைப் பற்றி எல்லாம் அய்யா
அவர்கள் சிறப்பாக இந்த நூலில் எழுதியிருக்கிறார்.
அய்யா மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் சிக்காகோ தமிழ்
சங்கத்தில் தான் ஈடுபட ஆரம்பித்ததைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள் .தனக்கு ஏற்பட்ட
கசப்பான அனுபவங்களையும் அதிலே குறிப்பிட்டு இருக்கிறார். “ என்னுடைய
பொறுப்பில் இருக்கும்பொழுது நான் மகளிரை முக்கியமாகக் கொண்டு வந்து அவ்ரகளைப் பங்கேற்கச்செய்து
பேச்சு,நடிப்பு,பாட்டுத்திறமைகளை வெளிக்கொணரும்
முயற்சிகளில் நான் ஈடுபட்டேன் “ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
நன்றாகச் சிக்காகோ-வில் தமிழும், தமிழர்களும், தமிழ்ச் சங்கமும் வளர்ந்து
கொண்டிருந்த அதே நேரத்தில் போட்டிகளும் பொறாமைகளும் தொடங்க ஆரம்பித்தன அவைகள்
பின் நாட்களில் வேதனைகளாக மாறின. தமிழன் எங்குச் சென்றாலும் இந்தப் போட்டி, பொறாமை மனப்பான்மை
இருக்கத்தானே செய்கின்றது அதையெல்லாம் தாண்டித்தான் அமெரிக்காவில் தமிழ்
சங்கங்கள் வளர்ந்துள்ளன” என்று குறிப்பிட்டு
இருக்கிறார் அதைப்போல வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவை என்னும் அமைப்பைப் பற்றியும்,தமிழ்ப் பணிகளால் கிடைத்த மகிழ்ச்சியைப் பற்றியும் அய்யா எழுதியிருக்கின்றார்..
இப்பொழுதுகூட்த் தொடர்ச்சியாகப் பயணம் செய்யக்
கூடியவர்கள் அய்யா மருத்துவர் சோம இளங்கோவன் அவர்களும் மருத்துவர்
சரோஜா இளங்கோ அவர்களும். ‘நல்ல
பலநாடு சுற்றிகள் ‘ இவர்கள் இருவரும். தன்னுடைய இளமைக்
காலத்திலே அவர்கள் மேற்கொண்ட பயணங்களை இளமைக்காலப் புகைப்படங்களோடு
இணைத்து இருக்கிறார்கள் அதைப்போலக் குழந்தைகள் பிறந்ததையும் தன்னுடைய
வாழ்க்கை அனுபவங்களையும் குறிப்பிட்டு, இன்றைக்குத் தங்கள் குழந்தைகள் பெரியவர்களாகிப் பெரும் பொறுப்புகளில் இருப்பதை எழுதி இருக்கிறார்கள்.பேரப்பிள்ளைகளால் கிடைக்கும் பேரின்பத்தை இலக்கியமாக்கி அய்யா கொடுத்திருக்கிறார்.
தமிழ் ஈழத்திலே நிகழ்ந்த
துயரங்கள், ஈழத்திற்காக நடந்த மாநாடு, அதிலே தன்னுடைய பங்களிப்பு ,அதற்காகத் தொடர்ந்து
பணியாற்றிக் கொண்டிருக்கக் கூடிய பல்வேறு பணிகளை இந்த நூலிலே அய்யா அவர்கள்
குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆறாத
துயரமாய் அவர்களின் துயரம் தொடர்வதையும் குறிப்பிட்டு இருக்கிறார்.
கல்விக்கு உதவி என்ற வகையில் தன்னுடைய பல்வேறு
செயல்பாடுகளை அய்யா அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். ’காலத்தினால் செய்த சிறு உதவிகள் ‘ கூட எப்படி பெரும் உதவிகளாக,உதவி பெற்றவர்களால் பார்க்கப்பட்டன,
அவர்கள் அதனால் வாழ்க்கையில் எப்படி உயர்ந்தார்கள்,அதனால் தங்களுக்குக் கிடைத்த மகிழ்ச்சியை அய்யா அவர்கள் இந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
வாசிப்பவர்களுக்குக் கல்விக்காக நாமும் உதவி செய்யவேண்டும் என்னும் எண்ணத்தை
ஏற்படுத்தும் விதமாக இந்தக் கல்விக்கு உதவி பற்றிய கட்டுரைகள் அமைந்துள்ளன.
சுயமரியாதை திருமணத்தை, ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய மகள் அருள்செல்வி-பாலகுரு திருமணத்தைத் தான்
தலைமை தாங்கி நடத்தி வைத்ததை
அய்யா எழுதியிருக்கிறார்.அமெரிக்காவில் அதுதான் முதல் சுயமரியாதைத் திருமணம் என்று
குறிப்பிட்டு இருக்கிறார். திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குக் கொடுத்த
மருத்துவச் சிகிச்சை
பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அதேபோலக் குடும்பங்களில் ஏற்பட்ட துயரங்கள் என்று பல்வேறு செய்திகளை அய்யா அவர்கள் இந்த
நூலில் குறிப்பிட்டு இருக்கிறார்கள் .
மனிதநேயமே பெரியார் என்னும் தலைப்பில் தன்னுடைய
இறுதிக் கட்டுரையைக் கொடுத்துள்ளார்.” பெரியார் என்பது
ஒரு வாழ்க்கை முறை. அதாவது ஒரு மனிதன்
தன்னுடைய வாழ்க்கையை மகிழ்வாகவும், அதே நேரத்தில்
தன்னுடன் இருப்பவர்களுக்கு மரியாதை கொடுத்தும் அவர்களுக்கு உதவி செய்தும் அவருடன் இணைந்து
சமமாக வாழ வேண்டும் என்ற ஒரு வாழ்க்கை நெறி” என்று
குறிப்பிட்டு இருக்கிறார். பெரியாரியல் என்பது எவருக்கும் எதிரானது
அல்ல என்று குறிப்பிட்டு இருக்கிறார். தோழர் சோழ.நாகராஜன் அவர்கள் எழுதிய ‘பெரியார் பிராமணர்களுக்கு எதிரியா?’
என்னும் நூலில் தந்தை பெரியார் கொள்கையால் பயன்பெற்ற பிராமணப்பெண்கள்
பற்றி விரிவாக எழுதியிருப்பார். “ ,மனித
நேயம் வாழட்டும். மனிதர்கள் மனிதராக வாழட்டும் என்பதே எனது விருப்பம் அது
நிறைவேறும் நாள் கட்டாயம் வந்தே தீரும். வாழ்த்துக்கள்
வாழ்க பெரியார் !,வளர்க பகுத்தறிவு”
என்று இந்த நூலினை அய்யா சோம.இளங்கோவன் அவர்கள் முடித்திருக்கிறார்.
பேராசிரியர் பால் கர்ட்சு பற்றி இதிலே கட்டுரை உள்ளது பெரியார் பன்னாட்டு
மாநாடுகள் தொடர்ச்சியாக உலகெங்கும் நடைபெற்றுக்
கொண்டிருக்கின்றன. ஜெர்மனியில், அமெரிக்காவில், கனடாவில் நடைபெற்ற பெரியார் பன்னாட்டு அமைப்பு மாநாடுகளைப் பற்றி இந்த
நூலில் குறிப்பிட்டிருக்கிறார். ஒருபுறம் மருத்துவச் சேவை. தன்னால் ஆன அந்த மருத்துவ உதவியைத் தொலைதூரத்தில்
இருந்தாலும் ஆலோசனைகள் கேட்டால் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் அந்தப் பரிசோதனைகளைப் பார்த்து அதற்குரிய
மருத்துவத்தை இந்தந்த முறையில் நீங்கள் செய்யுங்கள் என்று அமெரிக்காவிலிருந்து
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல பேருக்கு வழிகாட்டக்கூடிய பெருந்தகை அய்யா அவர்கள் .எனக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய
நிலையில் தற்செயலாகத் தமிழ்நாட்டுக்கு வந்திருந்த அவர் என்னை சென்னை அப்பலோ மருத்துவமனைக்கு அழைத்துச்
சென்று
தெரிந்த மருத்துவரிடம் சொல்லி அதன் மூலமாக ஒரு நல்ல மருத்துவத்தை நான் பெறுவதற்கு
அடிப்படையாக அமைந்த மனிதநேயர் அவர். மலை உச்சியில்
இருந்தாலும் பள்ளத்தாக்கில் இருக்கக்கூடிய மனிதர்களோடு சரிசமமாகப் பழகக் கூடியவர்.அவர்களுக்கு உதவக்கூடியவர்.
இயல்பான மொழியில் அவருடைய உரையாடல் எப்போதும்
இருக்கும். அவரோடு இருக்கும் நேரங்களிலே நாம் சிரித்துக் கொண்டே
இருக்கலாம். அந்த அளவிற்கு நகைச்சுவை உணர்வு மிக்கவர் அய்யா அவர்கள். மனிதர்கள் தோன்றுகிறார்கள் வாழ்கிறார்கள் எத்தனையோ சாதனைகளைச் செய்கிறார்கள் பின்
மறைகிறார்கள். ஆனால் தன்
வாழ்வின் சாதனைகளை, வேதனைகளை, சோதனைகளைப் பலரும் ஒரு நூலாகப் பதிவதில்லை. ஆனால்
அய்யா சோம.இளங்கோவன் அவர்கள் அருமையாக,எளிமையாகப் பதிவு செய்திருக்கிறார்.
அய்யா மருத்துவர் இளங்கோவன் அவர்கள்
நமக்கு 50 ஆண்டுகளுக்கு
முந்தைய தமிழ்நாட்டை அன்றைய அமெரிக்காவை,அதைப்போல இன்றைய தமிழ்நாட்டை, இன்றைய அமெரிக்காவை இதற்கு இடைப்பட்ட இந்த 50 ஆண்டுகளில்
தமிழ்நாட்டிலும் அமெரிக்காவிலும் நிகழ்த்த பல்வேறு நிகழ்வுகளை, உலகமெல்லாம் வாழும் தமிழர்களுடைய வாழ்க்கையிலே அவர்கள் தமிழைக் கற்றுக் கொள்ளும்
வாய்ப்பினிலே ஏற்பட்ட மாற்றங்களை எல்லாம் மிகச் சிறப்பாக இந்த நூலிலே எடுத்துக்
காட்டி இருக்கிறார்கள்..தமிழ்நாட்டில்
இருந்து எவர் வந்தாலும் அவர்களை
அன்போடு வரவேற்று உபசரித்து அவர்களுக்கு உரிய வழியைக் காட்டும்
ஆளுமையாக அய்யா அவர்கள் இருப்பதை இந்த நூலின் வழியாகப் பார்க்க முடிகிறது.அதற்கு அவருடைய இணைவர் மருத்துவர் சரோஜா அவர்களும்
மிகப்பெரும் உறுதுணையாக இருந்திருக்கிறார்.இருக்கிறார்.அம்மா சரோஜா அவர்களைப் பல இடங்களில் பாராட்டி மகிழ்ந்து இருக்கின்றார் இந்த
நூலில்.அவரின் கடுமையான உழைப்பு,விருந்தினர்களை
அருமையாக உபசரிக்கும் தன்மையை,அவர் வைக்கும் மீன்குழம்பின் ருசியை,தலை சிறந்த அவரின் மருத்துவப்பணியை,பொதுத்தொண்டை எல்லாம்
விவரித்து எழுதியிருக்கிறார்.’வல்லினச்சிறகுகள் போன்ற அமைப்புகள்
அவரை அமெரிக்காவின் பாராட்ட வேண்டிய பெண்மணிகள் என்ற அளவிலேயே பாராட்டி எழுதி இருக்கின்றார்கள்.அவருடைய உழைப்பு கடுமையான உழைப்பு “ என்று தன் வாழ்விணையர்
டாக்டர் சரோஜா இளங்கோவன் அவர்களைப் பாராட்டி ‘வாழ்விணையர் சாதனைகள்
‘ என்றே தனியாக ஒரு தலைப்பில் எழுதி இருக்கின்றார்.
‘வல்லினச்சிறகுகள் ‘ இதழின் நிறுவனர் தோழர் அகன் அவர்கள் முதன்முதலில் அமெரிக்காவில் புத்தக
வெளியீடு செய்ய வேண்டும் என்று நினைத்தபொழுது அதற்கு உதவியவர் டாக்டர் சோம.இளங்கோவன் என்று
மிகச்
சிறப்பாகத் தன்னுடைய நூலில் குறிப்பிட்டு இருப்பார்கள். இப்படி எல்லோருக்கும் உதவுகின்ற ஒரு மனிதராக, அதே நேரத்தில்
எதார்த்தமான நிலையோடு தன்னால் முடிந்ததை ,என்ன முடியும்
என்பதை மிகத் தெளிவாகச் சொல்லக்கூடிய ஒரு அருமையான மருத்துவராக அய்யா சோம.இளங்கோவன் அவர்கள் இருக்கிறார்கள். எனவே அந்த வகையில்
அமெரிக்காவில் 50 ஆண்டுகள் என்ற இந்தப் புத்தகம் பல்வேறு செய்திகளை நமக்குச் சொல்கிறது
திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா ஆசிரியர் கி
வீரமணி அவர்கள் ‘அணிந்துரை அல்ல, எமது நன்றியுரை’ என்று குறிப்பிட்டு அணிந்துரை இந்த நூலுக்கு கொடுத்துள்ளார்கள். “அருகில் அமர்ந்து
சொல்லுவது போன்ற அடக்கமிகு அழகு நடையில் எழுதி உள்ளார் டாக்டர் சோம. இளங்கோவன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். “ அணிந்துரை எழுதிடப் பதிப்பாளர்
கேட்டார். நான் எழுதுவது அணிந்துரை அல்ல ;அவருக்கு நன்றி உரை. என்னை 32 ஆண்டுகளுக்கு முன்
வாழ வைத்து இன்றும் எனது தொலைதூர-( மிக அருகில்
என்றும் உள்ளத்திற்கு மிக அருகில் உள்ள) மருத்துவ மற்றும்
மனிதநேய காவலர். பட்ட கடனை அடைக்கவே இந்த நன்றி உரை .நான் மட்டுமல்ல என்னைப் போல எத்தனையோ மனிதர்கள் அவரது கருணையால், உதவியால், நட்பால், வற்றாத அன்பால்
வாழ்கிறார்கள் என்பது அவர் பெரும் ஊதியம். அவருக்கு
உறுதுணையாய் டாக்டர் சரோஜா இளங்கோவன் அவர்கள்” என்று ஒரு நெகிழ்ச்சியான நன்றி உரையை அணிந்துரையாகக்
கொடுத்துள்ளார்கள்.இந்த நூல் மதிப்புரையும் கூட ஒருவகையில் அய்யா மருத்துவர்
சோம.இளங்கோவன் அவர்களுக்கு எனது நன்றியுரைதான்.எனது உயிர் காக்க உற்ற மருத்துவ வழி காட்டியவர் அவர்.அவருடைய ஒட்டு மொத்த வாழ்க்கையையும் ஒரு நூலாக நான் வாசித்தபொழுது அவ்வளவு
மகிழ்ச்சி ஏற்பட்டது எனக்கு.இந்த நூலைப் படித்துப் பாருங்கள் நீங்களும் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைவீர்கள்.மற்றவர்களுக்கு இன்னும் உதவிட வேண்டும் என்னும் உந்துதலுக்கு ஆட்படுவீர்கள்.
No comments:
Post a Comment