Showing posts with label நூல் அறிமுகம். Show all posts
Showing posts with label நூல் அறிமுகம். Show all posts

Tuesday, 11 February 2025

நாலு தெருக் கத ...

 நாலு தெருக் கத ...

வா.நேரு


நாலு தெருக் கத என்பது ஒரு புதினம். மயிலாடுதுறையைச் சார்ந்த கி தளபதிராசு அவர்கள் இதை எழுதியிருக்கிறார். திராவிடன் குரல் வெளியீடாக இந்தப் புதினம் திசம்பர் 2024 ஆண்டு வெளிவந்திருக்கிறது 196 பக்கங்கள் உள்ள இந்த நூலின் விலை உருவாய் 200.

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டுவிழா நிறைவு விழாவில் தமிழ்நாட்டின் தலைமை அமைச்சர் அவர்களும் கேரளநாட்டின் தலைமை அமைச்சர் அவர்களும் திராவிடர் கழகத்தின் தலைவர் கி வீரமணி அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர் வைக்கம் போராட்டம் என்பது உரிமைக்கான போராட்டம் மட்டுமல்ல ஒரு மிகப்பெரிய வரலாற்று திருப்புமுனையைக் கொடுத்த ஒரு போராட்டம்.
வைக்கம் போராட்டத்தை இன்றைய இளைஞர்கள் மத்தியில் எப்படிக் கொண்டு செல்வது? சிலர் வைக்கம் போராட்டத்தைப் பாடல்களாக பாடி இருக்கிறார்கள். அய்யா பழ அதியமான் வைக்கம் போராட்டத்தைப் பற்றி மிக அருமையான ஓர் ஆய்வு நூலை வைக்கம் போராட்டம் என்னும் தலைப்பிலேயே எழுதியிருக்கிறார்.
அவர் ஒன்றிய அரசுப் பணியிலே பணியாற்றியக் காலத்தில் விடுமுறை எடுத்துக்கொண்டு வைக்கத்திற்குச் சென்று கேரள அரசின் பல்வேறு துறைகளுக்கு சென்று அங்கு பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாரின் பங்களிப்பை அவரது சிறைவாழ்வை முழுமையான தரவுகளோடு சான்றுகளோடு கொடுத்திருக்கக் கூடிய ஒரு நூலாக அந்த நூல் விளங்குகிறது.
நாலு தெருக் கத என்ற இந்த நூலைப் பொறுத்தவரை புனைவுகளின் வழியாக நடந்த வரலாற்று நிகழ்வை உரையாடல் வழியே, படிப்பவர் மனத்தில் பதிய வைக்க எழுத்தாளர் கி தளபதிராசு அவர்கள் முயன்று அதிலே வெற்றியும் பெற்றிருக்கிறார் என்பதை இந்தப் புதினத்தைப் படிக்கும் போழ்து நமக்குத் தெளிவாய் தெரிகிறது. அதன்படி இந்த நாலு தெருக் கதயின் நாயகன் இனியவன் பத்து ஆண்டிற்கு முன் சென்னையில் ஒரு நாளிதழில் செய்தியாளராக வேலைக்குச் சேர்ந்தாலும் செய்தியை அனுப்புவதோடு தன் வேலை முடிந்தது என்று நினைக்காமல் கட்டுரைகள் எழுதி அதை அந்த நாளிதழ்க்கு அனுப்பிய செய்திகளை படித்த அந்த நாளிதழை நடத்துபவற்குப் பிடித்துப் போனதால் தொடர்ந்து எழுதச்சொல்லி ஊக்கப்படுத்தியதன் விளைவாக அவன் எழுதிய கட்டுரைகள் அவனை நல்ல எழுத்தாளனாக அடையாளப் படுத்தியது.
சில ஆண்டுகள் அந்த இதழில் வேலை செய்துவிட்டு அதன்பின் அனைவரும் அறிந்த ஆங்கில நாளிதழுக்குச் சென்று அதற்குப் பின் தொலைக் காட்சிக்கு மாறிவிட்டான் என்று உழைப்பால் உயர்ந்த ஒருவரை இன்றைய இளைஞர்களுக்கு முன் எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய ஒருவரை கதை மாந்தனாய் படைத்திருக்கிறார் இந்த புதினம் எழுதியவர்.
நாலு தெருக்கத என்னும் இந்தப் புதினம் நடப்பு நிகழ்வுகள் அடிப்படையில் இன்றைய வாழ்க்கை முறையின் அடிப்படையில் ஒரு பகுத்தறிவு குடும்பம் எப்படி நடைபெறுகிறது என்பதை இயல்பான உரையாடல்கள் மூலமாக படிப்பவர்களுக்கு எடுத்துக்காட்டுகிறது இதிலே அறிவுக்கரசு என்ற ஒரு கதை மாந்தனை படிக்கும் போது திராவிடர் கழகத்தின் செயலவை தலைவராக இருந்த அய்யா சு.அறிவுக்கரசு அவர்களை நேரடியாக அறிந்தவர்களுக்கு அவர் அப்படியே உயிரோடு எழுந்து வந்து இந்தக் கதைக்குள்ளும் உரையாடல்களுக்குள்ளும் நடமாடுவது போல் தெரிகிறது. அந்த அளவிற்கு அந்த உண்மையான மாந்தர் அறிவுக்கரசுவை இந்தப் புதினத்தின் வாயிலாக உயிர்ப்பித்திருக்கிறார் எழுத்தாளர் தளபதிராசு. மேலும் வைக்கம் வரலாற்றை மட்டுமல்ல நிறைவாழ்வு வாழ்ந்து கொள்கையை மட்டுமே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த தந்தை பெரியாரின் தொண்டர்களை இப்படியும் நினைவில் நாம் வைத்துக் கொள்ளலாம் வருங்காலத் தலைமுறைக்கு அடையாளம் காட்டிச்செல்லலாம் என்பதற்கு இந்தப் புதினத்தைப் படைத்தவர் வழிகாட்டி இருக்கிறார். அதைப்போல வாழ்ந்து மறைந்த சில பெரியாரிய உணர்வாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய சில பெரியாரிய உணர்வாளர்கள் அவர்களுடைய வாழ்க்கை முறையை விவரிப்பதாக இந்தக் கதை அமைந்திருப்பது என்னைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
பெரியார் வழி வாழும் ஒரு குடும்பத்தில் ஓர் இளைஞன் பகுத்தறிவு அடிப்படையில் திருமணம் செய்து கொள்கிறான். அத்தோடு தம்மை சார்ந்தோருக்கும் பகுத்தறிவு வழியில் சாதி மறுப்பு காதல் மணத்தைத் செய்வித்துக் குமுகப் பொறுப்புடன் வாழ்கிறான். என்பதைச் சுவையாகச் சொல்லும் கதைதான் இந்தப் புதினத்தில் எந்தச் சிக்கலும் இல்லாமல் சமதளத்தில் பாய்ந்து ஓடுகிற கதை நீர்.
சென்ற நூற்றாண்டில் குமுக உரிமைக்கான முதன்மை முன்னெடுப்பு வைக்கம் போராட்டம் அதன் அனைத்து நிகழ்வுகளும் அதில் பெரியாரின் பங்கும் எப்படி என்று விறுவிறுப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரு போராட்டத்தை சான்றுகளின் வழி ஆவணப்படுத்தி வரலாறாகப் பதிவு செய்வது செய்தி பரவலில் ஒரு வகை இன்னொரு வகை ஆய்வாளர்கள் மாணவர்கள் குமுக ஆய்வில் ஆர்வம் உள்ள படிப்பவர்கள் ஆகியோருக்கு அவ்வரலாறு பயன்படுவது மட்டுமல்லாமல் அப்போராட்ட உணர்வைப் புனைவாக எழுதி பொது மக்கள் படிக்க இது போன்ற புதினம் உதவும் என்று அணிந்துரையில் பழ.அதியமான் குறிப்பிட்டிருக்கிறார்.
எந்த இடத்தில் சாப்பிடவேண்டும் என்று முடிவெடுத்து இந்தக் கதையின் நாயகன் இனியவன் மகிழுந்தை நிறுத்துவதற்குக் கூட ஒரு காரணத்தை சொல்லுவதாகப் புதினத்தில் வருகிறது. இதேக் கருத்தை ஒட்டி சில நாளைக்கு முன்பு அடையாறு ஆனந்த பவன் உணவக உரிமையாளர் ஒரு நேர்காணலில் ஒருகாலத்தில் எல்லோரும் உணவகம் நட்த்த முடியாது என்றும் அது ஒரு குறிப்பட்ட பிரிவினர் மட்டுமே நடத்த முடியும் ஆனால் இன்றைக்கு அப்படி இல்லை யார் வேண்டுமானாலும் காசு இருந்தா நடத்தலாம் என்றும் யாரும் எந்தத் தொழிலையும் செய்யலாம் என்ற நிலையை உருவாகிக் கொடுத்தவர் பெரியார்தான் என்று வெளிப்படையாகச் சொன்னது மிகப் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தியது மக்கள் நடுவில். அதைவிடச் சிறப்பு என்னவென்றால் அவர் பகுத்தறிவாளர் இல்லை நாளும் சிலையை வழிபடும் போக்கு உடையவர்தான் என்றாலும் அவர் பெரியாரைப் பற்றிக் கொடுத்த நேர்காணலை பார்த்தப்பிறகு அவர் மேல ஒரு மதிப்பு வந்தது என்று என்று போகிறபோக்கில் இனவுணர்வு அடிப்படையில் நாம் ஒத்திசைவு கொடுக்கவேண்டும் என்ற கருத்தை இந்தப் புதினத்தில் எழுத்தாளர் விதைக்கின்றார் அது மட்டுமின்றி பற்றா இனவுணர்வா எது முதன்மை என்றால் இனவுணர்வு என்னும் விடைக்கான உரையாடலாக மேற்கண்ட உரையாடலை இணையர்களுக்கு இடையே நடக்கின்ற உரையாடலாகப் புதினத்தைக் காட்டியிருக்கிறார்.
இப்படி உள்ளும் புறமும் பெரியாரியல் அடிப்படையில் இந்தப் புதினத்தைப் அமைத்திருந்தாலும் எந்த இடத்திலும் பெரிய அளவிற்கான பரப்புரை நெடியில்லை என்றாலும் பெரியாரியல் குறித்த புரிதலைக் கொடுக்கும் வண்ணம் உரையாடல்கள் இருக்கின்றன.
கதை சொல்லுதல் என்பது காலம் காலமாக நம் குருதியில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு கலை. அது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செய்யுள் வடிவில் நிகழ்வுகளைக் கதைகளாக்கி கற்பனைகளோடு கலந்து கொடுத்த பெருமைக்குரிய இனம் நம் இனம். அப்படிச் சொல்லுகிற கதை யாருடைய கதை என்பது மிக முதன்மையானது கழக இலக்கியத்தில் குமுகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள மாந்தர்கள் பாடப்பட்டிருக்கிறார்கள். அனைத்து நிலைகளிலும் இருந்தவர்களும் எழுதி இருக்கிறார்கள். ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன் கல்லைப் பற்றிப் பாடுவதும் கல்லுக்குத் தொண்டு செய்யும் மன்னனை பற்றிப் பாடுவது மட்டுமே இலக்கியம் என்று ஆகிப் போனது. எனவேதான் 20 ஆம் நூற்றாண்டில் 21ம் நூற்றாண்டில் கதை சொல்லுதல் கதை எழுதல் என்பது எதற்காக யாருக்காக யாரால் என்ற வினாக்களோடு தொடர்கிறது.
இந்த நாலு தெருக்கத என்னும் புதினம் ஒரு பகுத்தறிவாளரால் எழுதப்பட்டிருக்கிறது. இந்த குமுகத்தில் வாழும் அனைவரும் ஒரு பகுத்தறிவுக் குடும்பத்தின் வாழ்வியல் எப்படி இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது என்றாலும் தன் வாழ்வியலைப் பகுத்தறிவு அடிப்படையில் அமைத்துக் கொண்டாலும் தனக்கு மாறுபட்ட வாழ்வியலைக் கொண்டிருக்கும் மனிதர்களோடும் எப்படி ஒத்து அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து வாழமுடியும் என்பதும் இந்தப் புதினத்தின் வழியாக காட்டியது வெகு சிறப்பு.
இந்தப் புதினத்தின் வெற்றி எந்த இடத்திலும் கதை தொய்வில்லாமல் செல்வது. சில கிளைக்கதைகள் நீண்டும் சில கிளைக்கதைகள் ஓரிரு பக்கங்களிலும் முடிந்திருக்கின்றன என்பதும் ஒருவகை புரட்சிதான். காரணம் ஒரு கிளைக்கதை என்றால் 10 பக்கம் என்றக் கணக்கில் 25 கிளைக்கதைகளை கொண்டு 250 பக்கம் எழுதவேண்டும் என்று பல எழுத்தளர்கள் பக்கங்களைத் தீர்மானித்துவிட்டு எழுத அமருவர். இந்தப் புதின எழுத்தளர் தளபதிராசு அவர்களைப் பொறுத்தவரை அப்படிப்பட்ட வரைமுறை எல்லாம் வகுத்துக்கொள்ளாமல் இயல்பான கதை ஓட்டத்திற்கு ஏற்றவாறு கதைகளைப் படைத்துள்ளார் என்பது சிறப்புதான் என்றாலும் ஆங்கிலச் சொற்கள் வடமொழிச் சொற்கள் எனப் பழமொழிச் சொற்கள் இந்தப் புதினத்திற்குள் வருகின்றன என்பதை படிக்கும் போது நமக்கு வருத்தமாக உள்ளது என்றாலும் நாம் இவர் மீது மட்டும் பழியைச் சுமத்த முடியாது. காரணம் நம்மைச் சுற்றி உலவும் ஊடகம் எல்லாம் திட்டம் போட்டே தமிழை அழித்துக் கொண்டு இருக்கிறது என்பதை நாம் கடந்து செல்ல முடியாது. மேலும் ஆசிரியர், பேராசியர் என்று சொல்லிக் கொள்வோர் பேசுவதை எழுதுவதை எல்லாம் படித்தால் கேட்டால் தமிழ் விரைந்து சாகுமோ என்ற எண்ணம் தோன்றுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பல படையெடுப்புகளை எல்லாம் தாண்டி நிலைத்து நிற்கும் செம்மொழி என்ற அடிப்படையில் இனி வரும் நூல்கள் எல்லாம் தூயத் தமிழில் படைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை இந்தப் புதினம் படைத்த எழுத்தாளர்க்கு வைக்கிறேன்.
நடக்காத நிகழ்வுகளான இராமாயண மகாபாரதக் கதைகளை வரலாறு என்று சொல்லி மக்கள் நடுவில் புகுத்துவதற்கு ஒரு பெருங்கூட்டம் தமிழர் நாட்டில் வேலை செய்துகொண்டிருக்கும் கேடுகளுக்கு சாவு மணியை அடிக்க உண்மையான நிகழ்வுகளை கதைகளாக்கி அதை மக்களிடம் கொண்டு சென்று புதியதொரு வழியை நாம் சமைக்க வேண்டும் அதற்கு தளபதிராசு போன்றோர் தொடர்ந்து எழுதி புதிய எழுத்தாளர்களுக்கு வழி காட்ட வேண்டும் என்பதே என் அவா!



Wednesday, 15 January 2025

திராவிட ஆய்தம்... வா நேரு

 திராவிட ஆய்தம்

  வா நேரு 

எத்தனையோ நூல்களைப் படிக்கின்றோம் ஆனால் சில நூல்கள்தான் அதன் உள்ளடக்கத்தால் வெளிப்படுத்தும் கருத்தால் பெரும் மகிழ்ச்சியைக் கொடுப்பதோடு மட்டுமின்றி நம் சிந்தனையை தூண்டுகிறது அந்தவகையில் அமைந்த நூல்தான் அண்மையில் நான் படித்த  நூலான இரா நரேந்திரகுமார் அவர்கள் எழுதிய திராவிட மரபணு  என்னும் நூல் அதைப் பற்றி பார்க்கப் போகிறோம் 

இந்த நூலுக்கு பதிப்புரை எழுதியுள்ள காவ்யா பதிப்பகத்தின் காவ்யா சண்முகசுந்தரம் அவர்கள்  திராவிடம் என்பது  தமிழைத் தாயாகக் கொண்ட திராவிட மொழிக் குடும்பமாக திராவிட மொழிகளைப் பேசும் இனத்தைக் குறிக்கும் சொல்லாக திராவிடர்கள் வாழும் நாட்டைக் குறிக்கும் இடமாக  திராவிடக் கருத்தியலை அதன் அரசியலைக் குறிக்கும் என்று நான்கு வகையாக திராவிடக் கருத்தியலை நாம் பார்க்கலாம் என்று குறிப்பிட்டு உள்ளார் .
திராவிடக் கருத்தியலை அதன் அரசியலைக் குறிக்கும் இந்த நூல் மொத்தம் 160 பக்கங்கள் உடையது.இந்த நூல் முதல் பகுதியில் 5 கட்டுரைகளும் இரண்டாம் பகுதியில் 2 கட்டுரைகளும் முன்னுரை என்னும் ஒரு கட்டுரை என மொத்தம் 8 கட்டுரைகளைக் கொண்ட நூல்  மேலும்  ஒரு நல்ல கட்டுரையாளர் என்பவர் வெறுமனே கருத்துக்களை கோர்த்துத் தருபவர் அல்ல மாறாக வகை வகையாக  வண்ணங்களில் இருக்கும்  கருத்தியலை உள்வாங்கி அதற்குள் இருக்கும் முரண்களைக்  கண்டுபிடித்து எளிய முறையில் உண்மையை படிப்போர் மனத்துள் கடத்தும் வியன்மிகு  கலைஞன்.

அந்த வகையில் நரேந்திரகுமார் என்னும் கட்டுரையாளரின் பரந்து பட்ட படிப்பறிவையும் பல நூல்கள் வழியாக உணர்ந்த கோட்பாடுகளை பல மாந்தர்களின் செயல்களை எல்லாம் உள்வாங்கி  அவற்றையெல்லாம் திராவிடக் கருத்தியல் என்னும் நுண்கண்ணாடியால் அளவிடுவதையும் இந்த நூல் நமக்கு அடையாளம் காட்டுகிறது

திராவிடச்சிந்தனை என்னும் முதல் கட்டுரை திராவிட இயக்கத்தின் வரலாறாகவும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் பல்வேறு பணிகளை புதிய நோக்கில் எடுத்துரைப்பதாகவும் அமைந்திருக்கிறது மேலும் தேவையற்ற வேளையில் கூட கடவுள் மறுப்பைத் திராவிட இயக்கத்துடன் அடையாளம் காட்டிப் பேசுவது ஆரியத்தின் சூழ்ச்சி என்றும் கடவுள் மறுப்பு மட்டுமே திராவிட இயக்கக் கோட்பாடு இல்லை அது ஓர் ஆயுதம் அடையாளம் ஆரியத்துக்கு எதிரான கொள்கை  என்று எடுத்துரைத்து திராவிடச் சிந்தனையின் காலமுறை வளர்ச்சியை அடையாளம் காட்டுகிறார் ஒவ்வொரு துறையிலும்

 

இன்றைக்கு அண்ணாவின் தேவை அறிவுலகாலும் சிந்தனையாளர் நயன்மை உணர்வாளர்களாலும் உணரப்படுகிறது என்று பேரறிஞர் அண்ணாவை அண்ணா என்னும் கட்டுரையில் குறிப்பிடும் எழுத்தாளர் ஒரு காலத்தில் அண்ணாவை வெறுத்து ஒதுக்கிய ஆரிய இந்து மாபெரும் தமிழ்க்கனவு  என்னும் நூல் மூலம் எப்படிக் கொண்டாடுகிறது என்பதையும் எதிர் நிலையில் இருந்தவர்கள்கூட அண்ணாவின் பங்களிப்பை எப்படி எல்லாம் உச்சி முகர்ந்து பாராட்டுகிறார்கள் என்பதையும் மிகச்சிறப்பாகச்சொல்லி இருக்கின்றார் அதனைத் தொடர்ந்து சோர்விலாச்சூரியன்  என்னும் கட்டுரையும் மானமிகு தன் மதிப்புக்காரர்(சுயமரியாதைக்காரர் ) கலைஞர் என்னும் கட்டுரையும் கருணாநிதி அவர்களை சிறப்பாக படம் பிடித்துக்காட்டும் கண்ணாடிகளாய் எவர் படித்தாலும் கருணாநிதி என்னும் ஆளுமையை எண்ணி எண்ணி மகிழும்படி அமைந்திருக்கும் கட்டுரைகள் தாம்

திராவிட இயக்கம் செயகாந்தனும் பிறரும் என்னும் கட்டுரை செயகாந்தனின் இன்னொரு பக்கத்தை நமக்குக் காட்டுகிறது இதுவரை ஆரிய ஊடகங்கள் ஊதிப்பெருக்கியது போல  திராவிட இயக்கத்திற்கு எதிராக மிக முரட்டுத் தன்மையுடன் கொடும் சொற்களுடன்  பல்வேறு கருத்துக்களை உதிர்த்தவர்தான் சொன்னவர்தான் செயகாந்தன் என்பது  நாம் அறிந்த்தே. இது எவ்வளவு உண்மையோ அதே அளவிற்கு திராவிட இயக்க ஆளுமைகளைப் போற்றியவரும் செயகாந்தன் என்பதை பல்வேறு எடுத்துக்காட்டுகளோடு நாள் உள்ளிட்ட சான்றுகளோடு தோழர் நரேந்திர குமார் இந்த நூலில் கூறுகின்றார்.

நான் ஒரு முரண்களின் மூட்டை என்று தன்னைத் தானே திறனாய்வு செய்து  கொண்டவர் செயகாந்தன் அப்படிப்பட்ட ஒரு முரண் என்பது அவரது வாழ்க்கை முழுவதும் இருந்தது ஆனால் அந்த முரணில் வெளிவந்த கருத்துக்கள் திராவிட இயக்கத்திற்கு ஒத்திசைவாகவும்  இருந்திருக்கிறது தந்தை பெரியாரின் செயலால் அவரின் காலில் விழுந்து வணங்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியது என்று செயகாந்தன் சொன்னது எத்தனை பேருக்குத் தெரியும் மேலும்  திராவிட இயக்கத்திற்கு இசைவாக அவர் என்னென்னவெல்லாம் சொல்லி இருக்கிறார் என்பதை கோர்வையாக தொகுத்துக் கொடுத்ததோடு அதற்குள் இருக்கும் அரசியலையும் மிக நுட்பமாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் எழுத்தாளர் இரா நரேந்திர குமார் 

 

இந்த நூலின் பகுதி 2 இல் 2 கட்டுரைகள் இருக்கின்றன அவற்றில் ஒன்று கடைவிரித்தேன் கொள்வாரில்லை  கட்டிக்கொண்டேன் என்று  வள்ளலார் பற்றி தான் பள்ளியில் படிக்கின்ற நிலையில் தொடங்கி வள்ளலார் எப்படி மறைந்தார் என்பது பற்றி மறைமலையடிகள் எழுதி வைத்திருந்த கடிதம்வரை விவரிக்கும் ஒரு கட்டுரையும் வள்ளலார் பற்றி நமக்கு புது வெளிச்சம் பாய்ச்சிகிறது இந்த நூல்



அடுத்தது பிரதிவாதம் என்ற தலைப்பில்  ஆண்டாள் பற்றி பாடிவிட்டார் என பாவலர் வயிரமுத்துவுக்கு எதிராக அறிவிலார் பரப்பிய பொய்களை எதிர்ப்புகளை உடைத்து உண்மை எது என்பதைத் தெளிவாக உணரவைக்கும் கட்டுரை

தமிழ் இலக்கியத்தைப் பொறுத்த அளவில் ஆரியர்களின் கோட்டையாக 1930 களில் 40களில்  அவா்களின் மொழி மட்டுமே தமிழ் இலக்கியமாக இருந்ததை உடைத்தது திராவிட இயக்கத்தைச் சார்ந்த பெரியார் அண்ணா கருணாநிதி பாவேந்தர் போன்று  பலரும் எளிய நடையில் புரியும் வண்ணம் எழுதி எழுத்துலகில் பெரும் புரட்சியை விதைத்து அடித்தளத்தை மறுமலர்ச்சியை  மாற்றத்தை ஏற்படுத்திய இயக்கம் திராவிட இயக்கம் என்பதை மறைத்து இன்றைக்கு புதுமை படைப்பாளர்கள்  என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்கிற நாங்கள் கட்டுடைக்கிறோம் என்று சொல்லிவிட்டு இழிவான சொற்களை பெரிதாக எழுதி விட்டால் அது பெரிய இலக்கியம்  என்று பிதற்றுகின்ற கேடர்களுக்கு  இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்று பாவேந்தர் தன்னுடைய  நூலால் ஏற்படுத்திய மாற்றம் 1940 களிலேயே கட்டு உடைத்தல் என்பதற்கான களச் சான்றாக  நிற்கிறது




 

இந்த தமிழ் குமுகத்தில் ஆரியர்கள்  வேதம்  மரபு  புனிதம்  பழங்கதைகள் என்று  ஏற்படுத்தி வைத்திருந்த அத்தனை கட்டுக்களையும் தங்களுடைய இலக்கியத்தால் பேச்சால் நாடகத்தால் திரைப்படங்களால் உடைத்து எறிந்தவர்கள் திராவிட இயக்கத்தலைவர்கள் என்பதற்கு  அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள் அறிவு கெட்டவனே என்று பராசக்தியில் கருணாநிதி அவர்கள் எழுதிய உரையாடல் 70  ஆண்டுகளுக்குப் பின்பும் கேட்பவரின் மனதில் சுர்ரெனத் தைக்கிறது என்று திராவிட  இயக்கத்தின் கருத்தியலை மிகத் தெளிவாக  விவரித்திருக்கும் திராவிட மரபணு  என்னும் நூல் படிக்க வேண்டிய நூல் மட்டும் அல்ல  நம் இல்லங்களில் இருக்கவேண்டிய நூல் மீண்டும் மீண்டும் படிக்கவேண்டிய நூல் அதுமட்டுமின்றி உரைநடையைக் கூட பா  போல எப்படி எழுதுவது என்பதைக் கற்றுக்கொடுக்கும் நூல் திராவிடக் கருத்தியலை மிகச்செழுமையாக படிப்பவரின் மனத்தில் நின்றிடும் நூல் இதுவென பரிந்துரை செய்கிறேன்

நன்றி : புகழ்ச்செல்வி  இதழ் ( தி பி 2056 சிலை சுறவம் சனவரி 2025 

Monday, 12 August 2024

அமெரிக்காவில் அய்ம்பது ஆண்டுகள்..மருத்துவர் சோம.இளங்கோவன்

அச்சில் எழுத்து சரியாகத் தெரியவில்லை என்று சிலர் சொன்ன காரணத்தால்,கீழே எழுத்து வடிவலான கட்டுரையையும் கொடுத்திருக்கிறேன். நன்றி. 

வா.நேரு

14.08.2024








நன்றி : வல்லினச்சிறகுகள் இதழ் - ஜூலை 2024

சங்கப் பலகை

நூல் : அமெரிக்காவில் அய்ம்பது  ஆண்டுகள் (ஒரு பகுத்தறிவுவாதியின் பயணம்)

நூலாசிரியர் மருத்துவர் சோம.இளங்கோவன்

வெளியீடு நன்செய் பிரசுரம் திருத்துறைப்பூண்டி

முதல் பதிப்பு செப்டம்பர் 2023

மொத்த பக்கங்கள் 144 விலை ரூபாய் 150

அமெரிக்கா செல்வது என்பது நமக்கு ஒரு கனவு.அமெரிக்காவில் சென்று படிப்பது,வேலை பார்ப்பது என்பது பெரும் கனவு இன்றைக்கும் கூட பல இளைஞர்களுக்கு.ஆனால் ஓர் அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவில் சென்று மேல்படிப்பு படிப்பதற்கு ஓர் இளைஞருக்கு வாய்ப்புக் கிடைக்கிறது.அவர்தான் இந்த நூலாசிரியர் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள்.

இந்த நூலினுடைய என்னுரையில் இந்த நூலின் ஆசிரியர் இப்படி ஆரம்பிக்கின்றார். “ அரை நூற்றாண்டு வாழ்வின் பெரும் பகுதி. நான் ஓர் அய்ந்தாண்டுத் திட்டத்துடன்தான் அமெரிக்கா சென்றேன் மேல் படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் . ஒரு லட்ச ரூபாயுடன் தாயகம் திரும்ப வேண்டும். அய்ந்தாண்டு திட்டங்கள் சரியாக நிறைவேறுமா? பத்தாவது அய்ந்தாண்டுத் திட்டத்தில் உள்ளேன். தந்தை பெரியார் அவர்களிடம் விடைபெற்றுச் சென்றேன். வாழ்வில் பலவற்றைக் கற்றுக் கொண்டேன். வெற்றிகள், தோல்விகள், இன்பம், துன்பம் அனைத்துமேதான் வாழ்வு என்று குறிப்பிட்டு இருக்கிறார்.ஆமாம் இந்த நூல் நூலாசிரியரின் வெற்றிகளை,எதிர்கொண்ட சவால்களை,அதை எதிர்த்துப் போராடிய தருணங்களை,அவரின் இணையர் அம்மா மருத்துவர் சரோஜா இளங்கோவன் அவர்களின் ஒத்துழைப்பை,அவர் கண்ட வெற்றிகளை,இருவரும் சேர்ந்து செய்த பொதுத்தொண்டுகளை,அறப்பணிகளை எல்லாவற்றையும் பதிவு செய்து கொடுத்திருக்கும் ஓர் ஆவணமாக அய்ம்பது தலைப்புகளில் அமைந்த நூலாக இந்த நூல் அமைந்துள்ளது.

 

இந்த நூலுக்கு வாழ்த்துரையை அய்யா மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களுடைய அண்ணன் அய்யா பேரா.சோம.வேலாயுதம் அவர்களும் அவரின் இணையர் கலைச்செல்வி வேலாயுதம் அவர்களும் இணைந்து  கொடுத்திருக்கிறார்கள். “ அதில் யாரைக் கண்டும் அஞ்சாமல் பேசும் திறமை சிறுவயதிலேயே அவருக்கு அமைந்தது. அது கல்லூரி நாட்களில் பயணித்தது வாழ்நாளில் பலவிதமான போராட்டங்களிலும் வெற்றி அடைய வழி வகுத்தது போராட்டங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.. இது வரும் நாட்களில் வெளிநாடு செல்லும் எந்த மாணவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று இந்த நூலின்  அருமையை,தேவையைப்  பற்றிச் சொல்லுகிறார். ஆம் இது ஒரு வகையில் அமெரிக்கா செல்ல நினைக்கும் தமிழர்களுக்கு ஆற்றுப்படுத்தும் நூல். ஆற்றுப்படை நூல்.

மொத்தம் 50 தலைப்புகள் இந்த நூலிலே உள்ளன. 50 ஆண்டுகள், 50 கட்டுரைகள்.   பிரியாவிடை என்பது முதல் அத்தியாயத்தின் தலைப்பு. தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்த நிகழ்வை அவருக்கே உரித்தான நகைச்சுவை கலந்து அய்யா சோம இளங்கோவன் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். இன்றைக்கு அமெரிக்கா பயணம் செய்வது எளிது. நவீன வசதிகள் இருக்கிறது. ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்னால் தன்னுடைய விமானப் பயணம் எப்படி இருந்தது என்பதைப் பெரிய பயணம் என்ற தலைப்பிட்டுக் கொடுத்திருக்கிறார். அறியாமல் பணத்தைச் செலவு செய்து விட்டு அல்லல்பட்ட கதையையும் எழுதி இருக்கிறார்.

அமெரிக்காவில் உள்ள மருத்துவத்திற்கும் நம் நாட்டில் உள்ள மருத்துவதற்கும் உள்ள வேறுபாட்டை மிகச் சிறப்பாக குறிப்பிட்டு அந்த மருத்துவப் பயிற்சி பற்றி எழுதுகின்ற பொழுது அந்த மூன்று ஆண்டுகள் பற்றியே 30 பக்கங்களுக்கு மேல் எழுதலாம ஆனால் நீங்கள் எல்லோரும் மருத்துவராக ஆகிவிடுவீர்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதைப்போல உண்மையிலேயே அந்த வயதிலே அங்குள்ள பெண்களிடம் தப்பித்து ஊரில் வந்து மணம் முடிக்க வேண்டும் என்பது ஒரு பெரிய சோதனைதான்.” என்று குறிப்பிட்டுத் தான் தமிழ்நாட்டிற்கு வந்து அம்மா மருத்துவர் சரோஜா அவர்களை மணம் முடித்த நிகழ்வை எழுதியிருக்கிறார். தன்னுடைய மாமனார் பற்றி அவர் எழுதியிருக்கும் பகுதி சிறப்பு.

 

1973-ல் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த டாக்டர் கலைஞர் அவர்கள் அமெரிக்காவிற்கு  வந்ததையையும்  அவருக்கு வரவேற்புக் கவிதையை வாசித்ததை மலரும் நினைவுகளாகப் புகைப்படத்தோடு இந்த நூலில்  குறிப்பிட்டு இருக்கிறார். அவர்களுடைய மருத்துவத் தொழில் வேலைக்குத் தந்த விலை என்ற தலைப்பில் குழந்தையாக இருந்த  கனிமொழியின் உடல்நிலை கெட்டதைப் பற்றி,பின்பு சரியானது பற்றி,தங்களுடைய மருத்துவப் பணியைப் பற்றி எல்லாம் அய்யா அவர்கள் சிறப்பாக இந்த நூலில் எழுதியிருக்கிறார்.

 

அய்யா மருத்துவர் சோம.இளங்கோவன்  அவர்கள் சிக்காகோ தமிழ் சங்கத்தில் தான் ஈடுபட ஆரம்பித்ததைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள் .தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும் அதிலே குறிப்பிட்டு இருக்கிறார். என்னுடைய பொறுப்பில் இருக்கும்பொழுது நான் மகளிரை முக்கியமாகக் கொண்டு வந்து அவ்ரகளைப் பங்கேற்கச்செய்து பேச்சு,நடிப்பு,பாட்டுத்திறமைகளை வெளிக்கொணரும் முயற்சிகளில் நான் ஈடுபட்டேன்என்று குறிப்பிட்டு இருக்கிறார். நன்றாகச் சிக்காகோ-வில் தமிழும், தமிழர்களும், தமிழ்ச் சங்கமும் வளர்ந்து கொண்டிருந்த அதே நேரத்தில் போட்டிகளும் பொறாமைகளும் தொடங்க ஆரம்பித்தன அவைகள் பின்  நாட்களில் வேதனைகளாக மாறின. தமிழன் எங்குச் சென்றாலும் இந்தப் போட்டி, பொறாமை மனப்பான்மை இருக்கத்தானே செய்கின்றது அதையெல்லாம் தாண்டித்தான் அமெரிக்காவில் தமிழ் சங்கங்கள் வளர்ந்துள்ளன என்று குறிப்பிட்டு இருக்கிறார் அதைப்போல வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவை என்னும் அமைப்பைப் பற்றியும்,தமிழ்ப் பணிகளால் கிடைத்த மகிழ்ச்சியைப் பற்றியும் அய்யா எழுதியிருக்கின்றார்..

 

இப்பொழுதுகூட்த் தொடர்ச்சியாகப் பயணம் செய்யக் கூடியவர்கள் அய்யா மருத்துவர் சோம இளங்கோவன் அவர்களும் மருத்துவர் சரோஜா இளங்கோ அவர்களும். ‘நல்ல பலநாடு சுற்றிகள்இவர்கள் இருவரும். தன்னுடைய இளமைக் காலத்திலே அவர்கள் மேற்கொண்ட பயணங்களை இளமைக்காலப் புகைப்படங்களோடு இணைத்து இருக்கிறார்கள் அதைப்போலக் குழந்தைகள் பிறந்ததையும் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களையும் குறிப்பிட்டு, இன்றைக்குத்    தங்கள்  குழந்தைகள்  பெரியவர்களாகிப்  பெரும் பொறுப்புகளில் இருப்பதை எழுதி இருக்கிறார்கள்.பேரப்பிள்ளைகளால் கிடைக்கும் பேரின்பத்தை இலக்கியமாக்கி அய்யா கொடுத்திருக்கிறார்.

தமிழ் ஈழத்திலே நிகழ்ந்த துயரங்கள், ஈழத்திற்காக நடந்த மாநாடு, அதிலே தன்னுடைய பங்களிப்பு ,அதற்காகத் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கக் கூடிய பல்வேறு பணிகளை இந்த நூலிலே அய்யா அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஆறாத துயரமாய் அவர்களின் துயரம் தொடர்வதையும் குறிப்பிட்டு இருக்கிறார்.

கல்விக்கு உதவி என்ற வகையில் தன்னுடைய பல்வேறு செயல்பாடுகளை அய்யா அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். ’காலத்தினால் செய்த சிறு உதவிகள்கூட எப்படி பெரும் உதவிகளாக,உதவி பெற்றவர்களால் பார்க்கப்பட்டன, அவர்கள் அதனால் வாழ்க்கையில் எப்படி உயர்ந்தார்கள்,அதனால் தங்களுக்குக் கிடைத்த மகிழ்ச்சியை அய்யா அவர்கள் இந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறார். வாசிப்பவர்களுக்குக் கல்விக்காக நாமும் உதவி செய்யவேண்டும் என்னும் எண்ணத்தை ஏற்படுத்தும் விதமாக இந்தக் கல்விக்கு உதவி பற்றிய கட்டுரைகள் அமைந்துள்ளன.

சுயமரியாதை திருமணத்தை, ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய மகள் அருள்செல்வி-பாலகுரு  திருமணத்தைத் தான் தலைமை தாங்கி  நடத்தி வைத்ததை அய்யா எழுதியிருக்கிறார்.அமெரிக்காவில் அதுதான் முதல் சுயமரியாதைத் திருமணம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குக்  கொடுத்த மருத்துவச் சிகிச்சை பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அதேபோலக் குடும்பங்களில் ஏற்பட்ட துயரங்கள் என்று பல்வேறு செய்திகளை அய்யா அவர்கள் இந்த நூலில் குறிப்பிட்டு இருக்கிறார்கள் .

 

மனிதநேயமே பெரியார் என்னும் தலைப்பில் தன்னுடைய இறுதிக் கட்டுரையைக் கொடுத்துள்ளார்.” பெரியார் என்பது ஒரு வாழ்க்கை முறை. அதாவது ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையை மகிழ்வாகவும், அதே நேரத்தில் தன்னுடன் இருப்பவர்களுக்கு மரியாதை கொடுத்தும் அவர்களுக்கு உதவி செய்தும் அவருடன் இணைந்து சமமாக வாழ வேண்டும் என்ற ஒரு வாழ்க்கை நெறிஎன்று குறிப்பிட்டு இருக்கிறார். பெரியாரியல் என்பது எவருக்கும் எதிரானது அல்ல என்று குறிப்பிட்டு இருக்கிறார். தோழர் சோழ.நாகராஜன் அவர்கள் எழுதியபெரியார் பிராமணர்களுக்கு எதிரியா?’ என்னும் நூலில் தந்தை பெரியார் கொள்கையால் பயன்பெற்ற பிராமணப்பெண்கள் பற்றி விரிவாக எழுதியிருப்பார். “ ,மனித நேயம் வாழட்டும். மனிதர்கள் மனிதராக வாழட்டும் என்பதே எனது விருப்பம் அது நிறைவேறும் நாள் கட்டாயம் வந்தே தீரும். வாழ்த்துக்கள் வாழ்க பெரியார் !,வளர்க பகுத்தறிவு என்று இந்த நூலினை அய்யா சோம.இளங்கோவன் அவர்கள் முடித்திருக்கிறார்.

 பேராசிரியர் பால் கர்ட்சு பற்றி இதிலே கட்டுரை உள்ளது பெரியார் பன்னாட்டு மாநாடுகள் தொடர்ச்சியாக உலகெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஜெர்மனியில், அமெரிக்காவில், கனடாவில் நடைபெற்ற  பெரியார் பன்னாட்டு அமைப்பு மாநாடுகளைப் பற்றி இந்த நூலில்  குறிப்பிட்டிருக்கிறார். ஒருபுறம் மருத்துவச் சேவை. தன்னால் ஆன அந்த மருத்துவ உதவியைத் தொலைதூரத்தில் இருந்தாலும் ஆலோசனைகள் கேட்டால் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் அந்தப் பரிசோதனைகளைப் பார்த்து அதற்குரிய மருத்துவத்தை இந்தந்த முறையில் நீங்கள் செய்யுங்கள் என்று அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல பேருக்கு வழிகாட்டக்கூடிய பெருந்தகை அய்யா அவர்கள் .எனக்கு இருதய அறுவை  சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் தற்செயலாகத் தமிழ்நாட்டுக்கு வந்திருந்த அவர் என்னை சென்னை ப்பலோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தெரிந்த மருத்துவரிடம் சொல்லி அதன் மூலமாக ஒரு நல்ல மருத்துவத்தை நான் பெறுவதற்கு அடிப்படையாக அமைந்த மனிதநேயர் அவர். மலை உச்சியில் இருந்தாலும் பள்ளத்தாக்கில் இருக்கக்கூடிய மனிதர்களோடு சரிசமமாகப் பழகக் கூடியவர்.அவர்களுக்கு உதவக்கூடியவர்.

இயல்பான மொழியில் அவருடைய உரையாடல் எப்போதும் இருக்கும். அவரோடு இருக்கும் நேரங்களிலே நாம் சிரித்துக் கொண்டே இருக்கலாம். அந்த அளவிற்கு நகைச்சுவை உணர்வு மிக்கவர் அய்யா அவர்கள். மனிதர்கள் தோன்றுகிறார்கள் வாழ்கிறார்கள் எத்தனையோ சாதனைகளைச் செய்கிறார்கள் பின்  மறைகிறார்கள். ஆனால் தன் வாழ்வின் சாதனைகளை,  வேதனைகளை, சோதனைகளைப் பலரும் ஒரு நூலாகப் பதிவதில்லை. ஆனால் அய்யா சோம.இளங்கோவன் அவர்கள் அருமையாக,எளிமையாகப் பதிவு செய்திருக்கிறார்.

 

அய்யா மருத்துவர் இளங்கோவன் அவர்கள்  நமக்கு 50 ஆண்டுகளுக்கு முந்தைய  தமிழ்நாட்டை அன்றைய அமெரிக்காவை,அதைப்போல  இன்றைய தமிழ்நாட்டை, இன்றைய அமெரிக்காவை இதற்கு இடைப்பட்ட இந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாட்டிலும் அமெரிக்காவிலும் நிகழ்த்த பல்வேறு நிகழ்வுகளை, உலகமெல்லாம் வாழும் தமிழர்களுடைய வாழ்க்கையிலே அவர்கள் தமிழைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பினிலே ஏற்பட்ட மாற்றங்களை எல்லாம் மிகச் சிறப்பாக இந்த நூலிலே எடுத்துக் காட்டி இருக்கிறார்கள்..தமிழ்நாட்டில் இருந்து  எவர் வந்தாலும் அவர்களை அன்போடு வரவேற்று உபசரித்து அவர்களுக்கு உரிய வழியைக் காட்டும்  ஆளுமையாக அய்யா அவர்கள் இருப்பதை இந்த நூலின் வழியாகப்  பார்க்க முடிகிறது.அதற்கு அவருடைய இணைவர் மருத்துவர் சரோஜா அவர்களும் மிகப்பெரும் உறுதுணையாக இருந்திருக்கிறார்.இருக்கிறார்.அம்மா சரோஜா அவர்களைப் பல இடங்களில் பாராட்டி மகிழ்ந்து இருக்கின்றார் இந்த நூலில்.அவரின் கடுமையான உழைப்பு,விருந்தினர்களை அருமையாக உபசரிக்கும் தன்மையை,அவர் வைக்கும் மீன்குழம்பின் ருசியை,தலை சிறந்த அவரின் மருத்துவப்பணியை,பொதுத்தொண்டை எல்லாம் விவரித்து எழுதியிருக்கிறார்.’வல்லினச்சிறகுகள் போன்ற அமைப்புகள் அவரை அமெரிக்காவின் பாராட்ட வேண்டிய பெண்மணிகள் என்ற அளவிலேயே பாராட்டி எழுதி இருக்கின்றார்கள்.அவருடைய உழைப்பு கடுமையான உழைப்புஎன்று தன் வாழ்விணையர் டாக்டர் சரோஜா இளங்கோவன் அவர்களைப் பாராட்டிவாழ்விணையர் சாதனைகள்என்றே தனியாக ஒரு தலைப்பில் எழுதி இருக்கின்றார்.

வல்லினச்சிறகுகள்இதழின் நிறுவனர் தோழர் அகன் அவர்கள் முதன்முதலில் அமெரிக்காவில் புத்தக வெளியீடு செய்ய வேண்டும் என்று நினைத்தபொழுது அதற்கு உதவியவர் டாக்டர் சோம.இளங்கோவன் என்று   மிகச் சிறப்பாகத் தன்னுடைய நூலில் குறிப்பிட்டு இருப்பார்கள். இப்படி எல்லோருக்கும் உதவுகின்ற ஒரு மனிதரா, அதே நேரத்தில் எதார்த்தமான நிலையோடு தன்னால் முடிந்ததை ,என்ன முடியும் என்பதை மிகத் தெளிவாகச் சொல்லக்கூடிய ஒரு அருமையான மருத்துவராக அய்யா சோம.இளங்கோவன் அவர்கள் இருக்கிறார்கள். எனவே அந்த வகையில் அமெரிக்காவில் 50 ஆண்டுகள் என்ற இந்தப் புத்தகம் பல்வேறு செய்திகளை நமக்குச் சொல்கிறது

திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா ஆசிரியர் கி வீரமணி அவர்கள் அணிந்துரை அல்ல, எமது நன்றியுரை என்று குறிப்பிட்டு அணிந்துரை இந்த நூலுக்கு கொடுத்துள்ளார்கள். “அருகில் அமர்ந்து சொல்லுவது போன்ற அடக்கமிகு அழகு நடையில் எழுதி உள்ளார் டாக்டர் சோ. இளங்கோவன்என்று குறிப்பிட்டு இருக்கிறார். “ அணிந்துரை எழுதிடப் பதிப்பாளர் கேட்டார். நான் எழுதுவது அணிந்துரை அல்ல ;அவருக்கு நன்றி உரை. என்னை 32 ஆண்டுகளுக்கு முன் வாழ வைத்து இன்றும் எனது தொலைதூர-( மிக அருகில் என்றும் உள்ளத்திற்கு மிக அருகில் உள்ள) மருத்துவ மற்றும் மனிதநேய காவலர். பட்ட கடனை அடைக்கவே இந்த நன்றி உரை .நான் மட்டுமல்ல என்னைப் போல எத்தனையோ மனிதர்கள் அவரது கருணையால், உதவியால், நட்பால், வற்றாத அன்பால் வாழ்கிறார்கள் என்பது அவர் பெரும் ஊதியம். அவருக்கு உறுதுணையாய் டாக்டர் சரோஜா இளங்கோவன் அவர்கள் என்று  ஒரு நெகிழ்ச்சியான நன்றி உரையை அணிந்துரையாகக் கொடுத்துள்ளார்கள்.இந்த நூல் மதிப்புரையும் கூட ஒருவகையில் அய்யா மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களுக்கு எனது நன்றியுரைதான்.எனது உயிர் காக்க உற்ற மருத்துவ வழி காட்டியவர் அவர்.அவருடைய ஒட்டு மொத்த வாழ்க்கையையும் ஒரு நூலாக நான் வாசித்தபொழுது அவ்வளவு மகிழ்ச்சி ஏற்பட்டது எனக்கு.இந்த நூலைப் படித்துப் பாருங்கள்  நீங்களும் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைவீர்கள்.மற்றவர்களுக்கு இன்னும் உதவிட வேண்டும் என்னும் உந்துதலுக்கு ஆட்படுவீர்கள்.