Tuesday 30 October 2012

பரிசளிப்பு விழா


மதுரை மாநகர் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பெரியார் பிறந்த நாளினையொட்டி நடத்தப்பட்ட பெரியார்-1000 வினா-விடைப் போட்டியின் பரிசளிப்பு விழா
மதுரை, அக். 29- 26.10.2012  மாலை 5 மணிக்கு, மதுரை ஆரத்தி விடுதியில் நடைபெற்ற கழகச் சொற் பொழிவா ளர்கள் கூட்டத்தின் தொடக்கத்தில்  நடைபெற்றது. திராவிடர் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச்செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், இரா.ஜெயக் குமார் மற்றும் கழக முன்னணியர் முன்னிலையில், போட்டியில் வெற்றி பெற்ற  மாணவ மாணவியர்க்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பரிசுத் தொகையும் சான்றிதழும் வழங்கி வாழ்த்தினார்கள்.
முதல் பரிசு (ரூ.அய்ந்தாயிரம்); மு.ஜெனிபர்  (மகபூப் பாளையம் மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளி, மதுரை), இரண்டாம் பரிசு (ரூ.மூவாயிரம்); அ.சிவலிங்கம் (நீதிராஜன் பாரதி உயர்நிலைப்பள்ளி, மதுரை), மூன்றாம்  பரிசு (ஒவ்வொருவருக்கும் ரூ.இரண்டாயிரம்) 1.சே.அபியா (ஈ.வெ.ரா. நாகம்மையார் மாநகராட் சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மதுரை), 2.அ.பூஜா, 3.ஹ.ஹசீனா (விப்ஜியார் மெட்ரிக் பள்ளி, மதுரை) ஆகியோர் பரிசினைப் பெற்றனர்.
தென்மாவட்டத் திராவிடர் கழகப் பிரச்சாரக்குழுத்  தலைவர் தே.எடிசன் ராசா, பொறியாளர் சி.மனோகரன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் முனைவர் வா. நேரு, பேரா.முனைவர் நம்.சீனிவாசன்,  ப.க மாநகர் மாவட்ட தலைவர் சே.முனியசாமி, மதுரை மண்டலத்  தி.க  தலைவர் வே.செல் வம், மதுரை மண்டல தி.க செயலாளர் மீ.அழகர்சாமி, மதுரை மாநகர் தி.க தலைவர் க.அழகர், மதுரை மாநகர் தி.க. செயலாளர் இரா.திருப்பதி, மதுரை புற நகர் மாவட்டத் தலைவர் மா.பவுன்ராசா, மாவட்ட செயலாளர் அ.வேல்முருகன்,
மதுரை மாநகர் ப.க. துணைச்செயலாளர்   பா.சடகோபன், மதுரை மாநகர் ப.க.துணைத்தலைவர் எல்.அய்.சி. செல்ல.கிருட்டிணன், ப.க ஆர்வலர் இரா.பழனிவேல் ராஜன், கனி, ஆசிரியர்கள்  போ.சேகரன், திருப் பரங்குன்றம் மணி, பழக்கடை அ.முரு கானந்தம், போட்டோ இராதா, விராட்டிபத்து சுப்பையா, வடக்குமாசி வீதி சிவா, மருத்துவர் அன்புமதி  ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியினை மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், வினாடி வினாப் போட்டியின் மதுரை ஒருங்கிணைப் பாளருமாகிய சுப.முருகானந்தம்  தொகுத்து வழங்கினார். மிகப்பெரிய வாய்ப்பாக புதுமையாக நடத்தப் பட்ட பெரியார் ஆயிரம் வினா - விடைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகள் பெற்றோரோடு வந்திருந்து தந்தை பெரியாரைத் தெரிந்துகொண்டதால் பரிசினையும் சான்றிதழையும்  தமிழர் தலைவரிடம் பெற்று மகிழ்ச்சியுடன் சென்றனர்.

Tuesday 2 October 2012

தியேட்டரில் சென்று சாட்டை படத்தைப் பாருங்கள்


சாட்டை திரைப்படத்தை நானும், எனது மகன் அன்புமணியும் சென்று மதுரை தமிழ் ஜெயா தியேட்டரில் பார்த்தோம். பெரியார் படத்தை பார்த்தது தியேட்டரில், அதற்குப் பின் 3,4 வருடங்களாக எந்தப் படமும் பார்க்கவில்லை. +2 படிக்கும் எனது மகன் படும் மன அழுத்தங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கு இந்தப் படத்தை விளம்பரங்களில் பார்த்தபொழுது பார்க்கவேண்டும் என்று தோன்றியது,அவனையும் அழைத்துச்சென்று  பார்த்தேன்.ஒரு முறை ஒரு நாவலை பற்றிக் குறிப்பிடும்பொழுது முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்கள், இந்த நாவல் உங்களுக்கும் எனக்கும்தான் புரியும், டவுன்காரர்களுக்குப் புரியாது என்றார். முழுக்க முழக்க கிராம வழக்கு, கிராமத்து சொற்கள், நம்மைப் போன்ற கிராமத்துக்காரர்களுக்குத்தான் புரியும் என்றார்.அதனைப் போல இந்தச் சாட்டை திரைப்படம் , கிராமத்து அரசாங்கப் பள்ளியில் படித்தவர்களுக்கு, படிப்பவர்களுக்கு நிச்சயம் பளிச்செனப் புரியும்.

"சாட்டை 2012 செப்டம்பர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த திரைப்படமாகும். இப்படத்தை தயாரித்தவர் இயக்குனர் பிரபு சாலமன். பிரபு சாலமனிடம் 'மைனா' படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய அன்பழகன் இயக்கியிருக்கும் முதல் படம் இதுவாகும்.
கதை சுருக்கம்

மாவட்டத்திலேயே ஆண்டு தேர்ச்சி சதவீதத்தில் மிகவும் பின் தங்கிய அரசு பள்ளி ஒன்றுக்கு பணி மாற்றம் செய்யப்படும் இயற்பியல் ஆசிரியர் தயாளன் (சமுத்திரக்கனி), அந்த பள்ளியின் நிலையை மாற்ற தலைமை ஆசிரியர் (ஜூனியர் பாலையா) துணையோடு பல மாற்றங்களை செய்கிறார். துணை தலைமை ஆசிரியர் சிங்கபெருமாள் (தம்பி இராமைய்யா) உள்ளிட்ட மற்ற ஆசிரியர்கள் தயாளனின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தயாளன் தன் அணுகுமுறையால் மாணவர்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்துகிறார். மாணவர்களுக்குப் பிடித்த ஆசிரியராகவும் ஆகி விடுகிறார்.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவனான பழனி (யுவன்), தனது சக வகுப்பு மாணவி அறிவழகியை (மகிமா) காதலிப்பதாகச் சொல்லி அவருக்கு தொந்தரவு கொடுக்க, ஒரு கட்டத்தில் அறிவழகி விசம் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அறிவழகி விசம் குடித்ததற்கு காரணம் ஆசிரியர் தயாளன் தான் என்று புரிந்துகொள்ளும் அறிவழகியின் குடும்பத்தார் தயாளனை அடித்து காவலர்களிடம் ஒப்படைக்கிறார்கள்.

மாணவியின் தற்கொலை முயற்சிக்கு தான் காரணம் அல்ல என்பதை தயாளன் நிரூபித்து பல தடைகளை முறியடித்து அந்தப் பள்ளியை நல்ல நிலைமைக்கு கொண்டுவருகிறார்." நன்றி - விக்கிபீடியா

                   படத்தில் மிகைத் தன்மை என்பது இல்லை. இயல்பாக நடைபெறும் நிகழ்வுகள் படம் பிடிக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளன. வட்டிக்கு கொடுக்கும் ஆசிரியர்கள், வேறு தனியார் பள்ளியில் தன் பிள்ளையைப் படிக்கவைத்துவிட்டு  , அரசுப் பள்ளியில் பொறுப்பின்றி இருக்கும் ஆசிரியர்கள், பிரைவேட் பள்ளிகள் தங்கள் பள்ளியை முன்னேற்ற பக்கத்தில் இருக்கும் அரசுப் பள்ளிகளை எப்படி ஒக்கிடுகிறார்கள் , மாணவ மணவிகள் சிறைபோல ஏன் பள்ளிக்கூடங்களைக் கருதுகிறார்கள் போன்ற பல்வேறு செய்திகளை மனதில் பதியும் வண்ணம் படமாக்கியுள்ள இயக்குநர் அன்பழகனுக்கு வாழ்த்துக்கள்.

                     இயற்பியல் ஆசிரியராக நடித்துள்ள சமுத்திரக்கனி வாத்தியாராகவே படம் முழுக்கு வாழ்ந்துள்ளார். உளவியல் ரீதியான அணுகுமுறை, திக்குவாய் பெண்ணுக்கு பேச்சுப் பயிற்சி , ஏன் படிக்க வேண்டும் என்ற உணர்வினை எப்படி மாணவ மாணவியர்கள் மத்தியில் ஊட்டுவது , எப்போது பெற்றோர் தனது படிப்பை நிறுத்துவார்களோ எனப் பயந்து பயந்து பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு காதல் கடிதம் எனக் கடிதம் கொடுத்து அவர்கள் படிப்பை பாழாக்கி விடாதீர்கள் என்னும் வேண்டுகோள் போன்றவை மனதில் நிற்கின்றன.

                 பேராசிரியர் அருப்புக்கோட்டை மாடசாமி அவர்கள் எழுதிய " எனக்குரிய இடம் எங்கே ? " என்னும் நாவல் இந்தப் படத்தைப் பார்த்தபொழுது ஞாபகம் வந்தது, அவரவருக்குரிய திறமைகளை வெளிக்கொண்டு வரும் இடங்களாக கல்லூரி வகுப்பறைகள் திகழவேண்டும் என்பதனை அக்கதையில் மிக அழுத்தமாக சொல்லியிருப்பார். இந்தப் படத்தில் அது பள்ளி வகுப்பறையில் செய்முறை நிகழ்வாக காட்டப்பட்டுள்ளது.

                  எங்கள் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முன்னாள் முதல்வர் பேரா. இரா. கனகசபாபதி அவர்கள் எப்பொழுதும் மாணவர்கள் மேல் தப்பு என்பதனை ஒத்துக்கொள்ள மாட்டார். ஆசிரியர்கள், நிர்வாகத்தின் தவறுதான் என்பதனை ஒத்துக்கொண்டு மாணவர்களை மேன்மைப் படுத்த உழையுங்கள் என்பார். அதனைப் போல இப்படத்தில் நாம்(ஆசிரியர்கள்)  ஒரு பங்கு உழைப்புக் கொடுத்தால், பத்து மடங்கு உழைப்புத் தர மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதனை வசனமாக சொன்னபொழுது தியேட்டரில் எழுந்த கைதட்டல் ஒரு மாற்றத்திற்கான நல்ல அறிகுறி.

                      மற்றவர்களுக்கு இது படமாக இருக்கலாம், எனக்கு இது வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வு. மதுரை மாவட்டம் சாப்டூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் நான்  பத்தாம் வகுப்பு படிக்கும்பொழுது தலைமை ஆசிரியராக் மதுரையைச் சேர்ந்த திரு வே,வீரிசெட்டி அவர்கள், இந்தப் படத்தின் தயாளன் சார் போல வந்தார். ஆறு மாதத்தில் அவர் பள்ளியில் ஏற்படுத்திய மாற்றம், ஆசிரியர்கள் மத்தியில் ஏற்படுத்திய மாற்றம்,  மாணவர்கள் மத்தியில் , பெற்றோர் மத்தியில் ஏற்படுத்திய மாற்றம் முப்பது ஆண்டுகளுக்குப் பின்னும் இன்னும் என்னுள் தெளிந்த நீரோடை போல ஓடிக்கொண்டிருக்கிறது.

                         தன்னலமற்ற, மாணவ, மாணவிகளின் முன்னேற்றம் மட்டுமே தனது நலனாக் கருதுகிற ஆசிரியர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறார்கள். அவர்களை இப்படம் ஊக்கப்படுத்தும். வட்டிக்கு விட்டுக்கொண்டு, காசு கொடுத்து நல்லாசிரியர் விருது போன்றவற்றை வாங்கி வைத்துக்கொண்டு பாடம் நடத்தாமல் காலம் கடத்தும் ஆசிரியர்களுக்கு இப்படம் குற்ற உணர்ச்சி உண்டாக்கும். பாலியல் ரீதியாக மாணவ, மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்தால் எப்படிப்பட்ட செருப்படி கிடைக்கும் என்பதனை சில ஆசிரியர்களுக்கு இப்படம் பின்னோக்கு செய்முறையாய் உணர்த்தும். வெறும் மார்க் மட்டுமே வாழ்க்கை என்று மாணவர்களைக் கொடுமைப்படுத்தி  பள்ளிக்கூடம் நடத்தும் சில கல்வித் தந்தைகளுக்கு உண்மை இதுதான் என்பதனை உணரவைக்கும்  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் புரிந்து கொள்ளவும் , அவர்களை ஊக்கப்படுத்தவும் இப்படம் கட்டாயமாய் உதவும்.

                             சி.டி. யில் பார்க்கலாமே என்று ஒருவர் சொன்னபொழுது , இல்லை - சமூக உணர்வோடு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை தியேட்டரில்தான் சென்று பார்க்கப்போகிறோம் என்றான் எனது மகன் அவரிடம் . தியேட்டரில் சென்று பார்த்தபொழுது வந்திருந்த கூட்டமும், அவர்களின் உணர்வுகளும், கைதட்டல்களும் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி என்பதனைக் காட்டின.

                                   ஜன்னல் ஓரத்தில் சிறுமி (டோட்டோசான்), என்னை ஏன் டீச்சர் பெயிலாக்கினிங்கே, குழந்தைகளைக் கொண்டாடுவோம் போன்ற பல்வேறு கல்வி சம்பந்தப்பட்ட புத்தகங்களைப் படித்தபொழுது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட  இந்தப் படத்தைப் பார்த்தபொழுது ஏற்பட்ட மகிழ்ச்சி அதிகம். கட்டாயமாக் நீங்களும் குடும்பத்தோடு தியேட்டரில் சென்று படத்தைப் பாருங்கள்,நண்பர்களைப் பார்க்கச்சொல்லுங்கள். 1-ம் வகுப்பு முதல் கல்லூரி வரையுள்ள உங்களுக்குத் தெரிந்த ஆசிரியர்களை இப்படத்தைப் பார்க்கச்சொல்லுங்கள்.

வா. நேரு .02.10.2012