Monday 31 October 2016

தீபாவளிப் பட்டாசுகளால் ஏற்பட்ட புகை டில்லியைத் திணறடித்திருக்கிறது

தீபாவளிப் பட்டாசுகளால் ஏற்பட்ட புகை டில்லியைத் திணறடித்திருக்கிறது
31 அக்டோபர் 2016

புகை சூழ் டில்லிImage copyrightSOUTIK BISWAS
Image caption
பட்டாசுப் புகையும் பனியும் சேர்ந்து பார்க்கக்கூடிய தூரத்தை குறைத்திருக்கிறது டில்லியில்
தலை நகர் டில்லியில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் முடிந்து விட்டன. பட்டாசுகளின் விஷப்புகை மண்டலம் சூழ்ந்து போக்குவரத்தை மந்தப்படுத்தியுள்ள நிலையில், பட்டாசுப் புகை குறித்த கோபாவேசமான கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
காற்றில் சுகாதாரத்துக்கு ஆபத்து விளைவிக்கும், பி.எம்.10 துகள்கள் ஒரு கன மீட்டருக்கு 999 மைக்ரோ கிராம் என்ற ஆபத்தான் அளவுக்கு உயர்ந்திருக்கின்றன. பாதுகாப்பான அளவு என்பது 100 மைக்ரோ கிராம்கள்தான்.
ஏற்கனவே இது குறித்து அதிகாரிகள் எச்சரித்திருந்தார்கள்.
காற்றில் மாசு நீக்கி சுத்திகரிக்கும் கருவிகளை சாலைகளுக்கு அருகில் நிறுவப்போவதாக கடந்த வாரம் டில்லி மாநில அரசு அறிவித்திருந்தது.
ஆனால், திங்கட்கிழமை காலை, தலைநகரின் வீதிகளில் பெரிய அளவில் புகை மண்டலம் படரந்து, பார்க்கும் தன்மை மிகக் குறைவாகவே இருந்தது.
சமூக ஊடகங்களில் #பனிப்புகை என்ற வார்த்தை பிரபலமாகப் பரவியது.
முதல் நாள் கொண்டாட்டம், அப்புறம் திண்டாட்டம்
‘’நேற்றிரவு , பட்டாசு வெடி எல்லாம் அற்புதம்தான். இப்போது மூச்சு திணருங்கள்’’ , என்று ப்ரதீக் ப்ரசஞ்சித் என்பவர் டிவிட்டரில் கருததைப் பதிவு செய்தா.
நோய்டாவில் காலை 6.30 மணி #airpollution #smogImage copyright@NANDITA_ZEE
Image caption
நோய்டாவில் புகை மண்டலம்
Zero visibility at Sarai Kale Khan #Delhi #smogImage copyright@TK_SCRIBBLER
So while entering to Noida from Anand Vihar, thats how morning was for Delhi after #Diwali #fog #smog #crackersSpoiledEnviormentImage copyright@MUSAFIRMINAKSHI
Perhaps we Indians r the only ppl who Pay & Pray for this environmental degradation, by now it should have been bright day lightImage copyright@HAROONSHEIKH786
தீபாவளிக்கு முன்னர், பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று மக்களைக் கோரும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இதே போன்று கடந்த காலங்களில் நடந்த பிரசாரங்களுக்கு பலன் ஏதும் ஏற்படவில்லை.
உலகின் மோசமாக மாசடைந்த நகர்
கொண்டாட்டங்கள் என்றாலே வெடிகள் இல்லாமல் இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. சிலருக்கு இது அவர்களின் செல்வ நிலையைக் காட்ட கிடைக்கும் ஒரு சந்தர்ப்பம். வர்த்தகக் குடும்பங்கள் , ஒரு இரவில் வெடித்து தள்ள, பல லட்சக்கணக்கான ரூபாய் செலவில் பட்டாசுகளை வாங்கிக் குவிக்கின்றனர்.
உலகின் மிக மோசமாக மாசடைந்த 20 பெரு நகரங்களில், 13 பெரு நகரங்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன என்று உலக சுகாதார நிறுவனம் 2014ல் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்று கூறியது.
உலகிலேயே மிகவும் மோசமாக மாசடைந்த பெரு நகரம் டில்லிதான் என்றும் அது கூறியது.
காற்று மாசடைவது இந்தியாவில் இளம் வயதிலேயே ஏற்படும் இறப்புகளுக்கு முன்னோடி காரணமாக அமைகிறது. ஒவ்வொரு ஆண்டும், காற்று மாசுபடுவதால் ஏற்படும் நோய்களால், சுமார் 6 லட்சம் பேர் இறக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
தீபாவளிப் பட்டாசுகளைத் தவிர, டில்லியில் குளிர்காலத்தில், வறிய மக்கள் குளிரைத் தவிர்க்க, குப்பைக் கூளங்களை எரிப்பதும், மாசு ஏற்படுவதற்கு ஒரு காரணமாக அமைகிறது.
டில்லியைச் சுற்றிலும் பல ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலப்பரப்பில், விவசாய விளை நிலங்களை திருத்த, விவசாயக் கழி்வுப் பொருட்களை விவசாயிகள் எரிப்பதும் மற்றொரு காரணம். இந்தத் தீ பல நாட்கள் தொடர்ந்து எரிகிறது.

நன்றி : பி.பி.சி. 31.10.2016

Saturday 29 October 2016

மதத்துக்கும் - கடவுள் நம்பிக்கைக்கும் புதைகுழி சுவீடனில் நாத்திகர்களுக்கெனத் தனிக் கல்லறைத் தோட்டம்

ஸ்டாக்ஹோம்,அக்.28
நாத்திகக் கருத்துகள்அதிகம்ஏற்றுக் கொண்டவர்கள் சுவீடன் நாட்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! அந்த நாட்டில் கடவுள் மறுப்பு சிந்தனை உள்ளவர்கள் இறந்து போனால், அவர்களுக்கு என்று தனிகல்லறைத்தோட்டம் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக சுவீடன் திகழ்கிறது.

சுவீடனில் உள்ள பொர்லங்கே என்ற பகுதியில் தான் உலகில் முதல்முதலாகநாத் திகர்களுக்கென்று  கல்லறைத் தோட்டம் ஒன்றை சுவீடன் அரசு திறந்துள்ளது. இந்தக் கல்லறைத்தோட்டம் புகழ் பெற்றஸ்டோராடூனா தேவாலயத்திற்குஅருகில்உள்ளது. இந்தக் கல்லறைத் தோட்டத் திற்குநாத்திகர்களுக்கானகல் லறை என்றே பெயர் சூட்டப் பட்டுள்ளது. நாத்திகக் கொள்கையில் ஈடுபட்ட ஒருவர் மரணமடைந்தால் அவரது குடும்பத்தினர் எவ்விததயக்கமும் இன்றி அவரது உடலை இங்கே புதைக்கலாம். புதைப்பதற்கான அனைத்து செலவுகளையும்அரசு ஏற்றுக் கொள்ளும்.நாத்திகக்கொள்கையில் நம்பிக்கை உடையவர்களின் உடலை எவ்விதமதச் சடங்குகள் இன்றிப் புதைக்கலாம். மேலும் கல்லறையின் எந்தஒருஇடத்திலும்,மத அடையாளங்களோ அல்லது மதத்தைக் குறிக்கும் வார்த்தைகளோ இருக்காது.

ஆசிரியர் ஒருவரின் சிந்தனைக்குச் செயல்வடிவம்!

சுவீடன் நாட்டின் அரசுக்கு இப்படி ஒரு கல்லறைத் தோட்டம் குறித்த திட்டத்தை முன் வைத்தவர் ஜோசஃப் எர்டன் ஒரு ஆசிரியர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். துருக்கியிலிருந்து குடிபெயர்ந்து தற்போது சுவீடனில் வசிக்கும் இந்த ஆசிரியர் மதக் கட்டுப்பாடுகளை ஒழிக்கும் அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தன்னைப் பற்றிக்கூறும்போது,மனிதன் இயற்கையாக இருக்க வேண்டும்; இயற்கையாக என்றால் மத ரீதியான அடிமை காரணிகளை விட்டு இயற்கையான சிந்தனையோடு வாழவேண்டும் என்றுகூறிய இவர் கடவுள் மறுப்பாளர்களுக்கு ஒரு கல்லறைத் தோட்டம் ஏன் இருக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

சுவீடனுக்கு வந்து குடி யேறிய பெரும்பாலான பிற நாட்டு மக்கள் நாத்திகக் கருத்துகளைக் கொண்டவர்கள். இவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்களின் கலாச்சார வழக்கப்படி நல்லடக்கம்செய்யப்படுகின்றனர்.எந்தஒரு கலாச்சார, மத பழக்கவழக்கங்க ளுக்கும் கட்டுப்படாமல் வாழ்ந்த ஒருவர் இறந்த பிறகு அவரது கொள்கைகள் புறந்தள்ளப்பட்டு, கலாச்சாரம், மதம் என்ற வரையறைக்குள் வந்து அவரைப் புதைக்கின்றனர்.

மேலும் இந்த நாட்டில் ஒருவர் இறந்துவிட்டால் தேவாலயங்களுக்குச் சொந்தமான கல்லறைத் தோட்டத்தில்தான் புதைக்க வேண்டியுள்ளது. அப்படி இருக்கும்போது தானாகவே அவருக்கு மத அடையாளம் வந்துவிடுகிறது. இதைக் கண்ட ஆசிரியர் கடந்த கோடைக்காலத்தில் இந்தத் திட்டத்தை அரசுக்கு முன்மொழிந்திருந்தார். அவரது இந்தக் கோரிக்கையை ஏற்று அரசு தனியாக நாத்திகர்களுக்கு என்று ஒரு கல்லறைத்தோட்டம் உருவாக்கி பிற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

சுவீடன் நாத்திகக் கருத்துகளை உள்வாங்கிக் கொண்ட நாடாகும். இங்கு கடவுள் நம்பிக்கை, மற்றும் பாரம்பரிய பழக்கவழக்கம் போன்றவைகள் இல்லை,இங்குள்ளவர்களில் மிகவும் குறைந்த விழுக்காட்டினரே கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். அவர்களின் வாழ்விலும் மதங்களின் தாக்கம் அன்றாட வாழ்வில் மிகவும் குறைந்த அளவே உள்ளது.

சுவீடனைச்சேர்ந்ததத்து வவியலாளர்கரி கிட்டெல்மான் என்பவர் சுவீடன் நாட்டுத் தேசிய தொலைக்காட்சி ஒன் றில் பேசும் போது சுவீடனின் நாத்திகம் பற்றி கூறும்போது,

இந்தநாடு நாத்திகக்கருத்துகள் நிறைந்தநாடு,இங்குள்ள மக்கள் மதம்,அதன் கொள்கைகளைக் கடைபிடிப்பது ஒருவித மனநோய் என்று நினைக்கின்றனர்.உண்மை
யில் கூறப்போனால் எங்களின் ஒருவித மனநோய் கூற்று  மெய்ப்பிக்கும் ஓர் உண்மையாகும், என்று கூறியிருந்தார்.




நன்றி : விடுதலை 28.10.16

Wednesday 26 October 2016

"கீழடி நோக்கி ஓரடி" பயன்மிகு கால வெளிப்பயணம்


திராவிட வரலாற்று ஆய்வு மய்யத்தின் ஏற்பாட்டில்
"கீழடி நோக்கி ஓரடி" பயன்மிகு கால வெளிப்பயணம்

திராவிட வரலாற்று ஆய்வு மய்யத்தின் ஏற்பாட்டில் 23.10.2016 அன்று ஒரு நாள் 'கால வெளிப்பயணம்', பயன்தரும் வகையில் பல்வேறு தொன்மச் செய்திகளை அறிந்து கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டது.



இந்திய அரசின் தொல்லியல்துறை இரண்டு ஆண்டு களுக்கும் மேலாக மதுரைக்கு அருகில் - சிவகங்கை மாவட்டப் பகுதியில் அமைந்துள்ள கீழடி எனும் சிற்றூரில் மேற்கொண்டு வந்த அகழாய்வுப் பணிகள் தமிழர்தம் தொன்மையான வாழ்வியல் சின்னங்களை வெளி உல கிற்கு தெரிவித்திடும் வகையில் அமைந்துள்ளது. அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்பட்ட இடத்தினை பார்வையிடுகின்ற வகையில் "கீழடி நோக்கி ஓரடி" எனும் கால வெளிப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. தமிழகம் முழுவதுமிருந்து 40 ஆர்வலர்கள் கால வெளிப்பயணத்தில் பங்கேற்றனர்.

முதற்கட்ட, இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு பெற்று மூன்றாம் கட்டத்தினை ஆய்வர்கள் எதிர் நோக்கியுள்ள நிலையில் பயணக்குழுவினர் கீழடி சிற்றூருக்குச் சென்றனர்.

அகழாய்வுப் பணியின் அதிகாரப் பூர்வ முடிவுகள், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வெளியிடப்படாத நிலையில் ஆய்வுப் பணி நடைபெற்ற இடத்தினைப் பயணக்குழு பார்வையிட்டது. தமிழர் நாகரிகம் குறித்த பல்வேறு செய்திகளை, தொன்மச் சிறப்புகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது.

இது வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற அகழாய்வுப் பணிகளில் வாழ்விடம் சார்ந்த தொன்மையான ஆய்வு கீழடியில் தான் அமைந்துள்ளது. இதுவரை நடைபெற்ற அகழாய்வு இடங்களான நதி முகத்துவாரம், கடல் சார் பகுதி, இடுகாட்டுப் பகுதி என்பதிலிருந்து நகர் சார்ந்த, கட்டட கட்டமைப்பு, சிறப்புமிக்க தொழிற்கூடங்கள் இருந்ததற்கான ஆதாரங்களை உள்ளடக்கியுள்ளது கீழடி அகழாய்வின் தனிச்சிறப்பாகும்.

கீழடி அகழ்வாய்வின் தனிச் சிறப்பான பெரிய அளவிலான செங்கல் கட்டடக் கலை கட்டமைப்புச் சின்னம்


கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் அங்கு வாழ்ந்த மக்களின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என கருதப்படுவதற்கு பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சங்க காலப் பாடல்கள் மூலம் தமிழர் வாழ்ந்த நாகரீகம் பற்றிய குறிப்புகள் இலக்கியப் பதிவுகளாக இதுநாள் வரை இருந்த நிலையிலிருந்து, தொல்லியல் ஆய்வு மூலம் அறிவியல் அடிப்படையில் அகழாய்வுச் சின்னங்கள் வலு சேர்த்திடும் விதமாக கிடைத்துள்ளன.

அந்நாளில் தமிழர்கள் அயல்நாடுகளில் வணிகம் செய்ததை  உறுதிப்படுத்திடும் தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக ரோமாபுரியில் புகழ்பெற்ற ரவுலட்டி வடிவமைப்புடன் கூடிய சுட்ட மண்ணில் செய்யப்பட்ட பானைகள் கிடைத்துள்ளன.

வட புலத்தில் குறிப்பாக இன்றைய குஜராத் பகுதியுடன் அன்று நிலவி வந்த வர்த்தகத் தொடர்பு - அங்கு பயன்படுத்தப்பட்ட மகளிர் அணியும் அணிகலன்கள் கிடைத்துள்ளன. பாண்டிய நாட்டுக்கே உரிய முத்துக்களால் உருவாக்கப்பட்ட பாசி மணிகள், தந்தத்தால் ஆன அணி கலன்கள் கிடைத் துள்ளன.


வைகை நதிக்கரையில் அமையப்பெற்ற கீழடியில் நடைபெற்ற அகழாய்வில்தான் செங்கல்லை வைத்து  கட்டப்பட்ட கட்டிடங்கள் மிகப்பெரிய அளவில் கிடைத் துள்ளன. கீழடி அகழாய்வின் சிறப்புகளில் முதன்மையான தாகவும் இந்தக்கட்டிடக்கலைக் கட்டமைப்பு அமைந் துள்ளது. இந்த இரண்டு கட்ட அகழாய்வுகளின் மூலம் கிடைத்த பொருட்களே பெரும் செய்திகளை, நாகரீகப் பண்பாட்டுக் கூறுகளை, வர்த்தகத் தொடர்புகளை வெளிப் படுத்துவதாக இருக்கையில் முழுமையாக, அடுத்த கட்ட ஆய்வுகள் நடைபெறும்  பொழுது மேலும் பல செய்திகள், ஆதாரங்கள் கிடைக்கின்ற வாய்ப்பு உள்ளது. அந்த வகை யில் கீழடி ஆய்வு தொடரப்பட வேண்டிய அகழாராய்வு.

கீழடிப் பகுதியின் பல இடங்களில் அகலமான குழிகள் தோண்டப்பட்டு அதில் கிடைத்திட்ட பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஆய்வுப்பணி முடிந்த நிலையில் தோண்டப்பட்ட குழிகள், பாதுகாப்புக் கருதியும், நில உரிமையாளர்கள் பயன்பாடு கருதியும் மூடப்பட்டு வருகின்றன. அகழாய்வுப் பணி பற்றிய செய்திகளை தொல்லியல் அறிஞர் முனைவர் மு.வேதாசலம் கால வெளிப்பயண குழுவினருக்கு  எடுத்துரைத்தார். அகழாய் வுப் பணிக்கு இடம் நல்கியயோர் பலர். அவர்களுள் பயண நாளன்று வருகை தந்த சந்திரன், பீர்முகமது ஆகியோருக்கு நன்றி தெரிவித்து திராவிட வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பாக சிறப்பு செய்யப் பட்டது.

கால வெளிப்பயணத்தில் கலந்து கொண்டோர்: வீ.குமரேசன் (திராவிட வரலாற்று ஆய்வு மய்யம்), ச.பிரின்ஸ் என்னாரெசு பெரியார் (கால வெளிப்பயண ஒருங்கிணைப்பாளர்), முனைவர் வா.நேரு (பகுத்தறிவாளர் கழகம்), இறைவி (மகளிர் பாசறை), வி. உடுமலை (பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை) ஓவியா (புதியகுரல்), வழக்குரைஞர் இராஜசேகரன் (கரூர்), கி.தளபதிராஜ் (தி.க.மயிலாடுதுறை), பேராசிரியர் சாகுல்அமீது அஜீஸ் (திருநெல்வேலி), அனிதா பன்னீர்செல்வன் (சென்னை) மற்றும் இயக்கத்தோழர்கள், பொது ஆர்வலர்கள் பலர். ஆர்வம் பொங்கும் உணர்வுகளோடு சென்ற கால வெளிப் பயணக் குழுவினர், கீழடி கிராமத்திலிருந்து அறிவார்ந்த, தொன்மைச் சின்னங்கள் சார்ந்த செய்திகளை அறிந்த நிலையில் திரும்பினர்.

கீழடிப் பயணத்திற்குப் பின்னர், மாலையில் ஒத்தக் கடையானைமலையின் - நரசிங்கம் பகுதி அடி வாரத் திலுள்ள சமணர் வாழ்ந்த இடங்கள் (கல் படுக்கைகள்), சமணர் எழுச்சிக்கு எதிராக கிளம்பிய பக்தி இயக்கத்தினரின் தொல்லியல் சின்னங்கள், குடைவறை கோயில்கள், புடைப்புச் சிற்பங்கள் ஆகியவற்றையும் கால வெளிப்பயணக் குழுவினர் சென்று பார்த்தனர்.


Nantri:viduthalai 24.10.16

Thursday 20 October 2016

கடந்து போன காலங்கள்(11)

           கடந்து போன காலங்கள்(11)

படிக்கும் காலங்களில்
உதவிய
மனிதர்கள் போலவே
சில மரங்களும் கூட
எந்நாளும் என் நினைவில்......

நிறைந்து நிற்கும்
பெரியகுளம் கண்மாய்
எங்கள் ஊருக்கு கிழக்காக
பழையூர் செல்வதற்கு பாதையாக.....

கண்மாய்க் கரையின்
இருபக்கமும் மாமரம்
புளியமரம் பனைமரம்
என எத்தனை மரங்கள் ......
கரைக்கு கீழே
பசுமையாய் எத்தனை வயல்கள்.....

ஒரு மாமரத்தின்
கிளைதனை உரசிச்செல்லும்
பனைமரம்
மரத்தின் மீதேறி
மாமரத்துக் கிளையில்
அமர்ந்து
பனைமரத்தில் சாய்ந்து
பல மணி நேரங்கள்
படித்திருக்கிறேன்
பிள்ளைகளிடம் சொன்னால்
சிரிக்கிறார்கள்
பரிணாம வளர்ச்சியை
நிருபித்திருக்கிறீர்கள்
எனக் கேலிகூட  பேசுகிறார்கள்....
ஆனால் அந்த அமைதி
இலைகளும் கிளைகளுமே
மட்டுமே கண்ணில்
பட்ட காலங்களில்
ஒன்றிய மனமும்
அதில் மனதிற்குள்
அழுந்திப் பதிந்த பாடங்களும்....

இன்றைக்கு எனது ஊர்
மாணவர்களும் கூட
டைகட்டி சூட்போட்டு
வேனில் ஏற்றப்பட்டு
அயல் ஊர்களுக்கு
படிப்பு எனக் கடத்தப்படும்
நேரங்களில்

கண்மாய் நிறைய
நீர் கிடக்க
நீரின் மேலே
வெண் நாரைகள் மிதக்க
பறவை ஒலிகளும்
பசுமைத் தாவரங்களும்
மட்டுமே கவனத்தில் விழ
கவனமாகப் படித்த காலங்கள்
நினைவில் மங்கா
கடந்து போன காலங்கள்.......
                                                          வா.நேரு-20.10.2016





Thursday 13 October 2016

'புறாக்காரர் வீடு” சிறுகதைத் தொகுப்பு குறித்து

'புறாக்காரர் வீடு” சிறுகதைத் தொகுப்பு குறித்து முனைவர். வா.நேரு








அனைவருக்கும் வணக்கம். சிறுகதை என்பது தமிழைப் பொறுத்தவரை ஒரு இரு நூறுஆண்டுகளுக்குள் மட்டுமே இருக்கக்கூடிய ஓர் இலக்கியம். கவிதையைப் பொறுத்தவரைநமது இலக்கியம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு சொந்தமானது. ஆனால் சிறுகதை என்பதுமேற்கத்திய வடிவம். அண்மை நூற்றாண்டுகளில் மட்டுமே தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்ற வடிவம். ஆனால் மிகப்பெரிய அளவிற்கு இன்றைக்கு பேசப்படுகின்ற இலக்கியம்சிறுகதைகள்தான் .உலகளவில் எடுத்துக்கொண்டால் மாப்பசான், மாக்சிம் கார்க்கி,டால்ஸ்டாய் சிறுகதைகள் - அவர்கள் எழுதி இன்றைக்கு 150 ஆண்டுகள், 160 ஆண்டுகள்இருக்கலாம் ஆனால் படித்தால் இன்றைக்கும் நம்மைப் பாதிக்கும் கதைகளாகஇருக்கின்றன. தமிழில் சிறுகதைகளால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றவர்புதுமைப்பித்தன். தமிழில் சிறுகதை எழுத்தாளர்கள் என்று நினைக்கும்பொழுதுபுதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அறிஞர் அண்ணா, அழகர்சாமி, கி.ராஜ் நாராயணன்எனப்பலரும் நினைவுக்கு வருகின்றார்கள். நிறைய எழுத்தாளர்கள் சிறுகதைஎழுத்தாளர்களாக இன்றைக்கு தமிழ் மொழியில் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். 

நமதுதொலைத் தொடர்புத் துறை, பி.எஸ்.என்.எல் நிறுவனம் என்று எடுத்துக்கொண்டால் நிறையசிறுகதை எழுத்தாளர்கள் இருக்கின்றார்கள். பாவண்ணன் என்னும் அருமையானஎழுத்தாளர், சிறுகதை மற்றும் கட்டுரை தொகுப்புகள், நாவல்கள் எனத் தொடர்ந்துஎழுதிக்கொண்டிருக்கின்றார். மொழி பெயர்ப்பு நூல்கள் குறிப்பாக கன்னட மொழியிலிருந்துநிறைய மொழிபெயர்த்து புத்தகங்களாகக் கொடுத்திருக்கின்றார். அவர் அளவிற்கு வேறுயாரும் கன்னட மொழியிலிருந்து தமிழுக்கு கொடுக்கவில்லை, அவ்வளவுகொடுத்திருக்கின்றார். அதேபோல திருப்பூரில் நமது நிறுவனத்தில் வேலை பார்த்தசுப்ரபாரதி மணியன், சின்னச்சின்ன நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுதக்கூடியவர்.ஆதவன் தீட்சண்யா போன்ற இடதுசாரி இயக்கத்தில் மிகவும் பிடிப்பாகவும், சாதி ஒழிப்பைஅடிப்படையாகவும் வைத்து எழுதக்கூடியவர், நமது துறையச்சார்ந்தவர். வலதுசாரிசிந்தனைகளை அடிப்படையாகக்கொண்டு எழுதக்கூடிய ஜெயமோகன் நமது நிறுவனத்தில்வேலை பார்த்தவர். இப்படி நிறைய எழுத்தாளர்கள் உலவிய இடமாகவும் ,உலவும்இடமாகவும் நம்து பி.எஸ்.என்,எல். நிறுவனம் இருக்கிறது. 

அப்படிப்பட்ட மரபின்அடிப்படையில்  பி.எஸ்.என். எல். நிறுவனத்தில் வேலை பார்க்கும், தனது முதல் சிறுகதைத்தொகுப்பினை அளித்திருக்கும் இந்த நூலின் ஆசிரியர் வி.பாலகுமாரைப் பார்க்கின்றேன்.பார்ப்பது பொறியியல் சார்ந்த வேலை என்றாலும், தமிழ் இலக்கியம் சார்ந்துபடைப்பாளியாய் தன்னை வெளிப்படுத்தியிருக்கும் பாலகுமாரை முதலில் பாராட்டுகிறேன். அதுவும் மதுரை பி.எஸ்.என். எல். நிறுவனத்தில் இயங்கும் வாசிப்போர் களத்தின்உறுப்பினர் என்ற முறையில் அவருக்கு மனமார்ந்த பாராட்டுகளைத்தெரிவித்துக்கொள்கின்றேன். 

                  சிறுகதை வடிவம் என்பது முதலில் மனதில் தோன்றவேண்டும். பின்பு அதனைஎழுதவேண்டும். பின்பு அதனைத் தொகுப்பாக, புத்தகமாகக் கொண்டுவரவேண்டும்.அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு தோழர் பாலகுமாருக்குவாய்த்திருக்கிறது.இந்த 'புறாக்காரர் வீடு ' என்னும் புத்தகத்தில் 14 சிறுகதைகள்இருக்கின்றன. 14 சிறுகதையுமே தனித்துவமாய் இருக்கின்றன. எந்தச்சிறுகதையும்இன்னொரு சிறுகதையைப்போல இல்லை.பல எழுத்தாளர்களில் தொகுப்புகள் தனித்தனிக்கதைகள் என்றாலும் ஒவ்வொன்றும் தனித்தன்மையான கதைகளாக இருப்பதில்லை.ஆனால் இந்தத் தொகுப்பு அப்படிப்பட்ட தனித்தன்மையைக் கொண்டிருக்கின்றது.ஒவ்வொரு கதையும் ஒரு மாறுபட்ட முயற்சியாக இருக்கிறது,அதனால் இந்தத்தொகுப்பினை மிகச்சிறப்பாக நான் பார்க்கின்றேன். நூல்வனம் என்னும் பதிப்பகந்தான் இந்தநூலை வெளியிட்டிருக்கின்றார்கள். அட்டைப்படம் மற்றும் வடிவமைப்பு எல்லாம்அருமையாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக நூலில் எழுத்துப்பிழைகளே இல்லை.இன்றுவெளிவரும் பல புத்தகங்களில் எழுத்துப்பிழைகள் மலிந்து கிடக்கின்றன. ஆனால்எழுத்துப்பிழைகளே இல்லாமல் வந்திருப்பது சிறப்பு. 

            புறாக்காரர் வீடு என்னும் இந்தப் புத்தகத்திற்கு பாவண்ணன் முன்னுரைஎழுதியிருக்கின்றார்.நமது துறையைப் பொறுத்தவரை ஒரு முன்னோடிப் படைப்பாளி என்றமுறையில் பாவண்ணன் இந்த நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கின்றார். மிகவெளிப்படையான ஒரு முன்னுரை . தனது முன்னுரையில்  பாராட்ட வேண்டியதைப்பாராட்டியும் அதே நேரத்தில் சிலவற்றை சுட்டிக்காட்ட வேண்டியதைச் சுட்டிக்காட்டியும் பாவண்ணன் எழுதியிருக்கின்றார்.பெரும்பாலானோர் முன்னுரையில் வெறும் பாராட்டுக்கள்மட்டும் இருக்கும் .விமர்சனம் இருக்காது. பாவண்ணன் இரண்டையும்கொடுத்திருக்கின்றார். நானுமே பாராட்டையும் , விமர்சனத்தையும் இணைத்தேதான்கொடுக்கப்போகின்றேன். அதுதான் வளரும் எழுத்தாளரான பாலகுமாருக்கு செய்யும்நன்மையாக இருக்கும் எனக்கருதுகின்றேன். 

             இந்தப்புறாக்காரர் வீடு என்னும் கதையைப் பற்றிச்சொல்லும் பாவண்ணன், நல்லசிறுகதை என்பது சொல்லப்பட்ட கதையை விட படித்துமுடித்தபின் சொல்லப்படாதகதையைப் பற்றியும் நம்மைச்சிந்திக்க வைப்பதாக இருக்கவேண்டும். பாவண்ணன்அசோகமித்திரனின் கதையை எடுத்துக்காட்டாக கூறுகின்றார். நான் அப்படிப்பட்ட நிலையில்புதுமைப்பித்தனின் சிறுகதைகளைப் பார்க்கின்றேன். அப்படியே படித்து முடித்துவிட்டோம்என்று புதுமைப்பித்தன் கதைகளை முடித்துவிட்டுச்செல்ல முடியாது. அந்தக் கதையைவாசித்ததன் பாதிப்பாக நம்மை யோசிக்க வைக்கும், நமது அல்லது நம்மைச்சுற்றிஇருப்பவர் வாழ்க்கையோடு ஒப்பிட வைக்கும் கதைகள் புதுமைப்பித்தனின் கதைகள்.அப்படிப்பட்ட ஒரு கதையாக 'புறாக்காரர் வீடு ' என்னும் கதையை பாவண்ணன்குறிப்பிடுகின்றார்.

 ஒரு அப்பா, அவர் தனது பிள்ளைகளை வளர்க்கும்போதே ,வீட்டில்புறாக்களையும் வளர்க்கின்றார். புறாக்கள் மாடியில் வளர்க்கின்றன, புறாக்களுக்குபாதுகாப்பான கூடுகளையும், உணவையும் அப்பா கொடுக்கின்றார் பிள்ளைகளுக்குகொடுப்பதுபோலவே.வீட்டில் அண்ணன், தங்கை ,தம்பி எப்படி வளர்கின்றார்கள் என்பதனைஎல்லாம் கதையாசிரியர் விவரித்துக்கொண்டு போகின்றார். ஒரு கட்டத்தில் மூத்த மகனுக்குதிருமணம் நடக்கின்றது. திருமணம் முடிந்தவுடன் மகன் தனக்கு தனி அறை வேண்டுமெனமாடியில் கேட்க அப்பா ஒதுக்கிக் கொடுக்கின்றார். புறாக்கள் வளரும் கூண்டுநாற்றமடிக்கிறது என மகன் சொல்ல, கொஞ்சம் கொஞ்சமாக  புறாக்களின் எண்ணிக்கைகுறைக்கப்படுகின்றது.முடிவில் புறாக்களே இல்லாமல் வெறும் கூடு மட்டுமே மிஞ்சுகிறது.பாவண்ணன் என்ன சொல்கின்றார் என்றால் இந்தக் கதை மிக நுணுக்கமாக தனிமைப்பட்டுப்போகும் அப்பாவைப் பேசுகிறது. 

இன்றைக்கு இருக்கும் முதியவர்களின் மிகப்பெரியபிரச்சனை என்னவென்றால் தனிமை. தனிமைதான் இன்றைய முதியவர்களுக்குமிகப்பெரிய சவால். இயக்க தொடர்பு உள்ளவர்கள், நண்பர்கள் வட்டம் உள்ளவர்கள்,வாசிக்கும் பழக்கமுள்ளவர்களாக இருக்கும் முதியவர்கள்தப்பித்துக்கொள்கிறார்கள்.ஆனால் அதிகாரமாக இருந்துவிட்டு, முதுமையில்தனிமைப்பட்டுப்போகும் முதியவர்களின் தனிமை கொடுமை. முதியவர்களை நன்றாககவனித்துக்கொள்ளும் நாடுகள் என ஒரு பட்டியல் உலக அளவில் போட்டிருக்கின்றார்கள்.அதில் கடைசியில் இருந்து 3 வது அல்லது 4-வது இடத்தில்தான் இந்தியா இருக்கிறது. மிகநுணுக்கமாக முதியவர்களின் தனிமையை இந்தக் கதை கூறுவதாக நான் நினைக்கின்றேன்.

வெறும் சட்டத்தினால் மட்டும் முதியவர்களின் தனிமையை சரிபடுத்திவிடமுடியாது.இன்றைக்கு சட்டம் இருக்கிறது. கவனிக்காத மகனை, மகளைப் பற்றிக் காவல் நிலையத்தில்புகார் கொடுக்கலாம் என்று. ஆனால் எத்தனை பெற்றோர்கள் நம் நாட்டில் அப்படிப் புகார்கொடுப்பார்கள்? ஆயிரத்தில் ஒருவர்கூட இருக்கமாட்டார்கள். தனியாய்க் கிடந்து மருந்தைக்குடித்து செத்தாலும் சாவார்களே தவிர புகார் அளிக்கமாட்டார்கள். வாட்ஸ் அப்பில் வந்தஒரு செய்தி என்னைப் பாதித்தது. 'அப்பாக்கள் சம்பாதிக்கும் சம்பாத்யத்தில் பிள்ளைகளுக்குசெலவழிக்க முழு உரிமை உண்டு , ஆனால் பிள்ளைகள் சம்பாதிக்கும் சம்பாத்தியத்தில் ...'என்று போட்டு விட்டு ஒரு கேள்விக்குறி போட்டிருந்தார்கள். நான் இதனைப்படித்தபிறகுதான் யோசித்தேன். நான் சம்பளம் வாங்கியவுடன் இந்தச்சம்பளம் அம்மாவுக்குஉரியது என்று நினைத்தோமா என்று நினைத்தேன். இல்லை. அம்மாவுக்கு கொடுத்தோம்.செய்தோம். அதுவேறு . ஆனால் அப்படி நினைத்தோமா என்றால் இல்லை. ஆனால் எனதுபிள்ளைகள் எனது சம்பளத்தை தங்கள் சம்பளமாக இன்று நினைக்கின்றார்கள், நாளைஅவர்கள் சம்பளம் வாங்கும்போது அது அப்பா,அம்மாவிற்கும் உரியது என்றுநினைப்பார்களா என்றால் உறுதியாக நினைக்கமாட்டார்கள். இப்படி மிக நுட்பமாகமூத்தவர்களின் பிரச்சனையை சொல்லியிருக்கும் கதையாக இந்தத் தொகுப்பில் உள்ள;புறாக்காரர் வீடு ' என்னும் கதையைப் பார்க்கின்றேன்.இந்தக் கதையைச்சொல்லியிருக்கும்பாங்கு, மொழி அருமையாக உள்ளது. 

               அதேபோல 'மழை வரும் பருவம் ' என்னும் கதை. கேட்டுக்கொண்டிருக்கும்உங்களில் எத்தனை தோழர்கள் , இறந்து போன உறவினரின் உடலோடு வண்டியில்போயிருக்கின்றீர்கள் என்று தெரியவில்லை. அது ஒரு கொடுமையான அனுபவம்.கல்லூரியில் படிக்கும் நண்பன். அந்த நண்பனின் அம்மா இறந்துபோனதாக செய்திவருகிறது. அம்மாவின் இறப்பிற்குச்செல்லும் நண்பனோடு உடன் செல்லும் நண்பனின்அனுபவமாக இந்தக் கதை அமைகின்றது. வண்டியில் செல்லும் போது எதுவுமே பேசாமல்இறுக்கமாக வரும் நண்பன், எதைக் கேட்டாலும் விட்டேத்தியாக பதில் சொல்லும் நண்பன்,நண்பனின் அம்மா எப்படி நண்பனை வளர்த்தார்கள் என்பதெல்லாம் மிக விளக்கமாக இந்தக்கதையில் எழுதப்பட்டுள்ளது. அதிலும் நண்பனின் அப்பா, நண்பன் அம்மாவின் வயிற்றில்கருவாக இருக்கும்போதே இறந்து விட, கண்வனின் இறப்பிற்காக கூடும் கூட்டத்தில் 'நான்சொல்ல ஒரு செய்தி இருக்கிறது ' என்று சொல்லி நெல்லுமணியின் மூலம் தான் கர்ப்பமாகஇருப்பதைச்சொல்வதாக கதை நகர்கிறது. எழுத்தாளர் தொ.பரமசிவம் , தனது 'அறியப்படாததமிழகம்' என்னும் நூலில் , கர்ப்பமாக இருக்கும் நிகழ்வை, கணவன் இறந்துவிட்டநிலையில் நெல் மணிகள் மூலமாக  ஊர்மக்களுக்கு மனைவி தெரிவிக்கும் நிகழ்வைக்குறிப்பிடுவார். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு இக்கதையில் வருகின்றது. ஆழமான கதை.

                              இப்படி ஒவ்வொரு கதையுமே வேறுபட்ட களம், வேறுபட்ட நோக்கில் இருக்கின்றன.அதேபோல 'திருவாளர் பொதுஜனம் ' என்னும் கதை, மிகவும் நகைச்சுவையாக மக்களின்மனப்பான்மையை எடுத்துக்காட்டும் கதை. மிக நன்றாக இருக்கும் கதை. தகவல் அறியும்உரிமைச்சட்டத்தில் நீங்கள் எதை வேண்டுமானாலும் கேட்கலாம், ஆனால் அலுவலகத்தில்வேலை பார்ப்பவர்களுக்கு  எதற்காக கேட்கிறீர்கள் என்று சொல்லவேண்டியதில்லைஎன்னும் அடிப்படையை வைத்து நையாண்டியாக எழுதப்பட்ட கதை.

இதில் ' நாக தேவதை ' என்னும் ஒரு கதை இருக்கிறது.அமானுசம் என்ற அடிப்படையில் எழுதப்பட்ட கதையாக இந்த 'நாகதேவதை 'என்னும் கதை. கனவில் ஒரு சிறுமி, அப்புறம் ஒரு கோடாங்கி , அவனிடம் போய் குறி கேட்கும் நிலை,கோடாங்கி சொல்லும் பரிகாரம், அந்தப் பரிகாரத்தை ஒட்டிய நிகழ்வோடு நிகழும் சில நிகழ்வுகள் என அக்கதை நகர்கின்றது. இந்தக் கதையின் உள்ளடக்கம், இந்தக் கதை தரும் எதிர்மறையான தாக்கம் தேவையில்லாதது என்பது எனது கருத்து. இன்றைக்கு எதற்காக கதை எழுதுகிறோம் என்னும் நோக்கம் இல்லாமல் எழுதக்கூடிய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். பேய்,பிசாசு என்று சொல்லி கற்பனையாக எழுதி பணம் சம்பாதிக்கும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இது போன்ற கதைகளை சமூகத்தின் நலன் கருதி தவிர்க்கலாம் என்பது எனது கருத்து. 
               

அதுபோல ' கருப்பு ' எனும் கதை நன்றாகச்சொல்லப்பட்டுள்ளது. நிறைய எழுதக்கூடியஆற்றல் இருக்கிறது இந்த எழுத்தாளருக்கு. இளைஞர். மொழி வளம் அருமையாகஇருக்கிறது. நிறைய இவர் எழுதவேண்டும். இன்னும் பல சிறுகதைகள் தொகுப்புவரவேண்டும். 

(30.09.2016, மதுரை பி.எஸ்.என். எல். வாசிப்போர் களம் நிகழ்ச்சியில், புத்தக அறிமுகமாகவி.பாலகுமார் அவர்கள் எழுதிய 'புறாக்காரர் வீடு ' என்னும் புத்தகத்தைப் பற்றி  முனைவர் வா.நேரு பேசியதின் எழுத்து வடிவம் )

Nantri :http://vasipporkalam.blogspot.in/2016/10/blog-post.html

Tuesday 11 October 2016

‘பெரியார் மறைந்தார், பெரியார் வாழ்க’ -நெகிழவைக்கும் தொகுப்பு


இன்றைய தலைமுறை தந்தை பெரியாரை நேராகப் பார்த்ததில்லை, அவர் உரையை நேராகக் கேட்டதில்லை, அவரின் ஆளுமையை, ‘மனக்குகையில் சிறுத்தை எழும்‘ அந்த பகுத்தறிவுப் பகலவனை நேரிடையாகச் சந்தித்து உணர்ந்ததில்லை. தப்பும் தவறுமாய் தத்துப்பித்தென்று தந்தை பெரியார் எனும் இமயத்தை அறியாமல் இன்றைய உளறுவாயர்கள் சிலர் தந்தை பெரியாரைப்பற்றி உளறிக் கொண்டிருக்கும் வேளையில் தந்தை பெரியார் என்பவர் யார் என்பதனை உணர்த்தும் வகையில், தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைத் தொகுப்பு ஆசிரியராகக் கொண்டு வெளிவந்திருக்கும் ‘பெரியார் மறைந்தார், பெரியார் வாழ்க’ என்னும் புத்தகத்தைப் படித்தபோது நெகிழ்ந்து போனேன். தலைப்பைப் பார்த்த போது எனக்கும்கூட என்ன, ஒரு மாறுபட்ட தலைப்பாக இருக்கிறதே என நானும் நினைத்தேன்.

பதிப்புரையில் அய்யா ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டிருப்பது போல ‘தலைப்பு சிலருக்கு சற்று மயக்கத்தினைக் கூடத் தரக்கூடும்’ எனச் சொல்லியிருப்பதுபோலத் தான் எனக்கும் தோன்றியது. ஆனால் தந்தை பெரியார் மறைந்துவிட்டார், அவரின் தத்துவம் என்பது மறையாதது, மங்காதது, என்றும் ஒளிக்கதிராய் வழிகாட்டக்கூடியது என்பதைக் காட்டும் வகையில் ‘‘தந்தை பெரியார் ஒரு தனி மனிதராய் இருந்திருக்கிறார், ஆனால் பெரியார் என்ற தத்துவம் -லட்சிய ஒளி என்றும் மறையாது; என்றும் வாழும்-பரவும் என்பதை விளக்குவதே இந்நூலின் தலைப்பு’’ என்பதனை ஆசிரியர் அவர்கள் விளக்கும்போது, உள்ளே சென்று உள்பக்கங்களை படித்து முடித்த பொழுது மிகப்பொருத்தமான, ஆழமான தலைப்பு இத்தலைப்பு என்றே தோன்றியது. பெரியாரின் உருவத்தோற்றத்தை சாமி.சிதம்பரனார் விவரிக்கும் விவரிப் பிலேயே தந்தை பெரியாரை நாம் மனக்கண்ணால் காண இயலுகின்றது (பக்கம் 10-11).

‘இடுப்பில் எப்போதும் ஒரு நான்கு முழத்துணி’ என ஆரம்பித்து சாமி சிதம்பரனார் சொல்லிச்செல்லும் வேளையில் நேரத்திற்கு ஒன்றாய் பல  இலட்சம் பெறு மான சட்டைகளை உடுத்துபவர்கள் தலைவர்கள் என அழைக்கப்படும் இந்த நாளோடு அன்றைய நாளை ஒப்பிட்டு நோக்கத் தோன்றுகிறது. பெரியாரைப் பற்றி பெரியார் -என்னும் பகுதி அனைத்தும் தந்தை பெரியாரின் வாக்குமூலங்களாக, உங்களை உலகத்து மக்களைப் போல ஆக்குவதற்காக நான் எடுத்துக்கொண்ட உறுதிமொழி என்னும் வகையில் அமைந்துள்ளன, ‘எனது சீர்திருத்தம்‘, ‘எனது ஜாக்கிரதை’, ‘எனது மனத்திருப்தி’  என ஆரம்பித்து, நண்பர்களெல்லாம் பகைவர்களானாலும் நான் தொடருவேன். இந்த ‘செங்குத்தான மலைமேல் குண்டுப்பாறையை ஏற்றுவதுபோல்’ இயக்கப்பணியை எனத் தந்தை பெரியார் பறைசாற்றும் ‘ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்’, எத்தனை பதவிகள், எத்தனை பொறுப்புகள் அத்தனையையும் விட்டு விட்டு, உதறித் தள்ளிவிட்டு பொதுவாழ்க்கைக்கு வந்த தந்தை பெரியார், அத்தனையையும் பட்டியலிட்டு தான் எப்படிப்பட்ட நிலையில் இருந்து பொதுவாழ்க்கைக்கு வந்தேன் என்பதைச்சொல்லும்  ‘துரோகம் செய்து அயோக்கியனாக நான் வாழ வேண்டிய அவசியம் இல்லை'  பக்கம் (33-37) என்னும் கட்டுரையை மீண்டும் மீண்டும் படிக்கவேண்டும்.பொது வாழ்க்கைக்கு வரும்போதே சட்டமன்ற உறுப்பினராக வேண்டும், அமைச்சராக வேண்டும், நிறைய சொத்து சேர்க்க வேண்டும் என்று வருவோர் மத்தியில் எத்தனை வாய்ப்புக்களை, வசதிகளை துறந்துவிட்டு சுயமரியாதை வேண்டி , உண்டானது அனைத்தையும் துறந்து வந்த துறவி எனத்தோன்றுகிறது.  ‘எனது நிலை’ எனத் தனது 90 ஆவது வயதில் அய்யா எழுதியது. ‘எனது உற்சாகத்தின்  ரகசியம்‘ எனத் தந்தை பெரியார் 93 வயதில் எழுதியது எல்லாம் இலக்கிய நயத்தோடு கூடிய அறிக்கைகளாய், சமுதாயப்பேதத்தை ஒழிக்க வரக்கூடியவர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருக்கவேண்டும் என்பதனை உணர்த்துபவையாய் இருக்கின்றன. இன்றைய தலைமுறையினர்க்குப் பெரியார் எப்படிப்பட்டவர் என்பதனை விளக்கும் விதமாக ‘பெரியாரின் தனித்தன்மைகள்’ பகுதி. தந்தை பெரியாரின் தனி உதவியாளராய் இருப்பதற்காகவே பிறந்தவர் போலத் தன் வாழ்நாளை பெரியாரின் பெரும்பணிக்கு ஒப்படைத்த புலவர் கோ.இமயவரம்பன் அவர்களின் ‘பசித்தால் உண்பார், படுத்தால் உறங்குவார் ‘ என்னும் கட்டுரை, எந்த நிலையிலும் உணவு எப்படிப்பட்டது என்பதனைப் பற்றிக் கவலைப்படாத துறவி அவர் என்பதனை உணர்த்தும் ‘சிறையில் கஞ்சி’, ‘கூப்பிட்டால் வந்து விடுவார், கொடுத்தால் சாப்பிட்டு விடுவார், இது இரண்டிலும் அவர் குழந்தையே ஆவார்’ என்னும் அன்னை மணியம்மையாரின் அறிக்கை, தமிழ்த்தென்றல் திரு.வி.க.வின் எழுத்துக்களில் இருந்து தந்தை பெரியார் எப்படி கவலையற்று உறங்குவார், மழை பெய்தால்கூட திண்ணையில் அயர்ந்து உறங்கும் தன்மையைப் பெற்றிருந்தார் போன்ற செய்திகளெல்லாம் தந்தை பெரியாரின் தனித்துவத்தை பறை சாற்றும் பகுதிகளாகும். பெரியாரின் 100 என பேரா.நம்.சீனிவாசன் அவர்கள் தொகுத்த செய்தியினைத் தொடர்ந்து ‘பெரியார் ஒரு சகாப்தம்‘ என்னும் தலைப்பில் ‘ஒளிவு மறைவுகள் இல்லாத ஒப்பற்ற தலைவர்’  எனத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியார்  உடை நோக்கார், உணவு நோக்கார், மாற்றாரை மதிக்கும் மனமுடையார், காலந்தவறாமை என்னும் பண்பை வாழ்நாளெல்லாம் கடைப்பிடித்த நேர நோக்காளர், ஒப்புக்கொண்ட கூட்டத்தை எந்த நிலையிலும் ரத்து செய்யும் எண்ணமிலார், அதனையே வாழ்கை நெறியாய் கடைப்பிடித்தார், எளிதில் எவருக்கும் அமையா பண்புடையார், ‘மிகவும் கவனமாக எதையும் செய்யும் செய்தல்’  என்பதற்கு விளக்க உரையாக அமைந்தார், ஒரு முனைப்பு ஆற்றல் மிக்கார், 90 வயதிலும்கூட மூன்று தலைமுறையைச்சார்ந்தவர்களின் பெயர்களை ஞாபகம் வைத்து கேட்கும் நினைவாற்றல் மிக்கார், பொறுப்பும், கலகலப்பும் உடையார்  என ஒவ்வொன்றாய்  விவரிக்கும் பகுதி அப்படியே தந்தை பெரியாரின் தனித்துவத்தை நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தும் பகுதியாகும்

‘நீரை ஆவியாக இழுத்து மழையாகப் பெய்வதுபோல சில்லரையாக சிக்கனப்படுத்தி லட்சக்கணக்காகக் கல்விக்கும் மருத்துவமனைகளுக்கும்,பொதுப்பணிகளுக்கும்வரை யாது தரும் வள்ளல் அவர்! அது கருமித்தனம் அல்ல- சிக்கனத்தின் சீரிய தன்மையை உலகுக்கு உணர்த்துவதாகும்‘ பக்கம்(73) எனச் சொல்லி தந்தை பெரியாரின் நகைச்சுவையை ஆசிரியர் சுட்டிக்காட்டுவது, நன்றியில்லாமல்தான் இருப்பார்கள் நமது இனத்தவர்கள் என அலட்சியப்படுத்தி பொதுப்பணியில் ஈடுபட்டது என இன்றல்ல, 1974 இல் ஆசிரியர் அவர்கள் ‘‘முர சொலி’யில் ,’’தென்னகம் ‘பத்திரிக்கையில் தந்தை பெரியார் பற்றி எழுதியதை இன்றைக்கு புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருப்பது கரும்புச்சாறுபோல கருத் துச்சாறாய் தித்திக்கிறது.


பெரியார் நடத்திய போராட்டங்களின் பட்டியலைக் கொடுத்துவிட்டு, தந்தை பெரியார் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற தமிழர் சமுதாய இன இழிவு ஒழிப்பு மாநாடு, அவரின்  மரணசாசனம் ஒளிப்படம் அதனைத் தொடர்ந்து தந்தை பெரியார் மரணமடைவதற்கு சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற கூட்டம் தள்ளிவைப்பு, மருத்துவமனையில் அனுமதிப்பு எனத் தொடர்ந்த நிகழ்வுகள் பத்திரிக்கைகளில் எப்படி வந்தன என்பது கொடுக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து தந்தை பெரியாரின் மறைவு, தந்தை பெரியார் நோய் துவக்கமும் முடிவும் என ‘விடுதலை’யில் வந்த செய்தி, அனல் தங்களைச் சுட்டது போல அன் றைக்கு முதல்வராக இருந்த டாக்டர் கலைஞர் அவர்களும், மற்ற தலைவர்களும் துடித்த செய்தி, அரசு மரியாதைக்கு டாக்டர் கலைஞர் அவர்கள் உத்தரவிட, கேள்வி எழுப்பப்பட்டபோது காந்தியார் எந்தப் பதவியில் இருந்தார்? அவருக்கு எப்படி மரியாதை செலுத்தப்பட்டது அதுபோல தந்தை பெரியாருக்கு செய்வோம், தந்தை பெரியாரின் உடலுக்கு அரசு மரியாதை செய்வதற்காக எத்தகைய இன்னல் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் எனக் கலைஞர் நெஞ்சுரத்தோடும், எங்களையெல்லாம் ஆக்கிவைத்த அய்யா பெரியாருக்கு இல்லாமல் வேறு எதற்கு எனும் வேகத்தோடும் வரலாற்றை நிகழ்த்தியதை இப்புத்தகத்தின் பக்கங்கள் ஆவணமாக ஆக்கி வைத்திருக்கிறது.  

‘மரித்தது பெரியாரல்ல/மாபெரும் தமிழர் வாழ்வு’ எனத் தமிழர்கள் கலங்கிய கோலத்தை, 15 இலட்சம் பேர் தந்தை பெரியாரின் இறுதி ஊர்வலத்திற்கு திரண்ட காட்சியை, ‘சரித்திரம் இறந்த செய்தி’ கேட்டு அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் கதறி  அழுதிட  பெருந்தலைவர் காமராசர் கலைஞர் அருகில் சென்று கலைஞரை ஆற்றுப்படுத்தியதை,   ‘சிவாஜி’ எனப் பெயர் வைத்த பெருமகனாரின் இழப்பைத் தாங்க முடியாமல் நடிகர் சிவாஜிகணேசன் கலங்கியதை, அன்றைய அரசியலில்  மூன்று துருவங்களாய் இருந்த டாக்டர் கலைஞர் அவர்களும், பெருந்தலைவர் காமராசர் அவர்களும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களும் ஒட்டு மொத்த சோகத்தோடு ஒன்றாய் அமர்ந்து  தந்தை பெரியார் இறப்பு துக்கத்தில் இருந்ததையும் ஒளிப்படங்களாய் இப்புத்தகத்தில் பதிந்துள்ளனர்.

பெருந்தலைவர் காமராசர் அவர்கள் தனது இரங்கலுரையில் ‘நம் நாட்டில் குறிப்பாகத் தமிழ் நாட்டில் சமுதாயத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த பெரியார் ஆற்றியுள்ள பணி மகத்தானது . அவர் ஒரு சிறந்த தேசபக்தர்’ எனக் குறிப்பிட்டு விவரித்துச்சொல்லும் சொற்கள் படிப்பவர் எவரையும் கண்ணீர் சிந்த வைக்கும்.  ‘உடன் பிறப்பே’ என விளித்து டாக்டர் கலைஞர் அவர்கள்’ இளம்பிஞ்சுப் பருவத்திலேயே என்னை நான் அவரிடத்திலே ஒப்படைத்துக்கொண்டு தன்மானத் தமிழகம் காண, தலை நிமிர்ந்து நிற்கும் சமுதாயத்தை உருவாக்க அணிவகுத்து நின்ற அவரது பெரும்படையில் ஒரு துளியானேன்.

என்னைப் போல் எத்தனை பேர் அவருடன் நெருங்கிப்பழகி , அவர் வீட்டிலேயே உணவருந்தி, அவர் அலுவலகத்திலேயே பணியாற்றி, அவருக்குச் செயலாளராகத் தொண்டுபுரிந்து, அவருடைய கரம்பிடித்தே பொதுவாழ்வுப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதை எண்ணிடும்போது, அடே அப்பா! எவ்வளவு பேருக்கு நிழலாக இருந்த மரம் சாய்ந்துவிட்டது என்ற கதறல்தான் என்னையும் அறியாமல் பீறிட்டுக் கிளம்புகிறது.
‘‘பெரியார், சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டார் - நாம் தொடருவோம்; வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு!’’  என வந்த அவரின் அறிக்கை, ஒவ்வொரு உடன்பிறப்பும் தன் மனதில் இருத்திக்கொண்டு பணியாற்ற வேண்டிய அறிக்கை.   தந்தை பெரியார் மறைவை ஒட்டி ‘தத்துவங்களின் சின்னம் தந்தை பெரியார்’ என எம்.ஜி.ஆர். கொடுத்த இரங்கல், ‘பெரியார் வாழ்கிறார், பெரியார் காலத்தில் நாம் வாழ்கிறோம்’ என்ற எண்ணமே தமிழ் இனத்திற்குப் பாதுகாப்பான அரணாக அமைந்தது, ‘‘அவருடைய சிந்தனை, செயல் அத்தனையும் மனித சமுதாயத்திற்காகக் குறிப்பாக தமிழர் சமுதாயம் மேம் பாடு அடைவதாகத்தான் இருந்தது. அவருடைய ஆற்றல்மிக்க தூய தொண்டுள்ளத்தை அவருடைய எதிரிகள் கூடக் குறைத்து மதிப்பிட்டது  கிடையாது’’ (பக்கம் 149) என விரியும் அந்த இரங்கலுரை இன்றைய அவரது கட்சியினர் மீண்டும் மீண்டும் படிக்கவேண்டிய இரங்கலுரையாகும்.  
தந்தை பெரியார் மறைவை ஒட்டி  விடுதலையில்  முரசொலியில்,மக்கள் குரலில், சுதேசமித்திரனில், நவசக்தியில் ,தினத்தந்தியில், தினமணியில் , அலைஓசையில், தினமலரில் வந்த செய்திகள், தலைவர்கள் கொடுத்த இரங்கலுரைகள் அத்தனையும் வரிசைப்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்து மிஷன் அமைப்பின் ஸ்தாபகர், அப்துல் சமது போன்றவர்களின் அறிக்கைகளை இன்றைய தலைமுறையினர் படிக்கவேண்டும். தந்தை பெரியாருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்களின் பார்வை’ மருத்துவர்களின் நெகிழ்ச்சி’ என்னும் தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

தந்தை பெரியாரின் இறுதிக் காலங்களில் அவரோடு உடன் இருந்த மருத்துவர்களின் வாக்குமூலங்கள் தந்தை பெரியாரின் மன உறுதியை எண்ணி எண்ணி நம்மை வியக்க வைக்கின்றன. ‘‘தனது  வேதனையையும் சவுகரியக் குறைவையும் பெரியாரளவுக்குப் புகார் கூறாமல் பொறுத்துக்கொண்ட நோயாளியை நான் கண்டதே இல்லை’’ என்று  டாக்டர் எஸ்.எஸ்.பட். அவர்கள், ‘கடைசி நேரத்திலும் நிதானம் இழக்கவில்லை; என்று டாக்டர் கே.ராமச்சந்திரன் ‘மனித இயல்பை மிஞ்சியவர்’ என டாக்டர் ஏ.சி. ஜான்சன், ‘சரித்திர நாயகரை, நேரில் கண்டு உரையாடவும், நெருங்கிப்பழகவும் வாய்ப்புக்கிடைத்தற்காக மகிழ்ச்சியடைகிறேன்’ என்னும் டாக்டர் ஏ.ராசசேகரன் அவர்களின் கட்டுரை அனைத்தும் தங்களிடம் மருத்துவம் பெற்ற நாயகரின் குண நலன்களை கொண்டாடி மகிழும் கட்டுரைகளாக உள்ளன.      

புத்தகத்தின் கடைசிப்பகுதி தந்தை பெரியார் மறைவுக் குப்பின் நடைபெற்ற நிகழ்வுகள், ‘அடுத்து என்ன?’ என்ற அன்னை மணியம்மையாரின் அறிக்கை, ‘திராவிடர் கழகம் தொடர்ந்து செயல்படும்‘ என்னும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவிப்பு, பெரியார் திடலில் கூடிய தோழர்கள், தோழியர்களின் ‘அய்யா காட்டிய வழியில் நூலிழை பிறவாமல் நடப்போம் ‘ எனும் உறுதிமொழி ஏற்பு எனத் தொடர்கிறது.

பின்னர் 1938 இல் ‘பெரியார்’ என்னும் பட்டம் வழங்கிய நிகழ்விலிருந்து, தாமிரப்பட்டயம், யுனெஸ்கோ வழங்கிய சிறப்புப்பட்டயம், இந்திய அரசு வெளியிட்ட அஞ்சல் தலை, சிறப்பு அஞ்சல் உறை எனத் தொடர்ந்து செயற்கரிய செய்த பெரியார் எனத் தொடர்ந்து முடிவில் ‘இலக்கியமானார் பெரியார்’ என முடிகிறது. புத்தகம் முழுக்க புகைப்படங்கள், வரலாற்றின் பக்கங்களை நினைவுறுத்தும் வண்ணம் நினைவில் நிற்கின்றன. ஆசிரியர் அவர்கள் பதிப்புரையில்’ அய்யா தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவன் குறித்துப்பலரும் தந்த செய்திகளின் தொகுப்பான வீர வணக்கக் கண்ணீர் புகழ்மாலை இது’ எனக் குறிப்பிட்டுள்ளதுபோல ஆவணக் கண்ணீர் மாலையாக, தந்தை பெரியாரின் புகழைக் கூறும் கூற்றுக்களின் தொகுப்பாக, எந்த நாளும் நம் வீட்டில் காப்பாற்றி வைத்து, இந்த நூலை தந்தை பெரியாரைப் பற்றி அறியாதவர் கைகளில் எல்லாம் கொடுத்து கொடுத்து  படிக்கச்சொல்லும் களஞ்சியமாகத் திகழ்கிறது.

எந்த கட்சியில் இருந்தாலும், எந்த இயக்கத்தில் இருந்தாலும்  திராவிடர்கள் ஒவ்வொருவரின் இல்லத் திலும் இருக்கவேண்டிய நூல் இது, படிக்க வேண்டிய நூல் இது.

நன்றி : விடுதலை 19.08.2016