Monday, April 24, 2017

புத்தகமும் நானும்.......உலக புத்தக நாளை முன்னிட்டு.........வா.நேரு

புத்தகமும் நானும்.......உலக புத்தக நாளை முன்னிட்டு.........வா.நேரு

                  புத்தக வாசிப்பின் மீதான ஈர்ப்பு என்பது 6-வது 7-வது படிக்கும்போதே ஆரம்பித்தது எனக்கு. 9-ஆம் வகுப்பு படிக்கும்போது கல்கியின் 'பொன்னியன் செல்வன்' புத்தகத்தை எடுத்துக்கொண்டு,சாப்டூரில் எங்கள் வீட்டு மெத்தில் உட்கார்ந்து காலை 7 மணி முதல் படித்துக்கொண்டிருக்க, 11 மணியளவில் சாப்பிடுவதற்கு நேருவைக்காணாம் என்று வீடே தேட, மெத்திற்கு வந்த எனது மூத்த அண்ணன் ஒரு அடி அடித்து, சாப்பிடாமாக் கூட கதைப்புத்தகம் படிக்கிறியா என்று கண்டித்தது நினைவில் இருக்கிறது. படிக்கும் காலத்தில், எனது அம்மாவிற்கு சாப்டூர் கிளை நூலகத்திற்கு சென்று புத்தகங்களை எடுத்துவர நான் தான் செல்வேன். புத்தகங்களைத் தேடுவது, படிப்பது என்பது அப்போதிருந்து ஆரம்பித்தது. ஜெயகாந்தன் புத்தகத்தை அப்படி ஒரு விருப்பத்தோடு ஆயிரம் வேலைகளுக்கு நடுவில் எனது அம்மா படித்தது, வாசிப்பின் மீதான ஆவலை அதிகரித்தது. ஒரு பத்து நிமிடம் நேரம் கிடைத்தால் பையில் இருக்கும் ஏதேனும் ஒரு புத்தகத்தை எடுத்துப்படிப்பது என்பது இன்றுவரை தொடர்வதற்கு அத்தனை வேலைகளுக்கும் நடுவிலும் எனது அம்மாவிற்கு கிடைத்த வாசிப்பு மகிழ்ச்சியே அடித்தளம் எனலாம்.

                கல்லூரி படிக்கும் காலத்தில் , திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்த அனுபவம், சில பேராசிரியர்களும், மாணவர்களும் விரும்பி மீண்டும் மீண்டும் வந்து ஒரு சில புத்தகங்கள் வந்துவிட்டதா என என்னிடம் கேட்டபோது அப்படி ஒரு விருப்பம், இவர்களுக்கு புத்தகத்தின் மேல் ஏன் எனும் வினா எழுந்ததும் வாசிப்பின் மேல் நாட்டம் கொள்ள வைத்தது.பெரியாரியல் பட்டயப்பயிற்சிக்காக பேரா.கி.ஆழ்வார் மூலமாக கிடைத்த சில புத்தகங்கள் புதிய வெளிச்சங்களைக் காட்டியது.பெரியாரியல் பாடங்களை அனுப்பிய அய்யா கரந்தை புலவர் ந.இராமநாதன் அவர்களை நேரிடையாகச்சந்தித்ததும்,புரட்சிக்கவிஞர் எழுதிய பாடல்களை அவரின் வாயிலாக 'செவியுணர்வுச்சுவையுணர்வோடு 'சுவைத்ததும் வாழ்வில் மறக்க இயலாதவை. காந்தியம், பெரியாரியம், அம்பேத்கரியம்,பொதுவுடமை எனப் பல திக்குகளிலிருந்தும் கிடைத்த புத்தகங்களை வாசிப்பதும் கல்லூரிக் காலங்களில் ஓடிக்கொண்டிருந்தது. தடை செய்யப்பட்ட புத்தகமான காந்தியைக் கொன்ற கொலைகாரன் கோட்சே எழுதிய ' நான் ஏன் காந்தியைக் கொன்றேன் ?' என்னும் புத்தகத்தை உடன் படித்த நண்பன் கொடுக்க அதனைப் படித்ததும் அக்காலங்களில் நிகழ்ந்தது. அந்தப்புத்தகத்தைப் படித்துமுடித்தபொழுது காந்தியாரின் மேல் இருந்த மரியாதை கூடியதே ஒழிய குறையவில்லை. 

                படித்து முடித்து ,திண்டுக்கல் தொலைத்தொடர்புத்துறையில் பணியில் சேர்ந்தபொழுது,வாசிக்கும் பழக்கமுடையோர் பலரும் பக்கத்து நாற்காலிகளில் உட்கார்ந்து வேலை செய்துகொண்டிருந்தனர்.குறிப்பாக தொலைபேசி ஆப்ரேட்டராக இருந்த பலரில் அக்கா மீனாட்சி நிறைய வாசிப்பார்.1984-85-களில் பாலகுமாரின் இரும்புக்குதிரையை கையில் வைத்து விடாமல் படித்துக்கொண்டிருந்தபொழுது, ஏய்-தம்பி,பாலகுமாரன் என்ன எழுதுகிறார் என்பதை புரிந்துகொண்டுதான் படிக்கிறாயா? என்றுசொன்னதோடு பல கேள்விகளை எழுப்பியவர்.திண்டுக்கல்லில் இருந்து உசிலம்பட்டிக்கு விருப்ப மாற்றலில் வந்தபொழுது ,உசிலம்பட்டியில் இருந்த பொன்னுச்சாமி, சு.கருப்பையா ஆகியோர் வாசிக்கும் பழக்குமுடையவர்களாக இருந்தனர்.நானும் வாசிக்கும் குழுவில் இணைந்தேன். கருப்பையா அண்ணன் சரித்திரக்கதைகளை விடாமல் படிப்பவர். பொன்னுச்சாமி சுந்தரராமசாமியைப் படிப்பார். இருவருக்கும் சண்டை இலக்கியரீதியாகவும் நடக்கும். பின்னர் மறுபடியும் திண்டுக்கல் வந்தபொழுது ஒரு வாடகை நூலகத்தில் இணைந்து ஆங்கிலத்தை மேம்படுத்த என ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் கதைகளை, 50-க்கும் மேற்பட்ட நூல்களை வாசித்ததும், இர்விங் வாலஸ் போன்றவர்களை வாசித்ததும் அந்தக்காலத்தில்தான். 1989-ல் பெரியகுளத்திற்கு வந்தபொழுது தோழர் விஜயரெங்கன் நிறைய வாசிப்பவராக இருந்தார். பிரபஞ்சனின் 'எனக்குள் ஒருத்தியை ' - நான் படித்ததை உடன் வேலை பார்த்த சேகருக்கு கொடுத்ததும், அவரின் வாழ்க்கை முடிவு மாறியதும் தனிக்கதை.

மதுரையில் தோழர் ந.முருகன் அவர்களோடு ஏற்பட்ட தொடர்பு பல புதிய புத்தகங்கள் வாசிப்பிற்கு துணைபுரிந்தது. 'புதிய காற்று ' எனும் சிற்றிதழை நடத்திய அவரின் தூண்டுதல்  கவிதை,சில நூல்கள் அறிமுகம் என எனது எழுத்துப்பணி ஆரம்பமானது. வீடு முழுக்க புத்தகங்களால் நிரப்பியிருந்தார் அவர். நாலைந்து நண்பர்கள் இணைந்து புத்தகங்கள் வாங்க ஆரம்பித்தோம். குழுவில் உள்ள ஒருவர் அவரின் விருப்பத்திற்கு ஏற்ப ரூ1000-க்கு புத்தக்ங்கள் வாங்குவார். குழுவில் உள்ள அனைவரும் படிப்பதற்காக சுற்றில் வரும். கடைசியில் யார் வாங்கினார்களோ அவருக்குப் போய்விடும. இப்படி பல கண்ணோட்டமுள்ளவர்களின் புதிய புத்தகங்களைப் படிப்பதற்கு ஒரு வாய்ப்புக்கிடைத்தது. 

             மதுரைக்கு வந்த பின்னர், கார்முகில் என்னும் வாடகை புத்தக நிலையத்தில் வாடிக்கையாளரானேன். 20 நூல்கள் எடுத்தபின்பு ,ஒரு நாள் அதன் நிறுவனர் தோழர் பாண்டியன் பேசினார். நான் என்னைப்பற்றி அறிமுகப்படுத்துவதற்கு முன்னாலேயே நீங்கள் 20 புத்தகம் என்ன எடுத்திருக்கிறீர்கள் என்று பார்த்துவிட்டேன், அதனால்தான் உங்களிடம் பேசுகிறேன் என்றார்.என்ன புத்தகம் எடுத்திருக்கிறோம்-படித்திருக்கின்றோம் என்பதனை வைத்து, நம்மை முடிவு செய்வது என்பது அவரின் பாணியாக இருந்தது.'ஸ்பார்ட்டகஸ் 'போன்ற அருமையான புத்தகங்களை அங்கு படித்ததும் , பின்பு அங்கு படித்த நல்ல புத்தகங்களை பதிப்பகங்களின் மூலமாக விலைக்கு வாங்கி வைப்பதும் தொடர்ந்தது.

              திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புத்தகங்களை விரும்பிப்படிப்பவர். சால்வைக்குப் பதிலாக புத்தகங்கள் அளித்தால் அளவிட இயலா மகிழ்ச்சி அடைபவர். சில அரிய புத்தகங்களைப் படித்து முடித்தவுடன் அய்யா ஆசிரியர் அவர்கள் மதுரைக்கு வரும்போது கொடுப்பதற்கு என எடுத்துவைப்பதும், அவரைப்பார்க்கும்போது கொடுப்பதும் தொடர்கிறது. அம்மா மோகனா வீரமணி அவர்கள், 'நேரு, நீங்கள் கொடுக்கும் புத்தகங்களை நானும் விரும்பி படித்துவிடுகின்றேன் 'என்று சொல்லிப்பாராட்டியதும், வாழ்வியல் சிந்தனை தொகுப்புகளில் அய்யா ஆசிரியர் அவர்கள் நான் கொடுத்த புத்தகங்களைப் பதிந்ததும் மறக்க இயலா நினைவுகள் புத்தகங்களால்.

 திராவிடர் கழகச்செயல்தலைவர் அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் மிகப்பெரிய புத்தக விரும்பி. வீட்டில் மாடி முழுக்க ஆங்கில மற்றும் தமிழ் புத்தகங்களால் நிரப்பியிருப்பார். ஒரு எதிர்வினையாக 'படித்த பார்ப்பன நண்பரே ' என்னும் கவிதையை விடுதலைக்கு அனுப்ப, படித்து பாராட்டிய அவர் அந்தக் கவிதையை விடுதலை ஞாயிறு மலரில் வெளியிட்டார். தொடர்ந்து வெளிவந்த கவிதைகள் எனது முதல் தொகுப்பாக 'பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் ' என்னும் பெயரில் பெரியார் பன்னாட்டு மைய இயக்குநர் அய்யா சோம.இளங்கோவன் அவர்களால் மதுரையில் வெளியிடப்பட்டு வெளிவந்தது. 

  பழனி இயக்கத்தோழர் தமிழ் ஓவியா புத்தகங்களைப் பாதுகாப்பதற்காகக் கட்டியதுபோன்றே வீட்டைக் கட்டினார். புத்தகங்களை கண்ணாடிப்பெட்டகங்களுக்குள் அடுக்கினார். பட்டியலிட்டார். எவருக்குக் கொடுத்தாலும் எழுதி வைத்தார். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய புத்தகங்கள் இவரிடம் உறுதியாகக் கிடைக்கும் என்னும் வகையில் நூலகத்தை செழுமைப்படுத்தினார்.   மதுரையில்  எனது இயக்க தோழர் பா.சடகோபன் பல ஆண்டுகளாக நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்துவதையே தனது வாழ்க்கையாகக்கொண்டிருக்கின்றார். 'புத்தகத் தூதன் ' எனும் பெயரில் தெருத்தெருவாக நல்ல புத்தகங்களை இன்றும் விற்று பெருமை சேர்த்துக்கொண்டிருக்கின்றார். மறைந்த அண்ணன் வழக்கறிஞர் கி.மகேந்திரன் தேடித்தேடி படித்தவர்.ஓய்வு பெற்ற நீதிபதி பொ.நடராசன்,வழக்கறிஞர் கணேசன்,க.அழகர்,அழகுபாண்டி,மருத்துவர் அன்புமதி, சுப.முருகானந்தம், பெரி.காளியப்பன், அ.முருகானந்தம் எனப்புத்தக விரும்பிகள் பலரும் இயக்க தோழர்களாக இருக்கின்றனர். 

             மதுரையில் திரு.வெ.இறையன்பு அய்.ஏ.எஸ் அவர்கள் வந்தபின்பு, அவரின் அறிமுகம் பல புதிய வாசிப்புகளுக்கான தளத்தைக் கொடுத்தது.மதுரை ரீடர்ஸ் கிளப்பில் இணைந்த பின்பு பல வாசிப்பாளர்கள் நண்பர்கள் என்பது போய் பல எழுத்தாளர்களின் நட்பும் அறிமுகமும் கிடைத்தது.திருக்குறளைப் பரப்புவதும்,பகிர்வதுமே தனது வாழ்க்கையாகக் கொண்ட, திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பொறியாளர் திரு.க.சி.அகமுடை நம்பி அவர்களின் அறிமுகம் குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர் கீதா இளங்கோவன், முனைவர் சுந்தர ஆவுடையப்பன்,முனைவர் க.பசும்பொன், சிவில் சர்வீஸ் அதிகாரி திரு.பா.இளங்கோவன் எனப்பலர் அறிமுகமாயினர்.புத்தகங்களை வாசிப்பவர்கள் என்பதை விட உயிராய் நேசிப்பவர்கள் தொடர்பு இதனால் கிடைத்தது எனலாம்....எனது முனைவர் பட்டத்திற்கு நெறியாளராக இருந்த பேரா.முனைவர் கு.ஞானசம்பந்தனின் வீட்டு நூலகம் அரிய புத்தகங்கள் பல அடங்கியது.. வாசிப்பதைக் காதலிக்கும் அவரின் வாசிப்பிற்கு குருவாக அவர் காட்டுவது எழுத்தாளர் தொ.பரமசிவம் அவர்களை...

எழுத்து என்னும் இணையதளத்தில் கவிதைகளைப் பதிவிட ஆரம்பித்தேன். பல கவிதைகளுக்கு பின்னூட்டமே இல்லாமல் இருந்தது. ஆனால் 75 கவிதைகளுக்குப் பின்னால் முன்பின் என்னை அறியாத கவிஞர் பொள்ளாச்சி அபி எனது கவிதைகளைப் பற்றி எழுதிய விமர்சனமும் பாராட்டும் ஒரு புதிய நம்பிக்கையை அளித்தது. பின்னர் அனைவரையும் இணைக்கும் அற்புதமான மனிதர் தோழர் அகனின் முயற்சியால் 'சூரியக்கீற்றுகள் ' என்னும் பெயரில் எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பு வந்தது. பாண்டிச்சேரியில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் பிறந்த நாளில் வெளியிடப்பட்டது. 

          எனது தலைமை ஆசிரியராக இருந்த திரு.வீ.வீரிசெட்டி அவர்கள் நல்ல புத்தகங்களை நாடிப்படிப்பதில் அப்படி ஒரு விருப்பம் உடையவர். படித்த புத்தகங்களில் பிடித்தவற்றை எழுதி வைத்த டைரிகள் பல அவரின் வீட்டில் இருக்கின்றன. நான் விரும்பிப்படித்த புத்தகத்தை அவரிடம், அவர் விரும்பிப்படித்த புத்தகத்தை என்னிடமும் கொடுத்து கொடுத்து படித்துக்கொண்டிருக்கிறோம் சில ஆண்டுகளாய்...

            மதுரை பி.எஸ்.என்.எல். நண்பர்கள் வாசிப்போர் களம் என்னும் அமைப்பைத் தொடங்கினர். அண்ணன் சு.கருப்பையா, எழுத்தாளர் தோழர் சங்கையா, எழுத்தாளர் பாலகுமார் விஜயராமன், கவிஞர்  சமயவேல் எனப்பலரும் நெருக்கமாயினர். தினந்தோறும்  அலுவலகத்தில் பார்ப்பவர்தான் சமயவேல்  என்றாலும் கவிஞர் சமயவேல் என்பது வாசிப்போர் களத்தினால்தான் தெரிந்தது.நல்ல புத்தகங்களை மாதம்தோறும் அறிமுகப்படுத்துதல் என்பது மட்டுமே நோக்கமாகக்கொண்ட வாசிப்போர் களம் வாசிப்பை இன்னும் தீவிரப்படுத்தியது. 

            புத்தகம் பற்றிப்பேசுவது, புத்தகத்தை அறிமுகம் செய்வது போன்றவை எனக்கு மிகவும் பிடித்த செயல்கள். மதுரையில் 'காரல் மார்க்ஸ் நூலகம்' என்பதை தோழர் பிரபாகரன் நடத்திவந்தார். 'எனக்குரிய இடம் எங்கே ' என்னும் புத்தகம் பற்றிப்பேச வேண்டும். 45 நிமிடம் நான் அந்தப்புத்தகத்தைப் பற்றிப் பேசியபின்பு, இப்போது புத்தகத்தை விமர்சனம் செய்தவருக்கு ஒருவரை அறிமுகப்படுத்துகிறேன் என அந்தப்புத்தகத்தின் ஆசிரியர் பேரா.மாடசாமி அவர்களை அறிமுகப்படுத்தினார். அதற்கு முன்பு எனக்கு அவர் அறிமுகமில்லை.கூட்டத்தில் அவர் உட்கார்ந்திருப்பதும் எனக்குத் தெரியாது. பின்பு புத்தக விமர்சனம் பற்றி நெகிழ்ந்து பேரா.மாடசாமி  பேசினார்.வானொலியில் ஒலிபரப்பான பல புத்தக விமர்சனங்களை எனது கொள்கைக்கு நேர் எதிரான கொள்கை உடைய தோழர் ஒருவர் எப்போதும் கேட்டு பாராட்டுகின்றார், கருத்துக்கூறுகின்றார்.  

எனக்கு இணையாக எனது இணையர் நே.சொர்ணமும் வாசிக்கின்றார். அவரின் விருப்பம் இரமணிச்சந்திரன், லெட்சுமி, வாசந்தி என நிற்கின்றது. எனது மகன் சொ.நே.அன்புமணி விருப்பமாக எப்போதும் ஆங்கில மற்றும் தமிழப்புத்தகங்களை வாசிக்கின்றான். தனது உணர்வுகளைக் கவிதையாகப் பதிகின்றான். தமிழ் இலக்கியத்தை கல்லூரி இளங்கலைக்கு தேர்ந்தெடுத்திருக்கும் எனது மகள் எப்போதும் வாசிப்பில் ஆர்வம் காட்டுகின்றார். தொடர்ந்து எனது பிள்ளைகள் வாசிப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ' நான் கொடுக்கும் உண்மையான சொத்து உங்களுக்கு நான் சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களே ' என்று சொன்ன நேரத்தில் உறவினர் ஒருவர் அடித்த நக்கல் நினைவிற்கு வருகின்றது. ஆனால் மனதார அதுதான் உண்மையான சொத்தாக நினைக்கின்றேன். அதனை வாசித்து அனுபவிக்கும் உள்ளம் அவர்களுக்கு இருப்பது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது,

           எப்போதும் கையில் இருக்கும் பையில் சில புத்தகங்கள் இருக்கின்றது. புத்தகங்கள் விரும்பிகள் நண்பர்களாகவோ, இயக்க அல்லது தொழிற்சங்கத்தோழர்களாகவோ, அல்லது நான் பெரிதும் மதிக்கும் பெரியவர்களாகவோ இருக்கின்றார்கள். நல்ல புத்தகங்களைப் பகிர்தல் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. எனது வாழ்நாள் முழுவதும் நடைபெறும்..பேருந்துப்பயணம், சில இடங்களில் காத்திருப்பு எல்லாம் கையில் புத்தகம் இருக்கும்போது தித்திக்கத் தொடங்குவிடுகின்றது. பல புத்தகங்களை 15 நாட்களுக்கு ஒருமுறை மதுரை மைய நூலகத்தில் மாற்றச்செல்வதும், புதிது புதிதாகப் புத்தகங்களை இரவலாக வீட்டிற்கு கொண்டுவந்து படிப்பதும் தொடர்கிறது. புதிய புத்தகம் வாங்குவதற்கு எப்போதும் மாதச்சம்பளத்தில் ஒதுக்கீடு இருக்கிறது. நூலகத்தில் எப்போதும் எடுக்கும் 9 புத்தகங்களில் ஒன்று மட்டுமாவது கட்டாயம் கவிதைப் புத்தகமாக இருக்கும். முதல் சிறுகதைத்தொகுப்பு  புத்தகங்களை விரும்பி,விரும்பி படிக்கின்றேன்.முடிந்தால் விருப்பத்தோடு வலைத்தளத்தில் பகிர்கின்றேன். எழுத்தாளரைக் கூப்பிட்டு நாலு வார்த்தைகள் பாராட்டைச்சொல்கின்றேன். 

        எனது உரையில் எப்போதும் நான் படித்த சில புத்தகங்களை மேற்கோள் காட்டுகிறேன். கட்டுரைகள் சில புத்தகங்களின் அடிப்படையில் என்று சொல்கிறபோது கடகடவென எழுத்து ஓடுகின்றது.  மிகவும் விருப்பமாகப் படித்த புத்தகங்களை வலைப்பக்கத்தில் பகிர்ந்தால் என்ன என்ற கேள்வியால், எனது வலைத்தளத்தில் அண்மையில் படித்த புத்தகம் என்னும் தலைப்பில் பல புத்தகங்களைப் பற்றி எழுதியுள்ளேன். ஒரு பருந்துப்பார்வையாக படித்து எழுத்தாளர் எஸ்..வி.வேணுகோபாலன் எழுதிய பாராட்டு,தோழர் கவிஞர் ந.முத்துநிலவன், அண்ணன் சு.கருப்பையா போன்றவர்களின் பாராட்டு இன்னும் பல புத்தகங்களைப் பற்றி அண்மையில் படித்த புத்தகம் என்னும் தலைப்பில் எழுத உதவும்.பத்திரிக்கைகளில் வெளிவரும் புத்தக விமர்சனம் எப்போதும் என்னை ஈர்க்கிறது... புத்தகக் கடைகளும்தான்.....

                                     23.04.2017. 

Friday, April 21, 2017

சுயமரியாதைத்திருமண முறை-மதச்சார்பற்ற தன்மை..

 சுயமரியாதைத்திருமண முறை-மதச்சார்பற்ற தன்மை
                         (முனைவர் வா.நேரு, தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்)


உலகமெல்லாம் உள்ள பகுத்தறிவாளர்கள் சந்திக்கும் பிரச்சனை சடங்குகள் மறுப்பு ஆகும்.ஒவ்வொரு மதத்திற்கும் ஓராயிரம் சடங்குகளை வைத்திருக்கின்றார்கள். அந்தச்சடங்குகள் மூலமே தங்கள் மதத்தைச்சார்ந்தவர்கள் இவர்கள் என அடையாளம் காட்டுகின்றார்கள். காலமெல்லாம் 'கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை ' என முழங்கினாலும் மேலை நாடுகளில் நாத்திகர்களுக்கென தனிக்கல்லறைகள் இல்லை. ஆத்திகர்கள் அடக்கம் செய்யப்படும் கல்லறைப் பகுதிகளிலேயே நாத்திகர்களும் அடக்கம் செய்யப்படும் நிலை, ஆத்திகர்களுக்கு கடைசிச்சடங்குகள் செய்யும் மதவாதிகளே நாத்திகர்களுக்கும் செய்யும் நிலை. என்னதான் நாத்திகம் பேசி வாழ்ந்தாலும் கடைசியில் 'இறைவன் இருக்கும் இடத்தில் இவர் சேருவாராக ' என மதக் குருக்கள் நாத்திகர்களுக்கும் சொல்லும் நிலை மேலை நாடுகளில் நிலவுகிறது.அதேபோலவே வாழ்க்கைத்துணை நலம் ஏற்கும் நிகழ்வுகள். மணமக்கள் இருவரும் நாத்திகர்களாக இருந்தாலும் கூட நாத்திக முறைப்படி திருமணம் செய்ய முடிவதில்லை. நாத்திகர்கள் தலைமை தாங்கி நடத்திவைக்கும் திருமணங்கள் செல்லுவதில்லை ., நாத்திகர்கள் நாங்கள், எங்களுக்கு மதச்சடங்குகள் வேண்டாம் என ஒதுக்கினாலும் சட்டத்தின்படி அவை செல்லுபடியாகும் திருமணங்களாக இல்லாத நிலை இன்றைக்கு மேலை நாடுகளில் நிலவுகிறது.

 நீயும் ,நானும் இணைந்திருப்போம், சேர்ந்து வாழ்வோம், சேர்ந்து உறங்குவோம் என்பதற்கு எந்தவிதமான தடைகளும் சொல்லாத மேலை நாடுகள்,ஆணும் பெண்ணும் பழகுவதை ,சேர்வதை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாத மேலை நாடுகள் திருமண ஒப்பந்தம் என்று வரும்போது மட்டும் மதத்தின் அடிப்படையில்தான் இணைய வேண்டும் எனத்தடைகள் விதிக்கின்றன. மதக்குருக்கள் செய்து வைக்கும் திருமணங்கள் மட்டுமே செல்லும் என சட்டம் இயற்றி வைத்திருக்கின்றன.

அண்மையில் செண்டர் பார் என்கொயரி(Centre for Inquiry...) என்னும் அமெரிக்காவைச்சார்ந்த மதச்சார்பின்மை அமைப்பு வாழ்வின் முக்கியமான தருணங்களை தலைமை தாங்கி நடத்திவைத்திட பயிற்சி தருகின்றோம் என்று அறிவித்திருக்கிறது.அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல், பகுத்தறிவை பரப்புதல், எதையும் காரண காரியங்களோடு மட்டுமே ஏற்றுக்கொள்ளுதல்,மனித நேயத்தை வளர்த்தல் போன்றவற்றை அடிப்படைக்கொள்கையாகக் கொண்ட அந்த அமைப்பு புதுவிதமான ஒரு பயிற்சியை அறிவித்திருக்கிறது. பயிற்சி அளித்து, சான்றிதழ் தருகின்றோம், அவர்கள் மதமறுப்பாளர்களின் இல்ல நிகழ்வுகளை நடத்திவைக்கலாம், அது சட்டப்படியாக செல்லுபடியாகும் என்று அறிவித்திருக்கின்றது.திருமணம், பிள்ளைகளுக்கு பெயர் சூட்டுதல், இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கி நடத்திடஇந்த மதச்சார்பற்ற  பயிற்சி பெற்ற வல்லுநர்களைஅழைத்துக்கொள்ளலாம் என அறிவித்து அவர்களின் முகவரியை எல்லாம் இணையதளத்திலே அறிவித்திருக்கின்றார்கள்.. 

ஏன் இப்படிப்பட்ட ஒரு தேவை எனக் குறிப்பிட்டு அந்த அமைப்பினர் அவர்களின் இணையதளத்தில் செய்திகளை வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவில் இப்போது 20 சதவீதம்பேர் கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள். கடவுள் நம்பிக்கையற்றவர்களாக இருந்தாலும் வீட்டில் நடைபெறும் நல்லது கெட்டது அனைத்திற்கும் மதக்குருக்களைத்தான் அழைக்கவேண்டியிருக்கிறது.ஒரு நாத்திகவாதி தனது திருமணத்தில் தான் விரும்பிய மேற்கோள்களை சுட்டிக்காட்டி பேசவோ, அல்லது தனக்கு விருப்பமானவற்றை அச்சடித்து கொடுக்கவோ இப்போதிருக்கும் மத அமைப்புகள் அனுமதிப்பதில்லை.ஏதோ ஒரு மதகுருவை அழைத்து வந்து திருமணத்தை நடத்திக்கொள்கிறார்கள். 

மதகுருவுக்கு மணமக்களைப்பற்றியோ, மணமக்களின் பெற்றோர் பற்றியோ தெரியாது. மணமக்கள் தங்களுக்கு விருப்பமான ஒருவர் தங்களது திருமணத்தை நடத்திவைக்கவேண்டும் என்று விரும்பினால், அவ்வாறு நடத்திக்கொள்ள சட்டத்தில் இடமில்லை. இப்போது அப்படி ஒரு சட்ட வடிவை சில அமெரிக்க மாநிலங்கள் முன்வைத்திருக்கின்றன. பயிற்சி பெற்ற நாத்திகரும் , மணமக்கள் விரும்பினால் அவர்கள் விருப்பப்படி திருமணத்தை நடத்திவைக்கலாம் என்ற சட்டத்தை நாம் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். நமது வீட்டு நிகழ்வுகள் மதகுருக்கள் இல்லாமல் நடைபெற வேண்டும் அதற்காகவே இந்த ஏற்பாடு என மிக விளக்கமாக விவரித்துள்ளனர். 

இந்த இணையதளத்தின் செய்திகளைப் படித்துவிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதியுள்ள 'சுய மரியாதைத் திருமணம்-தத்துவமும் வரலாறும் ' என்னும் புத்தகத்தைப் படித்தேன். ஏற்கனவே படித்த நூல் என்றாலும் இந்த  இணையதளத்தின் செய்திகளைப் படித்தவுடன் தந்தை பெரியாரின் சுயமரியாதைத் திருமணத்தின் தத்துவத்தையும் வரலாற்றையும் படிக்கவேண்டும் எனத்தோன்றியது. மீண்டும் படித்து முடித்தபொழுது  வியப்படைந்தேன்.

 எவ்வளவு பெரிய தொலை நோக்காளர் தந்தை பெரியார் அவர்கள். ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்குமுன்னால் மதவாதிகளான பார்ப்பனர்கள் நடத்தி வைத்தால் மட்டுமே செல்லும் என்று சமூகம் இருந்த காலத்தில் , சுயமரியாதைத் திருமணத்தை நடத்திவைக்கத் துணிந்து, அன்றைக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்றாலும் ஆயிரக்கணக்கான தோழர்களும், தோழியர்களும் அத்திருமண முறையை ஏற்றுக்கொண்டதும், வாழ்வில் இணைந்து வாழ்ந்ததும் ,தந்தை பெரியாரின் தலைமை மாணாக்கன் பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ் நாட்டின் முதல்வரான உடனே சுயமரியாதைத் திருமணத்தை சட்டப்படி செல்லுபடியாகும் என்பதற்கான சட்டம் இயற்றியதையும் படித்தபொழுது உண்மையிலேயே பெரியாரின் தொண்டன் என்ற வகையில் உவகையும் உற்சாகமும் அடைந்தேன். இன்றைக்கு 2017-ல் மிக முன்னேறிய நாடென சொல்லிக்கொள்ளும் அமெரிக்காவினர் யோசிக்கும் செயலை, நடைமுறைப்படுத்திட பல்வகை உத்திகளைக் கைக்கொள்ளும்வேளையில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் தமிழ் நாட்டில் செயல்படுத்திட்ட தந்தை பெரியாரை எப்படிச்சொல்லி மகிழ்வது நாம்....

இன்றைக்கும்கூட சில திராவிட இல்லத்திருமணங்கள் ஆரியர்களால் நடத்திவைக்கப்படுகின்றன. நம்மை இழிவுபடுத்தும் அந்தத் திருமண மந்திரங்கள் அன்னிய மொழியில் கூறப்படுகின்றன. அவர்கள் கூறுவது என்னவென்று விளங்காமல்தான் நூற்றக்கணக்கான மக்கள் திருமண மண்டபங்களில் உட்கார்ந்திருக்கின்றார்கள். அதிலும் திடீர் பணக்காரரான சிலர் இரண்டு ஆரியர்களுக்குப்பதில் நாலு ஆரியப்பார்ப்பனர்களை அழைத்துக்கொள்கின்றனர் திருமணத்தை நடத்திவைக்க.அன்றைக்கு இந்த இழி நிலையைத்துடைத்திட எண்ணிய தந்தை பெரியார் எத்தனை ஆயிரம் சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைத்தார். அவரின் வழிவந்த திராவிடர்கழகத்தலைவர் அய்யா கி.வீரமணி அவர்கள் எத்தனை ஆயிரம் திருமணங்களை நடத்திவைத்துக்கொண்டு இருக்கின்றார். பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், டாக்டர் கலைஞர் என எத்தனை தலைவர்கள் தலைமையிலே எத்தனை ஆயிரம் சுயமரியாதைத்திருமணங்கள் தமிழகத்திலே நடைபெற்றன, இன்று நடந்து கொண்டிருக்கின்றன.

 இப்படிப்பட்ட திருமணங்களை நடத்திக்கொள்ளவேண்டும் என இளைஞர்களுக்கு வழிகாட்டியவர் தந்தை பெரியார், இப்படித்தான் இந்தத் திருமணங்களை நடத்தி வைக்க வேண்டும் எனத் திசைகாட்டி பயிற்சி அளித்து இந்த மண்ணை பண்படுத்தியவர் தந்தை பெரியார் அல்லவா?மேலை நாடுகளில் இன்று சிந்திக்கும் செயலை, ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் சிந்தித்தவர், செயல்படுத்தியவர் தந்தை பெரியார். அதற்கான காரணம் என்ன? தேவை என்ன என்பதனை அறிந்துகொள்ள இந்த 'சுயமரியாதைத் திருமணம்- தத்துவமும் வரலாறும் ' என்னும் நூலைப் படிக்கவேண்டும்.   

இந்த சுயமரியாதைத் திருமணம்-வரலாறும் தத்துவமும் என்னும் நூலை 'அன்புடன்' எனத் தலைப்பிட்டு தனது அன்புத்துணைவியார் அம்மையார் மோகனா அவர்களுக்கு என அர்ப்பணித்துள்ளார் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 'மிசா காரணமாக நான் சிறைப்பட்ட காலத்தில் ,வெளியிலிருந்து தனிக்குடும்பச்சிறையை அனுபவித்தும்,கலங்காது எப்போதும் எனது துன்பங்களையும்,துயரங்களையும், அவதூறுகளையும் தனதாக்கிக்கொண்டு, பொதுவாழ்க்கையில் நான் தடையின்றி ,நடைபோட எல்லாச்சுமைகளையும் ஏற்று 39 ஆண்டுகளாக இயக்கமே என் குடும்பம், உலகப்பகுத்தறிவுக் குடும்பமே எனது நெருக்க உறவுக்குடும்பம் என்பதைக் கருதி , நான் நாளும் உழைத்திட, எனக்குத் துணை புரிந்துவரும் எனது அன்புத்துணைவியார் மோகனா அவர்களுக்கு ' என ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.


 'சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லாது ' என அறிவிக்கப்படவும் பின்னர் சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் என நீதிபதிகள் அறிவிக்கவும்  காரணமாக இருந்த வழக்குக்கு உரிய குடும்பத்தினைச்சார்ந்தவர் என்ற வகையில் மட்டுமல்ல தங்கள் தந்தை, தாய் திருமணமே சுயமரியாதைத்திருமணம் செய்ததால் செல்லாது என்று சொல்லப்பட்ட நிலையில் ,தனது திருமணத்தையும் சுயமரியாதைத்திருமணமாக நடத்திக்கொண்டவர் என்றவகையிலும் அம்மையார்  மோகனாவீரமணி  அவர்கள் மிக முக்கியமானவர் இந்தப் புத்தகத்தைப்பொறுத்த அளவில்,சுயமரியாதைத் திருமண வரலாற்று நிகழ்வுகள் அடிப்படையில்.  

" இது(சுயமரியாதைத்திருமணம்) ஒரு தனித்தன்மையான திருமண முறை அல்லவா? 1992-ல் அகில உலக மனித நேயர்களின் மாநாடு நெதர்லாண்ட் நாட்டின் தலை நகரான ஆம்ஸ்டர்டாமில் 43 நாடுகளின் பேராளர்கள் கலந்துகொண்ட அனைத்துலக மாநாட்டில் சில மணித்துளிகள் நமது சுயமரியாதை இயக்கச்சாதனைகள் பற்றி எடுத்துக்கூறும் வாய்ப்புக்கிட்டியபோது ,தந்தை பெரியார் அவர்கள் செய்த இந்த அமைதிப்புரட்சி- சுயமரியாதைத் திருமணங்கள் எப்படிக்கருவாகி,உருவாகி,தவழ்ந்து, எதிர்ப்புக்களை எதிர்கொண்டு,இறுதியில் அவரது சீடர்களால் சட்டவடிவத்திற்கு ஆளாகி வளர்ந்தோங்கி நிற்கிறது என்பதை விளக்கியபோது ,வியந்து பாராட்டி எழுந்து நின்று கரவொலி(Standing Ovation) தந்து மகிழ்ந்தனர் " என ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 'நூலைப் படிக்கும்முன் ' பகுதியில் குறிப்பிடுகின்றார். 

இந்த சுயமரியாதைத்திருமண முறை கருவாக மனதில் தந்தை பெரியார் மனதில் உருவானதற்குக் காரணம் என்ன என்பதனை 'சுயமரியாதைத் திருமணம் ' புத்தகம் விவரிக்கிறது, 'பெண்ணடிமை நாட்டும் புனிதக்கட்டு' என்னும் தலைப்பில் மிக விரிவாக. தமிழகத்தில் எப்படி இந்த சுயமரியாதைத் திருமண முறை உருவானது என்பதனை சுயமரியாதைத் திருமணத்தத்துவம் என்னும் இரண்டாம் அத்தியாயம் விவரித்துச்சொல்கிறது. 'இனமானமும் பெண்மானமும் ' என்னும் தலைப்பில் எப்படி இந்தத் திருமணமுறை தவழ்ந்தது என்பதனையும், எதிர்ப்புக்களை எப்படியெல்லாம் எதிர்கொண்டது இந்தத் தத்துவம்  என்பதனை 'சுயமரியாதைத்திருமணம் சட்டப்படி செல்லாது ' என நீதிமன்றம் அறிவித்ததையும், செல்லுபடியாக்க என்னென்ன முயற்சிகள் நடந்தது , பின் பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி ஏற்றதும் முன் தேதியிட்டு இந்தத் தத்துவம் எப்படி வெற்றிபெற்றது என்பதனை எல்லாம் ஆசிரியர் படிப்படியாக சொல்லிச்செல்கின்றார்

.மலேசிய நாட்டில் தந்தை பெரியார் அவர்கள் வருகையும், கொள்கை பரப்பும் எப்படி அயல்நாட்டில் 'சுயமரியாதைத் திருமணமும்' அந்த நாட்டின் சட்டப்படி திராவிடர் கழகமும் நடைபெறுகிறது என்பதனை விவரிக்கின்றார்.'தமிழ்த்திருமணம் தமிழர் திருமணம் ஆகுமா?' என்னும் கேள்வியை எழுப்பி  சுயமரியாதைத் திருமணத்தின் சிறப்புகளை ஆசிரியர் அவர்கள் பட்டியலிடுகின்றார்

செண்டர் பார் என்கொயரி இணையதளம் சில புத்தகங்களை, கையேடுகளை மனித நேயத்திருமணங்களை நடத்திட விரும்புகிறவர்களுக்கு பரிந்துரைத்திருக்கின்றார்கள். 'Sharing the future' by Jane Wynes Willson, 'Naming Ceremonies ' , A 'A humanist Divorce Ceremony ' 'Funerals Without God ' போண்ற வெளியீடுகளை வெளியிட்டு இருக்கின்றார்கள். வாழ்க்கைத்துணையை ஏற்றுக்கொள்வது, குழந்தைக்கு பெயர் வைப்பது, கடவுள் கருத்து இல்லாமல் இறுதி  ஊர்வலம், மனித நேய விவாகரத்து விழா எனப் பலதலைப்புகளில் வெளியீடுகளையும் கட்டுரைகளையும் கொடுத்திருக்கின்றார்கள்.மதம் வேண்டாம் என நினைப்பவர்கள் இதனைப் பின்பற்றுங்கள் எனக்குறிப்பிடுகின்றார்கள்.


சுயமரியாதைத் திருமணம் புத்தகம் பின்னினைப்பாக ,
பழந்தமிழர் திருமண முறை ஆரியர்களை அழைக்காமல், இழிவு இல்லாமல் நடத்தப்பட்ட வரலாறு கூறப்படுகின்றது.அதற்கு ஆதாரமாக இருக்கும் தமிழ்ப்பெரியோர்கள் கருத்துக்கள்,சுயமரியாதைத் திருமணம் எப்படி நடைபெற வேண்டும் என்பதனை புரட்சிக்கவிஞர் எப்படிச்சொல்கின்றார் என்பதனை விளக்கும் புரட்சிக்கவிஞரின் 'புரட்சித்திருமணத் திட்டம்', சுயமரியாதைத் திருமணங்கள் பற்றிய கருத்துக்கோவை(சட்ட வல்லுநர்களின் கருத்துக்கள்),சுயமரியாதைத்திருமணங்கள் பற்றி அறிஞர்தம் கருத்துக்கள் பின்னர் ஆரியர் வகுத்த திருமண முறைகள், ஆரியப்பண்பாடு பற்றி அறிஞர்தம் கருத்துக்கள்,சுயமரியாதைத்திருமண ஒப்பந்த உறுதிமொழிப்படிவம்,பேரறிஞர் அண்ணாவால் இயற்றப்பட்ட சுயமரியாதைத்திருமணச்சட்டம்,சட்டப்படி செல்லுபடியாகும் எனும் தீர்ப்பு,1929-ல் தந்தை பெரியார் அவர்களால் நடத்தப்பட்ட முதல் சுயமரியாதைத்திருமணம் பற்றிய விவரிப்பு, முதல் சுயமரியாதைத்திருமணத் தம்பதிகளின் பேட்டி,சுயமரியாதை மணமக்களுக்கு தந்தை பெரியாரின் அறிவுரை, புரட்சிக்கவிஞரின் 'சுயமரியாதை எக்காளம்' என்னும் கவிதை, சுயமரியாதைத் திருமணம் பற்றி 'சோ'வின் கேள்விகளுக்கு வீரமணி பதில்,பின்னர் சுயமரியாதைத்திருமணம் வரலாற்றில் நிற்கும் புகைப்படங்கள் என அந்தப் புத்தகம் விரிகின்றது.

சுயமரியாதைத் திருமணத்தால் 'வீட்டுக்கு மட்டுமல்ல! நாட்டுக்கும் ஏற்பட்ட பலன் ' எனப் பக்கம் 120-ல் குறிப்பிடப்பட்டு
1) மற்ற பெரும்பாலான திருமணங்கள் மதமுறைகளைச்சார்ந்தவைகளாக உள்ள நிலையில் சுயமரியாதைத்திருமண முறை-மதச்சார்பற்ற தன்மை(Secularising the Marriage System)யை புகுத்தியதாக அமைந்துள்ளது மூலம் எல்லோருக்கும் பொதுவாக உள்ளது. ...6) சாதியின் அடித்தளம் அதிரும் நிலை ! மற்ற மதச்சடங்குகளை அந்தந்த மதவாதிகள்தான் நடத்திட முடியும். சுயமரியாதைத்திருமணத்திற்கு எம்மதத்தவர்,எம்மதமும் சாராதவர்-எவராயினும் தலைமை ஏற்கலாம்-....

தந்தை பெரியாரின் 'மண்டைச்சுரப்பை உலகு தொழும் 'என்றார் புரட்சிக்கவிஞர். அந்த மண்டைச்சுரப்பில் எழுந்த மதவாதிகள் அற்ற வாழ்க்கைத்துணை நல ஒப்பந்தத்தினை,குழந்தைகள் பெயர் சூட்டலை, மதவாதிகளை மறுத்த இறுதி நிகழ்வுகளை- இன்றைக்கு  நடத்துவதற்கு பயிற்சி அளிக்கிறோம் என்னும் மேற்கத்திய நாடுகளின் பகுத்தறிவு அமைப்புக்களின் அறிவிப்புக்களை ஒப்பிட்டு நோக்கும்போது ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இதனை எண்ணியவர், கருத்தாக உருவாக்கியவர், ஆயிரக்கணக்கான விழா நடத்துநர்களை-தலைவர்களை தனது இயக்கத்தின் மூலமாக உருவாக்கியவர் தந்தை பெரியார் என்பதனை உணர்கின்றபோது மகிழ்கின்றோம்.'மண்டைச்சுரப்பை உலகு தொழும் ' நிலை கண்டு பெருமிதம் கொள்கின்றோம். 
உதவிய இணையதளம் : 

நன்றி : விடுதலை 21.04.2017


Saturday, April 15, 2017

அண்மையில் படித்த புத்தகம் : ஆரியக்கூத்து -அ.மார்க்ஸ்.

அண்மையில் படித்த புத்தகம் : ஆரியக்கூத்து -அ.மார்க்ஸ்
வெளியீடு                   : எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, 116 பக்கம்,ரூ 70


                                 ஆரியக்கூத்து

                             முனைவர் வா.நேரு,
                            தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்

பகுத்தறிவாளர் கழகத்தோழர்களைப் பொறுத்த அளவில் நல்ல புத்தகங்களைப் படிப்பதும், படித்ததை பகிர்வதும் வழக்க மாக மதுரையில் இருக்கிறது. பகுத்தறி வாளர் கழகப்புரவலர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களைப் பார்க்கும் நேரங்களில் அவரின் கையில் நல்ல நூல்களைக் கொடுத்தால் அவரளவிற்கு மகிழ்பவர் யாருமில்லை. புத்தகங்களை வாசிப்பதையும் புத்தகங்களை நேசிப்ப தையும் தனது வாழ்வியலாகக்கொண்ட ஆசிரியர் கி.வீரமணி அவர்களைத் தலைவராக ஏற்றுக்கொண்ட தொண்டர் களுக்கு புத்தக வாசிப்பு என்பது மிகப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுப்பதோடு உண்மையை மேலும் மேலும் தெரிந்து கொள்வதற்கு உதவுவதாகும். அண்மையில் மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச்செயலாளர் அண்ணன் பெரி.காளி யப்பன் அவர்கள் 'ஆரியக்கூத்து' என்னும் நூலைக் கையில் கொடுத்தார். ஏறத்தாழ 8 ஆண்டுகளுக்குமுன் 2009இல் அ.மார்க்ஸ் அவர்கள் எழுதிய புத்தகம். எதிர் வெளி யீடு வெளியிட்டிருக்கும் இந்த நூல் இன் றைய காலகட்டத்திற்கு மிகவும் பொருத்த மாக இருக்கிறது.

‘அந்தணர் வரலாறு எனும் ஆரியக் கூத்து -ஆரிய மொழியினரின் புலப் பெயர்வு குறித்த சமகால விவாதங்கள் பற்றிய ஆய்வு' என்னும் இந்த நூல் நமது தோழர்கள் படிக்கவேண்டிய நூல். மக்கள் மத்தியில் கொண்டுசெல்லப்படவேண்டிய நூல். ஆரியர்கள் பூர்வகுடிமக்கள் என் பதை நிலை நாட்ட இந்துத்துவம் செய்யும் மோசடிகள் அவர்களின் அரசியல் எதிர் காலத்தை நிலை நிறுத்த உதவும் என்பது அவர்களின் எண்ணம். இதற்காகவே கழுதையை குதிரையாக்குதல் போன்ற எல்லாவித புனைவுகளிலும் சிறிதும் வெட்கமின்றி இறங்கியுள்ளனர்... எல்லா வித பெருங்கதையாடல்களையும் வர லாற்றுத் திரிபுகளையும் தோலுரிக்கும் தோழர் அ.மார்க்சுடன் இணைந்து இந்நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றோம் ' எனப் பதிப்புரையில் எதிர் வெளியீடு  குறிப்பிட்டுள்ளனர்.

'வரலாற்றாய்வு என்ற பெயரில் இந் துத்துவ பாசிசக் கருத்தியலுக்கு வலு சேர்க்கும் ஆபத்தான முயற்சிகளைக் கண்டு மனம் பதைத்து மிக்க பொறுப்புடன் இந்த மோசடிகளைத் தோலுரித்த ஹார் வர்ட் பல்கலைக்கழக  சமஸ்கிருத பேரா சிரியர் மிஷேல் விட்ஸலுக்கும் இந்திய வியல் அறிஞர் ஸ்டீவ்ஃபார்மருக் கும்' இந்த நூல் காணிக்கை எனச் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

மதுரை அருகில் உள்ள கீழடியில் தொல்லியல் சார்பாக நடந்த ஆராய்ச்சி யில் மிகப்பழைமையான தொல்பொருட் கள் கிடைத்ததையும் ,அது தொடராமல் இன்றைக்கு உள்ள ஆட்சியாளர்கள் கிடப்பில் போட்டுள்ளதையும் கண்டித்து திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உள்ளிட்டோர் அறிக்கை விடுத்ததையும், திராவிடர் கழகத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியதையும் நாம் அறிவோம். தொல்பொருள் ஆராய்ச்சி என்றாலே நமது எதிரிகள் பதறுகிறார்கள்.

முன்னுரையில் ‘சிந்துவெளி அகழ்வு களின் அடிப்படையில் இந்திய வரலாறு குறித்த பல புதிய உண்மைகள் 1932-1933 வாக்கில் மேலுக்கு வந்தன. அதுகாறும் மிகவும் தொன்மையானது எனக் கருதப் பட்ட வேதப்பண்பாட்டிற்குச் சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னதாகவே இங்கொரு வளர்ச்சியடைந்த நகரப் பண்பாடு சிறந்து விளங்கியது என்பது பலருக்கு அதிர்ச்சியளித்தது.... கால்டுவெல் லின் திராவிட மொழிக்குடும்பம் குறித்த கருத்துடன் சிந்துவெளி அகழ்வுகள் குறித்த கண்டுபிடிப்புகள் இணைந்து இங்கொரு திராவிடக்கருத்தியல் உருவாவதற்கும் வழிவகுத்தன. இந்நிலையில்தான் அன்று உருப்பெற்று வந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தின் குருஜி கோல்வல்கர் நமக்கான வர லாற்றை நாமே எழுதிக்கொள்ள வேண்டும்  என்றார் (1939) .அன்று முதல் வரலாற்றுத் திரிபு இந்துத்துவப் பரிவாரங்களின் பிரதான ஆயுதங்களில் ஒன்றாக விளங்குகிறது' என முன்னுரையில் நூலாசிரியர் ஆரியர்களின் வரலாற்றுத் திரிபின் நோக்கத்தை மிகச் சரியாகவே குறிப்பிடுகின்றார்.

இந்த நூலின் முதல்பகுதி ஆரிய விவாதமும் பார்ப்பனப்புரட்டும் என்னும் தலைப்பில் விவாதிக்கிறது. ‘தமிழக அந்த ணர் வரலாறு' என்னும் நூல் திறந்தவுடன் இரண்டு சங்கராச்சாரிகளின் படத்தோடு இருப்பதைச் சுட்டிக்காட்டும் நூலின் ஆசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள் இந்த நூல் வெளியிடப்பட்டதன் நோக்கத்தையும் அவாளின் அதீத ஒற்றுமையையும் விரி வாகவே விளக்குகின்றார். அந்தப் புத்தகத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் 'நான் ஒரு பிராமணன் 'என்னும் தலைப்பில் எழுதி யுள்ள கட்டுரையில் ‘தங்களுடைய தாழ்வு மனப்பான்மையையும், உழைப்பின்மை யையும் சரி செய்து கொள்ள முடியாத வர்களின் அவலமான குற்றச்சாட்டுதான் பிராமணர்களின் ஆதிக்கம் என்ற புலம்பல். பிராமண எதிர்ப்பில் முக்கிய பங்கு வகிப்பவை கலைஞர் திரு.கருணாநிதி ஏற்று நடத்தும் தி.மு.க.வும் திரு.வீரமணி அவர்கள் தலைமையில் நடக்கும் திராவிடர் கழகமும்தான்... இந்தியாவில் பொதுவான சிவில்சட்டமும் பொருளா தாரா ரீதியான நலிந்தவர்களைப் பின் தங்கியவர்களாக அறிவிக்கும் சட்டமும் வரும்வரை தொடர்ந்து போராடுவோம். இந்தக்கொள்கை உடையவர்களை முழு மனதாக ஆதரிப்போம்' என்று எழுதியிருப் பதை சுட்டிக்காட்டுகிறார். இன்று மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் திட்டங்களாக மேலே ஆரியர்கள் குறிப்பிட்ட திட்டங்களே இருப்பதைக் காணலாம். எப்படியெல்லாம் வரலாறு இல்லாதவற்றை வரலாறு ஆக்குவதற்காக பொய் ஆதாரங்களை உருவாக்குகிறார்கள் என்பது பக்கம் 15 முதல் 22 வரை விளக்கப் படுகின்றது.

ஆரியப்பிரச்சினை என்ற தலைப்பில் ‘இந்தோ-அய்ரோப்பிய மொழிக்குடும்பம்', ‘திராவிட மொழிக்குடும்பம்', ‘சிந்து வெளி நாகரிகம்' என்னும் பிரிவுகளை விவரிக் கிறது. ஆரிய திராவிட வேறுபாடு மொழி யியல் அடிப்படையில் எப்படி நிறுவப் படுகிறது எனக்குறிப்பிடுகின்றார். பின் எனினும் ஆரிய/திராவிட வேறுபாடுகளை மொழியியல் அடிப்படையில் மறுக்கிறவர் களும் சென்ற நூற்றாண்டு தொடங்கி இங்கே செயல்பட்டு வந்துள்ளனர். ஆரியர்கள் வெளி நாட்டிலிருந்து வந்த வர்களல்லர். அவர்களின் தாயகம் இந்தியாவே. இங்கிருந்தே அவர்கள் பிற மேலை நாடுகளுக்குச் சென்றிருக்க வேண்டும் என்பது இவர்களின் கருத்து. இக்கருத்தை முன்வைப்போரில் தொண் ணூற்றொன்பது சதத்தினர் இந்துத்துவாதி களே' எனக்குறிப்பிட்டு இந்துத்துவா வாதிகளின் திரிபுகளை தோலுரிக்கின்றார். தொடர்ந்து 'இந்துத்துவ வெறியுடன் எழுதுகிற டி.என்.ராமச்சந்திரன் போன்ற பார்ப்பனர்கள் மாக்ஸ்முல்லரைத் திட்டித் தீர்ப்பது வழக்கம் ' எனக் குறிப்பிட்டு ஏன் திட்டுகிறார்கள் என்பதனை விவரிக் கின்றார்.

ஆரியர்களின் வருகை ஒட்டுமொத்த மாக படையெடுப்பு என்ற வகையில் இல்லை, ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ஆடு, மாடு மேய்ப்பதற்காக கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியா விற்குள் நுழைந்தனர், இங்கு இருந்த மற்றவர்களோடு (தசர்) அவர்கள் மோதி யும், சமரசம் செய்தும் எப்படி எல்லாம் கலந்தனர் என்பதனை ஆய்வுகளின் அடிப்படையில் விவரிக்கின்றார்.ரிக் வேத கலாச்சாரமும் சிந்துவெளி நாகரிகமும் எப்படி வேறுபட்டவை, சிந்து வெளி நாகரிகம் காலத்தோடு முந்தியது என்ப தனை எப்படியெல்லாம் அழிக்கப்பார்க் கின்றார்கள் என்பதனைக் குறிக்கின்றார். இன அடிப்படையில் இந்திய வரலாறு என்ற கருத்துக்கு எதிராக அண்ணல் அம்பேத்கர் எடுத்துவைத்த வாதத்தை எப்படி வசதியாக ஆரியர்கள் தங்கள் பொய் வரலாறுகளை எழுதுவதற்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை யும், ஜாதியின் தோற்றம், அகமண முறை, சதிமுறையை உருவாக்கியது பார்ப்பனர் களே என்னும் அண்ணல் அம்பேத்கரின் கருத்துக்களை எல்லாம் மறைத்துவிட்டு தங்களுக்கு வசதியான ஒரு சில கருத்துக் களை மட்டும் எடுத்துக்கொண்டு ஆரியர் கள் திரிபுவாதம் செய்வதை எடுத்துரைக் கின்றார்.

இந்த நூலின் இரண்டாம் பகுதி ‘கழுதை யைக் குதிரையாக்கிய மோசடி ' என்னும் தலைப்பில் கருத்துக்களை விவரிக்கின்றது. "அயோக்கியர்களின் கடைசிப்புகலிடம் தேசபக்தி " என்கிற சாமுவேல் ஜான்சனின் கருத்தை அடிக்கடி மேற்கோள் காட்டுவார் பெரியார் ஈ.வெ.ரா. "அயோக்கியர்களின் கடைசிப்புகலிடம் அரசியல் " என்றொரு கருத்தை இங்கு பலரும் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள்.இந்துத்துவ அரசியலை முன்வைக்கும் மேல்ஜாதி அறிவுஜீவிகள் செய்து வரும் வரலாற்று மோசடியைப் பார்க்கும்போது "அயோக்கியர்களின் கடைசிப்புகலிடம் வரலாறு" எனச் சொல்லத்தோன்றுகிறது..... கீழேயுள்ள செய்திகளைப் படிக்கும்போது இதைவிட வும் இவர்களின் மோசடியை சித்தரிப்ப தற்கு வேறு வார்த்தைகள் இல்லை என்பதை உணர்வீர்கள்.சிந்துவெளி நாகரிகம் குறித்த வரலாற்று மோசடியில் இந்துத்துவாதிகளின் நோக்கம் என்ன என்பதுபற்றி முதல்பகுதியில் பார்த்தோம்." ஆரியர்கள் வந்தேறிகளல்லர். வேதகாலத் திற்கு முந்தைய வளர்ச்சியடைந்த உள்ளூர் நாகரிகங்கள் என ஏதும் இருந்திருக்க முடியாது. இதுவரை வரலாற்றாசிரியர் களால் வேதகாலத்திற்கு பல நூற்றாண் டுகள் முந்தியதாகவும் அத்துடன் எந்தத் தொடர்ச்சியும் இல்லை எனவும் நிறுவப்பட்டு வந்த சிந்து சமவெளி நாகரிகம் என்பது உண்மையில் ரிக் வேதகால நாகரிகமே" என நிறுவுவதே அவர்களின் நோக்கம். ஆனால் வர லாற்றாசிரியர்கள் இவர்களின் கருத்துக்கு எதிரான வலுவான ஆதாரங்களையும் நிரூபணங்களையும் முன்வைத்திருந்த நிலையில் இந்த முடிவுகளை முறியடிக்க வேண்டுமானால் சில புதிய கண்டுபிடிப் புகளைச்செய்தாக வேண்டிய அவசியம் இந்நூல் ஆய்வாளர்களுக்கு ஏற்பட்டது" என்று குறிப்பிடும் அ.மார்க்ஸ் இதற்காக எப்படி ஒரு பொறியாளர் திடீரென வரலாற்று ஆசிரியராக ஆக்கப்பட்டார் என்பதனைக் குறிப்பிட்டு .சிந்துவெளி முத்திரைகளை தாங்களே ஆய்ந்து அறிந் ததாக வெளியிட்டு செய்த மோசடிகளை விவரிக்கின்றார்.

கணிப்பொறியாளரான ராஜாராம் தனது 'கிராபிக்ஸ்' திறமையைப் பயன்படுத்தி திரைப்பட இயக்குநர் ஸ்பீல்பெர்க் ரேஞ் சில் சிந்துவெளி முத்திரைகளில் அடிக்கடி காணப்படும் புராணிகமான ஒற்றைக் கொம்பனைக் (ஹிழிமிசிளிஸிவி) குதிரையாக மாற்றியிருந்தது அறிஞர்களால் நிறுவப் பட்டது... நிறைய ஆய்வுப்படங்களையும் வேறுபாடுகளையும் சுட்டிக்காட்டும் அ.மார்க்ஸ் 'ராஜாராமனின் மோசடியை வெளிப்படுத்திய அறிஞர்கள் இத்தோடு நிற்கவில்லை. ராஜாராமனின் படத்தை குதிரை என ஏற்றுக்கொண்ட யாரேனும் ஒரு சிந்துவெளி ஆய்வாளரையாவது ஒருவர் காட்டினால் அவருக்கு ஆயிரம் டாலர் பரிசளிக்கப்படும் என்றொரு அறிவிப்பையும் செய்தனர். யாரும் இப்பரிசைப் பெற முயற்சிக்கவில்லை" எனப் பக்கம் 95இல் நூல் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.சிந்து வெளி நாகரிக அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட முத்திரைகளின் உள்ளடக்கத்தை மாற்று வதற்காக செய்யப்பட்ட வாசிப்பு மோசடிகளை அடுத்த பக்கங்களில் விவரிக்கின்றார்.

ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதற்காகவே இல்லாத சரஸ்வதி நதியை இருப்பதாகக் காட்டுவதற்காக ஆய்வாளர்கள் என்னும் பெயரில் ஆரியர்கள் செய்யும் தகிடுதத்தங்களை இந்த நூலின் ஆசிரியர் பக்கம் 106-107-களில் விவரிக்கின்றார். இன்று மத்தியில் இருக்கும் அரசு சரஸ்வதி நதி என்னும் பெயரில் பலகோடி ரூபாய்களை ஆராய்ச்சி செய்கிறோம் என்னும் பெயரில் செலவழிப்பதை நாம் அறிவோம். இல்லாததை இருப்பதாகக் காட்டுவதற்காக மக்களின் வரிப்பணம் எப்படிச் செலவாகிறது என்பதனை நாம் உணர் வதற்கு இந்த நூல் உதவும்.

நூலின் பிற்பகுதியில் தன்னுடைய கருத்துக்கள் அத்தனைக்கும் ஆதாரமான நூல்களையும், பத்திரிக்கைச் செய்தி களையும், இணையதளங்களையும் தோழர் அ,மார்க்ஸ் குறிப்பிட்டிருக்கின்றார். மத்தியில் இருக்கும் பாரதிய ஜனதா அரசு ஏன் வரலாற்று திரிபுகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்பதையும், ஆரியர்கள் எப்படியெல் லாம் இந்த நாட்டின் பூர்வகுடி மக்களாக தங்களை ஆக்கிக்கொள்வதற்காக புளுகு கின்றார்கள் என்பதையும் மிகத் தெளிவாக விளக்கும் நூல் இந்த 'ஆரியக்கூத்து ' என்னும் நூல் எனலாம்

நமது பரம்பரை எதிரிகள் பொய்களை உண்மைகளாக்க ஊடகங்களையும், செய்தித்தாள்களையும் பயன்படுத்து கிறார்கள் என்பதையும் வரலாறு எனும் பெயரில் நடைபெறும் ஆரியக்கூத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். ‘திராவிட' என்னும் சொல்லைக் கேட்டாலே ஏன் ஆரியர்கள் பதறு கிறார்கள், ‘திராவிட' என்ற சொல்லிற்கு எதிராக ஏன் 'தமிழ்' என்று பயன்படுத் துங்கள் என்று சொல்கின்றார்கள் என் பதையெல்லாம் நுட்பமாக அறிந்து கொள்ளவும், பரப்புரை செய்யவும் பரந்துபட்ட நூல்களின் அறிமுகம் தேவைப்படுகின்றது. பகுத்தறிவாளர் கழக கருத்தரங்குகளில், பெரியார் பேசுகிறார், விடுதலை வாசகர் வட்டம் போன்ற நமது நிகழ்வுகளில் ஒரு 15 நிமிடமாவது ஒரு நூலைப்பற்றிய அறிமுகம் என்பது நமது தோழர்களுக்கு மிகவும் பயன்படக் கூடியதாக அமையும். ஆரியக்கூத்தினை பொதுமக்கள் எளிதாகப்புரிந்து கொள்ளவும் உதவும்.
நன்றி : விடுதலை ஞாயிறு மலர் 15.04.2017                  

Monday, April 10, 2017

நமது ஊர்கள் இல்லை.....

                   

இழந்து போன
காலங்களை
நினைவில்
நிறுத்துவதாகவே
சந்திப்புகள் பலவும்....

ஆண்டுகள் பல
ஆனபின்பு
பாடித்திரிந்த
பறவைகளை
ஒன்று சேர்த்த
வழக்கறிஞர் அண்ணன்
சொன்னார்.....

பழகிக் கழித்த
நண்பர்களை
முப்பது ஆண்டுகளுக்குப்
பின்பு சந்தித்ததை.....
சந்தித்த வேளையில்
நிரம்பி வழிந்த
நினைவுகளை
சுமந்தபடி
சில நாட்கள்
அலைந்த கதை சொன்னார்....

காட்டில் அலைந்ததை
கையொடிந்து விழுந்ததை
வெடிச்சிரிப்பு சிரித்ததை
சண்டையிட்டதை
சமரசமானதை
சொல்லிச்சொல்லிச்
சிரித்த அவர்
கடைசியில் உறவுகளால்
நிகழ்ந்த
சோகக்கதைகளையும்
சொல்லி சோகமானார்

ஊரை முழுவதும்
உள்ளத்தில் தேட்கிவைத்து
ஊர்ப்பக்கமே வராமல்
இருக்கும் அவரின்
சந்திப்பைச்சொன்னேன்.....

உண்மைதாண்டா தம்பி..
நாம் வளர்ந்த சூழல் இல்லை
அதனை வளர்க்கும்
நிலைமையில்
நமது ஊர்கள் இல்லை

ஆற்றாமைகளை
அள்ளிக்கொட்டியபிறகு
ஆற அமரச்சொன்னார்...
அவர்களோடு
ஒத்துப்போக இயலவில்லை
ஒதுங்கிப்போனால்
அப்படியே ஓடிவிடும்
வாழ்க்கை......
விலகி நிற்கவில்லை நான்
வேறுபாடு தெரிகிறது
இருந்தபோதினும்
அவர்களோடு தொடர்ந்துதான்
போய்க்கொண்டிருக்கிறேன்

நிரம்பி வழியும்
பழைய நினைவுகளோடு
மது அருந்தியவன்
தனை மறப்பதுபோல
சுற்றி இருப்போர்
இன்று செய்யும்
அல்லல்களை நினையாமல்
அற்றைத் திங்கள்
நினைவுகளோடு
கூட்டத்தோடு கூட்டமாய்
நான் போய்க்கொண்டிருக்கிறேன்
என்றார்....

                              வா.நேரு ......10.04.2017

Monday, March 27, 2017

முதல்வர் டாக்டர் இரா. கனகசபாபதி அவர்களைப் பற்றிய புத்தக வெளியீடு
ஆண்டுகள் பல ஆனாலும் சில நினைவுகள் மறப்பதில்லை. ஆயிரமாயிரம் மனிதர்களைப் பார்த்தாலும் , அவரைப் போல உண்டா என நம்மை நாமே கேட்டுக்கொள்ளும் மனிதர்கள் சிலர்தான் வாழ்க்கையில் அமைகின்றார்கள். அப்படி ஒரு நிகழ்வாக திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் எங்கள் முன்னாள் முதல்வர் டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களைப் பற்றிய புத்தக வெளியீடு நேற்று(26.03.2017) மதுரை காந்தி மியூசியத்தில்  நடைபெற்றது.


பசுமை நிறைந்த நினைவுகளாய், வாழ்வின் உயரத்தில் இருக்கும் பலர், இந்த உயர்வுக்கு காரணம் இந்தப்புத்தகத்தில் வாழ்க்கை வரலாறாக இருக்கும் இவர்தான் என அவரைப்பற்றி நினைவு கூர்ந்தது நிகழ்ந்தது.நிகழ்வின் தொடக்கத்தில் திரு தேவதாஸ் காந்தி அவர்களும் , அகில இந்திய வானொலி மதுரை மீனாட்சி அவர்களும் சர்வசமயப்பாடல்களைப் பாடினர்.

வரவேற்புரையாற்றிய பேரா.டாக்டர் சு. ஆண்டியப்பன் தனது வாழ்க்கை நினைவுகளோடு ஆரம்பித்து , தான் வாழ்வில் இந்த நிலைக்கு வந்ததற்குக் காரணம் முதல்வர் கனகசபாபதி அவர்கள்தான் ,அவரின் வழிகாட்டுதல்தான் என்பதனைக் குறிப்பிட்டு வந்திருக்கும் சிறப்பு அழைப்பாளர்களின் சிறப்புக்களை தனித்தனியாகக் குறிப்பிட்டு  அனைவரையும் வரவேற்றார். 

நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் மா.பா.குருசாமி அவர்கள் 'தனித்துவ மிக்க காந்திய முதல்வர் டாக்டர் இரா. கனகசபாபதி ' என்னும் இந்த நூலினை எழுதியுள்ளார். அறிமுக உரையாற்றிய முன்னாள் முதல்வர், டாக்டர் மா.பா.குருசாமி அவர்கள் ,தானுமொரு முன்னாள் முதல்வர் என்றாலும் , திருச்செந்தூரி கல்லூரி மாணவர்கள் முதல்வர் என்று சொன்னால் அது திரு.இரா.கனகசபாபதி அவர்களைத்தான் குறிக்கும் என்றார். நான் 150 நூல்கள் எழுதியிருக்கிறேன் ஆனால் எனக்கு மிகப்பெரிய நிறைவைத்தருவது 151-வது நூலான இந்த நூல்தான் என்றார். டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களைப்பற்றிய பல்வேறு நினைவுகளை மிக விரிவாகப்  பகிர்ந்துகொண்டார்.

'மிக நீண்டகாலமாக திரு.கனகசபாபதி அவர்களோடு உடனிருந்தவர். உடன் வேலை பார்த்தவர். அவரின் ஒவ்வொரு செயலையும் அருகே இருந்து பார்த்தவர். எனவே இந்த நூலினை  வேறு யார் எழுதியிருந்தாலும் இவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது. மா.பா. குருசாமி அவர்கள் மிகச்சிறந்த எழுத்தாளர் ' எனக்குறிப்பிட்டு புத்தக வெளியீட்டு விழாவிற்கு தலைமை ஏற்ற  தமிழ் நாடு சர்வோதய மண்டல் தலைவர் திரு.க.மு. நடராசன் அவர்கள் உரையாற்றினார்.நூலினை வெளியிட்ட சேவாப்பூர் இன்ப சேவா சங்கத்தின் தலைவர்  ,திரு.மா.பாதமுத்து அவர்கள்  தனக்கு திரு கனகசபாபதி அவர்களோடும் திரு. மா.பா.குருசாமி அவர்களோடும் இருக்கும் தொடர்பையும் எதார்த்தமாகவும் , எளிமையாகவும் அரங்கில் பகிர்ந்துகொண்டார்,    
                                   
\

புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட சிவகாசி தொழிலதிபர் திரு தனசேகரன் அவர்கள் , விருது நகரில்  டாக்டர் கனகசபாபதி அவர்களிடம் பி.யூ.சி. படித்தது, பின்பு உடன் வேலை பார்த்தது ,தன்னுடைய உயர்வுக்கு எப்படி எல்லாம் திரு.கனகசபாபதி அவர்கள் உதவியாக இருந்தார் என்பதை மிக நெகிழ்வாக குறிப்பிட்டார். தன்னுடைய மகனுக்கு கனக என சாரின் பெயரை இணைத்து வைத்திருப்பதைக் குறிப்பிட்டார்.

மதுரை ஸ்பார்க் செண்டர் பார் ஐ.ஏ.எஸ். ஸ்டிஸ் நிறுவனத்தின் செயலாளராக இருந்த , மதுரையின் தொழிலதிபர் திரு.டி.கல்யாணசுந்தரம் தான் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்த கதையையும் பின்னர் தனக்கு முன்னோடியாக பேராசிரியர் பதவியை வேண்டாம் என உதறித்தள்ளி தொழிலதிபரான திரு தனசேகரன் அவர்களின் ஆலோசனையின் படியே தான் தனியாகத் தொழில் தொடங்கியதையும் திரு கனகசபாபதி சாரிடம் எப்போதும் ஒரு மரியாதை கலந்த பயம் இருந்ததையும், தனக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய தன்னம்பிக்கையை, சுய நம்பிக்கையை ஏற்படுத்தியவர் திரு.கனகசபாபதி அவர்கள் என்பதையும்  குறிப்பிட்டுச்சொன்னார்.

 மதுரை அமுதம் மெட்ரிகுலேசன் பள்ளியின் தாளாளர் திரு ஜெயவீரபாண்டியன் அவர்கள் ஐ.ஏ.எஸ் -ஆக இருக்கும் தனது சகோதரரின் உயர்வுக்கும், அமுதம் பள்ளியின் உயர்வுக்கும் திரு.கனகசபாபதி அவர்கள் எப்படி எல்லாம் வழிகாட்டினார்கள் என்பதனை ஒரு அறிக்கையாகவே வாசித்து அளித்தார்கள். 2003 மார்ச் 8 எப்படி ஒரு கொடுமையான தினமாக அமைந்தது என்பதனை மிக்க துயரத்தோடு பகிர்ந்துகொண்டார்


.
தொடர்ந்து உரையாற்றிய பேராசிரியர் வெங்கட்ராமன் அவர்கள், தனது டாக்டரேட் படிப்புக்கும், தனக்கு பல்கலைக்கழகத்தில் வேலை கிடைப்பதற்கும் திரு.கனகசபாபதி அவர்களின் வழிகாட்டுதலே காரணம் என்பதையும்,திருகனகசபாபதி அவர்கள் மைனஸை பிளசாக மாற்றும் வல்லமை கொண்டவர் என்பதையும்  தனக்கே உரித்தான நகைச்சுவையோடு அவையில் எடுத்துவைத்தார்.

தொடர்ந்து உரையாற்றிய திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் கி.ஆழ்வார் அவர்கள், 1967-ல் முதன்முதலாக விருதுநகரில் முதல்வர் அவர்களைச்சந்தித்ததையும்,அவர் ஒரு இன்ஸ்டியூசன் பில்டராக இருந்தார் என்பதையும்  ஆன்மிகவாதியாக இருந்த திரு.கனகசபாபதி அவர்கள் பக்கத்தில் வைத்திருந்தது டாக்டர் அப்துல்ரசாக் அவர்களையும் நாத்திகனான என்னையும்தான் எனக்குறிப்பிட்டார். மாணவர்களுக்கு சமூக நீதி அடிப்படையிலும் மனித நேய அடிப்படையிலும் உதவ வேண்டும் என்பதே அவரின் நோக்கம். அவரின் நோக்கத்திற்கு முழுமையாக ஆதித்தனார் கல்லூரியின் நிர்வாகமும் உதவி செய்தது என்பதனையும் குறிப்பிட்டார். தந்தை பெரியார் அவர்கள் மறையும்போது ,உங்களை இன்னும் இந்த இழிவு நிலையில் விட்டுவிட்டுப் போகின்றேனே என்பதே அவரின் கவலையாக இருந்தது. அதனைப்போல டாக்டர் கனகசபாபதி அவர்களின் நோக்கம் முழுவதும் மாணவர்களின் உயர்வு என்பதுமட்டுமே இருந்தது. டாக்டர் கனகசபாபதி அவர்கள் எழுதிய ஆங்கில நூலான 'How to develop a college in backward Area' என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக் குறிப்பிட்டுப்பேசினார்.

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைப்பேராசிரியர், ஸ்பார்க் நிறுவனத்தின் தமிழ் விரிவுரையாளராக இருந்த பேரா.ம.இராமச்சந்திரன் அவர்கள் தனக்கு உறவினர் டாக்டர் கனகசபாபதி என்பதையும், குலையன் கரிசல் ஊரைப்பற்றியும் ,அவரின் தனித்தன்மைபற்றியும் குறிப்பிட்டார்.திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் வளர்ச்சியையும் ,திரு.கனகசபாபதி அவர்களின் வாழ்க்கையையும் பிரித்துப்பார்க்கமுடியாது என்றார்.

 பாண்டிச்சேரி சிவில்சர்வீஸ் திரு.சுந்தரேசன் ஐ.ஏ.எஸ். அவர்கள் , தான் பதவியில் இருக்கும்போது யாராவது திட்டினார்கள் என்றால் அது அந்தப்பதவியைத்தான், தன்னை அல்ல என்பதனை எனக்கு உணர்த்தியவர் திரு. கனகசபாபதி என்பதனைக் குறிப்பிட்டார்.

 தொடர்ந்து ஹைதராபாத்திலிருந்து இந்த நூல் வெளியீட்டிற்க்காக வந்திருந்த திரு ஆறுமுகப்பாண்டியன் அவர்கள்,தான் SBI-ல் cGM ஆக இருப்பதையும் ,தான் படிக்க வந்த காலத்தில் எவ்வளவு வறுமையான சூழலில் வந்தேன் என்பதையும் , முதல்வர் மூலமாக கிடைத்த உதவிகளையும் டெலிபோனில் வேலை கிடைத்தது என்று சொன்னபோது , நீ பெரிய பதவிக்கு போவேன் என்று நினைத்தால் கிளார்க் வேலைக்குப்போகிறேன் என்று சொல்கிறாயா என்று சொன்னதையும் , அவரின் உந்துதலாலேயே போட்டித்தேர்வுகள் எழுதி, வெற்றி பெற்று மிகப்பெரிய பொறுப்பில்தான் இருப்பதையும், கல்லூரியில் நான் எந்தப்பணமும் கட்டவில்லை என்பது மட்டுமல்ல கல்லூரியிலிருந்து முடிந்து செல்லும்போது 50 ரூயாய் மீதத்தோடு போனேன் என நினைவுகூர்ந்து சொன்னவிதம், இன்றுவரை தான் நேர்மையாக, மரியாதையாக இருப்பதற்குக் காரணம் டாக்டர் கனகசபாபதி அவர்களே எனச்சொன்னபோது அரங்கமே வியந்து பார்த்தது.


தொடர்ந்து அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர், டாக்டர் கனகசபாபதி அவர்களின் உறவினர், டாக்டர் கனகசபாபதி அவர்கள் மதுரையில் இருந்தபொழுது அவரின் உடல் நிலையைக் கவனித்துக்கொண்ட மருத்துவர் திரு.டாக்டர் பி.ஜெகதீசபாண்டியன் அவர்கள் , திரு.கனகசபாபதி அவர்களுக்கு நான் மாமா முறை. ஆனால் வயதில் அவரைவிட இளையவன். தனது கிராமமான குலையங்கரிசலுக்கே உரித்தான உருவத்தோற்றம் டாக்டர் கனகசபாபதிக்கும் தனக்கும் இருப்பதை ஒப்பிட்டுக்கூறினார். குட்டி மாமா எனத்தன்னை அழைப்பார் என்பதையும் தான் மருத்துவராக வழிகாட்டியதையும், அவரின் உடல் நிலை எப்படி திடிரென மோசமானது என்பதைப் பற்றியும் குறிப்பிட்டு, திரு.கனகசபாபதி அவர்கள் மருத்துவமனையில் இருந்தபொழுது பழைய மாணவர்கள் அடிக்கடி வந்ததையும் கவனித்ததையும் குறிப்பாக இன்றைக்கு சென்னை வருமானவரித்துறை ஆணையாளராக இருக்கும் திரு.மகாலிங்கம் IRS அவர்கள் தினந்தோறும் வந்ததையும் குறிப்பிட்டு இப்படி ஒரு பிணைப்பை ஆசிரியரிடம் மாணவர்கள் கொண்டிருந்ததைக் கண்டதாகவும் குறிப்பிட்டார்.

 மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இரண்டு திருக்குறளைக்குறிப்பிட்டு, அது எப்படி தனது வாழ்க்கையில் திரு.கனகசபாபதி அவர்கள் மூலமாக விளக்கவுரை கிடைத்தது என்பதைக் குறிப்பிட்டார்.

 தியாகராசர் கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் ஆர். raaகோவிந்தசாமி அவர்கள் திரு.கனகசபாபதி அவர்கள் பயின்ற கல்லூரியில் தானும் திரு வேத சிரோன்மணியிடம் கல்வி கற்றதையும் , அவரைப் பற்றித் திரு.மா.பா.குருசாமி அவர்கள் இந்தப்புத்தகத்தில் அவரைப் பற்றிக்குறிப்பிட்டிருப்பதைக் குறிப்பிட்டு திரு கனகசபாபதி அவர்கள் Physically fit, Mentally Alert, Morally correct எனக்குறிப்பிட்டு  உரையாற்றினார். பால்வண்ணம் அவர்கள் திரு.கனகசபாபதி அவர்களைப் பற்றி ஒரு பாடல் பாடினார். முடிவில் பழைய மாணவர் முனைவர் வா,நேரு  , டாக்டர் கனகசபாபதி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியுள்ள புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவோம், அதற்கு ஆங்கிலப்பேராசிரியர்  சாமுவேல் லாரன்ஸ் போன்றவர்களின் உதவியை நாடுவோம் என்றும் கூறி அனைவருக்கும் நன்றி கூறி முடிக்க புத்தக் வெளியீட்டு விழா முடிவுற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை காந்திய இலக்கியச்சங்க செயலாளர் பா.அன்புசிவன்,நந்தா, கல்வி அலுவலர் நடராசன், நூலகர் டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்வில் பேரா.சாமுவேல் லாரன்ஸ்( அமெரிக்கன் கல்லூரி), பேரா. இ.கி.இராமசாமி (யாதவர் கல்லூரி), பேராசிரியர் சீனிவாசன் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்),பேரா.கதிரேசன், பேரா.சந்திரசேகரன், பேரா.கணேசன், பேரா.மச்சக்காளை, பேரா.ஜெயப்பிரகாசம்,பேரா.டாக்டர் கமல்ராசு,மதுரை ஸ்பார்க் கா.பா.மாரிக்குமார், அவரிடம் பயிலும் மாணவ,மாணவிகள், டாக்டர் கனகசபாபதியின் மாணவர்கள் பேரா.டாக்டர்.இரா.சீனிவாசன்,தே.கல்லுப்பட்டி பாலகிருஷ்ணன், தமிழ்ச்செல்வன், வேலுச்சாமி, பதஞ்சலி சில்க்ஸ் உரிமையாளர் செல்வம், திரு. லட்சுமணன்,கண்ணன், பாலதண்டாயுதம்,பி.எஸ்.என்.எல். ராஜ்குமார்,மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரியைச்சார்ந்த டாக்டர் வனம், அவருடைய மாணவர்கள் கலந்துகொண்டனர். திருமதி ஆண்டியப்பன்,திருமதி கல்யாணசுந்தரம்,திருமதி தனசேகரன்,திருமதி நேரு,திருமதி பேரா.ஆழ்வார் மற்றும் நேருவின் பிள்ளைகள் சொ.நே.அன்புமணி, சொ.நே.அறிவுமதி கலந்துகொண்டனர். நூல் வெளியீட்டு விழா அன்றே 800-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்றுத்தீர்ந்தன. குடும்பம், குடும்பமாக பேரா.கனகசபாபதி அவர்களைப் பற்றிய நூல் வெளியீட்டீல் கல்ந்துகொண்டதும்,பல உயர் பதவிகளில் இருக்கும் டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களின் மாணவர்கள் உயர் அதிகாரிகள் என்றாலும் மிகச்சாதாரணமானவர்களைப் போலக் கலந்துகொண்டதும் திரு.கனகசபாபதி அவர்களுக்கு நன்றியுணர்வு காட்டியதும் புதியவர்களுக்கு வியப்பளித்தது,.

Monday, March 20, 2017

சுகமான வாழ்வு.........

பெரியார் பன்னாட்டு மைய இயக்குநர் மருத்துவர் அய்யா சோம.இளங்கோவன், அவரது இணையர் மருத்துவர் அம்மா சரோஜா அவர்களும் இணைந்து அனுப்பிய வாழ்த்து

வெள்ளிவிழா காணும் வாழ்விணையர்களே!
வாழ்வின் சிறப்பை உழைப்பாலும் நட்பாலும்
பெருமையை பெரியாரின் கொள்கையாலும்
மகிழ்வை உங்கள் இருவரின் நட்பாலும்
செல்வங்களை மக்கள் செல்வங்களாலும்
பெற்றுள்ளீர் ! வாழ்வீர் நலமுடன்
வாழிய பல்லாண்டு! வாழிய பல்லாண்டு !

சரோ & சோம.இளங்கோவன்.


திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் , வாழ்க்கை இணையர்களாக நானும் தோழியர் சொர்ணமும் வாழ்க்கை ஒப்பந்தம் ஏற்றுக்கொண்ட நாள் இந்த நாள் (மார்ச் 20). 1993 மார்ச் 20-ஆல் இல்லற வாழ்க்கையைத் தொடங்கி , 24 ஆண்டுகள் முடிந்து 25-ஆம் ஆண்டு தொடங்கியிருக்கிறது. வாழ்வில் ஏற்படும் இன்பம், துன்பங்களில் உற்ற நண்பர்களாக வாழ்வோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டது வெறும் உறுதிமொழியாக இல்லாமல் நடைமுறை மொழியாகவே தொடர்கிறது. சனிக்கிழமை காலை வெவ்வேறு சாதிகளைச்சார்ந்த நாங்கள் இருவரும் வாழ்க்கை துணைவர்களாக இணைவதற்கு இருந்த எதிர்ப்புகள் எல்லாம் நேற்று நடந்ததுபோலவே மனக்கண் முன்னால் ஓடுகின்றது. 'சுயமரியாதை வாழ்வே சுகமான வாழ்வு ' என்பது வெறும் வார்த்தைகள் அல்ல, அப்படி வாழ முற்பட்டால் அது எவ்வளவு மகிழ்ச்சிகரமான வாழ்வு என்பதை அப்படி வாழ முற்பட்டால் எளிதாகப் புரிந்து கொள்ள இயலும்.

எங்களின் இணை ஏற்பு நாளை முன்னிட்டு , எனது பிள்ளைகள் சொ.நே.அன்புமணி, சொ.நே.அறிவுமதி இருவரும் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ 2500 அளித்திருக்கின்றார்கள். கல்லூரிச்செலவுக்காக தினந்தோறும் நான் கொடுக்கும் தொகையில் மிச்சம் பிடித்து, இந்தத் தொகையை அளித்திருக்கின்றார்கள். இருவருக்கும் எங்கள் நன்றி. வாழ்த்துக்கள் தெரிவித்த அய்யா மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களுக்கும் அவரது இணையர் மருத்துவர் சரோஜா அவர்களுக்கும் , மற்றும் உறவுகளுக்கும், நட்புகளுக்கும், இயக்க உறவுகளுக்கும் நன்றி..நன்றி...
             
நன்றி :விடுதலை 20.03.2017


Sunday, March 12, 2017

தம்பட்டம் அடித்துக் கொள்ளும்.......

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை  வருமாறு:

உத்தரப்பிரதேசம், உத்திரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின் முடிவுகள் நேற்று (11.3.2017) வெளிவந்துள்ளன.

பா.ஜ.க.வுக்கு இது பெரு வெற்றி - மோடியின் தலைமைக்குக் கிடைத்த சிறப்பு என்றெல்லாம் பத்திரிகை உலகமும், ஊடகங்களும், பா.ஜ.க.வும், அதன் சுற்றுக் கிரகங்களும் கூறித் தம்பட்டம் அடித்துக் கொள்ளும்.

ஆனால், விருப்பு வெறுப்பற்ற பொது நிலையில் (ளிதீழீமீநீtவீஸ்மீ) இந்தத் தேர்தல் முடிவுகளை ஆராய்ந்தால், கீழ்க்கண்ட காரணங்கள்தான் பிரதான வெற்றிக்கானவை என்பது புரியும்.

ஆளும் கட்சிகளுக்கு எதிராக....

1. ஆளுங்கட்சி - அரசுக்கு எதிரான மக்களின் அதிருப்தி - எதிர்ப்பு - 5 மாநில முடிவுகளும் - Anti-incumbency.

(அ) உ.பி.யில் பா.ஜ.க. ஆட்சியில் இல்லை

(ஆ) ஆளுங்கட்சிக்குள் அப்பா - பிள்ளை சண்டை தெருவில் அடிதடி வரை வந்து சிரித்தது.

(இ) திட்டமிட்ட பா.ஜ.க. - அமித்ஷா - மோடி இருவரின் வியூகமும், உழைப்பும் குறிப்பிடத்தகுந்தவை.

(ஈ) உத்திரகாண்ட்டிலும் ஆளும் காங்கிரஸ்மீது அதிருப்தி

(உ) பஞ்சாபில் அகாலிதள (குடும்ப) ஆட்சியின்மீது அதிருப்தி - எதிர்ப்பு.

(ஊ) கோவாவிலும் பா.ஜ.க. ஆட்சிமீது வெறுப்பு - அக்கட்சி பிளவுபட்டது!

மாயாவதி செய்த தவறு

(எ) மாயாவதி தன் கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்களை அரவணைக்காது விரட்டியது.

(ஏ) இஸ்லாமியர்களின் வாக்கு ஒருங்கிணைந்து எந்தக் கட்சிக்கும் செல்லாதது!

(அய்) மோடியின் பகிரங்க ஹிந்துத்துவா ஆதரவுப் பேச்சு - தீபாவளிக்கு தடையில்லா மின்சாரம் கிடையாது; ஆனால், ரம்ஜானுக்கு மட்டும் உண்டு என்பது போன்ற பேச்சுகளால் உரு வாக்கிய ஓர் முனைப்படுத்திய (Polaraize) தன்மை!

மத உணர்வைப் பயன்படுத்திவிட்டு, இப்போது மதத்தின் வெற்றி அல்ல என்று அமித்ஷா கூறுவது ‘‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’’ என்பதுபோல - அசல் கேலிக்கூத்து!

2014 மக்களவை தேர்தலைப் போல் இம்முறை மோடி அலை பயன் தராது என்ற நிலையில், உத்தரபிரதேச மாநில பாஜக தலைவராக கேசவ் பிரசாத் மவுரியாவை நியமித்தது; பார்ப்பனர்கள் மற்றும் ஒட்டுமொத்த உயர்ஜாதியினரின் வாக்குகள் பாஜகவிற்கு வருவது உறுதியானது.

உ.பியில் 19 விழுக்காடு மக்கள் தொகை கொண்ட பார்ப்பனர்கள், தாக்கூர் போன்ற உயர் ஜாதியினர் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது உறுதியானதும், யாதவர் அல்லாத, ஜாட் இனத்தவர் அல்லாத 170 பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்களை களமிறக்கியது. இதனால் யாதவர் இன வாக்குகளைத் தவிர்த்து மற்ற பிற்படுத்தப் பட்ட மக்களின் வாக்கு வங்கியானது முழுமையாக பாஜகவின் பக்கம் சென்றது.

பாஜக உத்தரப்பிரதேசத்தில் அப்னாதள் மற்றும் சுஹேல்தவ் பாரதிய சமாஜ் கட்சி ஆகிய சிறு கட்சிகளோடு கூட்டணி வைத்திருந்தது.  பூர்வாஞ்சல் மற்றும் மத்திய உத்தரபிரதேசத்தில் கணிசமான பட்டேல் குர்மி இன மக்கள் உள்ளனர். அப்னா தள் அவர்கள் ஆதரவு பெற்ற கட்சி. சுஹேல்தவ் கட்சிக்கு, 18 சதவீத மக்கள் தொகையை கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட ராஜ்பர் ஜாதி மக்கள் ஆதரவு இருந்தது. பிரச்சாரத்தின்போது தாக்கூர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ராஜ்நாத்சிங்கும், பார்ப்பனர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கல்ராஜ் மிஷ்ராவும் பிரச்சாரம் செய்தனர்.

மாற்றுக் கட்சித் தலைவர்களை இழுப்பது...

பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த பிரஜேஷ் பதக், ஸ்வாமி பிரசாத் மவுரியா மற்றும் ஆர்.கே.மவுரியா போன்ற முக்கிய தலைவர்களை பாஜக தன்பக்கம் இழுத்து, பகுஜன்சமாஜ் கட்சியின் அடுத்த நிலை தலைவர்களே இல்லாமல் செய்தது. காங்கிரஸ் கட்சியின் உ.பி மாநில முன்னாள் தலைவர் ரிதா பகுகுணாவையும் பாஜக விலைக்கு வாங்கியது; எந்த பகுதிகளில் கட்சி பலகீனமாக இருந்ததோ, அங்கு பிற கட்சிகளை சேர்ந்த பலமிக்க தலைவர்களை விலைக்கு வாங்கியது

2015 ஆம் ஆண்டிலேயே இது தொடங்கப்பட்டதை அப் பொழுது ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ வெளிப்படுத்தியதே!

அதிகமான அளவு தீவிர இந்துமத உணர்வு கொண்ட மக்களின் வாக்குகளைப் பெற இஸ்லாமியர்கள் யாருக்கும் இடம் கொடுக்கவில்லை. அதே போல்  மோடியும், அமித்ஷாவும் இந்துக் களை முஸ்லிம்களுக்கு எதிராக திரள செய்யும் வகையிலான பிரச்சாரத்தை மேற்கொண்டனர். ரம்ஜானுக்கு இலவச மின் சாரம் அளிக்கப்படுகிறது; அதேநேரத்தில் தீபாவளிக்கு அளிக்கப்படவில்லை என்றார் மோடி. பாகிஸ்தான் தீவிரவாத கசாப்பிடமிருந்து உ.பி. விடுதலை பெற வேண்டும். கசாப் என்றால் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் முதல் எழுத்துக்களை வைத்து சொல்கிறேன். வேறொன்றும் இல்லை என்றார் அமித்ஷா.

திடீர் என்று முளைத்த கூட்டணி

சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி இருந்தாலும் திடீர் என்று முளைத்த கூட்டணி ஆகையால் சமாஜ்வாடி தொண்டர்கள். இதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. சில தொகுதிகளில் சமாஜ்வாடி வெற்றி பெற வாய்ப்பிருந்தது.அதை காங்கிரசுக்கு ஒதுக்கியதால் உள்ளூர் நிர்வாகிகள் காங்கிரசை எதிர்த்து வேலை பார்த்தனர். ஆட்சிக்கு எதிரான அலையும் ஒரு காரணம்.

தந்தை மகனே கட்சிக்காக சண்டை போட்டதால் ஆட்சி மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டது.

பீகாரைப் போலவே உ.பியில் முதல்வர் யார் என்பதை அறிவிக்காமல் பாஜக தப்பு செய்துவிட்டதாக விமர்சகர்கள் கூறினர். ஆனால் முதல்வர் வேட்பாளர் யார் என கூறாமல் தேர்தலை சந்தித்தது பாஜகவுக்கு ஒரு வகையில் வசதியாகிவிட்டது. ஏனெனில் பாஜக நம்பிய அனைத்து ஜாதியினருமே பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். முதல்வர் வேட்பாளராக யாரையாவது அறிவித்திருந்தால் இதர ஜாதியினரின் வாக்குகளை பாஜக இழந்திருக்கும்.

அதிகார பலம் - ஊடக பலம்

மத்திய அரசின் அதிகார பலம் ஊடக பலங்கள் இன்னொரு பக்கம்.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் இரண்டும் தனித்தனியாக நின்றதால் இஸ்லாமியர் மற்றும் தலித்துகளின் வாக்குகளும், முற்றிலும் சிதறிவிட்டன; பாஜகவின் வெற்றிக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.

யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்றே போடப்பட்ட வாக்குகள் பா.ஜ.க. பக்கம் விழுந்தன.

மத்திய ஆட்சியின் கொள்கை முடிவுகளுக்கு இது வரவேற்பல்ல.

இந்த முடிவுகள்மூலம் மாநிலங்களவையில் பா.ஜ.க.வின் பலம் கூடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது ஒருபுறம்; குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூன் மாதம் நடைபெறும்போது, பா.ஜ.க. வேட்பாளருக்கு இது பெரிதும் துணை நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.

வெற்றி பெற்ற அத்துணைக் கட்சிக்காரர்களுக்கும் நமது வாழ்த்துகள்!

அதிகார ஆணவம் - பதவியை குடும்பச் சண்டைக்குப் பயன்படுத்தினால் நாட்டு மக்கள் ஏற்கமாட்டார்கள் என்ற பாடத்தையும் இம்முடிவுகள் உணர்த்துகின்றன!கி.வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்.

12.3.2017
சென்னைRead more: http://viduthalai.in/page1/139488.html#ixzz4b6i1Gxwa

Thursday, March 9, 2017

மனு(அ)தர்மத்தைக் கொளுத்துகிறார்கள்..........நாளை (10.03.2017) திராவிட இயக்க வரலாற்றில் மிக முக்கியமான நாள். திராவிடர் கழகத்தின் மகளிரணித்தோழியர்கள் தமிழ் நாடெங்கும் மனு(அ)தர்மத்தைக் கொளுத்துகிறார்கள். உற்சாகமூட்டக்கூடிய அளவிற்கு தோழியர்கள் அணி, அணியாக நாளைப் போராட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்று செய்தி கிடைக்கிறது. தந்தை பெரியாருக்குப்பின் நாத்திக இயக்கத்தின் தலைமைப்பொறுப்பை ஏற்று திராவிடர் கழகத்தோழர்களை வழி நடத்திய அன்னை மணியம்மையாரின் பிறந்த நாள் நாளை மார்ச்-10. அந்த நாளில் திராவிடர் கழகத்த்லைவர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில் இந்தப்போராட்டத்தை மிகச்சிறப்பாக தோழியர்கள் செந்தமிழ்ச்செல்வி, தகடூர் தமிழ்ச்செல்வி, கலைச்செல்வி எனப் பலரும் இணைந்து அருமையாக ஒருங்கிணைத்திருக்கின்றார்கள். மதுரையில் நடைபெறும் போராட்டத்திற்கு திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் தோழியர் இராக்கு தங்கம் அவர்கள் தலைமை ஏற்கின்றார். தினசரி கூலித்தொழிலாளிகளான தோழர் தங்கமும், தோழியர் இராக்கும் கடந்த 30 ஆண்டுக்கும் மேலான திராவிடர் கழக உறுப்பினர்கள். மதுரையில் நடைபெற்ற போராட்ட ஆயுத்தக்கூட்டத்தில் உள்ளத்தில் இருந்து கொட்டிய சொற்களால் கூட்டத்தை ஈர்த்த தோழியர் இராக்குதங்கம் அவர்கள் தலைமையில் நடைபெறுகின்ற மனு(அ)தர்ம எரிப்பு போராட்டமும், தமிழகம் முழுவதும் நடைபெறுகின்ற மனு(அ)தர்மப் எரிப்பு போராட்டமும் மகத்தான வெற்றி பெறும். வெற்றி பெறுவதற்கு  மாநில பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக போராட்ட வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எரியுட்டும் மனுதர்மம் என்னும் திராவிடர் கழகத்துணைத்தலைவர் கவிஞர் கலிபூங்குன்றன் அவர்கள் எழுதிய  புத்தக பி.டி.எப் இத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. படிப்பீர், மற்றவர்களையும் படிக்கச்சொல்வீர். சுயமரியாதைக்காக களம் காணும் திராவிடர் கழக தோழியர்களுக்கு, தோழர்களுக்கு ஆதரவைத்தாரீர்.

http://viduthalai.in/images/pdf/POSUNGATTUM_MANUTHARMAM.pdfThursday, March 2, 2017

பகுத்தறிவே சிறந்த வழி காட்டி.......மறவாதீர்!..

மனித வாழ்க்கையில் - முற்றிலும் பகுத்தறிவையே பயன்படுத்தித்தான் வாழ்வார்கள்; வாழவேண்டும் என்பது இயற்கையான வாய்ப்பு என்றாலும் கூட, நம்மில் பலரும் அப்படி வாழ் வதில்லை; பெரும்பாலோர் அப்படி வாழ விரும்புவதே இல்லை.

காலங்காலமாக எப்படி மற்றவர்கள் வாழுகிறார்களோ அப்படியே ‘செக்கு மாட்டு வாழ்க்கையே’ வாழுகிறார்கள்!

இன்னும் பலர் பழைய பாதையே பாதுகாப்பானது என்ற பயத்தின் கார ணமாக, ஒருவகை அடிமை வாழ்க்கை யில் வாழுகிறார்கள்! அடிமைத்தனம் என்று இங்கே நாம் குறிப்பிடுவது மூளை அடிமைத்தனத்தைத்தான்!

சிலர் அதைப் பெருமையுடன் கூறி ‘கித்தாப்பு’ அடைகின்றனர்! தன் பெருமை, தன் சக்தி, தன் சாதனை என்று தம்பட்டம் அடித்து மகிழ்வது தான் அவர்கள் சிக்கிய போதையாகும்!

எடுத்துக்காட்டாக, கடை வீதியில் நடந்துகொண்டே வந்தவர், ஒன்று வாங்கினால் மேலும் இரண்டு ‘இலவசம்‘ என்ற விளம்பரம் கண்டு திகைத்தவராக, உடனே அவரது தேவையை உத்தேசித்தோ யோசிக் காமலே, அவரிடம் உள்ள கடன் (கிரெடிட் கார்டு) அட்டையைப் பயன்படுத்தி உடனே அக்கடையில் நுழைந்து வாங்கி வருகிறார். எந்தக் கடைக்காரரும் நட்டத்தில் வியாபாரம் செய்யமாட்டார்களே, இவர் மட்டும் ஏன் இப்படி விளம்பரம் செய்கிறார் என்று ஒருகணம்கூட பகுத்தறிவுக்கு வேலை தருவதில்லை; தான் ஏதோ மற்றவர்களுக்கு இல்லாத ஒரு வாய்ப்பை இதன்மூலம் பெற்றுவிட் டோம் என்ற ஒருவகை போலிப் பெருமையில் (அதுவே ஒரு வகை போதைதான்) மிதந்து வருவார்!

மனித வாழ்வில் உணர்ச்சிகளின் திடீர் ஆக்கிரமிப்பு - படையெடுப்பு - பகுத்தறிவுக்கோ, தர்க்க ரீதியான சிந்தனைக்கோ இடம்பெறுவதில்லை!

கடைகளுக்குச் சென்று வாங்குவது என்பது பகுத்தறிவு அடிப்படையில் பார்த்தால், கண்ணுக்கும், காதுக்கும், தமது பெருமைக்கும் இடம் தருவதற்கான கொள்முதலாக இருக் கக்கூடாது - பகுத்தறிவின்படி பார்த் தால்!

எது நமக்கு இன்றியமையாததோ, அதைக் குறித்து வைத்து, அதற்கான ‘பட்ஜெட்’ நமக்கு உள்ளதா என்று ஆராய்ந்து, கையில் உள்ள சேமிப் பையோ அல்லது சம்பாதனையின் கீழ்வரும் பட்ஜெட்டையோ பற்றி மட்டும் கவலை கொண்டால், நிச்சயம் நாம் ‘கடனாளி’யாகி விடமாட்டோம்!

ஆனால், ஆசையும், வீண் பெருமையும், பதவி ஆசையைவிட மிகவும் கொடுமையானது! சூதாட்டத் தில் வெற்றி பெற்றவனும் எழுவ தில்லை (சிலர் வேண்டுமானால் விதிவிலக்கு) தோற்றவனும் எளிதில் எழுவதில்லை. இருவரையும் ஒன்றே ஈர்த்து எல்லாவற்றையும் இழக்கச் செய்வது பற்றிய யோசனையே இல்லாது இருப்பது உலக இயல்பாகி விட்டது!

பகுத்தறிவு பலவிடங்களில் தோற்று ஒதுங்கிக் கொள்ளுகிறது; உணர்ச்சிகள் கோலோச்சத் தொடங் கிய இடத்தில்! அதன் விளைவு காலங்கடந்த ஞானோதயம்!

அளவுக்கு மீறிய சொத்து சேர்த்துக் கொண்டே செல்வதில் சுவை கண்ட வர்கள் - தங்களது மரண வாக்குமூலத் தில் எதைக் குறிப்பார்கள்?

யான்கண்ட சுகம் ஒன்றுமில்லை உண்மையே! இடையில் ஏற்பட்ட போதை - பண போதை - சொத்து போதையைத் தவிர என்பார்கள்!

எதற்கும் எல்லை உண்டு என்ப வர்கள் பகுத்தறிவைத் தாராளமாகப் பயன்படுத்தியவர்கள், இறுதியில் தொல்லை அடைவதில்லை - இடை யில் இடையூறுகளால் அலைக்கழிக் கப்பட்டாலும்கூட!

எனவே, பகுத்தறிவே சிறந்த வழி காட்டி என்பதை மறவாதீர்!...

திராவிடர் கழகத்தலைவர், பகுத்தறிவாளர் கழகப்புரவலர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்-

நன்றி : விடுதலை 02.03.2017

Sunday, February 26, 2017

எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தோம்.......

திராவிடர் கழகத்தோழர்களின் இல்ல நிகழ்வுகள்  தந்தை பெரியாரின் தத்துவத்தை,கொள்கையை பறைசாற்றும் விழாக்களாகத்தான் பல்லாண்டுகளாக நடைபெறுகின்றன. எட்டிக்காயென எட்டி நிற்போர் கூட கழகத்தோழர்களின் அணுகுமுறையால் பலாச்சுளையென உணர்ந்து கொள்வதைக் காணமுடிகின்றது வாழ்க்கை முழுவதும். அந்த வகையில் அண்மையில் நடந்த வேலூர் மண்டலத் திராவிடர் கழகத்தலைவரும், லிட்டில் பிளவர் என்னும் பள்ளியின் தாளாளருமான அய்யா வி.சடகோபன் இல்லத்திருமண நிகழ்வும் சிறப்புக்குரியதாகும். அந்த நிகழ்வினைப் பற்றியும் , நன்றியும் கூறி அய்யா சடகோபன் அவர்களின் கடிதம் இன்றைய விடுதலையில்(26.02.2017) வந்துள்ளது. இனி அந்தச்செய்தி தங்கள் பார்வைக்கு.....

இல்ல இணைஏற்பு விழாவின் மூலம் விளைந்த கொள்கை விளைச்சல்


வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு, அன்பு கனிந்த வணக்கம்.

எங்கள் இல்ல இணை ஏற்பு விழாவிற்கு தங்களின் வாழ்த்துரை மிக அருமையாக அமைந்திருந்தது. எங்கள் குடும்பத் தலைவராயிருக்கும் இனத்தலை வரின் வாழ்த்துரையை மணவிழாவிற்கு வந்தி ருந்த உறவினர்களும், நண்பர்களும், நம் கழகக் குடும்பத்தினரும் வெகுவாகப் பாராட்டினர். தாங்களே நேரில் வந்து வாழ்த்தியதைப் போன்று அனைவரும்கூறினர்.இரத்தினச்சுருக்கமாக3 நிமிடங்களில் எங்களின் இயக்க உழைப்பு, வாழ்வில் நாங்கள் அடைந்த உழைப்பின் வெற்றி, அடுத்த தலைமுறையினரையும் இயக்கத்தின்பால் ஈடுபடுத்தும்உணர்வுஅத்தனையையும்நினைவு கூறி குறிப்பிட்டது, உறவினர்கள் இயக்க ஈடு பாட்டிற்காக எங்களை கடந்த காலங்களில் அவ மதித்து, அசிங்கப்படுத்தியமை எல்லாம் பஞ்சாய்ப் பறந்துபோனது. உறவுகள் எங்களை உயர் வாய் மதிப்பீடு செய்யுமளவிற்கு உயர்த்தியது. நல்வாய்ப்பாக தங்களின் உரையினை குறித்த நேரத்தில் ஒளிபரப்பி அனைவரையும் கண் ணுறச் செய்ததில், நம் இயக்கத்தின் புகழ் எளிய மனிதர்களையும் சென்றடைய நல்வாய்ப்பாக அமைந்தது.மணமகள்வீட்டார்பக்திமூடநம் பிக்கைக் கொண்டோர். ஆனாலும் ஆர்ப்பாட்ட மில்லாமல் நாங்கள் செய்த திருமண ஏற்பாட்டினை வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தனர். தங்களின் ஆழ்ந்த சிந்தனை உரை அவர்கள் நெஞ்சினையும் தொட்டது எனப் பாராட்டினர். மணமக்கள் விழிக்கொடையும், உடற்கொடையும் அளித்த நிகழ்ச்சியை அனைவரும் இமைகொட்டாமல் பார்த்து வியப்படைந்தனர்.

அதோடு கழகத் துணைத்தலைவர் கவிமாமணி கலி.பூங்குன்றன் அய்யா அவர்களின் எளிய நடை குறிப்பாக பெண்களின் மனதைத் தொட்டது. புராண இதிகாசங்களும், வருணதர்மத்தை கூறும் மனுதர்மம் - குறிப்பாக பெண்களை இழிவுபடுத்தும் ஆதாரங்களை எடுத்துக்கூறியதை பெண்கள் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக் கொண்டனர். நம் இயக்கத்தின் பிரச்சாரத்தையோ, புத்தகங்களையோ அறியாத பெண்கள் பலர், என்னிடம் வந்து, “ஏங்க நாங்கள் செய்கின்ற திருமணங்களில் இவ்வளவு அசிங்கங்கள் இருக்கிறதா?” என வியப்புடன் கேட்டனர். பெரியார் தொண்டர்களின் மான உணர் வினையும், இனஉணர்வினையும் வெகுவாகப் பாராட்டிச் சென்றனர்.

நமது இயக்கத்தின் பல கூட்டப் பிரச்சாரத் தினையும், அப்போதே அதன் பலனையும் கண் கூடாகப் பார்த்த அனுபவம் இம்மணவிழாவின் மூலம்கிடைத்தது.இயக்கப்புத்தகங்கள்ரூ.5000-த் திற்கு விற்பனையானது. கழக வெளியீடுகள்-சுயமரியாதை திருமணம் ஏன்?, அய்யாவின் சிந்தனை நூல்வரிசை - 5, தமிழர் மீது பார்ப்பனர் தொடுத்த பண்பாட்டுப் படையெடுப்பு, மாணவர் களுக்கு அய்யாவின் சிந்தனைத் தொகுப்பு போன்ற 5 வகையான நூல்கள் 2000 புத்தகங்கள் அன்பளிப்பாக அனைவருக்கும் வழங்கப்பட்டன. மரக்கன்றுகள், காய்கறிச்செடிகள் இருவேளையும் 4000 வழங்கப்பட்டன. மணவிழா மூலம் அமைதி யான இயக்கப்பிரச்சாரம் நடைபெற்றது கண்டு எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தோம்.

கவிஞர் அவர்கள் எங்கள் இல்லத்திருமணத் திற்கு வருகைதந்து வாழ்த்துரை வழங்கியது எங்களுக்கெல்லாம்நல்வாய்ப்பாகஅமைந்தது. மணவிழாவிற்கு வந்திருந்த பெரியார் பெருந் தொண்டர்கள் சத்துவாச்சாரி இரட்டையர்கள் பொதுக்குழுஉறுப்பினர்இரா.கணேசன்,மாவட்ட கழக அமைப்பாளர் ச.கி.செல்வநாதன் ஆகி யோரையும் நேர்காணல் மூலம், அவர்களின் 60 ஆண்டுகளுக்கும்மேலான இயக்க ஈடு பாடு, இயக்கத்திற்கு அளித்த உழைப்பு, சமு தாயத்தில் அவர்கள் சந்தித்த போராட்டங்கள், கழகப்போராட்டங்களின் முன்னணி வீரர்களாக பங்கேற்றது அத்தனையையும் மிக நேர்த்தியாக தொகுத்து கவிஞர் அவர்கள் ‘விடுதலை’ ஞாயிறு மலரில் வழங்கினார்கள். ஞாயிறுமலரைப் படித்த அப்பெரியார் பெருந்தொண்டர்களுக்கு பெரிய இன்ப அதிர்ச்சி; எனக்கும் தொலைபேசியில் நன்றி தெரிவித்தனர்.

அன்றே மாலை நிகழ்வாக, என்னுடைய பள்ளியான லிட்டில் ஃபிளவர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் அன்னை மணியம்மையார் அரங்கில், சுயமரியாதை இயக்க 90ஆம் ஆண்டு விழா கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுயமரியாதை இயக்கம் சாதித்தது என்ன? என்ற தலைப்பில் கவிஞர் அவர்கள் இயக்க வரலாற்றினையும், தமிழர் மானவுணர்வு பெற்ற நிகழ்ச்சிகளையும் விளக்கினார். மாணவர்களும், இருபால் ஆசிரியர்களும், பெற்றோர்களும் அரங் கம் நிறைந்து, கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியும் நிறைவாக அமைந்தது.

இல்லமணவிழா நிகழ்ச்சியையும், பள்ளி விழாவினையும், கொள்கை விளக்கப் பிரச்சாரத் தினையும் ‘விடுதலை’ மூலமாக கண்ணுற்றக் கழகத் தினர் தொலைபேசி மூலம் மகிழ்ந்து பாராட்டினர்.

கடந்த 20.02.2017 ஆம்பூரில் நடைபெற்ற கழகக்தொண்டரின் மணவிழாவில் கலந்து கொள்ள நானும், எனது இணையர் ஈஸ்வரி அவர்களும் சென்றபோது மணவிழாவிற்கு வருகைதந்த கழகத் தோழர்கள் ‘விடுதலை’யில் படித்துவிட்டு, அழைப்பிதழ் கிடைக்கப் பெறாததற்கும், பங்கேற்று இம்மகிழ்வான மணவிழாவினையும், பள்ளியில் நடைபெற்ற விழாவினையும் காண வாய்ப்பில்லாமல் போனமைக்காகவும் வருத்தப்பட்டனர். எங்கள் மீது கோபித்தும் கொண்டனர்.

எங்கள்இல்லவிழாவில்தங்களின்வாழ்த்து ரையும், கவிஞரின் வாழ்த்துரையும் உணர்ச்சி யூட்டுவதாய் அமைந்தது. அதேபோன்று தமிழர் தலைவர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு மிகச்சிறப்பாக இயங்கிவரும் எங்கள் பள்ளியில் சுயமரியாதை இயக்க 90ஆம் ஆண்டு விழா கருத்தரங்கத்தில் கவிஞர் அவர்களின் அறிவியல் விளக்கங்களுடன் அமைந்த உரை எங்கள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர் களுக்கும் நல்வாய்ப்பாக அமைந்தது. அனைவரின் சார்பிலும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

13.02.2017 அன்று நடைபெற்ற அடுக்கடுக்கான இயக்கப்பிரச்சார நிகழ்ச்சிகளால் நாங்கள் நூறாண்டு வாழ்ந்து இயக்கத்திற்கு உழைக்க வேண்டும் என்ற உறுதியையும் அளித்தது. கழகம் எங்களுக்கு அளித்தஇந்தப்பெருமைக்கு என்றென்றும் நன்றி யுடையவர்களாக இருப்போம் என்று உறுதி கூறுகிறோம். நன்றி, நன்றி, நன்றி!

- வி.சடகோபன்

தலைவர், வேலூர் மண்டல திராவிடர் கழகம்

நன்றி : விடுதலை 26.02.2017Tuesday, February 21, 2017

'புறாக்காரர் வீடு ' -சிறுகதைத் தொகுப்பு-பாலகுமார் விஜயராமன்

கடந்த 04.02.2017 சனிக்கிழமை காலை 7.05 மணிக்கு ,  மதுரை வானொலியில் நூல் விமர்சனம் பகுதியில் ஒலிபரப்பபட்டதன் எழுத்துவடிவம் இது.......
                  **********************************************************

இன்று நாம் சுவைக்க இருக்கின்ற புத்தகத்தின் தலைப்பு 'புறாக்காரர் வீடு ' .புறாக்காரர் வீடு என்னும் இந்தப்புத்தகம் ஒரு சிறுகதைத் தொகுப்பு .இதன் ஆசிரியர் பாலகுமார் விஜயராமன். நூல் வனம்  பதிப்பகத்தால் ஜீன் 2016-ல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 128 பக்கங்கள் உள்ள இந்தப் புத்தகத்தின் விலை ரூ 80 ஆகும்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் பல நகரங்களில்  புத்தகத்திருவிழாக்கள் நடைபெறுகின்றன நம்மையெல்லாம் மிகப்பெரிய மகிழ்ச்சிக்கு உள்ளாக்கக்கூடிய செயல் இந்தப் புத்தகத்திருவிழாக்கள் .. ஆண்களும் பெண்களும் முதியவர்களும் இளைஞர்களும் குழந்தைகளுமாய் அணி அணியாய் புத்தகத்திருவிழாக்களில் அணி வகுக்கிறார்கள். புத்தகத்தின் உள்ளடக்கத்தை அறியாதவர்களை, ஒரு புத்தகத்தை எடுக்கவைப்பதில் அட்டைப்படத்திற்கு முக்கிய பங்கு உணடு. அப்படி பார்த்தவர்கள், கையில் உடனே எடுத்துபார்க்கும் வண்ணம் அழகிய அட்டைப்பட  வடிவமைப்பை இந்த புறாக்காரர் வீடு என்னும் சிறுகதைத் தொகுப்பு பெற்றிருக்கிறது.  எழுத்துப்பிழைகள் இல்லாத புத்தகமாகவும் இந்தப்புத்தகம் இருக்கிறது.

இந்த 'புறாக்காரர் வீடு ' என்னும் புத்தகத்தில் 14 சிறுகதைகள் இருக்கின்றன. 14 சிறுகதையுமே தனித்துவமாய் இருக்கின்றன. எந்தச்சிறுகதையும் இன்னொரு சிறுகதையைப்போல இல்லை.பல எழுத்தாளர்களில் தொகுப்புகள் தனித்தனிக் கதைகள் என்றாலும் ஒவ்வொன்றும் தனித்தன்மையான கதைகளாக இருப்பதில்லை. ஆனால் இந்தத் தொகுப்பு அப்படிப்பட்ட தனித்தன்மையைக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு கதையும் ஒரு மாறுபட்ட முயற்சியாக இருக்கிறது.ஒரு மாறுபட்ட வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.

இந்தப் புத்தகத்திற்கு அணிந்துரையை எழுத்தாளர்  பாவண்ணன் எழுதியிருக்கின்றார். அவர் தனது அணிந்துரையில் "நல்ல சிறுகதை என்பது சொல்லப்பட்ட கதையை விட படித்துமுடித்தபின் சொல்லப்படாத கதையைப் பற்றியும் நம்மைச்சிந்திக்க வைப்பதாக இருக்கவேண்டும்." எனச்சொல்கின்றார். சொல்லப்பட்ட கதை என்பது சுருக்கமாக இருந்தாலும் கூட சொல்லப்படாமல் விட்ட கதை விரிவாக மனக்கண் முன் படிப்பவனுக்கு ஏற்படுத்திவிட்டால் அது சிறந்த கதைதான். பதினான்கு கதைகளுள் ஒன்றாக இருக்கக்கூடிய 'புறாக்காரர் வீடு'  என்னும் சிறுகதை அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை வாசிப்பவருக்கு தருகிறது.

" புறாக்காரர் வீடு இத்தொகுப்பின் முக்கியமான ஒரு சிறுகதை. பிள்ளைகளைப் போல புறாக்களை பாசத்துடன் வளர்க்கும் அப்பா. புறாக்காரர் வீடு என்று அவர் வாழும் வீட்டை ஊரார்கள் அடையாளப்படுத்தும் அளவுக்கு அவருடைய பாசம் பேர்போனது.வீட்டின் மாடிப்பகுதியில் ஒருபக்கம் புறாக்கள் அடையும் கூடுகள்.இன்னொரு பக்கம் அப்பாவின் அறை. புறாக்கள் மெல்ல மெல்ல வளர்கின்றன. வானவெளியில் பறந்து திரிகின்றன. பொழுதெல்லாம் அலைந்து திரிந்துவிட்டு மாலையில் கூட்டை அடைகின்றன. புறாக்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. குஞ்சுகளை அக்கறையோடு பார்த்துக்கொள்கின்றன. இரையெடுக்கவும் பறக்கவும் கற்றுக்கொடுக்கின்றன. சுதந்திரமாகப் பறந்து திரிவதைப் பார்த்து ஒதுங்கி நின்று மகிழ்கின்றன. அப்பா வளர்க்கும் புறாக்கள் வளர்ந்து பெரிதாவதுபோல பிள்ளைகளும் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். பெரிய அக்கா வளர்ந்து மணம் முடித்துக்கொண்டு ஒரு திசையில் சென்று விடுகிறாள். சின்ன அக்காவும் தனக்கு விருப்பமான மாப்பிள்ளையையே திருமணம் செய்துவைக்கவேண்டும் என பிடிவாதம் பிடித்து ,மணம் முடித்துக்கொண்டு இன்னொரு திசையில் சென்று விடுகிறாள். தம்பி சென்று அடையவும் கல்விக்கான தேடல் என ஒரு திசை கிடைத்து விடுகிறது. அண்ணனுக்குத் திருமணம் நடக்கிறது. ஆனால் திசை தேடிச்செல்ல விரும்பாத அவன் வீட்டிலேயே இருந்து , கொஞ்சம் கூடக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகாமல் மெல்ல மெல்ல அப்பாவின் இடத்தைக் கைப்பற்றி விடுகிறான். தனிமை வேண்டும் என்பதால் அப்பாவின் அறையை முதலில் எடுத்துக்கொள்கிறான் புறாக்கள் வளரும் கூண்டு நாற்றமடிக்கிறது என மகன் சொல்ல, கொஞ்சம் கொஞ்சமாக  புறாக்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகின்றது. மாடியில் அப்பா இல்லாததால் கவனிப்பாரில்லாத புறாக்கள் ஒன்றையடுத்து ஒன்றாக இறந்து போகின்றன. புறாக்கள் அந்த வீட்டில் இருந்தன, அவற்றை அவர் வளர்த்தார் என்பதெல்லாம் இப்போது ஒரு பழங்காலத்து அடையாளம் மட்டுமே. அப்பாவின் ஏக்கத்தையும் பெருமூச்சையும் மதிக்காத ஒரு புதிய காலம் எழுச்சி பெறுகிறது". அணிந்துரையில் பாவண்ணன் என்ன சொல்கின்றார் என்றால் இந்தக் கதை மிக நுணுக்கமான  குறீயீடுகளின் மூலமாக தனிமைப்பட்டுப் போகும் அப்பாவைப் பேசுகிறது எனச்சொல்கின்றார்.

இன்றைக்கு இருக்கும் முதியவர்களின் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் தனிமை. தனிமைதான் இன்றைய முதியவர்களுக்கு மிகப்பெரிய சவால். இயக்க தொடர்பு உள்ளவர்கள், நண்பர்கள் வட்டம் உள்ளவர்கள், வாசிக்கும் பழக்கமுள்ளவர்களாக இருக்கும் முதியவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்.ஆனால் அதிகாரமாக இருந்துவிட்டு, முதுமையில் தனிமைப்பட்டுப்போகும் முதியவர்களின் தனிமை கொடுமை. முதியவர்களை நன்றாக கவனித்துக்கொள்ளும் நாடுகள் என ஒரு பட்டியல் உலக அளவில் போட்டிருக்கின்றார்கள். அதில் கடைசியில் இருந்து 3 வது அல்லது 4-வது இடத்தில்தான் இந்தியா இருக்கிறது. மிக நுணுக்கமாக முதியவர்களின் தனிமையை இந்தக் கதை கூறுகிறது. வெறும் சட்டத்தினால் மட்டும் முதியவர்களின் தனிமையை சரிபடுத்திவிடமுடியாது. இன்றைக்கு சட்டம் இருக்கிறது. கவனிக்காத மகனை, மகளைப் பற்றிக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்று. ஆனால் எத்தனை பெற்றோர்கள் நம் நாட்டில் அப்படிப் புகார் கொடுப்பார்கள்? ஆயிரத்தில் ஒருவர்கூட இருக்கமாட்டார்கள். தனியாய்க் கிடந்து மருந்தைக் குடித்து செத்தாலும் சாவார்களே தவிர புகார் அளிக்கமாட்டார்கள்.. எவ்வளவுதான் ஒதுக்கப்பட்டாலும் முதியவர்கள் வீட்டிலிருந்து ஒதுங்க விரும்புவதில்லை. புறாக்கள் தனது குஞ்சுகளை பிரித்து தனித்து போ எனச்சொல்கின்றன, அல்லது தாங்கள் தனித்து போய்விடுகின்றன. ஆனால் அப்பாக்கள் அப்படி இல்லை. இப்படி மிக நுட்பமாக மூத்தவர்களின் பிரச்சனையை சொல்லியிருக்கும் கதையாக இந்தத் தொகுப்பில் உள்ள ;புறாக்காரர் வீடு ' என்னும் கதை இருக்கிறது. இந்தக் கதையைச்சொல்லியிருக்கும் பாங்கு, மொழி நன்றாக உள்ளது.

அதனைப் போலவே 'முதல் தாயம் ' என்னும் சிறுகதை பொறியியல் படித்து முடித்து வேலையைத் தேடும் ஒரு இளைஞனைப் பேசுகிறது. 'முழுதாய் பத்து மணி நேரம் கரைந்திருந்தது அவன் அந்த அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து' என்று ஆரம்பிக்கும் கதை ஒரு பன்னாட்டு தொழில் நிறுவனத்தில் தொழில் நுட்ப தேர்வுக்காக நிற்கும் அவனின் மன ஓட்டத்தைப்பேசுகிறது. கல்லூரியில் படிக்கும்போதே , வளாகத்தேர்வுகளில் தான் ஏன் தேர்வாகவில்லை என்னும் கேள்வி இன்றுவரை அவனுக்கு தொக்கி நிற்கிறது. பள்ளிப் படிப்பு முடித்து பொறியியல் படிக்கும் அவனை  அவனது குடும்பமே நம்பி நிற்கும் வேலையில் வளாகத்தேர்வுகளில் அனைத்துக்கட்டங்களிலும் தேர்வு பெற்று , ஆனால் நேர்முகத்தேர்வின் முடிவில் தேர்ந்தெடுக்கப்படாமல் போனது ஏன் என்பது புரியாமல் போனாலும் வேலை கிடைக்கும் என்னும் நம்பிக்கையோடுதான் கல்லூரி நாட்கள் நகர்கின்றன. ஆனால் கல்லூரியை முடித்து வெளியே வந்ததும் வேலைக்காக ஒவ்வொரு அலுவலகமாக ஏறி ஏறி இறங்கி சோர்ந்து போகிறான். வளாகத் தேர்வுகளில் மயிரிழையில் தவற விட்ட வாய்ப்புகள் கொடுங்கனவாய்த் துரத்துகின்றன, தன்னுடன் படித்த ஆனால் வளாகத்தேர்வில் வெற்றி பெற்ற நண்பர்கள் மேல் பொறாமை படத்தோன்றுகிறது.தொடர்ந்து தோன்றும் உணர்வுகளை ' இயலாமை வெறுப்பாய் மாறியபோது ,மெளனம் மிகப்பெரிய தடுப்புச்சுவராய்  மாறி உள்ளெரியும் தீயை மறைத்துக்கொள்ள உதவியது. கொடும்பசியில் தூங்குகின்றவனை தட்டி எழுப்பி , ' இன்று உனக்கு உணவு இல்லை, படுத்துறங்கு !" என்று கூறிச்செல்லும் அசரிரியாய்த்தான் ஒவ்வொரு நேர்முகத்தேர்வும் இருந்தது. பகல் வேளையில் தனியனாய் அறையில் அமர்ந்திருக்கும் போது பெருங்குரலெடுத்துக் கத்தி, சுற்றி சுற்றி கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருக்கும் கடவுளை பளாரென கன்னத்தில் அறையத் தோன்றும் " என வேலை இல்லாமல் இருக்கும் நிலையை கதாசிரியர் விவரித்துச்செல்கின்றார். முடிவில் பத்து மணி நேரம் காத்திருந்த பன்னாட்டு நிறுவனத்தில் தொழில் நுட்பத்தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் பேரில் இவனது பெயரும் இருக்கிறது. பணி நியமன ஆணை கையில் கிடைக்கிறது. 'பணியானைப் பெற்றுக்கொள்ள எழுகையில் ,தரையில் அவனது கால் அழுத்தமாகப் பதிந்தது. ஆட்டத்திற்கான முதல் தாயம் விழுந்து விட்டது. பயணம் துவங்கியது " என  முதல் தாயம் கதை முடிகிறது.

தாயம் விளையாட்டைப் போலத்தான் வாழ்க்கை விளையாட்டும் இருக்கிறது. முதல் தாயம் போட்டுவிட்டவர்கள் , காய்களை நகர்த்திக்கொண்டு உள்ளே போய்க்கொண்டிருக்க, இன்னும் முதல் தாயம் போடாதவர்கள் தாயம் விழு , தாயம் விழு என மனதிற்குள் சொல்லிக்கொண்டே தாயம் விளையாடுவதைப்போல, உடன் படித்தவர்கள் வளாகத்தேர்வில் வெற்றிபெற்று அடுத்த ,அடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து சென்று கொண்டிருக்க வேலை கிடைக்குமா , வேலை கிடைக்குமா என்று வேலை தேடி அலைவதை முதல் தாயம் விழு, விழு எனச்சொல்லிக்கொண்டே விளையாடுவதைப்போன்றது என்று ஒப்பிடுகின்றார். நல்ல ஒப்பீடு. மனதில் நிற்கும் சிறுகதை.  .

               அதேபோல 'மழை வரும் பருவம் ' என்னும் கதை. ஒரு கொடுமையான அனுபவம். கல்லூரியில் படிக்கும் நண்பன். அந்த நண்பனின் அம்மா இறந்துபோனதாக செய்தி வருகிறது. அம்மாவின் இறப்பிற்குச்செல்லும் நண்பனோடு உடன் செல்லும் நண்பனின் அனுபவமாக இந்தக் கதை அமைகின்றது. வண்டியில் செல்லும் போது எதுவுமே பேசாமல் இறுக்கமாக வரும் நண்பன், எதைக் கேட்டாலும் விட்டேத்தியாக பதில் சொல்லும் நண்பன், நண்பனின் அம்மா எப்படி நண்பனை வளர்த்தார்கள் என்பதெல்லாம் மிக விளக்கமாக இந்தக் கதையில் எழுதப்பட்டுள்ளது. அதிலும் நண்பனின் அப்பா, நண்பன் அம்மாவின் வயிற்றில் கருவாக இருக்கும்போதே இறந்து விட, கண்வனின் இறப்பிற்காக கூடும் கூட்டத்தில் 'நான் சொல்ல ஒரு செய்தி இருக்கிறது ' என்று சொல்லி நெல்லுமணியின் மூலம் தான் கர்ப்பமாக இருப்பதைச்சொல்வதாக கதை நகர்கிறது. எழுத்தாளர் தொ.பரமசிவம் , தனது 'அறியப்படாத தமிழகம்' என்னும் நூலில் , கர்ப்பமாக இருக்கும் நிகழ்வை, கணவன் இறந்துவிட்ட நிலையில் நெல் மணிகள் மூலமாக  ஊர்மக்களுக்கு மனைவி தெரிவிக்கும் நிகழ்வைக் குறிப்பிடுவார். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு இக்கதையில் வருகின்றது. துக்கத்தை அடைத்துவைத்துக்கொண்டே வந்த நண்பன் தனது அம்மாவின் பிணத்தைப் பார்த்ததும் உடைந்து போய் அழுவதை பாலகுமார் தனக்கே உரித்தான நடையில் விவரித்துச்செல்கிறார். மிக  ஆழமான கதை. துன்பங்களை அடைத்து வைத்துக்கொண்டிருக்கும் பலர் அதனை வெளிக்காட்டிக்கொள்வதில்லை, மழை வருவதற்கு முன்னால் மேகங்கள் கூடுவதுபோல கூடிக்கொண்டே வரும் துன்பம் ஒரு கட்டத்தில் கண்ணீராய், அழுகையாய் மழையென கொட்டுகிறது என்பதனை விவரித்துச்செல்கின்றார்.

               பாலகுமார் விஜயகுமார் என்னும் எழுத்தாளரின் முதல் சிறுகதைத் தொகுப்பான 'புறாக்காரர் வீடு ' நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தருகின்ற புத்தகம் . நீங்களும் வாங்கி வாசித்துப்பாருங்கள்.
 புத்தகத்தின் தலைப்பு 'புறாக்காரர் வீடு ' .புறாக்காரர் வீடு என்னும் இந்தப்புத்தகம் ஒரு சிறுகதைத் தொகுப்பு .இதன் ஆசிரியர் பாலகுமார் விஜயராமன். நூல் வனம்  பதிப்பகத்தால் ஜீன் 2016-ல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 128 பக்கங்கள் உள்ள இந்தப் புத்தகத்தின் விலை ரூ 80 ஆகும்

                         ***************************************************

. நூல் விமர்சனத்திற்காக என்னால் தயாரிக்கப்பட்டு, என் குரலில் ஒலிபரப்பானது. மதுரை அகில இந்திய வானொலிக்கு எனது நன்றிகள். வா.நேரு

Monday, February 20, 2017

மூளை தானம் கோரும் விஞ்ஞானிகள்

மூளை தானம் கோரும் விஞ்ஞானிகள் - காணொளி

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ஒருவர் இறந்த பிறகு அவரது மூளையை மருத்துவ ஆய்வுகளுக்கு தானமாக தந்து உதவுமாறு விஞ்ஞானிகள் கேட்கிறார்கள்.
குறிப்பாக மன அழுத்தம் மற்றும் விபத்தின் பின்னரான மன உளைச்சல் ஆகியவை குறித்த புதிய சிகிச்சைகளுக்கான ஆய்வுகளுக்காக அதிக மூளைகள் தேவைப்படுகின்றன.
இவை குறித்த மேலதிக தகவலுக்காக பொஸ்டனில் உள்ள மூளை வங்கிக்கு பிபிசி குழு சென்றது.

http://www.bbc.com/tamil/global-39031130
நன்றி : பி.பி.சி. 20.02.2017
குருதிக்கொடை,கண் கொடை,  உடல் கொடை என்பதற்கு அடுத்தகட்டமாக உடல் மூளை நன்கொடை பற்றிய பி.பி.சியின் செய்தி இது. நரம்பியல் மற்றும் குணம் சம்பந்தமான புதிர்களைத் தீர்க்க இந்த மூளைக் கொடை உதவும் என்று அறிவியல் அறிஞர்கள் சொல்கின்றார்கள். தமிழ் நாட்டில் மூளை நன்கொடைத் தனியாகக் கொடுக்கவேண்டுமா அல்லது உடல் கொடையிலியே தனியாக மூளையை எடுத்துக்கொள்ளலாமா என்பது தெரியவில்லை......தெரிந்தவர்கள் விவரிக்கலாம். 

Saturday, February 18, 2017

அண்மையில் படித்த புத்தகம் : ' எங்கேயும் எப்போதும் ' சிறுகதைத் தொகுப்பு
இன்று நாம் காண இருக்கின்ற புத்தகத்தின் தலைப்பு " எங்கேயும் எப்போதும் " . இதன் ஆசிரியர் பொள்ளாச்சி அபி. 'ஒரு துளிக்கவிதை' புதுச்சேரி வெளியீடு. கவிஞர் ஈரோடு தமிழன்பன் பிறந்த நாள் வெளியீடாக வெளியிட்ட நாள் 25.10.2016,  232 பக்கங்கள் உள்ள இந்த புத்தகத்தின் விலை ரூ 160

'எங்கேயும் எப்போதும் ' இன்னும் இந்தப்புத்தகம் ஒரு சிறுகதைத் தொகுப்பு. இதன் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி தனது என்னுரையில் ' வணக்கம் தோழர்களே ' என ஆரம்பித்து இது தனது முதல் சிறுகதைத் தொகுப்பு என்பதனைக்கூறுகின்றார்.  தொடர்ந்து ' அன்றாடம் சந்திக்கின்ற ,கேள்விப்படுகின்ற, வாசிக்கின்ற சில அனுபவங்களுக்கு முன்னும் பின்னும் இருப்பவற்றை- இருந்தவற்றையே சிறுகதைகளாக எழுதுகிறோம் என எல்லோரும் சொல்வதைத்தான் நானும் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
அந்த வகையில் , இந்தக் கதைகள் எல்லாமே நீங்கள் தந்ததுதான். அதனைப் பதிவு செய்தது மட்டுமே நானாக இருக்கிறேன். முடிந்தவரை புனைவுகளைத் தவிர்த்து எதார்த்தத்தில் என்னவெல்லாம் நடந்ததோ அதனைப் பெரும்பாலும் அப்படியே தந்திருக்கிறேன் ' எனக் குறிப்பிடுகின்றார். இந்தச்சிறுகதைத் தொகுப்பில் உள்ள 27 கதைகளையும் படித்து முடித்தபிறகு பொள்ளாச்சி அபியின் கதைகள் அனைத்தும் நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை இலக்கிய விவரிப்புகளோடு காண்கின்ற காட்சியாகத்தான் தென்படுகிறது.எதுவுமே வானத்திலிருந்து குதித்து எழுதிய கதையாகத் தெரியவில்லை.

'எங்கேயும் எப்போதும் ' என்னும் இந்தச்சிறுகதை தொகுப்பு நூலுக்கு புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ அவர்கள் அணிந்துரை அளித்துள்ளார். அவர் தனது அணிந்துரையில் 'இலக்கிய வடிவங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது சிறுகதைதான் .கவிதைகளை நேசிப்பது, வாசிப்பது என்பதைவிட ஒரு பிடி கூடுதலாகத்தான் நான் சிறுகதையை நேசிக்கிறேன். வாசிக்கிறேன். புதுமைப்பித்தனை, அழகிரிசாமியை, மெளனியை,ஜெயகாந்தனை, பிரபஞ்சனை வாசிப்பதுபோலவே இன்றைய புதிய சிறுகதை ஆசிரியர்களையும்  நான் வாசிக்கிறேன்.

செய் நேர்த்தியில் வேறுபாடுகள் தெரிந்தாலும் வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் படைப்புக்குள் கொண்டு வருவதில் புதியவர்கள் ஒன்றும் சளைத்தவர்களில்லை.
சிறுகதைகளில் மட்டும் அப்படி என்ன ஈர்ப்பு ?        

 தேனீக்கள் எல்லைகள் கடந்து மலர்க் கூட்டங்களைத் தேடி,நாடித் துளித்துளிகளாய் மலர்களில் உள்ள இனிப்புச் சுரப்பை உறிஞ்சி வயிற்றில் சுமந்து,கூட்டுக்கு வந்ததும் ஆற அமர வயிற்றிலே சில பல வேதிமாற்றங்களைச் செய்து,அந்த இனிப்பைத் தேனாக்கிச் சேமித்துத் தருகிறதே,அப்படித்தான் சிறுகதை ஆசிரியர்களும்.வாழ்க்கை அவர்களின் படைப்பில்,படைப்பாற்றலில் வேதி மாற்றமடைந்து அழியாத கலையாகிறது;இலக்கியமாகிறது.

       சிறுகதை என்பது சிறிய கதை இல்லை.சின்னதாய்க் கதை சொல்வதால் அது சிறுகதை ஆவதில்லை.கதைகள் வேறு இது வேறு.வாழ்க்கையின் ஒரு பகுதி,உணர்வோட்டத்தின் ஒரு துணுக்கு,கதாபாத்திரங்களினுடனான கணநேரத் தீண்டலின் சிலிர்ப்பு இவற்றில் ஏதோவொன்றோ அல்லது இதுபோன்ற பிறிதொன்றோ படைப்பாளியின் எழுத்தாற்றலால் நம் மனமேடையில் நடத்தும் நாடகமே சிறுகதை.

       சிறுகதை ஆசிரியன் பேராற்றலோடு சுழித்தோடும் வாழ்க்கை என்னும் ஆற்றின் ஒரு கரையில் இறங்கி வாசகர்களின் கழுத்தைப் பிடித்து ஓடும் ஆற்று நீரில் சில கணங்கள் முக்கி எடுத்து விடுகிறான்.

முங்கி எழுந்த வாசகர்களாகிய நமக்கோ அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே கொஞ்ச நேரம் பிடிக்கிறது.உள்ளே முங்கியிருந்த கணத்தில் வந்து மோதிய ஆற்று நீரின் வேகம்,குளிர்ச்சி,வாசம்,சுவை இவைகளெல்லாம் நினைவில் மீண்டும் மீண்டும் அலை அலையாய் வந்து மோதி நம்மைப் பரவசப்படுத்துகின்றன.ஆறு எங்கே தொடங்கியது? எங்கே முடியப் போகிறது? எதுவும் நமக்குத் தெரியாது;நமக்கு அதைப் பற்றிக் கவலையுமில்லை.

       நீரில் முங்கிய நேரத்தில் கடந்துபோன ஆற்றுப் பெருக்கைத்தான் நமக்குத் தெரியும்.நம் உறவு அதனோடுதான்.அது தந்த அதிர்ச்சி,சிலிர்ப்பு,மகிழ்ச்சி,பரவசம் இவை தாம் நமக்கு முக்கியம்.சிறுகதைகளும் அப்படித்தான்.நண்பர் பொள்ளாச்சி அபியின் சிறுகதைகளும்  சற்றேறக்குறைய அதைத்தான் செய்கின்றன.


                                               

       பொள்ளாச்சி அபியின் "எங்கேயும் எப்போதும்" சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் இருபத்தேழு சிறுகதைகள் உள்ளன.பெரும்பாலான சிறுகதைகள்,அவரின் சொந்த வாழ்க்கை அனுபவங்களிலிருந்தே சிறுகதை வடிவம் பெற்றிருக்கின்றன என்று ஊகிக்க முடிகிறது.எழுத்தாளர் அபியின் சிறுகதைகளுக்கான படைப்புலகம் மிக விரிந்தது.அவருடைய கதைகளின் மைய அச்சு உயிர் இரக்கம்.அபியின் உயிர் இரக்கச் சிந்தனை மனித நேயத்திற்கும் மேலானது.வள்ளலாரின் ஜீவகாருண்யச் சிந்தனையை ஒத்தது.இவரின் சிறுகதைகள் மனிதர்கள் மீதான கரிசனத்தோடு மட்டும் நின்று விடவில்லை.சிட்டுக் குருவிகள்,யானை,நாய்,புளியமரம் என்று உலகின் அனைத்து உயிர்களின் வதை மற்றும் வாதைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றது.உயிர் இரக்கம் என்கிற மைய அச்சினைச் சுற்றியே அவரின் கதைகள் இயங்குகின்றன.  " எனக்குறிப்பிட்டு தனது அணிந்துரையை கொடுத்துள்ளார். உண்மைதான், இந்தத் தொகுப்பின் மையக்க்ருத்தோட்டம் மனித நேயமும் ,உயிர்கள் நேயமும் எனத்தான் சொல்லத்தோன்றுகிறது.

                     இந்தத் தொகுப்பில் 'மெய்ப்பொருள் காண்பது அறிவு ' என்னும் சிறுகதை உள்ளது. கோயம்புத்தூர் விமான நிலையம். விமானத்திலிருந்து இறங்கி வெளியே வரும் பயணி சண்முகம், அவரைச்சுற்றி வாடகைக்கு கார் வேண்டுமா எனும் பல குரல்கள், அந்தக்குரல்களில் மிகப்பாவமாக இருக்கும் ஒரு ஓட்டுநரின் காரில் ஏறிக்கொள்ளும் சண்முகம், அந்தக் கார் என்ன வகைக் கார் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஏறிய சண்முகத்திடம், ஓட்டுநர் பேச ஆரம்பிக்கின்றார். ஓட்டுநர்  பாடல் கேட்கிறீர்களா ? எனக்கேட்க , சண்முகம் தன்னிடம் இருக்கும் பென் டிரைவைக் கொடுத்து அதனைப் போடச்சொல்கின்றார். பென் டிரைவ் -லிருந்து பறை இசை கேட்கிறது. அந்த இசை எழுவதை, ஒலிப்பதை மிக நுணுக்கமாக நூலின் ஆசிரியர் விவரித்துச்செல்கிறார். முடிவில் பலர் கைதட்டுவதும் , பாராட்டுவதும் கேட்கிறது. கார் ஓட்டுநர் ," இசை நமது இசை, பாராட்டுவது வெள்ளைக்காரர்கள் குரல்போல இருக்கிறதே " எனக் கேட்கிறார். ஆமாம் , லண்டனில் சென்று இசை வாசித்தேன். வெள்ளைக்காரர்கள்தான் பாராட்டினார்கள் என சண்முகம் சொல்கின்றார். பேசிக்கொண்டே வரும்போது சண்முகம் இறங்க வேண்டிய கிராமம் வருகிறது. முன்னாடியே இறங்கிக்கொள்கிறேன் என்று சண்முகம் சொல்ல , இல்லை சார் நான் ஊருக்குள்ளேயே வந்து இறக்கி விடுகின்றேன், நானும் ஒரு தேனீர் குடித்து செல்கிறேன் என்று சொன்ன ஓட்டுநர் ஊருக்குள் இருக்கும் ஒரு தேனீர்கடைக்கு முன்னால் நிறுத்துகின்றார். அப்போது ஒரு இறுக்கமான முகத்தோடு சண்முகம் இருக்கின்றார். கார் ஓட்டுநர் தேநீர்கடையில் தேநீர் கேட்க, பிளாஸ்டிக் கப்புகளில் தேநீர் தரப்படுகிறது. சூடாக இருக்கும் தேநீரை பிளாஸ்டிக் கப்பில் குடிக்க அல்லல்படும் கார் ஓட்டுநர் கடைக்கு உள்ளே அமர்ந்திருப்பவர்கள் சிலர் சில்வர் டம்பளர்களில் தேநீர் குடிப்பதைப் பார்க்கின்றார். இவர்களைப் போல இன்னும் சிலர் கடைக்கு வெளியே நின்று பிளாஸ்டிக் கப்புகளில் தேநீர் குடிப்பதைப் பார்க்கின்றார். ஏதோ புரிய சண்முகத்தை கார் ஓட்டுநர் பார்க்கின்றார். சண்முகத்தின் கண்களில் நீர் கோர்த்து நிற்கிறது. இதுதான் கதை. மிக நுட்பமாக சில கிராமங்களில் இன்றைக்கும் நிலவும் சாதிக் கொடுமையை, இரட்டை டம்ளர் முறையை விவரிக்கும் கதை. லண்டனில் சென்று நீ இசைக்காகப் பரிசு வாங்கி வந்தாலும் , எங்கள் கிராமத்தைப் பொறுத்தவரை உனக்குத் தனி டம்ளர்தான் என்ற மனப்பான்மை கொண்டிருக்கும் மனிதர்களைப் பற்றிச்சொல்லும் கதை.

            இந்தத் தொகுப்பின் தலைப்பாக அமைந்திருக்கும் 'எங்கேயும் எப்போதும் ' என்னும் சிறுகதை ஜனவரி மாதம் 4ந்தேதி 2015-ல் மூன்று நாடுகளில் நடக்கும் மூன்று வகையான நிகழ்வுகளை நமக்குத் தருகின்றது. நியூயார்க் நகரில் தனது காதலனோடு சண்டையிடும் சாரா, இலங்கை யாழ்ப்பாணத்தில் அரேபியா நாட்டிற்கு தனது பெண் ரிசானைவை  வேலைக்கு அனுப்பிவிட்டு ஒரு வருசம் முடியட்டும் என்று காத்திருக்கும் அவரது பெற்றோர் பசீர், பாத்திமா, இந்தியாவில் தமிழகத்தின் ஒரு கிராமத்தில் இருக்கும் இசக்கியம்மாவின் பத்தாவது படிக்கும் மகள் செல்வி, கழிப்பறை இல்லாத காரணத்தால் கிராமத்தை ஒட்டி இருக்கும் காட்டுக்குள் செல்கின்றாள் என மூன்று பேரை விவரித்து விட்டு முடிவுரையாக  2015-ஜனவரி 5 என்று தேதியிட்டு நியூயார்க் சர்ச்சு வளாகத்திலும், சவூதியில் ஒரு அரேபியன் வீட்டிலும், தமிழக கிராமம் ஒன்றின் சாலையோரக்கோவில் அருகிலும், சித்திரவதை செய்யப்பட்டு, கற்பழித்துக்கொலை செய்யப்பட்டதாக அன்றைக்கு வெளியாகியிருந்த அந்தந்த நாட்டு தினசரி செய்தித்தாள்களில் , தொலைக்காட்சிகளில் பெண்களின் புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகியிருந்தன. " கடவுளே ....உனக்கு இரக்கம் என்பதே இல்லையா ...? என்று எங்கேயும் எப்போதும் நிறைந்திருக்கும் அவரவர்களின் கடவுளை எண்ணி மனதுக்குள் அங்கலாய்த்துக்கொண்டே , அந்தந்த நாட்டு மக்கள் படித்துக்கொண்டும் பார்த்துக்கொண்டுமிருந்தனர் " என்று முடியும் இந்தச்சிறுகதை மிக அழுத்தமாக எங்கும், எந்த நாட்டிலும், எந்த இடத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதனை மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது.

             யானைகள் கூட்டம் கூட்டமாக குடியிருப்பு பகுதிகளில் வருகின்றன என்று செய்தித்தாள்களில் படிக்கின்றோம். யானைகள் இருக்கும் இடத்தில் நாம் போய் குடியிருப்புக்களைக் கட்டிக்கொண்டு வசிக்கின்றோம். பின்பு யானைகளைத் துரத்துகிறோம். யானை தன் நிலையிலிருந்து சொல்லும் கதையான 'நீயே சொல்லு சார்'  யானைகள் தங்கள் தரப்பு நியாயத்தை மனிதர்களிடம் பேசுவதாக அமைந்த கதை. அதனைப் போல வெட்டப்படும் மரங்களால் பூமியில் சுற்றுச்சூழல் மாறுகிறது.ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழுகிறது. அடுத்தடுத்த சந்திதிகளுக்கு உயிர்வாயு கிடைக்குமா என்னும் கேள்வி எழுகிறது. புளியமரம் ஒன்று தனது சொந்தக்கதையை, சோகக்கதையைப் பேசும் ' இதுதான் விதியா ? " என்னும் கதை மனிதர்கள் பேசுவது போல பேசிக்கோண்டே சென்று கடைசியில் புளியமரம் சொல்வதாக முடிகின்றது. 'சுத்தம் ' என்னும் சிறுகதை அஞ்சல் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்வுகளோடு ஒப்பிட்டு இன்றைய எதார்த்தத்தைப் பேசுகிறது. நல்ல நையாண்டித்தனம் நிறைந்த வார்த்தகளால் ஆன கதை. வங்கிகளின் மாறுபட்ட முகங்களைக் காட்டும் ' நமக்கும் தெரிந்த முகங்கள் ' நாம் அனைவரும் வாசித்து பார்த்து உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டிய கதை.

" இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளின் முழுமை என்பது அதன் அரசியல் பார்வையோடு தொடர்புடையது. கதையின் ஊடாக வெளிப்படும் படைப்பாளியின் சமூக விமர்சனங்களும் எதிர்க்குரல்களுமே இத்தொகுதியின் தனித்த அடையாளம் . அபியின் பெரும்பாலான கதைகள் எந்த அரசியலையும் தனித்த அடையாளங்களோடு உரத்த குரலில் பேசுவதில்லை. மாறாக எல்லாக்கதைகளின் ஊடாகவும் இழையோடும் நுண் அரசியலோடு இத்தொகுப்பு இயங்குகின்றது." என பேரா.இளங்கோவன் சொல்வதைப்போல இந்தத் தொகுப்பு இலக்கியத்தின் வழியான ஒரு கலகக்குரலாகவே வாசிக்க இயலுகிறது. நீங்களும் வாசித்துப்பாருங்கள் .புத்தகத்தின் தலைப்பு " எங்கேயும் எப்போதும் " . இதன் ஆசிரியர் பொள்ளாச்சி அபி. 'ஒரு துளிக்கவிதை' புதுச்சேரி வெளியீடு. கவிஞர் ஈரோடு தமிழன்பன் பிறந்த நாள் வெளியீடாக வெளியிட்ட நாள் 25.10.2016,  232 பக்கங்கள் உள்ள இந்த புத்தகத்தின் விலை ரூ 160 .

18.02.2017 காலை 7-05 மணிக்கு மதுரை வானொலியில் நூல் விமர்சனம் பகுதியில் முனைவர் வா.நேரு-வின் குரலில், அவரால் தயாரிக்கப்பட்டு , ஒலிபரப்பபட்டதன் எழுத்து வடிவம்.
நன்றி : அகில இந்திய வானொலி, மதுரை .