Saturday 30 January 2016

ஜாதி ஒழிப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்திய எங்கள் குடும்பம் ......

தருமபுரி ஊமை செயராமன்  - தமிழ்ச்செல்வி குடும்பம் என்பது 
பகுத்தறிவுக் குடும்பம் - பெரியார் கொள்கையால் வெற்றி பெற்ற எங்கள் குடும்பம்
அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக இடஒதுக்கீடுபற்றி
பேசியுள்ள மக்களவைத் தலைவர் சுமித்திரா மகாஜன்மீது நடவடிக்கை தேவை
தமிழர் தலைவரின் வாழ்வியல் - சமூகநீதி உரை
தருமபுரி, ஜன. 28 மக்களவைத் தலைவராக இருக்கக் கூடிய பிஜேபியைச் சேர்ந்த சுமித்திரா மகாஜன் - இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவும், அண்ணல் அம்பேத்கர் கருத்தைத் திரித்துப் பேசியும் இருக்கிறார்  - அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் குறிப்பிட்டார்.
தருமபுரி ஊமை செயராமன் - தமிழ்ச்செல்வி குடும்பம் என்பது தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கையை ஏற்றுக் கொண்ட ஜாதி ஒழிப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்திய எங்கள் குடும்பம் மற்றவர்களும் இதனைப் பின்பற்ற வேண்டும் என்று மேலும் வாழ்வியல் சிந்தனைக் கருத்துக்களையும் எடுத்துக் கூறினார்.
26.1.2016 அன்று தருமபுரி ஊமை.ஜெயராமன் - தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோரின் பெரியார் - அம்பேத்கர் இல்லத்தினை திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
இரண்டு இல்லங்கள் - பல உள்ளங்களைத் திறக்கக்கூடிய இல்லங்கள்
நடைபெறக்கூடிய இந்த இரண்டு இல்லங்கள் ஒரு புரட்சிகரமான அமைதிப் புரட்சியை திராவிடர் கழகமும் அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய இயக்கம் நாட்டிலே நடத்திக் கொண்டிருக்கக்கூடியது என்பதற்கு அடையாளமாக உருவாக்கப்பட்டிருக்கக் கூடிய இந்த இரண்டு இல்லங்கள் - பல உள்ளங்களைத் திறக்கக்கூடிய இல்லங்கள் என்பதை நான் முதலில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
இந்த நிகழ்ச்சி நம்முடைய வாழ்நாளில் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி. எனக்கு முன்பாக உரையாற்றிய எங்களுடைய கழகத் துணைத் தலைவர் அவர்கள், வெகுவேகமாக நிறைய செய்திகளைச் சொல்லியிருக்கிறார். நான் அதிக நேரம் பேசவேண்டிய அவசியம் இல்லை.
இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், இது நம் குடும்பத்து நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியில் மிகப்பெரிய வாய்ப்பு என்னவென்றால், ‘‘பெரியார் - அம்பேத்கர்’’ என்று இந்த இல்லத்திற்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். என்மீது இருக்கக்கூடிய அன்பின் காரணமாக ‘தமிழர் தலைவர் வீரமணி இல்லம்’ என்று அவர்கள் பெயர் வைத்திருந்தாலும் அதில் எனக்கு முழு உடன்பாடு கிடையாது. ஆனால், வீரமணி இல்லம் என்றாலும், அது பெரியாரின் இல்லம்தான். பெரியார்தான் வீரமணியினுடைய முகவரி. ஆகவே, அதுவும் பெரியார் இல்லம்தான்; அதுவும் அம்பேத்கர் இல்லம்தான்.
பூஜை அறை முக்கியமல்ல;
புத்தக அறைதான் முக்கியம்!
ஆகவே, பெரியார் - அம்பேத்கர் இல்லம் ஒன்று; பெரியார் - அம்பேத்கர் இல்லம் இரண்டு என்று சொல்லக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். எனவே, இவர்களுடைய இந்த இல்லத்திலும் - எந்த இல்லமாக இருந்தாலும் பழையவர்கள் என்ன செய்வார்கள் என்றால், பூஜை அறை இருக்கிறதா? என்று பார்ப்பார்கள். இது பகுத்தறிவுக் காலம். எனவே, இந்த மேடையில் இருக்கின்ற அறிஞர் பெருமக்கள் எல்லோரையும் வைத்துக்கொண்டு நான் சொல்கிறேன். வீட்டிற்குப் பூஜை அறை முக்கியமல்ல; புத்தக அலமாரிகள் இருக்கக்கூடிய புத்தக அறைதான் மிக முக்கியமானது. அதுதான் அகத்தை புத்தக அகமாக ஆக்கும். ஒரு புது உள்ளத்தை உருவாக்கும், அதுதான் மிக முக்கியமானது.
ஆகவே, நீங்கள் ஒரு நல்ல நூல் நிலையத்தை அமைக்கவேண்டும். நேற்று அரூர் தோழர் ராஜேந்திரன் அவர்களுடைய இல்லத்திற்குச் சென்றிருந்தேன். அவருடைய இல்லத்தில் ஒரு பெரிய நூலகத்தை  வைத்திருந்தார். அதனைப் பார்த்தவுடன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் எவ்வளவு பெரிய வீடு கட்டியிருக்கிறார் என்பதை நான் பார்ப்பதைவிட, அந்த இல்லத்தில் அவர் எவ்வளவு நூல்களை வைத்து ஓர் அற்புதமான நூலகத்தை வைத்திருக்கிறார் என்றுதான் பார்த்தேன்.
புத்தகங்கள் பகுத்தறிவு வெளிச்சத்தைக் கொடுக்கும்; மூடநம்பிக்கையை அழிக்கும்!
எனவே, ஒரு வீட்டினுடைய சிறப்பு என்னவென்று பார்த்தால், எவ்வளவு சாமி படங்கள் இருந்தன என்பதல்ல - அது அந்தக் காலம். இன்றைக்குப் பூஜை அறை இருப்பதைக் கண்டு நிறைய பேர் பயப்படுகிறார்கள்; பூஜை அறை வைத்தவர்கள் எல்லாம். எதற்காக என்று உங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும். வருமான வரித்துறையினர் வந்தால், நேரே பூஜை அறைக்குத்தான் செல்கிறார்கள். அங்கே சென்று பிள்ளையாரை ஒரு உலுக்கு உலுக்கி தோண்டிப் பார்த்தால், அதற்குக் கீழேதான் கருப்புப் பணம் இருந்தது என்கிறார்கள். பிள்ளையார் அதைப் பாதுகாப்பதற்குத்தான் பயன்பட்டிருக்கிறார். ஆனால், இந்தப் புத்தகங்கள் பகுத்தறிவு வெளிச்சத்தைக் கொடுக்கும்; மூடநம்பிக்கையை அழிக்கும்; பெண்ணடிமையைத் தகர்க்கும்; எல்லாருக்கும் எல்லாமும் இருக்கக்கூடிய ஒரு வாய்ப்பை உருவாக்கும்.
வாழ்வார்களா? வீழ்வார்களா?
இதில் ஒரு பெரிய வாய்ப்பு என்னவென்றால், தந்தை பெரியார் அவர்களுடைய பகுத்தறிவுக் கொள்கையைப் பின்பற்றினால், ஜாதி ஒழிப்புக் கொள்கையைப் பின்பற்றினால், மூடநம்பிக்கை ஒழிப்புக் கொள்கையைப் பின்பற்றினால், பெண்ணடிமை ஒழிப்பைப் பின்பற்றினால், அவர்கள் வாழ்வார்களா? வீழ்வார்களா? என்கிற கேள்விக்கு, வாழ்வார்கள்! வாழ்வார்கள்!! வாழ்வார்கள்!!! என்பதற்கு அடையாளம் இந்த இரண்டு இல்லங்கள்.
எங்களுடைய தோழர், ஜெயராமன், ஊமை.ஜெயராமன், ஊமை ஜெயராமன் என்று மற்றவர்கள் சொல்லும்பொழுது, சிலர் என்னிடம் கேட்டனர், என்னங்க ஊமை.ஜெயராமனிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறீர்களே, அவர் எப்படிப் பேசுகிறார் என்று? இல் லீங்க,  அது அவர் தந்தையாருடைய பெயர்; அதன் சுருக்க மாக அவர் இரண்டு எழுத்தில் வைத்திருக்கிறார் என்றேன்.
இங்கே உரையாற்றிய கவிஞர் அவர்கள் சொன்னார், நம்மாட்களுக்கு பெயர் எப்படி வைத்திருக்கிறார் பாருங்கள்; மண்ணாங்கட்டி என்று பெயர் வைத்தார்கள். அதற்கு ஒரு காரணத்தையும் சொன்னார்கள், பிறந்த குழந்தையெல்லாம் இறந்து போய்விடுகிறது. மண்ணாங்கட்டி என்று பெயர் வைத்தால், இந்த மண்ணில் தங்கும் அதனால்தான் என்று. பிறந்த குழந்தை இறக்காமல் இருப்பது, மருத்துவர்களின் கைகளில்தான் இருக்கிறது.
அதுமட்டுமல்ல, நாங்கள் பல்கலைக் கழகத்தில் படிக்கும்பொழுதே, ஆண்களுக்குப் பெயர் பாவாடை என்று பெயர் வைத்திருந்தார்கள். நல்ல பெயர் வைக்கக்கூடாது என்று மனுதர்மத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். மனுதர்மம்தான் இந்து லா.
ஒரு பகுத்தறிவுக் குடும்பத்தை உருவாக்கக்கூடிய வாய்ப்பு எப்படி ஏற்பட்டது - இந்தக் கொள்கையால்தானே!
தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் எதற்காக? இந்த இரண்டு தலைவர்கள் பிறக்காமல் இருந்திருந்தால், நமக்கு இந்த அறிவு தோன்றியிருக்குமா? இந்த இழிவு நீங்கியிருக்குமா? என்பதை அருள்கூர்ந்து நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
நம்மவர்கள் படிக்கக்கூடாது என்று சொன்னார்களே, இன்றைக்கு ஜெயராமன் - தமிழ்ச்செல்வி ஆகியோர் இவ்வளவு பெரிய குடும்பத்தை உருவாக்கக்கூடிய வாய்ப்பு - ஒரு பகுத்தறிவு குடும்பத்தை உருவாக்கக்கூடிய வாய்ப்பு எப்படி ஏற்பட்டது? இந்தக் கொள்கையால்தானே! அவருடைய மச்சான்  மதுரை பாண்டியராஜ் அவர்கள் அருமையாக உரையாற்றினார். அவர் வியாபாரம் செய்பவர், இவ்வளவு விஷயங்களைச் சொல்கிறார் என்றால், அது சாதாரணமானதா?
ஒரு ஜாதியை விட்டு, இன்னொரு ஜாதியில் திருமணம் செய்தால், கத்தியைத் தூக்கிக்கொண்டு வருகிறார்கள்; அரிவாளைத் தூக்கிக் கொண்டு வருகிறார்கள். அறிவை பின்னால் வைத்துவிட்டு, அரிவாளை முன்னால் வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட சமுதாயம் இன்றைக்கு இருக்கின்ற காலத்தில், இதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாக, இவர்கள் இரண்டு பேரும் பணியாற்றும்போது காதல் புரிந்து - வாழ்க்கைத் துணைவர்களைத் தேர்ந்தெடுத்த பிறகு, அவருடைய மச்சான் அரிவாளை எடுக்கவில்லையே! பாராட்டுப் பத்திரம் அல்லவா படிக்கிறார். ஜெயராமன் அவர்களால் என்னுடைய தங்கைக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைத்தது என்று பெருமையாகச் சொல்லக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் சிலர் சொல்கிறார்கள், கவுரவக் கொலை என்று. கொலை என்பதே மிகவும் அசிங்கமான விஷயம்!
பெரியார் - அம்பேத்கர் இரண்டு பேரும்
உலகத் தலைவர்கள்
எனவே, இது ஒரு பெரிய வாய்ப்பான நேரம். பெரியார் - அம்பேத்கர் இரண்டு பேரும் உலகத் தலைவர்கள். இவர்கள் இரண்டு பேரும் உள்ளூர்த் தலைவர்கள் அல்லர். நிறைய பேர் நினைக்கிறார்கள், அம்பேத்கர் என்றால், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்குத் தலைவர் என்று, அவரை ஒரு சிறிய சிமிழுக்குள் அடைக்கவேண்டும் என்று. அவர் உலகச் சிந்தனையாளர், உலகப் புரட்சியாளர்.
எனவே, அப்பேர்ப்பட்ட புரட்சியாளர்களுடைய பெயர் களில் இப்படிப்பட்ட வாய்ப்பு. நம்மூரில் சொல்வார்கள், ‘‘கல்யாணத்தைப் பண்ணிப் பார்; வீட்டைக் கட்டிப் பார்’’ என்று. ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன்பாகவே கல்யாணத்தைப் பண்ணிப் பார்த்துவிட்டார்கள். அதனால்தான், இந்த வீட்டைக் கட்டிப் பார்த்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் நமக்கெல்லாம் படிப்பு வராது என்று சொன்னார்கள்; படிக்கக்கூடாது என்று சொன்னார்கள். இந்த ஒரு குடும்பத்தை மட்டும், பெரியாருடைய இயக்கம், திராவிடர் இயக்கம் - ஏனென்றால், இன்றைக்கு சில அறிவாளிகள் சொல்கிறார்கள், திராவிடத்தால் வீழ்ந்தோம், வீழ்ந்தோம் என்று உளறிக் கொண்டிருக்கிறார்கள்.  திராவிடத்தால் ஒருபோதும் விழமாட்டார்கள்; டாஸ்மாக்கினால் வீழ்ந்திருப்பார்களே தவிர, திராவிடத்தால் ஒருபோதும் விழமாட்டார்கள்.
திராவிடத்தால் எழுந்திருக்கிறார்கள். ஊமை.ஜெயராமன் - தமிழ்ச்செல்வி ஆகியோருடைய மகன் டாக்டர் சந்திரபோஸ் அம்பேத்கர் எம்.எஸ்., கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர். அதேபோன்று, டாக்டர் ஆர்.கே.போஸ் (மருமகள்) விஜயா மருத்துவமனையில் டாக்டர். அதேபோன்று மகள் கனிமொழி எம்.பி.பி.எஸ்., மகன் டாக்டர் திராவிடன் அம்பேத்கர் எம்.டி., மும்பையில் இருக்கிறார். டாக்டர் கீர்த்தி (மருமகள்) மும்பையில்.
பெரியாரைப் பின்பற்றுகிறவர்கள் வெற்றி அடைந்தே தீருவார்கள். அம்பேத்கர் கொள்கையை ஏற்கிறவர்கள் வீழமாட்டார்கள்
இவர்களுடைய திருமணம் ஜாதி மறுப்புத் திருமணம். ஆனால், இவர்களுடைய பிள்ளைகள் இவர்களைவிடத் தாண்டிவிட்டார்கள். இவர்களோ கிராஜுவேஷன் - அவர்கள் பிள்ளைகள் போஸ்ட் கிராஜுவேஷன் மிகப்பெரிய அளவிற்கு. மொழி ஒரு தடையல்ல. எவ்வளவு பெரிய வளர்ச்சி என்று நினைத்துப் பாருங்கள். ஆகவே, இன்னமும் பழையதைத் தூக்கிக் கொண்டிருக்காதீர்கள். மற்றவர்களுக்கு இது ஓர் எடுத்துக்காட்டு - அதனைப் பிரச்சாரம் செய்வதற்குத்தான் நாங்கள் வந்திருக்கிறோம். இது ஒரு பிரச்சார விழா; வெற்றி விழா! பெரியாரைப் பின்பற்றுகிறவர்கள் வெற்றி அடைந்தே தீருவார்கள். அம்பேத்கர் கொள்கையை ஏற்கிறவர்கள் வீழமாட்டார்கள் என்பதற்குத் தெளிவான அடையாளம்தான் இந்த விழா.
இரண்டாவதாக இந்த வீட்டைச் சுற்றிப் பார்க்கும் பொழுது எந்த இடத்திலேயும் பூசணிக்காயைக் கட்டித் தொங்கவிடவில்லை. நேரம் பார்த்து கடக்கால் தோண்டவில்லை என்பதுதான் மிக முக்கியம். திடீரென்று ஒரு நவீன மூடநம்பிக்கையை உருவாக்கிவிட்டார்கள். அதுதான் வாஸ்து சாஸ்திரம் என்று.
ஒருவன் தேர்தலில் தோற்றுப் போய் மனம் உடைந்து அமர்ந்திருப்பவனிடம் சென்று, நீங்கள் தோற்றுப் போனதற்குக் காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டேன் என்று சொல்கிறார். உடனே அவர் என்ன காரணம் என்று ஆவலோடு கேட்கிறார்.
உங்கள் வீட்டு வாசல்படி இந்தப் பக்கம் இல்லாமல், அந்தப் பக்கமாக இருந்திருக்கவேண்டும். அதனால்தான் நீங்கள் தோற்றுப் போனீர்கள். வாஸ்து சாஸ்திரப்படி இந்த வாசல்படி சரியில்லை. அதனை இடித்திருந்தால், நீங்கள் வெற்றி பெற்றிருப்பீர்கள் என்று சொன்னார்.
வாஸ்து சாஸ்திரம் என்று சொல்லி மூடநம்பிக்கையை வீட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார்கள். சாதாரணமாக ஒரு வீடு கட்டினால், ஒரு மூலையில் பூசணிக்காயைக் கட்டித் தொங்கவிடுவார்கள். அந்தப் பூசணிக்காயில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி வைத்துவிடுவார்கள்.
அந்தப் பூசணிக்காயை எடுத்து சாலையில் உடைத்து, அதனால் விபத்து ஏற்படுகின்ற வாய்ப்புகள் வரை   மூடநம்பிக்கைகள் வளர்ந்திருக்கின்ற ஒரு காலகட்டம் இது.
அறிவியல் கருவியில்கூட பார்ப்பனியம் புகுந்துவிட்டது
இன்றைக்கு தொலைக்காட்சிகள் எல்லாம்  நம் நாட்டில் ஏதாவது உருப்படியான பணிகளைச் செய்கின்றனவா என்றால், கிடையாது. ஒரு ஊரில் இருக்கின்ற நோயை, உலகம் முழுவதும் பரப்புவதுதான் நம் நாட்டில் தொலைக்காட்சிகள், ஊடகங்களின் பணியாக இருக்கிறது. ஒரு ஊரோடு தொலைந்து போயிருக்கும் மூடநம்பிக்கைகள். ஆனால், அதனை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி, உலகம் முழுவதும் பரப்புவார்கள். ஏனென்றால், மகர விளக்கு என்பதே ஒரு அப்பட்டமான பொய் என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறதே - ஆனால், அதை நேரடியாக ஒளிபரப்பி, எல்லா ஊர்களில் இருப்பவர்களும் கன்னத்தில் போட்டுக்கொள்ளும்படி செய்தால், அறிவியல் கருவியை, அறிவியலுக்கு அப்பாற்பட்ட மூடநம்பிக்கையை உண்டாக்குவது எப்படி என்பதற்கு - அறிவியல் கருவியில்கூட பார்ப்பனியம் புகுந்துவிட்டது - பழைமை புகுந்துவிட்டது.
எனவே, வாழ்க்கைக்கு பகுத்தறிவு மிகவும் அவசியம். அந்தப் பகுத்தறிவு வாழ்க்கை முறையைப் பின்பற்றினால், வரவிற்குட்பட்டு செலவழித்தால், ஒழுக்கமாக வாழ்ந்தால் வளருவார்கள் என்பதற்கு அடையாளமாகும். ஆகவேதான், இவர்கள் வளர்ந்திருக்கிறார்கள். தகடூர் தமிழ்ச்செல்வி அவர்கள் பகுத்தறிவாளர் கழகத்தில் பொதுச்செயலாளர். அவர்களுடைய பிள்ளைகள் எல்லோரும் மருத்துவர்கள்.
நீதிக்கட்சி இல்லை என்றால், நம்மவர்கள் மருத்துவர்களாகி இருக்க முடியுமா?
பல மணவிழாவில் நான் சொன்ன செய்தி அதிசய மாக இருந்தது. அது என்னவென்றால், நீதிக்கட்சி இல்லை யென்றால், நம்மவர்கள் மருத்துவர்களாக ஆகியிருக்க முடியுமா? சமஸ்கிருதம் படித்திருந்தால்தான், மருத்துவக் கல்லூரிக்கு மனு போட முடியும். அதனை நீக்கிய பெருமை நீதிக்கட்சியைச் சார்ந்தது - திராவிடர் கழகத்தைச் சார்ந்தது.
சமஸ்கிருதம் படித்தவன்தான் மருத்துவராக முடியும் என்றால், அதற்கு அர்த்தம் என்ன? கீழ்ஜாதிக்காரன் சமஸ் கிருதம் படிக்கக்கூடாது; அப்படியென்றால், மருத்துவர்களாக மேல்ஜாதிக்காரர்கள்தானே பார்ப்பனர்கள்தானே வர முடியும்.  இந்த இயக்கம் இல்லை என்றால், நம்மாட்கள் மருத்துவர்களாக ஆகியிருக்க முடியுமா?
ஒரு காலத்தில் உயர்ந்த ஜாதிக்காரர்கள்தானே வக்கீல் களாக, நீதிபதிகளாக, மருத்துவர்களாக, பொறியாளர்களாக
இருந்தார்கள் என்பதை யாரேனும் மறுக்கமுடியுமா?
அம்பேத்கர் எழுதிய, ‘‘ஊமையர்களின் குரல்’’
பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் ஒரு பத்திரிகை ஆரம்பித்தார். அந்தப் பத்திரிகைக்கு அவர் கொடுத்த தலைப்பு என்னவென்றால், ‘‘ஊமையர்களின் குரல்’’  (மூக்கநாய்க்) என்று வைத்தார். இன்றைக்கு அம்பேத்கரையே ஒன்றுமில்லாமல் செய்யவேண்டும் என்று நினைக்கிறார்கள். எதிர்த்து அழிக்க முடியாதவர்களை, அணைத்து அழிப்பது ஆரியத்தினுடைய கலைகளிலேயே உச்சமான கலையாகும்.
நாம் ஏமாந்துவிடக் கூடாது;
எச்சரிக்கையாக இருக்கவேண்டும்
முதலில் எதிர்த்துப் பார்த்தார்கள்; முடியவில்லை என்பதும் அணைத்துப் பார்த்தார்கள். இதனை நமக்குச் சொல்லிக் கொடுத்தவர் தந்தை பெரியார். ஆகவே, நாம் ஏமாந்துவிடக் கூடாது; எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
இன்னொரு செய்தியைச் சொல்கிறேன். இன் றைய நாளிதழ்களில் வெளிவந்திருக்கிறது. ஒரு நாடாளு மன்றத்தினுடைய சபாநாயகர்; கடந்த ஆட்சிகாலத்தில், ஜெகஜீவன்ராம் அவர்களுடைய மகள் மீராகுமார் அவர்கள் சபாநாயகராக இருந்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, ஒரு பி.ஜே.பி.யைச் சார்ந்த, ஆர்.எஸ்.எஸ். அம்மையார் சுமித்ரா மகாஜன் சபாநாயகராக இருக்கிறார். அவர் எவ்வளவு ‘துணிச்சலாகச்’ சொல்கிறார் தெரியுமா?
மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனின்  அடாவடிப் பேச்சு!
‘‘தற்போதுள்ள இட ஒதுக்கீடு இன்றைய காலகட்டத்தில் நீடிக்கவேண்டுமா? அம்பேத்கர் இட ஒதுக்கீடு தொடர்வதை விரும்பவில்லை. பத்தாண்டுகளுக்குப் பிறகு இட ஒதுக்கீடு தொடரக்கூடாது என்று அம்பேத்கர் கூறியுள்ளார். அப்படி தொடரவேண்டுமானால், குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்து அதன் பிறகு இட ஒதுக்கீட்டைத் தொடரவேண்டுமா? வேண்டாமா? என்று முடிவு செய்யலாம் என்று கூறியுள்ளார். இது அனைவருக்கும் தெரியும்; ஆனால், அவரது இந்தக் கருத்து தற்போது தவறாக மக்களிடையே எடுத்துச் செல்லப் படுகிறது. இன்றுவரை தொடரும் இட ஒதுக்கீடு சமூகத்தில் ஒரு சாராருக்கு இழைக்கப்படும் அநீதியாகவே பலர் கருதுகின்றனர்.
தற்போது 67 ஆவது குடியரசு நாளைக் கொண் டாடு கிறோம். ஆனால், நாடு இன்றளவும் முன்னேற்றமடையாமல் பலவிதத் தடைகளில் சிக்கி உழன்று வருகிறது. தொடரும் இட ஒதுக்கீடும் நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாக இருக்கலாம் என்று பெரும்பாலான இளைய சமுதாயத்தினர் நினைக்கின்றனர். பழைய இட ஒதுக்கீட்டு முறையே தொடரும் நிலைக்கு அரசியல்வாதிகளும், பொறுப்பில்லாத மக்கள் இயக்கங்களும் காரணம். இவர்கள்தான் இதற்குப் பொறுப்பேற்கவேண்டும். இன்னும் எத்தனை நாள்தான் இட ஒதுக்கீடு தொடரவேண்டும்?’’ என்கிறார் மக்களவை சபாநாயகர் பிஜேபியைச் சேர்ந்த சுமத்திரா மகாஜன்.
அவர்மீது இம்பீச்மெண்ட் கொண்டுவரவேண்டும். அரசமைப்புச் சட்டத்தையே அவர் படிக்கவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது.
மக்களவைத் தலைவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்!
இட ஒதுக்கீட்டை அனுபவிக்கின்றவர்களே அதைப்பற்றி தெரியவில்லை. ஒரு உதாரணத்திற்குச் சொல்கிறேன், இன்றைக்கு சாலையில் இவ்வளவு வசதியாகப் பயணம் செய்கிறோமோ, விரைவாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வருகிறோமோ, இவையெல்லாம் எப்படி நடந்தது? எப்பொழுது இதற்கு முன் அப்படி நடந்ததா? கரடு முரடான சாலைகளையெல்லாம் சரி செய்து, தி.மு.க. ஆட்சி காலத்தில், டி.ஆர்.பாலு அவர்கள் மத்திய அமைச்சராக இருந்து இதுபோன்ற வசதிகளை செய்து கொடுத்ததன் காரணமாகத்தானே விரைவாகப் பயணம் செய்ய முடிகிறது. யாராவது தி.மு.க.வை நினைக்கின்றார்களா? டி.ஆர்.பாலு அவர்களைப்பற்றி நினைக்கிறார்களா? அதுபோன்று சமுதாயத்தில் மிக வேகமாக வரக்கூடிய வாய்ப்புதான் இட ஒதுக்கீடு. சாதாரண குப்பன், சுப்பன் இதை புரியாமல் சொன்னால் பரவாயில்லை; குஜராத்தில் நீதிபதியாக இருக்கின்றவர் சொன்னார், அவர்மீது இம்பீச்மெண்ட் கொண்டு வந்தார்கள். பிறகு அவருடைய கருத்தை மாற்றிக் கொண்டார். இப்பொழுது நாடாளுமன்றத்தில் சபாநாயகராக இருக்கக்கூடிய இந்த அம்மையார் சொல்கிறார். இவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். நமக்கொன்றும் அந்த அம்மையார்மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பு கிடையாது.
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்பது பொலிட்டிக்கல் ரிசர்வேசன்; பொலிட்டிக்கல் ரசிர்வேசன் என்றால், அரசியலுக்கான இட ஒதுக்கீடு. நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் தனித்தொகுதிக்காக முதலில் 10 ஆண்டுகள் என்கிற வார்த்தையைப் போட்டார்கள்.
கல்விக்கோ அல்லது வேலை வாய்ப்புக்கோ இட ஒதுக்கீட்டிற்கு கால அளவு கிடையாது. இதுதான் அரசமைப்புச் சட்டம். இது ஒரு சபாநாயகராக இருப்பவருக்குப் புரியவில்லை என்றால், என்ன அர்த்தம்?
இட ஒதுக்கீட்டைப்பற்றி மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் சொல்லி, படாதபாடுபட்டார். இப்பொழுது அவரே தலைகீழாக மாற்றிச் சொல்லும்பொழுது,
இப்பொழுது நாடாளுமன்ற சபாநாயகர் இப்படி பேசியிருக்கிறார்; அதுவும் அம்பேத்கர் சொல்லியதாகச் சொல்கிறார். இது எவ்வளவு பெரிய  மோசடி என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
நாம் வளர்ந்தால் மட்டும் போதாது; நம்முடைய சமுதாயத்தில்  உள்ளவர்களையும் கைதூக்கி விடவேண்டும்
எனவேதான், நாம் விழிப்போடு இருக்கவேண்டும். படித்த வர்கள், நாம் வளர்ந்துவிட்டோம் என்று நினைக்கக்கூடாது. இன்னொரு விஷயம், பாராட்டவேண்டிய விஷயம், அவருடைய வீட்டைப் பற்றி சொன்னார்கள், எல்லோரையும் அவர்கள் தயார் செய்தார்கள் என்று. இல்லறம் நடத்துவது மட்டும் முக்கியமல்ல; தொண்டறம் மிக முக்கியம்.
நாம் வளர்ந்தால் மட்டும் போதாது; நம்முடைய சமுதாயத்தில் உள்ளவர்களையும் கைதூக்கி விடவேண்டும்; அப்படி கைதூக்கி விட முடியாதவர்கள், தயவு செய்து யாருடைய காலைப் பிடித்து இழுக்காமல் இருங்கள். நம் சமுதாயத்தில், கைதூக்கி விடுகிறவர்களைவிட, காலைப் பிடித்து இழுக்கின்றவர்கள்தான் அதிகம். நான் வந்துவிட்டேன், எனக்கு நிகராக அவன் அறிவாளியாக வரக்கூடாது என்று.
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது - குறள் 68
என்கிறார் திருவள்ளுவர்.
ஓர் அற்புதமான பகுத்தறிவு குடும்பம்;
பெரியார் குடும்பம்!
ஆகவே, இந்தக் குடும்பம் ஒரு அற்புதமான பகுத்தறிவுக் குடும்பம்; பெரியார் குடும்பம்; ஜாதியை ஒழித்த குடும்பம்; கல்வியைப் பெற்றுக்கொண்டால், ஜாதி ஒழியும் என்பதற்கு அடையாளமாக ஜாதி மறுப்புத் திருமணம் செய்து, இன்றைக்கு எல்லாத் துறைகளிலும் வளர்ந்திருக்கிறார்கள். இவர்களைப் பின்பற்றுங்கள். நீங்களும் இதுபோன்று வளர்ச்சியடையலாம் என்று கூறி முடிக்கிறேன்.
நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
நன்றி : விடுதலை 28.01.2016


அண்மையில் படித்த புத்தகம் : சிறைக்கைதிகளின் சிந்தனைத் துளிர்கள்...எம்.என்.ராய்

அண்மையில் படித்த புத்தகம் : சிறைக்கைதிகளின் சிந்தனைத் துளிர்கள்
ஆசிரியர்                                    :  அறிவுலக மேதை எம்.என்.ராய்
தமிழில் மொழிபெயர்த்தவர்    :   வை.சாம்பசிவம்
வெளியீடு                                  :   கங்கா-காவேரி, 18, காரியாங்குடி செட்டித்தெரு, வெளிப்பாளையம், நாகப்பட்டினம்-611 001
முதல் பதிப்பு                             :   2001   , மொத்த பக்கங்கள் 144 , விலை ரூ 35/=
மதுரை மைய நூலக எண்       :   140058

                                                                  பகுதி -1.

                                                      எம்.என்.ராய் அவர்கள் சிறையில் இருந்தபொழுது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. 1940-களில் அவர் எழுதிய கட்டுரைகள் 'எம்.என்.ராய் எழுதுகிறார்' என்ற தலைப்பில் முதல்தொகுதியாக 1963-ல் இமயப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இன்றைய இளைஞர்களுக்காக மீண்டும் வெளியிடப்படுகிறது(2001-ல்)  என்று பதிப்பகத்தார் குறிப்பிட்டுள்ளனர். ஆங்கிலத்தில் 'Fragments of Prisoner's diary ' என்ற நூல்தான் தமிழில் சிறைக்கைதிகளின் சிந்தனைத் துளிர்கள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

                                          சிறையிலிருக்கும்போது ஒரு பூனைக்கு பால் ஊற்ற, அந்தப்பூனை எம்.என்,ராயுடன் சிறைக்குள்ளேயே இருந்துவிடுகின்றது. அதன் மூலம் பூனையோடு நெருங்கிப்பழகிய எம்.என்.ராய் , பூனையின் மூலம் மிருக உளவியலை ஆராய்கின்றார். அந்த ஆராய்ச்சியின் மூலம் பூனைகள் மனிதர்களிடம் பேசினால் என்ன பேசும் , எதைப் பேசும் என்ற கற்பனைதான் இந்தப் புத்தகம். புத்தகம் ஆராய்ச்சி அடிப்படையிலானது என்றாலும் அவர் கொடுக்கும் நகைச்சுவையும் கேள்விகளும் சம்மட்டி அடிகளாக இருக்கின்றன.

                                   "ஏய் , மனிதா, எங்களை  காலம் காலமாக திருட்டுப்பூனை என்று சொல்கிறீர்கள், அபசகுனப்பூனை என்று சொல்கிறீர்கள். மாடு தனது  கன்றுக்கு கொடுக்கவேண்டிய பாலை, கன்றுக்குட்டிக்கு உரிய பாலை , திருட்டுத்தனமாக கறக்கும் மனிதர்களே, நான் அந்தப்பாலைக் கொட்டி விட்டுக்குடித்தால் என்னை திருட்டுப்பூனை என்று சொல்கிறீர்கள். எனக்கு எதுவும் உணவு இல்லாத போது பாலைக் கொட்டிவிட்டிக் குடிப்பதில் என்ன தவறு ?" என்று பூனை கேட்கிறது.

                                  அபசகுனம் என்று என்னைச்சொல்கிறீர்கள் எனச்சொல்லும் பூனை, சோதிடத்தைப் பற்றி பல்வேறு கேள்விகளைக் கேட்கிறது. பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு, செவ்வாய்க்கும் பூமிக்கும் உள்ள தொலைவு என்று பலவற்றை அறிவியல் அடிப்படையில் விளக்கும் பூனை, டேய் அந்த நட்சத்திரத்திலிருந்து ஒளி வருவதற்கே இத்தனை ஆண்டுகள் ஆகின்றது, நீ ஒரு அற்பம், பூனையைப் போல , எலியைப் போல , புலியைப்போல எப்படி ஒரு மிருகம் தாய் தந்தை சேர்க்கையால் உண்டாகிறதோ அப்படி உண்டாகக் கூடிய ஒரு நடக்கக்கூடிய இருகால் மிருகம். உனது பிறப்பை, வளர்ப்பை, நடப்பை, சிரிப்பை, படிப்பை,இறப்பை எல்லாவற்றையும்  அந்தக் கோள்களின் இயக்கம் தீர்மானிக்கிறதாம், எவ்வளவு பெரிய ஆணவம் மனிதா உனக்கு, எவ்வளவு பெரிய பேராசை உனக்கு என்று  மனிதனின் சோதிட நம்பிக்கையை பூனை இளக்காரம் செய்கிறது. 'டேய், நாங்க சோதிடம் எல்லாம் பார்ப்பதில்லை, வாழ்க்கையை வாழ்க்கையாக வாழ்கிறோம், மகிழ்ச்சியாக இருக்கும்வரை இருக்கின்றோம், இறக்கும்போது இறக்கிறோம். தொட்டதிற்கெல்லாம் ஜாதகத்தை தூக்கிக்கொண்டு அலையும் மனிதர்களே, நீங்கள் எந்த வகையில் மிருகங்களை விட உயர்ந்தவர்கள் என்று கேட்கிறது.பழங்கால மூட நம்பிக்கையான சோதிடத்தை ஏன் இன்னும் கட்டிக்கொண்டு அழுகிறீர்கள் என்று பூனை கேட்கிறது . இதோ புத்தகத்தில் உள்ள பகுதி :
               
சோதிடம் ஒரு கேலிப்பொருள் :

"சோதிடத்தைப் பற்றி இங்கு சில வார்த்தைகள் கூறுவது பொருந்தும் என நினைக்கிறேன்.இந்த பழங்கால மூட நம்பிக்கைக்கு,இந்நாட்டில் கற்றவறர்களாலும் அறிவியலுக்குரியதான மதிப்பு தரப்படுவதைக் காணும் போது அதைப் பற்றிய சில உண்மைகளைக் கூறுவது அவசியமாகிறது.மூடநம்பிக்கை எனக்கு முதற்பகை-பிறவிப் பகையுங்கூட.அதைக் கண்ணுறும் இடமெல்லாம் விரட்டியடிக்க வேண்டும் என்னும் தணிக்க முடியாத வேட்கை எனக்குப் பிறக்கிறது.இந்திய நாட்டின் அறிவு உலக வானில் கவிழ்ந்து நிற்கும் இந்த கருமேகம் அகற்றப் பட்டாலொழிய அறிவுச் சூரியனில் ஒளிக்கதிரைக் காண வழியில்லை.குறை கண்டு கண்டிப்பதென்னும் மூச்சு,பெரும் புயலாகவே மாறி மூட நம்பிக்கை என்னும் மேகத்தை அடித்துக்கொண்டு போகவேண்டும்.

         சோதிடம்,மனிதனின் 'தான்' எனும் அகங்காரத்தில் பிறந்தது;அது மனிதனை கோளியக்க அமைப்பில் சிறப்பான நிலையில் இருத்துகிறது.இந்த மனித அகங்காரம்,கோப்பர் நிக்கஸ் கண்டுபிடித்த வானியல் உண்மையின் முன்பு நிற்க முடியாமல் நிலை குலைந்து போயிற்று.பேரண்டத்தின் கோள்களுக்குள்ளே இவ்வுலகிற்கு இருந்த சிறப்பான இடம் பறி போன காரணத்தால் மனிதனின் தற்பெருமை கூனிக் குறுகிப் போயிற்று.வானுலவும் கோள்களெல்லாம் மனித இனத்திற்குப் பாதுகாவலர்களாக ஆண்டவனால் படைக்கப்பட்டது என்ற நம்பிக்கையும் அறிவியல் அடிப்படையில் நிறுவ வழியில்லை.அண்டத்தின் அமைப்பிற்குள்ளே உலகு அச்சாணி போன்றது அல்ல என்பதால்,அதன்மீது வாழும் இரு காலுள்ள மிருக இனமும் அண்டத்தின் ஒழுங்கான இயக்கத்தில் சிறப்பிடம் பெற்றதாகவும் கூற முடியாது.

      இன்னமும் நம்பப்படுகிற இந்திய சோதிடம் மிக மிகப் பழமையானது;அது எவ்வகையிலும் அறிவியல் ஆதாரத்தைத் துணைகொள்ள முடியாது.சோதிடம் என்பதே அப்பழுக்கற்ற மூட நம்பிக்கை.அது காட்டுமிராண்டி காலத்து மதத்தில் அழிந்து படாமல் எஞ்சி நிற்கும் சின்னம்.மேலை நாட்டில் விஞ்ஞான அடிப்படை கொண்டதாகக் கூறி வளர்க்கப்படும் சோதிடம் கடவுள் நம்பிக்கைக்கு உட்பட்டதல்ல என்று கூறப்படுகிறது.அது,வானுலவும் விண்கோள்கள்
ஒருவகை பௌதிக இரசாயன ஆற்றலுக்கு இந்நிலவுலக மக்களை ஆட்படுத்துகின்றன என்று கூறுகிறது.அந்தக் கருத்து பொருளற்றது;ஆனால் இந்திய சோதிடமோ கேலிக்குரியது!

தப்புக்கணக்கு
இந்து மத சோதிடப்படி 'நவக்கிரகங்கள்' எனப்படுபவை ஒன்பது விண்கோள்கள் அல்ல-அவை ஒன்பது கடவுள்கள் அல்லது துணைக்கடவுள்கள்! அவற்றுள் இரண்டு-அதாவது இராகு,கேது என்பவை கடவுளும் பேயும் கலந்த பண்புடையவை.இந்துமத சோதிடத்தைப் பகுத்தறிவுக்கு உட்படுத்துவது என்பது இயலாத ஒன்று.அதனை இன்றைய வானியல் அறிவை அடிப்படையாக்கி விளக்கவும் முடியாது.'நவக்கிரகங்'களுக்கு ஏற்பட்டிருக்கும் கடவுட் தன்மை உருவகமே என்றும் அவை உண்மையில் பௌதிக -இரசாயன ஆற்றலே வெளியிடும் விண்கோள்களே என்று வாதிடவும் வழியில்லை.வானியல் பற்றிய மிக அடிப்படையான உண்மைகள்,'நவக்கிரகங்கள்' என்ற கொள்கையையே மறுத்து ஒதுக்குகின்ற காரணத்தால்,இந்திய சோதிடத்தைப் பகுத்தறிவுக்கு உட்பட்டது எனக் காண்பிப்பதற்குச் செய்த முயற்சிகள் பயன்படவில்லை.ஆண்டாண்டு காலமாகக் கூறப்படும் 'நவக்கிரகங்களும்' அவற்றின் அமைப்பும் பொய்யாகும்போது அவற்றின் அடிப்படையில் தான் கணிக்கப்படும் சோதிடமும் பொய்த்தொழியத்தான் வேண்டும்.

    சோதிடக் கணிப்பு ஒன்பது விண்கோள்களையும் அவற்றின் இயக்கங்களையும் பொறுத்ததாம்.அந்த நவக்கிரகங்களோ
ஒன்பது விண்மீன்கள் எனக் கூறப்படுகின்றன.ஆனால் அவற்றுள் சூரியன் ஒன்று மட்டுமே விண்மீன்;மற்றவற்றுள் ஆறுகோள்கள்;எஞ்சிய இரண்டும் (இராகுவும்,கேதுவும்) மூடநம்பிக்கையில் பிறந்தவை.இந்த ஆறு விண்கோள்களும்கூட
வான மண்டலத்தோடு தொடர்புபடுத்த முடியாதவை.சந்திரன் ஒரு விண்கோள் என்று கருதப்படுகிறது.ஆனால் அது உலகம் எனப்படும் இக்கோளினுடைய இழுப்பாற்றலுக்கு உட்பட்டு இதனைச் சுற்றிவரும் கோளமே! மற்ற ஐந்தும்கூட
உண்மையான கோள்களா அல்லவா என்பது உறுதிப்படுத்தபடவில்லை.அப்படியே அவை ஐந்தினையும் உண்மையான கோள்கள் எனக் கொண்டாலும்,ஒன்பதில் ஐந்து மட்டுமே இந்துமதச் சோதிடக் கணிப்பில் இடம் பெற முடியும். ...மாய சக்தியால் மனதைப் பறிகொடுத்து விடாமல் நின்று சிறிது ஆழ்ந்தெண்ணுபவர் எவர்க்கும் சோதிட நம்பிக்கையில் உள்ள மூடத்தனம் தெளிவாகத் தெரியும் " பக்கம் 102-105. ......
                  

Monday 25 January 2016

எப்படி திரும்பினாலும் நம்மை மறித்து நிற்கும் கொடுங்கோலன்......

தனது சொற்களை மட்டுமே அவர் நம்மிடம் விட்டுவிட்டுச் சென்றுள்ளார்
மீனா கந்தசாமி

(ஜாதி, மத வெறிகொண்ட சக்திகளுக்கு எதிரான ரோஹித்வெமுலா மேற்கொண்ட ஒரு போராட்டத்தின் உச்சகட்டமாக எவரும் எதிர்பாராத அவரது மரணம் அமைந்துள்ளது.)

தாழ்த்தப்பட்ட மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது ஒரு சாதாரணமான நிகழ்வாகக் கருத முடியாது. அவருக்கு நீதி வழங்கத் தவறிய இந்த சமூகம் வெட்கித் தலைகுனியவேண்டிய நிகழ்வு அது. ஜாதி, மத வெறிகொண்ட சக்திகளுக்கு எதிரான ரோஹித்வெமுலா மேற்கொண்ட ஒரு போராட்டத்தின் உச்சகட்டமாக எவரும் எதிர்பாராத விதத்தில் அவரது மரணம் அமைந்துள்ளது.
அகில பாரத வித்யார்த்தி பரீசத் என்னும் வலதுசாரி மாணவர் அமைப்பு தெரிவித்த குற்றச்சாட்டுகளின் அடிப் படையில் ஹைதராபாத் பல்கலைக் கழக மாணவர் விடுதியில் இருந்து நீக்கப்பட்ட அய்ந்து தாழ்த்தப்பட்ட மாணவர்களில் ரோஹித்வெமுலாவும் ஒருவர். இத்தகைய ஒரு பின்னடைவுக்குப் பிறகும் தனது இறுதி மூச்சு வரை அவர் உற்சாகமாகவே இருந்திருக்கிறார்.
அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்குத் தள்ளப்பட்டிருப்பது நமது மாணவர்களின் மூர்க்கத் தனத்தை வெளிப்படுத்துவாகவே உள்ளது. அது மட்டுமன்றி,  நமது கல்வி நடைமுறை உண்மையில் எவ்வாறு உள்ளது என்பதையும்,  தனது பத்தாண்டுகால பதவிக் காலத்தில் தாழ்த்தப்பட்ட மாண வர்களை ஒரு துணை வேந்தர் எவ்வாறு வெறுத்து துன் புறுத்தி வந்தார் என்பதையும் ,
வலதுசாரி இந்துத்துவ சக்தி களின் சார்பாக தாழ்த்தப்பட்ட மாணவர்களை பழிவாங்கும் செயலில் ஒரு மத்திய அமைச்சர் ஈடுபட்டிருந்தார் என்பதையும், ஆளும் கட்சியினரின் அராஜகங்களுக்கு  நிர்வாக இயந்திரம் ஒட்டு மொத்தமாக எவ்வாறு  அடிமை யாகிப் போனது என்பதையும்,  இந்த சமூக அவலத்தின் சோக விளைவுதான்  மாணவரின் இந்தத் தற்கொலை என் பதையும்  தோலுரித்துக் காட்டுவதாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.
இந்த அய்ந்து தாழ்த்தப்பட்ட மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்த  நிகழ்வில் ஜாதிப் பாகுபாடு  செயல்பட்டதை விட மிக மோசமான முறையில்  செயல்பட்ட நிகழ்வு வேறு எதுவும் இருக்க முடியாது.
தாழ்த்தப்பட்ட மாணவர் சமூகத்தினரிடையே இந்த வேலை நிறுத்த காலம் முழுவதிலும் ஒற்றுமை உணர்வு  ஓங்கி நிலை பெற்றிருந்தது என்ற போதிலும், இந்த மாணவர்கள் நீக்கப்பட்டதுவே, கடந்த கால கவலை தரும் நிகழ்வுகளை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது.
தாழ்ந்த ஜாதி மக்கள் உயர்ஜாதி மக்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேறவேண்டும் என்று மனுஸ்மிருதி கட்டளையிடுவது போலவே, மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட இந்த தண்டனை, ஜாதியைத் தூய்மைப்படுத்தும் ஓர் சடங்கின் அடையாளமாகவே தோன்றுகிறது. தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக அவர்களை ஒழுங்குபடுத்தும் ஓர் முயற்சியாகவே கல்வி இப்போது ஆகிவிட்டது. தூய்மைப்படுத்தல், வெளியேற்றம்,
இழிவுபடுத்தப்படல் மற்றும் கல்வியைத் தொடரமுடியாமல் செய்யப்படுவது ஆகியவை பற்றிய தொடர்ந்த அச்சுறுத்தலுக்கு அவர்கள் உள்ளாக்கப்படுகின்றனர். இடஒதுக்கிடு போன்ற பாதுகாப்பளிக்கும் கொள்கைகளின் வழியே உயர்கல்வி பயிலும் தங்கள் உரிமையினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மாபெரும் போராட்டங்களை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும் ஒரு சமூகத்தில், இத்தகைய மாணவர்களில் எவ்வளவு பேர் பட்டங்களைப் பெற்று வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர்,
எவ்வளவு பேர் கல்வியைத் தொடராமல் இடையில் நின்றுபோகின்றனர், எவ்வளவு பேர் மனஅழுத்தத்தினால் நிரந்தரமான நோயா ளிகளாக ஆகிப் போயுள்ளனர், எவ்வளவு பேர் இறந்து போயுள்ளனர்  என்ற விவரங்களை வெளிச்சம் போட்டுக் காட்ட இதுவரை எவரும் துணியவில்லை.
ஆய்வுப் பட்டம் ஒன்றைப் பெறுவதற்காக ரோஹித் வெமுலா போன்றவர்கள் பல்கலைக் கழகங்களில் சேருவது ஒன்றே, அவர்களது நுண்ணறிவுக்கும், விடா முயற்சிக்கும், தொடக்க நாள் முதற்கொண்டே அவர்களை அழித்தொழிக்க முயலும் ஜாதிப் பாகுபாட்டுக்கு எதி ரான அவர்களது இடைவிடாத போராட்டத்துக்கும் அடை யாளமாகும்.
ஜாதி ஆதிக்கத்தை வலியுறுத்தும் பாடநூல்கள்,  கல்லூரி வளாகத்துக்குள் ஜாதி பாகுபாட்டினை வளர்க்கும் சூழல், தங்களது ஜாதி அந்தஸ்துக்காகப் பெருமைப்பட்டுக் கொள் ளும் சக மாணவர்கள், அவர்களது எதிர்காலத்தையே இருட்டடிக்கச் செய்யும் ஆசிரியர்கள், நாம் வெற்றி பெறப்போவதில்லை என்று தங்களுக்குத் தாங்களே செய்து கொள்ளும் தீர்மானங்கள் - ஆகிய இவை அனைத்துமே ஒரு தாழ்த்தப்பட்ட மாணவரால்  எளிதில் கடக்க முடியாத தடைகளாகும்.
ஜாதியின் காரணமாக தாங்களே அறிவில் சிறந்தவர்கள்  என்ற கருத்து கல்வியாளரிடையே திரும்பத் திரும்ப தோன்றுவது,  மக்களைக் கொன்று உயிரைப் பறிக்கும் ஆற்றல் மிகு நஞ்சாகவே ஆகிவிடுகிறது. பாகு பாட்டினை எதிர்த்து அழிப்பதற்கு மாறாக,  தாங்கள் இரு பிறப்பாளர்கள் என்ற நம்பிக்கை கொண்டவர்களின் கட்டுப்பாடற்ற ஜாதி ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் இடமா கவும், , தற்போதுள்ள நிலையே தொடரவேண்டும் என்று கருதும், புனித பூநூல் அணிந்தவர்கள்  தங்களுக்குள் அறிவுப் பறிமாற்றம் செய்து கொள்ளும் இடமாகவும் வகுப்பறைகள் ஆகிவிடுகிறன.
ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மிகச் சிறுபான்மையினரான மாணவர்களில், தாங்கள் ஒதுக்கப்பட்டு, தனி மைப்படுத்தப் பட்டுவிடுவோம் என்ற அச்சத்தால் தங்களை மறைத்துக் கொண்டு புனைவேடம் பூண முயல்பவர்களின் வேடம் வெளிப்படும்போது தண்டிக்கப்பட்டுவிடுகின்றனர்.
தங்களின் உரிமையில் நம்பிக்கை கொண்டு,  தங்கள் அடையாளத்தை  வெளிப்படையாகத் தெரிவித்துக் கொள்ள முன்வரும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஏகலை வர்களாக ஆகிவிடுகின்றனர். அவர்கள் உயிர் பிழைத் திருப்பினும், தங்கள் கலையை, கல்வியை வளர்த்துக் கொள்ள முடியாதவர்களாக ஆகிவிடுகின்றனர்.
இந்த நிலை கல்வி பயில வரும் மாணவர்களுக்கு மட்டு மல்ல; தாழ்த்தப்பட்ட, பகுஜன ஆசிரியர்களும் கூட ஜாதி ஆதிக்கம் மிகுந்த கல்வி நிறுவன வளாகத்தில் ஒதுக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுவிடுகின்றனர். சென்னை அய்.அய்.டி.யில் ஆசிரியராக என் தாய் பட்ட அவதிகளையும், மேற்கொண்ட போராட்டங்களையும்  நான் மிகுந்த அச்சத்துடன் கவனித்து வந்திருக்கிறேன்.
நான் நேசிக்கும் எனது தாய் மனமுடைந்து துன்புறுகையில் எந்த விதத்திலும் உதவி செய்ய முடியாதவளாக  வேடிக்கை பார்க்கத்தான் என்னால் முடிந்தது. நமது அய்.அய்.டிக்கள், அய்.அய்.எம்கள், பல்கலைக் கழகங்கள் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின,
பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மிகமிகக் குறைந்த பிரதிநிதித்துவம் அந்நிறுவனங்களில் நிலவும் ஜாதிப் பாகுபாட்டை முழுமையாகவே ஆக்கிவிடுகிறது. இத்த கைய பின்னணியில் இருந்து வரும் மாணவர்களின் துய ரங்களையும், இயலாமையையும் பொறுமையுடன் கேட்டு அவர்களுக்கு ஆலோசனையும் ஆதரவும் அளிப்போர் எவருமில்லை.
மரணதண்டனை அளிக்கும்  துப்பாக்கி ஏந்தியவர்களை நினைவுபடுத்துவது போன்ற பகைஉணர்வை வெளிப் படுத்தும் பார்ப்பன பேராசிரியர்கள் அடங்கிய தேர்வுக் குழுவின் முன், இத்தகைய ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒரு மாணவரால் எவ்வாறு மனஉறுதியுடன் தனது திறமையை, அறிவாற்றலைக் காட்டமுடியும்? இந்தப் பேராசிரியர்கள் அணுசக்தி இயல்பியல் பாடத்தில் கரைகண்டவர்களாக இருக்கலாம்.
ஆனால் அவர்கள் போற்றிப் பாராட்டிப் பாதுகாக்கும் ஜாதிப் பாகுபாடு, கல்வி வளாகங்களில் காணப்படும் ஜாதிதீவிரவாதம் என்னும் பிரச்சினையின் ஒரே ஒரு கோணத்தை மட்டுமே காட்டுவதாகும். அகில பாரதிய வித்யா பரீசத் போல் வலதுரி மாணவர் குழுக்களுடன் இந்த ஜாதிய உணர்வு சேரும்போது,  பேரழிவைத் தரும் உச்சத்தை அது எட்டு கிறது.
நமது பல்கலைக் கழகங்கள் நவீன கொலைகளங்களாக ஆகிவிட்டன. மற்ற போர்க் களங்களைப் போலவே, நமது உயர்கல்வி நிறுவனங்களும் ஜாதிப் பாகுபாட்டையும் தாண்டிய விஷயங்களில் தனித்திறமை பெற்றவையாக விளங்குகின்றன. பெண்கள் மீதான பாலியல் தொல்லை களுக்கும் அவை பெயர் பெற்றவை. மாணவிகள் மீது மட்டுமல்லாமல், பெண் ஆசிரியர்கள் மீதும் மேற் கொள்ளப்படும் இத்தகைய பாலியல் வன்முறைகள் பற்றிய கதைகள் வெளியே தெரியாமல் மூடி மறைக் கப்படுகின்றன;
அச்சுறுத்தல் காரணமாகவோ, வற்புறுத்தல் காரணமாகவோ, நயமான தூண்டுதலாலோ மேற் கொள்ளப்பட முயலும் பாலியல் வன்முறைக்கு இடமளிக்காமல் எதிர்த்துக் குரலெழுப்பும் பெண்களின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் வகையில் அக்கதைகள் திரித்துக் கூறப்டுகின்றன. கொலை வெறி கொண்ட ஜாதிப் பாகுபாடு பற்றிய மவுனத்தை ரோஹித்தின் மரணம் கலைத்தது போல, இத்தகைய உயர்ந்த ஜாதியினரால் மரணத்துக்கு விரட்டப்படும் பெண்களின் கதைகளை ஒரு நாள் நாம் கேட்போம்.
ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்  உயர்ஜாதியினரின் ஆதிக்க வெறியும், அரசியல் அதிகாரமும் ஒன்றிணைந்து செயல்பட்டதைத்தான் நாம் காண்கிறோம். மாநில நிர்வாக இயந்திரம், குறிப்பாக காவல் துறையினர், மாணவர்களை அச்சுறுத்திப் பணியவைக்க மேற்கொண்ட முயற்சிகள் கல்வி வளாகங்களில் நிலவும் அடக்குமுறைக்கு சரியான ஓர் எடுத்துக்காட்டாகும்.
சென்னை அய்.அய்.டி.யில் இருந்த அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தின் அங்கீகாரம் ரத்து செய்தபின்னர், அய்.அய்.டி. வளாகமே ஏதோ முற்றுகையிடப்பட்ட ஒரு கோட்டையைப் போலவே காட்சியளித்தது; சீருடை அணிந்த காவல்துறையினர் வளாகத்தின் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருந்து, வாயில்களை இரவு பகலாகக் காவல் காத்த காட்சியை நாம் கண்டோம். இதே போன்ற பெரும் அளவிலான காவல்படையினர் ஹைதராபாத் பல்கலைக் கழக வளாகத்திலும் இப்போது நிறுத்தப்பட்டுள்ளனர். 144 ஊரடங்கு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
காரல் சாகன் போன்று ஒரு அறிவியல் எழுத்தாளராக வரவேண்டும் என்ற உனது கனவை மட்டுமே, உனது சொற்களில்,  நீ விட்டுச் சென்றுள்ளாய், ரோஹித். எங்களின் ஒவ்வொரு சொல்லும் உனது சாவின் கனத்தைச் சுமந்திருக்கிறது; எங்களின் ஒவ்வொரு துளி கண்ணீரும் நிறைவேறாத உனது கனவைச் சுமந்துள்ளது. நீ அடிக்கடி பேசி வந்த வெடித்துக் கிளம்பும் ஸ்டார்டஸ்ட் ஆக நாங்கள் மாறி, இந்த அடக்குமுறை நிறைந்த ஜாதி நடைமுறையை கொளுத்தவோம். இந்நாட்டின் ஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும்,
ஒவ்வொரு கல்லூரியிலும், ஒவ்வொரு பள்ளியிலும்,  எங்களது ஒவ்வொரு முழக்கமும் உனது போராட்டத்தின் உணர்வைத் தாங்கி ஒலிக்கும். எப்படி திரும்பினாலும் நம்மை மறித்து நிற்கும் கொடுங்கோலன் என்று ஜாதியைப் பற்றி டாக்டர் அம்பேத்கர் கூறியுள்ளார். இந்திய கல்வி நிறுவனங்கள் என்னும் அக்ரஹாரங்களில், நமது இருப்பே ஜாதி ஒழிப்பு பற்றிய செய்தியைத் தாங்கியதாக இருக்கும். ஒரு தாழ்த்தப்பட்டவரையோ,
ஒரு சூத்ரனையோ, ஒரு ஆதிவாசியையோ, ஒரு பகுஜனையோ, ஒரு பெண்ணையோ எதிர்கொள்ளும் வெறுக்கத்தக்க ஜாதிவெறி கொண்ட சக்தி ஒவ்வொன்றையும், நம்மை எவ்வாறேனும் அழித்தொழிப்பதற்காக ஏற்பட்ட இந்த ஜாதிய நடைமுறையையும் அழித்தொழிக்கவே நாம் வந்திருக்கிறோம் என்பதையும்,  எங்களது கனவுகளைக் கலைக்கத் துணிந்தவர்களின் தூக்கத்தைக் கெடுக்கவே நாம் வந்திருக்கிறோம் என்பதையும்,
உணரச் செய்வோம். வேதம் போன்ற புனித நூல்களை செவிமடுக்கும் சூத்ரர்களின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும், தங்களுக்கு மறுக்கப் பட்ட கல்வியை கற்கும் சூத்திரனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறப்பட்ட வேதகாலம் மலையேறிவிட்டது என்பதை அவர்கள் உணரவேண்டும்.
கற்பிக்கவும், போராடவும், புதிய உலகம் படைக்கவும்தான் நாம் இந்த கோட்டை மீது படையெடுத்து வந்துள்ளோம், சாவதற்காக வரவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ளட்டும். கல்வி கற்கவே நாம் இங்கே வந்திருக்கிறோம். என்றாலும்,  ஜாதியைத் தூக்கிப்பிடிக்கும் கொடியவர்களும், அவர் களது அடிபிடிகளும், மறக்கமுடியாத ஒரு பாடத்தை அவர் களுக்குக் கற்பிக்கவும் நாம் வந்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளட்டும்.
நன்றி: தி ஹிந்து, 19-1-2016
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
நன்றி : விடுதலை 25.01.2016

Wednesday 20 January 2016

அண்மையில் படித்த புத்தகம் : ஒளிச்சிறை

அண்மையில் படித்த புத்தகம் : ஒளிச்சிறை(கவிதைத்தொகுப்பு )
ஆசிரியர்                                    : இரா.தமிழரசி
வெளியீட்                                   : ஆர்த்தி வெளியீடு ,6A, மூவேந்தர் நகர்,               விழுப்புரம்-605602 செல் : 9842660895

முதற்பதிப்பு                               :  அக்-2006, 80 பக்கங்கள், விலை ரூ 40
மதுரை மைய நூலக எண்        : 174459

                                            கிடைக்கும் கவிதை நூல்கள் எல்லாம் ஈர்ப்பாக இருப்பதில்லை, எனினும் கவிதை நூல் நன்றாக அமைந்துவிட்டால் அதனின் வாசிப்பு இனிமை கட்டுரைகளிலோ , கதைகளிலோ அமைவதில்லை. இந்த நூலின் ஆசிரியர் இரா.தமிழரசி கல்லூரி பேராசிரியர், ஆய்வு நூல் அளித்தவர் என்னும் குறிப்புகள் உள்ளன இந்தப்புத்தகத்தில். படிமமும், உருவகமும், உணர்வும் ஒன்றிணைந்த கவிதைகளை இயற்றுபவர் என்பதே  நான் கூறும் குறிப்பாக அமையும்.

                                  80 பக்க நூலில் 53 கவிதைகள் உள்ளன. சிறிய நூல். பாட்டியை மறுபடி வருவாயா எனக்கேட்கும்
( பேச ஆளில்லாமல் கழியும்
இன்றைய பகல்களில்
நீள்கின்றன காதுகள்
உனது வார்த்தைகளுக்காக )
எதார்த்தமான கேள்வியாக அமையும் முதல் கவிதை முதல் பெயரற்ற நம் உறவை காப்பாற்ற எதற்கு குறியீடுகள் என்னும் கடைசிக் கவிதை வரை எதுவுமே கற்பனைக் கவிதைகளாக இல்லை, நடப்பு வாழ்வின் கேள்விகளையும் பதில்களையும் உண்மை சாட்சியாக உணர வைக்கும் கவிதைகளாக இருக்கின்றன.

நீச்சலைப் பற்றிச்சொல்லும் 'நீரும் நானும்', கலைத்தல் கலைதலில் கூட இருக்கும் கலை நயம் சொல்லும் 'கலைத்தல்', கிராமத்தை விழுங்கிக் கொழிக்கும் நகரத்தையும்,  கிராமத்தையும் ஒப்பிடும் 'ஒப்புதல் வாக்குமூலம்', பெண்களின்  உலகத்தை குருவிகளோடு ஒப்பிட்டு ' கோபமின்றிக்  குழைவோடு பரிமாறிக்கொள்ள எண்ணற்ற வார்த்தைகள் இருக்கத்தான் செய்கின்றன குருவிகளின் உலகத்தில் '  எனும் ஏக்கத்தை வெளிப்படுத்தும் 'குருவிகளின் உலகம் ' எனப் பல கவிதைகள் தன் அனுபவம் சார்ந்தும், இயற்கை நிகழ்வுகள் சார்ந்தும் அமைந்திருக்கின்றன.

                  'தோழா, தோழா' என்னும் திரைப்படப்பாடலை நினைவுபடுத்தும் ' நெஞ்சம் மறப்பதில்லை', 'இருப்பினும் இருக்க நேர்கிறது ' என்பதைச்சொல்லும் 'கிளிப்பிள்ளையாய் ' ' எல்லா நூல்களுக்குமா கிடைக்கின்றன ....? ' எனச்சொல்லும் புத்தக அலமாரி, 'புத்தகப் பொதியேற்றி ' எப்படி நாம் மழலைகளை மாடுகளாய் மாற்றுகிறோம் என்பதனைச்சொல்லும் 'கை தேர்ந்த குயவனாய் ' எனப் பல கவிதைகளை சுட்டிக் காட்ட இயலும் நல்ல கவிதைகளாய்.

பெண்ணியம் எனச்சொல்லாமல் ஆனால் ஆழமான சில கேள்விகளை இக்கவிஞர் இந்தத் தொகுப்பில் எழுப்புகிறார். சதுரங்க ஆட்டத்தைப் பற்றி வரிசையாக சொல்லிவிட்டு க்டைசியில் அரசியையும் அரசனையும் ஒப்பிட்டு
" அரசிக்காக அழுவதில்லை அரசாங்கம்
   எச்சரிக்கைகளை மீறிக் காக்க வழியின்றி
   மாளும் அரசனோடு
   முடிந்துவிடும் ஆட்டம்
    சதுரங்கத்திலும் கூட "  சொல்லும் வரிகள் அருமை. அத்தனையிலும் ஆணுக்குத்தானே முன்னுரிமை இந்த உலகத்தில் என்பதனை கவித்துவத்தோடு சொல்லியிருக்கிறார். கைதட்டலாம்.
              வேலைக்குப் போவதில் இருக்கும் இடர்பாடுகளை வரிசையாக சொல்லும் 'புறப்பாடுகள்',
" அகிலத்தை
   ஆணின் விழியால் மட்டுமே
    பார்த்துப்பழகிய எங்களின்
    பகிர்ந்து கொள்ளப்படாத
     பகல்கள் ' எனச்சொல்லும் 'பெண்மை நலம் பெருக ' என்னும் கவிதைகளோடு பல கவிதைகள் , தன்னையொத்த பெண்களின் நிலையை பகிர்ந்து கொள்ளும் கவிதைகளாக இருக்கின்றன.

'பறத்தலின் சுகமறியாமல்
 ஒட்டிக்கொண்டிருந்தன
 இறகுகள்
 விழுந்தன உதயக்கதிர்கள்
  நினைவுக்குகைக்குள்
  இருளைத்தின்று பிரகாசமாக்கியது
  இருப்பிடம் முழுவதையும் '
எனத் தலைப்புக் கவிதையாக அமைந்த 'ஒளிச்சிறை ' கவிதை  மீளவியலாமல் கலங்கி நிற்பதை நிழற்படமென வார்த்தைகளால் வடித்தெடுக்கிறது.

படித்து முடித்தவுடன் ஒரு நல்ல கவிதைத் தொகுப்பை படித்தோம் என்னும் மன நிறைவைத் தந்த தொகுப்பு. வாழ்த்துக்கள் இந்தத் தொகுப்பை வெளியிட்ட பதிப்பகத்திற்கும், கவிஞர் இரா.தமிழரசி அவர்களுக்கும்.




                                 

Tuesday 19 January 2016

ஜாதி வெறியர்கள் அடங்க மறுத்தது மன்னிக்கத் தகுந்ததுதானா?

முளையிலேயே கிள்ளி எறிக!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுவாக ஜாதிப் பிரச்சினைகள், ஜாதிக் கலவரங்கள் நடைபெறுவது கிடையாது. ஆனால், அண்மையில் மயிலாடுதுறை வட்டம், வழுவூரையடுத்த திருநாள் கொண்டச்சேரி என்னும் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மரணமடைந்த முதியவர் ஒருவரின் உடலை எடுத்துச் செல்லுவது தொடர்பாக ஜாதி சர்ச்சை கிளப்பப்பட்டுள்ளது.
2015 நவம்பர் 26ஆம் தேதியன்று அதே ஊரைச் சேர்ந்த குஞ்சம்மாள் என்பவர் மறைந்த போதும் இந்தப் பிரச்சினை ஏற்பட்டதுண்டு.
பொது வீதியில் பிணத்தை எடுத்துச் செல்லக் கூடாது என்று ஜாதி வெறி பிடித்தவர்கள் போட்ட கூக்குரல், அச்சுறுத்தல் காரணமாக சேறும் சகதியும் நிறைந்த வயல்வெளிப் பாதையில் பிணத்தைத் தூக்கிச் சென்றுள்ளனர்.
இது நடந்து 40 நாள் இடைவெளியில் மறைந்த குஞ்சம்மாள் அவர்களின் கணவர் செல்லமுத்துவின் உடலை (3.1.2016) அடக்கம் செய்ய முயன்றபோது மீண்டும் ஜாதி வெறியர்கள் தங்களின் அட்டகாசத்தைத் தொடர்ந்தனர்.
இவ்வளவுக்கும் நீதிமன்றம் சென்று பொது வீதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலை எடுத்துச் செல்லலாம் என்ற உத்தரவை அதிகார பூர்வமாகப் பெற்று வந்ததற்குப் பிறகும்கூட ஜாதி வெறியர்கள் அடங்க மறுத்தது மன்னிக்கத் தகுந்ததுதானா?
நீதிமன்றத்தின் ஆணையை நிறைவேற்ற வேண்டிய காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காது மிதித்தது எப்படி என்றுதான் தெரியவில்லை.
அவசர அவசரமாக பொக்லைன் மூலம் பாதை ஒன்றை புதிதாக அமைத்து, காவல்துறையினரே பிணத்தைக் கைப்பற்றி அடக்கம் செய்தது என்பது உண்மையிலேயே அதீதமானது - கடுமையான நீதிமன்ற அவமதிப்பும் ஆகும்.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக் கோரிய தாழ்த்தப்பட்ட மக்கள்மீது  தடியடி நடத்தியும், அவர்களைக் கைது செய்தும், தான் தோன்றித்தனமாகக் காவல் துறை செயல்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையத்தின் தலைவர் டாக்டர் பி.எஸ். புனியா அவர்களே நேரில் வந்து விசாரணை நடத்தியுள்ளார். காவல்துறை சட்டத்தைத் துச்சமாக மதித்து வரம்புமீறி நடந்துள்ளதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். காவல்துறை அதிகாரியான மாவட்டக் கண்காணிப்பாளரும், மாவட்ட ஆட்சித் தலைவரும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள்; அதன் முடிவில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
ஜாதிய உணர்வு அதிகார வட்டாரத்திலும் வேர்ப் பிடித்துள்ளதோ என்று சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது இது மிகவும் வெட்கப்படத்தக்கதாகும். தக்க தண்டனைகள் தான் அதிகார வட்டாரத்திலும் ஒரு நேர்மை உணர்வை உண்டாக்கும் என்றால் அதனை வரவேற்க வேண்டியதுதான்.
கும்பகோணம் வட்டம், திருவாவடுதுறையிலும் பொங்கலை ஒட்டி ஜாதிக் கண்ணோட்டத்தில் கலவரம் நடைபெற்றுள்ளது. மாட்டுப் பொங்கலின்போது மாட்டு வண்டியில் ஏறிக் கொண்டு சிறுவர்கள் உட்பட பெரியவர்களும் பொங்கலோ பொங்கல் என்று முழக்கம் செய்து கொண்டு போவது வழமையான ஒன்றுதான்.
இந்த நிலையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீதிக்கு வரக் கூடாது என்று போர்க் கொடி தூக்குவதும்  கலகம் விளைவிப்பதும் எந்தவகையில் நியாயம்?
எந்த வீதியும், எந்த ஒரு சாலையும் எந்த ஒரு தனிப்பட்டவருக்கும், எந்த ஒரு குழுவினருக்கும் உரிமையுடையதாக பட்டா போட்டுக் கொடுக்கப்படவில்லை.
ஒரு கால கட்டம் இருந்தது; தாழ்த்தப்பட்டவர் பொது வீதியில் நடக்கக் கூடாது, பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது,. உணவு விடுதிகளில்கூட தாழ்த்தப்பட்டோர் அமர்ந்து சாப்பிடக் கூடாது; ஏன் இரயில்வே நிலையங்களில்கூட ‘பிராமணாள்’ சாப்பிடும் இடம் ‘இதராள்’ சாப்பிடும் இடம் என்ற பேதம் எல்லாம் இருந்ததுண்டு.
தலைநகரமான சென்னையில்கூட, ஜார்ஜ்டவுன், அன்றைய  மவுண்ட் ரோடு போன்ற இடங்களில் இருந்த உணவு விடுதிகளில் பறையர்களும், நாய்களும், குஷ்டரோகிகளும் உள்ளே நுழையக் கூடாது என்ற விளம்பரப் பலகைகள் மாட்டப்பட்டிருந்தன.
இவை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஆக்கப்பட்டு விட்டன. அதற்குக் காரணமாக சமூகப் புரட்சித் தலைவராகவும், தந்தையாகவும் பெரியார் அவர்கள் இருந்திருக்கிறார்கள். திராவிடர் கழகம் இருந்து வந்திருக்கிறது.
அண்மைக் காலத்தில் சில அரசியல் கட்சித்தலைவர்கள் கைவசம் கொள்கைகளோ, திட்டங்களோ இல்லாதவர்கள் ஜாதியைப் பிடித்துக் கொண்டு கரை ஏறலாம் என்று கருதி சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஜாதி வெறித்தீயிக்கு எண்ணெய் ஊற்றுகிறார்கள்.
ஜாதிக் கட்சிகளைக் கூட்டுகிறார்கள் - இதுவே தேர்தல் கூட்டணியாக மாறும் என்று அறிவிக்கிறார்கள் - இதன் மூலம்தான் செத்துச் சுண்ணாம்பாகிக் கொண்டிருக்கும் ஜாதிக்குப் புத்துயிர் ஊட்டப்படுகிறது. கவுரவக் கொலை என்ற ஒரு சொலவடைகூட உருவாக்கப்பட்டுள்ளது. கொலையில் என்ன கவுரவக் கொலை - அகவுரவக் கொலை?
தாழ்த்தப்பட்டவர்களைத் தங்களுக்குக் கீழானவர்கள் என்று எண்ணுபவர்கள் யாராக இருந்தாலும்  அவர்கள் அத்தனைப் பேர்களும், பிரிவுகளும், இன்றும் பார்ப்பனிய வருணாசிரமக் கட்டமைப்பில் ‘சூத்திரர்கள்தான்’ என்பதை மறந்து விடக் கூடாது, மட்டத்தில் உசத்தி என்று மார் தட்டக் கூடாது. இந்த இழிவை ஒழிக்க முன் வர வேண்டாமா?
இந்து மத சாத்திர சம்பிரதாயங்களில் மட்டுமல்ல, இந்திய அரசமைப்புச் சட்டமேகூட இந்தச் சூத்திரத் தன்மையை நிலை நாட்டிக் கொண்டு தானிருக்கிறது.
அதனால்தான் ஜாதியை பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவை பகிரங்கமாக கொளுத்தும் போராட்டத்தை நடத்தினார் தந்தை பெரியார் (26.11.1957). பத்தாயிரம் கருஞ்சட்டைத் தோழர்கள் அதில் ஈடுபட்டு மூன்றாண்டு கடுங்காவல் தண்டனையை ஏற்றனர் என்பதையும் இந்தநேரத்தில் சுட்டிக் காட்ட வேண்டியது நமது கடமை. அரசியல் தலைவர்களுக்குப் பொறுப்பு இருக்கிறது;  அதனை அவர்கள் உணர வேண்டும். முக்கியமாக திருநாள் கொண்டச்சேரி, திருவாவடுதுறை நிகழ்வுகள் தொடரப்படாமல் முளையிலே கிள்ளி எறியப்பட வேண்டும்; அரசு செயல்படட்டும்!
விடுதலை தலையங்கம் : 19.01.2016

ஒரு வாரம் கழிந்தது - (சிறுகதை)

                                                                     

வெளியில் மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது . முந்தா நாள் இரவு பிடித்த மழை. மூன்றாவது நாளாக இப்பொழுதும் தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. பெய்யும் மழையும் சாதாரணமாகப் பெய்யவில்லை, ஓவென்று இரைச்சல் கொடுத்தபடி, இடி , மின்னலென அவ்வப்போது ஒளியும் சத்தமும் கொடுத்தபடி,பெய்து கொண்டேயிருந்தது. இரவில் எந்த நேரம் எழுந்து பார்த்தாலும் சோவென்று மழை பெய்து கொண்டேயிருந்தது அதிசயமாக இருந்தது பூவரசனுக்கு.தனது ஊரில் இப்படி ஒரு இடைவிடாத மழையை தன் வாழ்நாளில் பார்த்ததில்லை அவன்.

                             ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். மெல்ல வெளிச்சம் பரவத்தொடங்கியிருந்தது. இருளும் மழையும் போட்டி போட்டுக்கொண்டு இணை பிரியாமல் கொட்டிக் கொண்டிருந்த நிலையில் இப்போது மழையோடு கொஞ்சம் வெளிச்சமும் தெரிந்தது. வெளியே பார்த்தான். ஓங்கி வளர்ந்த மரங்கள் தங்கள் கிளைகளை விரித்தபடி , உற்சாகமாய் மழையை வரவேற்று  நடனமாடுவது போலத்தோன்றியது பூவரசனுக்கு. குலுங்கிக் குலுங்கிச்சிரிக்கும் மனிதர்கள் போல குலுங்கி குலுங்கி கிளைகள் ஆடுவது போலத் தோன்றியது . கிளைகளோடு சேர்ந்து இலைகளும் ஆட, ஜன்னலுக்கு முன்னால் நிற்கும் மரங்கள் முழுவதுமாய் ஆடுவதுபோலத் தோன்றியது .

                            ஆனந்தமாக ஆடும் மரங்களைப் பார்த்தபொழுது பக்கத்து வீட்டில் வசித்த சின்னப்பையன் குருவின் ஞாபகம் வந்தது பூவரசனுக்கு. மழை வந்தால் போதும், அப்படி ஓர் உற்சாகம் அவனுக்கு. மழைத்தூறல் தெருவில் விழ ஆரம்பித்ததும் சைக்கிளை எடுத்துக்கொண்டு தெருவில் சைக்கிளை ஓட்ட ஆரம்பித்து விடுவான். நனைந்து கொண்டே , சிரித்துக்கொண்டே சைக்கிளை ஓட்டிக்கொண்டிருப்பான். அவனது அப்பாவும், அம்மாவும் ஏன் தாத்தாவும் பாட்டியும் கூட அவன் சைக்கிள் ஓட்டுவதைப் பார்த்துக்கொண்டேயிருப்பார்கள். யாரும் ஏதும் சொன்னதில்லை. பெரும் மழையாய் , இடி மின்னலென பெய்தால் அவனை வீட்டிற்குள் வரவைப்பார்கள், இல்லையென்றால் அவன் சைக்கிள் ஓட்டிக்கொண்டேயிருப்பான். அப்படி ஒரு குழந்தையின் மன நிலையில் மரங்கள் இருப்பது போலவும், பெய்யும் மழையால் உடல் பூரித்து, உள்ளம் நெகிழ்ந்து உற்சாக நடனம் ஆடுவது போலவும்  தோன்றியது .                                                  .

                                                          மழை என்றால் பூவரசனுக்கும் பிடிக்கும்.மழை பெய்யும்போது ஜன்னல் அருகிலோ ,வாசலிலோ வேடிக்கை பார்ப்பது பிடிக்கும். ஆனால் விடாமல் கொட்டு கொட்டென்று கொட்டும் மழை அச்சத்தைக் கொடுத்தது. தொடர்ந்து இப்படியே பத்து நாட்கள் பெய்தால் வாழ்க்கை என்னவாகும் என்னும் நினைப்பு ஓடியது.ஏய், சுய நலம் பிடித்த மனிதப்பிறவிகளே, எத்தனை எத்தனை மரங்களை வெட்டிச்சாய்த்திருப்பீர்கள். நீங்கள் வாழ்வதற்க்காக இந்த உலகத்தை எவ்வளவு தூரம் வெப்ப பூமியாக ஆக்கியிருப்பீர்கள். கடல் மட்டம் உயரும்படி, வளமான பகுதிகள் பாலைவனமாக மாறும்படி, விடாமல் மழை பெய்யும்படியாய் பூமியை ஆக்கி வைத்த கொடுமைக்காரர்களே, படுகிறீர்களா துன்பத்தில் சிக்குண்டு என மழையில் ஆடிக்கொண்டே மரங்கள் கேட்பதுபோல இருந்தது பூவரசனுக்கு.

                                                  பயிற்சிக்கென சென்னைக்கு வந்திருந்தான் பூவரசன்.ஐம்பது வயதில் படிப்பு ,தேர்வு எனக் கடந்த சில நாட்களாக மும்மரமாக வகுப்புக்கள் இருந்தன. மழை விடாது பெய்து கொண்டிருந்தாலும் இரண்டு நாட்களாய் வகுப்புக்கள் நடந்து கொண்டுதான் இருந்தன. குடையைப் பிடித்துக்கொண்டாலும் நனைந்து கொண்டுதான் வகுப்புகளுக்கு போக வேண்டியிருந்தது. இன்று விடுமுறை. மழை பெய்யத்தொடங்கியவுடன் மின்சாரம் போய்விட்டது. ஆனால் ஜெனரேட்டர் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஓடிக்கொண்டிருந்தது. மழையால் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது என்பதனை இணையத்தின் மூலமாக கிடைக்கும் செய்தித்தாட்கள் மூலமாக படித்துக்கொண்டிருந்தான் பூவரசன்.மழை பெயவதனால் ஏதும் பாதிப்பு ஏற்படுமா ? என்ற சிந்தனையே இல்லாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் கடந்த 3 நாட்களாக.

  திடீரென்று ஓடும் ஜெனரேட்டர் நின்றது. அரைமணி நேரம், ஒரு மணி நேரம் மின்சாரம் வரும் , ஜெனரேட்டர் ஓடும் என்று நினைத்தான். வரவில்லை, ஓடவில்லை. என்னவென்று விசாரித்தான். இருந்த டீசல் தீர்ந்து விட்டது. டீசல் வாங்க கையில் பணம் இல்லை. டீசலும் எளிதாக எங்கும் கிடைக்கவில்லை. மின்சாரம் வரும்வரை அல்லது டீசல் கிடைக்கும் வரை இருட்டுத்தான் என்றார்கள். பயிற்சி இயக்குநர் அனைவரையும் அழைக்கிறார்கள் என்றார்கள். எல்லோரோடும் இணைந்து பூவரசனும் போனான். இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை. மின்சாரம் வரத்தாமதம் ஆகும் , மின்சாரம் இல்லாமல் எந்தப் பயிற்சியும் கொடுக்க இயலாது, எல்லாமே கணினி மூலமாக கற்பிப்பது, எனவே 3 நாட்கள் விடுமுறை என்று அறிவித்தார்கள். அறிவித்த ஒரு மணி நேரத்தில் பயிற்சிக்கு வந்திருந்த  எல்லோரும் சிட்டாக சொந்த ஊருக்குப் பறந்து விட்டார்கள்.

                                                          உடல் நிலை இடம் கொடுக்காத நிலையில் கிடைத்த பேருந்தில் நின்று கொண்டு மணிக்கணக்காக பயணம் செய்வது சரியென்று படவில்லை பூவரசனுக்கு. மனைவி  வேறு தொலைபேசியில் , அரும்பாடுபட்டு இல்ட்சக்கணக்கில் செலவழித்து உங்களைக் காப்பாத்தியிருக்கிறேன். திடீர் லீவு, திடீர் பயணம் என்றெல்லாம் வேண்டாம், அங்கேயே தங்கி சமாளியுங்கள் என்றாள். உண்மைதான். தனி ஒருத்தியாய், அத்தனை அவலங்களையும், வேதனைகளையும் தாங்கிக் கொண்டு தன்னைக் காப்பாற்றியிருக்கிறாள். அவளை மனதளவில் கூட வேதனைப்படுத்தக்கூடாது என்று நினைத்துக்கொண்டிருந்தான் பூவரசன்.

                     தனி அறை. எவரும் இல்லாத தனிமை . மின்சாரம் இல்லை. நிறைய  அறைகளும் விடுதிகளும்  இருக்கும் விடுதியில் ஒரே ஓர் அறையில் அவன் மட்டுமாய் தனித்து இருந்தான் பூவரசன்.. பூவரசன் இருக்கும் பகுதியில் மழை நின்றிருந்தது. சென்னையின் மற்ற பகுதிகளில் மழை பெய்துகொண்டிருந்தது. ஏரிகள் எல்லாம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது என்னும் செய்தி வந்து கொண்டிருந்தது. மின்சாரம் இல்லாமல் இரவைக் கழிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. காற்றுக்காக ஜன்னலைத்  திறந்து வைத்தால் , கொசுக்கள் பட்டாளமாய் உள்ளே வந்தது. ஜன்னலை மூடினால் காற்று இல்லாமல் மூச்சு திணறுவது போல இருந்தது. ஜன்னலைத் திறந்தும் மூடியும் தூங்காமலும் முழிக்காமலும் எப்படியோ இரவைக் கழித்தான் பூவரசன்.

                   காலையில் இரவில் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் சென்னையின் சில பகுதிகள் மிதக்கிறது என்றார்கள். கோடம்பாக்கம், சூளைமேடு, சைதாப்பேட்டை எனப் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது என்றார்கள். கேள்விப்படும் செய்திகள் எல்லாம் இரத்தக் கண்ணீர் வரவழைக்கும் விதமாக இருந்தது. எந்தப் பேருந்தும் இல்லை. ஓயாது கேட்டுக்கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் டிரெய்ன் சத்தம் இல்லை, ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை கேட்கும் விமானம் பறக்கும் சத்தம் இல்லை. திடீரென்று அனைத்தும் நின்று ஏதோ சுடுகாட்டில் இருப்பது போன்ற அமைதி இருந்தது.

                               . பல மொழிகளை பேசுபவர்கள், இந்தியாவின் பல மாநிலங்களைச் சார்ந்தவர்கள் அந்த பயிற்சி நிலையத்தில் இருந்தார்கள். சில நாட்களுக்கு  முன் மாலையில் நடந்துகொண்டிருந்த பொழுது , ஆழ்ந்த சிந்தனையில் நடந்து கொண்டிருந்த ஒருவன் , தன் நண்பனைப் போலத்தெரிய பூவரசன் அவன் பக்கத்தில் போய் விளையாட்டாய் முதுகில் தட்டப்போனான் , வேறு ஆள் எனத்தெரிந்ததும் திரும்பினான். அருகில் வரை சென்று விட்டோம் என நினைத்து " சாரி சார் , என் நண்பர் என்று நினைத்து கையை ஓங்கிவிட்டேன் " என்றான். ஆழ்ந்து பூவரசனைப் பார்த்த அவன் " ஐ ஆல்சோ சாரி சார், ஐ டோண்ட் நோ டமிழ் " என்றான். பின்னர் ஆங்கிலத்தில் பூவரசன் சாரி சொன்னான்.

                         . " சார் என் வீட்டில் பேசி 2 நாளாகி விட்டது. என்னிடம் பி.எஸ்.என்.எல். சிம் இல்லை. என் மனைவி வேறு கம்பெனி சிம் வைத்திருக்கிறாள். பி.எஸ்.என்.எல். சிம் மட்டும்தான் சென்னையில் இப்போது கிடைக்கிறது.  இவ்வளவு மழை , வெள்ளம் சென்னையில் என்று பார்த்ததால் மனதைக் குழப்பிக்கொண்டு இருப்பார்கள் " என்ற ரவீந்தரிடம் அமைதியாய் அவனது மனைவியின் செல்போன் நம்பரை வாங்கி தன்னிடம் இருந்த பி.எஸ்.என்.எல். கார்டில் போட்டுக் கொடுத்தான்.அவன் தெலுங்கில் பேச ஆரம்பித்தான். அவன் பேசுவது புரியவில்லை என்றாலும் கணவன் மனைவியோடு பேசிக்கொண்டிருக்கும்போது நாம் நின்று கேட்டுக்கொண்டு இருப்பது சரியல்ல என்று நினைத்துக்கொண்டு கொஞ்சம் தள்ளி நின்று கொண்டான்.

பேசி முடிந்த ரவீந்தர் பூவரசனிடம் நண்பனாகி விட்டான். மாலையில் நடைப்பயிற்சி என அந்த பயிற்சி வளாகத்திற்குள்ளேயே நடக்கும் நேரங்களில் ரவீந்தரும் இணைந்து கொண்டான். தெலுங்கானாவிலிருந்து பயிற்சிக்காக வந்திருப்பதாகச்சொன்ன அவன், தான் தெலுங்கானாவின் பழங்குடி இனத்தைச்சார்ந்தவன் என்றான். ஒடுக்கப்பட்டோர் வாழ்க்கை, ஒடுக்கப்பட்டோரின் இயக்கம் என பேச்சு நாளும் விரிவடைந்திருந்தது. தெலுங்கானா முதல்வர் , பட்டம் முடித்த அனைவருக்கும் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் வேலை கொடுப்பதாகவும், அது நிரந்தமானதல்ல என்றாலும் விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர் வேலை செய்வதற்கு ஒரு வாய்ப்பு , நல்ல முயற்சி, கல்வி கற்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை தங்கள் மாநிலத்தில் உயர்கிறது என்றான். பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் ஏற்கனவே செய்திருக்கிறார் என்றான். சிரித்துக்கொண்ட பூவரசன் ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராசர் அமுல்படுத்திய திட்டம் இது. அவரின் கல்விபுரட்சியில் இதுவும் ஒன்று என்றான். காமராசரைப் பற்றி மேலும் பல செய்திகளைச்சொன்னான். தெலுங்கானா பழங்குடி மக்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள், அவர்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் எனப்பல செய்திகள் கிடைத்தது பூவரசனுக்கு.

மழை ஆரம்பித்து இன்று ஐந்தாவது  நாள்.மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. காலை மணி 9 ஆகியிருந்தது. பசிக்க ஆரம்பித்தது. எல்லோரும் அவரவர் ஊருக்கு பறந்தவுடனேயே மெஸ்காரரும் பறந்துவிட்டார். மூன்று நாளைக்கு மெஸ் கிடையாது என்று அறிவிப்பு இருந்தது. மாடிப்படியை விட்டு கீழே இறங்கி பக்கத்தில் இருக்கும் உணவு விடுதி இருக்குமா ? என எண்ணிக் கொண்டே நடந்து கொண்டிருந்தான்  பூவரசன்.  பூவரசனுக்கு எதிராக ரவீந்தர் வந்து கொண்டிருந்தான். அவன் வேறு விடுதியில் தங்கியிருந்தான். " என்ன ரவீந்தர் , நீ ஊருக்கு போகவில்லையா ? " என்றவனிடம் "சார்நான் தெலுங்கானா போக வரவே 3 நாட்களாகும். நான் போகவில்லை " என்றான்." சரி , வா, நீயாவது துணைக்கு இருக்கிறாயே எனக்கு , மகிழ்ச்சி " என்றான். நாம் மட்டும் இல்லை, என்னோடு பயிற்சிக்கு வந்த ஒரு அஸ்ஸாம் மாநிலத்தச்சார்ந்த பையனும், மேகாலாயா மாநிலத்தைச்சார்ந்த பெண்ணும் இருக்கிறார்கள் " என்றான். பக்கத்தில் இருந்த உணவு விடுதிக்கு சென்று பார்த்தபொழுது உணவு விடுதி திறந்திருந்தது. சமைப்பதற்கு காய்கறி எல்லாம் எங்கும் வாங்கமுடியவில்லை. எக்மோரிலிருந்து எங்களது நிறுவனத்தின் ஊழியர்கள்   10 கி.மீ. நடந்து , சுமந்து வந்திருக்கிறார்கள் சமைக்கும் பொருட்களை என்றார் அந்த உணவு விடுதிப் பெண்.இட்லி, தோசை என்றெல்லாம் ஒன்றும் இல்லை, உப்புமா மட்டுமே இருக்கிறது என்றார்கள். இருவரும் உப்புமாவைச்சாப்பிட்டு விட்டு விடுதிக்கு வந்தார்கள்.

                     சிறிது நேரத்தில் அஸ்ஸாம், மேகலாயா, தெலுங்கானா, தமிழ் என நான்கு மாநிலத்தைச்சார்ந்தவர்களும் உட்கார்ந்து அரட்டை அடிக்க ஆரம்பித்தார்கள். ரவீந்தர்தான் ஆரம்பித்தான் " ஹைதாராபாத் எல்லாம் இப்படி இல்லை சார், எவ்வளவு மழை பெய்தாலும் ஓடி விடும், ஏன் சார், தமிழ் நாட்டுத்தலை நகரம் இப்படி, என்ன திட்டமிடுதல், என்ன செயல்படுத்துதல், எல்லாப் பக்கமும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழை பெய்தவுடனேயே கரண்ட் இல்லை, கொசுக்களின் தொல்லை, சாக்கடை நாற்றம்... " எனக் கடுப்பாய் சொன்னான் .அவனது உணர்வுகளை உள்வாங்கிக்கொண்ட பூவரசன் ஒன்றும் மறித்துச்சொல்லவில்லை. மற்ற நேரமென்றால் தமிழ் நாட்டையும் மற்ற மாநிலங்களையும் ஒப்பிட்டு விட்டுக்கொடுக்காமல் பேசுவான். பூவரசனால் இன்றைக்கு பேசமுடியவில்லை. ' மனிதர்களின் பேரவலம் ' என்னும் 'சமஸ்' எழுதியிருந்த கட்டுரையை அப்போதுதான் 'தி இந்து ' தமிழ் நாளேட்டில் இணையத்தின் வழியாகப் படித்திருந்தான். அரசாங்கத்தின் செயல்படாத தன்மையை, வெள்ளம் வந்த அன்று மக்கள் பட்ட துயரத்தை ,அவலத்தை படிப்போர் கண்களில் கண்ணீர் வரும்படியான செய்திகள் அந்தக் கட்டுரையில் இருந்தது. கும்பிடு போடுவதற்கும், காலில் விழுவதற்கும், காசைக் கல்லா கட்டுவதற்கும் மட்டுமே பதவி என நினைப்போர் மத்தியில் மக்களின் அவலங்கள் பெரிதா  என்ன?  என நினைப்பு ஓடியது.

                    மேகலாயாவைச்சார்ந்த பெண் துன்பத்திலும் கல கலவெனச்சிரித்தாள். மிகவும் கண்ணியமாகவும் அதே நேரத்தில் மிக கனமாகவும் தன்னுடைய கருத்துக்களைச்சொன்னாள். ஆங்கிலத்தை அவ்வளவு அருமையாகவும், எளிதாகவும் கையாண்டு ஜோக் அடித்தாள். எனக்கு வயது 25, எனக்கு 75 வயது ஆகும்போதும் இந்த சென்னை மறக்காது என்றாள். ஓரிரு நாளில் அந்தப்பாடு பட்டு விட்டேன் என்றாள். 3 நாட்களாக விடுதியில் கரண்ட் இல்லை. மெழுகுவர்த்தி ஒன்று கிடைக்குமா என்று பார்க்கும் ஆளிடம் எல்லாம் கேட்டு விட்டேன் .கிடைக்கவில்லை என்றாள்.ஓசிக்கும் கிடைக்கவில்லை, விலைக்கும் கிடைக்கவில்லை, மின்சாரம் இல்லை, அதனால் செல் போனிற்கு சார்ஸ் போட முடியவில்லை, இல்லையெனில் அதில் இருக்கும் டார்ச்  லைட்டையாவது பயன்படுத்தலாம். இரவு முழுவதும் எந்த வித வெளிச்சமும் இல்லாமல், இருட்டு அறைக்குள் ஒத்தையாய், வாட் சென்னை ? " என்றாள் வெறுப்பாய். பூவரசனின் கையில் இருந்த செல்போனில் சார்ஸ் இல்லை. ஆனால் கீழே பொதுவாக இருந்த லேண்ட்லைன் போனில் இருந்து ஊருக்கு பேசமுடிந்தது ஆறுதலாக இருந்தது. தொலைபேசி நிலையத்தில் மின்சாரம் இருந்தால் போதும், நம் வீட்டில் மின்சாரம் இல்லையென்றாலும் லேண்ட்லைன் போன் வேலை செய்யும் ஆனால் செல்போனுக்கு தனித்தனியாக நம் வீட்டில் சார்ஸ் செய்ய வேண்டும் என்பது ஞாபகம் வந்தது.

                          இடைவெளி விட்டு இடைவெளி விட்டு  மழை மீண்டும் பெய்ய ஆரம்பித்திருந்தது. இரவில் மின்சாரம் இல்லாமல், மின்விசிறி இல்லாமல் தூங்குவது இன்றோடு நான்கு நாட்களாகிவிட்டது. கொசுப்பேட்டை எடுத்து அடிக்க ஆரம்பித்தான். ஒரு கொசுவும் செத்தது மாதிரித் தெரியவில்லை, கொசுப்பேட்டின் மேலேயே கொத்தாக கொசுக்கள் உட்காருவது தெரிந்தது. அப்போதுதான் மின்சாரம் இல்லாமல் நான்கு நாட்களாக கொசுப்பேட்டிற்கு சார்ஸ் போடவில்லை என்பது நினைவுக்கு வந்தது. சிரித்துக்கொண்டான். இப்படியே மின்சாரம் இல்லாமல் 1 மாதம் ஆனால், 6 மாதம் ஆனால் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யோசித்துப்பார்த்தான்.  இவனுக்கு 20 வயதில்தான் , வீட்டிற்கு மின்சார வசதி கிடைத்தது. அதற்குப்பிறகுதான் மின்சார விளக்கு, மின் விசிறி எல்லாம். கிராமத்தில் இருந்தபோது மின்சாரம் இல்லை என்று ஒரு நாளும் தூங்காமல் இருந்ததில்லை. அப்போதும் கொசுக்கள் இருந்தது.ஆனால் வாழ்க்கையைப் பற்றிய பயம் இல்லை.மின்சாரம் என்பதே அப்போது பழக்கம் இல்லை. சிறு வயதில் மின்சாரம் இல்லாமல் வளர்ந்த தனக்கே இப்படி இருக்கிறது, பிறந்தது முதல் மின்சாரத்திலேயே இருக்கும் இந்தக் காலக் குழந்தைகளுக்கு மின்சாரம் இல்லாத வாழ்க்கை, மின்சாரம் இல்லாத உலகம் என்றால் எப்படி இருக்கும் என்று யோசித்தான் பூவரசன்.                              

               தனித்து அறையில் இருந்த பூவரசனுக்கு நேரம் போவது மிகக்கடினமாக இருந்தது.தனிமை மிகக்கொடுமையாக இருந்தது. தனக்குத்தெரிந்த எழுத்தாளர் ஒருவர் எண்பது வயதை நெருங்குபவர். மனைவியை இழந்து , பிள்ளைகள் வெளியூரில் இருக்க தனித்து இருப்பவர். மிகப்பெரிய புத்தகத்தை எழுத வேண்டும் என்றும் அதனை எழுதி முடித்தவுடன் செத்துப்போய் விடவேண்டும் என்று சொன்னவுடன் திடுக்கிட்டதை பூவரசன் நினைத்துப்பார்த்தான். தனிமை என்பது மிகப்பெரிய கொடுமை என்று அவர் சொன்னது அன்று ஏனோ சட்டென்று புரியவில்லை பூவரசனுக்கு, இன்று தெளிவாகப்புரிந்தது.இந்தத் தனிமைக்குப் பயந்தே தன்னை அடித்தால்கூட தாங்கிக் கொண்டு பிள்ளைகளிடம் சேர்ந்து வசித்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் சில முதியவர்களை பூவரசன் அறிவான்.   பகலில் கூட ஏதோ படிக்க, எழுத என்று நேரம் போனது. ஆனால் மாலை ஆறுமணிக்கே இருட்ட ஆரம்பித்து ஏழு மணிக்கெல்லாம் கும்மிருட்டு ஆனவுடன், தனிமை வறுத்து எடுத்தது. ஜன்னலைத் திறந்து வைத்துக்கொண்டு நாற்காலியில் அமர்ந்தான் அமைதியாக. இப்போதெல்லாம் இருட்டு கொஞ்சம் பழக்கமாயிருந்தது. இருட்டிலேயே நடக்கவும், பொருட்களை எடுக்கவும் பழகியிருந்தான். இருட்டில் எடுப்பதற்காகவே பொருட்களை அந்தந்த இடத்திலேயே வைக்கப் பழகியிருந்தான் பூவரசன். காலையில் இதை, இதை படிக்க வேண்டும், இதை இதை எழுதவேண்டும் என யோசித்தான். யோசனை ஒரு கட்டத்திற்கு மேல் ஓடவில்லை. எத்தனை திருக்குறள் தனக்குத் தெரியும் என்று  கணக்கிடலாம் என்று திருக்குறள்களை சொல்ல ஆரம்பித்தான். அப்புறம் தனக்குப் பிடித்த புரட்சிக் கவிஞர் கவிதைகள், மனப்பாடம் செய்து வைத்திருந்த கவிதைகள் என  மெல்ல வாய் விட்டு சொல்ல ஆரம்பித்தான். என்னதான் சொன்னாலும் நேரம் 9 மணியைத் தாண்டியிருக்காது எனத் தோன்றியது, மெல்ல நடந்து சென்று அலமாரியில் இருந்த அறுவை ரொட்டிகளை எடுத்து சாப்பிட ஆரம்பித்தான். வெள்ள நிவாரணப் பணிக்காக வந்திருந்த ஒரு நண்பர் கொடுத்தது என்று பூவரசனின் நண்பர் வந்து இரண்டு நாட்களுக்கு முன்னால் கொடுத்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுங்கள் என்ற பூவரசனிடம்," சார், நாங்களெல்லாம் ஊருக்குப் போய்விட்டால் நீங்கள் மட்டும் தனியாக இருக்கும்போது பயன்படும், தயவு செய்து வைத்துக்கொள்ளுங்கள் " என்று வற்புறுத்திக் கொடுத்திருந்தார். அதனை எடுத்து சாப்பிட்டு , தண்ணீரைக் குடிக்க வயிறு நிரம்பியது போல இருந்தது. மாத்திரைகளைச்சாப்பிட்டு விட்டு தூங்கலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த பூவரசனின் அறைக்கதவு தட்டப்பட்டது.

            திறந்தால் அந்த பயிற்சி நிலையத்தில் வேலை பார்க்கும் ராம்பிரசாத்  நின்றிருந்தார். " சார், நான் சப்பாத்தி கொண்டு வந்திருக்கிறேன். குருமாவும் இருக்கிறது. பக்கத்தில் எந்தக் கடையும் இல்லை, நீங்கள் சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை , தயவு செய்து வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுங்கள் " என்றார். பருத்த உடல் படைத்த ராம்பிரசாத் பரந்த மனமும் படைத்தவராக இருந்தார். சப்பாத்தியை சாப்பிட்ட பூவரசன் ' இதற்கு எவ்வளவு பணம் ? " என்றபோது , சார் , எங்கள் வீட்டில் செய்தது. இங்கிருந்து 1 கிலோ மீட்டர் தூரம்தான் எனது வீடு, ஏதோ என்னால் முடிந்த உதவி, போகும்போது அள்ளிக்கொண்டா போகப்போகிறோம். பலரை வெள்ளம் அள்ளிக்கொண்டு போய்விட்டது, பலரின் வாழ்க்கையில் சம்பாரித்து வைத்த அனைத்தும் இந்த வெள்ளத்தில் போய்விட்டது, இது மிகவும் சிறிய உதவி " என்றார்.குடையை பிடித்துக்கொண்டு, உணவைச்சுமந்துகொண்டு வீட்டிலிருந்து இருட்டில் நடந்து வந்திருக்கின்றார் அந்த மாமனிதர்.  மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. தனக்கு மட்டுமல்ல, மற்ற மாநிலத்தச்சார்ந்த அந்த மூன்று பேருக்கும் அவர் உணவு கொண்டுவந்து கொடுத்ததை காலையில் கேள்விப்பட்டான் பூவரசன்.

                  வெள்ளத்தின் கொடுமைகளை , தங்கள் உறவுகள், நண்பர்கள் படும் துன்பங்களை விடுதிக்கு வந்து சேர்ந்த சிலர் விளக்கிக்கோண்டிருந்தார்கள் . அந்த விடுதியை துப்பரவு செய்யும் மஞ்சு, தன்னுடைய வீட்டிற்குள் கழுத்தளவு வெள்ளம் வந்ததையும், தானும் தன் குடும்பத்தினரும் உயிர் தப்பியதே பெரும் பாடு என்றும் கல்லூரியில் படிக்கும் தன்னுடைய இரண்டு மகள்களின் பாடப்புத்தகங்கள், லேப்டாப் கணினிகள் மற்றும் இருந்தவைகள் அடித்துச்செல்ல்ப்பட்டதை அழுதுகொண்டே சொல்லிக்கொண்டிருந்தாள். 10 வருசமா, 15 வருசமா நாங்க சேர்த்து வச்ச பொருளையெல்லாம் அடிச்சிட்டுப் போயிருச்சு. எங்க கூடுவாஞ்சேரியிலே நிறைய ஆட்களையும் அடிச்சுட்டுப் போயிருச்சு சார், நாசமாப் போறவங்க, நட்ட நடு இராத்திரியில இப்படி தண்ணீரைத் துறந்துவிட்டுடாங்களே என்று அழுகையும் கண்ணீருமாய் நடந்தவற்றை விவரித்தார்.

                        செக்ரிட்டியாக வேலைபார்க்கும் முனியாண்டி தன் வீடு மூழ்கிய கதையை சொல்லிக்கொண்டிருந்தார். "60 வருசமா இருக்கிறேன் சார் அந்த வீட்டில எங்க அப்பா காலத்திலே இருந்து, இப்படி தண்ணீர் எப்பவும் வந்ததில்லை, பூரா வாய்க்கால்,ஆற்று எல்லாத்தையும் வீடாக்கி விட்டார்கள் சார், தண்ணீர் எங்கே போகும் , எப்படிப்போகும்? இதுவரைக்கும் பாதிக்கப்பட்டது எல்லாம் குடிசையில இருக்கிறவங்க மட்டும்தான், இந்தத்தடவைதான் கொஞ்சம் வசதி படைச்சவங்களும் பாதிக்கப்பட்டிருங்காங்க . என வீடு எல்லாம் கார வீடு சார். இராத்திரி 1 மணிக்கு திமு திமுன்னு சத்தம். எந்திரிச்சு பாத்தா வீட்டுக்குள்ள தண்ணீர். தண்ணீரோடு சேர்த்து பாம்பு, பூச்சின்னு அத்தனையும் வீட்டுக்குள்ள வந்திருச்சு சார் . இன்னும் வீடு முழுக்க சகதியாக் கிடக்கு. சகதிக்குள்ள கட்டில், மெத்தை அத்தனையும் கிடக்கு " என்றார்.

                ம்னித நேயத்திற்கு முன்னால் சாதி, மதம் அனைத்தும் சக்தி இழந்து போனதை நிவாரணப் பணிகள் உணர்த்திக்கொண்டிருந்தன. அனைத்து இயக்கங்களும் தங்கள் அலுவலகத்தை நிவாரணப் பணி முகாமாக மாற்றியதை பத்திரிக்கைகள் சுட்டிக் காட்டியிருந்தது.பெரியார் திடலில் இருந்து செய்யப்படும் உதவிகளை விடுதலை பத்திரிக்கை வழியாகப் படித்தான் பூவரசன். முழுவதுமாக பக்தி கோலத்தில் இருந்த ஒருவர், அரசியல் கட்சிகள் என்றால் உதவி வேண்டாம் என்றவர், பெரியார் என்ற பெயரைக் கேட்டவுடன் உதவியைப் பெற்றுக்கொண்டதை பத்திரிக்கையில் படித்தான். தன்னுடைய உயிரையும் , பிறக்கும் குழந்தையின் உயிரையும் காப்பாற்றிய இஸ்லாமியரின் பெயரை தன்னுடைய குழந்தைக்குச்சூட்டிய இந்துப்பெண்ணைப் பற்றிய செய்தி பத்திரிக்கையில் வந்திருந்தது. உதவி செய்பவர்கள், உதவி தேவைப்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளாக மட்டும் சென்னை மக்கள் பிரிந்ததுபோல் தோன்றியது பூவரசனுக்கு.பேரிடர் மனிதத்தன்மையை உசுப்பி விட்டுவிட்டது என்று நினைத்தான் பூவரசன்.சென்னையே மனித நேய சென்னையாக மாறிவிட்டதோ எனத்தோன்றியது பூவரசனுக்கு. ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற உதவிகளைச்செய்து கொண்டிருந்ததைக் கண்டதும் மனது நிறைந்தது துன்பத்திலும்.

                   சேலத்திலிருந்து அரக்க பரக்க ஒரு குடும்பத்தினர் காரில் வந்து விடுதியில் இறங்கினர். தன்னுடைய ஒரே பையன் சென்னையில் வேலை பார்ப்பதாகவும் , நாலைந்து நாட்களாக அவனிடமிருந்து எந்தச்செய்தியும் இல்லை என்றும் சொன்ன அவர்கள் , பையனின் அம்மாவை மட்டும் விடுதியில் விட்டுவிட்டு அவனது அப்பாவும், மாமாவும் அவனைத் தேடி காரில் சென்றனர். கீழே இறங்கி வந்த பூவரசன் அந்த அம்மாவோடு பேசிக்கொண்டிருந்தான். ராம்பிரசாத் உணவோடு காலையில் தேடி வந்திருந்தார். பூவரசனுக்கு உணவைக் கொடுத்தவுடன் வாங்கிக்கொண்டான. பிரகாசம் அந்த அம்மாவை வற்புறுத்தி சாப்பிடச்சொல்ல,மகனைக் காணாம் என்று எத்தனை நாட்களாக சாப்பிடவில்லையோ ஒரே ஒரு பூரியை எடுத்து வாயில் வைக்க ஆரம்பித்தார்.

                  திடிரென்று ராம் பிரசாத்தோடு  வேலை பார்க்கும் ஒருவர் அங்கு தோன்றினார். " விடுதியில் ஏன் ஆட்கள் இருக்கிறீர்கள். அதுதான் லீவு விட்டு எல்லோரையும் ஊருக்குப் போகச்சொல்லியாச்சே " என்றவர், சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த அம்மாவைப் பார்த்து " நீங்கள் யார் ? " என்றார் அந்த அம்மையார் தான் யார் என்பதையும் தனது கணவர் இந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பதையும் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ' மகனைக் காணாம் என்றெல்லாம் இப்படி தேடிக்கொண்டெல்லாம் வரக்கூடாது " என்றவரைப் பார்த்து  பூவரசன் " சார் , அவர்கள் மனம் பதைத்து வந்திருக்கின்றார்கள். உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் தனது பிள்ளையைக் காணவில்லை  என்று வந்திருக்கிறார்கள் " என்றான். " எனது பிள்ளைகள் , நான் பெற்ற பிள்ளைகள் நாலு பேரைக் காணாம், நான் என்ன  தேடிப் போய்  தொந்தரவு செய்து கொண்டா இருக்கிறேன் ? " என்றவுடன் வாயில் வைத்த ஒரு வாய் பூரியையும் முழுங்காமல் அப்படியே பூரியைக் கீழே வைத்தார்கள் அந்த அம்மையார். சென்னை மொழியில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த அந்த ஆளோடு அப்படியே மல்லுக்கட்ட வேண்டும் என்று கையும் காலும் பரபரத்தது பூவரசனுக்கு. சென்னையே மனித நேய ஊராக மாறிவிட்டதாக பெருமைப்பட்டது உண்மை இல்லை என்பது பளீரென்று உரைத்தது பூவரசனுக்கு.  ராம்பிரசாத்  மாதிரி ஆட்கள் இருக்கும் இடத்தில்தான் இப்படிப்பட்ட ஆட்களும் இருக்கிறார்கள். நன்மையும் தீமையும் போல, வெயிலும் நிழலும் போல மனிதர்களுடைய உணர்வுகளைப் புரிந்தவர்களும் , புரியாதவர்களும் சேர்ந்தேதான் ஓரிடத்தில் இருக்கின்றார்கள்.என்று தோன்றிற்று . அந்த அம்மாவோடு ஆறுதலாகப் பேச ஆரம்பித்தான் பூவரசன். சிறிது நேரத்தில் தேடிச்சென்றவர்கள், தனது பையனோடு வருவதைப் பார்த்த அந்த அம்மா, திடுத் திடுவென ஓடி அந்தப் பையனிடம் பேசியதைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தான் பூவரசன். மழை முழுவதுமாக விட்டிருந்தது. மின்சாரம் நாளை முதல் வந்து விடும் என்றார்கள். .நாளை முதல் வகுப்புகள் நடக்கும் என்றார்கள்.நாளை முதல் பயிற்சிக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்திருந்தான் பூவரசன்.  

  • எழுதியவர் : வா.நேரு
  • நாள் : 19-Jan-16, 6:56 am
  • நன்றி : எழுத்து.காம்