Friday 26 February 2016

அண்மையில் படித்த புத்தகம் : காலம் தாழ்த்தாதே-அரு.வி.சிவபாரதி

அண்மையில் படித்த புத்தகம் : காலம் தாழ்த்தாதே
ஆசிரியர்                                    : அரு.வி.சிவபாரதி
முதற்பதிப்பு                               :  2008
வெளியீடு                                   : சரவணா பப்ளிஷர்ஸ், 104, பெரியார் பாதை, சென்னை -106                                       மொத்த பக்கங்கள் 87, விலை ரூ 40 /=
மதுரை மைய நூலக எண்        :  186464

                                                              நூலகத்திலிருந்து எனது மகளுக்காக எடுத்த வந்த புத்தகம்.நேரம் கிடைத்த நேரத்தில் கையில் இருந்த புத்தகம் என வாசிக்க ஆரம்பித்தேன். கதை சொல்லும் தாத்தா, பாட்டி பற்றி முன்னுரையில் கூறும் இந்த நூலின் ஆசிரியர் மொத்தம் 8 சிறுகதைகளை இந்த நூலில் இணைத்திருக்கிறார்.
                                                               மாணவ, மாணவிகளுக்கான கதைகள். கதைக்களங்கள் அனைத்தும் பள்ளி, மாணவர்கள் என அமைந்திருப்பதும், அவை வெகு நேர்த்தியாக விவரிக்கப்பட்டிருப்பதும் வெகு சிறப்பு. ஓசியில் பணம் கிடைத்த நேரத்தில் வறுமையில் இருந்தாலும் உழைத்து என்னால் ஈட்டமுடியும் என்னும் மன உறுதி காட்டும் மாணவன் பாலு' வைச்சொல்லும் 'சிகரம் நோக்கி ' என்னும் கதை, அலுவலகத்திற்கு பத்து நிமிடம் தாமதமாகச்செல்லும் அப்பா அங்கு திட்டு வாங்கி , இரவு வரை அதன் தொடர்ச்சியாக அவரோடு பழகும் அனைவரின் வருத்ததிற்கும் காரணமாக அமைவதற்கான  காரணத்தை மாற்றும் 'செல்வி' கதை சொல்லும் ' காலம் தாழ்த்தாதே ' என்னும் கதை, பேருந்தில் மாணவர்கள் சுவரொட்டியை ஒட்டக்கூடாது என்பதனை வலியுறுத்தும் 'நீதான் பவுர்ணமி ' என்னும் கதை எனக் கதைகள் நல்ல கருத்துக்களை மாணவ. மாணவிகளுக்கு சொல்லும் கதைகளாக அமைந்துள்ளன.

                                                                  ஆசிரியர்களின் பெருமை சொல்லும் 'வேர்கள் ' என்னும் கதை மாணவர்களை  ஆசிரியர்கள் இப்படியும் கையாளலாம் என்னும் கருத்தைச்சொல்கிறது. கூலி வேலை செய்யும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு தனது பேரனை உதவுச்சொல்லும் தாத்தாவைப் பற்றிச்சொல்லும் ' நாளை விடியும் நமக்காக ' என்னும் கதை எனக் கதைகளின் விவரிப்பும் இயல்பாக இருப்பதே இந்த நூலின் சிறப்பு எனலாம்.

                                                                    படித்து முடித்து விட்டு எனது மகளிடம், 'சிறுவர் கதைகள் ' என இருக்கிறது ஆனால் நானும் வாசித்தேன் நன்றாக இருக்கிறது என்றேன். 'அப்பா , அரு.வி.சிவபாரதி' -யின் நூல்கள் இரண்டு மூன்று படித்திருக்கிறேன். அவரின் கதைகள் நன்றாக இருக்கும் என்றார். யாருக்காக இந்த நூலின் ஆசிரியர் எழுதினாரோ, அந்த சிறுவர் சிறுமிகளிடமிருந்தே பாராட்டு வருவதே இந்த நூல் ஆசிரியருக்கு வெற்றிதான். . அருப்புக்கோட்டை என்று தனது முன்னுரையில் போட்டிருக்கின்றார் இந்த நூலின் ஆசிரியர். அரு.வி.சிவபாரதி அவர்களுக்கு பாராட்டுக்கள்

Sunday 21 February 2016

வாட்ஸ் அப் கூடைக்குள் !

திறக்கும்போது
ஆயிரம் செய்திகள்
குவிந்து கிடக்கிறது
வாட்ஸ் அப் கூடைக்குள் !

எதை எடுப்பது
எதைப் படிப்பது
எனத் தீர்மானிக்கும்முன்பே
புதிதாய்
பத்து பத்தாய்
வந்து விழுகிறது
வாட்ஸ் அப் கூடைக்குள் !

ஒரு கிராம் தங்கத்தை
ஓராயிரம் டன்
மணல்களை அகற்றி
எடுப்பது போல
அலசி அலசித்தான்
எடுக்க வேண்டியிருக்கிறது
நல்லது எது என்று !

அரிதான முத்துக்களாய்
சில நேரம்
அகப்படுகின்றன
கவிதைகளாய் ...
சில நேரம் அரிதான
தகவல்களாய்

ஆனால் பல நேரம்
படித்த செய்திகளே
திரும்பத் திரும்ப
திரும்பத் திரும்ப
போதுமடா ! போதும்
எனத் தோன்றுகிறது ...

சில நேரம் குப்பைகள்
போல மொத்தமாய்
குவியும்போது
மீண்டும் கடிதம்
எழுதும் காலத்திற்கு
போய் விடுவோமா
எனத் தோன்றுகிறது !.......

  • எழுதியவர் : வா.நேரு
  • நன்றி : எழுத்து.காம்

Wednesday 10 February 2016

ரோஹித்தும், உண்மையான தேசவிரோதிகளும்

ரோஹித்தும், உண்மையான தேசவிரோதிகளும்

பிறக்கவேண்டுமா, பிறக்காமல் இருக்கவேண்டுமா என்ற எல்.எஸ்.ரோகடேயின் கவிதையை சோகம் நிறைந்த ரோஹித் வெமுலாவின் தற்கொலை நமக்கு நினைவூட்டுகிறது. கொடுமை நிறைந்த, இரங்கத்தக்க துயர் நிறைந்த இந்த உலகத்தில் பிறப்பதற்கு, தான் விரும்பாததினால், தான் பிறந்தபோது தனது தாய் நீண்டதொரு நேரம் பிரசவ வேதனையை அனு பவிக்கவேண்டியதாயிற்று என்று அந்த தாழ்த்தப்பட்ட பிரி வைச் சேர்ந்த கவிஞர் தனது தாயிடம் கூறுகிறார். அத்தகைய நீண்டகால வேதனை இன்றும் தொடர்கிறது என்பதுதான் மிகவும் வருத்தப்பட வேண்டிய செய்தியாகும். இந்த உண்மையை நமக்கு நினைவுபடுத்துவதற்கு ரோஹித் வெமுலா தனது உயிரைக் கொடுக்க வேண்டியிருந்தது. நமது பொதுவாழ்க்கையில், ஓர் இரட்டைப் பிரச்சினை பிறப்பதற்காகக் காத்திருப்பதை அங்கீகரிக்க அவரது இறப்பு நம்மையெல்லாம் கட்டாயப்படுத்துகிறது. இதனைத் தொடர்ந்து எழுந்த விவாதத்தில், ஒருவர் மட்டுமே கவனம் பெற்றார். என்றாலும், அவருக்கு சமமான முக்கியத்துவம் பெற்றவரும்,  இப்பிரச்சினையில் சம அளவில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவருமான மற்றொருவர் போதிய கவனத்தைப் பெறவில்லை. இது பற்றி நாம் குரல் எழுப்பவேண்டியது அவசியமாகிறது. அவ்வாறு செய்யாமல் நாம் அமைதியாக இருந்தால், அது இக்கொடிய நிகழ்வை மிகச் சாதாரணமானதாக ஆக்கும் ஒரு பேராபத்துக்கு உள்ளாக்கும் நிலைக்கு நாமே  தள்ளுகிறோம் என்பதுடன், ஒரு நியாயமான பொருத்தமான கவலை போன்ற ஒரு தோற்றத்தை அதற்கு நாம் அளிக்கிறோம்.
இந்தியச் சமூகத்தில், குறிப்பாக பொதுக் கல்வி நிறுவனங் களில்,  பாகுபாடு காட்டப்படுவது என்பது, தந்திரம் மிகுந்த, மறை முகமாக பேராபத்தை விளைவிக்கக்கூடிய பல வடிவங்களில் நிலவி வருவதைப் பற்றி கடந்த சில வாரங்களாக நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். அத்தகைய பாகுபாடு காட்டப்படுவது, குறிப்பாக பல்கலைக் கழகங்கள் போன்ற அறிவொளி பெற்ற இடங்களில், 66 ஆண்டு கால குடியாட்சிக்குப் பிறகும் நிலைத்து நீடித்திருப்பது, இடைவிடாத பல கேள்விகளை எழுப்ப இயன்ற ஒரு புதிராகவே விளங்குகிறது. இந்தியர்களின் மனங்களில் மனுவாதி நடைமுறை எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது? எந்த ஜனநாயக செயல்திட்டத்தினால் அதனை அழித்தொழிக்க இயலும்? மனுவாதி நடைமுறையை வெளிச்சம் போட்டுக்காட்டி முன்னெடுத்துச் சென்று சேவை செய்பவர்களாகவே இந்திய அரசின் தற்போதுள்ள அலுவலர்கள் ஏன் இருக்கின்றனர்? நமது அரசியல் கலாச்சாரம் ஏமாற்று, மோசடி என்னும் எத்தனை அடுக்குகளால் மூடி மறைக்கப்பட்டுள்ளது? ரோஹித்தின் தற் கொலையை ஒரு பெரும் சமூக அவலமாகக் கருதாமல், ஓர் அரிய நிகழ்வாகவே நமது அரசு ஏன் கருதுகிறது? தற்கொலை செய்து கொள்ளாமல் எங்களிடம் வந்திருந்தால், நாங்கள் அவரது கவலைகளையும், குறைகளையும் போக்கியிருப்போம் என்று  அவர்கள் கூறுவது போலிருக்கிறது. அவ்வாறு கூறப்படுவது உண்மையானதா? இவைதான் கடினமானதாகத் தோன்றும் கேள்விகள். ஆனால் அந்த கேள்விகள் கேட்கப்பட்டுத்தான் ஆகவேண்டும்; அது பற்றிய சான்றுகள் சரிபார்க்கப்பட்டுத்தான் ஆகவேண்டும்.
சங் பரிவாரத்தின் பெரும்பான்மையின செயல்திட்டம்
அய்தராபாத் மத்தியப் பல்கலைக் கழகப் பதிவாளருக்கும், துணை வேந்தருக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் இது பற்றி அனுப்பிய அய்ந்து கடிதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். செப்டம்பர் 3 ஆம் தேதிக்கும், நவம்பர் 19 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட மூன்று மாத காலத்திற்குள் ஒரு மின்னஞ்சலும், நான்கு அலுவலகக் கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் ஒரே ஒரு செய்திதான் இருந்தது. ஹைதராபாத் மத்தியப் பல் கலைக் கழக வளாகம், ஜாதிவெறி மிகுந்த தீவிரவாதிகள் மற்றும் தேசவிரோதிகளின் கூடாரமாகிவிட்டது என்றும், அது பற்றி கேட்டபொழுது,  வளாகத்தில் உள்ள அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் தலைவர் தாக்கப்பட்டார் என்றும், வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளுக்குத் தக்க விளக்கம் அளிக்க வேண்டும் என்ற ஒரே ஒரு செய்திதான் அக்கடிதங்களில் இருந்தது.  வழக்கின் ஒரே ஒரு தரப்பினைப் பற்றி மட்டுமே இக்கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் கருத்து பற்றி அவற்றில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திடமிருந்து குறைந்த அளவு ஒருவர் எதிர்பார்க்க இயன்றது, இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டபிறகு ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்ற  ஒரு நியாயத்தைத்தான். ஆனால் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தைப் பொறுத்தவரை, அம்பேத்கர் மாணவர் சங்கம் இந்தப் பிரச்சினையில் கருத்து தெரிவிக்கவேண்டிய ஒரு பிரதிவாதியாகவே கருதப்படவில்லை. இவ்வாறு கடிதத்திற்கு மேல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது, விசாரணை என்ற பெய ரில் யாரையோ பழி தீர்க்கும் ஒரு செயலாகவே தோன்றியது. அமைச்சகத்தின் உதவிச் செயலர், துணைச் செயலர், ஏன், இணைச் செயலரையும் கூட, அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் மீது ஒரு வழக்கினை உருவாக்கவேண்டும் என்று எவரோ ஒருவர் கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
இதில் உள்ள உண்மை கவனிக்கப்படவேண்டியது, மிகவும் முக்கியமானது. சங்பரிவாரத்தைப் பொறுத்தவரை, பன் முகத்தன்மை கொண்ட ஒரு சமூகத்தை பெரும்பான்மையினர் மன உணர்வு கொண்ட சமூகமாக மாற்றுவதற்கான வழியில் நியாயப்படியும், சட்டப்படியும் அம்பேத்கர் மாணவர் அமைப்பு ஒன்றுதான் குறுக்கே நிற்கிறது. சங்பரிவார், கற்பனை செய்து வைத்திருக்கும் அகண்டபாரதம் என்ற கருத்து, சமூகத்தின் தாழ்த்தப்பட்ட ஜாதி மக்கள் மீது பல நூற்றாண்டு காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஜாதி வன்முறை மற்றும் இழிவு பற்றி எதுவும் வாய்திறவாமல், அமைதி காப்பதாகவே தோன்றுகிறது. இந்திய நாகரிக வரலாற்றில் புகழ் பெற்ற காலங்கள் இருந்தது போலவே, பெரும் பழி பெற்ற காலங்களும் இருக்கவே செய்தன; ஒவ்வொரு அபிநவ குப்தாவுக்கும் ஒரு மனு இருந்தான். தேசத்தை பார்ப்பனமுறையில் கட்டமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகளையும், சவால்களையும், அவற்றிடையே உள்ள முரண்பாடுகளையும் அம்பேத்கர் இயக்கம் வெளிச்சம் போட்டுக் காட்டியது. எனவே, மனுவாதி கொள்கையாளர்களைப் பொறுத்தவரை, அந்த இயக்கம் அழிக்கப்படவேண்டியதும், அதன் தலைவர்கள் ஒழிக்கப்பட வேண்டியவர்களும் ஆவர். ஒரு நீண்டகால அரசியல் உத்தியாக, பிரித்தாளும் கொள்கை மிகத் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படவேண்டும் என்பதே அவர்களது செயல்திட்டம் . ரோஹித்தின் மரணம் இந்த திட்டத் திற்கு பெரும் இடையூற்றை ஏற்படுத்திவிட்டது. எனவே அது தேசவிரோத இயக்கம் என்று அழைக்கப்பட வேண்டும்.
எவர் ஒரு நல்ல நாட்டு பற்றாளர்
அக்கடிதங்கள் வெளிப்படுத்திய மற்றொரு பிரச்சினை இதுதான்.   முதல் வாதத்தினால் அது மறைக்கப்பட்டுவிட முடி யாது. தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதற்காக ரோஹித்தும் அவரது நான்கு நண்பர்களும் ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவற்றில் மூன்று கடிதங்களில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பொருள் இருந் தது:  ஹைதராபாத் பல்கலைக் கழக வளாகத்திற்குள் தேசவிரோத செயல்பாடுகள் - ஆய்வு மாணவரும், அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத்தின் தலைவருமான நந்தனம் சஷீல் குமார் மீதான வன்முறைத் தாக்குதல் - பற்றி. ரோஹித்தையும் அவரது நண்பர்களையும் தேசவிரோதிகள் என்று குற்றம் சாட்டுவதற்கு, யாகுப் மேமனுக்கு மரண தண்டனை அளித்தது பற்றி சில அடிப்படை பிரச்சினைகளும், கேள்விகளும் எழுப்பப்பட்டது பற்றி பல்கலைக் கழக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட விவாதமே காரணமாக ஆக்கப்பட்டது. எவர் ஒரு நல்ல நாட்டுப் பற்றாளர்? நாட்டுப் பற்றாளர் என்பதற்குப் பொருள் என்ன? ஒரு பல்கலைக் கழக வளாகத்தில் எவற்றையெல்லாம் விவாதிக்கலாம்? எவற்றையெல்லாம் விவாதிக்கக்கூடாது? இவையெல்லாம் கடினமான கேள்விகளே. என்றாலும் இக் கேள்விகளை எல்லாம் கேட்பதற்கு 66 ஆண்டு வயதான குடியாட்சி கூச்சப்படவே கூடாது.
இக்கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு மிகச் சிறந்த ஒரு துணைவராக ரவீந்திரநாத் தாகூரை, நாம் ஏற்றுக்கொள்ளலாம். கரே பைரே என்ற புகழ்பெற்ற தனது புதினத்தில், கதாநாயகி விமலா, ஸ்வதேசி இயக்கத்தை ஆதரிக்காத தனது கணவன் நிகிலைப் பற்றி கீழ்குறிப்பிட்டுள்ளபடி கூறுவதாக எழுதியுள்ளார்.
ஸ்வதேசி இயக்கத்திற்கு ஆதரவு தர எனது கணவர் மறுத்தார் என்றோ, அந்த நோக்கத்திற்கு எதிராக எந்த வழியிலாவது இருந்தார் என்றோ கூறமுடியாது. வந்தேமாதரம் என்ற உணர்வை மட்டுமே அவரால் முழுமனதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
எனது நாட்டுக்கு சேவை செய்ய நான் விரும்புகிறேன். ஆனால், நாட்டை விட மிகப் பெரிய உரிமைக்காக சேவை செய்ய என் ஆற்றலையெல்லாம் நான் சேமித்து வைத்துள்ளேன். எனது நாட்டை ஒரு கடவுளை வழிபடுவது போல வழிபடுவது என்பது, அதன் மீது சாபத்தைக் கொண்டுவருவதாகத்தான் இருக்கும்  என்று நிகில் கூறுகிறான்.
நாட்டின் மீதான நேசம் என்ற தனது நூலின்  நாட்டுப்பற்றும், பரந்த மனப்பான்மை, கருத்துகள் கொண்டவர்களும் என்ற தலைப்பிலான தொடக்க அத்தியாயத்தில் மார்த்தா  நஸ்பாம் இந்த பத்தியைத்தான், தனது வாதத்திற்கு ஆதாரமாகக் குறிப்பிடுகிறார். மிகுந்த ஆர்வத்தை அளிக்கும் இந்நூலில் இரண்டு மிகமுக்கியமான கருத்துகள் உள்ளன. இந்திய நாடு உருவாக்கப்பட்ட பொழுது அதன் கருப்பொருள் போன்று அமைந்திருந்த அம்சங்கள் என்னென்ன? இன்று இந்தியாவில் நாட்டுப்பற்று என்று கூறப்படுவதற்கு என்ன பொருள் தரப்படு கிறது? இதற்கான விடைகளை இப்போது நாம் பார்ப்போம்.
நமது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் பேசப்படும் பல விஷயங்களில், சகோதரத்துவம் என்பதும், தனிமனிதனின் கவுரவத்திற்கு உறுதி அளிக்கப்படுவதும், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு காக்கப்படுவது பற்றியும், சிந்திக்கவும், கருத்தை வெளிப்படுத்தவும், தான் விரும்பிய நம்பிக்கை கொள்ளவும், வழிபாடு செய்வதற்குமான சுதந்திரமும்  அடங்கியுள்ளன. மூலக் கருப்பொருள் போன்ற நமது முக் கியமான கொள்கைகள் இவைதாம். எங்கிருந்து அவை வந் தன? அவை எவ்வாறு உருவாக்கப்பட்டன? அவற்றைப் பரிந்துரைத்தவர் யாவர்? எந்த அளவுக்கு ஆழமாக அவை நம்பப்படுகின்றன? என்பதெல்லாம் இன்று தேவையில்லாத கேள்விகளாக ஆகிவிட்டன.  ஒரு சமூக வழக்கை, நாம் கையாள நேரும்போது, நாம் கடைப்பிடிக்க வேண்டிய மிகமிக இன்றியமையாத அம்சங்கள் என்று குடியரசு இந்தியா அவற்றை மதிக்கிறது என்பதுதான் அதன் காரணம்.
கருத்து மாறுபாடுதல் என்னும் கொதிகலன்
மேமனுக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டது பற்றி விவாதிக்க ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தியதற்காக, அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் மீது தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்ட போது,  தங்களது கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை மட்டும்தான் அவர்கள் பயன்படுத்திக் கொண் டிருந்தனர். அதுவும் அத்தகைய சுதந்திரத்தை துணிவுடன் வெளிப்படுத்துவதற்காக அனுமதிக்கப்பட்ட ஓரிடமான பல்கலைக் கழகத்தில்தான் அவர்கள் அதனைச் செய்து கொண்டிருந்தனர்.  ஒரு பல்கலைக் கழகம் என்பது, அறிவின் எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ளவும், அதில் மறைந்துள்ள பொய்களைப் பற்றி ஆய்வு செய்யவும்,  மாறுபட்ட கருத்துகள் உள்ளிட்ட பலவிதமான கருத்துகளை உருவாக்கிக் கொள்வதற்குமான ஓரிடமாகும். ஒரு பல்கலைக் கழகம் என்பது எவ்வாறு நிகிலைப் போல இருப்பது என்பதைக் கற்றுக் கொள்வதற்கான ஓரிடமுமாகும். பல்கலைக் கழக வளாகத்தினுள் ஒரு விவாதத்தை மேற்கொண்ட ஒரே காரணத்துக்காக மாணவர்கள் மீது தேசவிரோத குற்றச்சாட்டுகளை சுமத்துவது முறைகேடான விபரீத போக்காகும்; அது நமது நாட்டையே சர்வாதிகார நாடு போன்ற ஒரு நாடாக ஆக்கிவிடும்.
சர்வாதிகார நாடு என்றால் என்ன என்று எவராவது தயவு செய்து மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்குக் கூறமுடியுமா? மேலும், தேசவிரோதம் என்ற தலைப்பில் அமைச்சகம் மேற்கொண்டுள்ள இத்தகைய குறுக்கீடுகள் நமது கல்வியாளர்களிடையே ஒரு பெரிய அச்சுறுத்தலை உரு வாக்கியுள்ளது.
எனது நம்பிக்கையைப் பற்றி மிகத் தெளிவாக நான் கூறுவதற்கு தயவு செய்து அனுமதிக்கவும். விவாதத் திற்கான வரையறைகளையும், அறிவுப்பூர்வமான முன்னெச் சரிக்கைகளையும் மேற்கொண்டிருந்தால்,  பல்கலைக் கழகத் தில் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு பயனுள்ள விவாதமும் தேச விரோத செயலாக ஆகிவிடமுடியாது. கருத்து மாறுபாடுகளும் கேட்கப்படத்தான்வேண்டும். ஒருவருக்குள் வெறுப்பு, கோபம் என்னும் உணர்வுகளை அது தட்டி எழுப்புகிறது என்பதால்,  தேசவிரோதி என்று அழைக்கப்படுவதற்கு எவர் ஒருவரும் விரும்புவதே இல்லை. சுய தணிக்கையையும், சமூக தணிக்கையையும் அது உருவாக்கிக் கொள்கிறது. இதனைத்தான் ரோஹித் அனுபவித்திருக்கிறான். இதனைத்தான் அவனது கடிதம் நமக்குக் கூறுகிறது. அமெரிக்கர்களின் வாழ்வில் மிகமிக மோசமான  காலத்தில் உருவான மெக்கார்தி கோட்பாடு பற்றி அது நமக்குக் கூறுகிறது. அத்தகைய கடுமையான தணிக்கை நடைமுறைகளை எதிர்க்காத எந்த ஒரு சமூகமும், மெக்கார்தி கோட்பாடு என்னும் மலைச் சரிவில் வீழவே செய்யும்.
தணிக்கை பற்றிய அச்சத்தை விவாதிப்பதுடன்,  நாட்டுப் பற்று என்ற கேள்வியைப் பற்றியும் விவாதிக்கப் படவேண்டும்.  சமூகத்தைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியை ரோஹித் வைத்திருந்ததாலும், தனிப்பட்டவரின் கவுரவத்துக்கு உறுதியளிக்கும் சமூகத்தின் உறுதிமொழியை அவர் நினைவு படுத்தியதாலும், அவர் ஒரு நாட்டுப் பற்றாளரே ஆவார்.  இதனை அவர் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒரு கல்வியாளராக மட்டுமன்றி,  ஒரு  நுண்ணறிவாளராகவும் அதனைச் செய்தார். எந்த ஒரு நுண்ணறிவாளராலும் ஆற்ற இயன்ற மிகப் பெரிய கடமை எது சரியானது என்று நாட்டுக்கு இவ்வாறு கூறுவதுவேயாகும். இதனைத்தான் உரிமை என்னும் ஆங்கிலச் சொல்லான  ஸிவீரீலீt என்ற சொல்லை தாகூர் எழுதும்போது,  ஸி என்ற தலைப்பு முதலெழுத்தில் எழுதினார். ரோஹித்தின் செயல்பாடுகளை ஜாதிவெறி பிடித்தவை என்று பார்க்கும் மனம்தான் உண்மையில் ஜாதிவெறி பிடித்த மனமாகும். இணை அமைச்சர் தத்தாத்ரேயாவும், அகில பாரத வித்யார்த்தி பரீசத்தின் தலைவரும்தான் ஜாதிவெறி பிடித்தவர்கள் என்று ஹைதராபாத் பல்கலைக் கழக துணை வேந்தரும், பதிவாளரும் மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு எழுதியிருக்க வேண்டும்.
நஸ்பாம் தொகுத்த,  ஆங்கிலநாட்டு குடிமகனாகப் பிறந்து அமெரிக்கா-கானா நாட்டுக் குடியுரிமை பெற்ற, தத்துவஇயலாளர்  க்வாமி அந்தோணி அப்பையாவின் நூலின்  பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தினர் என்ற ஒரு கட்டுரையில்,  அனைத்து மனிதர்களுக்கும் சமமான கவுரவம்  என்ற கருத்தை பல வழிகளிலும் பின்பற்றி நடைமுறைப்படுத்தலாம். ஆனால், கட்டுப்பாடற்ற வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ள ஒரு குடியாட் சியுடன் அதற்கு உள்ள நெருக்கமான உறவினையும்,  காமம், இனவெறி (ஜாதிவெறி என்று இங்கே படிக்க) மற்றும் எதிர்பால்உணர்வைத் துறப்பதையும், நமக்கு நன்மை பயப்பது எது என்பது பற்றிய வேறு யாரோ ஒருவரது கண்ணோட்டத்தில் காணப்படுவதை, நம் மீது திணிப்பதற்கான அரசின் விருப்பத்தை ஏற்க மறுக்கும் தனிமனித தன்னாட்சிக்கு மதிப்பளிப்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுவதாகும் இந்தக் கருத்து. இதனைத் தடுக்கத்தான் சங்பரிவாரம் விரும்புகிறது. அதனை நாட்டுப் பற்று என்று எண்ணாதே. அதற்கு எதிராக ரோஹித் போராடிக் கொண்டிருந்ததுதான் உண்மையில் நாட்டுப் பற்றாகும்.
நன்றி:  தி ஹிந்து 02-02-2016
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
நன்றி : விடுதலை 08.02.16

Monday 8 February 2016

தன்னலமா ? பசு வழிபாடா? ....எம்.என்.ராய்

                                                           தன்னலமா ? பசு வழிபாடா?

அண்மையில் படித்த புத்தகம் : சிறைக்கைதிகளின் சிந்தனைத் துளிர்கள்
0ஆசிரியர்                                    :  அறிவுலக மேதை எம்.என்.ராய்
தமிழில் மொழிபெயர்த்தவர்    :   வை.சாம்பசிவம்
வெளியீடு                                  :   கங்கா-காவேரி, 18, காரியாங்குடி செட்டித்தெரு, வெளிப்பாளையம், நாகப்பட்டினம்-611 001
முதல் பதிப்பு                             :   2001   , மொத்த பக்கங்கள் 144 , விலை ரூ 35/=
மதுரை மைய நூலக எண்       :   140058

                                                                  பகுதி -2
பூனை கேட்பதாக எம்.என்.ராய் எழுதியிருக்கும் கருத்துக்கள் பல ஆண்டுகளுக்கு முந்தைய கருத்துக்கள்  என்றாலும் இன்றைக்கும் பொருந்தக் கூடிய, அதிலும் இந்தக் கால கட்டத்தில் மிகவும்பொருத்தமான கருத்துக்களாக இருக்கின்றன. பசுவை மட்டும் போற்றிப் புகழ்வது ஏன் ?அதனை மட்டும் கடவுளாகக் கருதுவது ஏன்  எனக் கேட்கும் பூனை அதற்கு விடையாக கூறும் கருத்து சிந்தனைக்குரியது. இதோ அந்தக் கருத்துக்கள்

" பொதுவாகவே பழங்கால சமுதாய நிறுவனங்களும் , மதச்சம்பிராதயங்களும் நெறியற்ற முறைகளை உட்கொண்டுதான் நிற்கின்றன. பசு-வழிபாடு என்பதும் அத்தகைய மடமையின் பிரதிபலிப்பே. ...தனிப்பட்ட தெய்வீகத் தன்மையொன்று பசுவினிடம் மட்டும் இருப்பதாக எந்தப் பகுத்தறிவு படைத்தவனும்  கூறமாட்டான். பேராத்மாவை எவ்வுயிரிலும் காணலாம் என்றிருக்குமானால், இந்திய ரிஷிகள் இந்த ஒரு மிருகத்தை மட்டும் ஏன் வணக்கத்திற்குரியதாகக் கொண்டார்கள் ?

 இந்துக்கள் மிருகங்களிடம் நடந்துகொள்ளும் முறையைக் கூர்ந்து கவனித்தால் மேற்சொன்ன தெய்வ நோக்கம் அவர்களிடம் இருப்பதாகக் கூறவே முடியாது. என் சொந்த அனுபவம் இதைத் தெளிவாக்கும். என்னுடைய (பூனையோட) இனத்தையே வைரியாக்கி வைத்திருக்கிறான் இந்தியன். அவனைப் பழமையும் ,மத உணர்வும் எந்த அளவிற்கு பற்றி நிற்கிறதோ அந்த அளவிற்கு என் இனத்தின் மேலுள்ள வெறுப்பும் மேலோங்கி நிற்கும். இந்திய சனாதனி என்னை நடத்தும் முறையைக் கூர்ந்து கவனித்தால் மேற்சொன்ன தெய்வ நோக்கம் அவர்களிடம் இருப்பதாகக் கூறவே முடியாது. என் சொந்த அனுபவம் இதைத் தெளிவாக்கும்.

இந்திய சனாதனி என்னை நடத்தும் முறையை எண்ணினால் நெஞ்சையே வேகவைக்கும்; வேறு சில காரணங்களால்தான் என் இனத்தரின் வாழ்வு அவர்களுடைய கொடுமையினின்றும் பிழைத்து நிற்கிறது..... பூனைகள் மிகக் கெட்ட மிருகங்களாம். சாதாரண அன்பு காட்டக்கூட தகுதியற்றவைகளாகம்.காரணம் அவைகள் உயயோகமற்றவை என்பதுதான். பூனைகளால் யாருக்கும் எவ்வித நன்மையும் இல்லை என்று கூறியதைப் பலமுறை கேட்டிருக்கிறேன்.

இவ்வளவும் உணர்ந்த பின்பு , பசு வழிபாட்டுக்குக் காட்டும் பெரியதோர் விளக்கத்தை நான் எப்படி நம்ப முடியும் ?  சனாதன இந்தியர்களால் வெறுத்து ஒதுக்கப்படும் பட்டியலில் இடம் பெறும் மிருகங்கள் எத்தனையோ உண்டு ." எல்லாம் அவன் மயம், எவ்வுயிரிலும் அவன் இருக்கிறான் " என்ற தத்துவம் உண்மையானால், இந்தியர்களின் நடத்தையிலே இப்படிப்பட்ட முரண்பாடு இருக்க நியாயமே இல்லை.ஆகையால் பசு வழிபாடு என்பது பரந்த தத்துவ விளக்கம் அல்ல; சொந்த இலாபக் கணக்கை உட்கொண்டதுதான்!. உண்மையில் அதில் தத்துவமே இல்லை- தமக்குத்தேவை என்பதைத் தவிர உயர்த்திப்பேசப்படும் இந்திய ஆதிமீக ஜோதியில் இதுவும் இடம் பெற்றிருக்கிறது !

இந்துக்களின் வழிபாட்டு முறையிலே பசு எப்படி வந்து சிக்கிக்கொண்டது என்பதை மத ஆராய்ச்சியாளர்களும் வரலாற்று ஆசிரியர்களுந்தான் கூற வேண்டும். இருந்தாலும் பூனையின் சிற்றறிவிற்கு எட்டிய ஒரு கருத்தைக் கூற விரும்புகிறேன்.

வணங்கி வழிபடுவது சமுதாய்த் தேவையில் இருந்து பிறந்ததே. ஒரு காலத்தில் இந்திய மண்ணில் கால் நடைகள் இல்லாமல் இருந்தன. குறைந்த அளவில் இருந்த கால் நடையை பாதுகாக்க மக்கள் முற்பட்டார்கள். ஆனால் அங்கு வாழ்ந்த ஆரியர்களோ , மாட்டு இறைச்சி தின்பவர்கள். இந்த நிலையில் குறைந்த அளவில் இருந்த அந்த கால் நடைகளுக்கு நிரந்தமான தலைவலி இருந்துகொண்டே இருந்தது. இந்தியாவின் புனிதமான புராதண ஏடுகளில் , மாட்டிறைச்சி தின உணவாக இருந்ததென்பதற்கான ஆதாரங்கள் பற்பல உண்டு. இந்த இந்தியாவின் ஆத்மீகச்சொத்து  மாட்டிறைச்சி தின்று சோமபானம் குடித்து வாழ்ந்த அன்றைய ரிஷிகள் உருவாக்கியதுதான் என்பதும் உண்மை. ...

.சமுதாயத்தில் உற்பத்தியைப் பெருக்கும்வகையில் , மனிதனைவிட மாடுகள் அதிகப் பயனுள்ளவை. உணவுக்குப் பயன்படுவதைக் காட்டிலும் உற்பத்தியைப் பெருக்க அவை அதிக அளவில் பயன்பட்டன. ஆகவே , இன்றியமையாத தேவை இணையற்ற தெய்வத்தன்மையாக மாற்றப்பட்டது. அறிவற்ற மக்கள் மத அடிப்படையல்தானே எதையும் நினைக்க முடியும். மனித இனத்திற்கு உழைத்துச் சாகவேண்டும் என்ற உன்னதமான தத்துவத்தின் அடிப்படையில்தான் , ம்மாட்டினத்தை உணவாக்கித் தின்றுவிடாமல் உயிர் வாழ விட்டார்கள்! பசுவைப் புனிதத்தாய் என்ற அளவுக்கு வைத்து அதன் இறைச்சியை இரையாக்கிக் கொல்லாமல் விட்டதுகூட , அது அதன் கன்றுகளுக்குத் துரோகம் செய்து மனிதனுடைய தன்னலத்தைக் காக்குமே என்பதற்காகத்தான்!.

அந்த பரிதாபத்திற்குரிய மாட்டினத்தைப் பார்த்து ' திடீர்ச்சாவா ? அல்லது தேய்ந்து தேய்ந்து மாயும் நீண்ட வாழ்வா ? இரண்டில் எது வேண்டும் ? " என்று கேட்டுப்பாருங்கள். என்னுடைய உறவினமான மாட்டினம் என்னைப்போல புத்திசாலித்தனமான பதிலைத்தான் கொடுக்கும். கொழுத்து வளர்ந்து சில காலம் சிறக்க வாழ்ந்து மடிவது , நீண்ட கால்த் தொல்லை வாழ்வை விட மிக மிக மேலானது என்ற பதில்தான் கிடைக்கும். (பக்கம் 23,24,25,26)