Saturday 25 June 2016

இரண்டு ஊர்க்காரர்களும் அவதிப்பட்ட காலங்கள்.....



                                                           கடந்துபோன காலங்கள்(10)

மதுரையில் அழகர்
ஆற்றில் இறக்கப்படும்
சித்திரை திருவிழா
போல எங்கள் ஊரிலும்
சித்திரைத் திருவிழா உண்டு....

சித்திரைத் திருவிழாவிற்கு
பூந்தியும் இலட்டும்
வீட்டில் அம்மாவால்
பலகாரமாய்  செய்யப்படும்
பல வருடங்கள் தொடர்ச்சியாக...

திருவிழா நாட்களில்
அம்மா ஏதாவது
பலகாரம் செய்துவிடுவார்கள்!
இல்லையென்றால் வீட்டிற்கு
மற்றவர்களின் பலகாரங்கள்
படையெடுக்கும் எனப்பயந்து
அம்மா சாமி கும்பிடவில்லை
என்றாலும்
பலகாரங்களை செய்துவிடுவார்கள்
எங்கள் வீட்டில்.....

வருடாவருடம்
சுற்றி இருக்கும்
கிராமத்தைச்சேர்ந்தவர்கள்
சாமியைத் தூக்கி வருவார்கள்
அந்த வருடம்
எங்கள் ஊரின்
பக்கத்து ஊர்க்காரர்கள்
சாமியைத் தூக்கி வந்தார்கள்....


சின்ன வயதில்
நானும் அழகரைப் பார்க்க
போலீஸ் ஸ்டேசன் பக்கத்தில்
இருக்கும் கோயிலுக்கு
முன்னால் போக


பெரிய பல்லக்கு
பல்லக்கு மேலே சாமி
சாமிக்கு பக்கத்தில் அய்யர்
எனத் தூக்கி வந்த வேளை

எங்கள் ஊர்க்காரர்கள் சிலர்
சாமியை மேற்குப் பக்கமாகத்
திருப்பு எனச் சொல்ல
சாமியைத் தூக்கி வந்த
பக்கத்து ஊர்க்காரர்கள்
அது வழக்கமில்லை என
மறுக்க
வாக்குவாதம் சிறிது
நேரத்தில் சண்டையாக மாற

சாமி தூக்கி வந்தவர்களை
எங்கள் ஊர்க்காரர்கள் சிலர்
அடித்து விட
அடியைப் பொறுக்க இயலாத
பக்கத்து ஊர்க்காரர்கள்
அய்யரோடும் சாமியோடும்
பல்லக்கை டொம்மென்று
கீழே போட்டு  விட
விழுந்து கிடந்த அய்யர்
எழுந்திருக்கும்முன்னேயே
அந்த இடம் ஒரு
போர்க்களமாக மாற

அடிபட்ட பக்கத்து ஊர்க்காரர்கள்
திரும்பப் போகும் வழியில்
வைக்கோல் படப்புகளுக்கு தீவைக்க
காட்டில் இருந்த கிழவியைத்
தூக்கிக் கிணற்றில்
போட்டு விட்டார்கள் என
வதந்தி பரவ

ஏதோ ஒரு
போர்க்களத்திற்கு போவது
போல ஆரம்பப்பள்ளிக்கூடத்திலிருந்து
விசிலிடித்துக்கொண்டு
இளைஞர்களும் முதியவர்களும்
கைகளில் கம்புகளோடும்
கூர்மையான ஆயுதங்களோடும்
ஒட்டு மொத்தமாய்
பக்கத்து ஊருக்கு ஓடிய
காட்சி இன்றும் கூட
நினைவில் நிற்கிறது.....


அந்த ஊரிலிருந்துதான்
அருமை நண்பன்
மனுநீதி உடன் படித்தான்
ஊரும் ஊரும் சண்டையிட்டு
ரொம்ப நாளா
பகை ஊராக இருந்தது
இப்போது நகைப்பாக இருக்கிறது...
ஆனால்

அந்தச்சண்டைக்காக
எங்கள் ஊரிலிருந்தும்
பக்கத்து ஊரிலிருந்தும்
நிறையப் பேர்
இருபது வருடம்
நீதிமன்றத்திற்கு
அலைந்தார்கள்,,,,,
கடைசியில் வழக்கு
முடித்துவைக்கப்பட்டது
என்றாலும்
வழக்குக்காக நடந்தவர்கள்
இருபது வருடங்களாக
நடந்துகொண்டேதான்
இருந்தார்கள்
வாய்தா வாய்தாவாக....

யாரோ ஒருவர் இருவர்
அடாவடித்தனத்தால்
இரண்டு ஊர்க்காரர்களும்
அவதிப்பட்ட காலங்கள்.....
மறக்க இயலா காலங்கள்....

                                                           வா.நேரு-----25.06.2016

Sunday 19 June 2016

வடக்கயிற்றில் கூனையைக் கட்டி.......

                                                                கடந்து போன காலங்கள்(9)


எங்கள் வயக்காடு
பொதுக்காடு
முறை வைத்து முறைவைத்து
வாரத்தில் ஒரு நாள்
தண்ணீர் பாய்ச்சல் வேண்டும்

கூனையில் நீரை மோந்து
கமலையில் தண்ணீர் இறைக்கும்
விவசாய முறை
இன்றைய தலைமுறையில்
எத்தனை பேருக்குத் தெரியும்
எனத்தெரியவில்லை !

வடக்கயிற்றில்
கூனையைக் கட்டி
கூனை உருள்வதற்கு ஒரு
உருளை அமைத்து
கூனையை இணைக்கும்
வடக்கயிற்றை
மேக்காலில்  கட்டி
மேக்காலின் இருபக்கமும்
மாட்டைக் கட்டி
மாடுகளும் மனிதனும்
நடந்து நடந்து
நாள் முழுக்க
தண்ணீரை இறைக்கும் முறை

பின்னால் வரும்போது
மாட்டோடு நடந்தும்
கூனையில் தண்ணீரை
மோந்து முன்னால் வரும்போது
வடக்கயிற்றில் உட்கார்ந்து
மாடுகளை விரைவுபடுத்தியும்
முன்னும் பின்னுமாய்
மாட்டோடு நடந்து நடந்து
காலை முதல் மாலைவரை
தண்ணீர் இறைத்தால்
எங்களுக்குரிய கால் ஏக்கர்
பயிர்கள் தண்ணீரில் நனையும்

எங்கள் ஊரில்
இப்போது மாடுகளே
அரிதாக ....
உழவுக்கே மாடுகள்
இல்லா நிலையில்
கமலை இறைக்க மாடுகளா...
சாத்தியமில்லை....

மின்சார சுவிட்சு
போட்டவுடன்
மோட்டார் பம்பில்
தண்ணீர் அடிக்கும்
இக்காலங்களில் அவை
தேவையுமில்லை....

மாட்டோடு கமலையில்
நீர் இறைத்த  தருணங்கள்....
நீர் இறைக்கும் நேரங்களில்
அண்ணன் மறைந்துபோன
'பாட்டுக்கார பரம்சிவம் 'போல
நீரோடையாய்
தங்கு தடையின்றி ஓடிவரும்
நாட்டுப்புற பாடல்களோடு
நீர் இறைத்த
எங்களுக்கு மூத்த
 தலைமுறையினர்....
கடந்து போன காலங்கள்
இனிப் பார்க்க இயலா
அழிந்து போன ஓவியங்கள்.....


                                         வா.நேரு - 19.06.2016



Saturday 18 June 2016

சாமானியர்களின் சாதனைகள்(2)...நந்தகுமார் ஐ.ஆர்.எஸ்



சாமானியர்களின் சாதனைகள்(2)

நந்தகுமார் ஐ.ஆர்.எஸ்- "The Real State Rank Holder"


“5 வயசுக்குள்ள பல நோய்களால் உடம்பு நோய்க் கூடாரமா ஆயிடுச்சு. அதனால எதிர்ப்பு சக்தி குறைஞ்சு போச்சு; எப்பவும் சோர்வாகவே இருக்கும்; படிச்சா மனசுல தங்காது; டீச்சர் சொல்றதை புரிஞ்சுக்க முடியாது; புரிஞ்சுக்கிட்ட விஷயத்தை சரியா வெளிப்படுத்தவும் முடியாது; போர்டுல எழுதிப் போடுறதை எழுத முடியாது; அப்படியே எழுதினாலும் தப்புத் தப்பா எழுதுவேன். இதுக்கெல்லாம் காரணம் ‘டிஸ்லெக்ஸியா’ என்று சொல்லப்படுற ‘கற்றல் குறைபாடு’ தான்ன்னு சிவில் சர்வீஸ் பிரிப்பேர் பண்ணும் போது தான் தெரிய வந்துச்சு.
ஒரு வழியா 8-ம் வகுப்பு வரைக்கும் வந்துட்டேன். அதுக்கு மேல என்னைச் சிரமப்படுத்த அப்பா விரும்பல. படிப்பு தான் வரல.. லாட்டரிச்சீட்டு வியாபாரம் பண்ணியாவது பொழச்சுக்கோன்னு ஆவடியில இருந்த கடையில உட்கார வச்சுட்டார். தெருக்கள்ல போய் விப்பேன். கடையையும் பாத்துக்குவேன். தீடீர்னு லாட்டரிச் சீட்டை தடை பண்ணிட்டாங்க. கடையை மூடிட்டு சித்தாள் வேலைக்கு போனேன். என் உடல்வாகுக்கு செங்கல்லும், மண்ணும் சுமக்க முடியலே. ஜெராக்ஸ் கடைக்குப் போனேன். அதுவும் சரியா வரல. அப்புறம் சவுண்ட் சர்வீஸ், டி.வி. மெக்கானிக் சென்டர் என வாழ்க்கையில ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க அலையா அலைஞ்சேன்.
கடைசியா மெக்கானிக் ஷாப். அங்கே வேலை செஞ்சிக்கிட்டே +2க்குப் அப்ளை பண்ணினேன். அந்த வருஷம் எக்கானமிக்ஸ் சிலபஸ் மாறிடுச்சு. அது தெரியாம பழைய புக்கையே படிச்சதால அந்தப் பாடத்தில் பெயிலாகி, அட்டெம்ட்ல பாஸ் பண்ணினேன். ஆனா தனித்தேர்வரா எழுதினதால எந்தக் கல்லூரியிலும் இடம் கிடைக்கல. கடைசியில வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் B.A English சேர்ந்தேன்.

கல்லூரியில் சேர்ந்த ஒரே வாரத்தில் என்னுடைய ஆங்கில அறிவைப் பார்த்து மிரண்டு போன பேராசிரியர்கள் நீயெல்லாம் படிச்சு பாஸ் பண்ண முடியாது…ஒர்க்ஷாப்புக்கு போய் ஒழுங்கா தொழிலைக் கத்துக்கோ என்று அறிவுரை சொன்னார்கள். போகப் போக சரி பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு, தீவிரமா படிக்க ஆரம்பிச்சேன். முதல் செம்-ல அம்மை நோய் அடுத்த செம்-ல ஒரு பெரிய விபத்து இப்படி பல தடைகளை தாண்டி இறுதியா என் பேட்சுல அரியர் இல்லாம டிகிரி வாங்கின ஒரே ஆள் நான் மட்டும் தான். பி.ஏ-வுக்கு முடிச்சதும் எம்.ஏ-வுக்கு நிறைய கல்லுரியில் அப்ளை பண்ணினேன். மாநிலக் கல்லூரியில் 'வராண்டா அட்மிஷன்' கிடைச்சது. வராண்டா அட்மிஷன்னா போனாப் போகுதுன்னு கொடுக்கிறது. அங்கு தான் நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்.

TNPSC, UPSC தேர்வுகளை எல்லாம் அறிமுகம் செய்தார்கள். எல்லாரும் தீவிரமா பிரிப்பேர் பண்ணினோம். ஆனா அவங்க வேகத்துக்கு படிக்க முடியலே. ஆனாலும் ஆர்மில செகண்ட் லெப்டினென்ட் வேலைக்கு தேர்வானேன். ஆனா பயிற்சிக்குப் போறதுக்கு முன்னாடி திரும்பவும் பெரிய விபத்து. 54 கிலோவாக இருந்த எடை 38 கிலோவாயிடுச்சு. டாக்டர்கள் கை விட்டுட்டாங்க. ஆனா நான் மனம் தளரலே. அதிலிருந்து மீண்டு வந்தேன். ஆனா, வேலை கைவிட்டுப் போயிடுச்சு.
பின்பு TNPSC குரூப் 2 எழுதி பாஸ் பண்ணினேன். A.S.O-வாக வேலை கிடைச்சுச்சு. அடுத்து குரூப் 1 தேர்வு எழுதினேன்…வெற்றி! கூட்டுறவு துறையில் துணைப் பதிவாளராக 3 வருஷம் வேலை செஞ்சேன். D.C ரேங்க் வர்ற நேரம், UPSC பாஸ் பண்ணிட்டேன். I.P.S கிடைச்சுச்சு. ஆனா எனக்கு தமிழ்நாடு கேடர் கிடைக்கல. அதனால I.R.S-ல சேர்ந்துட்டேன்..." என சிலிர்க்க வைக்கிறார் இந்திய வருமான வரித்துறையின் இணை ஆணையர் நந்தகுமார்.
நன்றி :rackyrajesh.blogspot.com/.../real-state-rank-holder.ht..




சென்னைக்கு அருகில் இருக்கும் ஆவடியில் நந்தகுமாரின் இளமைப்பிராயம் கழிந்தது. பண்ணிரண்டு வயது. ஆறாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டார். பள்ளிக்குச் செல்வது வேப்பங்காயாய் கசந்தது. கற்கும் பாடங்கள் நினைவில் நிற்பதில்லை. கற்றல் குறைபாடு அவருக்கு தீராதப் பிரச்சினையாக இருந்தது. ஆங்கிலத்தில் டிஸ்லெக்சியா (Dyslexia) என்று அழைக்கப்படும் இந்த உளவியல் பிரச்சினை கற்றல் தொடர்பானது.
பள்ளிக்குச் செல்வதை நிறுத்தும் மாணவர்கள் வழக்கமாக நம்மூரில் என்னவெல்லாம் செய்வார்களோ, அதையே தான் நந்தாவும் செய்தார். லாட்டரி டிக்கெட் விற்றார். வீடியோ கடையில் எடுபிடியாக வேலை பார்த்தார். மெக்கானிக் ஷெட்டில் கையில் க்ரீஸ் அழுக்கோடு நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டியிருந்தது. ஜெராக்ஸ் கடையில் சில காலம். இப்படியாக எதிர்காலம் குறித்த எந்த தெளிவான முடிவும் அவரிடம் இல்லாமல் வாழ்க்கை சக்கரம் சுற்றிக் கொண்டிருந்தது.
பிரச்சினை நந்தகுமாரோடு முடிந்துவிட்டிருந்தால் தேவலை. நந்தகுமாருக்கு இரண்டு தங்கைகள், ஒரு தம்பி. முன் ஏர் எப்படிப் போகுமோ, அப்படித்தான் பின் ஏரும் போகும் என்பது ஊர்களில் பேசப்படும் சொலவடை. நந்தகுமாரைப் பின்பற்றி அவரது தங்கைகளும், தம்பியும் மிகச்சரியாக, சொல்லி வைத்தாற்போல் ஆறாம் வகுப்போடு பள்ளியை ஏறக்கட்டினார்கள்.

ஒரு குடும்பத்தின் நான்கு வாரிசுகளுமே கல்வியை பாதியில் விட்டால், சமூகம் அந்தக் குடும்பத்தை எப்படிப் பார்க்கும்? இத்தனைக்கும் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப முடியாத அளவுக்கு வறுமையெல்லாம் அக்குடும்பத்தில் இல்லை. தெருப்பிள்ளைகள் இவர்களோடு விளையாட அனுமதிக்கப்படவில்லை. “அந்தப் பசங்க மக்குப்பசங்க. அவங்களோட சேர்ந்தா நீங்களும் மக்காயிடுவீங்க!” உற்றாரும், உறவினரும் கேலியாகவும், கிண்டலாகவும் நால்வரையும் பார்த்தார்கள்.

புத்தருக்கு ஞானம் கிடைக்க போதிமரம் கிடைத்தது. போதிமரத்தடியில் உட்காராமலேயே திடீரென ஒருநாள் புத்தர் ஆனார் நந்தகுமார். பள்ளிக்குப் போகாமலேயே பிரைவேட்டாக எட்டாம் வகுப்பு தேர்வு எழுதினால் என்ன? நண்பர் ஒருவர் அதுபோல எழுதலாம் என்று ஆலோசனை சொல்ல எட்டாம் வகுப்பு தேர்வை வெற்றிகரமாக முடித்தார் நந்தா. இந்த வெற்றி தந்த பெருமிதம் பத்தாம் வகுப்புத் தேர்வையும் எழுதவைத்தது. இதுவும் பாஸ். “அடடே. எல்லாமே ஈஸியா இருக்கே? பள்ளியிலேயே சேர்ந்து படிக்கலாம் போலிருக்கே?” என்று எண்ணினார் நந்தா. எட்டாம் வகுப்பும், பத்தாம் வகுப்பும் பிரைவேட்டாக எழுதிய அவரை +1 வகுப்பில் சேர்க்க பள்ளிகள் மறுத்தன. போராடிப் பார்த்தார். முடியவில்லை. மனந்தளராத விக்கிரமாதித்தனைப் போல +2 தேர்வையும் பிரைவேட்டாகவே எழுதி வென்றார் நந்தா.

இப்போது கல்லூரியில் சேர்ந்து பயிலும் ஆசை நந்தாவுக்குள் முளைவிட்டிருந்தது. பள்ளியில் படிக்காமல் எட்டு, பத்து, பண்ணிரெண்டு என்று எல்லா வகுப்புகளையுமே பிரைவேட்டாக தேறியிருந்த நந்தாவை சேர்த்துக்கொள்ள கல்லூரிகளுக்கு மனமில்லை. கல்லூரிதோறும் கால்கடுக்க ஏறி, இறங்கி கடைசியாக வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரியில் கிடைத்த ஆங்கிலம் இளங்கலை படிப்பை படிக்க ஆரம்பித்தார் நந்தா. அம்பேத்கர் கல்லூரியில் இளங்கலை முடிந்ததும் சென்னை மாநிலக்கல்லூரியில் அதே ஆங்கில இலக்கியத்தை முதுகலையாக கற்றுத் தேர்ந்தார். கல்லூரியில் படிக்கும்போது கல்வி தவிர்த்து, என்.சி.சி. போன்ற விஷயங்களில் அவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது.

முதுகலைப்பட்டம் பெற்ற பிறகும் ‘என்னவாக ஆகப்போகிறோம்?’ என்று எந்த முன்முடிவும் நந்தாவிடம் இல்லை. என்.சி.சி.யில் இருந்ததால் இராணுவம் தொடர்பான பணி எதிலாவது சேரலாம் என்று நினைத்தார். சென்னையில் இராணுவ அதிகாரிகளை உருவாக்கும் ஆபிஸர்ஸ் டிரைனிங் அகாடமி (OTA)-யில் சேர்ந்தார். இடையில் ஒரு விபத்து ஏற்பட, அந்தப் படிப்பையும் பாதியில் விட வேண்டியதாயிற்று. அப்போதுதான் சிவில் சர்வீஸ் தேர்வுகள் குறித்து அறிந்தார். அதுவரை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என்றால் பட்டப்படிப்பு போல மூன்று வருடங்கள் படிக்க வேண்டும் போலிருக்கிறது என்று எல்லோரையும் போல நந்தாவும் நினைத்திருந்தார். சிவில் சர்வீஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு போட்டித்தேர்வு போதுமானது என்ற விஷயமே நந்தாவை மிகவும் கவர்ந்தது.

இன்று நந்தகுமார், ஐ.ஆர்.எஸ், சென்னையில் வருமானத்துறை அலுவலகத்தில் துணை ஆணையளராகப் பணிபுரிகிறார். ஒரு காலத்தில் பள்ளிகளும், கல்லூரிகளும் சேர்க்கத் தயங்கிய மாணவர் இன்று சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, நாட்டை நிர்வகிக்கும் முக்கியப் பொறுப்பு வகிக்கிறார்.

முப்பத்து மூன்று வயதான நந்தகுமாரை சென்னையில் இருக்கும் அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

“எனக்கே எல்லாமே ஆச்சரியமா தாங்க இருக்கு. திடீருன்னு மறுபடியும் படிக்கணும்னு ஆர்வம் வந்தது. விடாமுயற்சியோடு, கடுமையாகப் படித்தேன்னு எல்லாம் சொல்லமுடியாது. சின்சியரா படிச்சேன். அவ்ளோதான்” என்று அளவாகப் புன்னகைக்கிறார். “கல்வி மிக மிக முக்கியமானதுங்க. ஆனா நம்மோட கல்விமுறையிலே எனக்கு கொஞ்சம் அதிருப்தி இருக்கு. நம்ம கல்விமுறை படிப்பாளிகளை உருவாக்குதே தவிர, அறிவாளிகளை உருவாக்குவதாக தெரியவில்லை. மாணவர்கள் கல்வி என்றால் கசப்பானது என்று நினைக்காமல் ஆர்வத்தோடு பள்ளிக்கு வரும் வகையில் நம்ம கல்விமுறையை மாற்றணும்.

கொடுமை பாருங்க. நான் சிவில் சர்வீஸ் எக்ஸாமுக்கு தயாராகும்போது படிச்சதெல்லாம் ஏற்கனவே பள்ளியில் படிச்சதா தானிருக்கு. திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை வேறு வேறு வடிவங்களில் படிச்சிக்கிட்டே இருக்க வேண்டியிருக்கு. ஒருவன் வாழ்க்கையை பயமின்றி எதிர்கொள்ளும் வகையில் அந்தந்த வயதுக்கு தேவையான வாழ்க்கைக்கல்வி இன்றைய சூழலில் அவசியம்!

அப்புறம், சிவில்சர்வீஸ் எக்ஸாம்னாலே எல்லோரும் ஏதோ பெரிய பட்டப்படிப்பு மாதிரி பயப்படுறாங்க. இது ஒரு போட்டித்தேர்வு, பட்டப்படிப்பு அல்ல. பயமில்லாம நிறைய பேர் இந்த தேர்வுகளை எழுதணும். நம்ம இளைய தலைமுறை எதிர்ப்பார்க்கிற அட்வெஞ்சர் கேரியரா நிச்சயமா சிவில் சர்வீஸ் அமையும். ஆறாவது ஊதியப்பரிந்துரைக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வந்த்துக்கு அப்புறமா நல்ல சம்பளமும் கிடைக்குதுங்க!” என்கிறார். கற்றல் தொடர்பான டிஸ்லெக்சியா பிரச்சினையை கொஞ்சம் கொஞ்சமாக கிட்டத்தட்ட வென்றுவிட்டேன் என்றும் நம்பிக்கையோடு சொல்கிறார்.

“அதிருக்கட்டும் சார், உங்களைப் பார்த்து படிப்பை பாதியில் விட்ட உங்க தங்கைகள், தம்பி என்ன ஆனாங்க?” என்று கேட்டால், வெடிச்சிரிப்பு சிரிக்கிறார்.
“சொன்னா நிச்சயமா நம்பமாட்டீங்க. நான் மறுபடியும் படிக்க ஆரம்பிச்சதும் ‘அண்ணன் காட்டிய வழியம்மா’ன்னு அவங்களும் என்னை பின் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு மூணு பேருமே காலேஜ் லெக்சரர்களாக வேலை பார்க்குறாங்கன்னா உங்களால நம்ப முடியுதா?”

படிப்பை பாதியில் நாலுபேரும் அடுத்தடுத்து விட்டதை கூட நம்பிவிடலாம். மீண்டும் தன்னெழுச்சியாக படித்து நல்ல நிலைக்கு சொல்லிவைத்தாற்போல நான்கு பேருமே உயர்ந்திருப்பது என்பது கொஞ்சம் சினிமாத்தனமாக தெரிந்தாலும், நந்தகுமாரின் குடும்பத்தில் சாத்தியமாகியிருக்கிறது. ஒரு காலத்தில் கல்வி அடிப்படையில் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளான குடும்பம் இன்று, அதே கல்வியாலேயே தலைநிமிர்ந்து வாழ்வது மகிழ்ச்சியான விஷயம்தான் இல்லையா?
டிஸ்லெக்சியா!
அமீர்கானின் ‘தாரே ஜமீன் பர்’ படம் வெளியானதற்குப் பிறகு இந்த குறைபாடு குறித்த விவாதங்கள் அதிகளவில் எழுந்த்து. கற்றல் குறைபாடு இருப்பவர்களும் சராசரியானவர்களே. ஆனால் அவர்களிடம் வாசிப்புத்திறன் குறைவாக காணப்படும். கவனம் பிறழ்வது, எழுத்துத்திறன் குறைவது, கணிதப்பாடத்தை புரிந்துகொள்ள முடியாமை ஆகியவை டிஸ்லெக்சியாவின் பாதிப்புகள். எழுத்துக்களையும், அதற்கான உச்சரிப்புகளையும் அவ்வப்போது மறந்துவிடுவதாலேயே இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த கற்றல் குறைபாடுக்கும், அறிவுவளர்ச்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை. சிறுவயதில் டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் சமூகத்தின் உயர்ந்த நிலைகளுக்கு உயர்ந்திருக்கிறார்கள். வின்ஸ்டன் சர்ச்சில், வால்ட் டிஸ்னி போன்றவர்களுக்கும் சிறுவயதில் இக்குறைபாடு இருந்திருக்கிறது.

இக்குறைபாடுக்கு காரணமான மூளைதிசுக்களை முற்றிலுமாக சரிசெய்ய முடியாது என்றாலும், மனநல மருத்துவரின் ஆலோசனைகளோடு தகுந்த மாற்றுச் சிகிச்சைகளின் மூலமாக குறைபாட்டினை போக்க முடியும்.

(நன்றி : புதிய தலைமுறை - எழுதியவர் யுவகிருஷ்ணா )

Thursday 16 June 2016

வாழ்வில் மறக்க இயலாத ஆசிரியர்கள்....

                                            கடந்து போன காலங்கள்(8)


வாழ்வில் மறக்க
இயலாத ஆசிரியர்கள்....
வாழ்கின்ற நாளெல்லாம்
மனதில் நிலைத்து
நிற்கும் ஆசிரியர்கள்
சிலர் உண்டு .....

சாப்டூர் அரசு
உயர் நிலைப்பள்ளியில்
மறக்க இயலா ஆசிரியர்
மூக்கையா வாத்தியார்....

ஐந்தாம் வகுப்புவரை
ஏ,பி,சி,டி-கூடத் தெரியாமல்
வரும் மாணவர்களுக்கு
ஆங்கிலத்தை அப்படி
ஒரு கரிசனத்தோடு
கற்றுத்தரும் ஆசிரியர் அவர்...

அவர் கொடுத்த அடித்தளம்தான்
இன்று எங்கெங்கும்
பல்வேறு உயர் பதவிகளில்
நிறைந்து கிடக்கும்
எங்கள் ஊர்ப் பள்ளியின்
பழைய மாணவர்கள் என்பேன் நான்....

அடித்தும் கண்டித்தும்
நிலைமையை எடுத்துச்சொல்லியும்
எப்படியேனும் படிக்கும்
மாணவர்களைப் படிக்க
வைத்த ஆசிரியர் மூக்கையா வாத்தியார்....

நெஞ்சம் நிறைந்த நன்றி
அவருக்கு உண்டு என்றும் என் வாழ்வில்

செஸ் விளையாட அழைத்து
10 நகர்வுக்கு முன்பே
10-வது நகர்வில் உன்னை
ஜெயிக்கப்போகிறேன்
எனச்சொல்லி நம்பிக்கை ஊட்டும்
சுப்பிரமணிய வாத்தியார்

இலக்கணத்தை தமிழில்
இயல்பாகக் கற்கும்படி
கற்றுக்கொடுத்த
தமிழய்யா குழந்தைவேல்

எனப் பல ஆசிரியர்களின்
முகங்கள் இன்றும்கூட
மறவாமல் கண்முன்னே
தோன்றுகிறது
கை எடுத்து கும்பிடத்
தோன்றுகிறது எப்போதும்
அவர்களின் பணிக்கு....
                                                    வா. நேரு - 16.06.2016.
                                                  

Sunday 12 June 2016

ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் மத வழிபாட்டு இடங்களை அகற்ற வேண்டும்...

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு சாலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
மத வழிபாட்டு இடங்களை அகற்ற வேண்டும்
லக்னோ, ஜூன் 12 உத்தரப்பிரதேச மாநிலத்தில் பொது சாலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் அனைத்து மதவழிபாட்டு இடங் களையும் அகற்ற வேண்டும் என்று அந்த மாநில அரசுக்கு அலாகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லக்னோவின் மொகல்லா தாடா கேரா பகுதியில் பொது வழித்தடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அலாகா பாத் உயர்நீதிமன்றத்தில் 19 பேர் ரிட் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக் கள், லக்னோ உயர்நீதிமன்றத் தில் நீதிபதிகள் சுதீர் அகர்வால், ராகேஷ் சிறீவாஸ்தவா ஆகி யோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறிய தாவது:
நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும், நடமாடுவதற் கான அடிப்படை உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படை உரிமை, பொது இடத்தில் விதிமுறைகளை மீறும் சிலரால் பாதிக்கப்படு வதை அனுமதிக்க முடியாது.
ஆகையால், கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக் குப் பிறகு, பொதுச் சாலை களிலோ அல்லது நடைபாதை களிலோ ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட அனைத்து மத வழிபாட்டு இடங்களையும் உடனடியாக அகற்றுவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர்கள், சாலைகளைப் பராமரிக்கும் துறைகளின் அதிகாரிகள் ஆகி யோருக்கு மாநில அரசு குறிப்பு அனுப்ப வேண்டும். இந்த உத்தரவின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மாநில அரசிடம் இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்.
அதேசமயம், 2011ஆம் ஆண் டுக்கு முன்பு, மேற்கண்ட இடங் களில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட மதவழிபாட்டு இடங்களை 6 மாதங்களுக்குள் தனியார் நிலத்துக்கு அப்புறப் படுத்த வேண்டும்; அல்லது அகற்றவேண்டும்.
நெடுஞ்சாலைகள், தெருக் கள், நடைபாதைகள், சந்துகள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன் படுத்தும் சாலைகளில் எந்த வகையிலும் மதவழிபாட்டு இடங்கள் அமைக்கப்படாமல் இருப்பதை மாநில அரசு உறு திப்படுத்த வேண்டும். இதற் காக மாநில அரசு தனித்திட் டத்தை வகுத்து செயல்படுத்த வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றாதது தொடர்பாக ஏதேனும் புகார் தெரிவிக்கப்பட்டால், சம்பந்தப் பட்ட அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக எடுத் துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
நன்றி : விடுதலை 12.06.2016