Saturday 28 October 2017

அடுத்தவர்கள் சொன்னதை வைத்தே.....

கடந்து போன காலங்கள்(15)

அறியா வயதில்
அப்பாவை இழந்ததால்
அப்பாவை பற்றிய
நினைவுகள் அனைத்தும்
அடுத்தவர்கள்
சொன்னதை வைத்தே.....

பள்ளிக்குச் சென்று வந்தபின்பு
மார்பில் வலி
எனச்சொல்ல
தனது தாய்மாமாவை
டவுசர் போட்டுக்கொண்டு
ஒற்றை ஆளாய்
திருமங்கலத்திற்குப் பேருந்தில்
அழைத்துச்சென்று
தனது தாய்மாமாவை
தன் அக்காவின் கணவரைப்
பிணமாய்த் திருப்பிக்கொணர்ந்த
கதையை எனது தாய்மாமா
இராதா வாத்தியார்
எப்போது சொன்னாலும்
அவரின் கண்கள் பனிக்கும்...
குரல் உடையும்.....

கைப்பந்து விளையாட்டில்
அளவு கடந்த ஆர்வம்
உள்ளவரடா உனது அப்பா !
அப்பாவின்  தலைமையில்
விளையாடியவர்கள்
அவ்வளவு பிரியமாகப்
பகிர்ந்து கொள்வார்கள் அவரது நினைவை....

உறவுகளிடத்தில் எப்போதும்
நேசமும் பாசமும்
கொண்டவரடா உனது அப்பா....
உடன் பிறந்தவர்கள்
வஞ்சித்த போதும்
பெருந்தன்மையாய்
விட்டுக்கொடுத்து வாழ்வைக்
கடந்து போனவரடா உனது அப்பா.....

டேய் ! உனது அப்பாவிடம்
படித்தவனடா நான் !
உள்ளம் உருகி
இனிமையாய்
பக்தி ரசம் கொட்டப்பாடும்
உனது அப்பாவின் குரல்
அவ்வளவு இனிமையடா .......

எனது அப்பாவை
எல்லோரும் பாராட்டியபோது
பலதடவை அவரைப்
பாராட்டிய எனது தாயார்
சில நேரம் சலித்துக்கொண்டதும்
நினைவில் வருகின்றது.....

நல்லவர்தாண்டா
உனது அப்பா !
ஆனால் உலக இயலில்
வாழ்க்கை முறையில்
அவர் வல்லவர் இல்லை....

இருபத்து எட்டு வயதில்
ஐந்து குழந்தைகளுக்குத்
தாயாய்
நாற்பத்தி இரண்டு
வயதுக் கணவரை 
இழந்து நின்ற
எனது தாயார்
ஆற்றாமையாய்
'எனது தாய்மாமன் அவர்...
என்னை விட இரண்டு
மடங்கு வயது மூத்தவர்...
பனிரெண்டு வயதில்
அவரோடு எனக்கு
நடந்த  குழந்தைத் திருமணத்தை
உரக்கச்சொல்லி
தடுத்து இருக்கலாம்.....

தவிர்த்திருக்கலாம்....
தடுத்திருக்கலாம்....
அப்பாவை எவ்வளவோ
புகழ்ந்து சொல்லும்
அம்மாவின் ஆற்றாமை
சொற்கள் எப்போதும்
செவிகளில்......

அறியா வயதில்
அப்பாவை இழந்ததால்
அப்பாவைப் பற்றிய
நினைவுகள் அனைத்தும்
அடுத்தவர்கள்
சொன்னதை வைத்தே.....

                                                         வா.நேரு.....28.10.2017

எனது அப்பா சாப்டூர் க.வாலகுரு ஆசிரியர் அவர்களின் 47-வது நினைவு நாள் (28.10.2017) இன்று.







Wednesday 18 October 2017

கடவுள் நம்பிக்கை இருந்தால்தான் நல்லவனாக இருக்கமுடியுமா? .....





நல்லவனாக வாழ்வதற்கு கடவுள் பக்தி அவசியமா ? இப்படி ஒரு கேள்வியை அமெரிக்காவில் கேட்டிருக்கின்றார்கள். அதில் பெறப்பட்ட பதிலை இந்த இணையதளத்தில் பதிந்திருக்கின்றார்கள்.
http://www.patheos.com/blogs/friendlyatheist/2017/10/16/survey-most-americans-no-longer-believe-you-need-god-to-be-good/

http://religionnews.com/2017/10/17/good-without-god-more-americans-say-amen-to-that/

 மொத்தம் 56 சதவீதம் பேர் கடவுள் நம்பிக்கைக்கும் நல்லவனாக வாழ்வதற்கும் சம்பந்தமில்லை, இன்னும் கேட்டால் நல்லவனாக வாழ்வதற்கு கடவுள் நம்பிக்கை தேவையில்லை என்று பதில் அளித்திருக்கின்றார்கள். அமெரிக்காவைப் பொறுத்தவரை அனைத்தும் கடவுளின் பெயரால் நடப்பதாக நம்புவர்கள்.தங்களது ரூபாய் நோட்டுக்களில் கூட கடவுள் நம்பிக்கையை வெளிப்படுத்துபவர்கள். அந்த நாட்டில் இப்படி ஒரு புள்ளி விவரம் வெளிவந்திருக்கின்றது.

           நமது நாட்டைப்பொறுத்த வரையில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக சொல்லிக்கொள்ளும் சாமியார்களைப் பார்த்த பின்பும், அவர்கள் மீது நடைபெறும் வழக்குகளை எல்லாம் கேட்ட பிறகும் நல்லவனாக வாழ்வதற்கு கடவுள் நம்பிக்கையா ? கெட்டவனாக வாழ்வதற்கு கடவுள் நம்பிக்கையா ? என்று மக்களிடம் கேட்டால் கெட்டவனாக வாழ்வதற்குத்தான் கடவுள் நம்பிக்கை என்று பெரும்பாலானாவர்கள் சொல்லக்கூடும். கடவுள் கதையெல்லாம் நார், நாராய்க் கிழிகின்றது, ஒழுக்கமாக இருப்பதற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் சம்பந்தமில்லை என்பதனை உலகம் உணர்கிறது......

Monday 16 October 2017

அண்மையில் படித்த புத்தகம் : கொத்தைப் பருத்தி (சிறுகதைத் தொகுப்பு)......கி.ராஜநாராயணன்

அண்மையில் படித்த புத்தகம் : கொத்தைப் பருத்தி (சிறுகதைத் தொகுப்பு)
நூல் ஆசிரியர்               : கி.ராஜநாராயணன்
இரண்டாம் பதிப்பு            : அக்டோபர் 2011
வெளியீடு                   : அன்னம், தஞ்சாவூர்-7 விலை ரூ 75/
மதுரை மைய நூலக எண்    : 192811

                                   கரிசல் மண்ணை தனது எழுத்தால் எப்போதும் நம் கண் முன்னே கொண்டுவரும் கி.ரா.வின் எழுத்துக்களை வாசிப்பது எப்போதுமே ஒரு சுகமளிக்கும் வாசிப்பு அனுபவம்.எழுத்தில் இழையோடும் நகைச்சுவையும், எள்ளலும் எகத்தாளமுமாக பேசிக்கொள்ளும் அவரது பாத்திரப்படைப்புகளும், அவர்களின் வட்டார வழக்கு பேச்சுக்களும் வாசிப்பவர்களை எப்போதுமே ஈர்த்துக்கொள்ளும் ஆற்றல் மிக்கவை. அப்படித்தான் இந்தத் தொகுப்பில் உள்ள 14 சிறுகதைகளும்.

                              முதல் சிறுகதை 'கொத்தைப் பருத்தி ' மாறிப்போன மக்களின் மனநிலையை மய்யப்படுத்தி எழுதப்பட்டிருக்கும் கதை. கோனார் செங்கண்ணா 200 ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரர். ஜில்லா கலெக்டருக்கே பொண்ணு கேட்டு அவரது அப்பா வந்தபோது 'நிலம் ஒரு ஏக்கர்கூடக்கிடையாது என்று தெரிந்ததுடன், பையன் கலெக்டராக இருந்தாலென்ன, கவர்னராகத்தான் இருந்தாலென்ன; -கிடையாது பொண்ணு என்று கராலாகச்சொல்லி விட்டார்கள் " என்று சொல்லி நிலம் இல்லையெனில் கலெக்டருக்கே பொண்ணு கிடையாது என்று அனுப்பிவிட்டவர். இப்போது பேரனுக்கு பொண்ணு பார்த்துக்கொண்டிருக்கிறார்.பத்து ஏக்கர் கரிசல் நிலத்தில் விவசாயம் பார்க்கும் பேரன் செங்கன்னாவுக்கு யாரும் பொண்ணு குடுக்க மாட்டேன் என்று சொல்கிறார்கள். கோனாரிக்கு பெண்களைப்பெற்ற தகப்பன்கள் சொன்ன பதில் ,"சம்சாரிகளுக்கு இனிமேல் நம்ம பொட்டைப்பிள்ளைகள் வாக்கப்படாது; வந்து கேக்காதீங்க. காத்துட்டு சம்பளமானாலும் கவர்மெண்ட் சம்பளம் இருக்கணும்; மாசம் இருநூறு சம்பாதிக்கிற வாட்ஸ்மேனாக இருந்தாலும் சரி அவனுகளைக் கட்டத்தயார் " என்று சொல்வதைச்சொல்லி கடைசியில் அவர் சொல்வதாக "...கடைசியிலே சம்சாரி கொத்தைப்பருத்தியிலும் கேவலமாகப்போயிட்டானே ... செ! " என்று சொல்வதாக கதை போகின்றது. ஒன்றுக்கும் உதவாத பருத்திபோல சம்சாரி திருமணச்சந்தையிலே தனிமைப்பட்டுப்போவதை ஒரு 40 ஆண்டுகளுக்கு முன்னால் கி.ரா. எழுதியிருக்கிறார். இன்றைய நிலைமை இன்னும் கொடுமை, விவசாயிகளின் நிலைமை கொடுமையோ கொடுமை......

                         பச்சிளம் குழ்ந்தைகள் தீப்பட்டி ஆபிசுக்கு எப்படி அதிகாலையில் சென்று நடு இரவில் திரும்புகிறார்கள்...பலியாகும் அவர்களின் குழந்தப்பருவத்தைச்சொல்கிறது 'ஒரு செய்தி 'என்னும் கதை. இந்தக் கதையைப் படித்த போது திருப்பரங்குன்றம் கவிஞர் இரா.ஜீவா அவர்களின் கவிதைகள் நினைவிற்கு வந்தன.
" கண் விழித்தால்
  கந்தக வாசல்
  கண் மூடினால் வீடு..
  நெருப்புக்காற்றை
  சுவாசிக்கவா
  அரும்புகளைப்
   பெற்றீர்கள் ...." என்பார் தனது 'கருகும் பிஞ்சுகள் ' கவிதைத் தொகுப்பில் . அந்தக் கவிதைகளின் கதைக்களன் விவரிப்பு போன்று இந்த 'ஒரு செய்தி ' என்னும் கதை இருக்கிறது. யாருக்கும் வெட்கமில்லை,குழந்தைத் தொழிலாளிகளாய் குமைந்து போகும் பிஞ்சுகளைப் பற்றி நினைப்புமில்லை. அதனை ஆழமாக நினைவுபடுத்துகிறது இந்தக்கதை.

நோயோடு பெற்றோர் இல்லாமல் வாழும் சுப்பண்ணா, அடுத்த ஊரில் தன்னை ஆதரித்து சோறு போட ஆட்கள் இருந்தாலும் அதனை மறுத்துவிட்டு ஏதோ ஒன்று இருப்பதாக எண்ணி தன் கிராமத்திற்கு திரும்பி வாழ்வதைச்சொல்லும் 'சுப்பண்ணா', கதை எதார்த்தம். இன்று(16.10.2017) கலைஞர் டி.வி.யில் அய்யா சுப.வீ. அவர்கள் அப்பண்ணா என்பவர் எழுதிய 'நான் ஊருக்குப் போகின்றேன்..அங்கு எனக்கென்று ஒருவரும் இல்லை "  என்னும் சிறுகதையைச்சொன்னார். எப்படி சொந்த ஊர் என்பது மனிதர்களை ஈர்க்கிறது என்பதனை. அப்படி மனநிலை பாதிக்கப்பட்டவன் போல இருக்கும் சுப்பண்ணா தனது சொந்த ஊருக்கு ஓடி வருவதையும் அவனை யாரும் கண்டு கொள்ளவில்லை என்றாலும் உறவுக்காரர்களை உறவு முறைகள் மூலம் அழைத்து அழைத்து மகிழும் அவனின் பாத்திரப்படைப்பு பிறந்த மண்ணை நோக்கி இழுக்கும் 'ஏதோ ஒன்றை ' விவரிக்கும் முயற்சி எனலாம்.  சம்சாரி அவுரியை விளைய வைத்து கடைசியில் நல்ல விலை கிடைக்காமல் அதனைக் குப்பையில் போட்டு விட்டு இப்படியே இருக்கக்கூடாது , சம்சாரிகள் ஒன்று சேர்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்யும் தாசரி நாயக்கரின் கதை சொல்லும் 'அவுரி ' என கதையும் களமும் கரிசல் காடு,கரிசல் சம்சாரிகள் என விரிகிறது.சம்சாரி அம்மணமாகப்போனாலும் கண்டுகொள்ளாத நவீன ஆட்சியாளர்கள் ஆளும் நாடு இது. இதில் இலக்கியவாதிகள் சொல்வதைப் படித்தா உணர்ச்சி வரப்போகிறது .....

                      'நாற்றம் வரும் முன்னே ! கிராமம் வரும் பின்னே ' என்று சொல்லும் 'சுற்றுப்புற சுகாதாரம் ' என்னும் கதை இன்றைய எதார்த்தம். கிராமத்தை எப்படியும் சுத்தப்படுத்திவிட வேண்டும் என்று நினைப்போடு கிராமத்திற்கு வரும் 'பைத்தியக்கார அதிகாரி ' தொடர்ந்து கிராமத்தை சுத்தமாக வைத்திருக்க செய்யும் ஏற்பாடுகளை விரிவாகவே எழுதியிருக்கிறார். ஆனால் அந்த அதிகாரி எடுக்கும் எந்த நடவடிக்கையும் பின்பற்றாமல் மறுபடியும் பழைய அசுத்த நிலைக்கே செல்லும் கிராம மனிதர்களை எப்படி மாற்றுவது என்று தெரியாமல் முழிக்கும் அதிகாரி, நல்ல பாத்திரப்படைப்பு. மூளையில் ஏற்படவேண்டும் மாற்றம். அப்போதுதான் மாறும்.....கடைசியில் "இனி ஊருக்குள்ளரப் போய்ப்பிரயோஜனம் இல்லை என்று தெரிந்துகொண்டார். என்ன செய்வது என்று தெரியவில்லை. யோசித்துவிட்டுப் பள்ளிக்கூடத்தைப் பார்த்து நடந்தார் " என்று முடிக்கின்றார் இக்கதையை. சுற்றுப்புற சுகாதார விழிப்புணர்வையும் நடவடிக்கையையும் பள்ளிக்கூடத்திலிருந்து ஆரம்பிங்கடா என்று சொல்வதுபோலக் கதை முடிகின்றது. இப்போது நடக்கும் தூய்மை இந்தியா கூத்துக்களை எல்லாம் பார்க்கின்றபோது , இந்தக் காலகட்டத்திற்கு மிக பொருத்தமான கதை.

                 தனது மனைவி மீனம்மாவிடம் கொஞ்சம் கூடுதல் கறி வாங்குவதற்காக நண்டு நாயக்கர் படும் பாட்டைச்சொல்லும் 'தாச்சண்யம்' புத்தகத்தில் சின்னக் கதை. 5 ரூபாய் பணத்தாள் -பூசையில் ,பூசை செய்பவர்கள் மத்தியில் செய்யும் மாற்றத்தைச்சொல்லும் 'குருபூசை ' இன்றைய பக்தியை நன்றாகவே பகடி செய்கிறது.நவீன கழிப்பறைக்கு முன்னால் குளிப்பதற்குப் பயன்படுத்தும் இடமான ;அங்கணம் ' பற்றி விவரிக்கும் அங்கணம் கதை போன தலைமுறையை சொல்லும் கதை. 'மும்மலைக் கிராமத்தையும்,அதன் மக்களையும், அந்த மலையையும், அங்கு வாழும் மயில்களையும்'சொல்லும் 'விடுமுறையில்' என்னும் கதை கூட்டாளிகளைத் தேடி அலையும் சிறுவனாய் இருந்ததை நினைவு கொள்பவரின் கதை.

               கிராமங்களில் நெல்லை அளக்கும்போது முதல் மரக்காலை லாபமென்று போடுவார்கள்.அதனைக் கணக்கில் சேர்க்கமாட்டார்கள். அப்படி பருத்தியை நிறுக்கும்போது 'வெங்கடாசலம் முன்னிற்க" என்று ஓசியாய் போடும் முதல் நிறுவையை மிகக் குத்தலாகச்சொல்லும் " வெங்கடாசலபதி முன்னிற்க ...; லாபம் " முன்னிற்க என்பதில் விழுந்த அழுத்தம் நாயுண்டுவுக்கு ரொம்பத்தான் எரிச்சலைக் கிளப்பி விட்டுவிட்டது..." முன்னிற்க; என்னத்த முன்னிற்க?" வெங்கடாசலபதியும் வெங்கடாசலபதியின் மில்லுந்தான் முன்னிற்கி! தா அவனுக்கு மாசம் அம்பது லச்சம் அறுபது லட்சம் உண்டியல்லே வந்து விழுது; இவனுகளுக்கு வருசம் அம்பது அறுபது கோடின்னு லாபம் வருது ".....போகிற போக்கில் வசவுச்சொற்களோடு கடவுளையும் முதலாளிகளையும் ஒரு சேர சம்சாரி திட்டுவதைக் காட்டுகின்றார்....'தாவைப்பார்த்து " என்னும் கதையில்...

              ஒரு கூட்டுக்குடும்பம் எப்படி வந்த மகாராசிகளால் சின்ன பின்னமாகி சிதைந்து போகிறது என்பதைச்சொல்லும் 'இவர்களைப் பிரித்தது ? " என்னும் கதை மிக ஆழமான கதை.மனதிற்குள் விழும் பிரிவினைக்கோடுகளை வரிசையாகப் பட்டியலிட்டு பின்பு எப்படி அது பெண்களின் சண்டையில் வெடிக்கிறது, கூட்டுக்குடும்பத்தை சிதைக்கிறது என்பதைச்சொல்கின்றார். அடியும் வசவும் வாங்கும் மாசாணம் முதலாளி கையாலேயே பால் ஊட்டப்படும் அளவிற்கு வளர்ந்த கதையைச்சொல்லும் 'நிலை நிறுத்தல் ' கொஞ்சம் வேறுபட்ட கதை. பாகம் பிரிக்கப்பட்டு தம்பி வீட்டில் அம்மாவும், அண்ணன் வீட்டில் பாட்டியும் எனப் பிரிக்கப்பட ,கடைசிக்காலத்தில் அவதிப்படும் அம்மாவின் கதை சொல்லும் 'உண்மை' கடைசிக்கதை. ஆனாலும் இந்த உண்மையும் நம்மைச்சுடச்செய்யும் கதைதான்.



            மொத்தம் 14 சிறுகதைகள். பெரியவர் கி.ரா.வின் மிகப்பெரிய பலமே கதையின் உரையாடல்களும் அந்த மக்களின் நடை,உடை பாவனைகளின் விவரிப்பும்தான். தன்னைச்சுற்றி இருக்கும் மனிதர்களை, அவர்களின் உரையாடல்களை அப்படியே எழுத்தில் கொண்டுவந்திருக்கின்றார். ஒரு பேட்டியில் முப்பது வயதிற்குப்பின்புதான் நான் எழுத ஆரம்பித்தேன் என்று கி.ரா.கூறியிருப்பார். இன்று 95 வயதை எட்டும் அவர், தனது 60-களில் எழுதிய கதைகளின் தொகுப்பாக இந்தக் கதைகள் உள்ளன. சிறுகதை வாசிப்பது என்பது ஒரு இனிப்பை ரசித்து ருசித்து சாப்பிடுவது போன்றதொரு அனுபவம். அப்படி ஒரு வாசிப்பு அனுபவம் இந்தச்சிறுகதைகளை வாசிக்கும்போது ஏற்படுகின்றது. கிராமத்து மனிதர்களின் நம்பிக்கைகளை, அவர்களின் உழைப்பை, அவர்கள் ஏமாறுவதை,குடும்பங்களின் ரணங்களை எல்லாம் தனது எழுத்துக்கள் மூலம் அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தும் அற்புத தொகுப்பாக இந்த 'கொத்துப்பருத்தி ' தொகுப்பு உள்ளது. நீங்களும் படித்துப்பார்க்கலாம். இரசித்து சிரிக்கலாம்..இந்தக் கரிசல்காட்டு சம்சாரிகளின் வாழ்க்கை மேம்பட என்ன செய்யலாம் என்பதனை யோசிக்கலாம்.












Wednesday 4 October 2017

அண்மையில் படித்த புத்தகம் : ஒரு வார்த்தையின் பொருள்.....ப்ரஃபுல்லா ராய்.......புவனா நடராஜன்

அண்மையில் படித்த புத்தகம் : ஒரு வார்த்தையின் பொருள் (மிகச்சிறந்த வங்க மொழிச்சிறுகதைகள்)
நூல் ஆசிரியர்(வங்காளம்)    : ப்ரஃபுல்லா ராய்
தமிழில் மொழிபெயர்ப்பு     : புவனா நடராஜன்
வெளியீடு                  : அம்ருதா பதிப்பகம், சென்னை-116
தொலைபேசி 044-22522277
மொத்த பக்கங்கள்          :  248, விலை ரூ 160 /-
மதுரை மைய நூலக எண்   : 198066



                                 "வங்கத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான ப்ரஃபுல்ல ராய் 1934-ஆம் வருடம் வங்க நாடு பிரியாமல் முழு வங்க நாடாக இருந்த காலத்தில் டாக்கா நகரத்தில் பிறந்தவர்" என இந்த நூலின் ஆசிரியரைப்பற்றிய குறிப்புகளோடு  இந்தப் புத்தகம் தொடங்குகின்றது.பதிப்பாளர் உரை, மொழி பெயர்ப்பாளரின் அறிமுகயுரை என எதுவும் இல்லாமல் சிறுகதைகளின் தலைப்புகளோடு இந்தப்புத்தகம் தொடங்குகின்றது. மொத்தம் 12 சிறுகதைகள் இந்த நூலில் உள்ளன. ஒவ்வொரு சிறுகதையும் இன்னொரு சிறுகதைக்குப் போட்டி என்பதுபோல அத்தனை சிறுகதைகளும்(ஒன்றைத் தவிர) அமைந்துள்ளன.சிறுகதைகளின் ஊடாக ஓடும் மனித நேயமும், பாத்திரங்களின் படைப்பு வழியாக எழுத்தாளர் எடுத்துக்காட்டும்  உலக நடப்பு இயலும் சும்மா படித்தோம் என்று சிறுகதைகளைத் தாண்டிச்செல்ல இயலவில்லை.
                   முதல் சிறுகதையான படகோட்டி, பஜல் என்னும் படகோட்டி பற்றியது. தன் மகளைத் திருமணம் செய்ய வேண்டுமென்றால் இவ்வளவு பணம் வேண்டுமென கட்டாயம் செய்யும் தனது காதலியின் தகப்பனை திருப்தி செய்வதற்கு இரவும் பகலுமாய் படகோட்டும் பஜல், கடைசியில் சேர்த்து வைத்த பணத்தை இன்னொருவருக்கு ஏன் அளிக்கிறான் என்பதுதான் கதை. கதையின் வர்ணனைகளும்,உரையாடல்களும் உயிரோட்டமாய் உள்ளன. ஒரு வேற்றுமொழி சிறுகதையைப் படிக்கின்றோம் என்னும் நெருடலே இல்லை. 

                  தேர்தல் என்னும் தலைப்பில் அமைந்த சிறுகதை இன்றைக்கும், நமக்கும் கூடப் பொருந்தும். தேர்தலில் நிற்கும் ஒரு பெரிய மனிதர் கிராமத்திற்கு வந்து, கிராமத்து பொறுப்பாளரிடம், ஒவ்வொரு ஓட்டுக்கும் இவ்வளவு பணம் என்று சொல்லி விட்டுப்போக, பிச்சையெடுத்து சாப்பிடும் ஆனால் அந்த ஊரில் உள்ள சிலருக்கு உறவினரான வயதான மனிதருக்கு வாய்ப்பு அடிக்கின்றது. அவரை நீ, நான் என்று கவனிக்க, கடைசியில் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் வயதான மனிதர் செத்துப்போவதாக கதை. கிராமம், கிராமத்து நடப்பு, பணக்கார பெரிய மனிதரின் தோரணைகள், திடீரென்று கரிசனம் காட்டப்படுவதால், ஆச்சரியப்படும் வயதானவர், கவனிப்பவர்களிடமே என்னப்பா என்னை இப்படிக் கவனிக்கின்றீர்கள், என்ன விசயம் என்று கேட்பது என்று எள்ளி நகையாடும், பணத்திற்காக என்ன என்ன செய்கின்றார்கள் என்பதனை விவரிக்கும் சிறுகதை

               இந்தத் தொகுப்பின் தலைப்பாக அமைந்திருக்கும் ஒரு வார்த்தையின் பொருள் என்பது மூன்றாவது சிறுகதை. வேலையில்லாமல் தவிக்கும் இளம்தம்பதிகள், ஆனால் வேலை தேடும் இடத்தில் தங்களை தம்பதிகள் என்று சொல்லிக்கொள்ளாமல் வேலை தேடுபவர்கள்.தன் துணைவிக்கு மட்டும் வேலை கிடைக்க கடைசியில் இவன் வேலை கிடைக்காமல் அலைகின்றான். தனது துணைவியை, வேலை பார்க்கும் இடத்தின் மேலாளரோடு காரில் பார்க்க நேரிட, அதனைத் தன் துணையிடம் வீட்டிற்கு அவள் வந்தவுடன் கேட்கிறான். உனக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை, எனக்கு இப்போதுதான் சில மாதங்களாக வேலை கிடைத்திருக்கிறது, கொஞ்சம் அட்சஸ்ட் பண்ணிப்போங்கள் என்று அவள் சொல்ல, அந்த வார்த்தையால் நொந்து போகும் அவனின் உள்ளக் குமுறல்களை சொல்லும் கதைதான் ஒரு வார்த்தையின் பொருள்.

             திருவிழாவிற்கு 'புலி' வேசம் போட்டு நோன்புரா கிராமத்தில் பரிசும், பணமும், புகழும் பெறும் கூன்ராம், ஒருவன் உண்மையான புலியோடு வந்து கிராமத்தில் வித்தை காட்ட, புலி வேசம் போடும் கூன்ராமிற்கு கூட்டமும் இல்லை, பணமும் இல்லை என்று ஆகிப்போகின்றது. கடைசியில் நிஜப்புலி அல்ல, செத்த புலி என்று சண்டையிட்டு  புலியின் கூண்டிற்குள்ளேயே போய் செத்துப்போகும் புலிவேசக்காரனின் கதை மனதை உருக்கும் கதை.

            நாய்களைப் பிடித்துவந்து கொல்லும், வேட்டையாட ஒலிஎழுப்பி மனிதர்களை காட்டுக்குள் அழைத்துச்செல்லும் 'பீட்டர்' பரோஸ்லால், அவனின் மனித நேயம், அறியாத கர்ப்பிணிப்பெண்ணைத் தோளில் தூக்கிச்சுமந்து காப்பாற்றும் பின்பு தன் வழியில் செல்லும் பரோஸ்லால் பற்றிச்சொல்லும் 'மனிதன் ' என்னும் கதை 'பிறருக்காக கண்ணீரும், பிறருக்காக செந்நீரும் சிந்தும் எவனோ ,அவனே மனிதன் ,மனிதன் ' என்னும் பாடலை மனதிற்குள் என்னைப் பாடவைத்தது. 

           ஒவ்வொரு கதையையும் அவ்வளவு விரிவாக எழத முடியும் . அவ்வளவு அழுத்தமான, ஆழமான விவாதங்களை எழுப்புகின்ற கதைகளாக இருக்கின்றன. 'கடைசியில் ' என்னும் கதையில் நொந்து போன நிலையில் பாட வரும் பாடகனிடம் கடவுள் பாட்டெல்லாம் இங்கே பாடாதே என்று சொல்லிவிட்டு, காதல் பாட்டுக்களின் சில வரிகளைச்சொல்லிவிட்டு, " இது மாதிரி கத்துக்கிட்டு வா.சாமி எங்க வீடுகளுக்குள் வராது. நாங்க வரவிட மாட்டோம். ஏன் வரவிடணும். சொல்லு பார்க்கலாம்? சாமி எங்களுக்கு என்ன கொடுத்தது? நரகத்தில் எங்களைக் குடியேத்தி வச்சிருக்கிது. நரகத்துக்குள்ளே வந்தாச்சு.அப்ப இங்க இருக்கிற மாதிரிதானே நாங்களும் இருக்கணும் " எனும் பத்மாவின் வார்த்தைகள் எதார்த்தம்.தந்தை பெரியார் சொல்வார் " உயர் ஜாதிக்காரன், பணக்காரன் கடவுளைக் கும்பிடுகிறான். அவனுக்கு கடவுள் என்று ஒருவன் இருக்கிறான். நமக்கு நல்லது செய்திருக்கிறான். அதனால் கடவுளைக் கும்பிடவேண்டுமென்று நினைக்கின்றான். ஆனால் அடுத்த வேளைக்கு சாப்பிட வழியில்லை. நம்மைத் திட்டமிட்டு ஒடுக்கப்பட்ட சாதியாக ஆக்கி வைத்திருக்கிறான். அதற்கு கடவுள்தான் காரணம் என்றால் அந்தக் கடவுளைக் கும்பிடத்தோணுமா?ஆனால் நம்மால் கும்பிடுகிறானே? வர்ற கொஞ்சக்காசையும் அந்தக் கடவுளுக்கு கட்டி அழுகின்றானே ......" என்னும் பொருளில் பேசியிருப்பார். சிவப்பு விளக்குப் பகுதிக்கும் பின்னால் ஒரு பணக்காரனின் வைப்பாட்டியாகவும் ஆக்கப்பட்ட பாத்திரமான பத்மா வெகுண்டு பேசுவது எனக்கு தந்தை பெரியாரின் சொல்லை நினைவுபடுத்தியது.உயிரோடு இருக்கும்போது கேட்ட அவளுக்கு பாடமுடியாமல் அவளின் இறுதி ஊர்வலத்தில் பாடிச்செல்லும் அவனின் நிலை எவரையும் உருக்கும்.

         அதிகமாக என்னைப்பாதித்த கதை 'ஏன் அழுதாள் ' என்னும் கதை. மிகப்பெரிய அளவிற்கு பதவி,கல்வி வாய்ப்புகள் இருந்தபோதும், அவற்றை எல்லாம் விட்டுவிட்டு இயக்கப்பணிக்கும், தொழிற்சங்கப்பணிக்கும் வரும் சுபநய், அவரின் தியாகம், பொதுப்பணி-அதனால் மக்களிடம் அவருக்கு கிடைத்த மரியாதை,புகழ் எனப் பலவும் விரிவாகவே நூலாசிரியர் விவரிக்கின்றார். தூரத்து உறவினராக வந்து தன் கட்சி அலுவலகத்தில் தங்க, அவரின் வேலைக்கு சிபாரிசு செய்யச்சொல்லி தன்னுடம் இருக்கும் தோழர் சொல்ல, சுப நய் மறுக்க அவரை வலியுறுத்தி கடிதம் வாங்கி,உறவினரை வேலைக்கு சேர்த்துவிடும் உடன் இருக்கும் தோழரின் உண்மை முகம் கதை முடியும் நேரத்தில்தான் நமக்குத் தெரிகின்றது. புகழோடும், மரியாதையோடும் இருக்கும் சுபநய்வை வந்தனா என்னும் இயக்கத்தோழியரிடம் தவறாக நடந்து கொண்டார் என்று அந்த தோழியே சொல்ல உடைந்து நொறுங்கும் சுபநய்வின் அழுகுரலை, ஆற்றாமையை,வேதனையை விவரித்துச்செல்லும் நூலாசிரியர் கடைசியில் சுபநய் இறந்த அன்று இறுதி மரியாதை செலுத்த வரும் வந்தனாவின் வார்த்தைகளால் கதையை முடிக்கின்றார். " சுபி நய் அண்ணா இப்படி செத்துப்போக வேண்டும் என்று நான் ஒரு நாளும் நினைத்ததில்லை.ஒரு நாளும் நினைத்ததில்லை." அவள் உதடுகளும் தொண்டைப்பகுதியும் நடுங்கின..... நான் எதுவும் பதில் சொல்லவில்ல... " சுபி நய் அண்ணா கட்சிக்குத் துரோகம் செய்து விட்டார்.கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறார் என்று என்னிடம் எல்லோருமே சொன்னார்கள். மனம் கொதித்துப்போய் கெட்ட பெயரையும் பொருட்படுத்தாமல் சுபிநய அண்ணாவிற்கு மிகப்பெரிய கெடுதல் செய்துவிட்டேன். கட்சியின் நன்மையில் நான் என் உயிரையே வைத்திருந்தேன்.கொள்கை,துரோகம் என்று எதுவுமே காரணம் இல்லை. சுபி நய் அண்ணாவை விலக்கிவிட்டு ,வேறு ஒருவர் அந்த இடத்தைப்பிடித்துக்கொள்ள விரும்பினார் என்பதுதான் காரணம் என்பது எனக்குத்தெரியாமலே போயிற்று" நான் எதுவும் பேசவில்லை.வந்தனாவின் இந்த விளக்கத்தைக் கேட்க அண்ணா இன்று உயிரோடு இல்லை. மரணம் வந்து அவரைத் தழுவும் முன்பே அவரை எல்லாரும் அடித்து விட்டார்களே.அவருக்குப் புரிந்திருக்கவா போகிறது ?....என்று முடியும் இந்தக் கதையை பொது வாழ்க்கையில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய கதை....

            'எதிர்காலத்தின் குரல்' என்னும் கதை மட்டும் கனவு, அது நினைவாவது அதனால் புது மணப்பெண் தற்கொலை செய்துகொள்வது என்று கொஞ்சம் மாறுபட்ட கதையாகத் தெரிகின்றது. மற்ற கதைகள் அனைத்தும் மனித மனங்களை உரசும் சொற்கோவைகளாக, நிகழ்வுகளை கண் முன் நிறுத்தும் காட்சிகளாக இவரின் எழுத்துக்கள் இருக்கின்றன. 'உயிருடன் இருப்பதற்காக' என்னும் கதை பசியின் கொடுமைக்காக, உணவுக்காக என்னென்ன செய்கின்றார்கள் என்பதைச்சொல்கிறது என்றால் மனிதன் பணத்தால் எடைபோடப்படுவதை 'தலையெழுத்தும்' விவரிக்கின்றன. 'உறவு ' என்னும் கதை ஒரு வேறுபட்ட கோணத்தில் பெண்ணின் மனதைப் பேசுகின்றது. 

             பின் அட்டையில் வங்காள மொழியிலிருந்து தமிழுக்கு இந்த சிறுகதைத்தொகுப்பை மொழிபெயர்த்த புவனா நடராஜன் அவர்களைப் பற்றி அவரின் படத்தோடு குறிப்பு போட்டிருக்கின்றார்கள். மொழி பெயர்ப்புக்கு என சாகித்ய அகாதமியின் விருதைப்பெற்றவர் எனப்போட்டிருக்கின்றார்கள். உண்மையிலேயே மிக நல்ல ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு இவ்விருதைக் கொடுத்திருக்கின்றார்கள் என்பதனை இந்த நூலை வாசிப்பவர்கள் உணரமுடியும்.அருமையான மொழி பெயர்ப்பு.எந்த இடத்திலும் தடங்கல் இல்லை, பொருள் மயக்கமோ,சொல் மயக்கமோ இல்லை. வாழ்த்துக்கள் மொழிபெயர்ப்பாளருக்கு.நல்ல ஒரு மொழிபெயர்ப்பு நூலைக் கொடுத்த அம்ருதா பதிப்பகத்திற்கு.வாழ்த்துக்கள்.... படித்துப்பாருங்கள், வாய்ப்பு இருப்பவர்கள். 


Monday 2 October 2017

பகுத்தறிவாளர்கள் பாதுகாப்போடு வாழ்வதற்கு ஏற்ற நாடு இந்தியா அல்ல....

                                                        பகுத்தறிவாளர்கள் பாதுகாப்போடு வாழ்வதற்கு ஏற்ற நாடு இந்தியா அல்ல....
                                                                      ( மோஹித் எம். ராவ்)

(குடும்பத்தினரிடமிருந்து வரும் அழுத்தம் அதிகரித்திருந்த போதிலும், தாக்கப்படலாம் என்ற அச்சுறுத் தலுக்கான அறிகுறிகள் தென்பட் டாலும், இறுதி வரை போராடுவதைத் தவிர தனக்கு வேறு வழி இல்லை என்று நரேந்திர நாயக் கூறுகிறார். "கவுரியின் இறப்புக்குப் பிறகு, தற் காலிகமாக அயல் நாட்டுக்குச் சென்றுவிடும்படி கேட்டுக் கொண்டு தொலைபேசி செய்திகள் எனக்கு வந்து கொண்டிருக்கின்றன. இங்கு எனது சமூகத்தில் நிலவும் பல தவறு களை சரி செய்ய வேண்டியிருக்கும் போது, நான் இங்கிருந்து ஏன் ஓட வேண்டும்?" என்று அவர் கேட்கிறார்.)

கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு,  ஒருவன் தனது காரை நிறுத்தி, தன்னை ஒரு படம் எடுத்துக் கொண்டு, பின்னர் காரில் ஏறி வேகமாகப் போய்விட்டான் என்று கவுரியின் நண்பரும், அவரது தீவிர ஆதரவாளரும், முற்போக்கு சிந்தனை யாளரும், கன்னட எழுத்தாளருமான யோகேஷ் மாஸ்டர் கூறினார். "அன்று (வியாழக்கிழமை) இரவு ஒருவன் இருசக்கர வாகனத்தில் சிறிது நேரம் சந்தேகப்படும்படி என்னைப் பின் தொடர்ந்து வந்தான். இப்போது சில காலமாகவே நான் அச்சத்துடனேயே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.  ஆனால், இப்போது, கவுரி கொல்லப்பட்ட பிறகு அந்த அச்சம் நிச்சயமாகவே உச்சத்திற்கு சென்று விட்டது" என்று யோகேஷ் கூறுகிறார்.

"2015 இல் கல்வியாளர் எம்.எம். கல்புர்கி கொல்லப்பட்ட பிறகு,  லோகேஷின் வலியுறுத்தல் காரணமாக எனக்கு துப்பாக்கியுடன் கூடிய ஒரு பாது காவலர் நியமிக்கப்பட்டார். இப்போது மறுபடியும் காவல் துறை பாதுகாப்பு திரும்ப வந்துவிட்டது" என்று அவர் கூறுகிறார்.   சட்டப்படியான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள 18 எழுத்தாளர்கள், பகுத்தறிவாளர்கள், சமூக ஆர்வலர்களில் யோகேஷ் ஒருவர். முன்னேற்றக் கருத்து கொண்ட மக்களுக்கு எதிராக தற்போது  அச்சுறுத்தல் நிலவும் கண்ணோட்டத்திற்கு இது ஒரு தெளிவான எடுத்துக்காட்டாகும்.

இந்த எழுத்தாளர் முரண்பாட்டுக்கோ, அச்சுறுத்தல்களுக்கோ, தாக்குதலுக்கோ புதியவர் அல்ல. 2013 ஆம் ஆண்டு அவரது நூல் தந்தி (ஞிuஸீபீலீவீ) வெளியானது முதல் இவை தொடங்கிவிட்டன.  அந் நூலில் பிள்ளையாரைப் பற்றி எழுதி யிருப்பது வலதுசாரி குழுக்களின் மன உணர்வுகளைப் புண்படுத்தி விட்டதாம். அப்போதிருந்து அவருக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தேவன் கரையில் நடைபெற்ற கவுரி லங்கேஷின் தந்தையின் நினைவு  நாள் போது, யோகேஷின் முகத்தில் ஒரு கும்பல்  கருப்பு எண்ணெய் பூசினர்.

இவற்றால் எல்லாம் அவரது சமூகத் தொண்டு ஆர்வம் முனை மழுங்கிப் போய்விடவில்லை என்றாலும்,  முரண்பட்ட ஒரு எழுத்தாளர் என்ற அவரது புகழுக்கு ஒரு விலையை அவர் கொடுக்க வேண்டியிருந்தது.  அவரது வாழ்வாதாரமாக இருந்த நாடகம் நடத்துவது, எழுதுவது, கருத்தரங்குகள் நடத்துவது ஆகியவற்றின் மூலம் அவருக்குக் கிடைத்து வந்த வருவாய் கடந்த இரண்டு ஆண்டுகளில் வறண்டு போனது.

"நான் கலந்து கொள்வதில் ஆபத்து உள்ளது என்ற கருத்து நிலவுவதால்,  எந்த நிகழ்ச்சிக்கும் என்னை அழைப்பதை மக்கள் நிறுத்திக் கொண்டனர். நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்கள் அது பற்றி காவல் துறைக்கு தெரிவித்து, அதற்கு எதிராக எதிர்ப்பு  ஏதேனும் இருந்தால், பாதுகாப்பு அளிக்கச்  செய்ய  வேண்டியதாகவும் இருந்தது. இது போன்றதொரு தலை வலியை ஏற்படுத் திக் கொள்ள யார்தான் விரும்புவார்கள?" என்று அவர் கேட்கிறார். தொலைவில் இருக்கும் மங்களூருவிலும், அச்சுறுத் தல்கள் மற்றும் கொல்லப்பட்ட நண்பர் களின் பந்தமும் பகுத்தறிவாளரான நரேந்திர நாயக்குடன் யோகேஷை கட்டிப் போட்டிருக்கின்றன.  நரேந்திர நாயக்குக்கு இரண்டு ஷிப்டுகளில் இரண்டு காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப் பட்டுள்ளது. "தாக்குதலுக்கு இலக்காக உள்ளவர்களின் பட்டியலில் 7 ஆம் இடத்தில் நான் இருக்கிறேன்.  இப்போது எனக்கு 6 ஆவது இடத்திற்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என்று கருதுகிறேன்" என்று அவருக்கே உரித் தான சோகமான நகைச்சுவை உணர் வுடன் அந்த மனஉறுதியும் ஆற்றலும் கொண்ட பகுத்தறிவாளர் கூறுகிறார்.

மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, மந்திர தந்திரங்களின் மோசடிகளை கடந்த 30 ஆண்டு காலமாக வெளிப் படுத்திக் கொண்டிருக்கும், 66 வயதான இந்திய பகுத்தறிவாளர் சங்கத் தலைவ ரான  நரேந்திர நாயக்,  இந்துத்துவ அமைப்புகள் மற்றும் மத அமைப் புகள் என  மனதைக் கவரும் எதிரிகளின் பட்டியலை தயாரித்து வைத்துள்ளார்.

ஆன்லைனில் தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் வந்தபோது,  2016 ஆம் ஆண்டில் அவர் காவல்துறையிடம் ஒரு புகார் அளித்திருந்தார். இரண்டு  பேர் தன்னைத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றனர் என்று இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் புகார் அளித்ததை அடுத்து அவருக்குக் கூடுதல் காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

குடும்பத்தினரிடமிருந்து வரும் அழுத்தம் அதிகரித்திருந்த போதிலும், தாக்கப்படலாம் என்ற அச்சுறுத்தலுக்கான அறிகுறிகள் தென்பட்டாலும், இறுதி வரை போராடுவதைத் தவிர தனக்கு வேறு வழி இல்லை என்று அவர் கூறுகிறார். "கவுரி யின் இறப்புக்குப் பிறகு, தற்காலிகமாக அயல் நாட்டுக்குச் சென்றுவிடும்படி கேட்டுக் கொண்டு தொலைபேசி செய் திகள் எனக்கு வந்து கொண்டிருக்கின்றன. இங்கு எனது சமூகத்தில் நிலவும் பல தவறுகளை சரி செய்ய வேண்டியிருக்கும் போது, நான் இங்கிருந்து ஏன் ஓட வேண்டும்?" என்று கேட்கிறார்.

தாக்குதலுக்கு இலக்கானவர்களின் அந்தப் பட்டியலில் நரேந்திர நாயக்குக்கு மேலே இருக்கும் கே.எஸ்.பகவான் என்ற எழுத்தாளர் கடந்த 30 ஆண்டு காலமாக எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். ஆனால், இந்து வேத நூல்களை 2016 இல் அவர் பேசிய பேச்சில் கடுமையாக இழிவு படுத்தி விட்டார் என்பதால் அவர் தீவிர தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார். பேராசிரியர் கல்புர்கியின் கொலைக்குப் பிறகு,  மைசூரில் வாழும் பகவான்தான் தங்களின் அடுத்த இலக்கு என்று ஆன் லைன் அச்சுறுத்தல்கள் பறைசாற்று கின்றன. இப்போது அவர் வெளியே எங்கே சென்றாலும் இரண்டு துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் அவருடன் செல்கின்றனர். கவுரி லங்கேஷின் கொலைக்குப் பிறகு ஒரு சில மணி நேரத்திற்குள் இரண்டு முறை அவரை பாதுகாவலர்கள் சந்தித்து அவரது பாது காப்பை உறுதிப்படுத்திக் கொள்கின்றனர்.

இவ்வாறு தற்போது நிலவும் சூழ்நிலை பதற்றம் நிறைந்ததாகவும், பிளவுபட்ட தாகவும் இருக்கும்போது,  மூடநம்பிக்கை களுக்கு எதிரான பிரச்சாரத்தில் தனது பங்கினைப் பற்றி  உற்சாகம் கொண்ட வராக பகவான் இருக்கிறார். எனது நூல்கள் இப்போது நன்றாக விற்பனை ஆகின்றன. நிகழ்ச்சிகளுக்கான கூடுதல் அழைப்புகள் எனக்கு வந்து கொண்டி ருக்கின்றன. அறிவியல் சான்றுகளின் ஆதரவு பெற்ற புதிய கருத்துகளை அறிந்து கொள்வதற்கு பெரும்பாலான மக்கள், குறிப்பாக இளைஞர்கள், இப் போதும் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர்" என்று பகவான் கூறுகிறார். மகாராட்டிர மாநிலத்தில் பகுத்தறிவா ளர்கள் நரேந்திர தபோல்கர் 2013 ஆம் ஆண்டிலும், கோவிந்த பன்சாரே 2015 ஆம் ஆண்டிலும் கொல்லப்பட்டதற்குப் பிறகு அம்மாநிலத்தைச் சூழ்ந்த அச்சம் என்னும் மேகம் இன்னமும் விலக வில்லை.

மகாராட்டிராவில் விவசாயிகளுடன் பணியாற்றி வந்த இடதுசாரி சர்மிக் முக்தி தள அமைப்பின் தீவிர தொண்டரான 68 வயதான  பாரத் பதங்கர், எந்த அச்சுறுத் தலையும் அலட்சியப்படுத்தக்கூடாது என்பதை நன்கு அறிந்திருந்தார். காவல் துறை பாதுகாப்பை ஏற்றுக் கொள்ள அவர் மறுத்த போதிலும், தொடர்ந்து அவருக்கு வந்த அச்சுறுத்தல்கள் காரண மாக துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் ஒருவர் அவருடன் இருப்பதற்காக நிய மிக்கப்பட்டுள்ளார்.

ஜாதி ஒழிப்பு மற்றும் முஸ்லிம்கள், தலித்துகள் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள அவர், இரண்டு பகுத்தறிவா ளர்களின் கொலைக்காக   சனாதன் சன்ஸ்தா  என்ற இந்து தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது அந்த அமைப்பினரை தன்மீது கோபம் கொள்ளச்  செய்துள்ளது என்று அவர் கூறுகிறார். பன்சாரே கொலை செய்யப்பட்ட அன்று, சன்ஸ்தாவின் பத்திரிகையான சனாதன் பிரபாத் பத்திரிகையின் நகல் ஒன்று பதங்கரின் வீட்டில் போடப்பட்டிருந்தது. அதன் மீது எனது பெயரும், எனது கிராமத்தின் பெயரும் மட்டும் எழுதப் பட்டிருந்தது. இது தெளிவான ஓர் அச்சுறுத்தல் அல்லவா?" என்று அவர் கேட்கிறார்.

நன்றி: "தி இந்து" 10-09-2017


தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

நன்றி : விடுதலை 02.10.2017


.