Sunday 24 April 2016

பண்படுத்தும் நண்பன் வேறு யாரே உளர்?

                                                                                  வாழ்வியல் சிந்தனைகள் 
                                                                                       புத்தக அன்பர்கள் பெருகட்டுமே
இன்று (23.4.2016) உலகப்புத்தக நாள்! ஆங்கில இலக்கியத்தில் மிகப் பெரும் புலமையோடு உலகம் முழுவதிலும் உள்ளோர் பரவலாக அறிந்துள்ள, கற்றுள்ள ஷேக்ஸ்பியர் அவர்கள் நினைவு நாளையே, உலகப் புத்தக நாளாகக் கொண்டாடுகிறோம்! (இன்று 400ஆவது நினைவு நாளாம்)

நல்ல நண்பர்கள் - விரும்பத்தகுந்த சிறந்த நட்புடைமையாளர்கள் - நம் வாழ்நாளைப் பெருக்கும் மகத்தான மருத்துவர்கள் ஆவார்கள்!

நண்பர்கள் - மனந்திறந்து உரையாடி மகிழும் நண்பர்கள் இருந்தால் - மனம் எப்போதும் இளமையோடு - வளமையோடு இருக்கும், முதுமையின் தாக்கத்தை வெகுவாகக் குறைப்பவர்கள் அவர்களே!

‘தனிமரமாக’ இருப்பதினால் ஆயுளும் குறையும். பரிமாறிக்கொண்டு, கலகலப்புடனே பேசி மகிழவும், தாளா துயரத்தை தாண்டி மீளவும் நட்புகளே வெகுவாகப் பயன்படக் கூடும்.
தந்தை பெரியார் சுயமரியாதைத் திருமண முறையை உருவாக்கி, விளக்க வுரை கூறுகையில், வாழ்விணையர்கள் (தம்பதிகள்) ஆன நீங்கள் உற்ற நண்பர்களாக இருப்போம் என்ற உறுதி கூறச்செய்தார்கள்.

கணவன் - மனைவி பலரிடம், எஜமான் - அடிமை என்ற நிலையில் இருக்காமல், சமமாகப் பழகும் நண்பர்களைப் போல் இருங்கள் என்று கூறுவார்கள். நண்பர்கள் என்றால் ‘ஒருவர் பொறை - இருவர் நட்பு’ என்ற தத்துவப்படி, கோபதாபங்கள், குற்றச்சாட்டுகள், பிழைபட உணர்தல் ஆகியவைகளால் நாம் தாக்குண்ட நிலையில்கூட, நண்பர்களிடம் தான் அதை வெகுவாக சகித்துக் கொண்டு நட்பைத் தொடருவோம். அதுபோன்று நட்பின் வயப்பட்டுள்ளவர்களாக இருப்பது முக்கியம் என்பதை அவ்வுறுதி வற்புறுத்துகிறது!

புத்தகங்களை விட நமக்குச் சிறந்த நண்பர்கள், நம்மை மகிழ்விக்கவும், நம் துயரங்களை நீக்கவும், நம்முடைய அறிவை விரிவு செய்து, அன்புப் பேழையில் அதனை வைத்துப் பயன்படுத்தவும், பண்படுத்தும் நண்பன் வேறு யாரே உளர்?

‘நகுதற் பொருட்டல்ல நட்பு’ என்ற மொழிக்கேற்ப, இடித்துரைத்து நம்மை தவறான பாதையிலிருந்து மீட்டெடுக்க உதவும் ஆசானாகவும் புத்தகம் என்ற நண்பன் நமக்குப் பயன்படுவான்!
ஒவ்வொருவர் வீட்டிலும் புத்தகங்கள் அலமாரிகள் - அல்லது தனிப் புத்தக அறைகளிலே இருந்து நாம் படிப்பதை வாடிக்கையாக்கிக் கொள்ள வேண்டும்.
அறிதல்
புரிதல்
மாறுதல்

இவைகளை ஏற்படுத்திடும் புத்தக ஆசான்கள் பல்வேறு துறைகளிலும் பலர் உண்டு!

பல சரக்குக் கடையில் பணியாற்றி பிறகு மிகப்பெரும் புரட்சி எழுத்தாளராக, தமிழ் இலக்கிய மேதையாக ஆன நூற்றாண்டு நாயகர் ‘விந்தன்’

அச்சுக்கோர்த்த நிலையிலே படித்துப் படித்து பெரும் எழுத்தாளரான, சிறந்த பேச்சாளரான ம.பொ.சிவஞானம் என்ற ம.பொ.சி. அவர்களும் புத்தகங்களால் உருவாக்கப்பட்ட இலக்கியவாதி!
இவ்வரிசையில் நமது பகுத்தறிவுப் புலவர் வெற்றியழகன் தொல் காப்பியத்திற்கே தெளிவுரை தரும் நிலைக்கு உயர்ந்த, கடையில் பணிபுரிந்து, கடைத்தேறிய புலவர் ஆனவர்.

சுயசிந்தனை, பல்வேறு நூல்களைப் படித்து பலரும் விரும்பும் எனது எதிர்மறை கருத்தாசான் ஜெயகாந்தன் என்ற இலக்கிய மேதை  அவரது பிறந்த நாள் 24 இப்படி - புத்தாக்கத்தை புத்தகங்கள் உருவாக்கி புது உலகம், புரட்சி உலகத்தை தந்துள்ளன! கண்டது கற்றுப் பண்டிதன் ஆவான் என்பதற்கு அடித்தளம் புத்தகங்கள்தானே! ஆனாலும் கண்டதையெல்லாம் படித்து, நம்மை நாம் பாழடித்துக் கொள்ளக் கூடாது என்பதை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள்.

‘நூலைப்படி, நூலைப்படி’... என்று அவர் அறிவுறுத்தியபடி ‘பொய்யிலே கால்படி, புரட்டிலே முக்கால் படி’யுள்ள புத்தகங்களைப் படிப்பது, தவறானவர்களை நண்பர்களாகக் கொண்டதேயாகும்! நெறி பிறழ்ந்த வாழ்க்கையில் அல்லாடும் கொடுமைக்கு ஆளாவதாகும்.

எனவே சிறந்த நூல் என்று பல அறிஞர்கள் சொல்லும்படியான நூல் என்றாலும், அதை உங்கள் சுயசிந்தனையின்படி, படித்து ஆராய்க. பிறகே வாழ்க்கை உயரும் படிகள் தானே உங்களுக்கு கிடைக்கும்.
சென்னை பெரியார் திடலில் புத்தகங்களுக்கு 50 விழுக்காடு தள்ளுபடி என்பது அவர்கள் அறிவைப் பெருக்க, புத்தகங்கள் படிக்கும் வழக்கம் பெருக, செய்துள்ள தொண்டற ஏற்பாடு, இலாபம் ஈட்ட அல்ல. பயன் பெறுங்கள், முந்துங்கள் - உங்கள் ‘புதிய நண்பர்கள்’ புத்தக உலகில் ஏராளம் கிடைப்பார்கள்.
- கி.வீரமணி
நன்றி: விடுதலை 23.04.16


Wednesday 20 April 2016

'பில்லி சூனியம்': ....

'பில்லி சூனியம்': இந்தியாவில் மூவர் எரித்துக் கொலை

  • 19 ஏப்ரல் 2016
பில்லி சூனிய செயல்பாடுகளில் ஈடுபட்டனர் எனும் குற்றச்சாட்டின் பேரில், அந்தக் குடும்பத்தினர் தங்கியிருந்த வீட்டை ஒரு கும்பல் தீயிட்டு கொளுத்தியது தொடர்பில், பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Image copyrightGetty
Image captionஇந்தியாவின் பல மாநிலங்களில் பில்லி சூனியம் குறித்த மூடநம்பிக்கை நிலவுகிறது.
இச்சம்பவம் இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஜார்கண்டில் கடந்த ஞாயிறன்று நடைபெற்றது.
இதன் காரணமாக அந்தக் குடும்பத்தின் தலைவர் கோவர்தன் பகத் உட்பட மூவர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
அந்தக் குடும்பத்தினர் நரபலி கொடுப்பதற்காக சிறார்களை கடத்தினர் என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். ஆனால் இதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒரு சிறுவனின் தலையை வெட்டிக் கொன்றதற்காக நீண்டகாலம் பகத் சிறையில் இருந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
Image copyrightGetty
Image captionபல நாடுகளில் மூடநம்பிக்கை பழக்க வழக்கங்கள் நிலவுகின்றன
இதேவேளை மற்றொரு சம்பவத்தில் நரபலி கொடுக்கப்படவிருந்த சிறுமி டில்லியில் மீட்கப்பட்டுள்ளார்.
அவரது மாமாவும் வேறு இருவரும் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தனர் என காவல்துறையினர் கூறுகின்றனர்.

நன்றி : பி.பி.சி. தமிழில் செய்திகள்


நடைபாதைக் கோயில்களை அகற்றக்கோரி உச்சநீதிமன்றம் 2006இல் உத்தரவிட்டும் அகற்றாதது ஏன்?.....

புதுடில்லி, ஏப்.20- நடைபாதைக் கோயில்களை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 2006இல் உத்தரவிட்டும் அகற்றாதது - ஏன்? மாநில அரசின் தலைமைச் செயலாளர்கள் நீதிமன்றத்திற்கு நேரில் வந்து பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தர விட்டது.

சாலைகள், நடைபாதைகள் மற்றும் பொது இடங்களை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக எழுப்பப்பட்டு உள்ள மத வழிபாட்டுத் தலங்களை அப்புறப்படுத்தாதது ஏன்? என்று மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக இரு வாரங்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் சாலைகள், நடைபாதைகள் மற்றும் பொது இடங்களை ஆக்கிரமித்து சட்டவிரோதமான முறையில் வழிபாட்டுத் தலங்கள், கட்டடங்கள் கட்டப்பட்டு இருப்பதாகவும், அதை அப்புறப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிடக் கோரியும் கடந்த 2006-இல் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.இது தொடர்பாக அவ்வப்போது மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்து வந்தது.ஆனால் மாநில அரசுகள் உறுதியானநடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. தங்களின் நடவடிக்கை குறித்து, பிரமாணப் பத்திரத்தையும் மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வி.கோபால கவுடா மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, இந்த வழக்கு நேற்று செவ்வாயன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றாமல் இருந்ததற்காக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், மாநில அரசுகளின் இத்தகைய அலட்சிய மனப்பான்மையை நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது என்று கூறிய நீதிபதிகள், சாலைகள் மற்றும் பொது இடங்களை ஆக்கிரமித்து எழுப்பப்பட்ட மத வழிபாட்டுத் தலங்கள், சட்டவிரோத கட்டடங்களை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டும் அதை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு கடைசி வாய்ப்பாக இரு வாரங்களுக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றாததற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கண்டிப்பு காட்டியுள்ளனர்.
நன்றி : விடுதலை 20.4.16

Friday 15 April 2016

நாட்டில் நடைபெறும் ஆணவக் கொலைகளுக்கு முடிவு தேவை.....

நாட்டில் நடைபெறும் ஆணவக் கொலைகளுக்கு முடிவு தேவை
உயர்நீதிமன்ற நீதிபதி திரு.இராமசுப்பிரமணியம் அவர்களின்  ஒன்பது கட்டளைகள் வரவேற்கத்தக்கவை - செயல்படுத்தப்படவேண்டியவை!
கூலிப்படைகள் உஷார் - உடனடியாக ஒடுக்கப்படவேண்டும்
அம்பேத்கர்மீது ஆர்.எஸ்.எஸ். வீசும் தூண்டில் - எச்சரிக்கை  அவர் கொள்கையைப் பரப்புவதைவிட பாதுகாப்பதே மிகவும் அவசியம்!
ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் இணையர்களை - படுகொலை செய்யும் ஆணவக் கொலைகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.வி.இராமசுப்பிரமணியம் அவர்கள் இது குறித்து பிறப்பித்த ஒன்பது வகை வழிமுறை ஆணைகள் வரவேற்கத்தக்கவை - செயல் படுத்தப்பட வேண்டியவை - குறிப்பாக கூலிப் படைகள் ஒடுக்கப்படவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான ஜஸ்டீஸ் திரு.வி.இராமசுப்பிரமணியம் அவர்கள், ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளுவோரைப் பாது காத்து, அவர்களுக்கு உரிய உரிமையைக் காக்க, காவல் துறைக்குத் தந்துள்ள உத்தரவு மிகவும் வரவேற்கத் தக்கதாகும்.

இதுவரை தமிழ்நாட்டில் - அதுவும் பெரியார் பிறந்த மண்ணில் - அண்மைக்காலமாக விசிறி விடப்பட்ட ஜாதி வெறி காரணமாகவும், மிக மலிவான தொகைக்கே கொலை செய்யும் கூலிப் படைகள் மலிந்துள்ளதாலும் இதுவரை 82 ஆணவக் கொலைகள் நடைபெற்றுள்ளன என்பது வெட்கத்தால் தலைகுனிய வைக்கக் கூடியதாகும்.
நீதிபதியின் 9 ஆணைகள்

இதனை - ஒரு வழக்கில் - கணக்கில் எடுத்துக்கொண்டு உயர்நீதிமன்ற நீதிபதி திரு.வி.இராமசுப்பிரமணியம் அவர்கள் 9 ஆணைகளைப் பிறப்பித்துள்ளார்.
இதுமாதிரி ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோரை - குறிப்பாக ஆதிதிராவிடர்களுடன் தொடர்பு கொண்ட மணத் தம்பதிகள் பலரைக் கொலைகள் செய்வதும், அதற்கு “கவுரவக் கொலை‘‘ என்று பெயர் சூட்டுவதும் அநாகரிகமானது. பஞ்சாப்,  அரியானா மாநிலங்களில் ‘‘ஜாதிப் பஞ்சாயத்துக்களை‘‘ நடத்தி, தண்டனை அளித்து வந்த நிலையில், பஞ்சாப், அரியானா உயர்நீதிமன்றங்கள் இதேபோன்ற ஆணைகளை காவல்துறைக்குத் தந்துள்ளன.

அவற்றை யொட்டியே சென்னை உயர்நீதிமன்றத்திலும் மாண்புமிகு நீதிபதி அவர்கள் இப்படி 9 ஆணைகளைப் பிறப்பித்துள்ளார் என்பது நமக்கு ஆறுதலைத் தருகிறது.

1. ஒவ்வொரு மாவட்டத்தில் இம்மாதிரி ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோர்பற்றிய பாதுகாப்பு முதலியன தருவதற்கு ஒரு தனிப் பிரிவு (Special Cell) உருவாக்கப்படல் வேண்டும். ஜாதி மறுப்புத் திருமணங்களைச் செய்வோர் புகார் கொடுத்தால், அதன்மீது உடனடியாக விரைந்து செயல்படவேண்டும்.
மூன்று மாதங்களுக்குள்...
2. இதிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அத்தகைய தனிப்பிரிவு ஏற்பாடு செய்யப்படல் வேண்டும். அதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட சமூகநல அதிகாரி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ஆகியோர் இடம்பெறவேண்டும்.

3. கொலை மிரட்டலுக்குப் பயந்து தப்பி வருவோரைப் பாதுகாப்பதற்கென ஒரு தனி நிதியே (Fund) ஒதுக்கப் படவேண்டும். இந்த நிதியை அப்படி தனியே வீட்டை விட்டு வெளியே வருகிறவர்களை காப்பதற்கென தனிக்காப்பகம் - குடில் அமைப்பதற்கும், அவர்களது புதுவாழ்வு, புனர்வாழ்வு அமைவதற்கும் செலவிடப்படல் வேண்டும்.

4. 24 மணிநேரமும் தொடர்புகொள்ளக் கூடிய உதவிக்கரம் (Help line) ஒன்றை உருவாக்கி, வரும் புகார்களைப் பதிவு செய்யவும், கண்காணிக்கவும், அறிவுரை, ஆலோசனை வழங்குதல் வேண்டும்.

5. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் காவல் நிலைய அதிகாரி (S.H.O.) அந்த ஜாதி மறுப்புத் திருமணத் தம்பதி களுக்கு பாதுகாப்புத் தருதல் வேண்டும்.

6. தனிப் பிரிவுக்குத் தரப்பட்ட புகார்கள் உடனே சம்பந்தப் பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்!

7. எல்லாக் காவல் நிலையங்களிலும் மின்தொடர்பு Electronically through the crime and criminal Tracking Network and systems (CCTNS)
முதலியவற்றை தானே இயங்கும் வண்ணம் அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.

8. சம்பந்தப்பட்ட ஜாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களை தேடி அலைவோரையும் கண்டறிந்து, தடுத்தல், பெற் றோர்களுக்கு உரிய அறிவுரை (கவுன்சிலிங்) அளிப்பது.

காவல்துறை அதிகாரிகளைப்
பொறுப்பேற்க செய்யவேண்டும்


9. எந்த அசம்பாவிதங்கள் நடைபெற்றாலும் அதற்குக் காவல் துறை அதிகாரிகளையே பொறுப்பாக்குவதோடு, அவர்கள் இக்கடமைகளிலிருந்து தவறினால், அதை மிகப்பெரிய ஒழுக்கத் தவறான நடத்தை (Major Misconduct)  என்று அறிவித்து அவ்வதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்!
இப்படி பல்வேறு முக்கிய அம்சங்கள் உயர்நீதிமன்றத்தால் தரப்பட்டுள்ளன. இதற்காக நீதிபதி அவர்களை வெகுவாகப் பாராட்டுவதுடன், இவற்றை உடனடியாக செயலுக்குக் கொணர்தல் அவசியம், அவசரம் ஆகும்!

இவைகளை தயவு தாட்சயண்மின்றி செயல்படுத்துவதோடு, மற்றொன்றும் முக்கியம்.
கூலிப்படைகள் உஷார்!

கூலிப்படைகளை முற்றாகக் கண்டறிந்து அவர்களைக் கண்டுகொண்டு அவர்களின் நடமாட்டம் இல்லாமல் செய்தால், இப்படிப்பட்ட கூலிக்கான கொலைகள் - உயிர்க் கொலைகள் நடைபெறாமல் இருக்குமே!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
15.4.2016