Thursday 3 December 2020

செவக்காடு.....(நாவல் வா.நேரு ) அத்தியாயம் மூன்று..

 




(ஓடையிலிருந்து மேலே ஏறினால் சந்திரனின் செவக்காடு வந்துவிடும். ஆனால் வெற்றிமணி இன்னும் கொஞ்சதூரம் ஓடைக்குள் நடந்து போனால்தான் அவரின் காடு வரும். "மாப்ள ஓங்காடு வந்திருச்சு,போய்யா, நான் அப்படியே ஓடைக்குள்ளே போய் என் காட்டுக்கு போயிறேன் " என்றார் வெற்றிமணி. சரி என்று சொன்னவுடன் ஓடை வழியாகவே நடக்க ஆரம்பித்தார் வெற்றி மணி. ஓடைக்குள் இருந்து வெற்றிமணி கூட பேசிக்கொண்டிருந்ததைப் பற்றி பேசியதை நினைத்துக்கொண்டே தனது காட்டுக்குள் மேட்டில் ஏறி உள்ளே நுழைய நடந்த சந்திரனின் கால்கள் திடிரென்று நின்றன. என்னடா நடந்து போய்க்கொண்டிருந்த கால் திடீரென்று பிரேக் போட்டது மாதிரி நிற்கிறதே என்று நினைத்துக்கொண்டே முன்னால் பார்த்த சந்திரன் அரண்டு பின் வாங்கினான். அவனுக்கு முன்னால் நல்ல கறு கறு நிறத்தில்,அவனது வீட்டில் கம்பு இடிக்கப் பயன்படுத்தும் உலக்கை அளவுக்கு கரு நாகம் படம் எடுத்து நின்று கொண்டிருந்தது.)


செவக்காடு.....நாவல்


           வா.நேரு


அத்தியாயம் மூன்று..




படம்  எடுத்து நின்று கொண்டிருந்த பாம்பைப் பார்த்ததும்,அவனை அறியாமல் பாம்பு,பாம்பு என்று சத்தம் போட்டான்.இவனது சத்தத்தைக் கேட்ட வெற்றிமணி கொஞ்சதூரம் நடந்து போயிருந்தவர், திருப்பி ஓடி வந்து கொண்டிருந்தார்.இவனது அங்க அசைவுகளைப் பார்த்த பாம்பு சட்டென தலையைக் கீழே போட்டு ஊர்ந்து போக ஆரம்பித்தது.ஊர்ந்து போகும் பாம்பைப் பார்த்தான்.…கரு  நாகப்பாம்பு…நல்ல கருப்பு நிறத்தில் பள பளவென ..பெரிய அளவிற்கு நீளமாய்..தன் வீட்டில் சோளம்,கம்பை உரலில் போட்டு இடிக்கப்பயன்படும் உலக்கை போல அவ்வளவு தட்டையாய்,நீளமாய் ஊர்ந்து போய்க்கொண்டிருந்தது.இதற்கு முன்னால் இத்தமொக்க பாம்பை நேருக்கு நேராக சந்திரன் பார்த்ததில்லை.குட்டி குட்டி பாம்புகளை  நிறையப்பார்த்திருக்கிறான். அடித்திருக்கிறான். ஆனால் இத்தமொக்க பாம்பு ,திடீரென்று விரட்ட ஆரம்பித்தால் என்ன செய்வது என்று சுத்தி முத்திப்பார்த்தான்.நல்ல பள,பளவென மின்னும் தோல்..சில நேரம் செவக்காட்டுக்குள் கிடக்கும் வெள்ள  நிறத்தோலை,பாம்புச்சட்டையப் பார்த்திருக்கிறான். ஆனால் இவனைக் கண்டுகொள்ளாத பாம்பு சர,சரவென ஊர்ந்து போய்க்கொண்டிருந்த்து.


இவனது சத்த்த்தைக் கேட்டு ஓடி வந்த வெற்றிமணியும் ஊர்ந்து போய்க்கொண்டிருந்த  பாம்பைப் பார்த்தார். “ ஏய் மாப்ள, ரொம்ப  நாளா இந்தப்பாம்பு நம்ம காட்டுகளுக்குள்ளேயே தெரியுது” என்றார். “ அப்படியா மாமா, இன்னைக்குத்தான் நான் பார்க்கிறேன் “ என்றான் சந்திரன். “ ஆமா, சொல்லிட்டு, வந்து உனக்கு தரிசனம் கொடுத்துட்டு போகும்,பாத்துக்கோன்னு….பாத்திடி மாப்ள, ஒரு போடு போட்டுச்சுன்னா,சங்குதான்,சும்மா மத்த பாம்பு மாதிரி,கல்லை கில்லை எடுத்து எறிஞ்சுக்கிட்டு இருக்காத “ என்றார்.


“மாமா, பாம்புக்குப் பயந்தா, செவக்காட்ல வெள்ளாமை பாக்க முடியுமா? “ என்று சொல்லிக்கொண்டே பாம்பு எங்கே போகிறது என்று சந்திரன்பார்த்தான். வெற்றிமணியும் அவனோடு சேர்ந்து பார்த்தார்

சந்திரனனின் செவக்காட்டிற்கு கிழக்கே ஒரு சின்ன ஓடை இருந்தது.அந்த சின்ன ஓடையிலிருந்து வரும் தண்ணீர் இந்தப்பெரிய ஓடையில் வந்துதான் கலக்கும்.இவனது காட்டிற்கு கிழக்கே இருக்கும் சின்ன ஓடையில் இறங்கி மறுபடியும் ஊர்ந்து ஏறி ,இவனது காட்டின் ஈசான மூலையில் இருக்கும் பாம்புப்புத்துக்கு அருகில் போனது. கொஞ்ச நேரத்தில் பாம்பைக் காணவில்லை. புத்துக்குள் போயிருக்கும்போல. மொக்கப்பய பாம்பைப் பாத்தது ஒரு மாதிரி  படபடப்பாக இருந்தது சந்திரனுக்கு.


போன முறை உழுகும்போதே  காட்டின் ஈசான மூலையில் கிடக்கும் பாம்புப்புத்தை வெட்டிப்போட்டு விடலாம் என்று வேலைக்கு வந்த ஆட்களிடம் சொன்னான்.அவர்கள் மறுத்த போது இவனே மம்பட்டியை வைத்து வெட்டி,அழித்துவிடலாம் என்று போனான்.ஆனால் வேலைக்கு வந்த ஆட்கள் தடுத்துவிட்டது மட்டுமல்ல, அம்மாவிடமும் போய்ப் போட்டுக்கொடுத்துவிட்டார்கள்.அம்மாவிடம் வசவு கிடைத்தது. நீயா போய் ஏதாவது பண்ணாதட…’பாம்பு ஒரு வகையில நம்மளுக்கு நண்பன்டா,பாம்பு இல்லைன்னா காடு பூராம் வெறும் எலிதான் அலையும். காட்டைப்பூராம் எலிகள் நாசமாக்கிடும். பாம்புதான் எலிகளைத் தின்னு நம்ம விவசாயத்துக்கு ஒரு வகையில உதவியா இருக்கு.’ என்றவர்.`போகும்போது,வரும்போது காலடியை மட்டும் பாத்துப்போ, இராத்திரி போகும்போது பேட்டரிலைட்ட அடிச்சுக்கிட்டே போ,பாம்பு,அதுவா வந்து நம்மளைக்கொத்தாது,நாம ஏதாவது தொந்தரவுப்பண்ணப்போறோமுன்னு தெரிந்தாத்தான் நம்மளை அது கொத்தும்.நீ சின்னப்பையன்,பாம்புப்புத்துகிட்ட எல்லாம் போகாதே,விட்டிடு,அதுவாட்டல காட்ல ஒரு ஓரத்தில இருந்துட்டுப்போகுது `என்று சொல்லி விட்டார்.அப்பவெல்லாம் வெறும் புத்தைத்தான் பார்த்திருக்கிறான்.இப்போதுதான் பாம்பைப்பார்த்திருக்கிறான் சந்திரன்.


காட்டுக்கு கிழக்கே இருக்கும் ஓடையத்தாண்டி காட்டுக்குள் சந்திரன் போனான்.வெற்றிமணியும் ஓடை வழியே போகாமல் இவனோடு கூடவே வந்து சொல்லிவிட்டு ,அவரது காட்டுக்கு இவனது காட்டுவழியாகவே போனார். மழை காட்டை தாறுமாறாகப் பிரித்திருந்த்து. ஏற்கனவே உழுது போட்டிருந்த நிலம். உழுது போட்டது மட்டுமல்லாமல், ஆட்டுக்கெடையும் ஏற்கனவே போட்டு வைத்திருந்த நிலம்.மொத்தம் 5 ஏக்கர் நிலத்தையும் 4 குண்டுகளாகப் பிரித்து , கெடை போட்டு வைத்திருந்த நிலம். தண்ணீர் எங்கும் போகாமல் அப்படியே குண்டுகளுக்குள்ளேயே நின்றிருந்தது. “ மாப்ள பரவாயில்லை,மழை பேஞ்சதல உன் காட்ல ஒண்ணும் உடப்பு இல்ல, அதனால கெடை அமத்தின உரம், வண்டி மாட்டை வச்சு அடிச்ச குப்பை உரம் எல்லாம் தப்பிச்சு, காட்டுக்குள்ளேயே கெடக்கு, தண்ணி இரண்டு மூணு நாள்ல வத்திப்போகும் ..என் காட்ல என்ன ஆச்சுன்னு தெரியலையே “ என்றார். தொடர்ந்து “ நானும் கெடை போட்டிருந்தேன்,குப்பையை அடிச்சு வச்சிருந்தேன்.இந்த மழைக்கு தங்குச்சா, இல்லே குண்டு உடைஞ்சு ஓடைக்குள்ள ஓடிரிச்சான்னு தெரியல “ என்று சொல்லிக்கொண்டு நடந்து கொண்டிருந்தார்.


காட்டுக்குள்ளே போனன் சந்திரன்.ஈரத்தில் நடப்பதே பெரும் பாடாக இருந்தது. ஒரு இடத்தில் செருப்போடு கால் போய் பதிந்து அப்படியே நின்று கொண்டது. பார்த்தான். செருப்பை எடுத்து கையில் வைத்துக்கொண்டு காட்டுக்குள் நடக்க ஆரம்பித்தவன் அப்படியே தன்னுடைய காட்டின் மேற்கே பார்த்தான். சதுரகிரி  மலை..நேற்று நன்றாக பெய்த மழையில் சின்ன, சின்னக் கோடுகள் போல மலையில் தண்ணீர் கீழே ஓடி வருவது தெரிந்தது. இங்கே இரண்டு மூன்று கிலோ மீட்டருக்கு தள்ளி நின்று பார்க்கும்போது சின்னச்சின்ன கோடுகளாகத் தெரியும் இந்தக் கோடுகள் ,பக்கத்தில் சென்று பார்த்தால் நிறையத் தண்ணீர் ஓடி வரும் இடங்களாக இருக்கும் என்று நினைத்தான். எவ்வளவு அழகிய ஊர்...எவ்வளவு செழிப்பான இடம்..இயற்கையின் எழில் கொஞ்சும் இடமாகத் தனது ஊர் இருப்பது பற்றி எப்போதுமே பெருமைதான் சந்திரனுக்கு..


அவனது ஊரின் மலை அழகிய மேற்குத்தொடர்ச்சி மலையின் தொடர்ச்சி.சிறுவயது முதல் பார்த்து,பார்த்து பழகிய மலை.மேடும்,பள்ளமுமாய்,ஏற்றமும்,இறக்கமுமாய் விரிந்து கிடக்கும் மலை.மலை எங்கிருந்து வருகிறது...எவ்வளவு தூரத்தில் இருந்து வருகிறது என்று தெரியாது.ஆனால் கொஞ்சம் இடைவெளி இருந்தாலும் தொடர்ச்சியாக இருக்கும்.ரோட்டில் போவது போல,கடலில் கப்பலில் போவது போல,மலை வழியாகவே போகமுடியுமா என்று மனதிற்குள்ளேயே கேட்டுக்கொண்டான்.நம்ம மலையில காட்டு யானை இருக்கு,புலி இருக்குன்னு சொல்றாங்களே,,அப்ப எப்படி போகமுடியும் என்று யோசித்தான்.வெற்றிமணி மாமாவிடம் ஒருமுறை இதைப் பற்றிக்கேட்டான். "மாப்ள, நம்ம மலையிலே காட்டு யானை இருக்கு...சில நேரம் மலையை விட்டு இறங்கி தோப்புக்குள்ள வந்திருக்கு...காட்டுப்பன்னி இருக்கு...மான் இருக்கு...நானே நம்ம மலையிலிருந்து அடிச்சுக்கொண்டு வந்த மான் கறியை சின்னப்பிள்ளையா இருக்கும்போது சாப்பிட்டிருக்கேன். ஆனா புலி இருக்குன்னு சொல்றாங்க ,நான் பார்த்ததில்லை" என்றார். 


" மலையிலே நம்மள மாதிரி மனுசங்க இருக்காங்க,ஆனா நம்மளைப் பார்த்தா ஓடிப்போயிருவாங்கன்னு சொல்றாங்களே மாமா " என்றான் சந்திரன். "ஆமாம், இந்த மலைக்கு, இந்த நிலத்துக்கு எல்லாம் சொந்தக்காரங்க அவங்கதான்.பழங்குடி மக்கள்ன்னு சொல்றாங்க அவங்களை...எல்லோரையும் பார்த்து அவங்க ஓட மாட்டங்க...இப்ப அவங்களும் மலையை விட்டு இறங்கி வந்து ,தேன் மாதிரிப்பொருளைக் கொடுத்து அரிசி மாதிரி சில பொருள்களை வாங்கிட்டுப் போராங்க " என்றார் வெற்றிமணி...


அந்த நினைவுகளோடு பார்த்துக்கொண்டு இருந்தவனுக்கு மலைக்கு கீழே இருக்கும் பெரிய தொப்பு தெரிந்தது. பெரிய தோப்பு என்றால் பெரிய தோப்புதான்.எத்தனை வகையான மரங்கள்.மாமரங்கள் மட்டும் எத்தனை வகை..அதில் காய்க்கும் மாம்பழங்கள் எத்தனை வகை...ஒரு நாள் சட்டி மாம்பழம் என்று ஒரு மாம்பழம் சாப்பிட்டான். வீட்டில் இருக்கும் பெரிய ஈயச்சட்டி அளவுக்கான மாம்பழம். ஒரு மாம்பழம் சாப்பிட்டால் ஒரு நேரச்சாப்பாடு சரியாகிப்போய்விடும் அளவுக்கான மாம்பழம்.மாம்பழங்களைப் பற்றி நினைத்தவுடனேயே நாக்கில் எச்சில் ஊறியது.வரிசையாக மாமரங்கள்,புளிய மரங்கள்,பனை மரங்கள், பலா மரங்கள் என நிறைந்து நிற்கும் பெரிய தோப்பு. அந்தத் தோப்புக்குள் போய்விட்டால் மாம்பழம் எவ்வளவு வேண்டுமென்றாலும் சாப்பிட்டுக்கொள்ளலாம்.நன்றாக பழுத்து,தானாக விழுந்து கிடக்கும் மாம்பழங்கள்...பழுக்கவைத்து மாம்பழத்தை தின்பவர்களுக்கு இயற்கையாகப் பழுத்து விழும் மாம்பழத்தின் ருசி தெரியாது என்று நினைத்தான்.மலையில் இருந்து வரும் தண்ணீர், ஊரில் இருக்கும் கண்மாய்க்கு பெரிய தோப்புக்கு நடுவில் இருக்கும் ஆற்றின் வழியாகத்தான் வரும். அந்த நல்ல தண்ணீரின் ருசியும், மாம்பழத்தின் ,பலாப்பழத்தின் ருசியையும் நினைத்துக்கொண்டான் சந்திரன்.


பெரிய தோப்புக்கு போகும் வழியில் ஆற்றின் இந்தப்பக்கம் இருக்கும் பாளையம்தோப்பு. அந்தத்தோப்பிலும் எத்தனை வகையான மரங்கள். ஒவ்வொரு மரமும் 100 ஆண்டுகளைக் கடந்த மரங்கள் போல...விரிந்து கிடக்கும் மரங்கள். பாளையந்தோப்பு முழுவதும் நிறைய பாம்புப்புற்றுகள் கிடக்கும்.மாமரத்து சருகுகள் உதிர்ந்து அதுவே காலுக்கு மெத்தை போல நடக்கும் போது இருக்கும்.ஆனால் பார்த்து நடக்க வேண்டும்.பூச்சி பொட்டை ஏதாவது உள்ளே கிடக்கும்.இரண்டு தோப்பிலும் சேர்த்துப்பார்த்தால் எத்தனை ஆயிரம் மரங்கள் ....இந்தத் தோப்பை சுற்றி வாழும் மனிதர்கள்...விறகு பொறுக்க,பழம் இறக்க, தேங்காய் பறிக்க,நொங்கு வெட்ட என்று மனிதர்களை எப்போதும் அழைத்துக்கொண்டு இருக்கும் இடமாக இந்த இரண்டு தோப்புகளும் சந்திரனுக்குத் தெரியும்.


பெரிய தோப்பு தாண்டித்தான் கேணி இருந்தது.கேணி என்று சொன்னால் இவனது ஊரின் குற்றாலம். அருவியாய் வந்து விழும் தண்ணீரில் ஆசையாய் தலையை வைத்து நிமிடக்கணக்கில் நிற்கச்சொல்லுமிடம்.வெளி ஊர்களில் இருந்து எல்லாம் கேணிக்கு சுற்றுலா என்று வருவார்கள். சந்திரனும் அவனது ஊரில் 6-வது படிக்கும் காலத்திலிருந்து வருடா வருடம் கேணிக்குப் போயிருக்கிறான்.பெரிய தோப்புக்கும் மலைக்கும் இடையில் ஒரு சின்ன ஓடை போல ஆறு. அதில் சில நேரம் காட்டு யானைகளின் சாணி கிடக்கும். பள்ளிக்கூடத்திலிருந்து மாணவ-மாணவிகளைக்கூப்பிட்டு செல்லும் வாத்தியார்கள் யானைச்சாணிகளைப் பார்த்தால் உசாராகிவிடுவார்கள்.மிகக் கவனமாகப் பிள்ளைகளை அழைத்துச்சென்று, கேணியைப்பார்க்கவிட்டு,குளிக்க விட்டு அழைத்துவருவார்கள்.


மலைக்கு மேலே இருக்கும் எண்ணற்ற செடி,கொடிகள்...கொட்டும் மழையில்,அவற்றின் வழியாக ஓடிவரும் தண்ணீர்.மொத்தமாய் ஒன்றாய் இணைந்து கேணிக்கு மேலே பள்ளமாக இருக்கும் இடத்தில் நின்று கொண்டால்,மூலிகைத் தண்ணீரில் குளிப்பது போல அவ்வளவு ,சுகமாய் இருக்கும்..சில நேரம் மொத்து,மொத்து என்று தலையில் விழும் தண்ணீர் சுகமாய்,இதமாய்..யாரோ தட்டி தட்டி சுகம் காட்டுவது போல இருக்கும்....ஊருக்கு வந்து ஒருமுறை இந்தக் கேணி அருவியில் குளித்து விட்டுப்போகிறவர்கள் மறுபடியும் மறுபடியும் வந்து குளித்துச்செல்வதை சந்திரன் பார்த்திருக்கிறான்.


மலையையும் தோப்பையும் பார்த்துக்கொண்டு நின்ற சந்திரனுக்கு வெற்றிமணி அவரது காட்டுக்குள் இருந்து கூப்பிடுவது காதில் கேட்டது. "ஏய் ,சந்திரா,இங்கே வாய்யா, இங்க வந்து இந்தக் கொடுமையைப் பாரு "என்று அவர் சத்தம் போட்டுச்சொல்ல, அவரை நோக்கி சந்திரன் தொபுக், தொபுக் என்று காலை இழுக்கும் ஈரத்திற்குள் மெல்ல  மெல்ல காலை எடுத்து வைத்து நடக்க ஆரம்பித்தான்.









  


Wednesday 2 December 2020

அதிசயமான இயக்கத்தின் ஆச்சரியமான தலைவரே !

 அதிசயமான இயக்கத்தின் 

ஆச்சரியமான தலைவரே !

                     வா.நேரு




அய்யாவின் அடிச்சுவட்டில்
நீங்கள்...
உங்களின் அடிச்சுவட்டில்
நாங்கள்...

தந்தை பெரியார் தந்த
புத்தி போதும் உங்களுக்கு....
நீங்கள் தரும் புத்தி
போதும் எங்களுக்கு....

"தந்தை பெரியாரின் கொள்கை
கைத்தடி நான்"-..நீங்கள்..
உங்களின் கொள்கை
கைத்தடிகள் நாங்கள்...

பெரியார் பணி முடிப்பே
வாழ்வின் இலக்கு- உங்களுக்கு..
தாங்கள் இடும் பணிகளை
முடிப்பதே எங்கள் வாழ்வின் இலக்கு...

'ரத்தமும் சதையும் நகமுமாய்'
எனது தோழர்கள் என
ஆனந்தக்  களிப்பு தங்களுக்கு,,,
உலகு எங்கும் உள்ள
தங்களின் தோழர்கள்
எங்களின் தோழர்கள் ஆவதால்
இரட்டிப்பு மகிழ்ச்சி எங்களுக்கு,,,

கொடுந்தொற்று கரோனா
கொல்கிறது மக்களை...
கொடிது கொடிது கரோனாவினும்
கொடிது ஆரியம் எனும்
அறிவுறுத்தல்
கேட்கிறது தங்களிடமிருந்து...

அனைவருக்கும் அனைத்தும்
இதுதான் திராவிடம்...
திராவிடத்து காளைகளே
செப்புவீர் இதனை செகமனைத்தும்
எனும் குரல் கேட்கிறது
பிறந்த நாள் குரலாக தங்களிடமிருந்து..

ஆரிய ஆதிக்கம்
ஆக்டோபஸ் போல,,,
தெரிந்த கரங்களை விட
தெரியாத கரங்கள் அதிகம்...
பெற்றவை கையளவு..
பெறவேண்டியதோ மலையளவு...

கையளவு பெற்றதையும்
காணாமல் ஆக்கிடவே
நச்சுக்கொள்கைப்  பாம்புகள்
படம் எடுத்து ஆடுகின்றன...
காளைகளே புறப்படுங்கள்...
களம் நோக்கி என
கட்டளையிடும் எங்கள் தலைவரே..

வயது 88 எனினும்
கட்டளை இடுவதில்
களத்தில் நிற்பதில்
கருத்தில் மோதுவதில்
என்றும் 28 வயது இளைஞரே...
எங்கள் தலைவரே..

உங்கள் தொண்டர் ஒருவர்
தனது ஆசையை
என்னிடம் சொன்னார்....
எனது படத்தை அய்யா
ஆசிரியர் திறந்து வைக்க வேண்டுமென..
அங்கணமே நிகழ்ந்தது..
துன்பமான நிகழ்வு எனினும்
தங்கள் தொண்டர்கள்
அவர்கள்  இறப்பு
குறித்து கவலைப்பட்டதில்லை...
அய்யா பெரியார் கொள்கை வளர..
நமது இனம் வாழ
அய்யா ஆசிரியர் வாழவேண்டும்
என்பதே அவர்கள் நினைப்பு
அவர்கள் வாழ்க்கை எல்லாம்...

அதிசயமான இயக்கத்தின்
ஆச்சரியமான தலைவரே !
78 ஆண்டுகள்
பெரியார் பணியின் தொகுப்பே...
100 ஆண்டுகள்
பெரியார் பணியின் தொகுப்பாய்
உங்களைக் காண
எங்களுக்கும் ஆசை....
வாழ்க ! வாழ்க !
நீங்கள் வாழ்க !
                             வா.நேரு  





நன்றி : விடுதலை 02.12.2020