Saturday 25 February 2023

செந்தமிழ் அரிமா சி.இலக்குவனார் விருது ...

 கவிக்கோ துரை.வசந்தராசன் வாசகர் வட்டம் சார்பாக ,சென்னையில் செந்தமிழ் அரிமா.சி.இலக்குவனார் விருது பெற்ற நேரம்.18.02.2023.திராவிடர் இயக்கத்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் அய்யா சுப.வீ.அவர்கள் விருதினை வழங்கினார்கள்.பேரா.முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்கள் நினைவு நூலினை வழங்கினார்கள்.சென்னை டிஸ்கவரி பேலஸ் புத்தக நிலைய மாடியில் நடந்த நிகழ்வு. கவிக்கோ துரை.வசந்த ராசன்,கவிஞர் வெற்றிப்பேரொளி,முனைவர் பேரா.ரேவதி,நக்கீரன் ஆருர் தமிழ் நாடான்,முனைவர் தமிழ் இயலான்,பாவலர் சீனி.பழனி உள்ளிட்ட நிறைய இலக்கிய ஆளுமைகளைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்த நிகழ்வு.அண்ணன் பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரமும் ,அண்ணன் சுப.முருகானந்தம் அவர்களும் இந்தப் பேரவையில் துடிப்புமிக்க உறுப்பினர்கள் இந்த வாசகர் வட்டத்தில்.விருதினை வாங்கியவர்கள் சார்பாக நான் பேசியபோது 'விருதுகளில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை ' என்றேன். அய்யா சுப.வீ.அவர்கள் தனது சிறப்புரையில் " நேரு,விருதுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றார். நாமாக விருதுகளைத் தேடிப் போகவேண்டியதில்லை.அதுவாக நம்மைத் தேடி வரும்போது வேண்டாம் என்று சொல்லவேண்டியதும் இல்லை என்பதுதான் எனது கருத்து " என்றார்.சரியான கருத்தாகவே எனக்குத் தோன்றியது..பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்தலைவர் அண்ணன் இரா.தமிழ்ச்செல்வன் அவர்கள் ,நிகழ்வுக்கு முன்னரே வந்து பொன்னாடை போர்த்தி,வாழ்த்துகளைத் தெரிவித்து விட்டுச்சென்றார்.வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று 







Tuesday 21 February 2023

மாறுதலுக்கு நாமும்தயாராவோம்!...

                                                 மாறுதலுக்கு நாமும்தயாராவோம்!

                                                  (முனைவர் வா.நேரு)


“மின்சாரத்தின் உபயோகம் எல்லா மக்களுக்கும் பயன்படக்கூடிய விதமாகவும், மக்கள் வாழ்க்கை வசதிகளுக்குத் துணை செய்யும் விதமாகவும் விரியும்-, பெருகும்’’ என்றார் தந்தை பெரியார் 85 ஆண்டுகளுக்கு முன்பு (‘இனி வரும் உலகம்‘).50 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் இல்லாமல், வீடுகளில் சின்ன விளக்குகளை வைத்துப் படித்த நம்மைப் போன்றவர்களுக்கு நம் வாழ்வில் மின்சாரமும் கணினியும் புதிய புதிய கண்டுபிடிப்புகளும் கொடுத்திருக்கும் மாற்றங்கள் மிகப்பெரும் வியப்பை அளிக்கின்றன.


வீட்டில் மின்சாரம் வந்தது, கையில் துவைக்கும் பழக்கம் போய், துவைக்கும் இயந்திரம் வந்தது. கையில் மாவு ஆட்டும் பழக்கம் போய் கிரைண்டர் வந்தது. வீட்டிற்குள் வானொலி வந்தது, பின் தொலைக்காட்சிப் பெட்டி வந்தது, அதுவும் கலைஞர் காலத்தில் தொலைக்காட்சி இல்லாத வீட்டிற்குள் எல்லாம் அரசின் இலவச தொலைக்காட்சிப் பெட்டி வந்தது, தொலைக்காட்சியோடு தொலைபேசி வந்தது.


தொலைபேசி வந்த சில ஆண்டுகளில் பெரிய பெரிய கணினிகள் அலுவலங்களுக்குள் வந்தன. பின்பு சின்னச்சின்னக் கணினிகள் வீட்டிற்குள் வந்தன. பின்பு மடிக்கணினி வந்தது. இணையம் வந்தது, தொலைபேசி மாறி கைப்பேசி வந்தது. இன்றைக்கு கைபேசி இல்லாதவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு எல்லாத் தரப்பு மக்களின் கைகளிலும், எல்லா நாடுகளிலும் இருக்கும் ஒரு பொருளாக கைப்பேசி இருக்கிறது. ஸ்மார்ட் பேசிகள் எனப்படும் ஆண்ட்ராய்டு பேசிகள் வந்தன. கணினியும் இணையமும் ஆண்ட்ராய்டு கைப்பேசிகளும் இணைந்து இன்றைக்கு நம் வாழ்க்கையில் எத்தனையோ வசதிகளைக் கொண்டு வந்து விட்டன.




50 ஆண்டுகளுக்கு முன்பு நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அத்தனை வசதிகள் இன்றைக்கு நமக்குக் கிடைக்கின்றன.செல்போன் வழியாக, கூகுள்-_பே போன்றவை மூலமாகப் பணத்தை அனுப்புகிறோம்.பணத்தைப் பெற்றுக்கொள்கிறோம். ரயில் பயணங்கள் பதிவுகளை செல்போன் வழியாகப் பதிவு செய்கிறோம். மிகக் குறைந்த படிப்பு படித்தவர்கள்கூட யூ டியூப் போன்றவற்றின் மூலமாக விளம்பரத்தைப் பார்த்து, பொருள்களை வீட்டிலிருந்தே வரவழைத்துக்கொள்கிறார்கள்.


1980களில் நாம் பள்ளியில் படித்த காலத்தில், யாரேனும் இப்படியெல்லாம் நடக்கும் எனச் சொல்லியிருந்தால் வாய்விட்டுச் சிரித்திருப்போம். இதுவெல்லாம் நடக்குமா என நினைத்திருப்போம். ஆனால், எல்லாம் நடந்திருக்கிறது. கடவுளின் கருணையால் அல்ல; அறிவின் வளர்ச்சியால், அறிவியலின் புதிய புதிய கண்டுபிடிப்புகளால் நடந்திருக்கிறது.இப்போது மீண்டும் ஒரு புதிய சகாப்தம் பிறந்திருக்கிறது.


செயற்கை நுண்ணறிவுத்-துறையின் அடுத்த கட்டப் பாய்ச்சலாக சாட்- ஜிபிடி என்னும் புதிய தொழில் நுட்பம் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் நாள் உலகில் அறிமுகம் ஆகியிருக்கிறது. கடந்த சில நாள்களாக சாட்- ஜிபிடி என்னும் இந்தப் புதிய தொழில் நுட்பம் பற்றியே பேசப்படுகிறது. எழுதப்படுகிறது. கணினி, இணையம், ஆண்ட்ராய்டு பேசிகள் வந்தவுடன் எப்படி உலகில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டதோ அதனைப்போல இந்த சாட்- ஜிபிடியால் பலவித மாற்றங்கள் வரும் என அறிவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.


சாட் ஜிபிடி என்பது செயற்கை நுண்ணறிவு(கிமி) அடிப்படையில் இயங்கும் ஒரு மெய்நிகர் ரோபோ(சாட்பாட்) ஆகும்.ஒரு மனிதரிடம் நாம் கேள்விகேட்டால் அவர் தனது அனுபவத்தால், அறிவால் பதில் கொடுப்பது போல இந்த சாட்-ஜிபிடியும் பதில் கொடுக்கிறது. ஒரு நண்பனைப் போல மனிதனிடம் நெருக்கமாகப் பேசும் திறன் உடையது.’ தவறுகளை ஒப்புக் கொள்ளவும், தவறான அனுமானங்கள் குறித்துக் கேள்வி எழுப்பவும், பொருத்தமற்ற கோரிக்கைகளை நிராகரிக்கவும் சாட்-ஜிபிடிக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடுகின்றனர்.

5.2.2023 ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் ஒரு செய்தியினை சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் இயக்குநர் திரு. பிரதாப் ரெட்டி… வெளியிட்டிருந்தார்.


அதில், ‘‘நாங்கள் சாட்-ஜிபிடி அடிப்படையில் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு ஒரு ஜிஅய்இ என்னும் மெய்நிகர் ரோபோவை உருவாக்கியிருக்கிறோம்.எங்கள் மருத்துவமனையில் 4 தலைமுறையாக இருக்கும், இருந்த நோயாளிகளின் நோய் அறிகுறிகள் எல்லாம் பட்டியலிடப்பட்டு, அந்த சாட்-ஜிபிடி ரோபோவிடம் டேட்டாவாகக் கொடுத்திருக்கிறோம்.வரும் நோயாளிகளிடம் இந்த சாட்-ஜிபிடி ரோபோ உரையாடும். நோயாளியிடம் கேள்வி கேட்கும். நோயாளி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூறும். நோயாளி சொல்லும் அறிகுறிகளை, தன்னிடம் இருக்கும் நோயாளிகளின் டேட்டாவை அலசி, ஆராய்ந்து என்ன வகையான நோயாக இருக்கும் எனத் தீர்மானிக்கும்.பின்பு அந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடம் அனுப்ப அது பரிந்துரைக்கும்.


செயற்கை நுண்ணறிவு, டேட்டா, ரோபோ என்னும் மூன்றும் இணைந்து ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தப்போகிறது. ஒரு நோயாளியின் அறிகுறிகளை வைத்து என்ன நோயாக இருக்கும் என்பதை மிகத் துல்லியமாக அறிந்துகொள்ளவும் அதற்குப் பின் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவும் இந்த சாட்-ஜிபிடி, செயற்கை நுண்ணறிவு முறை மிக வாய்ப்பாக இருக்கும். இதனை ஆரம்பித்து வைக்கிறோம்’’ என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.நினைத்துப் பாருங்கள்.தோராயமாக ஒரு இருபது இலட்சம் நோயாளிகள், இதுவரை சென்னை அப்பொல்லா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என வைத்துக்-கொள்வோம். அவர்களுக்கு இருந்த நோய், அதன் அறிகுறிகள், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சை, மருந்துகள் என அனைத்து டேட்டாவையும் எடுத்துக்கொண்டு,தன்னோடு உரையாடும் நோயாளிக்கு இருக்கும் பிரச்சினையை அறிந்து, ஒப்பிட்டு அவருக்கு இருக்கும் நோயைச் சொல்வதற்கு இந்த மெய் நிகர் ரோபா எடுத்துக்கொள்ளப் போகும் நிமிடங்கள் ஒரு சில நிமிடங்கள். மிக அனுபவம் வாய்ந்த ஒரு மருத்துவரின் பரிந்துரையைப் போல தனது பரிந்துரையை இந்த ரோபா கொடுக்கப்போகிறது.


மனிதர்கள் எழுதுவது போலவே கட்டுரைகளை இந்தப் புதிய தொழில் நுட்பம் எழுதும்..தலைவர்கள் மேடையில் பேசுவது போலவே இதுவும் பேசும். புரட்சிக் கவிஞர் எழுதுவது போல எனக்கு ஒரு கவிதை எழுதிக் கொடு என்று ஒரு தலைப்பைச் சொன்னால் அது உணர்ச்சியோடு கூடிய ஒரு கவிதையைக் கொடுக்கும்… ஒரு நல்ல ஓவியம் வரைந்து கொடு என்றால் வரைந்து கொடுக்கும். இந்த வேதியியல் பாடம் எனக்குப் புரியவில்லை என்று ஒரு மாணவர் சொன்னால், அவருக்கு மிகப் பொறுமையாக அந்தப் பாடத்தைச் சொல்லிக் கொடுக்கும். இப்படி நிறைய…

இந்த சாட்-_ஜிபிடி 100 மொழிகளில் இப்போது கிடைக்கிறது.


அமெரிக்காவில் 2015-இல் சாம் ஆல்ட்மேன் மற்றும் ஈலான் மாஸ்க் ஆகியோரால் தொடங்கப்பட்ட ‘ஓபன் ஏஐ’ என்னும் நிறுவனம் இதனை உருவாக்கியிருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனமும் இதில் இணைந்திருக்கிறது.இது உருவான 5 நாட்களிலேயே 10 இலட்சம் பேர் இதனைப் பயன்படுத்திப் பார்த்திருக்கிறார்கள்.நாளும் பல்லாயிரக்கணக்கில் இதில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் மேலும் இதனை செழுமைப் படுத்துவோம் என்று இதனைத் தயாரித்து வெளியிட்டிருப்பவர்கள் குறிப்பிடுகிறார்கள்.


இந்தப் புதிய தொழில் நுட்பத்தில் பதில்களை விடக் கேள்விகள்தான் முக்கியம்.சாட்-ஜிபிடியிடம் சரியாகக் கேள்விகளைக் கேட்டால்தான் சரியான பதில் கிடைக்கும்.’’ நீங்கள் எப்படிக் கேட்கவேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். எப்படி கேட்பது என்று தெரிந்து கொள்ள பகுத்தறிவுச் சிந்தனை வேண்டும்’ என்று பேரா. மார்த்தா கேப்ரியல் குறிப்பிடுகிறார். (நன்றி பிபிசி)


இந்தியா, சீனா போன்ற நாடுகளில் மக்கள் தொகை மிக அதிகம். இங்கு புதிய புதிய தொழில் நுட்பங்களை வரவேற்கும் அதே நேரத்தில் நிறையப் பேருக்கு வேலை கொடுப்பதாகவும் அந்தத் தொழில் நுட்பங்கள் அமையவேண்டும். முதன்முதலில் தொலைபேசி, இரயில்வே போன்ற துறைகளில் கணினி அறிமுகப்படுத்தப்பட்டபோது தொழிற்சங்கங்கள் வழியாக மிகப்பெரிய எதிர்ப்பு இருந்தது. ஆனால் கணினி அறிமுகப்படுத்தப்பட்டபின் – அது பல பேருக்கு புதிய வேலைகளைக் கொடுத்தவுடன் _ அந்த எதிர்ப்பு மாறியது. பெரியார் இயக்கத்தைப் பொறுத்தவரை புதிய புதிய மாற்றங்களை, புதிய தொழில் நுட்பங்களை இருகரம் நீட்டி வரவேற்பவர்கள். அப்படி நாமும் இந்த சாட்-ஜிபிடி என்னும் புதிய தொழில் நுட்பத்தை வரவேற்போம். மாறுதலுக்கு நாமும் தயாராவோம்.


நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் பிப்ரவரி(16-28),2023

Monday 20 February 2023

கடவுள் கற்பனையைப் போட்டுடைத்த சார்லஸ் டார்வின்

 கடவுள் கற்பனையைப் போட்டுடைத்த சார்லஸ் டார்வின்

                  முனைவர் வா.நேரு





சமூக விஞ்ஞானி தந்தை பெரியார் 1879-ஆம் ஆண்டு பிறந்து 1973-ஆம் ஆண்டு மறைந்தார். அறிவியல் விஞ்ஞானி சார்லஸ் டார்வின் 1809-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்து, ஏப்ரல் 19, 1882இல் தனது 73-ஆம் வயதில் மறைந்தார். தந்தை பெரியார் மறைந்து 49 ஆண்டுகளுக்குப் பின்பும் அவர் நினைக்கப்படுவதும், அவரின் பணி இன்னும் பல பணிகளை நாம் ஆற்றுவதற்கு அடிப்படையாகவும் உந்துதலாகவும் இருப்பதைப் போலவே சார்லஸ் டார்வின் மறைந்து 140 ஆண்டுகள் ஆனாலும் அவர் தொடங்கி வைத்த பணி என்பது இன்னும் முழுமையாகவில்லை, தொடர்ந்து அறிவியல் அறிஞர்கள் புதிய புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது.




மனிதர்களை எளிதாக வசப்படுத்துவதற்கு கடவுள் என்னும் கற்பனையை மதவாதிகள் ஏற்படுத்தி, இந்த உலகம் என்பது கடவுளால் படைக்கப்பட்டது, இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு உயிரும், எப்படி எப்படி இருக்கிறதோ, அப்படி அப்படியே கடவுளால் உருவாக்கப்பட்டது என்னும் சித்திரத்தை மனிதர்களின் மனங்களில் மிக ஆழமாக வரைந்து வைத்திருந்தனர். அதனை மிகக் கட்டுப்பாடாக பிரச்சாரத்தின் மூலம் நிலை நிறுத்தி வைத்திருந்தனர். இந்த மனச்சித்திரத்தை போட்டு உடைத்தவர் சார்லஸ் டார்வின்.


ஆனால், அன்றைக்கு சார்லஸ்டார்வின் அவர்கள் சொன்ன இயற்கைத் தேர்வும், பரிணாமமும் என்னும் கோட்பாடு பலருக்குப் புரியவில்லை. மதவாதிகள் அதை எதிர்த்து பரப்புரை செய்த நிலையில், சக அறிவியல் அறிஞர்களும் ஓவன் போன்றவர்களும் சார்லஸ் டார்வினின் கோட்பாட்டைப் புரிந்து கொள்ளாமல் எதிர்த்து இருக்கின்றனர். இன்றைக்கு சார்லஸ் டார்வின் அவர்-களின் இயற்கைத் தெரிவு, உயிரினங்கள் தோற்றம், பரிணாம வளர்ச்சி போன்றவற்றை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது, ஆனாலும் மதவாதிகள் இன்றும் கூட ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். குறிப்பாக கிறித்துவ, இஸ்லாமிய சமூகத்தைச்சார்ந்த மதவாதிகள் பரிணாமக் கொள்கையை ஏற்றுக்கொள்வதில்லை. அப்படி ஏற்றுக்கொள்வது, தங்கள் மத நூல்கள் சொல்லும் கருத்துக்கு எதிரானது என்று கருதுகின்றனர்.


அறிவியல் என்பது உண்மை. ஒரு கருத்தை எடுத்துக்கொள்வது, அந்தக் கருத்தை அறிவியல் முறைப்படி சோதனைகள் செய்வது.

சோதனைகளின் முடிவுகளை அட்டவணைப் படுத்துவது, மீண்டும் மீண்டும் சோதனைகள் செய்து உண்மையை உலகிற்கு எடுத்துக்காட்டுவது என்பது அறிவியல் வழிமுறையாகும். சார்லஸ் டார்வின் அவர்கள் 160 ஆண்டுகளுக்கு முன்னால் தனது ஆய்வுப் பயணத்தின் விளைவாக விளைந்த கருத்தினை, பரிணாமக் கொள்கையினை ஆராய்ச்சி செய்தவர்.மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து தனக்கு முதல் தடயம் அளித்த தொல்லுயிர் படிவங்களைச் சேகரித்து,சேகரித்து இயற்கைத் தெரிவு என்னும் கருத்தினை வெளியிட்டவர். பல சோதனைகளுக்கும் ஆய்வுகளுக்கும் 20 ஆண்டுகள் உட்படுத்தி, தான் உலகில் பல பாகங்களில் கண்ட, பரிசோதித்த கருத்தினை தன்னுடைய கோட்பாடாக வெளியிட்டவர். அவரின் ஆராய்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது தொல்லுயிர் படிவங்களும் (இறந்த உயிர்களின் உடல்கள்) ஆமைகளும்.


இன்றைய உலகிலேயே இல்லாத, அழிந்து போன இனமான டைனோசர் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த உலகத்தில் வாழ்ந்தது என்பதை அறிய முடிகிறது. கீழடியில் கிடைத்த ஒரு மண்பாண்டம் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை இந்தக் கரிமக் காலக் கணிப்பு மூலமாகக் கண்டறிய முடிகிறது.தொல்லுயிர்ப் படிவங்கள் மூலமாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த உயிரினங்கள் இப்படித்தான் வாழ்ந்திருக்கும் என்னும் முடிவைக்கூட இன்றைய அறிவியல் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்படி விடை தரும் ‘கரிமக் காலக் கணிப்பு’ பற்றி அறியாத சார்லஸ் டார்வின் அவர்கள் மிக நுட்பமாக இந்த உலகில் இருக்கும் உயிரிகளின் பரிணாம வளர்ச்சியை தனது ஆராய்ச்சியின் மூலம் சொன்னது வியப்பாக இருக்கிறது.

மரபணுக் குறியீடு பற்றிய ஆராய்ச்சி இன்றைக்கு அறிவியலின் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. உயிரியல் துறை என்பது தனது புதிய புதிய கண்டுபிடிப்புகள் மூலம் நம்மை வியப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறது. பாரம்பரியப் பண்புகள் எப்படி தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுகிறது என்பதைப் பற்றியெல்லாம் பல விளக்கங்கள் இன்று நமக்குக் கிடைக்கிறது.குரோமோசோமுக்குள் இருக்கும் மரபணுக்கள் பற்றிய ஆராய்ச்சியும் அதன் விளைவாக விளையும் பயனும் மனித குலத்திற்கு மிகப்பெரிய பாய்ச்சலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.


மனித உடலுக்குள்இன்றைக்கு ஏறக்குறைய 30000 மரபணுக்கள் இருக்கின்றன, மனித உடலில் இருக்கும் ஒவ்வொரு மரபணுவும் எப்படிப்பட்ட தன்மையைக் கொண்டிருக்கிறது என்பது மட்டுமல்ல, உலகில் உள்ள பல்வேறு உயிரினங்களில் இருக்கும் மரபணுக்கள் பற்றிய ஆராய்ச்சிகளும் புதிது புதிதாய் செய்திகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

ஒருவன் மிகத் தீவிரமான பக்திமானாக இருப்பதற்குக் காரணமாக இருக்கும் மூளைக்குள் இருக்கும் வேதிப்பொருள்கள் பற்றியும் மரபணுக்கள் பற்றியும் ஆராய்ச்சி இன்று நடந்துகொண்டிருக்கிறது.


ஒருவன் பெண் பித்தனாக, காமப் பைத்தியம் பிடித்து அலைவதற்குக் காரணம் என்ன? அதனை மரபணு மாற்றத்தின் மூலமாக மாற்ற இயலுமா? என்பன போன்ற சோதனைகளும், செயற்கை இருதயம் பொருத்துவதுபோல செயற்கை மூளையை உருவாக்க முடியுமா என்னும் முயற்சியும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இன்னமும் கடவுள்தான் இந்த உலகத்தில் இருக்கும் உயிரினங்களைப் படைத்தார் _ படைக்கிறார் என்று சொல்பவர்களும் மதவாதிகளும் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒருவர், தான் படித்த காலத்தில், தனக்குப் பாடம் நடத்திய கிறித்துவ நம்பிக்கை கொண்ட ஆசிரியர், சார்லஸ் டார்வின் அவர்களின் பரிணாமக் கொள்கைப் பாடத்தை நடத்திவிட்டு, முடிவில் இப்படியெல்லாம் ஆராய்ச்சி செய்த சார்லஸ் டார்வின் அவர்கள் தன்னுடைய கடைசிக் காலத்தில், இவை எல்லாம் தப்பு என்றும், கடவுள்தான் உலகத்தைப் படைத்தார் என்றும் டைரியில் எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார் என்றும் சொன்னார் என்பதைச் சொன்னார்.

அறிவியல் ஒருபக்கம் உண்மையை வெளிப்-படுத்திக் கொண்டே இருக்கிறது. இன்னொரு பக்கம் கடவுள் நம்பிக்கையாளர்கள் அறிவியலுக்கு எதிரான கருத்துகளை விதைத்துக் கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக குழந்தைகள் மனதில் விதைக்கிறார்கள். அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் ‘கடவுள் இல்லை,கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை’ என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி அதையே அடிப்படை முழக்கமாக வைத்தார். கடவுள் இந்த உலகத்தைப் படைக்கவில்லை, இந்த உலகத்தில் உள்ள உயிரினங்கள் எல்லாம் இயற்கையாக, பரிணாம வளர்ச்சியில் தோன்றியவை என்று நிரூபணம் செய்த சார்லஸ் டார்வின் அவர்களைத் தந்தை பெரியார் தந்த ஈரோட்டுக் கண்ணாடி வழியாகப் பார்க்கின்றபோது மிகத் தெளிவாக சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை அறிய முடிகிறது. மிக நுட்பமாக உணரமுடிகிறது. வாழ்க சார்லஸ் டார்வின் அவர்களின் புகழ்!


நன்றி : உண்மை மாதமிருமுறை இதழ் பிப்ரவரி 1-15,2023.

Monday 13 February 2023

தொடர்ந்து வரும் நினைவலைகள்....

 கல்லூரியில் படித்த காலத்தில் எடுத்த போட்டோ இது.1984-ல் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பி.எஸ்.ஸி. வேதியியல் படித்த காலத்தில் , நாங்கள் தங்கியிருந்த விடுதிக்குப் பெயர் ஃபைவ் ஹவுஸ். காந்தி விடுதியின் ஒரு பகுதி.காந்தி விடுதி என்பது திருச்செந்தூர் ரெயில்வே நிலையத்திற்குப் போகும் வழியில் இருக்கும் விடுதி.அங்குதான் உணவு சாப்பிட நாங்கள் போகவேண்டும்.நாங்கள் இருந்த பைவ் ஹவுஸ் என்பது திருச்செந்தூர்-தூத்துக்குடி ரோட்டில் இருக்கும் 5 பெரிய அறைகள் கொண்ட ஹாஸ்டல். இந்தப் படத்தில் இருக்கும் இடதுபுறம் முதலில் நின்று கொண்டு இருப்பவர் தோழர் வேலுச்சாமி.அன்று முதல் இன்று வரை சி.பி.எம். கட்சியைச்சார்ந்தவர். மிக எளிமையானவர்.நிறைய வாசிப்பவர்.நிறைய விவாதிப்பவர். இரண்டாவதாக இருப்பவர் தே.கல்லுப்பட்டியைச்சாந்த தமிழ்ச்செல்வன்..(இவன்தான் இந்தப்படத்தை இப்போது அனுப்பிவைத்தவன்).படித்து முடித்து வேலைக்காக இப்போது கோயம்புத்தூரில். 3-வதாக இருப்பவர் பகவதி. கல்லூரிக்காலத்திற்குப் பின்பு அவரிடம் பேசவும் இல்லை.நேரில் பார்க்கவும் இல்லை. வெள்ளந்தி என்றால் அப்படி ஒரு வெள்ளந்தியான மனிதர். நாங்கள் கல்லூரி படிக்கும் காலத்திலேயே அவருக்குத் திருமணம் ஆகி குழந்தை இருந்தது.உற்சாகமாக நெல்லை மொழியில் பேசுவார். 4-வது நிற்பவன் சண்முக நாதன். மதுரை மாவட்டம் பி.சுப்புலாபுரம் சார்ந்தவன்.எங்களுக்கு ஜீனியர்.இப்போது சென்னை ஹைஹோர்ட் வக்கீல்.தொலைபேசியில் அண்மையில் பேசினேன். நேரில் பார்க்கவேண்டும்.5-வதாக நிற்பது நான். என் தோளில் கைப்போட்டு நிற்பவர் சுரேந்திரன்.கடலூர் பகுதியைச்சார்ந்தவர். பி.பி.ஏ.படித்தார். மிக எளிமையாக இருப்பார். நன்றாக வாதம் செய்வார்.எளிதில் தன்னுடைய கருத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்.






உட்கார்ந்திருப்பவர்களில் முதலில் இருப்பவர் முருகேசன். வத்திராயிருப்பு அருகில் உள்ள சுந்தரபாண்டியம் என்னும் ஊரைச்சார்ந்தவர்.அமைதியாக இருப்பார்.10-ஆம் வகுப்பு,12-ஆம் வகுப்பில் இயல்பாக படித்து சராசரியான மதிப்பெண் எடுத்தவர். ஆனால் கல்லூரியில் பி.எஸ்.ஸி. கணிதம் எடுத்து தீயாய்ப் படித்தார்.பி.எஸ்.ஸி. முடித்துவிட்டு ,ஏரோனோட்டிகல் இன்ஜினியரிங்க் படித்துவிட்டு,பெங்களூரில் வேலை பார்ப்பதாக சொன்னார்கள்.நாங்கள் வாதம் செய்வதை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்,அடுத்து எங்கள் பக்கத்து ஊரான அத்திப்பட்டியைச்சார்ந்த அண்ணன் ராமராஜ் அவர்கள்.எங்களுக்கு சீனியர். படித்து முடித்து எல்.ஐ.சி,யில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.அடிக்கடி நான் பார்க்க வாய்ப்பு கிடைத்தவர்.அடுத்ததாக இருப்பவர் அண்ணன் நாராயணசாமி அவர்கள். எங்களுக்கு சீனியர்.படித்து முடித்து தூத்துக்குடி கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர்/அடுத்து இருப்பது தே.கல்லுப்பட்டி நண்பன் சீனிவாசன்.இப்போது இராம.ஸ்ரீனிவாசன்.பி.ஜே.பி.பொதுச்செயலாளர்.அடுத்து இருப்பது தே.கல்லுப்பட்டி என்னும் ஊருக்குஇன்ஜியலாக அமைந்த தேவங்குறிச்சி பாண்டி.எங்களுக்கு ஜீனியர்.படித்துமுடித்து இப்போது காஞ்சிபுரத்தில் வேலை பார்க்கும் தம்பி.தொடர்பில் இருப்பவர்.அடுத்ததாக இருப்பவர் நண்பர் அய்யாத்துரை. சங்கரன்கோவில் அருகில் சொந்த ஊர். வேதியியலை அற்புதமாகப் படிக்கும் நண்பர். ஆனால் அவரது எழுத்து தெளிவாக இருக்காது.அதனால் மதிப்பெண் குறையும்.அண்மையில் தொலைபேசி வாயிலாக பேசும் வாய்ப்புக் கி டைத்தது.பேசவேண்டும்.பார்க்கவேண்டும் நண்பரை.



மகளின் கைவண்ணத்தால் அன்றைய நேருவும் இன்றைய நேருவும்

இன்றைக்குப் போல் செல்போன்கள் இல்லாத காலம்.கையில் கேமரா இருந்தால் பெரிய ஆள் அன்று.நாங்கள் 12 பேரும் தயாராகி போட்டோ ஸ்டுடியோவில் போய் எடுத்த புகைப்படம். நீண்ட நாள் நான் பாதுகாப்பாக வைத்திருந்த புகைப்படம்.நண்பன் தமிழ்ச்செல்வன் அனுப்பியது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.பைவ் ஹவுஸ் வாழ்க்கையைப் பற்றி நிறைய எழுதலாம். எழுதுவேன்.

Wednesday 8 February 2023

அயலி... அனைவரும் பார்க்கவேண்டிய படம்

 முழுமையாக 'அயலி' படத்தைப் பார்த்தேன்.அற்புதமான திரைப்படம்.எளிய மொழி.படத்திற்குத் தேவையான சொற்களை தயக்கமின்றி பயன்படுத்தி இருக்கிறார்கள். தமிழ்ச் செல்வியாக நடித்தவரும், அவரது அம்மாவாக நடித்தவரும், அவரது பள்ளித் தோழி மைதிலியாக நடித்தவரும்  மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். எந்தப் பாத்திரமும் சோடையாக இல்லை. கிராமம், கிராமச் சொல்லாடல், கிராமக் கோயில் என்ற பெயரில் இருக்கும் கட்டுப்பாடுகள், பெண் படிப்பிற்கு தடையாக இருக்கும் உளவியல் காரணங்கள் எனப் பல கோணங்களை இந்தத் திரைப்படம் பேசுகிறது. இந்தப் படம் தமிழ்நாட்டில் உள்ள நகரத்தில்,கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணையும் சென்று அடைய வேண்டும். யார் எதிரி,எது நம்மைத் தடுக்கிறது, கல்வி என்பது எவ்வளவு அவசியம்  என்ற புரிதல் இருந்தால் முன்னேறுவதில் இருக்கும் தடைகளைப்‌ பெண்களால் போட்டு உடைக்க முடியும் என்பதை இந்தத் திரைப்படம் மிக அழகாக காட்டுகிறது. ஆதிக்க ஆண்களை வச்சு   செய்திருக்கிறார்கள்.


 படித்திருந்தாலும் சிலர் எவ்வளவு பிற்போக்குவாதிகளாக இருக்கிறார்கள் என்பதை அந்த ஊரின் கணக்கு வாத்தியார் பாத்திரத்தின் மூலமாக மிக நன்றாகவே சொல்லி இருக்கிறார்கள். இறுதிக்கட்டத்தில் பள்ளிக்கூடத்தைச் சிதைக்கும் கலாச்சாரக் காவலர்களின் கைகளில் இருக்கும் ஆயுதங்கள், நம் மீது திணிக்கப்படும் புதிய கல்விக் கொள்கையை நினைவுபடுத்துகிறது. எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுக்கக் கூடாது என்ற வன்மத்தின் பின்னால் இருக்கும் ஆதிக்க மனப்பான்மை இந்தப் படத்தின் ஒவ்வொரு நகர்விலும் காட்டப்படுகிறது தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் கல்விக்கு ஏன் அவ்வளவு முன்னுரிமை கொடுத்தார்கள் என்பதும் நமக்கு புரிகிறது. .'உன் மனதிற்கு எது சரி எனப்படுகிறதோ அதைச் செய்' என்பது அழுத்தம் திருத்தமாக சொல்லப்படுகிறது.தந்தை பெரியாரும் திராவிட இயக்கமும் தொடர்ச்சியாக சொல்லிவரும்  பெண் கல்வி ஏன் தேவை என்பதை மிகச்சிறப்பாக காட்டியிருக்கிறார்கள்.


 ஊர்ப்பெண்கள் எல்லாம் பள்ளிக்கூடத்திற்குள் ஓடி ,தங்கள் பெயரையெல்லாம் கரும்பலகையில் எழுதும் காட்சி கண்ணில் நீர் வரவைக்கிறது.ஏதோ ஒரு வகையில் பெண்களின் உயர்படிப்பு பலவகையில் இன்றும் கூட தடைபட்டுக்கொண்டுதான் இருக்கிறது. பெற்றோர்கள் படிக்கவைத்தாலும் 'திருமணத்தை முடித்து வைப்பா,வருகிறவன் படிக்க வைத்துக்கொள்வான் ' என்பது இயல்பான உரையாடலாக இருக்கிறது. ஆனால் திருமணம் முடித்துப்போகும் பெண்கள் எத்தனை பேரால் தொடர்ந்து உயர் கல்வி கற்க முடிகிறது?மேலை நாடுகளில் இயல்பாக இருக்கும் மாதவிடாய் பிரச்சனை ,இங்கு எப்படி ஒரு கிராமத்தில் பெண்களின் படிப்பைத் தடை செய்யும் கருவியாக இருக்கிறது என்பதையும்,கடவுள் என்பது எப்படி பெண்களின் கல்விக்குத் தடையாக வெகு சமர்த்தியமாக ஆண்களால் கட்டமைக்கப்படுகிறது என்பதையும் இப்படம் நன்றாகவே காட்டுகிறது.

இந்தப் படத்தில் தமிழ்ச்செல்வியாக நடித்தவரின் நடிப்பு வெகு இயல்பு.கண்களும் உடல்மொழியும் நிறையப் பேசுகின்றன.  ?இந்த 'அயலி'யை மிகச்சிறப்பாக உருவாக்க  பாடுபட்ட படக் குழுவினருக்கும் , குறிப்பாக இயக்குனர் முத்துக்குமார் அவர்களுக்கும் தமிழ்நாடு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக  மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். இந்தப் படத்தை பார்க்காதவர்கள் தயவு செய்து நேரம் ஒதுக்கிப் பாருங்கள். ஒவ்வொரு பெண்ணும் மட்டுமல்ல,ஒவ்வொரு ஆணும் பார்க்கவேண்டிய படம்.

"கட்டாயத்தாலி கட்டுனவ தாலிய கழட்டி அவன் மூஞ்சில எறிஞ்சி பொளேர்னு விட்ட அறை, இத்தனை நாளா கட்டாய தாலி கட்டிட்டானு வேற வழியில்லாம கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்னு வாழனும்னு படம்/சீரியல் எடுத்த டைரக்டர்/நடிகர்களுக்கு விட்ட அறையாவே நான் பாக்குறேன்." Sandhiya என்பவரின் அயலி படம் பற்றிய டுவிட்டர் பதிவு..


முனைவர்.வா.நேரு,

தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு.

Tuesday 7 February 2023

'சங்கப்பலகை' நூல் பற்றி...கண்ணகுமார விஸ்வரூபன்

 எனது அண்மை நூலான சங்கப்பலகை நூல் பற்றி 'தேரியாயணம் 'புகழ்,தேரிக்காட்டு இலக்கியவாதி தோழர் கண்ணகுமார விஸ்வரூபன் அவர்களின் கடிதம்..


அன்புத் தோழருக்கு வணக்கம்!

தங்களது சங்கப் பலகை 

நூலை முழுமையாக வாசித்து முடித்தேன். 

இலக்கிய ஆளுமை ஜெயகாந்தன் அவர்கள் தனது நூலுக்கு தானே முன்னுரை எழுதிக் கொள்வார். 

அந்த முன்னுரைகளெல்லாம் பின்னர் ஒரு தொகுப்பாக வெளிவந்தது.

முன்னுரைகளே ஒரு நூலாக வெளிவந்தது என்றால் அது ஜெயகாந்தனின் முன்னுரைகள் மட்டுமே!

அதைப்போல மதிப்புரைகளே தொகுப்பாக வெளிவருவது என்பது தங்களது சங்கப் பலகை மட்டுமே எனக் கருதுகிறேன். 

கி.ரா, இமையம் போன்ற பிரபலமான எழுத்தாளர்கள் தொட்டு, அறிமுக எழுத்தாளர்கள் வரை அனைவரது நூல்களையும் அருமையாக மதிப்பாய்வு செய்துள்ளீர்கள். 

அதிலும் புதிய படைப்பாளிகளின் படைப்புகளைத் தங்களது சிறப்பான மதிப்புரைகளின் மூலம் துலக்கமாக வெளிச்சப்படுத்தியுள்ளீர்கள். 

மதிப்புரை எழுதுவதென்பது ஒரு மகத்தான கலை!

அது தங்களுக்கு அழகாய்க் கைவந்துள்ளது.

இந்த அருங்கலைப்பணி இனிதே தொடரட்டும்!

இன்னும் பல நூல்களை சங்கப் பலகையில் அருமையாய் அரங்கேற்றுங்கள்.

மதிப்புறு முனைவரான உங்களை மதிப்புரைகளின் முன்னவராகவே காண்கிறேன். 

        என்றென்றும் 

            அன்புடன் 

         கண்ணகுமார 

            விஸ்வரூபன்.




Saturday 4 February 2023

சொட்டாங்கல் பற்றி வா.நேரு உரை ...


#சுமதி என்கிற #தமிழச்சி #தங்கப்பாண்டியன்,  #தென்சென்னைMP அவர்கள் எழுதிய "#சொட்டாங்கல்", என்ற நூல் விமர்சனம் ஒன்றை '#வாருங்கள் #படிப்போம்' என்ற #Whatsapp குழுவினரின் #Youtube காணொலியில் பார்த்தேன்.

காமதேனு இதழில் தமிழச்சி தொடர்ந்து எழுதி வந்த கட்டுரைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டு இடம் பெற்றுள்ளன. இந்த நூலில் தன் இளமைக்கால நினைவுகளை மனம் விட்டு பகிர்ந்து இருக்கிறார் தமிழச்சி.

இதில் இடம்பெற்ற இருபது கட்டுரைகளிலும் அவரது பால்யகால நினைவுகளையும் அந்தக் காலத்தில் அவருடன் பழகிய சிறு வயது தோழிகள், நண்பர்கள் பற்றியும் விலாவாரியாக எழுதி இருக்கிறார்.

இந்த விவாதத்தில் கலந்து கொண்ட ஒளிவண்ணன், Kumaran Kumar , Regina Chandra உள்ளிட்ட பலர் தாங்கள் இளமைக்காலத்தில் சென்னை நகரத்தில் இருந்தபோது ஏற்பட்ட பசுமையான அனுபவங்களை பச்சைக் குழந்தைகள் போல பேசிப்பேசி நெகிழ்ந்து போனார்கள். குறிப்பாக, நண்பர் #குழலூதும் #குமரன் அவர்கள் தன்னுடைய புளியமரம் தொடர்பான அனுபவங்களை விரிவாகவே பகிர்ந்து கொண்டார். அவர் புளிய மரத்துப் பேய்களை பார்த்து பழகி இருக்கிறாரா என்று அவரிடம் தனியாக அவருடைய காரில் போகும் போது நிச்சயம் கேட்பேன்.

தான் படித்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த "#ராமசாமி #வாத்தியார்" அவர்களை பேராசிரியர் நேரு மற்றும் வகுப்பு தோழர்கள் 'கண்ணாடி வாத்தியார்' என்றுதான் பெயரிட்டு அழைப்பார்கள் என்ற செய்தியைக்கூறி அது தொடர்பான பல நினைவலைகளில் மூழ்கி கரைந்து போனார் இந்த நூல் விமர்சனம் செய்த பேராசிரியர் #Neru!#தமிழ்நாட்ல இந்த #ராமசாமிகள் பற்றிப் பேசாமல் எந்த தலைப்பிலும் நீளமாக பேசி விட முடியாது.

சுமதி அவர்கள் மாணவியாக இருந்த போது அவருடைய தோழியாக இருந்த #நிறைமதி என்ற பெண்ணின் தொடர்புகளை தமிழச்சி ஒரு கட்டுரையில் பகிர்ந்து உள்ளார்.

#கொட்டாம்புளி என்ற வகுப்புத் தோழர் ஒரு புளியமரத்தின் மேலே ஏறி அமர்ந்து விளையாடுவார். அதே மாதிரி புளியங்கொட்டையை சூடு பண்ணி தன் எதிரிகள் தோலின் மீது வைத்து விளையாடுவார். பிற்காலத்தில் தமிழச்சி சொந்த ஊர் சென்றபோது அந்த கொட்டாம்புளி என்ற நண்பர் இவரை பார்க்க வந்தார். "ஏய் கொட்டாம்புளி!", என்று ஆர்வமுடன் அவரை கூவி அழைத்து விட்டு அதே வேளையில் அவர் தப்பாக நினைத்துக் கொள்வாரோ என்று தமிழச்சி தடுமாறியதையும், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அந்த பழைய கால நண்பர் மனம்விட்டு பேசியதையும் இந்த நூலில் வெளிப்படையாக அவர் எழுதி உள்ளார்.

அரிசியை வாயில் போட்டு வெல்லக்கட்டியையும் சேர்த்துப் போட்டு மென்று மகிழும் ஒரு தீப்பெட்டி ஒட்டும் சிறுமியைப் பற்றி பேசும்போது அந்த பெண்ணுக்கும் தனக்கும் உள்ள நெருக்கத்தை நெஞ்சம் நெகிழப் பேசுகிறார் தமிழச்சி.

#காக்காபொன்னு, வத்திப்பெட்டியில் மூடி வைத்து விளையாடும் #சில்லுவண்டு பற்றிய செய்திகள் என்னுடைய அந்தக் கால நினைவுகளுக்கு இழுத்துச் சென்றன.

"ஏ சோகக் கதையைகா கேளு தாய்க்குலமே!", என்று #பாக்கியராஜ் பாடியது போல என் சொந்த அனுபவங்களை பின்னர் தனிக்கச்சேரி ஆக வைத்துக் கொள்கிறேன்.

இதற்கு மேலும் இந்த பதிவை நீட்டித்துக் கொண்டே போனால் நீங்கள் என்னை கோலெடுத்துக் கொண்டு அடிக்க வரலாம். ஆகவே, இந்த நிகழ்ச்சியை முழுவதும் பார்க்க விரும்பினால் யூடியூபில் Olivannan Gopalakrishnan என்ற பெயரை ஆங்கிலத்தில் உங்கள் அலைபேசியில் உள்ள விசைப்பலகை யில் தட்டினால் பல நூறு #யூடியூப் காணொலிகள் பொல பொல என்று பறந்து வந்து கொட்டும். 

அவைகளை தொடர்ந்து பார்த்தால் உங்கள் #அறிவு #வளரும்! பொது அறிவு, இலக்கிய உணர்வுகள் எழும்பிக் கூத்தாடும். புதிய மனிதர்கள் ஆவீர்கள்.

#பாருங்க #நண்பர்களே!

....

நன்றி  :  முக நூலில் திரு இரத்தினம் இராமசாமி

சொட்டாங்கல் பற்றி வா.நேரு உரை இணைப்பு 

https://youtu.be/lXiE8yQOoTI